காளி
ந. பிச்சமூர்த்தி

அங்கம் 1

காட்சி 1


இடம் : சுடுகாட்டின் வெளிப்பக்கம்.

காளிதாசன் : வீரா, இங்கு வசிப்பதில் உனக்குப் பயம் திதில் ஒன்றும் இல்லையா?

வீரன் : என்ன பயமுங்க? பழக்கந்தான்; போணவாடை ஊறிப்போச்சு.

காளிதாசன் : குழந்தைகள், பெண்சாதி – இவர்களுக்கு?

வீரன் : அவுங்களுக்குந்தான். அந்தாலே பய கறுப்பனைப் பாருங்க; பொரியை அள்ளிக்கிட்டு. மீன் குட்டி தண்ணீலே முழுகிப்போமா?

காளிதாசன் : ஏண்டா, ஒவ்வொரு நாளும் கிழவர்களும் சிறுவர்களும் இளைஞர்களும் சிதைக்கு வந்து சேருகிறார்களே; எப்பொழுதாவது உன் கண்ணில் தண்ணீர் வந்திருக்கிறதா?

வீரன் : ஆத்திலேதான் வருமுங்க. அழுதா என்ன பொரயோசனம்? வேலைதான் கெட்டுப்போவும். ஒரு பொணம் எரிஞ்சு போனா இன்னும் ஒண்ணுக்கு எடமாச்சு. அப்படியேதானுங்க உசிரும். ஒண்ணு போனா இன்னொண்ணு பொறக்குது. இதுக்காக அழுவானேன்? சாஸ்திரத்திலே கூடத் திரும்பித் திரும்பி வரோமுன்னு எங்க வள்ளுவரு படிச்சாரு. அந்தத் தைரியந்தானுங்க.

காளிதாசன் : எனக்கென்னவோ, அப்பா, இங்கே வந்தாலே பயமாய் இருக்கிறது. உயிர் போகிறது.

வீரன் : பாப்பார்மாருங்களுக்கெல்லாமே சாவரத்துக்குப்  பயந்தானுங்க. இல்லாட்டிக் கொட்டு, முழக்கு, செலம்பம் இதெல்லாம் செத்தப்போ வெக்க மாட்டாங்களா? வேதமுனு படிச்சா மாத்திரம் போதாதுங்க. சிங்கம் மாதிரி தைரியம் வேணும். தெக்குத்தியான் வந்து இப்போ என்னைக் கூப்பிட்டாக் கூடத் தயார். எதோ சூரியபகவான் சாச்சியாக் காலத்தையும் காரியத்தையும் தள்றேனுங்க. அவ்வளவுதான்.

காளிதாசன் : (தனக்குள்) ஆஹா! என்ன நெஞ்சத் தெளிவு இந்தப் பறையனுக்கு (திரும்புகிறான்.)

வீரன் : ஐயா! ஐயா! இந்தாலே பாருங்க. ஓரணா எறிஞ்சூட்டுப் போறாரு, சாஸ்திரியாரு. எனக்கு நாலணா வழக்கமுங்க.

காளிதாசன் : கொடுக்கச் சொல்லுகிறேன். வாங்கிக் கொள்.

[ திரை ]

காட்சி 2

இடம் : காளிதாசன் வீடு.

காளிதாசன் : எங்கே உச்சி வெயிலில் இரண்டு நாளாய்ப் போய்வருகிறாய்?

சாவித்திரி : தெரியாதா உங்களுக்கு? ஊர் அமர்க் களப்படுகிறதே.

காளிதாசன் : ஏதாவது புதிசாக் கல்சட்டிக் கடை வந்திருக்கிறதா என்ன?

சாவித்திரி : பரிகாசம் வேண்டாம். மாந்தோப்பில் ஒரு பெரியவர் வந்திருக்கிறார்; சித்த புருஷர்; பரம ஹம்ஸர். அவர் அனுக்கிரகம் செய்தால் கோரினது கிடைக்கிறது. அவரைப் பார்க்கப் போய் வருகிறேன்.

காளிதாசன் : கல்சட்டிக் கடை இல்லை; சித்தர் கடை ! உலகத்தில் எவ்வளவு ஆண்டிப் பயல்கள் ! பணம் பிடுங்கும் விதம் எவ்வளவு ! இப்படித்தான் நானும் நினைத்துப் பலருக்கு மரியாதை செலுத்தி நெருங்கிப் பழகினேன். போதும் போதும் என்றாகிவிட்டது. சரக்கில்லாத சோம்பேறிகள் !

சாவித்திரி : அப்படி யெல்லாம் பெரியவர்களைப் பழிக்கக்கூடாது. பெரும் பாவம் ! அதிலும் இவர் நெருப்புத் துண்டு. ஒரு பிசகும் சொல்ல முடியாது. மருந்துச் செலவுக்கென்றுகூடக் காலணா வாங்குவ தில்லை.

காளிதாசன் : ஓஹோ, இந்தத் தினுஸா ! பணம் என்றால் பாம்பு போலிருக்கும். நெய்யில் பக்குவம் செய்த பக்ஷணம் என்றால் வேம்பாயிருக்கும். அப்படித் தானே?

சாவித்திரி : யார் எப்படி இருந்திருந்தாலும் இவரைப் பற்றிப் புரளி செய்ய முடியாது. இவர் உண்மையில் பெரியவர். மூன்று நாளாய் மாத்தூரிலிருந்து வண்டியும் கையுமாய் அண்ணன் தம்பி இரண்டு லக்ஷாதிபதிகள் வந்து காத்துக்கிடக்கிறார்கள். உத்தரவுப்படி பணத்தை வாரி இறைக்கிறேன் என்கிறார்கள். அங்கே இருந்தபொழுது அண்ணன் சம்சாரத்துக்குத் தீராத குன்ம வியாதியைத் தீர்த்து வைத்தாராம். பிறகு சொல்லாமல் இவர் இந்த ஊருக்கு வந்துவிட்டார். அண்ணனும் தம்பியுமாய்த் தேடிக் கொண்டு இங்கே வந்திருக்கிறார்கள். “போடா பணப் பிசாசுகளா !” என்று இவர் திட்டுகிறார். இப்பேர்ப்பட்டவரைப் பழிக்கக் கூடாது.

காளிதாசன் : ஊர்க் கதையை அல்லவா சொல்லுகிறாய்? உங்கள் பெரியவர்கள் சமாசாரமெல்லாம் எனக்குத் தெரியாதா? எவ்வளவு பணத்தை வாரிக் கொட்டி அவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். என்ன பிரயோசனம்? என் சஞ்சலத்தைத் தீர்க்க ஓர் ஆள் கிடைக்கவில்லை. சந்நியாசிகளுக்கு விருந்தைத் தவிர அனுபவமாக வேறு ஏதாகிலும் தெரிந்தால்தானே! ஆதிசங்கரர் சொன்னதுபோல் ‘உதர நிமித்தம் பகுகிருத வேஷம்’. வயிற்றுக்காகச் சாமியார் வேஷம் !

சாவித்திரி : நான் சொல்வதை நம்பாவிட்டால்

காளிதாசன் : அது இருக்கட்டும். இவரைப்பற்றி நேரில் என்ன தெரிந்துகொண்டாய்? ஏதேனும் இருந்தால் சொல்லு. இல்லாவிட்டால் அடுப்பை மூட்டி, ஏதாவது செய், போ.

சாவித்திரி : திருநெல்வேலி லக்ஷ்மிக்குத் தீராத சோகையாய் இருந்ததோ இல்லையோ?

காளிதாசன் : என் மாமா பேத்திதானே? தெரியும்.

சாவித்திரி : அவளைப் பார்த்துவிட்டு வாருங்கள்.

காளிதாசன் : விஷயத்தைச் சொல்லு; பிறகு பார்க்கிறேன்.

சாவித்திரி : அவளுடைய கன்னம் இப்பொழுது ரோஜாப்பூ மாதிரி ஆகிவிட்டது. அவள் உடம்பு மாந்தளிர் மாதிரி ஆகிவிட்டது. மூன்று வேளை விபூதியின் வேலை !

காளிதாசன் : மயக்கத்தில் பல விதம் உண்டு: தலை மயக்கம், கண் மயக்கம், புத்தி மயக்கம். உனக்குக் கண் மயக்கம்.

சாவித்திரி : என்னை எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்கள் புத்தி மயக்கத்துக்கு இவரைக் கேட்டுப் பாருங்களேன். அறுபது நாழிகையும் மனசு, மனசு என்று ஏதோ வேதனைப்படுகிறீர்களே ! அது தீர்ந்து போகும். நான் சொல்லி விட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்.

காளிதாசன் : முதலில் திருநெல்வேலி லக்ஷ்மியைப் பார்த்துவிட்டு வருகிறேன்.

[ திரை ]

காட்சி 3

இடம் : பெரிய மாந்தோப்பு ; நடுவில் பரமஹம்ஸர் குடிசை.

காளிதாசன் : பத்து நாளாக ஒன்று கேட்க வேண்டுமென்று நினைக்கிறேன். பேச்சுப்பராக்கில் மறந்துவிடுகிறேன்.

பரமஹம்ஸர் : எதைப்பற்றி, காளி?

காளிதாசன் : அதுதான் சுவாமி, காளி என்று கூப்பிடுவது எனக்குப் பிடிக்கவில்லை. பெற்றோர்கள் எனக்குக் காளிதாசன் என்று பெயர் வைத்ததே பிசகு. அதையும் சுருக்கிக் காளி என்றால் –

பரமஹம்ஸர் : அதில் என்ன கஷ்டம்?

காளிதாசன் : கஷ்டம் என்னவா? கணக்கெடுக்க முடிந்தால் சுலபமாய்ச் சொல்லிவிடலாம். காளி என்பது ஒரு குரூரக் கற்பனை. சாவின் புகழ். அப்பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளம் நடுங்குகிறது; உலகம் நடுங்குகிறது. துன்பத்தைத் தெய்வமாக்கி, காளி என்று பெயர் வைத்தானே, அவன் முதல் மூடன்; முழு மூடன் ! ஆனந்தமென்பதுதான் பேருண்மை. காளி என்பது அறிஞன் இகழ வேண்டிய தரிசனம். அதனால்தான் காளி என்றால் எனக்குப் பிடிக்கவில்லை.

பரமஹம்ஸர் : (பரிகாசமாய்)ஏ அப்பா ! வேதாந்தம் கரை புரள்கிறதே !

காளிதாசன் : சந்தேகம் என்ன? அந்த வார்த்தையைக் கேட்டதும், பூ நிலவு போர்த்த நள்ளிரவில் பெரு நெருப்புப் பிடித்து எரிவது போல், சிவன் மார்பில் காலூன்றி, சுடுகாட்டில் திமி திமி என்று ஆடும் காளி ரூபம் என் கண்முன் எழுகிறது. எனக்குப் பயமுண்டாகி வேர்க்கிறது. குடல் நடுங்குகிறது.

பரமஹம்ஸர் : அது ரொம்ப நல்ல குறியாய்த் தோன்றுகிறதே.

காளிதாசன் : வேண்டாம், அந்தமாதிரி நல்ல குறி; எனக்கு வேண்டாம்; உலகத்திற்கும் வேண்டாம். உயிர்ப் பலி கேட்கும் சாமி ஒரு சாமியா? சாராயமும் மாமிசமும் கேட்குமா, ஒரு சாமியின் நாக்கும் ரத்தவெறி கொண்ட கப்பறையும்? சை! கொடுமையும் வலிமையும் நமக்கு வேதனையாயிருக்க, காளிக்குக் கோயிலாம், பூஜையாம்! நமக்குத் தேவை சாந்தமும் இன்பமும் அழகும்.

பரமஹம்ஸர் : வாஸ்தவம். வார்த்தைக்குப் பயந்தவனா மனத்தை வெல்லப் போகிறான்? சாந்தத்தை அடையப் போகிறான் ?

காளிதாசன் : அதிருக்கட்டும். நமக்கெல்லாம் இந்தத் தெய்வத்தை எடுக்கவில்லையாமே; கீழ் ஜாதியார்களுக்குத் தானாமே?

பரமஹம்ஸர் : (இரக்கத்துடன்) அப்பா காளிதாசா, நல்லது சொல்லுகிறேன், கேள். நீ ஏதேதோ உளறுகிறாய். இன்றுடன் உன் மூட எண்ணங்களை விட்டு விடு. பயம் இருக்கும் வரையில் ஞானியாக மாட்டாய். சாந்தத்தைப் பெற மாட்டாய். கண்ணை மூடு; காளியைக் காட்டுகிறேன்.

(காளிதாசன் கண்ணை மூடுகிறான். பரமஹம்ஸர் அவனுடைய புருவ மையத்தைக் கையால் அழுத்துகிறார்.)

பரமஹம்ஸர் : காளிதாசா, கண்ணைத் திற.

(காளிதாசன் கண்முன் ஒரு பிரஸவ அறை தெரிகிறது. பின்வரும் பேச்சும் கேட்கிறது.)

பெண் : பாட்டி, தாங்கவில்லை. ஒவ்வொரு வலிக்கும் உயிர் போகிறது. இந்த இழவே வேண்டாம்.

பாட்டி : சை! அபசகுனமே! சும்மா இரு. அப்படித்தான் இருக்கும். தங்க விக்கிரகம் போல் குழந்தையைப் பார்த்தால் வருத்தமெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடும். நீ என்ன அதிசயமா?

பெண் : எப்பொழுதும் போல் இப்பொழுதில்லை, பாட்டி. ஒவ்வொரு நரம்பும் எலும்பும் உருகுகிறது. இந்தத் தடவை பிழைக்க மாட்டேன். நான் போய் விட்டால் குழந்தையைப் பார்த்துக்கொள். தாயில்லாக் குழந்தை, பாவம் !

பாட்டி : உளறாதே. சும்மா கிட.பெண் ஜன் மத்திற்குப் பொறுமை இல்லாவிட்டால்

பெண் : உனக்குத் தெரியாது. இந்தத் தடவை அப்படித் தோன்றுகிறது. குழந்தையைப் பார்த்துக் கொள்…அப்பா! அம்மாடி!……

(குவா, குவா குழந்தைக் குரல்.)

பாட்டி : அம்பிப் பாப்பாவா? போகிறது.

பெண் : பாட்டி! இதோ கிளி போகிறது. தெற்கே பார் நிழல். அதோ… இதோ… குழந்தையை (குழந்தையை முத்தமிட்ட வண்ணமே தரையில் சாய்கிறாள்.)

(பிரஸவ அறை மறைகிறது. காளிதாசன் தலையில் பரமஹம்ஸர் தட்டுகிறார்.)

பரமஹம்ஸர் : காளிதாசா, என்னைப்பார். என்ன பார்த்தாய்?

காளிதாசன் : பலி.

பரமஹம்ஸர் : அதுதான் ரகஸியம். அதுதான் காளி. காளியில் பிறப்பது களிப்பு. துயரத்தில் தோன்றுவது தூய்மை. தியாகத்தில் தோன்றுவது குழந்தை. இவ்வளவும் காளிதான்.

காளிதாசன் : (தலையை ஆட்டிக்கொண்டு) கொஞ்சம் தெளிவு உண்டாகிறது.

பரமஹம்ஸர் : இப்பொழுதும் கொஞ்சந்தானா ?…சரி, மறுபடியும் பார் !

(பரமஹம்ஸர் காளிதாசன் கண்ணைத் துடைக்கிறார். அவன் மெய்ம்மறந்து பேசுகிறான்.)

காளிதாசன் : ஒளி மங்கிய காலை. ஒரே மண், கல், பாறை – அடாடா ! அவையும் மறைந்துவிட்டன. இப்பொழுது காடு. பெருமரங்களின் நிழலில் சிறு செடிகள், மரங்கள்.

பரமஹம்ஸர் : இன்னும் என்ன?

காளிதாசன் : பெரிய பெரிய புழுக்கள், விகாரமான பக்ஷிகள், பூதம் போன்ற மிருகங்கள் ! நிலத்திலும் நீரிலும் சஞ்சரிக்கின்றன. வாழ்வுப் போர் தொடுத்தும் தொடுக்காமலும், போரிலும் தாமாகவும் மடிகின்றன. வெகு சிலவே மிஞ்சுகின்றன.

பரமஹம்ஸர் : உம்?

காளிதாசன் : ஆஹா! என்ன அழகு, வலிமை! உணவுக்கும் நிழலுக்கும் எப்படி மன்றாடுகின்றன காற்றிலும் வெயிலிலும், மழையிலும் குளிரிலும் எப்படித் தவிக்கின்றன ! பலமுள்ளவை பிழைக்கின்றன; பலமற்றவை சாகின்றன. பலமுள்ள இனங்கள் எவ்வளவு வனப்புள்ளனவாய் இருக்கின்றன. ஆஹா! என்ன காட்சி !

பரமஹம்ஸர் : பார்த்தாயா? இனிப் பஞ்சை அழகையும், போலி அமைதியையும் பூஞ்சொல்லால் போற்றாதே. காளியே வாழ்வு. பயத்தைக் கொல்லவே காளிக்குக் கத்தி. சாவு என்பது ஒரு ஸ்நானத்தைப் போல; அழுக்குத் தேய்த்துக் குளிப்பதைப் போல. அழுக்குப் போவது போன்றதுதான் உடம்பு போவதும். தனி ஆள், தனி மரம், தனி விலங்கு – இவ்வளவுக்கும் பயம் உண்டு. இனம் என்று கருதினால் பயம் சாகும். உயிர் ஒன்றென நினைத்தல் இன்பம். உயிர் அழிவதில்லை. இனமும் அழிவதில்லை. உயிர் உயிரைத் தின்றே வளரும். இவ்வளவும் காளி. வெல்க காளி என்று எழுந்திரு.

காளிதாசன் : (காட்சி மறைகிறது. சுய நினைவடைந்து) இதென்ன, குருடனுக்குக் கண் வந்தது போல்  உலகே புதுமையாய்த் தென்படுகிறதே! இன்பம் பொங்குகிறதே! குருவே,வணக்கம்.

(காளிதாசன் நமஸ்கரிக்கிறான்.)

பரமஹம்ஸர் : காளியின் காட்சி கிட்டியது. அவள் எழுச்சி. குரு நானல்ல; அவள் தான். அவளை நினைத்தாலும் மறந்தாலும், ஏற்றாலும் மறுத்தாலும் அவளே உண்மை ; ஜகத்தை ஓட்டும் மூலசக்தி. “வெல்க காளி !” என்று சொல்லு.

காளிதாசன் : வெல்க காளி !

[திரை]

காட்சி 4

இடம் : காளிதாசன் வீட்டுக் கொல்லைப்புறத்துப் புஷ்பத் தோட்டம்.

(காளிதாசன் புஷ்பம் பறிக்க ஒரு நந்தியாவட்டைச் செடியண்டை போகிறான்.)

நந்தியாவட்டைச் செடி : காளிதாசா!

காளிதாசன் : (திடுக்கிட்டு) யார் அது?{

நந்தியாவட்டைச் செடி : நான்தான்.

காளிதாசன் : (கண்ணைத் தேய்த்துக்கொண்டு தனக்குத் தானே) இதென்ன அதிசயம்! இராத் தூக்கம் இல்லாததனால் மயக்கமா?

நந்தியாவட்டைச் செடி : காளிதாசா, கிட்ட வராதே. கண்ணைப் பிடுங்காதே. என் புஷ்பத்தைப் பறித்து உன் விக் கிரகத்தின் தலையில் போடப்போகிறாயே; அதில் உனக்கு என்ன புண்ணியம்? எனக்கும் உயிருண்டு, உணர்ச்சி உண்டு. செடிகள் பேசுவதில்லையே, ஆகையால் உயிர் இல்லை என்று கருதிவிடாதே. உயிரை வதைத்து, மாமிசம் உண்ணுகிறான். என்று இகழ்கிறாயே. என்னை மட்டும் வதைக்கலாமா?

காளிதாசன் : இதென்ன வேடிக்கையாய் இருக்கிறதே!

நந்தியாவட்டைச் செடி : வேடிக்கையா வினையா? பரமஹம்ஸரிடம் பாடம் கற்றதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா?

காளிதாசன் : (ஞாபகம் வந்தது போன்ற முகபாவத்துடன்) மன்னிக்கவேண்டும். சொல்வது புரிகிறது.

நந்தியாவட்டைச் செடி : தியாகமென்பது தான் வேதம், மந்திரம் எல்லாம். நெற்பயிர் தொண்டையைக் கிழித்துக் கொண்டு, சடை சடையாய்க் கதிர் விட்டால் நீங்கள் தின்கிறீர்கள். நான் பூத்தால் நீ பறிக்க வருகிறாய். உங்கள் பங்குக்குச் செய்வதென்ன? சொல்லு. எல்லாவற்றையும் கொன்று அழித்துச் சுகமாய் வாழப் பார்க்கிறீர்கள், அவ்வளவுதான். தியாகமென்னும் உண்மையானது உள்ளத்தில், உயிரில், செய்கையில் தழைக்க வேண்டும். தழைக்கும்படி நடப்பாயா? இன்று முதல் புல்லிலிருந்து நக்ஷத்திரங்கள் வரையில் உன் செய்கையைக் கவனிக்கும். மோசம் போகாதே.

காளிதாசன் : (அமைதியாய்) மன்னிக்க வேண்டும். உனக்கு நமஸ்காரம். உயிர் நதிக்கும் நமஸ்காரம். இனி, பூவும் பூஜையும் இல்லை.

(பூவைப் பறிக்காமல் திரும்பிவிடுகிறான்.)

[ திரை ]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !