வேலும் வில்லும்
ரா. பி. சேதுப் பிள்ளை

கம்பரும் கச்சியப்பரும்


இருவகை அரசு

நல்லரசும் வல்லரசும்

நல்லரசும் வல்லரசும் இவ் வுலகில் எந் நாளும் உண்டு. நல்லரசு அறநெறியிற் சென்று நெடுங்காலம் நிற்கும்; வல்லரசு மறநெறியில் முனைந்து நிலைகுலைந்து அழியும். படைத்திறம் படைத்த வல்லரசுகள் வீழ்ந்து பட்ட வரலாற்றைப் பழங்காவியங்களிற் காணலாம். அரக்கர் கோமானாகிய இராவணனும், அசுரர் வேந்தனாகிய சூரனும் வரம் பெற்றுயர்ந்த வல்லரசர்; ஆயினும் ஈரமற்ற நெஞ்சினர்; வீரமே விளைத்துத் திளைத்தவர். இலங்கையில் இராவணன் நிறுவிய அரசு இராமனது வில்லால் அழிந்தது; வீரமகேந்திரத்தில் சூரன் அமைத்த அரசு முருகனது வேலால் முறிந்தது. இலங்கையழிந்த கதையைக் கம்பர் எழுதிய இராமாயணத்திலும், வீரமகேந்திரம் வீழ்ந்த வரலாற்றைக் கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணத்திலும் விரிவாகக் காணலாம். இரு கதைகளின் போக்கும், கவிகளின் வரக்கும், ஒற்றுமையுடையனவாகத் தோற்றுகின்றன.

இலங்கைமாநகரம்

இலங்கைமா நகரில் அரசுவீற்றிருந்த இராவணன் நெடுந்தவம் புரிந்தான்; அதன் பயனாகப் பெருவரம் பெற்றான்; வரத்தாலும் வலிமையாலும் செருக்குற்றுத் தேவரையும் மூவரையும் வென்றான். மன்னர் அவன் படைத்திறங் கண்டு அஞ்சி ஓடுங்கி அடிபணிந்தார்கள். இத்தகைய வீரமன்னன், கும்ப கருணன் முதலாய தம்பியரோடும் மேகநாதன் முதலாய மைந்தரோடும் இலங்கையிற் சிறந்து வாழ்ந்தான். வானவர் அந் நாட்டில் வாயடங்கிப் பணி செய்தனர். எங்கும் அறம் தளர்ந்தது; பாவம் வளர்ந்தது.

வீரமகேந்திரம்

இராவணனைப் போலவே சூரனும் பெருந்தவம் இயற்றினான்; அண்டங்கள் பலவற்றை ஆளும் வரம் பெற்றான்; விண்ணுலகின் மீது படையெடுத்து, வானவரைப் பிடித்து, வீர மகேந்திரத்தில் சிறை வைத்தான்; சிங்க முகன் முதலாய தம்பியரோடும், பானுகோபன் முதலாய மைந்தரோடும் மன்னர் மன்னனாக விளங்கினான்.

இவ் வுலகில் மறம் முருகி அறம் வாடும்பொழுது இறைவன் திருவுருக்கொண்டு தோன்றி, மறத்தினை யறுத்து, அறத்தினை நிலைநிறுத்துவான் என்பது ஆன்றோர் கொள்கை. அதற்கேற்ப அரக்கர்கோன் செய்த கொடுமையால் இராமன் அவதரித்தான்;

வில்லும் வேலும்

அசுரர்கோன் இழைத்த தீமையால் முருகன் தோன்று வானாயினான். அறமே உருவாய சிதையைச் சிறை யினின்று மீட்பதற்கு இராமனது விற் படை எழுந்தது; சயந்தன் முதலிய வானவரைச் சிறை மீட்பதற்கு முருகனது வேற்படை எழுந்தது. இங்கனம் வில்லும் வேலும் அறத்திற்குத் துணையாக நின்று மறத்தினை அறுத்த சரித்திரம் இரு காவியங்களிலும் விளக்கப்படுகின்றது.

இரு தங்கையர்

சூர்ப்பணகையும் அசமுகியும்

அவ் வல்லரசர் இருவருக்கும் வாய்த்த தங்கையரே அவர் அழிந்தொழிய வழிதேடுவாராயினர். சூர்ப்பணகை, இலங்கை வேந்தன் தங்கை; அசமுகி, சூரன் தங்கை. இருவரும் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்னும் கொள்கை யுடையவர்; மனம் சென்றவாறெல்லாம் சென்று மையலிலே திளைத்தவர்.

மூக்கறுபட்ட தங்கை

தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக் கானகம் போந்த இராமன் கோதாவிரியாற்றின் அருகே நின்ற அழகிய பஞ்சவடிச் சோலையில் ஒரு பர்ணசாலை யமைப்பித்து அங்கே தங்கியிருந்தான். அச் சாலையில் அழகெலாம் ஒருங்கே வாய்ந்த சீதையைக் கண்டாள் சூர்ப்பணகை; அம் மங்கையை இலங்கை வேந்தனிடம் கொண்டு சேர்க்கக் கருதினாள்; இராமன் வெளியே சென்றிருந்த வேளை பார்த்துப் பர்ணசாலையிற் புகுந்து, பதறி நின்ற சீதையைப் பற்றி யெடுத்துப் பறக்கலுற்றாள். அந் நிலையில் சாலையின் புறத்தே காவல் புரிந்த இலக்குவன் வெளிப்பட்டான்; கரவாடும் வன்னெஞ்சக் கள்ளியின் கூந்தலைப் பற்றியிழுத்து, மூக்கை வாளாலறுத்து மங்கையை விடுவித்தான்.

மூக்கறுபட்ட சூர்ப்பணகையின் மனத்தில் சீற்றம் முறுகியெழுந்தது. இலங்கையில் வாழ்ந்த உற்றார் உறவினரை ஓலமிட்டு அவள் அழைத்தாள்:” வெள்ளி மாமலை யசைத்தமன்னவா! என் மூக்கறுத்த பகைவனை நோக்காயா? திசையானை மருப்பொசித்த இசையாளா! யானடைந்த வசைதீர்க்க வாராயா?” என்று அலறினாள் ; “கரனிருந்து அரசாளும் கானகத்தில் ஒரு நரன் புகுந்து என்னை நலிவதா” என்று கதறினாள் ; மாற்றார் கூற்றாய மேகநாதனை நினைத்தாள்; “வானவர்கோன் பீடழித்த மருகாவோ! யானடைந்த பழியினைப் பாராயோ” என்று அரற்றினாள்; இவ்வாறு வருந்தியழைத்தும் உறவினர் எவரும் வாராமை கண்டு வெறுப்புற்றாள்; அக் கானகத்தில் வாழ்ந்த கரனிடம் போந்து, தன் குறையை முறையிட்டாள். கொடிய சேனையோடு கரன் முதலாய வீரர்கள் கதித்தெழுந்து, இராமனுடன் கடும்போர் புரிந்தனர்; உயிர் துறந்தனர்.

அது கண்ட சூர்ப்பணகை, அழுத கண்ணும் பெருகிய மூக்குமாய் இராவணனிடம் போந்தாள் ; திகைத்து நின்ற தமையனை நோக்கி, மூக்கிழந்த வரலாற்றைக் கூறலுற்றாள்: “ஐயனே, பஞ்சவடிச் சோலையில் ஒரு பாவையைக் கண்டேன். அழகின் கொழுந்தெனத் திகழ்ந்த அம் மங்கை உனக்கே உரியவள் என்று கருதினேன்; அவளை இங்கே எடுத்துவர முயன்றேன்; அப்போது மறைவிலிருந்த இராமன் தம்பி, என் தலையைப் பற்றியிழுத்து, மூக்கறுத்து, மானபங்கம் செய்துவிட்டான். என் வாழ்வு இன்றே முடிந்தது. உன்னிடம் இதைச் சொன்னபின் உயிர் துறக்கக் கருதினேன்” என்றாள்.

சீதையின் சிறைவாசம்

தங்கைக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டு மனம் வருந்திய இராவணன், அவள் சொல்லிய மங்கையின் அங்க நலன்களை இறையளவும் மறந்தானல்லன்; அவ் வழகியை அடைதற்குரிய வழியை நாடினான்; மாறுகோலம் புனைந்து பஞ்ச வடிச் சாலையிற் போந்து, தனியாக இருந்த சீதையைக் கவர்ந்தெடுத்து அசோகவனத்தில் சிறை வைத்தான்.

சிறைப்பட்ட சீதை, ஊணுறக்கமற்று வாடி மயங்கினாள் ; புகையடைந்த ஓவியம்போல் பொலிவிழந்தாள்; ஆயினும், நாயகன் வருவான் என்று நம்பி, அரக்கர்கோன் செய்த சிறுமையெல்லாம் பொறுத்து, உயிர் தரித்திருந்தாள். இங்ஙனம் சிறையிருந்து வருந்திய சீதை வடித்த கண்ணீர், அறப்படையை இலங்கைக்கு வரவழைத்தது.

கையறுபட்ட தங்கை

இனி, சூரன் கதையைப் பார்ப்போம்: இந்திரன் சூரனது கொடுமைக்கு அஞ்சி, பொன்னாடு துறந்து, பொன்னி நாட்டை யடைந்தான்; சிவ மணங் கமழும் சீகாழிப் பதியில் ஒரு பூஞ்சோலை யமைத்து, அங்கு இந்திரையோடு தங்கியிருந்தான். சூரன் ஆட்சியில் ஈனமுற்று வருந்திய வானவர். இந்திரனிடம் போந்து, தம் குறையை முறையிட்டார்கள். வானவர் துயரங் கண்டு தரியாத வேந்தன், கயிலையங்கிரி வாசனாகிய ஈசனிடம் ஓலமிடப் புறப்பட் டான்; தனித்திருந்த இந்திரையை மாசாத்தன் காவலில் ஒப்புவித்து, விடைபெற்றுச் சென்றான்.

பூஞ்சோலையில் தனித்திருந்த தேவியைச் சூரன் தங்கையாகிய அசமுகி கண்ணுற்றாள்; அவளைச் சூரனிடம் கொண்டுசேர்க்க விரும்பினாள். அவள் பேசிய தீயமொழிகளைக் கேட்ட தேவி அஞ்சி நடுங்கினாள்;

” பழியும் பார்த்திலை, படிஇ கழ்ந்திடும்
மொழியும் பார்த்திலை, இறையும் பார்த்திலை
வழியும் பார்த்திலை, வருவ பார்த்திலை
இழியும் தீயசொல் இயம்பற் பாலையோ “

என்று நயந்துரைத்தாள். இங்ஙனம் மாறுபட்டுப் பேசிய மாதை மறித்தெடுத்துச் செல்லத் துணிந்தாள். அசமுகி, அந் நிலையில் பூஞ்சோலையின் புறத்தே நின்று காவல் புரிந்த மாசாத்தனின் சேவகனாகிய மாகாளன் வெளிப்பட்டான்; வான மங்கையைத் தொட்டிழுத்த . அசமுகியின் கையை வாளால் துணித்திட்டான்.

கையற்ற அசமுகி கதறி அழுதாள்; வீரமகேந் திரத்தில் வீற்றிருந்த சூரனை நினைத்தாள்; “மன்னாவோ, மன்னாவோ! யான் பட்ட மானத்தை மனங்கொள் ளாயோ? மாற்றார் திறங்குறைத்த முன்னவா! என் என்று கரங்குறைத்த பகைவனைக் காணாயோ?” கதறினாள்; மற்றும் மகேந்திரத்தில் வாழ்ந்த உற்றார் உறவினரையெல்லாம் ஒருவர்பின் ஒருவராக நினைந்து ஓலமிட்டாள்; “கதிரவனைச் சிறை செய்த மருகாவோ, மருகாவோ! யான் பட்ட கையறவு காணாயோ? மாய வன் நேமியைப் பொன்னாரமெனப் பூண்ட தாரகனே ! இன்று மாயாப் பழிபூண்டு நின்றாயே! வாசவன் ஏறிய வாரணத்தை ஒரு கையால் வீசியெறிந்த சிங்கமுக வீரனே! அவ் வானவன் விடுத்த சேவகனால் வந்தடைந்த வசையினைப் பாராயோ?” என்று முறையிட்டாள்; உற்றார் எவரும் வாராமை கண்டு, அற்ற கரத்தோடு அண்ணன் இருந்த இடம் போந்தாள்.

சூரன் விற்றிருந்த சபையிற் புகுந்து, அசமுகி தனக்கு நேர்ந்த சிறுமையை எடுத்துரைக்கத் தொடங் கினாள். “ஐயனே, நின் ஆணைக்கடங்காது, கழந்துறையும் இந்திரையைக் காவிரி நாட்டிலே கண்டேன்; நறுமணங் கமழும் பூஞ்சோலையில் தனித்திருந்த அம் மாதை என்னோடு வரும்படி அழைத்தேன்; அவள் மறுத்தமையால், உன்னிடம் அவளை எடுத்துவர முனைந்தேன். அப்பொழுது வாசவன் ஏவலால், சோலையைக் காத்து நின்ற காவலன், என்கரத்தை வாளால் அறுத்திட்டான். கரமற்ற எனக்கு இனி உறவாவார் யாருமில்லை. ஊனமுற்றோர் உயிர்வாழ்ந்திருத்தல் ஈனமன்றோ? மானமழிந்த பின் வாழலாகுமோ? ஆதலால்,ஆவி துறக்கத் துணிந்தேன்” என்று கண்ணீர் சொரிந்தாள்.

வானவர் சிறைவாசம்

தனக்கு நலம் புரியக் கருதிய தங்கை கையற்றாள் என்று அறிந்து மனங்கொதித்த சூரன், காவிரி நாட்டில் கரந்து வாழ்ந்த வான மங்கையைக் கவர்ந்துவர விரும்பினான். அவன் கருத்தறிந்த பானுகோபன், தந்தையை வேண்டித் தானே பழிக்குப் பழிவாங்கப் புறப்பட்டான்; காவிரிநாட்டில் அசமுகி காட்டிய பூஞ்சோலையில் இந்திரையைக் காணாது, விண்ணுலகின்மீது படையெடுத் தான். இந்திரன் மைந்தனாகிய சயந்தன், வானவர் படைக் குத் தலைவனாய்ப் பானுகோபனை எதிர்த்தான். பொன்னாட்டில் நிகழ்ந்த போரில் அசுரர் வென்றார்; வானவர் தோற்றார். தன் கையகப்பட்ட சயந்தனையும் தேவ ரையும் சூரனிடம் கொண்டு சென்றான் பானுகோபன். மைந்தன் திறங் கண்டு மனமகிழ்ந்த மன்னவன், மாற்றாரனைவரையும் சிறைக்கோட்டத்தில் அடைத்து வைத்தான்.

சிறையில் அகப்பட்ட சயந்தன் வாடிவருந்தினான்; இழந்த நிலையினை எண்ணி எண்ணி ஏங்கினான் ; வானவர்க்கு நேர்ந்த வசையினை நினைந்து சாம்பினான்; தேவர்க்கும் மூவர்க்கும் முதலாய ஈசன் இரங்கி அருள் செய்தாலன்றிச் சிறையினின்றும் விடுபடுமாறில்லை என்றுணர்ந்து, நாற்றிசையும் நோக்கிக் கண்ணீர் வடித்தான். சிறையிருந்த சயந்தனும் வானவரும் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், வீரமகேந்திரத் திற்கு வேற்படையை வரவழைத்தது.

இருபெருந் தூதர்

இராம தூதனாகிய அனுமன் சீதை சிறையிருந்த இலங்கையை அடைந்தான். அந்நகரம் வீரமா நகரமாய். விளங்கிற்று. ஆடவர் என்று பேர் படைத்தார் அனைவரும் வீரக் கழலணிந்த காலர்; கல்லினும் வலிய தோளர்; படைத்தழும் பேறிய கையர்; கனலுமிழும் கண்ணர். இத்தகைய வீரரைக் கண்ட மாருதி,

‘கழலிலாக் காலும்கால அயிலிலாக் கையும் காந்தும்
அழலிலாக் கண்ணு மில்லா ஆடவ ரில்லை ‘

என்று வியந்து புகழ்ந்தான்.

அநுமன் கண்ட இலங்கை

போர்வெறி பிடித்த அரக்கர் வீரமேபேசித் திளைத்தனர்; வீரமே விளைக்க விரும்பினர்; போரிலேவிழுப்புண்படாத நாளெல்லாம் வீணாய்க் கழிந்த நாளென்று கருதினர். செல்வம் மலிந்த இலங்கைமா நகரில் பசியால் நலிந்தவரும், பிணியால் உழன் றவரும் இல்லை. அரக்கர் அனைவரும் கவலையற்று ஆடிப்பாடி அகமகிழ்ந்திருந்தார்கள் ; கள்ளுண்டு களித்திருந்தார்கள்.

அவ் வீரமா நகரில் வானவர் வணங்கிப் பணி செய்வாராயினர். இலங்கையர்கோன் ஆதரித்து வளர்த்த அசோக வனத்தைக் கண்ணினைக் காக்கும் இமைபோல் காத்துநின்றார் சிலர்; அரக்கர்கோன் மாளிகையில் அஞ்சி ஒடுங்கிக் குற்றேவல் செய்தார் சிலர். அக் காட்சியைக் கண்ட இராமதூதன், இராவணன் இயற் றிய தவத்தின் பெருமையை மனமாரப் போற்றினான்; அப்பால் அசோகவனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்டு அவள் சோகத்தை ஒருவாறு மாற்றினான்.

இலங்கை வேந்தனும் அநுமனும்

அநுமன் அரக்கரை அச்சுறுத்தக் கருதி அசோக வனத்தை அழித்தான்; அதுகண்டு சீற்றமுற்று எழுந்த அரக்கர் சேனையைச் சிதைத்தான்; பஞ்ச சேனாபதி யரைப் பருந்துக்கு விருந்தாக்கினான் ; அரசிளங் குமரனாய அக்கனை அரைசாந்துபோல் தரையில் தேய்த்துக் கொன்றான்; இறுதியில், மேகநாதன் வீசிய பாசத்தில் அகப்பட்டு இராவணன் முன்னே போந்து நின்றான் ; குறும்பிழைத்த குரங்கு அகப்பட்ட தென்று இறுமாந்திருந்த வேந்தன் செவிகளில் தன்னையாட்கொண்ட நாயகன் பெருமையை நன்றாக எடுத்துரைத்தான்; ஆதியும் அந்தமுமில்லாத இறைவனே அயோத்திமா நகரில் அரசகுமாரனாகத் தோன்றினான். அட்பாலுக்கு அப்பாலாய் அமைந்த ஆதி பகவனே கால் தரைதோய நின்றான்; கண்ணுக்கும் எளியன் ஆனான் என்னும் உண்மையை இனிது உணர்த்தினான்.

ஆயினும், மாருதி யுரைத்த வாய்மை, செருக்குற் றிருந்த இராவணன் செவிகளில் ஏறவில்லை. அறநெறி தவறிய அரசனைநோக்கி, “உன் செல்வம் சிதையா திருக்கவேண்டுமாயின், சீதையை விடுக; உன் ஆவியை ஒரு பொருளாகப் போற்றுவாயாயின், மன்னவன் தேவியை விடுக” என்று மாருதி உறுதியாக உரைத்தான்.

வீரவாகு கண்ட மகேந்திரம்

இனி, முருகனுடைய தூதனைப் பார்ப்போம்: முருக தூதனாய வீரவாகு மகேந்திரத்தை அடைந்தான். அந் நகரின் படைத்திறம் அவன் கருத்தைக் கவர்ந்தது. அசுரர் அனைவரும் வரத்தினிற் பெரியர்: மாயவன்மையிற் பெரியர்; உரத்தினிற் பெரியர் ; ஊக்கத்திற் பெரியர். வீரமகேந்திரத்தில், நலிந்த ஆடவரில்லை; நரம்பெழுந்து உலர்ந்தவரும், நரைதிரை யுடைவரும் அந் நகரில் இல்லை; வறுமையால் வாடியவர் எவரும் அங்கில்லை. அதுகண்ட வீரவாகு சூரனியற்றிய தவத்தின் பெருமையை வியந்து புகழ்ந்தான். இத்தகைய வீரமாநகரில் வானவர் வணங்கி ஏவல்புரிந்தனர். நாள்தோறும் கடலிற் போந்து வளமார்ந்த மீன்களைப் பிடித்துத் தலையிற் சுமந்துவரும் பணியைச் சூரன் அவர்க்கு விதித்திருந்தான். மீனெடுத்துவரும் ஈனத்தொழிலை வானவர் வெறுத்தனரேனும், சூரனது ஆணையை மறுத்தற்கஞ்சி, வழுவாது பணியாற்றிவந்தனர். இவற்றை யெல்லாம் கண்ணுற்ற வீரவாகு, சயந்தன் சிறையிருந்த இடத்திற்கு சென்றும் அவனைத் தேற்றினான்.

சூரனும் வீரவாகுவும்

மகேந்திர நகரை முற்றும் சுற்றிப் பார்த்து, அதன் வீரத்திறத்தினை நன்குணர்ந்த வீரவாகு, சூரன் முன்னே சென்றான்; விண்ணினின்றும் இழிந்த பொற் பீடத்திலமர்ந்து சீற்றங்கொண்ட சூரனிடம் முருகன் பெருமையை அறிவிக்கத் தலைப்பட்டான் ; “தன்னிகரில்லாத் தலைவனே முருகனாய்த்தோன்றினான்; அண்டங்களனைத்தையும் படைத்தும் காத்தும் ‘கரந்தும் விளையாடும் பரமனே அறுமுகக் கோலங் கொண்டு அழகிய பாலனாய் வந்தான் என்னும் உண்மையை எடுத்துரைத்தான்.

நெறி தவறிய சூரன், அச் செம்மொழியைச் செவியில் ஏற்றானல்லன். ஆயினும், பெருமிதமுற்ற பேதையாய சூரனுக்குக் கட்டுரை கூறுதல் கடன் எனக் கருதினான் முருகதூதன்; “நின் கிளையோடு நீ நெடிது வாழ விரும்புவாயாயின், இப்பொழுதே வானவரைச் சிறையினின்றும் விடுக ; அறுமுகச் செவ்வேள் அடி பணிக” என்று கட்டுரை கூறினான்.

இரு வல்லரசர் சபை

அநுமன் இலங்கையை எரிமடுத்தான்; தன்னைப் பற்றப்போந்த அரக்க வீரரை எற்றியறைந்தான்; மீண் டும் கடல் கடந்து இராமனிடம் போந்தான். அநுமன் வைத்த தீயால் இலங்கை முற்றும் புகை மண்டிற்று; நெடுமாடங்கள் நெருப்பினால் வெந்து நீறாயின;

ராவணன் சபை

அரக்கர் எண்ணிறந்தவர் அழிந்தனர்; இராவணன் அரண் மனையும் எரிந்தொழிந்தது. ஒருவாறு நெருப்பின் வேகம் தணிந்ததும், மன்னவன் ஆணையால் முன்னிலும் அழகுற மாடமாளிகைகள் கட்டி முடிந்தன. புதிய மாளிகையில் அரக்கர்கோன் சபை கூடிற்று. மந்திரத் தலைவரும், தானைத் தலைவரும், தந்திரத் தலைவரும் வந்திருந்த சபையின் நடுவே ஓர் அரியாசனத்தில் இராவணன் அமர்ந்தான் ; சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் நெஞ்சம் பற்றியெரிந்தது; மானமும் சீற்றமும். மனத்தில் மாறிமாறி எழுந்தன; உணர்ச்சி ததும்பப் பேசலுற்றான்: ஒரு வானரம் வந்து என் வளநகரைச் சுட்டது; உற்றார் உறவினர் பட்டனர்; அழுகுரல் எங்கும் பரந்தது. இவ் வலங்கோலத்தினிடையே அரியாசனத்தில் என் உடல் அமர்ந்திருக்கின்றது. மற்றொன்றும் இல்லை என்றாலும் நம் நகரத்தைப் பாழ் செய்த குரங்கைப் பற்றிக் கொணர்ந்தோமா? பழிக்குப் பழி வாங்கினோமா? அவ் வானரம் இற்றொழிந்தது என்ற சொல்லேனும் பெற்றோமா? சீர்குலைந்தது; சிறுமையில் மூழ்கினோம்” என்று கொதித்துக் கூறினான் கொற்றவன்.

அரசன் அமர்ந்தவுடன் எழுந்தான் சேனைகாவலன்; முறுக்காகப் பேசத் தொடங்கினான் : அரசே, உன் பெருந்திறலுக்காற்றாது தேவரும் அடங்கினர்; அவர் தலைவராய மூவரும் ஒதுங்கினர். தானவர் தருக்கிழந்தனர்; இயக்கர் நிலைகுலைந்தனர். இவ்வாறு பல திறத்தாரும் அடங்கிப் பணிசெய்ய அரசு வீற்றிருக்கும் நீ, ஒரு வானரம் வலியதென்று கூறலாகுமோ?’ என்றான். படைத்தலைவன் கருத்தை ஆதரித்துப் பேசலுற்றான் மந்திரத்தலைவனாய மகோதரன்: “ஐயனே, பலபல பன்னுதலாற் பயனில்லை. எனக்கு விடைகொடுப்பாயாயின் இப்பொழுதே எழுந்து சென்று, குறும்பு செய்த குரங்கைக் கொன்றொழிப் பேன். அவ்விலங்கை இங்கு அனுப்பிய மானிடரின் உயிர் குடித்து உன் பகைமுடிப்பேன்” என்று துடுக்காகப் பேசினான்.

இங்ஙனம் தானைத் தலைவனும், மந்திரத் தலைவனும், பிறரும் பேசிய வீர மொழிகளால் இலங்கை வேந்தன் உள்ளம் கிளர்ந்து முறுகி நின்றது. அந் நிலையில் எழுந்தான் விபீஷணன்; மன்னவனைக் கைகூப்பி வணங்கினான்; “ஐயனே, இவ் வளநகரம், ஒரு வானரத்தால் அழிந்ததென்று வருந்துகின்றாயே ! உண்மையில் அவ்வானரமா இலங்கையை அழித்தது அசோகவனத்தில் சிறையிருந்து தவம்புரியும் சீதையின் கற்புத்தீயன்றே இக் கடிநகரைச் சுட்டெரித்தது? அரசே, சீதையைச் சிறையினின்றும் விட்டுவிடு. அந் நங்கையின் நாயகனே உலகநாயகள். அவனே மூவர்க்கும் முதலாய முழுமுதற்பொருள். அருந்தவத்தின் பயனாகப் பேரரசும் பெருந்திருவும் பெற்றாய்; நெடுங்காலம் வாழ்ந்திருக்கும் வரமும் பெற்றாய்; இச் சீரும் சிறப்பும் நிலைக்கவேண்டு மாயின் சீதையை வீட்டருள்வாய் ” என்று வேண்டினான்.

வீர வெறி பிடித்த வல்லரசன் செவிகளில் விபீஷணன் சொல் ஏறவில்லை. எதிர்த்துப் பேசிய தம்பியை அவன் ஏளனம் செய்யத் தலைப்பட்டான் ; “அப்பா, தம்பீ! உன் மானிடன் திறமையைக் கூறுவேன் கேள் : மிதிலையில் உளுத்துக் கிடந்த வில்லை எடுத்து ஓடித்த வீரன் ; வானர நாட்டில் ஓர் ஓட்டை மாமரத்தை அம்பினால் துளைத்த வில்லன் ; கூன் விழுந்த ஒரு மாது செய்த சூழ்ச்சியால் அரசிழந்த கொற்றவன்; யான் ஏவிய மாயமான் பின்னே மருண்டு ஓடி, மனையாளைப் பறிகொடுத்த மகிபன். மணிமுடி துறந் தும், மனையாளை இழந்தும், மானமின்றி இன்னும் உயிர் சுமந் ந்து திரியும் மானிடன் வலியையை வேறு எவர் மதிப்பார்?” என்று இழித்துப் பேசினான்.

அன்றியும், பகைவரது திறமையைப் பாராட்டிய தம்பி, அவரோடு உறவு பூண்டான் என்றும், அவருதவி யால், இலங்கையரசைப் பெற ஆசைப்பட்டான் என் றும் இராவணன் குற்றம் சாட்ட முற்பட்டான்; தவறிழைத்த தம்பியை உடனே நாட்டைவிட்டு வெளியேறும்படி பணித்தான். அக் கடுமொழி கேட்ட விபீஷணன், “ஐயனே, உன் நலங்கருதியே இவ்வாறு உரைசெய்தேன். நீ உள்ளதை உள்ளவாறு உணர்ந்தாயல்லை. நின் கருத்துக்கு மாறாகப் பேசத் துணிந்த என் பிழையைப் பொறுத்தருள்க. நீ பணித்தவாறே போகின்றேன் என்று இலங்கையை விட்டு அகன்றான்.

சூரன் சபை

முருக தூதனாகிய வீரவாகுவும்,மகேந்திர நகரை அழித்தான் ; அசுரர் சேனையைச் சிதைத்தான் ; பிடிக்க வந்த அசுரவீரரை அடித்தொழித்து அப்பாற் போந்தான்.

மான வீரனாய சூரன், நிகழ்ந்ததறிந்து நெஞ்சங் கொதித்தான். மாளிகையில் மந்திரசபை கூடிற்று. சூரன் பேசலுற்றான் : “முருகதூதனாக வந்த ஒருவனால் இத் திருநகரம் அழிந்தது. அளவிறந்த அசுரசேனை இறந் தொழிந்தது. மாண்டவர் எலும்பு மலையாகக் குவிந்தது. குருதி வெள்ளம் எங்கும் பெருகிற்று.

என் ஆணை ஒழிந்தது; உயர்வும் தீர்ந்தது. இந் நகரிற் போந்து சிறுமை செய்த தூதனைப்பற்றிச் சிறையில் அடைத்தேனா? செற்றுச் சிறுமை துடைத்தேனா? வடுப்படுத்தியேனும் விடுத் தேனா? யாதும் செய்திலேன். வசை வெள்ளத்தில் மூழ்கினேன்” என்று வருந்தியுரைத்தான் சூரன்.

அப்போது.சபையிலிருந்த அமைச்சரும் படைத் தலைவரும் அரசனது மனப்பான்மைக் கேற்றவாறு பேசத் தலைப்பட்டார்கள். அவர்களுள், காலசித்தன் என்பான் எழுந்து, சூரனது வீரப்புகழை விளக்குவானா யினான்: “அண்டர்கள் அடங்கினர். அரக்கர் அஞ்சினர். எண் திசைக் காவலரும் ஏவல் புரிகின்றார். இத் தகைய சூரன் ஆட்சியில் இன்று அசுரர் எளியராம்; பூதர் வலியராம்: இது கலியின் கோலமன்றோ” என்று மாற்றாரை ஏளனம் பேசினான். அவன் அமர்ந்தவுடன் சூரன் மகனாய பானுகோபன் எழுந்தான்; மிடுக்காகப் பேசலுற்றான்: “மன்னவா ! இன்றே என்னைப் போகவிடு ; நம் பகைவரை முறித்து, வான் வரையு மடித்து, நொடிப்பொழுதில் மீள்வேன்” என்று அறைந்தான்.

இவ்வாறு மந்திர சபையில் எழுந்த வீரமொழிகள், நெருப்பில் நெய் வார்த்தாற்போன்று சூரன் மனத்தில் அமைந்த சீற்றத்திற்கு ஊற்றமளித்தன. அந்நிலையில் அவன் தம்பியாய சிங்கமுகன் எழுந்தான். குரனை நோக்கி, “ஐயனே, இதுகாறும் அமைச்சரும் பிறரும் வீரமே பேசினர்; தம் திறமையை விரித்தனர்; மாற்றார் வலிமையை இகழ்ந்தனர். இவர்களில் ஒருவரும் அறிவுரை பகர்ந்தாரல்லர். விண்ணவர் நாட்டை நீ வென்று அழித்தபோது வானவரைப் பிடித்துச் சிறை யில் அடைத்தாய். அன்னார் துயரம் இன்னும் தீர்ந்த பாடில்லை. அவரது துன்பத்தைத் துடைப்பதற்காகவே முருகன் தோன்றியுள்ளான் ; அவன் சிவனார் திருமகன்; ஆதிப் பரம்பொருளின் தோற்றம் ஞானமே வடிவாய் முருகன் தன்மையை நாமா பேசவல்லோம்? புற்றாய், மரமாய் வற்றிக் கிடந்து அருந்தவம் புரியும் முனிவரும் அவனை அறிந்திலர்- இத் தகைய பரம்பொருளைப் பகைத்தவர் பிழைப்பரோ? நீயும் நின் செல்வமும் சுற்றமும் கேடின்றி வாழவேண்டு மாயின் வானவரை இன்றே சிறையினின்று விட்டுவிடுதல் நன்று ” என்று வேண்டினான்.

இங்ஙனம், முருகனைப் புகழ்ந்து, வானவரைச் சிறையினின்று விட்டுவிடுமாறு நயந்து பேசிய சிங்க முகனை வெறுத்தான் சூரன். பரம்பொருள் என்று அவன் பாராட்டிய முருகனை ஏளனம் செய்யத் தலைப் பட்டான் : சிங்கனை நோக்கி, “அப்பா, தம்பி | பாலுண்ணும் பாலனையா பரமன் என்றாய்? அவன் காற்றில் தள்ளுண்டவன்; நெருப்பில் சூடுண்டவன் ; கங்கையாற்றில் தாக்குண்டவன் ; சரவணப் பொய்கையில் அலைப்புண்டவன்; வேற்றுத் தாயாரிடம் பாலுண்டு விளையாடித் திரிகின்றவன். அந்த நேற்றைப் பாலனையோ பரம்பொருள் என நினைத்தாய்?” என்றான் சூரன்.

அவ்வளவில் அமையாது, சிங்கமுகன் மீது சூரன் குற்றம் சாட்டினான்; “நீ என் உடன் பிறந்தாய் ; உடல் பெருத்தாய்; நம் குலப்பகைவரை அழிக்க முற்படாது, அவர்க்கு ஆளாயினாய் ; அசுரர் மரபிற்குரிய ஆண்மை இழந்தாய்; மானந்துறந்தாய்; குலப் பெருமையை அழிக்கப் பிறந்தாய்; என் பகையை யானே வென்று முடிப்பேன் ; நீ உன் வழியே போ” என்று வெகுண்டு பேசினான். அவ்வுரை கேட்டு மனம் வருந்திய சிங்கன், “வருவதறியாமல் பேசுகின்றான் மன்னவன்; அழிந் தொழிய வழி தேடுகின்றான். என்னால் இயன்றமட்டும் அவனைத் திருத்த முயன்றேன். என் உரையை அவன் தன் செவியில் ஏற்றானல்லன். பேதையரைத் திருத்த முயல்பவர் அவரினும் பேதையரே” என்று மனம் நொந்தான்.

இரு பெரும் போர்

இலங்கைப் போர்

அறப்படைக்கும் மறப்படைக்கும் இலங்கையில் போர் தொடங்கிற்று. முதல் நாள் நிகழ்ந்த போரில் இராவணனே முன்னின்று இராமனை எதிர்த்தான். வீரர் இருவரும், பகல் முழுதும் கடும் போர் புரிந் தனர். இறுதியாக, இலங்கை வேந்தன் முடியிழந்து, படையிழந்து, மானமும் இழந்து, எளியனாய் நின்றான். அந் நிலையில் இராமன் அவனை நோக்கி, “அரக்கனே ! உன் பெருஞ் சேனையெல்லாம் அழிந்து ஒழிந்தது.நீயும் வெறுங் கையனாய் நிற்கின்றாய். இப்பொழுதேனும் நீ சிறை வைத்த சீதையை விடுத்து, இலங்கை யரசை அறவோனாகிய விபீஷணனுக்குக் கொடுத்து, உயிர் வாழ விருப்பமோ? அன்றி மேலும் போர் புரிந்து அழிந்தொழிய விருப்பமோ? போர் புரிதலே உன் கருத்தாயின் இன்று போய் உன் படைகளைத் திரட்டிக் கொண்டு நாளை வா” என்றுரைத்தான். அது கேட்ட இராவணன், தலை கவிழ்ந்து, வாயிழந்து தன் அரண்மனையை நோக்கி நடந்தான்.

வீரமகேந்திரத்தில் வந்தடைந்த முருகன் சேனை யோடு முதல் நாள் போர் புரிந்தான் சூரன் மகனாய பானுகோபன். அன்று நிகழ்ந்த அரும்போரில், மாற்றார் திறமை சூரன் மைந்தனுக்கு நன்றாக விளங்கிற்று. அசுரப்படை யனைத்தையும் பறிகொடுத்து, மானமழிந்தவனாய், பானுகோபன் வாயடங்கி, மனமடங்கி மீண்டான். இரண்டாம் நாள் சூரனுடன் நிகழ்ந்த போரில் முருகன் விடுத்த திகிரிப்படை அசுரர் சேனையைக் கொன்றுகுவித்தது. சூரனும் தேரிழந்து, வில்லிழந்து, குடையிழந்து, முடியிழந்து தரையிடை நின்றான். அப்போது முரு கன் அவனை நோக்கி, “சூரனே! நீ வானவரையும் வாசவன் மைந்தனையும் வன்சிறையில் வைத்தாய். அது தவறு என்று அறிவித்தற்கு உன்னிடம் என் தூதுவனை அனுப்பினேன்.

மகேந்திரப் போர்

அவன் சொல்லிய அறவுரையைச் சிந்தையிற் கொண்டாயல்லை. உன் தம்பியாகிய தாரகனைத் தடிந்த வேல் உன்னையும் கொல்லுதல் ஒருதலை. படையிழந்து நிற்கும் பகைவனை அடுதல் பழியாகும் என்று கருதி உன்னை இன்று போகவிடுகின்றேன். வான வரைச் சிறையினின்றும் விடுவித்தால் உயிர் வாழ்வாய். இன்றேல், என் வேற்படைக்கு இரையாவாய்” என்று உறுதியாக உரைத்தான். சூரன், மறுமொழி யொன்றும் பேச வகையறியானாய், அமர்க்களத்தின்று மறைந்து போய் அரண்மனையை அடைந்தான்.

அமர்க்களத்தில் மேகநாதன்

மேகநாதன் செய்த போர்

இராவணன் மைந்தனாய மேகநாதன், இலங்கையில் நிகரற்ற வீரன் ; வானவரை வென்று வான்புகழ் பெற்றவன்; இந்திரனை வென்று சிறைபிடித்து, இந்திர சித்தன் என்று பெயர் எய்தியவன். வில்லின் செல்வனாய அவ் வீரன் சீற்றமுற்று மாற்றாரைத் தாக்கினான் : எதிரே நின்ற இலக்குவன்மீது தன் கொடிய படைக் கலங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஏவினான். அவற்றை அவன் எளிதாகத் தடுத்துவிட்டான். எப்படியும் அன்று பகைவரை வென்றே தீரவேண்டும் என்று கருதிய மேகநாதன், மாயவன் படையை எடுத்து விடுத்தான். கண்டோர் மனங்கலங்கச் சென்ற அப்படை, இலக்குவனை வலம்வந்து விலகிப் போயிற்று. அதைக்கண்ட மேகநாதன் மாற்றார் திறத்தை உள்ளவாறு உணர்ந்தான்; அவரை வெல்ல முடியாதென்று விளக்கமாக அறிந்தான் வெல்லலாகாத பகையை விலக்கிவிட்டால் நல்லதாகுமே என்று எண்ணினான் ; அந் நிலையில் போர்க்களத்தினின்று மறைந்து இராவண னிடம் போந்தான்; மாற்றாரைக் கொன்று வருவான் என்று மனங்களித்திருந்த மன்னவன் முன்னே, கரங் குவித்து நின்று, “ஐயனே, இன்று நிகழ்ந்த போரில், நெடியவன் படையை ஏவினேன். அது, முன்னின்ற பகைவனை வலம்செய்து போயிற்று. அதனினும் வலிய படை என்பால் உண்டோ? நம் குலம் செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டோம். இலக் குவன் இன்னும் சீற்றமுறவில்லை. அவன் சீற்றமுற்றால் இவ் வுலக மூன்றும் சிதையுமென்று தோன்றுகின்றது” என்று ஒன்றையும் மறையாது எடுத்துரைத்தான். அப்போது, இராவணன் முகத்தில் செற்றம் செறிந்தது. கண்கள் தழலெனச் சிவந்து சுழன்றன. மன்னவன மனநிலை யறிந்த மேகநாதன், மீண்டும் இறைஞ்சி நின்று ”அருமைத் தந்தாய் ! இவ்வாறு பேசியதால் நான் போருக்கு அஞ்சினேன் என்று கருதிவிடலாகாது. அச்சத்தால் இவ் வண்ணம் உரைத்தேனல்லேன்;

உன்பால் வைத்த ஆசையால் உரைத்தேன் ; வரம்பெற் றுயர்ந்த நீ நெடுங் காலம் வாழவேண்டும்; நின்செல்வம் அழியாதிருக்கவேண்டும் என்னும் ஆசையால் இன்னும் ஒன்று கூறத்துணிந்தேன்: சிறைப்படுத்திய சீதையை நீ விடுவாயாயின், மாற்றார் சீற்றந்தீர்வர்; நம் நாட்டை விட்டு அகல்வர் ; நாம் செய்த தீமையும் பொறுப்பர். பகை நீங்கி, நீ பண்புற்று வாழ்வாய்” என்றான்.

அம் மொழி கேட்ட இலங்கை வேந்தன், சிந்தை கலங்கிச் சீற்றந் தலைக்கொண்டான். எதிரே நின்ற மைந்தனை நோக்கி, “பேதாய், அறியாமற் பேசினாய்; நீவென்று வருவாய் என்றா இப்பகையைத்தேடினேன்? என் தோள்வலியை நம்பியே சீதையை எடுத்துவந்தேன். எடுத்துவந்த மங்கையைக் கொடுத்துவிடுதல் ஈனமன்றோ? அமர்புரிந்து, ஆவியை விடுவேனேயன்றி, மாற்றான் தேவியை விடுவேனோ ? மானமே உயிரினும் பெரிது; புகழே என் வாழ்வினும் பெரிது; அழியும் தன்மை வாய்ந்த இவ்வுலகில் அழியாது நிற்பது புகழ் ஒன்றேயன்றோ?” என்று வேகமாகப் பேசினான். அவ்வுரை கேட்ட மேகநாதன், “கேடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே” என்னும் பழமொழியின் உண்மையை நன்குணர்ந்தான்; போர்க்களத்தில் உயிர் துறத்தலே கடன் எனத் தேர்ந்து, மீண்டும் இலக்குவனோடு போர் தொடுத்தான்; அப்போரில் ஆவி துறந்து அரும்புகழ் பெற்றான்.

அமர்க்களத்தில் பானுகோபன்

மகேந்திரத்தில் மாற்றார் சேனையைத் தாக்கிய பானுகோபன், தன்னிடமிருந்த படைக்கலங்களையெல்லாம் ஏவினான் ;

பானுகோபன் செய்த போர்

அவையனைத்தும் பயனற்றுப் போகக்கண்ட நிலையில், மயக்கம் விளைக்கும் மாயப் பெரும்படையை விடுத்தான். அப் படை முருகன் சேனையை மயக்கி,வீரர் அனைவரையும் வாரி எடுத்து, நன்னீர்க் கடலில் உய்த்தது. அதையறிந்த முருகன் தன் வேற்படையை ஏவினான். அப்படை விரைந்து போந்து கடலில் மயங்கிக் கிடந்த வீரரை எழுப்பி எடுத்து மீண் டும் போர்களத்திற் சேர்த்தது. அப் புதுமையைக் கண்டான் பானுகோபன். “மாயப்படை இவ்வாறு ஒழிந்தால் வேறு எப் படையால் பகைவரை மாய்ப்பேன்” என்று மனந்தளர்ந்தான்; வேற்படை தாங்கிய வீரனை வெல்லுதல் எவ்வாற்றானும் இயலாதென்று சூரனிடம் சென்று உண்மையை அறிவிப் பானாயினான். “அரசே, மனத்திட்பம் வாய்ந்த மாற்றாரை எதிர்த்தால் நான் மனமகிழ்வேன்; வினைத்திட்பம் வாய்ந்த வீரரை எதிர்த்தால் ஊக்கம் அடைவேன்; இன்று மாயப் பெரும்படையை ஏவினேன். அது மாற்றார் சேனையை மயக்கிக் கருங்கடலில் உய்த்தது. ஆனால், முருகன் விடுத்த வேல் அதனை மீண்டும் ம் கொணர்ந்து விட்டது. அம் முருகனை வெல்வது அரிது. ஆதலால், பகைவர்க்கஞ்சி இங்கு வந்துவிட்டேன் என்று எண்ணிவிட லாகாது. நீ வாழவேண்டும்; அரசாள வேண்டும் என்பதே என் ஆசை; அவ் வாசையால் ஒன்று கூறத் துணிந்தேன். வானவரை நீ சிறையி னின்றும் விடுவாயாயின், வேலேந்திய முருகன், நம் நாட்டைவிட்டு அகல்வான்; சீற்றம் தீர்வான் நம் சீர்மையும் சிறப்பும் நிலைகுலையாமல் நெடுங்காலம் நிற்கும்” என்று கட்டுரை கூறினான்.

அவ்வுரை கேட்ட சூரன் பொங்கி எழுந்தான்; “மைந்தா, என் முன்னின்று என்ன பேசினாய்? வானவரை விட்டேனென்றால், என்னை யாவரே மதிப்பார்? தேவரும் மூவரும் போற்ற மன்னனாய் வீற்றிருக்கும் என்னிலை என்னாகும்? இவ் வுலகம் நிலையற்ற தென்பதை நீ யறியாயோ? இளமையும். செல்வமும், சுற்றமும், மற்று யாவும் முடிந்தே தீரும். அழியாமல் நிற்பது புகழ் ஒன்றே; ஆதலால், ஆவி கொடுத்து அரும் புகழ் பெறுவேனே யன்றி,வானவரை விடுத்து, வசையினுக்கு ஆளாகி வாழமாட்டேன்’ என்று உறுதியாகப் பேசினான். தந்தையின் உரை கேட்ட மைந்தன் மனந்தளர்ந்தான்; விதியின் வழியே அவன்மதி சென்றது என்று எண்ணினான் ; மாறாகப் பேசிய பிழை பொறுக்குமாறு மன்றாடினான் ; மீண்டும் போர்க்களம் போந்தான்; வீரப்போர் புரிந்து வீழ்ந்தான்.

இராவணன் செய்த இறுதிப்போர்

வீரத்தம்பியரும் மைந்தரும் இறந்தபின்னர், இலங்கைவேந்தன், போர்க்கோலம் புனைந்து எழுந்தான்; வரத்தாலும் திறத்தாலும், அன்று மாற்றாரை அழித்து ஒழிக்கத் துணிந்தான்; விண்ணவர் மருள வெம்போர் விளைத்தான். ஆயினும், எதிரே நின்ற இராமன், பதைப்புற அம்பு தொடுத்து நின்றான். அவன் வில்லினின்று எழுந்த சரமாரி எங்கும் பரந்து நிறைந்தது. அந் நிலையில் இராவணன் மனத்தில் அமைந்த ஆணவம் சிறிது அகன்றது; மெய்யறிவு சற்றே மிளிர்ந்தது. பகைவனாய் எதிரே நின்ற வீரன் யாவன் என்று அவன் எண்ணத் தலைப்பட்டான்.

சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம்
அவனோ அல்லன், என்மெய்வர மெல்லாம் அடுகின்றான்
தவனோ என்னில் செய்து முடிக்கும் தரனல்லன்
இவனே யோதான் வேதமுதற்கா ரணன் என்றான்.”

என் முன்னே நிற்கும் பகைவன் மும்மூர்த்தி களில் ஒருவனாய சிவனா யிருக்கலாமோ” என்று சிந்தித்தான்; “இத்துணை வலிமை சிவனுக்கும் இல்லையோ என்று அக்கருத்தைத் தவிர்த்தான்;. “நான்முகன், நாமமும் உருவமும் கரந்து வந்து பொரு தானோ” என்று நினைத்தான்; ‘எளியனாய பிரமனுக்கு என்முன் நிற்கும் ஆற்றலும் உண்டோ’ என்று எண்ணி அக்கருத்தையும் தள்ளினான்; இவ் விருவரும் இல்லையாயின், “இவன் திருமாலோ” என்று ஐயுற்றான்; இவ்வளவு கடுமையாக நெடும்போர் புரியுந்திறம் அவனுக்கும் இல்லை ” என்று தெளிந்தான்; மூவரும் இல்லையென்றால், “அவரினும் அருந்தவம் புரிந்த ஒருவனாய் இருப்பானோ” என்று கருதினான் ;

“எத் தகைய தவம் புரிந்தவனாயினும், என்னிலும் பெருந்தவம் இயற்றவல்லவன் ஒருவன் உளனோ ? ஆத தலால், இவன் தவனும் அல்லன்; பின், யாராயிருத்தல் கூடும்? என் மெய்வர மெல்லாம் சிதைக்கும் இவ் வீரன், முழுமுதற் பொருளாய இறைவன் தானோ ?’ என்று எண்ணினான். இங்ஙனம் எண்ணி வியந்து நிற்கையில், மீண்டும் அவன் மனத்தில் ஆணவம் படர்ந்தது. மெய்யறிவு அகன்றது. இயல்பாக உள்ள செருக்கும் இறுமாப்பும் வந்து சேர்ந்தன.

“என் பகைவன், எவனே ஆயினுமாகுக; யான் முன்வைத்த காலைப் பின்வைத்தல் அறியேன் ; அமரே புரிவேன் என்று அவன் ஆரவாரித்துப் படை தொடுத்தான்.

சூரன் செய்த இறுதிப் போர்

இவ் வண்ணமே முருகனோடு போர் தொடுத்த சூரனும் கடைசி நாளில் கடும்போர் புரிந்தான். அப் போரின் இடையே, மாலனாய் நின்ற வேலன், பார்க்கு மிட மெங்கும் நீக்கமற நிறைந்து நின்ற அக் காட்சியைக் கண்டான் சூரன்:

கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலனென்றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்தி லேன்யான்
மாலயன் தமக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகா ரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தியன்றோ

என்று ஆற்றவும் வியந்து நின்றான்; முருகப் பெருமானது அழகினைக் கண்ணாற் பருகிக் களிப்புற்றான்; அப் பெருமானைத் தாள்களாற் சூழ்தல்வேண்டும்; கைகளால் தொழுதல் வேண்டும்; நாவினால் துதித்தல் வேண்டும். என்று ஆசைப்பட்டான். அந் நிலையில் மெய்யறிவு பெயர்ந்தது. மாயை மீண்டும் அவன் அறிவை மறைத்தது. எல்லா வுலகமும் தானேயாகி நின்ற பெருமான், மீண்டும் பாலனாய்த் தோன்றினான். சூரன் செருக்குற்றுப் பின்னும் போர் செய்து வீழ்ந்தான்.

இலங்கை வேந்தனும், மகேந்திர மன்னனும் கண்டோர் வியப்புறக் கடும்போர் புரிந்து பட்டனர். இராவணன் மனைவியாய மண்டோதரியும், சூரன் மனை வியாய பதுமையும் கற்பு நெறி வழுவாமல் கணவனாருடன் சென்றார். வல்லரசுகளை முறித்த. வில்லையும் வேலையும் நல்லோர் யாவரும் வாழ்த்தி வழிபடுவாராயினர்.

(கம்பர், கச்சியப்பர் ஆகிய இருபெருங் கவிஞர் வாக்கிலுமுள்ள ஒற்றுமைகளைப் பின்வரும் கவிகளிற் காண்க.)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *