
நளாயினி
கலைஞர் மு. கருணாநிதி
மானம்
வேலனுக்கு அப்போது வயது பத்துதான். பள்ளிக்குச் செல்லும் பருவம். அள்ளிப்பருகிடத் தோன்றும் அழகான உருவம். பிள்ளைக் கனியமு தெனப் பண்பாடும் அவன் பெற்றோர் தங்கள் குல விளக்கை கொஞ்சாத நேரமில்லை. இருபத்தாறு வயது நிரம்பிய வைதேகியும், முப்பத்தைந்து ஆண்டு கடந்த சிங்காரமும் அந்த ஊரில் நடத்திக் காட்டிய இல்லறமிருக்கிறதே; அது எழில் மிக்க எடுத்துக்காட்டு. ‘சிங்கார வாழ்வு என்றே கூறு வார்கள் ஊரார்-உரையாடல்களின்போது ! சிந்தை மகிழச் செய்யும் கணவன்-சிறப்புவளர் மனைவி செல்வப் பிள்ளையாண்டான்
குறையென்ன அக் குடிலுக்கு! சாவின் கண்ணிலே அந்தக் குடும்பம் பட்டது.
பகைவரும் புகழும் பண்புடைய வாழ்வு என் அவர்களுக்கு பாராட்டுரையா படித்துக்கொடுக்கும் சாவு! சாவு நுழைந்தது அந்த சந்தனக்காட்டிலே! மேய வந்தமாடு அழகான அருகம்புல்லாயிற்றே என்று விடுவதில்லை ; அதன்மீது பாயவந்த புலியும் சாந்தமான பசுவாயிற்றே என்று விடுவதில்லை. அது போலத்தான் சாவும்.
அது, வைதேகியின் கணவனை, வேலனின் தந்தையை,சீருற்ற சிங்காரத்தைக்கொத்திக்கொண்டு போய்விட்டது. சாவினுங் கொடிய சமுதாயம் அவளுக்கு “சகுனத்தடை” என்ற ‘சர்’ பட்டத்தை சூட்டி குப்பை மேட்டில் கொலு வைத்துக் களித்தது.
குப்பை மேட்டு குண்டுமணியை குறிபார்த்துக் கொண்டிருந்தான் குடிகாரக் கறுப்பன். வேலியிழந்த கொல்லையும், தாலியிழந்த தையலும், இந்த முரட்டு உலகில்
பாதுகாப்பற்றவர்கள் தானே! கறுப்பன் வைக்கும் கண்ணியைப் புரிந்துகொண்டாள் வைதேகி. மகனை பள்ளிக்கு அனுப்புவதும், அவன் திரும்பி வரும்போது கணவனின் தேஜசை மைந்தனின் மந்தகாசமுகத்தில் கண்டு மகிழ்வதுமே இனி தனக்கு வேலையென்று முடிவு கட்டிக்கொண்ட அவளுக்கு, குடிகார கறுப்பனின் குறியிலிருந்து எப்படித் தப்புவது என்ற வேதனையும் சேர்ந்தது வானம்பாடிகளையும் வல்லூறுகளையும், வட்டமிடச் செய்யும் வையகத்தை வைது தீர்த்தாள். ஆனால் அதுவல்ல அவள் மீள்வதற்கு வழியென் பதையும் உணர்ந்து வெதும்பினாள். அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல் இருந்தது. அதுவும் அறை குறையாக! புதல்வன் பெரியவனாகிவிட்டால் பொல்லாத கறுப்பன்களை வில்லாக வளைத்தெறிந்துவிடு வான் என்பதுதான் அந்த ஆறுதல் ஆனால் அதை நினைத்து அவளே “சே! என்ன ? நேரத்திற்கு பொ ருந்தாத ஆசை” யென்று தன்னையே கிண்டல் செய்து கொள்வாள். ஆனாலும் அவள் இருதயத்தின் ஒரு மூலையிலே துளிர்த்த அந்த ஆசை வளரத்தான் ஆரம்பித்தது. நாட்களை எண்ணினாள். மகன் பெரிய வனாகிவிடவேண்டுமென்று நாட்களைவிரட்டியும் அடித்தாள். சிறைச்சாலையிலே கைதியின் அவசரத்தை யுணர்ந்து கொள்ள முடியாத “நாள்” தானே வெளியுலகிலும் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியவில்லை. வேலன் விரைவில் வளர்ந்து விட்டால், தன்னைக் காக்கும் அரணாவான்; தாயைக் காக்கும் மகனாவான், மானங்காக்கும் வீரனாவான் என்று நம்பினாள்.
வேலன் வளர்ந்தானோ இல்லையோ; கறுப்பனின் கொடுமைகள் கனவேகமாக வளர்ந்தன. அந்தத் தேள் என்றைக்குத் தன்னைக் கொட்டுமோ என்று பயந்து கிடந்த வைதேகியின் காதில் தேனினுமினிய சேதியொன்று தென்றல் கொண்டுவந்தது. குடிகாரக் கறுப்பன் கொலைக் குற்றம் ஒன்றில் ஈடுபட்டு பதினைந்து ஆண்டு தண்டனைப் பெற்று சிறையேகினான். நாள் என்னும் அவசியம் வேலனின் தாய்க்கு இல்லாமல் போயிற்று.
ஆண்டுகள் உருண்டன. வேலன் வியாபார நிமித்தம் வெளியூர் சென்றவன் திரும்பி வரவில்லை இன்னும் மகன் வந்ததும், அவனிடம் மண விஷயமாகப் பேசி அடுத்த மாதத்திலே ‘ஜன நாயக மாமியார் ராஜ்யத்’தை ஸ்தாபிக்க வேண்டுமென்று எண்ணிக்கிடந்தாள் வைதேகி. கதவு தட்டும் சப்தம் கேட்டது. கண்மணி வந்துவிட்டான் என்று கதவைத் திறந்தாள். கண்மணியல்ல ; காராக்கிர கத்திலிருந்து மீண்ட கறுப்பன் உள்ளே நுழைந்தான்.
“ஆகா! வைதேகி – நாற்பது வயதானாலும் நல்ல அழகாய்த்தானிருக்கிறாய்! பார்த்தாயா ; எனக்கு உன்மேலுள்ள பாசத்தை !”
சிறையைத் திறந்தார்கள் – நேரே இங்கு வந்தேன். “செப்புச் சிலையுனைக் காண” என்று கறுப்பும் வெளுப்பும் கலந்த மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டான்.வைதேகி கதறினாள். அவள் வாயைப் பொத்திக்கொண்டான். கசங்கிப்போய் உதிர்ந்து பழுத்துப்போன இந்த மலரைப் பிய்த்தெறிய விரும்பினான். நிலமை பயங்கரமாயிற்று. அவன் பிடியிலே சிக்கினாள்.வைதேகி, வெறித்துப் பார்த்தாள் அவனோ சிரித்து அணைத்தான்.
பலகணியிலே ஒரு முகம். வேலனின் முகம். “வேலா வந்துவிட்டாயா மகனே! “மானத்தைக் காப் பாற்றடர் தம்பீ” என அலறினாள். அதற்குள் கறுப்பன் வாயை அடைத்துவிட்டான் வேலன் பாய முனைந்தான் அதே நேரத்தில் கறுப்பனின் இடையி லிருந்து கைக்கு மாறிய பளபளப்பான கத்தியையும் கண்டான் கறுப்பன் வேலன் பக்கம் திரும்பி கத்தியை ஓங்கியபடி “மானமா ? உயிரா? ” என்று அதட்டினான். வேலன் ஓடினான். கறுப்பனிடமல்ல- வெளியே ஓடினான்.
கறுப்பன் வைதேகியை இறுக அணைத்தான். அவள் இலட்சியச் சுடரையும் அணைத்தான்.
மகன் வளர்ந்து விட்டால் யாருக்கும், எதற்கும் அஞ்சவேண்டியதில்லை என்றிருந்த அந்தத் தாய் இப்போது அழுதாள், மானத்தைக் காக்கமுடியாத கோழை மகனே என்று புலம்பினாள். மானங்காக்காத மைந்தனைவிட தன்மானத்தைப் பறித்த கறுப்பன் எவ்வளவோ மேல் என்று அந்த மாதாவின் மனம் பேசிற்று.ஆனால் மானத்தைப்பற்றி பிரசங்கம் செய்ய முடியவில்லை. பிணம் பேசாதல்லவா ! கடைசியாக, வீட்டு வெள்ளைச் சுவற்றில் கரியால் எழுதிவைத் திருந்தாள் “மானத்தைக் காக்காத கோழையின் மாதா மரணத்தைத் தழுவினாள்” என்று !
ஒடிய வேலன் ஊருக்குத் திரும்பவே பயந்தான். அன்று கறுப்பன் காட்டிய பட்டாக்கத்தி அவனைப் பயமுறுத்தியபடியிருந்தது. சிலநாள் சுற்றிக்கொண்டிருந்தான் வேலன். ஒருநாள் தினசரி பத்திரிகைகட்கு ஒரு ருசிகரமான செய்தி கிடைத்தது.
“புகை வண்டியொன்று கவிழ்ந்தது. நானூறுபேர் மாண்டனர்” என்பதுதான் அது. அப்படி செத்துப்போனவர்களில் அடையாளம் தெரியாமல் போன வேலனும் ஒருவன். எந்த உயிருக்காக, தன்னை போஷித்த உதிரத்தையே உதறித் தள்ளினானோ, அந்த உயிர் பறிபோயிற்று.
அன்றைக்கே கறுப்பன்மீது பாய்ந்து அவன் கத்திக்கு நேர் நின்றிருந்தால் அன்னையின் மானத்தையும் தன்மானத்தையும் காப்பாற்றியிருக்கலாம். இப்போதோ மானத்தையும் இழந்தான். உயிரையும் இழந்தான். இழந்த மானத்தை இறப் பால் காப்பாற்றிக் கொண்டாள் தாய். ஆனால் மகனோ? அந்தோ பரிதாபம்! அவன் மானமிழந்தது பற்றித்தான் ஊர் பேசியது. நானூறு பேரோடு செத்தது யாருக்குமே தெரியாமல் போய்விட்டது.
★ ★ ★



