
பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்
மறைமலையடிகள்
2. பொருந்தா உணவுகள் -1
கடவுளால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இயற்கை உணவுப் பொருள்கள் மரஞ்செடிகொடிகளின் பயனான இலை பூ காய் கனி விதை கிழங்கு முதலானவைகளேயாம். மக்களேயல்லாமல் அசையும் பொருள்களாகிய எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் இயற்கை உணவான அசையாப் பொருள்களாகிய பயிர் பச்சைகளேயாம். இதனை எதனால் அறிகின்றோமெனின்: அசைந்து திரியும் உயிர்களில் ஒன்று மற்றொன்றைப் பிடித்துத் தின்ன முயலுங்கால் மெலியது தனதுயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மிகவும் விரைந்தோடித் தப்பிப் பிழைப்பதனைக் கண்டு அறிகின்றேம். இவ்வாறு அசைந்தோடும் உயிர்களில் மெலியது வலியதற்கு இரையாகாமல் தப்பியோடிப் பிழைத்தற்கு ஏற்ற உடம்பின் அமைப்பை இறைவன் இயங்கும் உயிர்கள் எல்லா வற்றினிடத்தும் அமைத்து வைத்திருக்கின்றான். ஒவ்வொருகால் மெலியது தப்பி ஓட வகையின்றி வலிய வுயிரினிடத்து அகப்பட்டுக் கொள்ளும்படி நேர்ந்தால் அப்போது அஃது அதனை எதிர்த்துப் போராடுதற்கு இசைந்த உறுப்புகளையும் அதற்குக் கொடுத்திருக்கின்றான். மான் மரை கடம்பை யாடு மாடு யானை முதலான உயிர்கட்கு வலிய கொம்புகளையும், முள்ளம்பன்றி பன்றி முதலிய வற்றிற்குக் கூரிய முட்களையும் பற்களையும் முயல், குதிரை முதலியவற்றிற்கு விரைந்த ஓட்டத்தையும், விரைந்தோட மாட்டா நந்து சங்கு யாமை முதலியவற்றிற்கு வலிய ஓடுகளையுந், தேள் பாம்பு முதலியவற்றிற்கு கொடிய நஞ்சையும், ஞெண்டு கெளிறு சுறா முதலியவற்றிற்குக் கத்திரிக்கால் சிலாம்பு வாட்கொம்பு முதலியவற்றையுந் தந்திருக்கின்றான். இங்ஙனமே இன்னும் பலவகையான பூச்சிகள் புழுக்கள் மீன்கள் பறவைகள் முதலியனவெல்லாந் தம்மின் வலியவற்றிற்குத் தாம் தப்பிப் பிழைக்க உதவியாகும்படி அவ்வவையிருக்கும் இடங்களின் நிறங்களை அவற்றின் உடம்பிற்குத் தந்து, தமக்குப் பகையான உயிர்களின் கண்களுக்கு அவை எளிதிற் புலனாகாதபடி வைத்திருக்கின்றான். சில பச்சிலைப் புழுக்கள் தாம் உறையும் இலை களின் நிறத்தைப் போலவே இருத்தலால் அவை அவ்விலை களில் அசைவற்று இருக்குங்கால் அவற்றை அவ்விலைகளின் வேறாய்க் காண்டல் அரிதாகும். தாந்தம் இருக்கும் இடத்தின் அல்லது இடத்திலுள்ள பொருள்களின் நிறங்களை அவற்றைச் சார்ந்த உயிர்கள் பெறும்படி இறைவன் வகுத்தது, அவற்றை மற்ற வலிய உயிர்களின் கண்களுக்குத் தப்புவித்தற் பொருட்டேயாம் என்பது இதனால் நன்கு விளங்குகின்ற தன்றோ? படைப்பின் இயற்கைகளை இங்ஙனங் கருத்தூன்றிப் பார்க்குங்கால், அசைந்து திரியும் ஓர் உயிர் அங்ஙனமே அசைந்து திரியும் மற்றோர் உயிரினைப் பிடித்துக் கொன்று தின்னுதல் இறைவன் திருவுள்ளத்திற்குச் சிறிதும் ஒவ்வாதென்பது தெளியப் படுகின்றதன்றோ?
அவ்வாறானால், புலி கரடி அரிமா முதலான சில மற விலங்குகள் மற்ற உயிர்களைக் கொன்று தின்னுமாறு இறைவன் அவற்றிக்குக் கூரிய பற்களையும் நகங்களையும் வகுத்தது என்னையெனிற்; பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வலிய பெருவிலங்குகள் பல தொகுதிகளாயிருந்த மையின், அவற்றுள் ஒன்றையொன்று எதிர்க்க நேர்ந்தக்கால் அவை தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளுங் கருவி களாகவே கூர்ப்பற்களையும் நகங்களையும் அவற்றிற்கு அமைத்துக் கொடுத்ததல்லாமல், அவற்றால் மற்றை மெலிய உயிர்களை அவை கொல்லுதற்காக வென்று அவற்றைத் தந்திலன், அங்ஙனமாயிற், புலி, கரடி முதலான விலங்குகள் மான் மரை முதலான மெல் விலங்குகளைக் கொன்று தின்னலானது எதனாலெனின் வல்விலங்குகளுள்ளேயே ஒன்றை ஒன்று எதிர்த்துக் கடித்தும் பீறியுஞ் சண்டையிடுங் கால், அவை ஒன்றை ஒன்று கடித்து ஊன்சுவை கண்டு கொண்ட மையின், அவ் வல்விலங்குள் தம்மோடொத்த ஏனை வல்விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைச் சுவைத்தல் அரிதாதல் அறிந்து, தாம் எதிர்த்துக் கொல்லுதற்கு எளிய வான மெல்விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்று தின்று சுவை கண்டுவரவே, பிறகு அவை எளிய விலங்குகளைக் கொன்று தின்னுதலிலேயே பழகிவிட்டன. பழைய நாளிற் பன்றியிறைச்சியே தின்றறியாத சீனக்காரர், ஒருகால் ஒரு வீடு நெருப்புப் பற்றி எரிகையில் அதில் அகப்பட்டு வெந்துபோன பன்றிகளின் இறைச்சியைத் தற்செயலாய் ஒருவர் சுவை பார்க்க நேர்ந்ததிலிருந்து பன்றி யிறைச்சி தின்னக் கற்றுக் கொண்டார்கள் என்னும் வரலாறும் இவ்வுண்மையை நன்கு நிலை பெறுத்தும். இன்னுஞ், சில தீவுகளில் உள்ள காட்டுமிராண்டிகள் ஒருவரோடொருவர் சண்டையிடும்பொழுது ஒருவரை யொருவர் கடித்து ஊன் சுவை அறிந்தமையின், அது முதல் தமக்கு எதிரானவர்களிற் சிறைபிடித்துக் கொள்ளப் பட்டவர்களைக் கொன்று அவர்களின் ஊனைத் தின்பதிற் பழகி விட்டார்களென்று அறிகின்றோம். மக்களை மக்கள் கொன்று தின்னும் மிகக் கொடிய செயல், அதிற்பழகாத நம்மனோர்க்குப் பெரு வியப்பினையும் பேரச்சத்தினையுந் தருமேனும். அதிற் பழகி வந்தவர்களுக்கு அஃது எளிதாகவே இன்றும் இருக்கின்றது. இத்தன்மை வாய்ந்த மக்கள் சிலர் இருப்பதுகொண்டு, இக் காட்டுமிராண்டிகள் தம்முள் ஒருவரையொருவர் கொன்று தின்னுமாறு கடவுள் ஏன் அமைத்தார் எனவும், மக்களுள் ஒருவர் மற்றொருவரைக் கொன்று தின்னுதல் பொருத்த மேயாம் எனவுங் கூறுவார் உண்டோ! காட்டுமிராண்டிகள் தம்முள் ஒருவரையொருவர் கொன்று தின்னக் கற்றுக் கொண்டது போலவுஞ் சீனக்காரர் பன்றியிறைச்சி தின்னக் கற்றுக் கொண்டது போலவும் புலி கரடி முதலிய வல்விலங்குகளுந் தாம் படைக்கப்பட்ட காலத்தில் ஊன் தின்னாதனவாகவேயிருந்து, அதற்கு நெடுங்காலம் பிற்பட்டே அதனைத் தின்னக் கற்றுக் கொண்டனவென்பது துணியப்படும். இவ்வுண்மையை நாட்டுதற்கு ஒரு சிறந்த மேற்கோள், இக்காலத்தில் ஊன் தின்னுதலையே தமது கொள்கைக்குச் சிறந்ததோர் ஒழுக்க மாகச் சொல்லுங் கிறித்துவ சமயத்தார்க்குரிய வேத நூலிலிருந்தும் எடுத்துக் காட்டுவாம். கிறித்துவர் வேதத்தின் முதல் நூல் முதல் இயலிற் கடவுள் உலகங்களையும் உலகத்தில் உள்ள புற்பூண்டு முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்ப் பொருள்களையும் படைத்திட்ட பின்னர் மகனை நோக்கி,
இந்நில உலகம் முழுதும் உள்ள வித்து ஈனும் ஒவ்வொரு பூண்டினையும் மரம் ஈனும் வித்துள்ள பழங்களொடு கூடிய ஒவ்வொரு மரத்தினையும் நான் உனக்குத் தந்திருக்கின்றேன், அவை நினக்கு உணவாகுக.
இனி, நிலத்தின்கண் உள்ள ஒவ்வொரு விலங்குக்கும், வானின்கண் உள்ள ஒவ்வொரு பறவைக்கும், நிலத்தன் மேல் நகர்ந்துசெல்லும் ஒவ்வோர் உயிர்ப்பொருளுக்கும் உணவாக ஒவ்வொரு பசிய பூண்டினையும் நான் கொடுத்திருக் கின்றேன். என்று கூறியருளினார்: அவர் சொன்ன படியே ஆயிற்று. இம்மேற்கோள் கிறித்துவர் வேதபுத்தகத்தின் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்டதாயினும், இதன்கட் காணப்படும் உண்மை கடவுள் உலகங்களையும் உயிர்களையும் படைத்த படைப்பின் பழைய உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுதலால், இஃது எல்லாச் சமயத்தாராலும் பொன்னேபோற் போற்றற் பாலதாயிருக்கின்றது. எனவே, மக்களும் அசைந்துசெல்லும் மற்ற உயிர்களும் முதன் முதற் படைக்கப்பட்ட காலத்து அவையெல்லாம் புற்பூண்டு களையுங் காய் கனி கிழங்கு விதைகளையுமே உணவாகக் கொண்டு வாழ்ந்தன வென்பதும், அவ்வுயிர்களெல்லா வற்றிற்கும் நிலையியற் பொருள்களான பயிர் பச்சைகளையும் அவற்றின் பயன்களையுமே இறைவன் உணவாக வகுத்தருளின னென்பதும் நன்கு உணரப்படும். மேலும் அசைந்து திரியும் உயிர்களுள் ஒன்று மற்றொன்றைக் கொன்று தின்னல் இயற்கைக்கு மாறாயிருப்பதல்லாமலுங் கடவுளின் கட்டளைக்கும் முற்றும் முரணாமென்பதுங் கிறித்துவர்க் குரிய பழைய வேத நூலிலும் புலனாகின்றது. சில வல் விலங்குகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இறைவனால் தரப்பட்ட கூரிய நகங்களையும் பற்களையுந் தம்மைக் காத்துக் கொள்ளுஞ் செயலில் மட்டும் பயன் படுத்தாமற், பிற ஏழை உயிர்களைக் கொன்று தின்னுதற்கும் பயன்படுத்தினால் அஃது அவ் வல்விலங்குகளின் குற்றமாகு மேயல்லாமல், இறைவன் வகுத்த இயற்கைக் குற்றமாதல் ஒரு சிறிதுஞ் செல்லாதென்க. இங்ஙனமே, இறைவனருளாற் பெற்ற பகுத்தறிவை மக்கள் பலர் தீய வழிகளிற் பயன் படுத்துதல் அவர் தங் குற்றமே யாகுமல்லால், அஃது இறைவன் வகுத்த இயற்கையால் வந்த குற்றமென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ! இவ் வுண்மையைச் செவ்வையாய் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க அசைந்து திரியும் உயிர்களில் ஒன்று மற்றொன்றைக் கொன்றுதின்னும் இயற்கையுடையன வாக அவை கடவுளால் முதலில் அமைக்கப் படவில்லை யென்பது தெற்றென விளங்காநிற்கும். அசைந்து திரியும் உயிர்கள் ஒவ்வொன்றுந் தம்மைத் தம்மின் வலிய உயிர் களினின்றும் பாதுகாத்துக் கொள்ளுதற்கேற்ற உறுப்பு களின் அமைதியோடு படைக்கப்பட்டிருத்தலால், அவை ஒன்றை யொன்று இரையாகப் பிடித்துத் தின்னுதல் இறைவன் திருவுளத்திற்குச் சிறிதும் ஒப்பாகாதென்றே கடைப்பிடிக்க.
இனிப், புற்பூண்டு மரஞ் செடி கொடிகள் முதலியனவோ அசைந்துதிரிய மாட்டாமல் ஒவ்வோர் இடங்களில் நிலையாக நிறுத்தப்பட்டிருத்தலானும், அவற்றின்கண் உள்ள இலை பூ காய் கனி விதை முதலியவற்றை அசைந்து திரியும் மற்றை உயிர்கள் பறித்துத் தின்ன வரும்போது அவற்றோடு அவை சண்டையிடக் காணாமையானும் இயங்கும் உயிர்கள் அத்தனைக்கும் உணவாகக் கடவுளால் தரப்பட்டவை பயிர் பச்சைகளேயா மென்பது இனிது புலப்படவில்லையா? அஃது உண்மையேயென்றாலும், பயிர் பச்சைகளும் உயிருள்ள பொருள்களோயாகையால் அவற்றை உணவுக்காக அறுத்தலும் பறித்தலும் பிடுங்கலும் குற்றமல்லவோ வெனிற், குற்றமல்ல. மரஞ் செடி கொடிகளின் பயன்களை அவற்றி னின்றும் அகற்றும்போது, அவை மற்றை இயங்கும் உயிர் களைப்போற் றுடிதுடித்துக் கத்தித் துன்புறக் காணாமை யானும், இயங்கும் உயர்களின் உடம்பினின்று நகம் மயிர் முதலியன களையப்படும்போது அவை துன்புறாமை போலப் பயிர்பச்சைகளுந் தம்மினின்று நீக்கப்படும் பயன்களாற்றாஞ் சிறிதுந் துன்புறமாட்டா என்பது உணரப் படுதலானும், இயங்கும் உயிர்களிற் காணப்படுஞ் சிவந்த இரத்தம் புலால்நாற்றம் மலநீர்க் கழிவுகள் புற்பூண்டுகளிற் காணப் படாமையானும், இயங்கும் உயிர்கள் தம்மை ஒன்று துன்புறுத்த வந்தக்கால் அதற்குத் தப்பியோட முயலுதல் போலப் பயிர்பச்சைகள் முயலக் காணாமையானும் மரஞ் செடி கொடிகளை அவ்வாறு பயன்படுத்திக் கொள்வது குற்றமாகாது. மேலும், ஊன் உணவின்றி, இயங்கும் உயிர் எல்லாம் உயிர் வாழ்தல் கூடும்; ஆனாற், புற் பூண்டுகளும் அவற்றின் பயனும் இன்றி மற்றை எந்த உயிரும் உயிர்வாழல் கூடுமோ? ஊன்தின்னும் உயிர்களுங்கூட அவ்வூனையே முழுதும் உணவாய்க் கொள்ளாமல், இலை, பூ, காய், கனி, கிழங்கு, வித்துகளையும் உணவாய்க் கொண்டல்லவோ பிழைக்கின்றன! இன்னும், ஊன் சிறிதுந் தின்னாத யாடு மாடு குதிரை யானை மான் கிளி குரங்கு முதலான உயிர்களை நாம் பார்த்தல் போலப் பயிர்பச்சைகளைச் சிறிதுந் தின்னாத எந்த உயிரையேனும் நாம் காணுதல் கூடுமோ; ஊனையே மிகுதி யாத் தின்று உயிர் பிழைக்கும் புலி கரடி அரிமா ஓநாய்களுங் கூட இடையிடையே பலவகைப் பச்சிலைகள் விதைகள் கிழங்குகள் முதலியவற்றைத் தின்னல் அல்லாமலும், ஊன் உணவு முற்றும் அகப்படாத காலங்களிற் புற்பூண்டுகளின் பயன்களையே முழுதுந் தின்று உயிர் பிழைத்து வருகின்றன. இம் முறையால்நோக்குமிடத்தும் இயங்கும் உயிர்கள் எல்லாவற்றிற்கும் இயற்கை யுணவான புற்பூண்டுகளும் அவற்றின் பயன்களுமே யாமென்பது நன்கு பெறப்படும்.
இனி, நிலையியற் பொருள்களாகிய புற்பூண்டுகள் இன்றி ஏனை யியங்கியற்பொருள்கள் ஒருசிறிதும் உயிர்வாழ மாட்டாவென்பது மற்றொரு வகையாலுங் காட்டுவாம். ஈ எறும்பு புழு முதல் மக்கள் ஈறான இயங்கும் உயிர்கள் எல்லாம் பிராணவாயுவென்னுந் தூய உயிர்வளியை மூச்சினுள் ளிழுத்தே உயிரொடு உலாவுகின்றன. இவ் வுயிர்வளியை உட்கொள்ளாமல் மக்களும் மற்றை இயங்கும் உயிர்களும் ஒருசிறிதும் உயிரேடிருத்தல் முடியாது. இவ்வளவு சிறந்த உயிர்வளி மட்டும் புறத்தே எங்கும் நிறைந்திருக்குமாயின் இயங்கும் உயிர்கள் ஒருகாற்புற் பூண்டுகளின் உதவியை வேண்டாமலே உயிரோடிருக்கலாம். ஆனால், அவ்வுயிர்வளி யொடு கூட நச்சுக் காற்றும் ஊடே ஊடே ஓயாமல் வந்து நிரம்புகின்றது. யாங்ஙனமெனிற் காட்டுவாம்; இயங்கும் உயிர்களின் உடம்பிலுள்ள தசை அவ்வளவுங் கரியேயாகும்; இதனை அறியவேண்டின் ஒரு சிறிய ஊன் துண்டத்தை நெருப்பில் இடுக, அதிலுள்ள பசை வறண்டவுடன் அது கரியாவதைக் காணலாம். இங்ஙனங் கரியால் ஆன ஊன், உயிர் உள்ள உடம்புகளில் ஒவ்வொரு நொடியும் புதிது புதிதாக ஆக்கப்பட்டு வருதலின் அவ் ஊனின் பழைய பகுதிகளும் அவ் ஒவ்வொரு நொடியுங் கழிக்கப்பட்டுக் கொண்டே வரும். அவ்வாறு கழிக்கப்பட்ட ஊன்பகுதி களான கரி உள்ளிழுக்கப் படும் உயிர்வளியொடு கலந்து நச்சுக் காற்றாகப் புறத்தே மூச்சின் வழியாய் வெளிப்படுத்தப் படுகின்றது. இங்ஙனமே ஒவ்வோர் இயங்கும் உயிரின் உடம்பினின்றும் ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தப்படும் நச்சுக்காற்று இடைவெளி எங்கும் வந்து நிரம்புதலால், மீண்டும் அதனையே உள்ளிழுக்க நேருமாயின் இயங்கும் உயிர்கள் அத்துணையும் இரத்தம் நஞ்சாகி இறந்து போம். ஆனால், அவை அங்ஙனம் இறவாமைப் பொருட்டுப் பேர்இரக்கம் உடையனாகிய இறைவன் மரஞ்செடி கொடிகளை அமைத்து வைத்திருக் கின்றான். எவ்வா றெனின், மக்களாகிய நாமும் ஏனை இயங்கும் உயிர்களும் வெளிவிடும் நச்சுக் காற்றை இம் மரஞ் செடி கொடிகள் உள் இழுத்துப் பிறகு தூய உயிர்வளியை வெளிவிடுகின்றன. நமது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுவது உயிர்வளி, பயிர் பச்சைகளின் உயிர் வாழ்க்கைக்கு முதன்மையாய் வேண்டப் படுவது நச்சுக் காற்றாகிய கரிவளி. நாம் வெளிவிடுவது கரிவளி, பயிர் பச்சைகள் வெளிவிடுவது உயிர்வளி, நாம் வெளிவிடுங் கரிவளி பயிர்பச்சை களின் உயிர்வாழ்க்கைக்கு உரியதாய்ப் பயன் படவும், பயிர் பச்சைகள் வெளிவிடும் உயிர்வளி நமதுயிர் வாழ்க்கைக்கு ஏற்றதாய்ப் பயன்படவும் வகுத்த இறைவனது பேரருட் செயலை ஆராய்ந்து பார்க்குங் கால் இயங்கும் உயிர்கட்கு உதவியாவன புற்பூண்டுகளும், ஒருநிலையிலுள்ள புற்பூண்டுகட்கு உதவியாவன இயங்கும் உயிர்களுமேயாம் என்பது புலப்படவில்லையா? பயிர் பச்சைகளிலிருந்து அவற்றின் பயனை நாம் எடுத்து உட் கொண்டு உயிர் வாழ்தல்போல, நாம் வெளியே கழித்து விடுங் கரிவளியை உட்கொண்டு பயிர் பச்சைகள் உயிர் வாழ்கின்றன. இவ்வாறாக இயங்கும் உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கு நிலையியற் பொருள்களும் நிலையியற் பொருள்களின் வாழ்க்கைக்கு இயங்கியற் பொருள்களும் இன்றியமையாதன வாய் இருத்தலால், மக்களும் பிற இயங்கும் உயிர்களும் புற்பூண்டுகளையும் அவற்றின் பயன்களையும் உண்டு உயிர் வாழ்தலே பொருத்தம் உடைத்தாம். இதுவே இவற்றை இங்ஙனம் வகுத்து அமைத்த இறைவன் திருவுளத்திற்கும் ஒப்பதாகும்.
இவ்வாறன்றி இயங்கும் உயிரில் ஒன்று மற்றொன் றனைக் கொன்று தின்னுதல் இயற்கைக்கும் இறைவன் திருவுளச் செயலுக்கும் முற்றும் மாறாய் இருத்தலால், ஊன் தின்னும் உயிர்கள் அவ்வூன் உணவினாலேயே பலவகை நோய்களை அடைந்து பெரிதுந் துன்புற்று இறக்கின்றன. ஊன் உடம்புகள் இயற்கையிலேயே அருவருக்கத்தக்க அழுக்குகளும் நச்சு நீரும் உடையனவாகும். எவ்வளவு மணமுஞ் சுவையுந் தூய்மையும் உடைய திண்பண்டங்களே யாயினும், அவை நமது உடம்பின் உட்சென்ற அளவானே, அம் மணமுஞ் சுவையுந் தூய்மையுங் கெட்டுத் தீ நாற்றமும் அருவருப்பும் உடைய மலநீர்களாய்க் கழிக்கப்படுகின்றன. இந்த இயல்பை உற்றுநோக்குமிடத்து, ஊன் தின்னும் மக்கள் பூனை நாய் புலி கரடி சிங்கம் முதலிய உயிர்களின் உடம்புகளைவிட, ஊனே தின்னாத யாடு மாடு குதிரை மான் மரை யானை முதலிய உயிர்களின் உடம்புகள் மிகச் சிறந்தனவாகவுந் தூயனவாகவும் இருத்தலைக் காண்கின் றோம்; ஏனென்றால், யாடு மாடு குதிரை முதலிய வற்றின் சாணங்கள் தீ நாற்றமும் அருவருக்கத்தக்க இயல்பும் இல்லாதனவாயிருக்கின்றன. ஊன் தின்னும் உயிர்களின் உடம்பு களைக் காட்டினும் ஊன் தின்னாத வற்றின் உடம்புகள் தூயனவாயிருத்தலை ஆராய்ந்தால், அவை அங்ஙனம் அருவருக்கத்தக்க தன்மையை அடைந்தது ஊன் தின்ற தனாலேயே என்பது புலனாகும். அப்படியானால், ஊன் தின்னாத யாடு மாடு முதலியவற்றின் உடம்புகள் தூயனவாயிருத்தலின் அவற்றின் ஊனைத் தின்னுதல் பொருத்த மாகுமன்றோ வெனின், ஊன் தின்னும் உயிர்களின் உடம்பைவிட அவற்றின் உடம்பு தூயனவென்று கொள்ளப் படுமே யல்லாமல், ஊன் என்ற பொதுவகையால் நோக்கு மிடத்து யாடு மாடு முதலியவற்றின் தசையும் அருவருக்கத் தக்க முடைநாற்றமும் நச்சு நீரும் உடையனவே யாகும். மருத்து நூற் புலமையில் மிகச் சிறந்துவிளங்கும் ஒருவர்5 ஊன் எல்லாம் நச்சுநீர் உள்ளன வென்றும், ஊன் தின்னும் உயிர்கட்கெல்லாம் அந் நச்சுநீர் இரத்தத்திற் கலந்து பல கொடிய நோய்களை வருவிக்கின்ற தென்றும் நன்கு ஆராய்ந்து விளக்கியிருக்கின்றார். அவர் தாமிருக்கும் மருத்துவக் கழகத்தில், மற்ற இடங்களில் தீராத நோய்களை யெல்லாந் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வரும் நோயாளிகளுக்கெல்லாங் காய்கனி கீரை கிழங்கு வித்து முதலானவைகளையும் ஆவின் பாலையும் உணவாகக் கொடுத்து அவர் கொண்ட அக் கொடிய நோய்களைத் தீர்த்து விடுகின்றார் என்றும் அறிகின்றோம். தாஞ் சொல்லும் உண்மைகளை மெய்ப்படுத்திக் காட்டும் இப் புலவர் பெருமானது நூலை ஒரு சிறிது நோக்கு வார்க்கும் ஊன் உண்ணுதலால் வருந் தீமை விளங்காமற் போகாது. ஆகவே, இறைவன் அசைந்து திரியும் உயிர்களுக்கு உணவாக அசைந்து திரியா மரஞ் செடி கொடிகளையும் அவற்றின் பயன்களையும் வகுத்துக் கொடுத்திருக்க, அதற்கு மாறாக நடந்து அசைந்து திரியும் உயிர்களாகிய தமக்குள்ளேயே ஒன்றை ஒன்று கொன்று தின்பன, அங்ஙனந் தின்பதனா லேயே தம்முயிர்க்குத் தீங்கினை வருவித்துக் கொள்கின்றன என்பது புலனாகின்றன தன்றோ? செங்குருதி ஒழுக ஒழுக, உயிர் துடிக்கத் துடிக்கக் கொல்லுங் கொலைத் தொழிலால் வரும் ஊன் தன்னைத் தின்னும் உயிரைக் கொல்லாது விடுமோ? கொலைத் தொழிலால் வருவன கொலையினையே விளக்கும் என்பதனை இனி துணர்ந்தன்றோ பட்டினத் தடிகளும்,
கொன்றனை அனைத்தும் அனைத்தும்
நினைக்கொன்றனதின்றனை அனைத்தும்
அனைத்தும் நினைத்தின்றன
(பட்டினத்தார்)
என்று அருளிச் செய்தனர். எனவே, ஊன் தின்பனவற்றிற்கு எல்லா நோய்களும் எல்லாத் துன்பங்களும் வருமென்றும், பயிர் பச்சைகளையும் அவற்றின் பயன்களையும் அருந்துவன வற்றிற்கு எல்லா நலங்களும் எல்லா இன்பங்களும் வருமென்றும் உணர்ந்து கொள்க.
இனி, ஊன் உடம்புகளின் வளர்ச்சிக்கும் நிலை பேற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படும் முதற் பொருள்கள்: கந்தகம், எரிகந்தகம், தீக்கல், சாம்பருப்பு, உவர்மண், கண்ணம், காந்தம், இரும்பு, காந்தங் கலந்த செம்பு, ஈயம் முதலியனவாகும். உயிரற்ற இவ் வன்பொருள்களை அப்படியே தின்று செரிக்கச் செய்து உடம்பிற் சேர்த்துக் கொள்ளத்தக்க ஆற்றல் மக்கள் முதல் ஈ எறும்பு இறுதியான அசைந்து திரியும் உயிர்களின் தீனிப்பைக்கு இல்லை. எவ்வளவு வல்லமையுடையவனேனும் அவன் இரும்பையுங் கந்தகத்தையுங் காந்தத்தையுந் தின்று உயிரோடி ருத்தல் முடியாது. இம் முதற்பொருள்களை மக்களும் மற்றை அசையும் உயிர்களும் நேரே தின்னல் இயலாதாயினும், வேறு எந்த வகையிலாயினும் இவைகளை உடம்பிற் சேர்த்தாற்றான் அவை நிலைபெறும். மற்று, இம்முதற்பொருள்கள் உடம்பிற் பொருந்தி அதனை உரப்படுத்துமாறு, அவற்றை உட் கொள்ளும் வழிதான் யாதெனின்; மக்களாலும் மற்ற அசையும் உயிர்களாலுஞ் செய்யலாகாத அவ்வழியை இறைவன் இவ் வுயிர்கண்மேல் வைத்த இரக்கத்தால் மரஞ் செடி கொடிகளில் அமைத்து வைத்திருக்கின்றான். மரஞ் செடி கொடிகளில் மட்டுமே, நிலத்தின்கண் உள்ள இரும்பு எரிகந்தகம் காந்தம் முதலான முதற்பொருள்களை நுண்ணிய வடிவில் வேர்களின் வாயிலாக இழுத்துத் தம்முடம்பிலும் அவ் வுடம்பின் உறுப்புகளாகிய அரை, கோடு, வளார், தளிர், இலை, பூ, பிஞ்சு, காய், கனி, கிழங்கு, விதை முதலானவற்றிலுஞ் சேர்த்துக் கொள்ளும் ஆற்றல் அமைந்திருக்கின்றது. இவ்வாறு அவை சேர்க்கப் பட்டிருக்கும் புற்பூண்டுகளையும் அவற்றின் பயன்களையும் அசைந்து செல்லும் உயிர்கள் உணவாக உட்கொள்ளுதலால் அவற்றின் கண் உள்ள அம் முதற் பொருள்கள் எளிதிலே செரித்து அவ் வுயிர்களன் உடம்புகளிற் கலந்து அவற்றை உரப்படுத்தா நிற்கும். இரும்பு எரிகந்தகம் முதலாக நம்முடம்புகளுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இம் முதற்பொருள்களை நம்முடம்பிற் சேரத்தக்கவகையாய்ப் பதப்படுத்தி வைத்திருக்கும் புற்பூண்டுகளின் பயனை நாம் உட்கொள்ளுதலே, அவற்றை உடம்பிற் சேர்த்து உரப்படுத்து தற்கு இயற்கையில் அமைந்த வழியாகும். இவ்வியற்கை யமைப்பின்றிறத்தை உற்று நோக்க நோக்க உணவாகவும் மருந்தாகவும் உட்கொள்ளத் தக்கன புற்பூண்டு களும் அவற்றின் பயன்களுமே யல்லாமற் பிற அல்ல வென்பது திண்ணமாய்ப் பெறப்படும். இஃது இவ்வாறிருப்ப வும், இதனை உணராமல் இரும்பு செம்பு வெள்ளி தங்கம் கந்தகம் முதலானவைகளிற் செய்த மருந்துகளை மக்கள் மிகுவிலை கொடுத்து வாங்கி யுண்டு தம்முடம்பை வீணே கெடுத்துக் கொள்கின்றார்கள்! மருத்துவர்களும் இவ்வுண் மையை ஆராய்ந்து பாராமற் பேருழைப்பும் பெருஞ் செலவு செய்து இவற்றால் மருந்துகள் முடித்துக் கொடுத்து நோயையும் நீக்கமாட்டாமற் கடவுள் கொடுத்த உடம்பையும் பாழாக்கி விடுகின்றனர்! பசியெடுத்த போது அப் பசிநோயை நீக்குதற்குப் பயிர் பச்சைகளையும் அவற்றின் பயன்களையும் அருந்துதல் போல, நோய் அடுத்தபோதும், அதனை நீக்குதற்குப் பச்சிலை மருந்துகளை உண்ணுதலே பொருத்தம் உடைத்தாம் என்க. இங்ஙனம் உணவாகவும் மருந்தாகவும் உட்கொள்ளுதற் கேற்ற புற்பூண்டுகளை விடுத்து, ஐயன் படைத்த யாடு மாடு பன்றி மான் மரை மீன் கொக்கு குருவி கோழி முதலான அசைந்து திரியும் உயிர்களைக் கொன்று அவற்றின் தசையை உணவாக அடைத்தல் எவ்வளவு கொடுமையுந் தீங்கும் உடைத்தாம்!
புற்பூண்டுகளை உணவாகக் கொள்ளுதலே பொருத்த மென்றாலும், அப் புற்பூண்டுகளைத் தவிர வேறு இறைச்சியே தின்னாத யாடு மாடு பன்றி முதலியவற்றின் தசையைத் தின்னுதலும் அப் புற்பூண்டுகள் தின்னுதலையே ஒக்கு மாகலின் அது குற்றமாகாதெனின்; நன்று சொன்னாய், புற்பூண்டு களையும் அவற்றின் பயன்களையும் நேரே உட் கொள்ளு தலால் உண்டாகும் வலிவும் பயனும், அவற்றைத் தின்னும் யாடு மாடுகளைத் தின்பதனாற் சிறிதும் உண்டாகா; ஏனென்றாற், பயிர் பச்சைகளின் வலிவான பகுதி முழுவதும் அவற்றைத் தின்னும் யாடு மாடு முதலிய விலங்குகளாற் பயன்படுத்தப் பட்டுப் போக, அவ் வுயிர்களைக் கொன்றபின் அவற்றின் தசையில் மிஞ்சியிருப்பன அவற்றின் சக்கைகளே யாகும். இந்தச் சக்கைகள் உள்ள இறைச்சியைத் தின்பதனால் மக்களுக்கும் புலி கரடி ஓநாய் சிங்கம் முதலான உயிர் களுக்கும் யாது வலிமை வரப்போகின்றது!
உலகத்தின்கண் நடைபெறுங் கடுமையான தொழில்க ளெல்லாம் புற்பூண்டுகளைத் தின்னும் விலங்கினங்களி னாலேயே செய்யப்படுகின்றன. எருது, குதிரை, கோவேறு கழுதை, யானை, ஓட்டகம் என்னும் உயிர்கள் புல்லையும் வைக்கோலையுந் தின்று குளிர்ந்த தண்ணீரைப் பருகுகின் றனவே யல்லாமல் மற்ற உயிர்களைக் கொன்று தின்னக் கண்ட தில்லையே. அவ்வாறிருந்தும், அவைகள் நாடோறும் ஆங்காங்குச் செய்யும் உழைப்பான தொழில்களைப் போல், இறைச்சி தின்னும் புலி, கரடி. சிங்கம், ஓநாய் முதலான மற விலங்குகள் செய்யக் கண்டதுண்டோ? இவைகள் கூர்ம் பற்களும் நகங்களுங் கொடுஞ்சினமும் உடைமையால் உலிமை யுடையனபோற் காணப்படுகின்றனவே யல்லாமல் உண்மையில் அவை அஃது உடையன அல்ல. பெருஞ் சுமை ஏற்றிய ஒரு பெரு வண்டி நுகத்தின் ஒரு பக்கத்தில் ஓர் எருத்து மாட்டினையும் மற்றொரு பக்கத்தில் ஒரு புலி அல்லது ஒரு சிங்கத்தினையும் பூட்டி இருபது நாழிகை வழி நடத்தினால் எருதைப் போற் சிங்கம் அதனை ஒறுத்து இழுக்குமோ? ஒரு நாழிகை வழிகூட அஃது இழுக்க மாட்டாது. இன்னும், புல்லையுந் தழைகளையும் மேய்ந்து அருவி நீரைக் குடிக்குங் காண்டாமிருகம் என்னுங் கல்யானையின் வலிமையை என் என்பேம்! இது பெரிய மரங்களையுந் தன் முகத்திலுள்ள கொம்பால் தகர்த்தெறிவ தோடு, அம் மரங்களின் வலிய கிளைகளையுந் துகளாக நுறுக்குகின்றது. யானையோ மலை முகடுகளிலுள்ள பெரிய பெரிய தேக்குமரம் பாலைமரம் ஆச்சாமரம் முதலியவைகளை யெல்லாந் தனது தும்பிக்கை யால் எளிதாக எடுத்துக் கொண்டுவந்து மலையின் அடி வாரங்களிற் சேர்க்கின்றது. நீண்ட பெரும் பாலைநிலங்களை யெல்லாங் கடந்து சென்று வாணிகஞ் செய்வதற்கு உதவி புரிந்து வரும் ஓட்டகங்களின் உதவி எவ்வளவு பாராட்டத் தக்கதாயிருக்கின்றது! புல்லையுந் தழைகளையுந் தின்னும் இவ்விலங்குகளின் உதவியின்றி மக்கள் உயிர் வாழல் முடியுமோ! தூய தீம்பாலைத் தரும் ஆன் நமது நல்வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாத தாயிருக்கின்றது! இவ் வினிய விலங்குகளைப் போல் உயிர்களைக் கொன்று தின்னுங் கொடிய விலங்குகள் எந்தவகையாலேனும் நமக்குப் பயன்படுவதுண்டோ! பயன்படாமை மட்டுமா! அவைகள் மக்களயையும் அடித்துக் கொல்லுங் கொடிய இயற்கை யுடையனவாகையால், அவைகள் இருக்கும் இடங்களைக் கண்டால் மக்கள் எவ்வளவு திகிலடைந்து நடுங்குகின்றனர்! இவைகளைப் போலவே, ஊன் தின்னும் மாந்தரும் பயன்படமாட்டார்: அவர்களுக்குக் கொடிய தன்மையும், அதனால் வலிமைக்குறைவும் அயர்வும் உண்டாதலால் அவர்கள் மற்றவர்களோடு அன்புடன் அளவளாவிப் பயன்படுந் தொழில்களையுஞ் செய்யமாட்டார்.
ஆனாற், சைவ உணவு கொள்ளும் மக்களோ கடவுள் வகுத்த இயற்கைக்கு இசைந்து நடப்பவர்களா யிருத்தலால், அவர்கட்குக் கொடுந்தன்மை உண்டாகாது; அவர்கள் எடுக்கும் உணவு தூயனவாய் அமிழ்தவடிவாய் இருத்லால் அவர்கள் உடம்பு தூயனவாய் நோய் அணுகாதனவாய் எத்தகைய வருத்தமான தொழில்களையுஞ் செய்து முடித்தற் கேற்ற வலிவு வாய்ந்தனவாயிருக்கும்; அவர்களுடைய மூளை தூயதாய் இருத்தலால் அதனைப் பற்றிக் கொண்டு நிகழும் அவருடைய அறிவுந் தூயதாய் நுட்பம் பொருந்திய தாயிருக்கும். இவ்வுண்மையை விளக்குதற்குச் சில உண்மை வரலாறுகளை இங்கெடுத்துக் காட்டுகின்றாம்.
நீண்டவழி நடப்பதிற் புகழ்பெற்ற ஒருவர் சைவ வுணவே உட்கொள்பவர். இவர் நான்குமுறை நீண்டவழி நடந்து பந்தயம் பெற்றதோடு, 1905 ஆம் ஆண்டு ஐந்தாம் முறையாக ஒரு போர்மறவர் கூட்டத்தோடு நடந்து வென்று பரிசில் பெற்றார். வழிநடந்து பரிசில் பெற்றவுடனே இவரை ஒரு பெயர் பெற்ற மருத்துவர் ஆராய்ந்து பார்த்து இங்ஙனம் நீள்வழி நடந்த தனால் இவருடம்பிற்கு ஏதொரு கெடுதியும் நேராதது கண்டு வியந்தார்.
நம் ஆங்கில அரசினர் படையிற் காயமருத்துவம் பார்த்து வந்த ஒரு சிறந்த மருத்துவர் பின்வருமாறு கூறுகின்றார்: பல தேயங்களிற் பலவகையாலெல்லாம் உழன்றும் என் உடம்பு செம்மையாகவே யிருக்கின்றது. அளவாக உண்பதனாலுங் கடுமையாக உழைத்தலினாலும் யான் இரண்டு படையிருப்புக்களைக் கடத்தி விட்டேன்; இன்னும் ஒரு படையிருப்பினையும் யான் தாங்க் கூடும். நான் ஊன் உணவு எடுப்பதேயில்லை; கொடி முந்திரிச் சாறேனும் வித்திலிறங்கிய நீரேனும், மற்றெந்தவகைச் சாராயமேனும் யான் பருகுவதுமில்லை; யான் கம்பளியுடுப்பும் அணிவ தில்லை காற்றும் மழையுஞ் சூடுங் குளிர்ச்சியும் எனக்கு ஒரு பொருள் அல்ல. இதனால் மக்கள் உடம்பின் சூட்டைப் பாதுகாப்பதற்கு இறைச்சியுஞ் சாராயமும் வேண்டுமென்று கூறுவார் சொல் வெறும் பொய்யேயாதல் காண்க.
1903 ஆம் ஆண்டில் நூற்று ஏழு ஆண்டு வாழ்நாள் உடையராயிருந்த ஒரு படைத்தலைவர் தம் வாழ்நாளின் இடையே நோயால் வருந்திக் கூன்முதுகு உடையராகி வாழ்நாள் முதிரா முன்னரே முதுமையடையப் பெற்றதி லிருந்து மனவெறுப்பு உடையராய் இறைச்சி தின்பதை அறவே விட்டுச் சைவவுணவையே ஒழுங்காக உட்கொண்டு வர, அவர்க்கிருந்த நோயும் விலகி, அவருடம்பின் கூனும் நிமிர்ந்து வலிமையும் இளமையும் பெறலானார். இவர் தமது நூற்று மூன்றாம் ஆண்டில் ஒருநாள் ஒன்றுக்கு இருபது நாழிகை வழி நடந்தும் இளைப்புங் களைப்பும் இன்றிச் செவ்வையான நிலையிலேயே இருந்தார். இவர் தமது பழக்கத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:-
நீண்டநாள் செம்மையாக உயிர் வாழும்பொருட்டு யான் எனது உடம்பைப் பதப்படுத்தத் துவங்கியபொழுது, உயிர்களைக் கொன்று எடுக்கும் இறைச்சியை என் உணவி னின்றும் அறவே விட்டொழித்தேன். யாடுமாடு அறுக்குங் கொட்டில்களிற் கொல்லப்பட்டுத் தொங்கக் கட்டியிருந்த அவற்றின் இறைச்சியை யான் பார்த்தபோது, அவற்றில் உணவுக்காகும் பகுதியைவிட நோயையுந் துன்பத்தையும் விளைவிக்கும் பகுதிகளே மிகுந்திருத்தலை உணர்ந்தேன்.
வித்துக்கள் பழங்கள் பருப்புகள் காய்கறிகளையே யான் உண்ணுகின்றேன். காய்ச்சிய வெந்நீரையேனுங் காய்ச்சி வடித்த தண்ணீரையேனும் பருகுகின்றேன். சுருட்டுகளேனுஞ் சிறு சுருட்டுகளேனும் யான் பிடிப்பதும் இல்லை. கொடி முந்திரிச் சாறேனும் மயக்கந்தருஞ் சாராயங்களேனும் யான் குடிப்பதுமில்லை. தேத் தண்ணீருங் காப்பித் தண்ணீரும் யான் முற்றுமே விலக்கி விட்டேன். ஏனெனில், இவற்றில் உணவாகத்தக்கது எதுவுமே இல்லை. அவற்றைப் பயன் படுத்துவது நமது இயற்கைக்கு முற்றும் மாறாயிருக்கின்றது.
நீண்டகாலம் உயிர்வாழ்ந்த முதியோரின் பழக்க வழக்கங்கள் இங்ஙனம் இருத்தலை யறியுங்கால் ஊன் உண்ணுதலால் வருந் தீமையுங் காய்கறிகளை யுண்டலால் விளையும் நன்மையும் நன்கு விளங்குகின்றன அல்லவோ! இனிக் காய்கறிகளை உணவாகக் கொள்ளும் மக்கள் ஒருவர் இருவர்க்கு மட்டுமே இந் நன்மைகள் விளைகின்றன வென்று நினைத்தலாகாது; காய்கனி கீரைகளையே உணவாக அருந்திவரும் பழக்கமுடைய மக்கட் கூட்டத்தார் பலரும் இத்தகைய நன்மைகளையே அடைந்து வருகின்றனர்; இவ் வுண்மையை விளக்குதற்குஞ் சில இங்கு எடுத்துக் காட்டுவாம்:
கார்ப்பேத்தியா மலைப்பக்கங்களிலிருக்கும் மக்கள் உலகத்திலுள்ள மாந்தரில் மிகச் சிறந்த சுருசுருப்பும் வலிமையும் வாய்ந்தவர் களாயிருக் கின்றனர். அவர்கள் ஓட்டென்னும் அரிசியுங் கோதுமை அப்பமும் உருளைக் கிழங்குமே எந்நாளும் உண்டு உயிர் வாழ்பவர்கள். நெப்போலிய மன்னனுக்கு இம் மக்களிற் பலர் போர் மறவராய் அலுவல் பார்த்தனர். அப்போது அவர்கள் நாள் ஒன்றுக்கு நாற்பது நாழிகைவழி நடந்து, கடும்போர் புரிந்து மறுநட்காலையில் மறுபடியும் போர் புரிதற்குத் தக்க ஆற்றலும் புதுமையும் வாய்ந்திருந்தனர்.
தென் அமெரிக்காவின் செப்புச் சுரங்கங்களில் உழைக்குங் கூலியாட்கள் நாள் ஒன்றுக்கு அறுபத்தேழு வீசை எடையுள்ள செப்புமண் மூட்டையைச் சுமந்து கொண்டு ஒருநாள் ஒன்றுக்குப் பன்னிரண்டு முறை இருநூற்று நாற்பது அடி உயரம் ஏறுகின்றனர். அவர்கள் உட்கொள்ளும் உணவு முழுதுங் காய்கறிகளே அவர்கள் காலையுணவாக எடுப்பன பன்னிரண்டு அத்திப்பழங்களும் இரண்டு சிறிய கோதுமை அப்பத் துண்டுகளுமேயாம்; அவர்களது பகல் உணா அவித்த பயறுகளேயாம்: இராச்சாப்பாடு வறுத்த கோதுமை அரிசி, இன்னும் உள்நாடுகளிலிருந்து வரும் பானியர்கள் பண்டங்கள் நிரம்பிய மூட்டைகளைச் சுமந்துசெல்லும் அலுவல் பார்க்கிறார்கள்; இவர்களும் முழுதுஞ் சைவ உணவே உட்கொள்பவர்கள். இவர்கள் திண்ணிய வலிய பெரிய உடம்புடையவர்கள். இவர்கள் சுமக்கும் மிகப்பெரிய கோணிப்பை மூட்டைகளை இவர்களின் முதுகின்மேல் தூக்கிவைப்பதற்கே மூன்று நான்கு பேர் வேண்டும். இத்தகைய மூட்டைகளைச் சுமந்து கொண்டு இவர்கள் ஊடேஊடேயுள்ள செங்குத்தான மலைகளின் மேலும் ஏறியிறங்கியபடியாய் ஒருநாள் ஒன்றுக்கு ஐம்பது நாழிகை வழி விரைவாய் நடந்து நாட்டினுட் செல்வார்கள். இவர்களோ டொப்ப நடத்தல் பொதுவாக மற்ற ஆட்கட்கு ஏலாது.
இன்னும் அமெரிக்காவிற் பல அரும்பண்டங்கள் செய்யும் பெரிய ஒரு தொழிற்சாலைக்கு உரிய தலைவர், தம்மிடம் வேலை பார்க்குந் தொழிலாளிகட்குப் பல திறப்பட்ட உணவு கொடுப்பதால் வரும் நன்மைகளை அளந்தறிய வேண்டி, அவர்களெல்லாரையும் மூன்று பகுப்பு களாகப் பிரித்து, அவருள் முதற்பகுப்பாருக்கு இறைச்சியுணவும் இரண்டாம் பகுப்பாருக்குக் காய்கறி யுணவும், மூன்றாம் பகுப்பாருக்கு இறைச்சி கலந்த உணவுங் கொடுத்துவந்தார். இவ்வாறு கொடுத்து வந்தபின் அவர்களது வலிமையினையும் அவர்கள் செய்யும் வேலையின் அளவினையும் ஆராய்ந்து பார்க்கச், சைவ உணவு உட்கொண்ட பகுப்பாரே மற்றிரண்டு பகுப்பாரை விட உடம்பு வலிவிலும் வேலையை முடிக்கும் அளவிலும் மிகுந்திருப்பக் கண்டு, மற்ற இருபகுப்பாருக்கும் அங்ஙனமே சைவவுணவு கொடுக்கும்படி கற்பித்தார். அவர்களுஞ் சைவவுணவு கொண்ட சில தினங்களுக்குப் பின் முதல் வகுப்பாரைப்போலவே மெய் வலிமையிலும் வேலைத் திறத்திலும் மேம்படுவராயினர்!
இங்ஙனமாகச் சைவவுணவு உட்கொள்ளும் அயல் நாட்டார் மட்டுமேயன்றி நமது அருமைச் செந்தமிழ் நாட்டிற் சைவவுணவு முழுதும் உட்கொண்டு உயிர் வாழுஞ் சைவ வேளாளரும் பார்ப்பனரும் வேறுசிலரும் வலிய உடம்புஞ் சுறுசுறுப்பான முயற்சியுந் தெளிந்த அறிவும் உயர்ந்த நிலையும் உடையவர்களாயிருக்கின்றனர். மேலும், ஊன் தின்பவர்கட்கு வருஞ் செரியாமை, மலச்சிக்கல், சன்னி, திமிர்ப்பிடிப்பு, காக்காய் வலி, பிளவை, சூலை, பொருத்துப்பிடிப்பு, ஈரல், குண்டிக்காய் நெஞ்சு முதலிய வற்றைப் பற்றிவரும் வலி, தொழுநோய் முதலிய கொடு நோய்கள் சைவவுணவு உட்கொள்ப வர்கட்கு வருவதில்லை யென்றும், இந் நோய்களால் துன்புறு பவர்கள் இறைச்சியை அறவே ஒழித்துக் காய்கறிகளைத் தெரிந் துண்பதனால் அந்நோய்கள் விலகிப் போகின்றன வென்றும் புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர்கள் ஆராய்ந் துரைக்கின்றார்கள்.



