சங்கிலிக் குறவன்
வெ. இராமலிங்கம் பிள்ளை

சங்கிலிக் குறவன்

(என் தாயாரவர்கள் சொல்லிய கதை இது, அவர்கள் சொல்லுவது போலவே எழுதியிருக்கிறேன்.)

மேச்சேரி என்ற ஊரில் என் கணவர் ஏட்டாக இருந்தார். அந்தக் காலத்தில் அந்த வட்டாரத்தில் கன்னக் களவுகள் அதிகம். அந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் குறவர்கள். கன்னம் வைப்பதில் அவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள். குறவர்களின் குற்றங்களைக் கண்டு பிடிப்பதில், என் கணவர் அதிக அனுபவமுள்ளவர் என்று எண்ணி, அவரை மேச்சேரிக்கு மாற்றி விட்டார்களாம்.

என் கணவர் தமது போலீஸ் ஸ்டேஷனின் எல்லைக் குட்பட்ட கிராமங்களில் உள்ள எல்லாக் குறவர்களையும் (குற்றஞ் செய்து ஏற்கெனவே தண்டனை யடைந்திருக்கிற) ‘ கே-டி’க் களையும் ஒரு ஜாபிதா எடுத்து, ஒவ்வொரு வாரமும் சந்தை நாளில் அவர்களெல்லாரும் எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து கூடும்படி செய்வார். அவர்களுடன் சிநேக பாவத்துடனே பேசுவார். சில சமயம் அவர்களே குற்றங்களை ஒப்புக் கொண்டு திருடின சொத் துக்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டால், தாமே சிபார்சு செய்து குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வாங்கித்தருவார். அவர் நோக்க மெல்லாம், தமது எல்லைக்குள் குற்றங்கள் குறைச்சல் என்று சர்க்காருக்குக் காட்ட வேண்டும் என்ற ஒரே ஒன்றுதான்.

நாங்கள் மேச்சேரிக்குப் போய் ஒரு வருஷத்துக்குள் அங்கே கன்னக்களவுகள் மிகவும் குறைந்து விட்டன, அதே சமயத்தில் ஓமலூர்த் தாலுகாவில் கன்னக் களவுகளும் கொள்ளைகளும் அவற்றோடு சேர்ந்த சில கொலைகளும் நடந்துவிட்டன. இந்தக் குற்றங்களை யெல்லாம் சங்கிலி என்ற பேர்போன குறவன் செய்து வந்ததாகத் தகவல்.

அவனைப் பிடிப்பதற்கென்று ஓர் இன்ஸ்பெக்டரும் இரண்டு ஏட்டுகளும் பதினைந்து ஜவான்களும் ‘ஸ்பெஷல் டூட்டியில் ‘ நாலு மாதம் பாடு பட்டு, அவனைப் பிடித்து வந்து ஓமலூர்க் கச்சேரியில் அடைத்துப் பூட்டி வைத்தார்கள். பூட்டிவைத்த இரவே, அவன் எப்படியோ தப்பி ஒடி விட்டான். அங்கே யிருந்து ஓடி வந்த அவன், நாங்களிருந்த மேச்சேரிக்குப் பக்கத்தில் ஒரு காட்டில் ஒளிந்து கொண்டு மறுபடியும் பெரிய பெரிய களவுகளையும் கொள்ளைகளையும் செய்து வந்தான். அவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்றும், பிடிக்க முடியாவிட்டால் சுட்டு விடும்படியும் சர்க்கார் உத்திரவிட்டிருந்தார்கள். அதோடு, அவனைப் பிடிக்க ஒத்தாசை செய்பவர்களுக்கு நூறு ரூபாய் வெகுமதி தருவதாகவும் விளம்பரப்படுத்தி யிருந்தார்கள். முன்னே அவனைப் பிடித்த இன்ஸ்பெக் டரையும் ஜவான்களையும், மேச்சேரியில் ஸ்பெஷல் டூட்டியாகப் போட்டு, என் கணவரையும் அந்த வேலையில் ஒரு ஸ்பெஷல் ஏட்டாக வேலை செய்ய உத்தரவிட்டார்கள்.

