
இந்தியனும் – ஹிட்லரும்
பம்மல் சம்பந்த முதலியார்
மூன்றாம் அங்கம்
இடம். – திருவொற்றியூரில் விஸ்வநாதத்தினுடைய புதிய வீட்டில், ஓர் அறை. விஸ்வநாதம் எழுதும் மேஜையின் எதிரில் ஓர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஒரு தந்தியை வாசித்த வண்ணம் இருக்கிறான்.
வி. (படிக்கிறான்) “ஈஸ்வரன் கருணை – மிகவும் சந்தோஷம் புறப்பட்டு விட்டேன். வியாழன் வெள்ளி வந்து சேர்கிறேன்.” – அப்படியானால் இன்றைக்காவது, நாளைக்காவது வந்து சேரவேண்டும்- என்ன நேர்ந்த போதிலும் இந்த சாவுகார் பிசாசின் உபத்திரவம் நீங்கியிருப்பேன்! – அவன் கடைசியில் என்ன கொடுப்பதாய் சொன்னான் ? – (வேறொரு கடிதத்தைப் பார்த்து) – ஐந்து லட்சம்!
(வெளியில் ஒரு மோடார் பெரும்நாதம் கேட்கிறது)
வி. ஏதோ கஷ்டம் நேரிடப்போகிறது! ஏதோ அபாயம் வந்திருக்கிறதென என மனதிற்குள் தோன்றுகிறது.
(ஒரு வேலையாள் வருகிறான்)
வி. யார் அது ? சாவுகார் அல்லவே?
வே. இல்லைங்க – ஒருத்தர் வந்திருக்கராருங்க – ரெண்டு வண்டியிலே! இந்த கார்டை கொடுக்கச் சொன்னாரு உங்ககிட்ட.
வி. ஒருத்தர் வந்திருக்கிறார் – இரண்டு வண்டியில் (கார் டைப் படித்து) ‘கில்லிங்காம், 32 சாலைத் தெரு, நியுயார்க்! – “கில்விங்காம்! இது யார்? எனக்கு தெரியவே தெரியாதே! – ஓ! இதோ – ஏதோ பென்கிலில் கிறுக்கியிருக்கிறது – மிஸ்டர் வென்ட்வொர்க் அனுப்பினார்” – ஓ! பையா – அவரை உடனே வரச் சொல் இங்கு. (வேலையாள் போகிறான்). வென்ட்வொர்த்துக்கு என்ன ? தானே வருவதாகத் தந்தி அனுப்பினாரே அவர் வேறொருவரையும் அனுப்பியிருக்கமாட்டாரே -இவ்விஷயத்தில் ?
கில்லிங்காம் வருகிறார்.
கி. குட் மார்னிங் !-நான் இன்னானென்று நானே என்னைத் தெரிவித்துக் கொள்ளவேண்டியதிருக்கிறது. நான் நியுயார்க்கிலிருந்து வந்திருக்கிறேன். தங்களுடைய சிநேகிதனை வென்ட்வொர்த்தின் நெருங்கிய தாயாதி. மிஸ்டர் விஸ்வம் – க்ஷேமந்தானே?(அவன் கையைப்பற்றி குலுக்குகிறான்), மிஸ்டர் வென்ட்வொர்த் என்னை முன்பாக அனுப்பினர்.
வி. ஏன்?- வென்ட்வொர்த் தானாக ஏன் வரவில்லை ?
கி. அதை உமக்குக் கூறவே என்னை முன்பு அனுப்பினார் – இங்கு நாம் – தாராளமாய்ப் பேசலாமா ?
வி. தாராளமாய்.
கி. வென்ட்வொர்த்தும்-நானும்-இன்னும் இரண்டுபெயரும்-மிகுந்த வேகமாய்ச் செல்லக்கூடிய ஒரு எய்ரோ பிளேனில் வந்துகொண்டு இருந்தோம். – வரும் வழியில்-போர்ட்செய்ட் அருகில் பாழாய்ப்போன ஜெர்மன் பிளேன் எங்களே எதிர்த்தது. இந்த கேடுகெட்ட பாவிகளுக்கு நாங்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறோமென்று எப்படி தெரிந்ததோ அது ஈஸ்வரனுக்குத் தான் தெரியும். – எங்கள் விமானம் சேதப்பட்டது வென்ட்வொர்த்துக்கு – காயம்பட்டது மார்பில் – தெய்வாதீனமாய் ஹீருதயத்தில் காயம் படவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்யப்படுகிறார் – டாக்டர் படுக்கையை விட்டு அசையக் கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறார் – நீங்கள் ஒன்றும் பயப்படாதீர்கள் – ஒரு வாரத்திற்கெல்லாம் அவர் ஸ்வஸ்தமாய் விடுவார் – ஆகவே அவர் என்னை முன்பு அனுப்பினார் – உங்களைப் பார்க்கும்படி – நீங்கள் புதிதாய்க் கண்டு பிடித்திருக்கும் இரக்சியத்தைப் பற்றி
வி. அதைப் பற்றி -அவரிடமின்றி – வேறொருவரிடமும் தான் பேசுவதற்கில்லை – அதுவும்
கி. பயப்படாதீர்கள் – நான் அவருடைய பந்து தாயார் பக்கம்-அமெரிக்காவில் இரகசிய ராணுவத் தொழிலைச் சேர்ந்தவன் நான் (வெளியில் தூரத்திலிருந்து ஒரு விசில் (Whistle) சப்தம் கேட்கிறது)-இதோ அவருடைய கடிதமும்-உங்களுக்குக் கொடுக்கும்படி சொன்னது இருக்கிறது-அதில் நீங்கள் என்னை பூரணமாய் நம்பலாமென்றிருப்பதைக் காண்பீர்கள் – இவ் விஷயத்தில் நாம் காலஹரணம் செய்வதற்கில்லை – (தன் இரு கைகளையும் தன் கோட்டின் பைகளுக்குள் நுழைத்து ஒன்றிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக்கொடுக்கிறான் – தன் இடதுகையால்; விஸ்வநாதன் அதைப் பிரிக்கிறான்)
வி. இது வென்ட்வொர்க் கையெழுத்தல்லவே !
கி. (மற்றொரு கையால், ஒரு கைத் துப்பாக்கியை திடீரென்று வெளியில் எடுத்து) தூக்கு கைகளை உயர ! இல்லாவிட்டால் நான் சுடுவேன்! (விஸ்வநாதன் தன் இரு கரங்களையும் உயரத் தூக்குகிறான்) அதுதான் சரி !- இப்பொழுது நான் சொல்வதைக் கேள் – ஏதாவது கூச்சல் கீச்சல் போட்டாயோ உடனே என் துப்பாக்கியால் சுட்டு உன் மூளையைச் சிதறடிப்தேன்!
(ஹர்மன் ஆங்கில ராணுவ உடையில் வருகிறான்)
நாஜிகளின் வழக்கப்படி கில்லிங்காமை வணங்குகிறான்.
ஹ. உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டன.
கி. எல்லாம் சரியாகிவிட்டதா ?
ஹ. நிரம்ப சரி.
கி. இப்பொழுது இந்த பெரிய மனிதரின் கைகளிரண்டையும் அவரிருக்கும் நாற்காலியில் சேர்த்துக் கட்டு -அவருக்கு நோகாதிருக்கும்படி !- (ஹர்மன் அப்படியே செய்கிறான்) இனி எமது கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தை சீக்கிரம் முடிப்போம் – இதோ கவனி – விஸ்வம் – நான் சுருக்கமாய்ச் சொல்கிறேன். ஐந்து நிமிஷத்தில் நீ கண்டுபிடித்திருக்கும் இந்த ரகசியத்தை என்னிடம் சொல். – ஒன்றும் ஒளியாமல் – இப்படிச் செய்தால், உன் உயிரையும் காப்பாற்றுவேன் – உன்னையும் ஒரு பெரிய பணக்காரனுக்குவேன் – நீ தற்காலம் மிகவும் கடன் பட்டிருக்கிறாய், எனக்குத் தெரியும் – இந்த கடினம் – இவ்விடமே, உனக்கு
லட்சம் பொன் தருகிறேன், எல்லாம் பொன் நாணயமாக !- காகித நோட்டுகளல்ல – அந்த ரகசியத்தைச் சொல்லாவிட்டால் – உன்னை உடனே சுட்டுக்கொல்வேன் – உனக்கு இரண்டு நிமிஷங்கள் கொடுக்கிறேன் – உனக்கு இஷ்டமானதைச் செய்.
வி. எனக்கு-இரண்டு-நிமிஷங்கள் வேண்டாம்.
கி. அதுதான் சரி! – சொல்லிக்கொண்டு போ! – (ஜோபியிலிருந்து ஒரு நோட் புஸ்தகத்தையும் பென்சிலையும் எடுக்கிறான்).
வி. நான் வேண்டுவதெல்லாம் – சில வினாடிகள் தான் என்னைச் சுட்டுக்கொல் ?
கி. என்ன ! நீ எனக்கு-இதை சொல்லப்போகிறாயென்றல்லவோ பார்த்தேன்!
வி. ஒருபோது மில்லே !
கி. (ஏளனமாய் நகைத்து) ஹீம்! உனக்கு கொஞ்சம் தைரிய மிருக்கிறது! – இந்தியர்கள் முக்கியமாக தென் இந்தியாவிலுள்ளவர்களே – பயங்காளிகள் என்று சொன்னார்களே, எனக்கு!
வி. சொன்னவன் மடையன் – பொய் சொன்னான்!- உன் வேலையை சீக்கிரம் முடி.
கி. விஸ்வம்-பயித்தியக்காரனாயிராதே! நான் சொன்னபடி செய்து தீருவேன் – முதல் முறை உன்னைக் கேட்கிறேன்-சொல்கிறாயா ? மாட்டாயா ?
வி. நான் உனக்கு பதில் சொல்கிறேன். முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை நான் சொல்ல மாட்டேன் – சுட்டுத் தள்ளிவிடு என்னை உடனே !
கி. உம் – இருக்கட்டும் – இந்த விதத்தில் நீ வழிக்கு வர மாட்டாய் ! எங்களுடைய கெஸ்டபோ போலீஸ் உனக்கு என்ன செய்வார்கள் என்பதை நீ அறியாய்! உன்னை நான் சுடப்போகிறதில்லை.
வி. நீ சொன்னபடி செய்கிற மனிதன் என்று சற்று முன்பாகக் கூறினாயே!
கி. (தன் இடது கரத்தால் அவன் வாயில் அறைந்து) வாங்கிக்கொள் இதை! அதநப்பிரசங்கி !
வி. ஆம் – நான் வாங்கிக்கொள்ள வேண்டியது தான் ஒரு பயங்காளி யிடமிருந்து !
கி. என்ன சொன்னாய் ! (கைத் துப்பாக்கியை உயர்த்தி)
வி. சரி !-சுடு – சீக்கிரம் !
கி. அவ்வளவு அவசரம் வேண்டாம் அப்பா! அந்த இரகசியத்தை உன்னிடமிருந்து வரவழைக்கும் விதம் எங்களுக்குத் தெரியும். ஹெர்மன், அவன் வாயை அடைத்து அந்த மூலையில் கொண்டுபோய் வை.
வி. ஒரு நிமிஷம்-உன்னிடம் மனித சுபாவ மென்பதிருந்தால் – நான் என் தாய் தந்தையர், மனைவி, மகன் இடமிருந்து விடைபெற, எனக்கு உத்திரவு கொடு.
கி. அப்படியே செய்கிறேன் – உன் இரகசியத்தை நீ வெளியிடுவதாக எனக்கு வாக்களிப்பாயானால்.
வி. உம்-உன்னிச்சைப்படி செய் – நான் அவர்களைப் பார்க்க விரும்பவில்லை.
கி. ஹெர்மன் உன் வேலையைப் பார் (ஹெர்மன் விஸ்வ நாதத்தின் வாயைத் துணியால் அடைக்க பிரயத்தனிக்கிறான்).
வி. ஒரு வினாடி – அந்த புஸ்தகத்தை என்னுடன் கொண்டுபோக உத்திரவு கொடு.
கி. அது என்ன புஸ்தகம் ? – என்னை ஏதாவது மோசம் செய்யப் பார்க்காதே !
வி. அதை யெல்லாம் உனக்கும் உன் இனத்தாருக்கும் விடுகிறேன். அது எங்கள் பகவத்கீதை. நீ வருமுன் அதை நான் படித்துக்கொண்டிருந்தேன். நான் சாகு முன் அதை முற்றிலும் படித்து முடிக்க விரும்புகிறேன்.
கி. அவ்வளவு சீக்கிரமாக நீ சாவதற்கு நாங்கள் இடங் கொடுக்க மாட்டோம், அப்பா பிள்ளையாண்டான் !- அந்த புஸ்தகத்தை நான் பார்க்கட்டும். (அந்த புஸ்த-கத்தை எடுத்துப் பார்த்து) தி-பக-வாட்-கிடா! – சரிதான் – இதை உன் ஜேபியில் போடுகிறேன். ஹெர்மன், அந்த நாற்காலியை விட்டு அவனே அவிழ்த்து விடு. முதலில் அவன் வாயை அடைத்து விடு – பிறகு இவனை எனக்கு முன்பாக நமது காருக்கு அழைத்துச் செல்.
(ஹெர்மன் அப்படியே செய்கிறான் கில்லிங்காம் அவர்களைப் பின் தொடர்கிறான்)
காட்சி முடிகிறது.



