வழிவழி வள்ளுவர்
ரா. பி. சேதுப்பிள்ளை

சிலப்பதிகாரத்திலே வள்ளுவர்


சிலப்பதிகாரம் தமிழ் நாட்டின் சிறந்த கலைச் செல்வம்.

அது முற்காலத் தமிழகத்தின் சீர்மையை விளக்கும் ; முத்தமிழின் பெருமையை முழக்கும். இத்தகைய சிலம்புச் செல்வத்தை வழங்கிய செஞ்சொற் கவிஞர் இளங்கோ வடிகள். அவர் தவச் செல்வமும் தமிழ்ச் செல்வமும் ஒருங்கே பெற்றவர்; திருவள்ளுவர் அருளிய திருக்குறளைப் பொன்னே போற் போற்றியவர்.

காவிரி நாடு

சிலப்பதிகாரத்தின் கதாநாயகியாகிய கண்ணகி பிறந்த நாடு, புலவர் பாடும் புகழுடைய சோழ நாடு. வள்ளுவர் குறித்த வருபுனலும் இருபுனலும் உடையது அவ்வள நாடு. பால் நினைந்து ஊட்டும் தாய்போல் அந் நாட்டை நீரூட்டி வளர்த்தது காவேரி யாறு. அவ் வாற்று நீரை அணைகளால் அணைத்து, கால்களால் எடுத்து, குளங்களில் நிறைத்து, வயல்களில் பாய்ச்சிச் செந்நெல் விளைத்தனர் மருத நில மக்கள்.

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ் காண்பர்
அலகுடை
நீழ லவர்

என்று பயிர்த் தொழிலாளர் பெருமையைத் திருக்குறள் பாடிற்று. ‘வேளாண்மையால் வறியவர் பசி நோய் ஒழியும்;

‘வேந்தர் படைத்திறம் ஓங்கும்’ என்று இக்குறளில் வள்ளுவர் உரைத்த வாய்மையை ஏற்றிப் போற்றுகின்றார் இளங்கோவடிகள்.

பரப்பு நீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை
விளைப்போர்

என்ற சிலப்பதிகார அடிகளில் பயிர்த் தொழில் செய்யும் மக்களால் இரவலரும் புரவலரும் அடையும் நன்மையைப் பாராட்டுகின்றார் கவிஞர்.

வேளாண்மையோடு சான்றாண்மையும் செல்வச் செழுமையும் உடையதே நாடு என்று பாடினார் திருவள்ளுவர்.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும்
சேர்வது நாடு

என்பது அவர் வாக்கு. கல்வி அறிவு ஒழுக்கங்களில் மிக்காரே தக்கார் எனப்படுவார். இத்தகைய மாந்தரை உடைய நாடு பெருமை சான்ற நாடு என்பது திருவள்ளுவர் கருத்து. இவ்வுண்மையை உணர்ந் தன்றோ ”சான்றோர் பலர் யான் வாழும் ஊரே” என்று பெருமிதமுற்றுப் பேசினார், ஒரு தமிழ்ப் புலவர். பாரத நாட்டுப் பொதியமலையும், இமயமலையும், புகார் நகரும் ஆன்றோர் வாழுமிடமாதலால் அழியாத் தன்மை வாய்ந்தன என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.

வாணிக வளம்

இனி, வள்ளுவர் குறித்த ‘தாழ்விலாச் செல்வம்’ வாணிகத்தால் வரும் என்பது தமிழ் நாட்டார் கொள்கை. முன்னாளில் வாணிகத்தால் வளம் பெருக்கிய நகரங்கள் பல தமிழ் நாட்டில் இருந்தன. அவற்றுள்ளே தலை சிறந்தது காவிரிப்பூம்பட்டினம். காவிரியாறு கடலொடு கலக்கு மிடத்தில் அழகிய துறைமுக நகரமாக விளங்கிற்று அப் பட்டினம். கடல் வழியாகவும் தரை வழியாகவும் அந் நகரில் வந்து சேர்ந்த பொருள்களைப் பட்டினப்பாலை என்னும் பழந்தமிழ்ப் பாட்டிலே காணலாம். இத்தகைய சீர்மை வாய்ந்த பட்டினத்தை,

‘உரைசால்சிறப்பின்அரைசுவிழைதிருவில்
பாதர் மலிந்த பயங்கெழு மாநகர்’

என்று புகழ்ந்து பாடுகின்றார் இளங்கோவடிகள். கடல் கடந்து, பிற நாடுகளிற் போந்து, வாணிகம் செய்து வளம் பெருக்கிய பரதர் அந் நகரில் நிறைந்திருந்தனர். பட்டினக் கடற்கரையில் பிற நாட்டு வணிகர் , மாட மாளிகை யமைத்துத் தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்தனர்.

இத்தகைய வளமார்ந்த நகரில் கோவலன் தந்தை யாகிய மாசாத்துவானும் கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கனும் வணிக மன்னராய் விளங்கினர். வணிகர் குலத்திற்குரிய ஒழுக்க நெறியில் வழுவாது நின்று பொருள் ஈட்டினர் அவ் விருவரும்.

வாணிகம் செய்வார்க்கு வணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

என்று வணிகர் குலத்திற் குரிய நெறியை விளக்கிப் போந்தார் வள்ளுவர். பிறர் பொருளைத் தம் பொருள் போல் பேணுதலே வாணிகத்திற்கு அழகு. பண்டமாற்றுச் செய்யும் பொழுது, மிகைப்படக் கொள்வதும் குறைப்படக் கொடுப்பதும் குற்றமாகும். இக் குற்றத்தின் நீங்கி வள்ளுவர் வகுத்த அறநெறியில், வாழ்ந்த பூம்புகார் வணிகரை , ” குலத்திற் குன்றாக் கொழுங் குடிச் செல்வர்” என்று பாராட்டினார் இளங்கோவடிகள்.

நகரச் சிறப்பு

சோழ நாட்டின் செழுமை யெல்லாம் அதன் தலை நகரத்திலே சிறந்து விளங்கிற்று. காவிரி நாட்டின் விளை பொருள்களும், கடல் வழியாக வந்த பல்வகைப் பொருள்களும் நிறைந்து,

பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு
இறை
ஒருங்கு நேர்வது நாடு

என்னும் திருக்குறளுக்கு ஓர் எடுத்துக் காட்டாக நின்றது அந் நகரம். பல நாடுகள் பொறுத்த பார மெல்லாம் ஒருங்கே சேர்ந்து வந்தாலும் தளராது தாங்கும் தகுதி வாய்ந்த நாடே சிறந்த நாடு என்பது இக்குறளின் கருத்து. பகையரசரின் படையெடுப்பாலும், பஞ்சத்தின் கொடுமையாலும், அரசாட்சியின் அழிம்பினாலும் இன்னோரன்ன பிற காரணங்களாலும் ஒரு நாட்டு மக்கள் குடிபெயர்ந்து அயல் நாட்டில் சென்று சேர்வதுண்டு. அன்னாரையும் ஆதரிக்கும் வளமுடைய நாடே நன்னாடு என்பது வள்ளுவர் கருத்து. இக் கருத்தைத் தழுவி,

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவா வளத்த தாகி

காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கிற்றென்று சிலம்பு பாடிற்று.

இன்ப வாழ்க்கை

சிலப்பதிகாரத்தில் கதாநாயகியாகிய கண்ணகி, காவிரிப் பூம்பட்டினத்திலே பிறந்து வளர்ந்தாள். ஒத்த குலமும் நலமும் வாய்ந்த கோவலனை மணந்தாள். இடம் பொருள் ஏவல் என்னும் மூன்றும் குறைவறப் பெற்ற கோவலனும் கண்ணகியும் இன்புற்று வாழ்ந்தனர்.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி
கண்ணே யுள்

என்ற குறளின் கருத்தை உட்கொண்டு, ”மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே” என்று தன் காதல் மனையாளைப் பாராட்டினான் கோவலன்.

இன்னும்,

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல்
கேளா தவர்

என்ற வள்ளுவர் வாக்கை உள்ளத்திற் கொண்டு அவள் பேச்சின் இனிமையைப் புகழலுற்றான்:

அளிய தாமே சிறுபசுங் கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக்
கிளவிக்கு வருந்தின

என்று அழகுற மொழிந்தான். “மாதே! கிளியின் மொழியே செவிக்கு இன்பம் என்பர். அக் கிளியும் உன்னைப்போல் பேசமாட்டாது வாயடங்கிற்றே! குழலின் ஒலியையும், யாழின் ஒலியையும் அமிழ்தின் சுவையொடு கூட்டிக் குழைத்தாற் போன்ற இனிமை வாய்ந்தது உன்னுடைய மழலை மொழி” என்று புகழ்ந்தான் கோவலன். இப் புகழுரையில் திருக்குறளின் சொல்லும் பொருளும் அழகுற விளங்குகின்றன.

மாலைப்பொழுது

இத் தகைய இன்ப வாழ்க்கைக்கு ஓர் இடையூறு நேர்ந்தது. பூம்புகார் நகரில் நிகழ்ந்த அரங்கேற்று விழாவில், இளமையும் அழகும் வாய்ந்த மாதவி யென்னும் பொதுமகள் நாட்டியமாடினாள். கோவலன் அந்த ஆடலைக் கண்டான்; பாடலைக் கேட்டான்; மாதவியின் அழகிலே மயங்கினான்; அன்றே தன் மனைவியை மறந்தான்; மாதவியின் மையலிலே தாழ்ந்தான்; அவளை மகிழ்விப்பதற்காக அளவிறந்த பொருளைச் செலவிட்டான். தன்னந்தனியளாய் இருந்து கவலையுற்றாள் கண்ணகி. நாள்தோறும் அந்தி மாலையில் ஆறாத் துயரடைந்தாள். காதல் என்னும் பூ காலையில் அரும்பும்; பொழுது செல்லச் செல்ல முதிர்ந்து போதாகும்; மாலையில் மலரும் என்று திருக்குறள் கூறுகின்றது.

காலை அரும்பி, பகலெல்லாம் போதாகி
மாலை
மலரும் இந் நோய்

என்பது வள்ளுவர் வாய்மொழி. இத் தன்மை வாய்ந்த அந்திமாலை வந்த பொழுது கோவலனோடிருந்த மாதவி அடைந்த இன்பத்தையும், அவனைப் பிரிந்திருந்த கண்ணகி அடைந்த துன்பத்தையும் உணர்த்தப் போந்த இளங்கோவடிகள்,

கூடினார் பால் நிழலாய், கூடார்பால் வெய்ய தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வானூர் மதிவிரிந்து
போதழ்விக்கும்
கங்குற் பொழுது

என்று பாடினார். போதாக நிற்கும் பூக்கள் மாலைப் பொழுதில் மலரும் என்று திருவள்ளுவர் கூறிய கருத்தைத் தழுவி எழுந்தது இப் பாட்டு. வெண் ணிலாவின் ஒளி விரிந்து, போதாக நின்ற பூக்களின் கட்டவிழ்த்து இதழ் விரிக்கும் அந்திப் பொழுதில் மாதவி இன்பத்தில் திளைத்தாள்; கண்ணகி துன்பத்தில் ஆழ்ந்தாள் என்பது இதன் கருத்து.

பழுதுற்ற மனையறம்

கோவலன் நெறி தவறி நடந்ததனால் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றையும் இழந்து நின்றாள் கண்ணகி. ஆயினும், கணவனே தெய்வம் என்ற கொள்கையில் அவள் சிறிதும் தளர்ந்தாளில்லை; ”கண்டார் வெறுப்பனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை யல்லால் அறியாக் குலமகள்” என்று ஆன்றோர் அருளிய உண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தாள். எனினும், இல்லறம் நடைபெறாது ஒழிந்ததே என்ற வருத்தம் அவள் உள்ளத்தை விட்டு அகலவில்லை.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான்
என்பான் துணை

என்று வள்ளுவர் விதித்தவாறு அறவோரையும் துற வோரையும் வறியோரையும் ஆதரித்ததற்குரிய மனை யறம் முட்டுப்பட்டதே என்று அவள் மயக்க முற்றாள்.

அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை

என்று கூறுமாற்றால் அவள் மனப்பான்மை விளங்கும்.

கண்ணகியின் கண்ணீர்

இன்பத்துறையில் மூழ்கிய கோவலன் கைப் பொருளெல்லாம் இழந்தான். கண்ணகியின் அணி கலன்களும் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சென்றொழிந்தன. அவள் காலணியாகிய சிலம்பொன்றே எஞ்சி நின்றது. இந்த நிலையில் கோவலனுக்கும் மாதவிக்கும் பிணக்கம் உண்டாயிற்று; கடற்கரையில் மாதவி பாடிய கானல் வரிப்பாட்டு அவ்விருவரையும் பிரித்தது. ‘மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்’ என்று மாதவியை வெறுத்து நீத்த கோவலன் மீண்டும் கண்ணகியிடம் போந்தான்; தன் சிறுமையை நினைந்து சிந்தை தளர்ந்தான்; வாழ்ந்து கெட்ட வள நகரில் இருப்பதற்கு நாணி, கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டான்; அந் நகரில் அவளுடைய சிலம்பை விற்றுப் பிழைப்பிற்கு வழி தேடக் கருதினான்; ஒற்றைச் சிலம்பை எடுத்துக்கொண்டு கடைத்தெருவிற் சென்றான். அங்கு அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் என்று அடாப்பழி சுமத்தி, அரசன் ஆணையால் கோவலனைக் கொலை செய்தனர் காவலாளர். கணவனுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்தாள் கண்ணகி; மனந் துடித்தாள்; கண்ணீர் வடித்தாள்; அறம் எனக்கு இல்லையோ என்று அலறினாள்; தலைவிரி கோலமாக அரண்மனையை நோக்கி நடந்தாள்; செல்லும் வழியெல்லாம் கண்ணீர் சொரிந்தாள்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத்
தேய்க்கும் படை

என்றார் திருவள்ளுவர். ஏழையர் வடிக்கும் கண்ணீ ரால் விளையும் தீமையை அறிந்த மதுரை மாநகரத்தார் வீதியின் இரு மருங்கும் நின்று கண்ணகியைக் கண்டு கலங்கினார்கள். அவர்களைப் பார்த்து, “நிறையுடையப் பத்தினிப் பெண்டிர்காள் ! கள்வனோ அல்லன் என் கணவன் !” என்று கதறினாள் கண்ணகி. அவள் கோலத்தைக் கண்டு குலுங்கிற்று மதுரை மாநகரம்.

அல்லல் உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக்
களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி
வளையாத
செங்கோல் வளைந்தது

என்று மதுரையார் வருந்தியதாகச் சிலம்பு பாடிற்று.

வீரக் கற்பு

மதுரை மாநகரில் கோவலனைப் பறி கொடுத்த பொழுது கண்ணகியின் அறக் கற்பு மறக் கற்பாயிற்று. புகார் நகரில் பொறையிருந்து ஆற்றிய கண்ணகி மதுரை மன்னனது முறையிகந்த செயலைக் கண்டு சீறினாள்; தீவேந்தன் தனைக்கண்டு இத்திறங் கேட்பேன்’ என்று துணிந்தாள். அவள் வாய் மொழியில் கற்பென்னும் திண்மை புலனாகின்றது.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண்
டாகப் பெறின்

என்றார் திருவள்ளுவர். மன்னனைக் காணச் சென்ற கண்ணகி அத் திண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாயினாள்; அரண்மனை வாயிலைக் காத்து நின்ற சேவகனைக் கண்டாள். சீற்றம் பொங்கி எழுந்தது. குற்ற மற்ற கோவலனைக் கொன்ற கொடுங்கோல் மன்னனின் சேவகன் அல்லனோ இவன் என்று அவள் மனம் கொதித்தாள்;

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை
பிழைத்தோன் வாயிலோயே

என்று வல்லோசை செறிந்த மொழிகளால் அவனை விளித்தாள் ; அரசனைக் காண வேண்டும் என்று அறிவித்தாள். அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்று அரியாசனத்தில் கோப்பெருந்தேவியோடு அமர்ந்திருந்த மன்னன் முன்னே நின்றாள் கண்ணகி. அழுத கண்ணும், அவிழ்ந்த தலையும், மாசடைந்த மேனியும், மணிச் சிலம்பேந்திய கையும் உடையவளாய் நின்ற கண்ணகியைக் கண்ட பொழுது துணுக்கமுற்றான் காவலன்.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைக்கோன்
கண்டளவே
தோற்றான்

எனும் சிலப்பதிகார அடிகளில் கற்பின் திண்மையைக் காணலாம். அப்போது அரசன் அவளை நோக்கி, ”கண்ணீ ர் வடித்து நிற்கும் மாதே! நீ யார்?” என்று வினவினான். அதற்கு மாற்ற முரைக்கப் போந்த கண்ணகி, நெறிமுறை வழுவாத சோழ மன்னன் ஆண்ட புகார் நகரத்தில் பிறந்தவள் என்று தன்னை அறிவித்தாள்

வாயின் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப்
புகார் என் பதியே

என்று பேசினாள்.

இறையும் முறையும்

கண்ணகி குறித்த சோழ மன்னன் வள்ளுவர் கூறிய அரச நீதிக்கு ஒரு சான்றாக விளங்கினான்.

இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும்
முட்டாச் செயின்

என்பது வள்ளுவர் வாக்கு. ‘மாநிலத்தையெல்லாம் மன்னன் காப்பான்; அம் மன்னனை நீதி காக்கும்’ என்றார் வள்ளுவர். ‘நீதி செலுத்துங்கால் இன்னான் இனியான் என்று பார்க்கலாகாது; குலத்தையும் நலத்தை யும் கருதலாகாது; எல்லார்க்கும் நீதி ஒன்றே’ என்ற நேர்மையான உணர்ச்சியோடு மன்னன் முறை செய்தல் வேண்டும்; அதுவே முட்டாமல் நீதி செலுத்தும் முறையாகும் இக்கருத்தை மனத்திற் கொண்டு தவறு செய்தவர் எவரே யாயினும் தயக்கமின்றித் தண்டம் விதித்தனர் தமிழ் வேந்தர். அன்னவருள் தலைசிறந்தவன் கண்ணகி எடுத்துரைத்த சோழ மன்னன். ஒரு பசுவின் கன்றைக் கொன்ற அரசிளங் குமரனைத் தானே கொன்று முறை செய்த அம் மன்னனை மாநிலம் வியந்து புகழ்ந்தது. அரச நீதிக்கு அவன் அருஞ்செயலே எடுத்துக் காட்டாயிற்று. கணவனை இழந்த கண்ணகி பாண்டி மன்னனிடம் வழக்குரைக்கச் சென்றாற் போலவே சோழ மன்னனிடம் முறையிடச் சென்றது கன்றை யிழந்த பசு. கண்ணீர் வடித்து நின்ற பசுவின் குறையறிந்து முறை செய்த காவலனைப் போல், கண்ணீர் உகுத்து ஒரு பெண்ணின் குறையறிந்து முறை செய்தல் பாண்டியன் கடமை என்று குறிப்பாக உணர்த்தினாள் கண்ணகி.

கொலைத் தண்டனை

அத்தகைய செங்கோல் மன்னன் அரசு புரிந்த சோழ நாட்டில், மாசாத்துவானுக்கு மகனாய்ப் பிறந்து, ஊழ்வினைப் பயனாய் மதுரையிற் போந்து, சிலம்பு விற்கச் சென்றவிடத்தில் அரசன் ஆணையால் கொலையுண்டு இறந்த கோவலன் மனைவி என்று தன்னை அறிவித்தாள் கண்ணகி. அப்போது, கோவலனைக் கள்வன் என்றே கருதியிருந்தான் காவலன். கள்வனைக் சொல்லுதல் காவலன் கடமை என்று நீதி நூல் கூறுகின்றது.

கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்
டதனொடு நேர்

 என்றார் வள்ளுவர். நாட்டில் களவு செய்பவர், சூறை யாடுபவர், கொலை புரிபவர் முதலியோர்க்குக் கொலைத் தண்டம் விதித்தல் அரசனுடைய கடமை என்று வள்ளுவர் கூறிய முறையில்,

கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேற்
கொற்றம் காண்

என்று கண்ணகியிடம் நீதிமுறையை எடுத்துரைத்தான் பாண்டியன். அம் மொழி கேட்ட கண்ணகியின் உள்ளம் கொதித்தது. கற்பென்னும் திண்மையால் மீண்டும் பேசலுற்றாள் : ”நற்றிறம் படராக் கொற்கை வேந்தே! என் கணவன் கையில் இருந்தது களவாடிய சிலம்பன்று; அஃது என் சிலம்பு; அதனுள்ளே அமைந்த பால் மாணிக்கம்” என்றாள்; உடனே அச் சிலம்பை எடுத்து வந்தான் அரசன். உணர்ச்சி வசப்பட்ட கண்ணகி அதை உடைத்தாள். உள்ளே யிருந்த மாணிக்கம் துள்ளி எழுந்து மன்னன் முன்னே விழுந்தது.

அதைக் கண்டு திடுக்கிட்டான் அரசன்; கோவலன் கள்வனல்லன்; அவனுயிரைக் கவர்ந்த தானே கள்வன் என்று உணர்ந்தான்.

“யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என் முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்”

என்று மயங்கி விழுந்தான்; மாண்டான்.

வினைப் பயன்

அப்பொழுது அவனருகே யிருந்த கோப்பெருந் தேவி, நெஞ்சம் குலைந்து நடுங்கினாள்; கணவனையிழந்து கடுந் துயருற்ற கண்ணகிக்கு ஆறுதல் கூறும் வகை யறியாது அவள் அடிகளில் விழுந்து தொழுதாள். மன்னவன் தீவினையால் இறந்துபட்டான் என்று தெள்ளிதின் உணர்ந்தாள் கண்ணகி;

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல்
தாமே வரும்

என்ற வள்ளுவர் வாக்கின்படி கோவலனைக் கொன்ற தீமையே விரைந்து வந்து பாண்டியன் உயிரைக் கவர்ந்தது என்னும் உண்மையைக் கோப்பெருந் தேவியிடம் எடுத்துரைத்தாள் :

கோவேந்தன் தேவி! கொடுவினை யாட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல்
காண்குறூஉம் பெற்றிய காண்

”பாண்டிமா தேவி கேள் : பாவியேன் ஒன்று மறியாத பேதையே. ஆயினும் காலையில் ஒருவனுக்குக் கேடு செய்தவன் மாலையில் கேடுறுவான் என்பதை இன்று கண்கூடாகக் கண்டோம்” என்று கூறினாள். கற்பிற் சிறந்த கோப்பெருந்தேவியும் கணவன் இறந்த துயரத் தால் உயிர் துறந்தாள்.

‘நல்வினை செய்தவர் நன்மையடைவர்; தீவினை செய்தவர் தீமையுறுவர்’ என்பது அறநூலோர் கொள்கை . தீவினையால் வரும் துன்பத்தைத் தெளிவுறக் கூறுவது திருக்குறள்.

எனைப்பகை உற்றாரும் உய்வர், வினைப்பகை
வீயாது
பின் சென்று அடும்

என்பது வள்ளுவர் வாக்கு. இவ் வாக்கை ஆதரித்து, ”ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்றார் இளங்கோ வடிகள். காவலன் தவறிழைத்ததும், கோவலன் கொலையுண்டதும் கண்ணகி துயருழந்ததும் வினைப் பகையால் நிகழ்ந்தன என்று சிலப்பதிகாரத்தில் விளக்கப்படுகின்றது.

“தொல்லை வினையால் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல
உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ

என்று வல்வினையால் துன்புற்ற நல்லரசனை வாழ்த் தினார் இளங்கோவடிகள்.

கற்பின் பெருமை

வீர மாபத்தினியாகிய கண்ணகி மதுரையை விட்டு நீங்கி, மேற்றிசை நோக்கிச் சென்று மலை நாட்டை அடைந்தாள், அங்குள்ள திருச்செங்குன்று என்னும் மலையேறி ஒரு வேங்கை மரத்தின் நிழலில் நின்றாள். அப்பொழுது வான ஊர்தி ஒன்று அவ்விடத்தை நோக்கி வந்தது; அவளை ஏற்றிக்கொண்டு விண்ணுலகம் சென்றது. வானவர் மலர்மாரி பெய்தனர்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்ற வள்ளுவர் வாய்மொழியை நினைத்து இளங் கோவடிகள் கற்பின் செல்வியைப் போற்றுகின்றார்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து

என்பது அவர் திருவாக்கு.

மான வீரம்

மலை நாடடைந்து தெய்வீகமுற்ற கண்ணகியின் வரலாற்றை அறிந்தான் சேரநாட்டு அரசனாகிய செங்குட்டுவன்; தன் நாட்டில் அவ் வீர மாபத்தினிக்குக் கோவில் அமைத்து விழா வெடுக்க விரும்பினான்; இமய மலையில் சிலையெடுத்து, கங்கையாற்றில் நீராட்டி, வஞ்சி மாநகரில் கண்ணகியின் திருவுருவை நிறுவ ஆசைப் பட்டான். அதற்காக வடநாட்டிற்குச் செல்லுமுன்னே ஒரு செய்தி சேரன் செவிக்கு எட்டியது. கனகன், விசயன் என்னும் சிற்றரசர் இருவர் வடநாட்டரசர் பலர் குழுமியிருந்த சபையில் தமிழ் நாட்டரசருடைய வீரத்தைப் பழித்துரைத்தனர் என்று கேள்வியுற்ற சேரன் கடுஞ்சீற்றங் கொண்டான். மான வீரம் அவன் மனத்தில் முறுகி எழுந்தது.

“யாகாவார்ஆயினும்நாகாக்ககாவாக்கால்
சோகப்பர்சொல்இழுக்குப்பட்டு”

என்ற வள்ளுவர் வாக்கின் உண்மையை அச் சிற்றரசர்க்கு உணர்த்த முற்பட்டான்; வாய் வீச்சிலே சிறந்த இருவரையும் வாள் வீச்சால் வென்று அடக்க விழைந்தான். தமிழ்ப்படை திரண்டு எழுந்தது. அதன் தலைவனாக வஞ்சிமாலை சூடிச் சென்றான் வீரன் செங்குட்டுவன். அப் படையெடுப்பின் நோக்கத்தை அவன் வாய்மொழியால் விளக்குகின்றது சிலப்பதிகாரம்.

காவா நாவின் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அருந்தமி ழாற்றல் அறிந்திலர் ஆங்கெனக்
கூற்றங்
கொண்டு இச் சேனை செல்வது

என்று கூறினான் சேர மன்னன்.

வடநாட்டில் தமிழ்ச் சேனைக்கும் வடவர் சேனைக்கும் போர் நிகழ்ந்தது. அப் போரில் எளிதாக வெற்றி பெற்றறு தமிழ்ச் சேனை. வாய்வீரம் பேசிய கனகனும் விசயனும் சேரன் கையில் சிக்கிக்கொண்டனர். கண்ணகியின் திருவுருவம் செய்வதற்காக இமயமலையில் எடுத்த கல்லை, அவ்விருவர் தலையிலும் ஏற்றினான் தமிழ் வேந்தன். வஞ்சிமாநகர் வரையும் அதைச் சுமந்து வந்தனர் வடவாரியர். இங்ஙனம் தலையாலே சிலை சுமந்து அன்னார் இழுக்குற்ற செய்தியை வள்ளுவர் வாக்கைத் தழுவிச் சிலப்பதிகாரம் விரித்துரைக்கின்றது.

அறவுரை

சேரன் செங்குட்டுவன் தமிழ் நாட்டுப் பெரு வீரன்; பல போர்க்களங்களில் வெற்றிமாலை சூடிப் புகழ் பெற்றவன். பதிற்றுப் பத்து முதலிய பழந்தமிழ் நூல்கள் அவன் சிறப்பினை விரித்துக் கூறும். இத்தகைய மறப்போர் மன்னனுக்கு அறிவுரை கூற ஆசைப்பட்டான் மாடலன் என்னும் அறவோன்.

இவ்வுலகில் நிலையற்ற பொருள்களை நிலையாகக் கருதலாகாது என்ற கருத்தை,

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி
வாண்மை கடை

என்று கூறினார் வள்ளுவர். இக்குறளில் ‘நில்லாதவை’ என்று வள்ளுவர் சொல்லிய பொருள்கள் எவை என்ற வினாவிற்கு விடை தருகின்றது சிலப்பதிகாரம். யாக்கை நில்லாது; செல்வம் நில்லாது; இளமை நில்லாது என்று மாடலன் வாயிலாகக் கூறுகின்றார் இளங்கோவடிகள், சேர மன்னனை நோக்கி

வையம் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை

என்று செவியறிவுறுத்தத் தொடங்கினான் மாடலன், “அரசே! பெருமை சான்ற உன் குலத்தில் பிறந்து, செயற்கரிய செய்த வீரருள் எவரேனும் இன்று வாழ் கின்றனரா? அரும் புகழ்பெற்ற அம் மன்னர் அனை வரும் இவ்வுலகை விட்டு அகன்றனரே! அதனால் யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தா யல்லையோ? செல்வம் நில்லாது என்பதை உன்னோடு போர் புரிந்து தோல்வியுற்ற கனக விசயர் வாழ்க்கை காட்டுகின்ற தன்றோ ?

செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரில்
கண்டனை
அல்லையோ காவல் வேந்தே

இளமை நில்லாது என்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ? மன்னர் மன்னனாகிய நீயும் முதுமையுற்றாயே! யாக்கையும் செல்வமும் இளமையும் நிலையற்ற இவ்வுலகில் அழியாத பொருள் அறம் ஒன்றே” என்று அறிவுரை பகர்ந்தான். மேலும்,

அன்றறிவாம் என்னாது அறம் செய்க, மற்றது
பொன்றுங்கால்
பொன்றாத் துணை

என்ற வள்ளுவர் வாய்மொழியை மாடலன் வாயிலாக விளக்கலுற்றார் இளங்கோவடிகள் . அழியாத் தன்மை வாய்ந்த அறத்தினை இன்றே செய்தல் வேண்டும். நாளைச் செய்வோம் என்றிருத்தல் ஆகாது. ஏனெனில்,

நாளைச் செய்குவம் அறம் எனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர்
உலகில் முழுவதும் இல்லை

என்று சிலப்பதிகாரம் விளக்குகின்றது.

கற்பின் செல்வியாகிய கண்ணகியின் கதையை ஒரு முத்தமிழ்க் காப்பியமாக உருப்படுத்திய இளங் கோவடிகள் மூன்று சிறந்த உண்மைகளை அதன் வாயிலாக உணர்த்திப் போந்தார். நீதிநெறி தவறிய அரசரை அறமே ஒறுக்கும் என்பதும், மாசிலாக் கற்புடைய மாதரை மண்ணும் விண்ணும் வணங்கும் என்பதும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும், சிலப்பதிகாரத்தில் உணர்த்தப்படுகின்றன. இம் மூன்றையும் முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னே போற் போற்றும்’ தமிழிலக்கிய மரபைத் தழுவி, வள்ளுவர் வாய்மொழியை விளக்கியருளினார் இளங்கோவடிகள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *