
வழிவழி வள்ளுவர்
ரா. பி. சேதுப்பிள்ளை
சிந்தாமணியிலே வள்ளுவர்
சிந்தாமணியின் கதாநாயகன் சீவகன். அவனுடைய தந்தையாகிய சச்சந்தன் ஏமாங்கத நாட்டு மன்னவன். இளமையிலேயே அரசாளும் உரிமையைப் பெற்றான் அம் மன்னன். அரசாங்கத்தில் கட்டியங்காரன் என்பவன் முதல் அமைச்சனாக விளங்கினான். அவன் மதிநலம் வாய்ந்தவன்; சூழ்ச்சியில் வல்லவன். அவனோடு மற்றும் சில அறிஞரும் அமைச்சராயிருந்தனர். அவர்களுள் ஒருவன் நிமித்திகன் என்னும் பெய ருடையவன்; கல்வி கேள்விகளிற் சிறந்தவன்; செந் நெறி திறம்பாத சீலன்; உண்மையை நேராக எடுத் துரைக்கும் உரவோன். இத் தகைய அமைச்சரைத் துணைக்கொண்டு சச்சந்தன் செம்மையாக அரசு புரிந்தான்.
அம் மன்னனுக்குத் திருமணம் நிகழ்ந்தது. குலத்திலும் நலத்திலும் தலைசிறந்த விசயை என்னும் மங்கை அவன் மனைவியாயினள். அழகெலாம் ஒருங்கே வாய்ந்த அந் நங்கையிடம் அளவிறந்த காதல் கொண்டான் அம் மன்னன். அரசாட்சியில் அவன் கருத்துச் செல்லவில்லை; அந் நிலையில் முதலமைச்சனாகிய கட்டியங்காரனைத் தனியாக அழைத்து, ” அன்பனே! கணப்பொழுதும் என் காதலியைப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால், அரசாளும் பொறுப்பை நீயே ஏற்றுக் கொள்க” என்று கூறினான். அவ்வுரை கேட்ட அமைச்சன் உள்ளத்தின் உள்ளே மகிழ்ந்தான்; ஆயினும், அதனைப் புறத்தே காட்டிக் கொள்ளாது, அரசன் கருத்திற்கு இசைந்து நாடாளும் பணியை மேற் கொண்டான்.
அமைச்சர் கடமை
அரசன் செய்கையை அறிந்தான் நிமித்திகன்: நெஞ்சம் துடித்தான்; காதலி மூழ்கிக் கருத்தழிந்தான் காவலன் என்று வருந்தினான்; அறிவிழந்து தவறு செய்த அரசனிடம் போந்து அறிவுரை கூறுதல் தன் கடமை என்று எண்ணினான்.
“அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்“
என்று திருக்குறள் விதித்த வண்ணம் மன்னனிடம் துணிந்து சென்று, ”ஐயனே! மாநிலமாளும் உரிமையை மற்றொருவனிடம் ஒப்புவித்தல் நன்றன்று; அதனால் உனக்கே தீங்கு வரும்” என்று உறுதியாக எடுத் துரைத்தான். அவன் சொல்லிய சொல் மன்னன் செவியில் ஏறவில்லை. தன் கருத்திற்கு மாறாகப் பேசிய அமைச்சனை மன்னன் மனமார வெறுத்தான்; முதலமைச்சனிடம் அழுக்காறு கொண்டு அவன் இழுக்குரை பகர்ந்தான் என்று எண்ணினான்; வெறுப் புடன் அவனை நோக்கி, ”அமைச்சனே! கட்டியங்காரன் எனக்கு உயிராக உள்ளவன்; என்னினும் இனியார் அவனுக்கு யாரும் இல்லை. போர் பல புரிந்து அவன் என் பகைவரை வென்றான்; புகழ் தந்தான். அவனுக்குச் செய்யத்தக்க சிறப்பினை நான் செய்தேன். அதற்கு மாறாக நீ ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உன் அளவில் நீ அமைக” என்று கடுமையாகப் பேசினான்.
அரசன் சொல்லிய சொற்களை அமைதியாகக் கேட்டான் நிமித்திகன்; கேடு வரும் பின்னே , மதி கெட்டு வரும் முன்னே ‘ என்னும் முதுமொழிக்கு ஓர் எடுத்துக் காட்டாக நின்ற அரசனை நோக்கி,
“மூரித்தேன் தாரினாய்! நீ முனியினும் உறுதி நோக்கிப்
பாரித்தேன் தரும் நுண்ணூல் வழக்கு அது ஆதல் கண்டே”
என்று பேசினான்; ”மன்னனே! என் சொல்லை நீ செவியிற் கொள்ளாது சீற்றமுற்றாய். ஆயினும், உனக்கு உறுதி பயக்கத் தக்க அறிவுரை கூறுதல் என் கடமை. அறநூல் அவ்வாறு கூறுகின்றது. என் கடமையை நிறைவேற்றிவிட்டேன். இப்பொழுதே இந் நாட்டை விட்டுச் செல்கின்றேன்” என்று சொல்லி அவனை விட் டகன்றான். இத் தகைய நல்லமைச்சன் வாயிலாகத் திருக்குறளைத் தரும் நுண்ணூல்’ என்று போற்று கின்றது சிந்தாமணி.
கரவாடும் வன்னெஞ்சனாகிய கட்டியங்காரன் இன்பத்துறையில் மூழ்கிய மன்னனை வஞ்சித்து ஒரு நாள் அரண்மனையை வளைந்து கொண்டான். அதுகண்டு திடுக்கிட்டான் அரசன்; கருவுற்றிருந்த காதலியை ஓர் ஆகாய விமானத்தில் ஏற்றிக் கோட்டைக்கு வெளியே அனுப்பிவிட்டுப் பகைவனோடு கடும் போர் புரிந்து மாண்டான். அரசியை ஏற்றிச் சென்ற விமானம் இராப்பொழுதில் ஒரு சுடுகாட்டில் விழுந்தது. விழுந்த அதிர்ச்சியில் அரசி ஓர் ஆண் மகவை மயானத்தில் ஈன்று மயக்கமுற்றாள். அம்மகவை எடுத்து வளர்த்தான் அவ் வழிப்போந்த ஒரு வணிகன்; அழகின் கொழுந் தெனத் திகழ்ந்த அம் மைந்தனுக்குச் சீவகன் என்று பெயரிட்டான்; பல்கலையும் படைக்கலமும் பயிற்றினான். கண்டோர் கண்ணையும் கருத்தையும் கவரும் கட்டிளங் காளையாகத் திகழ்ந்தான் சீவகன்.
புதல்வர் தரும் புகழ்
ஒரு நாள் மலைச் சாரலில் மேயச் சென்ற நகரப் பசுக்களை யெல்லாம் அங்கிருந்த வேடர்கள் வளைத்துக் கவர்ந்து கொண்டார்கள். மாடு மேய்க்கச் சென்ற இடையர் , மனம் உளைந்து நாட்டின் காவலனாகிய கட்டியங்காரனிடம் போந்து முறையிட்டனர். ‘அழிம்பு செய்த வேட்டுவரை வென்று பசுக்களை மீட்டு வருக’ என்று படைத் தலைவரை ஏவினான் காவலன். அப் பணி தலைமேற்கொண்டு எழுந்தது மன்னன் சேனை. மலையடி வாரத்தில் இரு திறத்தார்க்கும் போர் நிகழ்ந்தது. இறுதியில், மன்னன் படை தோல்வியுற்று மீண்டது. அது கண்டு வருத்தமுற்ற இடையர் குலத்தலைவனாகிய நந்தகோன், பசுக்களை மீட்டுத் தரும் வீரனுக்குப் பேரழகியாகிய தன் மகளை மணஞ் செய்து கொடுப்பதாக முரசறைவித்தான். அப்போது சீவகன் போர்க்கோலங் கொண்டு எழுந்தான். வேடர் இருந்த மலையடி வாரத்திற் போந்து அம்பு மாரி பொழிந்தான். அவன் திறமறிந்த வேடர் அஞ்சி ஓடினர். அவருள் ஒருவரையும் வடுப்படுத்தாது பசுக்களை மீட்டுக் கொணர்ந் தான் சீவகன். மன்னன் சேனைசெய்ய மாட்டாத செயலைத் தனியொருவனாகச் செய்து முடித்த சீவகனை வாயார வாழ்த்தினர் நகர மக்கள். கன்றுகளின் துயரம் தீர்த்து நகரத்தின் மானத்தையுங்காத்த வீரனை வரவேற்பதற் காக வீதியின் இருமருங்கும் நிறைந்து நின்றனர் நகர மாந்தர். அவ்வழியாக வந்தான் சீவகன். அவன் நடையைப் புகழ்ந்தார் சிலர்; உடையைப் புகழ்ந்தார் சிலர் ; அவன் அழகைப் பாராட்டினார் சிலர்; அருளைப் பாராட்டினார் சிலர். “இவன் தாய் என்ன மாதவம் செய்தாளோ” என்று தாய்மார் வியந்து நின்றனர்.
“செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவம் உடையள் என்பார் எம்மலைத் தவம் செய்தாள்கொல் எய்துவம் யாமும் என்பார்“
என்று அன்னார் தாய்மை உணர்ச்சியைச் சிந்தாமணி பாடிற்று. “பெருந்தவம் செய்தாலன்றிச் சீவகனைப் போன்ற மைந்தனைப் பெறுதல் இயலாதே ! இவனைப் பெற்ற தாய் எத்துணைக் காலம் தவம் செய்தாளோ! எந்த மலையில் இருந்து தவம் செய்தாளோ? அந்த மலை இன்னதென்று அறிந்தால் நாமும் அங்கே சென்று தவம் முயன்று இவனைப் போன்ற மைந்தனைப் பெறலாமே” என்று பேசினர் தாய்மார்கள். இத்தகைய புகழுரையைத் தன் அன்னைக்கு உரிமையாக்கினான் சீவகன் என்று கூறும் சிந்தாமணிச் செய்யுளில் ஒரு திருக்குறளின் மணம் கமழ்கின்றது.
“மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்“
என்றார் திருவள்ளுவர். இந்த மைந்தனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று உலகத்தார் சொல்லும் வண்ணம் வாழ்தலே மகன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறாகும் என்ற திருக்குறளின் கருத்தை ஆதரித்து, மகன் அன்னைக்குச் செய்யும் உதவியும் அதுவே என்று சிந்தாமணி எடுத்துரைக் கின்றது.
காலமும் இடமும்
காவலனாகிய கட்டியங்காரன் வஞ்சனையால் அர செய்தியவன் என்றும், அவனே தன் தந்தையாகிய சச்சந்தனைக் கொன்றவன் என்றும் தக்கோர் வாயிலாக அறிந்த சீவகன் தள்ளருஞ் சீற்றம் கொண்டான். அவன் உள்ளம் துடித்தது; குருதி கொதித்தது. கட்டியங்காரனைக் கொன்று முடிப்பதாக அவன் வஞ்சினம் கூறினான். அதற்கு ஏற்ற காலமும் இடமும் கருதியிருந்தான்.
“ஞாலம் கருதினும் கைகூடும் காலங்
கருதி இடத்தாற் செயின்”
என்பது வள்ளுவர் வாய்மொழி. காலமும் இடமும் தெரிந்து, போர் செய்யும் வீரனே வெற்றி பெறுவான் என்பது இக் குறளின் கருத்து. கூகை என்னும் பறவை காக்கையினும் பன்மடங்கு வலிமையுடையதாகும். ஆயினும் , பகற்பொழுதில் எளிதாகக் காக்கை கூகையை வென்றுவிடும். தண்ணீரில் முதலையை வெல்லுதல் அரிது. தரையில் அதனைக் கொல்லுதல் எளிது. ஆதலால், ஏற்றபொழுதும் இடமும் தேர்ந்து, போர் தொடங்குதல் வேண்டும் என்று கூறுகின்றார் திருவள்ளுவர். அவர் அருளிய பொருளையும் மொழியையும் பொன்னே போற் போற்றுகின்றது சிந்தாமணி.
“இடத்தொடு பொழுதும் நாடி
எவ்வினைக் கண்ணும் அஞ்சார்
மடப்பட லின்றிச் சூழும்
மதிவல்லார்க் கரிய துண்டோ
கடத்திடைக் காக்கை ஒன்றை
ஆயிரங் கோடி கூகை
இடத்திடை அழுங்கச் சென்றாங்
கின்னுயிர் செகுத்த தன்றே”
என்பது சிந்தாமணிப் பாட்டு.
