பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
மறைமலையடிகள்

1. பொருந்தும் உணவு

நிலத்தின்கட் செய்யப்படும் உழவுத்தொழிலாற் பெறப்படும் பல்வகை உணவுப் பொருள்களைப் பற்றி இவ்வியலிற் சிறிது பேசுவாம். உடம்பு நிலைபெறுதற்கும் வளர்தற்கும் உணவு கட்டாயமாய் வேண்டியிருக்கின்றது. மேலும், உடம்பிலுள்ள உயிர்களெல்லாந் தம்முடம்பைப் பாதுகாக்கும் பொருட்டும், அதனால் இன்பத்தை அடையும் பொருட்டும் பலதிறப்பட்ட முயற்சிகள் செய்வனவாய் இருக்கின்றன. இம் முயற்சிகள் செய்யச் செய்ய உடம்பின்கண் உள்ள வலிவு குறைதலால், திரும்பத்திரும்ப அதற்கு வலி வேற்றுதற்பொருட்டு இசைவான உணவை அடிக்கடி உட்கொள்ளவேண்டுவது கட்டாயமாகின்றது. உள்ளே ஓடுஞ் செந்நீரால் உடம்பின் உள்ளும்புறம்பும் உள்ள கருவிகள் உணவு ஊட்டப்பட்டு வளரும் இயல்பினை மேல் இயல்களில் விளக்கி வந்திருக்கின்றேம். உடம்பின்கண் அமைந்த கூறுகளை யெல்லாம் பகுத்துப் பார்க்குங்கால், அவை நரம்பும்நரம்பின் தசையும் மூளையுஞ் சிறுநரம்புகளுங் கொழுப்புங் கொழுப்பின் றொடரும் எலும்புஞ் செந்நீரும் என்னும் வகையில் அடங்குதல் அறியப்படும். இக்கூறுகள் அத்தனையும் மேலுக்குமேல் வலிவேறி வளர்தற்கு வேண்டப்படும் உணவுகள் ஐந்து பகுதியிலே அடங்கும். அவை: 1. முதலுணா 2. கொழுப்புணா 3. இனிப்புணா 4. உப்புணா 5. நீருணா என்பனவாகும். இவற்றுள் முதலுணா வென்பது நரம்பும் நரம்பின்றசையும் மூளையுஞ் சிறுநரம்புகளும் என்னும் இவற்றை வலிவேற்றி வளர்ப்பதாகும்: கொழுப்புணா வென்பது கொழுப்புங் கொழுப்பின்றொடரு மென்னும் இவற்றை வளர்ப்ப தல்லாமலும் உடம்பிற் சூடு பிறப்பிக்குங் கருவியுமாகும்; இனிப்புணா வென்பதுங் கொழுப்பினை வளர்ப்பதுடன் சூட்டையுந் தோற்றுவிப்ப தாகும்; உப்புணா வென்பது செந்நீரையும் எலும்பினையும் வளர்ப்பதோடு உடம்புக்கு இன்றியமையாது வேண்டிய சுண்ணம் காந்தமண் சாம்பருப்பு உவர்க்காரம் இரும்பு பசுமஞ்சள் முதலியவற்றையுந் தருவதாகும்; நீருணா வென்பது இரத்தத்திற்கு முதன்மையாக வேண்டப் பட்டு எல்லா உணவுப் பண்டங் களிலும் மிகுதியாயிருப்பதாகும்.

இனி, நரம்பு நரம்பின்றசை மூளை சிறுநரம்பு என்னும் இவற்றை வளர்த்து வலிவேற்றும் முதலுணா என்னும் வகையில் அடங்கும் உணவுப் பண்டங்கள் யாவையோ வென்றால் அவை தயிரும், பால்நீரும், கோதுமை, பருப்பு, உழுந்து, கடலை முதலியவற்றிலுள்ள பசையுமாகும்.

கொழுப்புணா வென்னும் வகையில் அடங்குவன: பாலினின்று எடுக்கும் வெண்ணெயும் நெய்யும், ஒலிவ நெய்யும், கோதுமை, எள் முதலியவற்றின் நெய்யும் ஆகும்.

இனிப்புணா வென்னும் பகுப்பில் அடங்குவன சர்க்கரை, பசைமா, மரநார் முதலியனவாகும்.

உப்புணா வென்பன, எரிகந்தகச் சுண்ணமும், வழக்கத்திலுள்ள உப்பும் ஆகும்.

நீருணாவென்பன: தண்ணீரும், நீராளமாயிருக்கும் பல்வகைப் பருகுநீர்களுமாகும்.

இனி, இவ் ஐவகை உணவின் பகுதியும் ஒருங்கு கலக்கப் பெற்ற உணவுப் பொருள்கள் யாவையோவெனின், அவை வருமாறு: பால் பாற்கட்டி பாலேடு வெண்ணெய் நெய், கோதுமை, அப்பம் கோதுமைமா கம்புமா சோளமா வாற்கோதுமைமா, அரிசி, எள் கொள் தினை கேழ்வரகு அவரை நிலக்கடலை, முந்திரிப்பருப்பு வாதுமைப்பருப்பு துவரம்பருப்பு உழுத்தம் பருப்பு, காளான் அரைக்கீரை பொன்னாங்காணிக்கீரை தூதுளங்கீரை சிறுகீரை வசலைக் கீரை பூக்கோசு முட்டைக் கோசுக்கீரை, பச்சைப்பட்டாணி நிலக்கடலை மொச்சை, சீமை முள்ளங்கி முள்ளங்கி வள்ளிக் கிழங்கு உருளைக் கிழங்கு கொட்டிக்கிழங்கு, அத்திப்பழம், கொடிமுந்திரிப்பழம் பேரீச்சம்பழம் வெள்ளரிப்பழம் கொம்மட்டிப்பழம் பிச்சப்பழம் சீமையிலந்தைப் பழம் எலுமிச்சம்பழம் நாரத்தம்பழம் செவ்வாழைப்பழம் மாம்பழம் பலாப்பழம், தேங்காய் பனைநுங்கு, முருங்கைக் காய், வெண்டைக்காய் கத்திரிக்காய் பாகற்காய் வாழைக் காய் மாங்காய் பலாக்காய், சர்க்கரை கற்கண்டு பனைவட்டு கரும்பு முதலியன.

இப்போது, மேனாட்டு மருத்துவ ஆசிரியர்கள் உணவைப் பற்றிச் செய்த அரிய பெரிய ஆராய்ச்சிகளாற், சில முதன்மையான உண்மைகள் புலனாயிருக்கின்றன. அவற்றுள் முதன்மையான தொன்று வருமாறு. நாம் உட்கொள்ளும் உணவுப் பண்டங்களில் உய்வனவு அல்லது உய்வுறை (Vitamins) என்னும் நுண்ணிய மருத்துப் பொருள் கலந்திருக் கின்றது. மேலே குறித்துக் காட்டிய முதலுணா, கொழுப்புணா, இனிப்புணா, உப்புணா, நீருணா என்பன உடம்பினை உரம்பெற வளர்த்து நிலைபெறச் செய்தற்கு இன்றியமை யாதனவே யாயினும் அவை தம்மை மட்டும் ஒருங்கு கூட்டி இளங்கன்று களுக்கு ஊட்டிப் பார்த்ததில், அவை வளர்ந்து செழிப்புடன் உயிர் வாழாமை யினையும், அவ் ஐவகை யுணவுக் கூட்டுடன் சிறிது பாலையுங் கலந்து அவற்றிற்குக் கொடுத்துப் பார்த்ததில் அவை செழுமையாக வளர்ந்து உயிர் வாழ்தலையும் மருத்துவ ஆசிரியர்கள் கண்டறிந்தார்கள்; அதனாற், பாலிலே உயிர் களைப் பாதுகாத்து வளர்த்தற்குரிய ஏதோ ஒரு நுண்ணிய மருத்துப் பொருள் இருக்க வேண்டுமென முடிவு செய்தார்கள். இந் நுண்ணிய மருத்துப் பொருள் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தொன்றாய்ப் புலப்பட்டமை யால், அதற்கு வைட்டமின் (Vitamin) என்றும் பெயரமைத்தார்கள். இவ்வயல் மொழிச் சொற் பொருளும் ‘உய்வனவு உய்வுறை’ என்னுந் தமிழ்ச் சொற்பொருளும் ஒன்றாயிருத்தலால், அதற்கு ஈடாக இத் தமிழ்ச் சொற்களையே இந் நூலின்கண் வழங்குதல் வேண்டும்.

இனி, எல்லா உயிர்களின் உயிர்வாழ்க்கைக்கும், இன்றி யமையாததான இவ்வுய்வனவு பாலில் இருப்பினும், இப்பால் தானும் நாம் பயன்படுத்தும் முறையால் அதனை இழத்தலுங் கூடும். இழவாதிருத்தலுங் கூடும். பாலைக் காற்றோட்ட முள்ள இடத்தில் நெருப்பின்மேல் வைத்து நெடுநேரங் காய்ச்சினால், அப் பாலில் உள்ள உய்வனவு என்னும் அம் மருத்துப் பொருள் கெட்டழிந்து போகும். இங்ஙனங் கெட்டுப்போன பாலை மற்றைப் பண்டங்களுடன் கலந்து இளங் கன்றுகளுக்கு ஊட்டி வந்ததில், அப்போதும் அவை வளர்ந்து செழிப்புறாமை காணப்பட்டது. மற்றுக் காற் றோட்டமுள்ள இடத்திற்பாலை நெருப்பின்மேல் வைத்து நெடுநேரங் காய்ச்சாமற், சிறிது நேரமே காய்ச்சி எடுக்க அப்போது அப் பாலிலுள்ள உய்வனவு முழுதும் அழியாமல் அதில் ஒருவகையே அழிந்து போயதுங் கண்டறிந்தார்கள். ஏனென்றால், அவ்வுய்வனவில் ஒருவகை மருத்துப் பொருளேயன்றி, ஐவகை மருத்துப் பொருள்கள் அடங்கியிருத்தலைப் பின்னும் பின்னுஞ் செய்து போந்த ஆராய்ச்சிகளால், அம் மேனாட்டு மருத்துவ ஆசிரியர்கள் நன்கு கண்டறிந்தார்கள். அங்ஙனஞ் சிறிதுநேரங் காய்ச்சிய தனால், உய்வனவில் முதல்வகை மட்டுங் கெட்டுப் போன பாலை இளங்கன்றுகட்கு ஏனைப் பொருள்களுடன் சேர்த்து ஊட்டிப்பார்க்க, அவை நன்கு வளராமையோடு, அவற்றின் கண்களும், நுரையீரலும், மலக்குடலும் நோய்ப்பட்ட மையும் புலனாயிற்று. ஆகவே, பாலிலுள்ள உய்வனவில் முதல்வகை மட்டுங் கெட்டுப் போமாயின், அத்தகைய பாலை உண்பவர்க்கு, விழிகளும், மூச்சுவிடும் நுரையீரலும், மலக்குடலும் நோய்வாய்ப் படுமென்பது நன்கறியப்பட்டது.

இனி, வயிலினின்று புதிதுவந்த நெல்லைக் கையாற் குத்தி உமிபோக்கி எடுத்த அரிசியைத் தண்ணீருடன் கலந்து புறாக்களுக்கு இரையாகக் கொடுக்க, அவை நோய் இன்றிச் செவ்வையாய் இருந்தன. ஆனால் அந் நெல்லை, நெல் அரைக்கும் பொறிக்குப் போக்கி அரைப்பித்துக் கொணர்ந்த அரிசியை நீருடன் கலந்து அவைகளுக்குத் தீனியாக கொடுத்து வந்ததில், அவை பசி அவிந்து, வயிற்றுக்கடுப்பால் துன்புற்று மெலிந்து இறந்து போயின. இதனால் நெற்பொறியில் அரைப்பித்தெடுத்த அரிசியில் உடம்பைப் பாதுகாத்து வளர்த்தற்குரிய ஒரு மருத்துப் பொருள் இல்லையாகி ஒழிந்துபோனமை அறியப்படுகின்ற தன்றோ? அங்ஙனம் ஒழிந்துபோன மருத்துப் பொருள் தான் உய்வனவில் இரண்டாம் வகை யாகுமென நன்கு கண்டறிந் திருக்கிறார்கள். நெற் பொறியில் அரைப்பித்த அரிசி யினின்றும் விலகிப்போன தவிட்டையெடுத்து, நீர்விட்டுக் குழப்பி, அவ் வெள்ளரிசியுடன் சேர்த்துக் கொடுக்க, அக் கலவையைத் தின்ற புறாக்கள் நலமுடன் செழிப்பாய் இருந்தன. அதனால், அரிசியினின்று நீக்கப் படுந் தவிட்டில், உய்வனவின் இரண்டாம் வகை மருத்துப் பொருள் உளதாதல் அறியப்பட்டது. அரிசியுணவை உட்கொள்ளும் நந் தமிழ்மக்களுக்கு வருஞ் சோகை பெருவயிறு பக்க நரம்பு வீழ்ச்சி முதலான நோய்கள் இவ்விரண்டாம் வகை உய்வனவின் குறைவினால் வருகின்றன. தவிடு, முளைப்பயறு, வித்துகள், புளித்தமாநுரை, கீரைகள், பழங்கள் முதலிய வற்றில் இவ்விரண்டாம் வகை உய்வனவு மிகுதியா யிருத்தலால், அரிசிச் சோறு தின்பவர்கள் இவற்றையுங் கூடச் சேர்த்துத் தின்பார் களாயிற், சோகை முதலான நோய்கள் அவரை அணுகா; இந்நோய் உள்ளவர்கள், வித்துகள் கீரைகள் பழங்களை அடுத்தடுத்துச் செரிக்கும் அளவாய் உட்கொண்டு வருவார் களாயின் இந் நோய்கள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.

இன்னும், உப்பிறைச்சி, உலர்ந்த பழங்கள், உலர்ந்த காய்கறிகள், நன்றாய்க் காய்ச்சின பால் முதலானவைகளைத் தொடர்பாக உட்கொள்பவர்களுக்குச் சொறி கரப்பான், அசறு என்னும் நோய்கள் வருகின்றன. இந்த நோய் உள்ளவர்க்குப் பல்லீரல் புண்ணாகி இரத்தம் வடிகின்றன; கால்கள் வீங்குகின்றன; தோலின்மேற் சொறி சிரங்குகள் உண்டா கின்றன; இந்நோய் கொண்ட மக்களும் பிற உயிர்களும் சின்னாளில் இறந்துபடுகின்றனர். ஆனால், மேற்கூறிய பண்டங்களைத் தின்பவர்கள், எலுமிச்சம்பழச் சாறேனும், நாரத்தை முதலான மற்றைப் பழவகைகளின் சாறேனுங், கீரைகளேனுங் கூடச் சேர்த்து உண்பராயின், மேற்கூறிய நோய்கள் அவரை அணுகா. ஏனென்றால், இப் பழச்சாறு களிலுங் கீரைகளிலும் மூன்றாம்வகை உய்வனவு ஒன்றிருக் கின்றது. மற்று, இச் சாறுகள் கீரைகளை நன்றாய்க் கொதிக்க வைத்தும் வேகவைத்தும் எடுத்து உட் கொண்டாலோ, இவற்றிலுள்ள இம் மூன்றாம் வகை உய்வனவு கெட்டழிந்து போக, மேற்கூறிய நோய்கள் திரும்பவுங் கிளைக்கின்றன.

இன்னும், பகலவன் வெளிச்சம் நுழையாத இருண்ட வீடுகளினுள்ளே வைத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகளும், பால் வெண்ணெய் நெய் எண்ணெய் முதலான பொருள்கள் வேண்டிய அளவு உணவுடன் சேர்த்துக் கொடுத்து வளர்க்கப் படாத பிள்ளைகளும் முரண்டும் வெடுவெடுப்பும் உள்ளவர் களாய் எந்நேரமும் அழுத வண்ணமாய் இருக்கின்றனர்; இவர்களுடைய எலும்புகள் மென்மையாகி வளைந்து விடுகின்றன; தசை நரம்புகளும் பொருத்துகளுந் தளர்ந்து விடுகின்றன. இதனால் இவர்கள் தள்ளாட்டம் என்னும் ஒருவகை நோய்க்கு ஆளாகின்றனர். இவ்வாறதால், இவர்கள் எடுக்கும் உணவில், நான்காம்வகை உய்வனவு ஒன்று இல்லாமையினாலேதான் என்று ஆராய்ச்சி வல்ல ஆங்கில மருத்துவர்கள் கண்டறிந்திருக் கின்றார்கள்.

இனி, முழுக்கோதுமையும், மற்றைக் காய் கறிகளுங் கலவாத தீனியைச் சில சிற்றுயிர்களுக்குக் கொடுத்துப் பார்த்ததில் அவைகளுட் சில குட்டிகள் ஈனாது போயின; ஏனைச் சில குட்டிகள் ஈன்றன; ஆனால், அக் குட்டிகள் விரைவில் மாண்டுபோயின. இதுகொண்டு அவற்றின் தீனியில் ஐந்தாம் வகை உய்வனவு ஒன்று இல்லாதுபோனமை அறியப்படலாயிற்று.

என்றிதுகாறும் எடுத்துக் காட்டிய ஐவகை உய்வன வுகள் நாம் உட்கொள்ளும் உணவிற் கலந்திரா விட்டால், நாம் நோய் இன்றி நீண்டகாலம் நன்கு உயிர்வாழ்தல் இயலாது என்பதை மெக்காரிசன் (Robert Mccarrison) என்னும் ஆங்கில மருத்துவர் ஆசிரியர் பெரிதாராய்ந்து எழுதியிருக்கின்றார். இத்துணைச் சிறந்த உய்வனவுகள் அவ்வளவும் இயற்கையிற் கிடைக்கும் உணவுப் பண்டங்களில் இறைவன் றிருவருளால் நன்கமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நாம் அப் பண்டங்களைப் பயன்படுத்தும் முறையிற் பிசகு செய்வ தனால், அவைகளிலுள்ள உய்வனவுகள் அவற்றை விட்டு அகலுகின்றன. ஆதலால், அவை தம்மைப் பிசகாது பயன் படுத்தும் முறைகள் நம்மனோர் மிகவுங் கருத்திற் பதிக்கற் பாலனவாகும்.

உய்வனவுகள் பெரும்பாரும் இயற்கையிலே அமையப் பெற்ற சிறந்த வுணவுப்பொருள் ஆவின்பாலே யாகும். அங்ஙனமே, தாய்ப்பாலுங் குழந்தைகளுக்குச் சிறந்த உணவுப் பொருளாக இறைவனால் அமைத்து வைக்கப் பட்டிருக்கின்றது. ஏனென்றால் இவையிரண்டிலும் முதலுணா கொழுப்புணா இனிப்புணா உப்புணா உய்வனவு முதலியன எல்லாம் வேண்டுமளவுக்கு அடங்கியிருக்கின்றன என்றாலும், தாயானவள் தன் குழந்தையின் உடம்புநலத்திற் கருத்துடை யளாய், அதற்கேற்ற உணவுப் பண்டங்களை உட்கொண்டு வருவளாயின், அவளது பாலிற் குழந்தையின் உடல்நலத்திற்கு இன்றியமையாதனவான மேற்குறித்த பொருட் கருவுகளெல்லாம் நன்கு கலந்திருக்கும் தாயானவள் தான் வழக்கமாய் உண்பது அரிசி கோதுமை கம்பு சோளம் கேழ்வரகு முதலிய வித்துக்களில் ஒன்றாயிருப்பினும், பாலையும் பாலின் பயன்களான தயிர் மோர் வெண்ணெய் நெய் முதலியவை களையும், பலவகைக் கீரைகளையும் பழங்களையும் அவள் அடுத்தடுத்து உட்கொண்டு வரல் வேண்டும். வீட்டின் வெளியே வராமல் உள்ளேயேயிருக்கும் மாதர்கள் இடை யிடையே பிற்பகல் வெயிலிற் காய்வதோடு, எண்ணெய் தேய்த்து முழுகுதலுங் கட்டாயமாகச் செய்து வரல் வேண்டும். ஏனென்றால், உடல்நலத்திற்கு இன்றியமை யாத உய்வனவுகளில் நாலாம் வகையது பகலவன் வெளிச் சத்திலும், பால் வெண்ணெய் நெய் முதலியவற்றிலும் நன்கமைந்துளது. எள்ளினின்றும் எடுத்த நெய்யில் இந் நாலாம்வகை உய்வனவு சிறிதும் இல்லாமையால், எள்நெய் தேய்த்துத் தலை முழுகுவோர் வெயில் வெளிச்சத்தில் நின்றபடியாய் அதனைத் தேய்த்து முழுகுதல் நலம் பயக்கும். ஏனெனில், வெயிலிலுள்ள நாலாம்வகை உய்வனவு எண்ணெயிற்றோய்ந்து உடம்பினும் சுவறும் வெயிலில் நின்று எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாதவர்கள், நல்லெண் ணெயை ஒருமணிநேரம் வரையில் வெயிலில் வைத்தெடுத்துத் தேய்த்துக் கொண்டால், வெயிலி லுள்ள உய்வனவு எண்ணெயிற் சுவறி, அதன்பின் அதன் வழியே உடம்பிற் சுவறும்.

இனி, ஆவின்பாலானது பெரியவர்கட்கேயன்றிச் சிறு குழந்தைகட்குஞ் சிறந்த உணவாகும். இதன்கண் உள்ள முதலுணா (Proteins) வானது மிக உயர்ந்த குணம் வாய்ந்தது. இத்துணைச் சிறந்த முதலுணாப் பொருந்தப் பெறாத பருப்பு வகைகளை உணவாகக் கொள்பவர்க்குப் பாலுணவுங் கட்டாயமாகச் சேர்க்க வேண்டுவதொன்றா மென்பதை அவர்கள் நினைவுகூர்தல் வேண்டும். அதுவேயுமன்றிப், பாலிலும் பாலேட்டிலும் வெண்ணெயிலுங் கொழுப்புணா நிறைந்திருக்கின்றது. ஆனாலும், பால் கறக்கும் மாடுகளுக்குத் தகுதியான தீனி கொடுக்கப்படுமாயின், அதன் பாலில் முதலாம்வகை உய்வனவும் மிகுதியாயிருக்கும். வளரும் பிள்ளைகளுக்கும், நச்சுயிர்களால் வருந் தொற்று நோய்களை வராமற் றடை செய்தற்கும் இம் முதலாம் வகை உய்வனவு கட்டாயம் வேண்டப்படுவதாகும் அதுவேயுமன்றிப் பாலிலுள்ள கொழுப்புணவு எளிதிற் செரிப்பதுமாகும். இன்னும், பற்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு முதன்மையான சுண்ணமும் எரிகந்தகமும் ஒத்த அளவாகப் பாலில் அடங்கியிருக்கின்றன.

மேலும், ஆவின்பாலில் இரண்டாம்வகை உய்வனவும், சிறிது மூன்றாம்வகை உய்வனவுங் கலந்திருக்கின்றன. நம் இந்திய நாட்டவர்கள் ஆவின்பாலைக் காய்ச்சிப் பருகும் வழக்கம் வாய்ந்தவர்களாய் இருத்தலாற், சிறிதாயுள்ள மூன்றாம் உய்வனவும் பாலைவிட்டுப் பறந்து போய் விடுகின்றது. ஆதலாற், காய்ச்சிய பாலை உட்கொள்பவர்கள், பழங்களையுங் கீரை வகைகளையுஞ் சேர்த்து உட்கொள்ளல் வேண்டும்.

இனி, ஆவின்பாலில் நான்காம்வகை உய்வனவு வேண்டுமளவுக்குக் கலந்திராமையால், ஆவின்பால் ஊட்டி வளர்க்கப்படுங் குழந்தைகளைப் பிற்பகலிற் பகலவன் வெளிச்சத்தில் அரைமணிநேரம் அமரச் செய்தல் வேண்டும். அங்ஙனஞ் செய்யாக்கால், அக் குழந்தைகளின் காலெலும் புகள் மெதுவாகி வளையும்; அதனால் அவர்கட்குத் தள்ளாட் டம் உண்டாகும். மேலும், பால்கறக்கும் மாடுகளுக்கும் பச்சிரை களை மிகுதியாகக் கொடுப்பதோடு, அவற்றை நல்ல காற்றோட்டமுள்ள திறப்பான வெளிகளிலும் புல்மேயச் செய்தல் வேண்டும். இங்ஙனஞ் செய்து வந்தால், அம் மாடுகள் கறக்கும் பாலில் எல்லாவகை உய்வனவும் நன்கமைந் திருக்கும்.

இனி, உய்வனவுகள் இயற்கையாகவே அமைந்துள்ள உணவுப் பண்டங்களும் அவை அங்ஙனம்அமையப் பெறாத உணவுப் பண்டங்களும் வருமாறு: முதலாம்வகை உய்வனவு மிகுதியாயுள்ள பண்டங்கள்: ஆவின்பால், தாய்ப்பால், நாவுக்கிசைந்த கீரைவகைகளான பொன்னாங்காணி, அரைக் கீரை, முளைக்கீரை, முள்ளங்கிக்கீரை, பசலைக்கீரை, தூதுளங் கீரை, இலைக்கோசு, பூக்கோசு முதலியவற்றின் இலைகள் முதலியன. இவ்உய்வனவு சிறிதாகவுள்ள பொருள்கள்: தித்திக்கும் உருளைக்கிழங்கு, சீமைத்தக்காளி, மஞ்சட் சோளம், முளைக் கொள்ளு, தினை, ஏடெடுத்த பால், துவரம் பருப்பு, பட்டாணி, சீமை, அவரை, கோதுமை, சோளம், கம்பு, வாற் கோதுமை, மிளகாய், தேங்காய்ப்பருப்பு, தேங்காயெண்ணெய், நாரத்தஞ்சாறு முதலியன. இஃது இன்னும் மிகச் சிறிதாக வுள்ளவை: தேன், முழு அரிசி, வெங்காயம், உருளைக் கிழங்கு, கடலையெண்ணெய், நல்லெண்ணெய் முதலியன.

முதலாம்வகை உய்வனவு சிறிதும் இல்லாத பண்டங்கள்: வெள்ளைமா, பொறியிற் குத்தின அரிசி, அரைவேக்காடாய்ச் சமைத்த சோறு, கடுகெண்ணெய், வாதுமை நெய், காய்கறி நெய் முதலியன.

இரண்டாம்வகை உய்வனவு நிரம்ப வாய்ந்த பொருள் கள்: சீமைத்தக்காளி, கடுக்கொட்டை (Walnut), பசலைக் கீரை, முள்ளங்கிக்கீரை, கோதுமை, வாற்கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, சீமை அவரை, பட்டாணி, துவரம் பருப்பு, கொள்ளு, எல்லாவகையான கொட்டைகளும், இலைக்கோசு பூக்கோசுக் கீரை, வெங்காயம், ஆவின்பால்,. இது சிறிதாக அமையப் பெற்றவை: வெள்ளைக் கோதுமை அப்பம், முழு அரிசி, அரைவேக்காடுள்ள சோறு, வாழைக்கனி, கத்திரிக்காய், முள்ளங்கி, தித்திப்பான உருளைக்கிழங்கு, கொடி முந்திரிப் பழம், பேரீச்சம்பழம், எலுமிச்சம்பழம், நாரத்தம்பழம் முதலியனவாகும்.

இரண்டாம்வகை உய்வனவு சிறிதுமேயில்லாத உணவுப் பொருள்கள்: வெள்ளைக் கோதுமைமா, பொறியிற் குத்தின அரிசி, வெண்ணெய், எல்லா வகையான எண்ணெய்களும் பாற்கட்டி, சர்க்கரை, பசைமா, பழைய பட்டாணி, தேயிலை, காப்பிக்கொட்டை, தேன் முதலாயின.

மூன்றாம்வகை உய்வனவு மிகுந்துள்ள பண்டங்கள்: புதுக்கோசுக்கீரை, பசலைக்கீரை, முளைகிளம்பின பட்டாணி, துவரை, கொள்ளு, புதிய எலுமிச்சம்பழச் சாறு, நாரத்தம் பழச் சாறு, சீமைத் தக்காளிப்பழமும் அதன் சாறும்: முள்ளங்கிக் கீரை, பச்சை உருளைக்கிழங்கு, தித்திக்கும் உருளைக்கிழங்குச் சாறு, அன்னதாழம்பழச் சாறு. இது சிறிதாக அமையப் பெற்றவை: ஆவின்பால், ஏடெடுத்தபால், மோர், தயிர், முளைத்த வாற்கோதுமை, முளைத்த சோளம், அவித்த கோசுக்கீரை, வெந்த பூக்கோசு, வெங்காயம், வேவுவித்த உருளைக்கிழங்கு, பிச்சப்பழம், சீமையிலந்தைப் பழம், வாழைப்பழம் முதலியனவாகும்.

மூன்றாம்வகை உய்வனவு சிறிதும் இல்லா உணாப் பொருள்கள்: வெள்ளைமா, சோளம், கேழ்வரகு, கம்பு வாற் கோதுமை, உலர்ந்த பட்டாணி சீமையவரை, துவரம் பருப்பு, கொள்ளு, சர்க்கரை, தேன், புளித்தமாநுரை, எல்லா வகையான எண்ணெய்களும், உலர்ந்த பழங்கள் எல்லா வகையும், உலர்ந்து போன எல்லாவகைக் காய்கறிகளும், எல்லா வகையான கொட்டைகளும், கட்டிப்பால் புட்டில்களில் விற்கும் எல்லா வகையான உணவுகளும் ஆகும்.

கடைசியாக, நாலாம்வகை உய்வனவுகள் இயற்கையிலே அமையப்பெற்ற உணவுப் பண்டங்கள்: ஆவின் பாலும், வெண்ணெயும், நெய்யும் ஆகும். இது தேங்காயெண் ணெயிலுங் கடலை யெண்ணெயிலுஞ் சிறிதாகவே உளது: இவ்விரண்டிற் றவிர, நம் நாட்டவர்களாற் பயன் படுத்தப் படும் மற்றை யெண்ணெய்களில் இது சிறிதும் அமைத்திருக்க வில்லை. இவ்வுய்வனது பகலவனது ஒளியில் மிகுந்திருத் தலால், எள்ளெண்ணெயை வெயிலில் வைத்தெடுத்து உடம்பின்மேற் றேய்த்து முழுகுதலும், உடம்பை வெயில் வெளிச்சம் படக் காட்டுதலும் மிகுந்த நன்மையைத் தருமென்பதனை முன்னரே எடுத்துரைத்தாம். இது கொண்டு வெயில் வெளிச்சம் படாத இருண்ட வீடுகளிற் குடியிருப்பது எத்துணை தீது தரும் என்பது நன்கு விளங்கா நிற்கும்! அதைப்போலவே, சுண்ணமும் எரிகந்தகமுங் கலவாத உணாப் பொருள்களும், வலுவின்றி வளையும் எலும்புகளை உண்டாக்கித் தள்ளாடச் செய்யுமென் றுணர்ந்து கொள்க. ஆகவே, உடம்பின் என்புகள் உரமேறி வளர்தற்கு வெயில் வெளிச்சமுஞ் சுண்ணமும் எரிகந்தகமும் வேண்டுமளவாய்க் கலந்துள்ள உணாப்பொருள்கள் இன்றியமை யாதனவாதல் தெளியப்படும் என்க.

இனி, மேலே காட்டிய நால்வகை உய்வனவுகளும் இயற்கையிலே பொருத்தப்பெற்ற உணவுப் பண்டங்களையே எல்லா இரக்கமும் உடைய எல்லாம்வல்ல இறைவன் மக்களாகிய நமக்கும் மற்றைச் சிற்றுயிர்களுக்கும் படைத்துக் கொடுத்திருக் கின்றான். அத்தகைய உணவுப் பண்டங்கள் பாலும் பாலிலிருந் துண்டாகும் வெண்ணெய் நெய் புளித்த பால்மோர் தயிர் பாற்கட்டி முதலியனவும், நல்லெண்ணெய் கடுகெண்ணெய் வாதுமையெண்ணெய், தேங்காயெண்ணெய் கடலை யெண்ணெய் முதலியனவும், அரிசி கோதுமை வாற் கோதுமை சோளம் கம்பு கேழ்வரகு முதலியனவும், உருளைக் கிழங்கு சேப்பங்கிழங்கு வள்ளிக் கிழங்கு கருணைக்கிழங்கு முள்ளங்கி வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலியனவுந், துவரம்பருப்பு, உழுத்தம் பருப்பு கடலைப்பருப்பு பச்சைப் பருப்பு மொச்சைப் பருப்பு காணம் கொள் எள் முதலிய னவும், வாதுமைக் கொட்டை கடுக்கொட்டை முந்திரிக் கொட்டை தேங்காய் முதலியனவும் அரைக்கீரை சிறுகீரை முளைக்கீரை பொன்னாங்காணிக்கீரை தூதுளங்கீரை முதலியனவும், மாங்கனி வாழைக்கனி பலாக்கனி நாரத்தங் கனி அத்திக்கனி கொடி முந்திரிக்கனி அன்ன தாழங்கனி விளாங்கனி முதலியனவும் ஆகும். இப் பண்டங்களை மாறிமாறி உட்கொண்டு வந்தால், நமதுடம்புக்கு வேண்டிய எல்லாவகை உய்வனவுகளும் எளிதிலே கிடைக்கும் நால்வகை உய்வனவு களும் அவற்றிற்கு மேற்பட்டனவும் மேற்குறித்த பண்டங்கள் எல்லாவற்றிலும் ஒருங்கே அமைந்திராவிட்டாலும், ஒன்றிலில்லாத ஓர் உய்வனவு மற்றொன்றிற் பொருந்தியிருத் தலால், ஒரே வகையான சில பண்டங்களையே ஒரு தொடர்பாய் உண்ணாமற், பல்வகைப் பண்டங்களையும் பலகாலும் மாறி மாறி உட்கொண்டு, உடம்புக்கு வேண்டிய எல்லாவகையான உய்வனவு களையும் இசைவித்துக் கொள்ளல், நோயின்றி நீண்டகாலம் உயிர்வாழ விழைகுவா ரெல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம்.

ஆனால் மேற்காட்டிய உணவுப் பண்டங்களைப் பயன்படுத்தும் முறையில், அவற்றின்கண் உள்ள உய்வனவுகள் அழிந்துபோகாமற் பாதுகாத்தல் வேண்டும். தீயில் வைத்த உணவு சமைக்கும் முறையால், திண்பண்டங்களில் உள்ள உய்வனவுகளிற் பெரும்பாலன அழிந்து போகின்றன. நெருப்பில் வைத்து உணவு சமைக்கும் வழக்கம் பல்லாயிர ஆண்டுகளாக மக்களெல்லார்க் குள்ளும் பெரும்பாலும் வேரூன்றிப் பரவி விட்டமையால் அதனை முற்றும் நிறுத்தி விடுவதும் இயலாது. ஆதலால், தீயில் வைத்துச் சமைக்கும் உணவையே மிகுதியாய் அருந்திவரும் நம்மனோர், உய்வனவுகள் அழியாத பச்சைப் பண்டங்களையும் நாடோறும் அருந்தித் தமதுடம்பின் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் பழகிவரல் வேண்டும்.

சமைத்துண்ணும் நம்மனோர், முதலாம்வகை உய்வனவு மிகுதியாய் உள்ள வெண்ணெய் அல்லது நெய்யை நெருப்பில் ஏற்றிச் சூடேற்றாமலே நாடோறும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு வரலாம்; அங்ஙனமே சீமைத் தக்காளிப் பழத்தையுஞ், சோளங் கொள்ளு தினை முதலிய விளை பொருள்களையும் பச்சையாகவே மென்று தின்னலாம்.

இனி, இரண்டாம் வகை உய்வனவு மிகுந்துள்ள சீமைத் தக்காளிப்பழம், கடுக்கொட்டை (Walnut), சோளம், கம்பு, ஓட்மீல் (Oatmeal), பச்சைப்பட்டாணி, முந்திரிப்பருப்பு. வாதுமைப்பருப்பு, வெங்காயம், ஆவின்பால் முதலான பொருள்களையும் நெருப்பின் சேர்க்கையின்றிப் பச்சை யாகவே நாளும் அருந்துதல் எவர்க்கும் எளிதேயாம்.

இனி, மூன்றாம்வகை உய்வனவு நிரம்பியுள்ள முளைப் பட்டாணி, புதிய எலுமிச்சம்பழ நாரத்தம் பழச்சாறு, சீமைத் தக்காளிப்பழம், அன்ன தாழம்பழம் முதலியவைகளை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுதலும் எளிதிற் செயக் கூடியதேயாம்.

இனி, நாலாம்வகை உய்வனவு மிகுதியும் வாய்ந்த ஆவின்பால், வெண்ணெய் நெய் முதலியவற்றை உட் கொள்ளுதலும், பிற்பகலிற் பகலவன் வெயிலிற் காய்தலும் எல்லார்க்கும் எளிதில் இயல்வதேயாகும்.

இனி, மேலெடுத்துக்காட்டிய நால்வகை உய்வனவு களேயன்றி ஐந்தாம் வகையதோர் உய்வனவும் அமெரிக்க தேயத்து மருத்துவ ஆசிரியராற் (DR.J.H.Kellogg) கண்டெடுத்து விளக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் பருப்புகளிலும் கீரைகளிலும், எள் முதலிய வித்துக் களினின்று இறக்கப் பட்டும் நெய்களிலும் மிகுதியாய் அமைந்திருக்கிறது.

இவ்வைவகை உய்வனவுகளும் நிரம்பவாய்ந்த எல்லாப் பண்டங்களையும் எல்லாரும் நாடோறும் பெற்றருந்துதல் இயலாதாயினும், நெய் ஆவின்பால் முந்திரிப்பருப்பு எலுமிச்சம் பழச்சாறு கீரைகள் நல்லெண்ணெய் தேங்காயெண் ணெய்கள் முதலானவைகளை மிக எளியவர்களும் நாடோறும் பெற்றுப் பயன்படுத்துதல் இயல்வதேயாகலின், இவை தம்மையாயினும் நாளுந் தவறாது உட்கொண்டு பிற்பகல் வெயிலிலும் உலவி வருவார்களாயின், நம்மனோர் தம துடல்நலத்திற்கு இன்றியமையாது வேண்டிய ஐவகை உய்வனவுகளும் எளிதிற் பெற்று நீடினிது வாழ்வர்.

மேலெடுத்துக்காட்டிய உணவுப் பண்டங்களில் உடம்பின் கூறுகள் அத்தனையும் வளர்ப்பதற்கும் வலிவேற்று தற்கும் வேண்டிய எல்லாப் பகுதிகளும் அடங்கியிருக் கின்றன. இவற்றைக் காலமும் இடமுந் தமது உடம்பின் கூறுபாடும் அறிந்து, நன்றாய்ச் சுவைத்து உட்கொண்டு செரிக்கும் அளவாய் உண்டு உடம்பிற்கு வேண்டும் முயற்சியுந் தந்துவருபவர்கள், நோயற்ற அழகிய வலிய உடம்பு உடையவர்களாய் நெடுங்காலம் உயிர்வாழ்வார்கள் என்பது திண்ணம்.

முதலில் இவற்றைக் காலமும் இடமும் அறிந்து உண்ணல் வேண்டும் என்றாம். காலம்: வேனிற்காலம் மழைகாலம் குளிர்காலம் பனிக்காலம் என நான்கு வகையாய்ப் பகுக்கப்பட்டு நடைபெறுகின்றது. வேனிற் காலத்திற் குளிர்ந்த பொருள் களையும், மழைக்காலம் முதலிய ஏனை மூன்றுகாலங்களிலுஞ் சூடான பொருள்களையும் உணவாக அருந்திவருதல் நல முடைத்து. வேனிற் காலத்தில் அரிசியுணவுங், குளிர்காலத்திற் கோதுமை யுணவும் உட்கொண்டால், அவ்வக்காலத்தில் உடம்பில் ஏறியுங் குறைத்துங் காணப்படுந் தட்பவெப்பங்களை அவை ஒத்துநிற்கச் செய்யும். இங்ஙனமே ஒரு நாளிற் பகலவன் வெப்பம் மிகுந்த நடுப்பகலில் நெய்ப்பான பண்டங்களையும் அவன் மறைந்தபோன இராப் பொழுதில் வறண்டு வற்றிய பொருள்களையும் ஆராய்ந்து உண்ணல் வேண்டும். கொழுமை யான பண்டங்களைப் பகலவன் ஒளியும் உடம்பின் முயற்சியும் இல்லாத இரவு காலத்தில் அயின்றால் அவை செரித்து இரத்தத்திற் கலவாமையால் நோயை வருவிக்கும்; நடுப் பகற் போதிற் கொழுமையில்லாத உணாப் பொருள்களை உண்டால் அவை விரைவிற் செரித்தலோடு, உடம்பிற்கு வேண்டிய வலிமையைத் தராமையால் தளர்ச்சி யையும் உண்டாக்கும். மேலும், உடம்பின் உழைப்பு மிகுதியா யில்லாதவர்கள் விடியற் காலையில் ஏதோர் உணவும் எடுக்கலாகாது. ஏனென்றால், அவர்கள் இரவில் உண்டது தூக்கத்திற் செவ்வையாகச் செரியாமலிருந்து, காலையில் விழித் தெழுந்த சிலநாழிகை நேரத்திற்குப் பின்றான் செரிமானத்திற்கு வரும். காலையில் இரண்டு மூன்று நாழிகை ஆனபிறகு முன்னாள் உண்டது நன்றாய்ச் செரித்துப் போமாதலால், அதன்பின் மெல்லிய உணவெடுத்தல் நன்று முன்னாள் உண்டது அறா திருக்கையிற் காலையி லெழுந்தவுடனே உணவை அடைத்தல் பெரிதுந் தீங்கு பயப்ப தொன்றாம். ஆயினும், உடம்பில் வலிவுஞ் சுறுசுறுப்பும் உள்ள இனம்பிள்ளைகளும் மிகுந்த உழைப்புள்ள வர்களுங் காலையிலெழுந்தவுடன் உணவு கொள்ளுதல் தீதாகாது என்றாலும், அவர்களுங்கூடச் சிறிதுநேரம் பொறுத்துச் சாப்பிடுதல் நந்றென்றே அறிதல் வேண்டும். எத்திறத்தவர் களும் நண்பகற்போதில் மட்டுங் கொழுமையான உணவை வயிறாரவுண்ணல் வேண்டும்; மற்ற இரண்டு பொழுது களிலும் எளிதான மெல்லிய உணவை மிசைதல் நீண்ட நாள் உடம்பை நலம்பெற வைத்தற்கு வழியாகும்.

இனி, ஒவ்வொருவருந் தாந்தாம் இருக்கும் ஊரின் நிலத்தினியல்பையுந் தமது உடம்பின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறிந்து, அவற்றிற்குப் பொருத்தமானபடி உணவு கொள்ளப் பழகுதல் முதன்மையாகும். சுக்கான்கல்லாவது கற்பாசைகளாவது கந்தகமாவது நிறைந்த நிலங்கள் சூடானவையாதலால் அவற்றிலிருப்பவர்கள் குளிர்ச்சி வாய்ந்த உணவுகளை உட்கொள்ளல் வேண்டும். ஓதமுங் காற்றுந் தோய்ந்த இடங்கள் ஈரமானவைகளாதலால் அவற்றிலிருப்ப வர்கள் சூடான பொருள்களை அருந்தல் வேண்டும். இங்ஙனமே யாறோடும் ஊர்களிலிருப்பவர்கள் அவ்யாற்று நீரின் றன்மைகளை அறிந்து அவற்றிற்கு இணங்க உணவு கொள்ளல் வேண்டும். காவிரியாற்று நீரிற் பொன் கலந்திருத்தலால் அஃது ஓடுஞ் சோழநாட்டில் உறைபவர்கள் சூடுங் குளிர்ச்சியும் ஒத்த நிலையிலுள்ள பண்டங்களை உணவாகக் கொள்ளல் வேண்டும், தண்பொருநை (தாமிர பரணி) பாயும் பாண்டி நாட்டில் உறைபவர்கள் அந்நீரிற் செம்பு கலந்திருத்தலை அறிந்து, குளிர்ச்சி பொருந்திய உணவை உட்கொள்ளல் வேண்டும்; பனி மிகுந்த இமயமலை யிலிருந்து தோன்றி வடநாட்டில் ஓடுங் கங்கையாறு பாயும் இடங்களில் இருப்பவர்கள் அந்நீர் குளிர்ச்சி மிக்கதாயிருத்தலின் அதற்கு மாறான சூடுள்ள கோதுமையினை உணவாக கொள்கின்றனர். இப்படியே அவ்வவ்விடங்களின் இயல் பறிந்து அவ்வவற்றிற் கேற்றவாறு உணவை ஒழுங்கு செய்து கொள்ளல் இன்றியமை யாததாகும் என்க.

இனி, ஒருவருடம்பின்றன்மை மற்றொருவர் உடம்பின் றன்மையைப் போல் இராது. அதைப்பான பருத்த உடம்புள் ளவர்களுக்குக் காற்றின் கூறு மிகுதிப் பட்டிருக்குமாதலால் அவர்கள் காற்றின் கூறுள்ள வாழைக்காய் வள்ளிக்கிழங்கு முதலியவற்றை மிகுதியாய் உண்ணலாகாது; ஓரோவொரு கால் அவற்றை உண்ண வேண்டினும் நன்றாய் நீர் சுவற வறுத்துப் பிறகு சிறிதாய் அவற்றைத் தின்னல் வேண்டும். மெலிந்து ஒல்லியா யிருப்பவர்கள் சூடான யாக்கை உடையவர்களாகையால், அவர்கள் பாகற்காய் கத்திரிக்காய் போன்ற சூடுமிகுந்த பண்டங்களை நிறையத் தின்னலாகாது; சிலகாற்றின்ன வேண்டினும் அவற்றை வறட்டாமல் நீர்ப்பதமாகச், சமைத்துத் தின்னல் வேண்டும். இன்னும் ஒவ்வொருவருடம்பில் ஒவ்வொரு வகையான நோய் உண்டு. அதனைச் செவ்வையாய்த் தெரிந்து அந்நோய் நீக்குதற்கான பண்டங்களை மிசைதல் வேண்டுமே யல்லால், அந் நோயை மேன்மேற் பெருகுவிக்கும் பொருள் களைத் தீனியாக எடுத்தலாகாது. நோயாளிகளுக்கு நோயை மிகுதிப்படுத்தும் பண்டங்களிலே விருப்பம் உண்டாதல் இயல்பு; ஆயினுந் தமது அறிவின் வன்மையால் அவ் விருப்பத்தை வேரறக் கல்லி அந் நோய்க்கு மாறான பொருள் களையே விரும்பி யுட்கொள்ளல் வேண்டும்.

இனி, உட்கொள்ளும் உணவு தீனிப்பையிற் செல்லுதற்கு முன், அது வாயின் அகத்தே நன்றாய் அரைத்துக் குழைக்கப் பட்டுப் பின் கீழ் இறங்குமாறு இறைவன் அமைத்திருக்கும் வாயினமைப்பை உற்று நோக்குங்கால், கட்டிப் பொருள் எதனையும் வாயிற் பெய்தவுடன் விழுங்கும் அறிவிலார் செயல் பெரிதுந் தீங்கு தருவதென்று உணர்தல் வேண்டும். வாயில் இட்டதனை நன்றாய் அரைத்தற்குப் பற்களும், அரைக்கப் பட்டதனைக் குழைத்தற்கு உமிழ்நீரும் அமைக்கப்பட்டிருக்கும் நுட்பத்தை உற்று நோக்கி, இறைவன் வகுத்த அந் நுட்பத் திற்கிசைய நடப்பவர்கள் நோயாற் பற்றப்படாது திண்ணிய உடம்பு உடையராய் நெடுநாள் இனிது வாழ்வார்கள். தீனிப்பையிற் செல்லும் உணவு எளிதிற் செரிக்குமாறு அதன்கட் சில முதன்மையான் மாறுதல்களை உண்டு பண்ணுவது உமிழ் நீரேயாகும். வாயிற் பெய்த உணவு பற்களால் தகர்க்கப்பட்டுத் துகளாகியவுடனே உமிழ்நீர் அதனொடு கலந்து அதனைக் குழைவாக்குவதோடு அதன்கண் உள்ள காடிநீரும் அவ்வுணவி லுள்ள பசை மாவைச் சருக்கரை யாக்கி அதனாற் சூடு பிறப்பித்துத் தீனிப்பையி லிறக்கியதும் அதனைச் செரிப்பிக் கின்றது. உண்ட வுணவை உடம்பிற் சேர்ப்பித்துப் பெரும் பயன்றரு தற்குரிய தன்மைகள் இன்னும் பல இவ்வுமிழ்நீரின்கண் அமைத்திருக்கின்றன. ஆதலால், வாயிற் பெய்த எந்த உணவையும் உமிழ்நிரில் நன்றாய்க் கலப்பித்து அதனைத் தீனிப் பைக்குச் செலுத்துதலே பெருநலந் தருவதொன்றாம். உண்ணும் உணவு சிறிதாயிருந்தாலும் அதனை இம்முறை வழுவாது உண்பவர்கள் அதனாற் பெரு நன்மையை அடைவர். தின்னுந் தீனி பெரிதாயிருந்தாலும் அதனைச் செவ்வனே மென்று உமிழ்நீரிற் கூட்டி யுண்ணாமல் விழுங்குபவர்கள் அதனால் நன்மை யடையாது போதலொடு, தீனிப்பைக்கும் மிகுந்த வருத்தத்தைத் தருபவராகின்றார்கள்; அங்ஙனம் விழுங்கிய தனைத் தீனிப்பை அரைக்குங்கால் அது புண்பட்டு வயிற்றுளைச்ச லென்னும் நோயையும் விளைவிக்கின்றது: அதுவேயுமன்றி, அத் தீனி நன்கு செரியாமையால் அதிற் பெரும்பகுதி மலக்குடலில் வீணே கழிந்து போகின்றது. ஆகையால், வாயிற் பெய்த எந்த வுணவையும் நன்றாய்ச் சுவைத்து உண்ணுதற்கு நன்றாய்ப் பழகிக்கொள்க. அங்ஙனம் உண்ப தனால் நோய் ஆவதாயிருந் தாலும் உணவு சிறிதாகவே எடுக்கக் கூடியதாயிருந்தாலும் அதனால் விளையும் நன்மைகள், அங்ஙனம் உண்ணாமையால் வருந் தீமைகளை நோக்க, எத்தனையோ மடங்கு விரும்பத் தக்கவைகளாயிருக்கின்றன.

இனி, ஒவ்வொருவருந் தத்தம் உடம்புக்கு வேண்டுமளவு ஊன் எடுக்க வேண்டுமே யல்லாமல், அளவுக்கு மிஞ்சி எதனையும் எவ்வளவு சுவையுடையதனையும் அருந்த லாகாது. தீஞ்சுவையுடைய பண்டங்களை அயிலுங்கால் எத்திறத்தவரும் அளவுக்கு மிஞ்சி அவற்றை யுண்டலில் அவாவுடைய ராகின்றனர். அத்தகைய தீய அவாவை அடக் காமல் அதன் வழிப்பட்டு மட்டுக்குமேல் தின்பார்களாயின், தீனிப்பை முழுதும் அடைபட்டு அசைவு குறைந்து அவ்வுண வினைச் செரிக்கச் செய்ய மாட்டாது; அதனாற் பல கொடு நோய்கள் விளையும் ஓரோவொருகால் மூச்சு ஓட மாட்டாமல் உயிர் நீங்கினும் நீங்கும். அளவுக்கு மேற்பட்ட தீனி எடுப்பவனிடம் வந்து சேர்வதற்கு நோய்களெல்லாம் மடிகட்டிக் கொண்டு நிற்கும்; இது குறித்தே திருவள்ளுவ நாயனார்,

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல்
நிற்கும்கழிபேர் இரையாண்கண் நோய்

(குறள் 946)

என்று அருளிச் செய்தார். ஆதலால் அவா அடங்கு மட்டுந் தின்பேம் என்று நினையாது, அவாவினையும் உணவையும் மட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். நோயின்றி உயிர் வாழும் பொருட்டு உணவு கொள்கிறன்றமே யன்றி, உணவின் பொருட்டு உயிர் வாழ்கின்றனம் அல்லமே. ஆகையால் தீனிப்பை ஏற்கும் அளவிலுஞ் சிறிது குறைத்து உண்பதற்கே எப்போதும் பழக்கஞ் செய்து கொள்க. மிக்க சுவையுடைய பண்டங்களையும் மெல்லச் சுவைத்து விரையாமல் அருந்தினால் அவற்றை மேலுக்குமேல் தின்ன அவா எழாது. பகற்காலத்தில் உண்ணும் உணவிலும் இராக் காலத்தில் உண்பது அளவிற் சுருங்க வேண்டும். உடம்பு நன்றாயிருக்குங் காலத்தில் எடுக்குந் தீனியிலும், அது நோயாயிருக்கும்போது உட்கொள்வது மிகவும் அளவிற் குறைய வேண்டும்.

இனி, உண்டது செரித்தற்கும், செரித்து இரத்தத்திற் கலந்து உள்ளுள்ள உறுப்புகளை ஊட்டி வளர்த்தற்கும் உதவியாக உடம்பைப் பலவகையான முயற்சிகளிற் பழக்கல் வேண்டும். வியர்க்க வியர்க்கப் பாடுபட்டுப் பொருள் தேடுகின்றவர்களுக்கு உடம்பின் முயற்சியைப் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. அங்ஙனம் மெய்வருந்த உழைப்பவர்களுக்கு உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் நன்றாய் அசைந்து, செந்நீர் தடைப்படாது ஓடுதற்கும், செந்நீரிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்துங் கழியவேண்டுங் கழிவுகள் அவ்வப்போது வெளிப்படுதற்கும் இடஞ்செய்து வருதலால் அவர்கள் நலமுற்று வாழ்வார்கள் மற்று உடம்புழைப் பில்லாமற், கல்வி கற்கும் மூளை உழைப்புள்ள வர்களுக்கும், மூளை உழைப்புக்கூட இல்லாமல் தம் ஏவற் காரர் எல்லாத் தொழிலுஞ் செய்ய அவரை வறிதே பார்த்து ண்டிருக்கும் முதலாளிகட்கும், அவரை யொத்த பிறர்க்கும் உடம்பின் உறுப்புகள் வேண்டிய வளவு அசையாமையால், வியர்வைநீரும் மற்றைக் கழிவுகளும் அகற்றப்படாமல், உள்ளே இரத்தத்திற் சுவறியும் அடைப்பாக இருந்தும் நோயை மேன்மேல் மிகுக்குமாதலால் அவர்கள் எவ்வளவு மருந்துண்டாலும் அவை தீரா; அவர்கள் உண்ணும் உணவும் மருந்தும் நன்றாய்ச் செரித்துச் செந்நீரிற் கலவாமை யால் அவையிரண்டும் பயன்றராமலே போம். அத்தகையோர் நலம்பெற்று வாழ்தற்கு அவர்கள் பலவகையான உடம்பு முயற்சிகளைச் செய்தலே ஒப்பற்ற மருந்தாகும்.

இனி, ஒருநாளில் எத்தமுறை உணவெடுக்க வேண்டு மென்று வினவினால், சிலர் மூன்றுவேளை யென்றுஞ் சிலர் இரண்டுவேளை யென்றுங் கூறுகின்றார்கள். ஆயினும், அவரவர் உடம்பின்றன்மைக்கு இசையவுந், தாந்தாஞ் செய்யுந் தொழின் முயற்சிக்குத் தக்கபடியாகவும் பசி யெடுக்கும்பொ தல்லாஞ் செரிக்கும் அளவாக உணவு கொள்ளுதலே நலமாகும். ஓயா முயற்சியுஞ் சுறுசுறுப்பும் உடைய சிறுகுழந்தைகட்கு உண்ட உணவு மிகுவிரைவிற் செரித்துப்போதலால், அவர்கட்கு அடிக்கடி பசி எழும்; பசியெழும்போதெல்லாம் அவர்கள் தமக்கியைந்த உணவை உட் கொள்ளும்படி இடந்தருதலே நன்று; அங்ஙனமின்றி, அவர்கள் மூன்று வேளைதான் அருந்தல் வேண்டும் என்று வரையறைப்படுத்தினால் வேண்டுமளவு உணவெடா மையால் அவர்களுடம்பு மெலிந்து போகும்; ஆதலால், அவர்கள் திறத்தில் வரையறை செய்தல் கூடாது. அங்ஙனமே, ஓயா உடம்புழைப்பு உள்ளவர்களும் பசியெடுக்கும் போதெல்லாம் உணவு கொண்டாற்றான் அவர்கள் மேன்மேலும் உழைக்கக்கூடும். பின் இவ் விருதிறத்தாரையும் விடுத்து, நடுத்திறமான உடம்புழைப்பும் மூளை உழைப்பும் உள்ளவர்கள் எல்லாரும் நாளொன்றுக்கு மூன்று முறை யேனும் இரண்டு முறையேனும் ஏற்கும் அளவாக உணவு கொள்ளல் வேண்டும். சிலர் பகற்காலத்தில் மட்டுமே உண்ண வேண்டும் என்னுங் கொள்கை யுடையவர்களாய்க், காலை பத்து நாழிகைக்கு ஓர் உணவும், அந்திப் பொழுதிற்குச் சிறிது முன்னே ஓர் உணவும் எடுத்தலே நன்றென்று வற்புறுத்திக் கூறுவர். தொழிலின் முயற்சி மிகுதியாயில்லாத பழைய காலத்தில் இம்முறை பொருத்தமாயிருந்தாலுந், தொழிற்பாடு பெருகி வரும் இக் காலத்திற்கு அஃது இசையாது. இக்காலத்தவர் தாஞ்செய்யும் பலதிற முயற்சிக்கு ஏற்ப மூன்றுவேளை யுணவெடுத்தலே நலமுடைத்து; இல்லையேல் உடம்பு வலிவு சுருங்கிக் காலம் முதிரா முன்னரே இறப்பர். இரண்டுவேளை வலியவுணவை நிறைய அடைத்துத் தீனிப்பை முதலான அகவுறுப்புகளைப் பழுதுபடுத்துவதைக் காட்டினும், மூன்று வேளை மெல்லிய உணவுப் பொருள் களை அளவாக வுண்டு நலமாய் வாழ்தலே மேன்மை யுடைத்து.

இனிக், காலையிற் பத்து அல்லது எட்டு நாழிகைக்குச் சிறுக உணவெடுத்து, அதன்பிற் பத்து நாழிகை கழித்துப் பகற் பொழுதில் நல்லுணவை வயிறார உண்ணல் வேண்டும்; அதன்பிற் பத்து அல்லது பதினைந்து நாழிகை கழித்து மாலையில் அளவாக உண்ணல் வேண்டும். இங்ஙனம் மூன்றுமுறை எடுக்கும் உணவுகளின் இடையிடையே பத்து அல்லது பதினைந்து நாழிகை கழிய வேண்டுமென்று கூறிய தென்னை யென்றால், ஒருமுறை உண்டவுணவு நன்றாய்ச் செரிமானத்திற்கு வரச் சிறிதேறக் குறையப் பத்துநாழிகை (4 மணி நேரம்) ஆகின்றன. இப் பத்து நாழிகையும் ஆனபின் தீனிப் பையின்கட் சென்ற உணவு அங்கே நன்றாய்க் கடைப்பட்டுச் சாறுஞ் சக்கையுமாய்ப் பிரிந்து, சாறு மேலேறிச் செந்நீராய் மாறி நரப்புக்குழாய்களில் ஓடச், சக்கை, கீழ்க் குடரிற் கழிவாய் இறங்கிப்போகத் தீனிப்பையினிடம் ஒழிவாகி, மறுமுறை இடும் உணவை ஏற்றற்குத் தக்க நிலையின தாகின்றது. அஃது உண்மையேயாயினுஞ், சில உணவுப் பொருள்கள் மூன்று நான்கு நாழிகை நேரத்திற் செரித்துப் போகப் பசி மிகுதியாயெடுத்தலால், ஐந்து நாழிகை நேரஞ் சென்றபின் மற்றுமோர் உணவு கொள்ளுதலாற் குற்றம் இல்லையெனிற்; சில பண்டங்கள் விரைவாகவும், மற்றுஞ் சில பண்டங்கள் நேரம் பொறுத்துஞ் செரிமானத்திற்கு வருதலால் அவ்வவ் பொருள்கள் நன்றாய் அற்றுப் போன தறிந்து திரும்ப உணவு கொள்ளல் வேண்டும்.

உணவுப் பண்டங்கள் பல செரித்தற்கு ஏற்றக்குறைவான பலநேரங்கள் வேண்டப்படுதலை ஆங்கில மருத்துவர் ஒருவர் நன்கு ஆராய்ந்து காட்டியிருக்கின்றார். ஒருவர்க்கு வயிற்றில் ஒரு குண்டுபட்டுத் தீனிப்பைவரையில் ஒரு துளையை உண்டு பண்ணிற்று; அத் துளையின் வழியாக அவரது வயிற்றின் அகத்தேயுள்ள தீனிப்பையில் நடக்கும் நிகழ்ச்சிகளை அம் மருத்துவர் கண்டறிந்தார்.அங்ஙனங் கண்டறிகையில், வேவுவித்த சோறு இரண்டரை நாழிகை அல்லது ஒருமணி நேரத்திலுங், இனிய சீமை இலந்தைப் பழம் ஒன்றரைமணி நேரத்திலுங், காய்ச்சிய சவ்வரிசிக் கஞ்சி ஒன்றேமுக்கால் மணி நேரத்திலுங், காய்ச்சிய பால் இரண்டு மணி நேரத் திலும், பச்சைக் பால் இரண்டேகால் மணி நேரத்திலும், பச்சைக் கோசுக்கீரை இரண்டரை மணி நேரத்திலும், அவித்த கோசுக்கீரை நாலரை மணி நேரத்திலுஞ், சீமை அவரை இரண்டரை மணி நேரத்திரலுஞ், வேவுவித்த உருளைக் கிழங்கு மூன்றரை மணி நேரத்திலுங், கேழ்வரகு கம்பு சோளம் தினை முதலான கூலங்களின் அடைகள் மூன்றேகால் மணி நேரத்திலும், வேவுவித்த கூலங்களுஞ் சீமை அவரையும் மூன்றேமுக்கால் மணி நேரத்திலுஞ் செரிமானத்திற்கு வருதலைத் தெளிவாகத் தெரிந்து கொண்டார். இங்கே எடுத்துக்காட்டிய பொருள்களில், ஆக்கிய அரிசிச்சோறு ஒன்றுதான் ஒருமணிநேரத்திற் செரித்துப் போவதாயிருக்கின்றது. மற்றைப் பொருள்களுள் மிகுந்த நேரஞ் சென்று செரிப்பது அவித்த கோசுக் கீரை; இது செரிப்பதற்கு நாலரைமணி அல்லது பதினொன்றேகால் நாழிகை ஆகின்றன. இங்ஙனமாக உண்ட பொருள்களில் ஒன்று செரிக்கும் நேரத்திலேயே எல்லாஞ் செரியாமல் ஒவ்வொன்றுஞ் செரிக்க வெவ்வேறு நேரம் வேண்டியிருத் தலால், ஓருணவுக்கும் மற்றோருணவுக்கும் இடையே நாலைந்து நாழிகை சென்றாற் போதுமென் றுரைத்தல் அமையாது எளிதில் செரிக்கும் ஒரே வகையான உணவை உட்கொள்பவர்கள் மட்டும் அவ்வாறு நாலைந்து நாழிகை கழித்து உண்பது குற்றமாகாது. பலவாறாய்ச் செரிக்கும் பலவகை உணவுப் பண்டங்களைக் கலந்து வளமாகத் தின்பவர்கள் பத்து அல்லது பன்னிரண்டு அல்லது பதினைந் நாழிகை இடையிட்டு உண்பதே நலமுடைத்து. மேலும், ஓருணவுக்கும் மற்றோர் உணவுக்கும் இடையிலும் ஏதொரு சிற்றுண்டியும் அருந்தலாகாது. முன்னுண்டது தீனிப்பையிற் பாதி செரித்துஞ் செரியாமலும் இருக்கையில், மற்றுஞ் சிறிது நடுவிலுண்டாற் சிறிது செரித்ததுஞ் செரியாததும் ஒன்று கலந்து முற்றுமே செரியாதுபோய் நோயை வருவிக்கும். ஆகையால், முதலில் உண்டது முற்றும் அற்று நன்றாய்ப் பசியெடுத்த பின்றான் உணவெடுக்க வேண்டும். இவ்வுண்மை,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்
கருந்தியதற்றது போற்றி யுணின்

(குறள் 942)

என்று ஆசிரியர் தெயவப் புலமைத் திருவள்ளுவ நாயனாரால் நன்கு வலியுறுத் துரைக்கப்பட்டது.

முன் உண்டது அற்றபடியை உணர்வதற்கு மிக்க பசி உண்டாவதுதான் தெளிவான அடையாளம். உடம்புக்கு உணவு வேண்டிய நேரம் வந்தாற் பசி இயல்பாகவே மிகுந்து எழும். இயற்கையாகப் பசி எடாதவரையில், உடம்புக்கு உணவு வேண்டுவதில்லை யென்பதனை ஒவ்வொருவரும் நன்றாக நினைவிற் பதித்தல் வேண்டும். பசி எடாமைக்கு இரண்டு ஏதுக்கள் உண்டு. மிகவும் கொழுமையான உணவுப் பொருள்களை அயின்றால், அவை செரித்தற்கு நெடுநேரஞ் செல்லுமாதலால்; அதனால் ஒருநாள் முழுதுங்கூடப் பசியில்லாதிருத்தல் உண்டு. இனி, முறை கடந்து தின்றுவந்த பழக்கத்தாலும், வேறு சில நோய்களின் கொடுமையாலுந் தீனிப்பையுந் தீனிப்பையிலுள்ள சாறுகளும் வாயிலுள்ள உமிழ்நீருந் தன்மை கெட்டுப் பசித் தீ அவிந்து போதலும் உண்டு. இவ்விரண்டு ஏதுக்களில் எதுபற்றிப் பசியில்லா திருந்தாலும், பசி நன்றாய் எடுக்கும் மட்டும் ஏதொன்றும் உட்கொள்ளாமற் பட்டினி கிடத்தலே நன்று. இங்ஙனம் பட்டினி கிடக்க கிடக்க உடம்பிலுள்ள தீயினால், இரத்தத்திலும் மற்றை இடங்களிலும் கலந்திருந்த நச்சுப் பொருள்களெல்லாம் எரிக்கப்பட்டுப் போகச், சிலநாளில் உடம்பு செம்மையான நிலைக்கு வந்து பசி நன்றாய் எடுக்கும் பட்டினி கிடந்தவர் பசியெடுத்த வுடனே கண்டமட்டுங் கண்டகண்ட பொருள்களைத் தின்று விடலாகாது. தம்முடம் புக்கு இசைவான பண்டங்களை முதலிற் சிறுகத் தின்று, வரவரச் சிறிது கூட உண்ணல் வேண்டும். உடம்பு உறுப்பு களின் அமைப்பும், அவை செய்யுந் தொழிலும் பாகுபடுத்து உணரமாட்டாதவர்கள், பசி எடாமை கண்டவுடனே, அதன் ஏதுவை ஆராய்ந்து பார்த்துப் பட்டினி கிடவாமற், பசியெடுப்பதற்காக மருத்துவரிடஞ் சென்று மருந்து வாங்கி உண்பவர்களும், நல்ல அறிவாளிகளான மருத்துவர் வேண்டாமென்று தடுத்தாலுங் கேளாமல் உடம்பு மெலிந்து விடுமே உடம்பு மெலிந்து விடுமே என்று கவலைப்பட்டு மேலுக்கு மேல் உண்ண வலிந்து புகுத்துபவர்களுமாய் இயற்கைக்கு மாறாய் நடந்து காலம் முதிரா முன்னரே கூற்றுவனுக்கு இரையாகின்றனர். பட்டினி கிடந்தால் உடம்பு மெலிந்தாலும் நோய் நீங்கிப் பசியெடுத்து நன்றாய் உணவு கொள்ளுங்கால் உடம்பு செம்மையான நிலைக்கு வரும். அதற்கும் பொறுமையாய் இராமற் சோற்றையும் மற்றைப் பண்டங்களையும் மேன்மேல் துறுத்தி அடைத்தல் ஒரு பயனுந் தராமையோடு அங்ஙனம் உண்பவரை விரைவில் இவ்வுலக வாழ்வு துறந்தேகவுஞ் செய்யும்.

உணவு உண்பது உடலைப் பாதுகாப்ப தன்று. உண்டவுணவிலுள்ள சாறுகள் அத்தனையுஞ் செந்நீரிற் கலந்து உடம்பிற் சேருவதே அதனைப் பாதுகாப்பதாகும். உண்ட உணவு அங்ஙனம் உடம்பிற் சேராமற் றனித்து நிற்குமாயின் அதுவே நஞ்சாக மாறி அதற்குத் தீமையை விளைவிக்கும். ஆகையால், உணவு கொள்ளுதலையே எப்போதும் பெரிதாக நினையாது, தமது உடம்புக்கு எவ்வகையான உணவு வேண்டும், அதனை எப்போது எவ்வாறு உட்கொள்ளல் வேண்டும் என்று வகை தெரிந்து பயன்படுத்துவதே ஆறறிவுடைய மக்களுக்கு அழகாகும். பசியெடாத காலங்களில், அங்ஙனம் ஆன தன் ஏதுவைத் தெளிய ஆராய்ந்து கண்டு, பசியெடுக்கும் அளவும் பட்டினி கிடந்து, பசியெடுத்தபின், முன்னுண்டான சீர்கேடு மிகக் கொழுமையான பண்டங்களை மிகுத்துண்டதனால் வந்ததாயின்; மறித்தும் அவற்றையே தின்னாமல் தமதுடம் பிற்கு ஒத்தவற்றையே உண்ணல்வேண்டும். இதுபற்றியே திருவள்ளுவ நாயனார்,

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு

(குறள். 945)

என்று அருளிச் செய்தனர்.

இனிப், பசியெடாமை நோயால் வந்ததாயின் இடையிடையே வெந்நீர் பருகிக்கொண்டு பட்டினி கிடந்தால் உடம்பில் நோயை விளைவித்த நச்சுநீர் முற்றும் உள்ளுள்ள தீயால் உரிஞ்சப்பட்டுப் போக, நோய் நீங்கிப் பின்னர் நன்றாய்ப் பசி உண்டாகும். நாலைந்துநாள் தொடர்பாகப் பட்டினி கிடக்க மனவலிமை யில்லாதவர்கள் இனிய குடகு நாரத்தம் பழங்கள் சிற்சில ஒருநாளில் இரண்டுமுறை தின்னலாம். அல்லது, வாற்கோதுமை மாவேனுங் கோதுமை மாவேனுங் கலந்து காய்ச்சிய ஆவின்பாலைச் சிறுகப் பருகலாம். இங்ஙனஞ் செய்வதோடு, அந்நோய் நீக்குதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த மருந்தினைத் தக்க மருத்துவர் பாற் பெற்று அருந்துதலும் நன்று. மருந்து அயிலாமலே வெறும்பட்டினி கிடத்தலாலும் மலக்குடரை நாடோறுங் கழுவி விடுதலாலுங், குறிகளை நீராவியிற் காட்டி நன்றாய் வியர்க்க வைத்தலாலும் எத்துணைக் கடுமையான நோயும் விலகும்படி செய்து கொள்ளலாம். ஆனால் அவ்வாறு செய்து உடம்பை நலம் பெற வைத்தற்கு மிகுந்த மனவலிவும் ஆழ்ந்த நுனைவும் அறிவும் வேண்டும்; அவையில்லாதவர்கள் அறிவும் பயிற்சியும் அன்பும் மிக்க மருத்துவர்பால் மருந்து வாங்கியுண்டு நோய் நீக்கிக் கொள்ளுதலே செயற்பாலார். நல்ல மருந்துகளை உண்ணுமிடத்தும், பசியின் அளவறிந்து உணவு எடுத்தாற்றான் மருந்தும் பயன்றரும், நோயும் நீங்கும். ஆதலால், ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்,

அற்ற தறித்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து

(குறள் 944)

என்றருளிச் செய்த உறுதி மொழியினைக் கடைப்பிடித்து நன்றாய்ப் பசியெடுத்தபின் இசைவான பண்டங்களை அருந்துதற்கே பழகி வரல் வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!