வழிவழி வள்ளுவர்
ரா. பி. சேதுப்பிள்ளை

கம்பராமாயணத்திலே வள்ளுவர்

“தமிழ் மொழியின் கதியாகிய கவிஞர் இருவர். அவர் கம்பரும் திருவள்ளுவரும்” என்று கட்டுரைத்தார் ஒரு தமிழ்ப் பெரியார். திருவள்ளுவரைத் ‘தெய்வப் புலவர்’ என்றும் கம்பரைக் ‘கல்வியிற் பெரியவர்’ என்றும் கற்றறிந்தோர் புகழ்ந்தேத்துவர். திருவள்ளுவர் அருளிய திருக்குறளைப் பொன்னே போல் போற்றிய கவிஞர்களுள் தலை சிறந்தவர் கம்பர். திருக்குறளின் அருமையான சொற்களையும், ஆழ்ந்த பொருள்களையும் கம்பர் அள்ளியெடுத்து, தமது பெருங்காவியமாகிய இராமாயணத்தில் அமைத்து அழகு செய்துள்ளார். கம்பர் கண் கொண்டு திருக்குறளைக் காண்பது தமிழறிஞர்க்கு இணையற்ற இன்பமும் பயனும் தருவதாகும்.

இல்லறம்

முப்பால் ஆகிய திருக்குறளின் முதற்பாலாக அமைந்தது அறத்துப்பால். இல்லறம் துறவறம் என்னும் இருவகை அறத்தின் சிறப்பையும் அறத்துப் பால் எடுத்துரைக்கின்றது. இல்லந்தோறும் நிகழ்தற்குரிய அறமே இல்லறமாகும். இவ்வறம் அறவோர்க்கும் துறவோர்க்கும் ஆதரவளிக்கும் ; அற்றார்க்கும் அலந் தார்க்கும் உற்ற துணையாகும். இங்ஙனம் பல்லோர்க் கும் நலஞ் செய்தலால் இல்லறமே நல்லறம் என்று சொல்வதுண்டு.

இத் தகைய சீர்மை வாய்ந்த இல்வாழ்க்கையில் இல்லாள் எனவும், மனையாள் எனவும் விதந்துரைக்கப்படும் பெண்களுக்குச் சிறந்த உரிமையும் கடமையும் உண்டு. வாழ்க்கைத்துணையாகக் கொண்ட கணவனை யும் வந்த விருந்தினரையும் பேணி உபசரிப்பவர் பெண்டிரே யாவர் :

“தற்காத்து, தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச்
சோர்விலாள் பெண்

என்பது வள்ளுவர் வாய்மொழி. இக் கருத்தை இராமா யணத்திலே விளக்கிக் காட்டுகின்றார் கம்பர். தனக் குவமையில்லாத் தலைவனாகிய இராமனைப் பிரிந்து இலங்கை மாநகரில் சிறையிருந்த சீதை, தன் குறையையும் தலைவன் நிலையையும் எண்ணித் தளர்கின்றாள்; “காட்டிலே தங்கி யிருக்கும் என் கணவனுக்கு உண்ணும் படியறிந்து உணவளிப்பார் யார்?’ என்று வருந்துகின் றாள் ; அவர் தங்கி இருக்கும் இடம் நாடி, ஆன்றோரும் முனிவரும் வருவார்களே ! அவர்களை வரவேற்று உபசரிப்பதற்குரிய மனையாள் இல்லாத நிலையில் அவர் எப்படித் தயங்குவாரோ!’ என்று எண்ணி மயங்கு கின்றாள்.

அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறு மோ என்று விம்மும்
மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கென்று
மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித் திடவும் ஆண்டு எழாதாள்

என்று கம்பர் பாடிய கவியில் கணவனையும் விருந்தின ரையும் பேணும் கடமையுடையவள் பெண் என்ற கருத்து நன்றாக விளக்கப்படுகிறது.

விருந்தோம்பல்

விருந்தினரைப் பேணுதல் இல்லறங்களுக் கெல்லாம் சிறந்ததென்பது திருவள்ளுவர் கொள்கை

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை
செய்தற் பொருட்டு

என்று திருக்குறள் கூறுகின்றது. இவ்வாறு விதந்து சொல்லப்பட்ட விருந்தினர் என்பார் யார்? விருந்து என்ற சொல்லின் பொருள் யாது? இக் காலத்தில் மணமக்களுக்கும், உற்றார் உறவினர்க்கும். பட்டம் பதவிகள் பெற்றோர்க்கும், இவர் போன்றார்க்கும் மகிழ்ச்சியின் அறிகுறியாக அளிக்கப்படும் உபசார உண்டியே விருந்தென்று சொல்லப்படும். திருக்குறளில் விருந்து என்பதற்கு இந்தப் பொருள் இல்லை. பழங் காலத்தில் விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள் எனவே, விருந்தினர் என்பார் புதியவராக வருபவர். அவர் உற்றரல்லர்; உறவின ரல்லர்; ஒருவகையிலும் தொடர்புடையரல்லர். அதிதிகள் என்று சொல்லப்படுபவர்களே விருந்தினர் ஆவர். அதிதிகளை நாள்தோறும் ஆதரித்தல் வேண்டும் என்று பணித்தார் திருவள்ளுவர்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து
பாழ்படுதல் இன்று

என்று திருக்குறள் பாடிற்று.

இவ்வாறு திருவள்ளுவர் பாராட்டிய விருந்தோம்பல் என்னும் அறம் சீராக நடைபெறுவதற்கு, இன்றியமையாத சாதனங்களை எடுத்துரைக்கின்றார் கம்பர். விருந்தினராக வருபவரைப் பேணி உபசரித் தற்குரிய பெண்களிடம் செல்வமும் கல்வியும் அமைந்திருந்தாலன்றித் திருவள்ளுவர் வலியுறுத்திய இல்லறம் நன்றாக நடைபெறமாட்டாது என்பது கம்பர் கருத்து. விருந்தினரின் தகுதியை உணர்வதற்கும், அவர் குறிப் பறிந்து குறை தீர்ப்பதற்கும் கல்வியறிவு வேண்டும்; அவர்க்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கொடுப்பதற்குச் செல்வம் வேண்டும். இந்தக் கருத்தைக் கோசல நாட்டு வருணனையிலே கூறுகின்றார் கம்பர். கோசல நாட்டு மாதரெல்லாம் போதிய செல்வமும் கல்வியும் பெற்றிருந்தார்கள்; ஆதலால் வருந்தி வந்தவர் அருந்துயர் களைந்து, நாள்தோறும் விருந்தினரைப் பேணி இல்லறம் புரிந்தனர்.

பெருந்த டங்கண்பிறைநுத லார்க்கெல்லாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து
மன்றிவி ளைவன யாவையே

என்று பாடினார் கம்பர். செல்வமும் கல்வியும் சிறக்கப் பெற்று, ஈகையும் விருந்தும் இடையறாது செய்து வந்த கோசல நாட்டுப் பெண்களை ”பெருந் தடங்கண் பிறை நுதலார்” என்று போற்றினார் கவிஞர். பெரிய கண்கள் பெண்டிர்க்கு அழகு என்று புலவர்கள் புகழ்வதுண்டு. திருவள்ளுவரும் கண்ணின் பெருமையைக் கூறுகின்றார்;

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று
உணரப் படும்

என்பது அவர் வாக்கு. கண்ணோட்டம் என்பது இரக்கம். ‘பிறர் படும் துயரம் கண்டு இரங்கும் கண்களே கண்கள். இரக்கமற்றவர் முகத்திலுள்ளவை கண்களல்ல, புண்கள்’ என்று கட்டுரைத்தார் திருவள்ளுவர்.

இக் கருத்தை மனத்திற் கொண்டு கோசல் நாட்டின் பெண்களின் கண்களைப் புகழ்ந்துரைத்தார் கம்பர். அம் மாதரின் கண்கள் கருணை வாய்ந்த கண்கள்; ஏழை முகம் பார்த்து இரங்கும் கண்கள்; பரிவுடன் விருந்தினரை எதிர்பார்த்திருக்கும் கண்கள். இத்தகைய பெருமை சான்ற கண்களைப் ‘பெருந்தடங்கண்’ என்று போற்றினார் கவிஞர்.

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது இந் நாட்டுப் பழமொழி. முகத்தினும், கண்களில் அது நன்றாக விளங்கும் என்று மெய்ப்பாட்டியல் அறிந்தோர் கூறுவர். உள்ளத்தில் உள்ள உணர்ச்சியைக் கண்ணின் பார்வை காட்டிவிடும். விருப்பத்தைக் காட்டும் பார்வையை ‘இன்னோக்கு’ என்பர்; வெறுப்பைக் காட்டும் பார்வையை ‘வன்னோக்கு’ என்பர். இல்வாழ்க்கையில் விருந்தினரை வரவேற்கும் பெண்களிடம் இனிய பார்வையே அமைந்திருத்தல் வேண்டும் என்று திருவள்ளுவர் அருளிப் போந்தார்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக்
குழையும் விருந்து

என்பது குறள். இனிய முகத்தைக் கண்டால் விருந்தாக வருபவரின் உள்ளம் தழைக்கும்; கடுமையான முகத்தைக் கண்டால் அவர் மனம் வாடி வருந்தும். ஆதலால், இல்லறம் புரியும் பெண்களிடம் இனிய பார்வை வேண்டும். விருந்தினர் தூரத்தில் வரும் பொழுது அவரை வரவேற்பது இனிய பார்வை; அண்மையில் வரும் பொழுது அவரை மகிழ்விப்பது இனிய சொல்; பின்னர் நிகழ்வது உணவளித்தல் ஆகிய இனிய செயல். இவ்வாறு விருப்பத்தின் அறிகுறியாகிய இனிய நோக்கும், அன்பிற்கு அறிகுறியாகிய இனிய சொல்லும் உடையார் செய்யும் அறமே சிறந்த தென்பது திருவள்ளுவர் கொள்கை. இந்தக் கருத்தைக் கதை நிகழ்ச்சியில் வைத்து விளக்குகின்றார் கம்பர். பஞ்சவடிச் சோலையில் தன்னந் தனியளாய் இருந்த சீதையை இராவணன் கவர்ந்து, தேர்மேல் வைத்துச் செல்லும் போது, கழுகரசனாகிய சடாயு பறந்தோடி வந்து தடுத்தான். இராவணன் வலிய வேல் ஒன்றை எடுத்துச் சடாயுவின் சிறகின் மேல் வீசியெறிந்தான். வேகமாக வந்த வேல் கடுமையான சிறகிலே பட்டு முட்டித் திரும்பிற்று. அது திரும்பியதற்கு ஓர் உவமை சொல்கின்றார் கம்பர்; ‘இனிய நோக்குடைய பெண்கள் இல்லாத வீட்டை நோக்கி வந்த விருந்து போல் சடாயுவின் வன்சிறகிலே பட்டுத் திரும்பியது அவ் வேல்’ என்று பாடுகின்றார். ‘இன்னோக்கியர் இல்வழி எய்திய நல்விருந்து போல் அது மீண்டது” என்ற கம்பர் வாசகம், ”முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்ற வள்ளுவர் வாய்மொழியைத் தழுவி எழுந்ததாகும்.

