
வேலும் வில்லும்
ரா. பி. சேதுப் பிள்ளை
கம்ப ராமாயணம்
இராவணன் அரசு வீற்றிருத்தல்
நிலையிலா உலகினிடை நிற்பனவும்
நடப்பனவும் நெறியின் ஈந்த மலரின்மேல்
நான்முகற்கும் வகுப்பது
நுனிப்பதொரு வரம்பில் ஆற்றல்
உலைவிலா வகையுழந்த தருமமென
நினைந்தவெலாம் உதவுந் தச்சன்
புலனெலாம் தெரிப்பதொரு புனைமணிமண்
டபமதனில் பொலிய மன்னோ. 1
திசையுறு கரிகளைச் செற்றுத் தேவனும்
வசையுறக் கயிலையை மறித்து வானெலாம்
அசையுறப் புரந்தரன் அடர்த்த தோள்களின்
இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே. 2
பண்டலங்கு திசைக்களிற்றின் பணைமருப்பின்
இணையொடியப் படர்ந்த பொற்றோள்
விண்டலங்கள் உறவீங்கி ஓங்குதய
மால்வரையின் விளங்க மீதில்
குண்டலங்கள் குலவரையை வலம்வருவான்
இரவிகொழுங் கதிர்சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும் நாலைந்தாய்ப்
பொலிந்தவென வயங்க மன்னோ. 3
கந்த புராணம்
சூரன் அரசு வீற்றிருத்தல்
மீயுயர் கின்ற விண்ணினின் றிழிந்த
விழுமிய மேதினி வரைப்பின்
ஆயிர கோடி கொண்டஅண் டத்தில்
ஆடகப் பித்திகை யவற்றுள்
தீயனவிலக்கி நல்லன எடுத்துத்
திசைமுகத் தவர்கள்செய் தென்ன
ஓய்வற விளங்கு தமனியப் பொதுவென்(று)
ஆயிரம் யோசனை யுறுமே. 1
மாகநல் வேள்வி ஆற்றிய திறனும்
மதிமுடிப் பரன் அருள் அடைந்தே
ஏகிய திறனும், தனதனை முதலா
யாரையும் நிலையழித் தனவும்
சேகுறும் அண்டம் யாவையும் கண்டு
திருவுடன் அரசியற் றியதும் பூகத
நிலையத் தவுணர்கள் பல்லோர்
புடைதனின் முறைமுறை புகழ. 2
ஆனதோர் மன்றத் தரியணை மிசையே
ஆயிர கோடி அண் டத்தின் மேல்நிமிர்
வடவை அங்கியும் விடமும்
மிசைந்தழி யாநெறி மேவித்
தானவர் பரவக் கூற்றெலாம் ஒன்றாய்த்
தணப்பில்பே ரணிகலம் தயங்க
வான்நிமிர்ந் துற்றால் என்னவெஞ் சூர
மன்னவர் மன்னன்வீற் றிருந்தான். 3
கம்ப ராமாயணம்
மூக்கறுபட்ட தங்கை
நீலமா மணிநிற நிருதர் வேந்தனை
மூலநா சம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
மேலைநாள் உயிரொடும் பிறந்து தான்விளை
காலமோர்ந் துடனுறை கடிய நோயனாள். 4
மூக்கறுபட்ட முறை
ஊக்கித் தாங்கிவிண் படர்வம்என் றுருத்தெழு வாளை
நூக்கி நொய்தினின் வெய்திழை யேல்,என நுவலா
மூக்கும் காதும்வெம் முரண்மிகு மார்பமும் முறையால்
போக்கிப் போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான். 5
சூப்பணகையின் ஓலம்
உரன்நெரிந்து விழஎன்னை உதைத்(து)உருட்டி மூக்கரிந்த
நரன்இருந்து தோள்பார்க்க நான்கிடந்து புலம்புவதோ
கரன்இருந்த வனம்அன்றோ இவைபடவும் கடவேனோ
அரன்இருந்த மலையெடுத்த அண்ணாவோ அண்ணாவோ ! 6
நசையாலே மூக்கிழந்து நாணம்இலா நான்பட்ட
வசையாலே நினதுபுகழ் மாசுண்ட தாகாதோ
திசையானை விசைகலங்கச் செருச்செய்து மருப்பொசித்த
இசையாலே நிறைந்தபுயத்(து) இராவணவோ இராவணவோ ! 7
கந்த புராணம்
கையறுபட்ட தங்கை
மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை முழுதும்
மூலத்தொடு முடிவித்திடும் முறையூழ்வினை யென்னச்
சூலத்தினை ஏந்தித்தனி தொடர்துன்முகி யுடனே
ஆலத்தின துருவாம்என ஆங்குற்றனள் அன்றே. 4
கையறுபட்ட முறை
போகலும் அதனை ஐயன் பொருநரின் தலைவன் பாரா
ஏகுதி போலும் நில்லென் றெய்தியே உடைவாள் வாங்கிச்
சேகுறு மனத்தான் கூந்தல் செங்கையால் பற்றி ஈர்த்துத்
தோகையைத் தொட்ட கையைத் துணித்தனன் விண்ணோர் துள்ள.
அசமுகியின் ஓலம்
புரம்குறைத்தும் வலிகுறைத்தும் பொங்கியதொன்
னிலைகுறைத்தும் புரைய றாத
வரம்குறைத்தும் புகழ்குறைத்தும் மறையொழுக்கம்
தனைக்குறைத்தும் மலிசீர்த் தொல்லை
உரம்குறைத்தும் வானவரை ஏவல்கொண்டோம்
என்றிருப்பீர் ஒருவன் போந்(து)என்
கரம்குறைத்த தறியீர்நும் நாசிகுறைத்
தனன்போலும் காண்மின் காண்மின், 6
ஒன்னார்தம் சூழ்ச்சியினால் ஒருமுனிவன்.
என்சிறுவர் உயிர்கொண் டுற்றான்
இந்நாளில் அஃதன்றி ஒருவனைக்கொண்டு
என துகையும் இழப்பித் தாரே
பின்னாள்இவ் வருத்தமுற நன்றரசு
புரிந்தனையால் பிழைஈ தன்றே
மன்னாவோ, மன்னாவோ யான்பட்ட
இழிவரவை மதிக்கி லாயோ? 7
கம்ப ராமாயணம்
கானமதின் இடைஇருவர் காதொடுமூக் குடன் அரிய
மானமதால் பாவியேன் இவண்மடியக் கடவேனோ
தானவரைக் கருவறுத்துச் சதமகனைத் தளையிட்டு
வானவரைப் பணிகொண்ட மருகாவோ! மருகாவோ! 8
ஒருகாலத் துலகேழும் உருத்தெரியத் தனுவொன்றால்
திருகாத சினந்திருகித் திசையனைத்தும் செலநூறி
இருகாலிற் புரந்தரனை இருந்தளையின் இடுவித்த
மருகாவோ மானுடவர் வலிகாண வாராயோ ! 9
மரனேயும் நெடுங்கானில் மறைந்துறையும் தாபதர்கள்
உரனேயோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்றெதிர்ந்தார்
அரனேயோ அயனேயோ அரியேயோ எனும்ஆற்றல்
கரனேயோ யான்பட்ட கையறவு காணாயோ! 9
இராவணன் சபையில் சூர்ப்பணகையின் முறையீடு
அன்னவன் தன்னை உன்பால் உய்ப்பல்என் றெடுக்க லுற்ற
என்னையவ் விராமன் தம்பி இடைபுகுந் திலங்கு வாளால்
முன்னைமூக் கரிந்து விட்டான் முடிந்ததென் வாழ்வும் உன்னின் சொன்னபின் உயிரை நீப்பான் துணிந்தனன் என்னச் சொன்னாள்.
அநுமன் கண்ட இலங்கை
அரக்கர் திறம்:-
காயத்தாற் பெரியர் வீரம் கணக்கிலர் உலகம் கல்லும்
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவற்றார் அறிதல் தேற்றா
மாயத்தார் நகர்க்கெங் கேனும் வரம்பும்உண் டாமே மற்றோர்
தேயத்தார் தேயம் சேறல் தெருவில்ஓர் தெருவிற் சேறல். 11
கந்த புராணம்
பிறைசெய்த சீர்உருவக் குழவியுருக்
கொண்டுறுநாள் பெயர்ந்து வானின்
முறைசெய்த செங்கதிரோன் ஆதபம்மெய்
தீண்டுதலும் முனைந்து பற்றிச்
சிறைசெய்த மருகாவோ, மருகாவோ
ஒருவன்எனைச் செங்கை தீண்டிக்
குறைசெய்து போவதுவோ வினவுகிலாய்
ஈதென்ன கொடுமை தானே. 8
வையொன்று வச்சிரக்கைப் புரந்தரனைத்
தந்தியொடும் வான்மீச் செல்ல
ஒய்யென்று கரத்தொன்றால் எறிந்தனை
வீழ்ந் தனன்கிடப்ப உதைத்தாய் என்பர்
மெய்யென் று வியந்திருந்தேன். பட்டிமையோ
அவன்தூதன் வெகுண்டு வந்தென்
கையொன்று தடிந்தனனே சிங்கமுக
வீரஇது காண்கி லாயோ! 9
சூரன் சபையில் அசமுகியின் முறையீடு
காவல்புரிந்து உலகாளும் அண்ணாவோ
அண்ணாவோ கரமற் றேன்காண்
ஏவர்எனக் குறவாவர் ஊனமுற்றோர்
இருப்பதுவும் இழுக்கே யன்றோ
ஆவிதனை விடுவேன்நான் அதற்குமுனம்
என்மானம் ஆடுவ் தையோ
பாவியொரு பெண்பிறந்த பயனிதுவோ
விதிக்கென்பால் பகைமற் றுண்டோ? 10
வீரவாகு கண்ட வீரமகேந்திரம்
அசுரர் திறம்:-
வரத்தினிற் பெரியர் மாய வன்மையிற் பெரியர் மொய்ம்பின்
உரத்தினிற் பெரியர் வெம்போர் ஊக்கத்திற் பெரியர் எண்ணில்
சிரத்தினிற் பெரியர் சீற்றச் செய்கையிற் பெரியர் தாங்கும் கரத்தினிற் பெரியர் யாரும் காலினிற் பெரியர் அம்மா. 11
கம்ப ராமாயணம்
விற்படை பெரிதென் கோயான் வேற்படை மிகும்என் கோயான்
மற்படை உளதென் கோயான் வாட்படை வலிதென் கோயான்
கற்பணம் தண்டுபிண்டி பாலம்என் றினைய காந்தும்
நற்படை உளதென் கோயான் நாயகற் குரைக்கும் நாளில். 12
மரமடங்கலும் கற்பகம் மனையெலாம் கனகம்
அரம டந்தையர் சிலதியர் அரக்கியர்க் கமரர்
உரம டங்கிவந் துழையராய் உழல்பவர் ஒருவர்
தரம டங்குவ தன்றிது தவம்செய்த தவமால். 13
சிறையிருந்த சீதை:-
ஆவி யந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்
தூவி யன்னம்மென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த
ஓவி யம்புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள். 14
சீதையின் துயரம்:-
வாரா தொழியான் எனும்வண் மையினால்
ஓரா யிரம்கோ டிஇடர்க் குடைவேன்
தீரா ஒருநாள் வலிசே வகனே
நாரா யணனே தனிநா யகனே. 15
அநுமன் இராமன் பெருமை கூறல் :-
அறந்தலை நிறுத்தி வேதம் அருள்சுரந் தமைந்த நீதித்
திறந்தெரிந் துலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்துக நூறித் தக்கோர் இடர்துடைத்து ஏக விண்டு
பிறந்தனன் தன்பொற் பாதம் ஏத்துவார் பிறப்பறுப்பான். 16
மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு அயோத்தி வந்தான். 17
கந்த புராணம்
வில்லி யற்றுவோர், வாட்படை யியற்றுவோர், வேறாம்
எல்லை யில்படை யுள்ளவும் இயற்றுவோர், இகலால்
மல்லி யற்றுவோர், மாயம தியற்றுவோர், மனுவின்
சொல்லி யற்றுவோர் கண்ணுறு புலந்தொறும் தொகுமால். 12
நாடி மேலெழத் தசையிலா துலறியே நரையாய்க்
கோடு பற்றிமூத் தசைந்திடு வோரையும், கூற்றால்
வீடு வோரையும், பிணியுழப் போரையும், மிடியால்
வாடு வோரையும் கண்டிலம் இதுதவ வலியே. 13
சிறையிருந்த சயந்தன்:-
தேவியல் மரகதம் தெளித்துத் தீட்டிய
ஓவிய உருவம்மா சுண்ட தன்மையான்
ஆவியம் புனலறா தமரும் காவியம்
பூவியல் மென்தொடை புலர்ந்த தேயனான். 14
சயந்தன் துயரம்:-
நாராய ணனும் அந்த நான்முகனும் நாடரிய
பேராதி யான பெருமான் உயிர்க்கெல்லாம்
ஆராயின் நீயன்றி யாரே துணையாவார்
வாராய் தமியேன் உயிரளிக்க வாராயே. 15
வீரவாகு முருகன் பெருமை கூறல்:-
மண்ண ளந்திடும் மாயனும் வனசமே லவனும்
எண்ண ரும்பகல் தேடியும் காண்கிலா திருந்த
பண்ண வன்நுதல் விழியிடைப் பரஞ்சுடர்
உருவாய் உண்ணி றைந்தபே ரருளினான் மதலையாய் உதித்தான். 16
முன்ன வர்க்குமுன் னாகுவோர் தமக்கும்முற் பட்டுத்
தன்னை நேரிலா தீசனாம் தனிப்பெயர் தாங்கி
இன்னு யிர்க்குயி ராய், அரு வுருவமாய், எவர்க்கும்
அன்னை தாதையாய் இருந்திடும் பரமனே அவன்காண். 17
கம்ப ராமாயணம்
ஆதலால்தன் அரும்பெறற் செல்வமும்
ஓது பல்கிளை யும் உயி ரும்பெறச்
சீதை யைத்தரு கென்றெனச் செப்பினான்
சோதி யான்மகன் நிற்கெனச் சொல்லினான். 18
இராவணன் சபை:- இராவணன் முன்னுரை
சுட்டது குரங்கு எரி சூறை யாடிடக்
கெட்டது கொடிநகர். கிளையும் நண்பரும்
பட்டனர், பரிபவம் பரந்த தெங்கணும்
இட்டஇல் அரியணை இருந்த தென்னுடல். 19
மற்றில் தாயினும் மலைந்த வானரம்
இற்றில தாகிய தென்னும் வார்த்தையும்
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேறலால்
முற்றுவ தென்இனிப் பழியின் மூழ்கினோம். 20
சேனைகாவலன் பேச்சு:
தேவரும் அடங்கினர், இயக்கர் சிந்தினர்
தாவரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர்
யாவரும் இறைவர்என் நிறைஞ்சும் மேன்மையர்
மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய். 21
மகோதரன் பேச்சு:-
இடுக்கிவண் இயம்புவ தில்லை ஈண்டெனை
விடுக்குவை யாமெனில் குரங்கை வேரறுத்து
ஒடுக்கரும் மனிதரை உயிருண்டு உன்பகை
முடிக்குவன் யான்என முடியக் கூறினான்.
விபீஷணன் பேச்சு:-
எந்தைநீ, யாயும்நீ, எம்முன் நீ,தவம்
வந்தனைத் தெய்வம்நீ, மற்றும் முற்றுநீ
இந்திரப் பெரும்பதம் இழக்கின் ணாய்என
நொந்தனன் ஆதலின் நுவல்வ தாயினேன். 23
கந்த புராண ம்
உறுதி இன்னமொன் றுரைக்கு,வம் நீயும்உன் கிளையும்
இறுதி யின்றியே எஞ்சுதல் வேண்டுமேல் இமையோர்
சிறைவி டுக்குதி இகலினைத் தவிருதி செவ்வேள்
அறைக ழற்றுணை அரணம்என் றுன்னியே அமர்தி.
சூரன் சபை :-சூரன் முன்னுரை
அழிந்ததுஇத் திருநகர், அளப்பில் தானைகள்
கழிந்தன, செறிந்தது களேப ரத்தொகை
கிழிந்தது பாரகம், கெழீஇய சோரியாறு
ஒழிந்ததுஎன் ஆணையும், உயர்வும் தீர்ந்ததால். 19
ஒற்றென வந்தஅவ் வொருவன் தன்னையும்
பற்றிவெஞ் சிறையிடைப் படுத்தி னேனலேன்
செற்றிலன், ஊறதே எனினும் செய்திலேன்
எற்றினி வசையுரைக் கீறு கூறுகேன். 20
காலசித்தன் பேச்சு :-
அண்டர்கள் ஒடுங்கினர் அரக்கர் அஞ்சினர்
எண்டிசைக் கிழவரும் ஏவல் ஆற்றுவர்
மணடமர் அவுணரின் வலியர் பூதராம்
கண்டனம் இன்றுயாம் கலியின் வண்ணமே. 21
பாநுகோபன் பேச்சு:-
ஆண்டெனை விடுத்தியேல் அமர தாற்றிட
மூண்டிடும் அவர்தொகை முருக்கித் தேவராய்
ஈண்டுறு வோரையும் இமைப்பில் வென்றுபின்
மீண்டிடு வேன்என விளம்பி னானரோ. 22
சிங்கமுகன் பேச்சு:-
மந்தி ரத்தரும் தானையந் தலைவரும் மகாரும்
தந்த மக்கியல் வன்மையே சாற்றிய தல்லால்
இந்தி ரப்பெருந் திருவுறும் உன்தனக் கியன்ற
புந்தி சொற்றிலர் இம்மொழி கேள்எனப் புகல்வான். 23
கம்ப ராமாயணம்
அனையவன் சிறுவர்எம் பெருமஉன் பகைவரா னவரை அம்மா இனையர்என் றுணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர்கி லாதார் முனைவரும் அமரரும் முழுதுணர்ந் தவர்களும் முற்று மற்றும் நினைவரும் தகையர்நம் வினையினால் மனிதராய் எளிதின் நின்றார். 24
இசையும் செய்கையும் உயர்குலத் தியற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடு மடியாது
அசைவில் கற்பின் அவ் வணங்கைவிட் டருளுதி இதன்மேல்
விசையம் இல்லெனச் சொல்லினன் அறிஞரின் மிக்கோன். 25
இராவணன் பரிகாசப் பேச்சு :-
ஊன வில்இறுத்து ஓட்டைமா மரத்துள்அம் போட்டிக் ]
கூனி சூழ்ச்சியால் அரசிழந்து உயர்வனங் குறுகி
யான்இ ழைத்திட இல்லிழந்து இன்னுயிர் சுமக்கும்
மானி டன்வலி நீயலாது யாருளர் மதிப்பார். 26
விபீஷணன்மீது குற்றம் சாற்றுதல்:-
நண்ணின மனிதரை நண்பு பூண்டனை
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு
உன்னினை அரசின்மேல் ஆசை ஊன்றினை
திண்ணிதுன் செயல்பிறர் செறுநர் வேண்டுமோ. 27
அஞ்சினை யாதலின் அமர்க்கும் ஆளலை
தஞ்சென மனிசர்பால் வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாற்றினை
நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்றரோ. 28
போர்முனையில் இராமனும் இராவணனும்:-
அறங்க டந்தவர் செயல்இதென் றுலகெலாம் ஆர்ப்ப
நிறங்க ரிந்திட நிலம்விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்லழி முகத்தினன் தலையன்
வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆலன்ன மெய்யன். 29
கந்த புராண ம்
ஞானம் தான்உரு வாகிய நாயகன் இயல்பை
யானும் நீயுமாய் இசைத்துமென் றால்அஃ தெளிதோ
மோனம் தீர்கலா முனிவரும் தேற்றிலர் முழுதும்
தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந் தலைமை. 24
கெடுதல் இல்லதோர் வளனொடு நீயும்நின் கிளையும்
படுதல் இன்றியே வாழ்திஎன் றின்னன பகர்ந்தேன்
இடுதல் கொண்டிடு சிறையிடைத் தேவரை இன்னே
விடுதல் செய்குதி என்றனன் அறிஞரின் மிக்கான். 25
சூரன் பரிகாசப் பேச்சு:-
காற்றில் தள்ளுண்டு நெருப்பினில் சூடுண்டு கங்கை
யாற்றில் தாக்குண்டு சரவணம் புக்கலை யுண்டு
வேற்றுப் பேரிடம் பாலுண்டு, அழு தேவிளை யாடும்
நேற்றைப் பாலனை யோபரம் பொருளென நினைந்தாய். 26
சிங்கமுகன்மீது குற்றம் சாற்றுதல்:-
மறந்தனை இழந்தனை மானம் நீங்கினை
சிறந்திடும் அவுணர்தம் சீர்த்தி மாற்றிடப்
பிறந்தனை ஈண்டொரு பயனும் பெற்றிலை
இறந்தனை போலும்நீ இருந்து ளாய்கொலோ. 27
உரைப்ப தென்இனி ஒருவயிற் றென்னுடன் உதித்துப்
பெருக்க முற்றனை நம்குலப் பகைஞரைப் பெரிதும்
நெருக்க லின்றியே அவர்கள்பாற் பட்டனை நீயே
இருக்க மற்றொரு தெவ்வரும் வேண்டுமோ எனக்கே. 28
போர்முனையில் முருகனும் சூரனும் :-
மான வேற்படை வன்மையும் விற்றொழில் வலியும்
ஏனை யாவுள வன்மையும் கண்டனம் இனிமேல்
பானல் வாய்மைந்தன் செய்வது பார்ப்பன்என் றுன்னி
மோன மாகியே நின்றனன் அவுணர்கள் முதல்வன். 29
கம்ப ராமாயணம்
நின்ற வன்நிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல் உன்னிலன் வெறுங்கைநின் றானெனக் கொள்ளா
இன்ற விந்தது போலுமுன் தீமைஎன் றிசையோடு
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான். 30
சிறையில் வைத்தவள் தன்னை விட்டுலகினில்
தேவர் முறையில்வைத்துநின் தம்பியை இராக்கதர் முதற்பேர்
இறையில் வைத்தவற் கேவல்செய் திருத்தியேல் இன்னும்
தறையில் வைக்கிலன் நின்தலை வாளியில் தடிந்து. 31
அல்லை யாமெனின் ஆரமர் ஆற்றெனும் தோற்றம்
வல்லை யாமெனின் உனக்குள வலியெலாம் கொண்டு
நில்லை யாவென நேர்நின்று பொன்றுதி எனினும்
நல்லை யாகுதி பிழைப்பினி உண்டென நயவேல். 32
ஆள் யாவுள அமைந்தன மாருதம் அறைந்த
பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். 33
கும்பகருணன் இறந்தபொழுது இராவணன் புலம்பல்:-
மின்னிலைய வேலோனே யான்உன் விழிகாணேன்
நின்னிலையா தென்றேன் உயிர்பேணி நிற்கின்றேன்
உன்னிலைமை ஈதாயின் ஓடைக் களிறுந்திப்
பொன்னுலக மீளப் புகாரோ புரந்தரனார். 34
கந்த புராணம்
பொருளின் நீர்மையாற் புனைகலன் மாற்றலிற் புவிமேல்
இருளின் நீர்மையாய்த் தோன்றினோன் அற்புத மெய்தி
மருளின் நீர்மையால் நின்றது நோக்கியே வள்ளல் அருளின்
நீர்மையால் இனையன மாற்றங்கள் அறைவான். 30
இந்தி ரன்தனி மதலையை இமையவர் தம்மை
அந்த மில்பகல் சிறையிடைப் படுத்தனை அதற்கா
முந்தொர் ஒன்றனை விடுத்தனம் ஆங்கவன் மொழியும்
சிந்தை கொண்டிலை விடுத்திலை அமரர்தஞ் சிறையும். 31
அன்ன தன்மையால் ஈண்டுயாம் வந்தனம் அமரில்
தன்னை நேரிலா திருந்திடு தாரகன் தன்னை முன்னம்
அட்டிடு முறையென நின்னையும் முனிவால்
இன்ன வைகலே அடுதும்என் றேகினம் மீண்டும். 32
ஈண்டு நின்புடை ஈண்டிய இலக்கம்வெள் ளத்து
நீண்ட தானையும் நின்சிலை வன்மையும் நின்னால்
தூண்ட லுற்றிடு தெய்வதப் படைகளும் தொலைந்து
மாண்டு போயது கண்டனை வறியனாய் நின்றாய். 33
நெடிய தாரகற் செற்றவேல் இருந்தது, நின்னை
அடுதல் இங்கொரு பொருளுமன்று அரிதும்மற் றன்றால்
படையி ழந்திடு நின்னுயிர் உண்டிடில் பழியாய்
முடியும் என்றுதாழ்க் கின்றனம் தருமத்தின் முறையால். 33-a.
சிங்கமுகன் இறந்தபோது சூரன் புலம்பல் :-
1 உண்டுபோர் என்னின் உளங்களிக்கும் உன்னுயிரை
கொண்டுபோ னான்இன்று கூற்றன்என வேகேட்கில்
தண்டுழாய் மாலும் சதுர்முகனும் இந்திரனும்
பண்டுபோல் தத்தம் பதியாளப் போகாரோ. 34
கம்ப ராமாயணம்
அண்டத் தளவும் இனைய பகர்ந்தழைத்துப்
பண்டைத்தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்
தொண்டைக் கனிவாய் துடிப்ப மயிர்பொடிப்பக்
கெண்டைத் தடங்கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள். 35
இந்திரசித்தன் முறையீடு :-
நிலஞ்செய்து விசும்பும் செய்த நெடியவன் படைநின் றானை
வலஞ்செய்து போவ தானால் மற்றினி வலிய துண்டே
குலஞ்செய்த பாவத் தாலே கொடும்பழி தேடிக் கொண்டோம் சலஞ்செயின் உலக மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே. 36
ஆதலால் அஞ்சி னேன்என் றருளலை ஆசை தான்அச்
சீதைபால் விடுதி யாயின் அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகெலாம் கலக்கி வென்றான்.
இராவணன் மறுமொழி:-
பேதைமை உரைத்தாய் மைந்த உலகெலாம் பெயரப் பேராக்
காதைஎன் புகழி னோடு நிலைபெற அமரர் காண
மீதெழு மொக்குள் அன்ன யாக்கையை விடுவ தல்லால்
சீதையை விடுவ துண்டோ இருபது திண்டோள் உண்டால். 38
வென்றிலன் என்ற போதும் வேதம்உள் ளளவும் யானும்
நின்றுளன் அன்றே மற்றவ் விராமன்பேர் நிற்கு மாயின்
பொன்றுதல் ஒருகா லத்தும் தவிருமேர் பொதுமைத் தன்றோ
இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதி யுண்டோ. 39
கந்த புராணம்
என்னத் தனதண்டம் எங்கும் செவிபடத்
தன்னத் தனியோன் அரற்றும்ஒலி தாங்கேளா
நன்னத் தவனும்ந ளினத்தி னில்உதித்த
அன்னத் தவனும்ம கத்தவனும் ஆர்த்தனரே. 35
பானுகோபன் முறையீடு :-
மாயை தந்ததொல் படையினால் செறுநரை மயக்கித்
தூய நீர்க்கடல் இட்டனன் சுரர்அது புகல
ஆய காலையில் வேல்விடுத்து அவர்தமை
மீட்ட சேயை வெல்வது கனவிலும் இல்லையால் தெரியின் 36
வெஞ்ச மம்செய வல்லவர் கிடைத்திடின் மிகவும்
நெஞ்ச கம்தளிர்ப் பெய்துவன் நேரலர் சமருக்கு
அஞ்சி னேனென்று கருதலை அரசநீ இன்னும்
உஞ்சு வைகுதி யோஎனும் ஆசையால் உரைத்தேன். 37
உறுதி ஒன்றினி மொழிகுவன் பொன்னகர் உள்ளார்
சிறைவி டுக்குதி நம்மிடைச் செற்றம தகற்றி அறுமு
கத்தவன் வந்துழி மீண்டிடும் அதற்பின் இறுதி யில்பகல்
நிலைக்கும்நின் பெருவளம் என்றான். 37
சூரன் மறுமொழி :-
என்னிவை உரைத்தாய் மைந்த இன்றுயான் எளிய னாகிப்
பொன்னுல குள்ள தேவர் புலம்புகொள் சிறையை நீக்கின்
மன்னவர் மன்னன் என்றே யார்எனை மதிக்கற் பாலர்
அன்னது மன்றி நீங்கா வசையுமொன் றடையும் மாதோ. 38
பேரெழில் இளமை ஆற்றல் பெறலரும் வெறுக்கை வீரம்
நேரறு சுற்றம் யாக்கை யாவையும் நிலைய வன்றே
சீரெனப் பட்ட தன்றோ நிற்பது செறுநர் போரில்
ஆருயிர் விடினும் வானோர் அருஞ்சிறை விடுவ துண்டோ. 39
கம்ப ராமாயணம்
விட்டனன் சீதை தன்னை என்னலும் வானேர் நண்ணிக்
கட்டுவ தல்லால் பின்னை யான்எனக் கருது வாரோ
பட்டனன் என்ற போதும் எளிமையிற் படுகி லேன்யான் எட்டினோ டிரண்டும்ஆய திசைகளை எறிந்து வென்றேன். 40
இந்திரசித்து இறந்தபொழுது இராவணன் புவம்பல்:-
மைந்த வோஎனும் மாமக னே எனும்
எந்தை யோஎனும் என்னுயி ரேஎனும் முந்தி னேன்
உனை நானுள னோஎனும்
வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான். 41
புரந்த ரன்பகை போயிற் றோஎனும்
அரந்தை வானவர் ஆர்த்தன ரோஎனும்
கரந்தை சூடியும் பாற்கடற் கள்வனும்
நிரந்த ரம்பகை நீங்கின ரோஎனும். 42
மகனை இழந்த மண்டோதரி புலம்பல்:
தலையின்மேல் சுமந்த கையள் தழலின்மேல் மிதிக்கின் றாள்போல் நிலையின்மேல் மிதிக்கும் தாளள் நேசத்தால் நிறைந்த நெஞ்சள் கொலையின்மேற் குறித்த வேடன் கூர்ங்கணை உயிரைக் கொள்ள மலையின்மேல்மயில்வீழ்ந் தென்ன மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.
கலையினால் திங்கள் என்ன வளர்கின்ற காலத் தேஉன் சிலையினால் அரியை வெல்லக் காண்பதோர் தவமும் செய்தேன்
தலையிலா உடலைக் காண எத்தவம் செய்தேன் அந்தோ நிலையிலா வாழ்வை இன்னும் நினைவனோ நினைவி லாதேன். 44
பஞ்செரி யற்ற தென்ன அரக்கர்தம் பரவை யெல்லாம்
வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்ட தில்லை
அஞ்சினேன் அஞ்சி னேன்இச் சீதையென்று அமிழ்தாற் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளைஇத் தகையன் அன்றோ. 45
கந்த புராணம்
இறந்திட வரினும் அல்லால் இடுக்கண்ஒன் றுறினும் தம்பால்
பிறந்திடும் மானந் தன்னை விடுவரோ பெரியர் ஆனோர்
சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை சூரன் என் றொருபேர் பெற்றேன்.
பானுகோபன் இறந்தபொழுது சூரன் புலம்பல்:-
மைந்தவோ என்தன் மதகளிறோ வல்வினையேன்
சிந்தையோ சிந்தை தெவிட்டாத தெள்ளமுதோ
தந்தையோ தந்தைக்குத் தந்தையிலான் கொன்றனனோ
எந்தையோ நின்னை இதற்கோ வளர்த்தனனே. 41
உன் ஆணைக் கஞ்சி உறங்கா துழன்றிடுமால்
இந்நாள் தனில்நீ இறந்தாய் எனமகிழ்ந்து
பன்னுகப் பாயல் படுத்திருவர் கால்வருடத்
தொன்னுள் எனவே கவலையின்றித் துஞ்சானே. 42
மகனை இழந்த பதுமை புலம்பல் :-
நிலத்தில் வீழ்ந்து சரிந்து நெடுமயிர்
குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள்
அலைத்த உந்தியள் ஆற்றரும் துன்பினள்
வலைத்த லைப்படும் மஞ்ஞையின் ஏங்கினாள். 43
பண்டே வானம் செந்தழல் மூட்டிப் பகைமுற்றும்
கொண்டே சென்றாய் அப்பகல் உன்தன் கோலத்தைக் க
ண்டேன் இன்றே இக்கிடை தானும் காண்பேரே விண்டேன்
அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே. 44
7நையா நிற்கும் தேவர்த மக்கும் நனிதுன்பம்
செய்யா நிற்றல் நன்றல தென்றேன் அதுதேராது
ஐயா நின்னைத் தோற்றனன் மன்னன் அவனும்தான்
உய்வான் கொல்லோ தன்னுயிர் தானும் ஒழியாதே.
கம்ப ராமாயணம்
இராவணன் இறந்தபொழுது விபீஷணன் புலம்பல்:-
உண்ணாதே உயிருண்ணா தொருநஞ்சு
சனகியென்னும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே
உயிர்,நீயும் களப்பட் டாயே
எண்ணாதேன் எண்ணியசொல் இன்றினித்தான்
எண்ணுதியோ எண்ணில் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்தம்
பிரளயமே அமரர் கூற்றே. 46
அன்றெரியின் விழுவேத வதிஇவள்காண்
உலகுக்கோர் அன்னை யென்று
குன்றனைய நெடுந்தோளாய் கூறினேன்
அதுமனத்துட் கொள்ளா தேயே
உன்தனது குலமடங்க உருத்தமரிற்
படக்கண்டும் உறவா காதே
பொன்றினையே இராகவன்தன் புயவலி இன்று
அறிந்துதான் போகின் றாயே. 47
கந்த புராணம்
சூரன் இறந்தபொழுது இரணியன் புலம்பல்:-
நன்றென் பதைஉணராய் நானுரைத்த வாசகங்கள்
ஒன்றும் சிறிதும் உறுதியெனக் கொண்டிலையே
பொன்றும் படிக்கோ பொருதாய் புரவலனே
என்றுன்னை முன்போல் இருந்திடநான் காண்பதுவே. 46
ஆழியான் வேதன் அமரர்க் கிறைமுதலோர்
வாழியாய் என்று வழுத்தியிட வைகிய நீ
பூழியார் மேனிப் புராரிசிறு வன்தேரில்
கோழியாய் நின்று விலாவொடியக் கூவுதியோ. 46 -a
ஓகையால் அண்டத் துயிர்களெலாம் வந்திறைஞ்சச்
சேகையாய் மல்கும் திருத்தாள் கொண் டுற்றிடும்நீ
வாகையார் கின்ற வடிவேற் கரத்தோனைத்
தோகையாய் நின்று சும க்குதியோ தோன்றாலோ. 46-b
பிள்ளைப் பிறைபுனைந்த பிஞ்ஞகன்தன் காதலனைப்
புள்ளிக் கலாபப் பொறிமயிலாய்ப் போற்றும்எல்லை
எள்ளற் பொருட்டால் யான்முன் உரைத்தவற்றை
உள்ளத் திடைஎந்தாய் உன்னுதியோ உன்னாயோ.



