
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
திரு. வி. கலியாணசுந்தரனார்
9. வழிபாடு
வழிபாடு வாழ்வுக்கு வேண்டற்பாலது. வழிபாட்டை உயிர் களின் இயற்கை என்றுங் கூறலாம். ஒருவித வழிபாடு ஒழிந்தால் மற்றொருவித வழிபாடு இயற்கையாக வந்து சேரும். அதற்கெனத் தனி முயற்சி எதுவும் வேண்டுவதில்லை. மனிதன் வழிபாட்டை விட்டாலும் வழிபாடு அவனை விடாது. மன்பதையில் அஃது இயல்பாகவே நிகழ்ந்து வரும்.
வழிபாடே வேண்டா என்று சொல்வோரும் உளர். அவர், தம்மால் வெறுக்கப்படும் ஒன்றே வழிபாடு என்று கருதுவோ ராவர். அவரை அறியாமலே அவரிடம் வேறு வித வழிபாடு நிகழும். அவர் அதை வழிபாடு என்று சொல்ல விரும் பாம் லிருக்கலாம். வழிபாடு என்னும் பெயரைப் பற்றிய கவலை வேண்டா வழிபாடு என்பதற்குரிய பொருளிருப்பது போதும். வழிபாடில்லா மனித வாழ்வு. இல்லை யென்று கூறுதல் மிகையாகாது. வாழ்வு, வழிபாட்டைப் பின்னி நிற்கும் ஒன்று.
வழிபாடுகள் பல திறத்தன. அவற்றின் விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை, வழிபாடு எத்திறத்தாயினுமாக, அதன் உயிரா யிருப்பது ஒன்று. அது தற்பயன் கருதாமை. தற்பயன் கருதாது செய்யப்படும் வழிபாடே சாலச் சிறந்தது. அதுவே கடவுளுக் குரியது.
ஆழ்வார் அருளிய பாடல்களை ஆராய்ந்தால் அவர் கொண்ட வழிபாடுகள் புலப்படும். அவைகள் பல வகையாகக் காணப்படும். அவற்றைத் திரட்டி இருகூறுபடுத்தலாம். ஒன்று புற வழிபாடு. மற்றொன்று அக வழிபாடு. பிற இவைகளின் கிளைகள்.
புற வழிபாடு, கடவுளை வேறாகவும் தன்னை வேறாகவும் கருதிச் செய்யப்படுவது. அக வழிபாடு கடவுளைத் தன்னுள் கொண்டு தியான யோகஞ் செய்வது. இவ் விரண்டும் நாளடைவில் புறம் அகம் என்னும் வேற்றுமையை நீக்கி, எங்குமுள்ள இறையை உணர்த்திப் பிற உயிர்க்கும் தன்னுயிர்க்கும் வேற்றுமை தோன்றாப் பெருநிலை கூட்டும். வேற்றுமை தோன்றாமையே சகோதர நேயத்துக்கு அடிப்படை ஆகவே, சகோதர நேயத்துக்கு வழிபாடு இன்றியமையாததென்றுணர்க. சகோதர நேயம் வெறும் பேச்சாலும் எழுத்தாலும் உண்டாகாது; அதற்கு வழிபாடு வேண்டும்.
வழிபாட்டால் இறையை உணர்தற்கென்று மனைவி மக்க ளைத் துறக்க வேண்டுவதில்லை. காட்டுக்கு ஓட வேண்டுவ தில்லை; மூச்சைப் பிடிக்க வேண்டுவதில்லை. விட்டிலிருந்தே மனைவி மக்களோடு வாழ்ந்தும், மூச்சைப் பிடியாமலும் இறையை உணர்தல் கூடும். மனைவி மக்களும் இறைவன் உடைமை; வீடு வாசலும் இறைவன் உடைமை; தானும் இறைவன் உடை மை; எல்லாம் இறைவன் உடைமை. எல்லாவற்றிலும் இறை இருக்கிறது. எதைத் துறப்பது? எதை வெறுப்பது? ஒன்றையும் துறவாமலும் வெறாமலும் எல்லாம் இறை உடைமை என்று வழிபாடு செய்யச் செய்ய உண்மை விளங்கும்.
ஆழ்வார் அறிவுறுத்திய வழிபாடுகளுள் புற வழிபாட்டை முதலில் எடுத்துக் கொள்வோம், இவ் வழிபாட்டுக்கு ஆழ்வார் திருமால் திருவுருவைக் கொழு கொம்பாகக் கொண்டார். அத் திருவுருவில் ஆழ்வார் வைத்த அன்புக்கு ஓரளவில்லை. அவ் வுருவில் அவர் நெஞ்சம் படிந்து ஒன்றுபட்டு உருகியதை எழுத்தால் எழுதல் இயலாது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது. ஆழ்வார் அன்பில் மூழ்கி அடியவராய் இறைவனுக்கு மலரிடு கிறார்; இறைவனைப் பணிகிறார்; நண்பராய் இறைவனுடன் உறவு கொள்கிறார்; குழந்தையாய் அவனிடம் விளையாடுகிறார்; தலைவியாய் அவனோடு கூடுகிறார். திருமாலின் நீலமேனியும் தாமரைக் கண்ணும், கையும் காலும் ஆழ்வாருக்கு அமிழ்தா கின்றன; அவ்வுருவில் அவர்திளைக்கிறார்; புலன்கள் ஒன்று கின்றன; கண்கள் நீர் பொழிகின்றன; கைகள் குவிகின்றன; மயிர் சிலிர்க்கிறது. ஆழ்வார் அவ்வுருவமே ஆகிறார். அவர்தம் வாய் தமிழ் பாடுகிறது. மக்களே! அத் தமிழ் வெள்ளத்தில் படிந்து ஆடுக.
திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய் எண்ணின் மீதிய னெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்டநங் கண்ணன் கண்ணல்ல தில்லையோர்
ண்ணே. வாய்கொண்டு மானிடம் பாடவந்த
கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரா
னெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து
வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும்
நின்று நின்றே
வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ கண்ணன் திருமால் திருமுகம்
தன்னொடும் காதல்செய்தேற் கெண்ணம் புகுந்து அடியனோ
டிக்கால மிருக்கின்றதே.
அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே.
புண்ணியம் செய்து நல்ல
புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம்
இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம்
அணுகுவார் அமர ராவார்.
அறியாக் காலத் துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம் மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.
எழுமைக் குமென தாவிக் கின்
னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனைக் குடக்கூத்தளை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா
யிறையும் நில்லா துயரங்களே.
கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள் கண்டு கொள்வனே.
உரைக்க வல்லே னல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்க ணென்று செல்வன் நான் காதல் மைய லேறினேன்
புரைப்பி லாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.
மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்..
திருவுருவம் ஆழ்வார் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் படிந்துவிட்டது. உருவம் இயற்கை இறையின் படமன்றோ? இப் பொழுது அவ்வுருவம் தன் மூலத்தை உணர்த்துவதாகிறது. புற வழிபாடு அகவழிபாடாகிறது. ஆழ்வாருக்குத் தியான யோகம் கூடலாயிற்று. உருவம் சோதியாய் நிற்கிறது. சோதி புறமெல்லாம் தோன்றுகிறது. மண் புனல் காற்று விண் திங்கள் ஞாயிறு ஆகிய எல்லாம் சோதி மயமாகின்றன. எங்குஞ் சோதி! எல்லாம் இறை மயம்! வேற்றுமையே காணோம், இந்நிலைபெற்ற பெரியோர்க்கு எல்லாம் ஒன்றே.
அடங்கெழில் சம்பத்து – அடங்கக்கண் டீசன் அடங்கெழில் அஃதென்று – அடங்குக உள்ளே. உள்ளம் உரைசெயல் உள்ள இம்மூன்றையும் உள்ளிக் கெடுத்திறை – உள்ளில் ஒடுங்கே.
உணர்வி லும்பர்
உணர்வி னுள்ளே இருத்தினேன் அதுவும் அவன
தின்னருளே .
பிரான்பெரு . .
என்னுள்
இரான்எனில் பின்னையா னொட்டு வேனோ.
குரைகழல்கள். .
உரைகொள் சோதித்திருவுருவம் என்னதாவி மேலதே.
சொல்லீர் என்னம்மானை என்னாவி ஆவிதனை
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென
தாவியுள்ளே
நாக்குநீள்வன் ஞானமில்லை நாடொறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்லபு றத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே. என்ன தாவி மேலையாய் ஏர்கொ ளேழு லகமும் துன்னி முற்று மாகிநின்ற சோதிஞான மூர்த்தியாய் உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும் இன்னவண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே.
புறமும் அகமும் ஒன்றும் வழிபாட்டினின்றும் எழுவது உண்மை அன்பாகும். அவ்வன்பு ஆவியினின்றும் எழுவது. அதில் விளங்குவது மெய்யறிவு. இவ்வறிவு நிலைக்கு அடிப்படை அன்பு நிலை. அன்பின்றி அறிவு விளக்கமுறாது. அன்பில்லா அறிவு அறிவாகாது. அன்பினின்றும் அரும்பும் அறிவு மெய் யறிவு; கடவுளறிவு; பேரறிவு. வாழ்வுக்கு முதல் முதல் வேண்டற் பாலது அன்பு, மற்றவை பின்னை. இது பற்றியே ஆண்டவன் அன்பு வடிவாயிருக்கிறான் என்றும், அவனை அன்பால் பெறலாம் என்றும் பல அறிஞர் கூறியுள்ளனர்.
அன்பை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். பேராசையும் சீவபோதமும் உள்ள இடத்தில் அன்பு நிகழாது. ஒருவன் தனக்கென்று பொருளீட்டி அதற்கண் பற்று வைத்து, ஆண்டவனை அதற்கு வேறாக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துவானாயின், அவ்வன்பு உண்மையதாகாது. பொருளை வேறாகவும், ஆண்டவனை வேறாகவும் கருதி வழிபடுவதால் பிறவித் துன்பம் வளர்ந்தே போகும். ஒருவன் தனக்கு உள்ள வற்றை ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்தால், அவன் ஆண்டவன் பிள்ளையாவன். ஆண்டவன் உடைமைகளெல்லாம் அவனுடையனவாகும்.
எல்லாம் ஆண்டவன் உடை மையாகவே இருக்கின்றன. அவனுடைய செல்வத்தில் ஒரு பகுதியை ஒருவன் தன்னுடையது என்று நினைப்பது அஞ்ஞானம். அவ்வஞ்ஞானம் நீங்கினால் தன்பொருள் பிறர் பொருள் என்ற வேற்றுமை உணர்வு ஒழியும்; எல்லாம் ஆண்டவன் பொருள் என்ற ஒருமையுணர்வு தோன்றும். அதனால் மனிதனிடத்துள்ள காமகுரோத முதலிய தீக்குணங்கள் கெடும். அக் குணங்களில்லாத இடத்தில் மெய்யன்பு நிகழும். நம்மாழ்வார், தமக்கென்று ஒன்றையும் கொள்ளாது, எல்லாவற்றையும் ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்து, உண்பன தின்பனவும் அவன் பொருள் என்று வாழ்ந்த பேரன்பர்.
ஊனில் வாழுயிரே நல்லைபோ உனைப்பெற்று வானுளார் பெருமான் மதுசூதனன் என்னெம்மான் தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே. ஆராவ முதே யடியே னுடலம் நின்பா லன்பாயே நீரா யலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே. நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் வினைகொள்சீர் பாடிலும் வேமெனதாருயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மையே.
எனவரூஉந் திருவாய்மொழிகளைக் காண்க.
அன்புப் பெருக்குக்கு அடிப்படை வழிபாடு. வழிபாடு உயிருக்கு உறுதி பயப்பது. அன்பு வெறுங் கலை ஞானத்தால் நிகழாது. மனமொழி மெய்களால் இடையறாது ஆண்டவனை வழிபட வழிபட அன்பு நிகழும். வழிபாட்டைச் செய்யாது, நம்மாழ்வாரின் பாடல் – எழுத்துகளை மட்டும் ஓதி, ‘எல்லாம் கடவுள்’ என்று வாய் வேதாந்தம் பேசுவதால் உண்மை அன்பு நிகழாது. ஆகவே வாழ்விற்கு வழிபாடு வேண்டற்பாலது ஆழ்வார் வழிபாட்டால் இறையன்பில் தோய்ந்து பேறு பெற்றார். இறையன்பே எவ்வுயிரையும் தன்னைப்போல் கருதும் சகோதர நேயத்தைக் கூட்டுவதாகும். ஆழ்வார் காட்டிய வழி இது. அவ் வழி நிற்போமாக.