பெற்றோர் இன்பம்

இல்வாழ்க்கையில் நல்ல மக்களைப் பெற்ற தாய் தந்தையர் அடையும் இன்பத்தைப்பற்றித் திரு வள்ளுவரும் கம்பரும் பாடிப் போந்தனர்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய்

என்பது வள்ளுவர் வாக்கு. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து, ஓர் ஆண் மகவைப் பெற்ற நிலையில், தான் பட்ட பாடெல்லாம் மறந்து இன்ப மடைவாள் தாய். அதனினும் பெரியதோர் இன்பம் அவளுக்குப் பிற்காலத்தில் உண்டு. தன் மகன் சான்றோன் என்ற சொல்லைக் கேட்கும் பொழுது அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் பெரு மகிழ்ச்சி அடைவாள் தாய் என்பது இக்குறளின் கருத்து. சான்றோன் என்ற சொல், சிறந்த அறிவும் நிறைந்த குணமும் வாய்ந்தவனைக் குறிக்கும். இந்தக் குறளின் விளக்கம் பெற வேண்டும் கருத்துக்களை நயமாக விளக்குகின்றார் கம்பர். கோசல நாட்டரசனாகிய தசரதன், இராமனைத் தலைமகனாகப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியையும், அவன் நிகரற்ற வீரன் என்று அறிந்தபோது அடைந்த மகிழ்ச்சியையும், பின்பு அவன் சான்றோன் என்று கேட்டபோது அடைந்த மகிழ்ச்சியையும் படிப்படியாக உணர்த்துகின்றார். நெடுங் காலம் பிள்ளைப்பேறின்றித் தசரதன் வருந்தினான்; வாழையடி வாழையென வந்த பெருங்குலம் , தன்னோடு வழியடைத்துப் போனால் வசையாகுமே என்று வாடினான். இவ்வாறு கவலையுற்ற மன்னவன் இராமனைப் பெற்ற போது மனங்களித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ?

மைந்தரை இன்மையின் வரம்பில் காலமும்
நொந்தனன், இராமன் அந் நோவை நீக்குவான்
வந்தனன்

என்று அம் மன்னனே மகிழ்ச்சியோடு கூறுகின்றான். இத்தகைய இனிய மைந்தன், படைக்கலப் பயிற்சி பெற்று, பார்த்திபர் குலத்திற்கேற்ற பண்புகள் பலவும் வாய்ந்து விளங்கினான். அவனுடைய வீரம் விளங்குவதற்கு நல்ல வாய்ப்பொன்று கிடைத்தது. மிதிலையரசன் மாளிகையில் நெடிய வில்லொன்று இருந்தது. மலை போன்ற அந்த வில்லை எடுத்து வளைக்கவல்ல வீரனையே தன் மகளாகிய சீதை மாலையிட்டு மணம் புரிவாள் என்று மிதிலையரசன் அறிவித்திருந்தான். அந்த வில்லைக்

கண்டாரும், கண்டார் சொல்லக் கேட்டாரும் அதன் அருகே செல்லாது அகன்றனர். ஆதலால், சீதைக்குத் திருமணம் இல்லை என்று எல்லோரும் பேசினர். இந்த நிலையில் மிதிலைக்கு வந்து சேர்ந்தான் இராமன்; வில்லைக் கண்டான்; எடுத்தான் ; வளைத்தான்; ஒடித்தான். இவையெல்லாம் நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்டன; மங்கைக்கு ஏற்ற மணாளன் வாய்த்தான் என்று மிதிலையரசன் மனங் களித்தான்; நிகழ்ந்த செய்தியைத் தசரதனுக்குத் தெரிவித்தான். தன் மகன் செயற்கரிய வீரச்செயல் செய்தான் என்று கேட்டபோது தசரதன் மனத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று. வீரத்தோள் விம்மி நிமிர்ந்தன.

மிதிலையில் திருமணம் நிகழ்ந்த பின்பு, தசரதன் மணமக்களை அயோத்திக்கு அழைத்துச் சென்றான்; செல்லும் வழியில் பரசுராமன் குறுக்கிட்டான். அவன் இருபத்தொரு தலைமுறையாக அரசர் பலரைக் கொன்று குவித்த வீரன், அவனைக் கண்டபோது தசரதன் படை நடுங்கிற்று; மன்னனும் மயக்கமுற்றான். பரசுராமன் நேராக இராமனிடம் சென்று, ‘நீ மிதிலைமா நகரில் ஒரு வில்லை ஒடித்தாய் என்று அறிந்தேன். உண்மையில் நீ வீரனாயின் இதோ! என் கையிலுள்ள வில்லை வளைத்திடு , பார்ப்போம்’ என்று வீர வசனம் பேசினான். புன்னகை பூத்த முகத்தோடு அந்த வில்லைக் கையினால் வாங்கினான் இராமன்; மிக எளிதாக அதை வளைத்து எதிரே நின்ற பரசுராமனது செருக்கை அறுத்தான்; அரசர் குலத்தைப் பற்றிநின்ற அச்சம் தீர்த்தான். இந்த அரும்பெருஞ் செயலை அறிந்த தசரதன் வீர மைந்தனைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான்.

அயோத்தியை அடைந்த பின்பு தலைமகனான இராமனுக்கு முடிசூட்டித் தான் தவநெறியை மேற் கொள்ளக் கருதினான் தசரதன்; மறைமுனிவராகிய வசிட்டரும் மதிநலம் வாய்ந்த அமைச்சரும் அமர்ந்திருந்த சபையிலே தன் கருத்தைத் தெரிவித்தான், மன்னவன் நலத்தையும் மன்னுயிரின் நலத்தையும் நன்குணர்ந்த வசிட்ட முனிவன் பேசலுற்றான் : “அரசே! இனி, நீ தவஞ் செய்தல் தக்கதேயாகும். உன் மகனும் மருகியும் நல்லவர்; யாதும் குறைவின்றி இந்நாட்டைக் காத்து அரசு செய்வர்” என்று அவர் பெருமை பேசலுற்றான்:

மண்ணினும் நல்லள் மலர்மகள், கலைமகள், கலையூர் பெண்ணினும் நல்லள், பெரும்புகழ்ச் சனகியோ நல்லள் கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலா தவரும்
உண்ணும்
நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்

என்று பேசினான். இவ்வாறு முனிவன் பேசிய வாசகத்தைக் கேட்டான் தசரதன்; மட்டிலா மகிழ்ச்சி யடைந்தான். அப்போது அவன் மனத்தில் எழுந்த மகிழ்ச்சி முந்திய மகிழ்ச்சிகளை யெல்லாம் கடந்து மேலோங்கிற்று. மகனைப் பெற்றபோது அடைந்த இன்பத்திலும், மலைபோன்ற வில்லை அவன் ஒடித்தான் என்ற செய்தியைக் கேட்டபோது அடைந்த இன்பத் திலும், பரசுராமனது செருக்கறுத்த செய்தி கேட்ட போது அடைந்த இன்பத்திலும், வசிட்ட மாமுனிவன் வாயிற் பிறந்த வாசகத்தைக் கேட்டபோது தசரதன் பெரியதோர் இன்பமுற்றான் என்று கூறுகின்றார் கம்பர்

மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப்
பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடித்த அப் பெருவில்
இற்ற அன்றினும் , எறிமழு வாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்

என்ற கம்பர் பாட்டு, திருவள்ளுவர் கருத்திற்கு அருமையான விளக்கம் தருகின்றது. தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் சாலவும் இன்புறுவாள் என்றார் திருவள்ளுவர். ‘யார் சொல்லக் கேட்ட தாய் அவ்வாறு இன்புறுவாள்? ஒரு மகனைச் சான்றோன் என்று சொல்லுதற்குரியார் யார்?’ என்ற வினாக்களுக்கு விடை தருகின்றார் கம்பர். ஒருவனைச் சான்றோன் என்று உற்றார் சொன்னால் போதாது; ஊரார் சொன்னாலும் போதாது; உலகத்தில் சான்றோன் என்று புகழ் பெற்ற ஒருவனே மறறொருவனைச் சான்றோன் என்று சொல்லுதற்கு உரியவன். இராமனைச் சான்றோன் என்று தன் வாயாற் கூறினான், சான்றாண்மையின் சிகரமாக விளங்கிய முனிவன். அவன் வாய்மொழியைக் கேட்ட போது தசரதன் எல்லையற்ற இன்பமுற்றான்.

தாய் தந்தையர் இருவருக்கும் இத்தகைய இன்பம் உண்டு என்பதை இரு பெருங் கவிஞரும் எடுத்துக் காட்டு கின்றார்கள். தாய் பெறும் இன்பத்தைக் கூறினார் திருவள்ளுவர். தந்தை பெறும் இன்பத்தைக் கூறினார் கம்பர். தம் மக்களின் சிறப்பைத் தாமாக அறிந்து பெறும் மகிழ்ச்சியினும் தக்கோர் வாயிலாகக் கேட்கும் போது அடையும் மகிழ்ச்சி சாலவும் பெரிது என்னும் உண்மை யைத் திருவள்ளுவர் குறளாலும், கம்பர் தரும் விளக்கத் தாலும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.

நல்லமைச்சர் தன்மை

திருக்குறளிலே அரசியலைப் பற்றிய அருமையான கருத்துக்கள் பலவுண்டு. அவற்றைப் பொருட்பால் என்னும் பகுதியிலே கூறுகின்றார் திருவள்ளுவர். அரசு எத் தன்மையதாயினும், அமைச்சர் சபை அரசாங்கத்தின் இன்றியமையாத அங்கமாகும். அமைச் சர் தக்கவராக அமைந்தால் நாட்டுக்கு மிக்க நன்மை யுண்டு. ஆதலால், அமைச்சருக்குரிய குண நலங்களைத் திருக்குறள் எடுத்துரைக்கின்றது. மதி நலம் வாய்ந்த வர்களாய், நெறி முறை வழுவாதவர்களாய், சுயநலம் அற்றவர்களாய், சொல் வன்மை பெற்றவர்களாய் உள்ளவரே, அமைச்சராதற்கு உரியவர் என்பது திரு வள்ளுவர் கருத்து.

இத்தகைய அமைச்சர், அரசன் தவறு செய்யத் தலைப்பட்டால் தடுத்துச் சொல்லத் தயங்குவதில்லை. அவனுடைய கோபத்திற்கு அஞ்சி வாய் அடங்கி வாளா இருப்பதில்லை. இந்த உண்மையை,

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான்
கூறல் கடன்

என்ற திருக்குறள் பாடிற்று.

இத் தன்மை வாய்ந்த அமைச்சர்கள், கோசல நாட்டையாண்ட தசரதனுடைய சபையிலே இருந் தார்கள் என்று கூறுகின்றார் கம்பர் :

தம்முயிர்க்கு உறுதி எண்ணார்
தலைமகன்
வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி
விடாது
நின்று உரைக்கும் வீரர்
செம்மையின் திறம்பல் சொல்லாத்
தேற்றத்தார்
, தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார்
ஒருமையே
மொழியும் நீரார்

என்று அந் நாட்டு அமைச்சர்களைப் பாராட்டுகின்றார் கவிஞர். அரசன் மனத்திற் கொண்ட கருத்திற்கு மாறாகப் பேசினால், அவன் சீறுவானே என்று அவர்கள் சிந்திக்கமாட்டார்கள்; அரசன் கோபத்திற்கு ஆளானால் ஆபத்து விளையுமே என்று சிறிதும் அஞ்சமாட்டார்கள்; போர்க்களத்தில் பின்வாங்காமல் நின்று போராடும் வீரரைப்போல், அரசனது அவைக்களத்தில் மனத் திண்மையோடு நீதி முறையை அஞ்சாது எடுத்துரைப் பார்கள்; உண்மையை ஒரு போதும் மறைக்கமாட்டார் கள், மழுப்பமாட்டார்கள்; சொன்ன சொற்களை மாற்ற மாட்டார்கள்; இத் தன்மை வாய்ந்த அமைச்சர்களால் கோசல நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் கிடைத்த நன்மைகளைத் தசரத மன்னனே மனமாரப் போற்றினான்.

உம்மையான் உடைமையின் உலகம்யாவையும்
செம்மையின்
ஓம்பிநல் லறமும் செய்தனன்

என்று மந்திரிகளை நோக்கி அம்மன்னன் கூறினான். நாடாளும் பொறுப்புடைய அரசர்கள், மந்திரிகள் சொல்லும் மாறுபட்ட கருத்துக்களைச் செவியினால் ஏற்று, அறிவினால் ஆராய்ந்து பார்க்கும் பண்பினராய் இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றார் திருவள்ளுவர் :

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த்
தங்கும் உலகு

என்பது திருக்குறள். அத்தகைய பண்பு வாய்ந்த அரசன் தசரதன்.

இலங்கையில் அரசு புரிந்த இராவணன் இதற்கு நேர் மாறான தன்மை வாய்ந்தவன். மாறுபட்ட கருத்தை அவன் மதிப்பவனல்லன். தவறான நெறி யிலே அவன் முனைந்தால், தடுத்துச் சொல்லும் அமைச்சர்கள் அந்நாட்டில் இல்லை. அடிமையுள்ளம் வாய்ந்தவர்களே இராவணன் சபையில் அமைச்சர்களாயிருந்தார்கள். இந்த உண்மையைச் சீதையின் வாயி லாக உணர்த்துகின்றார் கம்பர் :

கடிக்கும்வல் லரவும் கேட்கும்
மந்திரம்
களிக்கின் றோயை
அடுக்கும் தடாதென்று ஆன்ற
ஏதுவோடு
அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை; உள்ளார்
எண்ணிய
தெண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது
முடிவன்றி
முடிவ துண்டோ

என்ற சீற்றத்தோடு பேசுகிறாள் சீதை. ”நஞ்சுடைய கொடிய நாகமும் மந்திர ஆணையில் அடங்குமே ! நெஞ்சில் கொடுமையுள்ள உன்னை நெறிப்படுத்தவல்ல அமைச்சர்கள் இந்நாட்டில் இல்லையே ! மதுவை மாந்தி மயங்கித் திரிகின்றாய் நீ! செய்யத் தக்கது இது, செய்யத் தகாதது இது என்று ஆராய்ந்து, உனக்கு அறிவுறுத்துவார் எவரும் இல்லை. நீ செய்யும் செயல் தவறு என்று உன் செவியில் இடித்துரைப்பார் யாரும் இல்லை; இந்த நாட்டில் அமைச்சர் என்று பெயர் படைத்தவர்கள் , நீ எண்ணியபடியே எண்ணும் அடிமை யுள்ளம் உடையவர்கள். அன்னாரை அமைச்சர்களாகக் கொண்ட உனக்கு அழிவு வரும் என்பதில் ஐயம் உண்டோ ?” என்று அஞ்சாது உரைத்தாள் சீதை.

இவ்வாறு கம்பர் பாடிய கவி, திருவள்ளுவரின் கருத்தைத் தழுவி எழுந்ததாகும். எப்பொழுதும் இச் சகமே பேசும் கொச்சை அமைச்சர்களால் பயனில்லை. அரசனைத் தீய நெறியினின்றும் விலக்கி, நன்னெறியிலே செலுத்தும் அமைச்சர்களே நாட்டிற்குத் தேவை. தவறு கண்டவிடத்து, அரசன் என்று அஞ்சாது, தலைவன் என்று தயங்காது இடித்துரைக்கும் ஆற்ற லுடையாரே நல்லமைச்சர். அன்னாரைத் துணைக் கொண்ட அரசனுக்குக் கேடில்லை என்றுரைத்தார் திருவள்ளுவர் :

“இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்”

என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாறு இடித்துச் சொல்லும் அமைச்சர் இல்லாத அரசாங்கம் நிலை குலைந்து அழியும். பாகன் இல்லாத யானை போல் அரசன் நெறியல்லா நெறிச்சென்று கெட்டு ஒழிவான் என்று திருக்குறள் மேலும் இக்கருத்தை வலியுறுத்து கின்றது:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார்
இலானும் கெடும்

என்று அழுத்தமாகக் கூறினார் திருவள்ளுவர். இவ் வாறு அறிவுறுத்தப்பட்ட அரசியல் உண்மைக்கு ஒரு சான்றாக நின்றது இலங்கை அரசு . அமைச்சர் சபையில் வல்லரசனான இராவணனைத் தடுத்துச் சொல்ல வல் லாரும் இல்லை. இடித்துச் சொல்ல வல்லாரும் இல்லை. ஆதலால், இலங்கை அரசு வீழ்ந்து ஒழிந்தது.

நட்பின் திறம்

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் இடித்துச் சொல்லும் நண்பர்கள் வேண்டும். எப்போதும் இங்கிதம் பேசுபவன் நண்பனல்லன்.

நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்றார் திருவள்ளுவர். இவ்வாறு நலம் புரிதலாலேயே தோழமை இன்றியமையாதது என்று ஆன்றோர் கூறிப் போந்தார். தோழமையின் இயல்பினைத் திருக்குறள் தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஒருவரோடு ஒருவர் தோழமை கொள்வதற்கு இருவரும் ஒரு நாட்டினராய் இருக்க வேண்டுவதில்லை ; ஒருவரையொருவர் பலகால் கண்டும் பேசியும் பழக வேண்டுவதில்லை. ஒத்த உணர்ச்சிதான் வேண்டும். ஒத்த உணர்ச்சியுள்ளவர்கள் வேறு வேறு நாட்டினராயினும் வேறு வேறு இனத்தின் ராயினும், உயரிய தோழர் ஆவார்கள். இக் கருத்து. ‘

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம்
கிழமை தரும்

என்ற திருக்குறளால் உணர்த்தப்படுகின்றது. கம்ப ராமாயணம் இக் கருத்தை நன்கு விளக்குவதாகும். இராமன், நாடு துறந்து காடு நோக்கிச் செல்லும் பொழுது, கங்கைக் கரையிலே குகனைக் கண்டான். மாசற்ற மனமுடையார் இருவரும் சிறந்த தோழர் ஆயினர். இருவரும் அதற்கு முன்பு ஒருவரை ஒருவர் கண்டவரல்லர். ஆயினும், ஒத்த உணர்ச்சியுடைய இருவரும் ஒன்றுபட்டனர். வேடர் குலத்திலே பிறந்து, கங்கையாற்றிலே ஓடம் செலுத்திய குகனைத் தன் உடன் பிறந்தவருள் ஒருவனாகக் கொண்டான் இராமன்.

இவ்வாறே, ஒத்த உணர்ச்சியால் ஒன்றுபட்டுத் தோழனாயினர் சுக்கிரீவனும் விபீஷணனும். இவ்விரு வரும் பல வேறுபாடு உடையவர்கள். ஒருவன் கிஷ்கிந்தையைச் சேர்ந்தவன்; மற்றவன் இலங்கையைச் சேர்ந்தவன். ஒருவன் வானர குலத்தில் பிறந்தவன்; மற்றவன் அரக்கர் குலத்தில் பிறந்தவன். ஒருவன்  நிறம் வெள்ளை ; மற்றவன் நிறம் கருமை. இவ்வளவு வேற்றுமை இருப்பினும், இருவரும் கண்ட நிலையிலே தோழமை கொண்டனர். அத் தோழமையின் சீர்மையை உணர்த்தப் போந்த கம்பர், திருவள்ளுவர் குறளிலமைந்த அருமையான சொல்லை எடுத்தமைத்து அதற்கு விளக்கமும் தருகின்றார் :

தொல்லருங் கால மெல்லாம்
பழகினும்
தூய ரல்லார்
புல்லலர் உள்ளம் தூயார்
பொருந்துவர்
எதிர்ந்த ஞான்றே
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற
இருவரும்
ஒருநாள் உற்ற
எல்லியும் பகலும் போலத்
தழுவினர்
எழுவிற் றோளார்

என்று பாடினார் கம்பர். தேசத்தாலும் குலத்தாலும் நிறத்தாலும் வேறுபட்ட சுக்கிரீவனும், விபீஷணனும் உள்ளங்கலந்து ஒருவரையொருவர் தழுவிய கோலம், பகலொளியும் காரிருளும் கலந்த காட்சியை ஒத்தது என்று கூறினார் கம்பர். இவ்விருவரது வரலாற்றாலும் ஒத்த உணர்ச்சி ஏற்படும் முறை ஒருவாறு விளங்கு கின்றது. வானர நாட்டிலிருந்து வாலியால் துரத்தப் பட்டவன் சுக்கிரீவன்; இலங்கையிலிருந்து இராவணனால் வெளியேற்றப்பட்டவன் விபீஷணன். இருவரும் உடன் பிறந்தவர்; கொடுமையை நன்றாக உணர்ந்தவர்; அக் கொடுமைக்குத் தப்பி நன்னெறியை நாடியவர்; அறத்தை நிலை நிறுத்தும் ஆற்றலுடையவன் இராமன் என்றறிந்து, அவனைச் சரணம் அடைந்தவர். ஆகவே, பிறந்த இடத்தில் விளைந்த தீமையாலும், அடைக்கலம் புகுந்த இடத்தில் பெற்ற நன்மையாலும் இருவரும் ஒத்த உணர்ச்சியுற்றார் என்பது தெளிவாக விளங்குகின்றது.

கண்ணும் காதலும்

தமிழ்ப் பெருங் காவியமாகிய கம்பராமாயணத்தில் இன்பச் சுவை நிரம்பியது சீதா கல்யாணம். சீதையின் திருமணம், ஒரு காதல் திருமணமாகச் சித்திரிக்கப்படு கின்றது. திருக்குறளிலே கூறப்படும் காதல் நெறியை விளக்குகின்றார் கம்பர். மணப்பருவமுற்ற ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் தனிமையிற் கண்டு கொள்ளும் இயற்கை முறையை எடுத்துரைக்கின்றது திருக்குறள் :

கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன
பயனும் இல

என்பது வள்ளுவர் வாக்கு. காதலர் கண்கள் இசைந்து விட்டால் அவர்கள் வாயினாற் பேச வேண்டுவதில்லை என்பது இக் குறளின் கருத்து. இந்தக் கருத்தை விவரித்துரைக்கின்றார் கம்பர்.

மிதிலை மாநகரில், மங்கைப் பருவமுற்ற சீதை, ஒரு மாளிகையில் வாழ்ந்தாள். ஒரு நாள் மாலைப் பொழுது மாளிகையின் மேடையிலே நின்று, இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றாள் சீதை. மெல்லிய பூங்காற்று வீசிக்கொண்டிருந்தது. அன்னங்கள் விளையாடிக்கொண்டிருந்தன. அப் பொழுது அந்த மாளிகை வீதியின் வழியாக விசுவாமித்திர முனிவ ரோடும், தம்பியாகிய இலக்குவனோடும் இராமன் நடந்து சென்றான். மாளிகையின் அருகே வரும் பொழுது தற்செயலாக மேடையிலே நின்ற சீதையை நோக்கினான் இராமன். அம் மங்கையும் எதிர் நோக்கினாள். இருவர் கண்ணும் கலந்தன. காதல் பிறந்தது. இக் காதற் காட்சியை எழுதிக் காட்டு கின்றார் கம்பர் :

எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும்
நோக்கினான் அவளும் நோக்கினாள்

என்ற பாட்டிலே காதலர் கண்களைக் காணலாம்.

இருவர் கண் நோக்கும் ஒத்தன. இன்பம் அவருள்ளத்திற் பொங்கிற்று. காதல் என்னும் பாசம் இராமனை இழுத்துச் சீதையின் இதயத்தில் சேர்த்தது; சீதையை ஈர்த்து இராமன் இதயத்தில் வைத்தது. இவ்வாறு, ஒருவர் உள்ளத்தில் ஒருவர் புகுந்த தன்மையைப் பாடினார் கம்பர்:

பருகிய நோக்கெனும் பாசத் தால்பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும்
மாறிப்புக்கு இதயம் எய்தினார்

என்று காதலின் செய்கையை உணர்த்தினார் கம்பர். இவ்வாறு காதலுற்ற இருவரும் தாம் கண்ட இன்பக் காட்சியை உள்ளத்தில் அழகொழுக எழுதி மகிழ்ந்து மயங்குகின்றார்கள். மையல் நோயால் நையலுற்ற சீதை, தன் உள்ளங் கவர்ந்த கள்வனை மனக் கண்ணால் கண்டு உருகுகின்றாள். “வீதிவாய்ச் சென்ற காதலன், கண்வழி நுழையும் ஓர் கள்வனோ?” என்று ஆசையுற்றுப் பேசுகின்றாள். அவனுடைய அங்க நலங்களையெல்லாம் எண்ணி எண்ணி இன்பமும் துன்பமும் ஒருங்கே அடைகின்றாள். சீதையின் நிலை இவ்வாறாக, காதலனாகிய இராமன் அடைந்த மனத் துயரையும் வருணிக்கின்றார் கம்பர். மாளிகையிற் கண்ட மங்கையின் உருவம் அவன் கண்ணையும் கருத்தையும் முற்றும் கவர்ந்து கொள்கின்றது. அவளையன்றி மற்றொரு பொருளை நினைக்க அவனால் முடியவில்லை. எங்கும் அவள் பொன் மேனியே காட்சியளிக்கின்றது. இவையெல்லாம் காதலின் கோலம் என்று காட்டுகின்றார் கம்பர்.

காதல் மணம் புரிந்து இன்புற்றிருக்கும் கணவனும் மனைவியும் எப்பொழுதும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருக்கவே ஆசைப்படுவர். பிரிவு என்பது காதலர்க்குப் பெருந்துன்பம் விளைக்கும்; தீயிறை சுட்டாற் போன்ற வேதனை உண்டாக்கும். ஆயினும், காதலனாகிய கணவன், வீட்டைவிட்டுப் பிரியாமல் இருக்க முடியுமா? இன்ப வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள் இன்றியமையாத தன்றோ? இல்வாழ்க்கையில் இருந்து இல்லறம் ஆகிய நல்லறம் புரிவதற்குப் பொருள் அவசியமன்றோ ? அத் தகைய பொருளைத் தேடிக் கொணர்வதற்காகக் கணவன், மனைவியைப் பிரிந்துதானே ஆக வேண்டும் ? ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்று ஆன்றோர் கூறியபடி கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்று பெரும் பொருள் ஈட்டுதலும் நன்றே யன்றே! ஆண்மையுள்ள கணவன் – வீரனாகிய காதலன் – தன் நாட்டில் போர் நிகழும் பொழுது வீட்டில் இருக்க முடியுமா? இருக்கக் கூடுமா? எத்தனை நாள், எத்தனை மாதம், எத்தனை ஆண்டு போர் நடந்தாலும் அத்தனை நாளும், அத்தனை மாதமும், அத்தனை ஆண்டும் ஆடவன், காதல் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க நேருமன்றோ ? காதலன் பிரிந்து சென்றதும் காதலி படும் வேதனையைத் திருகுறள் எடுத்துரைக்கின்றது. கணவனைப் பிரிந்த ஒரு காதலி தன் ஆற்றாமையைத் தோழியிடம் எடுத்துரைக்கும் முறையில் அமைந்தது குறள்.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுட
லாற்றுமோ தீ

என்று பேசினாள் ஒரு காதலி. “கண்ணனைய என் தோழி! காதலன் நோய் தீயை ஒத்தது என்று சொல் கின்றார்களே ! தீயைப் போன்றதுதானா காதல்? என் கணவன் என்னைவிட்டுப் பிரிந்த நேரமுதல் நான் படுகின்ற வேதனைக்கு ஓர் அளவில்லையே? ஒருவர் தொட்டால் தானே நெருப்புச் சுடும்? விட்டால் சுடமாட்டாதே ! காதல் நோய், என் கணவன் என்னை விட்டுப் பிரிந்தபோது என்னைச் சுட்டு எரிக்கின்றதே ! தீயினும் கொடிதன்றோ காதல்” என்று கேட்கின்றாள்.

இக் கருத்தைக் கதைப் போக்கிலே அமைத்துக் காட்டுகின்றார் கம்பர். அரசாளப் பிறந்த இராமன் நாட்டை விட்டகன்று, பதினாலாண்டு வனவாசம் செய்தல் வேண்டும் என்ற ஆணை பிறந்தது. அந்த ஆணையை அகமும் முகமும் மலர்ந்து ஏற்றுக் கொண்டான் இராமன். தன் காதலியாகிய சீதையிடம் விடைபெற்றுச் செல்லும் நோக்கத்துடன் அவள் மாளிகைக்குச் சென்றான் ; நிகழ்ந்த செய்தியை நிதானமாக அறிவித்தான்; “என் தம்பி பரதன் இந் நாட்டை அரசாள்வான்; நான் சில காலம் கானகம் சென்று வருகின்றேன். அதுவரை நீ வருந்தாமல் இங்கே இரு’ என்று கூறினான். காதலன் சொல்லிய சொல்,

சீதையின் செவிகளைச் சுட்டது; அவள் நெஞ்சை அறுத்தது. தன் நாயகன் முடிசூடி அரசாளும் பதவியை இழந்துவிட்டானே என்று அவள் வருந்த வில்லை; வனவாசம் செய்யப் போகின்றானே என்றும் வருந்த வில்லை. ‘நீ இங்கேயே இரு; நான் உன்னை விட்டுப் பிரிந்து போகிறேன்’ என்று அவன் சொல்லிய கொடுமை யான சொல்லைக் கேட்டபோது அவள் நெஞ்சம் துடித்தது; அருந்துயர் உற்று அழுது தேம்பினாள்.

சீதையின் கருத்தை அறிந்தான் இராமன்; மெல்லியல் வாய்ந்த காதலி, கானகத்தின் கடுமையையும் வெம்மையையும் அறியாது பேசுகின்றாள் என்று கருதினான்; அரண்மனையில் வாழ்ந்த மங்கைக்கு ஆரண்யத்தின் தன்மை எப்படித் தெரியும்? ஆதலால், அதை எடுத்துச் சொன்னால் அவள் தடுத்து ஒன்றும் பேச மாட்டாள்’ என்று எண்ணினான்; கண்ணீர் வடித்து நின்ற காதலியை நோக்கி, ”அந்தோ! நீ காட்டின் கடுமையைத் தெரியாது பேசுகின்றாய்; கல்லும் முள்ளும் நிறைந்தது கானகம். கடுமையான வெப்பம் உடையது கானகம். அங்குள்ள வெப்பத்தை உன்னால் தாங்க முடியாது” என்றான். அது கேட்ட சீதை ”ஐயனே, நின் பிரிவினும் சுடுமோ அப் பெருங்காடு?” என்று வினவினாள்.

பரிவி கந்தம னத்தொடு பற்றிலாது
ஒருவு கின்றனை, ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது, ஈண்டுநின்
பிரிவி
னும் சுடு மோபெருங் காடு

என்றாள். “என் ஐயனே, கானகத்தில் வெயில் சுடும் என்று கூறுகின்றாயே, அது உடலைத்தானே சுடும்? நீ என்னைப் பிரிந்து சென்றால், பிரிவுத் துன்பம் என்  உள்ளத்தைச் சுட்டெரிக்குமே! நின் பிரிவினும் சுடுமோ அப் பெருங் காடு” என்று உணர்ச்சியோடு பேசினாள் சீதை. அதற்கு மறுமொழி சொல்ல வகையறியாது கண்ணீர் சுரந்த கண்களோடு நின்றான் இராமன் என்று கம்பர் கூறுகின்றார். காதலர் பிரிவு எரியினும் கொடிது என்று திருக்குறள் கூறிய கருத்தைக் கம்பர் இவ்வாறு விரித்துரைத்து விளக்கிப் போந்தார்.

கணவன் பின்னே கானகம் போந்த சீதையைப் பஞ்சவடிச் சாலையில் வஞ்சவேடம் புனைந்து வந்த இராவணன் கவர்ந்து இலங்கையில் சிறை வைத்தான் ”பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி” என்று கூறினான், இராவணன் தம்பியாகிய விபீஷணன். சிறையிருந்த சீதை சிந்தை நொந்து அழுதாள். ஒரு நாள் அவள் வடித்த கண்ணீரைக் கண்டு இரக்கமற்ற அரக்கியரும் தளர்ந்து அழுது விட்டார்கள். இங்ஙனம் எளியவளாகிய சீதை அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அரும்படை யாயிற்று. வல்லரசனான இராவணனை மாய்த்தது; அரக்கர் குலத்தையும் வேரறுத்தது. திருவள்ளுவர் எடுத்துரைத்த கண்ணீரின் ஆற்றலைத் திறம்பட விளக்கிக் காட்டும் காவியம் கம்பராமாயணம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *