இந்தியனும் – ஹிட்லரும்
பம்மல் சம்பந்த முதலியார்

இரண்டாம் அங்கம்

இடம்:- ஹிட்லருடைய வீட்டில் ஓர் அந்தரங்க அறை. ஹிட்லர் கோபத்துடன் உலாவிக்கொண்டிருக்கிறான். ஹிம்லர் ஒருபுறம் நின்று கொண்டிருக்கிறான்.

இட்.⁠ ஹிம்லர்! இந்த விஷயம் அவ்வளவு விபரீதமான தென்று நினைக்கிறாயா ?

இம்.⁠ ஆம் தலைவரே! கொஞ்ச நாளைக்குமுன் உங்களுக்கு நான் தெரிவித்த அந்த இந்தியன், அவன் நாடிய இரகசியத்தை கண்டு பிடித்துவிட்டான்.

இட்.⁠ உனக்கு எப்படி தெரியும் அது ?

இம்.⁠ அமெரிக்கா தேசத்து இரகசிய வேலை அதிகாரியாகிய அவனது நண்பனாகிய வென்ட்வொர்த் என்பவனுக்கு, நேற்றைத் தினம் தான் கண்டுபிடித்து விட்டதாகத் தெரிவித்தான்; இரவும் பகலும் இவர்கள் ஏதாவது பேசுவதை கவனிக்கும்படியாக, ஏற்படுத்தப்பட்ட எனது ஆள் இவர்கள் பேசியதைக் கேட்டறிந்தான்.

இட். ⁠அதென்ன, அவ்வளவு அபாயகரமான ஆயுதமா?

இம். ⁠ நம்முடைய எதிரிகள் மாத்திரம் அதன் ரகசியத்தை அறிவார்களாயின் மூன்று தினங்களுக்குள்ளாக நமது ஜெர்மன் சைனியத்தை யெல்லாம் நாசமாக்கக் கூடும்.

இட். ⁠ உன்னுடைய கெஸ்டப்போ, – ரகசியத் தொழிலாளர்கள் – என்ன பிரயோஜனம் ? பிரிடிஷ்காரராவது அமெரிக்கர்களாவது இதை அறியுமுன் இந்த இரகசியத்தை நீ கண்டு பிடிக்க முடியாதா ?

இம்.⁠ இதைக் கண்டு பிடித்தவன் ஒரு இந்தியன் -அவன் இந்தியாவிலிருக்கிறான்.

இட். ⁠இதன் ரகசியத்தை அவன் இதுவரையில் யாருக்காவது தெரிவித்திருக்கிறானா?

இம். ⁠இன்னும் இல்லை – ஆனால் அவன் சீக்கிரம் அதைத் தெரிவிக்கப் போகிறான் என்று எண்ணுகிறேன்.

இட். ⁠ அதை வேறொருவருக்கு அவன் தெரிவிக்குமுன் அவனைக் கொன்றுவிடும் மார்க்கத்தை உடனே தேடு ! (அறையில் இருக்கும் டெலிபோன் மணி அடிக்கிறது) பாழாய்ப் போக! – (கேட்கும் கருவியைக் காதில் வைத்து) யார் பேசுகிறது ? – ஓ ஆம் – ருஷ்யா போர் முனையிலிருந்தா? – சரி! அவர்களா நம்மை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள் ! உன்னுடைய துருப்புகள் என்ன செய்கிறார்கள்? – உம் – உன்னுடைய சைனிய நஷ்டம் அதிகமாக யிருக்கிறதா? இருந்தால் என்ன ? பாழாய்ப்போன மனுஷா – நீ என்ன பயங்காளியா! – இன்னும் மூன்று கோடி ராணுவம் மடிந்தாலும் பெரிதல்ல! – நீ மாஸ்கோவையாவது உடனே பிடிக்க வேண்டும்-இல்லாவிட்டால் இங்கு நீ உயிருடன் திரும்பி வரவேண்டியதில்லை ! அப்படி வந்தால்….உன் கதி என்னவாகுமென்று உனக்கு நன்றாய்த் தெரியுமே !-சரிதான் – (கேட்கும் கருவியை கீழே வைத்துவிட்டு) இதோ பார் ! இம்லர் ரஷ்யா யுத்த களத்திலிருந்து விபரீதமான சமாசாரம் வந்திருக்கிறது – நாம் ஜெயிக்க வேண்டுமென்றால், எப்படியாவது இந்த இரகசிய ஆயுதத்தை நாம் பெற வேண்டும். அதைப் பெறுவோமாயின் முன்பு, நம் எதிரிகள் நம்மை அழிப்பதைவிட்டு, நாம் அவர்களை யெல்லாம் அடியுடன் அழித்துவிடலாம். இந்த பிரிட்டிஷ்காரரையும் அமெரிக்கர்களையும் – மூன்று தினங்களுக்குள்ளாக ! நீ கூறுவதுபோல் அதற்குள்ளாகவே அவர்களை அதம்செய்து விடலாம். ஜெர்மனி தோல்வி யடைந்தால், நான் இறப்பதற்கு முன் இவ்வுலக முழுவதையும் அழித்துவிட்டு, இறக்கிறேன் !- ஏனப்பா? அந்தப் பாழாய்ப்போன இந்தியன் மற்றவர்களுக்கு இந்த இரகசியத்தை வெளியிடு முன் நீ அறிய மார்க்கமில்லையா ?

இம்.⁠ இதில் கஷ்ட மென்னவென்றல் – மதராஸ் பட்டணத் தருகில் ஓர் கிராமத்தில் வசிக்கும் இந்த இந்தியனே, நாம் முதலில் பார்க்கவேண்டு மென்பதுதான்.

இட்.⁠ நான் இதற்கு மார்க்கம் சொல்கிறேன் ! என் மனதில் ஆச்சரியகரமான ஓர் யோசனை தோன்றியிருக்கிறது! – கொய்ரிங் இடம் நான் கட்டளையிட்டதாகச் சொல்லி, உன் வசம், மிகவும் வேகமும் பலமும் பொருந்திய, பாம்புகளைத் தெறிக்க வல்ல ஆகாய விமானத்தை, ஒப்புவிக்கச் சொல். அதில் கைதேர்ந்த உன கெஸ்ட்போ அதிகாரிகளில் ஆறு பெயரை ஏற்றி, உடனே புறப்பட்டு இந்தியாவுக்குப் போய், இந்த இந்தியனைக் கண்டு பிடித்து, எப்படியாவது சாகசம் செய்து இந்த இரகசியத்தைக் கண்டறியச் சொல்; அவனிடமிருந்து அறிந்தவுடன் அவன் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கா வண்ணம் உடனே பார்த்துக் கொள்ளச்சொல் – நான் கூறுவது உனக்கு அர்த்தமாகிற தல்லவா ?

இம்.⁠ தெரிகிறது! தலைவரே !

இட்.⁠ அதிருக்கட்டும் – அநேகம் இந்தியர்கள் அவர்கள் கவர்ன்மெண்டார் மீது மிகவும் அதிர்ப்தி யடைந்திருக்கிறதாக நீ சொன்னதாக ஞாபக மிருக்கிறதே எனக்கு?

இம்.⁠ ஆம் உண்மைதான்! ஆயினும் அவர்களுள் காந்தி முதற்கொண்டு, அந்த தேசத்திய பிரிடிஷ் சைன்யம் ஜெயிக்க வேண்டுமென்று கோராத ஒரு இந்தியனும் கிடையாது.

இட். ⁠ ஏன்?

இம். ⁠ஏனென்றால்-அவர்கள் எல்லாம் நம்மை வெறுக்கிறார்கள் !

இட். ⁠ ஹீம் ! கொஞ்சம் பொறு, நான் இந்த பிரிடிஷ்காரர்களை முன்பு தோற்கடிக்கட்டும், பிறகு நான் இந்தியாவுக்குப் போய் – இந்த கருப்பு மனிதர்களை என்ன செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியும்.

இம். ⁠ஆனால், நான் சொன்ன இந்த இந்தியன், நம்மைவிட வெண்மையாயிருக்கிறான் – அவனுடைய புகைப் படத்தைப் பார்த்ததில்-அதை என்னுடன் கொண்டு வர மறந்தேன்-நான் உங்களுக்கு அதை நாளேக்குக் காண்பிக்கிறேன்.

இட். ⁠அப்படியானால் – நம்முடைய ஆரிய சங்கேதப்படி அவன் நம்மைச் சார்ந்தவன் என்று சொல்லி, அவனை வசப்படுத்தட்டும் நம்முடைய கெஸ்டப்போ போலீஸ் ! அவனிடம், அவனும் ஒரு ஆரியன், ஆகவே ஜர்மானியர்களுடைய ஆதி வம்சத்தாரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள், ஆகவே அவன் ஜர்மன் கட்சியைச் சேரவேண்டுமென்று சொல்லட்டும்.

இம்.⁠ என்ன முடியுமோ -பார்க்கிறேன்.

இட்.⁠ உடனே இந்த வேலையை ஆரம்பி! நாம் ஒரு க்ஷணத்தையும் வீண் போக்கலாகாது. உன் மனிதர்களிடம் இதுவே அவர்களுக்கு நான் இட்ட கடைசி கட்டளை என்று தெரிவி. – அந்த மனிதன் மற்றவர்களுக்கு அந்த ரகசியத்தைத் தெரிவிக்குமுன் அவனைப் பிடிக்கவாவது வேண்டும் – அல்லது வான்ஸ்பீ (VonSpee) சென்ற இடத்திற்காவது அவர்கள் விரைவில் போக வேண்டும்! (டெலிபோன் மணி அடிக்கிறது) பாழாய்ப் போக! யார் அது இம்முறை? (குழாயைக் காதில் வைத்து). ஆமாம்-அவன் இங்குதான் இருக்கிறான். அவனிடம் நீ என்ன சொல்ல வேண்டும் ? – யார் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு விட்டது? – வென்ட்வொர்த் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டானாம், இம்லர் !

இம்.⁠ ஆனால் ஒரு க்ஷணமும் தாமதிக்கலாகாது. வென்ட்வொர்த் அந்த இந்தியனைச் சந்திக்குமுன் நாம் அவனைப் பற்ற வேண்டும் !

(வெளியே ஓடுகிறான்)

காட்சி முடிகிறது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *