
வழிவழி வள்ளுவர்
ரா. பி. சேதுப்பிள்ளை
மணிமேகலையிலே வள்ளுவர்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காவியங்கள் என்பர். சிலம்பை இசைத்த இளங்கோவடி களும், மணிமேகலையை இயற்றிய சாத்தனாரும் சிறந்த நண்பர்கள். அடிகளைப் போலவே சாத்தனாரும் திருக்குறளில் ஈடுபட்டவர்; அதன் ஆசிரியரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், அவர் வாய்மொழியைப் பொருளுரை” என்றும் போற்றியவர்.
பொது மாதரும் குல மாதரும்
மாதவியின் மகளாகிய மணிமேகலை இளமை யிலேயே துறவறத்தை மேற்கொண்டாள். அருள் நெறியில் நின்ற அம் மங்கையைப் பொருள் நெறியிற் சேர்க்க விரும்பினாள் அவள் பாட்டியாகிய சித்திராபதி; இன்பத் துறையில் இழுக்க முயன்றான் உதயகுமரன் என்னும் அரசிளங்குமரன். பொது மாதர் குலத்தைச் சேர்ந்த மணிமேகலை, ஆடலும் பாடலும் அழகும் காட்டி ஆடவர் உள்ளங் கவர்ந்து பொருள் சேர்க்கும் தொழிலை விட்டு, மாதவர் சங்கத்தைச் சேர்ந்து துறவு பூண்டது மதியீனம் என்று கருதினாள் சித்திராபதி.
பொது மாதரைப் பரத்தையர் என்றும், விலை மாதர் என்றும் கூறுவதுண்டு. அவரைப் ‘பொருட் பெண்டிர்’ என்றார் திருவள்ளுவர். பொருளையே குறிக்கோளாகக் கொண்டவர் என்பது அச்சொல்லின் பொருள். அவருடைய தொழிலை மணிமேகலை விளக்கிக் கூறுகின்றது :
“ஆடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
………………………………………………………….
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்
பண்தேர் மொழியில் பயன்பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிர்”
என்பது மணிமேகலை. இன்பத்துறையில் எளியராகிய செல்வரிடம் உள்ள பொருளைக் கொள்ளையிடும் மாதரைக் கொண்டி மகளிர்’ என்றார் மணிமேகலையாசிரியர். இம் மகளிர் வண்டு போன்றவர். வண்டு, தேனுள்ள பூவை நாடிச் செல்லும்; அப் பூவில் அமர்ந்து தேனை முற்றும் பருகும். பின்பு அதை விட்டுத் தேனுள்ள மற்றொரு மலரில் சென்று சேரும். இது போன்றதே பொருட் பெண்டிரின் இயற்கையும்.
“நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல் குவம்”
என்று சித்திராபதியின் வாயிலாக இப் பொது மாதரின் இயற்கையைக் கூறுகின்றது மணிமேகலை.
இவ்வாறு பொருட்பெண்டிரின் தன்மையை உதய குமரனிடம் எடுத்துரைத்த சித்திராபதி, குல மாதர் ஒழுக்கத்திற்கும் பொது மாதர் பழக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் விளக்கினாள். ‘சிறை காக்கும் காப்பு’ என்று வள்ளுவர் கூறியவாறு கட்டும் காவலும் உடையவர் குலமாதர்.
”கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னுறு கணவன் சாவுறில் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வம் பேணாப் பெண்டிர்”
என்று குலமாதரைப் புகழ்ந்தாள் சித்திராபதி. குல மாதருக்குக் கன்னிப் பருவத்திலும் காவல்; கணவனோடு வாழுங்காலத்திலும் காவல் ; அவன் இறந்த பின்னரும் காவல் . இத்தகைய குலமாதர், கொண்ட கணவனையே தெய்வமாகக் கருதுவர்.
