
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
திரு. வி. கலியாணசுந்தரனார்
5. இயற்கை
மண் புனல் முதலியன இயற்கையின் கூறுகள். அவற்றை மண் புனல் முதலியன என்று வகுத்துச் சொல்வதற்குப் பதிலாக இயற்கை என்று தொகுத்துங் கூறலாம்.
இயற்கை உடல்; இறை உயிர். இறையாகிய உயிர், இயற்கையாகிய உடல் வாயிலாக உயிர்கட்கெல்லாம் நலஞ் செய்கிறது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு, நமது உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது.
உடல் புலனாவது. உயிர் புலனாகாதது. புலனாகாத உயிரின் உண்மையை எப்படி உணர்கிறோம்? புலனாகும் உடலைக் கொண்டே புலனாகாத உயிர் உண்மையை உணர் கிறோம். இவ்வாறே உடலாகிய இயற்கையைக் கொண்டு, உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இதனை ஆழ்வார்,
திடவிசும் பெரிவளி நீர் நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.
என்று நுண்மையாக விளங்கியிருத்தலை ஓர்க.
இயற்கையை விடுத்து, இறையை உணர்தல் அரிது. இயற்கை வழி இறையை உணரவேண்டி யிருத்தலால், இயற்கையை இறைவடிவாகவும் இறையாகவும் போற்றுதல் ஆன்றோர் வழக்கு. இத்தகைய இயற்கையை வெறுப்பதும் துறப்பதும் அறியாமையாகும். இறை இறை என்று வாயால் முழங்கிச் செயலில் இயற்கையை வெறுத்துத் துறப்பது ஆத்திகமாகாது.
இயற்கை கடந்த இறை நிலையும் உண்டு. அது காண்டற் கரியது; மனத்தாலும் உணர்தற்கரியது. மன உணர்வு கடந்த நிலையில் அது விளங்குவது.
இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்தஅந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.
யாருமோர் நிலைமைய னெனவறி வரியஎம் பெருமான்.
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தஇந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர் வரிது . .
என்றார் ஆழ்வாரும்.
மனவுணர்வுடையோர், இயற்கையைக் கடந்துள்ள இறை நிலையைப் பற்றி மல்லாட வேண்டுவதில்லை. அவர் இயற்கை வடிவாயுள்ள இறையைக் கருத்திருத்தி வழுத்தவே முயலல் வேண்டும். இவ் வழிபாடு, படிப்படியாக ஓங்கி, மனங்கடந்த தனி உணர்வு நிலையைக் கூட்டும். மனவுணர்வு கடந்து நின்ற ஆன்றோர் பலரும் இயற்கை இறையையே பெரிதும் போற்றினர். இயற்கை கடந்த தனி இறையை மிகச் சிறிது குறிப்பிடுவது அவர்தம் வழக்கம். உலகம், இயற்கையை விடுத்தால், அஃது இறை உண்மையை உணராது இடர்ப்படும் என்ற கருணை மேலீட்டான், ஆன்றோர் இயற்கை இறையையே பெரிதும் உலகுக்கு அறிவுறுத்தலாயினர்.
இயற்கையைப் போற்றுவதும், இயற்கை இறையைப் போற்றுவதும் ஒன்றே. சில அறிஞர் இறையை இயற்கை என்றே போற்றுவர்; சிலர் இயற்கை வடிவான இறை என்று போற்றுவர். அப் போற்றுதலும் இப் போற்றுதலும் சென்று சேருமிடம் ஒன்றே. ஆகவே, இயற்கையைப் போற்றுவோர் யாவரும் இறையைப் போற்றுவோரேயாவர், இதுபற்றிப் பொதுவாக எனது நூல் பலவற்றிலும் சிறப்பாகச் ‘சன்மார்க்க போதமும் திறவும்’ என்னும் நூலிலும் விளக்கியுள்ளேன்.
எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய், எங்குமிருப்பதாய் உள்ள வித்தை உணர்ந்த ஆழ்வார் -எங்குமுள்ள அவ்வித்தை எட்டு மூர்த்தமாக உலகுக்கு உரைத்தருளிய நம்மாழ்வார் ‘இறை வடிவம் இயற்கை’ என்பதை பலபடப் பாடிப்பாடி, இயற்கையின் மாண்பை இனிது விளக்கினார். ஆழ்வார் இயற்கையில் தோய்ந்து, இறையில் திளைத்து, இறை இன்பம் கொழிக்க இயற்கைப் பாக்களைத் தமிழில் பொழிந்தார். அவர் பாக்களில் எங்கும் இயற்கை; எங்கும் இறை; எங்கும் இயற்கை இறை.
ஆழ்வார் அருளிய இயற்கைப் பாக்களை நோக்குவோம். அவைகளில் பூக்கள் மலர்கின்றன! ஞாயிறு வெயில் வீசுகிறது; திங்கள் அமுதம் பொழிகிறது; சோலை மணங்கமழ்கிறது; மலைகள் நிற்கின்றன. மேகங்கள் தவழ்கின்றன; பறவைகள் பறக்கின்றன; ஆநிரைகள் மேய்கின்றன; ஆயர்கள் ஆடுகி றார்கள்; குழலோசை கேட்கிறது; உயிர்கள் உலவுகின்றன; உலகம் புலனாகிறது. இஃதென்ன அருமை! ஒருவர் பாக்களில் இவ்வளவு பொருள்!
சொற்புலவோர் இயற்கைக் கூறுகளை வருணிப்பது வழக்கம். அவர்கள் பாக்களில் சொற்களைக் காணலாம்; பொருள்களைக் காண்டல் அரிது. நம்மாழ்வார் பாக்களிலோ பொருள்கள் பொலிகின்றன. அப் பொருட்கண் அறிவு செறிந்து, அன்பு நிறைந்து, இன்பம் பிலிற்றுகிறது. இவ்வுண்மை என்னை? நம்மாழ்வாரை அடைவோம்.
நம்மாழ்வார் – பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலிய அவ்வப் பொருள் வடிவாகப் புறக் கண்களால் மாத்திரங்கண்டு, அவை களைப் பாக்களாகப் பாடினாரில்லை. அப்பொருட்களின் ஊடே கலந்துள்ள ஓர் அகண்டாகாரப் பேரறிவை ஆழ்வார் தமது அகக்கண்ணால் கண்டு, அதனைப் பாக்களாகப் பாடினார் என்பது தெரியவருகிறது. அக் காட்சி முதிர்ச்சியால், தமது அகத்துள்ள அறிவும், புறத்துள்ள அறிவும், ஒன்றுபட்டு ஊற்றிய
ன்பக் குழம்பே ஆழ்வார் பாக்கள் என்னலாம். ஆழ்வார் காண்ட பூவும், ஞாயிறும், திங்களும், பிறவும் ஆண்டவன் வடிவங்கள். அவர் பூ முதலியவற்றை இறைவனாகவே வழிபட்டுப் பாக்களை அருளினார். நம்மாழ்வார் இயற்கை வாயிலாகக் கடவுளைக் கண்டு, அக்கடவுள் தம்முள்ளத்துள்ள செம்பொருள் என்பதை உணர்ந்து, எல்லாம் கட டவுள் மயம் என்னும் உண்மையை உலகுக்கு அறிவுறுத்திய பாக்கள் பல. அவற்றுள் சில வருமாறு:
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டொறும் – பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
பெய்வளைக் கைகளைக் கூப்பிப்
பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச்
சிரீதரன் மூர்த்தியீ தென்னும் நையுங்கண் ணீர்மல்க நின்று
நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான்
செய்கின்ற தொன்றறி யேனே.
அறியும் செந் தீயைத் தழுவி
அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்த னென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
செய்கின்ற தென் கண்ணுக் கொன்றே
ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி
நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில்
நாரணன் வந்தானென் றாலும் என்றின
மையல்கள் செய்தார்
என்னுடைக் கோமளத் தையே,
கோமள ஆன்கன்றைப் புல்கிக்
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய்
அவன்கிடக் கையீ தென்னும் ஆமள வொன்று மறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே.
திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம்
கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மோவாக்
கண்ணன் கழல்கள் விரும்புமே
விரும்பிப் பகைவரைக் காணில்
வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில்
கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில்
பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின் றானே.
இத் திருப் பாடல்களில் இறைவன் உறைவதை யான் எடுத்துக்காட்ட வேண்டுவதில்லை. வை என் மனத்துக்கு அமுதாகின்றன. ஆழ்வார் இயற்கையைக் கண்டு மகிழ்கிறார். அதன்கண் ஆண்ட வனைக் காண்கிறார்; இன்புறுகிறார். அவர் நிலை என்னே! என்னே! இதுதான் ஆழ்வார் கண்ட தமிழ் நாடோ? என்னருமைத் தமிழ்நாடே! ஆழ்வார்க்குக் கடவுளாகத் தோன்றியபூ, ஞாயிறு, திங்கள், மலை, கடல் முதலியன இப்பொழுது எவ்வாறு காணப்படுகின்றன? அவைகளைக் கடவுளாகக் காட்டுங் கல்வி இப்பொழுது போதிக்கப்படு கிறதோ? அந்நாளில் கடவுள் கல்வி கற்பிக்கப்பட்டது. ‘கற்குங் கல்வியெல்லாங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரானென்றே’ என்றும், ‘உரைப்பெல்லாம் – நின்னன்றி மற்றிலேன் கண்டாய்’ என்றும் நம்மாழ்வார் ஓதியிருத்தல் காண்க. மணிவண்ணன் கல்வி இப்பொழுது எங்கே? ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்னுங் கல்வியன்றோ இப்பொழுது போதிக்கப்படு கிறது? காலக் கொடுமையோ? எமது தீவினையோ? தெரிய வில்லை. இந்நாளில் இயற்கையை இறைவனாகக் காண்போர் எத்துணைபேர்? தாய் தந்தையரைக் கடவுளாக வழிபடுவோர் எத்துணை பேர்? பூவைக் கண்டதும் எம்பிரான் திருமுகம், எம்பிரான் திருக்கரம், எமதையன் திருமேனி, எமதையன் திருவடி என்று போற்றுவோர். எத்துணைபேர்? கடலைக் கண்டதும் கடவுளைக் கருதுவோருளரோ? மலையைப் பார்த்ததும் மாயோன் என்று ஓடுவோருளரோ? கருமேகத்தை நோக்கினதும் கண்ணனென்று ஆர்ப்பரிப்பாருளரோ? ஞாயிற்றைக் காட்டி ‘சீதரன்’ என்று சொல்வோரைக் காணோம். திங்களைச் சுட்டி ‘மணிவண்ணா’ என்று மகிழ்வோரைக் காணோம். கோக்களைக் ‘கோபாலா’ என்று தழுவுவோரில்லை. குழலோசையைக் கேட்டுக் ‘கோவிந்தா’ என்று கூத்தாடுவோரில்லை. தமிழ் நாடே! நம்மாழ்வாருக்கு வழங்கிய காட்சியை இப்பொழுது வழங்காயோ? அந்தோ! தமிழ் நாட்டின் உருக்குலைந்துவிட்டதே! என் செய்வோம்!
நம்மாழ்வார் – பூ, மேகம், வண்டு, பறவை முதலியவற்றைப் பார்த்துப் பார்த்து, ஆண்டவனை நினைந்தும் அழைத்தும் வழுத்திய திரு வாக்குகள் உள்ளத்தைக் குழையச் செய்கின்றன.
மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.
என்றும்,
வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ
நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன்
றுரைக்கியம் ஏனமொன் றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்
னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள
வோநும் வியலிடத்தே
என்றும்,
அஞ்சிறைய மடநாராய். . .
என்றும்,
விதியினால் பெடைமணக்கும்
மென்னடைய அன்னங்காள்
என்றும்,
பூவைபைங் கிளிகள்பந்து தூதைபூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்க ளேகூவி யெழும்
என்றும்,
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங் கெத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேல் மின்குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர்வரக் கூவுகிலீர் ..
என்றும்,
ஆழ்வார் இயற்கைப் பொருள்களை விளித்து ஆண்ட வனை வழுத்தியிருத்தல் காண்க.
இது காலை, நமது நாட்டில் பறவை முதலியவற்றை நோக்கிப் பாடுவோருளரோ? பறவைகளும் வாடுங்கால மன்றோ இக்காலம்? பறவைகளுக்கே மகிழ்ச்சியில்லை எனில் பாடு வோர்க்கு மகிழ்ச்சி ஏது? பாட்டென்பது மகிழ்ச்சியின் பொங்க லன்றோ? பறவைகளே! உங்களைக் கூவிக் கூவிக் கடவுளைப் பாடுவோர் இப்போது இல்லை. உங்கள் முன்னோரை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்! அழைத்திருக்கிறார்; தூது கொண்டிருக்கிறார். இப்பொழுதோ? உங்கள் தலை எழுத்தோ? எங்கள் தலை எழுத்தோ? தெரியவில்லை.
இவ்வாறு நம்மாழ்வார் இயற்கை வாயிலாக் கடவுளைக் கண்டு மகிழ்ந்து பாடிய முறையால் தமிழ் நாட்டை வளர்த்தது கருதற்பாலது.
‘இயற்கை உடல் இறை உயிர்’ என்பதை ஆழ்வார் இன்னும் எத்தனை எத்தனையோ விதம் விதமாக விளக்கி யுள்ளார். அவைகளில் இங்கே ஒன்று சிறப்பாகக் குறிக்கத் தக்கது. அஃது ஆழ்வார் முன்னே இயற்கையை வருணித்துப் பின்னே மூர்த்தியைப் போற்றுவது. இதன் நுட்பம் என்னை?
திருப்பதிகளில் மூர்த்தி எழுந்தருளி யிருக்கிறார். அம் மூர்த்தியைப் பெரிதும் சோலையோ ஆறோ பிறவோ சூழ்ந்திருக்கும். இயற்கை வளம் மிகுந்துள்ள இடங்களிலேயே பண்டை நாளில் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. இயற்கை உடல் என்பதும். இறை உயிர் என்பதும் மேலே விளக்கப்பட்டன. இவ்வுண்மையை உள்ளத்திற்கொண்டு, இயற்கை வளஞ்சூழ்ந்த திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள மூர்த்தியைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சிந்தித்துப் பார்க்க பார்க்க, ‘இயற்கை உடல் றை உயிர்’ என்னும் உண்மைக்கு, இயற்கை வளஞ் சூழ்ந்த இடத்தில் மூர்த்தி எழுந்தருளியிருப்பது ஒருவித அறிகுறி என்பது புலனாகும். ‘இயற்கைஉடல் இறை அதன் உயிர்’ என்பதை உணர்த்துதற்குத் திருக்கோயில்கள் சிறந்த இலக்கியங்களாகவும் படங்களாகவும் பொலிதருகின்றன.
நம்மாழ்வார், ‘இயற்கை உடல் இறை உயிர்’ என்னும் உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிந்தவர். அவர் அவ் வுண்மையைச் சீரிய செந்தமிழ்ப் பாக்களால் உலகுக்கு உணர்த்துகிறார். ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர். பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.
சொன்னால் விரோதம்
தென்னா தெனாவென்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என்னானை . .
ஆரா அமுதே ..
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் . . .
மானேய் நோக்கு நல்லீர்
வானார் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா முறையும் கோனாரை
என்றுகொல் தோழிமீர்.
பொன்திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி தென்றல் மணங்கம ழும்திரு வல்லவாழ் நகருள் நின்ற பிரான்
நிச்சலும் ………
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சணி மாடங்கள் மீதண வும் தண் திருவல்லவாழ்
நச்சர வின்அணை மேல்நம் பிரானது நன்னலமே.
காண்பதெஞ் ஞான்று . .
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண் சினை யோங்குமரச் செழுங்கா னல்திருவல்ல வாழ் மாண்குறள் கோலப்பிரான் . .
பாதங்கள்.
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ் நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை . .
நாடொறும்.
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறுபூந் தடஞ்சேர் வயல்சூழ் தண்திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் . .
கழல்வளை – –
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திரு வல்லவாழ்
சுழலின் மலிச்சக்கரப் பெருமான் . –
உணர்த்த லூடல் . .
திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடிநம் பெருமானை ..
நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு
செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
வண்துலை வில்லி மங்கலம் ..
காலம் பெற – –
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல்
திருப் பேரை யிற்கே.
எளிதாயின ..
கிளிதா வியசோலை கள்சூழ் திருப்பேரான் .
உண்டுகளித்
வண்டுகளிக்கும் பொழில்சூழ் திருப்பேரான் .
ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்த இத் திருமொழிகளில் இயற்கை இறைமணங் கமழ்தலைத் தேர்க.
இயற்கை கை இன்பத் துறைகளுள் தலையாயது பெண் ணின்பம். பெண்ணின்பத்தைத் துறப்பது, இயற்கை இன்பத்தைத் துறப்பதாகும். இயற்கை இன்பத்தைத் துறத்தல் இறை ன்பத்தைத் துறத்தலாகும். இயற்கை அமைப்பைக் கூர்ந்து நோக்கி, அதன்வழி ஒழுகினால், இறை இன்பத்துக்கு ஊற்றா யிருப்பது பெண்ணின்பமென்பது நனி விளங்கும்.
இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டு மென்றும், அத் துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழைய லாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை.
பெண்மை துறக்கத் தக்கதாயின், அஃது இயற்கையில் அமைய வேண்டுவதில்லை. இயற்கை, பெண் ஆண் மயமா யிருத்தல் கண்கூடு. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தலால், அதன் உயிராகிய இறையும் அம் மயமாயிருத்தல் வேண்டும் இயற்கை வழி இறை உண்மையை உணர்ந்த ஆன்றோர், இறை யின்பால் பெண் ஆண் கூறு இத்தலை உலகுக்கு உரைத்தனர். இவ்வுண்மை கண்ட நாடு நமது நாடு. இப் பெரு நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? பெண்ணைத் துறந்தால் பேரின்பகுத்துக் வழியுண்டாகும்’ என்னுஞ் சோம்பேறி ஞானம் பேசி, அடிமை இருளில் அது வீழ்ந்து கிடக்கிறது. பெண்மை இல்லையேல் உலகம் ஏது? தாய்மைக்கு இடம் ஏது? தாயைப் பழித்த பாவம் நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. இது குறித்துப் ‘பெண்ணின் பெருமை’ முதலிய நூல்களில் விரித்துக் கூறி யுள்ளேன்.
நம்மாழ்வார் இறையருள் பெற்றவர்; றையை யுணர்ந்தவர். இயற்கை வடிவாக இறை பொலிவதைக் கண்டவர்; இயற்கையின் பெண்மையும் ஆண்மையும் அதன் உயிராயுள்ள இறையினிடத்தும் இருத்தலைத் தெளிந்தவர். அதனால் எல்லாப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் வித்தாயுள்ள இறையின் பெண்மையைத் தாய் என்றும், அதன் ஆண்மையைத் தந்தை என்றும் அவர் பாடலானார்.
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ .. மாயோனிகளாய்..
..எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன்..
நீயும் நானும் . .
தாயும் தந்தையு மாயிவ் வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.
ஒத்தார்.
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா..
போகின்ற – – தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் . .
மேலாத்
மேலாத் தாய் தந்தையு மவரே . .
வந்தருளி . .
முந்தைத்தாய் தந்தையே முழுவே ழுலகமுண்டாய்
சிந்தையாலும் . . தேவபி ரானையே
தந்தை தாயென் றடைந்த வண்குருகூரவர் சடகோபன்
இறையின் பெண்மை நலந்துய்க்க உயிர்கள் பெண்ணலம் பேணுதல் வேண்டும். பெண்ணலம் பேணப் பேணப் பெண்மை பரிணமிக்கும். பெண்மையாவது, பொறாமை முதலிய தீநீர்மைகள் ஒழிந்து, பொறுமை முதலிய நன்னீர்மைகளைப் பெறுவது அதாவது அருள்நிலை பெறுவது. இப் பெண்மை பெறாதவர் மாக்களாக உலகில் வாழ்ந்து பிறர்க்குத் தீங்கு விளைத்த வண்ண மிருப்பர். அவரைப் பண்படுத்தவல்லது இறையின் பெண்மைக் கூறாகும்.
ஆழ்வார் இறைவனது பெண்ணலந் துய்த்துப் பெண்மை நிலை எய்திப் பேறுபெற்றவர். இதற்கு அவர் தம் அருட்டிருப் பாக்களே சான்று கூறும் நம்மாழ்வார் பாக்களில் அகத்துறை நலம் கமழ்தல் கருதற்பாலது. பொதுவாக அவர்தம் பாக்களில் பலவற்றிலும் சிறப்பாக அவர்தம் திருவிருத்தத்திலும் அகத்துறை நலங் கமழ்தல் வெள்ளிடைமலை. அந் நலம்பட ஆழ்வார் எற்றுக்குப் பாடினார்? உலகம் அந் நலம் பெறுதல் வேண்டு மென்பது அவரது உள்ளக்கிடக்கை.
இடைநாளில் பெண்ணைப் பற்றிய சிறுமைகள் பல உல கிடைப் பரவின. இதற்குப் போலிச் சந்நியாசிகளும் போலி ஞானிகளுமே காரணர்களாவார்கள். இவர்கள் பெண்ணை மாயை என்றும், பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்றும், பெண்ணைத் துறந்தால் பேரின்பம் விளையும் என்றும் பல கதைகளைக் கட்டி விட்டார்கள். அக் கதைகளால் உலகம் கெடலாயிற்று. அக் கேட்டினை ஒழிக்கவே ஆங்காங்குப் பெரியோர் தோன்றினர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தாம் நுகர்ந்த இறையின்பத்தை அகத்துறைப் பாக்களாக வார்த்து உலகுக்கு உதவினார். அப் பாக்களில் தமிழ்ப் பெண்மை தாண்டவம் புரிகிறது.
திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ்
செல்வர் விண்ணாடனைய
வண்பூ மணிவல்லி யாரே
பிரிபவர் தாம் இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுட
ராடிவெண் முத்தரும்பி வண்பூங் குவளை
மடமான் விழிக்கின்ற மாயிதழே
மாயோன் வடதிரு வேங்கட
நாடவல் லிக்கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்
றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினை
யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடுந்தொண்டை யோ
அறையோவி தறிவரிதே.
அருளார் திருச்சக் கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல்
நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ வெனுமிகழ் வோஇவற்
றின்புறத் தாளென் றெண்ணோ தெருளோம்
அரவணை யீர்இவள் மாமை சிதைக்கின்றதே.
பண்டும் பலபல வீங்கிருள்
காண்டும் இப்பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும்
யாமிலம் காளவண்ண
வண்டுண் துழாய்ப் பெருமான்மது
சூதனன் தமோதரன்
உண்டு முமிழ்ந்தும் கடாயமண்
ணேரன்ன ஒண்ணுதலே.
வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகன்தன்
னொடும்காதல் செய்தேற்
கெண்ணம் புகுந்தடி யேனொடிக்
கால மிருக்கின்றதே.
காவியும் நீலமும் வேலும்
கயலும் பலபலவென்று
ஆ வியின் தன்மை அளவல்ல பாரிப்பு
அசுரைச்செற்ற மாவியம் புள்வல்ல
மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்கண்களாய துணைமலரே.
கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே.
பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவுபண் பெண்ணில்
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ
உகவை யால்நெஞ்ச முள்ளு ருகியுன்
தாமரைத் தடங்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான்
அழித்தாயுன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்
யாமடுசிறு சோறுங் கண்டுநின் முகவொளி திகழ முறுவல்
செய்து நின்றிலையே.
இத் தமிழ்ப் பெண்மையில் தோய்ந்து தமிழ்ப் பெண்மை பெறுக.
இயற்கை, இறையின் உடலாகலான், அஃது இன்பமுடை யது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய ஒன்றை வெறுத்துத் துறப்பது இறைநெறி நிற்பதாகாது. இக்கால உலகம் பெரிதும் இயற்கையினின்றும் வழுக்கிக் செயற்கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அதனால் அஃது உற்றுவருந் துன்பத்துக்கு ஓர் அள வில்லை. இப்பொழுது உலக முழுவதும் குழப்பமாயிருத்தல் கண்கூடு. அக் குழப்பம் எப்படி ஒழியும்? உலகம் இயற்கைவழி நிற்பதாயின், குழப்பம் ஒழிதல் திண்ணம். ஆழ்வார் தமிழில், இயற்கை நெறிமிக அழகுபடப் பொலிகிறது. அந் நெறி நிற்பதற்குக் கட்டில்லை; காவலில்லை. அந் நெறியில் உலகம் ஏன் நிற்றல் கூடாது? நிற்க எழுக! எழுக! உலகமே எழுக!



