நாயன்மார் திறம்
திரு. வி. கலியாணசுந்தரனார்


நெறிக்குரிய முறைகள்

நாயன்மார் பற்றியது அன்புநெறி என்னும் ஒரு நெறியா
யிருப்பினும், அந்நெறியில் பல துறைபற்றி அன்னார் வீடுபேறெய்
தினர். சரியைத் தொண்டு செய்தார் சிலர்; கிரியைத் தொண்டு
செய்தார் சிலர்; யோகிகளாக வாழ்ந்தார் சிலர்; ஞானிகளாக
வாழ்ந்தார் சிலர். சிலர் பிரமசாரியா யிருந்தார்; சிலர் இல்லறங்
கொண்டார்; சிலர் துறவறங் கொண்டார். சிவவேடந்தரித்தார்
சிலருளர்; தரியாதார் சிலருளர். வன்றொண்டர் சிலர்; மென்
றொண்டர் சிலர். மலரால் அர்ச்சித்தாருமுளர்; கல்லால்
அர்ச்சித்தாருமுளர். இத்தொண்டு, ஒழுக்கம், அர்ச்சனை முதலிய
முறைகள் பலபட்டிருப்பினும், இவைகட்கெல்லாம் அடிப்படை
அன்பு என்பது ஈண்டுக் கருதற்பாலது.

மறத் தொண்டுகள்

எந்நெறி நின்றும் எவ்வேடங் கொண்டும் ஆண்டவனை
வழுத்தலாம். சுந்தரர் ஆண்டவனைப் பெண்பொருட்டுத் தூதுவ
னாகக் கொண்டார். இயற்பகையார் தம் மனைவியாரை ஒரு
சிவனடியார்க்குத் தானஞ் செய்தார். கண்ணப்பர் கடவுளுக்குப்
புலானுணவை ஊட்டினார். (இதில் ஓர் உண்மை உண்டு.
சங்கராச்சாரியர் முதலியோர் இதை ஆண்டிருக்கிறார். எனது
ஆராய்ச்சிக் குறிப்புரை கொண்ட பெரிய புராணப் பதிப்பில்
கண்ணப்பர் புராணம் பார்க்க.) சண்டேசுரர் சிவபூசையின்
பொருட்டுத் தம் தந்தையார் காலை வெட்டினார். சிறுத்
தொண்டர் பிள்ளையைக் கொன்றார். கோட்புலியார் சுற்றத்
தாரைக் கொலைசெய்தார். இச்செயல்களுஞ் சிவத் தொண்
டாகவே பாவிக்கப்பட்டன. காரணம் அன்பேயாகும். “அரனடிக்
கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்” என்றார் பின்வந்தாரும்.
எச்செயல் கொண்டும், எத்தொண்டு செய்தும் நிட்காமிய
கருமத்தை வளர்க்கலாம்.

அன்பு நெறியின் அறிகுறிகள்

நாயன்மார் வரலாற்றை ஊன்றி ஆராயுமிடத்து, அவர் தம்
வரலாற்றினின்றும் சமய ஒழுக்கத்தின் அறிகுறிகள் புலனாகும்.
அவ்வறிகுறிகள் பல. அவை உண்மை, உறுதி, அஞ்சாமை,
ஒழுக்கம், வீரம் முதலியன. உண்மையுள்ள இடத்தில் எல்லா
நல்லியல்புகளும் அரும்பும். எல்லாவற்றிற்கும் அடிப்படை
உண்மை. எல்லா அறங்கட்குந் தாயகம் உண்மை என்று அற
நூல்கள் முழங்குகின்றன.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று ”

என்றார் திருவள்ளுவரும்.

உண்மை முதலியன

அறுபான் மும்மை நாயன்மார் சரிதங்களில் போந்துள்ள
உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியன என்றும்
அறநெறியை விரும்பும் மக்கட்கு வேண்டற்பாலனவாம்.
பண்டைக் காலத்தில் இவைகள் மக்களின் உயிரணியாயிருந்தன.
இப்பொழுது உடலணிகள் மிக்கு உயிரணிகள் அழிந்தன.
அதனால் நாடு துன்பக் கடலில் வீழ்ந்து கிடக்கிறது. நாட்டைத்
துன்பக் கடலினின்றும் இன்பக் கரையில் ஏற்றுவிக்கும் நாவாய்கள்
உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியனவாம்.
இவைகளை வலியுறுத்தும் நாயன்மார் வரலாற்றை ஓதுவதால்
நாட்டுக்கும் உயிருக்கும் இன்பந் தேடுவதாகும். ஏறக்குறைய
எல்லா நாயன்மாரும் உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம்,
வீரம் முதலியவற்றிற்கு ஊற்றாயுள்ள ஓர் அறநெறிபற்றி
ஒழுகினவரே யாவர். ஈண்டுச் சில குறிப்புகளை எடுத்துக்
காட்டுகிறேன்.

எடுத்துக்காட்டுகள்

திருநீலகண்ட நாயனார் என்பவர் சிதம்பரத்திலிருந்தவர்.
அவர் குயவர் குலத்தில் பிறந்தவர். அப்பெரியார் அடியவர்
களுக்குத் திருவோடு வனைந்து கொடுக்குந் திருத்தொண்டு
செய்துவந்தவர். அவர் சிற்றின்பத்துறையில் எளியராய்ப்
பரத்தைபால் அணைந்து நண்ணினார் எனக் கருதி, அவர்தம்
மனைவியார், “தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்” என்று
கூறினார். அதுகேட்ட நாயனார், “நீ “எம்மை” என்று பன்மை
மொழியால் கூறினமையால், உன்னையும் உன்னினமாகிய வேறு
பெண்களையும் மனத்திலும் இனித் தீண்டுவதில்லை” என்று
உறுதிசெய்து கொண்டார். தாம் செய்து கொண்ட உறுதிவழியே
நாயனார் ஒழுகினார். ஒரே இல்லத்தில் உறையும் மனைவியை
மனத்திலும் தீண்டாது வாழ்வது அரிதோ எளிதோ என்பதை
அன்பர்கள் சிந்தித்தல் வேண்டும். இத்தகை மனவுறுதி யுடைய
மக்களல்லவோ பாரதமாதா வயிற்றில் உதித்தல்வேண்டும்?

காவிரிப்பூம் பட்டினத்தில் இயற்பகையார் என்பவர்
ஒருவர் இருந்தனர். அவரது விரதம் எவர் எதைக் கேட்பினும்
இல்லை என்னாது வழங்குவது. அவருடைய மனோ நிலையைக்
கடவுள் சோதிக்க வேண்டி, ஓரடியவர் வேடந்தாங்கி, அவர்தம்
வீடு சேர்ந்து, “நாம் ஒன்றுநாடி நும் இல்லம் போந்தோம்”
என்றார். நாயனார், “அஃதென்பால் உள தாயின் கொடுப்பேன்”
என்றார். சிவனடியார், “நும் மனைவி வேண்டும்’ என்று
கேட்டார். நாயனார் மனங் கோணாது தம் இல்லக்கிழத்தியாரை
வழங்கினார். இச்செயல் எவரே செய்யவல்லார்! இது செயற்
கருஞ் செய்கையன்றோ? தாம் ஏற்ற விரதத்துக்கு எவ்வழியிலுங்
கேடு நேராவண்ணம் காத்துக் கொண்ட உண்மை நிலையையும்,
உறுதி பிறழாமையையும், எவர்க்கும் அஞ்சாமையையும்
என்னென்று வருணிப்பது? இயற்பகைபோல விரதங் காக்க
வல்ல புதல்வர்களல்லவோ பாரத மாதாவின் வயிற்றில்
தோன்றல்வேண்டும்?

திருக்கோவலூரில் ஓர் உண்மையானளரிருந்தார். அவர்
மெய்ப்பொருள் நாயனார் என்பவர். அவர் திருக்கோவலூரை
ஆண்ட மன்னருள் ஒருவர். மெய்ப்பொருள் நாயனார் ஆட்சியில்
நகர முழுதும் உண்மை கடைப்பிடித் தொழுகும் அறமணமே
கமழ்ந்து கொண்டிருந்தது. அவர் ஆட்சியில் பொறாமை
கொண்ட முத்தநாதன் என்பவன் பன்முறை மெய்ப்பொருள்
நாயனாரோடு எதிர்த்துத் தோல்வியுற்றான். முடிவில் முத்த
நாதன், “சிவனடியார் வேடந்தாங்கி மெய்ப்பொருளை வஞ்சனை
யால் கொல்ல வேண்டும்” என்று எண்ணி, உடல் முழுவதும்
திருநீறு பூசித், தலையில் சடை புனைந்து, உடைவாள் மறைக்கப்
பெற்றிருந்த ஒரு புத்தகக் கவளியேந்தி, மைபொதி விளக்குப்
போல மனத்தினுட் கறுப்புக்கொண்டு, பொய்வேடந் தாங்கி
நாயனார் அரண்மனை நுழைந்தான். திருடன், எல்லாப்
படிகளையுங் கடந்து, கடைசிப் படி வாயில்காவலனாகிய தத்தன்
என்பான் தன்னைத் தடுத்தும், சிவனடியார் என்னும் உரிமை
கொண்டு, மன்னர் துயில் அறைக்குச் சென்றான். அரசர்
அவனைக் கண்டதும் எழுந்து வணங்கி இருக்கச் செய்தார்.
பகைவன், “மெய்ப்பொருளே! சிவபிரான் அருளிய ஓர்
ஆகமத்தை உனக்கு உபதேசிக்க இங்கு வந்தேன். உன் மனைவி
இங்கே யிருத்தலாகாது. எனக்கோர் உயர்பீடம் அமைப்பாயாக.
நீ கீழேயிருந்து யான் சொல்வதைக் கேட்டல் வேண்டும்”
என்றான். உண்மை கடைப்பிடித் தொழுகும் நாயனார், பாவி
சொற்படி மனைவியை வெளியே செல்லுமாறு கட்டளை
யிட்டுப், பீடமமைத்து, அதிலே வஞ்சகனை யிருக்கச்செய்து,
தாங் கீழேயிருந்து உபதேசத்தைச் செவிமடுக்கப் பேராவல்
கொண்டு அவனை வணங்கினார். அப்பொழுது, இரக்கமிலா
அரக்கன் புத்தக மெடுப்பதுபோலப், பையிலிருந்து உடைவாளை
எடுத்து மெய்ப்பொருளைக் குத்தினான். இரத்த வெள்ளம்
பெருகிற்று. அவ்விடத்திலேயே மனம் வைத்திருந்த தத்தன்
ஓடிவந்து முத்தநாதனைக் கொல்லத் தொடங்கினான். அவ்
வேளையில் மெய்ப்பொருள் நாயனார் சினமுற்றனரோ?
முத்தநாதன்மீது வன்மங் கொண்டனரோ? முத்தநாதனைக்
கொல்லுமாறு தத்தனை ஏவினரோ? பின்னை என்ன செய்தர்?
இரத்தஞ் சோர நிலத்தில் விழும் மெய்ப்பொருளார்,
வாளோச்சி நிற்கும் தத்தனை நோக்கி, “தத்தா! இவர் நம்மவர்”
என்று நீண்ட கையால் தடுத்து, ஊரவராலும், மற்றவராலும் இப்
பெரியார்க்கு எவ்விதத் தீங்கும் நேராதவாறு பாதுகாத்து,
இவரைக் கொண்டுபோய் நகரத்துக்கப்பால் விடுத்து வருவாயாக”
என்று ஆணைததந்தார். தத்தனும் மன்னர் ஆணைப்படியே
செய்தான். “முத்தநாதன் எவ்வித இடையூறுமின்றி நகரத்தை
விட்டேகினான்’ என்ற செய்தி நாயனார் செவிக்கெட்டிய
பின்னரே அவரது உயிர் சிவபதமடைந்தது. தம்மைக் கொன்ற
பாவியின் உயிர்க்குந் தீங்கு செய்யாத அந்தணரை ஈன்ற நாடு நமது
தமிழ்நாடு. மெய்ப்பொருள் போன்ற பல மெய்ப் பொருள்கள்
இவ்வேளை நந்தாய் வயிற்றில் பிறத்தல் வேண்டும்.

திருநாவுக்கரசர் வரலாறு தமிழ்நாட்டவர்க்கு நன்கு
தெரியும். அவர், அவர்தம் தமக்கையாராகிய திலகவதியாரால்
ஞான தீக்கை செய்விக்கப்பெற்ற பின்னர்த் தூய்மை பெற்று
ஆண்டவன் அடியவரானார். ஆண்டவன் அடியவர் என்பதற்கு
அறிகுறிகள் பல உண்டு. அவைகளுள் சிறந்தன இரண்டு. ஓன்று
உண்மை கடைப்பிடித்தல்; மற்றொன்று அச்சம் அறியாமை.
உண்மையுள்ள விடத்தில் அஞ்சாமை யிருக்கும். இஃதுள்ள
விடத்தில் அஃதிருக்கும். திருநாவுக்கரசரிடத்தில் இவ்விரண்டுஞ்
சிறந்து விளங்கின.

“மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை
வித்திப்
பொய்மையாங் களையை வாங்கிப் பொறையெனும்
நீரைப்பரய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு சகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளைய மன்றே”

‘பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புறிர் தார்க்கருள்
செய்யும்
ஐயஞ்சி னப்புறத் தானும் ஆரு ரமரநத அம்மானே’

இவை திருநாவுக்கரசர் திருவாக்குகள். இவைகளால் அவர்
கடைப்பிடித்த உண்மைநெறி விளங்குகிறது.
திருநாவுக்கரசரை ஒறுக்க நினைந்து, அவரை அழைத்து
வருமாறு மன்னன் அமைச்சரை ஏவியபோது, அவர் சிறிதும்
அச்சங் கொள்ளாது, ஒரு பதிகம் பாடினார். அப்பதிகம்
அஞ்சாமைக்கு உறையுளாக நிற்பது. அப்பதிகப் பாக்களுள் சில
வருமாறு:-

“நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே”

‘அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்
சொற்கேட்கக் கடவோமோ துறிசற் றோமே’

‘வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
கன்மனமே தன்மனமாக் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேரி வருவார் சொல்லும்
பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே’

‘என்றுநாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையடையோ மல்லோ மன்றோ
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியுத்து ளோமே’

‘சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள்மே லாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் தம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோ நாமே’

அஞ்சாமை திகழச் சுவாமிகள் அருளிய பாக்கள் இன்னும்
பல உண்டு. அவைகளில் இரண்டொன்று வருமாறு:

“அஞ்சாமை யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை”

“மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொள்று கண்டோர் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே”

“வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே”

இப்பாக்களை உற்று நோக்கினால் நாவரசர் நிலை நன்கு
புலனாகும்.

பல்லவன், சுவாமிகளை நீற்றறையில் நிறுத்தியபோதும்,
நஞ்சூட்டி வஞ்சித்தபோதும், மிதிக்குமாறு யானையைத்
தூண்டிய போதும், கல்லோடு பிணித்துக் கடலி லெறிந்த
போதும், அடிகள் தெறல்களை யெல்லாந் தாங்கிப் பொறுத்துக்
கொண்டிருந்து, எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாத அறத்தைக்
கடைப்பிடித் தொழுகினார். உண்மையும் அஞ்சாமையும்
மலர்ந்துள்ள நெஞ்சில் பொறுமையும், மாற்றாரிடத்தும் அன்பு
சொரிதலும், எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமையும் நிலவுதல்
இயல்பு. இவ்வியல்புடையவரே வீரராவர். இவ்வீரப்பிள்ளைகள்
நமது பரத கண்டத்தில் தோன்றுவார்களாக.

நாயன்மார் உண்மையுடையவராதலின், அவர் ஒழுக்கத்தை
உயிரினும் ஓம்பி வந்தார்; அவர் வைராக்கியத்தைச் சாதிக்கும்
ஆன்மசக்தி பெற்றிருந்தார். ஒருவனுடைய வாழ்வு அவனது
ஒழுக்கத்தையே பொறுத்து நிற்கிறது. ஒழுக்கமில்லாதவன்
உயிரில்லாதவன். ஒழுக்கமில்லா மாந்தர் நடைப் பிணங்களாவர்.
ஒழுக்கத்தின் மேன்மை உணராது வாழ்பவன் மனிதப் பிறவி
தாங்கினவனாகான். நாயன்மார் அனைவரும் உயிர் விளக்கத்துக்கு
ஆதாரமான ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பினமையான், அவர்
செயற்கருஞ் செயல்களை மிக எளிதில் செய்து, பெறற்கரும்
பேறுகளைப் பெற்றார்.

ஒழுக்கஞ் சிறந்ததென்பதை அறிவுறுத்தும் நாயன்மார்
வரலாறுகள் பல இருக்கின்றன. ஈண்டு ஒருவர் ஒழுக்க நிலை
குறித்தல் சாலும். தம்பிரான் தோழரென்னுஞ் சுந்தரமூர்த்தி
சுவாமிகள் வரலாற்றில் ஒழுக்கத்தின் மேன்மை உள்ளங்கை
நெல்லிக்கனிபோல் விளங்குகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
இல்லறத்திலிருந்து கடவுளைப் போற்றினவர்; கடவுள் வாயி
லாகத் தாம் வேண்டும் பொன் பொருள் பெண் முதலியவற்றைப்
பெற்றவர்; கடவுளுக்கு நண்பரெனப் போற்றப்பட்டவர்.
சுருங்கக்கூறின் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் விரும்பியவாறு
கடவுளை ஏவல்கொண்டவர் என்று கூறலாம். ஆண்டவனையே
தோழராகக் கொண்ட ஒருவர்தம் பெருமையை என்னென்று
இயம்புவது? இத்துணைச் சிறப்பு வாய்ந்த சுந்தரமூர்த்தி
சுவாமிகள் ஒருமுறை கூறிய உறுதிமொழியினின்றும் பிறழ்ந்
ததைக் காரண மாகக்கொண்டு கடவுள் அவருடைய கண்கள்
இரண்டையும் பிடுங்கிவிட்டார். கடவுள் அன்பரது நட்பைப்
பார்க்கிலும் அவரது ஒழுக்க நீதியையே சிறப்பாகக் கொள்வர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொண்டை நாட்டுத் திருப்பதி
களைத் தொழுது திருவொற்றியூர் சேர்ந்தபோது, அங்கே
இறைவனுக்குப் புட்பத்தொண்டு செய்து கொண்டிருந்த
சங்கிலியார் என்பவரைக் கண்டு காதலுற்று, அவரைத் தாம்
மணம்புரிய விரும்பித் தத்தோழராகிய அண்டவனை வழக்கம்
போலக் கேட்டார். பாவையாரை முன்னர்ச் சுவாமிகளுக்கு
மணஞ் செய்வித்த சிவ பெருமான் சங்கிலியாரையும் அவருக்கு
அளிக்க இசைந்தனர். ஆனால் கடவுள் சங்கிலியாரைக் கொண்டு,
“மற்றொரு மனைவி வாழுந் திருவாரூர்க்கு மீண்டுஞ் செல்லேன்”
என்ற உறுதி மொழியைப் பசுமை நிறைந்த மகிழமரத்தடியில்
சுந்தரர் வாயிலாக வாங்குவித்தார். சுந்தரர் தாங்கூறிய உறுதி
மொழிப்படி சில நாள் சங்கிலியாரோடு திருவொற்றியூரில்
வாழ்ந்தார். ஒருநாள் சுந்தரர்க்குத் திருவாரூர் நினைவு தோன்றித்
திருவாரூர்க்குச் செல்லப் புறப்பட்டுத் திருவொற்றியூர் எல்லை
கடந்தார்; கடந்ததும் அவருடைய இரண்டு கண்களும் பட்டன.
என் செய்வார்!

சுந்தரர் அண்டவனோடு தாம் நட்புரிமைகொண்டமை
யான், தாம் என் செயினும் கடவுள் மன்னித்துவிடுவார் என்று
கருதினர்போலும்! இறைவனுக்கு வேண்டுவது ஒழுக்கம்.
சுந்தரமூர்த்தி சத்தியந் தவறியபடியால், கடவுள் அவர்க்குப்
பாடங் கற்பித்தார். கடவுளைத் தோழராகக் கொண்டு, அவர்
வாயிலாக எல்லா இன்பங்களையும் நுகர்ந்து வந்த சுந்தரமூர்த்தி,
ஒருமுறை ஓரே குற்றஞ் செய்ததற்குக் கடவுள் அவரை மன்னியாது
ஒறுத்தாரெனின், காலை முதல் மாலை வரை – வாழ்நாள்
முழுதும் – பொய்யே நினைந்து, பொய்யே பேசி, பொய்யே
செய்து வாழ்வோரது பின்னைய கதி எவ்வாறாமோ? கடவுள் நீதி
வடிவாக விளங்குபவர். அவர் நடுநிலை பிறழாது நீதிபுரிவோர்.
சுந்தரர் நண்பரென்று அவர் செய்த தவறுதலுக்கு அவரைக்
கடவுள் மன்னித்து விட்டாரோ? சுந்தரமூர்த்தி சுவாமிகள்
ஒழுக்கத்தின் மேன்மை யுணர்ந்து அன்றுமுதல் கடவுளைப்
பாடும்போதெல்லாம் “கடவுள் ஒழுக்கமயமா யிருப்பவர்”
என்னுங் குறிப்புவிளங்க ஓதிக்கொண்டு வந்தார். அத்திருப்
பாடல்களுள் சில வருமாறு:-

“அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவு நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வ ரடிகேள்
பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நானறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க வென்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே”

“மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை யாடிய கொன்றையி னாயுன்
சீல ழங்குண ழஞ்சிந்தி யாதே
நானு மித்தனை வேண்டுவ தடியேன்
உயிரொடு நரகத்தழுந் தாமை
ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே”

“விண்பணிந் தேத்தும் வேதியர் மாதர்
வெருவிட வேழமொரன் றுறித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் மரசே
தண்பொழி லொற்றி மாநக ருடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே”

“செய்வினை யொன் றறியாதேன் திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ
வேண்டாவோ
பையரவாவிங் கிருந்தாயோ என்னப் பரிந்தென்னை
உய்யவருள் செய்யவல்லான் உளோம்போகீ ரென்றானே ”

‘ஆலத் தானுகத் தமுது செய்தானை
ஆதி யைஅம ரார்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி துழடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாளுமை நங்கை
என்று மேத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்ப னெம்மானைக்
காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே’

“குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்கா துடையானே
உறவிலேன் உனையன்றி மற்றடி யேன்
ஒருபிழை பொறுத்தா விழிவுண்டோ
சிறைவண் டார்பொழில்குழ் திருவாரூர்ச்
செம்பொனே திருவா வடுதுறையுள்
அறவனே யெனைஅஞ்ச லென்றருளா
யாரெனக் குறவமராக ளேறே”

கடவுள் தண்டனை என்பது இரக்கத்தால் நிகழ்வது. செய்த
குற்றத்தை யுணர்ந்து, அது குறித்துக் கசிந்து கசிந்துருகி அழு
வோர்க்குக் கடவுள் உடனே அருள்செய்வர். சுந்தரர் அழுது
அமுது கண்களைப் பெற்றனர். அவர்தம் வரலாற்றால்
ஒழுக்கத்தின் விழுப்பம் விளங்குதல் காண்க.

செருத்துணை நாயனார் என்பவர் திருவாரூரில் கமலா
லயத்தில் புட்பத் திருத்தொண்டு செய்துகொண்டிருந்தபோது
கழற்சிங்க நாயனாரும், அவர்தம் மனைவியாரும் சுவாமி
தரிசனஞ் செய்து முன் பின்னாகத் திருக்கோயில் வலம் வந்தனர்.
அம்மையார் புட்பமண்டபத்துக்கு வெளியே கிடந்த ஒரு
பூவையெடுத்து மோந்தனர். அது கண்ட செருத்துணையார்,
கழற்சிங்கர் மனைவியார் மூக்கை அறுத்தனர். சோர்ந்து விழுந்த
தேவியரது அழுகை கேட்ட கழற்சிங்க நாயனார், ஆண்டுப்
போந்து, நிகழ்ந்த செய்தியை விசாரித்து, முதலில் மலரைத்
தொட்டது கரமாதலால் அதைத் துணித்தல் வேண்டுமென்று
தேவியார் கரத்தைத் தாமே கொய்தார். கழற்சிங்கர் ஒரு மன்னர்;
செருத்துணையார் ஒரு வேளாளர். இருவருந் தொண்டர்.
மலரை முகந்தவர் மன்னர் மனைவியார் என்று ஆஞ்சித்
செருத்துணையார் அவரைத் தண்டியாது விடுத்தனரோ? நீதிக்கு
மன்னர் மனைவியானா லென்ன? மற்றவர் மனைவியான
லென்ன? கழற்சிங்கர் “தாம் மன்னர்” என்னும் இறுமாப்பால் தம்
மனைவியார் மூக்கையறுத்த தொண்டரைத் தண்டித்தாரோ?
தம் மனைவியார் சிவாலயத்தில் சிவபிரானுக்குரிய பூவைத்
தொட்டதே குற்றம் என்று தம் மனைவியாரின் கரத்தைத் தாமே
துண்டித்தார். தண்டனை கொடுமையாயிருக்கலாம். இருவரும்
நீதி ஒழுக்கத் தருமத்தில் பிறழவில்லை யென்பதையே ஈண்டுக்
கருதுதல் வேண்டும்.

பெண்மணிகள்

நாயன்மாருள் பெண்மக்களு முளர். காரைக்கா
லம்மையார், மங்கையர்க்கரசியார் இவ்விருவர் பெருமை
வருணிக்கற்பாலதன்று. காரைக்காலம்மையார் அன்பும் அறிவும்
நிரம்பப் பெற்றும், அவையில்லா நாயகனோடு கலந்து இல்லறம்
நடத்தி, அவன் மனத்துக்கிசைய ஒழுகிவந்தார். அம்மையார்
திருவருளால் மாம்பழம் பெற்றதைக் கண்டு நாயகன் “இது
தெய்வம்” என்று எண்ணிப் பாண்டி நாட்டுக்குச் சென்றான்.
சென்ற நாயகனை மறவாது காரைக்காலம்மையார் மனத்தில்
போற்றியே வந்தனர். பிரிந்த நாயகன் பாண்டி நாட்டில்
வேறொரு மாதினை மணம் புரிந்து, பிள்ளை பெற்று,
அப்பிள்ளைக்கு முதல் மனைவியாரின் பெயரை சூட்டி,
அம்மையாரைக் குலதெய்வமாகத் தொழுது வந்தான். சிலநாள்
கழித்து அம்மையார் உறவினரோடு நாயகன் பதிக்குச் சென்று
தம் வருகையை அவனுக்குத் தெரிவித்தனர். அவன் இரண்டாம்
மனைவி மக்களோடு போந்து, அம்மையார் திருவடியில் விழுந்து
வணங்கினான். அவன் செயல்கண்ட அம்மையார், “இவன்
பொருட்டு ஓம்பிய இப்புலால் உடல் எற்றுக்கு” என்று
உதறினார். உதறினதும் அம்மையார் பேய் வடிவம் பெற்றார்.
அம்மையார் கல்வி நிலையும், ஞான நிலையும் வருணனைக்
கெட்டாதன. அத்துணைக் கல்விஞானம் பெற்றிருந்தும், அவர்,
தம் நாயகன் பிரியு மட்டும் தாம் அவனை விடுத்துப் பிரியாம
லும், தமது நிலையை ஏனையோர்க்குப் புலப்படுத்தாமலும்
வாழ்ந்து வந்ததை இக்காலப் பெண்மக்கள் உற்றுநோக்கி
உய்த்துணரல் வேண்டும். அம்மையாரின் தத்துவஞானப் புலமை
கீழ்வரும் (அம்மையார் அருளிச்செய்த) சில பாக்களால் நன்கு
புலனாகும்.

“இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படருநெறி பணியா ரேனும் – சுடருருவில்
என்பறாக் கோலத் தெறியாடு மெம்மானார்க்.
கன்பறா தென்னெஞ் சவர்க்கு”

“இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே யீண்டிறக்கஞ் செய்வான் இறைவனே
எந்தா யெனவிரங்கு.ம் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தா லதுமாற்று வான்?”

“அறிவானுர் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே -அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்ப்பா ராகாசம்
அப்பொருளுந் தானே யவன்”

“அன்றுத் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் -என்றுந்தான்
எவ்வுருவோன் நம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவ மேது”

இப்பாக்கள் அம்மையாரின் உறுதிநிலையை உணர்த்தும்.

மங்கையர்க்கரசியார், நின்றசீர்நெடுமாறன் என்னும் கூன்
பாண்டியன் மனைவியார். கூன்பாண்டியன் சைவசமயம்
விடுத்துச் சமண சமயந் தழுவினான். அரசன் எவ்வழி அவ்வழி
குடிகள். மதுரைமா நகரம் சமண சமயத்தால் மூடப்பட்டிருந்தது.
கோயில் பூசைகளுக்கும் முட்டு நேர்ந்தது. மங்கையர்க்கரசி
யார்க்குச் சைவ சமயத்தில் பற்றுண்டு. “நாயகன் செல்லும் வழி
நாமும் செல்லலாம்” என்ற எண்ணம் நாயகியார்க்கு உண்டாக
வில்லை. நாயகன் வேறு சமயந் தழுவினமையான், அவனை விடுத்து அம்மையார் பிரியவுமில்லை; அவன் கொண்ட சமயத்தைத் தழுவவுமில்லை. அம்மையார் நாயகனோடு வாழ்ந்து, அவன் விருப்பப்படி நடந்துவந்தார். நாயகனையும் பதியையுந் திருத்த வேண்டுமென்னும் மனவெழுச்சி அம்மையாரை விட்டகல
வில்லை. மங்கையர்க்கரசியார் முயற்சியால் திருஞான சம்பந்த
சுவாமிகள் மதுரைக் கெழுந்தருளிச், சைவ சமயத்தை
நிலைநிறுத்தி, அரசன் முதலிய பலரைச் சைவ சமயந் தழுவுமாறு
செய்தனர். இவ்வளவிற்குங் காரணர் மங்கையர்க்கரசியாரே
யாவர். இவர்தம் வீரச்செயலை என்னென்று கூறுவது?

இப்பொழுது நமது தேசத்தில் அன்புநெறி அருகியிருக்
கிறது. அதை மீண்டும் தேசத்தில் நிலைபெறுத்தப் பல
மங்கையர்க்கரசிகள் தேவை. ஆண்மக்கள் மேல்நாட்டு நாத்திக
மயக்கத்தில் உறங்கினும், தாய்மார்கள் அவர்களைத் தட்டி
எழுப்பிச் சுதேச ஞான பாதையில் நடக்குமாறு செய்தல்
வேண்டும். பெண்மக்கள் மனங்கொண்டால் விதேசியம் ஒழிந்து,
சுதேசியம் வளர்ந்தோங்கும் என்பதிற் சந்தேகமில்லை. நாயன்மார்
செய்துவந்த திருத்தொண்டிற்குப் பெரிதும் நாயகிமார் துணை
செய்தனர். பெண் மக்களின் உதவியின்றி எக்காரியமுஞ் சித்தி
பெறாது. மங்கையர்க்கரசியார் ஒருவர் உழைப்பில்லாவிடின்
சைவ சமய மெங்கே? சிவனடியார் எங்கே? ஆதலால் பெண்
மக்கள் உழைப்பு இன்றியமையாதது.

வீரம்

கடவுள் அடியவர் என்பவரெல்லாங் கோழைகள் என்றும்,
அவர்தம் நெறியில் வீரம் இல்லை என்றும் இக்காலத்துச் சிலர்
பேசுவதுண்டு. இவரனைவரும் அடியவர் வரலாற்றை ஊன்றி
ஆராயாமலே வாயில் வந்தவாறு பேசுகிறார். நாயன்மார்
வரலாற்றில் வீரஞ் செறிந்துகிடத்தல் வெள்ளிடைமலை.
கண்ணப்பர் அன்பர்; பேரன்பர். அவர்தந் தொழில் என்ன?
வேட்டையாடுவது. கோழை வேட்டையாடுவாரோ? கண்ணப்பர்
வேட்டைத் திறம் பெரியபுராணத்தில் நன்கு வருணிக்கப்பட்
டிருக்கிறது. எறிபத்தர் கருவூரில் வாழ்ந்த ஒரு சிவனடியார். அவர்
சிவகாமியாண்டாரின் புட்பத் தொண்டுக்கு ஊறு செய்த
பட்டத்து யானையை வீசி எறிந்தார். பிழைசெய்த யானை –
மன்னர் யானை – பட்டத்து யானை – என்று எறிபத்தர்
அஞ்சினரோ? ஒரு யானையை மழுவால் எறிந்து வீழ்த்தியது
வீரமா? கோழமையா? அறிஞர்கள் உன்னுவார்களாக. ஏனாதி
நாத நாயனார் என்பவர் ஒரு வீரர். சிலம்பக் கூடம் அமைத்து
வாள்வித்தை பயிற்றுவிப்பது அவர்தந் தொழில். வாள்வித்தை
பயிற்றுவித்த ஒருவர் அடியவரா யிருந்தமை கருதத்தக்கது.
மற்றும் பல நாயன்மாரது வீரத் திறங்களை ஈண்டு விரிக்கின்
கட்டுரை பெருகும். அவைகளைப் பெரிய புராணத்திற் காண்க.
நாயன்மார் வீரம், இகலை அடிப்படையாகக் கொண்ட
தன்று. இகலை அடிப்படையாகக் கொண்டெழுவது வீரமாகாது.
வீரத்தினடியில் அன்பு – ஈரம் – இரக்கம் – ஊர்தல் வேண்டும்.
எறிபத்தர், மன்னரிடம் அன்புரை கூறியதும், ஏனாதிநாத
நாயனார், அதிசூரனை முதன்முறை புறமுதுகிடச் செய்து,
பின்னே அவன் அடியவனாய் முகங்காட்டியபோது, தாமே
அன்பால் தலை சாய்த்துக் கொடுத்ததும் புலப்படுத்துவ
தென்னை? இவை, நாயன்மார் ஈரநெஞ்சின ரென்பதை
யல்லவோ புலப்படுத்துகின்றன?

“ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பாரம் ஈசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீரம் என்னால் விளம்புந் தகையதோ”
– பெரியபுராணம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *