தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
திரு. வி. கலியாணசுந்தரனார்

6. உருவம்

‘எங்கும் இறை’ என்பது மனத்துக்குப் பொருளாமாறு, அதனை அட்டமூர்த்தம் என்றும், இயற்கை இறை என்றும் விளக்கிய அவ்வளவில் ஆழ்வார் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்றனர். இயற்கை இறையை உருவமாகவும் அவர் அருளி யுள்ளார். அது சிலர்க்குப் பிடிப்பதில்லை. இறை எங்கும் உள்ளது என்று அருளிய ஆழ்வாரே, இறையை உருவமாகவும் அருளியுள்ளாராதலின், அவர்தம் உட்கிடக்கையை உணர முயல வேண்டுவது அறிஞர் கடமை. ஆழ்வாரது உட்கிடக்கை முற்றும் என்போன்றார்க்கு விளங்குதல் அரிதே. ஆயினும் இயற்கை இறைவழி நின்று, ஒல்லும் வகையாதல் உண்மை காண முயல்கிறேன். முயற்சி அளவில் இயற்கை றை துணை செய்யாமற் போகாது.

இறையை நேரே மனவுணர்வின் உணர்தல் இயலாது. இறையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கை வழி நின்று இறையை உணர்தல் வேண்டும் என்பதும், இயற்கையை விடுத்து இறையை உணர்தல் இயலாது என்பதும் முன்னே விளக்கப்பட்டன. காவியர் ஓவியர் முதலியோர் இறையின் உடலாகிய இயற்கைக் கோலங்களைப் பாக்களாக எழுதியும், ஓவியங்களாக வரைந்தும் வடித்தும் இன்புறுவது வழக்கம். அவர்தம் பாக்களிலும் ஓவியங்களிலும் இயற்கைக் கோலங்கள் படிகின்றன. அப் படிவுகளால் இயற்கைப் படங்கள் முகிழ்க்கின்றன. அப் படங்களின் கூறுகளைச் சிந்தையாற் பெருக்கிப் பெருக்கிப் பார்த்தால், அவைகள் இயற்கைக் கோலங் களாக முடிதல் காணலாம். வெறும் எழுத்தும், கீறலும், சாந்தும், பிறவும் படங்களாகா. அவ்வெழுத்து முதலியவற்றில், காவிய ஓவியர் அறிவில் படிந்து இறங்கி அமையும் இயற்கைக் கோலமே ‘படம்’ என்னும் பெயர் பெறுகிறது. இயற்கைப் படங்களி னின்றும் உருவங்கள் பிறக்கின்றன. அவ் வுருவங்கள் இயற்கைக் கோலங்களின் அறிகுறிகள் என்பதை மறத்தலாகாது. இதைப் பற்றி ‘முருகன் அல்லது அழகு’ என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். அதையே ஈண்டு மீண்டுங் கூற வேண்டியதில்லை. விரிவு ஆண்டுக் காண்க.

தொடக்கத்தில், உருவம், இயற்கை இறையை நினை வூட்டும் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. நாளடைவில் அதற்கு வழிபாடு ஏற்பட்டது. இயற்கை இறை நினைவின்றி, உருவத்தையே பொருளாகக் கொண்டு, அதையே நினைந்து நினைந்து செய்யப் படும் வழிபாடு தவறுதலுடையது. அவ் வழிபாடு விக்கிரக ஆராதனையின்பாற் பட்டது. உருவத்தைப் பொருளாகக் கொள்ளாது, அவ்வுருவம் உணர்த்தும் தத்துவத்தைப் பொரு ளாகக் கொண்டு, செய்யப்படும் வழிபாட்டுக்கு அர்த்தம் உண்டு. அது நாளடைவில் இயற்கை இறையை உணர்த்துவதாகும். தத்துவ உணர்வின்றி, வெறும் உருவத்தை மட்டும் வழிபடுவது, இயற்கை இறையை உணர்த்துவதாகாது.

காவியத்தின் வழியும் ஓவியத்தின் வழியும் பிறந்த வடிவங்கள் பலப்பல; அவ் வடிவங்களினின்றும் எழுந்த புராணக் கதைகளும் பலப்பல. தொடக்கத்தில் அவைகள் இயற்கைத் தத்துவ நுட்பங்களுக்கு அறிகுறிகளாகக் கொள்ளப்பட்டன. பின்னே காவியம் ஓவியம் புராணம் என்னும் பெயர்களால் பலப்பல ஆபாசங்கள் தோன்றிக் குவிந்தன. அவ்வாபாசங்கள் இயற்கைத் தத்துவத்துக்கு அடங்காதனவாய்க் கிடக்கின்றன. அவைகளால் நாடு பல வழியிலும் பாழ்படுகிறது. இங்கே இயற்கைத் தத்துவத்துக்கும் பொருளாகிப் பொருந்தும் சில வடிவங்களை நோக்குவோம்; அவைகளை ஆழ்வார் திருப் பாடல் வாயிலாக நோக்குவோம்.

தம்பாலாப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

எல்லாவற்றிலும் நீக்கமற நின்று, அதை அதை உருப்படுத்தும் இறை, சித்தாய்(அறிவாய்)ப் பொலிவது. அதுவே அதன் தொல் லுருவம்; அழியா உருவம். அது வாக்கு மனங்கட்கு எட்டாதது. இறைவனைக் ‘காண்டற்கரியன்’ என்று ஆழ்வார் பலவிடங்களில் அருளியுள்ளார். வாக்கு மனங்கடந்த முழுமுதற் பொருளை வாக்கு மனமுடையார் எப்படி வழிபடுவது? இதற்கு இயற்கைவழி பாடென்றும், இயற்கைப்பட வழிபாடென்றும் இரண்டு ஏற்பட்டிருக்கின்றன. இயற்கைப்பட வழிபாடு, இயற்கை இறையை உணர்த்தும். இயற்கை வழிபாடு தனித்த இறையை உணர்த்தும்.

கண்ணுஞ்செந் தாமரை கையும்
அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை
போன்று மதவிகற்பால் விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்
குமற்றெப் பால்யவர்க்கும் எண்ணு மிடத்ததுவோ எம்பி
ரான தெழில்நிறமே.

இத் திருவாக்கை நெஞ்சிற் கொள்வோம். ‘கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே – வண்ணம் கரியதோர் மால் வரை. .’ -இஃதோர் இயற்கைப் படம். கண்ணும் கையும் அடியும் செந்தாமரை. மேனி கரியது; மால் வரை போன்றது. கரிய நீலமேனியில் செந்தாமரைக்கண்; செந்தாமரைக் கை; செந்தாமரை அடி. கருநீலத்தில் செம்மை மலர்வது அழகிய தன்றோ?

வானளாவிய நீலமலை; அதன் முடியிலும் நடுவிலும் அடியிலும் செவ்விய தாமரைக்காடு. இக் காட்சியை நோக்கு வோம். இது புலன்களுக்கு விருந்தாகிறது. இதில் இயற்கை அன்னையின் எழில் மணம் வீசுகிறது. அவ்வெழிலில் நெஞ்சம் படிகிறது; திளைக்கிறது; எழுகிறது; அதை முன்னுகிறது. அழகுத் தோற்றம் மனத்தில் படமாகிறது படம் பாவலர்க்குப் பாட்டா கிறது; ஓவியர்க்கு ஓவியமாகிறது. பாட்டும் ஓவியமும் இயற்கையின் அமைவு அல்லவோ? பாட்டும் ஓவியமும் தம்பால் ஈடுபடுவோரைப் பாலம்போல நின்று, இயற்கை அன்னையுடன் சேர்க்கின்றன. இயற்கை அன்னை என்ன செய்கிறாள்? தன்பால் அணைந்த ஆருயிர்களைத் தன் வயப்படுத்தி, அப்பனாம் இறையி னிடஞ் சேர்க்கிறாள். அதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. அது சொல்லற்கரியது. சொல்லற்கரிய நிலை, பாட்டின் பின்னிரண் டடியில் திகழ்கிறது.

‘விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு
மற்றெப்பால் யவர்க்கும், எண்ணுமிடத்தவோ எம்பி ரான தெழில் நிறமே’

என்பது வாக்கு மனங் கடந்த இறை நிலையை உணர்த்துவது.

இறை நிலையையும், அதன் நிறம் கோலம் முதலியவற்றின் நுட்பத்தையும்,

நிறமுயர் கோலமும் பேரு
முருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால்எம்
பிரான் பெருமையையே.

என்று ஆழ்வார் விளக்கியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க; சிந்தித்துச் சிந்தித்து உண்மை தெளிக.

உலகிலுள்ள சமயங்கள் பல. அவ்வச் சமயத்தார் றைவனை உணர்தற்குத் தத்தம் வழக்க வொழுக்கங்கட்கேற்ப இறைக்கோலம் பேர் உரு முதலியன வழங்குகின்றனர். அக் கோலம் முதலியன இறையை உணர்த்தும் அறிகுறிகளேயன்றி, அவைகளே இறை அல்ல. இறைக்கெனக்கோலம் முதலியன இல்லை. இறை ஞான மயமாயிருப்பது, அது பலவாறு மக்களால் கொள்ளப்படுகிறது. அக்கொள்கைகளின் தத்துவங் களைக் காண முயல்வது அறிவுக்கழகு.

தத்துவ வழியில் உணரத்தக்க இறைநிலைகளை ஆழ்வார் அழகுபட அருள்கிறார். எடுத்துக்காட்டுக்கு இங்கே ஒரு பாட்டைக் கொள்வோம்.

உண்ணா துறங்கா துணர்வுறும்
எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின
வாம்எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான்
றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்உயி
ராயின காவிகளே.

இத் திருமொழியைப் பார்க்கப் பார்க்க இறையின் மூன்று நிலைகள் புலனாகும். (1) உண்ணா துறங்காதுணர்வுறும் எத்தனையின் தனிநிலை. (2) எரி நீர் வளிவான், மண்ணாகிய எம்பெருமான். . யோகியர்க்கும், எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் – இஃது இறை, இயற்கையை உடலாகக் கொண்ட நிலை. (3) ‘எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் கண்ணாய் . .’ . இஃது இயற்கை இறையின் கோலப் படத்தைக் குறிப்பது. மூன்றாவது இரண்டாவதைக் காட்டும்; இரண்டாவது முதலாவதை உணர்த்தும்.

இயற்கையினின்றும் பெற்ற திருவுருவங்களில் தத்துவக் குறிப்புக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளை அவ்வப் போது தோன்றிய தத்துவர் விளக்கிச் சென்றனர்; தத்துவங்கள் கரந்து விளங்குமாறு பாவலர் உருவங்களை வருணிப்பது வழக்கம். பாக்களிலுள்ள வருணனைகள் இயற்கை இன்பத்தை யும், பொருள்கள் தத்துவங்களையும் உணர்த்துவனவாம். ஆழ்வார் திருப்பாடல்களில் போந்துள்ள திருவுருவங்கள் பல திறத்தன. அவைகட்கெல்லாம் தத்துவங்கூறுதல் என்னால் இயலாததொன்று ஒரோ வழி கூற முயல்கிறேன். ஆழ்வார் அருளிய பல பாக்களில் படர்ந்து செல்லாது, சுருக்கத்தின் பொருட்டு, அவர் அருளிய திருவாசிரியத்தில் சில பகுதிகட்கு என் சிற்றறிவுக் கெட்டிய சில நுட்பங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். பிறவற்றிற்கும் அவ்வாறே கொள்க.

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு

பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்

திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம் .

