
பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
மறைமலையடிகள்
4. சமயங்களும் கொல்லாமை புலால் உண்ணாமையும்
சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உணவாக அருந்துவது தீவினையாகாதென்றும், ஆகவே ஊனுணவு கொள்பவர்கள் அதனை நீக்குவது வேண்டப்படாதென்றும் விரித்துத் தமக்குத் தோன்றிய ஏதுக்களை ஒருவர் எடுத்துக் காட்டினார். இவரைப் போலவே இங்ஙனம் கூறுவார் இன்னும் சிலர் ஆங்காங்கு உளராதலின், அவர்கள் கூறுவனவற்றை ஆராய்ந்து முடிவு கட்ட வேண்டுவது இன்றியமையாததா யிருக்கின்றது. உலகின்கண்ணுள்ள எந்த மதத்தவரும் ஊனுணவு கொள்வதை மறுப்பதில்லையென்று சொல்லுகின்றார். பண்டைக் காலந்தொட்டுச் சைவ சமயத்தவர்கள் எந்த உயிரையுங் கொல்லுதல் ஆகாதென்றும், கொன்று அதன் ஊனை உண்ணுதல் தீவினையாமென்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்குக் கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங் கோள்களவு கல்லாமல் என்னும் பட்டினத்தடிகள் திருமொழியும், கொல்லா விரதம் ஒன்று கொண்டாரே நல்லோர் என்னும் தாயுமான அடிகள் திருமொழியுமே யாவரும் அறிந்த சான்றாகும். இனித் தேவார திருவாசகங்கள், திருமந்திரம் முதலான சைவத் திருமுறைகளிலும், சைவ சித்தாந்த நூல்களிலும் கொல்லாமை புலாலுண்ணாமை ஆகிய அறங்களை நன்கு எடுத்து அறிவுறுத்தும் திருமொழிகள் அளவில்லாதன. அவற்றை விரிப்பிற் பெருகும். சைவ சமயத்தின்கட் சொல்லப்பட்டவாறே அதனைப் பின்பற்றி ஒழுகும் சைவ வேளாளரும், பார்ப்பனரும் பண்டைக் காலந்தொட்டுக் கொலையும் புலையும் நீக்கி ஒழுகி வருகின்றனர்.
இனி, மிகப் பழைய காலத்ததாகிய சொராடரது சமயத்தின் கண்ணும் ஆடு, மாடு, குதிரை, கோழி முதலியவற்றைக் கொல்வது பெருந் தீவினையாகச் சொல்லப்பட்டிருப்பதைப் பாரசீகரது அவதா என்னும் பண்டை நூலிற் போந்த வேண்டுகோள் ஒன்றால் நன்கு விளங்கும்.
இனிப், புத்த சமயத்திற்கும் முற்பட்டதாகிய சமண சமயமானது கொல்லாமை, புலாலுண்ணாமை என்னும் அறத்தின்கண் தலைசிறந்து நின்று வருதலும் எல்லாரும் நன்கு உணர்ந்ததேயாம்.
புத்த சமயத்தை ஆக்கிய கௌதமசாக்கியர் நிருவாணம் அடைதற் குரிய எட்டு முறைகளுள், தீங்கற்ற உணவு கொள்ளுதலை ஒன்றாக வகுத்துக் கூறியிருக்கின்றார். மேலும், அவர் உயிர்க்கொலைக்கு உலகமெல்லாம் நடுங்குகின்றது: மக்களெல்லாரும் கரவினைக் கண்டு நடுங்குகின்றனர்; உன்னிடத்திற் பிற உயிர்கள் எங்ஙனம் நடந்து கொள்ள வேண்டுமென்று நீ விரும்புகின்றனையோ, அங்ஙனமே நீயும் அவைகளிடத்தில் நடந்து கொள்ளல் வேண்டும்; உயிர்க்கொலை செய்யாதே; எதனையும் சாவப்பண்ணாதே என்று அறிவுறுத்திய அறமொழியும் பௌத்தசமய நூல்களிற் காணப்படுகின்றது. ஆதலாற், புத்தர், கொல்லாமை, புலா லுண்ணாமை என்னும் அறத்திற்றலை நின்றவராகக் காணப்படுகின்றனர். அங்ஙனமாயின், சந்தன் என்னுந் தட்டான் ஒருவன், சோற்றோடு கலந்து கொடுத்த பன்றி இறைச்சியைப் புத்தர் உணவாகக் கொண்டது என்னை யெனின், உலக நன்மையினையே எந்நேரமுங் கருதிக் கொண்டிருந்த அவர் சோற்றிற் கலந்து கொடுத்த பன்றி இறைச்சியைத் தெரிந்து கொள்ளாமல் உண்டாரென்று கொள்வதே பொருத்தமுடைத்து. அதற்குமுன் பன்றி இறைச்சி முதலிய ஊனுணவு உண்டு பழக்கப் பட்டிருந்தவராயின், அவன் தந்த அவ் விறைச்சியை உண்டதனால் இறந்திருக்கமாட்டார். அவர் ஊனுணவு கொள்ளாதவராய் நெடுக உயிர்வாழ்ந்து வந்தமையால், அவன்கொடுத்த பன்றியிறைச்சியையுண்டு செரியாமையால், உண்ட அன்றைக்கே உயிர் துறந்தார். அங்ஙனமாயின், அவர் ஊனுணவு கொள்ளாதவர் என்பதை அறிந்திருந்தும், அத் தட்டான் அவர்க்கு உணவு கொடுத்தது என்னையெனின், அவன் கல்வியறிவு இல்லாத வனாய் அன்பில்மட்டும் சிறந்தானாதல் வேண்டும். மேலும் அவன் இழிகுலத்தானாகலின், அவர் வடநாட்டில் அறிவுறுத்திவந்த அறமொழிகளை அறியானாய் அவரது பெருமையை மட்டும் பிறர் கூறக்கேட்டு அறிந்தவனாய் அவரை அன்போ டேற்றுத் தானுண்ணும் பன்றி இறைச்சியை அவர்க்குங் கொடுத்தானாகல் வேண்டும். அல்லது, அவ்விறைச்சியைச் சோற்றில் மறைத்துக் கலந்துகொடுத்தான் என்பதனால், அவர் ஊன் உண்ணார் என்பதைத் தெரிந்தே தானுண்ணும் ஊனுணவைச் சிறந்ததாகக் கருதி, அவர்க்கும் அதனை ஊட்டுதல் வேண்டுமென அன்பு மேலீட்டினாற் சோற்றின்கண் வைத்து மறைத்துக் கொடுத்தானாகல் வேண்டும். இவன் தந்த இவ்வூனுணவு புத்தரது முடிவிற்கு ஏதுவானமை பற்றி அவர்தம் சீடர்கள் (மாணாக்கர்கள்) அவன் மேற் பெரிதும் வெகுண்டனர் என்பதனைப் புத்தருணர்ந்து, அவர்க்கு ஆறுதல் சொல்லி அத்தட்டானுடைய அன்பையே வியந்துபேசி உயிர்விடுத்தனர். ஆதலாற், புத்தர் கொல்லாமை, புலாலுண்ணாமை என்னும் அறத்திற் றலைநின்றவர் என்பது ஐயுறற்பாலதன்று. மேலும், ஊனுணவு புத்தரது முடிவிற்கு ஏதுவாயிற்று என்பதனால், ஊனுணவு கொள்வதன் தீமையும் இவ்வரலாற்றினால் நன்கு விளங்கா நிற்கும்.
இன்னும் புத்தரையடுத்துத் தோன்றி உலகமெங்கணும் அவர்தம் அறமொழிகளைப் பரவச்செய்து வந்த அசோக மன்னன் தான் செதுக்கிய முதற் கல்வெட்டில், உணவுக்காகவாவது, வேள்வி வேட்கும் பொருட்டாகவாவது எந்த உயிரையுங் கொலைசெய்தல் ஆகாது என்று பொறித்திருத்தலும், எட்டாவது கல்வெட்டில் மூச்சுவிடும் எந்த உயிரையுங் கொலை செய்யப்படுதலினின்றும், பலியிடப்படுதலினின்றும் முற்றும் விலக்குதலால் மட்டுமே சமயமானது வளரும் என்று பொறித்திருத்தலும் புத்தருடைய கொல்லாமை, புலாலுண்ணாமை அறத்தை நன்கு விளக்கிக் காட்டும்.
இனி, யூதர்க்கும் கிறித்துவ சமயத்தவர்க்கும் முதனூலாகிய பைபிலின் முதலாகமத்திற் கடவுள் உலகங்களைத் தோற்றுவித்து மக்கட்கு முதற்றாய் தந்தையரைப் படைத்தபின் அவரை நோக்கி, நிலத்தின் மேலுள்ள வித்துக்களைத் தரும் ஒவ்வொரு பூண்டினையும், வித்துக்களோடு பழத்தையுந் தரும் ஒவ்வொரு மரத்தினையும் யான் உமக்குத் தந்திருக்கின்றேன். அவை உமக்கு உணவாகுக என்று கூறியருளினார் என்பது விளக்கமாகச் சொல்லப்பட்டிருத்தலாற், கடவுளால் முதன் முதல் மக்களுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டவை புற், பூண்டு, மரம், செடி, கொடிகளின் பயன்களேயாமென்பது இனிது பெறப்படுகின்றது. மேலும், ஐசாய என்னும் ஆகமத்தில் உயிர்களைக் கொன்று பலியிடுவோரை விளித்து, நீங்கள் என்னை நோக்கிச் செய்யும் வேள்விகள் எதன் பொருட்டு? நன்றாய் வளர்க்கப்பட்ட விலங்குகளின் கொழுப்பையும், செம்மாறியாடுகளைப் பொரித்த அவி உணவையும் எனக்கு நிறையக் கொடுத்தீர்கள்; ஆனால் எருதுகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்தில் யான் மகிழ்ச்சி யடையமாட்டேன். என்னெதிரில் நீங்கள் வரும்போது எனது மன்றத்தை மிதிப்பதற்கு யார் இவைகளை உம்மிடம் பெறவிரும்பினார்? என்று சொன்னமை நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. மேலும், கடவுள் முதற் றாய்தந்தையர்க்குத் தந்த பத்துக் கட்டளைகளுள் நீ எதனையும் கொல்லாதே என்பது முதற்கட்டளையாகக் காணப்படுகிறது.
இனிக் கிறித்துவக் கொள்கையை நிலை நிறுத்திய ஏசுநாதரும் அவர் மாணாக்கர்களும் ஊனுணவு கொள்ளாதவர்களென்பது அவர்களைப் பற்றிக் கூறும் வரலாறுகளால் நன்கு விளங்கும். ஏசுநாதர் நாற்பது நாள் பட்டினி கிடந்து தவம் புரிந்தார் என்பதை கிறித்துவக் கொள்கை நூல்கள் கூறுகின்றன. அவருடைய மாணாக்கர்களில் ஒருவராகிய மத்தேயு என்பார் வித்துக்கள், கொட்டைகள், காய்கள் முதலியவற்றையே உண்டாரல்லது ஊனுணவு உண்டிலர் என கிலெமென் என்பவர் எழுதியிருக்கின்றார். கிறித்துவரின் திருக்கோயிலுக்கு முதற்றலைவராகிய ஜேம் முனிவர் எந்தக் காலத்தும் ஊனுண்டதே இல்லை என்று ஈஜிசிப்ப என்னும் சரித்திர (வரலாற்று)க் காரரும், ஆகடின் முனிவரரும் கூறுகின்றனர். இங்ஙனம் ஏசுநாதர் தம் மாணாக்கர்களே ஊனுணவு கொள்ளாதவர்களாய் இருந்தது தம் ஆசிரியர் அவ்வருள் ஒழுக்கத்தில் மிக்கவராய் இருந்தமை பற்றியேயாம். அற்றேல், ஏசுநாதர் தம்மிடம் வந்திருந்த குடிமக்கள் பசியால் வருந்தியது கண்டு அவர்கட்கு மீனையும் அப்பத்துண்டுகளையும் வாழ்த்திக் கொடுத்தாரென்று கூறுவதெனையெனின், அக்காலத்திலிருந்த யூதர்களில், அறிவிற்சிறந்த சிலரைத் தவிர, மற்றைப் பொது மக்களெல்லாரும் ஊனுணவு கொண்டு உயிர்வாழ்ந்தவர் களேயாவர். நாளேற நாளேற அவ் யூதமக்கள் உயிர்க் கொலையிலும், அதன்வழியே வரும் பல தீவினைகளிலும் பெருகிவந்தமையின், அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தும் பொருட்டே ஏசு இறைவனருளால் அவர்களிடையே பிறந் தருளினார். அவர்களிடையிற் பிறந்து வளர்ந்த அவர் முதலில் தம்மைத் தூயராக்குதல் வேண்டியே நாற்பது நாள் பட்டினி கிடந்து தவம் செய்தார். அத்தவம் முற்றுப் பெற்றபின், அவர் அவ்யூத மக்கட்கு நல்லறிவு புகட்ட முன்வந்தார். வந்தவர் அவர்களுடைய பழக்க வழக்கங்கட்கு முற்றும் மாறாய் நின்று, அவர்கட்குக் கொல்லாமை முதலிய உயர்ந்த ஒழுக்கங்களைக் கூறப் புகுந்திருந்தால், அவர் சொற்களை எவருஞ் செவி கொடுத்துக் கேட்டிரார். பாகனுக் கடங்காது கடிவாளத்தை யறுத்துக் கொண்டு சடுதியில் விரைந்தோடும் ஒரு குதிரையை அந்நேரத்தில் உடனே பிடித்து அடக்கப் புகுந்தால் அது சிறிதுங் கைகூடாது. பின் அது விரைந்தோடும் வழியே விடுத்து அது தன் மும்முரம் அடங்கி ஓய்ந்த பின் அதனைப் பிடித்து அடக்கிக் கொள்ளுதல் எளிது. அது போலவே, ஊனுண்டு கொடிய விலங்குகளைப் போல் உயிர் வாழ்ந்த அவ் யூதர்களின் பழக்க வழக்கங்களுக்கு இயைந்து நிற்பவரைப் போற் காட்டி அவர்களைத் திருத்துவதே ஏசுவின் திருவுள்ளக் கருத்து. ஆதலால் தமது நல்லுரை கேட்க வந்த அவ்யூதர்க்கு அவர்கள் பட்டினியா யிருத்தல் உணர்ந்து அப்பத்துண்டுகளையும் மீன்துண்டுகளையும் உணவாகக் கொடுத்தருளினார். இங்ஙனங் கொடுத்தவிடத்தும் மாடு, ஆடு, கோழி முதலான உயர்ந்த உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனைக் கொடாமல் அவைகளுள்ளும் தாழ்ந்த படியில் உள்ள மீன் இறைச்சியையே கொடுத்தார். ஐயறிவுடைய சிற்றுயிர்களிலும் ஆடு, மாடு, குதிரை, பன்றி, கோழி முதலியவற்றைக் கொல்லும் தீவினையைவிட மீன்களை வலைவீசிப் பிடிக்கும் தீவினை குறைந்ததாகலின் அவர்களுடைய வழக்கங் களுள் தீவினை குறைந்த அதற்கு ஒருவாறு ஒத்து நடப்பாராயினர். கைக்கும் மருந்துண்ணாத குழவிக்கு இரக்கமுடைய அன்னை கருப்பங்கட்டியில் அம் மருந்தைப் பொதிந்து வைத்து ஊட்டி அதன்நோய் தீர்த்தல்போல, இயேசுவும் தம் அறவுரைகளாகிய மருந்தை யுட்கொள்ள மாட்டாத யூதர்க்கு அவர்க்கு இனிக்கும் அவர்தம் வழக்கங்களாகிய சிலவற்றுடன் சேர்த்துக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துவாராயினர். மேலும், தமக்கு நன்மாணாக்கரைத் தேர்ந்தெடுக்கையில் அவர்களை மீன்பிடிக்கும் செம்படவர் குடியினின்றும் எடுத்தது என்னை யென்று ஆழ்ந்து ஆராய்ந்தால், கொல்லாமை யறத்தில் நின்ற அவர் திருவுள்ளக் கருத்து நன்கு புலனாம். மீன்பிடிக்கும் ஒருவனை அத் தொழிலினின்றும் நீக்கி நல்வழிப்படுத்தினால், எத்தனையோ மீன்கள் உயிர்பிழைக்கும்! அம் மீன்களைத் தின்று உயிர்வாழும் எத்தனையோ மக்கள் அத்தீவினையினின்று விலகிப் பிழைப்பர். இது பற்றியே, இக்காலத்திருந்த இராமலிங்க சுவாமிகளும் செம்படவர் பலரையும் ஊன்விற்பார் பலரையும் சைவராக் கினார்.
மேலும், ஊன்விருப்புடையார்க்குப் பட்டினி கிடந்து உடம்பை வாட்டித் தவம் புரியும் மன ஒருமைப்பாடு உண்டாகாது. அதுபற்றியே ஔவையார் நோன்பென்பது கொன்று தின்னாமை என்றும்,
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது
ஒன்றன்உடல்சுவை யுண்டார் மனம்
(குறள் 253)
என்று திருவள்ளுவனாரும் அருளிச் செய்திருக்கின்றனர். ஊனுணவினால் உடம்பு அளவுக்கு மிஞ்சிக் கொழுப்பேறி நோயை வருவித்தலோடு ஐம்பொறிகளை அடக்கித் தவம்புரிதற்கும் இடையூறு பயக்கும். ஆகவே, தவம்புரிவா ரெல்லாரும் ஊனுணவை அறவே ஒழித்தவராக இருத்தல் வேண்டுமென்பது திண்ணம். ஏசுநாதர் சிறுவராயிருந்த போது தம் தாய் தந்தையரால் ஊனுணவு ஊட்டப்பட்டவரா யிருக்கலாம். அங்ஙனம் ஊனுணவு உண்டு வளர்ந்த தமதுடம்பு தவவொழுக்கத்திற் கிசையாது என்று கண்டே அவ்வுணவால் வந்த நச்சுநீரையும், மிகு கொழுப்பையும் புறங்கழித்தற் பொருட்டு அவர் நாற்பது நாள் பட்டினிகிடந்து நோன்பியற்றினார். அங்ஙனம் நோன்பியற்றிய பின்னர்த் தம் வாழ்நாள் முடியுமட்டும் அவர் எங்கும் ஊனுணவு கொண்டிலர். அவர் வரலாற்றினைக் கூறும் நூல்களும் அவர் ஊனுண்டாரெனக் கூறுகின்றில.
இனிக் கிரேக்கருட் பழையகாலத்தில் அறிவான் மிக்க சான்றோராகிய பித்தாகொர என்பவரும், பிளேட்டோ என்பவரும் ஊனுண்ணா அறத்தின்கண் நின்றதோடு பிறரும் அங்ஙனமே அதனைக் கடைப்பிடித்தொழுகும்படி அறிவுறுத்தி வந்தனர்.
இனி, உனுணவு கொள்வார்க்கு நுண்ணுணர்வும் பேரறிவும் இல்லாமற் போவதோடு உடம்பும் பொலிவிழந்து போகின்ற தென்பதைப் பண்டைக்காலத்திருந்த மேன்மக்கள் சிலர் உணர்ந்திருந்தன ரென்பது கிறித்துவர் மறையாகிய விவிலிய நூலில், தானியேல் என்னும் மறையிற் சொல்லப்பட்டிருத்தல் கொண்டு நன்கறிகின்றோம். தானியேல் என்னும் பெரியவரும், அவரைச் சார்ந்த சிலரும் தம்மை வருவித்த ஓர் அரசன் தந்த ஊனுணவையும், கொடிமுந்திரிச் சாற்றையும் உட்கொண்டு தம்மை மாசுபடுத்திக் கொள்வதற்கு இசையாராய்த் தாமுண்ணு தற்கு வித்துக்களையும், பருகுதற்குத் தூய தண்ணீரையுமே தரும்படி கேட்டனரென்றும், அதுகண்ட அவ் அரசனின் ஏவலாட்கள் அரசன் கட்டளைக்கு மாறாக அங்ஙனங் கொடுப்பின், அவர்கள் உடம்பு இளைத்து முகம் வாடிப் போவார்களென்று அஞ்சி வருந்தி நிற்க, அதனையுணர்ந்த அப் பெரியவர், எமக்கு வித்துணவும், அரசனைச் சேர்ந்தார்க்கு ஊனுணவுங் கொடுத்துப், பிறகு எம்மையும் அவரையும் ஒப்பிட்டு நோக்குக என்று கூற, அவர்கள் அங்ஙனமே செய்தபிறகு, அப் பெரியவரும் அவரைச் சார்ந்தாரும் பேரறிவும், எல்லாக் கலை உணர்வும் நிரம்பிக் கனவு நிகழ்ச்சிகளையும், மறைபொருட் டோற்றங்களையும் காணும் புலமையைத் திருவருளால் தரப்பெற்றுப் பெரும் பொலிவுடையராய்த் திகழ்ந்தனரென்றும், அவ் வரசன் ஊனுணவு கொள்வாராய்த் தன்னிடத்துள்ள மறைமொழியாளரும் (மந்திரக்காரரும்) கோள் நூலாரும் (சோதிடரும்) ஆகிய எல்லாரினும் பார்க்க அப் பெரியவரும், அவரடியாரும் அறிவாற்றல்களில் பத்து மடங்கு சிறந்தவராய் விளங்குதல் கண்டு வியந்தனன் என்றும் தானியேல் மறைநூலின் முதலியலில் (அதிகாரத்திற்) சொல்லப் பட்டிருக்கின்றது.
இனி, மகமது மதத்தை (கொள்கையை) நிலை நிறுத்திய மகமது முனிவர் அரேபியா நாட்டிற் கடவுளருளால் தோன்றியபோது, அங்கிருந்த மக்களெல்லாரும் மிகக் கொடியவர்களாய்ப் பல விலங்குகளையும், சிற்றுயிர்களையும் கொன்று அவற்றின் ஊனைக் குருதி ஒழுகஒழுகத் தின்னும் இயல்பின ராய்ப் பல பெருந் தீவினைகளைச் செய்து உயிர் வாழ்ந்து வந்தனர். அக் கொடியவர்களை அக் கொலைத் தொழில், புலைத் தொழில்களி னின்றும் விடுவித்தற் பொருட்டு மகமது முனிவர் எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியாமையால், இயன்ற மட்டுமாவது அவர்களவற்றை விடத் தக்கபடி, தானே யிறந்தனவும், பன்றியின் இறைச்சியும், குருதியும், கடவுளல்லாத பிறர்க்கென்று வரைந்து வைக்கப்பட்டனவும், கழுத்து நெரித்துக் கொல்லப் பட்டனவும், மண்டை உடைத்துக் கொல்லப் பட்டனவும், கீழே விழுந்து குத்தப்பட்டனவும், உங்களாற் கொல்லப் படாமல் ஏனை மற விலங்குகளால் தின்னப்பட்டனவும் உங்களால் விலக்கப் படுவனவாகுக என்று கட்டளை தந்தார்.
கடவுளுக்கு என்று ஏற்பியாமல் அவர்கள் ஊனுணவு கொள்ளலாகாதென்று விலக்கினது கடவுளையும், அவர் பேரிரக்கத்தோடு எல்லா உயிர்களுக்கும் உடம்புகளைப் படைத்துக் கொடுத்திருத்தலையும் அவர்கள் கருத்தூன்றி நினைக்க நினைக்க உயிர்களைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்னுங் கொடுஞ் செயலைத் தாமாகவே விட்டுவிடுவர் என்பது கருதியேயாகும். இனிக் கழுத்தை நெரித்தும் மண்டையை யுடைத்துங் கொல்லப்படுவன, வேள்விக் களத்தில் கழுத்து நெரித்துக் கொல்லப்படும் யாட்டையும், மாடடிக்குங் கொட்டில்களிற் சம்மட்டியால் மண்டை யுடைத்துக் கொல்லப்படும் மாட்டையுங் குறிக்கின்றமையால், அங்ஙனம் மிகக் கொடுமையாக அவ் யாடுமாடுகளைக் கொல்லுங் கொலைத் தொழிலினின்றும் மகமதியரை விலக்குதற் பொருட்டாகவே அவ்வாறு கொல்லப்படும் அவற்றின் ஊனைத் தின்னலாகாதென்று மகமது முனிவர் மேற் கூறியவாறு கட்டளையிடுவாராயினர். மேலுங், கொரான் வேதத்தின் இரண்டாம் பாகத்தில் ஐம்பத்தெட்டாவது அறிவுரையானது பின்வருமாறு காணப்படுகின்றது:
அவற்றின் ஊனும் இரத்தமும் எந்த வகையாலுங் கடவுளைச் சென்று சேரமாட்டா. ஆனால், உங்களிடம் உள்ள பேரன்பு மட்டுமே அவரைச் சென்று சாரும்.
இவ்வுரையினாற் சிற்றுயிர்களைக் கொன்று கடவுளுக்கு ஏற்பிக்கும் ஊனுங்குருதியுங் கடவுளால் ஏற்கப்படமாட்டா என்பதூஉம், அவனடியார்கள் உயிர்க் கொலையின்றி மெய்யன்போடு செய்யும் வழிபாடு ஒன்றுமட்டுமே அவரால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதூஉம் இனிது அறிவிக்கப் படுகின்றன அல்லவோ? மேலுங், கொரான் முதற்பாகத்தின்கண் உள்ள எண்பதாம் அறிவுரையானது பின்வருமாறு காணப்படுகின்றது:
அதன்பின் ஆடவன் தன் உணவை நோக்கக் கடவனாக யாம் மழையைப் பொழிவிக்கின்றோம்; அதன்பின் கீறத்தக்க நிலத்தைக் கீறுகின்றோம்; அதன் கண் விளைபொருள்களை விளைவிக்கின்றோம்; அதன் பின் முந்திரிக் கொடியினையுங், குளகினையும், ஒலிவ மரத்தினையும், பேரீந்தினையும், அடர்ந்த தோட்டங்களையும், கனிகளையும், கீரைகளையும் உனக்கும் உன்னுடைய ஆடுமாடுகளுக்கும் உணவுக்காகத் தந்திருக் கின்றோம் என்று இதன்கண் எல்லாம் வல்ல இறைவன் ஆடவனைப் படைத்து, அவனுக்கு உணவாவன இன்னவையென்று வரையறுத்துக் கூறுகின்றுழிப், பயிர்பச்சைகளால் வரும் உணவையே வகுத்துக் காட்டுகின்றனரல்லால், வேறு ஊனுணவைச் சிறிதும் எடுத்துரையாமை கருத்திற் பதிக்கற்பாற்று. இங்ஙனமாக மகமதியர்க்குச் சிறந்த வேதமான கொரானில் மக்களுக்கு இறைவனால் உணவாகக் கொடுக்கப்பட்டவை; மரஞ் செடி கொடிகளின் பயனாகிய பழமும் வித்துங் கீரையும் பூவுங் காயுங்கிழங்குகளுமேயாதல் தெற்றெனப் புலனா கின்றதன்றோ? என்று இதுகாறுங் கூறியவாற்றால் உலகத்தின் கண் தொன்று தொட்டுப் பரவியிருக்கும் யூதம், சைவம், பாரசிகம், சமணம், பௌத்தம், கிறிதுவம், கிரேக்கம், மகமதியம் என்னுஞ் சிறந்த சமயங்களும், அச்சமயங்களை நிலைநாட்டிய சான்றோர் களும், அவர்கள் அருளிச் செய்த வேதங்களும் ஆகிய எல்லாம் ஒத்து ஒருமுகமாய் நின்று கொலைத் தொழிலால் வரும் ஊனுணவை முற்றும் விலக்கிச் சைவ உணவினையே வற்புறுத்திக் கூறுதல் இனிது விளங்கா நிற்கும் என்பது.