மனத்திண்மை
கட்டியங்காரனை வெல்வதற்குக் காலம் பார்த்திருந்த சீவகன், துணைவலிமையும் படைவலிமையும் பெற்றுப் போர் புரிய எழுந்தான். பேராண்மை வாய்ந்த சீவகனும் கட்டியங்காரனும் போர்க்களத்தில் வீரம் விளைத்தனர். மனத் திட்பம் வாய்ந்த வீரர்கள் மாற்றாருடைய படைக்கலங் கண்டு மருளுவதில்லை. பகைவரது வெம்படை வேகமாக முகத்தை நோக்கி வரும்பொழுது, விழித்த கண் இமையாது நிற்றலே வீரத்திற்கு அழகு என்றார் வள்ளுவர்.
“விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு”
என்று திருக்குறள் பாடிற்று. அமர்க்களத்தில் பகைவரை வெகுண்டு நோக்கிய கண் , அவர் எறியும் படைக்கலங் கண்டு வெருண்டு இமை கொட்டுமாயின், அதுவே தோல்வியாகும் என்பது இக் குறளின் பொருள்.
சீவகனும் கட்டியங்காரனும் வெம்போர் நிகழ்த்திய களத்தில், கண்ணிமையாத வீரரும் காட்சியளித்தனர்; கண்ணிமைத்த கோழைகளும் காணப்பட்டனர். கட்டியங்காரனுடைய வீர மைந்தர் நூற்றுவரையும் சீவகன் வென்று கொன்ற பொழுது விதியின் கொடுமையை நினைந்து மனம் நொந்து நின்றான் அம் மன்னன். அது கண்டு சீவகன் சிரித்தான். அச் சிரிப்பில் அமைந்த குறிப்பை அறிந்தான் கட்டியங்காரன். மானவீரம் அவன் மனத்தில் முறுகி எழுந்தது. எதிரே நின்ற சீவகனை நோக்கி, ”வீரனே! வெற்றியும் தோல்வியும் விதியினால் ஆகும். ஆயினும் ஒன்று கூறுவேன் கேள் ! நாம் இருவரும் போர் புரியும் போது என்னை நோக்கிவரும் உன்னுடைய படைக்கலங் கண்டு நான் கண்ணிமைப்பேனாயின் நீ சிரித்தல் தகும். அதற்கு முன் சிரித்தல் சரியன்று” என்று அவன் வீரமொழி பேசினான்.
”வெல்வது விதியி னாகும் வேல்வரின் இமைப்பே னாயின்
சொல்லி நீ நகவும் பெற்றாய்! தோன்றல்“
என்ற சிந்தாமணி அடிகளில் கட்டியங்காரனுடைய மனத்திட்பம் விளங்குகின்றது. இவ்வாறு மானம் புலப் படுத்திய மன்னன், மேலும் ஒன்று கூறினான்: ‘இன்று நிகழும் போரில் நான் வீரமிழந்து இழுக்குற்றேனாயின் இல்லாளை அஞ்சி நல்விருந்தினரைப் பேணாதொழிந்த புல்லாளனாகக் கடவேன்’ என்றான். இவ்வஞ்சினம்,
“இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்”
என்னும் திருக்குறளைத் தழுவி எழுந்ததென்பது வெளிப்படை.
கட்டியங்காரனைப்போல் மனத்திட்பம் அற்றவன் மகதையர்கோன். போர்க்களத்தில் அவனைக் கொன்று முடிக்கக் கருதி நபுலன் என்னும் வீரன் கொடிய வாளை ஓச்சினான். அந் நிலையில் மகதை கண்ணிமைத்தான். கோழையாகிய அவனைக் கொல்லுதல் வீரமன்று என்று விலகிச் சென்றான் நபுலன்.
“ஏந்தல் தன் கண்கள் வெய்ய இமைத்திட எறிதல் ஓம்பி
நாந்தக உழவன் நாணி நக்கு நீ அஞ்சல் கண்டாய்”
என்று கூறிய நபுலன் மொழிகளில் இருவர் செய்கை யும் இனிது விளங்குகிறது.
ஆண்மையின் அழகு
அமர்க்களத்திலும் அறிநெறியைக் கடைப்பிடித் தலே வீரத்திற்கு அழகு என்பது திருவள்ளுவர் கொள்கை.
”பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு”
என்பது அவர் வாக்கு. சீறிச் சிவந்த கண்களே வீரத்தின் சின்னம் என்பர். ஆயினும், ஊனமுற்ற பகைவனை ஊறு செய்தல் ஈனமாகும். போர்க் களத்தில் எளியார்மீது வலியார் இரக்கம் காட்டுவர். அதுவே ஊராண்மை எனப்படும். பேராண்மையின் கொழுந் தெனத் திகழ்ந்து அழகு செய்வது ஊராண்மையே யாகும். இவ்விரு வகை ஆண்மையும் வாய்ந்து, வள்ளுவர் வகுத்த நெறியில் நின்று போர் நிகழ்த்திய வீரரைச் சிந்தாமணி வியந்து பாராட்டுகின்றது. சீவகன் தோழருள் ஒருவனாகிய நகுலன் என்பவன் தன் குதிரையின் மீது அமர்ந்து, எதிரே வந்த யானை வீரனைக் கொல்வதற்கு வாளோச்சினான். அவனைக் கண்டு அஞ்சாத மாற்றான் இரு கைகளையும் கொட்டி ஆரவாரித்தான். அப்போது அவன் நிலை நன்றாகத் தெரிந்தது. கையிலே படைக்கலமின்றிப் போர் புரிய நின்றான் அவ் வீரன் என்பதை அறிந்த நகுலன் அவனை வாளால் எறிய நாணி, மற்றொரு பக்கம் சென்றான் என்று சிந்தாமணி கூறுகின்றது.
வில்லெடுத்துப் போர் புரியும் வீரனை வில்லேருழ வன்’ என்றார் திருவள்ளுவர். அந்த முறையில் வேலெடுத்துப் போர் செய்யும் வீரனை அயிலுழவன்’ என்றும், வாட்போர் புரியும் வீரனை ‘வாளுழவன்’ என்றும் சிந்தாமணி குறிக்கின்றது.
“வீறின்மையின் விலங்காம் என
மதவேழமும் எறியான்
ஏறுண்டவர் நிகராயினும்
பிறர்மிச்சில் என்றெறியான்
மாறன்மையின் மறம் வாடுமென்று
இளையாரையும் எறியான்
ஆறன்மையின் முதியாரையும்
எறியான் அயில் உழவன்”
என்று அறநெறி திறம்பாத வேலுழவன் செய்கையை அழகுறச் சிந்தாமணி பாடிற்று. ‘விலங்கைக் கொல்லுதல் வீரமன்று; புண்பட்ட வீரனை நலிதல் பண்பா டன்று; இளையோரையும் முதியோரையும் ஊறு செய்தல் அறமன்று என்று கருதுவான் உண்மை வீரன்’ என்பது இப்பாட்டால் இனிது விளங்கும்.
வெற்றி வீரனாகிய சீவகன், கட்டியங்காரனைப் போர்க்களத்தில் வென்று கொன்றான். சூழ்ச்சியால் அரசெய்திய வஞ்சகன் அழிந்து ஒழிந்தான் என்று நெஞ்சம் குளிர்ந்தனர் நாட்டு மக்கள்.
இறையொளி
முறையாக அரசுரிமை பெற்ற மன்னனிடம் ஓர் ஒளியுண்டு என்பது முன்னையோர் கொள்கை.
”இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்“
என்று பாடினார் வள்ளுவரும். ஒளி என்பது தெய்வத் தன்மை. நாட்டில் வாழும் மக்களை முறை செய்து காப்பாற்றுதலால் அரசன் இறைவனாகப் போற்றப் படுவான் என்றார் வள்ளுவர். தமிழ்ச் சொல்லாட்சியும் இதற்குச் சான்று பகர்வதாகும். இறைவன் என்ற சொல் கடவுளையும் குறிக்கும்; அரசனையும் குறிக்கும். கடவுளுக்குரிய ஆலயத்தையும் அரசனுக்குரிய அரண் மனையையும் கோயில் என்ற சொல்லால் உணர்த்துதல் பழந்தமிழ் வழக்கு.
அரசன்பால் அமைந்த தெய்வத் தன்மையே உலகத்தைக் காக்கும் என்று சிந்தாமணி கூறுகின்றது.
“உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்”
என்ற செய்யுளில், திருவள்ளுவர் கருத்தை ஏற்றுப் போற்றுகின்றார் சிந்தாமணி ஆசிரியர்.
அமைச்சரும் ஒற்றரும்
அரசர் தெய்வத் தன்மை வாய்ந்தவரேயாயினும் நல்லமைச்சரைத் துணை கொண்டு அன்னார் ஆட்சி புரிதல் வேண்டும் என்று திருக்குறள் அறிவிக் கின்றது.
“சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்”
என்று பணித்தார் வள்ளுவர். எப்பொருளையும் ஆராய்ந்து சொல்லும் அமைச்சரே அரசாங்கத்தின் கண் போன்றவர். அவர் காட்டிய நெறியைக் கடைப் பிடித்து ஆட்சி புரிதலே அரசர்க்கு ஏற்றதாகும் என்பது இக் குறளின் கருத்து. இதனாலேயே, அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்’ என்று பாடினான் ஒரு பாண்டி மன்னன்.
அமைச்சரைப் போலவே ஒற்றரும் அரசாங்கத்தில் ஒரு சிறந்த அங்கம் ஆவர். உள் நாட்டிலும் அயல் நாட்டிலும் மறைவாகப் போந்து ஆங்காங்கு நிகழ்வன வற்றை உள்ளவாறுணர்ந்து தம் அரசனிடம் அறிவிப் பவரே ஒற்றர் எனப்படுவர். ஒற்றர்கள் உணர்த்தும் செய்திகளை ஆராய்தற்குரிய முறையையும் அறிவிக் கின்றார் வள்ளுவர்:
”ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்”
என்று பணிக்கின்றது திருக்குறள். இவ்வாறு அமைச் சரையும் ஒற்றரையும் பற்றித் திருக்குறள் கூறும் உண்மைகளைத் தொகுத்துரைக்கின்றார் சிந்தாமணி ஆசிரியர்:
“ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும்
கற்றல் சூழ்ந்து பெருக்கலும் சூதரோ
கொற்றம் கொள் குறிக் கொற்றவற் கென்பவே”
என்ற சிந்தாமணிப் பாட்டில் ஒற்றரைக்கொண்டு ஒற்றரை ஆராய்தலும், கற்றறிந்த அமைச்சரைத் துணைக்கொண்டு அரசாளுதலும் கொற்றவர்க்கு உற்ற செயல்களாகக் குறிக்கப்படுகின்றன.
பொருளின் திறம்
அரசர்க்குரிய ஆறு அங்கங்களுள் ஒன்று பொருள். அதுவே பகையறுக்கும் படை யாதலால் பொருட் பெருக்கமே அரசரது குறிக்கோளாக இருத்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கொள்கை
“செய்கபொருளைச்செறுநர்செருக்கறுக்கும்
எஃகுஅதனிற்கூரியதுஇல்”
என்பது அவர் வாய்மொழி. ‘பொருளால் பகை பணியும்; போர் ஒடுங்கும்; புகழ் ஓங்கும். ஆதலால் செய்க பொருளை’ என்று வள்ளுவர் பணித்தார். அவ்வண்ணமே சிந்தாமணி ஆசிரியரும் சொல்கின்றார் :
“செய்க பொருள் யாரும், செறுவரைச் செறுகிற்கும்
எஃகு பிறிதில்லை“
என்ற பாட்டு, திருக்குறளை அடியொற்றிச் செல்கின்றது. இக் கருத்தை மேலும் விளக்கிக் கூறுகின்றது சிந்தாமணி. பொருளுடைய அரசனிடம் நால்வகைப் படைகளும், பல்வகைப் படைக்கலங்களும் பெருகும். அவை பெருகவே நானிலம் முழுவதும் அவன் கொடியின் கீழ் அமையும். அதனால், மேலும் பொருள் பெருகும். ஆதலால், ஆற்றல் சான்ற பொருளால் ஆகாதது ஒன்றுமில்லை :
”பொன்னின் ஆகும் பொருபடை, அப்படை
தன்னின் ஆகும் தரணி, தரணியில்
பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள்
துன்னும் காலைத் துன்னாதன இல்லையே”
என்பது சிந்தாமணி.
மன்னர்க்குரிய அங்கங்களுள் ஒன்றாக விதந்துரைக்கப் பட்ட பொருள், இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்று திருவள்ளுவர் கருதுகின்றார். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது அவர் திருவாக்கு. பொருள் செய்வதற்கு முயற்சியே சிறந்த வழி என்று திருக்குறள் செப்பமாய்க் கூறுகின்றது. முயற்சியால் தேடும் பொருளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்தல் தவறு. ஒல்லும் வகையால் பொருளுடையார் எல்லாரும் அறம் செய்தல் வேண்டும்.
அறஞ்செய்யும் காலம்
‘அன்றறிவாம் என்னாது அறம் செய்க’ என்று பணித்தார் வள்ளுவர் . பின்னொருகால் அறம் செய்ய லாம் என்று எண்ணலாகாது. ‘நன்றே செய்தாலும் வேண்டும்; நன்றும் இன்றே செய்தலும் வேண்டும்; இன்றும், இன்னே செய்தலும் வேண்டும்’ என்று உரைத்தனர் ஆன்றோர். இவ்வாக்கைப் புறக்கணித்து வாழ்ந்த செல்வன் ஒருவன் ஏமாற்ற மடைந்த செய்தியைக் கூறுகின்றது சிந்தாமணி.
‘செய்க பொருளை’ என்று வள்ளுவர் கூறிய கருத்தை மனத்திற்கொண்டு, பாடுபட்டுப் பணம் தேடினான் ஒருவன்; ஆனால், அவர் விதித்தவாறு அறம் செய்தானில்லை; மனை வாழ்க்கையில் மிஞ்சிய பொருளைப் பெட்டியிலே பூட்டிவைத்துப் பாதுகாத்தான். சேருங் காலத்தில் பொருளைச் சேர்த்து, சாகுங்காலத்தில் அதனைச் செல்விட்டு அறஞ் செய்யலாம் என்பது அவன் கருத்து. ஆனால், அவன் திட்டமிட்டிருந்தபடி நடை பெறவில்லை. முதுமை வருமுன்னே ஒரு நாள் திடீரென்று அவன் நோய்வாய்ப் பட்டான். வாய் பேச முடிய வில்லை ; கால் நடக்க முடியவில்லை; அந் நிலையில் அறம் செய்ய விரும்பிற்று அவனுள்ளம். அருகே நின்ற மனையாளை நோக்கி, பெட்டியிலுள்ள பண முடிப்பை எடுத்து வரும்படி கைக்குறிப்பால் அவன் அறிவித்தான்; அவனைச் சூழ்ந்து நின்ற சுற்றத்தார் அக் குறிப்பின் கருத்துணராது திகைத்தனர். அப்போது அவன் மனையாள், ”ஐயோ! பாவியேன் என்ன செய்வேன்! விளாம்பழம் கேட்கின்றீர்களே! உங்கள் நோய்க்கு அது ஆகுமா!” என்று அங்கலாய்த்தாள்.
“கையால் பொதித்துணையே காட்டக்
கயற்கண்ணாள் அதனைக் காட்டாள் ஐயா
விளாம்பழமே என்கின்றீர்
ஆங்கதற்குப் பருவம் அன்று என்
செய்கோ எனச்சிறந்தாள் போல் சிறவாக்
கட்டுரையால் குறித்த எல்லாம் பொய்யே
பொருளுரையா முன்னே
கொடுத்துண்டல் புரியின் கண்டீர்”
என்று சிந்தாமணிச் செய்யுளில் இச் செய்தி குறிக்கப்படுகின்றது.
மனையாள் சொல்லின் மாயப் பொய்யினைக் கேட்டான் பிணியாளன் ; மனம் உடைந்தான்; யாதும் செய்ய வகையின்றி விழித்தான்;
”நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்”
என்ற வள்ளுவர் வாய்மொழியைப் போற்றாது ஆற்ற நாள் போக்கிய புன்மையை நினைந்து உயிர் துறந்தான்.
துன்பத்தை வெல்லும் படை
இன்பமும் துன்பமும் கலந்த இவ்வுலக வாழ்க் கையில், இன்பம் வரும்பொழுது மகிழ்தலும், துன்பம் வரும்பொழுது அழுதலும் மாந்தர் இயற்கை. துன்பம் அழுதால் தீராது; அதை வெல்வதற்கு ஒரு வழியுண்டு.
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃதொப்ப தில்“
என்றார் வள்ளுவர். ‘துன்பம் வருங்கால் மனத்துளங் கலாகாது; ஊழ்வினையை நினைந்து உழல்லாகாது; தெய்வத்தைப் பழித்துத் தூற்றலாகாது. மலர்ந்த முகத்தோடு துன்பத்தை எதிர்த்தல் வேண்டும்; சிரித்து அதன் கொடுமையைச் சிதைத்தல் வேண்டும்’ என்பது வள்ளுவர் காட்டும் வழி இக் கருத்தை ஏற்றுப் போற்று கின்றது சிந்தாமணி. நடுக்கடலிலே ஒரு கப்பல் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று மேகம் திரண்டது; இடி முழங்கிற்று; கடுங்காற்று அடித்தது; கடல் கொந்தளித்தது. மரக்கலத்தில் இருந்த மாந்தர் அஞ்சி நடுங்கினர். அப்போது வள்ளுவர் நூலைக் கற்ற வணிகன் ஒருவன் பேசலுற்றான்:
“இடுக்கணவந் துற்ற காலை
எரிகின்ற விளக்குப் போல
நடுக்கம் ஒன் றானும் இன்றி
நகுக , தாம் நக்க போழ் தவ்
விடுக்கணை அரியும் எஃகாம்
இருந்து அழுது யாவர் உய்ந்தார்”
என்று அவ் வணிகன் வாயிலாகச் சிந்தாமணி துன் பத்தைத் துடைப்பதற்கு வழி கூறுகின்றது.
தவத்தின் மேன்மை
வீரமும் காதலும் விரித்துரைக்கப்படும் சிந்தாமணியின் தவத்தின் மேன்மையும் வலியுறுத்தப்படுகின்றது. அருங்கலைச் செல்வனாகவும், பெரும்போர் வீரனாகவும், பெண்கள் விரும்பும் பேரழகனாகவும் விளங்கிய சீவகன், மன்னர் போற்றும் மன்னனாய் ஏமாங்கத் நாட்டில் அரசு வீற்றிருந்தான். அவன் எண்ணிய பொருள்களை யெல்லாம் எண்ணியவாறே எய்தியதற்கு முன்னைத் தவமே முன்னின்று உதவிற்று.
“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்“
என்பது வள்ளுவர் வாக்கு. சுடுகாட்டிலே பிறந்து, வணிகன் மனையிலே வளர்ந்து, கலைகளை யெல்லாம் உணர்ந்து, தலை சிறந்த வீரனாய்த் திகழ்ந்து, வஞ்சனை யால் அரசெய்திய பகைவனைக் கொன்று வீறுபெற்ற சீவக மன்னன் முற்பிறப்பில் செய்த தவத்தை வியந்து புகழ்ந்தனர் நாட்டு மக்கள்
“இந்நகரப் புறங்காட்டில் இவன் பிறந்த வாறும்
தன்னிகரில் வாணிகனில் தான் வளர்ந்த வாறும்
கைந்நிகரில் வேந்தர் தொழப் போந்ததுவும் கண்டால்
என்னை தவம் செய்யாது இகழ்ந்திருப்ப தென்பார்”
என்ற சிந்தாமணிச் செய்யுளில், தவத்தின் பெருமை குறிக்கப்படுகின்றது. சீவகன் எய்திய சிறப்பினைக் கண்டும், அதற்குக் காரணம் தவம் என்பதறிந்தும் நல்லறிவுடையார் தவம் செய்யாது அவமே காலங் கழிப்பரோ என்று ஊரார் வாயிலாகக் கேட்கின்றார் சிந்தாமணிக் கவிஞர்.
இத் தகைய தவத்தின் இயல்பினைத் திருக்குறள் தெரிவிக்கின்றது :
”உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு”
என்றார் வள்ளுவர். ‘தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தல், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டுமே தவ ஒழுக்கத்தின் அடையாளம் என்பது அவர் கருத்து. மன்னுயிரை யெல்லாம் தன்னுயிர்போல் கருதாது, மாந்தர் செய்யும் கொடுமையைக் கண்டு வருந்திற்று வள்ளுவர் உள்ளம்
“தன்னுயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்”
என்று அவர் வினவுகின்றார்; துன்பம் என்று தானறிந்த ஒன்றைப் பிறர்க்குச் செய்யா தொழிதல் சிறந்த அறம் என்று கூறுகின்றார். இக் கருத்தே சிந்தாமணியில் குன்றிலிட்ட விளக்குப் போல் நின்று ஒளிர்கின்றது.
“தன்னுயிர் தான் பரிந்து ஓம்பு மாறுபோல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன்னுயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப்பிறந்து உயர்ந்து போகுமே”
என்று சிந்தாமணி பாடிற்று. ‘மன்னுயிரைத் தன்னுயிர் போல் பாதுகாக்கும் அறவோன், இன்னுயிர்க்கெல்லாம் இறைவனாய் இன்பநிலை எய்துவான்’ என்று சிந்தாமணி கூறும் அறவுரை பொன்னே போற் போற்றத்தக்கதாகும்.