இறை, முகிலுடுத்துப் பரிதி மதி (சூரிய சந்திரர்) பூண்டு பலசுடர் (உடுக்கள்) புனைந்திருப்பது, அஃது இயற்கையை உடலாகக் கொண்டு விளங்குவதைத் தெரிவிப்பது இயற்கைக் கோலம் உருவாகும்போது, முகில் நீல மேனியாகிறது; மதியும் பரிதியும் முறையே சங்கு சக்கரமாகின்றன: பல்சுடர் முடி கை – திருஅடி ஆகின்றன.

நீலமேனி தண்மையது. அதைத் தியானிக்கத் தியானிக்க, அது புலன்களின் வெம்மை, மன வெம்மை, கரணவெம்மை முதலிய வெம்மைகள் ஒழிய, அங்கங்கே தண்மை தங்க, நல்லெண்ணத்தையும், நல்லுணர்வையும் எழுப்பிப் படிவிக்கும்.

சங்கு ஒலிப்பது; சக்கரம் சுழல்வது; முடி முதலியன ஒளிர்வன. உலகம் ஒலியினின்றும் பரிணமிப்பது. அவ்வொலி சுழன்று சுழன்றே பரிணமிப்பது இயல்பு. ஆகவே, சங்கும் சக்கரமும் உலகத் தோற்றத்துக்கு அறிகுறியாயுள்ள கருவிகள்.

திருமுடியும், திருக்கைகளும், திருவும், திருவடியும் செவ்விய ஒளிமயமாய்த் திகழ்வன. (சித்)ஒளி, ஒலியின் மூலம். ஒளி தொகை வகைப்படும். திருமுடியின் ஒளி, தொகை வகைப்படும். திருமுடியின் ஒளி, தொகை முறையில் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவது. திருக்கைகளின் ஒளியும், திருவடிவின் ஒளியும், வகை முறையில் தாம் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவன.

திருக்கைகள் சங்கையும் சக்கரத்தையும் ஏந்துவன. சங் கொலிக்கும் சக்கரச் சுழற்சிக்கும் அடிப்படை திருக்கைகளின் ஒளி. திரு ஒளி, உயிர்களின் பல்வகைச் செல்வங்கட்கு ஊற்றாகும்.

பல்வகைத் திருவைப்பெற்ற உயிர்களின் இன்பப்பேற்றிற்கு நிலைக்களன் திருவடி ஒளி.

ஒளி -விந்து ; ஒலி – நாதம். விந்து நாதங்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகளை இயக்குவது இறை ஒளி என்க. (இறை ஒளி விந்து ஒளியன்று) இறையின் மற்றொரு வடிவாலும் இந் நுட்பம் விளங்கும். அது வருமாறு:

கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.

திருவாசிரியம் -1

இதன் கண் இறைவன் உந்தியுடன் பாற்கடலில் அரவணை யில் பள்ளி கொண்டிருப்பது விளங்குகிறது, பாற் கடல் – விந்து; பாம்பணை – நாதம்; உந்து – படைப்பு.

உலகம் உருக்கொள்ளுதற்கு நாதம் பாம்புபோல் மண்டித்த லால், நாதம் பாம்பணை என்னப்பட்டது. இறைவன் பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டிருப்பது, அவன் விந்து நாத தத்துவங்கட்கு மேற்பட்டவன் என்பதையும், அவைகளை இயக்க வல்லவன் அவனே என்பதையும் தெளிவிப்பது. உந்தியில் நான் முகனைத் தரும் தோற்றம் படைப்பை அறிவுறுத்துவது.

திருவாசிரியத்தின் முடிபைப் பார்க்க.
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா

யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர்பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.

ஆல் இலை, விரிந்த உலகங்களெல்லாம் ஒடுங்குவதைக் குறிப்பது. அதன்மீது ஆண்டவன் பள்ளி கொண்டிருப்பது, எல்லாம் ஒடுங்குதற்குரிய இடமாயிருப்பவனும் அவனே என்பதை உணர்த்துவது.

இவ்வாறு காவிய ஓவியங்கள் வழிப்பிறந்த உருவங்களைப் பொருளாகக் கொள்ளாது, அவைகளின் மூல இயல்களை, அவைகளின் வாயிலாக உணர்ந்து தெளிந்து வழிபடுவது சிறப்பு ஆழ்வார் பாக்களில் திருவுருவங்களின் உள்ளுறை இனிது பொலி தல் காண்க.

தத்துவங்களைக் கதைகள் வாயிலாக விளக்குவதும் ஒரு வித மரபு. அக் கதைகளின்றும் உருவங்கள் பிறத்தலும் உண்டு. கதைகளையும், கதையுருவங்களையும் தத்துவக் கண்கொண்டு பார்த்தலே அறிவுடைமை. இல்லையேல் பன்மைக் கடவுள் உணர்வும், பிற ஆபாசங்களும் பொருளாகி, அறிவு விளக்கத்துக்கு கேடு சூழ்ந்து கொண்டேயிருக்கும்.

புராணேதிகாசக் கதைகளை ஆழ்வார் விலக்கவில்லை. அக் கதைகளையும் அமைத்து ஆழ்வார் பல பாடல்கள் பாடியுள்ளார்.

வினையேன்
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை . .
வேவாரா..
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த
மூவா
உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மக ளாயர்
மடமகள் என்றிவர் . .
மாறு சேர்படை நூற்று வர்மங்க ஓரைவர்க் காயன்று
மாய்ப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலங்கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீவர மங்கலநகர்
ஏறிவீற் றிருந்தா யுன்னை எங்கெய்தக் கூவுவனே.

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய
பாரதம் கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து
போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்றுநின்
றுருக்கி யுண்கின்றஇச்
சிறந்த வான்சுட னேரைஉன்
என்றுகொல் சேர்வதுவே.
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
குன்றமொன் றேந்தியதும்
உரவு நீர்ப்பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும்பல
அரவில் பள்ளிப்பி ரான்றன் மாயவி
னைகளை யேயலற்றி
இரவு நன்பகலும் தவிர்கிலம்
என்னகு றைவெனக்கே
கேயத் தீங்குழ லூதிற் றும்நிரை
மேய்த்ததும் கெண்டை ஒண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும்பல
மாயக் கோலப் பிரான்றன் செய்வகை
நினைந்துமனம் குழைந்து
நேயத் தோடுக ழிந்த போதெனக்
கெவ்வுல கம்நிகரே.
ஏற்றரும் வைகுத்தத்தை யருளும்
நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன்றாய்ப் புக்கு
மாயங்களே யியற்றி
கூற்றியல் கஞ்சனைக்கொன்று ஐவர்க்காய்
கொடுஞ் சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான் பெரிய
பரஞ்சோதிபுக்கவரியே.

இத்திருப்பாக்களில் போந்துள்ள கதைகள் எல்லாவற்றுக் கும் தத்துவங்கள் கூறின் பொருள் விரியும். தாலிபுலாக நியாயம் பற்றிக் கதைகளில் ஒன்றையும், கதை யுருவங்களில் திரண்ட ஒன்றையும், இங்கே கொள்வோம்.

குருக்ஷேத்திரப்போர் பாரதத்தில் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அப்போர் நிகழ்ச்சியைக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப் போரில் நூற்றுவர் ஒரு பக்கமும், ஐவர் மற்றொரு பக்கமும் நின்று பொருதனர் என்றும், கண்ணபிரான் தேர்ச் சாரதியாய் வீற்றிருந்து கீதையை அறிவுறுத்தினர் என்றும் கதை சொல்கிறது. இக் கதையின் உட்பொருள் என்னை?

குருக்ஷேத்திரம் – கிளர்ச்சி பொருந்திய மனம்; நூற்றுவர் தீய எண்ணங்கள்; ஐவர் -நல்ல எண்ணங்கள்; மனச் சான்றொலி கண்ணபிரான் கீதை உபதேசம்.

மனத்திடைத் தீய எண்ணங்களும், நல்ல எண்ணங்களும் பிறக்கின்றன. அவைகளில் தீயன பலவாகவும், நல்லன சில வாகவும் பிறத்தல் இயல்பு. இதுபற்றியே தீய எண்ணங்கள் நூற்றுவர் என்றும், நல்ல எண்ணங்கள் ஐவர் என்றும் உருவாக்கப் பட்டன. தீமை, நல்லதை வீழ்த்தித் தன்னாட்சி செலுத்த முயல் கிறது. அப்பொழுது மனச்சான்றாகிய உள்ளொலி எழுகிறது. நல்லது அதற்குச் செவி சாய்க்கிறது. அதனால் நன்மை, ஆக்கமும் ஆற்றலும் பெற்றுத் தீமையை வீழ்த்துவதாகிறது. இதுவே பாரதப் போர் என்பது. இப்போர் நடைபெறாத இடம் உண்டோ? உள்ளொலியின் வழி நின்றால் நலம் பெற்றுத் தீமையை வீழ்த்தலாம் என்பது கதையின் கருத்து. இது நிற்க.

அழகிய உருவங்களுள் இங்கே ஒன்று புலனாகிறது. அது கண்ணபிரான், குழலூதிப் பச்சைமரத்தடியில் பசுக்களும் பெண்களும் சூழநிற்குந் திருக்கோலம்.

பச்சை மரம் இயற்கை; கண்ணபிரான் குழலோசை – இறை; இசையொலி; பசுக்கள் – சாந்தம்; பெண் மக்கள் அமைதிநிலை.

இயற்கை உடல், இறை உயிர். பச்சை மரமும் அதனடியில் கண்ணன் நிற்பதும் – இயற்கை உடல் என்பதையும், அதன் உயிர் இறை என்பதையும் விளக்குவன. குழலோசை, இயற்கையில் இறை இசைமயமாய் வீற்றிருப்பதைத் தெரிவிப்பது. இயற்கை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு இறையின் இசை (நாதம்) யாகிய கண்ணன் குழலோசை கேட்கும். அவ்விசை உயிர்கட்குச் சாந்தத்தை நல்கி, அமைதி நிலையைக் கூட்டும். அச் சாந்தமும், அமைதியும் முறையே கண்ணபிரானைச் சூழ்ந்துள்ள பசு நிரையாகவும், பெண்ணினமாகவும் உருவகிக்கப்பட்டன. இது குறித்து யான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். (‘நவசக்தி’சிலம்-12, பரல்-28 பார்க்க)

இப் பலப்பட்ட திருக் கோலங்களின் மூலம் ஒன்று என்பதை மறத்தலாகாது. திருக்கோலங்கள் யாவும், அவ் வொன்றன் இயல்களை விளக்கும் தத்துவக் குறிகளாகும். ஆழ்வார், திருக்கோலங்களை அழகிய பாட்டோவியத்தில் படியச் செய்திருத்தல் உள்ளத்தைக் கவர்கிறது.

இருள்விரித் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ இருள்பிரிந் தாரன்பர் தேர்வழிதூரல் அரவணைமேல் இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வது போல் இருள்விரி சோதிப் பெருமான் உறையும் எறிகடலே. திருமா லுருஇவாக்கும் மேருஅம் மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும் அன்ன கண்டும் திருமா லுருவோ டவன்சின்ன மேபிதற் றாநிற்பதோர் திருமால் தலைக்கொண்ட நங்கட்குஎங் கேவரும் தீவினையே. விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைபாதம் கைகள் கண்கள் விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு

விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக் கரம்பரிதி
விட்டிலங்கு முடியம்மான் மதுசூ தனன் தனக்கே.
தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்கொள் வடிவும் கனிவாயும்
தேநீர் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலைதன் மேல்
வண்கார் நீல முகில்போலத்
தூநீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே.
கருமா ணிக்க மலைமேல்
மணித்தடந் தாமரைக் காடுகள்போல்
திருமார்வு வாய்கண் கையுந்தி
காலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்
வயல்குட்ட நாட்டுத் திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னை மீரிதற்குஎன் செய்கேனோ
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார் முகில் போல்
மாசின மாலி மாலிமா னென்றங்
கவர்படக் கனன்றுமுன் நின்ற காய்ச்சின
வேந்தே கதிர்முடி யானே கலிவயல் திருப்புளிங் குடியாய்
காய்சின வாழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் மிடர்கடி வானே.

அழகிய திருகோலங்களில் ஈடுபடும் நெஞ்சம் இயற்கை இறையினிடம் படிவதாகும். இதற்கு அழகிய திருக்கோலங்கள் பாலம் போலத் துணை செய்யும். ஆகவே, திருக்கோலங்களில் கிளர்ந்த உணர்வுடன் ஈடுபடப்பட இயற்கை இறையினிடம் வேட்கை எழுதல் ஒருதலை. ஆழ்வார் தமது நெஞ்சம் அக் கோலங்களில் ஈடுபட்டதை,

பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் – நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினைஎம் பால்கடியும்
நீதியாய் நிற்சார்ந்து நின்று.

என்றும்,

கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் கண்டநாள் காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார் பேருருவென் றெம்மைப் பிரிந்து.

என்றும்,

எங்ங னேயோ வன்னைமீர்கா
ளென்னை முனிவதுநீர்
நங்கள்கோலத் திருக்குறுங்குடி நம்பியைநான்
கண்டபின் சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவா யொன்றினோடும்
செல்கின்ற தென் நெஞ்சமே.

என்றும்,

திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி என்றும்
திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தை யுளானே.

என்றும்,

உலகுக்கு உணர்த்தி யிருத்தல் காண்க.

திருவுருவங்கள் தத்துவக் குறியுடையன என்பதை ஆழ்வார் பல விடங்களில் பலவிதமாகக் கூறியுள்ளார்.

கண்ணபிரான் திருவிளையாடல்கள் பலவிடங்களில் ஆழ்வாரால் அழகுபடக் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ் விடங்களில் பெரிதும், ‘மாயம்’ என்னுஞ் சொல்லை ஆழ்வார் பெய்திருப்பது கூர்ந்து நோக்கற்பாலது. அவ்வாறு அருளியதன் நோக்கம் என்னை? உருவங்களையே பொருளாக் கொள்ளாது, அவைகள் உணர்த்தும் தத்துவங்களைப் பொருளாக் கொள்ளு தல் வேண்டும் என்பதாகும். கீழ்வரும் ஆழ்வார் மொழிகளில் நெஞ்சை ஊன்றுக.

குரவை ஆய்ச்சியர்
அரவில் பள்ளிப் பிரான்தன் மாயவினைகளை
கேயத்..
மாயக் கோலப் பிரான்..
இகல்கொள்
அகல் கொள் வைய மளந்த மாயன் என்
அப்பன்றன் மாயங்களே . .
மண்மிகைப் பெரும்பாரம் நீங்கவோர் பாரதமா
பெரும்போர் பண்ணி மாயங்கள் செய்து .

இறை ஒன்று. அஃது உயிர். இயற்கை அதன் உடல். இயற்கையினின்றும் முகிழ்க்குங் கோலங்கள் பல். அக் கோலங்கள் ஆழ்வார் உள்ளத்தில் படிந்து எழுப்பிய மகிழ்ச்சி, பொங்கித் ததும்பித் தமிழ்ப் பாக்களாக வழிந்து தேங்கி நிற்கிறது. அத் தேக்கத்தில் இயற்கையின் கோலங்கள் காட்சியளிக்கின்றன. கண்ணுள்ளோர் அவற்றைக் காண்க. ஆழ்வார் பாடல்களை, ‘இயற்கைத் திருக்கோலக் காட்சி’ என்று கூறல் மிகையாகாது. அக் காட்சி நிலையம் கோலிய ஆழ்வார் வாழ்க. அவரை ஈன்ற தமிழ் நாடு வாழ்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !