நளாயினி
கலைஞர் மு. கருணாநிதி

புரட்சிப் படம்

டைரக்டர் சார்! பணத்தைப்பற்றிக் கவலையே இல்லை – உங்கள் இஷ்டத்துக்கு செட்டுகள் போட்டுக் கொள்ளலாம்-ஸ்டுடியோவுக்குள் அமெரிக்காவின் கட்டிடங்கள் வரவேண்டுமா? மாஸ்கோவின் தெருக்களை அமைக்க வேண்டுமா? கடல் ஒன்று கட்டவா? கானத்தையே அழைக்கவா? மழையா? புயலா? பூகம்பமா? எது வேண்டுமானாலும், என்ன செலவானாலும் சரி—படம் பெரிய படமாக இருக்க வேண்டும். – பெரிய படம் என்றால் நாற்பதாயிரம் அடியோ -அல்லது சினிமாஸ்கோப் மாதிரியோ அல்ல சார்! ஒரு வருஷத்துக்கு ஒரு ஊரிலே ஓட வேண்டும்- இந்தப் படத்தைப் பற்றி பேசாதவர்கள் பிறக்காதவர்களாகத் தானிருக்க வேண்டும் – வசூல் மட்டும்மல்ல லட்சியம் ! அருமையான கதை! அபூர்வமான வசனம் ! அற்புதமான டைரெக்ஷன்! அநாயசமான நடிப்பு! அமோகமாக கூட்டம்! இப்படி ஒரே பரபரப்பு நாட்டிலே ஏற்பட வேண்டும் – நான் இந்தப் படத்தை பணம் சம்பாதிப்பதற்காக எடுக்கவில்லை – இதில் வரும் லாபம் முழுவதையும் நாலைந்து கல்லூரிகள் கட்டுவதற்குச் செலவிடப் போகிறேன்- உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளரையே ஏற்பாடு செய்து விட்டேன்- முற்போக்கு எண்ணத்தோடு எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே தான் அரைக் கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கிவிட்டேன் – நடிக, நடிகைய தேர்தல் – படப்பிடிப்பு – உடனே ஆரம்பமாக வேண்டும். ”

பட முதலாளி, பரமசிவானந்தம் அவர்கள் முற்போக்கு எண்ணங்கொண்டவர்- நல்ல கருத்துள்ள படங்களை மக்களைத் திருத்தும் வகையில் வெளியிட வேண்டுமென்ற அவர் அதிகமுடையவர் -படம் எடுத்துத்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் வாழ்வு நடத்த வேண்டும் என்ற நிலையிலே உள்ள வருமல்ல; பணத்தை அளவுக்குமேல் குவித்து அழகு பார்க்கும் கருமித்தனமுடையவருமல்ல. வள்ளல் தன்மையும் அதே நேரத்தில் நாட்டுக்குத் தேவையான எண்ணங்களை கலைகள் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற கொள்கையும் பெற்றவர். பல லட்ச ரூபாய்க்குச் சொந்தக்காரரான அவர், உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கக்கூடிய ஒப்பற்ற பெரும் படம் ஒன்றை எடுப்பதற்காகத் தன் சொத்தில் பெரும் பகுதியான ஐம்பது லட்ச ரூபாய்களை முதலாக வைத்தார். ஸ்டுடியோ ஒன்றைத் தனியாக அமைத்தார், படம் வசதியாக எடுப்பதற்காக! மிகப் பிரசித்தி பெற்ற டைரக்டர் ஒருவரும், மக்களிடம் செல்வாக்கு பெற்ற வசன மேதை ஒருவரும், புதுமைக் கவிஞர் ஒருவரும், ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

தன்னுடைய நல்ல உள்ளத்தை, படமுதலாளி அவர்களிடம் திறந்து சொல்லிவிட்டார் அவர்களும் — அகிலம் வியக்கும் அறிவுக்கதை யொன்றை அழகான பாடல்களுடன் தயார் செய்து விட்டனர். படப்பிடிப்பு ஆரம்பமானது. புகழ்வாய்ந்த நட்சத்திரங்கள் ஒருவர் பாக்கியின்றி நடித்தனர்- நாடெங்கும் அந்தப் புதிய படத்தைப் பற்றியே பேச்சு – “ எப்போது வெளி வருமோ” என மக்கள் ஏங்கி நின்றனர் ஐம்பது லட்சம் ரூபாயும் கரைந்து, படப்பிடிப்புவேலை – ஏறத்தாழ ஒரு கோடியை எட்டிப் பிடித்தது — பட முதலாளி சில இடங்களில் கடன்வாங்கி படத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தினார். படம், இதுவரையில் யாரும் வெளியிடாத அந்த அளவு, உயரிய முறையில் உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் வகையில் அமைந்தது-யாரும் துணிந்து சொல்ல முடியாத புரட்சிக் கருத்துக்களை, நாகரீகமான முறையிலும், ஆபாசமற்ற தன்மையிலும், அந்தப்படம் விளக்குவதா யிருந்தது-தொழிலாளர் உயர்வுக்கான வழிகள்- சாதிபேதமற்ற சமுதாயம்-கடவுள் பெயரால் நடைபெறும் கயமைச் சேட்டைகள்-கலையின் பெயரால் நிகழும் ஆஷாட பூதித் தனங்கள்-மதம் மக்கள் சமூகத்தை எப்படிப் பாழ்படுத்துகிறது என்ற விளக் கம்—இத்தனையும் அடங்கிய ரத்தினமாக அந்தப் படம் அமைந்து விட்டது-நடிப்பு-ஆகா ! இதயத்தின் துடிப்பு ! கதை-வாழ்வின் ஒளி-வசனம் – ஜீவ காவியம் பாடல்கள்-தேன் பாகு-கற்கண்டு டைரக்ஷன் பாராட்வே இயலாது! அத்துணை சிறப்பு — அத்துணை சிறப்பு !

படம், ஆயிரம் ஆயிரம் அடியாக வளர்வதிலிருந்து, அது பதினாயிரம் அடிகள் வளரும்வரை-தினந் தோறும் படமுதலாளி அதைப்பார்த்துப் பார்த்து ரசிப்பார்-தேசமெங்கும் புகழக்கூடிய ஓரு பெரிய படத்தை அளிக்கப் போகிறோம் என்ற ஆனந்தம் அவரை ஆட் கொண்டது – நண்பர்கள் வருவார்கள் – படத்தைக் காட்டுவார்- மகிழ்வார்கள் -பாராட்டுவார்கள்.

ஒரு சிலர் மட்டும் – சிறப்பான படந்தான் ஆனால் சென்சார் ஆகுமா? என்று சந்தேகத்தோடு கேட்பார்கள். அதைப்பற்றிக் கவலையே இல்லை என்பார் படமுதலாளி-இப்போதென்ன அக்கிரமமான விஷயத்தையா படத்தில் சொல்லிவிட்டோம் ? செக்ஸ் அப்பீலா இருக்கிறது? அல்லது ஆபாச வசனமா? மறுக்கக்கூடிய விஷயம் என்ன இருக்கிறது? புராணப் படங்களில் வரும் ஆபாசங்கள் எதுவும் இதிலே கிடையாதே! தாராச சாங்கத்தைப் போலவா படம் எடுத்திருக்கிறோம்? இல்லையே-சென்சார் எதற்காகத் தலையிடப் போகிறார்கள்? என்று ஆத்திரமாகக் கேட் டார் பரமசிவானந்தம். அவரது நண்பர்களைப் போலவே நாட்டுமக்களும் – சென்சாரைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சென்சார் என்பது, ஒரு பாரபக்ஷம் வாய்ந்த ஸ்தாபனம் என்பது, நாட்டு மக்களின் தீர்ப்பு. அதனால் பரமசிவானந்தம் எடுக்கும் புரட்சிப் படத்திற்கு ஏதாவது ஆபத்து வரும் என்று எதிர்பார்த்தனர் சென்சாருக்கு முன்பே, படத்தைப் பற்றிய விளம்பரங்கள் வெளிவந்தன.

‘மதவாதிகளுக்கோர் மருந்து ! மறுமலரிச்சித் தூதருக்கு விருந்து ! ‘

‘ஆண்டவன் பெயரால் அவனியை ஏமாற்றாதே! ஆண்டான் அடிமை அகிலத்தில் வேண்டாம் !’

இதுபோன்ற கொட்டை எழுத்து வாசகங்க ளோடு புரட்சிப் படத்தின் விளம்பரங்கள் ஏடுகளில் மின்னின.

கடைசியாகப் படம் சென்சாருக்கும் சென்றது படத்தில் எந்தக் காட்சியும் பாதிக்கப்படாத வகையில் இரண்டே இடங்களில்தான் சென்சார் வெட்டி யிருக்கிறார்கள் என்ற சேதி நாடெங்கும் பரவிற்று- அப்பாடா, படம் தப்பிப் பிழைத்தது, என்று நாட் டோர் பெருமூச்சுவிட்டனர்.

குறிப்பிட்ட தேதியிலே படத்தை வெளியிடும் விளம்பரம் வந்தது அடடா! படத்தின் பெயரை இது வரையில் சொல்லாமல் இருந்துவிட்டேனே “செவ்வானம்” என்பதுதான் அந்தப் புரட்சிப் படத்தின் பெயராகும்.

நானூறு தியேட்டர்களில் ஒரே நாளில் படம் வெளியிடப்பட்டது — தியேட்டர்கள் இடிந்து நொறுங்கிவிடுமோ, என்கிற அளவுக்குத் திரளான கூட்டம். எந்தப் படத்திற்கும் இவ்வளவு பரபரப்பு இருந்ததில்லை.

தலைநகரத்திலே, திரையிடப்படும் தியேட்டருக்கு பரமசிவானந்தம் வருகை தந்திருந்தார். அவரைக் கண்ட மக்கள், ஆவலோடு வரவேற்று குதூகலித்தனர்.

படம் ஆரம்பமானது.

”செவ்வானம்” என்ற தலைப்பைக் கண்டதும் ஒரே கைதட்டல்-வயிற்றெறிச்சல்காரர்கள் சிலரின் மனதைப் புண்படுத்தக்கூடிய அளவுக்கு மக்களின் ஆரவாரம். “கதை வசனம்” என்ற பெயர் ‘ காட்டப்பட்டது; அதனையொட்டி, நடிகர்கள் டைரக்டர் பெயர்கள் வந்தன. இறுதியில், ‘தயாரிப்பு பரமசிவானந்தம்’ என்ற எழுத்துக்கள் பெரும் கரகோஷத்தைப் பெற்றன-அடுத்த முதல் காட்சி என்ன என்று மக்கள் துடித்தனர்- திரை ஒரே வெளுப்பாயிருந்தது! சில விநாடிகளில் அப்படியே இருந்தது. பிறகு கீழ்க்காணும் எழுத்துக்கள் உருண்டு வந்தன.

“படம் – முற்றிற்று – வணக்கம் ”

மக்கள் திகைத்தனர், தியேட்டரில் மணி அடிக்கப்பட்டது-திரைகள் இழுக்கப்பட்டன. தியேட்டரில் ஒரே புரட்சி – மக்கள், பரமசிவானந்தத்தை சூழ்ந்து கொண்டனர்.

“ என்ன அக்கிரமம் ? ” என்று கத்தினர்.

“எல்லாம் சென்சார் வேலை ” என்றார் அவர்.

“சென்சார் இரண்டு இடத்தில்தானே அய்யா வெட்டியதாகச் சொன்னார்கள் ? ”

ஆமாம் தோழர்களே ! சென்சார் இரண்டே இடத்தில்தான் வெட்டினார்கள் !

முதல் இடம் : டைட்டில் முடிந்ததும் வெட்டினார்கள்.

இரண்டாவது இடம்: ‘வணக்கம்’: என்பதற்கு முதல் பிரேமில் வெட்டி விட்டார்கள் – ஆக இரண்டே இடம் தான்!’ என்று பட முதலாளி பதில் சொன்னார் மக்கள் வெள்ளம் “சென்சார் ஆபீஸ்” திசையை நோக்கி, ஒரு ஆத்திரப் பார்வையை வீசிற்று!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *