இந்தியனும் – ஹிட்லரும்
பம்மல் சம்பந்த முதலியார்

முதல் அங்கம்


முதல் காட்சி


இடம்-திரு ஒற்றியூர்க் கடற்கரை யோரம்.

காலம்-விடியுமுன்.

புதிதாய்க் கட்டப்பட்ட பல சாமான்கள் நிறைந்த ஓர் வீட்டின் அறை. இதன் ஒரு புறம் பலவிதமான புதிய ரசாயன யந்திரங்கள் நிறைந்திருக்கின்றன. அறையின் மத்தியில் ஒரு மேஜையைச் சுற்றி மூன்று நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. ரசாயன யந்திரங்களுக் கெதிரில் இருக்கும் மற்றொரு சிறு மேஜையின் முன், கையில் ஒரு ரசாயனக் குழலுடன், விஸ்வநாதன் நின்று கொண்டிருக்கிறான். அறையின் மற்றொரு பக்கமுள்ள பலகணி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கிறது.

வி.⁠ உம் ! (கையிலிருக்கும் குழலைக் கலக்கிப் பார்த்து) இன்றைத்தினம் இதன் சூட்சுமத்தைக் கண்டு பிடிப்பேன் என்று, எனக்குள் ஏதோ சொல்கிறது! இந்த இரகசியத்தை மாத்திரம் நான் கண்டு பிடிப்பேனாயின், இந்த பாழாய்ப்போன யுத்தத்தை, அடியோடு உலகினின்றே ஒழித்து விடுவேன்!

(கதவைத் தட்டுகிற சப்தம்)

வி. ⁠ஆ ! மறுபடியும் கதவைத் தட்டுகிறார்கள் !- இந்த ஒரு இரவாவது என்னைத் தொந்திரவு செய்யாமல் விடமாட்டார்களா? (பூட்டப்பட்டிருக்கும் கதவருகில் போய்) இப்பொழுது யார் தட்டுகிறது?

(வெளியிலிருந்து வேலைக்காரியின் குரல்-கொஞ்சம் காபியாவது சாப்பிடுகிறீர்களா என்று அம்மா கேட்கச் சொன்னார்கள்)

வி.⁠ ஓ ! நான் சாத்திரி போஜனம் கொண்டேனா?-(பலகணியருகில்போய் அதை மூடியிருக்கும் திரையைத் தள்ளிப்பார்த்து) – ஓ! பொழுது விடிந்து விட்டதா!- ஹீம்! காபியைக் கொஞ்சம் பொறுத்து அனுப்பச் சொல் – இப்பொழுது அவசரமில்லை. கொஞ்ச நேரம் வரையில் என்னே ஒருவரும் தொந்திரவு செய்ய வேண்டாம். (மேஜையருகில் போய் அந்த ரசாயனக் குழாயில் ஏதோ திராவகத்தை விட்டுப் பரிசோதிக்கிறான்.

(கதவண்டை சிறு கையால் தட்டுகிற மெல்லிய சப்தம்)

வி. ⁠ பாழாய்ப்போக! -நான் கதவைத் திறக்கமாட்டேன் -இந்தப் பரீட்சையில் கான் ஜெயமடையும் காலம் சமீபிக்கும்போது

(கதவு பக்கமிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல்)

வி. ⁠என்ன அது ?-என் பையனா அழுகிறான்! ஏன் அழுகிறான் அவன்? (கதவைத் திறந்து பார்த்து) என்ன சமாசாரம் கண்ணா?-ஏன் அழுகிறாய் நீ?

க. ⁠என் புஸ்தகம் வாங்க அம்மா ரூபா கொடுக்கமாட்டேன் இண்ராங்க (அழுகிறான்) அவுங்ககிட்ட புஸ்தகம் வாங்க பணமில்லையாம் –

வி. ⁠கண்ணா-அழாதே கண்ணு – உனக்கு சீக்கிரம் ரெண்டு புஸ்தகம் வாங்கப் பணம் தருகிறேன். என் கண்ணல்ல போ-இப்பொழுது என்னேத் தொந்திரவு செய்யாதே (கண்ணன் போய்விடுகிறான்).

இந்தப் பணம் பாழாய்ப்போக! இந்த பணம் என்பதை இந்த உலகில் ஏன் உற்பத்தி செய்தார்கள் ! (ரசாயனப் பரீட்சையை நடத்துகிறான்.)

(வெளியில் கதவைக் தட்டுகிற உரத்த சப்தம்)

(வெளியிலிருந்து) தபால் சார்!

வி. ⁠போ வெளியே! ஒரு கடிதமும் வேண்டாம். இன்றைக்கு என்ன தொந்திரவு செய்ய!

(தபால்காரன் வெளியிலிருந்து) தந்திசார் !

வி.⁠ அதைக் கொளுத்தி விடு! -அல்லது, என் மனைவியிடம் அதைக் கொடுத்து விட்டு, போ வெளியே உடனே! இல்லாவிட்டால் நான் வந்து உன்னை உதைத்துத் துரத்துவேன்! (ரசாயனப் பரீட்சையை நடத்துகிறான்) என்னையேன் தொந்திரவு செய்யாமல் இருக்க மாட்டேன் என்கிறார்கள்? இந்த தனியான இடத்தில் கூட? இன்னொருமுறை யாராவது கதவைத் தட்டி என்னைத் தொந்திரவு செய்தால், அப்படியே சுட்டு விடுகிறேன் !-பாதரசத்தை விட்டுப் பார்க்கிறேன் என்னகிறதென்று.-(அப்படியே செய்கிறான்)-ஆ ! இது கொஞ்சம் சுமார்! கொஞ்சம் சுமார் !

(வெளியிலிருந்து ஒரு குரல்-ஒரு நிமிஷம் நான் வரலாமோ உள்ளே ?)

வி.⁠ தீர்ந்தது! அது என் மனைவியின் குரல் என்ன கண்ணு வேணு முனக்கு? இன்றைக்கு மாத்திரம் என்னைத் தொந்திரவு செய்யாமல் விடமாட்டாயா? நான் நிரம்ப வேலையாயிருக்கிறேன் என்று உனக்கும் தெரியவில்லையா ?

(பெண் குரல்-ஒரே ஒரு நிமிஷம்)

வி.⁠ (கதவைத் திறந்து) ஒரே ஒரு நிமிஷம்!-வா உள்ளே.

பத்மா, ஒரு கையில் காபி கோப்பையுடனும், மற்றொரு கையில் ஒரு தந்தியுடனும் வருகிறாள்.

ப. ⁠கொஞ்சம் காபியாவது சாப்பிடுங்களேன்! நேற்று மாலை முதல் நீங்கள் ஒன்றுமே சாப்பிடவில்லையே.

வி.⁠ ஆமாம் என்றால்! வாஸ்தவம் தான்! – எனக்கும் கொஞ்சம் பலஹீனமாய்த்தான் இருக்கிறது. இதோ -அந்த காபியைக் கொடு இப்படி. (அதை எடுத்து குடித்து விட்டு) நிரம்ப நன்றாயிருக்கிறது ! யார் செய்தது ?

ப. ⁠நான் தான்.

வி. ⁠ஆ! நீ நல்ல பெண்ணாச்சுதே-இன்னும் ஒரு மணி சாவகாசம் என்னைத் தனியா யிருக்க விடு.

ப. ⁠நான் வந்தது இன்றைக்கு-உங்கள் கலியாணமான -வெற்றி விழா-என்று ஞாபகப்படுத்த-

வி. ⁠ஒ! அதை நான் முற்றிலும் மறந்தேன் ! உன் கலியாணமான வெள்ளிவிழா தினம் வரும்பொழுது எனக்கு ஞாபக படுத்து-உனக்கு நல்ல பிரெசன்ட் (Present) வாங்கித் தருகிறேன்-இப்பொழுது போ வெளியே என் கண்ணல்ல. (மேஜையருகில் போகிறான்)

ப. ⁠(போகும் போது) தபால்காரன் இந்த தந்தியைக் கொடுத்துவிட்டுப் போனான்.

வி. ⁠அதைக் கொண்டுபோய் குப்பையில் போடு!-அல்லது அந்த மேஜையின் பேரில் போட்டுவிட்டுப் போ!(பத்மா போகிறாள்).

வி. ⁠அந்த காபியைக் குடித்தது எனக்குள் ஒரு புது யோசனையைப் பிறப்பித்திருக்கிறது-இதை யேன் நான் முன்பே யோசிக்கவில்லை? (கருப்பான கோலி குண்டைப் போன்ற ஒரு வஸ்துவை ஒரு குப்பியில் போட்டு அதன் பேரில் ஒரு திராவகத்தை ஊற்றுகிறான்) இது வற்றிப் போவதற்கு இருபது வினாடி பிடிக்கும் குறைந்த பட்சம், இதற்குள் குண்டுதான் வேண்டிய தூரம் போகும். (வெளியில் கதவைத் தட்டுகிற சப்தம்)

வி. ⁠அதோ பார் ! கான் கதவைத் திறக்க மாட்டேன் ! வருவது வரட்டும்! (வெளியில் பலமாய்க் கதவைத் தட்டுகிற சப்தம்) (வெளியிலிரு ந்து குரல்) டாக்டர் சார்! டாக்டர் சார் !

வி. பிசாசை நாம் நினைக்காவிட்டாலும் அது வந்து சேர்கிறது!-ஹீம் (கதவைத் திறக்கிறான்)

சுகன்மல் சவுகார் வருகிறான்.

சு.⁠ குட் ஈவ்னிங் ஆ! குட் மார்னிங்! முதலியார் சார்.

வி.⁠ ஆம்-குட் மார்னிங்! ஏதாவது விசேஷ முண்டோ? இதோ பாருங்கள், நான் இப்பொழுது-

சு.⁠ ஒண்ணும் விசேஷமில்லெ – உங்களே பாத்துாட்டு போகலாமிண்ணு வந்தேன்.

வி.⁠ இப்பொழுது, என்னைத்தான் பார்த்தாச்சுதே! போய் வரலாமே? இப்பொழுது நான் நிரம்ப வேலையாயிருக்கிறேன்.

சு. ⁠நீங்க – இண்ணக்கி – எல்லா வட்டியும் கொடுக்கரேனிண்னு சொன்னைங்களே ?

வி. ⁠ஓ ! அதுவா ?- தெரிகிறது-சாவுகார்ஜி, நான் சொல்வதைக் கேளுங்கள். நான் சொன்னபடி இன்றைக்கு என்னால் கொடுக்க முடியாது-இப்படி தவறிப்போனதற்காக, வருகிற மாசம் முதல் தேதி இரட்டிப்பு வட்டி சேர்த்து கொடுக்கிறேன்.-ஒரு வேளை அசல் முழுவதையும் சேர்த்துக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவேன்.

சு. ⁠எப்படி-முதலியார் சார் ?

வி. ⁠அது ஒரு ரகசியம்! அதை இப்பொழுது உங்களுக்குச் சொல்ல முடியாது. அன்றியும் அந்த பிரிவிகவுன்சில் தீர்மானம் சீக்கிரம் வருமென்று நினைக்கிறேன்.

சு.⁠ பிரிவி-அப்பீல்-பணாலா போச்சி முதலியார் சார்! தந்தி வந்தது-அத்தொட்டு தான் உங்களே பாக்க வந்தேன்.

வி.⁠ ஒ!-(மேஜையின்மீதிருந்த தந்தியை விரைவில் பிரித்துப் பார்க்கிறார்) ஓ ! அப்படியா சமாசாரம் ?

சு.⁠ முதலியார் சார் ! நான் ஒரு விஷம் (விஷயம்) சொல்ரேன்-நீங்க என்னமோ புதுசா கண்டு பிடிக்கரைங் களாம்.–

வி.⁠ கண்டு-பிடிக்கிறேன் !

சு.⁠ ஆமாம்-நீங்க கண்டு பிடிக்கிறத்தே எனக்கு கொடுத்துடுங்க-வித்துாடுங்க-நானு உங்க கடனெயெல்லாம் ரத்து-கான்சல் (Cancel) பண்ணிஉடரேன்! அத்தோடெகூட ஒரு லாக்! லச்சம் ரூபா கொடுக்கரேன் !

வி. ⁠என்ன ஆச்சரியம்! நான் என்ன கண்டு பிடிக்கப் போகிறேன்? இதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

சு. ⁠எனக்கு ஒண்னும்-தெரியாது சார்! ஆனால் அதுக்கு ரெண்டு லச்சம் ரூபாய்க்கி ஒரு ஆபர் (Offer) இருக்குதுங்க – ஒரு லட்சம் உங்களுக்கு கொடுத்துடரேன். ஒரு லட்சம் நீங்க கொடுக்ணும் கடனுக்கு – எடுத்திக்ரேன் சார்-எல்லாம் சரி பூடுது.

வி. ⁠ ‘சரி பூடு’து சரிதான்! நான் கண்டு பிடிக்கப் போகிறது இன்னது என்று அறியாமல் அதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் எனும் புத்திசாலி யார் அவன் ?

சு. ⁠ஒரு-ஜப்பான்-மன்ஷன் !

வி.⁠ ஒரு ஜப்பானியனா! – ஓ! இது உதவாது ! ஏதோ தவறு நடந்திருக்கிறது! இதனுண்மையை நான் அறிய வேண்டும்! – யார் இந்த ஜப்பான் மனுஷன்?

சு. ⁠பட்ணத்துலே-பட்டுவிக்கரான் சார்-தெருவுலே.

வி. ⁠அவன்-இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறதாகச் சொல்கிறான் !

சு. ⁠பொயில்லா சார்-பொன் கொடுக்கரேன் இன்ரான் பொன் மார்க்சா!

வி. ⁠பொன்! மார்க்ஸ்! – இதை நான் உடனே நன்றாய் ஆறாய்ந்தறிய வேண்டும்! இதைப்பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாதென்று நான் இருந்தால்!-சரி சரி ! நான் காலஹரணம் செய்யக்கூடாது-சாவுகார், நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் ஜப்பான் மனிதனிடம், என் பிரயத்னம் ஒன்றும் பலிக்கவில்லை எல்லாம் கெட்டுப் போய்விட்டது, என்று சொல்லுங்கள்-இப்பொழுது நீங்கள் உடனே விடைபெற்றுக் கொண்டு போங்கள், எனக்கு நிரம்ப வேலையிருக்கிறது.

சு.⁠ சரிதான்-முதலியார் சார்-நான் போரேன்-ஆம்.நான் சொல்ரதே கொஞ்சம் கேளுங்கள்-இன்னம் கூட ஒரு லச்சம் தர்ரேன்-மொத்தம் மூனு லட்சம் !

வி.⁠ நீங்கள் இப்பொழுது வெளியே போகிறீர்களா?அல்லது நான் உங்களை பிடித்து வெளியில் தள்ளட்டுமா ?

சு. ⁠கோவம்-வேணாம் சார்!-கடசி ஆபர் (Offer) நாலு லட்சம்!

வி. ⁠(அவனைப் பிடித்து) போங்கள் வெளியே!

சு.⁠ இல்லாப் போன-நானு பத்ரம் மேலே – சம்மன் பண்ணரே !

வி. ⁠பண்ணிக்கொள், போ ஒழிந்து யமனே! (அவனை வெளியில் தள்ளிக் கதவைத் தாளிடுகிறான்.) இந்த ஜபானியனுக்கு நான் செய்யும் பிரயத்னம் எப்படி தெரிந்தது ?- நாலு லட்சம் வரையில் கொடுக்கிறானா! இதெல்லாம் உதவாது – அமெரிக்காவிலிருக்கும் எனது நண்பருக்கன்றி வேறு யாருக்கும் இந்த ரகசியம் தெரியாதென்று நினைத்திருந்தேன்! இது எப்படி வெளியாகிய தென்று உடனே நான் கண்டுபிடிக்க வேண்டும்! – பொன் மார்க்ஸ் கொடுக்கிறானா! ஜெர்மானியர்களுக்குக்கூட இது தெரிந்துவிட்டதா என்ன ! சரி முதலில் இந்த சூட்சுமத்தை நான் கண்டு பிடித்தாகட்டும். (மேஜையருகில் போய், காஸ் (Gas) விளக்கினால் குப்பியைச் சூடாக்கிப் பார்க்கிறான்) இன்னும் அந்த திராவகத்தின் வேகம் போகவில்லை! – இதை மாத்திரம் நான் நிறுத்துவேனாயின் !

(வெளியில் மெல்ல கதவைத் கட்டுகிற சப்தம்)

வி. ⁠ ஹா! இந்த இழவிற்கு நான் என்ன செய்கிறது ? – இன்னொருமுறை இந்தக் கதவைக் தட்டுகிற சப்தத்தைக் கேட்டால் சாவியின் துவாரத்தின் வழியாக நான் சுடுகின்றேன்-வெளியில் யாராயிருந்த போதிலும்! (தன் கைத் துப்பாக்கியை அந்த துவாரத்தில் நுழைக்கிறான்)

(அகத்தீஸ்வர முதலியார்-வெளியிலிருந்து – வேண்டாம் அப்பா! விஸ்வம்! நாங்கள் வெளியில் இருக்கிறோம்)

வி. ⁠ஓ! (கைத் துப்பாக்கி கையிலிருந்து கீழே விழுகிறது) (கதவைத் திறந்து) அப்பா! அம்மா! மன்னியுங்கள் என்னை! சந்தோஷம் ! நான் உங்களைச் சுடாதது வா தீனம்!

(அவர்கள் உள்ளே வருகிறார்கள்)

அ. ⁠அதைவிட எங்களுக்கு அதிக சந்தோஷம், இப்பொழுதாவது தெய்வம் ஒன்று உண்டென்று நினைக்கிறாயே என்று.

வி. ⁠அடடா! அகஸ்மாத்தாய் அந்த வார்த்தை என் வாயிலிருந்து வந்தது. (அம்மணி அம்மாள்) இருக்கட்டும், இனி அந்த எண்ணம் உன் மனதை விட்டு என்றும் அகலாதிருக்குமாக!

வி. ⁠இதோ பாருங்கள் அம்மா

அ. ⁠சரி-இதைப்பற்றி இனி நாம் வாதாட வேண்டாம். அதிருக்கட்டும் – அப்பா, இந்த இரண்டு மூன்று நாட்களாக இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? ஊண் உறக்கமில்லாமல்?

வி. ⁠அப்பா – அது ஒரு ரகசியம் – நான் கூறுவதைத் தவறாக எண்ணாதீர்கள் – உங்களுக்கு அதைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்-சமயம் வந்தவுடன்.

அ. ⁠ஆயினும்-இது மற்றவர்களுக்குத் தெரியும்போலிருக்கிறதே-அந்த சாவுகார் என்னமோ உளறிக்கொண்டிருந்தானே எங்களிடம், என்ன அது ?

வி. ⁠ அவன் என்ன சொன்னான் உங்களிடம்?

அ. ⁠அவன் சொன்ன வார்த்தைகளே அப்படியே சொல்கிறேன்-கோபித்துக் கொள்ளதே!-நீ ஒரு மடயன், நீ கண்டுபிடித்ததை நான்கு லட்சம் பொன் நாணயங்களுக்கு விற்கத் தெரியா மூடன், என்றான்.

வி. ⁠அப்பா, என்னை மன்னிக்கவேண்டும் நீங்கள்-எப்பொழுதாவது இதை நான் உங்களிடம் சொல்லித்தான்

தீர வேண்டும். நான் இந்த இரகசியத்தை முற்றிலும் பூர்த்தியாய்க் கண்டு பிடித்த பிறகு சொல்லலாமென்று நினைத்தேன். ஏறக்குறைய முற்றிலும் கண்டு பிடித்து விட்டேன். கொஞ்சம்தான் பாக்கியாயிருக்கிறது, அதையும் நான் கண்டு பிடித்து விட்டால் இது இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட பல ஆச்சரியகரமான விஷயங்களுக்கெல்லாம் மேம்பட்டதாகும்.

அ.⁠ எனக்கொன்றும் அவசரமில்லை. நான் பொறுக்கின்றேன்.

வி.⁠ வேண்டாம் அப்பா – இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். இந்த உலகத்திலே இன்னும் ஒரு மனுதனுக்குதான் இதைத் தெரிவித்திருக்கிறேன்-ஒரு அமெரிக்கவாசியான எனது நண்பர் – அவரைப் போல் நீங்களும் இதை இரகசியமாக வைத்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்-நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கும் வரையில்,

அ.⁠ அப்படியே ஆகட்டும் என்று உனக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.

வி.⁠ நீங்கள் இந்த இரகசியத்தை வெளியிடுவீர்கள் என்னும் பயத்தினாலல்ல இப்படி நான் கேட்பது. பல முறை இந்த இரகசியத்தை முற்றிலும் கண்டு பிடித்துவிட்டேன் என்று நம்பி, மோசம் போயிருக்கிறேன். ஆகவே பூர்த்தியாவதற்குள் இதை வெளியிட்டு, பலர் நகைக்க நான் ஆளாகக்கூட தென்பதுதான் என் அபிப்பிராயம்.

அ.⁠ என்ன அப்பா, கண்மணி, அது ?

வி. ⁠ இதுதான் அப்பா அது-அம்மா, இரண்டு வருடங்களுக்கு முன்பாக என்னை ராமாயணம் மஹா பாரதம் இரண்டு புஸ்தகங்களையும் படிக்கச் செய்தீர்கள் அல்லவா? மஹா பாரதத்தில் ஒரு கதையிருக்கிறது, அதில் அர்ஜுனன் எய்த மோஹனஸ்திரம் என்னும் பாணத்தினால் கெளரவ சேனை முழுவதும், ஒரு சமயம், 32 நாழிகை வரையில் பிரக்ஞையற்றிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இதை நான் படித்தபோது இதெல்லாம் வியாசருடைய கற்பனையாயிராது, இதில் ஏதோ வாஸ்தவம் இருக்கவேண்டுமென்று எண்ணினவனாய், இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தபோது, தஞ்சாவூர் சரபோஜி ராஜாவின் சரஸ்வதி மஹால் புத்தக சாலையில் ஓர் பழைய ஏட்டுச் சுவடியில் இதைப்பற்றி கூறியிருப்பதைக் கண்டறிந்தேன். அதை மிகவும் கஷ்டப்பட்டு படித்தபோது, இதன் இரகசியத்தையறிந்தேன்.

அ. ⁠உம்-தெரிகிறது.

வி. ⁠கவர்ன்மெண்ட் உத்யோகத்திலிருந்து நான் விடுவித்துக்கொண்டதுமுதல் இதைப்பற்றி ஆராய்ச்சிசெய்து வந்தேன். இப்பொழுது ஏறக்குறைய இந்த இரகசியத்தை முற்றிலும் கண்டு பிடித்துவிட்டேன் என்றே சொல்லலாம். இதைப் பூரணமாய் முடிக்க ஒரு சிறு விஷயம்தான் பாக்கியிருக்கிறது.

அ. ⁠அது என்ன அது ?

வி. ⁠இந்தக் கண்ணாடிக் குழாயில் ஒரு சிறு குண்டு இருக்கிறது தெரிகிறதா? அதனுள், ஐந்து மைல் விஸ்தீரணத்திற்குள் இருப்பவர்களை யெல்லாம் கொஞ்ச காலம் மெய்ம்மறந்து போகும்படிச் செய்யவல்ல சக்தி அடங்கி யிருக்கிறது. இதில் கஷ்ட மென்னவென்றால், ஒரு பீரங்கியிலோ, பெரிய துப்பாக்கியிலோ இதை வைத்துச் சுட்டால், அந்த குண்டு ஐந்து மைல் போகும் வரையில், அது உடையாமலிருக்க வேண்டுமென்பதே – அதைத் தான் இப்பொழுது கடைசியாகக் கண்டு பிடிக்க முயன்று வருகிறேன்.

அ. ⁠ அதைக் கண்டு பிடித்தபின்-இதை எப்படி உபயோகிக்கப் போகிறாய்? இந்த உள் இரகசியத்தை ?

வி. ⁠ஏன் ? உங்களுக்குத் தெரியவில்லையா? உலக முழுவதையும் ஒரே யுத்தகளமாக்கிவரும் இந்தக் கொடிய யுத்தத்தை, இது நிறுத்தி விடாதா?

அ. ⁠அல்லது, இந்த உலக முழுவதையுமே, அழித்துவிடக் கூடுமல்லவா?

வி.⁠ அப்பா, நீங்கள் சொல்வது எனக்கு அர்த்தமாக வில்லை.

அ.⁠ கண்ணே, நான் சொல்வதைக் கேள். இத்தனை நூற்றாண்டுகளாகக் கண்டு பிடிக்கப்பட்டுவரும் ஒவ்வொரு விஞ்ஞான ரகசியமும், யுத்தத்தை, மிகவும் பயங்கரமாகவும், கொடூரமாகவும், உலகத்தைப் பாழாக்குவதற்காகவும், உபயோகிக்கப்பட்டேவருகிறது . இவைகளெல்லாம் யுத்தத்தைத் தடுக்க கொஞ்சமாவது மனிதனால் உபயோகிக்கப்பட்டு வருகிறதா ? கொஞ்சமேனும் உன்னுடைய இரகசியமானது, உலகத்திற்கு வெளியிடப்பட்டால் ஒவ்வொரு தேசத்தாரும் மற்றவர்களையெல்லாம் அழிக்கவே பார்ப்பார்கள்: எல்லா தேசத்தாரும் ஒருவரையொருவர் அழித்துக்கொண்டு, பாரதத்தில் யாதவர்கள் கடற்கரையோரம் மடிந்ததுபோல் மடியவேண்டியதுதான் !

அ.⁠ ஐயோ ! என்ன கோரம் !

வி. அம்மா, இதன்பலன் இப்படி யொன்றிருக்கக்கூடும் என்று-நான் யோசிக்கவில்லை.

அ.⁠ கண்ணே, நான் உன்னே ஒன்று வேண்டிக்கொள்கிறேன், அதன்படி செய்கிறேன்?

வி.⁠ நீங்கள் வேண்டுவதாவது ?-கட்டளை யிடுங்கள்-அதன் படி செய்கிறேன்.

அ. ⁠ இல்லை! உன்னிடமிருந்து அதை ஓர் வரமாக வேண்டுகிறேன்-அகில ஜீவராசிகளின் சம்ரட்சனைக்காக! கடவுளின் கிருபையால் இந்த கடைசி ரகசியத்தையும் கண்டு பிடிப்பாயாயின், என் அனுமதியின்றி வேறொருவருக்கும் இதை வெளியிடுவதில்லை என்று, எனக்குப் பிரமாணம் செய்து தருகிறாயா ?

வி.⁠ ஆகட்டும் அப்பா.

அ. ⁠ அப்படியே செய்வதாக எங்களிருவர் பேரிலும்-பிரமாணம் செய்.

வி. ⁠அப்பா, தெரிகிறது-உங்கள் இருவர் பேரிலும் பிரமாணம் செய்கிறேன்-அப்படியே ஆகட்டும்.

அ. ⁠கண்ணே! கருணையே வடிவான கடவுள் உனக்கு உதவுவாராக! நமது தேசத்திற்கு முன்னோர்களான ரிஷீஸ்வர்களுடைய தவப்பயனால், உனது இரகசியத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய புத்தி உனக்குக் கிட்டுமாக விரைவில்!

வி. ⁠நமது முன்னோர்களுக்கு விசாலமான புத்திகூர்மையிருந்த போதிலும், அவர்களிடம் இந்த குறை ஒன்றிருந்தது, தாங்கள் கண்ட பெரிய ரகசியங்களையெல்லாம் மனித வர்க்கம் அனைத்தும் க்ஷேமத்தையடைய உபயோகப்படும்படி வெளியிடாதிருந்தனர்.

அ. ⁠மனித வர்க்கம் க்ஷேமத்தை யடையும்படியே அந்த இரகசியங்களே அவர்கள் பலருக்குக் கூறா திருந்தார்களோ என்னவோ ? – யார் அறிவார் ?

அ. பரமேஸ்வரன் உன் மனோபீஷ்டத்தைப் பூர்த்திசெய்வாராக! – நாங்கள் விடைபெற்று கொள்கிறோம் – எதற்கும் ஈஸ்வரனே நம்பு! (இருவரும் போகிறார்கள்)

வி. ⁠ஈஸ்வரனை நம்பு! -அதுதான் கஷ்டமாயிருக்கிறது. – நான் தேடுவதை எனக்குக் கொடுப்பாராயின் இப்பொழுது! – அவரை நம்புகிறேன் ! (சிரித்துக்கொண் டே, ரசாயணப் பரீட்சை மேஜையருகில் போகிறான். குப்பியைப் பார்க்கிறான்) – ஓ! ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் ! என் கடைசி பரீட்சை பலித்தது!. ஜெயம் ! நான் நாடியதைக் கண்டு பிடித்துவிட்டேன்! தெய்வாதினமாய் ! ஈஸ்வரன் ஒருவர் இருக்கிறார் என்று நான் நம்ப வேண்டியது தான். அமெரிக்காவிலுள்ள என் சிநேகிதருக்கு இதை முதலில் சொல்வதாக வாக்களித்தேன் பிறகு என் தந்தை தாயர்க்குச் சொல்கிறேன். (அருகிலிருக்கும் ஓர் ஒலிபெருக்கியைப் போலிருக்கும் யந்திரத் தருகில் போய்) ஹல்லோ! -ஹல்லோ !- ஹல்லோ! – ஆம் விஸ்வம் பேசுகிறது – ஆம் – வென்ட்வொர்த்! என் ரகசியத்தை முற்றிலும் முடித்து விட்டேன் !-ஆம்-இப்பொழுது அதைச் சொல்ல முடியாது உனக்கு – எவ்வளவு வேகமாய் ஆகாய விமானத்தில் இங்குவர முடியுமோ, அவ்வளவு வேகமாய் வந்து சேர் – உடனே! இதற்குள் என் தகப்பனர் அனுமதியைப் பெற்று உனக்குச் சொல்கிறேன் – ஏனா? – அவருக்கு அப்படி பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேன் – அவர் எப்படியும் உத்திரவு கொடுப்பார்! – ஆம் – சீக்கிரம் வா! சீக்கிரம்! ஆம் – உனக்கு மிகவும் வந்தனம் – (அதைத் திருப்பிவிட்டு) (கதவருகில் போகிறான்) இதை இப்பொழுது என் தந்தை தாயார்க்குத் தெரிவிக்கிறேன்.

(கதவைத் திறந்துகொண்டு வெளியே போகிறான்)

காட்சி முடிகிறது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *