
வழிவழி வள்ளுவர்
ரா. பி. சேதுப்பிள்ளை
பாரதியார் கவிதையிலே வள்ளுவர்
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் மொழிக்குப் புத்துயிர் அளித்த கவிஞர் பாரதியார். தன்னரசிழந்து தயங்கிச் சோர்ந்து கிடந்த தமிழ் நாட்டைக் கவிதையால் தட்டி எழுப்பிய பெருமை அவருக்கே உரியதாகும். தென்னாட்டிலே தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க வேண்டும். எந்நாட்டிலும் தேமதுரத் தமிழோசை பரவவேண்டும் என்பது அவர் ஆசை. தமிழ் நாட்டின் அருந்தவப் புதல்வராகிய திருவள்ளுவரை அவர் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார். ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று தலை நிமிர்ந்து பாடினார். உலகத்தார்க்கெல்லாம் ஒளி நெறி காட்டிய அப் புலவர் பெருமானைத் ‘தெய்வ வள்ளுவன்’ என்று துதித்தார். அவர் சொல்லின் அழகும், பொருளின் ஆழமும் எல்லார்க்கும் பயன்படும் வண்ணம் பழகு தமிழிலே பாட்டிசைத்தார்.
கண்ணீ ரும் காவியமும்
பாரத நாடும் அதன் அங்கமாகிய தமிழ் நாடும் பண்புற்று ஓங்க வேண்டுமாயின் அன்னியர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பது பாரதியாரின் அடிப்படையான கருத்து. அவர் காலத்தில் அந் நோக்கங் கொண்டு உழைத்த அரும் பெருந் தலைவர்கள் அன்னிய அரசாங் கத்தின் சீற்றத்திற்கு ஆளாயினர். குடிகள் அஞ்சி ஒடுங்கினர்; அலறி அழுதனர்.
ஏழையர் வடிக்கும் கண்ணீரின் ஆற்றலைத் திரு வள்ளுவர் திண்ணமாகக் கூறிப் போந்தார். செந் தமிழ்க் காவியங்களும் அதற்குச் சான்று பகரும். கண்ணகியின் கண்ணீர் பாண்டியனைக் கொன்றது; மதுரையை எரித்தது. சீதையின் கண்ணீர் இராவணனை அழித்தது; அரக்கரை வேரறுத்தது. இளங்கோவும் கம்பரும் இவற்றை இறவாத செஞ்சொற் கவிதையால் விரித்துரைத்தனர்.
“பாஞ்சாலி சபதம்” என்னும் பாட்டிலே பாரதியாரும் இவ்வுண்மையை விளக்கிப் போந்தார். அற நெறி தவறிய துரியோதனன் செய்த கொடுமைக்கு ஆற்றாது பாஞ்சாலி பதறிக் கண்ணீர்விட்டு அழுதாள்.
“பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்
கேடுற்ற மன்னரறம் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கே போய்க் கோ‘ என்று அலறினாள்”
தருமன் தலை குனிந்து நின்றான்; கரை கடவாக் கடல் போல் வீமனும் விசயனும் அடங்கி நின்றார். காக்கும் கடமையுடைய ஐவரும் செயலற்று நின்ற நிலையினைக் கண்ட பாஞ்சாலி , பெண்மையின் பெயரால் அச் சபையை நோக்கி முறையிட்டாள்.
“பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்!
பெண்பாவம் அன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.”
அவள் வடித்த கண்ணீரைக் கண்டும், துரியோ தன்னைத் தடுப்பார் யாரும் அங்கில்லை. அந் நிலையில் திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ என்று உணர்ந்தாள் பாஞ்சாலி .
“துக்கங்கள் அழித்திடுவாய் – கண்ணா
தொண்டர் கண்ணீர்களைத் துடைத்திடுவாய்
நம்பிநின் அடிதொழுதேன் – என்னை
நாண் அழியா திங்கு காத்தருள்வாய்”
என்று வேண்டினாள். அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்யும் இறைவன் அவள் மானத்தைக் காத் தான். அன்று அம் மங்கை வடித்த கண்ணீர் துரியோ தனன் குலத்தை வேரறுக்கும் படைக்கலமாயிற்று என்று ‘பாஞ்சாலி சபதம்’ பகர்கின்றது.
கரும்புத் தோட்டத்திலே கண்ணீர்
வறுமையின் கொடுமையால் பிற நாட்டில் பிழைக்கச் செல்லும் இந்திய மாதர் படும் துயரத்தையும் உருக்க மாகப் பாடினார் பாரதியார். கடல் சூழ்ந்த நாடுகளில் கூலி வேலை செய்து பிழைக்கச் செல்லும் இந்திய மாதர்கள், மனம் நொந்து வடிக்கும் கண்ணீரை ஒரு பாட்டிலே எழுதிக் காட்டினார்.
“பெண் என்று சொல்லிடிலோ– ஒரு
பேயும் இரங்கும் என்பார் தெய்வமே – நினது எண்ணம் இரங்காதோ– அந்த
ஏழைகள் அங்குச் சொரியும் கண்ணீர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ – அதற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்
கண்ணற்ற தீவினிலே – தனிக்
காட்டினில் பெண்கள் புழுங்குகின்றார் – அந்தக்
கரும்புத் தோட்டத்திலே“
ஐயோ ! தெய்வமே ! அப் பெண்களின் துயரத்தை நீ அறியாயோ? கடும் பாடுபட்டுக் கை சோர்ந்து மெய் சோர்ந்து கசங்குகின்றார்களே! மானங் குலைந்து மயங்குகின்றார்களே ! தஞ்ச மின்றித் தவிக் கின்றார்களே ! அன்னார் வடிக்கும் கண்ணீர் வெறும் மண்ணில் விழுந்து மறைந்திடுமோ? கரும்புத் தோட்டத்தை ஆளும் கண்ணற்ற அன்னியரின் செல்வத்தை அறுத்திடாதோ?” என்ற கருத்து அப் பாட்டிலே விளங்குகின்றது.
நல்லோர் வடித்த கண்ணீர்
பாரத நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தேச பக்தர்களின் கண்ணீரையும் பாரதியார் கவிதையிலே காணலாம். சுதந்தரப் பயிரைக் கண்ணீர் விட்டு வளர்த்தனர், அப் பெரியோர். ”சர்வேசா ! இப் பயிரைக் கண்ணீராற் காத்தோம் ; கருகத் திருவுளமோ” என்று முறையிட்டார் கவிஞர்.
“மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ”
என்று எல்லாமறிய வல்ல இறைவனிடம் விண்ணப் பித்தார் பாரதியார். ‘நொந்தார்க்கு நீ யன்றி நோவழிப் பார் யார் உளரே’ என்று திருவருளை வேண்டி நின்றார். அன்று சிறையிலிருந்த சீலர் வடித்த கண்ணீர் இன்று ஆங்கில வல்லரசின் ஆதிக்கத்தை அறுத்தது; பாரத நாட்டிற்கு விடுதலை அளித்தது.
வல்லரசும் நல்லரசும்
நல்லரசின் செம்மையையும் வல்லரசின் கொடுமை யையும் விரித்துக் கூறுகின்றது திருக்குறள். அன்பினால் அரசாள்வது நல்லரசு. அச்சுறுத்தி அரசாள்வது வல்லரசு.
“கூழும் குடியும் ஒருங்கிழக்கும் ; கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு ”
என்றார் வள்ளுவர். மேலை நாட்டில் கொடுங் கோலரசன் ஒருவன் செய்த ஆட்சியையும், அவன் கூழும் குடியும் ஒருங்கிழந்து வீழ்ந்த காட்சியையும் விளக்கிக் கூறு கின்றார் பாரதியார்… ரஷியா தேசத்தில் இரணியன் போல் அரசாண்டான் ஜார் என்னும் கொடுங்கோலன். நல்லோரும் சான்றோரும் நடுங்கி ஒடுங்கினர் ; பொய் யரும் தீயரும் செழித்து ஓங்கினர். பேச்சுரிமையற்ற அந் நாட்டில் ‘இம் மென்றால் சிறைவாசம் ; ஏன் என்றால் வனவாசம்’ இத்தகைய வல்லரசுக்கு அழிவு வந்தது. இமயமலை கவிழ்ந்தது போல் விழுந்து ஒழிந் தான் ஜார் அரசன்; அன்றே முடியரசு ஒழிந்தது; குடியரசு எழுந்தது என்று பாரதியார் பாடும் கவிதையில் வல்லரசு நில்லாது என்னும் திருவள்ளுவர் கருத்து வலியுறுத்தப் படுகின்றது.
விடுதலை! விடுதலை!
பாரதநாடு அன்னியர் ஆட்சியினின்று விடுதலை பெறவேண்டும் என்னும் விழுமிய ஆசையால் வீரப் பாட்டிசைத்தார் பாரதியார். விடுதலை வெள்ளம் பாரத சமுதாயத்திற் பரந்து பாய்ந்து பல துறைகளிலும் இன்பம் பயத்தல் வேண்டும் என்பது அவருடைய ஆர்வம். சாதிக் கொடுமை ஒழிய வேண்டும்; கண்மூடிப் பழக்கங்கள் கழிய வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டார். திருவள்ளுவர் கருத்தை ஆதரவாகக் கொண்டு அவர் பாடிய கவிதை தமிழ் நாட்டுக்குப் புத்துயிர் அளித்து வருகின்றது.
சாதி வேற்றுமை
இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும் ஒரு குலம் என்பது திருக்குறளின் அடிப்படையான கருத்துக்களுள் ஒன்று .
“பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்ற முப்பாலின் கருத்து எப்பாலவர்க்கும் பொருந்தும். மாந்தர் இனத்தில் பிறப்பால் உயர்வு தாழ்வு கூறும் நூல்களை மறுத்து, எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்று திறம்பட உரைத்தார் திருவள்ளுவர். இதுவே தமிழ் நாட்டு ஆன்றோர் கருத்தென்பது ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற திருமூலர் வாக்காலும் தெளிவாக விளங்கும். இவ்வாறு தொன்றுதொட்டு வரும் கொள்கையை ஆதரித்து, “எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்” என்று பாடினார் பாரதியார்.
பாரத நாடு பாரெங்கும் புகழ்பெற வேண்டுமானால் உண்மையான வகுப்புகள் ஏற்பட வேண்டும்; பொய் வகுப்புகளும் போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும் என்றார் பாரதியார். இளம் பிள்ளைகளின் உள்ளத்தில் இவ்வுண்மை நிலைபெறும் வண்ணம்,
“சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”
என்ற சின்னஞ்சிறு பெண்ணுக்கு அறிவுறுத்தினார் சாதி என்பது பொய் ; அதனடியாகப் பிறந்த வகுப்புக்கள் எல்லாம் போலி. ஆதலால்,
“நிகர் என்று கொட்டு முரசே – இந்த
நீணிலம் வாழ்பவர் எல்லாம்,
தகர் என்று கொட்டு முரசே– பொய்மைச்
சாதி வகுப்பினை எல்லாம்”
என்ற முரசுப் பாட்டு எழுந்தது.
தமிழகத்திலே தனிப்பெருமை வாய்ந்த ஒளவையார் சாதி இரண்டொழிய வேறில்லை’ என்றாள். அந்த வாக்கை அமுதமாகப் போற்றி,
“சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ் தம் என்போம்”
என்று பாடினார் பாரதியார்.
நீதி வேற்றுமை
சாதிப் பிரிவுகளின் அடியாக எழுந்தன நீதிப் பிரிவுகள். ஒருவன் செய்த குற்றத்தை நோக்கி முறை செய்யாது, சாதியைக் கருதித் தண்டனை விதித்தல் வேண்டும் என்று அறிவுறுத்தும் நீதி நூல்களும் உண்டு. இத்தகைய நீதி வேற்றுமை திருவள்ளுவர் கொள்கைக்கு முற்றும் மாறுபட்டதாகும். ஒரு குலத்திற்கு ஒரு நீதி கூறும் நூலன்று திருக்குறள். சமன் செய்து சீர்தூக்கும் கோல்போன்றது அரச நீதி. முறை செய்யும் அரசன், குற்றத்தைக் கருத வேண்டுமே யன்றிக் குலத்தைக் கருதலாகாது என்பது வள்ளுவர் வகுத்த நெறி. இந் நெறியைக் கடைப்பிடித்துத் தன் மகனை முறை செய்தான் ஒரு தமிழ் வேந்தன். தன் கையை அறுத்தான் மற்றொரு தமிழ் மன்னன். இவரை வாயாரப் புகழ்ந்தது வையகம். இதற்கு மாறாக,
“சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்தார் – அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்”
என்று பாடினார் பாரதியார். சாதிப் பிரிவும், நீதிப் பிரிவும் நாட்டுக்குக் கேடு விளைப்பன என்பது பாரதி யார் கருத்து.
பெண்ணடிமை
பெண் குலத்தின் உரிமைகளைப் பேணிப் பாது காத்த ஆன்றோர்களில் தலை சிறந்தவர் திருவள்ளுவர். இல் வாழ்க்கையில் ஆணுக்குத் துணை புரியவள் பெண். ஆதலால், மனையாளை ‘வாழ்க்கைத் துணை’ என்று திருக்குறள் குறிக்கின்றது. ஆயினும், குலமாதர்க்கு இன்றியமையாத கற்பினைப் பாதுகாக்கக் கருதிய ஆடவர் பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினர்.
கட்டும் காவலும் மகளிர் கற்பினைக் காக்கும் என்ற கொள்கையை மறுத்தார் திருவள்ளுவர்.
“சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும், மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை“
என்பது அவர் வாக்கு. கற்பின் பெயரால் மகளிரைச் சிறைகாக்கும் கொடுமை இனி வருங்காலத்தில் நில்லாது; அது தகர்ந் தொழிவதற்கு நெடுங்காலம் செல்லாது என்று கும்மியடிக்கின்றார் பாரதியார்.
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று
எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்“
வீட்டு வேலை செய்யும் மாதர்க்கு ஏட்டுக் கல்வி எதற்கு என்று கேட்டார் சிலர். பேதைமை என்பது மாதர்க் கணிகலம் என்று பிதற்றினார் சிலர். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்று பேசினார் சிலர். இவ்வாறு பெண் குலத்தை அடிமைப்படுத்திய ஆடவர் இப்போது வாயடங்கினர்; நாணித் தலை கவிழ்ந்தனர்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி“
என்று புதுமைப் பெண் கும்மியடிக்கின்றாள். ஆண்களைப் போலவே நாங்களும் கல்வி கற்போம், பட்டங்கள் பெறுவோம், சபைகளில் அமர்வோம், சட்டங்கள் செய்வோம்’ என்று பேசுகின்றாள் புதுமைப் பெண்.
கண்ணிரண்டும் ஒன்றையே காணுதல் போல், இல்வாழ்க்கையில் ஈடுபட்ட ஆணும் பெண்ணும் ஒருமை யுற்று அறம் புரிதல் வேண்டும் என்று பணித்தனர் ஆன்றோர். அவ்வாறு இல்லறம் புரிவதற்கு ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்தல் வேண்டு மன்றோ? இக் கருத்தை உட்கொண்டு,
”மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையிலும் நமக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும் சரி
நிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே”
என்ற பாரதியாரின் வீரப்பாட்டு எழுந்தது.
இத்தகைய சரிசம வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் கற்புடையராய் இருத்தல் வேண்டும். கற்பென்பது பெண்டிர்க்கே உரியதெனப் பேசினர் முற்காலக் கவிஞர். அது முறையன்று;
“கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும். அஃது பொதுவில் வைப்போம் “
என்று நாடு முழுவதும் குலுங்கக் கும்மியடிக்கின்றனர் புதுமைப் பெண்கள்.
கற்கத் தகுந்த நூல்கள்
ஆண் பெண் ஆகிய இருபாலர்க்கும் கல்வியறிவு இன்றியமையாதது என்று நல்லறிஞர் எல்லோரும் கூறுவர். கல்வி கற்கும் முறையையும் அதனால் அடையற் பாலதாகிய பயனையும் திட்பமாகக் கூறிப் போந்தார் திருவள்ளுவர்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
என்பது அவர் கட்டுரை. ”கல்வி கரையில , கற்பவர் நாள் சில” என்பது உண்மையாதலின் கண்ட நூல்களைக் கற்றுக் காலத்தைக் கழித்தலாகாது. கற்கத் தகுந்த நூல்களைத் தெரிந்து கற்றல் வேண்டும். அவ் வாறு கற்கும் நூல்களைக் கசடறக் கற்றல் வேண்டும் என்ற கருத்துக்களைச் செறிவாகக் கூறினார் திருவள்ளுவர். இக் குறளை ஓதும்பொழுது, கற்கத் தகுந்த நூல்கள் எவை?’ என்ற கேள்வி முன்னே எழுகின்றது. அந் நூல்களைக் கசடறக் கற்கும் முறை யாது என்ற கேள்வி பின்னே எழுகின்றது; அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கையும் உணர்த்தும் நூல்களே கற்கத் தகுந்த நூல்கள் என்பர். அத் தகைய நூல்கள் தாம் எவை என்று ஆராயப் புகுந்தால் பல்வேறு கருத்துக்கள் காணப்படும். பாரதியார் குறிப்பிடும் நூல்கள் மூன்று. தென்னாட்டில் எழுந்த அந் நூல்கள் எந் நாட்டாரும் போற்றும் தகையன என்பது அவர் கருத்து.
”யாம் அறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர் போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை”
என்று கவிஞர் தெள்ளத் தெளிய உணர்த்திப் போந்தார். கம்பரும் வள்ளுவரும், இளங்கோவும் ‘புவியினுக்கு அணியாய்த்’ திகழும் புலவர்கள். அன்னார் பெருமையைத் தமிழகம் அறிந்து போற்றவில்லையே என்று வருந்து கின்றார் கவிஞர். சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும், தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும், கம்பன் என்றொரு கவிஞன் வாழ்ந்ததும் தமிழ் நாட்டு மாணவர் அறிந்தாரில்லையே என்று கவலையுறுகின்றார். இந்த மூன்று புலவரையும் பெற்றதனால் தமிழ்ச்சாதி அமரத் தன்மை வாய்ந்தது என்று எண்ணி ஏமாப்புற்றார். இலக்கிய மாணவர் இந் நூல்களைப் போற்றுது புன்கல்வி கற்பது போலவே சரித்திர மாணவரும் சரியாக வரலாறுகளைக் கற்கின்றாரில்லை என்று குறை கூறு கின்றார் கவிஞர். மறப்படையால் அரசாண்ட மன்னர் வரலாற்றைப் படிக்கும் மாணவர் அறப்படையால் ஆட்சிபுரிந்த அசோகன் பெருமையை அறிந்தனரா? தொன்று தொட்டு வாழையடி வாழையென வந்த மன்னர் குலத்திலே தோன்றிய சேர சோழ பாண்டியர் ஆட்சி செய்த திறனையும் அறம் வளர்த்த முறையையும் தெரிந்தனரா? வீர சிவாஜியின் வெற்றிச் சிறப்பினை உணர்ந்தனரா? என்று கேட்கின்றார் கவிஞர்.
பேடிக் கல்வி
இனி , திருவள்ளுவர் பணித்தவாறு கசடறக் கற்கும் முறையும் இக்காலத்திற் காணப்படவில்லை என்று பாடினார்.
“கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின்
கார் கொள்வானில் ஓர்மீன் நிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லுவார் எட்டுணைப் பயன் கண்டிலார்”
என்று கல்வி முறையில் அமைந்த குறைகளை எடுத் துரைத்தார். கல்லூரி மாணவர் பல்லாண்டு கணித நூலும் வானநூலும் பயில்வார்; விண்மீன்களின் நிலையை அறியார். காவியம் பல கற்பார்; கவியின் உள்ளத்தைக் காணார் . வணிகநூலும் பொருள் நூலும் பேசுவார்; பாரத நாட்டுப் பொருளாதார நிலை பழுதுறும் பான்மையை உணரார்; இன்னும் எத்தனையோ கலைகளின் பெயரைப் பன்னுவார். இன்னார் கற்கும் கல்வி ஏட்டுக் கல்வியேயன்றி நாட்டுக்குப் பயன்படும் கல்வியன்று. ஆரவாரக் கல்வியேயன்றி அறிவு விளக்கத்திற்கு ஏற்றதன்று என்று பாடினார் பாரதியார்.
இத்தகைய கல்வி பயனற்றது என்பதற்குத் தன்னையே ஒரு சான்றாகக் காட்டுகின்றார் கவிஞர்.
திருநெல்வேலியில் உள்ள இந்து கலாசாலையில் தான் கற்ற கல்வியையும், பெற்ற பயனையும் கரவாது எடுத் துரைக்கின்றார்.
“செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது
தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன
நலம் ஓர் எட்டுணையும் கண்டிலேன்; இதை
நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்”
என்று இறைவன் மேல் ஆணையிட்டுக் கூறுகின்றார். பட்டங்கள் பெறுவதற்கும், அரசாங்க சேவையில் அமர்வதற்கும் இக்காலக் கல்வி பயன்படுவதல்லால் அறியாமையை அகற்றுவதற்கும், பண்பாட்டை உயர்த்துவதற்கும் பயன்படுமாறில்லை யாதலால் அதனைப் ‘பேடிக் கல்வி’ என்று பழித்துரைத்தார் பாரதியார். பேடியின் கையிலுள்ள படைக்கலம் பயனற்றதுபோல பள்ளியில் மாணவர் பெறும் கல்வி பயனற்றது என்பது அவர் கருத்து.
அறத்தின் சீர்மை
‘சுய சரிதை’யில் இவ்வாறு கல்வியைப் பற்றிப் பாடிய பாரதியார் திருவள்ளுவர் கருத்தைத் தழுவி அறத்தின் திறத்தையும் பொருளின் பெருமையையும் எடுத்தோதினார். ” அறத்தால் வருவதே இன்பம்” என்று வடித்துரைத்த திருக்குறளின் உண்மையை அனுபவ வாயிலாக அறிந்த கவிஞர்,
“அறம் ஒன்றே மெய்யின்பம் என்ற நல்
அறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்;
பிற விரும்பி உலகினில் யான்பட்ட
பீழை எத்தனை கோடி ! நினைக்கவும்
திறன் அழிந் தென் மனம் உடைவெய்து மால்
தேசத்துள்ள இளைஞர் அறிமினோ
அறம் ஒன்றே தரும் மெய்யின்பம்; ஆதலால்
அறனையே துணை என்று கொண்டுய்திரால்”
என்று பாடினார். அறத்தால் வருவதே மெய்யின்பம். ஏனையவெல்லாம் போலியின்பம் என்று திறம்படக் கூறிய திருவள்ளுவரை ‘நல்லறிஞர்’ என்று போற்றிப் புகழ்ந்தார் பாரதியார்.
பொருளின் பெருமை
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும் வள்ளுவர் வாக்கின் உண்மையைத் தம் வாழ்க்கையில் கண்கூடாகக் கண்டவர் பாரதியார்.
“இல்லானை எல்லாரும் எள்ளுவர், செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு“
என்றார் வள்ளுவர். இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாய் வேண்டாள்; செல்லாது அவன் வாயிற் சொல் என்று, இக் குறளின் கருத்தை விரித் துரைத்தார் ஒரு புலவர். அவர் விரிவுரையையும் தழுவிப் பொருளற்றார் அடையும் சிறுமையைப் பாடினார் பாரதியார்.
“பொருளிலார்க்கிலை இவ்வுலகு என்ற நம்
புலவர் தம்மொழி பொய்மொழி யன்று காண்
பொருளிலார்க்கு இனமில்லை; துணையில்லை;
பொழுதெல்லாம் இடர்வெள்ளம் வந்தெற்றுமால்”
என்று வறுமையால் வரும் சிறுமையை எடுத்துரைத்து,
”பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்” என்று அறிவுறுத்தினார் கவிஞர்.
ஆறுவது சினம்
இவ்வாறு அறத்தின் திறத்தையும் பொருளின் சிறப்பையும் பாடிய பாரதியார் மக்கட் பண்பு வளர் தற்குரிய முறையினையும் வகுத்துரைத்தார். பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கினார் காடாள்வார் என்பது பழமொழி. சீலத்தை அழிக்கும் திறம் வாய்ந்தது சினம்.
“சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்”
என்றார் வள்ளுவர். நெருப்பின் தன்மையுடையது சினம் என்பது இக் குறளின் கருத்து. சினம் என்னும் நெருப்பு உள்ளத்தில் மூளுமானால் கேடு விளையும். இதனாலேயே ”உள்ளங் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக் கொள்ளுங் குணமே குணமென்க” என்று பாடினார் ஒரு கவிஞர். இங்ஙனம் திருவள்ளுவர் முதலிய சான்றோர்கள் உணர்த்திய உண்மையை விஞ்ஞானக் கலையின் வாயிலாக விளக்கலுற்றார் பாரதியார். ஜகதீஸ் சந்திரபோஸ் என்பவர் பாரத நாட்டு விஞ்ஞான வித்தகருள் தலை சிறந்தவர். அவர் ஆராய்ந்து கண்ட உண்மை திருவள்ளுவர் வாய் மொழியை வலியுறுத்துகின்றது.
“கோனாகிச் சாத்திரத்தை யாளும் மாண்பார்
ஜகதீச சந்திர வசு கூறுகின்றான்
(ஞானானுபவத்தில் இது முடிவாம் கண்டீர்)
நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் என்றான்
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம்”
என்ற பாட்டிலே கோபத்தால் விளையும் கேடு விஞ்ஞான முறையில் உணர்த்தப்படுகின்றது. கோபமுற்றால் நாடி யிலே அதிர்ச்சி உண்டாகும். அந்த அதிர்ச்சியினால் மரணம் நேரும் என்று ஜகதீசர் ஆராய்ந்து கூறும் உண்மையும், மெய்ஞ்ஞானியராகிய திருவள்ளுவர் முதலி யோர் கண்டுணர்த்திய உண்மையும் ஒத்திருத்தலைக் காட்டுகின்றார் கவிஞர். இத் தகைய கேடு வந்தணு காது காத்துக் கொள்ளுதல் அறிவுடைய மாந்தர் செயலாகும்.
“தன்னைத்தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்“
என்றார் வள்ளுவர். இக் கருத்தை மனத்திற் கொண்டு
“சினங்கொள்ளார் தம்மைத் தாமே தீயால் சுட்டுச்
செத்திடுவார் ஒப்பாவார்“
என்று பாடினார் பாரதியார்.
கற்றறிந்து அடங்கிய சான்றோருக்கும் சில வேளை களில் சீற்றம் பிறக்கும். அதனைச் சான்றோர் சினம்’ என்று கவிகள் கூறுவர். சீலமே உருவாகிய திரு வள்ளுவர் சினந்து சாபமிடும் இடமொன்று திருக் குறளில் உண்டு .
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”
என்பது அவர் இட்ட சாபம். கரவாது உவந்து ஈயும் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதே வாழ்க்கை. இத் தகைய மான வாழ்க்கை முட்டுப்பட்டுப் பல்லெல் லாம் தெரியக் காட்டிப் பரிவுடன் இரு கை நீட்டிப் பிச்சையெடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இச் சீரழிந்த உலகத்தைப் படைத்தவன் சிதைந்து ஒழிக என்று சீறினார் வள்ளுவர். இக்கருத்தை ஆதரித்து,
”இனி ஒரு விதி செய்வோம் – அதை
எந்த நாளும் காப்போம் தனி
ஒருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்”
என்றார் பாரதியார். பழங்காலக் கவிஞராகிய வள்ளுவரும் புதுமைக் கவிஞராகிய பாரதியாரும் கருத்திலும் சினத்திலும் ஒன்றுபட்டவராய் விளங்குகின்றனர். பசியால் நலிந்து பாழடைந்த உலகத்தின் மேற் பாய்ந்தது. பாரதியார் சினம். அத் தகைய உலகத்தைப் படைத் தவன் மேற் பாய்ந்தது வள்ளுவர் சினம்.
போலித் துறவறம்
இவ்வுலகில் அறம் வளரவேண்டும் என்று ஆசைப்பட்ட வள்ளுவர் இல்லறம் துறவறம் என்னும் இரு வகை அறங்களின் பெருமையையும் எடுத்துரைத்தார். இவற்றுள் எதனை மேற்கொண்டாலும் அதற்குரிய நெறியில் ஒழுகுதல் வேண்டும் என்று அறிவுறுத்தினார். துறவற நெறியைக் கூறும் பொழுது போலித் துறவைக் கடிந்துரைத்தார்.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்”
என்று பாடினார். துறவு என்பது ஒழுக்கத்தைப் பொருத்ததே யன்றி வேடத்தைப் பொருத்ததன்று. துறவுள்ளம் படைத்தோர்க்குத் தலையை மழித்தலும் சடையை வளர்த்தலும் மிகையாகும் என்பது இக் குறளின் கருத்து. இக் கருத்தை மனமாரப் போற்று கின்றார் பாரதியார். காவித் துணியும் கற்றைச் சடையும் உடையராய் நாட்டை வஞ்சித்து வாழும் போலித் துறவை அவர் வெறுக்கின்றார்.
“காவித் துணி வேண்டா; கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமனிலை எய்துதற்கே”
என்று பாடினார். அகப்பற்று புறப்பற்று என்னும் இரு வகைப் பற்றையும் அறுத்து இறைவனின் திருவடியைப் பற்றி நின்ற பெரியார் ஒருவர்,
”மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்
பாதமே மனம் பாவித்தேன்”
என்று கூறியவாறு , பாவித்தல் ஒன்றே போதும் என்றார் பாரதியார்.
கற்றதனால் ஆய பயன்
இறைவன் திருவடியைப் பற்றினாலன்றிப் பேரின்ப நிலையைப் பெறுதல் இயலாது என்று திருக்குறள் கூறுகின்றது.
“கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்”
என்று பாடினார் வள்ளுவர்.
கட்டறுத்து வீடு பெறுதலே கல்வியின் குறிக் கோளாகும். இறைவனின் திருவடியைத் தொழுதலன்றி இக் கட்டு ஒழியாது. ஆதலால், வழிபாடு செய்யாதவர் கற்ற கல்வி யெல்லாம் பயனற்றது என்பது திருவள்ளுவர் கொள்கை. இதனை ஆதரித்து எழுந்தது முத்துமாரிப் பாட்டு.
“உலகத்து நாயகியே – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண் புகுந்தோம் – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரீ!
பல கற்றும் பலகேட்டும் – எங்கள் முத்து
மாரியம்மா , எங்கள் முத்து மாரீ!
பயன் ஒன்றும் இல்லையடி – எங்கள் முத்து
மாரியம்மா ! எங்கள் முத்து மாரீ!”
என்ற பாரதியார் கவிதையிலே திருக்குறளின் தெய்வ மணம் கமழ்கின்றது.
★ ★ ★



