காளி
ந. பிச்சமூர்த்தி

 அங்கம் 2

காட்சி 1

இடம் : ஊர்ச்சாவடி.

அண்ணு சாஸ்திரி : கேள்விப்பட்டீர்களா? ஓர் ஊரில் மலை நகர்ந்துகொண்டே இருக்கிறதாம். அந்த ஊரின் ஜனங்கள் கதி என்ன ஆகுமோ?

ராஜா பாகவதர் : நான் கேள்விப்படவில்லை, தோ பிரம்மாண்டமான நக்ஷத்திரம் விழப்போகிற தென்று பேப்பரில் போட்டிருக்காம்.

அண்ணு சாஸ்திரி : இதுவுந்தான் பேப்பரில் போட்டிருக் காம்.

ராஜா : எது நிஜமோ, தெரியவில்லை.

மூர்த்தி : ஒரு பெரிய எரிமலை நெருப்புக் கக்கப் போகிறதென்று பத்திரிகையில் சொல்லியிருக்கிறது. ஒரு நக்ஷத்திரம் விழப்போகிறதென்றும் சொல்லி யிருக்கிறது. ஒரு மலை நகர்வதாகவும் சொல்லி இருக் கிறது. இதற்கெல்லாம் மேலாக உலசமே அழியப் போகிறதென்றும் சொல்லியிருக்கிறது!

ராஜா : என்ன செய்யலாம்?

அண்ணு சாஸ்திரி : பிரளயம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட் டிருக்கிறது; அதைப் பார்த்தால் போச்சு.

ராஜா : தேளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. பிரளயத்தைக் குளுமையாய்ப் பார்த்து விட மாட்டோமா?…. அப்படி எல்லாம் விடக்கூடாது. எப்படியாவது அவற்றைத் தடுக்க வேண்டும்.

அண்ணு சாஸ்திரி : அதென்னவோ வாஸ்தவந்தான். நமது உயிருக்கு என்ன பயம்? நாம் அழிவதில்லை. உலகம் அரைகுறையாய் அல்லவா கெட்டுவிடும்? மறுபடி ஜன்மம் எடுத்து நாம்தானே கஷ்டப்பட வேண்டிவரும்? ஒன்றுமில்லை, போன மாசம் இருபது வாழைக்கட்டை போட்டேன். மூர்த்தி ஏதோ வருகிறதென்று சொன்னானே, அது வந்தால்கூட-

ராஜா : கூண்டோடு கைலாசந்தான்.

அண்ணு சாஸ்திரி : அதெல்லாம் போகட்டும். நேற்று நாணு சாஸ்திரி செய்த அக்கிரமத்தைக் கேட்டீர் களோ?

ராஜா : அதென்னது?

அண்ணு சாஸ்திரி : நடுத்தெரு உமாமகேச்வர விரதத்திலே – அது பிறகு சொல்கிறேன். தம்பியும் பரமஹம்ஸரும் வருகிறார்கள்.

ராஜா : (திடுக்கிட்டு) உம்முடைய தம்பியும் பரமஹம்ஸருமா? வரட்டும்…ஆனால் ஒன்று. உம்முடைய தம்பியைப் பார்த்தாலே வரவரத் தமாஷாய் இருக்கிறது.

அண்ணு சாஸ்திரி : ஏன்?

(ராஜா பாகவதர் பதில் சொல்வதற்குள் பரமஹம்ஸரும் காளிதாசனும் அங்கே வருகிறார்கள். பரமஹம்ஸரை எல்லோரும் வணங்குகிறார்கள்.)

பரமஹம்ஸர் : நாராயண, நாராயண ! சௌக்கியமா? எல்லோரும்: சௌக்கியந்தான்.

பரமஹம்ஸர் : பேச்சுப் பலமாக இருந்ததே; என்ன விஷயம்?

ராஜா : ஒன்றும் இல்லை. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் பூமிக்குப் பெரிய ஆபத்து வரப்போகிறதாம். பூகம்பம் என்று அமெரிக்காக்காரன் சொல்லுகிறான். இல்லை, நக்ஷத்திரந்தான் விழப்போகிற தென்று ஒரு ஜர்மானியன் சொல்லுகிறானாம். ஆனால் உலகம் மட்டும் அழிந்துபோவது நிச்சயமென்று தீர்மானமாய்ச் சொல்லுகிறார்களாம். அதைப்பற்றித் தான் பேசினோம்.

பரமஹம்ஸர் : அதைப்பற்றி நமக்கு என்ன?

அண்ணு சாஸ்திரி : அப்படியெல்லாம் ஆகலாமா? அதைத் தடுக்கக் காளி தந்திரத்திலோ அல்லது அதர்வணவேதத்திலோ ஏதேனும் பிரயோகம், ஹோமம் இருந்தால் அதைச் செய்து பார்த்துவிட வேண்டியது தான். உங்களைக் கேட்டால் தெரியுமென்று பார்த்தேன். நமது கடமையைச் செய்து விடவேண்டும். பிறகு ஈசன் விட்ட வழி.

ராஜா : உலகெலாம் இன்புற்றிருக்க

பரமஹம்ஸர் : நியாயந்தானே? உலகத்திற்கு எது நல்லதோ அது உங்களுக்கும் நல்லது. வைதிகம் பலப்படு மல்லவா? இப்படித் துரும்பாகி விட்டதே புத்தி-

ராஜா : சுவாமிகளே, நீங்கள் சொல்வது சரிதான். என்ன இருந்தாலும் பிரளயத்தைப் பற்றி நினைத்துக் கொண்டாலே திகிலாகத்தான் இருக்கிறது.

பரமஹம்ஸர் : காளிதாசா, இவர்களுக்குச் சமாதானம் சொல்லேன். ஆரம்பத்தில் இப்படித்தானே நீயும் ஏதோ உளறிக்கொண்டிருந்தாய்?

காளிதாசன் : பத்திரிகைகளில் வருவதெல்லாம் சத்தியம் என்று நினைத்து விடக்கூடாது. நக்ஷத்திரம் இப் பொழுதெல்லாம் நிச்சயமாய் விழாது. ஏனென்றால் இதேமாதிரி ஐம்பது தடவையாவது பத்திரிகைகளில் விழுந்திருக்கிறது. நம்முடைய பூமி இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அண்ணு சாஸ்திரி : பூ ! இவ்வளவுதான! இந்த மூர்த்தி ‘என்னவோ மேல்நாட்டு விஞ்ஞானி சொன்னால் தப்பாதென்று குதிக்கிறானே.

காளிதாசன் : அப்படி நிஜமாக நடந்துவிட்டால்தான் என்ன மோசம்? புது அண்டம், புதுப் பூமி, புது மனிதன், எல்லாம் புதிதாகி விடுகின்றன! அல்லது பெரிய பூகம்பம் வந்தால்தான் என்ன? நம்முடைய உழக்குக் கணக்கைக் கொண்டு போய் அகண்ட அமைப்பை அளக்க முடியாது. ஹிம்சை,வலி, துயரம் – இவைகளில் எது வந்தாலும் புதுப் பிறப்பு, புது மாறுதல் ஏதேனும் உண்டாகும். பூகம்பத்தால் ஒரு புறத்தில் பூமி அழிந்தால், கடலில் எங்கேயாவது தீவு பிறப்பதன் பிரசவ வேதனை அது. தெரியுமா? அகண்ட சக்தியின் தாக்குதலை இயற்கையில் காணக் கண் வேண்டும். அப்பொழுது பயம் என்பதே தெரியாது.

ராஜா : கஷ்டம் வந்தால் நீ சிரிப்பாய்? ஆகையினால்

காளிதாசன் : சந்தேகம் என்ன? வெளிச்சம் வேண்டும் என்றால் நிழல் வராமலிருக்குமா? ஜீவனாயிருக்கும் வரையில் இரண்டும் உண்டு; ஹிருதயமும் நுரை ஈரலும் போல, துன்பமும் இன்பமும் மனிதனுக்குச் சகஜம், சமம் என்று உணர்பவன் ஞானி.

