
காளி
ந. பிச்சமூர்த்தி
அங்கம் 3
காட்சி 1
இடம் : காளிதாசன் வீட்டுக்கூடம்
(சாவித்திரி கறிகாய்கள் நறுக்கிக்கொண்டி ருக்கிறாள். குஞ்சி பாதம் பக்கத்தில் விஷமம் செய்துகொண்டிருக்கிறான்.)
குஞ்சிதபாதம் : அம்மா! அம்மா! இந்த வெள் ளரிக்காயைக் கொல்லையிலேருந்து பறிச்சுக்கிண்டு வந்தேன். அதை ஒடிச்சேன், ரத்தம் வறது. ஜலம் மாதிரி இருக்கு.
சாவித்திரி : அட அசடே! அது வெள்ளரிக்காய் ஜலம். வெள்ளரிக்காய்க்கு ரத்தம் கிடையாது.
குஞ்சிதபாதம் : பின்னே அப்பா சொல்லறாரே, எல்லாத்துக்குந்தான் ரத்தம் உண்டுன்னு.
(காளிதாசன் கையில் மதுவையும் இறைச்சியையும் போன்ற எதையோ கொண்டு உள்ளே நுழைகிறான்.)
சாவித்திரி : (பிரமித்து) சிவசிவ! பைத்தியம் முற்றுகிறதே. இதென்ன அக்கிரமம்! இனிமேல் தாங்காது.
காளிதாசன் : யாருக்கு?
சாவித்திரி : உலகத்துக்கு.
காளிதாசன் : இப்பொழுது பூச்சாண்டிகளே எனக்கு இல்லை.
சாவித்திரி : பாப புண்ணியம் இல்லை. குடும்பத்துக்கோ உலகத்துக்கோ மதிப்புக் கிடையாது. என்னாலே கூடச் சகிக்க முடியவில்லை. யாரையாவது கூப்பிட்டு உங்கள் நியாயத்தைக் காட்டுகிறேன். கூட்டிக்கொண்டு வரட்டுமா?
காளிதாசன் :
(சாவித்திரி பதறித் திகைத்து வெளியே ஓடித் தெருவார்களையும் ராஜா பாகவதரையும் அழைத்து வருகிறாள். அவர்கள் பார்த்து விட்டுச் சொல்கிறார்கள்.)
முதலாமவர் : சிவ சிவ! இது அக்கிரகாரமா அல்லது – ரொம்பக் கலியுகத் துணிச்சலாயிருக்கே !
இரண்டாமவர் : காளிதாசரே, மூளைத் திருகு கழன்று போச்சா? தலையில் இடி விழுமாக்கும்! வீணாக அழிந்து போகாதேயும்.
காளிதாசன் : முதலில் கண்ணைத் துடைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பதைப் போன்ற பதார்த்தங்கள் இவைகள் அல்ல. தெரிந்ததா? பிறகு மனசைத் துடைத்துக் கொள்ளுங்கள். மது மாமிசம் சாப்பிடுவது கூடப் பரவாயில்லை. நம்முடைய மனோ பாவத்தை நினைத்துக் கொண்டால்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. நம்முடைய மனத்திற்கும் சொல்லுக்கும், சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடுகள் தாங்க முடியவில்லை. நாம் பெரிய தத்துவங்களை, பெரிய பேர்களைச் சொல்லிக் கொண்டு அதற்கு மாறாக அழிந்து கொண்டு இருக்கிறோம் என் பதை அறியவில்லை.
ராஜா பாகவதர் : இதென்ன, குடிகாரன் பிதற்றல் ! கண்ணைத் துடைப்பது, மனசைத் துடைப்பது! செய்வதையும் செய்கிறது. அதே மூச்சில் பொய் வேதாந்தமும் எங்களுக்கெல்லாம் அசட்டுப் பட்டமும்! உங்கள் குலத்துக்கு நல்ல கோடாலிக் காம்பு. இந்த அக்கிரமத்தை உங்கள் அண்ணா பார்க்க வேண்டும்!
(அண்ணு சாஸ்திரிகள் வருகிறார்.)
அண்ணு சாஸ்திரி : (ராஜா பாகவதரைப் பார்த்து) உம்மைப் போய் வீட்டில் தேடினேன், (காளிதாசன் பக்கம் திரும்பி) உன்னிடம்…(பிரமித்து) இதெல்லாம் என்ன ! சிவ சிவ ! பாகவதர்வாள், ஏந்திருமையா. மிலேச்சத்தனம் மிதமிஞ்சிப் போன வீட்டில் நமக்கு என்ன வேலை? தம்பியாய் இருந்தா லென்ன, யாராய் இருந்தாலென்ன?..என்னவோ நினைத்தேன் இதுவரையில். இவன் உருப்பட மாட்டான். தண்ணியிலே போன சக்கரைதான்……. (சாவித்திரியைப் பார்த்து) இதெல்லாம் முத்திப் போச்சு. ஒன் தலை எழுத்து. நாங்கள் என்ன செய்யக்கிடக்கு? (மற்றவர்களைப் பார்த்து) வாங்கோ, வாங்கோ.
(திடீரென்று கிளம்பி வெளியே போகிறார். மற்றவர்களும் பின் தொடர்கிறார்கள்.)
காளிதாசன் : (வாசல் வரையில் வந்து) ஒரு வார்த்தை, அண்ணா. ஒரே வார்த்தை.
(அண்ணு சாஸ்திரிகள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தெருவார்கள் திடீரென்று நெஞ்சில் கோழை தோன்றி விட்டது போல் காறித் துப்புகிறார்கள். காளிதாசன் வீட்டுக்குள் திரும்பி விடுகிறான்.)
காளிதாசன் : இனித்தான் காளி வெல்வாள். சாவித்திரி, உனக்கு ஜயமாகிவிட்டது. தெருவார்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள். போதுமோ, இல்லையோ?
சாவித்திரி : இப்பொழுது பேசுவது புரியவில்லை. அதோடே பயமாயிருக்கிறது.
காளிதாசன் : அதில் ஒன்றும் ‘பிசகில்லை. நம் தேசத் திலேகூட அப்படித்தான். கண் காதுகளால் நன்றாய்க் கவனிப்பது, நன்றாய்ச் சிந்திப்பது, நன்றாய் வாழ்வது – இவைகளெல்லாம் ரொம்பக் குறைவு. இவைகளோடு கூடியிருந்த காலம் நம் நாட்டின் உச்சம். இவைகளில்லாத இந்தக் காலம் தாழ்வுதான். எல்லாமே இப்படியிருக்க, பாவம், நீ என்ன செய்வாய்?
சாவித்திரி : அதெல்லாம் போகட்டும். ஒங்க கையில் இருப்பது ஒண்ணும் கெட்ட வஸ்துவில்லை என்றா சொல்கிறீர்கள்?
காளிதாசன் : வாங்கிப் பாரேன்.
(தயக்கத்துடன் சாவித்திரி வாங்கிப் பார்க்கிறாள்.)
சாவித்திரி : (அசடு வழிய) இதெல்லாம் என்ன?
காளிதாசன் : பள்ளிக்கூடத்தில் உடல் கூற்றுச் சொல்லிக் கொடுப்பதற்கான பொம்மைகள்; மங்களூரிலிருந்து வந்திருக்கின்றன. இது மனித ஹிருதயம். உங்களுக்கெல்லாம் காட்டலாமென்று எடுத்து வந்தேன். மற்றொன்று செம்பஞ்சுச் சாறு. குழந்தை ராஜம்மாள் காலில் தடவிக் கொள்ளட்டுமே என்று கொண்டு வந்தேன். ஆனால் நீ சிவப்பைக் கண்டு திகிலடைந்து அசடாகி விட்டாய். இனிமேல் நீ புதிய சாவித்திரியாகாவிட்டால் உனக்கு இந்த வீட்டில் இனி வேதனைதான் மிஞ்சும்.
சாவித்திரி : ஆமாம், நான்தான் அசடுபோல நடந்தேன். வந்தவர்களுக்காவது விஷயத்தை விளங்க வைக்காமல், பெரிய தொல்லையை உண்டாக்கி விட்டீர்களே! இனிமேல் நான் தெருவில் தலைகாட்ட முடியாதே!
காளிதாசன் : தெருவார்கள் நுழைந்ததும் சொன்னேன். அது காதில் ஏறவில்லை. ரத்தச் சிவப்பு வர்ணம் உண்டாக்குகிற திகிலை ஆற்றவே முடியாது. ஒரு வார்த்தை என்று அண்ணாவைக் கூப்பிட்டேன். நரகத்திலிருந்து தப்பி ஓடுகிறவனைப் போல் அவர் ஓடிவிட்டார். இன்னும் என்ன செய்ய?
சாவித்திரி : அவர் வீட்டுக்குப் போயாவது சொல்ல வேண்டும்.
காளிதாசன் : இனிமேல் சொன்னால்கூட நம்ப மாட்டார்கள்.
சாவித்திரி : அப்போ, போற வழி? இதிலேயிருந்து பெரிய கஷ்டம் உண்டாகும் போலிருக்கே.
காளிதாசன் : காளி போகிற வழியில் கஷ்டம் சுகம் இரண்டும் ஒன்றுதான். உலகப் போக்கில் இரண்டும் உண்டுதான்; மரம் மர நிழலைப்போல. பாட்டைசாரி தூங்கி வழியாமல் நடந்தால் பயமில்லை, போ.
சாவித்திரி : முரட்டுப் பேச்சுத்தான் தெரிகிறது.
ஒரு குரல் வாசலிலிருந்து : ஐயா, ஐயா!
காளிதாசன் : யாரது? (வெளியே வந்து) போலீஸ் காரனா? என்ன விசேஷம்?
போலீஸ் : சப் இன்ஸ்பெக்டர் ஐயா கூட்டிவரச் சொன்னாரு.
காளிதாசன் : என்னையா ? எதற்காக?
போலீஸ் : எனக்குத் தெரியாது.
காளிதாசன் : என்ன பெயர் சொன்னார்?
போலீஸ் : சந்தேகப்படாதீங்க. உங்களைத்தான்,
(சாவித்திரியும் தெருப்புறத்துக்கு வருகிறாள். போலீஸ் காரனைக் கண்டதும் கண் கலங்குகிறாள்.)
சாவித்திரி : வந்ததா மோசம்?
காளிதாசன் : சும்மா அலட்டிக்கொள்ளாதே. ஒன்றும் வராது.
போலீஸ் : வாங்க, நேரமாகிறது.
காளிதாசன் : சாவித்திரி,சும்மா இரு. சப் இன்ஸ்பெக் டர் கூப்பிட்டாராம். பார்த்துவிட்டு வருகிறேன்.
(காளிதாசனும் போலீஸ்காரனும் போகிறார்கள். சாவித்திரி அழுதுகொண்டே உள்ளே போகிறாள்.)
[ திரை ]
காட்சி 2
இடம் : போலீஸ் ஸ்டேஷன்.
சப் இன்ஸ்பெக்டர் : ஓய் காளிதாசரே, நீர் போகலாம்.
காளிதாசன் : வரச் சொன்னீர்கள்; வந்தேன். ஏதோ நாலு கேள்வி கேட்பதற்காகவா ஓர் இரவு முழுவதும் அடைத்து வைக்க வேண்டும் ?
சப் இன்ஸ்பெக்டர் : (இரக்கத்துடன்) உண்மையைச் சொல்லுகிறேன். கேள்வி கேட்பதற்காக ஒரு நாள் அடைத்து வைக்கவில்லை. உம்முடைய வீட்டைப் போய்ச் சோதித்துவிட்டு வந்தோம். அப்பொழுது நீர் வீட்டில் இல்லாமல் இருந்தால்தான் தடையம் அகப்படும் என்ற யோசனை.
காளிதாசன் : அது வேறா? என்ன குற்றத்திற்காக இதெல்லாம்?
சப் இன்ஸ்பெக்டர் : பெரிய பண்ணையார் வீட்டில் களவு போய் விட்டதாம். உமக்கும் தெருவார்களுக்கும் விரோதமாமே? இக்களவில் உமக்குச் சம்பந்தம் உண்டென்று நம்பத்தகுந்த தகவல் வந்தது.
காளிதாசன் : அந்த நம்பத்தகுந்த தகவல் இப்பொழுது என்னவாயிற்று?
சப் இன்ஸ்பெக்டர் : உங்கள் வீட்டுச் சோதனைக்குப் பிறகு பொய்யென்று தெரிந்தது. அதுமட்டுமல்ல. களவே பொய்யென்று தோன்றுகிறது. அந்த ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று பார்க்கிறேன்.
காளிதாசன் : அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.ஒன்று நிச்சயமாய்த் தெரிகிறது: திருடர்களை விடப் பெரிய திருடர்கள்தாம் அவர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள். இது அனுபவத்தில் கண்ட உண்மை. மற்றொன்று: திருட்டுத்தனத்தை உலகத்தாரே வளர்க்கிறார்கள்.
சப் இன்ஸ்பெக்டர் : எங்களுடைய அனுபவமும் அதுதான். நான் என் கடமைக்காக ஏதோ செய்தேன். ஒண்ணும் மனசிலே வைத்துக் கொள்ள வேண்டாம். போய் வாருங்கள்.
(காளிதாசன் நிதானமாய் வெளியே நடந்து செல்கிறான்.)
[திரை ]
காட்சி 3
இடம் : காளிதாசன் வீடு
சாவித்திரி : (வீட்டுக்குள் காளிதாசன் நுழைவதைக் கண்டதும்) நீங்கள் போனதும் போலீஸ்காரன்கள் வீட்டை என்னவோ பரிசோதித்தான்கள். எனக்குத் திகிலாயிருந்தது. நமக்கு ஏழரை நாட்டுச் சனியன் என்று யாரோ சொன்னார். அதுதான் இதெல்லாம் போலிருக்கு. இப்போ என்ன ஆச்சு?
காளிதாசன் : ஒன்றும் இல்லை. பெரிய பண்ணையார் வீட்டில் களவு போய்விட்டதென்று சொல்லி என்னை அதில் இந்தத் தெருவார்கள் சிக்கவைக்கப் பார்த் திருக்கிறார்கள். உண்மைக்குத் தோல்வி உண்டா என்ன? சப் இன்ஸ்பெக்டர், திருட்டுப் போனதே பொய் என்று கண்டுபிடித்து விட்டார். ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தது மிச்சம்.
சாவித்திரி : எனக்குத் தெரியுமே; காளியை உபாசித்தால் காராக்கிருகம் என்று! இதோடாவது அதெல்லாம் விட்டுடுங்கோ. உங்க மனசு என்ன ஆகிறது பார்ப்போம். மனசைச் சரிசெய்யப் போய் வீட்டிலே மனவேதனையைக் கொண்டு வந்துட் டேளே. என்னாலே இனிமேல் தாங்க முடியாது.
காளிதாசன் : என்னாலேயும் ஒன்றும் முடியாது. காளி காட்டும் ஒரே வழிதான் உண்டு. நான் வெறும் யந்திரம். ஆட்டி வைக்கிற சக்தி அவள். பன்னிப் பன்னிப் பேசுவதிலே இனிமேல் லாபம் இல்லை.
(வாசலிலிருந்து ஒரு குரல்.)
குரல் : சாமி!
காளிதாசன் : யார்?
குரல் : நான்தானுங்க.
(ஆள் வேலன் உள்ளே வந்து ஒரு கடுதாசை நீட்டுகிறான்.)
வேலன் : இதை உங்ககிட்டக் குடுக்கச் சொன்னாங்க.
காளிதாசன் : (வாங்கிப் படித்துவிட்டு) ரொம்ப சரி;
வேலன் : பதில் உண்டுங்களா?
காளிதாசன் : இல்லை. நல்லதாப் போச்சு என்கிறதுதான் பதில்.
(வேலன் போகிறான்.)
சாவித்திரி : என்ன நல்லதாப் போச்சு?
நான் வாத்தியாராயிருப்பதில் பையன்கள் கெட்டுப் போய்விடுவார்களாம். நான் தேவை இல்லை என்பது பஞ்சாயத்தார் அபிப்பிராயம், அதுவும் நல்லதாப் போச்சு. வயிற்றுப் பிழைப்புக்காக என் வழியை விட்டு விலக வேண்டிய சந்தர்ப்பங்களும் மறைந்துவிட்டன. இருக்கிறதைக் கொண்டு ஜீவனம் நடத்தலாம். மனசுக்கு இன்பமாவது மிஞ்சும்.
சாவித்திரி : (வெம்பி) உங்க ஸ்வாமியின் வழி ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. உடம்பைக் கொன்று விட்டுத்தான் மனத்திற்கு விடுதலை கொடுக்கும் போலிருக்கிறது. காளியைக் கொஞ்சக் கொஞ்ச –
(பரமஹம்ஸர் வீட்டுக்குள் நுழைகிறார்.)
சாவித்திரி : (முணுமுணுத்தபடி) வந்துவிட்டார், பாழும் சுவாமிகள்! சிவனே என்று எல்லாரையும் போல் இருந்தவரைப் பைத்தியமாக்கின பிரபு!
பரமஹம்ஸர் : வெல்க காளி!
(காளிதாசன் நமஸ்காரம் செய்கிறான். சாவித்திரியும் ஒப்புக்கு அரைகுறையாய் நமஸ்காரம் செய்கிறாள்.)
பரமஹம்ஸர் : என்ன காளிதாசா, சௌக்கியமா? சௌக்கியந்தான், காளியின் தயவில். ஊரை விட்டுத் திடீரென்று ஒரு வார்த்தைகூடச்
காளிதாசன் : சொல்லாமல் போய்விட்டீர்களே. எப்பொழுது திரும்பி வந்தீர்கள்?
பரமஹம்ஸர் : காலையில்தான். வருவதையும் போவதையும் நான் பொருட்படுத்துவதில்லை. காலையில் வந்தேன்; மாலையில் போனாலும் போவேன்; மறு மாசம் போனாலும் போவேன். ஒருவனைப் பிடித்து இழுக்கும் பாசம் இருந்தாலொழியத் திட்டம் இருக்க முடியாது. அதெல்லாம் போகட்டும். இதுவே நமது கடைசிச் சந்திப்பாக இருக்கலாம்.
காளிதாசன் : (கலவரம் அடைந்து) சுவாமி !
பரமஹம்ஸர் : பழைய மனசு, பழைய பயமெல்லாம் இப்பொழுது ஆட்டி வைக்கின்றனவா?
காளிதாசன் : ஒன்றும் இல்லை. வானத்தைப் போன்ற தெளிவும் மலைக் காற்றைப் போன்ற சுயேச்சையுமே மனசில் ததும்புகின்றன. நல்ல இன்ப நிலை, சக்தி துள்ளும் போக்கு.
பரமஹம்ஸர் : இங்கே நடப்பதெல்லாம் எனக்குத் தெரியும். இன்னும் கொஞ்சம் பாக்கி. அதற்குப் பிறகு, நீ என்ன ஆகிறாய் என்று நீயே தெரிந்துகொள்வாய். உங்கள் கிராமத்திலும் தெரிந்து கொள்வார்கள். காளி வெல்வாள்.
சாவித்திரி : (மனமுடைந்து கோபமாய்) சிறைவாசம், கஷ்டம் இவைகளில் பழக்கத்தான் நீங்களும் காளியும் முளைத்தீர்களாக்கும்! உங்கள் உபதேசம் ஒரு குடும்பத்தைப் பாழாக்கி விட்டது.
பரமஹம்ஸர் : அம்மா, கோபிக்காதே. முதலில் இருந்தது போலிருந்தால் காளிதாசன் வெறும் பைத்தியமாகியிருப்பான் – அப்பொழுது இருந்த மன நிலையில். இப்பொழுது காளி அவனை வீரனாக்கியிருக்கிறாள். நீயோ உன் குடும்பமோ கெட்டுவிடாது. நல்வாழ்வு கிடைக்கும். புருஷனை நம்பி நட.
சாவித்திரி : (புரளியாய்) ஆமாம், நடக்கிறேன்.
(கோபத்துடன் வீட்டுக்குள் போகிறாள். காளிதாசனும் பரம ஹம்ஸரும் வீட்டுக்கு வெளியே போகிறார்கள்.).
[திரை]



