பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
மறைமலையடிகள்

5. சைவ உணவுக்கு மாறான கொள்கைகளின் மறுப்பு

இன்னும் ஒருசாரார், உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை விற்பவர்களுக்கே பாவம் உண்டாம்; அதனை வாங்கி உண்பவர்க்குப் பாவம் இன்று எனக் கூறா நிற்பர். விலைக்கு விற்கும் ஊனை வாங்குவார் எவருமே இலராயின், அதனை விற்பாரும் அதன் பொருட்டு உயிர்களைக் கொல்லாரும் இலராதல் சிறு மகாரும் உணர்வரல்லரோ? இவ்வியல்பினை நன்கு தெளிய வைத்தற்கே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

(குறள் 256)

என்று அருளிச் செய்தார் என்க.

இனி, மக்களின் பற்களமைப்பு ஊன் உணவு கொள்ளுதற்கு ஏற்றதாக இருத்தலால், அவர்கள் ஊன் தின்பது குற்றமாகா தென்பார் கொள்கையினை ஆராய்வாம்; முன் பற்களின் ஓரமாய் இருபுறத்தும் மக்கள் வாயில் அமைந்துள்ள நான்கு நாய்ப்பற்களுங் கூரியனவாய் இருத்தலால், அவை ஊனைக் கிழித்துத் தின்பதற்குத்தான் கருவியாக அமைக்கப்பட்டன வென்பது அவரது கருத்து. ஊனையே தின்று உயிர் வாழும் நாய் பூனை ஓநாய் புலி சிங்கம் முதலிய விலங்குகளின் பற்களெல்லாம் முற்றுங் கூர்மையாய் இருக்க, மக்களுக்கு மட்டும் நான்கு கூர்ம் பற்கள் இருத்தல் ஏன் என்று அவர் ஆராய்ந்து பார்ப்பாராயின், அவை சைவ உணவுப் பண்டங்களிலேயே, முந்திரிக் கொட்டை வாதுமைக் கொட்டை தேங்காய் முதலான வன்பொருள்கள் இருத்தலின், அவற்றைக் கடித்து நறுக்கித் தின்பதற்குக் கருவிகளாகவே அந்நான்கு கூரிய நாய்ப் பற்களும் மக்கள் வாயினுள் அமைக்கப்படலாயின என்னும் உண்மை விளங்கா நிற்கும். மக்கள் ஊனுணவு கொள்ளுதற்கே பிறந்தவர்களாயின், அவர்களின் வாயில் தட்டைப்பற்களே இல்லாமல் எல்லாம் நாய்ப்பற்களாகவே யல்லவோ அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்? பெரும்பாலும் மக்கள் வடிவினை யொத்திருக்கும் வாலில்லாக் குரங்குகளும், பெருங் குரங்குகளுங், காட்டு மனிதனுங் கூட மக்களுக்குள்ள தட்டைப்பற்களும் ஓரத்திலுள்ள நான்கு நாய்ப்பற்களும் உடையன வாயிருந்தும், அவை ஒரு சிறிதும் இறைச்சி தின்னாமற் காய் கனி கிழங்குகள் கொட்டைகள் முதலான சைவ உணவுப் பண்டங்களையே தின்னக் காண் கின்றோம். ஆகவே, மக்களுக்குள்ள கூரிய நாய்ப்பற்கள் நான்கும், மரக்கறியுணவிலேயே வன்பண்டங்களாய் இருப்பவைகளைக் கடித்துப் பிளந்து தின்பதற்காக வகுத்து அமைக்கப்பட்டனவே யல்லாமல், மற்றைச் சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் தசையை உண்பதற்காக அமைக்கப்பட்டன அல்லவென்பது நன்கு புலனாகின்றதன்றோ?

மேலும் மரக்கறியுணவை உட்கொள்கின்றவர்களுக்குப் பற்கள் சிறிதும் பழுதுபடாமல் வெண்மையாய் அழகுற்று விளங்க, ஊன்தின்பவர்களுக்குள்ள பற்களோ பல்வகை நோய்கள் கொண்டு அவர்தம் பற்களைப் பழுதுபடுத்தக் காண்கின்றோ மாகலின், மக்களின் பல்லமைப்புப் புலால் தின்பதற்குச் சிறிதும் ஏற்றதன்றென்பது நன்கு உணரப்படும். அங்ஙனமாயின், சைவராயிருப் பாரிலும் பலர் பல்நோயால் துன்புறக் காண்கின் றோமேயெனின்; மரக்கறி யுணவுப் பொருள்களிலும் நஞ்சு உள்ள காப்பிக் கொட்டை தேயிலை கோக்கோ சுண்ணாம்பு புகையிலை முதலியவைகளைச் சைவரும் பார்ப்பனரும் மிகுதியாய் உட்கொள்ளக் காண்டலானும், மட்பாண்டங்களில் உணவு சமைத்தல் இழிவெனக் கருதித் துரு களிம்பு முதலான கொடுநஞ்சு வாய்ந்த இரும்பு ஈயம் செம்பு பித்தளை அலுமீனியம் முதலான தாதுப் பொருள்களால் ஆக்கிய கலங்களில் அவர்கள் தமது சைவவுணவைச் சமைத்து அதனை நஞ்சாக்க காண்டலானும், நோய் கொண்ட மாதரின் சேர்கையாற் கொறுக்கு, கை காற் பிடிப்பு முதலான நச்சுப்பிணிகளாற் பற்றப்பட்டு அவர்கள் இரத்தம் நஞ்சாகித் துன்புறக் காண்டலானும் சைவரிற் சிலர் பலரும் பார்ப்பாரிற் சிலர் பலரும் அவ்வாறு பல்நோய் கொள்கின்றாரென்க. எனவே, பல்நோய் வருவித்தற்குரிய ஏதுக்கள் பலவற்றிற், புலால் உண்பது முதன்மைபெற்ற தொன்றாகும் என்று உணர்ந்து கொள்க. ஐரோப்பிய நாட்டிலுள்ள வெள்ளைக் காரர் பெரும்பாலும் புலாலுணவு கொள்பவர்களாய் இருத்தலினாலேயே, அம்மக்களெல்லாரும் பல்நோயாற் பெரிதுந் துன்புறுகின்றார்கள். அந்நாட்டிற் பல்நோய் பரவி யிருத்தல் போல் இந்நாட்டில் அந்நோய் பரவாமை, இங்குள்ளார் பெரும்பாலும் மரக்கறியுணவு உட்கொள்பவர்களாய் இருத்தலினாலேயாம் என்க.

மேலும், புகழ்பெற்ற மருத்து நூலாசிரியராகிய ஹேக் (Dr.A. Haig) என்பவர் சிவிங்கிப்புலி, வாலில்லாக் குரங்குகளின் வாயிலும் மக்கள் வாயிலும் அமைந்த பற்களைத் தனித்தனியே மெழுகிற் பதியவைத்து ஒப்பிட்டு நோக்க, ஊன்தின்னும் புலியின் பற்கள் கூர்ங் கத்தியின் முனை போன்ற பதிவும், பழந்தின்னுங் குரங்குகள் மக்களின் பற்கள் கூர்மையின்றி ஒத்த பதிவும் உடையனவாய் வேறுபட்டிருத்தலைக் கண்டார். அதுவேயுமன்றி ஊனுணவு கொள்ளாத விலங்குகட்குக் கால்களிற் குளம்புகள் இருப்ப, ஊனுணவு கொள்பவற்றிற்கோ அவற்றிற் கூரிய நகங்கள் அமைந்திருக்கின்றன. மக்களுக்கோ கூரிய நகங்களுங் கூரிய பற்களும் இல்லாமை கருத்திற் பதிக்கற் பாற்று. 1குவியர் (Cuvier) என்னும் ஆசிரியரைத் தலைவராய்க் கொண்ட மருத்து நூலறிஞர் அத்தனை பெயருந்தாந்தாம் ஆராய்ந்தறிந்த ஆராய்ச்சிகளின் முடிபாக, ஒத்து ஒருமுகமாய் நின்று, மக்களுடம்பின் அமைப்பானது – பல்லமைப்பும் உட்படப் பழவகைகளை உணவாகக் கொள்வதற்கு ஏற்றதாவது திண்ணம் என்று உரை நாட்டுகின்றார் என மருத்துநூற் பெரும் புலவரான ட்ரால் என்பவரும் எடுத்துக் கூறினார்.

இங்ஙனங் காய்கறியுணவு கொள்ளவேண்டிய மக்கள், அதனைவிடுத்து, நச்சுநீரும், நாறுங்கழிவுகளும், நோய்களும், அழுக்குகளும், அழுகலும் நிறைந்த எல்லா வகையான இறைச்சிகளையுந் தின்கின்றனர். இவ்வாறு தின்பதனால் அவர்களுடைய உடம்பு நாறி நலங்குலைய உடம்பின் உள்ளே அமைந்த இரத்தக்குழாய்கள் அவ் அழுகற்சாறுகளால் அடை பட்டுப் போக, உடனே அவர்கள் வயிறு குமட்டிக் கக்கியுந் துப்பியும் சளிகளை உமிழ்ந்துங், கடுங்காய்ச்சலும், வீக்கமும் வயிற்றுவலியும் நரம்பு வலிப்புங் கொண்டுந் துன்புற்றுத் துடிதுடிக்கின்றனர். ஆனால், இவ்வாறு துன்புறலானது எதனால் என்றறியாமல் திகைத்து, உடனே மருத்துவரைத் தம்பால் வருவிக்கின்றனர். அம் மருத்துவரும் இஃது எதனால் வந்ததென்ற றியாமல் அவருந் திகைக்கின்றனர். மற்று, உண்மை யுணர்ந்தவர்களோ இவ்வளவு துன்பமும் ஊன் உண்டமையால் வந்ததென்பதனை நன்குணர்வர். காய்கறிப் பண்டங்களைத் துகளாக அரைத்துக் கொடுக்குந் தட்டைப் பற்கள் வாய்ந்த மக்கள், அக் கனிகாய் கிழங்குகள் வித்துக்களையே உட்கொள்வார்களாயின், அவை அப்பற்களால் நன்றாய் அரைக்கப்பட்டுத் தீனிப் பையிற் சென்றவுடனே எளிதிற் செரித்து, இரத்தத்திற் கலந்து உடம்பை நல்லநிலையில் வைக்கும்; மற்று அவ்வியற்கைக்கு மாறாகப் பல்வகை இறைச்சிகளையுந் தின்பராயின், அவர்தம் பற்கள் அவற்றைச் செவ்வனே கிழித்து நீர்ப்பதமாக்க மாட்டாமையின், அவ்விறைச்சி சிறு சிறு துண்டுகளாக வயிற்றினுட் சென்று செரிமானமாகாமல் நின்று மேற்கூரிய கொடு நோய்களை யெல்லாம் வருவிக்கின்றனவென்று மேற்காட்டிய ட்ரால் என்னும் ஆசிரியரே இவ்வுண்மை நிகழ்ச்சிகளை நன்கெடுத்து விளக்கினார். ஆகவே, மக்களின் பல்லமைப்புச் சைவவுணவு கொள்ளுதற்கே ஏற்றதென்பது தெற்றென விளங்கும். இவ்வுண்மையினை மேல்நாட்டாசிரியரைப் போல் நன்கு ஆராய்ந்து பார்க்கமாட்டாதார், மக்களின் பல்லமைப்புப் புலாலுணவு கொள்ளுதற்கே ஏற்றதெனப் பகுத்தறிவின்றியுரைத்துத் தாம் மறவிலங்குகளுக்கு இனமுடைய ராதலைக் காட்டுவராதலின், அவர்தம் புல்லிய வெள்ளறிவுரை யினை நம்பி எவரும் புலாலுணவு கொள்ளுந் தீவினைப் படுகுழியில் வீழாதிருப்பராக!

இனிப் பகலவன் வெப்பம் மிகுந்த நாடுகளில் உள்ளார்க்குப் புலாலுணவு வேண்டப்படாதாயினும் பனியுங்குளிரும் மிகுந்த வடமுனை தென்முனை களையடுத்த நாடுகளில் உள்ளார்க்குப் புலாலுணவு இன்றியமையாததாகும் என்று முழக்கம் இடுவார் கூற்றினைச் சிறிது ஆராய்வாம்: இந்நிலவுலகத்திற் புற்பூண்டு மரஞ் செடி கொடிகள் முதலான ஓரறிவுடைய உயிர்கள் முதல் இரண்டு முதல் ஐந்தறிவுடைய ஊர்வன நகர்வன திரிவன பறப்பனவாகிய சிற்றுயிர்களும் ஆறறிவுடைய மக்களும் முதன்முதற் றோன்றிய இடம், இந்நிலத்தின் நடு மையத்தைச் சார்ந்த இத் தென்னாட்டை யடுத்துத் தெற்குவடக்காய்ச் சென்ற குமரி நாடேயாகுமென்று மேனாட்டு இயற்கை நூல் ஆசிரியர்கள் முடிவுகட்டிச் சொல்லியிருக்கின்றார்கள். அக் குமரி நாடோ இப்போது தென்கடலுள் மூழ்கிக் கிடக்கின்றது. அந்நாடு கடலாற் கவரப்பட்ட பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே தான், அந்நாட்டில் உயிர்வாழ்ந்த விலங்குகளும் மக்களும் பல முகமாய்ப் பிரிந்து வடக்கு வடமேற்கு வடகிழக்கில் உள்ள நிலங்களிற் சென்று குடியேறியதாகும். குமரி நாட்டில் இருந்தவரையில் எல்லா உயிர்களும் மரஞ்செடி கொடிகளின் பயனான இலை பூ காய் கனி கிழங்கு வித்துக்கள் என்னும் இவற்றையே உணவாகக் கொண்டு உயிர்வாழ்ந்தன. ஏனென்றாற், சூடுமிகுந்த அந்நாட்டிலும் அதனை யடுத்துள்ள பிறநாடுகளிலும் மேற்கூறிய சைவ உணவுப் பண்டங்கள் ஏராளமாய்க் கிடைத்தலின் அந்நாட்டை விட்டுப் பனியுங்குளிரும் மிகுந்த வடநாடுகளுக்குச் சென்ற உயிர்களோ, அங்கே புற்பூண்டுகளும் இல்லாமல் எல்லாம் வெறுநிலமாக இருந்தமையின், தமது கொடிய பசித் துன்பம் பொறுக்கமாட்டாமல் ஒன்றை யொன்று பிடித்துக் கொன்று தின்பவாயின. மற்றுக் குமரி நாட்டை விட்டுச் சென்ற உயிர்களுள்ளும் நுண்ணறிவு வாய்ந்தவைகள், கடுங்குளிர் மிகுந்த வட நாடுகளை நோக்கிச் செல்லாமல், தென்பகுதிக் கண்ணுள்ள மற்றநாடுகளிலேயே குடியேறிச் சைவ உணவுப் பண்டங்களையே தின்று உயிர் வாழலாயின. வடமுனை நோக்கிச் சென்ற உயிர்கள் அப் பக்கங்களில் மரக்கறியுணவு கிடைக்கப் பெறாமையின் ஒன்றையொன்று பிடித்துத் தின்று ஊனுணவு கொள்ளக் கற்றுக்கொண்ட பின், பெரிய உயிர்களாயிருந்தவை சிறிய உயிர்களைக் கொன்று தின்று சிலகாலம் வரையில் தமது கொடும் பசியை ஆற்றி வந்தன. அச்சிறிய வுயிர்களும் நாளடைவில் அங்ஙனம் அழிக்கப்பட்டு இல்லையாய் ஒழிந்தபின், ஊனுணவிற் பழகிய மற்றைப் பெரிய உயிர்களிற் பெரும்பாலான மீண்டுந் தென்பகுதிக்கண் உள்ள காடுகளை நோக்கி வரலாயின. வந்து இங்குள்ள காடுகளில் ஏராளமாய்க் கிடைக்கும் மான் மரை கடம்பை பன்றி முதலான மெல்விலங்குகளை இரையாகக் கொன்றுதின்று, ஊன் உண்ணும் பழக்கத்தை விடாவாய் அதன்கண் நிலை பெற்றன. ஆகவே வடமுனை நோக்கிச்சென்று ஆங்குச் சிலகாலம் வைகி, மீண்டுந் தென்பகுதியிற் புகுந்து குடியேறிய வல்விலங்குகளாலும் நாகரிகம் இல்லா மக்களாலுமே ஊனுணவு பரவலாயிற்றென்க.இவ்வாற்றால் வடமுனை நோக்கிச் சென்ற சிற்றுயிர்களும் நாகரிக அறிவில்லா மக்களுமே தாம் ஊனுணவு கொள்ளுங் கொடுந்தீவினையை முதன்முதற் கற்றுக் கொண் டார்கள் என்பதும் அதற்குமுன் இந்நிலத்தின் நடுவரையைச் சார்ந்த எல்லா இடங்களிலும் இருந்த எல்லா உயிர்களும் மரக்கறியுணவினையே உட்கொண்டு உயிர் வாழ்ந்தன என்பதும் நன்கு பெறப்பட்டன.

இனிப், பண்டைநாளில் வடமுனையை நோக்கிச் சென்ற மக்கள் அறிவும் நாகரிகமும் இல்லாதவர்களாகலின், தாம் சென்ற அந் நிலங்களிற் காய் கனி கிழங்குகள் கிடையாமை கண்டு, இக்காலத்திற் போல அவை தம்மைப் பிறநாடுகளிலிருந்து வருவித்துக் கொள்ளும் வகையறியாராய்த், தம்மினுந் தாழ்ந்த விலங்குகளைக் கொன்றுஞ், சில வேளைகளில் தம்மிலேயே ஒருவரை யொருவர் கொன்றும் அவ்வழியாற்பெற்ற இறைச்சியை உணவாகக் கொள்ள வேண்டியவரானார்கள். அக்காலத்திருந்த அறிவில்லா அம்மக்கட்கு அப் பனிநாடுகளிற் புலாலுணவு இன்றியமையாததாய் இருந்தது கொண்டு, நீராவிப் பொறிகளின் உதவியால் நாகரிகமும் அறிவும் நாளுக்குநாள் விஞ்சும் இக்காலத்தில் அப் பனி நாடுகளில் இருப்பார்க்கும் புலாலுணவு இன்றியமையாதது என்பார் அறிவில்லாப் பேதைமாக்களே யன்றி, அறிவுடைய மேன்மக்கள் அங்ஙனஞ் சொல்லார். ஒன்றுக்கொன்று ஆறாயிரம் நாழிகைவழி விலகிக்கிடக்கும் நாடுகளிலுள்ளார் எல்லாம் மிக அருகிலிருப்பாரை ஒப்பத் தத்தம் நாடுகளிலுள்ள விளைபொருள்களை மாற்றிக் கொண்டு ஊன் சிறிதும் உண்ணாமற் சைவவுணவினாலேயே எளிதாய் இனிது வாழ்தற்கான இசைவுகள் நன்கு வாய்த்திருக்கும் இந்நாளிலும் பனி நாடுகளில் உள்ளார்க்குப் புலாலுணவு இன்றியமை யாததாகுமோ? அறிஞர்களே கூறுங்கள்!

அற்றன்று. பனி நாடுகள் குளிர் மிகுந்திருத்தலால், அங்குள்ள மக்களின் உடம்புகளில் வேண்டிய அளவுக்குச் சூடுண்டாக்கும் உணவே வேண்டி யிருத்தலாலும், அங்ஙனம் உடம்பிற் சூடு பிறப்பிப்பது புலாலுணவே யல்லாமல் மரக்கறியுணவு அல்லாமை யாலும் அவர்கட்கு ஊனுணவே சிறந்ததாமெனின், அது பொருந்தாது. உடம்பிற்கு ஆற்றலையுஞ் சூட்டையுந் தருதற்குரிய பசைமாவுஞ் சர்க்கரையுங் கொழுப்புஞ் சைவ உணவுப் பண்டங்களிலேயே மிகுந்திருத்தலை, இந் நூலின் துவக்கத்திலேயே நன்கெடுத்துக் காட்டி விளக்கியிருக்கின்றேம். தயிர், பால், நீர், கோதுமை, உழுந்து, வெண்ணெய், நெய், எள்நெய், கற்கண்டு, சீனி முதலான உணவுப் பொருள்களைச் செரிக்கும் அளவறிந்து உண்பவர்களுக்கு, எத்தகைய முயற்சியுஞ் செய்யக்கூடிய வலிவுஞ் சூடுந் தக்கபடி உண்டாகும். இவற்றின் பொருட்டுச் சிற்றுயிர்களின் இறைச்சியை யுண்ணவேண்டு மென்றுரைப்போர், உடம்புகளின் கூறுகளை வளர்க்கும் உணவுப் பண்டங்கள் இன்னவையென்று ஆராய்ந்து அறிய மாட்டாதவராவர். சிற்றுயிர்களின் உடம்பிலுள்ள சர்க்கரையுங் கொழுப்பும் அவ்வுயிர்களாற் பல முயற்சிகளின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டவைகளே யாதலால், அவற்றின் ஊனிலுள்ள அவை சாறுகழிந்த சக்கைகளே யாகும்; அச் சக்கைகளை உட்கொள்வார்க்கு ஆற்றலுஞ் சூடும் எங்ஙனம் வரும்? மற்றுப், புற்பூண்டு மரஞ் செடி கொடிகளின் பயனான இலை, பூ, காய் கனி கிழங்கு வித்துக்களில் உள்ள சர்க்கரையுங் கொழுப்புமோ எத்தகைய முயற்சியின் பொருட்டும் பயன்படுத்தப்படாதன ஆகும். ஆகவே, அவை மக்களுடம்பில் ஆற்றலையுஞ் சூட்டையும் உண்டாக்குதற்கு முதற்றரமாவன வாகும். இவ்வளவு சிறந்த இச் சைவவுணவைவிட்டு இரண்டாந் தரமான ஊன் சக்கைகளே குளிர் நாடுகளில் உள்ளார்க்கு வலிவையுஞ் சூட்டையுந் தருமென்று அச்சக்கையைப் பிடித்துக் கூறுவார் அறிவு வெறுஞ் சக்கையே யாகுமல்லாற் சாறுடையதாகுமோ? கூர்ந்து பார்மின்கள் அறிஞர்களே!

இனிப், பனிநாடுகளில் உள்ளாரெல்லாம் புலாலுணவே கொள்கின்றா ரென்பதும் உண்மையுணராதார் வெற்றுரையாம். நம்மை யாளும் ஆங்கில நன்மக்கள் வாழும் இங்கிலாந்து தேயத்திற்கு வடக்கின்கண் உள்ளதான காட்லாந்து தேயம் பனியுங் குளிரும் மிக்கதென்பது நில நூலறிஞரும் பள்ளிக்கூடச் சிறுவருங்கூட நன்குணர்வர். அந்நாட்டிலுள்ள மக்கள் ஒட் டரிசியிற் செய்த அப்பமும் உருளைக்கிழங்கும் பாலும் வெண்ணெயுமே உணவாகக் கொள்ளுகின்றார்கள். இவர்களின் வாழ்க்கை நிலையைக் கண்டுணர்ந்த ஆடம் மித் (Adam smith) என்னும் பொருள் நூல் ஆசிரியர், கசாப்புக் கடைக்காரன் தரும் இறைச்சி சிறிதும் இல்லாமலே, வித்துக்களுங் காய்கறிகளும், பால் வெண்ணெய் பாற்கட்டி எண்ணெய் முதலியனவுஞ் சேர்த்து மிகவுஞ் செழுமையான, மிகவும் நலந்தருவதான, மிகவும் உடம்பை வளர்ப்பதான, மிகவும் உடம்பைத் தேற்றுவதான நல்லுணவாகுமென்பது நாம் பழக்கத்தாற் கண்டறிந்ததாகும் என மொழிந்திருக்கின்றார். ஐரோப்பா அமெரிக்கா என்னுந் தேயங்களின் ஊடு சென்று ஆங்காங்கு மக்கள் வாழ்க்கையின் இயல்புகளை நன்கு கண்டறிந்த அவ்வர்ட் மால்கம் (Rev Howard Malcolm) என்னும் கிறித்து சமய குரு யான் கண்ட மிக நேர்த்தியான மக்களுடம்பின் அமைப்புகளில் மிகச் சிறந்தது அயர்லாந்து தேயத்திலுள்ள மக்களின் உடம்பேயாகும்; இம்மக்கள் ஒருகாலும் ஊனுணவைச் சுவைத்ததேயில்லை என மொழிந்திருக்கின்றார். இவ்வாறு குளிரும் பனிக்கட்டியும் நிறைந்த காட்லாந்து, அயர்லாந்து முதலான நாடுகளிலுள்ள நன்மக்கள் பலருஞ் சைவவுணவே உட்கொண்டு உடம்பிற் சூடுஞ் சுருசுருப்பும் உடையராய் இனிது உயிர்வாழ்ந்துவரல் கண்கூடாய் அறியப்பட்டிருத்தலின், பனி நாடுகளில் உள்ளார்க்கு ஊனுணவு இன்றியமையாதது என்று உரைப்பார் உண்மை யுணர்ந் தாராவரோ? சிறிதும் ஆகாரென விடுக்க.

இனி, நாம் உண்ணும் உணவிலும் பருகும் நீரிலும் எண்ணிறந்த சிற்றுயிர்கள் நம் கண்களுக்குப் புலனாகாமல் இருக்கின்றன; பெருக்கு கண்ணாடி (Microscope) யினுதவி கொண்டு நோக்குவாமாயின், அவை எத்தனை கோடிக் கணக்காய் நம் உணவுப் பொருள்களிலும் பாலிலும் நீரிலும் ஏனையவற்றிலும் நிறைந்திருக்கின்றன என்பதை அறியலாம்; நாம் உள்ளிழுக்கும் மூச்சிலும் எத்தனையோ கோடிக்கணக்கான சிற்றுயிர்கள் சேர்ந்து நம்முடம்பின் உட்செல்லுகின்றன; இங்ஙனம் ஒவ்வொரு நொடியும் நாம் எண்ணிறந்த உயிர்களைக் கொலைசெய்பவர்களாய் இருக்கையில், இறைச்சி தின்பது ஒன்றுதானா கொலைக் குற்றமாகும்? என்று சிலர் வினாவுகின்றார்கள். நமது உயிர் வாழ்க்கையில் நம்மால் விலக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் நம்மால் விலக்கக்கூடாத நிகழ்ச்சிகளும் என இரு பகுப்புகள் இருக்கின்றன. நம்மால் விலக்கக்கூடிய நிகழ்ச்சிகளிற் குற்றமாவன இருந்தாற் பகுத்தறிவுடைய நாம் அவற்றை விலக்கி யொழுகக் கடமைப்பட்டிருக்கின்றோம். நாம் செய்யும் ஒரு தொழில் பிறவுயிர்க்குத் துன்பந் தருவதென்றும், அதனை விலக்கி யொழுகுவது அவ்வுயிர்க்கும் நமக்கும் நன்மையையே தருமென்றும், அதனை அங்ஙனம் விலக்கியொழுகுவது நம்மால் எளிதிற் செய்யக்கூடியதே யாமென்றும் நாம் நன்கறிந்திருக்கையில், நாம் அறிந்த அவ்வண்ணம் நடவாமாயின், அது நம்பாற் பெருங்குற்றமே யாதல் திண்ணமன்றோ? ஒருவரிடத்துள்ள ஒரு குற்றத்தையெடுத்து மற்றொருவரிடத்து ஒருவன் பேசுவதை நாம் நாடோறும் காண்கின்றோம். இங்ஙனம் அவன் பேசுவதால் அவரைப் பிறர் இழிவாக எண்ண அதனால் அவர் உளம் வருந்துகின்றார்; ஆகவே, புறங்கூறுதலானது பிறர்க்குத் துன்பந் தருவதென்பதைப் புறங்கூறுவோன் நன்கறிந்திருக் கின்றான்; புறங்கூறு வோனை மக்கள் எல்லாரும் அருவருத்துவிடுதலாற், புறங்கூறுதல் தனக்குத் தீங்குதருவதென்பதை அவனும் உணர்கின்றான்; அப் புறங்கூறுதலை விட்டுப் பிறரை உயர்த்துப் பேசி எல்லார்க்கும் இனியனாய் ஒழுகுதலே தனக்கும் பிறர்க்கும் நன்மையைத் தருவதென்பதும், அவ்வாறு நல்லவனாய் நடப்பது எளிதிற் செய்யக் கூடியதேயாமென்பதும் அவன் செவ்வனே அறிந்தும், அவன் அங்ஙனம் அறிந்தபடியே நடவானாயின், அஃது அவன்மேற் பெருங் குற்றத்தைச் சுமத்துமன்றோ? ஒருவர்மேற் பிறரொருவர் புறங்கூறுவது வழக்கமாயிருத்தலாற், புறங்கூறுஞ் செயல் குற்றமாகாதென எவரேனுங் கூறத் துணிவரோ? துணியாரன்றே. அதுபோலவே, ஆடு மாடு கோழி குருவி கொக்கு குயில் மீன் முதலான சிற்றுயிர்களை அவற்றின் இறைச்சிக்காக மக்கள் கொலை செய்கையில், அவை எவ்வளவு துடிதுடித்துத் துன்புறுகின்றன! அங்ஙனம் அவை துன்புறக் கொன்று பெற்றுத் தின்னும் இறைச்சியாவது தன்னைத் தின்பார்க்கு நலந்தருகின்றதா? அதுவுமில்லையே! இறைச்சி தின்பார்க்கு அது வயிற்றுவலி, மலச்சிக்கல், அளவுக்கு மிஞ்சிய சதை, இரத்தக்குழாய்களிற் கொழுப்படைத்தல், கைகாற்பிடிப்பு, இருமல், எலும்புருக்கி, காமாலை, பிளவைக்கட்டி, நீரிழிவு, கொறுக்கு, படை, கடுங் காய்ச்சல், பெரும்பாடு முதலாக எண்ணத் தொலையாத நோய்களை வரிசை வரிசையாய்க் கொடுத்து அவரை வகைமாளச் செய்கின்றதன்றோ! இங்ஙனமாகத் தாமும் அளவில்லாத் துன்பத்தையடைந்து மேற் காட்டிய சிற்றுயிர்கட்குந் துன்பத்தைத் தருதற்கு ஏதுவான உயிர்க்கொலையின் தீமையை நன்கு அறிந்து வைத்தும், அது வழக்கமாக உள்ளதுதானே என்று பகுத்தறி வில்லா விலங்குகளைப் போற் பகுத்தறிவுடைய மக்களுஞ் செய்யலாமோ? இத்தகைய பெரும் பொல்லாங்கான உயிர்க்கொலையையும் புலாலுணவையும் அறவே நீக்கி, மரஞ் செடி கொடிகளின் பயனான சைவ உணவுப் பண்டங்களை உட்கொண்டு உயிர்வாழ்தலாற் பிற வுயிர்க்கும் மக்களாகிய தமக்கும் எவ்வளவு நன்மையுண்டாம்! மேலும், புலாலுணவை நீக்குவது வருத்தமான செயலும் அன்று; அஃது எளிதின் முடிவதேயாம். ஏனென்றால், சைவ உணவுப் பண்டங்களைக் கலவாமல் இறைச்சியை மட்டும் விலங்குகளைப் போல் தின்பது மக்களாற் சிறிதும் ஏலாது; ஆனால், இறைச்சியில்லாமற் சைவ உணவுப் பண்டங்களை மட்டும் அருந்தி இனிது உயிர்வாழ்தலோ மக்கட்கு எளிதிலே இசைவதாகும்; அதற்காக மிகுந்த பொருட்செலவு செய்யவேண்டுவது மில்லை. இவ்வாறு எளிதிற் கிடைப்பதும், பிறவுயிர்க்குத் தீங்கில்லாததுந், தன்னை உண்பார்க்கு மிக்க உடல் நல மனநலங்களைத் தருவதும் ஆன சைவவுணவை விடுத்து, ஐந்தறிவு உயிர்களைத் துடிதுடிக்க கொல்லுங் கொலைத் தொழிலால் வரும் புலாலுணவை உட்கொள்ளுதல் பகுத்தறிவுடைய மக்களுக்குத் தகுதியாமோ?

நாம் உட்கொள்ளுஞ் சைவ உணவுப் பண்டங்களிலும் நீரிலுங் கணக்கற்ற சிற்றுயிர்கள் நம் கட்புலனுக்குத் தென்படாமலிருந்தால், அதற்கு நாம் என் செய்யலாம்! நம் மனமாரத் தெரிந்தவைகளையே நாம் கொல்லாமல் விலக்கி யொழுகக் கடமைப்பட்டிருக்கின்றோம். நமக்குத் தெரியாதவைகளைப் பற்றி, நம்மால் விலக்கக் கூடாதவைகளைப் பற்றிக் கவலையெடுத்தலால் யாது பயனுண்டு? எவருந் தாம் அறிந்த, தம்மால் விலக்கக் கூடிய தீமைகளைத் தாம் தாம் விலக்கலாம்; தம்மால் அறியப்படாமலும், அங்ஙனம் அறியப் படாமையால் தம்மால் விலக்கக் கூடாமலும் வரும் நன்மை தீமைகளுக்கு எவரும் பொறுப்பாளியாகமாட்டார். தமக்குத் தெரியாமலுந் தம்மால் விரும்பப்படாமலுந் தம் வயிற்றினுள்ளே எண்ணிறந்த சிற்றுயிர்கள் நுழைவது கொண்டு, ஆடு மாடு முதலான சிறந்த பயனுள்ள விலங்குகளைத் தாம் வேண்டியபடி செந்நீர் ஒழுகக் கொன்றுங் கொல்லுவித்தும் நெஞ்சார அவற்றின் ஊனை உண்பது குற்றமாகாதென எந்த அறிஞனேனுங் கூறத் துணிவனோ? மரஞ் செடி கொடிகள் புற்பூண்டுகளும் உயிர் உடையன வென்பது உண்மையே; ஆனால், இவ் ஓரறிவுடைய உயிர்களை நாம் உணவாகக் கொள்வது குற்றமாகாதது கொண்டு, ஐந்தறிவுடைய ஆடு மாடு மீன் முதலியவைகளை உணவாகக் கொள்வதுங் குற்றமாகாது என்னலாமோ? ஆடு மாடு மீன் முதலியவைகளை உண்ணாது நாம் உயிர்வாழலாம், ஆனால் புற்பூண்டுகளையும் அவற்றின் பயன்களையும் உண்ணாது நாம் உயிர்வாழ்தல் கூடுமா? ஆடு மாடு முதலியவைகளைப் பிறர் கொல்லப் புகும்பொழுது, அவை தம் உயிர் தப்பிப்பிழைக்க எவ்வளவோ முயன்று துடிதுடிக்கின்றன! அதுபோற் புற்பூண்டு களையும் அவற்றின் பயன்களையும் நாம் கைக் கொள்கையில், அவைகளும் தம் உயிர் தப்ப முயன்று ஓடுகின்றனவா? சிறிதும் இல்லையே. ஆடு மாடு மீன் முதலியவைகளைக் கொன்று கைக்கொள்ளும் இறைச்சி, இரத்தம் ஒழுகித் தீய முடைநாற்றம் வீசுவதுபோற் புற்பூண்டு முதலியவை களும் அவற்றின் பயனும் இரத்தஞ் சிந்தி நாறக் கண்டதுண்டோ? ஈரறிவு முதல் ஐந்தறிவுகாறுமுள்ள எல்லாச் சிற்றுயிர்களின் இறைச்சியும் இரத்தமும் முடை நாற்றமும் வீசி அருவருக்கத் தக்கதாயிருக்க, ஓரறிவுள்ள புற்பூண்டுகளும் அவற்றின் பயனான இலை பூ காய் கனி கிழங்கு வித்து முதலியனவும் எவ்வளவு நறுமணங் கமழ்ந்து நாவுக்குச் சுவையும் உடம்புக்கு நலமும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியுந் தருகின்றன! ஆகவே, இத்தனை வேறுபாடுமுடைய ஊனையுங் காய்கறியுணவினையும் ஒன்றென்றல் பேதைமையுங் கொடுமை யும் இரக்கமற்ற வன்னெஞ்சமும் உடையோர் புல்லுரையேயாதல் தெற்றென விளங்காநிற்கும்.

மேலும், நம்மால் விலக்க முடியாத சில சிறு குற்றங்கள் நம்மிடம் இருப்பது பற்றி, நம்மால் விலக்கக் கூடிய பெருங்குற்றங்களையும் நாம் செய்யலாம் என்று செருக்குடன் கூறுவார் தம் மடமை பெரிதும் அஞ்சற்பாலதாம். எவ்வளவு நறுமணங்கமழுஞ் சுவைப்பண்டங்களை நாம் உண்டாலும், அவையெல்லாம் நம் வயிற்றின் கீழ் அருவருக்கத்தக்க மலமாய் மாறிவிடுகின்றன; இவ்வாறுண்டாகும் மலம் நமது மலக்குடலில் இல்லாத நேரமே இல்லை. இங்ஙனம் மக்களது அடிவயிற்றினுள்ளேயே மலம் இருத்தல் கொண்டு மக்களெல்லோரும் மலத்தையே திரளைதிரளையாக எடுத்துச் சாப்பிடலாம் என்று கூற ஒருவர் முன்வருவராயின் அவரது அறிவையும் அவரையும் உலகத்தார் என்னென்று கொள்வர்! அவரை அறிவு திரிந்த வெறியரென இகழ்ந்து நகைப்பரல்லரோ! எத்தனை முறை குளித்தாலும் நமதுடம்பில் அழுக்கு இருத்தலால், நாம் குளித்தலே வேண்டாமெனக் கூறலாமோ? அங்ஙனமே, நாம் எத்தனை முறை எத்தனை நூல்களைக் கற்றாலும், நாம் அவற்றின் சொற்பொருள்களை மறந்துவிடுதலால், நாம் கல்விகற்றலே வேண்டாமெனக் கரையலாமோ? இங்ஙனமெல்லாம் நம்மனோ ரிடத்தில் விலக்கமுடியாத சில சிறு குற்றங்கள் இருப்பது கொண்டு, அவர்கள் பெருங்குற்றங்களைச் செய்யலாமெனவும் அப்படிச் செய்வது குற்றமாகாது எனவும் பகர எவரேனும் ஒருப்படுவரோ? ஒருப்படாரன்றே! அவை போலவே, நாம் அறியாமலும் நாம் விரும்பாமலும் இருக்க, நம் கட்புலனுக்கு அகப்படாத நுண்ணிய சிற்றுயிர்கள் பல நாம் உண்ணுஞ் சைவ உணவுப்பொருள்களிலுங் கலந்து நம்மால் விலக்க முடியாதபடி நம் வயிற்றுனுட் செல்வது குறித்து, நம்போல் ஐந்தறிவும் உடம்பின் அமைப்பும் வாய்ந்த ஆடு மாடு கோழி கொக்கு மீன் முதலான சிற்றுயிர்களையும் நாம் நம் நெஞ்சார விரும்பிக் கொன்றும் கொல்வித்தும் அவற்றின் ஊனைத் தின்பமானால், அது மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியுமென்று உணர்ந்துகொள்க.

அஃது உண்மையேயென்றாலுஞ், சிற்றுயிர்களிலேயே ஒன்று மற்றொன்றைப் பிடித்துத் தின்று உயிர்வாழ்தல் இயற்கை நிகழ்ச்சியாய்க் காணப்பட்டு வருதலால், மக்களும் பிற சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்பது குற்றமாகாதெனின்; நன்று சொன்னாய்; சிற்றுயிர்கள் ஒன்றையொன்று பிடித்துத் தின்னல் போல, மக்களுந் தம்முள் ஒருவரையொருவர் கொன்று தின்னல் வேண்டுமெனக் கூறுதல் வேண்டும். காட்டுமிராண்டி வகுப்பினர் சிலர் தம்முள்ளே ஒருவரையொருவர் கொன்று தின்றுவிடுகின்றனர். இங்ஙனமாகப் பகுத்தறிவில்லாக் காட்டுமிராண்டிகள் செய்யுங் கொடுஞ் செயலைப் பார்த்துப் பகுத்தறிவுடைய மக்களும் அவ்வாறு செய்தல் இயற்கை தானென்று சொல்லித், தம்முள் ஒருவரையொருவர் கொன்று தின்னலாமோ? அதுவேயுமன்றிச், சிற்றுயிர்களின் வாழ்க்கையே இயற்கைக்கு ஒத்ததென்று கருதி, அதன்படி நடக்கப் புகுந்தால், மக்கள் வாழ்க்கையானது தாழ்ந்த காட்டுவிலங்குகளின் வாழ்க்கையாய், ஊரெல்லாங் காடுகளாய் மாறல் வேண்டும். விலங்குகளைப்போல் நாகரிக மக்களும் ஆடையின்றி அம்மணமாய் உலவுதல் வேண்டும்; அவைகள் வீடுவாய்தலின்றி மரங்களின் கீழும் மலைக்குகைகளினுள்ளுந் தங்கியிருத்தல்போல அவர்களும் வீடுவாய்தலைத் துறந்து மரங்கள் மலைக் குகைகளில் தங்கல் வேண்டும்; அவைகளுட் சில மற்ற உயிர்களை அடித்துக் கொன்று அவற்றின் சதையைப் பச்சையாய்க் கிழித்துண்டல் போல, அவர்களும் விலங்குகளைக் கொன்று பச்சையாக அவற்றின் இறைச்சியைத் தின்னல் வேண்டும்; அவைகளுட் பன்றி முதலான சில விலங்குகள் மலத்தைச் சாப்பிடுதல் போல, அவர்களும் மலத்தை விழுங்குதல் வேண்டும்; அவைகளெல்லாம் கல்வி கற்கவும் கடவுளை வணங்கவும் அறியாமைபோல, அவர்களுங் கல்வி கல்லாமலுங் கடவுளை வணங்காமலுங் காலங் கழித்தல் வேண்டும். இங்ஙனமெல்லாம் விலங்கின் இயற்கைகளோடு ஒப்ப, நாகரிக மக்களும் நாகரிக வாழ்க்கையைவிட்டு உயிர் வாழல் கூடுமாயினன்றோ, அவர்கள் அவைகளிற் சிலவற்றைப்போல் ஊன்தின்று உயிர் வாழ்தல் பொருந்துவதாகுமா? நாகரிக மக்களின் வாழ்க்கையானது விலங்குகளின் வாழ்க்கைக்கு முற்றும் மாறுபட்டதாயிருக்கையில், ஊன் தின்பதற்கு மட்டும் அவற்றின் இயற்கையை அவர்கள் பின்பற்றல் வேண்டுமெனச் சிறிதும் ஆராயாது கூறுவார் கூற்றின் மடமைப் பெருக்கை என்னென்று புகல்வேம்! அறிஞர்களே ஆழ்ந்து பார்மின்கள்!

இனித், தலையிற் புழுக்கும் பேன்களையுந், தலையணை பாய் படுக்கை மூட்டுக்களிற் புழுக்கும் மூட்டுப் பூச்சிகளையும், மோட்டுவளையிலுள்ள எலிகளையும் மக்கள் கொல்ல வேண்டியவர்களாய் இருத்தலால், அவர்கள் தம் உடம்பு வளர்ச்சியின் பொருட்டு உயிர்களைக் கொல்ல வேண்டியவர்களா யிருக்கின்றனரெனப் புலாலுணவு கொள்வார் சிலர் புகல்கின்றனர். இவர்கள் தமது நலத்தின் பொருட்டுத் தம்மோடொத்த மக்களைக் கொன்றுவிடுதலுங் குற்றமாகாதெனச் சொல்வதற்குப் பின்வாங்கார். அருளொழுக்கமுடையராய் உயிர் வாழ விரும்பும் மேன் மக்களோ இத்தகைய கொடியோர் சொல்லுங் கொடுஞ் சொற்களுக்குச் சிறிதுஞ் செவி கொடுத்தலாகாது. பேன், மூட்டுப்பூச்சி, எலி முதலானவைகள் நாம் இருக்கும் இல்லங்களில் உண்டாதற்கும் வருதற்கும் இடஞ் செய்யாமல் இருப்பமாயின், அவற்றை நாம் கொல்ல வேண்டுவதும் நேராது. தலையிலும் ஆடையிலும் அழுக்குப்பிடியாதபடி நீராடிக் கழுவித் துப்புரவாய் இருப்பமானால், பேன் உண்டாக மாட்டாது; படுக்கைகளையும் அங்ஙனமே அழுக்கும் ஈரமும் அணுகாமல் வெயிலில் அடுத்தடுத்துக் காய வைத்துத் தூயனவாய் வைத்துக் கொண்டால் மூட்டுப் பூச்சி உண்டாகாது; இல்லத்துள்ள அறைகளில் வெளிச்சமும் காற்றும் மிகுதியாய் உலவும்படி செய்து, இண்டுஇடுக்குகள் வளைகள் இல்லாமல் அடைத்து, உணவுப் பண்டங்களைப் பேழைகளிலும் நிலைப்பேழைகளிலும் வைத்து மூடிக் கருத்தாய் நடந்தால் எலிகள் வரமாட்டா. அன்றி, அவ்வாறெல்லாம் கருத்தாய் இருந்தும், ஒரோவொருகால் நம் இல்லங்களுட்புகுந்து நம்மை வருத்தி நம் உயிர்க்குத் தீங்கு செய்யுமாயின், அப்போது அவற்றை நம்மினின்றும் அகற்றுதல் குற்றமாகாது. கடிக்க வரும் பாம்பினையுங் கொல்ல வரும் புலியினையுங் கொன்று நம்மைநாம் பாதுகாத்தல் குற்றமாகாதது போலவும், நமதுணவுக்கு இன்றியமையாத நெற்பயிரைப் பாதுகாத்தற் பொருட்டு அவற்றிடையே வளர்ந்து அவற்றை யழிக்கும் பல்வகைப் பூண்டுகளைக் களைந்தெறிதல் குற்றமாகாதது போலவும், நம்முயிர்க்குத் தீங்கு தரும் எந்தச் சிற்றுயிர்களையும் நம்மினின்றும் அகற்றுதல் சிறிதுங் குற்றமாகா தென்க. என்றாலும், அச் சிற்றுயிர்களை நம்மினின்று அகற்றுமிடத்தும், அவை தம்மை நம்மாற் கூடியவரையிற் கொல்லாமல் அகற்றுதலே நாம் இரக்க நெஞ்சமுடையராய் ஒழுகுதற்குச் சிறந்த நெறியாம் என்பதை அனைவரும் நெஞ்சிற் பதித்தல் வேண்டும். விலகமுடியாதபடி அவற்றை அழித்து அகற்ற நேர்ந்தபழி, அவை தீங்கிலாத பிறவியிற் சேரும்படி இறைவனை வேண்டி மன்னிப்புக்கேட்டு அவற்றை அவ்வாறு செய்தல் வேண்டும். இங்ஙனமாகச் சில சிற்றுயிர்களை விலக்க முடியாத படி சில நேரங்களில் மக்கள் அழித்துவிட வேண்டியிருப்பதாகிய ஒரு புல்லிய காரணத்தைக் கொண்டு, அவர்கள் ஆடு மாடு கோழி கொக்கு மீன் முதலான தீங்கற்ற உயிர்களையுங் கொன்று அவற்றின் ஊனை உண்ணலாமென்று முன்பின் சிறிதும் இரக்கமில்லாமற் பேசும் வன்னெஞ்சர்களின் கொடுமையை என்னென்பேம்! புலாலுண்பவர் மூட்டுப் பூச்சிக் காரணங் கொண்டு புலாலுண்ணலாம் என்று அழிவழக்குப் பேசுவா ராயின், அவர் அம்மூட்டுப்பூச்சி பேன் கொசுகு முதலானவை களையுந் தின்னாமை என்னையோவென்று கூறிவிடுக்க.