என் கணவர் தந்திரமாக மற்றவர்களைக் கொண்டு எப்படியாவது குற்றவாளிகளைப் பிடித்து, களவு போன பொருள்களை வாங்கிக் கொடுத்து, சர்க்காரில் நல்ல பெயர் வாங்கி யிருந்தாலும், சங்கிலியைப் போன்ற முரடர்களைப் பதுங்கி மறைந்து, சண்டையிட்டு, நேரக் கூடிய அபாயங்களுக்கு அஞ்சாமல் அலைந்து திரிந்து பிடிப்பதற்கு வேண்டிய ஆற்றலில் குறைந்தவர் தான். வெளிக்கு உருட்டும் மிரட்டுமாக நிரம்பத் தைரியசாலி போலத்தான் காணப்படுவர். இருந்தாலும், இயற்கையில் மிகவும் பயந்தவர். கச்சேரி வேலையில் கெட்டிக்காரர். கரடு முரடான வேலைகளில் கலங்கிப் போவார். அபாயமான அலுவல்களாய் போக வேண்டிய சமயங்களில் அவர் தயங்கும் போது, எனக்கும் என் இயற்கையான துணிகரம் சற்றே துவண்டு போகும்.

சங்கிலியைப் பிடிக்கும் ‘ஸ்பெஷல் டூட்டியில் ‘ வேலை பார்க்கும்படி உத்தரவு வந்து விட்டது. என்ன செய்வது? இஷ்டமோ இல்லையோ, சர்க்கார் வேலை; போயாக வேண்டும். நான் தைரியம் சொன்னேன். அவர் தயங்கினார். அப்போது நான் நிறை கர்ப்பிணி. மறு நாள் என் கணவர் என் பிரசவத்துக்குத் துணை கூட்டி வரவேண்டுமென்று, ஒரு வாரம் ரஜா கேட்டார். இன்ஸ்பெக்டர் மூன்று நாளைக்குத்தான் ரஜா கொடுத்தார். மூன்று நாளும் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, என் கணவர் யோசனை செய்துகொண்டிருந்தார். ரஜா முடிந்ததும், சங்கிலியைக் கண்டு பிடிக்கப்போக வேண்டும்.

நாலாவது நாள்- கச்சேரிக்குப் போக உடுப்பை எடுத்தார். நான் அவருக்கு உற்சாக மூட்டுவதற்காக, “அந்த உடுப்பை எனக்குப் போட்டு அனுப்புங்கள். நான் அந்தச் சங்கிலியைச் சங்கிலி போட்டுக் கட்டிக்கொண்டு வருகிறேன்” என்றேன்.

அவர் உடனே “போடி, போ. நான் என்ன அவ்வளவு பேடியா?” என்று, உடைகளை மாட்டிக்கொண்டு கச்சேரிக்குப் போய் விட்டார்.

எனக்குக் கொஞ்சம் குழப்பந்தான். அந்தச் சங்கிலி, பல போலீஸ்காரர்களைப் படுகாயப் படுத்தியிருக்கிறான் என்று கேள்விப்பட்டது உண்டு, என் கணவருக்கு ஒரு குறையும் வரக்கூடாது என்று குல தெய்வங்களை யெல்லாம் கும்பிட்டுக் கொண்டும் பழனியாண்டவனுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டும், மனதைத் தேற்றிக் கொண்டேன்.

சுமார் ஒரு மாதம் வரையிலும், அந்தச் சங்கிலி இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியாமல், என் கணவரும் மற்றவரும் அலைந்து கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு, சங்கிலியும் அவன் கூட்டத்தாரும் மேச்சேரிக்குப் பதினோரு மைல் தூரத்திலுள்ள ஒரு காட்டில் பதுங்கி யிருப்பதாகப் புலன் கிடைத்தது. என் கணவரும் அவர் துணைவர்களும், தக்க முஸ்தீப்புடன் அங்கே போனார்கள். பத்து நாள் வரையிலும் திரும்பி வரவில்லை. எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

பதினோராம் நாள் காலையில், ஐந்தாறு கிராம வாசிகள் ஒரு கட்டிலை, அதில் படுத்திருந்த ஓர் ஆளோடு தூக்கி வந்து, எங்கள் வீட்டு வாசலில் இறக்கி வைத்தார்கள். நான் வீட்டுக்குள் வேலையாக இருந்தேன். என் மூத்த மகள் துடித்துக் கொண்டு ஓடி வந்து, அம்மா! அண்ணனை வந்து பாரு என்று கூப்பிட்டாள். நான் வாசலுக்கு ஓடினேன். கட்டிலில் கிடந்தவர் என் கணவர், இடது கையில் பெரிய கட்டுக் கட்டியிருந்தது. எனது அஞ்சாத நெஞ்சமும் அலமலந்து விட்டது. எல்லோருமாகச் சேர்ந்து, அவரை வீட்டுக்குள் கொண்டு சென்றோம். அங்கே ஒரு கட்டிலில் மெத்தை போட்டு, அதில் அவரைப் படுக்க வைத்தோம். பிறகு, நடந்த விஷயத்தை விசாரித்தேன்.

