
சங்கிலிக் குறவன்
வெ. இராமலிங்கம் பிள்ளை
இலுப்பமரப் பிசாசு
என் தாயாரே நேரில் சொல்லுவதுபோல எழுதியிருக்கிறேன் கீழ்வரும் சம்பவத்தை.
ஆயிலிப்பட்டி என்ற ஊரில் என் கணவர் ‘ஏட்டா’க இருந்தார். ஆயிலிப்பட்டி என்பது அப்போது ஒரு. காட்டுப்புறம். ஊர் ஓரத்தில் ‘போலீஸ் ஸ்டேஷன்.’ அதன் பக்கத்தில் ‘போலீஸ் லைன்’ வீடுகள். ஐந்து ஜவான்களுக்கும் ஒரு ஏட்டுக்கும் ஆக ஆறு கூரைவீடுகள். அந்த வீடுகளுக்குப் பின்புறத்தில் ஒரு சிறு இலுப்பத் தோப்பு, அதற்கடுத்தாற்போல் ஒரு குட்டை. அந்த இலுப்பத் தோப்பில் ஒரு மரம்; மிகவும் பெரிய மரம். அந்த மரத்தில் ஒரு பேய் வசித்து வருவதாக நம்பிக்கை. இருட்டின பின் அந்த மரத்துப் பக்கம் போக யாரும் அஞ்சுவார்கள். நான் ஊருக்குப் புதிசு. இராக்காலங்களிலும் கூட அந்த இலுப்ப மரத்தைத் தாண்டி குட்டைக்குப் போய் வருவேன். அதை மற்ற பெண்கள் பார்த்து, இலுப்ப மரத்தில் ஒரு பொல்லாத பேய் இருப்பதாகச் சொல்லி என்னை எச்சரித்தார்கள். நானும் பேய் பிசாசுகள் உண்டு என்ற நம்பிக்கை உடையவள் தான்.
ஆனாலும் பேய் பிசாசுகளுக்குப் பயப்படக்கூடாது, பயந்தவர்களைத்தான் பேய் பிசாசுகள் மிரட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளவள். அத்துடன் நான் பெரியவளாவதற்கு முன்னால் வருஷா வருஷம் என் பெற்றோர்களுடன் பழனிக்குப் போய்ப் பழகினவள். பழனியாண்டவரிடத்தில் எனக்கு பக்தி. பழனி ஆண்டவனுடைய பக்தர்கள் எமனுக்கும் கூட பயப்பட வேண்டியதில்லை என்று அடிக்கடி என் தந்தை சொல்லுவதைக் கேட்டவள். அதனால் பேய் பிசாசுகளைப் பற்றி யார் என்ன பயங்கரமாகச் சொன்னாலும் பயப்படுவதில்லை. இலுப்பை மரப் பேயைப்பற்றி மற்ற பெண்கள் பயந்து என்னிடம் சொல்லும் போதெல்லாம் “நான் பழனி ஆண்டவனைக் கும்பிடுகிறவள். என்னிடம் பேய் பிசாசு அண்டாது. எது வந்தாலும் நான் பயப்பட மாட்டேன். நீங்களும் பேய் பிசாசுகளுக்கு பயப்படக்கூடாது. தைரியமாய் இருப்பவர்களைக் கண்டால் பேய் பிசாசு ஓடிப்போகும்” என்று அவர்களுக்கு அடிக்கடி தைரியம் சொல்லுவேன்.
கொஞ்சம் கொஞ்சமாக இலுப்பமரப் பிசாசிடத்தில் இது வரையிலும் ஊரில் இருந்து வந்த பயம் குறைந்து வந்தது. அந்த மரத்துக்கு ஆடு வெட்டி, பொங்கல் வைத்து, உடுக்கடித்து, பூசை போட்டு, சாமிகேட்டு, வழக்கமாக ஊரார் நடத்திவந்த மரியாதைகள் எல்லாம் இரண்டு வருஷமாக நின்று போய்விட்டது. சில வயசானவர்கள், பூசைகளை நிறுத்தி விட்டபடியால் கறுப்புக்குக் கோபம் வந்து ஊருக்குக் கெடுதி வரும் என்று எச்சரித்தார்கள். அதை யாரும் கவனிக்காமலேயே இருந்துவிட்டார்கள்.
இப்படி யிருக்கையில் ஒரு நாள் இருட்டின கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் “ஐயோ! அம்மா! செத்தேனே!’ என்ற கூக்குரல் கேட்டு நான் ஓடினேன். எதிரில் தலைவிரி கோலமாய் பக்கத்து வீட்டு அலமேலு ஓடி வந்தாள். என்னைக் கண்டதும் “அம்மா! பிசாசு!” என்று என்னை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு மூர்ச்சையாகிவிட்டாள்.
அலமேலு சிறு பெண். கேசவன் என்ற போலீஸ் ஜவானின் மனைவி. சமீபத்தில்தான் புருஷன் வீட்டுக்கு வந்தவள். ஒழிந்த நேரமெல்லாம் என்னோடு தான் பொழுது போக்குவாள். பிசாசுகளுக்கு பயப்படக்கூடாது என்று நான் ஊராருக்கு தைரியம் சொல்லும் போதெல்லாம் அருகிலிருந்து ஆமோதிப்பாள். எந்த விவாதத்திலும் என் கட்சியில் தான் இருப்பாள். அதற்காகவும் பொது அவளுடைய நல்ல குணத்திற்காகவும் எனக்கு அவளிடத்தில் அபரிமிதமான அன்பு. மூர்ச்சையான அலமேலுவை அப்படியே தூக்கிகொண்டுவந்து கட்டிலிற் படுக்கவைத்து, முகத்தில் தண்ணீரடித்து, விசிறியினால் காற்று வீசி, மயக்கம் தெளிய எனக்குத் தெரிந்த மாற்றுகளை யெல்லாம் செய்தேன். அக்கம் பக்கத்து ஜனங்களும் கூடி விட்டார்கள்.
வெகு நேரம் கழித்து அலமேலு கண்ணைத் திறந்தாள். கொஞ்சம் கொழு மோரைக் குடிக்கச் செய்தேன். மோரைக் குடித்தபின் களைப்பு நீங்கி அலமேலு பேச ஆரம்பித்தாள். ‘அம்மா? இத்தனை நாளும் அந்த இலுப்பமரப் பேய் என் கண்ணுக்குப் படவே இல்லையம்மா. இன்னைக்குத் தான் பார்த்தேன். குட்டைக்குப் போய்விட்டு வந்தேன். இலுப்ப மரத்துக்கிட்ட வந்ததும் தொப்பென்று எனக்கு எதிரில் கன்னங் கரேலென்று அந்தப் பேய் மரத்திலிருந்து குதித்து என்னைத் துரத்திக்கிட்டே வந்ததம்மா” என்று பயத்தால் உடல் நடுங்கிக் கொண்டே சொன்னாள். நான் பழனி விபூதியை அலமேலுவின் உச்சியிலும் நெற்றியிலும் தடவி தைரியம் சொன்னேன். கொஞ்ச நேரத்தில் அலமேலு தூங்கிவிட்டவள் போலத் தெரிந்தது. ஆனால் விடிய விடியப் புரண்டுகொண்டும் உளறிக் கொண்டும் தான் இருந்தாள்.
மறுநாள் அலமேலுவுக்குக் கடுமையான ஜூரம் வந்துவிட்டது, பத்துநாள் படுக்கையிலேயே கிடந்தாள். ஊர் முழுங்தும் அலமேலுவைப் பேய் மிரட்டி விட்ட பேச்சுத்தான். ஊரிலுள்ள கிழங்களெல்லாம், தங்கள் பேச்சைக் கேட்காததின் பலன்தான் அது என்று, பேய்க்கு பயப்படக்கூடாது என்று நான் செய்து வந்த உபதேசத்தை ஏளனம் பேச ஆரம்பித்து விட்டார்கள். என் பேச்சைக் கேட்டுக்கொண்டு இலுப்பமரப் பிசாசை அவமதித்து அதற்குப் பூசை போடுவதை நிறுத்தினது குற்றம்தான் என்று ஜனங்களும் பயந்துபோய் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஊரிலுள்ள பெரியவர்கள் சில பேர் கூடி இலுப்ப மரத்துக்கு உடனே பூசை போட வேணுமென்று தீர்மானித்தார்கள். சாமியாடி மூத்தப்ப பண்டாரத்திடம் போனார்கள். முத்தப்பன் அந்த ஊரிலும் பக்கத்து கிராமங்களிலும் பெயர் போன பூசாரி. பேயோட்டுவது, சாமி சொல்வது, பீடைகளுக்குப் பரிகாரம் செய்வது கழிப்புக் கழிப்பது, முதலான வேலைகளில் பரம்பரையான பழக்கமுள்ளவன். வைத்தியமும் செய்வான். அலமேலுவுக்கு அவன்தான் மந்திரம் செய்து, யந்திரம் கட்டி, மருந்தும் கொடுத்தான். வருஷத்தில் குறைந்த பட்சம் நாலு தடவையாவது அவனைக் கொண்டு ஊரார் கிராம தேவதைகளுக்கும் காற்று கறுப்புகளுக்கும் பொங்க லிட்டுப் பூசை நடத்துவார்கள். அந்த வட்டாரத்திலுள்ள எல்லா கிராமத்தாரும் வீட்டுக்கு இவ்வளவு என்று அரிசி, பருப்பு, ஆடு, கோழி முதலான பல பொருள்களையும் முத்தப்பனுக்குக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அதனால் அவனுக்கு நல்ல வருமானம். அந்தக் கிராமத்தில் அவனுடைய வீடுதான், ‘பூசாரி வீடு’ என்ற மச்சு வீடு.
எல்லா ஜனங்களிடத்திலும் பிரியமாகப் பழகுவான். அவனால் யார் யாருக்கு என்ன ஆகவேணுமோ அதை வெகு பரிவுடன் செய்வான்.
எல்லாருக்கும் அவனிடத்தில் அன்பும் மரியாதையும் உண்டு. நான் அந்த ஊருக்கு வந்த நாளாக என்னுடைய பேச்சைக் கேட்டு ஊரில் பூசைகள் குறைந்து போனதால் முத்தப்பனுக்குத்தான் நஷ்டமாகிக்கொண்டு வந்தது.
அலமேலுவை பேய் மிரட்டிவிட்ட பிறகு ஊரில் முத்தப்பனுடைய தயவுக்கு கிராக்கி உண்டாகிவிட்டது. கும்பல் கும்பலாக ஜனங்கள் முத்தப்பன் வீட்டுக்கு வந்து கிராம தேவதைகளுக்கும் இலுப்ப மரத்துக்கும் வழக்கம் போல் பூசை போடவேண்டியதற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர். பொதுஜன அபிப்பிராயம் இலுப்ப மரத்துக்கும் பூசை போடவேண்டுமென்பதில் பலமாகத் திரும்பிவிட்டதினால் என்னுடைய கட்சிக்குக் கொஞ்சம் கூட செல்வாக்கில்லாமற் போய்விட்டது. இதுவரை யிலும் “பேய் பிசாசுகளுக்குப் பூசை என்ன?” என்று என்னுடன் சேர்ந்து சொல்லிக் கொண்டருந்தவர்கள் எல்லாம் பூசைக்கு
வேண்டிய வரிகளைத் தாங்களே வலியக் கொண்டுபோய் முத்தப்பனிடம் செலுத்த ஆரம்பித்தார்கள். அதனால் என் கட்சி தலை நீட்ட முடியவில்லை. பூசாரி முத்தப்பனே வீடு வீடாகப் போய் தானிய தவசம், ஆடு,கோழி, வரிப்பணம் முதலியவற்றை வசூலித்தான்.
என் வீட்டிற்கும் வந்தான். எனக்கு அலமேலுவை பயப்படுத்திய இலுப்ப மரப் பிசாசின் மேல் வெகு கோபம். அந்தப் பேயை ஊரைவிட்டு துரத்துவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யாமல் அதற்குப் பூசை போடவேணுமென்ற முயற்சி எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் ஊருக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாதென்று நானும் மற்ற வீட்டார் தந்த மாதிரி காணிக்கையும் அரிசி பருப்பையும் தந்தேன். ஆனால் முத்தப்பனுக்கு அது திருப்தியில்லை. இரண்டு வருஷமாக என்னால் அவனுடைய வரும்படிகள் குறைந்து விட்டபடியால் என்னிடத்தில் அபராதம் வசூல் செய்ய நினைத்தது போலவே “என்னம்மா எல்லா வீட்டிலும் தருவதைப் போலவே ஏட்டு வீட்டிலும் தந்தால் போதுமா? இலுப்ப மரத்துக் கறுப்புக்கு உங்கள் மேல் தான் ரொம்ப கோபமிருக்கும். நீங்கள் ரெண்டு ஆட்டுக்குட்டியாவது அதிகமாகத் தர வேணும். இலுப்ப மரத்துக் கறுப்பு பொல்லாதது. உங்களுடைய நல்லதுக்குத்தான் சொல்லுகிறேன்” என்றான்.
எனக்குக் கோபம் வந்துவிட்டது. “பூசாரி! நான் பேய் பிசாசுகளுக்கெல்லாம் பயப்படுகிறவள் அல்ல. இலுப்ப மரப் பிசாசு என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. எனக்கு பழனியாண்டி பக்கத்திலேயே இருக்கிறான். நான் அலமேலு அல்ல. அலமேலுவை மிரட்டின இலுப்ப மரப் பேய் என்னிடம் வந்தால் அதை என் ஆணி கட்டின செருப்பாலேயே அடித்து ஊரை விட்டு ஓட்டி விடுவேன். நான் கிராம தேவதைகளுடைய பூசைக்குத் தான் என்னுடைய காணிக்கையைத் தந்தேன். பிசாசு பூசைக்கு ஒன்றும் தரமாட்டேன்,” என்று கண்டித்துச் சொல்லிவிட்டேன்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் கணவர் “போனாற் போகிறது, பேய் பிசாசுகளுடன் என்னத்துக்குத் தகராறு? இரண்டு ஆட்டுக் குட்டி தானே,கொடுத்து விடலாமே” என்றார். நான் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது என்று தடுத்து விட்டேன். இந்த விஷயங்களிலெல்லாம் என் கணவர் எனக்கு விரோதமாக ஒன்றும் செய்ய மாட்டார். ஒன்றும் சொல்ல முடியாமல் பூசாரி முத்தப்பன் வந்ததை வாங்கிக்கொண்டு போய்விட்டான்.
பூசைகளெல்லாம் நன்றாக நடைபெற்றன. காளியம்மன், மாரியம்மன், சப்தகன்னிமார் முதலான பூஜைகளுக் கெல்லாம் நானும் போயிருந்தேன். ஆனால் இலுப்ப மரத்துப்பூசைக்கு மட்டும் போகவில்லை.
அதற்காக என்னை ஊரிற் சில பேர் குற்றமாகக் கூடச் சொன்னார்கள். பூசை முடிவதற்குள் அலமேலுவுக்கு உடம்பு குணப்பட்டுவிட்டது. அவளுடைய புருஷன் கேசவன், எப்படியாவது இலுப்ப மரப் பிசாசின் கோபம் தணிந்தால் போதும் என்று முத்தப்பன் கேட்டதை யெல்லாம் தந்துவிட்டான். கேசவனுடைய கட்டாயத்துக்காக அலமேலுவும் பிசாசு பூசைக் குப் போய் வந்தாள்.
பூசைக்குப் பிறகு ஊரில் எல்லாருக்கும் ஒருவித திருப்தி. என்னுடன் சேர்ந்துகொண்டு ‘காத்து கறுப்பை’ மதிக்காமல் பேசுகிற பேச்சுகளும் நின்றுவிட்டதைப் பற்றி கிழங்களுக்கெல்லாம் சந்தோஷம். இருட்டின பிறகு இலுப்ப மரத்துப் பக்கம் ஆண் பிள்ளைகள் கூடப்போவது நின்றுவிட்டது. ஆனால் என்னுடைய பிடிவாதம் மட்டும். மாறவில்லை.
அடிக்கடி இருட்டின பின்னும் இலுப்ப மரத்தைக் கடந்து குட்டைக்குப் போய் வருகிற வழக்கத்தை நான் விடவில்லை. நான் ஒரு தண்டாயுதபாணி விக்ரகத்தையும், ஒரு வேலாயுதத்தையும், ஒரு மயில் வாகனத்தையும் வைத்துக்கொண்டு தான் வீட்டில் பூசை பண்ணுகிற வழக்கம், அந்தப் பூசையில் ‘தண்டாயுதம்’ என்று இரும்புத் தடியையும் வைத்திருப்பேன். அந்தத் தடி ஒரு கைப்பிரம்பு உயரம் இருக்கும். அடியில் ஒரு கனத்த பூண் போட்டிருக்கும். உச்சியில் சலங்கை கட்டியிருக்கும். அந்த இரும்புத் தடியை கையிற் பிடித்துக் கொண்டு, காலில் ஆணி கட்டின கனமான செருப்பைப் போட்டுக் கொண்டுதான் இருட்டுக்குப் பின் இலுப்ப மரப் பக்கம் போவேன். கையில் இரும்பும் காலில் செருப்பும் இருந்தால் பேய் பிசாசுகள் அண்டாது என்பது என் திடமான நம்பிக்கை.
இப்படி இருந்து வருகையில், அந்த ஊரிலுள்ள வீராயி என்ற ஒரு பெண் பக்கத்து ஊருக்கு ஒரு உறவின் முறையாகப் போய்விட்டுத் திரும்பி வருகையில் இருட்டி விட்டது. யாரோ அவளை வழி மறித்து, அவளுடைய காதில் இருந்த தங்க ஓலையை வெடுக்கென்று அறுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்.
அந்தக் கேசுக்காக சில சந்தேகப்பட்ட இடங்களைச் சோதனை போடவும் துப்பு விசாரிக்கவுமாக, என்னுடைய கணவர் கேசவனையும் கூட்டிக் கொண்டு சுமார் ஒருவாரம் வரையில் ஊரில் இல்லாத ஒரு நாள் இரவு, பத்து மணி சுமாருக்குக் குட்டைக்குப் போனேன்.
திரும்பி வரும்போது இலுப்ப மரத்துக்கருகில் வந்தவுடன் மரத்திலிருந்து யாரோ குதித்தது போல தொப் பென்று சத்தங் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கருத்த தடித்த உருவம் ஒன்று கண்ணிற் பட்டது. இலுப்ப மரப் பிசாசு தான் என்று தெரிந்து கொண்டேன். கொஞ்சம் கூடப் பயப்படாமல், இருந்த இடத்தை விட்டும் நகராமல், நான் பிசாசையே உற்றுப் பார்த்துக்கொண்டு, எனக்குள்ளேயே ‘முருகா! கந்தா! பழனியாண்டி!” என்று உச்சரித்துக் கொண்டு நின்றேன். அந்தப் பேய், புலி, கரடி உறுமுவதைப் போல பயங்கரமான ஓசை காட்டிற்று. நான் அதற்கு அஞ்சவில்லை. அஞ்சாமல் உற்றுப் பார்த்தால் பேய்கள் ஓடுவிடும் என்றும், கொஞ்சம் பயந்து உற்றுப் பார்ப்பதை விட்டு, பார்வையைத் திருப்பினால் உடனே பேய்கள் அடித்து விடும் என்றும் பேர்கள் சொன்னதைக் கேட்டிருந்த நினைப்பினால், பார்வையை வேறிடத்துக்கு மாற்றாமல் பிசாசையே பார்த்துக் கொண்டு நின்றேன். அந்தப் பேய் உறுமிக் கொண்டே தவளை மாதிரி தத்தித் தத்திக் குதித்து என் அருகில் வந்தது. முன்நிலாக் காலமென்றாலும் இலுப்பத் தோப்பின் இருட்டில் ஒரு கறுப்பான உருப்படியைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.
பேய் கிட்டி வர, வர, நான் பார்வையை மட்டும் மாற்றாமல் கொஞ்சங் கொஞ்சமாக எங்கள் வீட்டுக் கொல்லைப் பக்கமாகப் பின்னாலேயே நகர்ந்தேன். அதுவும் வந்தது. நான் மறுபடியும் நின்றுகொண்டு, “இலுப்ப மரத்துப் பிசாசே! அலமேலுவை மிரட்டினதைப் போல் என்னையும் மிரட்ட முடியாது. பேசாமல் ஓடிப்போ. இல்லாவிட்டால் இதோ முருகனுடைய தண்டாயுதம் இருக்கிறது” என்றேன். உடனே அந்தப் பேய் அதிகமாக உறுமிக் கொண்டு என்மேல் தாவிக் குதித்தது. நான் சற்று விலகிக் கொண்டு, கண் மூடிக் கண் திறப்பதற்குள் என் கையிலிருந்த இரும்புத் தடியை இரண்டு கைகளாலும் ஓங்கி அந்தப் பேயின் தலையில் பலமாக அடித்து விட் டேன். ‘ஐயோ’ என்று அலறிக்கொண்டு வெகு ஆத்திரத்துடன் அந்தப் பிசாசு என்மேற் பாய்ந்து என்னை அழுத்திக் கொண்டது. நான் கைத்தடியை மட்டும் விடாமல் இன்னொரு கையால் பிசாசை இறுக்கிப் பிடித்துக்கொண்டு “பிசாசு! பிசாசு ! ஓடியாங்க” என்று உரக்கக் கத்தினேன்.
என் சத்தத்தைக் கேட்டு கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு காதர் சாயபு ஓடிவந்தான். காதர் சாயபு ஒரு-போலீஸ் ஜவான். பத்து நாளைக்கு முன்னால் தான் அந்த ஊருக்கு மாற்றப்பட்டு வந்தவன். அவனுக்கு இலுப்ப மரத்துப் பிசாசின் கதை ஒன்றும் தெரியாது. யாரோ திருடன் தான் வந்து விட்டானாக்கு மென்று ஓடி வந்தான். கதவைத் திறந்து கொண்டு யாரோ ஓடி வருகின்ற ஓசையைக் கேட்டதும் பிசாசு என்னை விட்டுவிட்டு எழுந்திருக்க முயன்றது. ஆனால் நான் அதை விடவில்லை காதர் சாயபு பக்கத்தில் வந்து நின்றான். இரண்டு உருவங்கள் கட்டிப் புரண்டு கொண்டிருந்ததைத் தவிர யார், எது என்று தெரியாமல் “யார் கூப்பிட்டது? என்ன? என்ன?” என்று கத்திக்கொண்டே நின்றான். நான் அந்தப் பேயை ஓடவிடாமல் அமுக்கிக் கொண்டு, என் குரலைக் காட்டி அந்தப் பிசாசைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி காதர் சாயபுவிடம் சொன்னேன். என்னுடைய தலைமயிர் அவிழ்ந்து முகத்தை மூடிக்கொண்டிருந்தது, ஆடை அலங்கோலப்பட்டிருந்தது.
என்னுடைய ஆடையைச் சரிப்படுத்திக் கொள்ள எண்ணி “சாயபு இது இலுப்பமரத்துப் பிசாசு. கொஞ்சம் பிடித்துக் கொள். மயிரை முடிந்து கொண்டு என் காலிலிருக்கிற ஆணி கட்டின செருப்பால் அடித்தால் தான் இனிமேல் இந்தப் பிசாசு யாரையும் மிரட்டாது” என்று நான் பிடித்திருந்த பிடியோடு பிசாசைக் காதர் சாயபுவிடம் ஒப்படைத்தேன். அவனும் பிசாசைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். நான் என் கூந்தலை முடிந்து கொண்டு, உடையைச் சரிப்படுத்திக் கொண்டு என் காலிலிருக்கிற ஆணி கட்டின செருப்பைக் கையில் எடுக்கப் போனேன். காதர் சாயபு, எனக்கு ஏதாவது அடிபட்டு விட்டதோ என்றும் என்னுடைய தைரியத்தை மெச்சியும் என்னைப் பார்த்துக்கொண்டே நின்றான். வெடுக்கென்று காதர்சாயபு பிடியைப் பிடுங்கிக்கொண்டு பிசாசு இலுப்ப மரத்துப் பக்கம் ஓடிவிட்டது.
காதர்சாயபு துரத்தினான். இலுப்பமரத்துக் கருகில் ஒரு அடர்ந்த வேலி. அந்த வேலிக்குள் பிசாசு மறைந்து விட்டது. காதர்சாயபு காற்றாய்ப் பறந்து அங்குமிங்கும் தேடினான். பிசாசு கிடைக்கவில்லை. அதற்குள் எங்கே போய்விட முடியும் என்று நாலாபக்கமும் பார்த்தான். கொஞ்ச தூரத்தில் குட்டை. குட்டையின் நீரோரத்தில் உருவம் அசைந்தது, நிலா வெளிச்சத்தில் அவன் கண்ணிற்பட்டது. ஒரே தாண்டில் அங்கே ஓடினான். இவன் ஓடி வருவதைப் பார்த்து அந்த உருவம் ஓட ஆரம்பித்தது. சிக்கிக்கொண்டது என்ற உத்ஸாகத்தில் காதர்சாயபு வெகு வேகமாய்த் துரத்தினான். அந்த உருவமும் வேகமாக ஓடிற்று. குட்டைக்கு அப்பால் ஒரு நல்ல பாதை. அந்தப் பாதையில் சுமார் இரண்டு மைல் தூரம் காதர்சாயபு அந்த உருவத்தைத் துரத்தினான். இரண்டு மைலுக்கு அப்பால் அந்தப் பாதையில் வெகு குறுகலான இடம். இரு புறத்திலும் அடர்ந்த முள் வேலிகள். அந்த இடத்துக்குப் போனதும் எதிரில் ஏழெட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு சில குடியானவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி யோடப் பாதையில் இடமில்லை.
அதனால், முன்னால் ஓடிவந்த உருவம் நிற்கவேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. துரத்திக்கொண்டு வந்த காதர் சாயபு எதிரில் ஆட்கள் வருவதைக் கண்டு “பிடிச்சுக்கோ, உடாதே அந்தத் திருட்டுப்பயலை. ஏட்டு வீட்டு அம்மாளை அடிச்சுட்டு ஓடியாறான்” என்று கத்திக் கொண்டே ஓடி வந்து சேர்ந்தான். வேறு வழியில்லா மல் ஓடிவந்த அந்த உருவம் காதர் சாயபு கையில் சிக்கிக் கொண்டது. சிக்கின உருவம் ஐம்பது வயதுள்ள ஒரு குறவன். காதர் அவன் கன்னத்தில் பளீர் பளீரென்று நாலு அறை கொடுத்து, சின்டைப் பிடித்துக் கொண்டு “நட கச்சேரிக்கு” என்று இழுத்தான். “சாமி’ என்னை அடிக்காதிங்க ; நான் உள்ளதை யெல்லாம் சொல்லி விடுறேனுங்க” என்று கெஞ்சினான்.
“சொல்றதை யெல் லாம் கச்சேரிக்கு வந்து சொல்லுடா.” என்று காதர் இழுத்துக்கொண்டு போனான்.
இதற்குள், என்னை இலுப்பமரப் பிசாசு அழுத்திக் கொண்டதும், காதர்சாயபு பிசாசைத் துரத்திக் கொண்டு போயிருப்பதும் ஜனங்களுக்குத் தெரிந்துவிட்டது. எங்கள் வீட்டுக்கு முன்னாலும் போலீஸ் கச்சேரிக்கு முன்னாலும் ஊரே கூடிவிட்டது. அதே சமயத்தில் வீராயி அம்மாளின் காதை அறுத்துவிட்ட ‘கேஸ்’ விஷயமாக வெளியூருக்குப் போயிருந்த என் கணவரும், கேசவனும் திரும்பி வந்து சேர்ந்தார்கள். என் கணவருக்கு என்னைப் போய் மிரட்டிவிட்டதே என்ற கவலை. கேசவனுக்குத் தன் மனைவியை மிரட்டி, காய்ச்சலில் கஷ்டப்படச் செய்து
விட்ட இலுப்பமரப் பிசாசை நான் மிரட்டிவிட்டேனே என்ற சந்தோஷம். பலபேர் பலவிதமாகப் பேசிக்கொண்டு கூட்டமாக நானும் பேயும் மல்லுக்கட்டிப் புரண்ட இடத்தைப் பார்வையிட்டார்கள். அந்த இடத்தில் பெண்கள் தலையில் வைத்துப் பின்னிக்கொள்ளுகிற ஜவரி மாதிரி ஒரு பெரிய மயிர்க் கொத்து கிடைத்தது. அது நீண்டு அடர்ந்த ரோமமும் சடைகளும் உள்ளதாக இருந்தது. அது பேயின் தலைமயிர் என்று பலபேர் பயப்பட்டார்கள். கேசவன் தைரியமாக அதைக் கச்சேரிக்கு எடுத்துக்கொண்டு போனான். பிறகு ஜனக்கூட்டம் பேயைத் துரத்தப்போன காதர் சாயபு என்னவானான் என்று பார்க்க அவன் ஓடின பக்கத்தில் தேடிக்கொண்டு போனார்கள்.
குறவனைப் பிடித்த காதர் சாயபு, எதிரில் வந்த குடி யானவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டு, தான் இரண்டு மைல் துரத்தி வந்த அலுப்பைத் தீர்த்துக்கொள்ள வழியில் கொஞ்சம் உட்கார்ந்துவிட்டு மறுபடியும் குறவனை இழுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தான், உட்கார்ந்து பேசினபோதும் கூட காதர் சாயபு கை மட்டும் குறவனுடைய சிண்டை விடவில்லை. ஏட்டு பெண்ஜாதியை மிரட்டினவனைப் பிடித்துவிட்ட வெற்றி முழக்கத்தோடு வந்து கொண்டிருந்த காதர் சாயபுவை ஜனங்கள் கண்டார்கள். பிசாசு கூடப் பிடிபட்டு விட்டதே என்ற ஆச்சரியத்தோடு ஆரவாரம் செய்தார்கள். எல்லாருமாக எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றார்கள். ஊரிலுள்ள விளக்குகளெல்லாம் அங்கே வந்துவிட்டன. ஒரே வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் பிடிபட்ட ஆசாமியைப் பார்த்தார்கள்.
அவன் அங்கே கூடியிருந்த பலபேருக்கு நன்றாகத் தெரிந்த குள்ளான் என்ற குறவன் தான்; பிசாசல்ல. நான் போய்ப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த உருவம் இல்லை. “என்ன சாயபு! யாரோ வழியில் போறவனைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறாயே! நான் பிடித்துக் கொடுத்த ஆள் எங்கே?” என்று கேட்டேன்.
“அவன் தானம்மா இவன். நான் பின்னாலேயே ஓடி ரெண்டு மைல் துரத்திப் பிடிச்சேனம்மா. ஓடற போத வேசத்தை யெல்லாம் கலைச்சிட்டானம்மா, கொறப்பயல். இப்போ ஒங்களுக்கு வேறே ஆள் மாதிரி தெரியிறானம்மா என்று நான் எவ்வளவு ஓட்டம் ஓடிப் பிடிச்சேனம்மா சொல்லிக் கொண்டே அவன் முதுகில் இரண்டு அடி கொடுத்தான். இல்லை இல்லை. இது நான் பிடித்துக் கொடுத்த ஆளும் அல்ல இலுப்ப மரத்துப் பிசாசும் அல்ல” என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்குள் போய் விட்டேன். காதர் சாயபு ஜனங்களிடத்திலும் என் கணவரிடத்திலும் அதே ஆள்தான் அவன் என்று சாதித்தான். நான் பிடித்துக் கொடுத்த உருவம் தடித்த வாலிபமான உடலாக இருந்தது. காதர் சாயபு பிடித்து வந்த ஆசாமி எலும்பும் தோலுமாக இளைத்துக் கிழட்டுத் தேகமாக இருந்தது. இலுப்ப மரப் பிசாசு ஓடிவிட்டது என்று எண்ணிக்கொண்டேன்.
குறவனை இழுத்துக் கொண்டு கச்சேரிக்குப் போனார்கள். காதர் சாயபுக்குத் தான் இவ்வளவு பாடுபட்டு ஓடிப் பிடித்து வந்த ஆசாமியை நான் ஒப்புக்கொள்ளவில்லையே என்ற வருத்தம். அவனுக்கு அதே ஆள் தான் என்னை மிரட்டினவன் என்ற நம்பிக்கை போகவில்லை.
” டே ! சுவ்வர்! உள்ளத்தைச் சொல்றியா ஒதை வேணுமா? நீதானே இலுப்ப மரத்துக்குப் பின்னாலே ஓடினவன்?” என்று குறவனுடைய சிண்டை பலமாகக் குலுக்கி, கன்னத்திலும் பளார் என்ற அறை விட்டான். ‘ ஐயோ சாமி! அதெல்லாம் மொட்டையன் செய்த வேலைங்க. நான், இருக்கிற இடத்தைக் காட்டுறேனுங்க. என்னை ஒண்ணும் பண்ணாதிங்கசாமி” என்று கும்பிட்டுக் கெஞ்சினான். உடனே என் கணவர் “சரி இருக்கிற இடத்தைக் காட்டுவா” என்று அவனுடைய சிண்டை விடுவித்து இடத்தைக் காட்டச் சொன்னார். “வாங்கசாமி காட்றேன்” என்று குள்ளான் முன்னால் நடக்க ஏட்டும் காதர் சாயபும், கேசவனும் இன்னும் சிலரும் பின்னால் போனார்கள். ஜனக் கும்பலை நிறுத்திவிட்டு இலுப்பத் தோப்புக்குப் போனார்கள்.
பெரிய இலுப்ப மரத்துக்குப் போனதும், அங்கிருந்து குள்ளான் அடையாளம் பார்த்துக் கொண்டு நடக்கிறது போல வழி பார்த்து குட்டைக்குள் இறங்கினான். குட்டையில் இலுப்ப மரத்துக்கு நேராகக் குறிபார்த்து தண்ணீ ருக்கு ஓரத்திலிருந்த ஒரு ஈச்சம் புதரண்டை நின்றான். மறுபடியும் இலுப்ப மரத்துக்கு நேர் பார்த்து ஈச்சம் புதருக்குப் பக்கத்திலிருந்த ஒரு பெரிய கல்லைப் புரட்டித் தள்ளினான். அந்தக்கல் இருந்த இடத்துக்கு நேராக மண்ணைக் கிண்டினான். மண்ணிலிருந்து ஒரு சிறு துணி முடிப்பை எடுத்தான். அதை ஏட்டு கையில் கொடுத்தான். ஏட்டு அந்த முடிச்சை அவிழ்த்துப் பார்த்தார். அதில் சில நாட்களுக்கு முன்னால் வீராயி அம்மாள் காதிலிருந்து அறுத்துக்கொண்டு போன பொன்னோலை இருந்தது. அதைக் கண்டு பிடிக்க வேணும் என்று பத்து நாளாய்ப் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து கொண் டிருந்த ஏட்டுக்கும் கேசவனுக்கும் பரமானந்தம் உண்டாகி விட்டது
வீராயின் காதை அறுத்தவன் மொட்டையன் என்றும், அந்த நகையைத் தன்னிடம் கொடுத்து மறைத்து வைக்கச் சொன்ன தாயும் தான் இலுப்ப மரத்துக்கு நேராகக் குறி வைத்துக் கொண்டு அந்த இடத்தில் புதைத்து வைத்ததாகவும், அதை எடுத்துப் போக வந்து, இடத்தின் அடையாளம் தேடிக் கொண்டிருக்கிற போது சாயபு ஓடிவந்ததைப் பார்த்துப் பயந்து ஓடினதாகவும், வேறொன்றும் தான் செய்யவில்லை. யென்றும் குள்ளான் சொன்னான். அவன் சொன்னது உண்மை யென்று காதர் சாயபுக்குக்கூட அப்போது தான் தெரிந்தது. மறுபடியும் எல்லோரும் போலீஸ் கச்சேரிக்கு வந்தார்கள். ஜனங்கள் உண்மையை அறிந்தார்கள். ‘பேய் பிடிபடுமோ ! அது போய் விட்டது, குறவன் அகஸ்மாத்தாகச் சிக்கிக் கொண்டான்’ என்று ஜனங்கள் பலவாறு பேசிக் கொண்டு போய் விட்டார்கள். சிலர் இலுப்ப மரத்துப் பிசாசை நான் அடித்து விட்டதால் எனக்கு எதாவது அபாயம் உண்டானாலும் உண்டாகு மென்று பயந்து என்னிடம் காரணங்கள், கதைகளுடன் சொன்னார்கள்.
எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அந்தப் பேய் என்ன ஆச்சுது? அது பேய் தானா அல்லது நகையைப் பிடுங்க வந்த வேறொருவனாக இருக்குமோ ! பேயாக இருந் தால் நான் அடித்த அடிக்கு அப்படி அலறித் துடித்திருக்குமோ! பேயானால் நம்மோடு கட்டிப் புரண்டு நேருக்கு நேராகச் சண்டை போடுமா? பேய் மனிதருடைய கைக்குச் சிக்காது என்று சொல்லுவார்களே ! என்று விடிய விடிய, படுக்கையிற் படுத்த படியே எண்ணி யெண்ணிப் புரண்டு கொண்டிருந்தேன்….. பொழுது விடிந்தது. என்னுடைய புடவையில் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டேன். அது நான் தடியால் அடித்த அடியினால் உண்டான காயத்திலிருந்து தான் வந்த ரத்தமாயிருக்க வேணும் என்று அறிந்தேன். சரி, என்னை அமுக்கினது பேயல்ல ! யாரோ திருடன் தான். ரத்தக் கறையை என் வீட்டுக்கார ரிடம் காட்டினேன். அவரும் அது திருடனாகத் தான் இருக்க வேணும் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.
ஒரு வாரம் போய்விட்டது. இலுப்பமரப் பிசாசின் மர்மம் தெரியவில்லை. ஒரு நாள் நானும் அக்கம் பக்கத்துப் பெண்களும் இரண்டு மைல் தூரத்தில் நடக்கிற வாரச் சந்தைக்கு வழக்கம் போல் போயிருந்தோம். நான் ஒரு காய்கறிக் கடையில் நின்று விலை கேட்டுக்கொண்டிருந்தேன்.
அடுத்த கடை ஒரு புகையிலைக் கடை. அதில் ஒரு ஆசாமி புகையிலைக் கட்டைக் கையில் எடுத்து விலை பேசிக் கொண்டிருந்தான். தலையில் முக்காடு போட்டிருந் தான். நான் பார்த்த சமயத்தில் முக்காடு நழுவியிருந்தது. அவன் தலையில் புண்ணுக்குக் கட்டுகிற கட்டைப் போல ஒரு பலமான கட்டு கட்டப்பட்டிருந்த்து. அந்தக் கட்டை மறைக்கத்தான் முக்காடு என்று தெரிந்தது. தலையில் அந்தக் கட்டைக் கண்டவுடன் மின்சாரம் பாய்ந்தது போல எனக்கு என்னமோ நினைவு வந்தது.
அவனுடைய உருவத்தைக் கூர்ந்து கவனித்தேன். இலுப்ப மரத்தண்டை என்னோடு மல்லுக் கட்டின உருவத்தின் அடையாளங்கள் அவனிடத்தில் இருப்பது போலத் தோன்றியது. உயரம், கனம், பெருத்த தலை, கடைந்தெடுத்தது போலக் கை கால்கள் எல்லாம் என் மனதில் பதிவாயிருந்தபடியே இருந்தன. கண் கொட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அகஸ்மாத்தாக என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்தான். என்னைப் பார்த்தவுடன் திடுக்கிட்டவனைப் போல, இது வரையிலும் நழுவியிருந்த முக்காட்டை இழுத்து விட்டு முகத்தையும் பாதி மூடிக்கொண்டான். என்னுடைய சமுசயம் பலப்பட்டு விட்டது.
என் சந்தேகத்தைக் காட்டிக் கொள்ளாமல் அவனைக் கவனிக்காதவளைப் போல் நான் அந்தக் கடையை விட்டு மறைந்து விட்டேன். சிறிது நேரத்துக்குப் பின், நான் இருக்கிறேனா என்று பார்ப்பதுபோல மெதுவாகத் திரும்பி, முன் நான் நின்ற இடத்தைக் கடைக்கண்ணால் பார்த்தான். நான் இல்லாததைக் கண்டு நாலா பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து என்னைத் தேடினான். நான் அவன் கண்ணுக்குப் படவில்லை. நான் போய் விட்டேன் என்று முக்காட்டையும் நீக்கிக்கொண்டு நிம்மதியாகப் புகையிலை வியாபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.
இவற்றை யெல்லாம் மறைவிலிருந்து பார்த்த நான், ஆசாமி அவனே அவன் தான் என்று நிச்சயம் பண்ணிக் கொண்டு என்னுடன் இருந்த அலமேலுவை அனுப்பி அன்றைக்கு அங்கு வந்திருக்கும் ‘பீட் கான்ஸ்டேபிள்’ யாராயிருந்தாலும் கூட்டி வரும்படி அனுப்பினேன். அலமேலு போனாள். சீக்கிரம் வரவில்லை. புகையிலை வியாபாரத்தை முடித்துக்கொண்டு அந்த ஆசாமி போக ஆரம்பித்தான். நான் அவனை விட்டுவிடக் கூடாதென்று தூரத்தில் பின் தொடர்ந்தேன். அவன் சந்தையைவிட்டு வெளியில் போகிற சமயத்தில் எதிரில் அலமேலுவும் ஜவானும் வந்தார்கள், நான் அவசர அவசரமாக விஷயத்தை ஜவானிடம் சொன்னேன்.
ஜவான் அந்த ஆசாமியைப் பின் தொடர்ந்தான். நான் என்னுடைய சந்தை வியாபாரங்களை அரை குறையாக முடித்துக்கொண்டு வெகு வேகமாக வீட்டுக்கு வந்தேன். கச்சேரியிலிருந்த என் கணவரை அழைத்து சந்தையிற் கண்டதைச் சொன்னேன். உடனே அவரும் கேசவனும் சந்தைக்குப் போனார்கள், மறு நாள் காலையில் நான் சந்தையில் பார்த்த ஆசாமியைப் போலீசுக் கச்சேரிக்குக் கொண்டு வந்தார்கள். அவன் பக்கத்து ஊரில் ஒரு பண்ணையில் வேலை செய்துகொண்டிருக்கிற கட்டையன் என்ற குடியானவன். தலையிலிருந்த கட்டு என்னவென்று கேட்ட தற்கு தலையில் ஒரு கொப்புளம் என்றான். அவன் வழக்கமாகக் குடுமியும் மீசையும் உள்ளவனாம். அப்போது மீசை சிரைக்கப்பட்டு தலையும் மொட்டை யடிக்கப்பட்டிருந்தது. தலை மொட்டைக்குக் காரணம் தலைப்புண் என்றான். மீசையை எடுத்திருந்ததற்கு சரியான காரணம் சொல்ல முடியாமல் என்னென்னமோ காரணங்கள் உளறினான்.
காலை எட்டு மணியிலிருந்து பகல் ஒரு மணி வரைக்கும் அவனை என்னென்னமோ விதமாக மிரட்டியும், அவன் தனக்கும், இலுப்ப மரத்தண்டை ஏட்டம்மாவை மிரட்டினவனுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை யென்று சாதித்துவிட்டான். இதெல்லாம் கச்சேரியில் நடந்து கொண்டிருப்பதை அறிந்த நான் அந்த ஆசாமியைத் தனியாக என்னிடம் அழைத்து வரும்படி என் கணவருக்குச் சொல்லி யனுப்பினேன். அவன் எங்கள் வீட் டுக்குள் நுழைந்தவுடன் “வாங்கையா இலுப்ப மரத்து முனியப்பரே! உங்கள் சடையைப் போட்டுவிட்டுப் போயிட்டிங்களே !” என்றேன். அவன் உடனே தன்னை அறியாமல் சிரித்துவிட்டான்.
அதைக் கண்டதும் என் கணவருக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. அவனை உட்காரச் சொல்லி தானும் பக்கத்தில் உட்கார்ந்து அழுத்தமான குரலில், “ஏய்! உள்ளதைச் சொல்லிவிட்டால் உன்னை விட்டு விடுகிறேன். சத்தியம். இல்லாவிட்டால் பத்து வருஷம் ஜெயிலில் இருக்கவேண்டியதுதான். உடனே விலங்கு போட்டு தாலூகாக் கச்சேரிக்கு அனுப்பப்போகிறேன். என்ன சொல்லுகிறாய்?” என்று அதட்டினார்.
அவன் மளமளவென்று சொல்ல ஆரம்பித்தான். “என்னை ஒண்ணும் பண்ணிடாதிங்க. நான் உள்ளதைச் சொல்லிவிடுகிறேன். நான் பூசாரி முத்தப்பன் சொன்னபடி நடக்கிறவனுங்க. நானும் களத்தூர் ரங்கனும் பூசாரியுட சம்பள ஆளுகள். எங்கள் ரெண்டு பேருக்கும் வருசத்துக்கு வேண்டிய தானிய தவசமும், பண்டிகை நாள்களில் பணமும், துணியும், பூசாரி தருவாருங்க. நாங்கள் அவர் சொல்ற இடத்துக்குப் போய் இப்படிப் பேய் பிசாசு மாதிரி மெரட்டிப்புட்டு வருவோம். அவர் சொல்ற இடத்திலிருந்து, சொல்ற அம்மாளை ஆம்பிள்ளை இல்லாத சமயம் பார்த்து மெரட்டிட வேணும். அந்த அம்மா பயந்து ஓடிப் போவாள். நாங்கள் அலுங்காமே வீட்டுக்குப் போயிடுவோம்.
மறுநாள் பயந்துபோன அம்மா வீட்டிலே முத்தப்பனைக் கூப்பிட்டு, பொங்கல் பூசை யெல்லாம் செய்வாங்க. பூசாரிக்கு நல்ல வரும்படி சிக்கும். எங்களுக்கும் பங்கு உண்டுங்க. இதுவரையிலும் ஒரு அம்மாளாவது எங்களைத் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. எங்கள் சத்தத்தைக் கேட்டவுடன் உளறி யடிச்சுக்கிட்டு ஓடிடுவாங்க. நாங்கள் அம்புட்டோடு போயிடுவோம். நம்ம அம்மா தானுங்க கொஞ்சங்கூடப் பயப்படாமே எதிர்த்து நின்னாங்க. அடேயப்பா ! எப்படி அடிச்சுட்டாங்க பாருங்கையா என்று தலையைக் காட்டி என்னைப் பார்த்தான்.
உடனே அவனை மன்னித்துவிட்டதாகச் சொல்லி வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார். அன்றைக்கு சாயங்காலமே அந்த ரங்கனைக் கூட்டி வந்து மிரட்டினதில் அவனும் வெகு நேரம் கழித்து கட்டையன் சொன்னதை யெல்லாம் ஒப்புக்கொண்டான். அலமேலுவை மிரட்டினதும் முத்தப்பனுடைய ஏவல்தான் என்று சந்தேக மின்றி தெரியவந்தது.
பிறகு இரண்டு நாளைக்குள் பூசாரி முத்தப்பனைக் கைது செய்வதற்கு வேண்டிய கேசை உருவாக்கிக் கொண்டு அவனுக்கு விலங்கு போட முயற்சிகள் எல்லாம் தயாராகிவிட்டன.
முத்தப்பனுக்கும் சமாசாரம் எட்டிவிட்டது. நாலாம் நாள் காலையில் பூசாரி முத்தப்பனுடைய பெண்ஜாதி நல்லம்மாள் தன்னுடைய ஆறு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு என் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கடைசிக் குழந்தை பிரசவமாகி இருபது நாள்தான் இருக்கும். பிரசவமான இளைப் புடன் வெளுத்த மேனியாக நோய் வாய்ப்பட்டவளைப் போல மிகவும் பரிதாபிக்க வேண்டிய நிலையில் இருந் தாள் நல்லம்மாள். நான் அவளை அதற்கு முன் பார்த்ததில்லை.
முத்தப்பன், ஊரில் பெரிய பணக்காரன் ஆனதால் நல்லம்மாள் வீட்டை விட்டு வெளியில் போனதில்லை. வாடி வதங்கிய கோலமாக குழந்தைகளுடன் வந்த அவளை, அவள் யாரென்பதை அறியாமலேயே நான் வரவேற்றேன். அவள் வந்த காரியத்தை நான் விசாரிப் பதற்கு முன்னால், அவள் கையிலிருந்த இருபது நாளையச் சிசுவை என் காலண்டை படுக்கப் போட்டு, தானும் என் காலைப் பிடித்துக் கொண்டு கதறினாள். வெகு நேரம் எனக்குக் காரணம் விளங்கவில்லை.
“அம்மா இந்தக் குஞ்சு குழந்தைகளுக்குக் கொஞ்சம் பாலு வாருங்கம்மா. உங்களுக்குக் கோடிப் புண்ணியம்” என்று தன்னை இன்னாளென்று தெரியப்படுத்தி, எப்படி யாவது ஏட்டு ஐயாவிடம் சிபார்சு பண்ணி, தன் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பாமலிருக்கக் கேட்டுக் கொண்டாள்.
அப்போது என் வீட்டுக்காரர் வீட்டிலில்லை. நான் நல்லம்மாளுக்கு ஆறுதல் பேசி அனுப்பிவிட்டு கணவர் வருகைக்குக் காத்திருந்தேன்.
வந்தார்! குளித்துவிட்டுச் சாப்பிட்டார். தாம்பூலம் போட்டுக் கொண்டு எங்கள் இரண்டு வயசுக் குழந்தையை எடுத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் பார்த்து நான் நல்லம்மாளுக்காக சிபார்சு பண்ணினேன். அவருக்கு என்றுமில்லாத கோபம் வந்துவிட்டது. முத்தப்பனை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமுடியாதென் றும், அந்தக் கச்சேரி விஷயங்களில் நான் தலையிடக் கூடாதென்றும் கண்டித்தார். நான் சளைக்கவில்லை.
திருப்பித் திருப்பி சிபார்சு பேசி நல்லம்மாளுக்காக எப்படி யாவது மன்னிக்க வேணும் என்று பிடிவாதம் செய்தேன். உட்கார்ந்திருந்த என் கணவர் உடனே எழுந்து,உடுப்பு மாட்டிக்கொண்டு “சரி, பிசாசை மிரட்டியாய் விட்டது, என்னை மிரட்ட வந்து விட்டாயாக்கும்,” என்று சொல்லிவிட்டு, சாப்பிட்ட உடன் கொஞ்சம் படுக்கிற வழக்கத்தையும் விட்டு கச்சேரிக்குப் போய்விட்டார்.
நாலுநாள் வீட்டில் என்னோடு சரியாகப் பேசுவது கூட இல்லை. என்னுடைய பேச்சு மட்டும் ஓயவில்லை. சிபார்சு சொல்லிக் கொண்டேயிருந்தேன். அவர் பதிலே சொல்லாமல் வேலையிலேயே கவனமாகயிருந்தார்.
ஐந்தாவது நாள் அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது “நான் பிசாசை மிரட்டின தால் பத்துநாளாக ஓடி ஓடித் தேடின பொன்னோலை தானாகச் சிக்கிகிச்சி?” என்றேன். நாலு நாளாக என்னோடு முகங்கொடுத்துப் பேசாதிருந்த என் கணவர் உடனே சிரித்துவிட்டார். ”உன் ரகளைக்காக அவனை விட்டுத் தொலைக்கிறேன் போ. சும்மா தொண தொண என்று அதையே சொல்லிக் கொண்டிருக்காதே” என்றார்.
மறுநாள் ஊரிலுள்ள சில பெரிய மனிதர்களையும் முத்தப்பனையும் கச்சேரிக்கு அழைத்து வந்தார்கள். முத்தப்பன் சொல்லாததெல்லாம் சொல்லிக் கெஞ்சிக் கொண்டான். அவனுக்கு அபராதம் போட்டு ஊர்ப் பொதுவுக்கு அதைக் கொடுத்துவிடச்சொல்லி இனிமேல் அப்படி யாரையும் மிரட்டுவதில்லை யென்று சத்தியம் செய்யச் செய்து மன்னித்து விட்டார்கள்.
எனக்குப் பரம சந்தோஷமும் திருப்தியு முண்டாகியது.
முற்றும்.
★ ★ ★