இனி, நம் இந்திய நாட்டவரை அயல்நாட்டவரின் அடிமைத் தனத்தி னின்றும் மீட்க முயல்வார் போல் ஆரவாரஞ் செய்வார் சிலர். நம்மனோர்க்குப் போர் புரியும் ஆற்றலும் ஆண்மைத்தன்மையும் உண்டாகல் வேண்டுமாயின், அவர் களெல்லாரும் புலாலுணவு கொள்ள வேண்டுமென எவருங் காணாப் புதியதொரு வழியைக் கண்டுபிடித்துச் சொல்லி வருகின்றார். இவர்கள், கடவுளையும் இல்லையென்று துணிவாய்ச் சொல்லும் பாழ்ங்கொள்கை யுடையவர்களாதலால், இவர்கள் தம்மையொத்த மக்களொடு போர்புரிந்து அவர்களைப் பாழ்படுத்தற்குத், தீங்கற்ற உயிர்களையும் பாழ்படுத்த வேண்டும் என்று கூவுகின்றனர்! புலி கரடி ஓநாயைப் போற் பிற உயிர்களைக் கொல்லுதற்கு விழைந்து முன் நிற்கும் இத்தகைய தீவினையாளர் இருக்குங்காறும் உலகில் அமைதியும் நன்மையும் இரா. இக் கொடியவர் தொகை பெருகுமாயின் இந் நிலம் வெறுஞ் சுடு காடாய்விடும்! ஆனால், எல்லா இரக்கமும் எல்லா வல்லமையும் உடைய ஆண்டவன் இக் கொடியவர் தொகையைப் பெருக விடான் என்பது திண்ணம். ஏனென்றாற், கொலைத் தொழிலிலும் புலாலுண்ணுதலிலும் முதன்மை பெற்று நின்ற மேனாட்டவர் களிலேயே அறிவும் ஆராய்ச்சியும் முதிர்ந்த மேன்மக்கள் பல்லாயிரக்கணக்காய் நாளுக்குநாட்பெருகிக், கொலைத் தொழிலையும் அதனால் வரும் ஊன் உண்டலையும் பெருந்தீங்கென உணர்ந்து, அவற்றை மறுத்தல் இன்றியமையாத தெனப் பல்லாயிரக்கணக்கான நூல்களாலுந் துண்டு விளம்பரங்களாலும் மக்களுக்கு அறிவுபுகட்டி வருகின்றார்கள். எல்லாருங்காண அவர்கள் இடைவிடாது செய்துவரும் ஆராய்ச்சிகளி னுதவிகொண்டு, ஊனுண்பார்க்கு நோய்கள் பல உண்டாகி அவர்தம் உடல் நலத்தை அழித்தலால் அவர்க்கு உடலாற்றல் மனவாற்றல்கள் இல்லையாம்; அவை இல்லையாகவே அவர் ஆண்மைத்தன்மை யுடையவராதலும் இல்லையாம் என்றும், மரக்கறியுணவு கொள்பவர்க்கு உடல்நல மனநலங்கள் தாமாகவே அமைதலால் அவர் இயற்கையாகவே ஆண்மையும் அமைதித்தன்மையும் உடையராய் எத்தகைய அரும்பெரு முயற்சியையுஞ் செய்து முடிக்க வல்லுநராயிருக் கின்றனரென்றும் புலாலுண்டலின் தீமையையும் புலால் மறுத்தலின் நன்மையையும் நன்கு விளக்கிவருகின்றனர். அம் மேன்மக்கள் செய்து போதரும் ஆராய்ச்சிகளிற் சில முன்னரே எடுத்துக் காட்டியிருக்கின்றேம்.

மேலுங், கொடுமையுஞ் சினமும் இல்லா அமைதியுடையார்க்கே ஆற்றலும் அறிவும் மிகுதிப்பட, அவர்களே தமக்கும் பிறர்க்கும் பயன்பட்டு ஒழுகுவரென்பதும், ஊனுண்டு கொடுமையுஞ் சினமும் அளவுபடாமல் மிகப் பெற்றவர் தமக்கும் பிறர்க்கும் பயனிலராதலுடன், பொது மக்களின் இனிய வாழ்க்கையையுங் குலைத்துவிடு நீரராதலையும் நாடோறும் ஆங்காங்கு நிகழும் நிகழ்ச்சிகளில் வைத்து நன்கறியலாம். அடிபிடி சண்டையில் முனைந்து நிற்பவர்களும், முன்பின்பாராமல் ஆறறிவுடைய மக்களைச் செந்நீர் ஒழுகத் துடிதுடிக்க வெட்டிக்கொல்பவர்களும் யாவரென ஆராய்ந்து பார்க்கச் சிற்றுயிர்க் கொலையைத் தொழிலாகக் கொண்டு ஊன் விற்பவர்களும் புலாலுணவு நிரம்பக் கொள்பவர்களுமே அக் கொடுந் தொழிலைச் செய்பவராயிருக்கின்றனரென உணவாராய்ச்சியிற் றேர்ந்த அறிஞர்கள் கணக்கெடுத்திருக் கின்றார்கள். அவர்போல் அத்துணை நுண்ணிய ஆராய்ச்சி செய்யமாட்டாத நாம், நம்மினுந் தாழ்ந்த விலங்குகளின் இயற்கையில் வைத்து இவ்வுண்மையை எளிதாக அறிந்து கொள்ளலாம். ஊனையே தின்று உயிர் வாழும் புலி கரடி சிங்கம் ஓநாய் முதலான மறவிலங்குகளின் இயற்கையையும், மரத்தின் குழைகளையும் புல்லையும் வைக்கோலையுமே தின்று உயிர்வாழும் ஆடு மாடு எருமை குதிரை கழுதை யானை ஒட்டகம் முதலான அறவிலங்குகளின் இயற்கையையும் பகுத்துப் பார்மின்கள்! இவ்விருவகை விலங்குகளில் எவை வலிமையிற் சிறந்தன? புலி முதலியனவே வலிமை மிக்கனவென்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அஃது உண்மையன்று; பெருஞ்சுமை யேற்றிய ஒரு பாரவண்டியில் இரண்டு எருதுகளையும் அங்ஙனமே சுமையேற்றிய மற்றொரு வண்டியில் இரண்டு புலிகளையும் பூட்டி அவற்றை ஓட்டினால், எருதுகளைப்போற் புலிகள் அதனை நீண்டவழி இழுத்துச் செல்லுமா? சிறிதுஞ் செல்லா. மறவிலங்குகட்குக் கூரிய நகங்களும் பற்களும் இருத்தல் பற்றி அவை வலிமையுடையன போற் காணப்படுகின்றனவே யல்லாமல், மாடு குதிரை யானை முதலிய அறவிலங்குகளைப் போல் அவை வலிமையிற் சிறந்தன அல்ல. அதுவேயுமன்றி, மாடு குதிரை முதலானவைகளைப் போற் புலி கரடி முதலாயின மக்கட்குச் சிறிதேனும் பயன்படுவதும் இல்லை. இவ்வாறு இவ்விருவேறு விலங்குகளின் இயற்கைகளையும் உற்று நோக்கு தலாலேயே புலாலுண்பவர் தமக்கும் பிறர்க்கும் பயன்படத்தக்க, ஆற்றலும் அறிவும் இலராதல் எளிதில் விளங்கும். இத் துணைதானும் ஆய்ந்து பாராமற் பேசுவார்தம் வெற்றுரையினை நம்பிப், புலாலுண்பார்க்கே, அறிவும் ஆண்மையும் உண்டாமென எண்ணிவிடாதீர்கள்!

இனி, இஞ்ஞான்றுள்ள மக்கட்பகுப்பினர் சிலர்க்குள்ள ஆண்மைத்தன்மையின் காரணம் யாது? என்று ஆராய்ந்து பார்ப்பீர்களாயின், அஃது அவர் ஓவாது செய்து போதரும் அறிவாராய்ச்சியே யாவதல்லால் அவர்க்குள்ள உடல் வலிமை யன்றென்பதூஉந் தெளிய உணர்வீர்கள். முன்னாளில் அரசர் இருவர்க்குட் போர் மூண்டால், அவ்விருவர்க்குரிய படை மக்களும் ஒருவரோடொருவர் நெருங்கிப் போர் புரிந்து ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்து, இருதிறத்தாரும் பெருந்துன்பம் எய்துவர். மற்று, இந்நாளிலோ பத்துக்கல் இருபதுகல் விலகி நின்று இருபடைகளும் போர்புரியத்தக்க பலதிறக் கருவிகள் அறிஞர்களாற் புதிது கண்டுபிடித்து அமைக்கப்பட்டிருக்கின்றன. பத்துக்கல் இருபது கற்களுக்கு அப்பால் நிற்கும் படைகளையுஞ் சுட்டுச் சாய்க்கும் பீரங்கிகளும், ஐம்பதுகல் அறுபது கற்களுக்கு அப்பால் நிற்கும் படைகளையும் அரைமணி நேரத்திற் பறந்துசென்று மாய்க்கும் வானக்கப்பல்களும், நீர் மேல் நிற்குஞ் சண்டைக்கப்பல்களை எவரும் அறியாமல் நீருள் மூழ்கிச் சென்று தகர்க்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும், நம் சொல்லளவில் அடங்கா என்னும் எத்தனையோ அரும்பெருங் கருவிகளும் இக்காலத்திற் புதியபுதியவாய்க் கண்டுபிடிக்கப்பட்டு நிலவுகின்றனவே! அவையெல்லாம் உடல் வலிமையால் ஆக்கப்பட்டனவா? அன்றி அறிவு வலிமையால் ஆக்கப் பட்டனவா? எல்லாம் அறிவு வலிமையால் அல்லவோ ஆக்கப் பட்டனவென்று சிறு மகாருஞ் சொல்வர்! இஞ்ஞான்று புதுமையினும் புதுமையாய்க் கண்டுபிடிக்கப்பட்டன வெல்லாம் ஊன் வலிமை யுடையவர்களால் வந்தன அல்ல; மற்றுப் பழமும் பாலும் வித்துக்களுமாகிய சிற்றுணா உண்டு, இரவில் இரண்டு மணிநேரங்கூட உறங்காத அறிஞர் பெருமக்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டன வென்பது, அவர்தம் வரலாறுகளை உணர்வார் நன்கறிவர். மின்சார ஆற்றலின் வகைமைகளை உலகமெல்லாம் வியக்கும்படி புதிய புதியவாய்க் கண்டுபிடித்து விளங்கும் எடிசன் என்னும் அறிஞர்பெருமான் வரலாறே இதற்குச் சான்றாம். ஆகவே, அறிவுவலிமை படைத்தார்க்கே எல்லா வலிமையும் உண்டாகுமல்லாமல், வேறு ஊன் பொதிதாங் கினார்க்கு ஏதொரு வலிமையும் உண்டாகாதென்றுணர்ந்து கொள்க. இதுபற்றியே ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்,

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர் (குறள் 430)

என்றதூஉம், பழைய சங்ககாலத்துப் புலவர் ஒருவர்,

ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்
இனிதே என்றதூஉ மென்க.

இனிக், கண்ணப்பநாயனார் தாமுந் தின்று இறைவனுக்கும் படைத்த விலங்கின் இறைச்சியை இறைவன் ஏற்றுக் கொண்டமை, அவர்தம் வரலாறு கூறும் நூல்களாலும் பாட்டுக்களாலும் நன்கறியக்கிடத்தலின், ஊன் உண்பது இறைவன் கருத்துக்கு மாறாகாதென்று கூறுவாரும் உளர். இவர் கூற்றுப் பொருத்த முடைத் தகாமையினைச் சிறிது விளக்குவாம்; கண்ணப்ப நாயனாரோ வேட்டுவ குலத்திற் பிறந்து, அக் குலத்திற்குரிய வேட்டையாடுந் தொழிலிலும், அத் தொழிலால் வரும் ஊனை உணவாகக் கொள்ளும் வாழ்க்கையிலும் பழகினவர்; வேட்ட மாடுந் தொழில் விலங்குகளுக்குப் பெருந்துன்பந் தருவதென்பது, ஆகவே விலங்குகளைக் கொன்று பெற்ற இறைச்சியை இறைவனுக்குப் படைத்தல் குற்றமென்பதுஞ் சிறிதும் அறியாதவர். இத்தன்மையராகிய அவர், மேற்பிறவிகளிற் செய்த பெருந்தவத்தின் முடிந்த பயனாய், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான சிவபிரானிடத்தில் முதிர்ந்த அன்பு கொள்ளப் பெற்றார். ஒருவர்பால் அளவுகடந்த அன்பு கொள்ளப்பெற்ற பிறரொருவர், தமக்குரிய சிறந்த பொருள்களையும் தாம் நுகரும் சிறந்த உணவுப் பண்டங்களையும் தமக்கென வரைந்து வைத்துக் கொள்ளாது, தாம் அன்பு வைத்தவர்க்கே அவை தம்மை யெல்லாங் கொடுத்து, அவர் நுகர்ந்து மிஞ்சிய மிச்சத்தையே அமிழ்தினுஞ் சிறந்ததாகக் கருதி மகிழ்ந்து தாம் உட்கொள்ளா நிற்பர். இஃது உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் வைத்துச் செவ்வனே அறியப்படுவதோர் அரும்பேருண்மையாம். இவ்வுண்மைக்கு இசையவே, கண்ணப்ப நாயனார் தமக்குச் சிறந்த உணவாகத் தாம் கருதிய முள்ளம்பன்றி மான் மரை கடம்பை முதலான விலங்குகளின் இறைச்சியை முதலில் இறைவனுக்குப் படைத்து, அதன்பின், மிகுந்ததைத் தாம் அயின்று, இறைவனது அருட் குறியினை அகலாது உடனிருந்து அன்பினால் அகங்கரைந்து நீராய் உருகினார். எம்பால் அன்பு மீதூரப் பெற்றார் ஒருவர், எமக்குள்ள அறிவு இல்லாராய், யாம் விரும்புவது இன்ன தென்றும் உணராராய்த், தாம் சிறந்ததாகக் கைக்கொண்ட ஒரு பண்டம் எவ்வளவு எம்மால் அருவருக்கப் படுவதாயினும் அதனைத் தாம் அறியாமே, எம்பால் அதனை நெக்குருகும் நெஞ்சத்தோடும் உய்த்து, அதனை ஏற்றருள்க என எம்மைக் குழைந்து குழைந்துருகி வேண்டிடுவராயின்; அத்துணை அன்புடைய அவரது வேண்டுகோளை யாம் ஏலாதிருத்தல் இயலுமோ! இயலாதன்றே. சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய எம் போன்றார்க்கே, பேரன்புடையார் செய்யும் அன்பின் வரிசைகளை ஏலாமல் மறுத்தல் இயலாதென்றால், அன்பின் உருவாய்த் திகழும் ஆண்டவன் தன்னடியவர் தன்பால் வைத்த அன்பின் பெருக்காற் செய்யும் அன்பின் அடையாளச் செயல்களை – அவை அன்பில்லாத ஏனை உலகத்தவர்க்கு எத்துணை இழிந்தனவாக, எத்துணை இசையாதனவாகக் காணப்படினும், ஏலாதொழிவனோ? தன்பால் அன்பு மிக்க தன் இனிய மகவு தன் கையிற் கிடைத்த ஓர் அருவருப்பான பண்டத்தைத் தன் வாயில் வைத்துண்ணுமாறு வற்புறுத்துகையில், தாயானவர் எவ்வளவு மகிழ்வோடு அதனை வாங்கி, அஃது இழிந்ததேயாயினும் உண்ணத் தக்கதாயிருந்தால் உண்டு விடுகின்றாள்! உண்ணத் தகாததாயிருந்தால் அதனை உண்பது போற் காட்டி அதனை அப்புறம் மறைத்து அம் மகவினை மகிழ்வித்துத் தானும் மகிழ்கின்றாள். இங்ஙனமே, அன்பின் பெருக்காற் கண்ணப்ப நாயனார் படைத்த ஊன் உணா, இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுந் தகுதியுடைத்தன்றேனும், அவரது பேரன்பின் பெற்றி நோக்கி, அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுபோல் தோன்றலாயிற்று. ஆகவே, அன்பினுருவான ஐயன் அடியார்க்கு எளியனாந் தன்மை யனாதலால், அவன் அவர் பொருட்டுச் செய்பவைகளை யெல்லாம் அவன்றன் திருவுளத்திற்கு ஒப்பனவாகக் கூறுதல் அடாதென்றுணர்க. தாய்க்கு ஆகாதவைகளைக் குழந்தை ஆவனவாகக் கருதி அன்பினாற் செய்யுமாயின், அவை தம்மைத் தாயானவள் தனக்கும் ஆமெனக் கொண்டனளெனக் கூறுதல் ஒக்குமோ, உரைமின்கள்! அன்பர்களே! அதுபோலவே, கடவுளுந் தமது திருவுளத்துக்கு இசையாதவைகளை ஆமெனக் கருதித் தம் அன்பர்கள் கரைகடந்த அன்பின் பெருக்காற் செய்குவராயின், அவைதம்மை ஆண்டவன் அருண்மிகுதியால் ஏற்பதுபோற் காட்டி அவர்தம்மை மகிழ்விப்பன் என்றுணர்தல் வேண்டும்.

அஃதொக்குமாயினும், அன்பின் முதிர்ச்சியாற் கண்ணப்பர் படைத்த புலாலை இறைவன் உண்மையில் ஏற்றனன் அல்லன் என்பதற்கும், புலாலுணவு கொண்டமையாற் கண்ணப்பர்க்கு உண்டான தீவினையைக் கழித்தே இறைவன் அவரைத் தன் திருவடிக்கண் ஏற்றருளினன் என்பதற்கும் அடையாளம் உளதோவெனிற், காட்டுதும்: பிற உயிர்க்குக் கடுந்துன்பத்தைத் தருங் கொலைத் தொழிலைச் சிறு பிள்ளையாயிருந்த காலந் தொட்டே பழகி வந்தவர்க்குத், தாம் செய்யும் அத்தொழிலால் அவ்வுயிர்கள் எவ்வளவு துன்பத்தை அடைகின்றன என்னும் உணர்ச்சி சிறிதும் உண்டாகாது. இங்ஙனத் தாம் சிறிதும் உணராதே அக் கொலைத் தொழிலை வழக்கமாய்ச் செய்து வருகுவரேனும், அக்கொடுந் தொழிலால் வருந்தீவினை அவரை விட்டகலாது; பிறவிகடோறும் அவரைத் தொடர்ந்து சென்று பலவாற்றானும் அவரைத் துன்புறுத்தாநிற்கும். இத்தகையோர் இறைவன் திருவடிப் பேரின்பத்தைப் பெறுதற்குரிய பேரன்பு மிகப் பெற்றாரானாலும், அவர்தாம் செய்து போந்த கொலைத் தொழிலாற் பிற உயிருக்குண்டான கொடுந்துன்பத்தை உணர்ந்து, தாமும் அவ்வுயிர்போற் கொடுந்துன்பம் உழந்து துன்பத்திற்குத் துன்பம் ஈடுகொடுத்தால் அல்லாமல், அவர் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்குந் தீவினையை யொழித்துச் சிவத்தின் அருளைப் பெறமாட்டார். ஆதலாற், கண்ணப்ப நாயனார் கடவுளிடத்து அளவுபடாப் பேரன்பு கொண்டாராயினும், அவர் அதுகாறுஞ் செய்து போந்த கொலைத் தொழிலாற் பிறவுயிர்க்குண்டான பெருந்துன்பத்தின் அளவையுணர்ந்து, அத் துன்பத்திற்குத் தாமும் பெருந் துன்பம் எய்தி ஈடுசெலுத்த வேண்டுவது இன்றியமையாததாயிற்று; அவ்வாறு செய்தாற்றான் அவரைக் கவிந்த பெருந்தீவினை அகலும்; அத் தீவினை அகன்றாற்றான் அவர் சிவத்தின் அருளைத் தலைக் கூடுதல் வாய்க்கும். ஆனது பற்றியே, எல்லாம் வல்ல இறைவன் கண்ணப்பரின் பேரன்பை உலகத்தார்க்குப் புலப்படுத்தல் வேண்டியும் அவர் அதுகாறுஞ் செய்துவந்த கொலைத் தொழிலால் விளைந்த தீவினையைக் கழித்தல் வேண்டியும் தன் திருவுருவத்தின் வலது கண்ணில் நோய் மிகுந்து நீர் வடிவதுபோற் காட்டினான். அதனைக் கண்ட கண்ணப்பர் ‘எம்பெருமான் றன் கண்ணுக்கு வந்த இந்நோயை எங்ஙனந் தீர்ப்பேன்! என்று எண்ணியெண்ணி ஏங்கி ஆற்றா ராயினார். முடிவாக, அவரிருந்த வேட்டுவவாழ்க்கையில், உணவாக இடுதற்கும் நோய் தீர்த்தற்கும் உரித்தாவது இன்னது தான் என்பது புலனாயிற்று; தாமுந் தம்மையொத்த மற்ற வேட்டுவர் உடம்பும் ஊனாற் சமைந்தவையாதலால், ஊனுக்கு ஊனையிடுதலே பசி தீர்த்தற்கும் நோய் தீர்த்தற்கும் இசைந்த முறையாகும் என்று கண்டறிந்தார். அவரது வேட்டுவ வாழ்க்கையின் அளவுக்கு அவரது அறிவு கண்ட முறை அத் துணையேதான். அவ்வறிவு தோன்றியவுடன் அவரடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இல்லை. எம்பெருமானுக்கு வந்த இக் கண்ணோயைத் தீர்க்க என் கண்களில் ஒன்றைப் பிடுங்கி, நோய்கண்ட கண்ணில் அப்பக் கடவேன் என்று மனந்துணிந்து எழுந்து, ஆண்டவன் திருவுருவத்தின் அருகே சென்று, தமது ஒரு கூரிய அம்பின் முனையால் தமது ஒரு கண்ணை அடியோடு கல்லியெடுக்கலானார். பாருங்கள், அன்பர்களே! இந்நேரத்தில் அவர் தம் உடம்பும் உயிரும் எவ்வளவு துன்புற்றுத் துடிதுடித்திருக்கும்! பிறவுயிரை அவற்றின் ஊனின் பொருட்டுக் கூர்ங் கணையாற் குத்திக்கொன்ற காலங்களில், அவை எவ்வளவு துன்புற்றுத் துடிதுடித்திருக்கும்! அவ்வளவு துன்பத்திற்கும் இப்போது கண்ணப்பர் தமது கண்ணைக் குத்திக் கல்லி எடுக்கின்றகாலையில் தாமும் துன்புற்று துடிதுடித்து ஈடு கொடுத்தவராயினார்! ஐயறிவுடைய சிற்றுயிர்களின் துன்ப உணர்ச்சியானது, ஆறறிவுடைய மக்களின் துன்ப உணர்ச்சியினும் பலபடி குறைந்தது. இவ்வேறுபாடு வெட்டுண்ட ஓர் ஆட்டின் உடம்புக்குள்ள துடிதுடிப்பையும் அங்ஙனமே வெட்டுண்ட ஓர் ஆண்மகனுடம்புக்குள்ள ஆற்றொணாத் துடிதுடிப்பையும் கண்ட ஒருவர்க்கே தெரியும்; மேலுஞ், சிற்றுயிர்களாவது பிறர் கையாற் கொல்லப்படுகின்றன; இங்குக் கண்ணப்பரோ தமது கையாற் றம் கண்ணைக் கிண்டி எடுக்கின்றார்! இஃது எவ்வளவு கொடுந்துன்பம்! அதுவேயுமன்றி, ஒருவன் தன் கழுத்தைத் தானாகவே விரைந்து வெட்டிக் கொள்வானாயின், அவன்றன் உயிரும் உணர்வும் விரைவில் அவனது உடம்பைவிட்டு அகலும்! அதனால் துன்ப உணர்ச்சி நெடுக இராது; ஆனால், இங்குக் கண்ணப்பரோ தமது உடம்பின்கண் தம் உயிரும் உணர்வும் நிலைபெற்றிருக்கும் நிலையில் தமது கண்ணைத் தோண்டி யெடுக்கின்றார்; ஆ! ஈது எவ்வளவு தொடர்பான துன்பத்தைத் தருஞ்செயல்! இவ்வளவு கொடுந் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு, அவர் கடவுள்பாற் காட்டிய பேரன்பின் திறம் புல்லிய எம் ஒரு நாவால் விளம்பலாந் தன்மைத்தோ! இவ்வளவிலாவது சிவபிரான் அவரை விட்டனரா! இல்லை! இல்லை! கண்ணப்பர் தமது ஒரு கண்ணைப் பிடுங்கி அப்பிய வுடன், சிவபிரான் தமது ஒரு கண்ணிலிருந்து நோய் தீர்ந்து விட்ட அடையாளங் காட்டினான். அது கண்டு கண்ணப்பர் மெய்ம்மறந்த களிப்புடையராய் ஆடினார்; பாடினார்! ஆனால், மற்றைநாள் இறைவன்றன் மற்றொரு கண்ணிலும் நோய்மிகுந்து அதிலிருந்தும் நீர்வடியலாயிற்று. இப்போது கண்ணப்பர்க்கு அது தீர்க்கும் மருந்து தம்மிடம் இருப்பது நன்கு தெரியுமாதலால், அதுபற்றி மிகுதியாய்க் கவலை கொண்டிலர். உடனே தமது மற்றொரு கண்ணையுந் தோண்டி எடுக்க முனைந்தனர். ஆனால், எஞ்சியுள்ள இவ்வொரு கண்ணையுங் கல்லி யெடுத்துவிட்டால், இறைவனுருவத்தில் உள்ள கண்ணில் அதை அப்புவதற்குத் தமக்குப் பார்வை தெரியாதே என்று கலங்கினார். அதன்பின், தமது காற்பெருவிரலை இறைவனுருவில் நோய்கண்ட கண்ணின் அருகே அடையாளமாக வைத்துக் கொண்டால் தாம் பிடுங்கும் மற்றக் கண்ணையும் அதில் அப்பிவிடலாமென்று வழி தெரிந்தார். தெரிந்ததும் அகங்களித்துத் தமது இடது காற் பெருவிரலை அங்ஙனமே அடையாளமாக வைத்துக்கொண்டு, தமது மற்றைக் கண்ணையுங் கல்லியெடுத்தற்கு அம்பின் முனையை ஊன்றினார். அவ்வளவில் அவர்தாஞ்செய்த கொலைத் தொழிலால் விளைந்த தீவினையும் ஒழிந்தது; அவர் முற்றுந் தூயரானார். கரைகடந்த அன்பினால் உளந் தூயராய கண்ணப்பரை மேலுந் துன்புறுத்த அருட்பெருங் கடலான ஆண்டவன் திருவுள்ளம் இசையவில்லை; உடனே,

நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!என்அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!

என மும்முறை கூறிச் சிவபெருமான் தனது திருக்கையினாலே அவரது கையைப் பிடித்துத் தடைசெய்து அவரைத் தனது திருவருட் பேரின்பத்திற் கலப்பித்துக் கொண்டனன். பார்மின்கள் அன்பர்களே! எல்லா உயிர்க்குந் துணைவனாகிய இறைவன் சிறிதும் நடுநிலை தவறானாய், அன்பிற் றலைநின்ற கண்ணப்ப நாயனாரையும், அவர் சிற்றுயிர்களைக் கொன்ற தீவினைக்கு அவர் தாமே தமது கண்ணைக் கல்லியெடுக்குமாறு செய்தும், அவ்வாற்றால் உயிர்க்கொலையின் துன்பம் இத்துணைக் கொடி தென்றுணர்ந்து அதற்கு அவர் தாமுந் துன்புற்று ஈடு கொடுக்குமாறு தூண்டியும் ஒறுத்து, அதன் பின்னரே அவரைத் தன் திருவடிப் பேரின்ப வாழ்க்கையில் அமர்வித்தன னென்றாற், கண்ணப்பரின் கரையிகந்த அன்பில் ஓர் அணுத்துணை தானும் இல்லாத மற்ற மக்கள் பிற உயிர்களைக் கொன்றெடுக்கும் ஊனைத்தின்று பெருக்குந் தீவினைக்காக அவரைத் துன்புறுத்தாது விடுவனோ! உயிர்க்கொலை செய்வாரெல்லாம் ஊன் தின்பா ரெல்லாந் தாஞ் செய்யுந் தீவினைக்குப் பிறவிகடோறும் அளவிறந்த துன்பத்தை யடைந்து ஈடுகொடுத்தே தீரல்வேண்டும். இவ்வுண்மை பட்டினத்தடிகளாலும்,

கொன்றனை அனைத்தும் அனைத்தும்நினைக்
கொன்றனதின்றனை அனைத்தும் அனைத்தும் நினைத் தின்றன

என்று அறிவுறுத்தப்பட்டமை காண்க. இவ்வுண்மை யுணராதார் கொன்றதனால் உண்டாகுந் தீவினை, கொன்ற உயிரின் ஊனைத் தின்பதனாற் போய்விடும் என்று செருக்கி யுரைக்கின்றார்கள்! இஃது அறியாமையேயாகும்; ஏனென்றாற், கொன்ற உயிரின் ஊனைத் தின்பதனாற் கொன்ற தீவினை எவ்வாறு நீங்கும்? ஒருவனைக் கொன்றவனை ஏன் தூக்கிலிட்டுக் கொல்லுகிறார்கள்? கொலைத் துன்பத்திற்குக் கொலைத் துன்பமே ஈடாகும் என்பது பற்றியன்றோ? ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்று மகிழ்பவன், தான் செய்த கொலைத் துன்பத்திற்கு ஈடாகத் தானுங் கொலைத்துன்பம் அடைந்தான் ஆவனோ! ஆகவே, சிற்றுயிர்களை ஊனின் பொருட்டுக் கொல்வா ரெல்லாம், தாம் மறுபிறவியிற் சிற்றுயிர்களாய்ப் பிறக்கத், தாம் கொலைசெய்த அச் சிற்றுயிர்கள் மக்களாய்ப் பிறந்து அவை தம்மைக் கொன்று தின்றாற்றான் அப் பாவம் நீங்கும் என்பதே, கொன்றாற் பாவம் தின்றாற்போம் என்னும் பழமொழியின் மெய்ப்பொருளாகுமென்று அறிமின்கள்! எனவே, இறைவன் அன்பின் மிக்க தன் அடியவர் உயிர்க்கொலை செய்திருந் தனராயின், அவரை அத் தீவினைக்குத் தக்கபடி துன்ப ஈடு கொடுக்கச் செய்தே பின்னர்த் தன் திருவடிக்கண் ஏற்றருள்வ னென்பதைக் கடைப்பிடித் துணர்மின்கள்! ஆகவே, கண்ணப்பர் விலங்குகளைக் கொன்று ஊனைத்தின்ற குற்றத்தை இறைவன் ஏற்றனன் அல்ல னென்பதூஉம், அக் குற்றந் தீரும் பொருட்டாகவே அவர்தமது கண்ணைத் தாமே இடந்து அப்புமாறு செய்தன னென்பதூஉம் அறிந்து கொள்ளல்வேண்டும்.

அஃதொக்கும், இறைவனை நேரே கண்டு, மூன்றாண்டுச் சிறுகுழவியா யிருந்த ஞான்றே எல்லாம் ஓதாதுணர்ந்து, அருளொழுக்கத்தையே வலியுறுத்துஞ் சைவசமயத்தை நிலைநாட்டினவரான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தாம் அருளிச்செய்த தில்லைப்பதிகத்திற் பறப்பைப்படுத் தெங்கும் பசுவேட்டு எரியோம் புஞ், சிறப்பர் வாழ்வதில்லை என்னுஞ் செய்யுளில் உயிர்க்கொலை வேள்வி செய்த தில்லை வாழ் அந்தணரைச் சிறப்பர் என்று உயர்த்துப் பாடியதென்னை? அதனால், உயிர்க் கொலை செய்தல் குற்றம் அன்றென்பது அவர்க்கும் உடன்பாடுபோலு மெனின்; அற்றன்று; அஞ்ஞான்றிருந்த தில்லையந்தணர்கள் சிவபிரான் மாட்டு எல்லையற்ற அன்புடையவர்கள். வடக்கிருந்து வந்த ஆரியர் செய்த வேள்விகள் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானை நோக்கிச் செய்யப்படாமல், இந்திரன் வருணன் மித்திரன் முதலான பிறந்திறக்குஞ் சிறு தெய்வங்களை நோக்கியே செய்யப்பட்டன. அதுகண்ட தில்லையந்தணர்கள், அவ்வாரியப் பார்ப்பனர்க்கு நல்லறிவு கொளுத்தும் பொருட்டு, அவர் செய்து போந்த வேள்விகளுட் சிறந்தன சிலவற்றைத் தாமுந் தழுவி, அவை தம்மைச் சிவபிரான், ஒருவர் மேலனவாகவே வைத்து வேட்கலாயினர்; அங்ஙனம் வேட்குமிடத்தும், ஆரியரைப் போல் ஆயிரக்கணக்கான ஆடு மாடு குதிரை எருமை முதலான உயிர்களைக் கொல்லாமல், ஏனைமக்களெல்லாம் நாடோறும் உணவுக்காகப் பல்லாயிரக்கணக்காய்க் கொல்லும் ஒருசில ஆடுகளையே மந்திரங்களால் உணர்விழக்கச் செய்து கொன்று வேட்பாராயினர். மந்திரங்களால் உணர்விழந்த அவ்வாடுகளுக்குத் துன்ப உணர்ச்சி சிறிதுமே இல்லையாகும். இஞ்ஞான்றும் உடம்பின் உள்நோய் உடையார் சிலரை அறுத்து நோய் தீர்க்கும் மருத்துவர், மயக்க மருந்து ஒன்றால், அந்நோயாளிகளை உணர்விழக்கச் செய்து, அவர்க்குச் சிறிதுமே துன்பம் இல்லாமல் அவர்தம் உடம்பை அறுத்து மருத்துவஞ் செய்தல் போலவும், யோக நித்திரை என்னும் அறிதுயிலை வருவிக்கப் பழகினவர்கள் அத்துயிலை வருவிக்கும் முறையால் அங்ஙனமே நோயாளி களையும் பிறரையும் உணர்விழக்கச் செய்து அவர்தம் உடம்புகளை அவர்க்குச் சிறிதுந் துன்பம் உண்டாகாமல் அறுத்து நோய் தீர்த்தல் போலவும், பண்டைக்காலத்து அந்தணர்கள் தாம் வேட்பதற்குக் கொணர்வித்த விலங்குகளை மந்திரங்களால் உணர்விழக்குமாறு செய்தே அதன்பின் அவற்றை வெட்டி வேட்டனர். இவ்வாறு விலங்குகளுக்குச் சிறிதுந் துன்பம் உண்டாகாவண்ணம் அவற்றை உணர்விழக்கச் செய்யும் அறிதுயில் முறையினை (Anaesthesia) நம் பண்டைமக்கள் அறித்திருந்தன ரென்பது, இருக்குவேத முதல் மண்டிலத்தின், 162 ஆம் பதிகத்தில் ஈற்றில்,

நீ கடவுள் பாற்செல்லும்போது நின்
உயிர்மூச்சுநினக்குத் திணறுதலை உண்டாக்காதிருக்க!
கோடரியானது நின் உடம்பை ஊறுபடுத்தாததாக!
திறமையில்லாது விரைந்துபிழைபடும் வெட்டுக்காரன்நின் உறுப்புகளைப் பிழைபடப் பிளவானாக!உண்மையாகவே நீ இங்கே சாகின்றிலை!
நீ ஏதும்ஊறுபட்டுத் துன்புறுகின்றிலை!
நீ சீரான எளிய நெறியால் தேவர்கள்பாற் செல்லு கின்றனை

எனப் போந்த மந்திர மொழியால் நன்கு புலனாகும். நன்று சொன்னீர்; இருக்குவேத பதிகங்கள் பாடப்பட்ட அத்துணைப் பழையகாலத்தே, அறிதுயில் முறைகளைப் பண்டை மக்கள் அறிந்திருந்தனரென்பது நம்பற்பால தன்றாமெனிற்; கடலிடையேயுள்ள தீவுகளில் வாழுங் காட்டுமிராண்டி மக்களும் இவ் வறிதுயில் முறையினை நன்கறிந்திருக்கின்றனரென, அத் தீவுகளிற் சென்று அவர்தம் வாழ்க்கையின் இயல்புகளை ஆராய்ந்து கண்டு வந்த ஐரோப்பிய அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர்.4 நாகரிக அறிவில்லாக் காடவர்களும் இம் முறையினைத் தெரிந்துளராயின், நம் முதுமக்கள் இதனைத் தெரிந்திருந்தனரென்பதிற் புதுமையும் மாறுகோளாவதும் ஏதுமில்லையென்க. இனி எத்தகைய உயிர்களையும் அறிதுயில் முறையில் தேர்ச்சிபெற்ற ஒருவர் ஒரு நொடிப் பொழுதில் உணர்விழக்கச் செய்யலாம் என்பதும், இன்னும் இதுபோன்ற அறிதுயில் நுட்பங்களும் ‘யோகநித்திரை என்னும் எமது நூலில் விரித்து விளக்கப்பட்டிருக்கின்றன; அவைதம்மை அதன்கட் கண்டு கொள்க.

இவ்வாறு அறிதுயில் முறையால் ஒருசில ஆடுகளை உணர்விழக்கச் செய்து சிவபெருமானுக்கு வேட்டு, அவ்வாற்றால் ஆரியர் செய்து போந்த பல சிறு தெய்வவெறியாட்டு வேள்விகளை நிறுத்தி வந்த தில்லைவாழந்தணர் தம் அன்பின் செயல் பாராட்டற்பாலதா யிருந்தமையின், திருஞானசம்பந்தப் பெருமான் அவர்தம்மை அங்ஙனஞ் சிறப்பித்துப் பாடினார் என்பது. அற்றன்று, ஆரியர் செய்து போந்த கொலைமலிவேள்வியை நிறுத்த விரும்பிய தில்லையந்தணர், தாம் அவைபோன்ற வேள்வி புரியாதிருத்தலே நன்றாகுமன்றித், தாமும் அவர்போற் செய்தல் நன்றாமாறு யாங்ஙனமெனின்; யானை பிடிப்பவன் யானையைக் கொண்டே அதனைப் பிடிப்பிப்பன்; அதுபோல், ஆரியப் பார்ப்பனரைச் சைவ வொழுக்கத்திற்குத் திருப்பல் வேண்டிய தமிழந்தணரும் அவர்போற் றாமுஞ் சிறிது சிறிது நடத்திக் காட்டினாலன்றி, அவர் தம்மைத் தம்வழிப்படுத்தல் ஆகாது; அது கண்டே, அவர் தம்மை அவரோடு இனப்படுத்திக்கொண்டு அவ்வாறு செய்யலாயினர். இங்ஙனம் செய்யாது விட்டால், ஆரியப் பார்ப்பனர் தமிழந்தணரைத் தமக்கு முற்றும் புறம்பானவராகக் கருதி, அவர் கூறுஞ் சைவ அருளொழுக்கத்தைக் கைப்பற்றாது அகன்று ஒழுகுவர். ஆரியப் பார்ப்பனர்தம் வேள்வி முறைகளை முற்றும் மறுத்தமையினாலல்லவோ பௌத்த சமண சமயங்கள் புறச்சமயங்களென அவர் தம்மால் அறவே விலக்கப்பட்டு, அவற்றின் அரிய அருளொழுக்கக் கோட்பாடுகளும் அவர் தம்மாற் றினையளவுந் தழுவப்படாதொழிந்தன; ஒழியவே, அப்பௌத்த சமணசமயங்கள் இந்நாட்டில் நிலைக்களன் காணாதும் மறைந்து போயின. ஆகவே, இந்நுட்பம் உணர்ந்த பண்டைத் தமிழ்நாட்டுச் சான்றோராகிய தமிழந்தணர்கள், ஆரியப் பார்ப் பனரைத் தம் வழிப்படுத்துதற் பொருட்டாகவே, அவர்தம் வேள்வி முறைகளைத் தாமுந் தழுவுவது போற் சிறிது சிறிது செய்து காட்டிப், பின் காலஞ் செல்லச் செல்லப் படிப்படியே எவ்வகை வேள்வியுந் தமிழ்நாட்டில் வேட்கப்படாதபடி அவைதம்மை அறவே நிறுத்திவிட்டனர். வேள்வி யாற்றுதலை நிறுத்தியபின், ஆரியர் தம்மை விட்டு விலகி மீண்டுஞ் சிறுதெய்வ வணக்கத்தைக் கைப்பற்றுவரெனக் கருதியே, அவர் கொணர்ந்த ஆரியச் சிறு தெய்வப்பாட்டுகளாகிய இருக்கு. யசுர், சாமம், அதர்வம் முதலிய வேதங்களைத் தம்முடைய சிவபிரான் திருக்கோயில்களில் ஓதுதற்கும், ஆரியமொழிச் சொற்களாற் சிவபிரானை வழிபடுதற்கும், ஆரியச் சிறு தெய்வங்களான இந்திரன் வருணன் முதலியவற்றின் வடிவங்களைச் சிவபிரான் கோயில் மூலைகளில் வைத்து வணங்குதற்கும், தமிழ்நாட்டில் நிகழ்ந்த இறைவன் திருவிளையாடல்களையும் அடியார் வரலாறுகளையும் எல்லாம் ஆரியரின் வடமொழியில் எழுதி வைத்தற்கும், சரியை கிரியை யோகம் ஞானம் என்னுங் கடவுள் வழிபாட்டு முறைகளையெல்லாம் ஆகமம் எனப்பெயர் தந்து வடமொழியில் எழுதிவைத்தற்கும் ஒருப்பட்டு நின்று, ஆரியர் செய்து போந்த சிறுதெய்வ வணக்கத்தை அடியோடு நிறுத்தி, அவரெல்லாஞ் சிவபிரானாகிய முழுமுதற் கடவுள் ஒன்றையே வழிபட்டுக் கொலை குடி புலாலுணவு நீக்கி முற்றுஞ் சைவவொழுக்கத்தினராகும்படி செய்து, தாம் கொண்ட மிகவுயர்ந்த நல்லெண்ணத்தை நிறைவேற்றிவிட்டனர். துவக்கத்தில் மிகவும் பரபரப்போடு விரிந்து பரவிய பௌத்த சமண சமயங்களின் முனிவர்களாலுந் திருத்த முடியாமல், தம்மைத் திருத்த முனைந்த அப்பௌத்த சமண சமயங்களையும் இந்நாட்டைவிட்டு ஓட்டிய ஆரியரைத், தமிழந்தணர்கள் முற்றுந் திருத்தி அவர் சைவ அருளொழுக்கத்தைக் கைப்பற்றும்படி செய்தனரென்றால், நம் தமிழந்தணர்தம் அறிவின் நுட்பத்தையும் அருளாற்றலையும் எங்ஙனம் எடுத்தியம்பவல்லேம்! ஆதலால், அன்பர்களே! தில்லை வாழந்தணர்கள் அஞ்ஞான்று வேட்ட வேள்விகள் ஆரியரைத் திருத்துதற்பொருட்டுச் சிவபிரானை நோக்கிச் செய்யப்பட்ட கருத்துணர்ந்தே, திருஞானசம்பந்தப் பெருமான் பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் என்று அவர்தம்மை உயர்த்துப் பாடினார். பல்லாயிர உயிர்களைக் காக்கும் பொருட்டு ஒரு சில உயிர்களைக் கொல்லுதல் குற்றம் ஆகாமை அரசியல் முறைக்கும் ஒத்ததே யாகலின், ஆரியர்வேட்ட பல்லாயிரக் கணக்கான உயிர்க்கொலையை நிறுத்துதற் கருவியாய்த் தில்லை வாழந்தணர் எல்லாம் வல்ல இறைவனை நோக்கிச் சில்லுயிர் வேட்டுச் செய்த வேள்விகளுங் குற்றமாகா ஆயின. ஆரியர் சென்ற வழியே சிறிது தாமுஞ் சென்று தமிழந்தணர்கள் அவரைத் திருத்தினமையினாலேதான், தமிழ்நாட்டிலுள்ள, ஆரியப் பார்ப்பனர் எல்லாருங் கொலைபுலை மறுத்த சைவவொழுக்கத் தினராய் இன்று காறும் வாழ்ந்து வருகின்றனர். மற்றுப் பௌத்தமும் சமணமும் மிகப் பரவியிருந்த வடநாட்டிலுள்ள ஆரியப் பார்ப்பனரோ சைவவொழுக்கஞ் சிறிதும் இல்லாராய் இன்றுகாறும் புலாலுணவு கொண்டு காலங் கழிப்பவராய்ச் சிவபிரானை வழிபடாதவராய் இருக்கின்றனர்; இஃது எதனாலென்று ஆராய்ந்து பார்ப்பின், பௌத்த சமண மதங்கள் ஆரியரொடு ஒருசிறிதும் ஒவ்வாது அவர்க்கு முற்றும் மாறாய் நின்றதனாலேயே, ஆரியர் அவரை எட்டுணையும் பின்பற்றாது தாம் செய்து போந்த உயிர்க்கொலைச் செயலிலே நிலைநின்றன ரென்பது புலனாகும். இவ்வாற்றால் ஆரியரைத் திருத்திய தமிழ்ச் சான்றோரின் பேரறிவும், அவரைத் திருத்தமாட்டாது தாமும் மறைந்தொழிந்த பௌத்த சமண சமயத்தினர்தஞ் சிற்றறிவும் எவர்க்கும் நன்கு விளங்கும். எனவே, திருஞானசம்பந்தர் தில்லைவாழந்தணர் தம் ஒழுகலாற்றை உயர்த்துப் பேசியது வாய்வதேயாமென்க.

அவ்வாறு அவர், அவர்தம் ஒழுக்கத்தை உயர்த்துரைப்பினும், தாம் தம் வாழ்நாள் எல்லையில் எங்கும் வேள்வி செய்ததுமில்லை; அது செய்யுமாறு பிறரை ஏவியதுமில்லை. தம் தந்தையார் வேள்வி செய்ய விரும்பி அதன் செலவுக்காகப் பொருள் வேண்டிய காலையில், அவர் கட்ட பொருளைத் தந்து அவரை விடுத்தனரேயல்லாமல், தந்தையார் வேட்ட வேள்விக் களத்திற்குத் தாம் சென்றிலர். இதனால், வேள்வி வேட்டலில் திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறிதும் உடம்பாடில்லை யென்பது தெற்றெனப் புலனாதல் காண்க.

இனிக், கோழி நீர்க்கோழி தாரா (வாத்து) முதலியவற்றின் முட்டைக்கும், புற்பூண்டுகட்கும் அவற்றின் பயனான காய் கனி வித்துக் கிழங்குகட்கும் வேறுபாடு இல்லாமையின், முட்டையை யுஞ் சைவ உணவுப்பொருள்களில் ஒன்றாக வைத்து உண்பது குற்றமாகாதென ஒருசாரார் கூறுகின்றனர். ஆராய் தலின்றி யுரைக்கும் இவரதுரை சிறிதும் பொருத்தமுடைத்தன்று. ஒரு முட்டையானது உருவாகாத ஒரு கோழிக்குஞ்சே யாகும்5 என்று ஆங்கில இயற்கைப்பொருள் நூலார் ஆராய்ந்துரைக் கின்றமையின் அது புற்பூண்டுகளை யொப்பதாமென்றல் அறியா வுரையாகும். கோழியால் அடைகாக்கப்படும் முட்டைகளிலிருந்து சில நாட்களிற் கோழிக் குஞ்சுகள் வெளிவருதலை எவரும் அறிவர். அதுபோல் புற்பூண்டுகளையும் அடைகாக்க வைத்தால் எத்தனை நாளாயினும் அவற்றிலிருந்து கோழி நீர்க்கோழி தாரா முதலியவற்றின் குஞ்சுகள் வெளிவரக் கண்டதுண்டோ? இல்லையே. ஆகையால், முட்டைகளையும், புற்பூண்டுகளையும் ஒன்றென்றல் மடவோருரையாம். மேலும், முட்டைகளின் வெள்ளைக்கரு மஞ்சட்கருவிற் புற்பூண்டுகட் கில்லா முடை நாற்றம் இருத்தலானும், அக்கருவிலிருந்தே சில நாட்களில் என்பு தோல் நரம்பு இரத்தம் மூளை முதலிய உறுப்புக்களெல்லாஞ் செவ்வனே அமைந்த கோழிக்குஞ்சி னுடம்பு வெளிவரக் காண்டலானும், அதுபோல் நிலையியற் பொரு ளாகிய புற்பூண்டுகள் அவற்றின் பயன்களிலிருந்து இயங்கியற் பொருள்களாகிய கோழி குருவி கொக்கு மீன் ஆடு மாடு முதலியன உண்டாகக் காணாமையாலும் முட்டையானது சைவ உணவுப் பொருள்களில் அடங்குமென்றல் ஒருவாற்றானும் அடாது. அதுவேயுமன்றிச், சில உயிர்கட்குப் பெரிது பயன் படும்படி இறைவனால் தரப்பட்ட உடம்புகள் உருவாவதற்கு நிலைக்களனாகிய முட்டைகளை அழிப்பது, அவ்வுயிர்களின் உடம்பை அழிப்பதே யாவதல்லாற் பிறிதின்மையின், அதுவுங் கொடிய கொலைப் பாவமேயாதல் திண்ணம் என்றறிக.

இனி, இஞ்ஞான்றுள்ளாரும் மருத்துவர் சிலரும் முட்டை தின்பது உடம்பின்நலம் பேணுவதற்குச் சிறந்ததாமென்று எண்ணுவதுஞ் சொல்லுவதும் உண்மைக்கு மாறுபட்டனவாயிருக்கின்றன. ஏனென்றால், மக்களுடம்பிற் சூட்டினைத் தோற்றுவித்துக் கொழுப்பினை வளர்ப்பதற்கு இன்றியமையாது வேண்டப்படும் இனிப்புணா (Carbo – hydrates) என்னும் பொருள், முட்டைக் கருவிற் சிறிதுமே யில்லை யென்றும், நரம்பு நரம்பின்றசை மூளை சிறு நரம்புகளென்னும் இவற்றை வலிவேற்றி வளர்ப்பதற்கு இன்றியமையாது வேண்டப்படும் முதலுணா (Protein) என்னும் பொருள் முட்டைக்கருவில் மிகக் குறைவாகவே இருக்கின்றதென்றும், முட்டையுணவு தீனிப்பையில் எளிதிற் செரிப்பதில்லை யென்றும்6 ஆங்கில ஆசிரியர் நன்காராய்ந் துரைக்கின்றமையின், முட்டையுணவு மக்களுடம்புக்கு ஏற்றதல்லாத தாவதுடன், அஃது ஓருயிரினுடம்பை அழிக்குந் தீவினையையும் உண்டாக்குவதாமென்று ஓர்ந்து கொள்க. எனவே, முட்டையுணவும் புலாலுணவேயாய் விலக்கற்பாலதா மென்க.

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
– முற்றும் –

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!