சங்கிலியும் அவன் ஆட்களும் காட்டுக்குள் ஒரு சிறு வீட்டில் ஒளிந்திருந்தார்களாம். போலீஸார் அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் அந்த வீடு காலியாய் இருந்தது போலக் காணப்பட்டது. போலீஸ் காரரும் அவர்களுக்குத் துணைசென்ற சில கிராம வாசிகளும் நாலாபக்கமும் பதுங்கிக் காத்திருந்தார்கள்.பொழுது சாயும் சமயமானதும், திடீரென்று அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டு அங்கிருந்த பத்துப் பதினைந்து ஆட்கள் நாலா பக்கமும் ஓடினார்கள். போலீஸ்காரர்கள் சுட்டார்கள், ஒரு குண்டாவது திருடர்கள் மீது படவில்லை. கடைசியாகத் தப்பி ஓடிய ஒருவன் என் கணவர் இருந்த பக்கம் ஓடினான். இவர் குறுக்கிட்டார். அவன் தன் கைத்தடியால் ஓங்கி அடித்துவிட்டான். இவரது இடது கையில் பலமான அடி. என் கணவர் சுருண்டு விழுந்து விட்டாராம். திருடர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். இன்ஸ்பெக்டர் சுட்ட குண்டுகளில் ஒன்று, ஒரு போலீஸ் ஜவானின் துடையில் பாயவே, அவனை உடனே சேலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்கள். மேச்சேரியில் ஆஸ்பத்திரி இல்லை. என் கணவருக்கு வெறும் அடி மட்டுமே விழுந்திருந்ததால், அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். இதுதான் நடந்த வரலாறு.

பிறகு, ஒரு நாட்டு வைத்தியனைக் கூப்பிட்டு என் கணவரின் கையைப் பரிசோதித்ததில், முழங்கை எலும்பு உடைந்திருக்குமோ என்று சந்தேகிக்கும்படி ஒரே வீக்கமாய் வீங்கியிருந்தது. அவரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக எண்ணினோம். ஆனால், அந்த வைத்தியர் இரண்டு நாளில் வீக்கம் வாடும்படி செய்துவிட முடியும் என்றும், அதற்குமேல் அவசியம் என்று தோன்றினால் ஆஸ்பத்திரிக்குப் போகலாம் என்றும் வற்புறுத் தினார். அவரைக் கொண்டு கட்டுக் கட்டப்பட்டது, மறுநாளே வீக்கம் சற்று குறைந்தது. ஐந்தாறு நாளைக்குள் வீக்கம் வடிந்துவிட்டது.

என் கணவர் சங்கிலியைப் பிடிக்க வேண்டிய ஸ்பெஷல் டூட்டியிலிருந்து விலக்கப்பட்டு, பழைய கச்சேரி வேலையே பார்க்கலானார். அடிபட்டதும் ஒரு நன்மைக் குத்தான் என்று எண்ணும்படி முடிந்தது. குண்டுபட்ட ஜவானும் குணமடைந்து விட்டான். இதற்குள் எனக்கும் ஒரு பெண் குழந்தை பிரசவித்து, ஒரு மாதம் ஆகி விட்டது. சங்கிலிக் குறவன் மட்டும் பிடிபடவில்லை.

மூன்று மாதங் கழித்து, ஒருநாள் இரவு, நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். நடுச்சாமம் இருக்கும். குழந்தை பாலுக்கு அழுதது. பாதித் தூக்கத்தோடு எழுந்து உட்கார்ந்து, சுவரின் மீது சாய்ந்து கொண்டு, குழந்தையை எடுத்துப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் தலை சுவரின்மேல் முட்டியிருந்தது. சுவரில் ஏதோ எலி சுரண்டுவது போல் சத்தம் கேட்டது. எனக்குச் சந்தேகம் வந்து, நிரம்பவும் கவனமாகக் காது கொடுத்தேன். மறுபடியும் சுரண்டுகிற சத்தம் கேட்டது. பிறகு, குத்துகிற சத்தம். உடனே என் சந்தேகம் விலகி விட்டது. அது எலியுமல்ல, பெருச்சாளியு மல்ல; யாரோ கன்னம் வைக்கிற சத்தம் தான் என்று கண்டுகொண்டேன். நாங்கள் குடியிருந்த வீடு நல்ல மச்சுவீடு. சுவர் கெட்டியான செங்கல் சுவர். நான் படுத்திருந்தது ஓர் அறை. அதில்தான் எங்கள் பெட்டி பேழைகளும் நகை நட்டுகளும் இருந்தன. வெளியில் ஒரு பெரிய கூடம். அந்தக் கூடத்துக்கு எதிரில் இன்னோர் அறை. அது சமையல் அறை. கூடத்து மத்தியில் கொல்லைக்குப் போகிற கதவு. கொல்லைச் சுவர் தாண்டினதும், ஒரு சந்து. சந்துக்கப்பால் ஒரு தோட்டம். தோட்டத்துக் கப்புறம் காடு. கூடத்தில் என் கணவர் படுத்திருந்தார். அன்றைக் கென்று எதிர் வீட்டில் ஒரு கலியாணம். கலியாணத்துக்கு வந்த விருந் தாளிகளில் பலர், கலியாண வீட்டில் படுக்க இடமில்லா மல், எங்கள் வீட்டுக் கூடத்தில் படுத்திருந்தார்கள்.

கன்னம் வைக்கிற சத்தம்தான் என்று தெரிந்தபின், கூக்குரல் போட்டு, கூடத்தில் படுத்திருந்தவர்களை எழுப்பலாமா என்று தோன்றிற்று. அப்படிச் செய்யக் கூடாதென்று முடிவு செய்தேன். கதவைத் திறந்து கூடத்தில் படுத்திருந்த என் கணவருக்குச் சொல்லி ஆளைப் பிடிக்கலாமா என்று எண்ணினேன். ஆனால், திறக்கும்போதும் மூடும்போதும் அந்தக் கதவு பெரிய சத்தம் போடும். அந்தச் சத்தத்தைக் கேட்டால் திருடன் ஓடிவிடுவான். கதவைத் திறக்காமல் என்ன செய்யலாம் என்று எண்ணிப் பார்த்தேன். குறவன்கள் கன்னம் வைக்கிற மாதிரியும் அவர்கள் உள்ளே நுழைகிற விதமும் பலமுறை (குறவர்களின் வாயாலேயே) கேட்டிருந்தேன். அதனால், எனக்கு ஒரு யுக்தி தோன்றிற்று.

கன்னம் வைக்கிற சுவருக்கு எதிரில், ஒரு குத்து விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சத்தமும் போடாமல் கதவையும் திறவாமல், அந்தக் குத்துவிளக்கை ஓர் ஓரத்தில் எடுத்து வைத்தேன். அதன் வெளிச்சத்தை மட்டுப் படுத்தினேன். குழந்தையை எடுத்து, தூரத்தில் ஒரு மூலையில் படுக்க வைத்தேன். அறையைத் தேடினேன். அகஸ்மாத்தாக ஒரு புதுத் தாம்புக் கயிறு அந்த அறையில் கிடந்தது. அந்த ஊரில் ஜலக் கஷ்டம். கிணறுகள் வெகு ஆழம். சில சமயம் இரண்டு கயிறுகளை முடிந்து தண்ணீர் மொள்ள வேண்டியிருக்கும். அதற் காக, உபயோகத்திலிருக்சிற கயிறு போக அதிகப்படியாக, ஒரு புதுக் கயிறு வீட்டில் இருக்க நேர்ந்தது. அந்த ஊரில், சேந்து கயிறு புளிச்சம் நாறினால் திரிக்கப் பட்டிருக்கும். வெகு பலமான கயிறு.

அந்தக் கயிற்றிலே, இழுத்த உடனே இறுக்கிக் கொள்ளுகிற மாதிரி, ஒரு சுருக்குப் போட்டேன். கயிற்றின் இன்னொரு முனையைக் கட்டுவதற்கு, தகுந்த பலமுள்ள விட்டமோ சட்டமோ கிட்டவில்லை. வேறு வழி யில்லாமல், எதிரில் சுவரோரத்தில், தயிர் சிலுப்புவதற்காக எங்களுக்கு முன்னால் குடியிருந்தவர் நட்டிருந்த ஒரு மூங்கில் கம்பத்தில், அந்த முனையைக் கட்டினேன். சுருக்கைக் கையில் பிடித்துக்கொண்டு, சுவரில் சத்தம் வருகிற இடத்துக்கருகில் உட்கார்ந்து, காது கொடுத் துக் காத்துக்கொண்டிருந்தேன். கொஞ்சங் கொஞ்ச மாகச் செங்கல்களைப் பேர்த்தெடுக்கிற ஓசை, சுவருக்கு உள்ளே சமீபத்தில் நெருங்கி வருவது நன்றாகக் கேட்டது. கடைசி வரிசையில் இருக்கிற செங்கல்கள் அசைவதைக் கண்டேன்.

என்னை அறியாமல் என் தேகத்தில் ஒரு படபடப்பு உண்டாயிற்று. சமாளித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். கடைசிக் கல்லை எடுப்பது கன்னம் வைப்பவனுக்குக் கஷ்டமாக இருந்தது. அந்தக் கல் அசைந்து விட்டது. ஆனால், எடுபடவில்லை. அது ஒவ்வொரு தடவையும் வீட்டுக்குள்ளேயே விழுந்துவிடப் போகிறது போல் ஆடியது. அப்படி உள்ளே விழுந்துவிடக் கூடாது என்பதுதான் குறவனுடைய குறி. அதற்காக அங்கே வெகு நேரம் நிதானமாக வேலை செய்தான்.

அந்தச் சமயத்தில் என் குழந்தை அழத் தொடங்கிற்று. எனக்கு உண்டான எரிச்சலுக்கு எல்லையே இல்லை. இதுவரையிலும் திகைக்காமல் இருந்த என் நெஞ்சு, திக்குத் திக்கென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. குழந்தை அழுகிற சத்தம் கேட்டவுடன், சுவரில் கேட்ட சத்தம் நின்று விட்டது. நான் மெல்ல எழுந்து, குழந்தையை எடுத்துப் பால் கொடுத்தேன். அது பாலைக் குடித்துக் கொண்டே தூங்கிவிட்டது. பால் கொடுத்துக் கொண்டே, சுவரையும் முன் அசைந்த செங்கல்லையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். கல்லும் அசைய வில்லை; சத்தமும் கேட்க வில்லை. குழந்தையின் சத்தத்தைக் கேட்டு ஓடி விட்டானாக்கும் என்று நினைத்தேன், என்றாலும், குழந்தையை மறுபடியும் படுக்க வைத்துவிட்டு, முன் போலவே கையில் கயிற்றுடன் சுவரோரத்தில் உட்கார்ந்து வெகு நேரம் கவனித்துக் கொண்டிருந்தேன். கன்னம் வைக்கிற சின்னம் நின்றுபோய் விட்டது. சரி, திருடன் ஓடிவிட்டா னென்று தீர்மானித்து, கதவைத் திறந்து, எல்லோரையும் எழுப்பி, கொல்லைக்குப் போய்ப் பார்க்கலாமென்று எண்ணி, எழுந்து கதவண்டை போனேன்.

மறுபடியும் சுவரில் சத்தம் கேட்டது. திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டேன்.

சிறிது நேரத்தில், கடைசி வரிசையிலுள்ள செங் கல்லுக்குப் பக்கத்தில், ஒரு சிறு துவாரம் உண்டாயிற்று. அந்தத் துவரத்தின் வழியாக, இரண்டு விரல்கள் உள்ளே வந்து, அந்தச் செங்கல்லை அழுத்தி இழுப்பதைக் கண்டேன். சிறுகச் சிறுக இழுக்கப்பட்டுக் கடைசியாக அந்தக் கல் என் கண்ணுக்கு மறைந்து விட்டது. சுவரில் துவாரம் உண்டாகி விட்டது, மற்றக் கல்லுகளை எடுத்தது வெகு சுலபம். கொஞ்சங் கொஞ்சமாகத் துவாரம் பெரியதாயிற்று. என் கையும் மனமும் துடிக்க ஆரம்பித்து விட்டன.