”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்றார் வள்ளுவர். கணவனே தெய்வம் எனக் கொண்ட கற்புடைய மாதர் ‘பெய்’ என்றால் மழை பெய்யும் என்று திட்பமாகக் கூறினார் திருவள்ளுவர். இது புனைந்துரையோ என்று எவரும் ஐயுறலாகது எனக் கருதி,
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”
என்று அறிவுறுத்துகின்றது மணிமேகலை. திருவள்ளுவர் பொய்யில் புலவர்; அவர் அருளிய நல்லுரை புனைந்துரை யன்று, பொருளுரையே என்று மணிமேகலையாசிரியர் கூறுகின்றார்.
வான் தரு கற்பு
மாசிலாக் கற்புடைய மாதரை ‘வான் தரு கற்பினர்’ என்று மணிமேகலை சிறப்பிக்கிறது. மழை பொழியச் செய்யும் கற்பே ‘வான் தரு கற்பு’ எனப்படும். இத்தகைய கற்பு வாய்ந்த ஒரு பெண்மணியின் பெருமையை மணிமேகலை எடுத்துரைக்கின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த ஆதிரை என்னும் மங்கை அவ்வூர் வணிகன் ஒருவனை மணந்து இல்லறம் நடத்தினாள். அவ் வணிகன் ஒரு பொதுமாதின் மையலிலே தாழ்ந்து பொருளை யெல்லாம் இழந்தான். வறுமை யுற்ற நிலையில் மீண்டும் வாணிகம் செய்ய விரும்பிக் கப்பலேறிச் சென்றான். அக் கப்பல் கடுங்காற்றில் அகப்பட்டுக் கவிழ்ந்தது. அச்செய்தியை அறிந்தாள் ஆதிரை; கணவன் இறந்த பின் உயிர்வாழ ஒருப்படாது இறக்கத் துணிந்தாள்; முதுகாட்டில் நெருப்பை மூட்டி அதனுள்ளே இறங்கினாள். அவளைச் சூழ்ந்து எழுந்த நெருப்பு சுடாது நின்றது. அது கண்ட ஆதிரை, தீயும் கொல்லாத் தீவினையேன் இனி என்ன செய்வேன்’ என்று வருந்தி அழுதாள். அப்போது, ஆகாயவாணி, “மாதே ! உன் கணவன் இறக்கவில்லை. நாகர் மலையில் இருக்கின்றான். இன்னும் சில காலத்தில் இங்கு வந்து சேர்வான்” என்று கூறிற்று. அது கேட்ட ஆதிரை துயரம் தீர்ந்து பொறுமையுடன் இருந்து கணவனைக் கண்டு இன்புற்றாள். இம் மாதின் சீர்மையை,
“குளன் அணி தாமரைக் கொழுமலர் நாப்பண்
ஒருதனி ஓங்கிய திருமலர் போன்று
வான் தரு கற்பின் மனையுறை மகளிர் தான்
தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள்”
என்று மணிமேகலை புகழ்ந்து போற்றுகிறது. கற்பினுக்கு ஓர் அணியாய்த் திகழ்ந்த ஆதிரை ‘வான் தரு கற்பு’ வாய்ந்த மாதருள் தலை சிறந்து விளங்கினாள்.
ஆதிரையைப் போன்று கற்புடைய மாதர், கொண்ட கணவன் மனத்துள் உறைவரேயன்றிக் கண்டவர் உள்ளத்திற் சென்று சேரமாட்டார் என்று சாத்தனார் கூறிப் போந்தார்.
“மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம்
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர்“
என்பது மணிமேகலை. வீட்டை விட்டு வெளியே செல்லும் குல மாதருடைய நடையும் உடையும் ஆடவர் கண்ணையும் கருத்தையும் கவரும் தன்மை வாய்ந்தனவாய் இருத்தலாகாது என்பது ஆன்றோர் கொள்கை. ‘தீதிலா வடமீன்’ என்று புகழப்படும் அருந்ததி போன்ற மாதர், நெஞ்சு புகாப் பெருமை வாய்ந்தவர் என்று தமிழ்க் கவிதை கூறும்.
மாதர் கற்பும் மன்னன் கடமையும்
இத்துணைப் பெருமை வாய்ந்த கற்பு நெறியைக் குறிக்கொண்டு காத்தல் மன்னவன் கடமை என்று மணிமேகலை வற்புறுத்துகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் அரசு புரிந்த நெடுமுடிக் கிள்ளியின் மைந்தனாகிய உதயகுமரன், தவநெறியில் நின்ற மணிமேகலையைக் காதலித்தான்; பூந்தோட்டத்திற்கு அம் மங்கை மலர் பறிக்கச் சென்ற போது அவளைப் பின் தொடர்ந்தான். அங்கிருந்த தெய்வம், ”தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக” என்று ஆணையிட்டது. அதனையும் பொருட்படுத்தாது, தீய நெறியில் முனைந்து நின்ற உதயகுமரன் ஒரு விஞ்சையன் வாளால் வெட்டுண்டு விழுந்தான். அச் செய்தியை அறிந்தான் அரசன். அவன் நீதி தவறாதவன்; திருவள்ளுவர் அறிவுறுத்திய வண்ணம் அரச நீதியை முட்டாமற் செலுத்தும் மனத்திட்பம் வாய்ந்தவன்; தவ நெறியில் வாழ்ந்த மணிமேகலைக்குத் தவறு செய்யக் கருதிய மைந்தன் இறந்தொழிந்தது தக்கதே என்று எண்ணினான். ஆயினும், ஒரு குறையை நினைத்து வருந்தியது அவன் உள்ளம். குற்றம் செய்தவனைத் தன் கையால் ஒறுத்து, நீதியின் நீர்மையை உலகறியக் காட்ட இயலாமற் போயிற்றே என்று அவன் ஏங்கினான்.
”யான் செயற் பாலது இளங்கோன் தன்னைத்
தான் செய் ததனால் தகவிலன் விஞ்சையன்“
என்று கூறினான்; ‘ஒரு பசுவிற்குத் தவறிழைத்த மைந்தனைத் தானே கொன்று முறை செய்த மன்னனைப் போல் மாதவ மங்கைக்குத் தவறிழைத்த உதயகுமரனை நானே கொன்று நீதி செலுத்த இயலாமற் போயிற்றே’ என்று அமைச்சரிடம் அங்கலாய்த்தான்.
”மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றாம்
மகனை முறை செய்த மன்னவன் வழி ஓர்
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தம்செவி உறுவதன் முன்னம்
ஈங்கிவன் தன்னையும் ஈமத்து ஏற்றுக“
எனப் பணித்தான்.
மன்னனும் மழையும்
அரசாட்சி, நீதி தவறாது நடைபெறுமாயின் நாட்டில் மழை குன்றாது என்றும், அது முறை தவறி நடக்குமாயின் மழை பெய்யாது என்றும் திருக்குறள் கூறுகின்றது.
“முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்”
என்றார் திருவள்ளுவர். பருவத்தில் மழை பெய்யா தொழிந்தால் பயிர்த்தொழில் நடவாது; பசியின் கொடுமை மக்களை வாட்டி வருத்தும். இதனாலேயே ”வான் நோக்கி வாழும் உலகெல்லாம்” என்ற வள்ளுவர் வாய்மொழி எழுந்தது. இவ்வுண்மையை,
“கோன்நிலை திரிந்திடில் கோள் நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை“
என்று கூறுகின்றது மணிமேகலை.
பசியென்னும் தீப்பிணி
நாட்டில் வாழும் உயிர்களை வாட்டி வருத்தும் தீமைகள் மூன்று. அவை, பசியும் பிணியும் பகையும் ஆகும்.
”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு”
என்று பாடினார் திருவள்ளுவர். பசியினால், பிணி பெருகும்; பகை வளரும். இவ்வாறு தீமைகள் பலவும் பசியால் விளைதலால் அதனைத் ‘தீப்பிணி’ என்றார் திருவள்ளுவர். அப் பிணியால் மாந்தருடைய நலங்கள் எல்லாம் அழிந்து ஒழியும். இத் தன்மை வாய்ந்த தீப் பிணியைத் தீர்த்தல் தலையாய அறம் என்று திருக்குறள் கூறுகின்றது.
”அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி”
என்பது வள்ளுவர் வாக்கு. இக் குறளில் அமைந்த ‘அழிபசி’ என்ற சொல்லின் கருத்தை விரித்துரைக் கின்றது மணிமேகலை.
“குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்”
நாண் அணிகளையும் மாண் எழில் சிதைக்கும்
…………………………………………………………………………..
பசிப்பிணி என்னும் பாவி
என்ற மணிமேகலை அடிகளால், பசியினால் விளையும் தீமை புலனாகும். பசி நோய், குல நலத்தை அழிக்கும்; மேன்மையைக் கெடுக்கும்; அறிவினைக் கொல்லும் ; மானத்தை மாய்க்கும்; அழகினைச் சிதைக்கும் என்று விரித்துரைத்த மணிமேகலையைத் தழுவியே ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்ற பிற்காலப் பாட்டு எழுந்தது.
இத்தகைய பசிநோயை மாற்றும் அறப்பணி மணி மேகலையிலே போற்றப்படுகின்றது.
“மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே”
என்பது மணிமேகலை. ஆபுத்திரன் என்னும் அற வோனும் மணிமேகலையாகிய கதா நாயகியும் அமுதசுரபி என்ற திருவோட்டைக் கையில் ஏந்திப் பசித்தோர்க்கெல்லாம் உணவளித்தனர்; அறம் வளர்த்தனர்.
அன்பும் அருளும் வாய்ந்தவன் ஆபுத்திரன்; மன்னுயிரை யெல்லாம் தன்னுயிர்போல் கருதிய நல்லான்; அறங்களுள் , ” ஒன்றாக நல்லது கொல்லாமை” என்பதை உணர்ந்த உரவோன்.
புலை சூழ் வேள்வி
முன்னாளில் வேள்வியின் பெயரால் பாரத நாட்டில் உயிர்க்கொலை நிகழ்ந்தது. பசுக்களையும் பிற உயிர்களையும் பலியிட்டு வேள்விகள் செய்யப்பட்டன. இக் கொடுமையைத் தடுக்க முயன்றனர் சான்றோர்.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று“
என்று அறிவுறுத்தினார் திருவள்ளுவர். வட நாட்டில் புத்தரும் இப் புலை சூழ் வேள்வியைத் தடை செய்தார். “ஒரு நாள் பிச்சை எடுப்பதற்காக இராச கிருக நகரத்தை யடைந்த கௌதமர், அந் நகரத்து அரசனாகிய பிம்பசாரன் பல பசுக்களைப் படுத்து யாகம் செய்கின்றான் என்பதைக் கேள்வியுற்று, மிக்க பரபரப்புடன் அந்த யாக சாலைக்குச் சென்று, கொல்லாமையாகிய நல்லறத்தின் பெருமையை விரித்துக் கூறி, அவ் வேள்வியில் நிகழும் கொலையை மாற்றினார்!” என்பது அவர் வரலாற்றில் கண்ட செய்தி.
புத்தரைப் போலவே புலை சூழ் வேள்வியைத் தடுத்தான் ஆபுத்திரன். அவன் வரலாற்றை மணி மேகலை விரித்துரைக்கின்றது. ஓர் அந்தணன் வீட்டு யாக சாலையில் பசு ஒன்று கட்டப்பட்டிருந்தது. வேடர் வலையிற்பட்ட மான் போல், அது நடுங்கிக் கண்ணீர் வடித்தது. அதன் உயிரைக் காப்பாற்றக் கருதினான் ஆபுத்திரன். நள்ளிரவில், எல்லோரும் கண்ணுறங்கும் வேளை பார்த்து, அப் பசுவின் கட்டவிழ்த்து, வெளியே ஓட்டிச் சென்றான். காட்டு வழியிலே அதைக் கண்டு கொண்ட அந்தணர், ஆபுத்திரனைக் கள்வன் என்று கருதிக் கழியால் அடித்தனர். அது கண்ட பசு , சீற்ற முற்று ஆபுத்திரனைத் துன்புறுத்திய ஓர் அந்தணன் பாய்ந்து, கொம்புகளால் அவன் வயிற்றைக் கிழித்தெறிந்து காட்டிற்குள் ஓடிவிட்டது. அப்போது, இரக்கமற்ற அம்மாந்தரை நோக்கி, ‘இப்பசு உங்களுக்கு என்ன தீங்கு செய்தது? காட்டிலுள்ள புல்லை மேய்ந்து கருணையோடு பாலைச் சுரந்தளிக்கும் பசுவினிடம் பகைமை கொள்வது முறையோ?
“விடுநில மருங்கில் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந் தூட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை“
என்று வினவினான் ஆபுத்திரன். இவ்வாறு வேத வேள்வியைப் பழித்த குற்றத்திற்காக அவனை ஊரினின்றும் விரட்டியடித்தனர். அதனால் வேறு புகலிடமின்றித் தென்மதுரையை அடைந்து, அம்பலத்தை இருப்பிடமாகக் கொண்டு பிச்சையேற்றுப் பிழைத்தான் அவ்வறவோன்.
ஈத்துவக்கும் இன்பம்
”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
என்ற வள்ளுவர் வாக்கின் வழி நின்று , பிச்சைச் சோற்றை அற்றார்க்கும் அலந்தார்க்கும் கொடுத்து மிச்சத்தைத் தானுண்டு வாழ்ந்தான் ஆபுத்திரன்;
“காணார், கேளார், கால்முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர், பிணிநடுக் குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி”
அம்பலத்திற் கண்ணுறங்கினான்; அவனுடைய சீலங் கண்டு அருள் கூர்ந்த சிந்தாதேவி என்னும் தெய்வம் பிச்சைப் பாத்திர மொன்றை அவன் கையிற் கொடுத்து, ”நாடெல்லாம் வறுமையுற்றாலும் இவ்வோடு வறுமை அடையாது; கொடுக்கக் கொடுக்க இதிலுள்ள உணவு வளர்ந்துகொண்டே இருக்கும்” என்று கூறி மறைந்தது. அமுத சுரபி – என்னும் திருவோட்டைப் பெற்ற ஆபுத்திரன் அளவிலா மகிழ்ச்சி அடைந்தான்; வருந்தி வந்தவர்க்கெல்லாம் வயிறார உணவளித்தான்; அவர் திருந்திய முகங் கண்டு இன்புற்றான். இத்தகைய இன்பத்தை ஈத்துவக்கும் இன்பம்’ என்பர் திருவள்ளுவர்.
“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்”
என்பது திருக்குறள். ‘பொருள் மேன்மேலும் சேர்வது கண்டு இன்புறும் செல்வர்கள், அதனினும் சிறந்ததோர் இன்பம் உண்டு என்பதை அறியாரோ? ஏழையர்க்கு உண்டியும் உறையுளும் கொடுத்து, அவர் முகம் மலர் வதைக் கண்டு அருளுடையார் எய்தும் இன்பத்தை இப் பொருளுடையார் அறிந்தாரில்லையே’ என்று வருந்து கின்றார் வள்ளுவர்.
அமுத சுரபியின் உதவியால் பசி நோயகற்றி, நாள்தோறும் அறம் வளர்த்த ஆபுத்திரன் பெருமையை அறிந்தான் விண்ணவர் வேந்தனாகிய இந்திரன்; உடனே மண்ணுலகிற் போந்து அமுத சுரபியுடன் விளங்கிய அறவோனைக் கண்டான்; தன்னைத் தானே அறிமுகம் செய்துகொண்டு, “ஐயனே! என்ன பயன் கருதி நீ அறஞ் செய்கின்றாய்! சொல். அதனை இப்பொழுதே தருகின்றேன்” என்றான், இம்மைச் செய்தது மறுமைக்கு ஆகும் என்ற எண்ணம் இறையளவும் இன்றி , ஈத்துவக்கும் இன்பமே இணையிலாப் பேரின்பம் எனக் கருதிய ஆபுத்திரன், அமரர் கோமானை நோக்கிச் சிரித்தான்; பின்பு தன் கருத்தைக் கூறலுற்றான் : “அரசே! உன்னுடைய நாட்டில் எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தி வாழ்வர். அங்கு ஈவாரும் இல்லை; ஏற்பாரும் இல்லை. இங்கு நான், வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து, அவர் திருந்து முகங்கண்டு திளைக் கின்றேன். இதற்கு நிகரான இன்பம் உன் நாட்டில் என்ன இருக்கின்றது?” என்று மாற்றம் உரைத்தான். அது கேட்ட வானவர்கோன் வாயிழந்து மறைந்தான். இதனால் அன்றோ ,
“ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து
வாழ்வரே வண்கண வர்“
என்ற வாசகம் எழுந்தது?
பிறப்பும் இறப்பும்
அறம் ஒன்றே அழியாத் தன்மை வாய்ந்தது என்றார் திருவள்ளுவர். ‘மாந்தர் பெற்ற உடலும், உடைமையும், பிறவும் அழிந்தொழியும். ஒல்லும் வகையால் ஓவாது செய்யும் அறமே உறுதுணையாகும்’ என்று வள்ளுவர் கருத்தை விளக்கிக் கூறுகின்றது மணிமேகலை.
“இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது“
என்று வலியுறுத்துகின்றார் சாத்தனார்.
இங்ஙனம் ஆன்றோர் அறிவுறுத்திய அறத்தின் சீர்மையை அறியாது, ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்று வாழ்வோரும் இவ்வுலகில் உண்டு. நாகர் மலையில் வாழ்ந்த மக்கள் அத் தகையவர். கருங் கடலில் மரக்கலம் உடைந்த பொழுது, பாய்மரம் ஒன்றைத் தெப்பமாகப் பற்றிக் கொண்டு நாகர் நாட்டைச் சேர்ந்த ஆதிரையின் கணவனாகிய சாதுவன், நாகர் தலைவனைக் கண்டான். கள்ளும் ஊனும் நிறைந்த அந்நாட்டில் கரடி போல் வீற்றிருந்தான் அத் தலைவன், தன் நாட்டிற்கு வந்தவனிடம் இரக்கமுற்று, “இந்த நம்பிக்கு வேண்டுமளவு கள்ளும் ஊனும் கொடுத்துப் பின் இளையவளாகிய ஒரு நங்கையையும் கொடுங்கள்” என்று கட்டளையிட்டான் அவன். அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தான் சாதுவன். அது கண்டு வியப்புற்ற தலைவன்
“பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மாக்கட்கு
உண்டோ ஞாலத்து உறுபயன்”
என்று வினவினான். பெண்டிரும் உண்டியுமே இவ்வுலகத்திற் கண்ட பயன் என்றுரைத்த நாகர் தலைவனிடம், மது உண்பதால் வரும் தீமையையும், உயிர்க்கொலையால் வரும் பாவத்தையும் சாதுவன் எடுத் துரைத்தான், பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும் என்றும், ஒரு பிறப்பில் பாவம் செய்தவர் மறுபிறப்பில் அதன் பயனை அடைவர் என்றும் திருவள்ளுவர் சொல்லிய அறவுரை களை இவனுக்குத் தெரிவித்தான்.
”உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“
என்ற திருக்குறளின் கருத்தை,
“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்“
என்று உரைத்தான் சாதுவன்; இவ்வாறு மாறிமாறி வரும் பிறப்பில் ஓர் உயிர் செய்யும் நல்வினை தீவினைகளுக்குத் தக்க வண்ணம் அதற்கு இன்ப துன்பங்கள் உண்டாகும் என்று அறிவுரை கூறினான்.
குற்றங்களின் வகை
புத்தமதச் சார்பாக எழுந்த மணிமேகலை, பத்து வகையாகப் பாவங்களை வகுத்துக் கூறும். அவை மனம் மொழி மெய் என்னும் மூன்றாலும் மாந்தர் செய்யும் குற்றங்களாகும். மனத்தில் நிகழும் குற்றங்கள் மூன்று :
“காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்”
என்ற வள்ளுவர் வாக்கில், மனத்தால் நிகழும் முக் குற்றங்களும் முறையாக உணர்த்தப்படுகின்றன. கௌதம் புத்தர் இம் மூன்று குற்றங்களையும் முற்ற அறுத்தவர் என்பர். ”போதி மூலம் பொருந்தியிருந்து, மாரனை வென்று வீரனாகி, குற்ற மூன்றும் முற்ற அறுக்கும் வாமன்” என்று புத்த தேவனைப் போற்றிப் புகழ்கின்றது மணிமேகலை. மனத்தில் நிகழும் இக் குற்றங்களை,
”வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளந் தன்னில் உருப்பன மூன்றும்”
என்று மணிமேகலை கூறும்.
இனி, வாக்கில் நிகழும் குற்றங்களையும் விரித்துரைக்கின்றார் வள்ளுவர். பொய் சொல்லுதல், புறங்கூறுதல், வன் சொல் வழங்குதல், வெற்றுரையாடுதல் என்னும் நான்கும் வாக்கிலே விளையுங் குற்றங்களாகும். இவற்றை ஒழித்தல் வேண்டும் என்று அழுத்தமாகக் கூறுகின்றது திருக்குறள்:
”பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”
என்ற வள்ளுவர் வாக்கில், பொய்யாமையே சிறந்த அறம் என்பது வற்புறுத்தப்படுகின்றது. ஒருவன் இல்லாதவிடத்து அவனைப் பழித்தும் இழித்தும் பேசுதல் குற்றம் என்பது வள்ளுவர் கொள்கை. புறங்கூறி வாழ்வதினும் இறந்தொழிதல் நன்று என்றார் வள்ளுவர்.
“புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்”
என்பது அவர் வாக்கு.
வாக்கிலே வன்சொல் வரலாகாது. இன்சொல்லால் இன்பம் பெருகும்; துன்பம் குறையும்; அறம் வளரும்; பாவம் தேயும்.
“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது?”
என்று கேட்கின்றார் வள்ளுவர். வன்சொல்லைப் போலவே வெறுஞ் சொல்லும் வழங்கலாகாது என்பது வள்ளுவர் கொள்கை. அறம் பொருள் இன்பமாகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைப் பேசலாகாது என்று திருக்குறள் தெளிவுறக் கூறுகின்றது.
“சொல்லுக சொல்லிற் பயனுடைய,சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்”
என்பது வள்ளுவர் அறம். இவ்வாறு அறத்துப் பாலில் வள்ளுவர் பரக்கக் கூறிய உண்மைகளைத் தொகுத்துக் கூறுகின்றது மணிமேகலை.
“பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்”
மாந்தரால் விலக்கப்பட வேண்டும் என்றார் சாத்தனார் . இவற்றோடு உடம்பில் தோன்றும் கொலை, களவு, இச்சை
என்னும் குற்றங்கள் மூன்றையும் கூட்டிப் பாவங்கள் பத்து என்று புத்த மதம் கூறும்.
இருவகைப் பற்று
இவ்வுலகில் பிறந்தும் இறந்தும் அலமரும் உயிர்கள் கரையேறுவதற்கு வழி காட்டுகின்றார் திருவள்ளுவர். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்’ என்பது அவர் வாய் மொழி. யான், எனது என்னும் இருவகைப் பற்றும் அற்ற நிலையில் பிறப்பு ஒழியும். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்ற திருவாக்கும் இவ்வுண்மையை உணர்த்துவதாகும்.
”பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேரின்பம்
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது அறிக”
என்ற மணிமேகலை, திருக்குறளின் கருத்தைத் தழுவி எழுந்ததாகும்.
இருவகைப் பற்றையும் விட்டொழித்தற்குரிய வழியையும் காட்டுகின்றார் வள்ளுவர். ஒரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றிக்கொண்டால் அகப்பற்றும் புறப்பற்றும் அழிந்தொழியும். இறைவன் திருவடியே தஞ்சம் என்று அடைந்தோரே பற்றறுத்து வீடு பெறுவர் என்பது,
”அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”
என்னும் திருக்குறளால் விளங்கும். அறவாழி அந்தணன் என்ற தொடர் இறைவனைக் குறிக்கும். புத்ததேவன் அறவாழி என்னும் தரும் சக்கரத்தால் எல்லா உயிர்களையும் ஆள்கின்றான் என்பது புத்த மதக் கொள்கை. ” அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டிக் காமற் கடந்த வாமன்” என்ற மணிமேகலையடிகளில் தரும் சக்கரத்தை உருட்டிப் புத்தர் பெருமான் உலகாளும் தன்மை குறிக்கப்படுகின்றது. இக் கருத்துப் பற்றியே ‘ஆதி முதல்வன் , அறவாழி ஆள்வோன்’ என்று மேலும், பாடிற்று மணிமேகலை. திருவள்ளுவர் குறித்த அறவாழி என்பது புத்த தேவனது தரும் சக்கரமே என்று பொருளுரைத்தலும் உண்டு.
தமக்குரியரும் பிறர்க்குரியரும்
அன்பே இறைவனது திருவுருவம் என்று எல்லாச் சமயங்களும் கூறும். எனவே, அன்பு வடிவாய இறைவனை அடைவதற்கு அன்பே சிறந்த வழி என்பார் ஆன்றோர்.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
என்று அன்புடையாரின் தன்மையை அறிவித்தார் திருவள்ளுவர். அன்பிலார் தம் நலமே பேணுவர்; அன்புடையார் பிறர் நலம் பேணுவர் என்ற திருக் குறளின் கருத்தை மணிமேகலை எடுத்தாளுகின்றது. அருளறம் பூண்ட புத்த தேவனை,
“தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்றும்
“பிறர்க்கு அறம் முயலும் பெரியோன்”என்றும்
போற்றுகின்றது மணிமேகலை. அப் பெரு மான் வாழ்ந்து காட்டிய நெறியைக் கடைப்பிடித்தால் சுய நலம் வீழும்; பொதுநலம் வாழும். இச் செந்நெறியை ஒரு மன்னன் வரலாற்றால் விளக்குகின்றது அக்காவியம்.
சாவக நாட்டின் தலைநகராகிய நாகபுரத்தில் புண்ணிய ராசன் என்பவன் அரசு வீற்றிருந்தான். அவன் ஆட்சியில் அறம் வளர்ந்தது; மறம் தளர்ந்தது. குடிகள் இன்புற்று வாழ்ந்தனர். இந் நிலையில் அம் மன்னன், “தவஞ் செய்வார் தங் கருமஞ் செய்வார்” என்னும் பொருளுரையை நினைந்து, அரசாட்சியில் வெறுப்புற்றுத் துறவறத்தை மேற்கொள்ள விரும்பினான். அதை அறிந்த அமைச்சன், ”அரசே! இந் நாட்டில் நீ பிறப்பதற்கு முன் பன்னீராண்டு மழை இல்லாமற் போயிற்று. உயிர்கள் எல்லாம் வறுமை வாய்ப்பட்டு வாடி வருந்தின. அக்காலத்தில் நீ தோன்றினை. நீ பிறந்தது முதல் இந் நாட்டில் வளம் சிறந்தது; துயரம் தீர்ந்தது. நீ அரசு துறந்தால் தாயைப் பிரிந்த சேய் போல் நாடு அலமரும். உன்னையே நோக்கி வாழும் உலகத்தைக் காவாமல் தன்னலம் கருதித் துறத்தல் தக்க தன்று” என்று கூறி மேலும்,
“தன் உயிர்க்கு இரங்கான் பிறஉயிர் ஓம்பும்
மன்னு பிர் முதல்வன் அறமும் ஈ தன்றால்”
என்று புத்த தேவனது அருள்நெறியை அறிவுறுத்தினான். அவ்வுரை கேட்ட மன்னன் மன்னுயிரைத் துறந்து செல்லும் கருத்தை ஒழித்தான் என்று மணிமேகலை கூறுகின்றது. பிறர்க்கென வாழும் பெருந்தகைமை, தொன்று தொட்டுத் தமிழ் நாடு போற்றும் பண்பாகும்.



