
நளாயினி
கலைஞர் மு. கருணாநிதி
காதல் கடிதம்
எந்த இடத்தில் நாங்களிருக்கிறோம் என்றே சொல்ல முடியாது. எந்த நேரத்தில் எங்களது முகாம் வேறிடத்துக்கு மாற்றப்படும் என்றும் கூறமுடியாது. எப்போது நாங்கள் சாவோம்; அல்லது சாவிலிருந்து மீள்வோம் என்றும் கூறமுடியாது. எதிரிகளின் தாக்குதல் எத்தன்மைத்தாயிருக்கும் என்றும் நிச்சயிக்க முடியாது. வெறிபிடித்த இட்லர் முஸோலினியின் பக்கந்தான் வெற்றி மழை பொழிகிறது என்ற செய்திகள் நிமிஷத்துக்கு நிமிஷம் காதிலே விழுந்து கொண்டிருக்கிறன. கடலிலே சென்றால் கண்ணி வைத்து பிடிக்கின்றனர்-பறந்தால் சுட்டு வீழ்த்துகின்றனர்- நடந்தால் சுற்றிலும் நாசம் படையெடுத்து வருகிறது இப்படிப்பட்ட சூழ்நிலை-கூடாரத்தை விட்டு வெளியிலே சென்றால் தலையிலே செடிகொடிகளை வைத்துக் கட்டிக்கொண்டு நடக்கவேண்டும் இல்லை; இல்லை; நகரவேண்டும். அப்போது தான் எதிரியின் விமானத்தை ஏமாற்ற முடியும். ஏதோ மரஞ்செடி கொடி அசைகிறது என்று பகைவர்கள் போய்விடுவார்கள். மனிதன்; அதுவும் ராணுவத்தொப்பி அணிந்த நேச தேசப்படையைச் சேர்ந்தவன் என்று தெரிந்தால் போதும்; விமானத்திலிருந்து குண்டு பொழியும் சிதறிப்போய் விடவேண்டும் தூள்தூளாக! இதுபோன்ற பயங்கரம் நிறைந்த-விநாடிக்கு விநாடி மரணத்தோடு போராட்டம் நடத்திய அந்த சமயத்திலேகூட, நான் அவளுக்குக் கடிதம் எழுதத் தவறவில்லை. பட்டாள முகாமிலே பயிற்சி பெற்ற நேரம்போக, மிச்சமுள்ள நேரமெல்லாம் என் காதலிக்கு ஓலை எழுதுவதிலேயே உற்சாகமாகக் கழிந்தது. அன்று கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். என் நண்பன் பாலன் அதைப் பின்னாலிருந்து கவனித்துக் கொண்டிருந்ததைக் கூட நான் பார்க்கவில்லை. பாலன் தமிழ் நாட்டிலே தஞ்சை ஜில்லாவிலிருந்து பட்டாளத்திற்கு வந்தவன். என்னோடு நெருங்கிப் பழகிய நண்பன்.
சொல்லப் போனால், எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியர் கூட அவன் தான். என்னிடம் அவன் இந்தி கற்றுக் கொண்டான். ஒருவருக்கொருவர் உபாத்தியாயர்களாக மட்டுமில்லாமல் உழுவலன்பு பூண்ட தோழர்களாகவும் இருந்தோம். கடிதத்தை எழுதி தபாலில் போட்டுவிட்டு வந்தேன். பாலன் என்னைப் பரிகாசமாகப் பார்த்தான். ‘என்ன பாலா?’ என்றேன். பாலன் ஆரம்பித்து விட்டான்.
“அன்புள்ள கண்மணி சுதேஷுக்கு சுந்தர் பாபுவின் ஆசை முத்தங்கள். அல்லும் பகலும் அனவரதமும் உன் அழகு முகத்தை எண்ணியெண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எதிரிவிமானங்கள் வட்டமிடும் போதும் எங்கள் பாசறையை நோக்கி ஆபத்து வரு கிறது என்று அபாயச் சங்கு ஒலிக்கிற போதும் – இடியோசை கேட்டு “அர்ச்சுனா-அர்ச்சுனா” என்று அலறுவார்களே; அதுபோல நானும் பகையோசை கேட்டு, “சுதேஷ் சுதேஷ்” என்று முணு முணுக்கிறேன். அந்தக் காதல் மந்திரந்தான் கண்ணே-எனக்கு ஆறுதல் வழங்கும் அமுதமாக இருக்கிறது-எப்போது இந்தப் பொல்லாத போர் முடியுமோ; பொன்னழகே; அன்னை ஓடிவந்து அணைப்பேனோ; தெரியவில்லை சுதேஷ் தினந்தோறும் நான் உனக்கு கடிதம் எழுதுகிறேன்; நீ பதிலுக்கு ஏன் நாள்தோறும் கடிதம் எழு தக் கூடாது? தெவிட்டிவிடும் என்று கருதுகிறாயோ? என் தேனே ! முன்பெல்லாம் தினம் ஒருமடல் எழுதி னாய் ; தினம் கடிதம் எழுதுங்கள்’ என்று எனக்கு மட்டும் கட்டளையிட்டாய் உன் கட்டளையை சிரமேற் கொண்டு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ மட்டும் ஏனோ; திடீரென்று ஒருமாதகாலமாக மௌனம் சாதித்து விட்டாயே தெரியவில்லையே சுதேஷ்- சுருண்டு போகிறேன் நான்! கனவிலே உன்னைக் கண்டு கலங்குகிறேன். சதா என் இருதய பீடத்திலே அமர்ந்து என பூசைக்குரிய பொன் விக்ரமாக அமைந்திருக்கும் உனக்கு என்மீது என்னம்மா கோபம்? என் உயிரே! இதற்காவது பதில் எழுதி எனக்கு உயிர்ப் பிச்சை கொடு! விரைவிலே திரும்பிவந்து விவாகம் செய்து கொள்ளவில்லை என்ற ஒரு தவறைத் தவிர நான் வேறென்ன தவறு செய்தேன் ? விரைவில் வெற்றி வீரனாக வருகிறேன் ! பதில்-பதில்.
அன்புக்கு அடிமை,
சுந்தர் பாபு
நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்தான் பாலன். அப்போதுதான் தெரிந்தது அவன் என் பின்னால் மறைந்திருந்து கடிதம் முழுவதையும் படித்திருக்கிறான் என்று !
காதல் விவகாரங்களில் ஈடுபடும் போதாகட்டும்; காதல் கடிதம் எழுதும் போதாகட்டும்; காதலியின் பால் கண்ணை வீசும் போதாகட்டும் – பக்கத்தில் யார் இருந்து நம்மை கவனிக்கிறார்களோ என்ற பயமே மனிதனுக்கு ஏற்படுவது கிடையாதே! சும்மாவா சொன்னார்கள் காதலுக்கு கண்ணில்லை என்று ! அது என் விஷயத்தில் உண்மையாகத்தான் முடிந்துவிட் டது – என்னையறியாமல், பாலன் கடிதத்தைப் படித்ததை மட்டுமல்ல நான் குறிப்பிடுவது; என் காதல் மாளிகையின் அஸ்திவாரமே – குருட்டுக் கொத்தனாரால் அமைக்கப்பட்ட போலி அஸ்திவாரமாகத்தான் முடிந்துவிட்டது. அப்போதே சொன்னான் பாலன்; அடிக்கடி கடிதம் எழுதாதே, கசந்துவிடும் என்று! கைவலிக்க வலிக்க எழுதினேன்; கருத்து இனிக்கப் படிப்பால் என்று நம்பினேன். ஆனால் நம்பிக்கை நாசமாயிற்று. உலகத்தை நிலை கலக்கிய போர் முடிந்து விட்டது. ஆனால் என் உள்ளத்தை நிலை கலக்கிய போர் முடிவடையவில்லை.
ஆயிரம் மடல்; அதற்கு பதில் எழுதவில்லை பாலன் சொன்ன சமாதானங்கள் எதுவும் என் காதிலே ஏறவில்லை, “யுத்தச் செய்திகள் யாருக்கப்பா சரியாகக் கிடைக்கிறது ? எங்கேயோ ஒருமூலையில் இந்தியாவிலே குடியிருக்கும் உன் காதலியின் குடும்பத்தார் யுத்த வெறியினால் எப்படிப் பாதிக்கப்பட்டார் களோ; யார் கண்டது ? சுதேஷாவின் மீது வீணாக ஆத்திரப்படாதே! நேரில் சென்று உண்மை நிலையை அறியணும்” என்று பாலன் அடிக்கடி கூறினான். அவனது ஆறுதலால் உயிர் வாழ்ந்தேன். அவன் கூறியது உண்மைதான் என்பது போல அவளுக்கு நான் கடைசியாக எழுதிய கடிதங்கள் எல்லாம் எனக்கே திரும்பிவர ஆரம்பித்தன. யுத்தத்தினால் என் அன்புக்கரசியும், அவளது குடும்பத்தினரும் பாதிக்கப்படடு விட்டனர் என்பதை நம்பினேன். சுதேஷாவின் அன்பையும் காதலையும் சாதாரணமாக எடை போட்டு விட்டோமே என்று எனக்குள்ளாகவே வருந்தினேன். போர் முடிந்தது; எங்களை யெல்லாம் மகிச்சியோடு ஊருக்கு அனுப்பினார்கள். நான் பாலனையும் அழைத்துக்கொண்டு சுதேஷாவைப் பற்றிய விபரமறியப் புறப்பட்டேன். சுதேஷாவின் வீடு பூட்டப்பட்டுக்கிடந்தது. பக்கத்திலே விசாரித்தேன். அவர்கள் சொன்னார்கள்.அவளுக்குக் கல்யாணமாகி விட்டதென்று!
என் மனம் சூன்யமாகிவிட்டது – மயக்கம் வரும் போலிருந்தது அவ்வளவுதான்; கீழே சாய்ந்துவிட் டேன் – மயக்கம் தெளிந்து எழுந்தேன்-பக்கத்திலே பாலன் இருந்தான்– அவனைக் கேட்டேன்;
“சுதேஷாவின் கணவன் யார் என்று யாரிடமாவது விசாரித்தாயா? ” என்று!
“விசாரித்து விபரமறிந்தேன்-சுந்தர்! சுதேஷாவுக்கு கணவனை தேடிக் கொடுத்ததே நீ தானே! ” என்றான் பாலன்,
‘நானா ?’
‘நீ இல்லை – நீ எழுதிய கடிதங்கள் !’
கடிதங்களா….. ……..?
ஆமாம் – தினம் ஒரு கடிதம் எழுதும்படி சுதேஷா உனக்கு எழுதினாள் அல்லவா…
‘ஆமாம்”
“அது ஏன் தெரியுமா ?”
” ஏன் ? “
‘கடிதம் கொண்டுவருகிற அந்த தபால்கார் னின் அழகை ரசிக்கத்தான் !’
“ஆமாம் – சுந்தர் ! அக்கம் பக்கத்தார் கூறிய உண்மை இது! தினந்தோறும் அந்த அழகும் வாலிபமும் இணைந்த தபால்காரனை சந்தித்த சுதேஷா தன் நிலைமறந்தாள் -நீ அடிக்கடி கூறுவாயே இந்துப் பெண்ணின் தர்ம நெறியைப் பற்றி; அந்த நெறியிலிருந்தும் விழுந்தாள் அவ்வளவு தான்; தபால்காரனுக்கும் சுதேஷாவுக்கும் கல்யாணம் முடிந்து விட்டது!”
பாலன் அந்தத் செய்தியைக் கூறிய பிறகு, உலகப் போர் இன்னும் முடியவில்லை என்றே எனக்குத் தோன்றியது-தோன்றுகிறது. பாலன் என்னோடு இரண்டுநாள் தங்கியிருந்தான்; அவனும் போய்விட் டான்; அவனது ‘அத்தை மகள்’ அவசர அழைப்பு அனுப்பினாள் என்று நான் என்ன செய்வேன் ? என் கடிதத்தை சுமந்து வந்தவன் பெற்ற பாக்கியம்கூட, கடிதம் எழுதிய நான் பெறமுடியவில்லையே! அதிகமாகக் கடிதம் எழுதுவதிலும் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டதே.
அப்போதே, அந்த ஜெர்மனியரின் குண்டுகள் என் தலையில் விழுந்திருக்கூடாதா?



