வேலும் வில்லும்
ரா. பி. சேதுப் பிள்ளை

முருகன் பெருமை


பாரத நாட்டில் முருகன் வழிபாடு தொன்று தொட்டு நிகழ்ந்துவருகின்றது. முருகன் என்னும் சொல் இளமையும் அழகும் வாய்ந்த பெருமானைக் குறிக்கும். வேள் என்ற இனிய சொல்லையும் அதனோடு சேர்த்து முருகவேள் என்றும் வழங்குவதுண்டு. விரும்பத்தக்க பொருளை வேள் என்னும் சொல் உணர்த்துவதாகும். காதல் விளைக்கும் காமனைக் கருவேள் என்றும், கருணை விளைக்கும் முருகனைச் செவ்வேள் என்றும் பழந் தமிழ் நூல்கள் கூறும். சோழ வள நாட்டின் தலைநகராகிய பூம்புகார் நகரத்தில், முற்காலத்தில், “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும் ” ஏனைய கோயில்களும் அடுத்தடுத்து அமைந்திருந்தன என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. இவ் வழகிய அடிகளில் முருகனை, “அறுமுகச் செவ்வேள்” என்று அக் காவியம் கூறும் திறம் அறியத்தக்கதாகும். இன்னும், சேயோன் என்றும்; சேய் என்றும் முருகன் தமிழ்நூல்களிற் குறிக்கப்படுகின்றார். அப் பெருமான், ஆலமர் கடவுளின் அருமைப் புதல்வர் ஆதலால் சேயோன் என்னும் பெயர் பெற்றார். “சேயோன் மேய மைவரை உலகம் ‘ என்று குறிஞ்சி நிலத்தைக் குறித்தனர் தொல்காப்பியனார்.

இத் தகைய பெருமை வாய்ந்த முருகன், கோலமா மயில்மீது குலாவும் அழகினை, ஆன்றோர் அருளிய திருப் பாட்டிலே காணலாம். பாலனாய்த் தோன்றிய முருகனை எளிதில் வெல்லலாகுமென்று கருதிப் போர்தொடுத்த சூரன், பார்க்குமிட மெங்கும் நீக்கமற நிறைந்துநின்ற அப் பெருமானது வடிவத்தைக் காணும் பேறு பெற்ற பொழுது,

கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்தி லேன்யான்
மாலயன் தமக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தி யன்றோ”

என்று வாயாரப் புகழ்ந்தான். ஆகவே, நீலமா மயில் மீது இலங்கும் பாலனே யாவர்க்கும் மூலகாரணமாய் உள்ள மூர்த்தி என்பது இனிது விளங்குவதாகும்.

அடியார்க்கு, முருகன் அருள் செய்யுங் கோலம் அழகிய குழந்தைக்கோலம். மாற்றாரை அழிப்பதற்கு அப் பெருமான் கொள்ளுங் கோலம் வீரப் பெருங் கோலம். இவ் வுண்மை நக்கீரதேவர் திருவாக்கால் நன்கு விளங்கும் :

குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை ”

என்று அவர் வேண்டுகின்றார்.அல்லோரை அழித்து, நல்லோரைக் காக்கும் திறம்வாய்ந்த முருகனைத் தம் மனக் கோயிலில் அமைத்து வழிபடக் கருதிய நக்கீரர், அப் பெருமானை நோக்கி, “குருகு பெயர்க்குன்றம் கொன்ற முருகா! அலைகடலின் நடுவே அமைந்த வீரமா நகரில் அரசு வீற்றிருந்த சூரனை அடர்த்த வீரா ! பூதப் பெரும்படையின் தலைவா! என்றும் உனக்குளதாய் இளநலம் காட்டி அடியேற்கு அருளல் வேண்டும்; அழி யாத அழகு வாய்ந்த இளம் பாலனாய்க் காட்சிதரல் வேண்டும்; நீள நினைந்து உருகும் என் நெஞ்சினுள்ளே என்றும் நின்று அருள்புரிதல் வேண்டும்” என்று வேண்டுகின்றார்.

புலவர் பெருமானாகிய நக்கீரர் முருகன் அருளை நிரம்பப் பெற்றவர். ஒரு கொடும்பூதத்தின் வாயினின் றும் அவரை முருகப்பெருமான் காத்தருளினாரென்று பழங் கதை கூறும். அதற்குச் சான்று அவர் பாடிய வெண்பாவிலும் காணப்படும் :

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்

என்ற வெண்பாவில் அசுரரைக் கொன்று அமரர் இடர் தீர்த்த வேலனே, தம்மையும் தலையளித்து ஆட்கொண்டருளி வெம்பூதத்தை வென்று, கற்குகையினின்றும் விடுவித்தான் என்று நக்கீரர் உள்ளுருகிப் பாடுகின்றார். முருகன் கையில் அமர்ந்த வலிமை சான்ற வேற் படையை, “மெய்விடா வீரன் கைவேல் ” என்று அவர் கூறும் முறை அறிந்து போற்றத்தக்கதாகும். இவ் வுலகில் என்றும் பொய்ம்மையாளரை வென்று, மெய் யடியாரைக் காக்கும் படை முருகன் கையிலமர்ந்த வடிவேல் என்பது நக்கீரர் கருத்து.

இத் தகைய பெருமை சான்ற பாடல்களை அருளிச் செய்த நக்கீரதேவர், திருச்சீரலைவாய் என்னும் திருச் செந்தூரில் உள்ள முருகப்பெருமானிடம் பெரிதும் ஈடு பட்டவர் என்பது அவர் வாக்கால் அறியப்படுகின்றது, ‘கத்துந் தரங்கம் எடுத்தெறியும் கருங்கடலின்’ அருகே அமர்ந்த செந்திலம்பதியை, “உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்” என்று உளங் குளிர்ந்து நக்கீரர் பாடினார். திக்கெலாம் புகழுறும் திருநகராகச் செந்திலம்பதி முற்காலத்தில் விளங்கியமையாலன்றோ, “உலகம் புகழ்ந்த சீர் அலைவாய்” என்று பொய்யறியாப் புலவர் பெருமான் அதைப் போற்றுவாராயினார்? மேலும், “ஓங்குயர் அலைவாய்” என்று அவர் வாக்குப் பிறந்தமையால், இன்றும் செந்திலம்பதி அருளாலும் பொருளாலும், அறத்தாலும், ஏனைய திறத்தாலும் ஓங்கி உயர்ந்து வருகிறது.

திருச்செந்தூரில், முருகன், ஆறுமுகங்களோடும்- பன்னிரு கரங்களோடும் விளங்கும் பான்மையை நக்கீரர் தமது பட்டிலே நன்கு படமெடுத்துக் காட்டுகின்றார். அவர் பாட்டைத் தழுவியே திருப்புகழ் பாடிய அருண கிரிநாதரும்,

ஏறுமயி லேறிவிளை யாடுமுகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஒன்றே
வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மான்பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அரு ணாசலம்அ மர்ந்தபெரு மாளே

என்று பாடிப் பரவுவாராயினார். இன்னும், நக்கீர தேவருக்குத் திருச்செந்தூர் முருகனிடம் இருந்த ஆர்வம், அவர் பாடிய திருமுருகாற்றுப்படையின் இறுதிப் பாட்டாலும் இனிது விளங்குகின்றது:

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால்
எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்

என்பது அவர் வாக்கு. ஈசனுக்கினிய மைந்தனாகவும், மாயோனின் மருகனாகவும், யானைமுகன் தம்பியாகவும் விளங்கும் முருகனைச் ‘செந்தி முதல்வனே என்றழைத்து, அப் பெருமான் சேவடியைத் ‘தண்டைக் கால்’ என்று நக்கீரர் வழுத்தும் முறை அழகியதாகும். வீரப்புகழ் வாய்ந்து விளங்கும் வேலனை,எப்பொழுதும் பச்சைப்பசும் பாலனாக வழிபடக் கருதும் நக்கீரரது ஆர்வம்,”நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்” என்னும் உருக்கமான மொழிகளில் வெளிப்படுகின்றது. நெஞ்சம் குழைந்து அஞ்சி அயரும் அடியார் மனத்தில், முருகனது ஆறு முகமும் அழகுற மிளிரும்; அஞ்சேல் என்று அபயமளிக்கும்; வெற்றிவேல் அவர் கண்ணெதிரே விளங்கித் தோன்றும். ஒருமையுடன் இருந்து அப் பெருமானை ஒருகால் நினைத்தால் அவர் திருவடி உடனே தோன்றும். இத் தகைய காலின் செம்மையையும், வேலின் வெம்மையையும் அறிந்த நக்கீரதேவர்,

அஞ்சு முகம்தோன்றின் ஆறு முகம்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்

என்று அழகுறப் பாடியருளினார். இன்னும், செந்திலம்பதியில் வாழும் கந்தனையே அப் புலவர்பெருமான் நம்பி வாழ்ந்தவர் என்பது,

உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே

என்னும் இன் கவியாலும் அறியப்படும்.

செந்தமிழ்ப் பெருங் காவியமாகிய சிலப்பதிகாரத்தில், மலைநாட்டுக்குறவர் முருகனை வணங்கிய முறை விரித்துச் சொல்லப்படுகின்றது. குறக் குல மங்கையர் முருகனைக் குறித்துக் குரவைக் கூத்தாடும் வழக்கம் உண்டென்பது அக்காவியத்தால் அறியப்படும். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன்,

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்

என்பது குரவைப் பாட்டு. இவ் வழகிய பாட்டில் திருச்சீரலைவாயாகிய திருச்செந்தூரை முதன்மையாக அமைத்திருப்பது கருதத்தக்கதாகும். நக்கீரதேவர் ‘சீர் அலைவாய்’ என்று புகழ்ந்தவாறே,இளங்கோ வடிகளும் சீர்கெழுசெந்தில்’ என்று திருச்செந்தூரைச் சிறப்பித் துள்ளார். கொங்கு நாட்டில் அமைந்த முருகப் பதி களுள் தலைசிறந்தது திருச்செங்கோடு என்னும் மலைப் பதியாகும். அப் பழம்பதி, தேவாரத் திருப்பாசுரத்தில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று குறிக்கப்படுதலால் செந்நிறம் வாய்ந்த அக்குன்றின்மீது செல்வ நெடு மாடங்கள் சிறப்புற்று விளங்கிய தன்மை நன்கறியப்படும்.

குன்றுதோறாடும் குமரனைக் குறவர்கள் தம் குல தெய்வமாகக் கொண்டு போற்றுவர். விலங்கினங்களை வேட்டை யாடும் வேடரும், புள்ளினங்களை வலையிற் பிணிக்கும் புளிஞரும் முருகனோடு உறவுகொண்டாடும் முறை அறிந்து இன்புறற்பாலதாகும்.

திருக்குற்றால மலைச்சாரலில் பறவைகளை வேட்டை யாடக் குறவர் இருவர் குதித்துச் சென்றார்கள். அணி அணியாக ஆலாவும் கொக்கும், காடையும் கம்புளும், மாடப்புறாவும் மடமயிலும், மற்றைய பறவைகளும் பறந்து ஓடிவந்தன. அவற்றைப் பிடிப்பதற்கு விரைவில் கண்ணி கொண்டுவருமாறு கூவும்பொழுது குறவன் பாடிய பாடல், குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகனைக் குறித்ததாகும்.

மீறுமி லஞ்சிக்கு றத்தியைக் கொண்டசெவ்
வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போன நாள்
ஆறுநாட் கூடிஒ ருகொக்குப் பட்டது
அகப்பட்ட கொக்கைஅ வித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப்பி ராமணர்
தாமும்கொண் டார்சைவர் தாமும்கொண் டார்தவப்
பேறா மு னிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
பிக்குச்சொல் லாமலே கொக்குப்படுக்கவே
கண்ணி கொண்டு வாடா, குளுவா

என்று குறவன், பணிக்கின்றான். கண்ணியைக் கையிலே கொண்டு பையவந்த குளுவனை நோக்கி, ‘அடே ! குளுவா! தேசத்துக் கொக்கெல்லாம் பல திக்குக்களினின் றும் பறந்தோடி வருகுது பார்! அவற்றை வலையிலே தட்டி வீழ்த்தலாமோ என்று நீ சிறிதும் தயங்கவேண்டாம். நம் குல முதல்வனாகிய முருகனே கொக்கு வேட்டையாடி நமக்கு வழிகாட்டியுள்ளார். அப் பெருமான் ஆடிய முதல்வேட்டை கொக்கு வேட்டைதான். ஒரு பெருங்கொக்கை அடிப்பதற்கு அவர் ஆறுநாள் தொடர்ந்து திரிந்தார்; கடைசியாக அக்கொக்கை அடித்தார். அடித்த கொக்கை அவித்துச் சாறாக்கிச் சட்டியிலே வைத்தார்கள். சட்டியில் வைத்த சாற்றை, வேதியர் வியந்து உண்டார்கள் ; சைவர்கள் போற்றி மகிழ்ந்தார்கள்; முனிவர்கள் தங்கள் அருந்தவத்தின் பயனாக அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆதலால், நாமும் கொக்குவேட்டையாடுவோம் வாடா’ என்கிறான் குறவன்.குறிஞ்சித் தெய்வமாகிய முருகப்பிரான் வேட்டையாடி ஒரு கொக்கை அடித்துக் கொடுத்தார். என்றும், செந்தண்மை பூண்ட அந்தணரும், சீலம் வாய்ந்த சைவரும், மன்னுயிரை எல்லாம் தம்முயிர் போல் போற்றும் முனிவரும் கொக்குச்சாற்றை விரும்பி யுண்டார்களென்றும் குறவன் கூறுவது வியப்பாகத் தோன்றுகின்ற தன்றோ?

வெளிப்படையாக இவ்வாறு பொருள் படுகின்ற குறவன் வாக்கிலே கந்தபுராணக் கதை முழுவதும் அடங்கியிருக்கின்றது. அசுரர் குலத்தின் தலைவனாகிய சூரனை வென்றழிப்பதற்காக முருகன் புறப்பட்டார். அப் பாலனை எளியன் என்று எண்ணிய சூரன் ஆறு காள் அரும்போர் புரிந்து அலைக்கழித்தான். அவன் எங்கெங்கே சென்றாலும் அங்கங்கே முருகனும் சென்றார். கடைசியாகப் பாலனை வஞ்சிக்கக் கருதிய சூரன் ஒரு மாமரத்தின் வடிவெடுத்து நின்றான். மாமரத் திற்குக் கொக்கு என்பது ஒரு பெயர். உருமாறிக் கொக்காக நின்ற சூரனை முருகன் வேலால் எறிந்து வீழ்த்தினார். அசுரனது ஆணவம் அழிந்தது. இரு கூறாகப் பிளந்த மாமரச் சூரன் சேவலும் மயிலுமாகி முருகன் சேவடியை அடைந்தான். இவ்வாறு மாமரமாய் நின்ற மாறுபடு சூரனை வென்று, அவன் ஆணவத்தை அழித்த செய்கையைக் குறவன், ஆறுநாள் கூடி ஒரு கொக்குப் பட்டது’ என்றும், ‘அகப்பட்ட கொக்கை அவித்து ஒரு சட்டியில் சாறாக வைத்தார்கள் என்றும் நயம்பட உரைத்தான். சட்டி என்பது சஷ்டியாகும். சாறு என்ற சொல் திருவிழா என்று பொருள் படும். ஆகவே, சூரபதுமனை முருகன் வென்று இவ் வுலகிலுள்ள நல்லோரை வாழ்வித்த அரும் பெருஞ் செயலை ஆறுநாள் கந்தசட்டித் திருநாளாகக்கொண்டு ஆன்றோர் போற்றுகின்றார்கள் என்பது அப்பாட்டின் கருத்தாகும்.

முருகப்பெருமானைக் கலியுக வரதன் என்றும், கண்கண்ட தெய்வம் என்றும் மெய்யுணர்வு பெற்ற மேலோர் பாடிப் பரவியுள்ளார்கள். திருச்செந்தூருக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவைகுந்தம் என்னும் சிறந்த ஊரிலே பிறந்தருளிய பெரியார் குமரகுருபர அடிகள். அவர் செந்திலாண்டவனுக்கு வழிவழி யடிமை செய்யும் தொண்டர் குலத்திலே தோன்றியவர். ஐந்து வயதளவும் அவர் வாய்திறந்து பேச வகையற்றிருந்தார். வாயில்லாப் பாலனைக்கொண்டு வேலன் சந்நிதியில் இட்டு அவர் பெற்றோர்கள் பாடு கிடந்தார்கள். அன்பர்க்கு இரங்கி அருள்செய்யும் செந்திலாண்டவன் அப் பிள்ளையின் திருவாக்கைத் திறந்துவிட்டார். வாக்குப்பெற்ற குமரகுருபர அடிகள் பாடிய முதற் பாட்டு, கந்தர் கலிவெண்பா’ ஆகும். அப் பாட்டை அன்புடன் பாடிக் கலிதீர்ந்த மாந்தர் எண்ணிறந்தவர் என்பர். இத் தகைய பெருமை வாய்ந்த குமரகுருபரர், வைத்தீசுரன் கோவில் என்று இக்காலத்தில் வழங்கும் புள்ளிருக்கு வேளூரில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான்மீது, ஒரு பிள்ளைத்தமிழ் பாடினார். அப் பிள்ளைத்தமிழில் முத்துக்குமாரனோடு விளையாடும்படி அம்புலியை அழைக்கின்ற பருவத்தில், குமரகுருபர அடிகள்,

விழியாக முன்னின்று தண்ணளி சுரந்(து) அவர்கள்
வேண்டிய வரங்கொடுப்பான்
மெய்கண்ட தெய்வம்இத் தெய்வமல் லால்புவியில்
வேறிலை என்றுணர்தியால்
அழியாத வீடும் தரக்கடவன் இவனுடன்
அம்புலீ ஆடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
அம்புலி ஆடவாவே

என்று கூறும் திறம் அறியத் தக்கதாகும்.

திருச்செந்தூரில் குமரகுருபர அடிகளைப் போலவே மற்றொரு சிறந்த கவிஞரும் முருகன் திருவருளைப் பெற்றார். அவர் சேதுநாடு என்னும் இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள சந்நாசி கிராமத்தைச் சேர்ந்த பகழிக் கூத்தர். அவர் பெற்றோர் வழிவழியாகத் திருமாலுக்கு அடிமைசெய்யும் பெற்றியர். அம் மரபிலே பிறந்து பரம பாகவதராய் விளங்கிய பகழிக்கூத்தர், முறை யாகக் கலைபயின்று இனிய தமிழ்க்கவி பாடும் திறமை பெற்றார். தமிழ்ப்புலமை முற்றிவருங்காலத்தில் கடும் பிணி யொன்று அவரைத் தாக்கியது. குடரோடு துடக்கி முடக்கிய சூலைநோயின் கொடுமைக்கு ஆற் றாது கூத்தர் சுழன்று துடித்தார்; மருந்துகள் பலவும் அருந்தினார்; மந்திரம் நவீன்றார்.ஆயினும் அந் நோயின் வேகம் சிறிதும் குறைந்தபாடில்லை. அந்த நிலையில் சூரனைக்கொன்று அடியார் இடர்தீர்த்த முருகன் திருவுருவம் அவர் மனக்கண்ணெதிரே மிளிர்ந்தது. “நெஞ்சில், ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும், முருகா என்றோதுவார் முன்” என்னும் உண்மையைக் கூத்தர் கண்கூடாகக் கண்டார்; ‘உயிரைக் கையிலே பிடித் துக்கொண்டு’ திருச்செந்தூரை வந்தடைந்தார்; அலை கடலோரத்திலே ஆறுமுகச் செவ்வேளைக்கண்டு ஆனந்த பரவசமுற்றார். செந்திற்பதியில் வீசிய கடற் காற்றும், செவ்வேளின் அருட்கோலமும் பகழிக் கூத்தர் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. அப்பொழுது, அவர் பாடிய தெள்ளிய பிள்ளைத்தமிழ், ‘திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்’ என்று போற்றப்படு கின்றது.

பேரா தரிக்கும் அடியவர்தம்
பிறப்பை யொழித்துப் பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமா னென்னும் பேராளா

என்று தொடங்கும் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்ப் பாட்டு இசைத்தட்டின் வாயிலாக இந் நாளில் எல்லோர்க்கும் இன்பம் பயக்கின்றது. பிள்ளைத்தமிழைப் பாடி முடித்தவுடன், பொல்லாத சூலைநோய் பகழிக் கூத்தரை விட்டொழிந்தது. அப்போது இன்பக்கடலில் மூழ்கி எழுந்து, முருகன் முன்னே நின்று ஆடிப் பாடி அகங்குழைந்தார் கூத்தர்.

ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அரசாண்ட நாயக்க மன்னரது பிரதி நிதியாகத் தென்பாண்டிநாட்டைப் பரிபாலனம் செய்த பெரியார், கார்காத்த குலதிலகராகிய வடமலையப் பிள்ளையன் ஆவர். அவர் அருட் செல்வமும் பொருட் செல்வமும் அமையப்பெற்றவர்; திருச்செந்தூர் முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டவர். அன்னார். கண்ணும் கருத்துமாகத் தென்பாண்டி நாட்டைக்காத்து வருங் காலத்தில் திருச்செந்தூரில் அமர்ந்தருளும் அறு முகப்பெருமான் திருவுருவத்தைக் கட்டிப் பொன்னால் அமைந்ததென்று கருதியோ, வேறுகாரணம் பற்றியோ, மேலை நாட்டுக் கடலாடிகள், நள்ளிரவிற் கவர்ந்து தம் கப்பலில் ஏற்றிக் கடலில் விரைந்து சென்றார்கள். சிறிது தூரம் சென்றதும் கடுங்காற்று வீசத்தொடங்கிற்று. கடல் கொந்தளித்தது. கொள்ளையர் மரக்கலம் தள்ளாடத் தலைப்பட்டது. கலத்தின் அபாயநிலை கண்ட கள்வர்கள் அறுமுகன் உருவத்தைக் கடலிலே தள்ளி விட்டு ஓடினர். மறுநாட்காலையில் அலைவாய்க் கோவி லில் அறுமுகச்செவ்வேளைக் காணாது அலக்கணுற்ற அடியார்கள் நெல்லையிற் போந்து வடமலை ஐயனிடம் நிகழ்ந்ததை அறிவித்தார்கள். அவரும் மிகவும் வருத்த முற்று, செய்வதொன்றறியாது, ‘முன்னவனே அருள் புரிந்தால் முடியாத தொன்றுண்டோ’ என்று அப்பெருமானையே சிந்தித்துக் கண்ணீர் வடித்துக்கொண்டி ருந்தார். இவ்வாறு அன்பரும் அடியாரும் அடைந்த துயரத்தைக் கண்டு தரியாத அறுமுகப்பெருமான், பிள்ளையன் கனவிலே தோன்றித் தம் இருப்பிடத்தைக் காணுதற்குரிய அடையாளத்தை உணர்த்தி யருளினார். காட்டுவித்தால் யார் ஒருவர் காணாதாரே’ என்ற திருவாக்கை மனத்திற்கொண்டு, பிள்ளையன் திருச் செந்தூரை அடைந்து, பெருமான் காட்டிய நெறியிலே ஓடத்தைச் செலுத்தி, கருங்கடலிற் கிடந்த மூர்த்தியைக் கரையேற்றி அன்பர்கள் மனத்தைக் குளிர்வித்தார் என்று சரித்திரம் கூறுகின்றது. அக் காலத்திற் பாடிய அருந்தமிழ்க்கண்ணிகள் இன்றும் திருச்செந்தூர் மாசித் திருவிழாவிலே பாடப்படுகின்றன:

தாரேறு வெற்பெனும் ஈராறு திண்டோளும்
தண்டை சிலம்பணி தண்டா மரைத்தாளும்
ஓராறு சென்னியும் சண்முக சேவையும்
ஒண்பொற் குழைக்காதும்
போரேறு வேலேந்து செங்கையும் கண்டன்பர்

போற்று முருகரே மாமால் மருகரே
காரேறு தண்டலை சூழும் செழுந்தமிழ்க்
காவை வடமலை யப்பன் தொழுதிட
இப்போது தேவரீர் எழுந்தருளின தெல்லோர்க்கும் நல்லகாலம்— (பல்லவி)

என்று வென்றிமாலைக் கவிராயர் பாடிய இசைப்பாட்டு, முருகனைப் பிள்ளையன் மண்டபத்திற்கு அழைத்து வரும்பொழுது இன்றும்பாடப்படுகின்றது.கடலினின்று அறுமுகப் பெருமான் கரையேற்றப்பட்ட செய்தியை அறிவிக்கின்ற சிலாசாசனமும் திருச்செந்தூர்ப் பிள்ளையன் மண்டபத்தில் உண்டு.

இங்ஙனம், அறுமுகப்பெருமானுக்குச் சேவை செய்த வடமலை ஐயனைக் குறித்து வழங்கும் மற்றொரு செய்தியும் அறியத்தக்கதாகும். ஆலயத்தினின்றும் அறுமுகக்கடவுளைக் கள்வர்கள் கவர்ந்து சென்றார்கள் என்று அறிந்தபொழுது, வடமலை ஐயன் அறுமுகத் திருவுருவம் ஒன்று அப்பொழுதே வார்த்து வரும்படி ஆணைசெய்தார் என்றும், அப்பணி தலைமேற்கொண்ட சிற்பிகள் இரவு பகலாக முயன்று, திருவுருவம் அமைத்து, அதனை நெல்லையினின்றும் திருச்செந்தூருக் குச் செல்லும் சாலையின் வழியாக எடுத்துச் சென்றார்களென்றும், மூன்றுமைல் தூரம் சென்ற அளவில் கருங்கடலினின்றும் அறுமுகப் பெருமான் கரை யேற் றப்பட்ட செய்தியை அறிந்து மேற்செல்லாமல் அங்கே தங்கினார்களென்றும், முருகன் தங்கிய காரணத்தால் அவ்விடம் முருகன் குறிச்சி என்று பெயர்பெற்றதென் றும் முதியோர் கூறுவர். இங்ஙனம் முருகன் குறிச்சியில் தங்கிய அறுமுகப் பெருமான், இப்பொழுது பாளையங் கோட்டையின் கீழ்பாலுள்ள சிவாலயத்தில் அமர்ந்துள்ளாரென்று சொல்லப்படுகின்றது.

திருச்செந்தூர் முருகனுக்குத் தொண்டுசெய்து கட் டளையும் திருவிழாவும் சிறப்புற வகுத்தமைத்த வட மலை ஐயன் காலத்திற்குப் பின்பு பாஞ்சாலங் குறிச்சியில் சிறந்த வீரன் ஒருவன் தோன்றினான். ஆங்கில வர்த்தகக் கம்பெனியாருக்கு அல்லல் விளைத்த தென்னாட்டுப் பாளையக்காரருள் தலைசிறந்தவன் அவனே. கட்டப்பொம்மன் என்பது அவன் பெயர். அளவிறந்த வீரம் வாய்ந்த பொம்மன் திருச்செந்தூர் அறுமுகப் பெருமானிடம் கரையிலாக் காதல் உடையவனாக விளங்கினான்; திருச்செந்தூரில் புதிதாக மண்டபம் ஒன்று அமைத்து, மாசித் திருவிழாவின் ஏழாம் திருநாளாக நடைபெறுகின்ற பிள்ளையன் விழாவை மிகச் சிறப்பாக அங்கு நடத்த ஏற்பாடு செய்வானாயினான். நெடுங்காலமாக நடந்துவந்த வழக்கத்திற்கு மாறாகப் பிள்ளை யன் மண்டபத்திற் சேரவேண்டிய பெருமானைப் பொம்மன் தன் புதுமண்டபத்துக்குக் கொண்டுசெல்லக் கருதினான் என்றறிந்த அன்பர்கள் ஆறாத்துயரமடைந் தனர்; ஆயினும் கட்டப்பொம்மன் கருத்துக்கு மாறாக ஏதும் சொல்ல அஞ்சி வாயடங்கி நெஞ்சம் குமுறி நின்றார்கள். பொம்மன் கருத்தறிந்த பிள்ளையன் பாளை யத் தலைவனைத் தடுத்தால் பெருங்கலகமும் கொலையும் நிகழுமென்றஞ்சி முருகனை மனமுருகித் துதித்து நெல்லை யிலேயே இருந்துவிட்டார். திருச்செந்தூரில் ஏழாம் திருநாள் தொடங்கிற்று. வழக்கம்போல் அறுமுகச் செவ்வேளை ஆலயத்தினின்று அழைத்து வந்தார்கள் கோவிலைச் சூழ்ந்த மணல் மேட்டைக் கடந்து வாகனம் கீழே இறங்கும்பொழுது ஒரு சுழல்காற்று வேகமாக எழுந்தது; மண்ணையும் மணலையும் வாரி இறைத்து எல்லோர் கண்ணையும் மறைத்தது. பெருமாரியும் அதைத் தொடர்ந்து பெய்யத் தலைப்பட்டது. காற்றின் வேகத்திற்கு ஆற்றாது, பொம்மன் சேவகர்கள் அங்கு மிங்கும் சிதறி ஓடினார்கள். ஆறுமுக மூர்த்தியைத் தாங்கி வந்த அடியார்கள் செயலற்று, கால்சென்ற வழியே சென்று இறைவனை ஓரிடத்தில் இறக்கினார்கள். ஒருநாழிகை கழிந்தபின்பு காற்றின் வேகம் குறைந் தது; மழையும் நின்றது. கட்டப்பொம்மன் அறுமுகக் கடவுளை நாடி ஓடிவந்தான்; அன்பரும் அடியாரும் கண்மாரிபொழிந்து நிற்க, மண்மாரி எழுப்பிய முருகப் பெருமான் வழக்கம்போல் பிள்ளையன் மண்டபத்தில் வீற்றிருக்கக் கண்டான்; அன்பினால் உள்ளம் கரைந்து உருகினான். “அந்தோ ! பாவியேன் அரும்பிழை செய்தேன்; ஆசையின் வசப்பட்டு மோசம் போனேன்; பிள்ளையன் மண்டபத்தில் சேர்தற்குரிய பெருமானைப் பிறிதொரு மண்டபத்திற் கொண்டு சேர்க்கக் கருதியது பெரும்பிழையன்றோ? முன்னாளில் கடலாடிகள் சவாந்து சென்ற மூர்த்தியைக் கடலினின்றும் மீட்டுத் தந்த வடமலை ஐயனது பெருங்குலத்தில் உதித்த அன்பர்க்குப் பிழைச்செய்தவன் ஆயினேன் ”

முருகன்பெருமை கூறும் தமிழ்நூல்கள் பல வுண்டு. அவற்றுள் பழமையும் செம்மையும் வாய்ந் தது திருமுருகாற்றுப் படையே என்று அறிந்தோர் கூறுவர். பத்துப் பாட்டு என்னும் பழந்தமிழ்த் தொகை நூலில் முதற்பாட்டாக இலங்கும் சீர்மை வாய்ந்தது முருகாற்றுப்படை என்றால் அதன் பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? முருகப்பெருமானது திருவருளைப் பெற்றான் ஒருவன், அவரருளைப்பெற ஆசையுற்று வந்தடைந்த மற்றொருவனுக்கு வழி காட்டும் முறையிலே திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கின்றது. சேவற் கொடியோனாகிய முருகனது சேவடி படரும் செம்மை சான்ற உள்ளம் உன்பால் உளதாயின், அப் பெருமான் அமர்ந்திருக்கும் திருப்பதிகளைக் கூறுகின் றேன் கேள்’ என்று அருள்பெற்றவன் மற்றவனை வழிப்படுத்துகின்றான்:

“முருகப்பெருமான் மதுரை யம்பதியின் குடபாலமைந்த திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டிருப்பார்; உலகம் புகழும் திருச் சீரலைவாய் என்னும் திருச்செந்தூரிலே திகழ்வார் ; திருஆவிநன்குடி என்னும் பழனிப்பதியில் அமர்ந்திருப்பார் ; திருவேரகம் என்னும் சீரகத்தில் சிறந்திருப்பார்; பழமுதிர் சோலை என்னும் பழம்பதியிலும் அழகுற விளங்குவார். இன்னும், அப்பெருமான் குறிஞ்சி நிலத்திற்குரிய இறைவன் ஆதலின், குன்றுதோறும் நின்று நிலவுவார். இப் பதிகளில் சிறந்து தோன்றும் முருகன் பரம்பொருளின் தோற்றமாதலின், பொதுவாக எல்லா இடங்களிலும் பாலில் நெய்போல் பரந்து நிற்பார்;

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

மற்றைய இடங்களிலும் மன்னியிருப்பார்.

“அப் பெருமானை வழிபடும்முறைகளும் பலவாகும். குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவர்கள், குன்றின்மீது கோயில் அமைத்து, கோடுமுழக்கி, கொடுமணி அடித்து, குறிஞ்சிப்பாட் டிசைத்து, நறும்புகை எடுத்து, குருதி அளைந்த செந்தினை பரப்பி வழிபடுவார்கள். அருமறை பயின்ற அந்தணர்கள், உச்சிமேற் கரங்குவித்து, ஆறெழுத்தால் அமைந்த அருமறை பாடி, விரையுறு நறுமலரால் அருச்சனை செய்து வழிபடுவார்கள்- இன்னும், ‘கற்றோர் யாவரும் அறியா அறிவினரும், கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையரும்’ ஆகிய நற்றவ முனிவர்கள் ஞானத்தால் அப் பெருமானை வழிபடுவார்கள். இங்ஙனம் கற்றாரும் மற்றாரும் செய்யும் அன்பார்ந்த வழிபாட்டை முருகன் மனமுவந்து ஏற்று அருள் புரிவார். ஆதலின் நீயும் அப் பெருமானை மனமார நினைந்து, வாயார வாழ்த்தி நிற்பாயாயின் உனக்கும் அவர் அருள் கிடைக்கும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. முருகன் கோவிலிற் போந்து, நீ அறிந்தமறைமொழிகளை மனமாரச் சொல்லி, ‘ஐயனே! மனவாக்குக் கெட்டாத மெய்யனே! உன்னை ஏழை. யேன் என்சொல்லி ஏத்துகேன்?’

நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி யுள்ளி வந்தனென்

என்று தொழுது நிற்பாயாயின் முருகப் பெருமான் தம் வீரக்கோலத்தை உள்ளடக்கி, இயற்கையான இள நலம் காட்டுவார்; புன்னகை பூத்த முகத்தினராய், ‘அஞ்சேல்’ என்று அருள் செய்வார்; இன்னருள் பாலிப்பார்; நின் பிறவிப் பெரும் பிணியை மாற்று வார். ஆதலால், அப் பெருமானை அடைதற்குரிய பெரு நெறியை அறிந்து வழிபடுவாயாக” என்ற வகை யில் திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கின்றது.

இத் தன்மை வாய்ந்த முருகன் குன்றக் குறவர் மனையிலே வாழ்ந்த வள்ளி என்னும் வஞ்சியைக் காதலித்து, அவள் தேனூறு சொல்லுக்கு வாயூறி நின்ற நிலையும், தினைப்புலம் காத்து நின்ற வள்ளியின் முன்னே, கிழக்கோலம் புனைந்து தோன்றி அம் மங்கை தன் செங்கையால் அளித்த தேனும் தினைமாவும் அருந்தி மகிழ்ந்த செய்கையும், பின்பு, என்றும் உள தாய முருக நலங்காட்டி மணந்துகொண்ட மாண்பும், இன்பச் சுவை நிரம்பிய நாடகமாகத் தொன்று தொட் டுத் தமிழ் நாட்டில் நடைபெற்றுவருகின்றன.

ஆகவே, கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாய் இலங்கும் பெருமான் முருகனே. கலியுக வரதராய்க் காட்சிதரும் கடவுள் முருகனே. ஈசனார் மனங்குளிர மறைப் பொருளைக் கொஞ்சித் தமிழாற் பகர்ந்த குரவன் முருகனே. செந்தமிழ்க் கழகத்தில் தந்தையோடு இனிதமர்ந்து தமிழ் வளர்த்த புலவன் முருகனே. இத் தகைய கந்தக் கடவுளின் பெருமை யைச் சங்கத் தமிழிலே பாடினார் நக்கீரர்; சந்தத் தமிழிலமைத்துப் பாடினார் அருணகிரிநாதர். அவர் திருவாய்மலர்ந்தருளிய திருப்புகழ், தமிழ் நாடெங்கும் பரவிவருகின்றது. சந்தக்கவியால் விளையும் செந்தமி ழின்பம் எங்கும் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்கின்றது. கடற்கரை யாண்டியாகிய மூலபண்டாரம், செந்திலம்பதிலே திருவருட் செல்வத்தை வாரி வழங்கு கின்றார். அப் பெருமானது அணிதிகழ் கோயிலில் இன்று நிகழும் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை நாம் அனைவரும் கண்குளிரக் கண்டு இஷ்டசித்தி எய்துவோ மாக!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *