காளி
ந. பிச்சமூர்த்தி

 அங்கம் 4

காட்சி 1

டம் : காளிதாசன் வீடு.

(காளிதாசன் பாடிக்கொண்டிருக்கிறான். அண்ணு சாஸ்திரிகள் வருகிறார். வந்ததும் பாட்டை நிறுத்திவிட்டு பேசுகிறான்.)

காளிதாசன் : வாங்கோ.

அண்ணு சாஸ்திரி : ஒரு காரியமாய் வந்தேன். உனக்குத் தெரியுமோ என்னவோ?

காளிதாசன் : அதெப்படித் தெரியும்?

அண்ணு சாஸ்திரி : மூணு காலமும் தெரிந்தவன் போல வேஷம் போடுகிறாயே!

காளிதாசன் : வேஷமா போடுகிறேன்? இல்லையே! என் வழியிலே போகிறேன்.

அண்ணு சாஸ்திரி : உன் வழி உயர்ந்ததாகவே இருக்கட்டும். அதற்காக நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் அபகீர்த்தியைத் தேடுகிறதா? ஊரெல்லாம் சிரிக்கிறார்கள். உன் வழியை விட்டால் குடும்பம் பிழைக்கும். இல்லாவிட்டால் அவ்வளவுதான். நான்  ஒன்று சொல்லுகிறேன்: அன்றைத்தினம் நீ செய்தது பிசகு என்று ஒப்புக் கொண்டுவிட்டால் கிராமத்தார்கள் மன்னிக்கலாம்.

காளிதாசன் : பிசகு செய்திருந்தால் ஒப்புக்கொள்ளத் தயார். ஆனால் பிசகு ஒன்றுமில்லையே.

(சாவித்திரி குறுக்கிடுகிறாள்.)

சாவித்திரி : அதிலே பிசகொன்றும் இல்லை. அன்னிக்கு இவா கொண்டுவந்தது வர்ணம் பூசின பொம்மையும் செம்பஞ்சுச் சாறுந்தான். நான்கூட முதலில் என்னவோ நினைச்சேன். பிறகுதான் தெரிஞ்சுது. தெருவார்களும் பதட்டப்பட்டுட்டார்கள். நீங்க தான் அவர்களுக்கெல்லாம் சொல்லணும்.

அண்ணு சாஸ்திரி : ‘சரிதான்; நீகூடப் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டாயா? எங்களையெல்லாம் ‘குருட’னாக்கப் பார்க்கிறீர்களா?

சாவித்திரி : அப்போ நான்கூடப் பொய் சொல் கிறேனா?

அண்ணு சாஸ்திரி : (கவனிக்காமல்) என்ன காளிதாசா, ஏதேனும் சமாதானத்துக்கு வழி உண்டா?

காளிதாசன் : பஞ்சபூத சாட்சியாய் நான் ஒரு பிசகும் செய்ததாகத் தெரியவில்லை. மகாகாளி விட்ட வழி; அவ்வளவுதான் நான் சொல்வேன்.

அண்ணு சாஸ்திரி : கடைசித் தடவையாகக் கேட்கிறேன்: அவ்வளவுதானே?

காளிதாசன் : முதலும் கடைசியும் ஒன்றான மகாகாளி சாட்சியாக அவ்வளவுதான்.

(விருட்டென்று ஒரு வார்த்தையும் மேலே சொல்லாமல் அண்ணு சாஸ்திரிகள் வெளியே போகிறார்.)

காட்சி 2

இடம் : ஊர்ச் சாவடி

ஒருவர் : ஓய் நீங்க வைத்த வத்தி பிடித்துக் கொள்ளவில்லையே ! போலீஸ்காரன் விட்டுவிட்டான். காளிதாசன் நால்மாகாணிமேல் ஈரரைக்கால் போட்டுக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருக் கிறானே.

மற்றவர் : இதற்குள் புத்தி வந்திருக்கும். அண்ணு சாஸ்திரிகள்கூட ஆழம் பார்க்கப் போயிருக்கிறார். வந்தால் விஷயம் தெரியும்.

ஒருவர் : அவரையெல்லாம் இதில் நம்பப் படாது. என்ன இருந்தாலும் அவர் தம்பிதானே காளிதாசன்? அவ்வளவு லேசில் காட்டிக் கொடுத்து விடுவாரா?

மூன்றாமவர் : இதை எல்லாம் யாரையா கேக்கறா? கண்ணுக்கு எதிரே நேத்து முளைத்த பயல் ஜாதிக் கட்டுப்பாடு, மதக் கட்டுப்பாடு, வழக்கம், ஊரார் பேச்சுக்கு மரியாதை, கௌரவம், பயம்- என்ன சொல்றது? – ஒன்றுமே இல்லாமல் கூத்தடிக்கிறான். சும்மாப் பார்த்துக் கொண்டே இருந்தால் நம்ப அக்கிரகாரத்தின் கதி அவ்வளவுதான்.

மற்றவர் : மது மாமிசம் வைத்துப் பூஜை செய்வது ஆதிசங்கரர் சொல்லியிருப்பதற்கு விரோதந்தான் ; சந்தேகமில்லை. அதெல்லாம் ஒன்றுமே காளிதாசன் செய்வதில்லையாமே-மூர்த்தி சொல்லுகிறான்.

மூர்த்தி : அப்படியே வச்சுக் கொள்ளுங்கள். நீங்களெல்லாம் யாகத்தில் செய்வதென்னவோ தெரியவில்லை. அதுவும் போகட்டும். உயிரைக் கொல்லாத காரியம் நாம் ஏதாவது செய்கிறோமா பாருங்கள். புடலங்காய், கத்திரிக்காய்க் கெல்லாம் உயிரில்லைன்னு வேதத்திலே சொல்லியிருக்கா ? இதை யெல்லாம் திங்காத பேர் காளிதாசனைப் பத்திச் சொன்னால் ஒப்புக்கொள்ளலாம். எண்ணெய்ச்சட்டி வெந்நீர்ப் பானையைப் பழிக்கிறாப்போல இருக்கு உங்கள் பேச்சு.

(அண்ணு சாஸ்திரி வருகிறார்.)

மூன்றாமவர் : (பதற்றமாய்) காயா, பழமா?

அண்ணு சாஸ்திரி : ஏ அப்பா! அவன் பூமியிலே இருக் கிறாப் போலவே பேசக் காணோம். சந்திர சூரியர்கள், பிசகு செய்தாலும் தான் செய்யமாட்டான் போல் பேசுகிறான். அத்தோடு நாமெல்லாம் காமாலைக் கண்ணர்களென்று தோன்றும்படி பேசுகிறான்.

இரண்டாமவர் : நான்தான் சொன்னேனே. நாய்வாலை நேராக்கினாலும் அவனை நேராக்க முடியாது. நல்ல வழியிலே அவன் காளிவெறியைத் திருத்த முடியாது.

மூன்றாமவர் : அப்பொ,வேறென்ன வழி?

அண்ணு சாஸ்திரி : நீங்க யோசனை செய்யுங்கோ. கொஞ்சம் காரியம் இருக்கிறது. பார்த்துவிட்டு வருகிறேன்.

ஒருவர் : என்ன இருந்தாலும் நீங்க அவன் அண்ணாதானே? முழுதும் எங்களோடு சேரமுடியுமா?

அண்ணு சாஸ்திரி : அதெல்லாம் இல்லை. ஒரு அவசர காரியம். இதோ வந்துவிடுகிறேன்.

(அண்ணு சாஸ்திரி போகிறார்.)

ஒருவர்  : அண்ணா விஷயம் புரிந்ததா? இனிமேல் இரண்டிலொன்று செய்தாக வேண்டும்.

மூன்றாமவர் : ஒன்று அவன் ஊரை விட்டு ஓடவேண் டும், அல்லது நாம் ஓட வேண்டும்.

இரண்டாமவர் : ஓடுவதென்றால் நாம் ஓடலாம். அவனை எப்படி ஓடவைப்பது?

ஒருவர்  : வழி உண்டு.

மூன்றாமவர் : அப்படித்தான் செய்யேன்.

ஒருவர்  : வியாழக்கிழமை வெள்ளி முளைக்கிற பொழுது பாருங்கள்,தெரியும்.

காட்சி 3

இடம் : குளக்கரை. காலைநேரம்.

(காளிதாசன் பல் விளக்கிக்கொண் டிருக்கிறான்.)

வேலன் : சாமி ! சாமி!!

காளிதாசன் : என்னப்பா? செளக்கியமா? கண்ணிலேயே காணோமே?

வேலன் : எல்லாம் சௌக்கியந்தானுங்க. ஒரு வார்த்தை சொல்லணும்னுதான் வந்தேன். கோவிச்சுக்கப்படாது.

காளிதாசன் : சும்மா சொல்லு.

வேலன் : இனிமே இந்த ஊரிலே இருந்தால் ஓங்களுக்குக் கஷ்டந்தான்.

காளிதாசன் : என்ன கஷ்டம்? அப்படிக் கஷ்டம்னு ஒண்ணு இருக்கா?

வேலன் : ஒங்களுக்குத் தெரியாதுங்க. காளி கீளின்னு என்னமோ செய்யுறீங்களல்ல ? அதனாலே தான் வினை. கிராமத்திலே இருக்கிறதுன்னா அந்த வழக்கத்தை விட்டுவிட வேணும்.

காளிதாசன் : எதை ?

வேலன் : மாமிஷம் கீமிஷம் வச்சுப் படைக்கறதை. இல்லாட்டி டவுனுக்குப் போயிடணும். யாரும் வம்புக்கு அங்கே வரமாட்டாங்க.

காளிதாசன் : அந்த மாதிரி ஒண்ணும் செய்யல்லியே?

வேலன் : ஒங்க பேச்சைத்தான் யாரும் நம்பலீங் களே. ஒங்களுக்குப் புத்தி வரத்துக்காக முதல்லே வேலையை விட்டுத் தள்ளினாங்களாம். அப்பவும் நீங்க திருந்தல்லியாம். போனது போகட்டும். நீங்களும் பிள்ளை குட்டிக்காரங்க; நானும் பிள்ளை குட்டிக் காரன். சொல்றதைக் கேளுங்க. டவுனுக்குப் போயிருங்க. அதுதான் நல்லது. என்னென்னவோ அவுங்க யோசிக்கறாங்க; காதிலே விழுது.

காளிதாசன் : நீ சொல்றது சரி. என் வீட்டை என்ன செய்கிறது? ஒரு யோசனை சொல்லு.

(வேலன் தலையைச் சொறிந்துகொண்டு யோசிக்கிறான். கொஞ்ச தூரத்திலிருந்து யாரோ பிச்சைக்காரன் பாட்டுக் கேட்கிறது: “வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்குப், பட்டய மேதுக்கடி – குதம்பாய் – பட்டய மேதுக்கடி.”)

வேலன் : ஒண்ணு தோணுதுங்க. நான் பார்த்துக்கறேன்.

காளிதாசன் : நல்ல யோசனைதான். எனக்கும் ஒரு யோசனை தோணியிருக்கு. அந்தப் பிச்சைக்காரன் பாட்டைக் கேட்டியா?

வேலன் : நான் கவனிக்கல்லீங்க. அது போகட்டும். நான் சொன்னபடி ஏதானும் செய்யுங்க. பொழைக் கலாம்.

காளிதாசன் : அப்படியே செய்யறேன், போ.

[திரை ]

காட்சி 4

இடம் : காளிதாசன் வீடு. நேரம்–இரவு மணி பதினொன்று.

(குஞ்சிதபாதம் படுத்துக் கொண் டிருக்கிறான். காளிதாசன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். சாவித்திரி தூங்குகிறாள்.)

காளிதாசன் : ஏண்டா! இவ்வளவு கதை சொல்லியுமா தூக்கம் வரவில்லை?

குஞ்சிதபாதம் : இல்லை அப்பா; என்னவோ சொக்கப் பானை இன்னியே, எப்போ வரும்?

காளிதாசன் : கார்த்திகை மாதம்?

குஞ்சிதபாதம் : கார்த்திகை எப்போ வரும்?

காளிதாசன் : என்னடா தொல்லை!

குஞ்சிதபாதம் : எப்போ? சொன்னாத்தான்.

காளிதாசன் : நாளைக்கு.

குஞ்சிதபாதம் : நாளைக்கா? ராத்திரி தூங்கினப்பறம். (கைகொட்டுகிறான்) நான் சொக்கப்பானை நாளைக்குப் பாப்பேனே. “சொக்கப்பானை நாளைக்குப் பாப்பேனே” என்று இரண்டு மூன்று தடவை சொல்லிக்கொண்டே குஞ்சிதபாதம் தூங்கிவிடுகிறான். காளிதாசன் படுத்துக்கொள்கிறான். சில மணிகள் ஆகின்றன.)

குஞ்சிதபாதம் : (திடீரென்று எழுந்து அப்பாவை எழுப்பு கிறான்.) அப்பா, சொக்கப்பானை வந்தூடுத்து. இதோ பாரு.

(காளிதாசனும் சாவித்திரியும் திடுக்கிட்டு எழுந்திருக்கிறார்கள். வீட்டின் கூரை புகைந்து எரிந்துகொண் டிருக்கிறது.)

சாவித்திரி : ஐயோ காளி! வயிற்றிலும் வீட்டிலுமா நெருப்பை வைப்பாய்? ஆ!

(மூர்ச்சை அடைகிறாள். தெளிந்தவுடன் வீட்டுச் சாமான்களை அப்புறப்படுத்தப் பார்க்கிறாள்.)

காளிதாசன் : சாவித்திரி ! அதையெல்லாம் விடு. குழந்தையை எடுத்துக் கொண்டு கிளம்பு, வெளியே.

சாவித்திரி : ஒங்க பூஜையின் பலனைப் பார்த்தேளா?

காளிதாசன் : உளறாதே. அடுத்த ஊருக்குப் போனப் புறம் பலன் தெரியும்.

(எல்லோரும் வெளியே வருகிறார்கள். தெருக்கோடியில் சிலர் ஸ்நானத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். நெருப்பைப் பார்த்துங் கூட ஒருவரும் அணுகவில்லை.)

காளிதாசன் : சாவித்திரி, வீடென்ற பந்தம் ஒன்று இருந்தது. இத்துடன் அதுவும் ஒழிந்தது. இனி உலகமே நமது வீடு. அதோ பார் கிழக்கே; இருட்டை வெட்டி வீழ்த்தும் காளியின் கத்தியைப் பார். அவள் காப்பாற்றுவாள்.

(“வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்! பட்டயம் ஏதுக்கடி?” என்று பாடிக்கொண்டே காளிதாசன் உதய திக்கை நோக்கிச் செல்கிறான். மௌனமாகக் குழந்தையுடன் சாவித்திரியும் பின் தொடர்கிறாள்.)

[ திரை ]

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !