பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
மறைமலையடிகள்

3. பொருந்தா உணவுகள் -2

அங்ஙனமானாற், காய்கறி முதலான சைவ உணவையே முழுதும் உட்கொள்ளுஞ் சைவவேளாளருக்கும் பார்ப்ப னருக்குங் கூடப் பலவகை நோய்கள் வரக் காண்கின்றோமே, அஃதேனெனில், அவர்கள் நோய் வருதற்குரிய வேறு காரணங்கள் உண்டென்பதைக் கருதிப்பாராமல் நடத்தலால் அங்ஙனம் நோய் கொள்கிறார்களென்று அறிதல் வேண்டும். ஊன் உணவை நீக்கினால் அதனால் வருங் கொடு நோய்கள் விலகுவது திண்ணமேயாயினும், ஊனைப்போலவே நோயை வருவிக்கும் காய் கனி வித்துக் கிழங்கு கீரை முதலானவை சைவவுணவிலும் உண்டாதலால், அவற்றையுந் தெரிந்து விலக்கினாலன்றிச் சைவரும் பார்ப்பனரும் நோயில்லாமல் இருத்தல் முடியாது. அதுவேயுமன்றி, அவர்கள் பின்பற்றி நடக்கும் பழக்க வழக்கங்களிற் சிலவும் நோயை வருவிக்குந் தன்மையவாய் இருக்கின்றன. அவற்றுட் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுவாம் :

மட்பாண்டங்களில் உணவுப் பொருள்களைச் சமைத்தலே இயற்கைக்கு இசைவதோடு, உடம்பின் நலம் பேணுதற்குஞ் சிறந்ததாகும். நல்ல களிமண்ணில் நோயை நீக்குந் தன்மையுள்ள பொருளேயிருக்கின்றதல்லாமல் அதனை வருவிக்கும் நச்சுப் பொருள் சிறிதுமில்லை. ஆகையால், அத்தகைய களிமண்ணிற் செய்த கலங்களே உணவுப் பண்டங் களைச் சமையல் செய்தற்குப் பொருத்தம் உடையனவாம். இங்ஙனமாகவும், பலர் வீண் பகட்டுக்காக, விலையேறப் பெற்ற செப்புக்கலங்கள் பித்தளைக் கலங்கள் ஈயம் இரும்பு அலுமீனியம் முதலியவற்றிற் செய்த பாண்டங்கள் முதலான வற்றை சமையற்றொழிலுக்கு மிகுதியாகப் பயன்படுத்து கிறார்கள். அவ்வாறு இயல்பாகவுள்ள களிம்பு துரு முதலான நச்சுப் பொருள்களும் உணவிற் கலந்து சென்று தீனிப்பையைக் கெடுத்துச் செந்நீரையும் நஞ்சாக்கு கின்றன. எங்ஙன மென்றாற், செம்பு இரும்பு ஈயம் முதலான முதற் பொருள்களை நேரே ஏற்றுச் செரிக்கச் செய்யும் ஆற்றல் மக்களின் தீனிப்பைக்கு இல்லை யென்பதனை முன்னரே காட்டினாமாகலின், இம் முதற் பொருள்களொடு கலந்துவந்த சோறு கறி குழம்பு மிளகுநீர் முதலியவற்றைத் தீனிப்பை அரைத்துச் செரிக்கச் செய்யமாட்டாமற் புண்பட்டு ஓய்ந்து போதலால், உண்டஉணவு செரியாமை யொடு வயிற்றில் தீராவலியும் உண்டாகின்றது: அம்மட்டோ, அம் முதற் பொருள்களிலுள்ள களிம்புந் துருவுமாகிய நஞ்சும் அவ்வுணவிற் கலந்திருத்தலால், அஃது இரத்தத்திற் கலந்து மயக்கஞ் சோகை, நீரிழிவு, வெள்ளைத்தொழுநோய் முதலான பொல்லாத நோய் களையும் விளைவிக்கின்றது. ஆதலால் மட்பாண்டங்களைத் தவிர வேறு செம்பு பித்தளை ஈயம் அலுமினியம் முதலியவற்றிற் செய்த கலங்களை உணவு சமைக்கும் ஏனங்களாகச் சிறிதும் பயன்படுத்தலாகாது. சிறப்பு நாட்களிற் பலர்க்கு மிகுதியாகச் சமைத்தற் பொருட்டு அவற்றை ஒரோவொருகாற் பயன்படுத்த வேண்டி வந்தால், அவற்றில் ஆக்கிய உணவு உட்கொள்ளு தலால் வருந் தீமையை உடனே விலக்குதற்கு வழிதேட வேண்டும். அவ்வழியா தெனின், அவற்றின் ஆக்கிய உணவைச் செரிக்கும் அளவாய்ச் சிறுக உண்டு மறுநாட்காலையில் மலக்குடரைக் கழுவித் துப்புரவு செய்து, ஒருவேளை பட்டினிகிடத்தல் வேண்டும்; அம் முதற்பொருளின் களிம் பாகிய நஞ்சு செந்நீரில் ஏறாமைப் பொருட்டு நல்ல எலுமிச்சம்பழச் சாற்றை அருந்துதல் வேண்டும். இவ்வளவும் உடனே செய்தால் அக் கலங்களிற் சமைத்த உணவை உண்டதனால் வருந்தீமைக்குத் தப்பலாம்.

இனிச், சைவரும் பார்ப்பனரும் எடுக்கும் உணவுப் பண்டங்களிலுஞ் சில விலக்கற்பாலன. மிளகாய் புளி உப்பு கடுகு முதலிய பொருள்களை இவர்கள் கறிகுழம்புகளிற் பெருகச் சேர்த்துண்ணக் காண்கின்றோம். இவைகளும், சிலர் அடுத்தடுத்துத் தின்னும் வெற்றிலை பாக்குச் சுண்ணமும் முதலில் நரம்புகளுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணிப் பிறகு இளைப்பினை வருவிப்பனவாம். மேலும், இப் பண்டங்களில் உடம்பை வளர்த்தற்கு வேண்டிய பகுதிகள் இல்லாமையால், இவற்றை உண்பதானால் தீனிப் பைக்கு வீண் உழைப்பினைக் கொடுக்கின்றார்களே தவிர இவற்றிலிருந்து அடையும் பயன் மிகுதியாய் ஒன்று மில்லை உணவைச் சுவைப்படுததுதற்கும், வயிற்றிற் சேருங் காற்றைக் கழிப்பதற்கும் மிளகாய் முதலியன பயன்படுகின்றனவேயென்றால், அங்ஙனஞ் சுவைப்படுத்துதற்குங் காற்றைப் போக்குதற்கும் வேண்டிய அளவுதான் அவற்றைச் சேர்க்கவேண்டுமே யல்லாமல், அதற்கு மேற்படச் சேர்த்தல் சிறிதும் பொருந்தாதாகும், சைவர் பார்ப்பனர் சிலர் அமைக்குங் கறி குழம்புகளில் மிளகாய்க் காரம் மிகுந் திருத்தலால், அவற்றை உண்பவர்கள் நா எரிய வயிறெரியக் கண்ணீர் சிந்த மூக்குநீர் வடியப் படுந்துன்பங் கிட்ட இருந்து பார்ப்பவர்கட்கும் பொருக்க முடியா தென்றால், அவற்றை உண்பவர்கள் படும்பாட்டை எடுத்துச் சொல்வானேன்! மற்றுஞ் சிலர் செய்வனவற்றிற் புளியும் உப்பும் அளவுக்கு மிஞ்சிக் கலந்து அவற்றை உண்பவர் நாக்கு இற்றுப்போம்படி செய்கின்றன! இத்தகைய காரமான பொருள்களையே உண்டு பழகிப் போன நாவுக்கு மெல்லிய இனிய சுவை தெரிய மாட்டாது. ஆதலினாலேயே, சைவர் பார்ப்பனரிற் சிலர் பலர் மிக்க சுவையுடைய பண்டங்களை உண்ண மாட்டாமல் அவற்றை அருவருத்து இகழுகின்றனர்.

மற்றும் பலர் எந்நேரமுஞ் சுண்ணாம்பைத் தடவித் தடவி வெற்றிலைபாக்கு மென்றபடியாயும் அவையும் போதாவென்று புகையிலையைத் திருகித் திருகிச் சேர்த்துத் தின்றபடியாயுங் காலங்கழிக்கின்றார்கள். இன்னும் பலர் இவையும் போதாவென்று அடிக்கடி புகையிலைச் சுருட்டுப் பிடிப்பவர் களாயும், புகையிலைத் தூளை ஓயாமல் மூக்கினுள் நுழைப்ப வர்களாயும் இறுமாந்து நடக்கின்றார்கள். இந் நச்சுப்பொருள் களை இங்ஙனமெல்லாம் உட்கொள்ளுதலால், அவர்கள் பலவகை நோய்களை அடைந்து காலம் முதிரா முன்னரே இறந்தொழிகின்றார்கள். இந் நச்சுப் பண்டங் களைத் தின்பவர்கள் கன்னம் வறண்டு ஒட்டிப்போக உதடுகள் கறுக்கக், கண்சிவக்க, அவர்களைச் சூழத் தீ நாற்றம் பரந்து வீசத் தலைமயிர் நரைத்திருக்கத், தோல் திரைந்து சாம்பற் பூக்க அருவருப்புள்ள வடிவமும் அஞ்சத்தக்க பேய்த் தோற்றமுங் கொண்டு செல்வதைப் பார்த்தால், இவர்கள் மிக விரும்பித் தின்னும் பொருள்களின் இயல்பும் இவர்களின் இயற்கையும் விளங்காமற்போகா, பேரிரக்கம் வாய்ந்த இறைவன் அருமையாய்த் தந்த உடம்பை இங்ஙனம் பாழாக்கித் தம்மட்டில் ஒழியாமல், தம்மோடு உறவு கொண்டிருக்கும் பெற்றோர் உற்றார் பெண்டிர் பிள்ளைகள் நண்பர் முதலாயினார்க்கும் வெறுப்பையுந் துன்பத்தையும் நோயையும் விளைத்து மாயும் இவர்கள் பிறந்தபோதே தொலைந்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! இது நிற்க.

இனி, இவையும் போதாவென்று இப்போது சென்ற பல ஆண்டுகளாக வேறுசில நச்சுப் பண்டங்களும் உணவுப் பொருள்களாய்க் கிளம்பியிருக்கின்றன. அவை: காப்பி, தேயிலை, கொக்கோ என்னும் இவற்றுள் ஒன்றைக் காய்ச்சி இறக்கிய சாற்றைக் காலை நண்பகல் மாலை இரவு என்னும் நான்கு வேளைகளிலும் முதன்மையான குடிநீராய்ப் பெரும் பாலும் எல்லாரும் பருகுதற்குத் தலைப்பட்டு விட்டார்கள். இவற்றை முன் குடித்தறியாத நாட்டுப் புறத்தாருங்கூட இப்போது இவற்றைக் குடிக்கக் கற்றுக் கொண்டு இவை யில்லாமல் நாம் உயிர்வாழ முடியாதென்று சொல்லு கிறார்கள்! கல்வி செல்வம் நாகரிகம் என்னும் இவற்றில் தம்மை மேலாக எண்ணியிருக்கும்பலர் நாள் முழுதும் இவற்றைப் பருகுவது தமக்கு இன்றியமையாததாகவும் பெருமையாகவும் எண்ணி நடந்து வருகிறார்கள்! தமக்கு முதன்மையாகவும் பெருமையாகவும் பிழைபட எண்ணி இந் நஞ்சை எந்நேரமும் பருகி இறுமாக்கும் இவர்களின் கல்வியையுஞ் செல்வத்தையும் நாகரிகத்தையும் என்னென் பேம்! உணவுக்காக எடுக்கும் வேறு சில பண்டங்களில் உள்ள நச்சு நீரைக் காட்டினுங் காப்பி தேயிலை கொக்கோ இறைச்சிச்சாறு என்னும் நான்கிலும் அது மிகுந்திருத்தலால் அது தெரியாமல் அவற்றை விரும்பிக் குடிப்போர் கல்வியும் நாகரிகமும் உடையராவரோ; பதின்மூன்றே காற்பலம் எடையுள்ள காப்பிக் கொட்டையில் எழுபது குன்றிமணி எடையுள்ள நச்சுநீரும், அவ்வளவே எடையுள்ள தேயிரையில் நூற்று எழுபத்தைந்து குன்றிமணி நச்சு நீருங், கொகோவில் ஐம்பத்தொன்று குன்றிமணி நச்சுநீரும், இறைச்சியை அவித்து இறக்கிய சாற்றில் அறுபத்து மூன்று குன்றிமணி எடையுள்ள நச்சுநீரும், இருக்கின்றனவென்று அவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்த புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர் ஒருவர் கணக்கிட்டுக் காட்டியிருக்கின்றார். இவைகளைக் குடிநீராக்கிப் பருகு வதால் இவற்றில் மிகுதியாயுள்ள நச்சுநீர் செந்நீரிற் கலந்து பலவகை நோய்களை வருவிக்கின்றது. ஆகவே, இவற்றைப் பயன்படுத்துவது நோய்களை உண்மையாகவே விலை கொடுத்து வாங்குவதாய் முடிகின்றது. நோய் கொண்ட காலங்களிலுங்கூடக் காப்பியுந் தேத்தண்ணீரும் விடாமற் பருகுகிறார்கள்; பார்ப்பனர் சைவரிற் சிலரும், நோய் கொண்ட பொழுது அதனை நீக்குதற்கும் உடம்பினை வலிவேற்றுதற்கும் பெரிதும் உதவி செய்யுமென்று பிழைபட நினைந்து, அவித்த இறைச்சிச் சாற்றினையும் முட்டைக் கருவுங் கொடி முந்திரிச் சாறுங் கலந்த கலப்பினையும் உட்கொள்ளுகிறார்கள்; ஆனால் அவர்கள் நினைத்தற்கு மாறாக அவற்றின்கண் உள்ள நச்சுநீர் அவர்க்கு மேலும் பல கொடு நோய்களை வருவித்து அவர்களைத் துன்புறுத்தி மாளச் செய்கின்றது. அங்ஙனமாயின், இவற்றை யுட் கொள்ளும் பலர் நோய் நீங்கி நலம்பெறக் காண்கின்றோமே யெனின் இவற்றின் நச்சுநீர் நோயைச் சிலகாலம் உடம்பினுள் ளேயே அடக்கி வைத்து அதனைப் பெருநோயாகப் பின்னர் வளர்த்து வெளிப்படுத்து கின்றதென நுண்ணிய ஆராய்ச்சியிற் சிறந்த ஆங்கில மருத்துவர் உறுதி கூறுகின்றமையால், முன்னர்ச் சிறு நோயை நீக்கும் அப் பொருள்கள் பின்னர்ப் பெருநோயை வருவிக்குமென உணர்ந்து கொள்க. ஆதலால், நச்சுநீர் உள்ள காப்பி தேயிலை கொக்கோ இறைச்சிக் சாறென்னும் இவற்றை அறவே விட்டொழித்தலே நலமுடன் வாழ்தற்கு ஒரு சிறந்த வழியாமென்க.

இனிப், புகையிலை கஞ்சா அவின் சாராயம் முதலான மயக்கந் தரும் பொருள்களிற் கொடியதொரு நஞ்சு இருத்த லால் இவற்றைப் பயன்படுத்துகின்றவர்களும், மேற்கூறிய காப்பி தேயிலை முதலியவற்றை உட்கொள்பவர்களைப் போலவே நோயாற் பற்றப்பட்டு விரைவில் மாளுகின்றார்கள். காப்பி முதலான குடிநீரைப் பருகுகின்றவர்களுக்கு அறிவு மயங்குவதில்லை; மற்று இந்தப் பண்டங்களை உட்கொள் பவர்களுக்கோ அறிவு மயக்கமும் உடன்வந்து சேர்கின்றது. உடம்பை வளர்த்தற்கு வேண்டும் பொருட்பகுதிகள் சிறிதும் இல்லாத காப்பி தேயிலை கொக்கோ இறைச்சிச் சாறு முதலியவற்றையும் மயக்கந் தரும் புகையிலை கஞ்சா அவின் சாராயம் முதலியவற்றையும் மக்கள் தம் அறியாமையாலும் பிழைபட்ட எண்ணத்தாலும் உட்கொண்டு இறைவன் தந்த இந்த அரிய உடம்பைப் பாழாக்குதல் ஐயோ எவ்வளவு வருந்தத் தக்கதாயிருக்கின்றது!

புகையிலை தின்பவர்களும் புகைச் சுருட்டுப் பிடிப்பவர் களும் நரம்பு வலிவிழந்து இரத்தங்கெட்டு மூளை மங்கலுற்று விரைவில் மாளுகின்றார்கள் என்று ஆங்கில மருத்துவரிற் பலர் செவ்வையாக ஆராய்ந்து பார்த்துக் சொல்லுகிறார்கள். இதனாற்றான் அமெரிக்காவில் மிகச் சிறந்த ஒரு கல்விக் கழகத்தின் தலைவர் வீட்டிலாவது வேறிடத்திலாவது புகைச் சுருட்டுப் பிடிக்கும் எந்தப் பையனையுந் தமது கழகத்தினுட் சேர்ப்பதேயில்லை. புகையிலையிலுள்ள நஞ்சு மூளையைக் கெடுப்பதால் அதனைப் பயன்படுத்துகின்றவனுக்குக் கல்வியும் தின்பவர்கட்கும் புகைச் சுருட்டுப் பிடிப்பவர் கட்கும் புகையிலைத் தூள் மூக்கினுட் செலுத்துபவர்கட்கும் நாளேற நாளேற உடம்பிலுள்ள வலிமை கெடுதலால், அவர்களில் ஆண்மக்களாவார் ஆண்டன்மை இழந்தும் பெண் மக்களாவார் பெண்டன்மை இழந்தும் உலகின்கண் வெறிய நடைப் பிணங்களாகவே திரிகின்றனர் என்றும் இவ் வுண்மையை ஆராய்ந்து கண்ட மருந்து நூலார் உறுதி கூறுகின்றார்கள். புகையிலையை எந்த வகையிலாயினும் பயன் படுத்துகின்றவர்கள் அருகிருந்தால், மற்றவர்கள் அவர் களிடத்து அன்புடையவர்களாயினும் அவர்களிடத்து அந் நேரத்திலும், பிறகு அவர் தன்மையை நினைக்கும் பிற நேரங்களிலும் அருவருப்படையாமல் இருக்க முடிவதில்லை, அவர்கள் இதழ்களில் இறைவன்அமைத்த அழகிய சிவப்புநிறம் மாறி அழகற்ற கறுப்பு நிறம் ஏறியிருப்பதுடன், அவர்கள் வாயிலிருந்து புகையிலையின் தீநாற்றமும் அருகிருப் பவர் பொறுக்கக் கூடாமல் வீசுகின்றது: மூக்குத்தூளை மூக்கினுள் நுழைப்பவர்களைப் பார்த்தாலலோ மிகுந்த வெறுப்பு உண்டாகின்றது; அவர்கள் மூக்குத் தொளையிற் சளியும் மூக்குத்தூளுங் கலந்து ஒழுகுதலும், ஒழுகும் அது மேலணிந்த உடைகளில் வடிந்து கறையாகி நாற்றம் வீசுவதும் எவர்க்குத்தாம் அருவருப்பைத் தரா! இனிப், புகையிலையை வெற்றிலையொடு கூட்டிக்கூட்டி மெல்பவர்களின் பற் கறையும், அதனை வாயில் மென்றபடியாய்ப் பேசும் பேச்சும், இடை யிடையே புறத்தே போய் எச்சில் உமிழ்ந்து வரும் வகையும் எவ்வளவு வெறுப்பைத் தோற்றுவிக்கின்றன! இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்க்குந் திருத்தமான அறிவுந் தூயதன்மையும் வாய்ந்தவர்கள் புகையிலையைக் கனவிலும் நினைவார்களோ! கல்வி கற்குஞ் சிறார் இக்காலத்தில் எங்கே பார்த்தாலும் புகைச் சுருட்டுப் பிடிப்பதைக் கண்டு தூயதன்மை யுடையவர்கள் எவ்வளவு வருத்தமுறு கின்றார்கள்! ஆகையாற், சிறியோர் முதற் பெரியோர் ஈறான எத்திறத்தவரும் புகையிலையைத் தாந்தொடாமல் தூயரா யிருப்பதொடு, பிறரும் அதனைத் தொடாபடி செய்வது இன்றியமையாத கடமையா மென்க.

இனிக், கஞ்சா இலை புகையிலையினுங் கொடியதாய் உடம்பின் வலிவைக் குறைத்து இரத்தத்தை நஞ்சாக்கி அறிவை மயக்குதலால் அதனைப் பயன்படுத்துதலுஞ் சிறிதும் ஆகாது. கஞ்சாப் புகை பிடிப்பவர் துறவிகள் ஆவரெனவும் அதனால் அவர்க்குப் பேரின்பக் காட்சிகள் புலனாமெனவுந் தவறாக எண்ணி நடப்பவர் பலர் உண்டு. கஞ்சாப் புகை பிடிப்பவர் முகத்தைப் பார்த்தால் அவர் உயர்ந்தவராகக் கருதப்படுதுற்கு உரிய அடையாளம் எள்ளளவும் இலராதல் நன்கு விளங்கும். இயற்கைக்கு மாறாய்க் கண்கள் குன்றிமணிபோற் சிவந்து கன்னம் ஒட்டி மயக்கத்தாற் றடுமாறிய சொற்கள் உடையவராய், அருகிற் செல்வார்க்குப் பொறுக்க முடியாத முடை நாற்றமும் அழுக்கும் நிறைந்த வராய் உள்ள அவர்களைப் பெரியோ ரென்றல் வேறு எவ்வகையாலோ அறிகிலேம்! அதுநிற்க.

இனிக், கஞ்சாவைவிடத் தீயதன்மை வாய்ந்தது அவின். அவின் தின்பவர் தூக்கமும் அறிவு மயக்கமும் மிகுதியும் உடையர். அவரது தீனிப்பை அவின் நஞ்சாற் செயலிழந்து போக, உண்ட உணவு செரிமானத்திற்கு வராமல் அவர் வயிற்றுவலியால் துன்புறல் காணலாம். அத் துன்பம் பொறுக்க மாட்டாமல் அவர் மறித்தும் மறித்தும் அவின் உண்டு மயங்கிக் கிடந்து சடுதியில் உயிரைத் துறக்கின்றார்கள். ஆதலால், இந்தக் கொடிய நஞ்சும் முற்றும் விலக்கற்பால தொன்றாம்.

இனி, இவையெல்லாவற்றினுங் கொடிய நஞ்சாகிய சாராயத்தின் பொல்லாங்கை உணராமல் அதனைக் குடிப்பவர் இவ்வுலகத்திலேயே நிரயத் துன்பத்தை உழப்பவர் ஆவர். அவர்கள் தம் உடம்பையும் அறிவையும் பாழாக்கி, உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும் இன்றி வறியராய் உழல்வதொடு தம்மைச் சேர்ந்தவரையுந் தம் வயிற்றிற் பிறக்கும் பிள்ளை களையுங் கூட அத் துன்பத்திற்கு ஆளாக்குகின்றமை எல்லாரும் அறிந்த உண்மையன்றோ? ஆனால், மருத்துவரிற் சிலர் மட்டும் இதன் தீங்கிளைப் பகுத்துணராமல், இதனை நோய் நீக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று சொல்லித் தம்பால் வரும் நோயாளிகட்கு இதனை அருந்தக் கொடுக்கின்றார்கள்; இதனை உண்ண வேண்டாதவர் களையும் உண்ணும்படி வற்புறுத்துகின்றார்கள். ஆனால், இதனை ஆராய்ந்து பார்த்து இதிற் கலந்துள்ள பொருள்களைப் பகுத்துக் கணக்கிட்ட இயற்கைப் பொருள் நூலாரோ கொடிமுந்திரிச் சாராயத்தில் தண்ணீர், மயக்க நஞ்சு, சர்க்கரை, புளிப்பு என்னும் நான்குமே யன்றி, புற்று நோய் நீக்குங் கரு எதுமேயில்லையென்று முடிவுகட்டி யிருக்கின்றார்கள். இன்னுஞ் சாராயத்தின் வகைகளான பீர், பிராண்டி, ஜின் உவிசிக்கி, இரம் என்பவைகளும் மயக்க நஞ்சுந் தண்ணீரும் பல அளவாய்க் கலப்பதனால் உண்டாவனவே யல்லாமற் பிற அல்ல எனவும் உறுதி கூறுகின்றார்கள். கொடிமுந்திரிச் சாராயத்திலுள்ள நான்கு பொருள்களில் தண்ணீருஞ் சர்க்கரையும் புளிப்பும் மற்ற உணவுப் பண்டங்களில் ஏராளமாயிருக்கின்றன; ஆதலால், அவற்றுக்காகச் சாராயத் தைப் பருக வேண்டுவதில்லை. மற்று, உணவுப் பொருள்களில் இல்லாத மயக்கநஞ்சு மட்டுமே இதன்கண் இருப்பதால் இது மக்கள் உடம்பையும் உணர்வையும் பாழாக்கும் இயல்பின தன்றி வேறெர்ரு பயனுந் தருவதன்று. இம் மயக்கநஞ்சு குளிர் நோய் வராமற் றடுத்தற்குந், தூக்கமின்றி நோயாற் றுன்புறு கின்றவர் தூக்கங்கொண்டு அந் நோயை மறந்திருத்தற்கும் உதவி செய்தலால் இதனையுடைய சாராயத்தை முற்றும் விலக்கல் ஆகாதெனின்; இஃது அவ்வாறு ஒரு சிறிது பயன்படுவதே யென்றாலுங், குளிர்நோயுந் தூங்கா நோயும் இல்லாதவர்கள் அதனைப் பயன்படுத்துதல் ஏன் எனக் கூறி மறுக்க. மேலும், இவ்விரண்டு நோய்க்கும் இதனைப் பயன்படுத்துங்காலும், இது மூளையை வலி குறைத்து அப்பயனைத் தருதலானுந், தீனிப்பையைக் கெடுத்து இரத்தத்தை நஞ்சாக்குதலானுங், குளிர் நோய் குளிர் காய்ச் சலை நீக்குதற்கு உள்அருந்த ஓமத்தண்ணீரும் வெளியே ஒற்றச் சூடேற்றிய சாம்பல் ஒற்றடமும் இருத்தலானும், இம் மருந்தொடு மலக்குடரைக் கழுவி மெல்லிய உணவு கொடுக்கவே தூக்கந் தானே வருமாக லானும் இவற்றின் பொருட்டு இந்நஞ்சைக் குடித்தல் எவ்வாற்றானும் ஆகாதென்க.

சாராயம் மூளையைக் கெடுப்பது எவ்வாறெனில், அருந்தியவுடனே அது மூளையிலேறித் தீங்கு விளைத்தலைச் சிறந்த ஓர் ஆங்கில மருத்துவர் பலபடியாலும் நன்காராய்ந்து கண்டிருக்கின்றார். அவர், ஒருமுறை இரண்டுபலஞ் சாராய நஞ்சை நல்ல ஒரு நாய்க்கு அருத்த அது தடியால் தலையடியுண்டது போல் உடனே செத்துப் போயிற்று. அவர் அதன்பின் ஒரு நொடிப் பொழுதுந் தாழாமல் அதன் மூளையை அகற்றி ஓர் ஏனத்தில் வைத்துச் காய்ச்சி வடிக்கவே அதிலிருந்து அச் சாராய நஞ்சின் பெரும்பகுதி இறங்கிற்று. இங்ஙனமே, இன்னுஞ் சில நாய்களுக்கும் அவர் அச்சாராய நஞ்சைக் கொடுத்து அவை செத்தபின் அவற்றின் மூளை, செந்நீர், பித்து, ஈரல் முதலான உடம்பின் உறுப்புகளை யெல்லாந் தனித்தனியே பிரித்தெடுத்துக் காய்ச்சி வடிக்க, மற்றவைகளை விட மூளையிலேயே அந்நஞ்சு மிகுந்து இறக்கக் கண்டார். இங்ஙனமே இவர் செய்த ஆராய்ச்சி களிலிருந்து சாராயமானது குடித்தவுடனே இரத்தத்திற் கலந்து மூளைக்குச் சென்று அதனைக் கெடுக்கும் உண்மை தெளியப்பட்டது.

இனிச், செரிமானமாகாத வலிய உணவுப் பொருள் களைச் செரிக்கச் செய்தற்காகச் சாராயங் குடிக்கின்றோம் என்றாலும் பொருந்தாது. செரிமானமென்பது யாதென்றால், உண்ட உணவுப் பொருள் பல கூறுகளாகப் பிரிந்து செந்நீரிற் கலத்தலேயாம் உண்ட பொருள் அவ்வாறு பிரியாமல் அப்படியே யிருக்குமானால் அது செரிமானமாகவில்லை யென்று சொல்லப்படும். ஒரு பொருள் பிரிவுபடாமல் முழுமை யாயிருக்க வேண்டுமானால் அதனைச் சாராயத்தில் இட்டு வைக்கின்றார்கள். ஒரு பழத்தையாவது அல்லதொரு மீனை யாவது அல்லதோர் இறைச்சித் துண்டத்தையாவது ஒரு குப்பிச் சாராயத்தில் இட்டு வைத்தால் அது பல பகுதிகளாகப் பிரிந்து கெட்டுப் போகாமல் அப்படியே முழுமை யாயிருக்கும். அதுபோலவே, சாராயத்தொடு சேர்த்து தீனிப் பையிலிருக்கும் உணவுப் பொருளும் அப்படியே முழுமை யாயிருக்கும் அல்லாமல் அது பல பகுதிகளாகப் பிரிந்து, இரத்தத்திற் கலக்கமாட்டாது கலவாதாகவே, உண்ட வுணவு செரியாமல் நோயை வருவிக்கும் இதனையும் ஆங்கில மருத்துவர் பல முறையும் ஆராய்ந்து பார்த்து உறுதிப்படுத்தி யிருக்கின்றனர். ஆகையால், ஒருவகையிலும் பயன்படாமல், உடம்பையும் உயிரின் அறிவையும் பாழாக்குதற்கு மட்டும் முன் நிற்குஞ் சாராயத்தைக் குடித்தலினும் வேறு நிரயத் துன்பம் இல்லாமையால் அதனை எவருங் கனவினும் நினைத்தலாகாது.

இதுகாறுங் கூறியவையெல்லாம் பொருத்தமேயென் றாலும் நமதுடம்பிலுள்ள உறுப்புகளை வலிவேற்றி வளர்ப்பதற்குரிய முதலுணாவிலுள்ள கரு இறைச்சியில் மிகுந்திருத்தலால் அதனை ஆகாதென விலக்குதல் உடம்பின் நலம்பேணுதற்கு இசையாதாய் முடியுமேயெனின்; அறியாது கூறினாய், முதலுணாவின் கரு இறைச்சியில் மட்டுமே இருப்பதன்று; கோதுமை, வாற்கோதுமை, அவரை, சீமையவரை, பட்டாணி, சீமைப்பட்டாணி, வேர்க்கடலை, பாற்கட்டி முதலிய சைவ உணவுப் பொருள்களிலும் முதலுணாவின் கரு மிகுந்திருக்கின்றதென இயற்கைப் பொருணூலார் நன்காராய்ந்து கணக்கிட்டிருக்கின்றார்கள். யாங்ஙன மெனிற், காட்டுதும்; ஆட்டிறைச்சியிலும், மீனிலும் நூற்றுக்குப் பதினெட்டுப்பங்கும், முட்டையின் வெள்ளைக் கருவில் இருபது பங்கும், மஞ்சட்கருவிற் பதினாறு பங்கும், மாட்டிறைச்சியிற் பத்தொன்பது பங்கும், பன்றியிறைச்சியில் ஒன்பது பங்கும் முதலுணாவின் கரு அமைந்திருப்பச் சைவ உணவுப் பொருள்களான முழுப்பாற் கட்டியில் நூற்றுக்கு முப்பத்தொரு பங்கும், அவரையில் முப்பது பங்கும் பச்சைப் பட்டாணியில் இருப்பத்தைந்து பங்கும், கோதுமையில் இருபத்திரண்டு பங்கும், வேர்க்கடலையில் இருபத்து நான்கு பங்கும், அம் முதலுணாவின் கரு இறைச்சியினும் பார்க்க மிகுந்திருத்தலால், இவற்றைச் செரிக்கும் அளவாக உண்பவர்க்கு உடம்பின் உறுப்புகள் மிக்க வலிவுடன் வளருமென்பது சொல்லாமலே பெறப்படும். இங்கு முதன்மையான மற்றொன்றும் கருதற்பாலது. உடம்பினுட் கொழுப்பினை வளர்த்தற்கும், உடம்பினுள் உயிர்வாழ்தற்கு இன்றியமையாத சூட்டினைப் பிறப்பித்தற்கும் வேண்டப் படும் இனிப்புணாவின் கரு சைவ உணவுப் பொருள்களில் இருக்கின்றனவேயல்லாமல், ஊன் உணவு எதிலும் இல்லை யென்று இயற்கைப் பெருணூலார் ஆராய்ந்து விளக்கி யிருக்கின்றமையின், ஊனுணவையே மிகுதியாய் உண்பவர்கள் நீண்டநாள் உயிர் பிழைத்திராரென்பதும், உயிரோடிருக்குஞ் சில நாட்களும் நோய் கொண்டு துன்புறுவா ரென்பதுந் திண்ணமாமென்க. மற்றுயாம் மெலெடுத்துக் காட்டிய சைவ உணவுப் பொருள்களில் மட்டுமே உடம்பினுள் உறுப்புகள் எல்லா வற்றையுஞ் செவ்வையாக வளர்க்கும். எல்லாக் கருப்பொருள் களும் இனிதமைந்திருத்தலால் அவற்றை உண்பவர்களே நீண்ட நாள் நன்கு உயிர்வாழ்வரென்க.

இனிச் சைவ உணவுப் பொருள்களிலும் நச்சுநீர் இல்லாதனவும், உடம்பினுறுப்புக ளெல்லாவற்றையுஞ் செவ்வனே வளர்க்குங் கூறுகள் எல்லாம் அமைந்தனவும் யாவையெனிற் கூறுதும்: வாதுமை முந்திரி கடுக்காய் தேங்காய் முதலியவற்றின் பருப்புகளும், நாரத்தை எலுமிச்சை வாழை மா பலா இலந்தை பேரீந்து அத்தி முதலியவற்றின் பழங்களும், கோதுமை வாற்கோதுமை அரிசி பால் பாற்கட்டி நெய் முதலியனவும், பசலை தூதுளை பொன்னாங்காணி இலைக்கோசு முதலான கீரைகளும் கத்திரி வாழை மா பலா முருங்கை முதலியவற்றின் காய்களும் உருளை கருணை கொட்டி முதலான கிழங்குகளும், சர்க்கரை கற்கண்டு வெல்லம் முதலியனவும் ஆம். அவரை துவரை உழுந்து முதலியவற்றில் வலிவான கூறு மிகுதியாயிருந்தாலும் அவற்றில் நச்சு நீருஞ் சிறிது கலந்திருத்தலால், அவற்றை யுண்ணும் நாட்களில் அவற்றொடுகூட உருளைக்கிழங்கும் எலுமிச்சையுஞ் சேர்த்துண்ணல் வேண்டும். உருளைக்கிழங்கு எலுமிச்சம் பழச்சாறு கீரைகள் என்னும் இவற்றில் நச்சுநீரைச் செந்நீரிலினின்றும் பிரித்து வெளிப்படுத்துங் கருக்கள் அமைந்திருக்கின்றனவென்று இயற்கைப் பொருணூலார் ஆராய்ந்து கண்டிருக்கின்றார்கள். இங்ஙனம் மாறுபாடில்லாத வுண்டி மறுத்துண் பவர்களின் உயிர்க்கு ஊறுபாடில்லை என்பதனைக் கடைப்பிடித்துணர்ந்து கொள்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!