
வேலும் வில்லும்
ரா. பி. சேதுப் பிள்ளை
கந்தர் அலங்காரம்
அலங்காரம் என்றால் எல்லோருக்கும் ஆனந்தம்- அன்பின் வழியே நிகழும் அலங்காரம் சிறந்த இன்பம் பயக்கும். குழந்தையை அலங்கரித்து இன்புறுவாள் தாய்-காதலியை அலங்கரித்துக் காண்பான் காதலன். கவிதையை அலங்கரித்துக் களிப்புறுவான் கவிஞன். ஆண்டவனை அலங்கரித்து ஆனந்தக்கூத்தாடுவான் பக்தன்.
இந்த வகையிலே கந்தப்பெருமானைச் செந்தமிழால் அலங்கரித்த கவிஞர் பலர். சங்கத்தமிழால் அப் பெரு மானை அலங்கரித்தார் நக்கீரர்; சந்தத்தமிழால் அலங் கரித்தார் அருணகிரியார். திருப்புகழ் என்னும் சந்தத் தமிழ்மாலை அணிந்த பின்னரும் ஆராத அன்பினால் அலங்காரம் ஒன்று செய்தார் அருணகிரியார். அதுவே கற்றவர் போற்றும் கந்தர் அலங்காரம்.
கந்தவேள் மகிழ்ந்து உறையும் மலைகளுள் ஒன்று கொங்குநாட்டுத் திருச்செங்கோடு. அக்குறிஞ்சிப் பதியிலுள்ள முருகனை அலங்கரிக்கின்றார் அருண கிரியார்:
“மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்குமேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயற்பொழில் செங்கோ டனைச்சென் கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னே அந்த நான்முகனே“
என்று பாடுகின்றார்; “செங்கோட்டில் வாழும் முருகன் திருமாலின் மருகன்; தில்லை மன்றிலே திருநடம் புரியும் சிவனார் திருமகன்; தேவர்க்கெல்லாம் மேலான தேவன்; ஞானவடிவாய் நாதன். அப் பெருமானைக் காணக் கண் ஆயிரம் இருந்தாலும் போதாவே! நாலாயிரம் கண்கள் வேண்டுமே ! என்னைப் படைத்த நான்முகன் அவற்றைக் கொடுத்தானில்லையே !” என்று அங்க லாய்க்கின்றார்.
என்றும் சீரிளமைத்திறம் குன்றாத அழகன் முருகப் பெருமான். அவன் அழகை இருகண்ணால் முகந்து பருக முடியாமல் அலமருகின்றார் அருணகிரியார். பேரழகைக்காணும் அன்பர்கள் இவ்வாறு பேதுறுவர் என்பதைக் கவியரசர்களாகிய கம்பரும் சேக்கிழாரும் நன்கு எடுத்துக்காட்டுகின்றார்கள். மிதிலைமாநகரின் வீதியிலே மணமகனாகிய மணிவண்ணன் செல்கின்றான். வீதியின் இருமருங்கும் நிறைந்து நின்ற மாதர் அவன் கட்டழகை இருகண்ணால் முற்றும் காண முடியாமல் தவிக்கின்றார். இப் பேரழகளைச் சீதைதான் எப்படிக் காணப்போகின்றாள் என்று சிந்தித்து நின்றார் சிலர். ஆயிரங்கண் இருந்தாலன்றி அஞ்சன மேனியானை முற்றும் அறியமுடியாது என்று கருதினாள் ஒருமங்கை. “நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்” என்று அக் கருத்தைப் பாடுகின்றார் கம்பர். இது மிதிலைக் காட்சி.
மற்றொரு திருமணம் புத்தூரிலே நிகழ்ந்தது. மண மகன் சிவநேயச் செல்வராகிய சுந்தரர். அவர் பெயருக்கேற்ற பேரழகுடையவர்; மணக்கோலத்தில் வருகிறார். அவர் அழகைக் காண்பதற்கு, ‘ஆயிரங்கண் இருந்தாலும் போதா; எண்ணிலாத கண்கள் வேண்டும் என்று கருதுகின்றார் இள நங்கையர் “கண்கள் எண்ணிலாத வேண்டும் இக் காளையைக் காண என்பார்” என்பது சேக்கிழார் கவிதை. எனவே, இனியபொருளைக் காணக் கண்ணாயிரமும் அதற்கு மேலும் வேண்டுவது அழகிலுள்ள ஆசைக்கோர் அறிகுறியாகும். இந்த வகையில் செங்கோட்டில் உள்ள செம்மைசான்ற அழகனைக்கண்டு தொழுவதற்கு நான்முகனாகிய பிரமன் தன் ஒருமுகத்திற்கு ஓர் ஆயிரமாகக் கணக்கிட்டு நாலாயிரங்கண்கள் தந்தானில்லையே என்று வருந்துகின்றார் அருணகிரியார். காணக்கண் போதாது என்றால் போகட்டும்; வாழ்த்த வாயுண்டு என்று அலங்காரமாகப் பாடுகின்றார்.
“கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வே லனைக்கன்னிப் பூகமுடன் தருமா
மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே“
என்பது ஓர் அலங்காரப் பாட்டு. சாதிப் பெயர்களாகிய கருமான், செம்மான் முதலியவற்றை முருகப் பெருமானோடு இணைத்துள்ள சதுரப்பாடு நம் உள்ளத் தைக் கவர்கின்றது. ‘கருமான் என்பவன் இரும்படிக்கும் கொல்லன்; அவனுக்கு எப்படி முருகன் மருகனாவான் ?’ என்று திகைக்கின்றோம். அப்போது, கற்ற கல்வி வந்து கைகொடுக்கின்றது. கருமான் மருகன் என்ற தொடர் மொழியைக் கருமால் மருகன் என்று பிரித்துவிட்டால் எல்லையற்ற இன்பம் பிறக்கும் ‘கரு மால் என்பவன் திருமாலே. அவன் மருகனே முருகன் என்று ஆனந்தம் அடைகின்றோம்.
இனி, கருமானை அடுத்துச் செம்மான் வருகின்றான். கருமானின் பின் செம்மான் வருவது அலங்காரந் தான் என்று எண்ணி அகமகிழ்கின்றோம். ஆயினும், செருப்புத்தைக்கும் செம்மானோடு சேயோனாகிய முருக னுக்கு என்ன உறவுண்டு? செம்மான் மகளைக் கள
வாடிய கள்வன் என்று சொன்னதன் கருத்தென்னை?
“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்“
என்று மற்றோரிடத்தும் அருணகிரியார் பாடுகின்றாரே! என்று சிந்திக்கும் பொழுது உண்மை புலனாகின்றது. செம்மையான மான்வயிற்றுப் பிறந்த வள்ளியைக் களவு முறையிற் கவர்ந்தவன் கந்தவேள் அன்றோ என்று உணர்ந்து இன்புறுகின்றோம்.
இன்னும் இரண்டு சாதிப்பெயர்கள் அப்பாட்டிலே அமைந்துள்ளன. மாகுலவன் எனபது ஒன்று; கைக் கோளன் என்பது மற்றொன்று. மலையிலே வேட்டை யாடுபவன் மாகுலவன். அப் பெயர் எங்ஙனம் முருக னுக்குப் பொருந்தும் என்று எண்ணிப் பார்க்கின்ற பொழுது அருணகிரியார் அமைத்த அலங்காரம் நம் கருத்திலே இலங்குகின்றது. மலைப்புதரில் மறைந்து நின்று பறவை பிடிக்கும் மாகுலவனைப்போல், வேங்கை மரத்தில் மறைந்து நின்று வள்ளியின் கரம்பிடித்த முருகன் செயல் அச் சொல்லால் விளங்குகின்றது. மேலும், முருகன் பெரிய இடத்துப் பிள்ளை என்ற பொருளும் மாகுலவன் என்ற பதத்தால் பெறப்படு கின்றதன்றோ? இறைவன் திருமகனாய், திருமாலின் மருமகனாய், ஒருகை முகன் தம்பியாய் உள்ள முருகன் மாகுலவன் (மா- சிறந்த: குலவன் – குலத்தைச் சேர்ந் தவன்) என்பதில் ஐயமுண்டோ?
இனி, கைக்கோளன் என்ற பெயர் நெசவுத் தொழில் செய்பவனைக் குறிக்கும். ஆயினும் சேவற் கைக்கோளன் என்று அருணகிரியார் சிறப்பித்தமையால் ‘சேவற்கொடியைக் கையிலேயுடைய முருகன்’ என்று உணர்ந்து சிறந்த இன்பம் அடைகின்றோம். பிறப்பும் இறப்பும் அற்ற பெருமானைக் கருமானோடும், செம்மா னோடும், மாகுலவனோடும், கைக்கோளனோடும் இணைத் துப் பாடிய அலங்காரப்பாட்டின் சுவை அன்பர் உள்ளத்தை அள்ளுவதாகும்.
இத் தகைய முருகப்பெருமானிடம் ஒருவரம் வேண்டுகின்றார் அருணகிரியார்
“பாலே யனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றிஎன்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன்மலர்த் தாள்தருவாய்
காலே மிகவுண்டு காலேயிலாத கணபணத்தின் மேலே
துயில்கொள்ளும் மாலோன் மருகசெவ் வேலவனே“
என்று பாடுகின்றார்; அரவணையிற் பள்ளி கொள்ளும் திருமால் மருகனே! தையலார் மையலிலே தாழ்ந்து, உய்யும்வகை யறியாது உழல்கின்ற என்னை உன் திரு வடியிற் சேர்த்து அருளவேண்டும்” என்று விண்ணப்பம் செய்கின்றார். இக் கவியிலே திருமாலுடைய அரவணை யைக் குறிக்கும் மொழிகளில் அலங்காரம் இலங்குகின் றது. ஆயிரம் தலையுடைய அரவத்தைக் கணபணம் என்ற சொல்லாற் குறிக்கின்றார் அருணகிரியார். காலே மிக உண்டு, காலே யில்லாதது அக்கணபணம் என்கின் றார். கால் உண்டு, கால் இல்லை என்று கூறுவது முரண் பாடாகத் தோன்றுகின்றதே எனத் திகைக்கின்றோம். ஆயினும்.சிறிது ஊன்றிச் சிந்திக்கும்பொழுது அச் சொல்லின் நயம் புலனாகின்றது. கால் என்பதற்குக் காற்று என்ற பொருளும் உண்டு; பாதம் என்ற பொரு ளும் உண்டு. இவ்விரு வேறு பொருளிலும் கால் என்ற சொல் ஆளப்பட்டிருக்கின்றது. காற்றை அருந்தி, கால் இல்லாமையால் உடம்பால் நகர்ந்து செல்லும் இயல்புடைய பாம்பின்மீது பள்ளி கொள்ளும் திருமால் என்பது கருத்து.
இத் தகைய அலங்காரம் தமிழ்க்கவிதையின் சிறப்பு. அதன் சுவையறியும் செந்தமிழ்ச் செல்வத்தைக் கந்தப்பெருமான் அருளாற் பெற்ற அறிஞர்தம் பெருமை சொல்லவும் அரிதே.