ஒர் ஆள் நுழையக் கூடிய பொந்து உண்டான பின், வெகு நேரம் ஒன்றும் நடக்கவில்லை. நான் மூச்சு விடும் சத்தம், எனக்கே பயங்கரமாகத் தோன்றிற்று. அந்தச் சத்தம் எங்கே அவன் காதில் விழுந்து விடுமோ எனறு, என்னால் ஆனமட்டும் அடக்கி விட்டு, கன்னத் துவாரத்துக்குத் தூரத்தில் தலையை வைத்துக்கொண்டு, காத்திருந்தேன்.

வெகு நேரங் கழித்து, ஒரு கால் உள்ளே வந்தது. கன்னம் போட்டு நுழைகிறவர்கள் முதலில் தலையை உள்ளே விடமாட்டார்கள் என்று கேட்டிருந்தது அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது. உள்ளே வந்த கால் உடனே திரும்பிப் போய்விட்டது. கன்னத் துவாரம், தரையிலிருந்து சுமார் அரை அடி உயரத்தில்தான் இருந்தது. என் கையில் வைத்திருந்த சுருக்கைப் பெரிதாக்கி, கன்னத் துவாரத்தைச் சுற்றிலும் சுவரோடு ஒட்டி யிருக்கும்படி அதைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கி ஒடுங்கி நின்றேன்.

மறுபடியும், கால் உள்ளே வந்தது. தரை அரை அடிக்குக் கீழே இருந்தபடியால், சுவரோடு ஒட்டியிருந்த கயிறு, காலில் தட்டுப்பட வில்லை. துவாரத்துக்கு நேராக அறையிலிருந்த வெளிச்சத்தை மறைப்பதற்காக, ஒரு பெட்டியை முன்னால் வைத்தேன். உள்ளே வந்த கால், நாலா பக்கமும் துழாவிக்கொண்டு, பெட்டியில் மோதிற்று. மோதின பெட்டியை, அந்தக் கால் தடவிப் பார்த்துச் சோதித்துக் கொண்டிருந்தது.

முழங்கால் வரை உள்ளே வந்து விட்டது. முழங்கால் உள்ளே வந்ததும், நறுக்கென்று சுருக்கை, என் இடது கையால், முழங்காலுக்கு மேல் இறுக்கிவிட்டேன்.

“”கொல்லையில் திருடன்! கொல்லையில் திருடன் !” என்று கூச்சல் போட்டேன்.

“கொல்லையில் திருடன்! பிடியுங்கோ! பிடியுங்கோ!”

கூடத்தில் படுத்திருந்த என் கணவர், நான் இருந்த அறையின் கதவை இடித்து, “என்ன ! என்ன !” என்றார். நான் கயிற்றை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, கதவைத் திறக்க முயன்றேன். திருடன் பலமாகக் காலை இழுத்தான். என் கையிலிருந்த கயிறு போய்விட்டது. அவன் இழுத்த வேகத்தில், கயிற்றின் மற்றொரு முனை யைக் கட்டியிருந்த மூங்கில் மரம் சாய்ந்து விட்டது. நான் உடனே கதவைத் திறப்பதை விட்டு விட்டு, கயிற்றை மறுபடியும் பிடித்து, எனது பலமெல்லாம் சேர்த்து, சுவரில் காலை உதைத்துக் கொண்டு இழுத்தேன். கால் மறுபடியும் உள்ளே வந்துவிட்டது.

“கதவைத திறக்க முடியவில்லை. கொல்லைக்கு ஓடுங்கள். கொல்லைச் சுவரைப் பாருங்கள்” என்று மூச்சுத் திணறிக்கொண்டே கத்தினேன். கொல்லைக் கதவு திறந்த சத்தம் கேட்டது.

கலியாணத்துக்கு வந்து படுத்திருந்தவர்களில் சிலர், நல்ல பலமுள்ள இளைஞர்கள். அதே சமயத்தில், வீட்டில் விடியற்காலம் கவனிக்கவேண்டிய கலியாண காரியமாக விழித்துக்கொண்டே பல பேர், விளக்குகளுடன் வேலை பார்க்கப் புறப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் இந்தச் சத்தத்தைக் கேட்டுக் கொல்லைக்கு ஓடிவந்தார்கள். நான் வெகு கஷ்டத்தோடு கயிற்றை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றேன்.

கொல்லையில் அடிதடி ரகளைகள் நடக்கிற மாதிரி காதில் விழுந்தது. சுமார் பத்து நிமிஷம் கழித்து, கயிற்றை விடும்படி கன்னத் துவாரத்தின் வழியாக, என் கணவரின் குரல் கேட்டது. நான் கயிற்றை விட்டுவிட்டுக் கதவைத் திறந்துகொண்டு கொல்லைப்பக்கம் போனேன். முப்பது பேர் அங்கே கூடியிருந்தார்கள். சுமார் முப்பத்தைந்து வயதுள்ள ஒரு பலிஷ்டனான மனிதன் கட்டுண்டு தரையில் கிடந்தான். சுற்றியிருந்தவர்களில் பலபேருக் குப் பலமான காயமும் அடியும். பிடிபட்ட மனிதனுடன் இன்னும் ஐந்தாறு பேர் இருந்தார்களாம். அவர்கள், பிடிக்க வந்தவர்களைத் தடியால் அடித்தும் கத்தியால் குத்தியும் விட்டார்கள். அடிக்குப் பயப்படாமல் இவர்கள் அவர்களைப் பிடிக்க முயன்றார்களாம். ஆயினும், கூட இருந்த ஆட்களெல்லாம் ஒவ்வொருவராகத் தப்பி ஓடி விட்டார்களாம். கன்னத் துவாரத்தில் இருந்தவன் மட்டும், ஓட முடியாமல், சிக்கிக்கொண்டான். கலியாணத்துக்கு வந்திருந்தவர்களெல்லோரும் கிராமவாசிகளாதலால், அடிபட்டும் பயப்படாமல் ஒருவனையாவது பிடித்து விட்டார்கள். ஒரே ஒரு கிராமவாசிக்கு மட்டும் மார்பில் பலமான ஒரு கத்திக்குத்து விழுந்துவிட்டது. மற்றவர் களுடைய காயங்களும் அடிகளும் அபாயமானவை அல்ல, என் கணவருக்கு அடியில்லை. பிடிபட்டவனுடன் இருந்த ஆட்களெல்லாம் ஓடிவிட்ட பின், கன்னத் துவாரத்தி லிருந்த ஆளைக் கிராமவாசிகள், அசைய முடியாமல் அமுக்கிக் கொண்ட பிறகுதான், என் கணவர் அவன் பக்கத்தில் போனாராம். உடனே கச்சேரிக்கு ஆள் அனுப்பி, கைவிலங்கு கொண்டுவந்து, பிடிபட்டவனுக்கு விலங்கிட்டு, எழுந்திருக்கச் செய்தார்கள்.

அவன் எழுந்து நின்றான். அவனுடைய கம்பீரமான உருவம், இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதனையும் சுருக்கிட்டுப் பிடித்து விட்டோமே என்ற மட்டற்ற மகிழ்ச்சியால், என் உடல் சிலிர்த்தது. இதுவரையிலும் சிறிது தூர நின்று பார்த்துக்கொண்டிருந்த நான், அவனுக்கு விலங்கிட்ட பிறகு, சற்றுக் கிட்டப் போய்ப் பார்த்தேன். என்னைக் கண்டதும் அங்கிருந்த பலர் என் சாமர்த்தியத்தை மெச்சிப் பேச ஆரம்பித்தார்கள்.

அதைக் கேட்டு அந்தப் பிடிபட்ட ஆள், “இந்த அம்மாவா என் காலுக்குச் சுருக்குப் போட்டவங்க?” என்றான்.

‘ஆம்’ என்ற பதிலைக் கேட்டவுடன், அவன் “வேறே ஆம்பிளைகள் யாரும் அங்கே இல்லையா?” என்றான்.

“இல்லை.”

“அம்மா தாயே! ஒங்க சமுத்தே சமுத்து. ஆம் பிள்ளைகளில் கூட இப்படித் தைரியசாலியை, நான் பார்த்ததில்லை” என்று புன்சிரிப்புடன் கூறி, விலங்கிட்ட தன் கைகளைத் தூக்கி, அவன் என்னைக் கும்பிட்டான். அவனை விட்டுவிட்டால் தேவலை போல் எனக்கு ஒரு பச்சாதாபம் உண்டாகி, என் மனதை வெகு சங்கடப் படுத்திவிட்டது.

என் கணவரும் மற்றவர்களும் அவனைக் கூட்டிக் கொண்டு, கச்சேரிக்குப் போய்விட்டார்கள். பொழுது விடிந்து வெகு நேரங் கழித்துத்தான், என் கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார். வேறு எங்கேயோ காலை ஆகாரம் சாப்பிட்டு விட்டு, வாய் நிறைய வெற்றிலை பாக்கை மென்று கொண்டு, சிரித்த முகமாய் வந்தார். வந்ததும் “பலே கெட்டிக்காரிடி நீ. எங்களால் பிடிக்க முடியாமல் இருந்த அந்தச் சங்கிலிக் குறவனை, நீ பிடித்து விட்டாயே! உனக்கு நூறு ரூபாய் சர்க்கார் இனாம் வரப் போகுது, இன்ஸ்பெக்டர் அதற்கு வேண்டியதையெல்லாம் எழுதிச் சேலத்துக்கு அனுப்பிவிட்டார்” என்றார். பிடிபட்டவன் அந்தப் பெயர் போன சங்கிலிக்குறவன் தான் என்று தெரிந்ததும். எனக்குச் சந்தோஷம் தாங்கமுடிய வில்லை.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, என்னை நேரில் பார்த்துப் பாராட்டுவதற்காக, ஸ்பெஷல் இன்ஸ்பெக்டரும் சில ஜவான்களும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். இன்ஸ்பெக்டர் நரசிங்கராவ் என்ற ஒரு பிராமணர். எனக்கு என்றுமில்லாத வெட்கம் உண்டாகி, உள்ளே போய்விட்டேன். இன்ஸ்பெக்டர் வெகு நேரம் வேண்டியதன் பேரில் வெளியே வந்தேன்.

அவர்“ அம்மா ! உங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். இவ்வளவு தீரமான செயலைக் கட்டுக் கதைகளில் தான், நான் படித்திருக்கிறேன். உங்களை நேரில் பார்த்து வாழ்த்துச் சொல்லாமல் போக, எனக்கு மனம் வரவில்லை. இவனைப் பிடிக்க, நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மூன்று தடவை என் உயிருக்கே அபாயம் வந்து தப்பி னேன்… இந்தாருங்கோ; நான் பிரியத்தோடு கொடுக் கிறதைத் தடை சொல்லாமல் வாங்கிக்கொள்ள வேணும். சர்க்கார் இனாமும் சீக்கிரம் வரும்” என்று, ஏதோ கையில் வைத்துக் கொண்டு நீட்டினார்.

நான் அதை வாங்க மறுத்தேன். அவர் விடவில்லை. வாங்கிக் கொள்ளச் சொல்லும்படி, என் கணவரை வேண்டினார். என் கணவரும் வாங்கிக் கொள்ளச் சொன்னார். நான் வாங்கிக் கொள்ள இசைந்து, “அதை அவ ரிடமே கொடுத்து விடுங்கள்” என்று, என் கணவரைச் சுட்டிக் காட்டினேன்.

நரசிங்கராவ் என் கையிலேதான் அதைத் தர வேண்டுமென்று பிடிவாதம் செய்தார். கடையசியாக, வாங்கிக் கொண்டேன். அதில் ஐம்பது ரூபாய் இருந்தது. ஐம்பது ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை. பிறகு இன்ஸ்பெக்டர் கன்னத் துவாரத்தையும் மற்ற இடங்களையும் பார்வையிட்டு, வேண்டிய தகவல்களைக் குறித்துக்கொண்டு போய்விட்டார்.

ஒரு மாதம் சென்று, எனக்கு நூறு ரூபாய் ரொக்க வெகுமதியும், என் கணவருக்கு முதல் கிரேடு ஏட்டு வேலைக்கு உத்தியோக உயர்வு உத்தரவும் வந்தன. எனக்கு இன்ஸ்பெக்டர் தந்த ஐம்பது ரூபாயையும், சர்க்காரிடமிருந்து வந்த நூறு ரூபாயையும், அப்படியே ‘சாமி பணம்’ என்று பத்திரப்படுத்தி வைத்திருந்து, அடுத்த பங்குனி மாதம், சில பந்துக்களையும் கூட்டிக் கொண்டு, குடும்பத்தோடு பழனிக்குப் போய், பத்து நாள் இருந்து தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *