தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 
திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

முன்னுரை

தமிழ் நாடென்பது ஒரு தனி நாடு அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம்-மறை சிறப்பாக இருந்தது என்பது கருதற்பாற்று.

அப் பண்டை மறை இறந்துபட்டதென்று தமிழ் மக்கள் கூறுப. இக் கூற்றை வலியுறுத்தப் பழந்தமிழ் நூற்சான்றுகளும் உள்ளன. இந்நாளில் தமிழ் மக்கள், நால்வர் அருளிய தேவார திருவாசகங்களையும், ஆழ்வார் பன்னிருவர் அருளிய நாலாயிரப் பிரபந்தத்தையும் தங்கள் வேதங்களென்று போற்றுதல் எவரும் அறிந்ததொன்றே.

அடியேன் அரசியல் தொண்டில் இறங்குவதற்கு முன்னர்த் தமிழ் வேதங்களில் ஏதாவதொன்றை நாடோறும் ஓதுவது வழக்கம்; ஓதும் வேளையில் ஆராய்ச்சிக்குரிய பாக்களின் பாங்கர் குறிப்புக்கள் இடுவதுண்டு. அக் குறிப்புக்களைத் திரட்டிப் பின்னர் ஆராய்ச்சி முறையாகச் சில நூல்கள் இயற்ற வேண்டு மென்பது எனது நோக்கம். அரசியல் தொண்டில் யான் இறங்கா திருப்பின், எனது நோக்கம் ஒருவாறு நிறைவேறி யிருக்கும்.

1921 -ஆம் வருடச் ‘சுதேசமித்திரன்’ அநுபந்தத்தில் ‘நாயன் மார்’ என்னும் சிறு கட்டுரை ஒன்று எழுதினேன்: அதன்கண் அடுத்த ஆண்டு அதாவது 1922- ஆம் ஆண்டு – ஆழ்வாரைப் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். போதிய ஓய்வின்மை யால் நம்மாழ்வார் ஒருவரைப் பற்றி மாத்திரம் எழுதலாமென்று பின்னர் எண்ணினேன். ஒருவரைப் பற்றிச் செவ்வனே எழுதவும் போதிய ஓய்வு நேராமையானும், ஒரு வருட அநுபந்தம் விரிவுக்கு இடந் தாராதாகலானும் நம்மாழ்வாரைப் பற்றி யான் எடுத்து வைத்த குறிப்புக்கள் சிறுகட்டுரையில் அடங்காவெனத் தோன்றினமையானும், கால நிலையை உற்று நோக்கித் ‘தமிழ்

நாடும் நம்மாழ்வாரும்’ என்னும் இக்கட்டுரையை வரைய லானேன்.

இதற்கு முன் ‘தேசபக்தன்’, ‘சுதேசமித்திரன்’ என்னும் பத்திரிகைகளின் வருட அநுபந்தங்களில், யான் எழுதிய ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’, ‘நாயன்மார்’ என்னும் கட்டுரைகள், நூல் வடிவாக வெளிப்போந்து தமிழ் நாட்டில் உலவுவதைக் கண்ட ‘சாதுரத்ந சத்குரு’ புத்தக சாலையார், அவைகளைப் போல இக் கட்டுரையும் நூல் வடிவாய் உலவ வேண்டுதென்று விரும்பிக் கேட்டனர். அவர் விரும்பியவாறே ‘தமிழ்நாடும் நம்மாழ்வாரும்’ என்னும் இக் கட்டுரையை நூல் வடிவாக்கினேன்; முதற் பதிப்பை மட்டும் அவர் வெளியிடவும் இசைந்தேன். அம் முதற் பதிப்பு ‘மித்திரன்’ அநுபந்தத்தில் உள்ளவாறே வெளியிடப்பட்டது.

இரண்டாம் பதிப்பு 1934-ஆம் ஆண்டில் வெளி வந்தது. அப் பதிப்பில் சில புதுப் பொருள் சேர்க்கப்பட்டன; பொருள்கள் முறைப்படுத்தப்பட்டன; தமிழ் நாடு எது என்பதும், நம்மாழ்வார் அந் நாட்டை எவ்வாறு வளர்த்தார் என்பதும் சுருங்கச் சொல்லப்பட்டன; இறை வித்து என்பது இறைநிலை, அட்ட மூர்த்த விளக்கம், இயற்கை இறை, இயற்கை உருவம், அவதார நுட்பம், மும்மூர்த்திகளின் நிலை, வழிபாடு, சமரசம், பாட்டியல் முதலியன விளக்கப்பட்டன. இவையாவும் ஆழ்வார் திருவாக்கை அடிப்படையாகக் கொண்டே நிறுவப்பட்டன.

இந் நான்காம் பதிப்பில் புதுப்பொருள் சில சேர்க்க எண்ணியிருந்தேன். அவ்வெண்ணம் கண் படலத்தால் தகையப் பெற்றது. என் செய்வேன்! எல்லாம் ஆண்டவன் அருள்.

தமிழ் நலம் கருதுவோர்க்கு இந்நூல் தீஞ்சுவை பயக்கு மென்பதில் ஐயமில்லை. தமிழர் இந் நூலை ஆதரிப்பாராக.

திருவாரூர் – வி. கலியாணசுந்தரன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !