நளாயினி
கலைஞர் மு. கருணாநிதி

நாட்டிய கலாராணி

நெருப்புக் குண்டத்திற்குப் பக்கத்திலே அவள் நிறுத்தப்பட்டிருந்தாள். கொழுந்து விட்டெறியும் தீயின் சிவப்பு நாக்குகள் அவளை இரையாக்கிக்கொள்ளத் துடிப்பதுபோல் நீண்டு உயர்ந்து வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்தன. அவளுக்குத் தரப்பட்ட தண்டனை மிகப்பயங்கரமானது. அதை நிறைவேற்றுவதற்காகவே அவள் அங்கே நிறுத்தப்பட்டிருந்தாள்.

அக்கினி குண்டத்தை அவள் மூன்று முறை வலம் வரவேண்டும். மூன்றாவது முறை அவள் அந்த நெருப்பிலே தூக்கி எறியப்படுவாள். அவளாகவே விழுந்து விட்டாலும் பாதகமில்லை- தடுக்க வேண்டா மென்று உத்தரவு சில வினாடிகள் தான் தீயிலே கிடக்க அனுமதிக்கப்படுவாள்; அரை வேக்காடாக அவள் வெந்ததும்-குற்றுயிரும், குலை உயிருமாக வெளியிலே தூக்கப்படுவாள். தங்கம் போன்ற அவள் மேனியிலே எங்கெங்கே ரணம் ஏற்பட்டிருக்கிறது என்று பார்ப்பார்கள். அந்த ரணங்களை ஆற்றி, உயிரூட்ட மருத்துவரை அழைப்பார்கள் என்று யாரும் எண்ணவேண்டாம். நன்றாக எரிச்சல் தரக்கூடிய மிளகாய்த் தூளை அந்தப் புண்களிலே தூவுவார்கள். வேதனை தாங்கமாட்டாமல் அவள் எழுந்து குதிப்பாள் – துடிப்பாள்-அப்போது அரண்மனை நட்டுவனாரும், மத்தளக்காரனும் வரவழைக்கப்படுவார்கள். அவளது ஆட்டத்திற்குத் தக்கபடி அவர்கள் தாளம் தட்டி மேளம் கொட்டுவார்கள். அவளாக அயர்ந்து, மயங்கி, கீழே விழுந்து, மூச்சு முழுமையும் அடங் கிய பிறகுதான் அவளை விடுவார்கள். இந்த மரண வேடிக்கையை மாளிகையிலிருந்தபடியே மன்னன் காணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தீக் காயங்களோடு கூடிய அந்த அழகியின் சவத்தை தலைநகரின் மத்தியிலே நாலு நாளைக்கு கட்டித் தொங்கவிடுவார்கள் ! காக்கைகளும், கழுகுகளும் அவள் உடலைக் கொத்திப் பிராண்டிக் களிப்புற அனுமதிதரப்படும். ஐந்தாம் நாள் அந்த உடல் கடலிலே எறியப்படும்.

இப்படி அறிவிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக் கொண்டு, அந்தத் தங்கம் நிகர் மேனியாள் -தணல் காட்டுக்கு அருகிலே நின்று கொண்டிருந்தாள்.

இத்தனைக்கும் அந்த ஏந்திழையாள் செய்த குற்றந்தான் என்ன? யாருக்கு என்ன தீங்கிழைத்தாள்? அரசு சீறுமளவுக்கு-அக்கினி தழுவுமளவுக்கு-அந்த ஆரணங்கு புரிந்த ஆபத்தான செயல் தான் யாது ? வேற்று நாட்டுக்கு வேவுக்காரியாக மாறினாளா? சுதந்திர பூமியை அடிமையாக்க உதவும் சூன்யக்காரியாக உலவினாளா ? கொலை செய்தாளா ? கற்பு நிலைகுலைந்து கருவைச் சிதைத்தாளா? வீதியிலே போவோருக்கு வழி காட்டி, ‘இன்ப புரிக்கு வழிகாட்டுவேன் வாரீர்’ என்று வலுவிலே அழைத்தாளா ? இல்லை; இல்லை, அவள் செய்த குற்றம் மேற்கூறிய எதுவுமில்லை !

அவள் யார்? அங்கேன் நிறுத்தப்பட்டிருக்கிறாள்? அவள் ஒரு நடனக்காரி! கோமேதகம் அவள் பெயர் !

அவள் பாதம் பட்டால் பாபம் தொலையும் என்பார்கள், பரதநாட்டியத்தோடு பக்தியைக் குழைத்துப் பேசும் பாகவத சிரோன்மணிகள், காற்றிலாடும் முல்லைக்கொடியோ – கான மயிலோ-என இன்ப ஊற்றிலெழும் வார்த்தைகளைக் கொட்டிக் கொட்டி வர்ணிப்பர் வாலிபக் காளைகள் !

விழியோவேற்படையோ ? மொழியோமுக்கனியோ ?

இடையோஇருபிறைவடிவோ ?

இப்படிப் புகழ்பாடும் புலவர்க்கூட்டம் !

காலிலே சதங்கை கொஞ்சும்-காண வந்த சபையோரின் கண்கள் கெஞ்சும்! கடைவிழி காட்டுவாள்- ‘காமன்’ படையுடன் மோதுகிறான் எனக் கதறுவர் காளையர் !

விரல் நெளியும்-வீரர் தம் தோள்கள் வளையும் ! சுற்றிச் சுழன்றாடுவாள் பம்பரம்போல-சூறைக்காற்றில் பஞ்சானோம் எனப் பரிதவிப்பர் பருவ இளைஞர்!

கோமேதகம் – ஆழிநாட்டுக்கு அழகு வழங்கும் கோமளவல்லி! அந்த தேசத்து அதிசயங்களிலே அவளும் ஒன்றானாள். தேச முழுதுமுள்ள நடன அரங்கங்களிலே அப்சரஸ்-ஆடலரசி -அழகுராணி என்பன போன்ற பட்டங்களைப்கபற்று, நாட்டியத் திற்கோர் ஒளிவிளக்காகத் திகழ்ந்தாள். கவிவாணர்- கலைவாணர்-மதிவாணர் கூடிய மாமன்றங்களிலே அந்த வேல்விழியாள் பெற்ற விருதுகள் ஏராளம். தேசத்தின் அழகுப் பொக்கிஷம்-கலைப்பேழை என் றெல்லாம் போற்றப்பட்ட அந்தப் பொற்கொடியாள் தான் நெருப்புக்குழிக்குப் பக்கத்திலே நிறுத்தப்பட்டிருக்கிறாள் ஏன்?

அவள் ஒரு துறவியைக் கெடுத்து விட்டாள். உலக மக்களுக்கு நல்லுபதேசம் செய்யும் ஒரு இளந் துறவிக்கு மையல் மூட்டி, தன் மஞ்சத்து அடிமையாக ஆக்கிவிட்டாள். இது பெரிய குற்றமென தீர்ப்பளித்தான் மன்னன். மன்னனின் வழக்கு மன்றத்திலே இது மிகப் புதுமையான வழக்கு. இதுவரையிலே இப்படி ஒரு வழக்கை அந்த மன்றம் சந்தித்த தில்லை. இது போன்ற சாயல் உள்ள வேறு வழக்குகள் கூட வந்தது கிடையாது ! இதைவிடப் பெரிய வழக்குகளிலே வழங்கப்பட்ட தீர்ப்புகள்கூட இந்த அளவுக்குக் கடுமையாகவும் கோரமாகவும் இருந்ததில்லை.

ஆழிநாட்டு மக்களும், ஆத்தானத்து அலுவலர்களும் ஆச்சரியப்பட்டார்கள், அரசன், இது போன்ற கொடுமையான தண்டனையை யாருக்குக் அளித்தது கிடையாதே; கோமேதகந்திற்கு மட்டும் அளித்தது ஏன் ?-என்று ஒருவரை யொருவர் கேட்டுக்கொண் டார்கள். அந்தக் கலையரசியின் பரிதாப முடிவு கேட்டு நெஞ்சு திடுக்கிட்ட கலைத்துறை விற்பன்னர்கள் பலரும் கருணை மனு சமர்ப்பித்து, காவலனின் கட்டளையைத் தளர்த்துமாறு வேண்டினர். எதுவும் வேந்தனின் காதிலே விழவில்லை.

‘நிறைவேற்றுங்கள் உத்திரவை’ என்று கண்டிப்பாகக் கூறி விட்டான்; அந்தக் காட்சியைக் காண்பதற்கும் மாளிகை உச்சிக்கு வந்து விட்டான்.

அன்று, கொலுமண்டபத்திலே கோமேதகத்தின் நடனம் முதன் முதலாக நடைபெற்றது.

கோமேதகம் என்றொருத்தி இருக்கிறாள்; ஆட்டத்திலே அவளை ஜெயிக்க அவனியிலேயாருமில்லை; என்று அரண்மனை மனிதர் அனைவரும் பேசினர். அரசன் இதைக் கேட்டான். ‘அழைத்து வருக கொலு மண்டபத்திற்கு’ என்றான். வந்தாள் ஆடினாள். மன்னன் மார்பிலேபுரண்ட மரகத மணிமாலை-இதுவரை யாரும் பெறாத அற்புதப் பரிசு-அதை அவளுக்கு அளித்தான். ‘நாட்டிய கலாராணி’ என்ற பட்டமும் சூட்டினான் நான் பெற்ற பேறு இது’ என நன்றி தெரிவித்து நகை முழக்கினாள். கொற்றவன் குதூகலித்தான். கோமேதகம்- கோமேதகம் மந்திரம்போல் உச்சரித்தான், அந்தப் பெயரை! அவள் விடை பெற்றாள். அரண் மனையிலிருந்து அழகே விடை பெறுவது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது அரசனுக்கு!

இரவெல்லாம் விழித்துக்கிடந்தான். கோமேதகம் அவனைக் கொள்ளைகொண்டு விட்டாள்! ராஜ்ய காரியங்களையும் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை. மகனைக் கூப்பிட்டான். இளவரசா! இன்று முதல் சில நாட்களுக்கு ராஜ்ய விஷயங்களை கவனித்துக் கொள்! எனக்கு ஓய்வு தேவை !” என்று கூறினான்.

இளவரசன் இன்பசாகரன் சம்மதம் தந்தான். சாம்ராஜ்ய அலுவல்களிலே ஈடுபட்டான்.

கோமேதகத்தை எப்படியும் சந்திக்க வேண்டும். என்னைக் கொல்லாமல் கொல்லும் அவள் விழிகளிலே முத்தமாரி பொழிய வேண்டும், அதற்கு வழி ! மன்னன் யோசித்தான் யோசித்தான் – ஒருவழியும் புலப்படவில்லை.

கோநிலா வந்து கொஞ்சுகின்ற இரவு- கோமேதகம் தன் நீலக்குறு நயனங்களை மூடி நிதி திரை பூமிக்குப் பயணம் நடத்திக்கொண்டிழிந்தாள். வாயிற் கதவு தட்டப்படும் ஒலி. எழுந்தாள். கதவைத் திறந்தாள்.எதிரே அரசன் நின்று கொண்டிருந்தான்.

‘அரசே ! “

“கோமேதகம்!’

“எங்கே இந்நேரத்தில் ? ”

”நகர் சோதனைக்கு வந்தேன்- நீ நலமாயிருக் கிறாயா என்று விசாரித்துவிட்டு போக இப்படித் திரும்பினேன்.”

“மிகவும் மகிழ்ச்சி-என் பாக்கியமே பாக்கியம்!”

”கோமேதகம்!” அரசனின் குரலிலே நடுக்கம் பிறந்தது.

“என்ன மன்னவா ? “

“ஒன்றுமில்லை!” இப்படிச் சொல்லிக் கொண்டே அவள் தோளிலே கையை வைத்தான். கோமேதகம் தன்னை விடுவித்துக்கொண்டே,

”அரசே” என்று கொஞ்சம் அழுத்தமான குரலிலே எச்சரித்தாள்!

தோல்வியோடு திரும்பிவிட அவன் எண்ணவில்லை.

“கலாதேவி! கருணை காட்டு!” என்று அவளை இறுக அணைத்தான்.

“போய்விடுங்கள் இதைவிட்டு!” என்று அவனை உதறிவிட்டாள் கோமேதகம்.

“முடியாது! நீ என் பேச்சைக் கேட்கவேண்டிய பிரஜை!” என்றபடி அவளை இழுத்தான். இதழை அசைத்துவிடு இன்பமே! இன்று நீ நாட்டியக் கலாராணி- நாளை, இந்த நாட்டுக்கே மகாராணி!’ என்று கெஞ்சினான்.

மறுத்தாள்-அறிவுரைகள் கூறினாள்.

“வேந்தே! விபரீதமான காரியம் இது! வேண் டாம் போய்விடுங்கள்! ஆட்டக்காரிதானே ! ஐஸ்வர்ய முள்ளவர்கள் அனைவருமே ஆட்டி வைக்கலாம் என்று கருதிவிடாதீர்கள்! கோமேதகம் அப்படியல்ல ! குடும்பக்கலையும் தெரிந்தவள்! கோணல் வழி நடந்து கோபுரத்தில் ஏறிக்கொள்ள ஒருக்காலும் சம்மதிக்கமாட்டாள்!” என்று உரக்கக் கூவினாள்.

“உஸ்… சப்தம் போடாதே!” என்றபடி மீண்டும் நெருங்கினான்.

நெருப்பானாள்! அதன் விளைவு, அவன் கன்னத் திலே ஒரு அடி!- பிறகு, மன்னன் அங்கு நிற்கவில்லை. போய்விட்டான்.

கோமேதகத்தின் வாழ்விலே புதிய திருப்பம் ஏற் பட அந்த நிகழ்ச்சி காரணமாகி விட்டது. அன்றாடம் அவளைக் காணுவதற்காக அணிமணிகளோடு வரும் சீமான்களை அவள் பார்ப்பதற்கு மறுத்து விட்டாள்.

அவளைப்பற்றி புகழ் பாடும் புலவர்களைக்கூட அவள் அனுமதிப்பதில்லை! நாட்டிய அரங்குகளும் நிறுத்தப் பட்டுவிட்டன கலைத்துறையில் ஈடுபட்ட பெண், விலைபோகும் பொருளாகவே இருக்கவேண்டுமென்ற தத்துவம் ஒழியும் வரையில் பெண்கள் கலைத்துறையில் ஈடுபடக்கூடாது-என்ற அழுத்தமான முடிவுக்கு வந்துவிட்டாள். அபலைகளை -அனாதைகளை – அதிதிகளை உபசரிப்பது, அவர்களோடு உலக விவகாரங் களைப்பற்றி அளவளாவுவது, அவர்கட்குத் தேவை யான உதவிகளைச் செய்வது-இப்படித் திரும்பிவிட் டது கோமேதகத்தின் வாழ்வு! தலைநகரிலே குடியிருப்பது கூட பிடிக்காமல், எங்கேயோ ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்திலே வசிக்கப் புறப்பட்டாள். அங்கே ஒரு குடிசை. அதிலே அவளும், அவளுடைய ஆதரவுகோரி வரும் அனாதைகளும் வாழ்ந் தார்கள்! ஆடிச்சேர்த்த பொருளையெல்லாம் ஆதர வற்றவருக்கு வழங்குவதிலேயே தனி ஆனந்தம் கொண்டாள்.

அந்தச் சமயத்திலே தான் அவள் இல்லத்தை நாடி ஒரு இளந் துறவி வந்தான் ! அவளுக்கு விதிக் கப்பட்ட கடுந் தண்டனைக்குக் காரணமான அந்தத் துறவியை அன்போடு வரவேற்றாள். கனி நிறைந்த தட்டோடு எதிர்வந்து நின்ற இளமயிலின் பனிததும்பும் பார்வையை ரசித்தபடி நின்றான் அந்தத் துறவி. அந்தத் துறவியைத்தான் அவள் கெடுத்துவிட்டாள் என்று குற்றச்சாட்டு வீசப்பட்டது – கோர தண்டனை வழங்கப்பட்டது! கொற்றவனுக்கு இணங்கவில்லை என்ற காரணம் மட்டும் ஒளிந்திருக்கவில்லை, அந்தத் தீர்ப்பிலே!

துறவியைக் கெடுத்துவிட்டாள் என்பதற்காக வழங்கப்பட்டதுமல்ல அந்தத் தண்டனை !

தனக்கு இணங்காதது- தபசியைக் கெடுத்தது- இவை இரண்டுமில்லாமல் இன்னொரு ரகசியக் காரணமும் மறைந்து கிடைந்தது! அந்தக் காரணம், அவனுக்கும், அவனது அந்தரங்க அமைச்சர்களுக் கும் மட்டுமே தெரியும். அந்தோ பரிதாபம்; அந்தக் காரணம் ஆடலரசியாம் கோமேதகத்திற்கும் தெரியாது!

தெரிந்தால் தான் என்ன ? தீக்குண்டத்திலிருந்து தப்பிவிட முடியுமா ? அதோ, அவளை நோக்கி வாய் பிளந்து நிற்கும் பயங்கரமான மரணத்திலிருந்து விடுபடத்தான் முடியுமா ?

செந்தாமரையவள்! செந்தீ படரப் போகிறது அந்தச் சிவப்பு ரோஜா மீது! தலைநகரத்து நடு விலே அமைக்கப்பட்ட விகாரமான மேடை! அதிலே அவளது பிணம் ஊசலாடப் போகிறது !

கடைக் கண்ணழகி என வர்ணித்தனர் – அந்தக் கண்களை சிப்பிக்குள்ளேயிருந்து முத்தை எடுப் பதுபோல கழுகுகள் கொத்தி எடுத்துவிடப் போகின்றன !

அப்பப்பா ! நினைக்கவே முடியவில்லை. எவ்வளவு கோரமான சாவு! எத்துணை அநியாயமான தண்டனை !

அதையும் தாங்கிக்கொண்டு அவள் அசைவற்று நிற்கிறாளே ; அதுவல்லவா ஆச்சரியம்!

அவளது நினைவுகள் வட்டமிட்டுக் கொண்டி ருந்தன. எதிரே மாளிகை உச்சியில் மன்னன் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தாள். அன்றொரு நாள் இரவு, அவனது ஆசைக்கு அடங்கி இன்பகேளிக்கையில் ஈடுபட இணங்காததால் அல்லவா, இன்றைய தினம் என்னை ரணகேளிக்கை ஆடச்சொல்லி ஆணையிட்டிருக்கிறான்’ என்று தனக்குத்தானே உறுமிக் கொண்டாள் தீயிலே தள்ளப்பட்டு, அதிலேயே கருகிச் சாம்பலாகி விடுவதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. எத்தனையோ அழகிகள்-உலக சரித்திரத்தை மாற்றி எழுதவந்த ‘கிளியோபாட்ரா உல்லாசப் பன்னீர் ஓடையிலே தங்கள் உடலைக் குளிப்பாட்டி சந்தன மணங்கமமும் சரீரம் படைத்தவர்கள் என்று சல்லாப சுந்தரர்களிடம் விருது பெற்ற சரசாங்கிகள் அவர்கள் எல்லோருமே தீ நாக்குகளால் தடவிக் கொடுக்கப்பட்டு பஸ்பமாகப் போனவர்கள்தான்! அவர்களில் ஒரே ஒரு வித்தியாசம்; அவர்களில் பல பலரின் உடல்கள் ஜில்லிட்டுப்போன பிறகு தான் நெருப்புக்கு இரையாக்கப்பட்டன. இவளுக்கோ, ரத்தத்திலே சூடு தணியாமலிருக்கும் போதே ‘தணல் வீழ் தண்டனை’ அளிக்கப்பட்டுவிட்டது. உயிரோடு தீ புகுவது கூட ஆச்சரியமில்லை; புதுமையான செய்தியுமல்லதான்! தீக் குளித்த ராஜகுமாரிகளை ராஜபுதனத்து சரித்திரம் பட்டியல் போட்டுக் காட்டுகிறது.

ஆகவே, தீயிலே புரண்டு உயிர் விடுவதைப் பற்றி அந்த உயிர்ச்சிலையாள் வருந்தவில்லை. தீயிலே புரண்டாலும், உயிர்போக அனுமதிக்க மாட்டார்களாமே; உடனே தூக்கி நிறுத்தி, ரணங்களிலே மிளகாய்த்தூள் தூவுவார்களாமே; எரிச்சல் தாங்காமல் குதிப்பதை, கோமேதகத்தின் குதூகல நடனம் எனக் கூறி மத்தள தாளம் தட்டி, மன்னனும் மற்றவரும் கெக்கலிப்புக் கொட்டுவார்களாமே; அய்யோ- இவைகளை அவளால் நினைக்கவே முடியவில்லை! தீயிலே தள்ளியதும் உடுத்தியிருக்கும் ஆடையிலே பாதிக்கு மேல், ஏன் முழுவதுமே கூட எரிந்து விடலாம்- அரை உயிராகத் தன்னை வெளியே எடுத்து ஆடச் சொல்லி, எரிச்சல் தூள் தூவும் போது ஒருவேளை நிர்வாணக் கோலத்திலேகூட நிற்க நேரிடலாம்- அய்யோ; அந்த நிர்வாணப் பிணத்தை நடு வீதியிலே ஒரு மேடையிலே தொங்கவிட்டு வேடிக்கை காட்டு வார்களாம்; வீதியிலே போவோர் வருவோர்க்கு, அப்பப்பா! எப்படித் தாக்குவேன் இந்த சித்திர வதையை! ஏ! நெருப்பு ஜுவாலையே! என்னை உன் வாயில் தள்ளியதும் உடனே விழுங்கி ஜீரணித்து விடு !- என்னுடைய ஒரு எலும்புகூட விடாமல் பொடியாக்கிப் புசித்துவிடு !-என்றெல்லாம் மனதுக் குள் புலம்பிக்கொண்டிருந்தாள், கோமேதகம் !

“துறவியைக் கெடுத்தேனாம் துறவியை ! அப்படியே இருக்கட்டுமே; அது ஒரு குற்றம்; அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை என்று யார் வகுத்தது சட்டம்?”- அவள் இதயத்திலே கேள்வி அம்புகள் பாய்ந்து கொண்டிருந்தன !

கேள்வி அம்புகளைவிடக் கடுமையாக, இறந்த கால இன்ப நினைவுகள் என்னும் விஷம் தடவப்பட்ட வேல்கள் மளமளவென்று பாய்ந்து கொண்டிருந்தன அவளது மென்மையான இருதயச் சுவர்களிலே ! இன்ப நினைவுகள் தான்- ஆமாம்; அந்த இளந்துறவியின் பிரவேசத்திற்குப் பிறகு அவள் வாழ்விலே ஏற்பட்ட இன்பத் திருப்பத்தைப் பற்றிய இன்ப நினைவு கள்தான் !

அந்த முதல் நாள் சந்திப்பு-ஆம்; அந்த இளந் துறவிக்கும் அவளுக்கும் ஏற்பட்ட சந்திப்பு-இப்படி யெல்லாம் ‘விசுவ ரூபம்’ எடுக்கும் என்று அவளுக்குத் தெரியாது. எத்தனையோ அதிதிகள் அவள் வீட்டுக்கு வருவார்கள்; உபசரித்திருக்கிறாள் ஒருநாள், இரண்டு நாள் தங்குவார்கள். உலக பந்தங்களிலேயிருந்து அறுபடும் விதம் பற்றி உபதேசங்கள் புரிவார்கள் உற்சாகத்தோடு கேட்பாள் – மரியாதையோடு அவர்களை வழி அனுப்புவாள். “எளிய வாழ்க்கையிலே எத்துணை இன்பம் இருக்கிறது’ என்று தனக்குத்தானே எண்ணிப் பூரிப்படைவாள். மணிமேகலை போல ஒரு அட்சய பாத்திரத்தோடு, தானும் வெளியே கிளம்பிவிட்டால் என்ன ? என்று யோசிப்பாள். மாதவியின் குல விளக்கு -மணிமேகலையையும் இப்படித்தான் உதயகுமாரன் என்னும் அரச குமாரன் வட்டமிட்டான். அதற்குப் பயந்து அவள் ஓடினாள். ஓடியவள், உலகு போற்றும் மணிமேகலை யானாள். அதுபோல ஏன் தானும் ஒரு மணிமேகலை யாகக்கூடாது என்ற எண்ணம் நாளுக்கு நாள் வளரத் தலைப்பட்டது. நடன கலாராணியின் மகள் மணி மேகலை ஒரு காவியமானாள்-தானும் ஒரு நாட்டிய கலாராணிதானே; நாட்டிலே தானும் ஒரு மங்கையர் திலகமாக மாற முடியாதா என்ன? இந்தக் கேள்வியின் கூர்மை மழுங்கிவிடும் விதத்திலேதான் அந்த இளந்துறவியின் சந்திப்பு ஏற்பட்டது அவளுக்கு !

எல்லா அகதிகளையும் வரவேற்பது போலவே கோமேதகம் அவனையும் வரவேற்றாள் உபசரித்தாள். ஆனால் எல்லாத் துறைகளையும்விட இவனிடத்திலே அவளுக்கு மதிப்பு அதிகமாயிற்று. காரணம்; அவள் கண்ட மற்றத் துறவிகள் எல்லாம் ஏறத்தாழ நாற்பது ஐம்பது ஆண்டுகளைக் கடந்தவர்கள். இவனோ பருவ இளைஞன்-நிலாவைக் கண்டு நெஞ்சு நெகிழ்கிற பருவம்-தென்றலின் மென்மையான மோதுதலைக் கூட தாங்கமாட்டாமல் மயங்கிவிழும் வயது- ஜோடிப் புறா கண்டு கோடிகோடி எண்ணங்களைக் கொட்டுகின்ற கட்டிளமை!

அஜந்தா ஓவியங்களை ஏட்டிலே பார்த்து அயர்ந்திடும் கட்டம் – தழுவிடும் வடிவுள்ள சிலைகள், தணலிடு மெழுகென அவனை உருக வைக்கும் கலைகள்!

“புதுமலர் சுவைக்கும் பொன் வண்டே!” என யாராவது பாடக் கேட்டாலே, போதை தலைக்கேறும் பருவம்! அத்தகைய எழுச்சிமிக்க இளமையைத் தத்தம் செய்துவிட்டு, துறவியாக மாறிவிட்டானே என்ற எண்ணம் கோமேதகத்திற்கு அவன்பால் அதிக மரியாதையை அளித்தது. கனி வகைகள் தந்து களைப்பாற வேண்டினாள். உண்டான், சிறிது உறங்கினான். அன்றைய பொழுது கழிந்தது.

மறுநாள் காலையிலே, கோமோதகம் துறவியி டம் பேச்சுக் கொடுத்தாள்.

“துறவு நிலை என்றால் என்ன ?” ஒன்பது பற்றி அரியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினான் துறவி, அத்தனையும் கற்கண்டு என துள்ளிக் குதித்தாள் கோமேதகம் – அரும்பு வயது ! -கரும்பு மொழிகள் ! -ஆகாகா! இவரன்றோ உலகுணர்ந்த ஞானி! எனப் பெருமை கொண்டாள்.

மறுநாள், “உலகம் நிலையாமை எப்படி?” என்று உபதேசம் புரிந்தான் துறவி.

இன்று காண்பது நாளை இல்லை ! நீள் வைய வாழ்வு, நீர்மேல் குமிழி! நிற்பதற்கு ஒரு அடி நீள பூமி-கடைசியில் பிணமாகப்படுப்பதற்கு ஆறு அடி நீள பூமி இதுதான் மனிதனுக்கு சொந்தம்! இல்லை. அதுகூட இல்லை; அவன் நிறை இடத்திலே இன்னொருவன் நிற்கிறான் – பிறகு வேறொருவன் நிற்கிறான். அதுபோல அவன் இறுதிப் படுக்கைவிரித்த இடத்திலேகூட, அவன் மண்ணோடு மக்கிய பிறகு, வேறொருவன் பாய்போட்டுக் கொள்ளுகிறான். இதற் குள்ளே சொந்தம்- பந்தம் சுருட்டல் உருட்டல்- மிரட்டல்-அப்பப்பா-முட்டாள் மனிதன்-முட்டாள் மனிதன் !”

துறவியின் முடிவுரை கேட்டு கோமேதகம் அசைவற்றுப் போனாள். அவ்வளவு உருக்கமான உபதேசமாக இருந்தது அது !

“உபதேசங்கூட ஒரு கலைதான்! எல்லோரும் உபதேசம் செய்துவிட முடியாது! தாங்கள் கூறிய இதே தத்துவத்தை வரட்டுத்தனமாக எத்தனையோ பேர் கூறுகிறார்கள்; அது மனதைக் கவரவில்லை ! தாங்களோ உள்ளமுருக்கும் விதத்திலே உபதேசிக்கிறீர்கள்” என்று புகழ்மாலை சூட்டினாள் கோமேதகம்.

‘“கலை என்றால் என்ன? என்பது பற்றி மறுநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார் துறவி அன்றைய தினம் வெறும் சொற்பொழிவோடு முடியவில்லை.

பல நாட்களாக நின்று போயிருந்த கோமேதகத்தின் நாட்டியமும் நடைபெற்றது. அதற்குக் காரணம் துறவியின் ‘கலை’ பற்றிய பிரசங்கம் தான் !

“கலை கடவுள் அளித்த வரப்பிரசாதம். அந்த சக்தி உலகத்திலே ஜனனமாகும் அனைவருக்கும் ஏற்படுவதில்லை! கோமேதகங்கள் எல்லா வீட்டிலும் பிறந்துவிட முடியாது! சிலர்தான் கோமேதகங்களாக இருக்க முடியும். அந்த சிலரிடம், சிருஷ்டி காலத்திலே அமையும் கலைத் திறமையை யாருக்கும் பயனின்றி அழித்துவிடுவது தகாது! ஆகவே நீ உன் கலைத்டறமையை பாழாக்காதே! ஆடு; நான் காண்கிறேன்! என் ஆத்ம திருப்தி – உனக்குக் கலைத் திறமை அளித்த ஆண்டவனுக்குத் திருப்தி ஏற்படுத்தும் ”

கோமேதகம் ஆடினாள். முதல் நாள் மெளனமாக இருந்து துறவி ரசித்தான்.

மறுநாள் அவள் ஆடும்போது பாடினான். உபதேசங்களும் நடந்து கொண்டேயிருந்தன.

‘உலகம் நிலையாமை’ என்ற பொருளை ஓட்டி, அந்த ‘நிலையில்லா உலகத்திலே வாழ்வது எப்படி?” என்று துறவி ஒருநாள் பிரசங்கம் செய்தான்.

“உலகம் அழிவது உண்மைதான்! நாளை நாம் இருக்கமாட்டோம் என்பது உண்மைதான்!” அதற்காக இன்றைக்கு அனுபவிக்க வேண்டியதை இழந்து தவிக்க வேண்டுமா ? ”

இப்படி ஒரு கேள்வி கேட்டான் துறவி. கோமேதகம், துறவியைத் திருப்பிக் கேட்டாள் ; “அப்படியானால் நீங்கள் எதற்காக துறவியானீர் கள்? ” என்று!

“நான் எனக்காகப் பேசவில்லை! உலகத்திற்காக வாதாடுகிறேன் “! என்று பதில் கூறினான் துறவி. உபதேசங்கள், கேள்விகள், பதில்கள், ஆடல்கள், பாடல்கள்- கோமேதகத்திற்கும், துறவிக்கு ஒரு நல்ல உறவை ஏற்படுத்திவிட்டன. நாட்களும் நகர்ந்து கொண்டேயிருந்தன துறவியிடத்திலே கோமேதகத் திற்கு அன்பும் மரியாதையும், பணிவும் மென்மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தன. அதைப் பயன்படுத்தி தான் வந்த காரியத்தை சாதித்துக்கொள்ள முடிவு செய்தான் அவன். அதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் நடைபெறத் தொடங்கின.

உபதேசம் முடியும் – கலைவிருந்தளிப்பாள் கோமேதகம்! இப்பொதெல்லாம் துறவி அதை ரசிப்பதே ஒரு கலைதான்! அவளது ஒவ்வொரு அசைவையும், போதை யேறிய கண்களோடு உற்று நோக்கினான். அவள், தன் உள்ளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக அதிகமாகவே உணர்ச்சிகளைக் கொட்டிக் காட்டினான்.

கோமேதகம் பல நாள் அவனைப் புரிந்துகொள்ளவில்லை. அவனிடத்திலே அவளுக்கு களங்கமற்ற பாசம் மட்டும் வளர்ந்துகொண்டே யிருந்தது! அதையும் தெரிந்துகொண்டே யிருத்தது! அதையும் தெரிந்து கொண்டான் துறவி.

அவள் தன்னிடம் வைத்திருக்கிற பக்தியையும், பாசத்தையும் முதலாக வைத்துத்தான் தன் வேலையை ஆரம்பிக்க வேண்டுமென்று உறுதி கொண்டான்.

பக்தி, பாசங் கொண்டவர்கள், தங்கள் மதிப்புக்குரியவர்களால் தங்களுக்கு தவறு இழைக்கப் படும்போது, வெறிபிடித்த விரோதிகளாகவும் மாறி விடுவார்கள்! அல்லது, மதிப்பிற்குரியவராயிற்றே; மறுத்தால் மனமுடைவாரே-என்று இணங்கியும் விடுவார்கள்-உலக இயல்பு இது!

உலக இயல்பின் இரண்டாவது முறைக்கு இலக்கானாள் கோமேதகம்.

ஒருநாள் இரவு-உபதேசம், ஆடல், பாடல் எல்லாம் முடிந்தன. நீண்ட நேரம் ஆடிய காரணத்தால் கோமேதகம் ‘கால்கள் வலிக்கின்றன’ என்று கூறினாள். அதை அருமையான சந்தர்ப்பம் எனக் கொண் டான் துறவி.

“கால்களை நான் பிடித்து விடுகிறேன்’, என்று ஓடிவந்தான்.

கோமேதகம் மறுத்தாள். “ஐயோ, பெரிய பாவம் ” என்றாள்.

‘ஆண்டவனுக்கு திருப்தியான காரியம்-ஆத்மாக்களில் ஆண் பெண் வித்தியாசம் ஏது ? களி மண் ஒன்றுதான்-அதிலே பிள்ளையாரும் பிடிக்கலாம்; குரங்கும் பிடிக்கலாம் ! பிடிக்கலாம்! களிமண்ணிலே வித்தியாகம் ஏது ? ” என்று கூறிக்கொண்டே துறவி அவள் கால்களை அமுக்கிவிட ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் கோமேதகம் பயபக்தியோடு இருந்தாள் – துறவி ஜெயித்துவிட்டான்.

என் செய்வது? மதிப்பிற்குரியவன்-பல நாள் பழகிவிட்டான்-மனமுடைந்துவிடக்கூடாதே என்ற தாட்சண்யம்-இந்த இரண்டாவது வகை இயல்புக்கு கோமேதகம் பலியாகி விட்டாள் !

பிறகு உலக உபதேசங்கள் குறைய ஆரம்பித்தன. ஊரார் கண்களும் கோமேதகத்தின் குடிசைப் பக்கம் திரும்பின.

அரசனிடத்திலே புகார்கள் குவிந்தன. இத்தகைய அழகி நமக்குக் கிடைக்காமல் யாரோ ஒரு துறவிக்குக் கிடைத்தானே யென்று பொறாமை கொண்ட சிலர் அந்தப் புகார்ப் படைக்குத் தலைமை தாங்கினர். துறவியொருவன் – மிகவும் நல்லவன்- அவனை, கோமேதகம் என்ற தாசி கெடுத்துவிட்டாள் இருவரும் ஆட்ட பாட்டத்தால், கிராமத்தையே நாசமாக்கிகிறார்கள்—என்ற விதத்திலே முறையிட்டுக் கொண்டார்கள்! அரசன் இதைக்கேட்டான். அவளை அடைந்த அதிர்ஷ்டக்காரத் துறவியார் என்று தெரிந்துக்கொள்ள ஆவல் கொண்டான். தானே நேரில் சென்று, துறவியையும், அவளையும் கையும் களவுமாகப் பிடித்து, “இப்போது என்ன சொல்லுகிறாய் விலைமாதே! எனக்கு இணங்குகிறாயா ? ” என்று கேட்கவேண்டு மென்று துடித்தான். முறையிட்டவர்களை அனுப்பிவிட்டு, அன்றிரவே குதிரையேறிப் புறப்பட்டான், கோமேதகம் இருக்கும் கிராமத்திற்கு !

குடிசையிலே, கோமேதகமும் துறவியும்! துறவியின் காலை கோமேதகம் அமுக்கிக் கொண்டிருந்தாள். அவளது கலைந்து கிடக்கும் கருங் கூந்தலைக் கோதி விட்டபடி சாய்ந்திருந்தான் துறவி. இருவரின் கண்களும் ஆனந்தச் சதிராடின.

‘கோமேதகம்’ என்று இனிமை தவழ அழைத் தான் துறவி.

”ஏன்?” என்று காதல் பொங்கிடக் கேட்டாள் அவள்.

“கலாதேவி நீ ! கண் காட்டினால் விண் முட்டும் வரையில் பொன் குவிக்க பிரபுக்கள் காத்திருக்கிறார்கள் ! அதையெல்லாம் விட்டு, என்னை ஆட்கொண்டாயே; அது எப்படி தேவி ?

“துறவி தாங்கள் ! ஆண்டவனின் பாதார விந்தங்களில் சேரவேண்டுமெனத் தவங்கிடந்தவர். அப்படிப் பட்டவர், ஆண்டவனின் பாதார விந்தங் களை விட்டு, என் பாதார விந்தங்களை அன்றொரு நாள் பிடித்தது ஏன் ஸ்வாமி ?”

“இது தெரியவில்லையா? ஆண்டவனின் பாதார விந்தங்களை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்துப் பிடித்து காய்த்துப்போய்க் கிடக்கிறது ! என் கலா தேவியின் மலர் போன்ற மென்மையான பாதார விந்தங்களைத் தொடும் முதல் பக்தன் நான்தான்!”

“முதல் மட்டுமல்ல ; கடைசி பக்தரும் நீங்கள் தான் ஸ்வாமி!”

“கோமா…!”

“ஸ்வாமி… !”

“உன் உறுதியை நான் குலைத்துவிட்டேன் இல்லையா ? ‘

“இல்லை-உங்கள் உறுதியைத்தான் என் அழகு குலைத்துவிட்டது!”

“உலக பந்தங்களைக் கடக்க பாதை கேட்டாய் என்னிடம்-நானோ… உலக பந்தங்களிலேஉன்னை ஆழ்த்திவிட்டேன்.”

“இல்லை ஸ்வாமி! இந்தப் பந்தம் எப்போதும் நமக்கு சொந்தமாயிருந்தால் போது ! ”

இந்த இன்ப உரையாடல்களை குடிசைக்குப் பின் புறமிருந்து கேட்டுக்கொண்டிருந்த மன்னன், சிறிய பலகணி வழியாக உள்ளே பார்த்தான். கோமேதகமும், அந்தத் துறவியும் ‘உலக பந்தம்’ எதுவென ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அரசன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்-“யார் அந்தத்துறவி? யார் அந்தத் துறவி ?” அரசனால் அங்கு நிற்க முடியவில்லை. குதிரையேறிப் பறந்தான்-மயக்கம் வந்து கீழே விழுந்து விடுவான் போலிருந்தது-எப்படியோ அரண்மனை சேர்ந்தான்.

மறுநாள் விசாரணை -கோமேதகம் இழுத்து வரப்பட்டாள். ஒரு துறவியைக் கெடுத்துவிட்டாள் என்ற குற்றம் சாட்டப்பட்டாள். உடனே தீர்ப்பு வழங்கப்பட்டது. நெருப்புக் குண்டம் காத்திருந்தது அவளுக்காக!

கடைசியாக ஏதாவது சொல்ல வேண்டியிருக் கிறதா? ‘ என்று கேட்டான் ஒரு முரட்டு அதிகாரி.

“இல்லை!” என்று தலையசைத்தாள்.

இரண்டு வீரர்கள் அவளை ஒரு இரும்புக் கம்பியிலே கட்டினார்கள். கம்பியோடு தூக்கி, அவளைத் தணலில் எறிந்தார்கள். வெந்து கொண்டிருக்கும் போதே அவளை வெளியே எடுத்தார்கள் தீர்ப்பில் குறிப்பிட்டபடி மிளகாய்த் தூள் தூவப்பட்டது— கோமேதம் துடித்தாள்-மத்தள, தாளங்கள் முழங்கின வாய் திறக்காமல் தரையிலே உருண்டபடி புழுப் போலத் துடித்தாள்-சிறிது நேரம் மரணாவஸ்தை- மன்னன் எதிர்பார்த்தபடி நிர்வாண நடனம் நடைபெறவில்லை – விரைவிலேயே பிணமானாள். ஆழி நாட்டின் அரங்குகள் அனைத்திலும் அழகு தெளித்த அந்த அற்புத சுந்தரியின் ஆவி, துடிப்போடு நீங்கியது! உடல் அசைவால் உள்ளத்தை உருக்கிய அந்த ஒய்யாரியின் மேனி பயங்கரமாகக் காட்சி தந்தது! தீர்ப்பின் மூன்றாவது திட்டப்படி, அவளது சவம், பொதுமேடைக்கு காட்சிக்காக எடுத்துச் செல்லப் பட்டது !

கோமேதகத்தின் சவ ஊர்வலத்தைக் காண நாட்டு மக்கள் அனைவரும் கூடினர். ஊர்வலம் நகர்ந்தது. தலைநகரின் மத்தியிலுள்ள மேடையிலே அவளது சவம் நாலு நாட்கள் தொங்க வேண்டுமல்லவா? அந்த மேடையை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. மேடையை ஊர்வலம் அணுகியது. மக்கள் அந்த மேடையை உற்று நோக்கியது. அங்கே, கோமேதகத்திற்கு முன்பாக ஏதோ ஒரு உருவம் தொங்கிக்கொண்டிருந்தது.

“யாரோ ஒரு துறவி தூக்கு மாட்டிக்கொண்டிருக்கிறான் இந்த மேடையிலே” என்றனர் மக்கள். அதிகாரிகள் ஓடிப்போய்ப் பார்த்தனர். இவன் துறவியல்ல” என்றனர்- துறவிக் கோலத்திலே இளவரசன் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தான்.

“வெளிநாட்டுப் பயணம் புறப்பட்ட இளவரசர் எப்போது துறவியானார்? ஐயகோ ! இது என்ன புதுமை? ” என்று மக்கள் அலறினர்.

துறவியின் மடியிலே ஒரு ஓலையிருந்தது. அதைக் கொண்டுபோய் மன்னனிடம் கொடுத்தனர்.

“அப்பா! அனார்கலி கொல்லப்பட்ட பிறகும் உயிர் வாழ்ந்த அக்பர் மகன் சலீமல்ல நான்- வாழட்டும்-உங்கள் அக்கிரம அந்தஸ்தும், அதிகாரமும்! ”

வணக்கம்,

இன்பசாகரன்.


மன்னன் மரமாக நின்றான். இளவரசனிடமிருந்து கோமேதகத்தை பிரிக்க எண்ணினான்-இருவருமே பிரிந்தனர்-ஏங்கினான் !

கோமேதகத்திற்கு தரப்பட்ட தண்டனையின் கொடுமைக்கு மக்கள் இப்போது காரணம் புரிந்து கொண்டனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *