
நாற்பெரு வள்ளல்கள்
மா. இராசமாணிக்கனார்
1. வேள் பாரி
1.தமிழ் நாடும் வேளிரும்
அமிழ்திற் சிறந்த தமிழ் மொழியதனை வளர்த்தவர் சேர சோழ பாண்டியரென்னும் முடியுடை மூவேந்தரன்றி, வேளிர் என்ற ஒரு வகுப்பாருமிருந்தனர். வேளிரைத் தென்னாட்டு மூவேந்தர் பெரிதும் ஆதரித்தனர். வேளிர் மகளிரையும் மூவேந்தர் மணம் புரிந்து கொண்டனர்.
இவ்வாறு ஆட்சி புரிந்த வேளிர் வரையாது வழங்கும் வள்ளன்மையாலும், அரசரால் பெற்ற வரிசைகளாலும், தண்ணளியாலும், வலிமையாலும், பண்டு தொட்டே நம் தமிழ் நாட்டில் பெரும்புகழ் பெற்று விளங்கினர். இவர்களைப் பாடாத புலவர் இலர் என்றால், இவர்தம் பெருமை பகரவும் எளிதோ! இவ்வேளிரும் இவர்தம் மக்களும் தமிழ்ப்புலமை பெற்று விளங்கினர். இத்தகைச் சிறப்புடை வேளிர்களில் மிகச் சிறந்தோராகக் கருதப்படுபவர் எழுவர். அவர்கள், பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி என்பவர்கள்.
இவ்வேளிர்களுடைய வரலாறுகள் ‘இதுமுதல் இதுவரையில்’ என்பதாக வரையறுத்துக் கூறத்தக்க ஆதாரங்கள் இன்மையால், புலவரால் பாடப்பட்ட செய்யுட்களிலிருந்தே ஒருவாறு இவர் தம் வரலாறு களை அறியவேண்டும். இவ்வெழுவரில் ஒருவனும், புலவர்க் கெளியனாய் விளங்கியவனும், யாவராலும் போற்றப் படுபவனுமான வேள் பாரி என்பவனது வரலாற்றை ஈண்டுக் கூறுவோம்.
2.பறம்பு நாடு
“புரசைப் புறத்தினிற் சேரனுஞ் சோழனும் போர்புரிய
இரியச்சயங்கொண்ட போழ்தினில்யாமினியீங்கிவனைப்
பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்ய மென்றே
வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே.”
-பாண்டி மண்டல சதகம்
இச்செய்யுளால் வேள் பாரி பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் என்பது அறியப்படுகிறது. அவனுக் குரிமையாயிருந்த நாடு பறம்பு நாடு எனப்படும். ஆதலின், பறம்பு நாடு பாண்டிய நாட்டைச் சேர்ந்ததாகும். பறம்பு என்னும் அழகிய மலை அந்நாட்டில் உள்ளது. அஃது இக்காலத்தில் பிரான்மலை என வழங்குகின்றது என்பர் சிலர். பறம்பு நாடு வளத்தில் மேம்பட்டிருந்தது இனிய பூஞ்சுனைகளையும் பூஞ்சோலை களையும் மிகுதியாகக் கொண்டது. இயற்கை அமைப்பால் அப்பறம்பு நாடு பல புலவர்கட்குப் பொழுது போக்கை உண்டு பண்ணி வந்தது என்னலாம்: அப்பறம்பு நாடு தன்னகத்தே முந்நூறு ஊர்களைக் கொண்டதாகும். அந்நாட்டிற்கு நடு நாயகமாக இருந்தது பறம்புமலை. மூங்கில்களும் பலா மரங்களும் இனிய பூஞ்சுனைகளும் மிகுதியாக இம்மலையில் உண்டு.
பறம்பு மலைமீது ஒரு பேரரண் உண்டு. அவ்வரணில் வேள்பாரி என்பவன் தன் குடிகளோடு வாழ்ந்து வந்தான். இயற்கை அமைப்பாலும் செயற்கை அமைப்பாலும் அவ்வரண் பார்ப்போர் உள்ளத்தைக் கவரும் கட்டழகு வாய்ந்தது. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திடங்களில் விளையும் பொருள்களையும் அவ்வரணுள் காணலாம். அதனை நவமணித்திரள் நிறைந்த நற்பெட்டி யென்னலாம். அவ்வரண் அரசனது அழகிய அரண்மனையையும், ஆயுதச் சாலைகளையும், பொக்கிஷச்சாலைகளையும், குடிகளின் இல்லங்களையும், சிங்கார மண்டபங்களையும், பலா மரத் தோப்புக்களையும் தன் அகத்தே கொண்டது. என்றும் வற்றாததும், இனிமை பயப்பதுமான குளிர்ந்த நீரையுடைய பூஞ்சுனையொன்று அவ்வரணுள் இருந்தது. அவ்வரண் அதிக காவலைக் கொண்டது.
3. வேள் பாரி
வேள் பாரி கடையெழு வள்ளல்களில் ஒருவன்; ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டவன். அவன் நல்லொழுக்கம் வாய்ந்தவன்; குடிகளை அன்போடும் அருளோடும் காத்து வந்தவன்; இரப்போரைக் காணச் சகியாதவன்; எவர் எதை வேண்டிவரினும் ‘பெறுக,’ என்று அன்போடு கூறி அவர் வேண்டியதை அளிப்பவன். அவனைப் பாடாத புலவர் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனாரும் தமது தேவாரத்தில், “கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை,” என்று கூறியுள்ளார். கொடையிற் சிறந்து விளங்கிய வள்ளல்கள் பலர் இருந்தும், அப்பெரியோர் பாரியை உதாரணமாகக் காட்டியதேன்? அவன் அக்காலத்து வள்ளல்கள் அனைவரினும் மேம்பட்டு விளங்கியதாலன்றோ?
“புலங்கந் தாக இரவலர் செலினே
வரைபுரை களிற்றொடு நன்கல னீயும்
உரைசால் வண்புகழ்ப் பாரி.”
-அகநானூறு
என்று நல்லிசைப் புலமை வாய்ந்த மெல்லியரான ஒளவையாரால் புகழ்ந்து பாடப்பெற்றவன் அவ்வேள் பாரி.
அவன், பைந்தமிழ்ப் பாவலர் போற்றும் கபிலர் என்னும் புலவர் பெருமானின் ஆருயிர் நண்பன். அதனால், அவன் ஒழுக்கத்திலும் குணத்திலும் மேம்பட்டவன் என்பது வெள்ளிடை மலை. அப்பாரி, வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் வாளும் உடைய குறுநில மன்னவன். அவன் நாட்டையும் பொருளையும் படையையும் அதிகம் பெற்றிலனாயினும், அவனது வள்ளன்மை மூவேந்தர் வள்ளன்மையினும் தலைமையுற்று விளங்கியது.
அவன் மனைவியானவள் கணவன் கருத்துக்கிசைந்த காரிகை.
வேள் பாரிக்குப் பெண்மக்களிருவர் இருந்தனர். அவர்கள் கல்வியில் கலை மகளையும் அழகில் அலை மக்களையும் பொறையில் மலை மகளையும் ஒத்திருந்தார்கள். அவர்கள் தங்கள் இளமையிலேயே கபிலர் பெருமானிடங் கல்வி கற்று, கவி பாடும் ஆற்றலையும் பெற்றுச் செந்தமிழ்ச் செல்வியராய் விளங்கினார்கள்.
பாரி, மனமொத்த தனது இல்லாளுடனும், பெண்களுடனும், உயிர் நண்பரான கபிலருடனும் இருந்து காலங்கழித்து வந்தான்.
4. முல்லைக்குத் தேர் நல்கியது
உம்பர் காவனைய கையனாகிய வேள்பாரி ஒரு நாள் தனது பொற்றேர் ஊர்ந்து வேட்டைக்குப் புறப்பட்டான். பறம்பு மலையை யடுத்து பெரிய காட்டில் பல வகைப்பட்ட கொடிய விலங்குகள் அடிக்கடி மலை நாட்டாரைத் துன்புறுத்துவ துண்டு. மலைச் சாரலின்கண் வாழும் மக்கள் வளர்த்து வந்த ஆடு மாடுகளை அடிக்கடி புலி முதலிய விலங்கினங்கள் கவர்ந்துகொண்டு போவதுண்டு. தன் நாட்டுக் குடிகளுக்கேற்படும் இன்ப துன்பங்களுக்கு அரசன் உரிமை யுடையவன் அன்றோ? அதனால், தன் குடிகளுடைய துயரைப் போக்கக் கருதியே பாரி வேந்தன் வில்லும் வாளும் ஏந்தி, விலங்குகளை வேட்டையாடச் சென்றான்.
வள்ளல் பல்வகை மிருகங்களை அம்பெய்து கொன்றான்; தன்மனம் மகிழுமாறு அன்று வேட்டையாடினான். ஆடிய பின்னர், அவன் தன் தேர்மீது இவர்ந்து வந்துகொண்டிருந்தான் அவ்வாறு அவன் வருகையில், தன் நாட்டு வளப்பத்தைக் கண்டு மகிழ்பவன் போல், இருபுறங்களிலும் ஊன்றிய பார்வையுடனிருந்தான். அவன் ஓர் இடத்தில் முல்லைக் கொடியொன்று, படர்வதற்கு ஏற்ற கொழு கொம்பு இல்லாது, வெயிலாலும் காற்றாலும் துன்புறுவதைக் கண்டான். உடனே அவ்வள்ளல் அம்முல்லையருகில் தன் தேரை நிறுத்தினான்; கீழறங்கினான்; முல்லை படும் துன்பத்தைக் கண்டான்; அவனது மனம் மயக்கங் கொண்டது; கண்களில் நீர்த்துளிகள் துளித்தன. பிறர் துயரம் காணச் சகியாத அவன், “அந்தோ ! இக்கொடியை இதுவரை யாவரும் கவனிக்கவில்லையோ! செடி கொடி முதலியவைகட்கும் உயிர் உண்டென்று கூறுகின்றனரே! இக்கொடி படர்தற்கேற்ற கொழு கொம்பு இல்லாது இவ்வாறு வாடுகின்றதே! என் செய்வேன்!” என்று இரக்கமுற்றவனாய்க் கொம்பொன்றைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தான்; கொடி படர்தற்கேற்ற கொம்பு கிடைக்கப் பெறாது, மனம் வருந்தினான். “யான் என் செய்வல்! ஏற்ற கொம்பு ஒன்றும் கிடைக்கவில்லையே! இதன் வாட்டத்தைக் கண்டும், இதற்கு உதவி செய்யாது யான் செல்லுதல் அழகோ! அவ்வாறு யான் சென்றாலும், என் மனச்சாட்சி என்னைச் சுட்டெரிக்குமே! பிறர் துயரங்காணச் சகியாத தன்மை வாய்ந்த யான், இச்சமயத்தில் இம் முல்லைக் கொடிக்கு ஏற்ற உதவி செய்ய வகையறுயாது தயங்குகின்றேன்!” என்று கூறி வருத்த முற்றான். பின்னர் ஏதோ யோசித்தவன் போல, அவன் களிப்புற்று, “ஆ! மறந்தேன்! எனது பொற் தேரை இம்முல்லைக் கொடி படர்வதற்கு ஆதரவாக விட்டுவிட்டுச்செல்வேன்; இதுவே சரியானது,” என்று கூறிக்கொண்டான். உடனே அவன் சிறிதும் யோசியாது, தன் பொற்றேரைக் காற்றால் அலைப்புண்ட அம்முல்லைக் கொடிக்கு அருகில் நெருங்க விட்டான்; ஆடிக்கொண்டிருந்த கொடி இனிதாய்ப் படருமாறு தன் தேர்மீது அதனை எடுத்து விடுத்தான்.
தேரை முல்லைக்கு நல்கியதால் அவன் அவ்விடத்தி னின்றும் புறப்பட்டு, வெயிலால் மண்டை வெடிக்கவும், கால்கள் கொப்பளிக்கவும் நடந்து சென்று தன் அரண்மனையை அடைந்தான். அவ்வள்ளல் பெருமான் செய்த இவ்வரிய செயல் பல நூல்களில் பல அறிஞராற் பாராட்டப்படுகின்றது. இதனை,
“சீறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பறம்பிற் கோமான் பாரி”.
-சிறுபாணாற்றுப்படை
“பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிரும்பப் பாடா தாயினும்,
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி.”
-புறநானூறு
என்னும் பண்டைச் செய்யுளடிகளால் அறியலாம்.
5. கபிலர் புகழ் மொழிகள்
கபிலர் வேள் பாரியின் அருங்குணங்களைக் கண்டு அவ்வப்போது புகழ்பவர். அவர் ஒருகால் பாரியினது வள்ளன்மையைப் புகழ்பவராய், “நல்லன என்றும் தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் மலர்கள்; அவையிரண்டினும் வேறான எருக்கம் பூக்களாயினும், ஒருவனுடையனவற்றைத் தெய்வங்கள் விரும்பேமென்று சொல்லாவாம். அதுபோல, அறிவில்லாதாரும் அற்ப குணமுடையாரும் சென்றாலும், பாரி அவர்கட்குப் பொருள் ஈதலில் தவறான். இவ்வுலகத்தைக் காப்பதற்கு மாரியுண்டு. அங்ஙனம் இருக்கச் செவ்விய புலமை வாய்ந்த அறிவுடையோர் ‘பாரி, பாரி’ என்று சொல்லி, அவனது பல புகழையும் வாழ்த்தி, அவ்வொருவனையே புகழ்வர். இதனால் மாரியினது வள்ளன்மையைவிடப் பாரியினது வள்ளன்மை மிகச் சிறந்ததென்பது வெள்ளிடைமலை. பறம்பு நாட்டில் மிக்குள்ள மரங்கள் சந்தன மரங்களே. அவற்றைக் குறத்தியர் எரிக்கின்றனர். சந்தன மரங்களை எரித்தலால் உண்டாகும் புகை, அருகேயுள்ள வேங்கை மரத்திற் படியும். இத்தகைய வளம்பொருந்திய பறம்பு நாட்டைப் பாரி, பாடுவார்க்குப் பரிசிலாகக் கொடுத்து விட்டனன். இவனது பரந்த சிந்தையையும் விரிந்த நோக்கத்தையும் நற்குண நற்செயல்களையும் என்னென்பது!” என்று தமக்குள் கூறிவியந்தார்.
அவர் ஒருநாள் ஒரு விறலியைச் சந்தித்தார். அவள் விரைவாகச் சென்று கொண்டிருந்தாள். கபிலர் அவளை நோக்கி, “ஒளி தங்கிய நுதலையுடைய விறலி, உயர்ந்த பறம்பு மலையினது காவலனும், அவனுடைய மலையினது சிகரந் தோறும் இழிதரும் நீரினும் மிக்க இனிய மென்மையுடைய வனுமான பாரி பக்கலிலே நீ பாடிச் செல்வாயாக; அவ்வாறு செல்வாயாயின், எம் மன்னர் பெருமானிட மிருந்து சிவந்த அணியைப் பெறுகுவை; வேண்டும் பரிசிலை யடையலாம்,” என்று பாரியினது வள்ளன்மையைச் சீர்தூக்கிப் புகழ்ந்தார்.
விண்ணவரும் மண்ணவரும் புகழ்ந்து போற்றும்படி பாரி தனக்கு உரியனவாயிருந்த முந்நூறு ஊர்களையும் தன்னைப் பாடி வந்த இரவலர்க்கே அளித்து மகிழ்ந்தனன். பிறர்க்கு நன்மை புரிவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த வேள் பாரியின் புகழ் சொல்லவும் எளிதோ!
6. மூவேந்தர் முற்றுகை
பொறாமை என்பது மக்கள் மனத்தே உண்டாகும் ஒரு தீய எண்ணம். அஃது அறியாமையால் உண்டாவதேயன்றி, வேறன்று. கற்றோராயினும் கல்லாராயினும், வறிஞராயினும் செல்வராயினும் இத்தீய எண்ணம் இலாதார் சிலரே. பிறரது செல்வப் பெருக்கைக் கண்டு, அவர்மீது பொறாமை கொள்பவர் பலர். பிறரது கல்வியறிவைப் பார்த்துத் தம்மினும் மேம்பட்டவராய் அவர் விளங்குதலைக் காணச் சகியாதார் பலர். பிறர் தமது கொடைத் திறத்தால் எய்தும் புகழைக் கண்டு, அவர் மீது பொறாமை கொள்பவர் சிலர். வேந்தராயினும், முற்றும் துறந்த பெரியாராயினும், இப்பொறாமை என்னும் கொடிய பேய் அவர்களைப் பிடித்துத் தன் ஆட்சியைச் செலுத்துகின்றது.
தமிழ் நாட்டில் ஆண்டுவந்த சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரும் இப்பொறமை என்னும் பேய்க்கு ஒருகால் வசமாயினர். அவர், வேள் பாரியின் வள்ளன்மையால் உண்டான குற்றமற்ற புகழைக் கேட்க ஆற்றாராயினார். பாரியின் புகழ், காற்றானது உலகு முழுதும் பரந்து செல்லுதல் போலத் தமிழ்நாடெங்கும் பரந்தது. யாவரும் அவனது கொடைத் திறத்தை வியந்தனர். குறுநில மன்னர் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
பொறாமை கொண்ட முடியுடை மூவேந்தரும் ஒன்று சேர்ந்து தத்தம் தானையோடு சென்று பாரியைப் போரில் வென்று விடத் துணிந்தனர். அவர்கள், கடல் போன்ற தம் சேனைகளோடு பறம்பு நாட்டை அடைந்தார்கள்; பறம்பு மலையரணை முற்றுகை யிட்டார்கள். இச்செய்தி பாரிக்கு எட்டியது. வள்ளன்மையிற் சிறந்த வேள் பாரி மூவேந்தர் செய்கைக்கு வெகுண்டிலன்; அவர்களை எதிர்த்திலன்; தனது அரணுக்கு ஏற்ற பாதுகாவலை வைத்துத் தன் அரண்மனையின் இனிதிருந்தான். அரணில் உள்ளார்க்கு வேண்டிய உணவுப் பொருள்கள் யாவும் அரணுள்ளேயே இருந்தமையால், பாரியும் அவனுடைய குடிகளும் துன்பமின்றி இன்பத்துடன் இருந்தார்கள்.
சில மாதங்கள் சென்றபின்னர், அரணுள் இருந்தவர்களுக்கு உணவுப்பொருள்கள் குறைந்தன. அவ்வமயம் புலவர் பெருந்தகையான கபிலர், தாம் வளர்த்து வந்த எண்ணிறந்த கிளிகளைத் தினந்தோறும் அரணுக்கு வெளியே விட்டு வந்தனர். அவை விளை நிலங்களுக்குச் சென்று நெற்கதிர்களைக் கொண்டு மீண்டன. அவற்றை அரிசி மணிகளாக்கி, அரணில் இருந்தோர் உண்டு வந்தார்கள்.
இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. கபிலர் முதலாக அரணுள் அகப்பட்டோர், ‘இனி உணவின்றி வருந்த நேரினும் நேரும்,’ எனப் பயந்தனர். மூவேந்தரும் பாரியை வெல்ல இயலாது மனஞ்சலித்தனர். அவ்வெல்வையில், புலவர் பெருமானாய கபிலர், அரண் சுவர்மீது நின்று, முற்றுகையிட்டிருந்த மூவேந்தரை நோக்கி, “தமிழ் வேந்தரே, பாரியின் அரணை வீணே முற்றுகையிட்டுச் சலித்தீர். அவனது பறம்பு இரங்கத் தக்கது. அஃது உழவரால் உழுது விளைக்கப்படாத நான்கு விளை யுளையுடையது. அவற்றுள் முதலாவது, சிறிய இலைகளையுடைய மூங்கில் நெல்லாகும்; இரண்டாவது இனிய சுளையையுடைய பலாவினது பழமாகும்; மூன்றாவது, கொழுவிய கொடியையுடைய வள்ளிக் கிழங்காகும்; நான்காவது இம்மலையரணில் மிக்குள்ளது தேன். பாரியினது பறம்பு மலை, அகல நீள உயரத்தால் வானிடத்தையொக்கும். இம்மலையில் உள்ள பைஞ்சுனை வானத்தின் கண் உள்ள மீனையொக்கும். இத்தகைய இயற்கை வளங்களைப் பெற்ற பரம்பு மலையில் உள்ள வேள் பாரியை நீவிர் வெல்லுதல் எளிதன்று. பெருமையைக் கொண்ட முரசினையுடைய நீவிர் மூவேந்தரும் முற்றுகை யிடினும், மிகுந்த யானைப்படை தேர்ப்படை உடையீராயினும், உம் முயற்சியால் இம்மலையரணைக் கொள்ள மாட்டீர்; நுமது வாள் வலியால் எம்மரசன் தளரான். அதனை யான் நன்கு உணர்வேன். யாழை வாசித்து நும் விறலியர் பின்வர ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் அவனிடம் நீவிர் சென்றால், அவன் உங்கட்கு நாட்டையும் மலையையும் பரிசிலாகத் தருவான். அவ்வாறு செய்யாது, எத்தனை காலம் முற்றுகையிட்டிருந்தும், பயன் அடைய மாட்டீர். மறுவலும் கூறுவேன்; கேளும்: இப் பறம்பு நாடு முந்நூறு ஊர்களை உடையது. இது குளிர்ந்த நல்ல நாடு; அம்முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பாடிப் பெற்றனர். அப்பரிசிலர் போல நீவிரும் பாடுவீராயின், நுமக்கு பறம்பு மலையன்றிப் பாரியும் நாமும் உள்ளோம்.” என்று பாரியது வள்ளன்மையையும், மலை நாட்டு வளத்தையும் கூறி முடித்தனர்.
அவர் கூறியவை உண்மையெனவே மூவேந்தரும் உணர்ந்தனர்; ஆயினும், பாரியை எவ்வாற்றானும் கொல்ல வேண்டும் என்ற துணிவு கொண்டனர்; தங்களிடம் குடிகொண்டிருந்த பொறாமை காரணமாக, ஏதோ ஒரு சூழ்ச்சி செய்து பாரியைக் கொன்று விட்டனர். இரவலர்க்கு இனியனாய் விளங்கிய வேள் பாரி, அறிவிழந்து பொறாமையின் வாய்ப்பட்ட மூவேந்தரால் மாண்டதைக் கண்ட அவனது ஆருயிர் மனைவியும் உயிர் நீத்தாள்.
7. கபிலர் புலம்பல்
பாரிக்கு உயிர் நண்பரான கபிலர், தமது நண்பனும் கொடை வள்ளலுமான வேள்பாரி உயிர் நீத்ததைக் கண்டு பெரிதும் வருந்தினார் அவர் அவன் புகழைக்கூறிப் புலம்புபவராய், “அழகிய வேள் பாரியின் பறம்பு மலையில் உண்டாகும் தேறல், பாரி போலவே இனிமையானது; அவன் இறந்ததால் அது கழிந்தது; பறம்பு மகளிர் மிக்க அழகுடையவர்; குளிர்ந்த கண்ணையுடையவர்; இனிய முறுவலையுடையவர்; நெடுவரையேறி முன்பு வேந்தனது கலிமாவை எண்ணுவர்; எம் வேந்தன் இறந்துபட்ட இப்போது ஈத்திலைக் குப்பையேறி உமணர் உப்புச் செலுத்தும் சகடத்தை எண்ணுவர் நோவேன்யான்! என் வாழ் நாட்கள் கெடுவனவாக; புதுவருவாய் இடையறாது வரும் அகன்ற நாடு பகைவர் கொள்ளலாயிற்றே;
“சனி மீன் புகைகளோடு கூடிப் புகைந்தாலும், எல்லாத் திசைகளிலும் புகை தோன்றினும், தென்றிசைக்கண்ணே உள்ள வெள்ளி போக்கு உறினும், வேள்பாரியின் நாட்டு வளம் வற்றாது; வயல்களில் விளைவு அதிகமாக உண்டாகும்; புட்பங்கள் அலரும்; பெண்கள் வருத்தம் இன்றிக் குழவிகளைப் பெறுவார்கள்; மழை ஒரு போதும் அவனது நாட்டில் பிழைக்காது. பாரியது வள்ளன்மையன்றோ இவற்றிற்குக் காரணம்! இத்தகைய மன்னன் மாண்டனனே! எட்டாம் பக்கத்துப் பிறை போலும் வளைந்த கரைகளையும் தெளிந்த நீரையும் உடைய சிறய குளம் பாதுகாப்பார் இல்லாமையால் உடைந்துவிடும் போலும்! கூரிய வேலையும் திரண்ட தோளையும் உடைய வேள் பாரியின் குளிர்ந்த பறம்பு நாடு இனிச் சீர் கெட வேண்டுவதே. பாரியது பெருமையை யான் என்னென்று இயம்புவேன்! நிழல் இல்லாத நெடிய வழியில் நின்ற தனி மரம்போல முரசையுடைய அரசரினும் மிகுந்த இரவலர்க்கு வழங்கும் வண்மையையுடையன் பாரி; அவனது நாடு முன்பு, மெல்லிய தினையாகிய புது வருவாயையுடையது; வேங்கை மரங்களையுடையது; கதிரினது அடியும் தலையும் ஒழியாமல் மிகக் காய்க்கும் பயிர்களை வயலிடங்களில் உடையது. வரகு அதிகமாக விளைவதும் அவரைக் கொடிகள் அதிகமாக உள்ளதுமாகிய இந்நாடு இனிக் கெடும் போலும்!” என்று நாட்டையும் பாரியையும் நினைந்து மனம் வருந்திப் புலம்பினார்.
8. கபிலரும் பாரி மகளிரும்
பாரி இறந்ததும் கபிலர் இறந்திருப்பார். ஆனால், பாரி அவரை அங்ஙனம் செய்யவிடாமல் தடுத்தமையாலும், பாரியின் மகளிரிருவரையும் காப்பாற்றுவார் இன்மையாலும், அவர்களை மணஞ் செய்து தரும் வரையில் தாம் உயிருடன் இருத்தல் வேண்டும் என்று அவர் தீர்மானித்துக் கொண்டார். அவர்களுக்குத் தக்க அறிவும் பெருமையும் உடைய கணவரைத் தேட நினைந்து அவர்களை அழைத்துக் கொண்டு பறம்பு நாட்டை விட்டுப் புறப்பட்டார் புலவர். அவ்வாறு புறப்படும் போது பாரியை நினைந்து புலம்பினார்; அவனது வள்ளன்மையை நினைந்து வருந்தினார்; பறம்பு அரணைத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் ஆறாய்ப் பெருக, ஆற்றொணாத் துயரால் உள்ளத்தினின்றும் பொங்கி எழுந்த அன்புடைய பாடல்களால், பாரியையும் பறம்பு மலையையும் நாட்டையும் புகழ்ந்து கொண்டே சென்றனர்.
சென்று, ஓர் ஊரில் அன்றிரவு தங்கினர். அவ்விரவு நிலாத் தோன்றியது. அந்நிலவைக் காணப் பாரிமகளிர், தாம் அதற்கு முந்திய நிலாக்காலத்தில் தமது அரணுள்ளே தந்தையோடு இனிதே வாழ்ந்ததையும் அடுத்த நிலாக் காலத்துத் தங்கள் தந்தையை இழந்து தங்கள் பறம்பையும் இழந்து தமியராய்ப் பிறர் இருப்பில் தங்க நேர்ந்ததையும் எண்ணி எண்ணி வருந்தினார்கள். அவர்கள் மன முருகி,
“அவற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
எந்தையு முயையேம்; எங்குன்றும் பிறர்கொளார்:
இவற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெங்
குன்றுங் கொண்டார்; யாம் எந்தையு மிலமே,”
-புறநானூறு
என்று பாடிப் புலம்பினார்கள்.
பின்னர், கபிலர் அம்மகளிரை அழைத்துக் கொண்டு பலநாட்கள் வழி நடந்து, இளவிச்சிக்கோ என்னும் சிற்றரசனிடம் சென்றனர். அவன், நன்னன் என்னும் வேளிர் குலத் தலைவனது வழித் தோன்றல். அவன் கபிலரை வரவேற்றான். கபிலர் பாரி மகளிரை அவனுக்குக் காட்டி, “முகிலாலும் உச்சியறியப்படாத உயர்ந்த மலைக்குத் தலைவ, நினது குளிர்ந்த மலையின்கண் ஓங்கிய பசிய இலையயுடைய பலா மரங்களின் பழத்தைக் கவர்ந்துகொண்ட கடுவன், சிவந்த முகத்தையுடைய தனது மந்தியுடனே சேர்ந்து வாழும். அப்பலா மரங்களை மிக்குடையாய் நீ; நிணத்தைத் தின்றுகளித்த நெருப்புப் போலும் தலையையுடைய நெடிய வேலினையும், களத்தைத் தனதாக்கிக் கொண்டு வெகுளும் தறுகண் யானையையும், விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரணத்தையும் உடைய விச்சிக்கோவே, மிக்க விளைவையுடைய நாட்டையுடையோய், போரில் பகைவேந்தரது மிடுக்கையடக்குபவனே, இம்மகளிர், கொடி முல்லை தன்னை நாத்தழும்பேறப் பாடாதிருந்தும், மணிகள் ஒலிக்கும் நெடிய தேரைக் ‘கொள்க’ என்று சொல்லிக் கொடுத்த வள்ளன்மையிற் சிறந்த வேள் பாரியின் பெண்கள்; யான் பரிசிலன்; அது வன்றியும், நிலைபெற்ற அந்தணன். நீயோ, பகைவரைப் போர் செய்யும் முறைமையாற் பொருது தாழ்விக்கும் மேன்மையுடையை. ஆதலால், நினக்கு யான் தருவதைக் கொள்வாயாக,” என்றார்.
பாரி மகளிரைத் தன்னை மணஞ் செய்து கொள்ளுமாறு புலவர் வேண்டுகின்றார் என்பதை உணர்ந்தான் இளவிச்சிக்கோ; மூவேந்தர்க்கும் பகைவனான பாரியினுடைய மகளிரைத் தான் மணந்தால், அதனால் என்ன தீமை விளையுமோ என்று பயந்தான். அவ்வேள், கபிலரை நோக்கி, “புலவீர், இப்பெண் மணிகளை யான் மணந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளேன்,” என்று உறுதியாய்க் கூறினன்.
கபிலர், உடனே அம்மகளிரை அழைத்துக் கொண்டு சென்று, கொடையாளிகளுள் ஒருவனான இருங்கோவேள் என்பவனை யடைந்தார். அடைந்த புலவர் அவ்வள்ளலை நோக்கி, “மாலையை யணிந்த யானையுடைய இருங்கோவே, நீ வடப்பக்கத்து முனிவ னுடைய ஓம குண்டத்தில் தோன்றித்துவராபதி யென்னும் படை வீட்டையாண்டு வள்ளன்மையிற் சிறந்த நாற்பத்தொன்பது தலை முறை தொன்று தொட்டு வந்த வேளிர்களுள் வைத்துப் போற்றற் குரியாய்! வெற்றிப் போரையுடைய தலைவ, புலிகடி மாலே, வானாற் கவிக்கப்பட்டுப் பெருங்கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தின்கண் அணுகுதற்கரிய வலியையுடைய பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவ, வெற்றி வேலைத் தாங்கிய பகைவர் அஞ்சும் படைக்கும் கேடில்லாத நாட்டிற்கும் உரியவனே, என்னுடன் வந்துள்ள இம்மகளிர் யாரென்று வினவுவாயாயின், இவர்கள், ஊர்கள் எல்லாவற்றையும் இரப்போர்க்கு வழங்கித்தேரை முல்லைக் கொடிக்கு வழங்கியவனும், தொலையாத நல்ல புகழுடையவனும், பறம்பிற்குத் தலைவனுமான வேள் பாரி பயந்தபெண்கள். யான் இவர்கள் பிதாவின் தோழன். ஆதலால், இவர் எம் மகளிர் ஆவர். யான் இவரை நினக்குத்தர, நீ இவரைப் பெற்றுக்கொள்வாயாக,” என்று இருங்கோவேளது புகழையும் வேள் பாரியின் புகழையும் தாம் மேற்கொண்டுள்ள வேலையையும் கூறி, அப்பெண்களை மணந்துகொள்ளுமாறு வேண்டினார்.
இருங்கோவேளும், இளவிச்சிக்கோவைப் போல, மூவேந்தர்க்குப் பயந்தவனாய், அம்மகளிரை மணக்க உடன்பட வில்லை. அவன் உடன்படாததைக் கண்ட கபிலர் மனம் நொந்தார். அவர் மன வருத்தத்துடனே அவனை நோக்கி, “பெருமானே, புலவர் மனம் வருந்துமாறு அரசர் நடந்து கொள்ளல் ஆகாது. உன்னை யொத்த அறிவினையுடைய உனது குடியுள் ஒருவன், பெரும்புலவரான கழாத்தலையார் என்பவரை அவமதித்தான். அதன் காரணமாக, வெற்றி நிலை பெற்றுச் சிறந்த புகழோடு இருந்த சிற்றரையும் பேரரையம் என்னும் அவனது நாடு கேடுற்றது. என் வார்த்தையை நீ அவமதித்தலாகாது. இம்மகளிர் வேள் எவ்வி என்பானது குடியிலே படுவார்களாக. பின்னை இவர் கைவண்மையுடைய பாரி மகளிர் என்று சொல்லிய எனது அற்பவார்த்தையைப் பொறுப்பாயாக. பெரிய மலையிடத்து ஊர்களையுடைய நாட்டையுடையாய், யான் நின்பால் விடை கொண்டேன்,” என்று அகன்றார்.
பாரி மகளிரது மணத்தைப் பற்றிப் பலர் பல விதமாகக் கூறுகின்றனர்: கபிலர் அம்மகளிரைப் பார்ப்பாரது பாதுகாவலில் வைத்துத் தீயில் விழுந்திறந்தனர் என்பர் சிலர்; மூத்தவளான சங்கவை என்பாளை மலையனுக்கு மணஞ் செய்து கொடுத்த பின்னர், இளையவளான அங்கவையைப் பார்ப்பாரது பாதுகாவலில் விட்டனர் என்பர் சிலர்; இளையவளை அவ்வை மூதாட்டியார் தெய்வீகன் என்னும் சிற்றரசனுக்கு மண முடித்தனர் என்பர் சிலர். இவற்றை வைத்துக் கொண்டு நமது அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் எட்டியவாறு கதையை முடிப்போம்:
கபிலர் பெருமான் அங்கவை சங்கவை என்ற இரு பெண்களையும் அழைத்துச் சென்று, திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு அரசாண்டு வந்த மலையனை யடைந்தார். அவன் சிறந்த அரசன்; வென்றி மிக்க வேந்தன். அவன் பாரியினது பரந்த புகழைக் கேள்விப்பட்டிருந்தான். ஆதலின், அவன் பாரியினுடைய மூத்தமகளான சங்கவை என்பாளை மணந்து கொண்டான். அதன் பின்னர் கபிலர் இளையவளான அங்கவை என்பாளைப் பார்ப்பார் சிலரது பாதுகாவலில் வைத்தார். வைத்த பிறகு, “இனி இவ்வுலகில் இருந்து பயன் என்? வீடு பேற்றை யடைதலே தகுதி, ” என்று எண்ணினார். அவர் பெண்ணை நதியின் மத்தியில் தீயுண்டாக்கினார். அக்கினிப் பிரவேசமாகத் தயாராகவிருந்த “அவர், மலை நாட்டையுடைய பாரி, பெரிய கை வண்மையை யுடையாய், நீயும் யானும் கலந்த நட்பிற்குப் பொருந்த, யானும் நின்னுடன் கூட வருவதற்கு மனம் இல்லாமையாலே, ‘நீ ஈண்டுத் தவிர்க,’ என்று சொல்லி இவ்வாறு மாறுபட்டனை யாதலால், நீ எனக்கு உதவி செய்த காலங்களிலும் என்னை வெறுத்திருந்தாய் போலும்! இவ்வாறு யான் பொருந்தினவன் அல்லேனாயினும், இப்பிறப் பின்கண் நீயும் நானும்கூடி இன்புற்று இருந்தது போல, மறு பிறப்பினும் நின்னோடு கூடி வாழ்தலை ஊழ் கூட்டுக,” என்று மனமுருகப் பாடி, வடக்கிருந்து உயிர் நீத்தனர்.
9. அங்கவை திருமணம்
நல்லிசை மெல்லியரான ஒளவையார் ஒருகால் திருக்கோவலூரை அடைந்தார். அவர், வேள் பாரி அடைந்த அகால மரணத்தையும் அவன் மகளிர் பட்ட துன்பத்தையும் அறிந்தார்; இளையவளான அங்கவையை யாருக்கேனும் மணமுடித்துக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தார்.
ஒளவையார், அக்காலத்து அரசாண்டிருந்த தெய்வீகன் என்னும் அரசன் ஒருவனைத் திருமணத்திற்குச் சம்மதிக்கச் செய்தார். அத்திருமணத்தைச் சிறப்பாக நடத்த வேண்டுமென்று ஒளவையார் விரும்பினார். அதனால், அவர் சேர சோழ பாண்டிய மன்னர்க்குத் தனித்தனியே நிருபம் வரைந்தார். அவர்கள் பாரியின் பகைவராத லால், வாராதிருப்பரோ என்று எண்ணி, அவர்களை வருமாறு வற்புறுத்தினார்.
“சேரலர்கோன் சேரல் செழும்பூந் திருக்கோவ
லூரளவுந் தான்வருக உட்காதே;-பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்
சங்கியா தேவருக தான்.”
என்று அம்மையார் சேரனுக்கு நிருபம் எழுதி அனப்பினர். பின்னர் அவர்,
“புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
துகாதென்று தானங் கிருந்து-நகாதே
கடுக வருக கடிக்கோவ லூர்க்கு
விடியல் பதினெட்டா நான்.”
என்று சோழ மன்னர்க்குக் கடிதம் வரைந்தனுப்பினர். அதன் பிறகு அம்மையார்,
“வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே-தையற்கு
வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநாள்
ஈண்டு வருக இயைந்து.”
என்று மாட மதுரைப் பாண்டிய மன்னற்கு நிருபம் தீட்டி யனுப்பினர்.
மூவேந்தரும், ஒளவையாரின் அருட்பாடலைக் கண்டதும், அவ்வம்மையாரை நன்கு அறிவாராதலால், அவரது கட்டளைக்கு உட்பட்டுத் திருமணத்திற்கு வந்திருந்தனர். திருமணம் அணி பெற நடக்கையில் ஒளவையார் பல தெய்வீகச் செயல்களைச் செய்து காட்டினர். திருமணம் நடைபெற்றது. அங்கவை கணவனுடன் இனிது உறைவாளாயினள்.
இவ்வாறு, பாரி மகளிர் அல்லலுறா வண்ணம் கபிலர் ஒரு பெண்ணுக்கு மணம் செய்ததும், ஒளவையார் ஒரு பெண்ணுக்கு மணம் செய்ததும் போற்றற் பாலன.



