
சங்கிலிக் குறவன்
வெ. இராமலிங்கம் பிள்ளை
கோவில் திருட்டு
(இது என் தகப்பனாரவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். அவர் கள் சொல்லுவது போலவே எழுதி யிருக்கிறேன்.)
1896 ஆம் வருஷத்தில் நான் நாமக்கல்லில் ஹெட் கான்ஸ்டேபிளாக இருந்தேன். அப்போதுதான் என் உத்தியோகத்தில் அது வரையில் இல்லாத ஒரு பெரிய ‘கேஸ் ‘ ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டிய கடமை ஏற்பட்டது.
நாமக்கல் ஒரு பிரசித்தி பெற்ற விஷ்ணு ஸ்தலம். நாமக்கல் என்ற பெயரே அங்குள்ள ஒரே கல்லாயிருக்கும் அழகான ஒரு குன்றினால் வந்தது. அந்தக் குன்றைச் சுற்றிலும் ஊர். குன்றின் கீழ்ப்பாகத்தில் மலையின் பாதி உயரத்தில் பள்ளிகொண்ட ரங்கநாதருடைய கோவில். குன்றின் மேல்புறத்தில் ஸ்ரீ நாமகிரி அம்மன் சந்நிதியும் நரசிங்கப் பெருமாளின் சந்நிதியும் இருக்கின் றன. நாமகிரி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரே கல்லால் அமைக்கப்பட்ட சுமார் இருபது அடி உயரமுள்ள ஆஞ்சநேய விக்கிரகத்தின் ஆலயம். மலையின் மேல் ராணுவ உபயோகத்துக்கான மதிற் சுவரும், ஒரு மருந்துக் கிடங்கும், இடிந்துபோன வரத ராஜப் பெருமாளின் கோவிலுந்தான் உள்ளன. குன்றைச் சுற்றிலும் பல குளங்கள். இவைகளெல்லாம் திரிசிராப் பள்ளியைப் பல்லவ மன்னர்கள் ஆண்டு வந்தபோது கட்டப்பட்டன என்பது சரித்திரம்.
நாமகிரி யம்மனுடைய கோவில்தான் எல்லாவற்றிலும் விசேஷமானது. இரணியனைக் கொன்ற உக்கிர நரசிம்மமாக இருந்த மகாவிஷ்ணுவைச் சாந்தப்படுத்திய மகாலக்ஷ்மியின் மூர்த்தந்தான் நாமகிரியம்மன் என்பது புராணம். நாமகிரியம்மன் மிக்க வரப்பிரசாதி என்று வெகு தூரங்களிலிருந்து யாத்திரிகர்கள் வந்து போவார்கள். ஆகையால் நாமகிரியம்மன் கோவில் பெரிய தேவ ஸ்தானம்.
1896 – ஆம் வருஷம் மார்ச்சு மாதத்தில் ஆந்திர மாகாணத்திலிருந்து சுமார் பத்துப் பன்னிரண்டு யாத்திரிகர்கள் நாமக்கல்லுக்கு வந்து சேவைக்காகத் தங்கினார்கள். அவர்கள் தனியே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சுமார் ஒரு மாதம் வரையிலும் அபிஷேக ஆராதனைகளை வெகு விமரிசையான முறையில் நடத்தினார்கள். நாள் தவறாமல் அவர்களுடைய கட்டளை ஏதாவது நடக்கும். தாராளமாகப் பணச் செலவு செய்து, தர்மகர்த்தா, கோவில் சிப்பந்திகள், ஊரிலுள்ள பல பெரிய மனிதர்கள் எல்லோருடைய வீடுகளுக்கும் நிறையப் பிரசாதங்கள் விநியோகம் செய்யப் பண்ணிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜனங்கள் கூட் டங் கூட்டமாகத் தரிசனத்துக்கு வந்து அந்தச் சேவைக் காரர்களையும் பார்த்து வியந்து புகழ்ந்து விநியோகங்களைப் பெற்றுக்கொண்டு போவார்கள். அதனுடன் அவர்களுடைய செலவில் நடந்த கதா காலக்ஷேபங் களுக்கும் சதிர்க் கச்சேரிகளுக்கும் திரள் திரளாக வந்து களித்தார்கள். சாப்பாட்டு நேரம் போக மற்றக் காலத்தை யெல்லாம் அவர்கள் கோவிலுக்குள்ளேயே போக்குவார்கள். அவர்களுடைய பக்தியையும் விநயத்தையும் பாராட்டித் தர்மகர்த்தாவும் கோவில் சிப்பந்திகளும் அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கோவிலுக்குள் இஷ்டம் போல் வந்து போகக்கூடிய வசதிகளையும் செய்து கொடுத்திருந்தார்கள்.
அவர்களுடைய வரலாற்றை விசாரிக்க நேர்ந்த போது, அவர்கள் வடக்கேயுள்ள ஒரு பெரிய ஜமீன் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களென்றும், இப்போது ஜமீன் தாராக இருந்துவரும் இளைஞருடைய தகப்பனார் முன் இரு முறை இந்தக் கோவிலுக்கு வந்து போனதாகவும், அந்தக் கிழவர் செய்துகொண்ட பிரார்த்தனை யின்படி, சில காரியங்கள் கைகூடிவிட்டதால் அந்தப் பிரார்த்தனையில் தீர்மானம் செய்திருந்த சுமார் இருபத்தையாயிரம் ரூபாய் காணிக்கையை இந்தக் கோவில் திருப்பணிகளுக்குச் செலவிட எண்ணியிருப்ப தாகவும் சொல்லிக் கொண்டார்கள்.
ஒரு நாள் கோவில் தர்மகர்த்தாவும், முக்கியமான சிப்பந்திகளும், ஊரிலுள்ள இரண்டொரு பெரிய மனிதர் களும், இந்தச் சேவைக்காரர்களும் எல்லோரும் உட்கார்ந்து இருபத்தையாயிரம் ரூபாய்க்குள் என்ன திருப்பணி செய்து வைக்கலாம் என்று ஆலோசித்தார்கள்.
கோவிலின் தலைவாசல் கோபுரமின்றி மொட்டையாக இருந்தது. கோபுரத்துக்குத் திட்டம் போட்டார்கள். கோபுரம் குறித்த தொகைக்குள் அடங்கவில்லை. பிறகு மடைப்பள்ளியை விரிவாக்கி, கதா காலக்ஷேபத்துக்கு ஒரு மண்டபமும் கட்டிவிடலாமென்று எண்ணினார்கள் அந்த இரண்டு வேலைக்கும் நல்ல கட்டிடமாகக் கட்டினாலும் பதினையாயிரம் ரூபாய் போதும். மீதி பத்தாயிரம் துண்டு விழுந்தது. பிறகு மலையின்மேல் இருக்கிற வரத ராஜ சுவாமி கோயிலைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்யலாமா என்று யோசித்தார்கள். அது தர்மகர்த்தாவுக்குப் பிடிக்கவில்லை. எதைச் செய்தாலும் அம்மன் சந்நிதிக்குள்ளேயே செய்தால் தான் ஜனங்கள் அடிக்கடி அனுபவிக்கக் கூடியதாக இருக்கும் என்றார். கடைசியாகத் தர்மகர்த்தாவின் யோசனைப்படி அம்மனுக்குப் புது மாதிரியான நல்ல நகைகளைச் செய்துவிடலாமென்று தீர்மானித்தார்கள். இப்போது இருந்து வருகிற நகைகள் எல்லாம் புராதன காலத்தில் செய்யப்பட்டவை யாதலால் இக்காலத்து அலங்காரத்துக்குத் தகுதியாக இல்லை என்று தர்மகர்த்தா வருத்தப்பட்டார்.
உடனே எல்லோரும் உக்கிராணத்துக்கு முன் உட்கார்ந்து கொண்டு தேவஸ்தானத்திலுள்ள எல்லா ஆபரணங்களையும் பார்த்தார்கள். எல்லா நகைகளும் கர்நாடகத் தினுசைச் சேர்ந்தவை. நல்ல தங்கமும் நவரத்தினங்களும் நிறைந்திருந்தாலும் ஒன்றாவது இக் காலத்துக் கண்களுக்குப் பார்க்கப் பிடித்தமுள்ளதாக இல்லை. சுமார் லட்ச ரூபாய் பெறுமான நகைகள் இருந்தும் நாகரிகமான அலங்காரத்துக்குத் தகுதியாக ஒன்று கூட இல்லை என்பதே எல்லோருடைய அபிப்பிராயமாக இருந்தது. அவைகளில் சிலவற்றை அழித்து நல்ல மாதிரியான இரத்தினங்களை வாங்கிப் புதுப்பிக்கலாமென்று யோசித்தார்கள். அதுவும் தர்மகர்த்தாவுக்குப் பிடிக்கவில்லை. பழைய நகைகளில் ஒன்றையாவது உருக்குலைக்க அவருக்குச் சம்மதமில்லை. புதியனவாகச் சில நகைகளைச் செய்வதென்று முடிவு செய்தார்கள்.
அந்தத் தீர்மானப்படி அந்தச் சேவைக்காரர்களில் இரண்டு பேரில் ஒருவர் சென்னைக்கும், மற்றொருவர் கும்ப கோணத்துக்கும் அனுப்பப்பட்டார்கள். சென்னைக்குப் போனவர், வைரம், பச்சை, நீலம் முதலான இரத்தினங்களை வாங்கப் போனார். கும்பகோணத்துக்குப் போனவர் கோவில்களுக்கு நகைகள் செய்வதில் நல்ல அனுபவமுள்ள ஒரு பொன் வேலைக்காரரைக் கூட்டிவரப் போனார். அவர்கள் போய் ஒரு வாரம் ஆயிற்று. மற்றவர்கள் வழக்கம் போல் அபிஷேக ஆராதனைகளை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் நான் வெகு சீக்கிரமாக எழுந்திருந்து ஒரு சொந்த அலுவலாக வெளியில் போய்வரும் பொருட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பல் விளக்கிக்கொண்டிருந்தேன். இன்ஸ்பெக்டருடைய சைக்கிள் வண்டியில் கான்ஸ்டேபிள் அவசரமாச வந்து இறங்கினான். அந்தச் சைக்கிள் வண்டியைப் பார்த்ததும் நான் திடுக்கிட்டேன்.. ஏனென்றால் அந்த வண்டி அப்போது மிகவும் புதுமையான பொருள். முதல் முதல் நாங்கள் பார்த்த சைக்கிள் வண்டி அதுதான். கெட்டியான சிவப்பு ரப்பர் டயர் போட்டு மிகவும் கனமாக இருக்கும் ‘பிக்ஸட் வீல்’ தான் (Fixed wheel). ‘பிரீ வீல்’ (Free wheel) என்ற வஸ்துவே கண்டுபிடிக்கப்படாத காலம். அதைக் கையால் தள்ளிக் கொண்டு போவதே கஷ்டம். நூதனப் பொருளானதால் ஊருக்குள் அதில் ஏறிக்கொண்டு போவது அந்தக் காலத்தில் கண்காட்சியாக இருக்கும். 350 ரூபாய்க்கு வெகு அருமையான பொருளாக வாங்கப்பட்டது. அதில் இன்ஸ்பெக்டரைத் தவிர வேறு யாரும் சவாரி செய்வதில்லை. துடைக்கிறவர்களைத் தவிர மற்றவர்கள் கையால் தொட்டுப் பார்க்கக்கூடக் கிடைக்காத அவ்வளவு உயர்ந்த பொருளாக அது இருந்துவந்தது. வெகு அவசரமாக இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு டாக்டரைக் கூட்டிவர வேண்டிய இரண்டொரு சமயங்களில்தான் அதில் வேறு மனிதர்கள் சவாரி செய்ததை நான் பார்த்திருந்தேன். அந்தச் சைக்கிள் வண்டியில் வந்து ஒரு ஜவான் என் வீட்டுக்கு முன்னால் அவசரமாக இறங்கினான் என்றால் எனக்கு என்னவோ, ‘ஏதோ’ என்ற குழப்பம் உண்டானது ஆச்சரியமல்ல. இன்ஸ்பெக்டர் என்னைக் ‘கையோடு’ கூட்டிவரச் சொன்னார் என்று கான்ஸ்டேபிள் சொன்னான். நான் அரைகுறையாக முகத்தைக் கழுவிக்கொண்டு இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போனேன்.
இன்ஸ்பெக்டர் ஜனாப் ரஸாக் ஹுசேன் சாயபு எல்லாக் கச்சேரி வேலைகளையும் வீட்டிலேதான் செய்வார். போலீஸ் ஸ்டேஷனுக்கு எப்போதாவது அத்தியாவசியமாக இருந்தால்தான் வருவார். அவர் வெளியில் புறப்பட வேண்டிய உடையுடன் வாசலில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அவருடன் டிப்டி கலெக்டர் பார்த்த சாரதி ஐயங்காரும், நாமகிரியம்மன் கோவில் தர்மகர்த்தாவும், சில அர்ச்சகர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். நான் ‘சலாம்’ செய்தவுடன் திருப்பிச் ‘சலாம்’ செய்து விட்டு வேறொன்றும் சொல்லாமல் இன்ஸ்பெக்டரும் டிப்டி கலெக்டரும் முன்னால் நடந்தார்கள். நானும் மற்றவர்களும் பின்தொடர்ந்தோம்.
ஸ்ரீ நாமகிரியம்மன் கோவிலுக்குப் போனோம். இன்ஸ் பெக்டர் முகம்மதியரானதால் கோவிலுக்குள் அவர் போகக்கூடிய வரையிலும் போய் நின்றுகொண்டு என்னைக் கூப்பிட்டு, “வெங்கட்ராம பிள்ளை, உள்ளே போய்ப் பாருங்கள்” என்றார். டிப்டி கலெக்டரும் தர்மகர்த்தாவும் அர்ச்சகர்களும் நானும் உக்கிராண அறைக்குப் போனோம். உக்கிராண அறைக் கதவும், உக்கிராணப் பெட்டகங்களும் பரக்கத் திறந்து கிடந்தன. அங்கு இருந்த நகைகள் முழுவதும் களவு போயிருந்தன; கள்ளச் சாவியினால் திறக்கப்பட்டிருந்தன என்று கண்டோம்.
யாருடைய வேலை? கேட்பானேன்? திருப்பணி செய்ய வந்த பக்தர்களுடைய திருட்டுப் பணிதான் !
அப்போதுதான் வடக்கேயிருந்து வந்திருந்த சேவைக் காரர்களுடைய செய்கைகளை யெல்லாம் விவரமாகச் சொன்னார்கள். உடனே அவர்கள் வாடகைக்கு இருந்து வந்த வீட்டுக்குப் போனோம். அது பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே போய்ப் பரிசோதித்தோம். அங்கே நேற்றைய வரையிலும் குடியிருந்த வீடு என்று சொல்லுவதற்கான அடையாளங்கள் கூடக் காணப்படவில்லை.
நாலா, பக்கமும் தந்தி கொடுத்து ஆட்களையும் அனுப்பினோம். சென்னைக்குத் தந்தி பேசினதில் அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த பெயருள்ள ஜமீன் ஒன்றும் இல்லையெனத் தகவல் வந்தது.
ஒரு வாரம் வரையிலும் எங்களுக்குத் திக்குத் தெரியவில்லை. சேலத்திலிருந்து ‘சூப்பரிண்டெண்டண்ட், துரை, கலெக்டர்’ முதலான பெரிய அதிகாரிகளும் வந்து போய்விட்டார்கள்.
சென்னை மாகாணத்திற்கே அது ஒரு மிகப் பெரிய திருட்டாக இருந்ததால் சர்க்காரில் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற பரபரப்பு அதிகமாயிற்று. எனக்கும் இன்ஸ்பெக்டருக்கும் தூக்கமும் இல்லை; சாப்பாடும் செல்லவில்லை.
இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்கவென்று பிரத்தி யேகமாகத் துப்பறியும் உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப் பட்டார்கள். கண்டுபிடிக்க உதவி செய்கிறவர்களுக் கெல்லாம் தக்க சன்மானம் கொடுக்கப்படுமென்று சர்க்கார் விளம்பரமும் வெளியாயிற்று. இதற்கென்று தஞ்சாவூர்ப் போலீசைச் சேர்ந்த குப்புசாமி முதலியார் என்ற ஒரு ஹெட்கான்ஸ்டபிள் நாமக்கல்லுக்கு வந்தார். அவர் தமிழ் கூட நன்றாகப் படித்தவர் அல்ல. ஆனால் மாறுவேடம் போட்டுக்கொண்டு துப்பறிந்து வருவதில் நிபுணர். பகல் வேஷக்காரனைக் காட்டிலும் வெகு திறமையாக வேஷம் புனைவார். மிகவும் பழகினவர்கள் கூடக் கண்டுபிடிப்பது கஷ்டம். அவருக்குப் போலீஸ் இலாக்காவில் ஒரு தனி மதிப்பு, தனிச் சம்பளம், தனிப்பட்ட முறையில் பத்தா, படிச்செலவு. வேஷம் போட்டுக்கொள்வதற்கென்று அவர் என்ன செலவுக்குக் கணக்குச் சொன்னாலும் சர்க்காரில் உடனே சம்மதிப்பார்கள். அவரோடு துப்பறியும் வேலை செய்ய வேண்டுமென்று எனக்கு உத்தரவு கிடைத்தது.
குப்புசாமி முதலியாரும் நானும் வெகு பாடுபட்டு அந்தக் களவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் இரண்டு கோவில் அர்ச்சகர்கள் என்பதைக் கண்டுபிடித்தோம். அவர்களைக் கொண்டுவந்து கசக்கியதில் கொஞ்சம் புலன் கிடைத்தது. உள்ளதை யெல்லாம் சொல்லிவிட்டால் அவர்களைச் சாட்சிகளாக எடுத்துக்கொண்டு மன்னித்து விடுவதாகச் சொன்னதன்மேல், அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை யெல்லாம் சொல்லி உளவாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் வேண்டிய மட்டும் அடிக்கடி பணம் தந்து வந்ததையும், கடைசியாக அவர்களுக்கு வெகுமதியாகத் தந்துபோன இரண்டு தங்கச் சங்கிலிகளையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டார் கள். ஒவ்வொன்றும் சுமரர் 25 பவுன் நிறையுள்ளது. அதனுடன் உக்கிராண அறைக்கும் பெட்டகங்களுக்கும் கள்ளச் சாவிகளைச் செய்ய ஒத்தாசையாக இருந்தவர்களும் அவர்களே என்பதையும் ஒப்புக்கொண்டார்கள். அந்தக் கள்ளச் சாவியைச் செய்து கொடுத்தவன் கந்தப்பன் என்ற ஓர் ஆசாரி என்றும், அவன் இருப்பது ராசீபுரம் என்றும் கூறி, அவனுடைய அடையாளங்களை யும் சொன்னார்கள்.
அந்தக் காலத்தில் ராசீபுரம் நாமக்கல் சர்க்கிளைச் சேர்ந்தது. மறுநாளே ராசீபுரத்துக்கு நானும் குப்புசாமி முதலியாரும் நாலு ஜவான்களும் மாறுவேஷத்தோடு போனோம். குப்புசாமி முதலியார் ஒரு ஜோசியராகவும், நான் ஒரு வைத்தியனாகவும், ஜவான்களில் ஒருவன் ஜோசி யருக்கு ஆளாகவும், இன்னொருவன் வைத்தியருக்கு மருந்து உரைக்கிற வேலைக்காரனாகவும், மற்ற இருவரும் ஜோசியமும் வைத்தியமும் கேட்டுக்கொள்ள வரும் குடியான வர்களாகவும் ராசீபுரத்துக்குள் புகுந்து பிரிந்து போனோம். எங்களுக்கெல்லாம் வேஷம் போட்டுவிட்டவர் குப்புசாமி முதலியார் தாம். தனித்தனியே நாங்கள் கந்தப்பனுடைய வீட்டை விசாரித்துக் கண்டுபிடித்தோம்.
மறுநாள் காலையில் கந்தப்பன் தன் வீட்டுத் திண்ணை யில் பட்டறை வைத்துப் பொன்வேலை செய்து கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் உள்ளூர்ப் போலீஸ்காரர் ஆறு பேருடன் நாங்கள் ஆறு பேரும் திடீரென்று கந்தப்ப ஆசாரி வீட்டுக்கு முன்னால் தோன்றி அவன் வீட்டைச் சோதனை போடவேண்டுமென்ற வாரண்டைக் காட்டினோம். அவன் திடுக்கிட்டுத் திகைத்தான். காலை 9 மணியிலிருந்து 1 மணி வரையிலும் சோதனை செய்தோம். எங்களுக்கு உதவக்கூடிய ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆசாரியைக் கச்சேரிக்குக் கொண்டு போய்ப் பயப்படுத்தியும் நயப்படுத்தியும் போலீஸ் சாமர்த்தியமெல்லாம் செய்து பார்த்தோம். அவன் நாமகிரியம்மன் கோவில் களவுக்கும் தனக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் வெகு தைரியமாகப் பேசினான். உள்ளூர்ப் போலீஸாருக்கு அவன் குற்றவாளியல்ல என்ற நம்பிக்கை, ஏனென்றால் அவன் ஊரில் நாணயமுள்ளவ னென்று பேரெடுத்தவன். முன்பின் எந்தவிதமான குற் றத்திலும் சம்பந்தப்பட்டவனல்ல. அவனைக் கைதியாக்க எந்த விதமான நியாயமும் இல்லாமலிருந்தது, கடைசியாக அர்ச்சகர்கள் சொன்ன கந்தப்ப ஆசாரி அவனல்ல. என்றும் அந்தப் பேருடைய வேறு ஆசாரி யாராவது இருக்கலாமென்றும் எண்ணி அந்த ஆசாரியை விட்டு விட வேண்டியிருந்தது.
இனி ராசீபுரத்தை விட்டு வேறு இடங்களில் தேட வேண்டுமென்று எண்ணி ஊருக்குப் புறப்பட வேண்டு மென்று நான் சொன்னேன். குப்புசாமி முதலியாருக்கோ ராசீபுரத்தை அவ்வளவு பயனற்ற இடமாக விட்டுவிட இஷ்டமில்லை. ராசீபுரத்திலேயே இன்னும் சிலநாள் தங்கி அங்குள்ள கொல்லர், தச்சர், தட்டார், கன்னார் முதலான எல்லா ஆசாரிகளையும் கவனித்து வேறு கந்தப்ப ஆசாரி யாராவது இருக்கிறானா என்று பார்க்க வேண்டும் என்று சொன்னார்.
மறுநாள் வழக்கம் போல் எங்களை வேஷம் போட்டுக் கொள்ளும்படி குப்புசாமி முதலியார் சொன்னார். வேஷம் போட்டுக்கொள்ள எனக்குக் கொஞ்சம் அருவருப்பாக இருந்தது. நானும் பலவிதத் தந்திரங்களைச் செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.
ஆனாலும் இதுவரையிலும் பகல் வேஷம் போட்டுப் பழக்கமில்லை.. அதுவும் வைத்தியன் வேஷமும் அதற்கு வேண்டிய வாய்ப்பேச்சும் எனக்குச் சரியாக வரவில்லை. அதைக் கண்டு குப்புசாமி முதலியார் தாமே வைத்தியரும் ஜோசியரும் ஆகிவிட்டார். என்னையும் குடியானவர்களோடு சேர்த்துவிட்டார்.
ராசீபுரத்துக்கு ஒருமைல் தூரத்தில் ஒரு கொல்லன் பட்டறை. அதற்கு வெகு சமீபத்தில் ஒரு படர்ந்த அரச மரம். அம்மரத்தைச் சுற்றி ஒரு கருங்கல் மேடை. மரத்தின் ஓரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டு மூன்று நாகர் சிலைகள்.
குப்புசாமி முதலியார் முதலில் போய் மேடையில் உட்கார்ந்தார். நானும் இன்னும் இரண்டு குடியானவர் வேஷக்காரரும் வேடிக்கை பார்க்கிறவர்களைப் போல் ஒவ்வொருவராக அவருக்குக் கொஞ்ச தூரத்தில் வெவ்வேறு இடத்தில் நின்று கொண்டிருந்தோம். அன்றைக்குச் சந்தைநாள். கொல்லன் பட்டறையில் வேலை அதிகம். இரண்டு மூன்று வண்டிகளுக்குப் பட்டா போடுவதற்காகப் பட்டா வளையங்கள் காய்ந்து கொண்டிருந்தன.
பட்டறையின் சொந்தக்காரனாகிய மருதன் ஆசாரி குப்புசாமி முதலியாரை அடிக்கடி பார்த்துக்கொண்டே தன்னுடைய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் தலையில் ஒரு ஜரிகைத் துப்பட்டாவால் கட்டப்பட்ட தலைப்பாகையும் மேலே வெளுத்த மெல்லிய சரிகை. அங்கவஸ்திரமும், இடுப்பில் பால் போன்ற பஞ்ச கச்சமும் வலது கையில் ஒரு பிரம்பும், இடது கையில் ஒரு பையுமாக உட்கார்ந்திருந்த குப்புசாமி முதலியாருடைய உருவம் மருதனாசாரியின் கவனத்தைக் கலைத்தது. தன்னுடைய வேலையினிடையில் பட்டாக்கள் பழுக்கக் காயவேண்டியதற்காகச் சும்மா இருக்கவேண்டிய நேரம் கிடைத்தவுடன், மருதனாசாரி, முதலியார் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து “வாங்க” என்று கும்பிட்டான். குப்புசாமி முதலியாரும் புன்சிரிப்போடு கும்பிட்டு க்ஷேம லாபங்களை விசாரித்தார். கொஞ்ச நேரம் பேசிக்கொண் டிருந்து விட்டு மருதனாசாரி, “இருங்கோ, வந்துவிட்டேன். அந்த நாலு சக்கரத்துக்கும் பட்டாக்களை மாட்டிவிட்டால் அப்புறம் வேலையில்லை. இருங்கோ, வந்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.
குப்புசாமி முதலியார் அவனை ஏற இறங்கப் பார்த்துக் கவனித்துக்கொண்டார். கொஞ்ச நேரத்தில் பட்டாக்களைப் பூட்டிவிட்டுக் கூலிகளையும் வாங்கிக்கொண்டு சாவகாசமாக வந்த மருதனாசாரி, மேடையின் மேல் முதலியாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். முன்னாலேயே அவனுடைய உடம்பையெல்லாம் குறிப்பாகப் பார்த்து வைத்திருந்த குப்புசாமி முதலியார், மருதனாசாரியை வலது கையை நீட்டச்சொல்லி ரேகை பார்த்தார். இந்தச் சமயத்தில் நானும் மற்ற வேஷம் போட்ட குடியானவர்களும் வேடிக்கை பார்ப்பவர் போல முதலியாருக்குப் பக்கத்தில் வந்து நின்றோம். சரியோ, தப்போ, ரேகை சாஸ்திரப் பேச்சுக்களைக் கொஞ்சம் பேசி, கால பலன்களைச் சொல்ல ஆரம்பித்து, “தொழில் முறையில் குறைவில்லை. வீட்டிலுள்ள சில கஷ்டங்களும் சீக்கிரத்தில் விலகிப் போகும். அடுத்தாற்போல நல்ல யோககாலம் வரப்போகிறது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் மேக சம்பந்தமான சில்லறைத் தொந்தரவுகள் அடிக்கடி உண்டாகும். சில சமயங்களில் ரொம்பக் கைகால் அசரிக்கை யும் உடம்பில் வலியுங்கூட உண்டாகும்” என்று சொல்லி முடிப்பதற்குள் மருதனாசாரி,”ஆமாங்க, ஆமாங்க, உள்ள படி அதுதான் இப்ப எனக்கு கவலைங்க. நீங்க சொன்ன தெல்லாம் சரியா இருக்குது பாருங்க” என்று தன்கையில் வண்டுகடி போல இருந்த சிறு சிறு வட்டம் வட்டமான புண்களைக் காட்டினான். அவற்றை யெல்லாம் முன்னாலேயே பார்த்து வைத்திருந்த குப்புசாமி முதலியார், “கொஞ்சங்கூடப் பயப்பட வேண்டும். அதற்கு அதிகச் செலவில்லாத மருந்து நான் சொல்லுகிறேன். மூன்று நாள் மருந்தில் உடம்பைப் பூராவும் சுத்தப்படுத்தித் தருகிறேன்” என்றார். “செலவானாலும் ஆகட்டுங்க. எவ்வளவானாலும் நான் கொடுக்கிறேன். கொஞ்சம் நல்ல மருந்தாய்ப் பார்த்துச் சொல்லுங்க” என்றான் ஆசாரி.
“பாரப்பா படர்மேகப் படைகள் புண்ணும்
பறந்திடுமே ஒருமூன்று பகலுக்குள்ளே
கோரப்பா புலிப்பாணி முறையைக் கொள்ளு
கொஞ்சமே தப்பாது குணமுண்டாகும்“
என்ற ஒரு பாட்டைப் பாடிவிட்டுக் குப்புசாமி முதலியார், உடனே, “இங்கே நிலாவாரைச் செடி இருக்குதா?” என்றார். “நிலாவாரையா? வண்டி வண்டியாய்க் கிடைக்குங்க” என்றான் மருதனாசாரி. இதைக் கேட்டுக்கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த சம்மட்டியடிக்கிற ஓர் ஆள், “நம்ம கந்தப்பாசாரி தோட்டத்திலே நிலாவாரை கொள்ளை கொள்ளையாக முளைச்சுக் கெடக்குதுங்க” என்றான். கந்தப்ப ஆசாரி என்ற பேரைக் கேட்டவுடன் குப்புசாமி முதலியார், “எந்தக் கந்தப்பாசாரி ?” என்று வெகு ஆவலோடு விசாரிக்கலானார். நிலாவாரையும் ஜோசியத்தையும் வைத்தியத்தையும் இடையிடையே கந்தப்பாசாரியைப் பற்றித் திருப்பித் திருப்பி யாருக்கும் சந்தேகம் உண்டாகாதபடி விசாரித்தார். அந்த விசாரணை யினால் ‘கந்தப்பன்’ என்ற பெயருள்ள ஆசாரி ராசீபுரத்திலாவது அதைச் சுற்றியுள்ள இடங்களிலாவது நாங்கள் வீட்டைச் சோதனை செய்த கந்தப்ப ஆசாரியைத் தவிர வேறு யாரும் இல்லையென்று தெரியவந்தது. ஆனால் இந்தக் கந்தப்பனுடைய மாமனாருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று அரைமைல் தூரத்தில் இருப்பதாகவும் அந்தத் தோட்டம் இந்தக் கந்தப்ப ஆசாரியின் அதிகாரத்தில் இருப்பதாகவும் தெரியவந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு நல்ல வில்லைக் கட்டிடம் இருப்பதும், அது கந்தப்பனாலேயே கட்டப்பட்டதென்பதும், அடிக்கடி கந்தப்பன் அங்கே வந்து தங்கிப்போவனென்பதும் மருதனாசாரியால் தெரியவந்தது. அந்தத் தோட்டத்தில் தான் ‘நிலா வாரை கொள்ளையாக முளைச்சிருப்ப’தாக இப்போது மேலும் அந்தத் தோட்டத்திலுள்ள வில்லை வீட்டில் இப்போது கொஞ்சநாளாக ஒரு சாமியார் வந்து தங்கியிருப்பதாகவும் அந்தச் சாமியாரும் கந்தப்ப ஆசாரியும் ஏதோ பூசை செய்து வருவதாகவும் சொன்னார்கள்.
இதை எல்லாம் கேட்டுவிட்டுக் குப்புசாமி முதலியார் அந்தக் கந்தப்ப ஆசாரி தோட்டத்தில் நிலாவாரை முளைத்திருப்பதைப் போல வைத்தியத்துக்கு வேண்டிய மூலிகைகள் ஏதாவது இருந்தாலும் இருக்கு மென்றும், அந்தத் தோட்டத்தில் போய்ப் பார்க்க வேண்டுமென்றும், அந்தத் தோட்டம் இருக்கும் இடத் தையும் அதற்குப் போகிற வழியையும் விவரமாக விசாரித்துக் கொண்டே அந்த விவரங்களைக் குறித்துக்கொள்ளும்படி சொல்லுவது போல என்னைப் பார்த்து, “யாரப்பா நீ ? உனக்கு அந்த வழி தெரியுமா? எனக்குக் காட்டுகிறாயா?” என்றார். நானும் அந்தக் குறிப்பை அறிந்து, “தெரியும். நான் காட்டுகிறேன் ” என்று சொன்னேன்.
பிறகு முதலியார் மருதனாசாரிக்கு நிலாவாரையைக் கொண்டுவந்து அதன் வேர் பட்டையை எடுத்து நிழலில் உலர்த்தி, கொடிக்கள்ளியை வாட்டி அதன் சாற்றைப் பிழிந்து, அதனுடன் எலுமிச்சம்பழ ரசத்தையும் விட்டு நைய அரைத்து மேகப் புண்களுக்கும் மேக ரணங்களுக்கும் பற்றுப் போடச் சொன்னார். (இது உண்மையிலேயே அனுபவ மருந்து என்று முதலியார் பின்னால் எனக்குச் சொல்லி நானும் பல பேருக்குச் சொன்னதுண்டு. கொஞ்சம் எரிச்சல் இருக்கும். ஆனால் குணம் உண்டு.) மேற்பூச்சுக்கு இந்த மருந்தைச் சொல்லி விட்டு உள்ளுக்கு ஒரு லேகியம் செய்யவேணுமென்று சொல்லிவிட்டுத் தம் பையிலிருந்து ஒரு தகர டப்பியை எடுத்து அதிலிருந்து ஒன்பது குளிகைகளை எடுத்து வேளைக்கு ஒன்றாகத் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லிக் கொடுத்தார். அந்தக் குளிகை வைத்திய வேஷத்துக்கென்று முதலியாரே நாமக்கல்லில் சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சேர்த்து உருட்டினதுதான்; வேறொன்றும் இல்லை. ‘மருந்து’ என்ற நம்பிக்கையில் ஏதாவது நன்மை செய்தால் செய்யும். கெடுதல் செய்யாது. யாருக்கும் எந்த நோய்க்கும் கொடுக்கலாம்.
அந்தக் குளிகைகளை வெகு பயபக்தியுடன் வாங்கிக் கொண்டு, மருதனாசாரி தன் மடியில் இருந்த பணத்தில் ஒரு ரூபாயை எடுத்து வைத்தியரிடம் நீட்டினான். வைத்தியர், ” சீ ! சீ!, எனக்குப் பணம் கிணம் ஒன்றும் வேண்டாம். முழுக்கச்சொஸ்தப்படுத்திவிட்டு அப்புறம் வேணு மானால் பார்த்துக்கொள்வோம். மூன்று நாள் கழித்து மறுபடியும் வருகிறேன்” என்று எழுந்தார். மருதனாசாரி
கொஞ்சம் எங்களை இருக்கச் சொல்லிவிட்டு எங்கேயோ ஓடினான். பதினைந்து நிமிஷத்தில் பத்துப் பன்னிரண்டு இளநீருடன் வந்தான். நல்ல வெயில் நேரம். வைத்தியர் ஒரு காயைக் குடித்துவிட்டுச் சுற்றி நின்ற எங்களுக்கும் ஆளுக்கு ஒன்று கொடுக்கச் சொன்னார். நாங்களும் வைத்தியரோடு சேர்ந்தவர்கள் என்பதை அறியாமலேயே வைத்தியருடைய சந்தோஷத்துக்காக அவர் காட்டினவர் களுக்கெல்லாம் இளநீர் கிடைத்தது.
மருதனாசாரியிடம் விடை பெற்றுக்கொண்டோம். குப்புசாமி முதலியார் உடனே நேராகக் கந்தப்ப ஆசாரியின் தோட்டத்தையும் அங்குள்ள வீட்டையும் பார்வையிட வேண்டும் என்றார். நானும் சம்மதித்தேன். எங்களுடன் ஒரே ஒரு ஜவானை மட்டும் கூட்டிக்கொண்டு மருதனாசாரி சொன்ன வழியில் கந்தப்ப ஆசாரியின் மாமனார் தோட்டத்துக்குப் போனோம். நாங்கள் தோட்டத்திற்குள் நுழைவதற்கு முன் அந்தத் தோட்ட வீட்டிலிருந்து ஒரு சாமியார் வெளியில் வந்தார். நீண்ட தாடியும் தலைமயிரும் காஷாயமும், உடம்பு முழுவதும் திருநீறும், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுமாக விளங்கினார். அந்தச் சிவக் கோலத்தைப் பார்த்தவுடன், அந்தத் தோட்ட வீட்டையும் சோதனை போட்டுப் பார்த்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டு வந்த தீர்மானங் கூடத் தளர்ச்சியுற்றது. அப்படிப்பட்ட சிவனடியார் தங்கியிருந்து பூசைகள் செய்து வருகிற அந்த இடத்தை எப்படிச் சோதனை போடுவது என்ற பச்சாத்தாபமே மேலிட்டது.
சாமியாரைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே கந்தப்ப ஆசாரியும் அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்தான். நான் எனக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் வந்துகொண்டிருந்த குப்புசாமி முதலியாரைத் திரும்பிப் பார்த்தேன். அவர் ஒன்றும் அறியாதவர் போல் சாலை யோரத்தில் ஒரு மர நிழலில் இளைப்பாற உட்கார்ந்தது போல் உட்கார்ந்துவிட்டார். அந்தக் குறிப்பை அறிந்து நானும் வேறொரு மரத்தடியில் உட்கார்ந்தேன். எங்களுக்கு முன்னால் போன ஜவான் வெகு தூரத்தில் எங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டு நின்றுவிட்டான்.
தோட்ட வீட்டை விட்டு முதலில் வந்த சிவனடியார் எங்களைப் பார்க்காமல் வீட்டையே பார்த்துக் கொண்டு கந்தப்பனுக்காகக் காத்திருந்தார். கந்தப்பனும் வந்து சாமியாருடன் சேர்ந்து கொண்டபின் இருவரும் தோட்டத்தை விட்டு வெளியில் வந்து நான் உட்கார்ந்திருந்த பக்கமாக வந்தார்கள். கந்தப்பன் வீட்டைச் சோ தனை போட்டபோது நாங்கள் போலீஸ் உடையுடன் இருந்ததாலும்
இப்பொழுது மாறுவேஷத்தோடு இருப்பதாலும் அவன் என்னைச் சந்தேகிக்க முடியாது. இருந்தாலும் எனக்கு அச்சந்தான். குப்புசாமி முதலியாரை அவர் மாறுவேஷம் போடாவிட்டாலுங் கூட யாருக்கும் தெரியாது. இந்தப் பக்கத்துக்கே அவர் புதிசு. ஆனால் நான் அப்படி அல்ல. பல பேர் என்னை நன்றாக அறிவார்கள். அதனோடு வேஷத்தில் நடிக்க வேண்டிய அனுபவமும் குறைவு. அதனால் என்னுடைய மாறுவேஷத்தில் எனக்கே நம்பிக்கையில்லாததால் கந்தப்பன் என்னைக் கண்டுகொள்வானோ என்று நியாயமில்லாமல் பயந்து கொண்டே அவனையும் சாமியாரையும் கவனித்தேன். கந்தப்பனும் சாமியாரும் தங்களை யாராவது கவனிப்பார்கள் என்ற கவலையே இல்லா தவர்கள் ஆனதால் என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசுகிறவர்களைப் போல நின்று பேசிக் கொண்டு குதூகலத்துடன் குலவிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் எனக்கு நேராக வந்தபோது சாமியார் கலகலவென்று சிரித்தார். கந்தப்பன் நான் உட்கார்ந்திருந்த பக்கத்திலும் சாமியார் அப்புறத்திலுமாக நடந்து வந்ததால் சாமியார் கந்தப்பனைப் பார்த்துச் சிரிக்கும்போது அவருடைய முகம் முழுவதும் எனக்கு நேராகத் தெரிந்தது. அவர் சிரித்ததையும் அவருடைய பல் வரிசையையும் பார்த்த மாத்திரத்தில் எனக்கு என்னவோ ஒரு திடுக்கிட்ட உணர்ச்சி உண்டாகி என் மூளை குழம்ப ஆரம்பித்துவிட்டது.
மறுபடியும் சாமியாரைப் பார்க்கிறதற்குள் அவர்கள் என்னைக் கடந்து போய்விட்டார்கள். அந்தச் சாமியாருடைய முகம் எனக்கு மிகவும் பரிச்சியமான முகமாக இருந்தது. இன்னான் என்று உடனே குறிப்பிட முடிய வில்லை. ஆனாலும் எனக்கும் அந்த முகத்துக்கும் மிகவும் சம்பந்தமுள்ளது போல எண்ணி எண்ணிப் பார்த்தேன். ஞாபகத்துக்கு வரவில்லை. அந்தச் சாமியாரைப் பின் தொடர்ந்து கண்டறிய வேண்டுமென்ற ஆசை அதிக மாயிற்று. என்ன செய்வதென்று தீர்மானிப்பதற்குள் குப்புசாமி முதலியார் நான் இருந்த இடத்திற்கு வந்தார். அவரிடம் சாமியார் மேல் உண்டான சந்தேகத்தைச் சொன்னேன். அவர் உடனே நான் சாமியாரைப் பற்றித் தொடர்ந்து அறிந்து வரவேண்டும் என்று ஏவினார். அறிந்துகொண்டு ஜாகைக்கு வந்து சேருவதாகச் சொல்லிவிட்டு வெகு வேகமாகப் போனேன்.
நான் அவர்களை நெருங்குவதற்குள் அவர்கள் ஊருக்குள் புகுந்து மறைந்துவிட்டார்கள். நான் நேரே கந்தப்பன் வீட்டுக்குப் போய் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கவனித்தேன். கந்தப்ப ஆசாரியும் சாமியாரும் அங்கு இன்னும் வரவில்லை. வெகு நேரம் காத்திருந்தேன். இருவரும் வந்தார்கள். வீட்டுக்குள் புகுந்தார்கள். கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்தார்கள். கந்தப்ப ஆசாரியை விட்டு விட்டுச் சாமியார் மட்டும் புறப்பட்டார். நான் பின்பற்றினேன். கடை வீதிக்குப் போய்ச் சாமியார் தேங்காய், பழம், புஷ்பம், சந்தனம், ஊதுவத்தி, கர்ப்பூரம், சாம்பிராணி முதலான பூசைக் குரிய சாமான்களை யெல்லாம் வாங்கினார். அவர் வியாபாரம் செய்த கடைக்கெல்லாம் கூடவே போய் நானும் தேங்காய் பழம் முதலியவற்றைக் கொஞ்சம் கொஞ்சம் வாங்கினேன். அந்த ஆசாமியினுடைய அடையாளமும் கொஞ்சம் கொஞ்சமாக என் மனத்தில் உருக்கொண்டது. கடைசியாக ஒரு கடையில் சாமியார் கொடுத்த ரூபாய்க்குக் கடையில் சில்லறை இல்லாததால் சற்று நேரம் தாமதிக்கவேண்டி யிருந்தது. அப்போது சாமியார் கடைக் காரனோடு பேசிக்கொண்டே சிரிக்க நேர்ந்தது. அந்தச் சிரிப்புக்காகத்தான் நானும் காத்திருந்தேன். எனக்குச் சமீபமாக நின்று அவர் சிரித்ததனால் முன்னே பார்த் ததை விட அவருடைய பல் வரிசையை இப்பொழுது நன்றாகப் பார்க்க முடிந்தது. பற்களைப் பார்த்தவுடனேயே சாமியார் யார் என்பதைக் கண்டுகொண்டேன். அவன் சின்னப்பன் என்கிற பேர் போன கேப்மாறி. வெவ்வேறு பெயருடன் வெவ்வேறு வேஷம் போடுவான். அநேக மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவன். ஏற்கனவே நாலு தடவை தண்டனை அடைந்தவன். அவனுடைய முக்கியமான அடையாளங்கள்: அவனுடைய வலது கண்ணில் பூ விழுந்திருக்கும், அவனுடைய முன்னம் பற்களில் தங்கம் பதிக்கப்பட்டிருக்கும், முன்னெல்லாம் அவனுக்குத் தாடி மீசை இருந்ததில்லை; வெறும் மொட்டைச் சாமியாராக வேஷம் போட்டு மோசம் செய்திருக்கிறான். இப்போது தாடியும் தலைமயிரும் அவனுடைய அடையாளத்தை முற்றும் மாற்றியிருந்தன. பல் அடையாளத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி அவனுடைய மீசை மறைத்துக் கொண்டு இருந்தது. நான் அவனை நன்றாக அறிவேன். அவனுக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் பெரிய பட்டிக்காட்டான் கட்டுகிற தலைப் பாகையுடன் முகத்தை மிகவும் மறைத்துக் கொண்டதனாலும் அவன் என்னைச் சந்தேகத்துடன் ஊன்றிப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்படாத தனாலும் என்னை அவன் கண்டுகொள்ளவில்லை. இவன்மேல் இரண்டு மோசடி வழக்குகள் சரியான ருசுக்களுடன் எங்கள் கச்சேரியில் காத்துக்கொண்டிருந்தன. மூன்று வருஷமாகப் போலீசுக்குச் சிக்காமல் தலைமறைவாகவே தப்பித்துக்கொண்டு இருக்கிறான். இவனைக் கைது செய்ய வேணுமென்று எல்லா முக்கியமான போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் இவனுடைய அங்க மச்ச அடையாளங்கள் அனுப்பப்பட்டு அங்கங்கே போலீசார் இவனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவன் செய்திருக்கிற குற்றங்கள் பெரும் பாலும் மோசடிகள் தாம். இளிச்சவாயர்களைப் பார்த்து ஏமாற்றுவதில் கைதேர்ந்தவன். பலவிதமான வேஷத்தில் வேலை செய்வான். வேதாந்தியாக விளங்குவான், முற்றும் துறந்த சந்நியாசியாக சாதிப்பான். தங்கம் செய்யத் தெரிந்த ரசவாதியாக நடிப்பான். வியாபாரியைப் போல விலை பேசுவான். இவனுடைய வித்தைகளில் சில வெகு வேடிக்கையாக இருக்கும்.
அவற்றில் இரண்டொன்றைச் சொல்லுகிறேன் :
எந்த ஊருக்குப் போனாலும் இரண்டு மூன்று நாள் தன்னுடைய சொந்தச் செலவில் சாப்பிட்டுக்கொண்டு ஊரைச் சுற்றிச் சுற்றி அங்கங்கே நேர்ந்தபடி சிற்சில வேதாந்தப் பேச்சுக்களைப் பேசிவிட்டு யாரிடத்திலும் எவ்வித உதவியும் எதிர்பார்க்காதவனாகப் போய் விடுவான். இரண்டு மூன்று நாளைக்குள் தன்னுடைய வேதாந்தப் பேச்சுக்களில் சுலபமாக மயங்கிவிடக் கூடியவர்கள் யார் யாரென்று குறிப்பிட்டு அவர்களுக்குள் தனக்குப் பிடித்தமான ஒருவனைப் பொறுக்குவான். அந்தக் குறிப்பிட்ட ஆசாமியிடம் அவர் தனியாக இருக்கும்போது அடிக்கடி வந்து உட்கார்ந்து பின்னும் இரண்டு மூன்று நாளைக்கு வெறும் பேச்சு மட்டும் பேசிவிட்டும் பச்சைத் தண்ணீர் கொடுத்தாலுங்கூட வேண்டா மென்று போய்விடுவான். கடைசியாக ஒரு நாள் வழக்கம் போல் வந்து, தேவாரம், திருவாசகம், கைவல்யம் முதலியவற்றில் சில பாட்டுக்களைப் பாடி இந்த உலகம் அநித்தியம் என்றும், ஆசைகளை விட்டொழிக்க வேண்டு மென்றும், கூடுமான வரையிலும் தான தருமம் செய்ய வேண்டியது தான் மனிதப் பிறவியின் பலன் என்றும் பேசிக் கொண்டிருப்பான். அவ்வளவு உயர்ந்த விஷயங் களை வெகு நேரமாகப் பேசிக்கொண் டிருக்கிறாரே என்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த வீட்டுக்காரர் இரண்டு வாழைப்பழத்தையாவது, கொஞ்சம் மோரையாவது, வேறு எதையாவது கொடுக்க வருவார். அதைக் கண்ட உடனே இந்த வேதாந்தி, “இது ஒரு தானமா சிவா, இந்த இரண்டு பழமும் மூன்று காசுக்கு மேல் பெறாது. மூன்று காசுதானே என்று கொடுத்துவிட மனசு வருகிறது. இன்னும் பெரிய விலையுள்ளதானால் இப்படி வருமோ ?” என்பான். “எதுவானாலும் மனசு வரும். உங்களுக்குக் கொடுக்க யாருக்குத்தான் மனசு வராது ? என்ன வேணும் சொல்லுங்கள்? பணம் காசு வேணுமா? இந்தாங்கோ” என்று அரை ரூபாயோ ஒரு ரூபாயோ வீட்டுக்காரர் தருவார். அதை வாங்கிக்கொண்டு வேதாந்தி, “ஒரு ரூபாய்தானே என்று உடனே தந்து விட்டீர். ஐந்து பத்து என்றால் மனம் வருமா?” என்று சொல்லிக் கொண்டே முன் வாங்கின ஒரு ரூபாயைத் திருப்பித் தந்துவிடுவான்.
“ஐந்து பத்து என்றால் மட்டும் எனக்கு மனம் வராது என்றா நினைத்தீர்கள்?” என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்காரர் உள்ளே போய் ஐந்தோ பத்தோ கொண்டு வந்து கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு, “சிவா, சந்தோஷம். உங்களுக்கு நல்ல மனசு இருக்கிறது; கண்டு கொண்டேன். இருந்தாலும் நான் இதை எடுத்துக் கொள்ள மாட்டேன், திருப்பி உங்களுக்கே தந்துவிடுவேன் தைரியத்தால் தந்தீர்கள். நானே எடுத்துக் கொண்டு போய்விடுவேன்” என்று தெரிந்திருந்தால் கொடுத்திருக்க மாட்டீர்கள், சிவா” என்பார் வேதாந்தி. ‘இல்லை! இல்லை! அப்படியில்லை. நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். திருப்பித் தரவேண்டாம்” என்பார் வீட்டுக்காரர்.
“வேண்டாம் சிவா, எனக்கு என்னத்துக்கு மடியிலே இந்தக் கனம்? வழியெல்லாம் பயம் உண்டாகும். வேண் டாம் வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே கட்டாயப்படுத்தி வீட்டுக்காரரிடம் பணத்தைத் திருப்பி தந்துவிடுவார் வேதாந்தி. வீட்டுக்காரர் அதை வாங்கிக்கொண்டு முன்பின் யோசிப்பதற்குள், “சிவா, இருபத்தைந்து ரூபாய் கேட்டால் கொடுத்துவிடுவாரா?” என்பார் வேதாந்தி.
“தடை என்ன ?” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்காரர் உள்ளே ஓடிப்போய் இருபத்தைந்து ரூபாய் கொண்டுவந்து கொடுப்பார். அதை வேதாந்தி வாங்கிக் கொண்டு, “சிவா, இதை இந்தத் தடவை திருப்பித் தந்து விடுவேன் என்று நினைக்கவேண்டாம். இது எனக்குத் தானே? மறுபடியும் கேட்கமாட்டீர்களே?’, என்பார்.
”உங்களுக்கே ; மறுபடியும் கேட்கமாட்டேன்.”
“நன்றாக ஆலோசித்துச் சொல்லுங்கள், சிவா ! நான் இதை எடுத்துக்கொண்டு போயே போய்விடுவேன். அப்புறம் வருத்தப்படக் கூடாது” என்பார் வேதாந்தி.
“எடுத்துக்கொண்டே போங்கள், வருத்தமில்லை.”
“போகட்டுமா? உண்மை தானா”
“தாராளமாகப் போங்கள் ; உண்மை தான்.”
“சரி, நான் போகிறேன். நாளை இந்நேரத்துக்கு, வந்து உங்களுக்கு வருத்தம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கிறேன்” என்று கூறி வேதாந்தி திரும்பித் திரும்பி வீட்டுக்காரரைப் பார்த்துக்கொண்டே புன்சிரிப்புடன் போக மனமில்லாதவரைப் போல மெள்ள மெள்ளப் போவார்.
வீட்டுக்காரர் தம்மைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வேதாந்தி போவதனால் பணம் போய்விடுமே என்று வருத்தப்படுவதாகச் சந்தேகிக்கிறார் என்று நினை த்துக் கொண்டு தமக்குத் துளிகூட வருத்தம் இல்லை என்பதைக் காட்டிக்கொள்வதற்குப் பண த்தையும் வேதாந்தியையும் மறந்துவிட்டவர் போல வீட்டுக்குள் போய்விடுவார். வேதாந்தி போய்விடுவார்.
மறுநாள் வேதாந்தி வரமாட்டார். ஊரெல்லாம் தேடினாலும் கிடைக்க மாட்டார். இது சின்னப்பனுடைய வித்தைகளில் ஒரு தினுசு. இப்படி அவன் அடித்துக் கொண்டு போனது ரூபாய் இருபத்தைந்து மட்டும் அல்ல. தான் ஏமாற்றுகிற பேர்வழியின் சக்தி எவ்வளவு இருக்கலாம் என்று விசாரித்து வைத்திருக்கிறானோ அதற்குத் தகுந்தபடி தொகையைக் கேட்பான். ஒரு பெரிய பணக்காரனிடத்தில் இப்படி ஐந்நூறு ரூபாயை அடித்துக் கொண்டு போய்விட்டான்.
சின்னப்பனுடைய மற்றொரு வழியைக் கேளுங்கள். சேலத்துக்குப் பக்கத்தில் ஒரு ஜமீன் தார். அவருக்கு வைத்தியத்தில் ஆசை. மூலிகைகளைக் கொண்டே எல்லாவித வியாதிகளையும் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கை யுள்ளவர். சஞ்சீவி என்கிற மூலிகையும் உண்மை தான் என்று அதைக் கண்டுபிடிக்க வெகு பிரயாசைப்படுகிறவர். அவர் மூலிகைகளை வளர்ப்பதற்கென்றே ஒரு நந்தவனம் உண்டாக்கி அதில் என்ன என்னவோ செடி கொடிகளை எல்லாம் பயிர் செய்து வைத்திருந்தார். இவரிடம் சின்னப்பன் ஒருநாள் வந்தான்.
முழு மொட் டைத் தலையுடன் மீசையில்லாமல், நெற்றி நிறைய நீறு பூசிக்கொண்டு, தும்பைப் பூவைப் போல் வெளுத்துத் துவைத்த உடையுடன் வந்த சின்னப்பனை ஜமீன்தார் பார்த்து யாரோ யாசகத்துக்கு வந்தவராக்கும் என்று நினைத்து, “என்ன வேணும்?” என்று கேட்டார்.
“எனக்கு ஒன்றும் வேண்டாம். தங்களுடைய நந்த வனத்தைக் கொஞ்சம் பார்த்துவிட்டுப் போனால் போதும்; அவ்வளவு தான். நான் பணம் காசு ஏதாவது வேணுமென்று தங்களைத் தொந்தரவு செய்ய வந்தவன் அல்ல” என்றான் சின்னப்பன். இதைக் கேட்டவுடன் ஜமீன் தாருக்கு அவனிடத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டது.
“நந்தவனத்தையா ? நீங்கள் என்ன, வைத்தியரா?” என்றார் ஜமீன்தார்.
“இல்லை, எனக்கு வைத்தியம் தெரியாது” என்றான் சின்னப்பன்.
“பின் நந்தவனத்தில் என்ன பார்க்கவேண்டும்?”
“தங்களுடைய நந்தவனத்தில் வேறெங்கும் கிடைக் காத பல மூலிகைகளை வெகு சிரமப்பட்டுத் தாங்கள் கொண்டுவந்து பயிர் செய்து வைத்திருக்கிறதாகத் தங்களுடைய புகழைப்பற்றி ராமேசுவரத்தில் கேள்விப்பட்டு நேரே அங்கிருந்து வருகிறேன். நான் ஒரு மூலிகையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அது தங்களுடைய நந்தவனத்தில் இருந்தாலும் இருக்கலாம். அதற்காக நந்தவனத்தைப் பார்க்க உத்தரவு தரவேணும்” என்றான் சின்னப்பன்.
“என்ன மூலிகையைத் தேடுகிறீர்கள்? சொல்லுங்கள். நந்தவனத்தில் இருக்கிற எல்லா மூலிகைகளும் எனக்கு மனப்பாடம். இங்கே இருந்தபடியே நீங்கள் தேடுகிற மூலிகை இருக்கிறதா இல்லையா” என்று சொல்லி விடுகிறேன். இருந்தால் உங்களுக்கு வேண்டிய அளவு பறித்துக் கொண்டு போகத் தடையில்லை. என்ன மூலிகை வேணும்? சொல்லுங்கள்” என்றார் ஜமீன் தார்,
சின்னப்பன் பதில் சொல்லத் தயங்கியது போலப் பாசாங்கு செய்துவிட்டு, “அந்தப் பெயரை உடனே எல்லோருக்கும் சொல்லிவிடக் கூடாது என்று எனக்குக் குருவின் ஆணை” என்றான்.
குருவினுடைய ஆணை என்ற வார்த்தைகள் ஜமீன் தாருக்கு ஒரு புது ருசியைக் கொடுத்தன. “உங்களுக்குத் தான் வைத்தியம் தெரியாதென்கிறீர்களே. பின் எதற்கு மூலிகை ?” என்றார்.
சின்னப்பன் உட்கார்ந்தபடியே நாலா பக்கமும் சுற்றிப் பார்த்துவிட்டு, “அதைப்பற்றித் தங்களிடம் தனியாகக் கொஞ்சம் பேசவேண்டும்” என்றான். உடனே ஜமீன் தார் அவனைக் கூட்டிக்கொண்டு மாடிக்குப் போனார். அங்கே தம்முடைய அந்தரங்க அறையில் சின்னப்பனை ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லித் தாமும் உட்கார்ந்து, “சொல்லுங்கள். இங்கே யாரும் வரமாட்டார்கள்” என்றார்.
“முதலில், நான் சொல்லப் போவதை யாரிடத்திலும் தாங்கள் சொல்லுவதில்லை என்று எனக்குச் சத்தியம் செய்து கொடுக்கவேண்டும். நான் இப்படிக் கேட்பதை மன்னிக்கவேண்டும்” என்றான்.
ஜமீன்தார் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தார். பிறகு சின்னப்பன் சொல்லலானான். “நான் இப்போது ராமேசுவரத்திலிருந்து வருகிறேன். அங்கே சிவனடியார்கள் தங்குவதற்கு ஒரு பெரிய மடம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். இந்த மடத்தை வேறு யாரிடத்திலும் ஒரு தம்படிகூடப் பிச்சை வாங்காமல் நானே கட்டி முடிக்க வேணுமென்று எனக்கு என்னுடைய குருநாதன் கட்டளை யிட்டார். என்னுடைய குருநாதன் வடக்கே ஹரித்துவா ரத்தில் இருந்தவர். சுமார் 25 வருஷம் ராமேசுவரத் திலேயே இருந்து சமாதி அடைந்தவர். பல சித்திகள் தெரிந்தவர். அவர் அப்போதைக்கப்போது தங்கம் செய்து என்னிடத்தில் கொடுத்து அதைத் தூரமான ஊர்களில் கொண்டுபோய் விற்றுவரச் சொல்லுவார். சில சமயங்களில் அந்தக் கட்டி நூறு இருநூறு ரூபாய் கூடப் பெறும்படியானதாக இருக்கும். அந்தப் பணத்தை எல்லாம். உடனுக்குடன் தான தருமங்களில் செலவு செய்துவிடுவார். தினமும் ராமேசுவரத்தில் அன்னதானம் நடக்கும். அவரிடத்தில் நான் வெகு காலம் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தேன். கடைசியாக அவர் சமாதியாவதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் என்னைத் தனியாக ஓர் இடத்துக்குக் கூட்டிப்போய்த் தம்முடைய சமாதிகாலம் நெருங்கிவிட்டது என்பதைச் சொன்னார். நான் மிகவும் வருத்தப்பட்டு, ‘எனக்கு என்ன வழி?’ என்று கேட்டேன். அவர் பக்கத்திலுள்ள ஒரு காட்டிற்கு என்னை அழைத்துச் சென்று எனக்கு இரண்டு மூலிகைகளைக் காட்டிக்கொடுத்து அவற்றை உபயோகப் படுத்தும் முறைகளையும் விவரமாகச் சொல்லிக் கொடுத்தார். அவர், இரண்டு மூலிகைகளில் ஒன்று செம்பைத் தங்கமாக்கும், இன்னொன்று மட்டத் தங்கத்தைச் சொக்கத் தங்கமாக்கும். இந்த இரண்டின் உதவியைக் கொண்டு அவருடைய சமாதியின்மேல் நான் ஒரு மடம் கட்ட வேணு மென்றும், செய்கிற தங்கத்தைச் சேர்த்து வைக்காமல் அப்போதைக்கு அப்போது விற்றுச் செலவு செய்துவிட வேணுமென்றும் சொன்னார்.
“இந்த மூலிகைகளின் ரகசியத்தை நான் எனக்கு மிகவும் நம்பகமான ஒரே ஒரு மனிதனுக்குத்தான் சொல்லலாமென்றும் ஒருவருக்கு மேற்பட்டவர்களிடம் சொல்லக்கூடாதென்றும் என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். நான் அவர் கட்டளையைக் கொஞ்சங்கூடப் பிசகாமல் செய்து முடிப்பதாக வாக்குறுதி செய்தேன். அவர் போன வருஷம் சமாதியானார். அவர் சொல்லிக் கொடுத்த மூலிகைகளைப் பரீட்சித்தேன். உடனே பலித்தது. அவர் சொல்லிப் போனபடி சமா தியின்மேல் மடம் கட்ட ஆரம்பித்துப் பாதி வேலை முடிந்துவிட்டது. இப்போது அந்தத் தாமிரத்தைத் தங்கமாக்கும் மூலிகை அங்கே அற்றுப்போய் விட்டது. நான் நாலுமாதமாக எங்கெங்கோ திரிந்து தேடித் தேடி அலுத்துப்போனேன். இரண்டாவது மூலிகை எங்கும் கிடைக்கும். ஆனால் அது மட்டத் தங்கத்தைத்தான் மாத்து உயரச் செய்யும்.
பத்து ரூபாய் மட்டத் தங்கம் நம்மிடத்தில் இருந்தால் தான் பன்னிரண்டு பதின் மூன்று ரூபாய் சொக்கத் தங்கம் கிடைக்கும். இதன் உதவியைக் கொண்டு சத்திர வேலையை முடிப்பது கஷ்டம். நான் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் அகஸ்மாத்தாக உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே புறப்பட்டு வந்திருக் கிறேன். தங்களுடைய நந்தவனத்தைப் பார்த்துவிட்டு மூலிகை இங்கே கிடைத்தால் பாதியில் நின்று கிடக்கிற திருப்பணியை முடிக்கப் போகவேண்டும். மூலிகை இங்கே கிடைக்காவிட்டால் வேறு இடங்களில் தேடப் போகவேண்டும்; இதுதான் நான்வந்த ரகசியம்” என்று முடித்தான். வெகு ஆசையோடு கேட்டுக்கொண்டிருந்த ஜமீன்தார், “வாங்க, நந்தவனத்துக்குப் போகலாம்’ என்று எழுந்தார்.
ஜமீன்தார் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் நந்தவனம். நந்தவனம் சுற்றுச் சுவருடன் மிகவும் பாதுகாப் புள்ள இடம். வெளிக் கதவைக் கடந்ததும் காவற்கார னுடைய குடியிருப்பு இடம். நந்தவனத்தில் ஓர் ஓரத்தில் நல்ல கிணறு. நடுவில் ஒரு சிறு கட்டிடம். அந்தக் கட்டிடம் ஜமீன் தார் வைத்திய முறைகளுக்கு உதவியாகக் கட் டப்பட்டது. அதில் உரல், உலக்கை, கலுவம், உமி, விறகு, வறட்டி, அடுப்பு முதலான எல்லா வசதிகளும். இருந்தன. நந்தவனத்தில் எண்ணிறந்த வகையான செடி கொடிகளும், பழ மரங்களும், புஷ்பப் பாத்திகளும் இருந்தன சின்னப்பன் ஒரு செடி விடாமல் எல்லாச் செடி கொடிகளையும் புல் பூண்டுகளையும் சுற்றிச் சுற்றிப் பார்வை யிட்டான். ஜமீன் தாரும் கூடவே போனார். எல்லாவற்றை யும் பார்த்துவிட்டுக் கட்டிடத்துக்கு வந்து இருவரும் உட் கார்ந்தனர். மூலிகைக்காக வந்தவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று ஜமீன் தார் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார். சின்னப்பன், “உங்கள் நந்தவனத்தில் அநேக அபூர்வமான மூலிகைகள் இருக்கின்றன. எனக்கு வைத்தியம் தெரியாவிட்டாலும் என்னுடைய குருநாதர் வைத்தியத்தில் நிபுணர். கற்பனை களெல்லாம் செய்வார். அவருக்காக நான் தேடித்தேடி அலைந்த பல மூலிகைகள் இங்கே ஏராளமாக இருக்கின்றன. நான் சொன்ன முதல் மூலிகை இங்கே இல்லை. இரண்டாவது மூலிகை வேண் டியமட்டும் இருக்கிறது” என்றான் சின்னப்பன்.
”எது? எது? அந்த இரண்டாவது மூலிகை எது?” என்று வெகு ஆத்திரத்தோடு ஜமீன்தார் கேட்டார்.
சின்னப்பன் கலகலவென்று சிரித்துவிட்டு, “குருநாத ருடைய அருள் இருந்தால் உங்களுக்கு அதையும் சொல்லுகிறேன். அந்த முதல் மூலிகையையுங் கூடச் சொல்லுகிறேன். நானும் யாருக்காவது ஒருவருக்குச் சொல்லத் தானே வேண்டும்? தயவு செய்து பொறுங்கள். முதலில் இந்தத் திருப்பணியை முடிக்க வேணும். அதற்காக அந்த முதல் மூலிகையைக் கண்டிபிடிக்க வேணும். அது இங்கே கிடைத்திருந்தால் இப்போதே உங்களுக்கு அதன் பெருமையை மெய்ப்பித்துக் காட்டுவேன். இந்த இரண்டாவது மூலிகையை இப்போதே கூடப் பரீட்சை பார்த்துவிடலாம் ஆனால் அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. நான் உடனே போகவேண்டும். பக்கத்தில் மூலிகைகள் கிடைக் கக்கூடிய இடம் உங்களுக்குத் தெரியுமே; சொல்லுங்கள். நான் போய்விட்டு முடிந்தால் இன்னொரு முறை வருகிறேன்” என்றான்.
வந்தவரை உடனே வழியனுப்பிவிட ஜமீன் தாருக்கு மனம் வரவில்லை. மட்டத் தங்கத்தை மாற்று உயரச் செய்யக்கூடிய இரண்டாவது மூலிகை தம்முடைய நந்தவனத்தில் வேண்டிய மட்டும் இருக்கிறதாக அவர் சொன்ன தால். அதையாவது அறிந்துகொள்ள வேணுமென்ற ஆசை அதிகமாகிவிட்டது. அதனால் அவர் வந்தவரை இரண்டொரு நாளாவது தம் வீட்டில் தங்கவேணுமென் று மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார். பக்கத்தில் இருக்கிற கொல்லிமலை எல்லா மூலிகைகளும் கிடைக்கக்கூடிய இடமென்றும், அங்கே போய் முதல் மூலிகையைத் தேடி வருவதற்கான ஏற்பாடுகளைத் தாமே செய்து கொடுப்ப தாகவும் ஜமீன்தார் வாக்களித்தார், அதன்மேல் ராமேசுவரக்காரர் வேண்டா வெறுப்புடன் தமமுடைய பயணத்தை ஒத்திப்போட்டார். அன்று முழுவதும் பலவித மான வேதாந்த விஷயங்களை ஜமீன்தாரும் சின்னப்பனும் பேசினர். தன் பூசைகளை எல்லாம் முடித்துக் கொண்டு “ஆகாரத்துக்கு மேல் கொல்லிமலைக்குப் போகலாமா?” என்று ஜமீன்தாரைக் கேட்டான். அவர், “மலைக்குச் சொல்லி விடுகிறேன். அங்கிருந்து நமக்கு வேண்டிய ஆள் வருவான். நாளைக்கு மலைக்குப் போக ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
சரி, இன்று முழுவதும் சும்மா இருக்கவேண்டி இருக்கிறதனால் அந்த இரண்டாவது மூலிகையின் பெருமையை உங்களுக்குக் காட்டலாமென்று நினைக்கிறேன் என்றான் சின்னப்பன். ஜமீன் தார் அந்தப் பேச்சை வெகு சந்தோஷத்தோடு வரவேற்று, “அதற்கு என்ன என்ன வேண்டும்!” என்று வெகு ஆவலுடன் கேட்டார்.
“அதற்கு வேண்டியது ஒன்றும் இல்லை. ஓர் ஆசாரியைக் கூப்பிட்டு ஒரு பவுன் எடை ஏதாவது மட்டமான தங்கத்தை உருக்கித் தட்டித்தரச் சொல்லுங்கள். அவ்வளவு தான். அதற்கு மேல் கொஞ்சம் வறட்டியும் மூலிகையுந்தான் வேண்டியிருக்கும்” என்றான் சின்னப்பன்.
காலை ஆகாரம் முடிந்தவுடன் ஒரு தட்டானைக் கூட்டி வரச் சொல்லி ஜமீன் தார் தம்மிடத்திலிருந்த பழைய நகைகளில் ஒன்றை அவனிடம் கொடுத்து நிறுக்கச் சொன்னார். மூன்றரைப் பவுன் எடை உள்ளது அது; பவுன் இனம். அதைவிட மட்டத் தங்கம் ஜமீன் தாரிடம் இல்லை. அதை அப்படியே உருக்கி முழுவதையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஜமீன் தார் சொன்னார். அதற்குச் சின்னப்பன், “வேண்டாம், வேண்டாம். சரியாக ஒரு பவுன் எடை மட்டும் போதும். இத்தனையும் வைத்தால் இரண்டு நாள் புடம் வைக்கவேண்டும். பரீட் சைக்குத்தானே? அப்புறம் வேணுமானால் அதிகமாக எத்தனை எடையை வேணுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக எடை வைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக வேணும். எரிக்க நாளாகும். நான் அதிக நாள் தங்க முடியாது” என்றான்.
சரியாக ஒரு பவுன் எடையை வெட்டி அதை உருக்கிச் சின்னப்பன் சொன்னபடி ஓர் அங்குல நீளம் தட்டிக் கொடுத்துவிட்டு ஆசாரி போய்விட்டான். சின்னப்பனும் ஜமின் தாரும் நந்தவனத்துக்குப் போனார்கள். அங்கே இருந்த காவற்காரனிடம் உள்ளே யாரையும் வர விடகூடாது என்று உத்தரவு செய்துவிட்டு அங்குள்ள கட்டிடத்தில் ஒரு சுத்தமான இடத்தில் நிறைய உமியைப்பரப்பி அதன் மேல் வறட்டிகளை அடுக்கினான் சின்னப்பன். ஜமீன் தாரிடம் சொல்லி ஓர் எலுமிச்சம்பழம், கொஞ்சம் உப்பு இவற்றைக் கொண்டுவரச் செய்தான். ஆசாரி தட்டிக்கொடுத்த தங்கக் கட்டியை ஐந்தாறு தடவை உப்பிலும் எலுமிச்சம் பழ ரஸத்திலும் மாற்றி மாற்றிப் போட்டுக் காயவைத் தான். இத்தனை தரம் என்ன என்ன செய்யவேணும் என் பதை விவரமாக ஜமீன் தாருக்குச் சொல்லிக் கொண்டே எல்லாம் செய்தான். இடையிடையே ஜமீன் தாரை அதையும் இதையும் கொண்டுவரச் சொல்லி ஏவுவான். அவரும் அவனுடைய வேலைக்காரனைப் போலத் தாமே ஓடியாடி அவன் சொன்னதை யெல்லாம் செய்தார். கடைசியாக அந்தத் தங்கக் கட்டியைப் புடம் வைக்க ஒரு சிறு மண் பாண்டம் வேண்டியிருந்தது. ஜமீன் தார் அங்குமிங்கும் தேடிக்கொண்டிருந்தார். அதற்குள் சின்னப்பன், “சரி. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. ஈரமண் போதும், வாருங்கள்” என்று கூப்பிட்டான். பூச் செடிகளின் பாத்தியிலிருந்து மண்ணைக் கொண்டுவந்து கல்லில்லாமல் குழைக்கச் சொன்னான், ஜமீன்தார் மண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தார். சின்னப்பன் “தயவு செய்து கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். குருநாதர் உத்தரவானால் நாளைக்கே வேணுமானாலும் இந்த மூலிகையை உங்களுக்குக் காட்டிவிடுகிறேன். இப்பொழுது நான் மட்டும் போய் மூலிகையைக் கொண்டு வருகிறேன். நான் எந்த மூலிகையைப் பறிக்கிறேன் என்று இப்போது தாங்கள் பார்க்க வேண்டாம்” என்றான்.
ஜமீன்தார் சம்மதித்தார். சின்னப்பன் செடி மறைவுகளில் மூலிகையைப் பறித்து வரப் போனான். ஜமீன்தார் தாம் சம்மதித்தபடி அவன் போன திக்கைக்கூடத் திரும்பிப் பார்க்காமல் மண்ணைக் குழைத்துக்கொண்டு இருந்த இடத்திலேயே இருந்தார். சின்னப்பன் வெகு சீக்கிரத் தில் மூலிகையை இரண்டு கைகளிலும் இலைகளின் உருத் தெரியாதபடி கசக்கிக்கொண்டு வந்தான். உமியின் மேலிருந்த நடு வறட்டியின் மேல் குழைத்து மண்ணைக் கனமாக வைக்கச் சொன்னான். அந்த மண்ணின் மேல் உமியை வைக்கச் சொன்னான். அந்த உமியின் மேல் உப்புத் தடவி வெயிலில் அவன் வைத்துவிட்டுப் போன தங்கக் கட்டியை எடுத்து வைக்கச் சொன்னான். ஜமீன் தார் எடுத்து வைத்தார். அதன்மேல் இன்னும் கொஞ் சம் உமியைப் போட்டு மூடச் சொன்னான். ஜமீன்தார் மூடினார். அந்த உமியின் மேல் சின்னப்பன் தான் கொண்டு வந்த தழையைக் கசக்கிச் சாறு பிழிந்தான் நிறையப் பிழிந்துவிட்டுப் பிழிந்த தழைகளையும் அதன் மேல் போட்டு மூடி அதற்குமேல் நிறையக் குழைத்த மண்ணைப் போட்டு மூடச் சொன்னான். ஜமீன் தார் மூடினார். அதற்குமேல் உமியைப் போட்டு மூடச் சொன்னான் மறுபடியும் மண்ணைக் குழைத்து உமியை மூடி மெழுகச் சொன்னான். அதற்குமேல் நிறைய வறட்டிகளை அடுக்கி. நல்ல மூட்டம் செய்துவிட்டு நெருப்பு மூட்டினார்கள்.
வீட்டைப் பூட்டிக்கொண்டு சாப்பிடப் போனார்கள். சாப்பிட்டவுடனே உட்காரக் கூட உட்காராமல் மறுபடியும் நந்தவனத்துக்கு வந்தார்கள். புடம் மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. “இன்றைக்கு இரவு முழுவதும் அனல் குறையாமல் பார்த்துக்கொண்டால் போதும். நாளைக் காலையில் எடுத்துவிடலாம்” என்றான் சின்னப்பன்.
“ராத்திரிக்கு நாம் இங்கே படுத்துக்கொள்வோம். அனல் குறையாமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன்” என்றார் ஜமீன்தார்.
இருவரும் அங்கேயே படுத்துக்கொண்டார்கள். “ஆனால் அனல் சிறு அளவாக இருக்கவேணும். குபீ ரென்று எரியவிடக்கூடாது. அதிகமாக எரிந்தால் அப்போதைக்கப் போது தண்ணீர் தெளித்து அனலைக் குறைக்கவேணும்” என்றான் சின்னப்பன். ஜமீன்தார் வீட்டு மெத்தை பஞ்சணையில் அதுவரையிலும் அவன் அனுபவித்தறியாத சுகத்துடன் தூங்கினான். ஜமீன்தார் தரையில் உட்கார்ந்துகொண்டு அதையெல்லாம் தாமே கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அவர் அது வரையிலும் அனுபவித்தறியாத கஷ்டத்துடன் விடியுமட் டும் விழித்திருந்து மூட்டத்தை, அனல் அவிந்து போகாமலும் அதிகப்படாமலும் கவனித்துக்கொண்டிருந்தார், வழக்கம் போலச் சின்னப்பன் விடிய வெகு நேரத்துக்கு முன்னால் எழுந்தான். ஜமீன் தாரைப் பார்த்து, “கொஞ் சங்கூடப் படுக்கவேயில்லை போல் இருக்கிறதே! ஐயோ! உங்களுக்கு எவ்வளவு சிரமம் கொடுத்துவிட்டேன்! என்னை எழுப்பியிருந்தால் நான் கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்வேனே !’ என்று பச்சா தாபப்பட்டான்.
“பரவாயில்லை, எனக்குத்தான் ஒரு நாள் தூக்கம் கெட்டால் என்ன ?” என்றார் ஜமீன்தார். சின்னப்பன் நந்தவனத்துக்கு வெளியில் போய்க் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து நந்தவனக் கிணற்றில் ஸ்நானம் செய்தான். ஜமீன்தார் இடத்தை விட்டு நகராமல் புடத்தைப் பார்த்துக்கொண்டார். பொழுது விடிந்தது. சின்னப்பன் ஸ்நானாதிகளை முடித்துக்கொண்டு திருநீற்று மேனியாக வந்தான். ஜமீன் தார், “எரிந்தது போதுமா எடுத்துப் பார்க்கலாமா?” என்றார்.
“எரிந்தது போதும் ; தாங்கள் போய் ஸ்நானம் முதலியவற்றை முடித்துக்கொண்டு வாருங்கள். எடுத்துப்பார்க்கலாம்” என்றான்.
ஜமீன்தார் எப்போதும் வெந்நீரில் தான் ஸ்நானம் செய்கிறது வழக்கம். பச்சைத் தண்ணீர் பட்டால் கூட ஜுரம் வந்துவிடும்படி பழகியவர். இருந்தாலும் அந்த இரண்டாவது மூலிகையின் மர்மத்தையாவது உடனே பார்த்துவிட வேணுமென்ற ஆசையினால், வீட்டுக்குப் போய் வெந்நீரில் முழுகிவர நேரமாகுமென்று, தாமும் நந்தவனக் கிணற்றிலேயே பட்டும் படாமலும் முழுகிவிட்டு வந்தார்.
சின்னப்பன் புடம் வைத்த இடத்திற்குச் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு புடத்தைக் கலைக்கும்படி ஜமீன்தாருக்குக் கட்டளையிட்டான். ஜமீன்தார் விடிய விடியத் தூக்கம் கெட்ட ஏக்கம் தீர வெகு ஆவலுடன் புடத்தைக் கலைத்தார். மண் பூச்சை உடைக்கச் சொன்னான். ஜமீன் தார் உடைத்தார். தங்கக் கட்டியின்மேல் தண்ணீரை ஊற்றச் சொன்னான் சின்னப்பன். ஜமீன்தார் ஊற்றினார். தண்ணீர் பட்டுச் சாம்பல் விலகியவுடன் பளிச்சென்று தங்கக்கட்டி மஞ்சள் பூத்த நிறத்துடன் மின்னிற்று. ஜமீன்தார் எடுத்தார். கண்ணைக்கூட நம்ப முடியா தபடி தங்கக்கட்டி முற்றும் நிறம் மாறியிருந்தது. ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டுச் சின்னப்பனிடம் நீட்டினார். சின்னப்பன் அதை வாங்காமல், “நான் பார்க்க வேண்டியதில்லை. அது எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரிந்ததுதான். தாங்கள் பார்த்தால் போதும். சரி, அதை எடுத்துக்கொள்ளுங்கள், போகலாம்” என்றான்,
வீட்டுக்குப் போனார்கள். உடைகளை மாற்றிக் கொண்டு காலை ஆகாரம் முடிந்தவுடன் ஆசாரியைக் கூட்டிவரச் செய்தார்கள். முதல் நாள் ஒரு பவுன் எடை வெட்டி எடுத்த மீதிப் பழைய நகையையும் கொண்டு வந்து ஆசாரியிடம் இரண்டையும் கொடுத்து மாற்றுப் பார்க்கச் சொன்னார்கள். ஆசாரிக்குப் புடம் வைத்த தங்கக்கட்டியைப் பார்த்தவுடனே அளவு கடந்த ஆச்சரியம் உண்டாகிவிட்டது. உரைத்துப் பார்த்தான். “நேற்று நான் தட்டிக்கொடுத்த பவுன் இனந்தானே இது? இப்போது சுத்த சொக்கத் தங்கமாக இருக்கிறதே!” என்று வியந்தான். சின்னப்பன் அந்தத் தங்கக் கட்டியைக் குறுக்கே வெட்டி அதன் எல்லாப் பாகமும் சொக்கத் தங்கமாக இருக்கிறதா என்பதையும் பார்க்கச் சொன்னான். ஆசாரி வெட்டிப் பார்த்தான். அந்தக் கட்டி முழுவதும் சொக்கத் தங்கமாக இருந்தது. அதைப்பற்றி வேறு யாருக்கும் சொல்லவேண்டாமென்று ஆசாரிக்குச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். ஆசாரி பண்ணை வீட்டு ஆசாரி. ஜமீன்தாருடைய தயவினால் ஜீவிக்கிறவன். உத்தரவை ஏற்றுக்கொண்டு போய்விட்டான்.
சின்னப்பன் தன்னுடைய ராமேசுவரம் சத்திரத் திருப்பணி அரைகுறையாக நின்று கிடப்பதைப்பற்றிப் பலவாறாகச் சொல்லிக் கவலைப்பட்டுக்கொண்டான். சத்திரம் முடியாவிட்டாலும் வேலையாட்களுக்கு அவர்கள் செய்திருக்கிற வரையிலுமாவது கூலியைத் தீர்த்துவிட்டால் நாணயமாவது மிச்சமாகும் என்று சொல்லிக் கொண்டு வருத்தப்பட்டான். குருநாதருடைய கட்டளையைப் பூர்த்தி செய்யாமல் இங்கே நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு மெத்தையிற் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பது மகா பாவம் என்று தன்னை மிகவும் நொந்து கொண்டு உடனே கொல்லிமலைக்குப் போய்ப் பார்த்து விட்டு ராமேசுவரத்துக்காவது திரும்பிப் போய்க் கூலி யாட்களுக்கு ஒரு வழி செய்யவேணுமென்றும் உடனே புறப்படவேணுமென்றும் அவசரப்பட்டான். ஜமீன் தாருக்குப் பவுன் தங்கம் சொக்கத் தங்கமானதைக் கண்ணாரக் கண்டபின், அந்த மூலிகை தம்முடைய நந்தவனத் திலேயே இருக்கிறது என்பதையும் அறிந்த பின், செய்யும் முறையும் வெகு சுலபமாக இருக்கிறதைத் தெரிந்து கொண்டபின் அந்த ரகசியத்தையாவது அறிந்துகொள்ளாமல் ரஸவாதியை அனுப்பிவிடமனம் வரவில்லை.
“அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்த நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்” தாயுமானவர் வாக்கின்படி எப்படியாவது இந்த மூலி கையை மட்டுமாவது அறிந்துகொள்ள வேணுமென்ற ஆசை. இப்போது விட்டுவிட்டால் கொல்லிமலையைப் பார்த்துவிட்டுப் பிறகு மறுபடியும் இங்கே வருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகமும் வந்து ஜமீன் தாரை அழித்துக்கொண்டது. அன்று மத்தியானம் சாப்பாட்டுக்கு மேல் ஜமீன்தார், ரஸவாதியை மாடியிலுள்ள தம்முடைய அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்று, ‘ஒரு விண்ணப்பம்” என்றார்.
“என்ன?” என்றான் ரஸவாதி,
“ரொம்பவும் தயவு செய்து நான் கேட்டுக்கொள்வதைத் தாங்கள் அங்கீகரித்து அனுக்கிரகம் செய்ய வேணும். நானும் இந்த ரஸவாதத்தைப் பற்றி ரொம்ப நாளாகப் படித்தும் கேட்டும் இருக்கிறேன். இப்படிக் கண்ணுக்கு முன்னால் செய்து காட்டினவர்களைப் பார்த்ததே இல்லை. என்னவோ தெய்வாதீனமாகத் தாங்களே வந்தீர்கள்; செய்து காட்டினீர்கள். தங்களை உடனே விட்டுவிட மனம் வரவில்லை. உங்களுடைய அவசரம் எனக்குத் தெரியும். இருந்தாலும் இன்னும் சில நாள் தங்கிக் கொல்லிமலையையும் பார்த்து அந்த முதல் மூலிகையையும் தேடிக்கொண்டு தாங்கள் போகலாம். சத்திர வேலையைப் பற்றிக் கவலை வேண்டாம். அதற்கு நானும் என்னாலான காணிக்கையைத் தரக் காத்திருக்கிறேன். இப்பொழுதே வேணுமானாலும் கூலியாட்களுக்குக் கொடுப் பதற்கு வேண்டிய பணம் நான் தருகிறேன். தயவு செய்து இன்னும் சில நாள் என்னுடன் தங்கவேணும் தங்களுக்குத் தயவு இருந்தால் இந்த இரண்டாவது மூலிகையையாவது எனக்குக் காட்டவேணும்” என்று கூறி, ஜமீன்தார் ரஸவாதியைக் கும்பிட்டார்.
“குருநாதருடைய உத்தரவானால் மூலிகையை வேணுமானாலும் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் உங்களிடம் பணம் வாங்கிக்கொள்ளுவது முடியாத காரியம். அது பணத்துக்காக மூலிகையின் ரகசியத்தை விலைக்கு விற்ற மாதிரி ஆகும். அது மட்டுமல்ல; நான் இதுவரையிலும் ஒரு பைசாக் கூடப் பிறரிடத்தில் வாங்கிச் சத்திரத்துக்குச் செலவு செய்தவன் அல்ல. சத்திரத்துக்குப் பணம் தரக்கூடியவர்கள் யாராவது கிடைப்பார் என்று எண்ணி இங்கே வந்தவனும் அல்ல. முதல் மூலிகை கிடைத்தால் உங்கள் நந்தவனத்திலேயே தாமிரத்தைத் தங்கமாக்கி அதை வேணுமானாலும் உங்களிடம் விற்றுக் கூலியாட்களுக்குப் பணம் அனுப்பலாமேயொழிய உங்களுடைய பணத்தை இனாமாக வாங்கி அனுப்பினால் அது என்னுடைய விரதத்துக்கே விரோதமாகும்” என்றான்.
ஜமீன் தார் அதை ஒப்புக்கொண்டார். ஆனால் எப்படியாவது பணத்தை முன்னால் கொடுத்து ரஸவாதியை வசப்படுத்திவிட வேணுமென்பது அவர் ஆசை. “அதற்காகத் தாங்கள் என்னிடம் இனாமாகப் பணம் வாங்கிக் கொள்ள வேண்டாம். கொல்லி மலையில் அந்த மூலிகையைக் கண்டுபிடித்துத் தாங்கள் செய்கிற தங்கத்தை நானே விலைக்கு வாங்கிக் கொள்வதாக வைத்துக்கொண்டு அதற்கு முன்பணமாக நான் தருவதை உங்களுடைய ஏஜெண்டுகளுக்கு அனுப்பி இப்போதைக்குக் கூலிக்காரர் கணக்கைத் தீர்த்தால் தாங்கள் சாவதானமாகத் தங்கிக் கொல்லிமலையை நன்றாக ஆராய்ந்து தேடிப் பார்க்கலாம். மூலிகை கிடைத்தால் நம் நந்தவனத்திலேயே தாங்கள் புடம் போடலாம். அதற்காகச் சொன்னேன்” என்றார்.
“கொல்லி மலையில் அந்த மூலிகை கிடைக்கும் என் பது என்ன நிச்சயம்?” என்றான் ரஸவாதி.
“கட்டாயம் கிடைக்கும். அங்கே சஞ்சீவிகூட இருப்பதாகச் சித்தர்கள் பாடி இருக்கிறார்கள். நானும் அதை அங்கே கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண் டிருக்கிறேன்” என்றார் ஜமீன்தார்.
“அப்படியா!” என்று வெகு ஆச்சரியப்பட்டவனைப் போல ரஸவாதி கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொண்டு யோசனை செய்துவிட்டு, அப்படியானால் எவ்வளவு நாளானாலும் தங்கியிருந்து கொல்லி மலையை நன்றாக ஆராய்ந்து பார்க்கவேண்டியதுதான்” என்றான்.
ரஸவாதி அப்படி இடங்கொடுத்துப் பேசி அவரை நழுவவிடாமல் தொடர்ந்து நெடுநேரம் ஜமீன் தார் தர்க்கம் செய்து கெஞ்சிக் கேட்டுக்கொண்டதன் மேல் உடனே ஐந்நூறு ரூபாயை ராமேசுவரத்துக்குக் கூலியாட்களுக்கு பட்டுவாடாச் செய்வதற்காக ரஸவாதியின் ஏஜெண்டுக்கு அனுப்பிடுவிடுவதென்றும், இன்னும் சில நாளைக்கு ரஸவாதி தங்கியிருந்து ஜமீன் தாருடைய நந்தவனத்திலேயே தாமிரத்தைத் தங்கமாக்கிவிடுவதென்றும், எவ்வளவு தங்கமானாலும் ஜமீன்தார் நிலவரப்படி விலைக்கு வாங்கிக்கொள்வதென்றும் குருநாதருடைய உத்தர வினால் ஜமீன்தாருக்கு மூலிகைகளின் ரகசியத்தைச் சொல்லிவிடுவதென்றும் தீர்மானித்தார்கள். அதற்குள் தபாலுக்கு நேரமாகிவிட்டதால் மறுநாள் ராமேசுவரத்துக்குப் பணத்தை இன்ஷூர் செய்துவிடுவதென்று முடிவு செய்தார்கள். மறுநாள் ஜமீன்தாருடைய மிக விலை யுயர்ந்த இரட்டை மாட்டு வண்டியில் இருவரும் சேலம் தபால் ஆபீசுக்குப் போனார்கள் ஜமீன்தார் வண்டியிலேயே உட்கார்ந்திருந்தார். ரஸவாதி இறங்கிப் போய் 500 ரூபாயை இன்ஷூர் அனுப்பிவிட்டு ரசீது வாங்கி வந்து ஐமீன் தாரிடம் கொடுத்தான்.
ஜமீன் தாருக்கு இங்கிலீஷ் தெரியாது. ரசீதை வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டார். மறுநாள் ஜமீன்தாருடைய நந்தவனத்தில் ரஸவாதி தன் குருநாதருடைய கடாக்ஷத்திற்காக ஒரு பூசை நடத்தி அன்னதானம் செய்தான். ஜமீன்தாருக்கு மூலிகைகளைச் சொல்லிக் கொடுக்கலாமா என்று குருநா தருடைய உத்தரவைக் கேட்பதற்காகவே அந்தப் பூசை நடப்பதாக ஜமீன் தார் அனுமானிக்கும்படி ரஸவாதி பேசினதால், ஐமீன் தார் அந்தப் பூசைக்கு வேண்டிய எல்லாக் காரியங்களையும் வெகு பக்தியோடு பார்த்துக்கொண்டார்,
அடுத்த நாள் அதிகாலையில் ரஸவாதி வழக்கம்போல் ஸ்னானாதி ஜப தபங்களை முடித்துவிட்டு நந்தவனத்தில் உட்கார்ந்திருந்தார். ஜமீன்தார் வெந்நீரில் முழுகிவிட்டு நந்தவனத்துக்கு வந்தார். ஜமீன் தாரை ரஸவாதி என்று மில்லாத குதூகலத்துடன் வரவேற்றார். ஜமீன் தார் பக்கத்தில் உட்கார்ந்தார். ரஸவாதி ” என் குருநாதனுடைய கடாக்ஷம் உங்கள்மேல் பரிபூரணமாக இருக் கிறது. தெய்வ சம்மதம் இருந்ததனால் தான் இங்கே வர நேரிட்டதென்று தெரிகிறது. அந்த மூலிகை களை உங்களுக்கு உடனே காட்டிவிட வேண்டுமென்பது என் குருநாதனுடைய கட்டளை. இனிமேல் தடை செய்ய எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு பின்னால் இந்த ரகசியத்தை அறியவேண்டியவர் நீங்கள் தான். இந்த இரண்டாவது மூலிகையை மட்டும் இப்பொழுதே தெரிந்து கொள்ளவேணுமா, அல்லது கொல்லிமலைக்குப் போய் முதல் மூலிகையையும் கண்டறிந்த பிறகு இரண்டையும் சேர்ந்தாற்போல் சொல்லட்டுமா?” என்றார்.
“தாங்கள் பார்த்து எப்படிச் செய்தாலும் எனக்குச் சம்மதம் தான், ஆனால் நம் நந்தவனத்திலேயே இருப்பதை உடனே தெரிந்துகொள்ளவேணும் என்ற ஆசை தான் அதிகமாக இருக்கிறது, இதை இப்போது காட்டினால் பிறகு அது கிடைக்கிறபோது அதைத் தெரிந்து கொள்ளுகிறேன். எப்படியானாலும் உங்களிஷ்டம்” என்றார் ஜமீன்தார்.
“சரி, உங்கள் ஆசையைக் கெடுக்க எனக்கு இஷ்ட மும் இல்லை, நாளைக்கே அந்த மூலிகையை நீங்கள் பிரயோசனப்படுத்தின மாதிரி புடம் வைத்தே பார்த்துவிடுங்கள். உங்கள் மனம் திருப்தியடைந்த பிறகே கொல்லிமலைக்குப் போவோம். உங்கள் இஷ்டம் போல் எவ்வளவு எடையை வேணுமானாலும் வைத்துப் பரிட்சை பார்த்துவிடுங்கள். பணம் அனுப்பியிருப்பதால் எனக்கு உடனே புறப்படவேண்டிய அவசரம் இல்லை. நாலைந்து நாளைக்குப் புடம் போடவேணுமானாலும் தாமதிக்கலாம் அது உங்களுடைய இஷ்டம். ஆனால் நான் செய்து காட்டிய மாதிரி ஒரே புடம் போட்டு எடுப்பதற்கு பத்து பவுன் எடைக்கு மேல் தங்கம் இருக்கக் கூடாது. அதற்கு மேற்பட்ட கட்டியை மூன்று தடவை வெவ்வேறு மூட்டத்தில் வைத்தால்தான் சுத்தப்படும். இன்றைக்கே உங்களுக்கு வேண்டிய தங்கத்தை உறுக்கி (கம்பியாக நீட்டாமல்) சதுரக் கட்டியாக அடித்துக் கொடுக்கச் செய்யுங்கள். உமி பச்சரிசி உமியாக இருப்பது நல்லது, வராட்டி அதிகமாக வேண்டும். ஒரு புது சிறு மண்கலையமும் வேணும் ” என்றார் ரஸவாதி.
ஜமீன்தார் சந்தோஷப் பரவசமாகிவிட்டார். காலை ஆகாரத்துக்குப் பின் ஜமீன் தார் புடம் போடுவதற்கு வேண்டிய எல்லாவற்றையும் வெகு துரிதமாகச் சேகரிக்கச் செய்தார். தன்னிடத்தில் உபயோகத்துக்கு உதவாமற் கிடந்த பழைய நகைகளிற் பலவற்றை எடுத்து ஆசாரியை அழைத்து வரச் செய்து உறுக்கிச் சதுரக் கட்டியாகத் தட்டச் செய்தார். ரஸவாதி பக்கத்தில் வரவேயில்லை.
ஜமீன் தாருடைய புத்தகங்களில் ஒன்றைப் படித்துக் கொண்டு மாடியிலேயே இருந்தார். ஜமீன் தார் உறுக்கித் தட்டின தங்கக் கட்டியை எடுத்துக் கொண்டு மாடிக்கு ஓடி ரஸவா தியிடம் அதைக் காட்டினார்.
“பெரிய கட்டியாக இருக்கிறதே! எவ்வளவு எடை?” என்றார் ரஸவாதி. “சுமார் நூறு பவுன் இருக்கலாம், நிறுத்துப் பார்க்கவில்லை.” என்றார் ஐமீன் தார். “அடேயப்பா! என்னத்திற்கு அவ்வளவு? உங்களுக்குத் தான் மூலிகையைக் காட்டிவிடப் போகிறேன். பிறகு கொஞ்சங் கொஞ்சமாக வேண்டும் போதெல்லாம் செய்து கொள்ளலாமே? ஒரே தடவையில் இவ்வளவைச் செய்து கொள்ள வேனுமென்ற அவசரம் உங்களுக்கு என்னத் திற்கு?உம்… ஆசைக் கோரளவில்லை ” என்று சிரித்தார் ரஸவாதி.
ஜமீன் தாருக்கு முகம் சிறுத்து வெட்கம் விட்டது.
“ஆனால் குறைத்து விடட்டுமா ?” என்றார் ஜமீன்தார். இல்லை. தாங்கள் வருத்தப்படவேண்டாம். நான் வேடிக்கையாகச் சொன்னேன். உங்களிஷ்டத்தை கெடுக்க எனக்கு விருப்பமில்லை. அப்படியே இருக்கட்டும். எவ்வளவு பெரிய கட்டியானாலும் புடத்தில் மாறிவிடுமோ என்று பார்க்க வேனுமென்று தான் தாங்கள் பெரிதாகச் செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. எவ்வளவு பெரிய கட்டியானாலும் அந்த மூலிகைக்கு வணங்கித்தான் ஆகவேண்டும் என்பதையும், நீங்களே, பார்த்து விடுங்கள்” என்றார் ரசவாதி.
‘ஆம் அதற்காகத்தான் பெரிய கட்டியாகச் செய்தேன்” என்றார் ஜமீன்தார். “சரி அப்படியே இருக்கட்டும் குறைக்க வேண்டாம். ஆனால் இவ்வளவு பெரிய கட்டிக்குக் குறைந்தது மூன்று நாள் புடம் போடவேணும். நாலு நாளானாலும் ஆகும். கொல்லிக்கு அப்புறம் போகலாம். பஞ்சாங்கத்தை அனுப்புங்கள். நாள் பார்க்கிறேன். நல்ல வேளையில் சொல்லித்தர வேணும்” என்றார் ரஸவாதி” ஜமீன்தார் ஓடினார். பஞ்சாங்கத் துடன் வந்தார். பஞ்சாங்கத்தை புரட்டிவிட்டு, மறுநாள் நல்ல நாள் என்று ரஸவாதி சொன்னார். அடுத்த நாள் நந்தவன வீட்டில் புடம் போடுவதற்கு வேண்டிய காரியங்களை யெல்லாம் வெகு பரப்பரப்புடன் ஜமீன்தார் தானே செய்து முடித்தார். எல்லாம் ஆயத்தமான பின் ரஸவாதி ஜமீன்தாரையே தங்கக்கட்டியை எலுமிச்சம் பழத்திலும் உப்பிலும் மாற்றி மாற்றி ஊறவைத்துக் காயவைக்கச் செய்தார். கடைசியாக உப்புத் தடவிக் காயவைத்தபின் குறித்திருந்த முகூர்த்த நேரத்தில் ஜமீன்தாரை நந்தவனத்தின் ஒரு மூலைக்குக் கூட்டிப்போய் அங்கே அடர்ந்து முளைத்திருந்த ஒரு மூலிகையைக் காட்டி அதன் தழைகளைப் பழுக்காததாகப் பார்த்து பறிக்கச் சொன்னார். ஜமீன்தார் பறித்தார். பறிக்கும் போது சில இலைகள் கீழே விழுந்து விட்டன. அவற்றை ஜமீன்தார் எடுக்கப் போனார். ரஸவாதி பூமியில் விழுந்ததை எடுக்க கூடா தென்றும் கையிலுள்ள தழைகளையும் வேறெங்கும் வைக்காமல் கையிலேயே கொண்டு போய் நேரே தங்கக் கட்டியின் மேல் பிழிய வேணுமென்றும் சொல்லிக்கொடுத்தார். ஜமீன்தார், உபதேசத்தின் படியே தழைகளை கசக்சிக் கொண்டு வந்தார். ரஸவாதி தங்கக் கட்டியை எடுத்து கலயத்தில் வைத்து ஜமீன்தாரைப் பிழியச் சொன்னார். பிழிந்த சாறு தங்கக் கட்டியை முழுகச் செய்யப் போதவில்லை. இன்னும் மூலிகையைப் பறித்து வரச்செய்து பிழியச் செய்தார். அப்படி மூன்று நாலு தடவைப் பிழிந்து தங்கக் கட்டி முழுகினபின் பிழிந்த சக்கையையும் அதிலேயே போட்டு மூடியபின் புடம் மூட்டப்பட்டது.
அன்று இரவு ரஸவாதி தானே முதல் நாள் முழித்திருப்பதாக ஜமீன்தாரைத் தூங்கச் சொல்லிவிட்டு புடத்தைப் பார்த்துக் கொண்டார்.
மறுநாள் புடத்தை கலைத்துக் கட்டியை எடுத்து முன்போலவே எலுமிச்சப்பழ ரஸத்திலும் உப்பிலும் காய வைத்து, மூலிகையைப் பிழிந்து வேறுபுடம் மூட்டப் பட்டது. எல்லாம் ஐமீன்தாரே செய்தார். அன்றிரவு ராஸவாதி தூங்கினார், ஜமீன்தார் விழித்துக் கொண் டிருந்தார். மூன்றாம் நாளும் இரண்டாவது நாள் செய்த மாதிரியே செய்யப்பட்டது. ஆனால் அன்றைக்கு தங்கக் கட்டி நன்றாக மூலிகைச் சாற்றில் முழுகிய பின்னும், “இன்றைக்கும் நாளைக்கும் கொஞ்சம் மூலிகைச் சாறு அதிகமாக இருந்தால் நல்லது” என்றார் ரஸவாதி. ஜமீன்தார் பின்னும்போய் தழையைக் கொண்டுவந்து பிழிந்து புடம் வைக்கப்பட்டது. அன்றைக்கு முழித்திருக்க வேண்டியது ரஸவாதியின் முறை. ஜமீன்தார் தூங்கிவிட்டார்.
விடிய வெகு நேரத்துக்கு முன்னாலேயே ரஸவாதி நந்தவனத்துக்கு வெளியேபோய் வருகிற வழக்கமானதால் அன்றைக்கும் பூட்டியிருக்கிற கதவை திறந்து காவற்காரன் அவரை வழக்கம்போல் வெளியிலே விட்டான். ஆனால் என்றைக்கும் வழக்கமான நேரத்துக்கு வெகுமுன்னாலேயே அவர் வெளியிற் போக வந்தாரென்பதை காவற்காரன் கவனிக்கவில்லை. தூக்க கலக்கம். விடியற்காலம் ஆகிவிட்ட தாக்கும் என்று எண்ணிக் கொண்டுதான் பூட்டைத் திறந்து விட்டான். விடிய கொஞ்ச நேரத்துக்குமுன் ஜமீன்தார் விழித்தார். ரஸவாதி ஸ்னானத்துக்குப் போயிருக்கிறாரென்று புடத்தைத் தான் கவனித்துக் கொண்டார். விடிந்ததும் சூரிய உதயத்துக் கெல்லாம் வெண்ணீறு கோலத்துடன் காட்சி கொடுக்கும் ரஸவாதியைக் காணவில்லை. நந்தவனக் கிணற்றுக்குப் போய் பார்த்தார். அங்கேயும் அவர் இல்லை. காவற் காரனைக் கேட்டார். வழக்கம் போல் கதவைத் திறந்து விட்டதை மட்டும் அவன் சொன்னான். நந்தவனம் முழுதும் பார்த்தார், ரஸவாதி போன இடம் தெரியவில்லை. ஒருக்கால் வீட்டுக்குப் போயிருப்பாரோ என்று ஜமீன்தார் வீட்டுக்கு போய் பார்த்தார். அங்கும் இல்லை. நாலா பக்கமும் ஆட்களை அனுப்பிவிட்டு மறுபடியும் நந்தவனத்துக்கு வந்து பார்த்தார். புடம் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அவசரமாக புடத்தைக் கலைத்தார். கலயத்தை எடுத்துப் பார்த்தார். கலையம் காலியாக இருந்தது. மூன்று நாளாக புடம் எரிந்த நெருப்பின் கொதிப்பு முழுவதும் ஜமீன்தார் வயிற்றில் மூண்டது.
சின்னப்பன் முதலில் சொக்கத் தங்கமாக்கிய ஒரு பவுன் தங்கக் கட்டி அவனே கொண்டு வந்திருந்த சொக்கத் தங்கம், ஆசாரி தட்டிக் கொடுத்த பவுன் கட்டியை ஜமீன்தார் மண்பாண்டத்துக்காகத் தேடிக் கொண்டிருந்தபோது மாற்றிவிட்டான். இந்த நூறு பவுன் தங்கக் கட்டியை மூன்றாவது நாள் புடம் வைக்கிற போது ஜமீன்தார் கடைசியாக மூலிகையைப் பறித்துக் கொண்டு வரப் போயிருந்தபோது கலையத்திலிருந்து எடுத்து வேறிடத்தில் மறைத்து விட்டான். ஜமீன்தார் ரஸவாதம் செய்ததை வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் தன் வீட்டில் நகைகள் திருட்டு போய்விட்டதாக மட்டும் பிராது கொடுத்தார். ஆனால் இந்த விவரத்தை யெல்லாம் போலீசுக்கு ரகசியமாகச் சொல்லித் தான் ஆகவேண்டியிருந்தது. ஆறு மாதத்திற்குப் பிறகு சின்னப்பனுக்காகத் தங்கம் விற்க வந்த வேறொரு மனிதனை அகஸ்மாத்தாக சந்தேகத்தின் மேல் நான் கைது செய்தேன். அவன் விற்க கொண்டுவந்த தங்கம் பெரிய கட்டியிலிருந்து வெட்டப்பட்டிருந்த அனுமானத்தின் மேல் அவனைக் கசக்கியதில் அவன் சின்னப்பன் இருக்குமிடத்தைச் சொல்லி விட்டான்.
உடனே சின்னப்பனைக் கைது செய்து சோதனை போட்டதில் சுமார் 10 பவுன் எடையுள்ள தங்கம் மட்டும் கிடைத்தது. அவன் எப்போது எப்படி அந்தக் கட்டியை ஜமீன்தாருக்குத் தெரியாமல் எடுத்தான் என்பதை அவனே என்னிடம் ரிமாண்டில் சொன்னது. அந்தக் கேசில் அவனுக்கு பதினெட்டு மாதம் தண்டனை விதிக்கப் பட்டது. அது சுமார் ஐந்து வருஷத்துக்கு முன்னால். அதற்குப் பிறகு ஒரு குழந்தை கழுத்திலிருந்து நாலு பவுன் சங்கிலியைத் திருடிக் கொண்டான். உடனே பிடிபட்டுவிட்டான். அதில் ஆறு மாதம் தண்டனையடைந்தான்.
அதற்குப் பின் இதே சின்னப்பன் வேறு இரண்டு இடங்களில் செய்ததாக தெரிந்த இரண்டு குற்றங்களுக் காகத்தான் இவனைக் கைது செய்யத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
சேந்தமங்கலத்தில் ஒருவருக்குப் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை மூட்டி அதற்கு எஞ்சனமைப் போட்டுப் பார்த்து காளிபூசை நடத்த வேணும் என்று சொல்லி அதற்குப் பூசையில் வைக்கும் காளி உருவத் துக்கு நகைகளைப் பூட்டச் செய்து நடு ஜாமத்தில், நகைகளை யெல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டான்.
காணப்ப நாய்க்கன்பட்டி என்ற ஊரில் ஒரு செட்டியார் கடைக்குக் கோமணாண்டியாக சின்னப்பன் வந்தான். ஒரு தம்பிடி கேட்டான். செட்டியார் கொடுத்தார் மறு நாள் யாருமில்லாத சமயம் பார்த்து இரண்டு தம்படிகளை கொண்டு வந்து செட்டியாரிடம் கொடுத்துவிட்டு காதோடு காதாக “நம்பினவனுக்கு உண்டு நம்பாதவனுக்கு இல்லை” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். நாலுநாள் கழித்து வந்து ஒரு அணா கேட்டான். அவர் தந்தார். மறுநாள் இரண்டனாவைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு “நம்பினவனுக்கு உண்டு நம்பா தவனுக்கு இல்லை” என்று போய்விட்டான். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்தி வாங்கிக்கொண்டு போய் வாங்குவதற்கு இரண்டு பங்கு கொண்டுவந்து யாரும் அறியாதபடி அவரிடத்தில் கொடுத்துவிட்டு “நம்பினவனுக்கு உண்டு நம்பாதவனுக்கு இல்லை” என்று சொல்லிவிட்டு போய் கொண்டிருந்து கடைசியாக அவரிடத்தில் 250 ரூபாயை வாங்கிக்கொண்டு போனவன் போனவன் தான் மேற் சொன்ன இரண்டு குற்றங்களையும் செய்தவன் இவன் தான் என்பதற்கு வேண்டிய ருசுக்கள் எங்களுக்கு கிடைத்திருந்தன. ஆனால் ஆள்மட்டும் கிடைக்கவில்லை.
இனி ராசிபுரம் கதையைத் தொடர்கின்றேன். கந்தப்ப ஆச்சாரியின் தோட்ட வீட்டிலிருந்து வந்த சாமியார் இந்த சின்னப்பன் என்று கண்டுகொண்டு எங்கள் ஜாகைக்குப் போனேன். அங்கே குப்புசாமி முதலியார் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். சின்னப்பனுடைய சரித்திரத்தைப் பூராவும் குப்புசாமி முதலியாருக்குச் சொல்லி அவனை உடனே அரஸ்ட் செய்ய வேணும் என்று சொன்னேன். அவர் அப்படி ஒன்றும் செய்யக் கூடாது என்றார். அப்படிச் செய்தால் அவன் மேல் இருக்கிற கேசுகளுக்கு அது உதவுமானாலும் இப்போது அந்த சின்னப்பன் கந்தப்ப ஆச்சாரி தோட்டத்தில் என்ன செய்துக்கொண்டிருக்கிறானென்று அறிவதும் அந்த கந்தப்ப ஆச்சாரி தோட்ட வீட்டை சோதித்து நாமக்கல் கோவிலுக்குக் கள்ளச் சாவிகள் செய்து கொடுத்தவன் இவன் தானா என்பதற்கு ஏதாவது ருசுக் கிடைப்பதும் கெட்டுப்போகும் என்றார். அதை நான் ஒத்துக்கொண்டேன்.
கந்தப்ப ஆச்சாரி தோட்ட வீட்டை கவனிக்கிற வேலையையும் சின்னப்பன் அங்கே என்ன செய்து வருகிறான் என்று கண்டுபிடிக்கிற வேலையையும் தன்னோடு விட்டு விட்டுச் சும்மா இருக்கும்படி சொன்னார். அதையும் நான் ஒத்துக் கொண்டேன். உடனே குப்புசாமி முதலியார் தீர்த்த யாத்திரை செய்யும் பக்தனைப் போல் உருவெடுத்தார் பஞ்சகச்சத்துடன் சாதாரண உடை தரித்தார். கழுத்தில் உருத்திராட்ச மாலை. இடது பக்கத்தில் ஒரு துணி மூட்டையை இடுக்கிக்கொண்டார். இடது கையில் ஒரு செம்பை எடுத்துக்கொண்டு வலது கையில் பிரம்பை பிடித்துக் கொண்டார். நோட்டுகளும் ரூபாயும் சில்லரையுமாக சுமார் ஐம்பது ரூபாயை ஒரு சுறுக்குப்பையில் போட்டு பணமிருப்பது எல்லோருக்கும் தெரியும்படி இடுப்பில் சொறுகிக்கொண்டார். “நான் இந்த நிமிஷம் முதல் இரண்டொரு நாளைக்கு ஒரு யாத்திரிகன். சுத்தச் செவிடன். நீங்கள் என்ன பேசினாலும் எனக்குக் கேட்காது பேசிப் பாருங்கள் என்றார். நானும் இரண்டொரு ஜவான்களும் பேச்சுக் கொடுத்து என்னென்னமோ கேள்விகளைப் போட்டோம். அவர் ஏறுமாறாக பதில் சொல்லிக் கொஞ்சங்கூட காது கேட்காதவராக நடித்தார். பிறகு “நான் மட்டும் இப்போது தனியாக கந்தப்ப ஆசாரியின் தோட்டத்திற்குப் போகிறேன். எனக்கு அவசியமானால் நான் கூப்பிடுவதற்கு யாராவது ஒரே ஆள் மட்டும் எனக்கு வெகு தூரத்தில் என்னோடு சம்பந்தப்படாதவன் மாதிரி இருந்துகொண்டிருந்தாற் போதும். யார் வருகிறீர்கள்?” என்றார். நான் வருவதாகச் சொன்னேன். நான் அவரைக் கவனித்துக் கொள்ளவேண்டிய மாதிரிகளை யெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு என்னைப் பின்னால் வரச்சொல்லி தான் முன்னால் கந்தப்ப ஆசாரி தோட்டத்துக்குப் போனார்.
வழியில் பலகாரக் கடையில் பலவித பக்ஷணங்களையும் ஒரு சீப்பு மலைவாழைப் பழங்களையும் வாங்கிக்கொண்டார். கந்தப்ப ஆசாரியின் தோட்டம்-மாமனார் தோட்டம்-ஒரு பகுதி நல்ல சாகுபடிசெய்யப்பட்டிருந்தது. இன்னொரு பகுதி தரிசாய்க் கிடந்தது. தரிசான பாகத்தில் தார்நிலாவாரையும் மற்றப் பூண்டுகளும் முளைத்துக் கிடந்தன. சாகுபடியான பாகத்தில் ஒரு நல்ல கிணறு. கிணற்றுக்கு மூன்று புறத்திலும் பலவிதமான மரங்கள் அடர்ந்து குளிர்ந்த ஒரு சிறு சோலை. அதற்கப்பால் நெல் வயல்களும், பருத்திப் பயிர்களும், கிணற்றுக்கு முன்னால் போன்ற காலி இடம். அதன் பின் வில்லை வீடு. முன்னால் நல்ல கட்டிடம் நல்ல தாழ்வாரமும் திண்ணைகளும் கதவும் நிலையும் தேக்குமரம், வாசலுக்கு இரு புறத்திலும் இரண்டு பெரிய தேக்கு ஜன்னல்கள். அதே மாதிரி பின்புறத்தில் ஒரு கட்டிடம். இரண்டு கட்டிடத் துக்கும் மத்தியில் காலி இடம். இரண்டு கட்டிடங்களையும் சேர்த்து இரு புறத்திலும் சுவர்கள். ஒரே வாசல் தான்.
பின்புறத்தில் வழியில்லை. குப்புசாமி முதலியார் தோட்டத்திற்குள் புகுந்தார். வீட்டு வாசலுக்குப் போனார். வீடு மூடப்பட்டிருந்தது. கிணற்றில் இறங்கினார். ஸ்னானம் செய்தார். பட்டை பட்டையாக விபூதியைக் குழைத்து இட்டுக்கொண்டு வில்லை வீட்டுத் தாழ்வாரத்தில் ஈர வேஷ்டியை உலரும்படி கட்டி விட்டு, மூட்டையிலிருந்த வேறு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு, தடியையும், பணப்பையையும், துணி மூட்டையையும் திண்ணையில் பரப்பி வைத்துவிட்டு, பழத்தையும் பக்ஷணங்களையும் செம்பு நிறைய தண்ணீரையும் முன்னால் வைத்துக்கொண்டு தின்னப் போவது போல உட்கார்ந்து கொண்டார்.
கிணற்றுக்கு இந்தப் புறத்தில் ஒரு மாமரத்தடியில் தோட்டக்காரனுடைய குடிசை. அந்தக் குடிசைக்குப் போக ரஸ்தாவிலிருந்து தனியாக, ஒரு வழி இருந்தது. அந்த வழியில் நான் போய் அந்த குடிசையில் உட்கார்ந்தேன். குப்புசாமி முதலியார் உட்கார்ந்திருந்த திண்ணை எனக்கு நேராக சுமார் நூறு கஜ தூரத்தில் தானிருந்தது. நானிருந்த இடம் மரத்தின் கீழுள்ள கொஞ்சம் இருண்ட இடமானாலும் குப்புசாமி முதலியாருக்கு நானிருப்பது தெரியும். தோட்டக்காரன் ஒரு கிழவன். என்னை யார் எந்த ஊரென்று கேட்டான். நான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் பேரைச் சொன்னேன். அந்த கிராமம் அவனுடைய மைத்துனன் இருக்குமிடமாக நேர்ந்தது. அவன் மைத்துனான செங்கோட கவுண்டனை எனக்குத் தெரியுமா என்றான். ரொம்பத் தெரியும் என்றேன். சரி நான் உறவாகிவிட்டேன். ஏதேது பேசிக் கொண்டே குப்புசாமி முதலியாரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
இருட்டுகிற சமயம். கந்தப்ப ஆசாரியும் சாமியாரும் தோட்டத்துக்கு வந்தார்கள். குப்புசாமி முதலியாரை ஏற இறங்கப் பார்த்தார்கள். அவர் கும்பிட்டார். திரும்பிக் கும்பிட்டுவிட்டு இருவரும் என்னென்னமோ கேள்வி கேட்டார்கள். அவர் பதில் சொன்ன மாதிரியில் அவருக்கு காது செவிடு என்று கண்டு கந்தப்பன் இரைந்து பேசினான். எதுவும் கேட்கவில்லை. சுத்தச் செவிடு என்று தெரிந்து ஜாடை செய்து கேட்டார்கள். தன்னுடைய சொந்த ஊர் கடலூர் என்றும்
என்றும் தான் அங்கு ஒரு பெரிய வியாபாரி என்றும், தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு மிகவும் துக்கமான நிகழ்ச்சியினால் கொஞ்சக் காலத்துக்கு க்ஷேத்திர யாத்திரை செய்து விட்டு திரும்பலாமென்று புறப்பட்டதாகவும் சொன்னார்.
கடலூரில் ஒரு பெரிய மளிகை வியாபாரியின் விலாசத்தையும் சொன்னார். ” இந்தப் பக்கத்தில் எங்கே பார்த்தாலும் வறண்டு கிடக்கிறது. இந்த ஒரு தோட்டந் தான் கண்ணுக்குப் பசுமையாக இருக்கிறது. கிணறும் வெகு நல்ல கிணறு. தண்ணீரும் குடிப்பதற்கு நன்றாக இருக்கிறது. அமைதியான இடம். யோகம் கூடப் பண்ணலாம். ஸ்னானம் செய்து கொஞ்சம் தியானம் செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். பிறகு இப்படி உட்கார்ந்து கொஞ்சம் ஆகாரம் செய்யலா மல்லவா? தோட்டக்காரர் நீங்கள் தானே? என்றார் குப்புசாமி முதலியார்.
கந்தப்ப ஆசாரி “ஆஹா தாராளமாக ஆகாரம் செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு ஜாடை காட்டினான். முதலியார் இடுப்பிலிருந்த விபூதிப் பையை எடுத்து ‘திருவண்ணாமலை விபூதி’ என்று கொடுத்தார். இருவரும் வாங்கிக் கொண்டார்கள். பக்ஷணங்களையும் எடுத்து நீட்டினார். “நீங்கள் சாப்பிடுங்கள் எங்களுக்கு வேண்டாம்” என்று ஜாடை காட்டி மறுத்து விட்டார்கள். “பழத்தையாவது வாங்கிகொள்ளுங்கள் என்று ஆளுக்கு இரண்டு பழங்களைக் கொடுத்தார். வாங்கிக்கொண்டார்கள்.
“எனக்கு இங்கே யாரையும் தெரியாது. நாளை காலையில் சேலம் போய் அங்கிருந்து தாரமங்கலம் நல்ல ஸ்தலமாம். அங்கே போகவேணும் இதை வைத்திருந்து காலையில் என்னிடம் கொடுங்கள். ராத்திரியில் பக்கத்தில் வத்திருக்க பயமாக இருக்கிறது” என்று தன் பணப் பையை எடுத்து அதில் சில்லரையைக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு சாமியாரிடம் நீட்டினார். சாமியார் கந்தப்பனைக் காட்டினார்.
“என்ன கந்தப்பன் “நாங்கள் ராத்திரிக்கு இங்கே தங்க மாட்டோமே ” என்று ஜாடை காட்டினான். பண்ணுவீர்களோ எனக்குத் தெரியாது. எனக்கு உங்களை விட இங்கே உதவியில்லை. நாளை காலையில் வாங்கிக் கொள்ளுகிறேன். தயவு பண்ணி விடியுமட்டும் வைத் திருங்கள் ” என்று முதலியார் பணப்பையைக் கந்தப்பன் கையில் வைத்தார். கந்தப்பன் சாமியாரிடம் கொடுத்தான். சாமியார் வாங்கி முதலியாருக்கு முன்னால் வைத்து பையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்து எடுத்துக்கொண்டார். முதலியார் என்னுடைய மூட்டை முடிச்சுகளைத் திண்ணையின் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் உட்கார்ந்துகொண்டார்.
கந்தப்பனும் சாமியாரும் வீட்டுக்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டார்கள். முதலியார் தியானத்தை ஒருவாறு சீக்கிரம் முடித்துக்கொண்டு கிணற்று வரையிலும் வந்து நானிருந்த இடத்தைப் பார்த்து விட்டு ரஸ்தாவின் பக்கமாகப் போனார். அவர் தன்னுடைய மூட்டை முதலியவற்றை எடுக்காமல் ரஸ்தாவுக்குப் போனதைக் கண்டு நானும் எழுந்து வேறு வழியாக ரஸ்தாவுக்குப போய் அவருக்கு, அருகில் பாட்டையில் நடந்தேன். முதலியார் என் முகத்தைப் பார்க்காமல் “இன்றைக்கு இரவு நான் இங்கேயே திண்ணையில் படுத்துக் கொள்ளப் போகிறேன். நீங்கள் வேணுமானால் ஜரகைக்குப் போங்கள். காலையில் சந்திப்போம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். குப்பு சாமி முதலியார் மூட்டைக்குள் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. பயமில்லை. அவரை அங்கேயே விட்டுவிட்டு நான் ஜாகைக்கு வந்து விட்டேன்.
மறுநாள் காலை எட்டு மணிக்கு முதலியார் ஸ்னானம் செய்துவிட்டு சிவசின்னங்களோடு சிரித்துக்கொண்டே ஜாகைக்குள் நுழைந்தார். நான் வெகு ஆவலோடு வரவேற்றேன். முதலியார் சொல்லலுற்றார்.
“இரவு சுமார் 9 மணிக்கு அவர்கள் இருவரும் ஒரு மெழுகுவத்தி விளக்கோடு வெளியில் வந்து என்னை கவனித்தார்கள். நான் மூட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு அசந்து தூங்குவது போல் குறட்டை விட்டுக் கொண்டிருந்தேன். விளக்கைக் கொண்டுவந்து என் முகத்துக்கு நேரே பிடித்து, நான் வாயைத் திறந்துகொண்டு குறட்டை விடுவதைப் பார்த்தார்கள். கந்தப்பன் இந்தச் சனியன் யாரோ இங்கேவந்து படுத்துக் கொண்டதே! காதுதான் கேட்காது கண் தெரியுமே நாம் போவதையும் வருவதையும் பார்த்தாலும் பார்க்குமே? என்றான்” சாமியார் பார்த்தால் என்ன தெரிந்துவிடும். தூங்கட்டும் வாங்கோ என்றான். இருவரும் உள்ளே போனார்கள். நான் வாசற்படி பக்கம் முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தேன்.
கந்தப்பன் விளக்கோடு முன்னால் வெளியே வந்தான். சாமியார் எதையோ சுமந்து கொண்டு பின்னால் வந்தான். இருவரும் கிணற்றில் இறங்கினார்கள். அவர்கள் இறங்கின உடனே நான் மெல்ல எழுந்து போய் எட்டிப் பார்த்தேன். அந்தக் கிணற்றின் படிகள் அகலமாகவும் ஒழுங்காகவும் இருந்ததால் தண்ணீருக்கு மேலிருந்தபடியின் மேல் சாமியார் தூக்கிக்கொண்டு வந்த பொருள் வைக்கப் பட்டது. உடனே சாமியார் படியேறி வந்தார். நான் ஓடிப்போய்ப் படுத்துக் கொண்டேன். சாமியார் வீட்டுக்குள் போய் ஒருபெரிய கூடையைத் தூக்கிக்கொண்டு மறுபடியும் கிணற்றில் இறங்கினார். நானும் மறுபடியும் போய் எட்டிப் பார்த்தேன். படிக்கட்டில் முன்னே வைக்கப்பட்ட பொருளுக்கு வெகு சமீபத்தில் விளக்கு பிடிக்கப்பட்டது. அது மஞ்சளினாற் செய்யப்பட்ட ஒரு தேவதையின் உருவம் போல எனக்குத் தோன்றியது.
பின்னால் நடந்த காரியங்கள் அதை நிச்சயப்படுத்தின. இருவரும் கிணற்றில் முழுகினார்கள். சாமியார் கூடையிலிருந்த புஷ்பமாலைகளையும், ஆபரணங்களையும் தேவதைக்குப் பூட்டினார். தூபதீப ஆராதனையுடன் ஆவாகனம் செய்யப்பட்டது. ஈரவேஷ்டியுடன் சாமியார் தேவதையைத் தூக்கிக் கொண்டார். கந்தப்பன் விளக்கோடு முன்னால் புறப்பட்டான். நான் அதற்கு முன்னால் வந்து படுத்துக் கொண்டேன்.
இருவரும் உள்ளே போய் கதவடைத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான் நான் கண்டது.
அதற்கு மேல் கொஞ்சம் கேட்டது. அவர்கள் உள்ளே போனபின் ஒன்றையும் பார்க்கவும் முடியவில்லை கேட்கவும் முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் காரியமெல்லாம் பின் கட்டில் நடந்தது. நடு ஜாமத்துக்குமேல் இருவரும் வந்து திண்னையில் உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் காது கேட்காதே. அதனால் அவர்கள் பேசுவதில் அதிகம் புரியவில்லை. அவர்கள் பேசின அநேக விஷயங்கள் எனக்குப் புரியவில்லை.
ஆனால் ‘அஞ்சனமை’ ‘நவரத்தினங்கள்’ என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன. கடைசியாக வருகிற வெள்ளிக் கிழமை ஜாமத்தில் பூசை முடிந்ததும் ஏதோ காரியம் பலித்து விடும் என்று பேசிக் கொண்டார்கள். வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் போய்விட்டார்கள்.
ஆகையினால் “வெள்ளிக்கிழமை இரவு நாம் எதற்கும் தயாராக இருக்கவேணும்.” என்று முதலியார் முடித்தார். “வெள்ளிக்கிழமை பூசை முடிவதாக சாமியார் சொல்லி யிருந்தால் நாம் வியாழக்கிழமை அல்லது அதற்கு முன் னாலும் கூடத் தயாராக இருக்கவேணும். வெள்ளிக்கிழமை யென்று கந்தப்பனை ஏமாற்றிவிட்டு அதற்கு முன்னாலேயே சின்னப்பன் ஓடிப் போவான்” என்று நான் முதலியாருக்குச் சொல்லி முன்னே இதே மாதிரி சின்னப்பன் வேறொரு இடத்தில் செய்திருந்ததை நினைப்பூட்டினேன்.
அவர் ”ஆமாம் நான் மறந்து விட்டேன்” என்றார். நாங்கள் பேசிக் கொண்டது செவ்வாய்க்கிழமை காலையில் அன்றைக்கு சாயந்திரமே கந்தப்பனுடைய தோட்ட வீட்டைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் மற்ற நாலு ஜவான்களும் ஒளிந்திருக்க இடம் பார்த்துக் கொண்டோம். எனக்கு தோட்டக்காரன் குடிசை. முதலியார் தன்னுடைய பணப்பையை இன்னும் திருப்பி வாங்கிக் கொள்ளாததால் தோட்ட வீட்டுத் திண்ணையிற்போய்ப் படுக்க இன்னும் அவருக்கு உரிமை இருந்தது. பணப் பையைப் பற்றி எங்களுக்கு பயமில்லை. சாமியார் ஓடி விட்டாலும் உள்ளூர் கந்தப்பன் இருக்கிறான். முதலியார் பணப்பையைக் கொடுத்தது கந்தப்பனிடத்தில் தான்.
அன்று இரவு எட்டு மணிக்குள் நாங்கள் சாப்பிட்டு விட்டு அவர்களுக்குக் குறித்த இடத்தில் ஒடுங்கிக் கொண்டோம். நான் தோட்டக்காரன் சாலையில் அவன் கொடுத்த ஒரு கட்டிலிற் படுத்துக்கொண்டேன். அவசியமானால் குப்புசாமி முதலியார் ஒரு நெருப்புக் குச்சியைக் கிழித்து சுருட்டு பிடிப்பது போல் காட்டுவார். உடனே நாங்கள் எல்லோரும் அவருக்கு அருகில் போய்விட வேண்டும் என்பது ஏற்பாடு.
அன்று இரவு பத்து மணிக்குமேல் கந்தப்பனும் சாமியாரும் வந்தார்கள். திண்ணையில் முதலியார் தூங்குவதுபோல படுத்திருந்தார். உள்ளே போய் விளக்கைப் பொருத்திக் கொண்டு வந்து முதலியார் முகத்துக்கு நேராகப் பிடித்து அவரை கந்தப்பன் அசைத்து எழுப்பினான். “ஊருக்கு போகவில்லையா?” என்று கை ஜாடையில் கேட்டான். முதலியார் ”ஊரிலிருந்து நூறுரூபாய் மணியார்டர் இந்த ஊர் தபாலாபீசு விலாசத்துக்கு வரும் வாங்கிக் கொண்டுதான் போகவேணும்” என்றார். இருவரும் உள்ளே போய் கதவடைத்துக் கொண்டார்கள். ஜாமத்துக்குமேல் வெளியில் வந்து பூட்டிக் கொண்டு போய்விட்டார்கள். புதன் கிழமையும் அதே மாதிரி இருவரும் வந்து உள்ளே என்னமோ செய்து கொண்டிருந்துவிட்டு பூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.
வியாழக்கிழமை இரவு வெகு ஜாக்கிரதையாக இருக்க வேணுமென்று எங்களுக்குள் பேசிக் கொண்டு எங்கள் இடங்களில் மறைந்து கொண்டு கண் கொட்டாமல் காத்திருந்தோம். அன்றைக்கு நான் குடிசைக்குள் போக வில்லை. கொசுக்கடிக்கிறதென்று சொல்லி கட்டிலை வெளியில் போட்டுக் கொண்டேன். தோட்டக்காரன் தூங்கின பின் அந்தக் கட்டிலை ரஸ்தாவுக்கு அருகில் வேலிக்குப் பின்னால் கொண்டுபோய்ப் போட்டு என்னுடைய பச்சை நிறப் போர்வையைப் போர்த்துக் கொண்டு கவனித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் சீக்கிரமாகவே அன்றைக்கு சின்னப்பனும், கந்தப்பனும் வந்தார்கள். வழக்கம்போல் வீட்டிற்குள் தங்களுடைய காரியங்களை பார்த்துவிட்டு ஜாமத்துக்கு முன்னாலேயே இருவரும் சேர்ந்தாற் போல் போனதை நான் பார்த்தேன்.
ஒரு மணி நேரத்துக்குப் பின் தனியே ஒருவன் வந்தான். அவன் சின்னப்பன் தான் என்று எனக்குத் தெரியும். தோட்ட வீட்டில் நுழைந்தான். குப்புசாமி முதலியார் கவனிக்கிறாரோ இல்லையோ என்று என் மனம் திக்கு திக்கென்று அடித்துக்கொண்டது. நானே அவருக்குச் சொல்லலா மென்று ரஸ்தா வழியாகத் தோட்ட வீட்டுக்குப் போகும் வழியண்டை வந்தேன். குப்புசாமி முதலியார் சுருட்டு பிடிக்க நெருப்புக்குச்சியைக் கிழித் தார். நான் அவர் பக்கத்தில் நின்றேன். மற்ற நாலு பேரும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். முதலியார் என்னையும் பெருமாள் என்ற ஒரு ஜவானையும் இரண்டு கட்டிடங்களுக்கும் மத்தியிலிருக்கும் சுவரோரமாக இருக் கச் சொல்லிவிட்டு மற்ற இருவரை அந்த சுவருக்கு எதிர் சுவருக்குப் பின்னால் நிறுத்திவிட்டு, தானும் ஒரு ஜவானும் வாசற் கதவண்டை இருந்தார்கள். முதலியார் எழுந்து வந்து நெருப்புக்குச்சியைக் கிழிப்பதற்கு முன்னாலேயே வாசற்கதவின் சங்கிலியை வெளிப்புறத்தில் மாட்டி அவன் விட்டுப்போன பூட்டையும் மாட்டி விட்டாராம். உள்ளே போனவன் வெளியில் வர முடியாது. பின்னால் வழியில்லை. சுவரேறிக் குதித்தால்தான் வெளியில் வரலாம், வெகு நேரம் சந்தடியில்லை. பிறகு உள்ளே தாழ்ப்பாள் இழுக்கப்பட்ட சத்தம் கேட்டது. கதவை இழுத்துப் பார்த்தேன். கதவு திறக்கவில்லை. ‘என்னென்னமோ செய்து பார்த்தேன். கதவு திறக்கவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தும் பலிக்கவில்லை. இழுத்துப் பார்க்கிற சத்தமும் நின்றுவிட்டது. அவன் எப்படி யாவது ஓடிவிட்டால் இவ்வளவு பாடும் வீணாகப் போய் விடுமே என்று என் மனம் துடித்துக்கொண்டிருந்தது. எனக்குப் பொறுக்க முடியவில்லை.
நான் சாய்ந்துகொண்டிருந்த சுவரில் கொஞ்சம் ஏறி உள்ளே எட்டிப் பார்க்கவேணு மென்ற பதட்டம் உண்டாயிற்று. சுவர் பெரிய பெரிய கருங்கற்களால் கட்டப்பட்டது.என் காலிலிருந்த செருப்பைக் கழட்டிவிட்டு மெல்ல கற்களைப் பிடித்துக் கொண்டு தலையை உள்ளே நீட்டப் போனேன்.நான் தலையை நீட்டின அதே சமயத்தில் சின்னப்பன் சுவரின் மீதிருந்து தாண்டிக் குதித்தான். என் தலையில் அவனுடைய கால் தடுக்கித் திடீரென்று பூமியில் விழுந்தான். அவன் கையில் வைத்திருந்த ஒரு சிறு பெட்டி கீழே உட்கார்ந்திருந்த பெருமாள் மீது விழுந்தது. பெருமாள் பெட்டியை அழுத்திக் கொண்டான். சின்னப்பனுடைய கால் என் தலையில் தடுக்கின போது பாதத்தின் பெருவிரல் என்னுடைய வலது கண்ணில் பலமாக மோதிவிட்டது. நான் கண்ணை ஒரு கையால் அழுத்திக் கொண்டு கீழே குதித்தேன். விழுந்த சின்னப்பன் வேகமாக எழுந்து ஓடினான்.
நான் கண் வலியோடு ‘பிடி அவனை’ என்று கத்தினேன். சின்னப்பனும் பெட்டியும் விழுந்த சத்தத்தைக் கேட்டு எதிரில் ஒடி வந்த நத்துமியான் ஜவான் சின்னப்பனை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டான். மற்றவர்களும் ஓடி வந்து அமுக்கிக் கொண்டார்கள். வேண்டி யிருக்குமென்று நாங்கள் கொண்டு வந்திருந்த போலீஸ் கைவிலங்கை சின்னப்பனுக்கு மாட்டிவிட்டோம். விலங்கைப் போடும்போது அவன் “விலங்கு எதற்காக? எதற்காக? நான் என்ன செய்து விட்டேன்?” என்று முணுமுணுத்துக்கொண்டு கையைத் திமிறினான். நான் “டேய், நீ சின்னப்பன் அல்லவா ?” என்றேன். அதைக் கேட்டவுடன் அவனுடைய ஆவேசம் ஒடுங்கிவிட்டது.
நேரே ஊருக்குள் போய் உள்ளூர் போலீசாருக்குக் கூட சொல்லாமல் நாங்களே பத்து ரூபாய் வாடகைக்கு ஒரு குதிரை வண்டியைப் பேசி இரண்டு ஜவான்களுடன் சின்னப்பனை அப்போதே நாமக்கல் ரிமாண்டுக்கு அனுப்பி விட்டு விடிந்ததும் தோட்ட வீட்டை சோதனை போடுவதென்று முடிவு செய்துகொண்டு எங்கள் ஜாகைக்கு போனோம்.
விளக்கை ஏற்றிப் பெருமாள் கையிற் சிக்கிய பெட்டியை சோதித்தோம். அது ஒரு தகரப்பெட்டி அதில் பல நகைகளும் கொஞ்சம் பணமும் இருந்தன. குப்புசாமி முதலியாருடைய பையும் பணம் குறையாமல் அதில் இருந்தது. நகைகளை ஆராய்ந்தோம். ஒரு நகை என் கவனத்தைக் கவர்ந்தது, அது ஒரு தங்க அட்டிகையும் பதக்கமும். பதகத்தில் ஒன்பது பெரிய வயிரங்களும், நடுவே மிகவும் அபூர்வமான ஒரு நீலமும் இருந்தன. பதக்கத்தில் மேல் வட்டத்தில் ஏழு நல்ல சிவப்புக் கற்களும் நடுவே ஒரு நல்ல பச்சையும் பதிக்கப்பட்டிருந்தன. மிகவும் விலையுயர்ந்த ஆபரணம். அது நாமகிரியம்மன் கோவில் நகை என்று எனக்கு உடனே தெரிந்து, என்னிடம் இருந்த களவு போன கோவில்கள் நகைகளின் விவரங்கள் அடங்கிய குறிப்பை எடுத்து குப்புசாமி முதலியாருக்குக் காட்டினேன். அவர் அதைப் பார்த்துவிட்டு “சரி தோட்ட வீட்டை சோதனை கூடப் போடவேண்டியதில்லை” என்றார்.
“சோதனை போடாமல் எப்படி கந்தப்பனை இதில் சம்பந்தப்படுத்துவது? இந்த நகை கந்தப்பனுடையது அல்லவென்று கந்தப்பன் சொல்லிவிட்டால் என்ன செய்வது” என்று நான் கேட்டேன்.
சோதனை போடுவதென்றால் உள்ளூர் போலீசாருடைய உதவிக்கும் சோதனை வாரண்டுக்கும் கேட்டுக் கொண்டிருக்கவேணும் அதெல்லாம் இல்லாமலேயே நான் அதற்கு வழி செய்கிறேன். நீங்கள் யாரும் உள்ளூர் போலீசாரிடத்திலும் இந்த நகை கிடைத்திருப்பதைச் சொல்லவேண்டாம். நான் சொல்லுகிறபடி மட்டும் செய்யுங்கள் என்றார் முதலியார்.
மறுநாள் நாங்கள் எல்லோரும் தனித் தனியே கந்தப்பனைக் கவனித்து அவன் செய்கைகளை தன்னிடத் தில் சொல்லவேணுமென்று முதலியார் எங்களை யெல்லாம் அனுப்பிவிட்டுதான் அன்று முழுவதும் ஜாகையிலேயே இருந்தார்.
கந்தப்பன் நேற்று இரவு தன்னுடன் வந்து, தன் வீட்டுத் திண்ணையிற் படுத்துக் கொண்ட சாமியாரை விடிந்து வெகு நேரம் வரையிலும் காணாததால் கவலைகொண்டான். வழக்கம் போல காலை ஆகாரத்துக்கு சாமியார் வரவில்லை. வெகு நேரம் பார்த்துவிட்டு தோட்டத்துக்குப் போனான். தோட்டக் கதவில் குப்புசாமி முதலியார் மாட்டின பூட்டு அப்படியே ஒரு சாவியுடன் தொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பூட்டின் சொந்தமான சாவி தன்னிடத்தில் இருக்க அதில் வேறு சாவி இருப்பதைக் கண்டு கந்தப்பன் இடி விழுந்ததைப் போல கலங்கிவிட்டான், பித்து பிடித்தவனைப்போல உள்ளே ஓடினான். பூசை அறையிற் புகுந்தான். பூசையிலிருந்த மஞ்சள் உருவம் அப்படியே இருந்தது. ஆனால் அதற்கு பூட்டியிருந்த ஆபரணங்களெல்லாம் காணவில்லை. அங்குமிங்கும் ஓடினான்; தேடினான், தேம்பினான். கதவைப் பூட்டிக்கொண்டு நேரே அந்த ஊர் போலீஸ் ஏட்டிடம் சென்றான். உடனே இருவரும் போலீஸ் கச்சேரிக்குப் போனார்கள். கந்தப்ப ஆசாரிக்குச் சொந்தமான நகைகளை அவர் வீட்டுக்கு வந்திருந்த ஒரு சாமியார் திருடிக்கொண்டு போய்விட்ட தாக கந்தப்பன் கொடுத்தப் பிராதை ஏட்டு தாக்கல் செய்து கொண்டார். நகைகளின் விவரங் களும் அந்த சாமியாருடைய அடையாளங்களும் கந்தப்பனுடைய வாக்கு மூலமாக எழுதிக்கொள்ளப்பட்டன.
இதை யெல்லாம் தெரிந்துகொண்டு போய் நானும் மற்ற இரண்டு ஜவான்களும் குப்புசாமி முதலியாருக்குச் சொன்னோம். அதைக் கேட்ட உடன் அவர் தன்னுடைய சர்க்கார் உடுப்பைப் போட்டுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார். அங்கே ஏட்டு இல்லை. ‘ஸ்டேஷன் ரைட்டர்’ மட்டும் இருந்தான். அவனோடு முதலியார் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தபோது, முன் சோதனை போட்ட கந்தப்ப ஆச்சாரி வீட்டில் நகைகள் திருட்டுப் போய்விட்டதாகப் பிராது வந்திருக்கிறதை அந்த ‘ரைட்டர்’ சொன்னான். “என்னென்ன நகைகள் ?” என்று குப்புசாமி முதலியார் கேட்டார். பிராதில் வாக்கு மூலத்தையும், ‘ஸ்டேஷன் டைரி’ என்ற தினசரி புத்தகத்தையும் எடுத்து ரைட்டர் முதலியாருக்குக் காட்டினான். அந்த கச்சேரி புத்தகத்தில் நாமகிரியம்மன் கோவில் நகையான அட்டிகையும் அதிலுள்ள வைரம், நீலம் சிகப்பு பச்சைகளின் விவரங்களும் பதிவாகிவிட்டனவா என்று பார்க்கத் தான் முதலியார் கச்சேரிக்குப் போனது.
ஜாகைக்கு வந்தார். “வெங்கட்ராம் பிள்ளைவாள்-! கந்தப்பன் வசமாக சிக்கிக் கொண்டான். அந்த நகை தன்னுடையதென்று விவரமாக ‘ரிகார்டு’ கொடுத்திருக்கிறான், இனி அவன் தப்ப முடியாது. இருந்தாலும் தான் எழுதி வைத்திருக்கிற நகை வேறு இந்த நகை அதே மாதிரி இருந்தாலும் தன்னுடையது அல்லவென்று சொன்னாலும் சொல்லிவிடுவான். அதற்கும் நாளை ஒரு வேலை செய்கிறேன் என்றார். மூன்று நாள் தூக்கத்தைதையும் சேர்த்து அன்றிரவு தூங்கினோம். மறுநாள் நாங்கள் செய்யவேண்டிய வேலையை முதலியார் ஒவ்வொருவருக்கும் பாடஞ் சொல்லிக் கொடுத்து எங்களை அனுப்பினார். அவர் ஜாகையிலேயே இருந்து விட்டார்.
எங்களுடன் இருந்த பெருமாள் என்ற ஜவான் சாதாரண ஒரு பட்டணத்து மனிதனைப்போல உடை தரித்துக் கொண்டு, அந்தக் கோவில் நகையை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு கந்தப்ப ஆச்சாரி வீட்டுக்குப் போ னான். கந்தப்ப ஆச்சாரி வீட்டுத் திண்ணையில் பட்டறை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆசாரி அன்றைக்கு விசனத்தாலோ என்னவோ வேலை செய்யாமல் உள்ளே படுத்திருந்தார். பட்டறைப் பையன் மட்டும் இருந்தான்.
ஆசாரியைப் பார்க்க வேணுமென்று பெருமாள் பையனி டம் சொன்னான். பையன் உள்ளே போனான். அழுது வடிந்த முகத்துடன் ஆசாரி வெளியில் வந்தான். விசாரித்தான். ஒரு வேலை கொடுக்க வந்திருப்பதாக பெருமாள் சொன்னான். ஆசாரி பட்டறையில் வந்து உட்காந்தார். பெருமாள் தன் சட்டையிலிருந்த நகையைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு “ஒரு கல் நகை கல்லையெல்லாம் எடுத்துவிட்டு தங்கத்தை உருக்கிக் கொடுக்க வேணும் கூலி என்ன கேட்டாலும் தருகிறேன்” என்றான். ஆசாரி சம்மதித்தான். பெருமாள் நகையை ஆசாரியிடம் கொடுத்தார். நகை யெல்லாம் பார்த்தவுடன் ஆசாரியின் உடம்பு முழுவதும் மின்சாரம் போலாகி விட்டது. பெருமாளை ஏற எறங்க விழுங்க விழுங்கப் பார்த்துவிட்டு “ஏது இந்த நகை?” என்று கர்ஜித்தான் ஆசாரி.
“நான் விலைக்கு வாங்கினேன்” என்றார் பெருமாள்.
“யாரிடத்தில்?”
“ஒரு சாமியாரிடத்தில்”
“சாமியாரிடத்திலா? அப்படிச் சொல். எங்கே அந்தச் சாமியார்?”
“அவர் புதுச் சத்திரத்தில் இருக்கிறார்.”
“இப்போது அங்கே இருக்கிறாரா சாமியார்?”
ஆமாம் என் வீட்டில்தான் இருக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.
“ஆமாம் சாமியாருக்கு என்ன ? சாமியாரை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். என் நகையை என்னிடம் கொடுங்கள்”
“சாமியாரைக் கேட்டுக்கொள்ளுறதா? சாமியார்! சண்டாளன் ! நகை என்னுடையது. நகையைக் கொடுக்க மாட்டேன். வா கச்சேரிக்கு” அந்த சாமியாரைக் காட்டு.’
“கச்சேரிக்கு வேணுமானால் வருகிறேன். நான் கொண்டு வந்த நகையை என்னிடம் கொடுத்துவிட்டு அப்புறம் பேசுங்கள் உங்கள் கச்சேரி பேச்சை என்று பெருமாள் நகையைப் பிடுங்கப் போனான். ஆசாரி நகையை விடவில்லை.
இரண்டு பேரும் மல்லுகட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த சமயத்தில் குப்புசாமி முதலியார் அனுப்பிய இன்னொரு கான்ஸ்டபிள் போலீஸ் உடையோடு அங்கே வந்தான். என்ன ரகளை என்று தத்தம் வழக்கை விசாரித்தான். இருவரும் சொல்லிக்கொண்டார்கள். கடைசியாக நகையை வந்த போலீஸ்காரனிடம் கொடுத்து அவனையும் கூட்டிக் கொண்டு எல்லாருமாக போலீஸ் கச்சேரிக்கு வந்தார்கள் அங்கே உள்ளூர் ஏட்டு இருந்தார். நானும் இருந்தேன் கந்தப்பன் ஏட்டிடம் அந்த நகையைப் பற்றி சொல்லி, அது, தான் கொடுத்த பிராதில் எழுதி யிருப்பதையும் சொன்னான். உடனே புதுச் சத்திரத்துக்குப் போய் அந்த சாமியாரைப் பிடிக்க வேணும் என்றும் அவசரப்படுத்தினான்.
அந்த தகராறு நகையை உள்ளூர் ஏட்டு வாங்கிப் பார்த்தார். தன்னுடைய கக்சேரிக்கு ஆசாரி கொடுத்திருந்த பிராதை எடுத்து, அதில் எழுதப்பட்டிருந்த விவரங்களையும் படித்துக் காட்டி “இது ஆசாரியுடைய நகை தான். சந்தேகமில்லை. அந்த சாமியாரை உடனே பிடிக்க வேணும், எங்கே இருக்கிறான் அந்த சாமியார்? போவோம்” என்றார் உள்ளூர் ஏட்டு. அந்த நகையை நான் வாங்கிப் பார்த்துவிட்டு” ! ஆசாரி இந்த நகை உங்களு டையதா? என்றேன்.
“ஆம் என்றான் ஆசாரி.”
“இது உனக்கு ஏது ?” என்றேன்.
“எங்களுடைய பூர்வீக சொத்து.” எங்கள் தகப்பனார் வைர வியாபாரம் செய்தவர் என்றான் ஆசாரி. இது உன்னுடையது அல்ல. உள்ளத்தைச்சொல்லி விடு” என்று நான் ஆசாரியை மிரட்டினதைப் பார்த்த உள்ளூர் ஏட்டு திடுக்கிட்டுப் போனார். கந்தப்பனுடைய தகப்பனார் வைர வியாபாரம் செய்தவர் என்பது வாஸ்தவம் தான் என்று உள்ளூர் ஏட்டு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் குப்புசாமி முதலியார் யாத்ரீகன் வேஷத்தோடு உள்ளே வந்தார். நேராக கந்தப்பனிடம் போய், “ஐயா, உங்களிடம் நான் தந்த பணப்பை எங்கே ? நம்பிக் கொடுத்த என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களே?” என்றார். பணப்பையையும் சாமியார் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக கந்தப்பன் ஜாடை காட்டினான். “உங்கள் பூசை யெல்லாம் முடிந்ததா? புதையல் கிடைத்ததா? சாமியார் எங்கே ? நீ கோயில் பூட்டுக்குத் திருட்டுச் சாவி செய்து கொடுத்தாய் சாமியார் உன் வீட்டுக்குத் திருட்டுச் சாவி போட்டுவிட்டான் சாமி குத்தம் விடுமா? என்று சொல்லிக்கொண்டே முதலியார் கந்தப்ப ஆசாரி இழந்து விட்ட மற்ற நகைகளையும், மேஜையின் மேல் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். கந்தப்பன் விழித்த கண் இமைக்காமல் திறந்த வாய் மூடாமல் திடுக்கிட்டுத் திகைத்து நின்றான். உள்ளூர் ஏட்டுக்கு ஒன்றும் புரியவில்லை…..
குப்புசாமி முதலியாரும் நானும் உள்ளூர் ஏட்டைத் தனியே கூட்டி போய் எல்லா சங்கதிகளையும் சொன்னோம். மற்றவர்களை யெல்லாம் அனுப்பிவிட்டு குப்புசாமி முதலியார் கந்தப்பனிடம் “நீ நாமகிரியம்மன் கோவிலுக்கு கள்ளச் சாவிகள் செய்து கொடுத்து இந்த நகையை இனாம் வாங்கியிருக்கிறாய். உள்ளதை யெல் லாம் சொல்லி அந்த கோயில் திருடர்களைப் பிடிக்க எங்களுக்கு ஒத்தாசை செய்தால் உன்னுடைய சொந்த நகைகளை யெல்லாம் உனக்கே திருப்பித் தந்து உன்னை சாட்சியாக எடுத்துக்கொண்டு விட்டுவிடுகிறோம். இல்லா விட்டால் இந்த நகைகளை நீ இழந்துவிடுவதோடு குறைந்தது பத்து வருஷம் தண்டனை கிடைக்கும் என்ன சொல்லுகிறாய்?” என்றார்.
கந்தப்பன் நாமகிரியம்மன் கோவில் பூட்டுக்குக் கள்ளச்சாவி செய்து கொடுத்ததை உடனே ஒப்புக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். வெகு நேரம் அழுதுவிட்டு “நான் தான் கோயில் பூட்டுகளை யெல்லாம் திறந்துவிட்டேன். அவர்கள் எல்லோரையும் எனக்கு நன்றாகத் தெரியும். கண்டால் உங்களுக்குக் காட்டுவேன். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் அல்ல வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒருத்தரை மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் பெயர் ராமராஜீ. பெஜவாடாவுக்குப் பக்கத்தில் ஒரு ஊரைச் சேர்ந்தவர். அவர் ஒரு மாதத்துக்கு முன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் வேறு விலாசம் கொடுத்திருக்கிறார்.
“அந்தக் கடிதம் இருக்கிறதா? என்று குப்புசாமி முதலியார் குறுக்கிட்டார்.
“வீட்டில் இருக்கிறது” என்றான் கந்தப்பன். “என்ன எழுதியிருக்கிறார்?” என்றார் முதலியார்.
“ஒன்றுமில்லை. அவர்களெல்லாம் நாமக்கலிலிருந்து புறப்படும்போது இருட்டில் வண்டியேறினார்கள். நானும் கூட இருந்தேன். ராமராஜு பருத்த மனிதர் கொஞ்சம் சிரமப்பட்டு வண்டியில் ஏறினார். ஏறும்போது கையில் வைத்திருந்த ஒரு சிறு மூட்டையை என்னிடங் கொடுத்து விட்டு ஏறினார். அவர் ஏறினதும் மூட்டையை வாங்கிக் கொள்ளு முன் வண்டி வெகுவேகமாக ஓட்டப்பட்டுப் போய் விட்டது. அந்த மூட்டையை ரிஜிஸ்டர் செய்து அனுப்பும்படி ஒரு விலாசம் தந்து எழுதினார்.”
“மூட்டையை அனுப்பிவிட்டீரோ?” என்றார் முதலியார்.
“இல்லிங்கோ அந்தக் கடிதம் வந்த அன்றைக்கே இந்தப் பாழும் சாமியார் வந்து சேர்ந்தான். ஒரு மாசமாக அவனை நம்பி அவனோடு அலைந்து இந்தக் கதியானேன்” என்றான்.
எல்லோரும் கந்தப்பன் வீட்டுக்குப் போனோம் அவன் சொன்ன கடிதத்தையும் ஒரு சிறுதுணி மூட்டையையும் தந்தான். கடிதம் துணி மூட்டைக்காக. துணி மூட்டையை அவிழ்த்தோம். அதில் ஒரு பெரிய வேஷ்ட்டியில் சுருட்டப்பட்டு பல கடிதங்களும் கையெழுத்துக் குறிப்பு களும் இருந்தன. அந்தக் கடிதங்களிலிருந்து எங்களுக்குப் பல துப்புகள் கிடைத்தன. மூன்று மாதம் இரவு பகலாக வேலை செய்து, பல ஊர்களுக்கு அலைந்து திரிந்து நாமகிரியம்மன் கோவில் களவில் சம்பந்தப்பட்ட எல்லா குற்றவாளிகளையும் பிடித்தோம். களவுபோன நகைகளும் பெரும்பாலும் கிடைத்தன. ஆனால் பல நகைகள் உருக்குலைந்து போயின, கந்தப்பன் எங்களுடன் கூடவே பிரயாணம் செய்து ஆசாமிகளை அடையாளம் காட்டினான். நாங்கள் செய்திருந்த வாக்குறுதியின்படி அவனை சாட்சியாக வைத்துக்கொண்டு விடுதலை செய்தோம். மற்றவர்களுக்கு 3 வருஷம் முதல் 7 வருஷம் வரை வெவ்வேறு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கேசில் குப்புசாமி முதலியாருக்கும் எனக்கும் -ஆளுக்கு இருநூற்றைம்பது ரூபாய் சர்க்கார் வெகுமதியும் உத்தியோக உயர்வும் கிடைத்தது. கோயில் கேஸ் முடிகிற வரையிலும் சின்னப்பன் ரிமாண்டிலேயே இருந்தான். அதன் பிறகு அவன் மேலிருந்த கேசுகளை நானே நடத்தி அவனுக்கு 3 வருஷம் தண்டனை தரப்பட்டது. சின்னப்பனை பிடித்ததற்காக எனக்குத் தனியே நூறு ரூபாய் சர்க்கார் இனாம் கிடைத்தது.