அண்ணு சாஸ்திரி : (குழப்பத்துடன்) பிறருக்கு நாங்களும் இப்படித்தான் உபதேசம் செய்துவருகிறோம். சொந்தக் காரியங்களில் அது செல்லவில்லையே ! நீயும் எங்களைப் போலவே பேசுகிறாய்.

காளிதாசன் : இதற்குப் பதில் சொல்லுவது உடம்பமாகும். நாம் செய்வதொன்றுமில்லை என்று உணர்ந்து விட்டேன்.

பரமஹம்ஸர் : காளிதாசா, நேரமாயிற்று. கிளம்புவோம். (பரமஹம்ஸரும் காளிதாசனும் கிளம்புகிறார்கள்.)

ராஜா : அண்ணு சாஸ்திரிகளே, உம்முடைய தம்பியின் பிரசங்கம் எப்படி?

அண்ணு சாஸ்திரி : ரொம்பப் பிரமாதமாயிருக்கிறது. பெரிய வேதாந்தியைப் போல் பேசுகிறான். ஆனால் நடவடிக்கையையல்லவா கவனிக்கவேண்டும்? பேச்சு எப்பொழுதுமே ஆயிரங்காலே அரைக்கால் என்பார்களே அதுமாதிரித்தான்.

ராஜா : இதெல்லாம் அந்தப் பரமஹம்ஸரின் அருள் என்று நினைக்கிறேன்.

அண்ணு சாஸ்திரி : அருளாவது மண்ணாங்கட்டியாவது! கேள்விப்பட்ட வரையில் இந்தப் பரமஹம்ஸருக்கு – இவருக்கு யார் பரமஹம்ஸர் என்ற பட்டம் கொடுத் தார்களோ தெரியவில்லை – இவருக்குச் சம்ஸ்கிருதங் கூடச் சரியாக வராதாம். நான் ஐந்து வருஷமாக வேதாந்தம் படித்து வருகிறேன். ஒன்றும் வந்த பாடில்லை. இந்தப் பரமஹம்ஸர் அருளாலே ஒரு நிமிஷத்திலே ஞானம் வந்துவிட்ட மாதிரி காளிதாசன் வேஷம் போடுகிறான்.

ராஜா : வேஷம் ரொம்ப நாள் போட முடியுமா? தானே கலைந்து போகிறது.

(எல்லோரும் கலைந்து விடுகிறார்கள்.)

[ திரை ]

காட்சி 2

இடம் : காளிதாசன் வீட்டுக்கூடம்.

சாவித்திரி : என்னவோ மனசு மனசு என்று தவித்தீர்களே, பெரியவரைப் போய்ப் பார்த்து வாருங்கள் என்று சொன்னதற்குத் தண்டனையா இதெல்லாம்?

காளிதாசன் : எதெல்லாம்?

எதெல்லாமா? வீடு நிறையத் தத்தரே பித்தரே என்று புஸ்தகங்கள் ; எலும்புகள், மண்டை யோடுகள்; அறுபது நாழிகையும் வீட்டில் காளி நாமபாராயணம். காளி என்று குடும்பத்திலுள்ளவர்கள் உச்சரிக்கலாமா? நன்றாயிருக்கிறதே பயம் தெளியும் வித்தை !

காளிதாசன் : பின் எப்படி இருக்க வேண்டும்?

சாவித்திரி : நீங்கள் என்ன அலாதிப் பிறப்பா? எல்லோரையும் போல் ஒரு ஜபம் தபம் எடுத்துக் கொண்டால் மனசு மனசு என்று வேதனைப்பட்டீர்களே, அது தெளிந்துபோகும் என்று நினைத்தேன். நீங்கள் என்னடா என்றால் வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்கிறீர்கள். எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும், அதுவும் குடும்பத்திலுள்ளவர்களுக்கு.

காளிதாசன் : இதனால் கெட்டுப்போனது என்னவென்று எனக்கு விளங்கவில்லை. நீதான் சொல்லேன், பார்ப்போம்.

சாவித்திரி : உங்களுக்குச் சுயப் பிரக்ஞையே போய் விட்டது. இருந்தால் தெரியாமலா போகும்? முதலாவதாக நமக்கு இருந்த லக்ஷ்மீ கடாக்ஷமே போய் விட்டது. பள்ளிக்கூடத்துத் தலைமை உபாத்தியாயர் என்ற மரியாதைக்காக வந்து கொண்டிருந்த மாமூல்கள் நின்றுவிட்டன. அது போகட்டுமென்றால்,

இந்த ஒன்றரை மாதத்திற்குள் நமக்கு வந்த கஷ்டம், கடவுளுக்கே தாங்காது. வெள்ளிக்கிழமையும் அதுவுமாய்ப் பசுமாடு இறந்துவிட்டது. ரோஜாப்பூ மாதிரி இருந்த குழந்தையையும் வாரிக் கொடுத்தாய் விட்டது. பையன் சீனு பரீக்ஷையில் சுழி வாங்கி விட்டான். எனக்கு ஒரு வாரமாய் நெஞ்சில் மரண வலி. சின்னப் பெண்ணுக்கு வந்திருப்பது முறைக் காய்ச்சலாம். இவ்வளவும் நீங்கள் காளி காளி என்று ஸ்மரிக்க ஆரம்பித்த பிறகுதான். இன்னும் என்ன வேண்டும்?

காளிதாசன் : அடுக்குவதற்கு வேறொன்றும் இல்லையா ?

சாவித்திரி : ஆனால், நான் சொல்வது கற்பனையா? யோசித்துப் பாருங்கள்.

காளிதாசன் : யோசிப்பானேன்? காக்காய் உட்கார்ந் தால் பனம்பழம் விழாதோ? இதெல்லாந்தான் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார தாண்டவம்.

சாவித்திரி : இப்படியே நீங்கள் பிடிவாதம் பிடித்தால் இது எங்கே போய் முடியுமோ, யார் கண்டது? ஒரு கிழப் பிராம்மணர் வந்தார்; ரொம்பத் தெரிந்தவர். அவரிடம் இதை எல்லாம் சொன்னேன். காளியை பாசிப்பவன் கதி இதுதான் என்றார். படிக்காத நான் சொல்வதைத்தான் பெரியவரும் சொல்லியிருக்கிறார். பிறகு உங்கள் இஷ்டம். என் விதி! ‘

காளிதாசன் : பயந்த காலமெல்லாம் போய்விட்டது. கஷ்டம் சுகம் என்பது இனி இல்லை. காளியின் இஷ்டம். உன் இஷ்டம் என் இஷ்டம் அல்ல. என்னுடன் வந்தால் காளியின் கருணை தெரியும். தைரியமிருந்தால் காளி வெல்லுவாள். பயந்தால் நாம் தோற்போம். அவ்வளவுதான்.

(காளிதாசன் வெளியே போகிறான். சாவித்திரி சோர்ந்து உட்காருகிறாள்.)

[ திரை ]

காட்சி 3

இடம் : காளிதாசன் வீட்டுவாசல்.

(பங்கஜம் தெரு வழியே போகிறாள்.)

சாவித்திரி : வா, அக்கா, குளத்துக்குப் போகிறாயா?

பங்கஜம் : ஆமாம். அப்படியே உன்னை ஒரு வார்த்தை கேட்கவேண்டுமென்று வந்தேன். மாமாவுக்கு என்னவோ மூளை கலங்கிப் போய்விட்ட தென்று ஊரெல்லாம் புரளியாய்க் கிடக்கிறதே; உண்மைதானா?

சாவித்திரி : அதெல்லாம் யார் கட்டுக் கதையோ !

பங்கஜம் : அது போகட்டும். இப்பொழுதெல்லாம் வீட்டில் முன்னைப்போல் பூஜை பண்ணுகிறாரோ இல்லையோ?

சாவித்திரி : இல்லை.

பங்கஜம் : அப்பொழுது சரிதான். வீட்டில் இருக்கும் விக்கிரகங்களை ஆராதிக்காமல் இருந்தால் தெய்வங் களுக்குக் கோபம் வராமல் இருக்குமா? மூளையும் கலங்கும்; அதற்கு மேலும் ஆகும்.

சாவித்திரி : இப்படி நினைத்துத்தான் நானும் அவரைக் கேட்டேன்.”விளக்கை ஏற்றுவதற்குத்தான் நெருப்புக் குச்சி. பிறகு அது வேண்டாம். சுயஞ்ஜோதி யானால் விளக்கு வெளிச்சம் தேவையா? மின்மினிக்கு நெருப்புக்குச்சி தேவையா?”என்று அவர் ஏதேதோ சொல்லுகிறார். பார்த்தால் முக்தர் மாதிரித் தான் அவர் பேச்சும் நடவடிக்கையும் இருக்கின்றன. குடும்பத்தில் இருக்கிறார் என்ற பெயரே ஒழிய அவர் தாமரை இலைத் தண்ணீர் மாதிரிதான் இருக்கிறார்: ஒட்டியும் ஒட்டாமலும். ஒவ்வொரு சமயம் அவரைப் பார்த்தால் புது ஆளாய் எனக்கே மலைப்புத் தட்டுகிறது.

பங்கஜம் : தத்துப் பித்தென்று பிதற்றாதே. பெரியவர் ஆகிவிட்டாராம் ! கர்மங்களை விட்டால் கஷ்டம் என்று சாஸ்திரங்கள் முறையிடுகின்றன. அதுதான்  இப்பொழுது நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் தெரியவில்லையா? நல்ல வைத்தியரையோ, மாந்திரிகரையோ, சாஸ்திரம் படித்தவரையோ வரவழைத்து இதற்கு ஏதாவது பரிகாரம் செய். இல்லாவிட்டால் குடி முழுகிப்போய்விடும். அந்தப் பரமஹம்ஸரோ கிரமஹம்ஸரோ, அவரால் வந்த வினை இவ்வளவும். அடுத்தாற் போல எங்கள் வீட்டுக்காரர் இல்லையா? எத்தனை சபைகளில் சால்வையும் தோடாவும் வாங்கி இருக்கிறார்! அவருக்கு இன்னமும் பூஜை விட்டபாடில்லை. உன் வீட்டுக்காரர் ஜீவன்முக்தர் மாதிரி வேஷம் போடுகிறார். யார் நம்புவார்? நீயும் அவருக்குச் சொல்லு. ஸ்திரீதர்மத்தை விட்டு விடாதே.

(அண்ணு சாஸ்திரிகள் அங்கே வருகிறார். வந்தவுடன் பங்கஜத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

அண்ணு சாஸ்திரிகள் : இன்னும் குளத்துக்குப் போகாமல் பொழுது போக்குகிறாயா?

பங்கஜம் : ஏதோ சாவித்திரி கூப்பிட்டாள். ஒரு வார்த்தை பேசிக் கொண்டிருந்தேன். இதோ போகப் போகிறேன்.

(பங்கஜம் போகிறாள்.)

அண்ணு சாஸ்திரி : (சாவித்திரியைப் பார்த்து) உன்னிடம் ஒரு பேச்சுச் சொல்லவேண்டும். அதை உத்தேசித்துத்தான் வந்தேன். வீட்டில் அவன் இருக்கிறானா?

சாவித்திரி : (பயந்து) அவர் இல்லை. என்ன சமாசாரமோ?

அண்ணு சாஸ்திரி : உன் புருஷன் விஷயந்தான். என் தம்பி என்று சொல்லிக் கொள்ளக்கூட வெட்கமாக இருக் கிறது – அவன் செய்வதெல்லாம்.

சாவித்திரி : இப்பொழுது என்ன புதிதாகச் செய்திருக் கிறார்?

அண்ணு சாஸ்திரி : பள்ளிக்கூடத்துத் தலைமை உபாத்தியாயர் வேலையை ரொம்பச் சிரமப்பட்டு இவனுக்குச் சம்பாதித்துக் கொடுத்தேன்.

சாவித்திரி : ஆமாம்.

அண்ணு சாஸ்திரி : உலகத்தில் எல்லோரும் இருப்பது போலத்தானே நாமும் இருக்கவேண்டும்? அதை விட்டு விட்டு, அலாதியாக, அதிசயமாகக் காரியங்கள் செய்ய நமக்கு என்ன பாத்தியம்? பள்ளிக்கூடத்துப் பையன்களை எல்லாம் மூன்று மைலிலுள்ள வடக்குக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போனானாம். அது ஒரு பொல்லாத காளி. பள்ளிக்கூடத்துக் குழந்தைகளை ராத்திரியில் காளிகோவிலுக்கு அழைத்துக் கொண்டு போகலாமா? நீயே சொல்லு. அதிலும் என்னவோ பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறானாம். பயப்படாதே என்பதுதான் பல்லவியாம். பயம் விட்டுப் போனால் ஒரு நிமிஷம் உலகம் நிலைக்குமா? யோசித்துப் பார். இதெல்லாம் கிராமத்தார்களுக்குப் பிடிக்கவில்லை. இவன் சோற்று வாயில் மண் விழுந்து விட்டால் பிறகு என்னிடம் சொல்லாதே.

சாவித்திரி : அதிருக்கட்டும். இவர் சொல்லிக் கொடுப்பதில் அதிகப் பிசகைக் காணோமே. எதற்கெடுத்தாலும் நமக்குப் பயமாய் இருக்கிறது. பயத்தை ஒழிக்கவேண்டுமென்றுதானே இவர் சொல்லுவதாகத் தெரிகிறது? அதிலும் பிள்ளைப் பிராயத்திலிருந்தே மனசைப் பயிற்சி செய்தால் உலகத்தை நல்ல வழிக்குக் கொண்டு போகும் ஞானிகளை உண்டாக்கலாம் என்கிறார். உண்மையில் இவரே ஒரு ஞானி தான். இல்லாவிட்டால் இவ்வளவு தரித்திரத்திலும் நிலை குலையாமல் இருக்க முடியுமா?

அண்ணு சாஸ்திரி : சரிதான். விஷம் வீட்டுக்குக்கூடப் பரவிவிட்டதா? எப்பேர்ப்பட்ட பெரியவர்களெல்லாம் திண்டாடுகிறார்கள்! இவனுக்கு வந்துவிட்டதாக்கும் ! இவனுக்கு எந்தப் பாசம் விட்டு போய்விட்டது?

வீடு வாசல் விட்டதா? குழந்தைகளின் பாசம் விட்டதா? உன் ஆசை விட்டதா? சாப்பாடு விட்டதா? அதெல்லாம் போகிறதென்றால் சம்பிரதாயப்படி ஏதேனும் படித்தானா? ஒன்றும் இல்லை. வைதிகக் குடும்பத்தில் பிறந்து வீட்டுப் பூஜையைக் கூட விட்டுவிட்டானாமே! எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. பிழைப்புக்கே ஆபத்து, நீ சொல்லிப் பாரு. பிறகு அவன் இஷ்டம்.

சாவித்திரி : ஆனால் இவர் செய்வதும் சொல்வதும் சாஸ்திரத்துக்கு விரோதமா?

அண்ணு சாஸ்திரி : அதெல்லாம் நமக்கு ஏன்? எல்லோரையும்போல் நாம் இருக்க வேண்டியதுதான் முறை. அதை விட்டுவிட்டு ஒற்றைத் தென்னைமரம் மாதிரி ஓங்கப் பார்த்தால், அவ்வளவுதான் ; அடிக்கிற காற்று அவ்வளவும் அதன் தலையில்தான் விழும்.

சாவித்திரி : அப்படித்தான் நானும் நினைத்து அவருக்குச் சொல்லுகிறேன். இன்னமும் சொல்கிறேன். நீங்களும் சொல்லுங்கள். நாம் கிராமத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லை. இதெல்லாம் எதிலேதான் முடியுமோ தெரியவில்லை.

[ திரை ]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !