
நாற்பெரு வள்ளல்கள்
மா. இராசமாணிக்கனார்
குறிப்புரை
I. வேள் பாரி
ஐந்திடங்கள் : – குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன.
குறிஞ்சி : – மலையும் மலை சார்ந்த இடமும்; விளை பொருள்-சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில், மலைநெல், மூங்கிலரிசி, தினை.
பாலை : – குறிஞ்சி, முல்லை முதலியவற்றின் இடையிடையே மருவியலிடம்; விளை பொருள் : -உழிஞை, பாலை, ஓமை, அருப்பை முதலான பலவகை மரங்கள்.
முல்லை : – காடும் காடு சார்ந்த விடமும்; விளைபொருள் :- கொன்றை, காயா, குருந்தம் முதலான மரங்களும்; வரகு, சாமை, முதிரை என்ற கூல வகைகளம்.
மருதம் : – ஊரும் ஊரைச் சார்ந்த விடமும்; காஞ்சி, வஞ்சி, மருதம் முதலிய மரங்கள் உண்டாகும்; செந்நெல் அரிசி, வெண்ணல் அரிசியுண்டாகும்.
நெய்தல் : – கடலும் கடலைச் சார்ந்த இடமும்; கண்டல், புன்னை, ஞாழல் (புலி நகக்கொன்றை) முதலிய மரங்களும்; நெய்தற்பூ, தாழம்பு, முண்டகப்பூ, அடம்பம்பூ முதலிய புட்பங்களும் இவ்விடத்துப் பொருள்கள். (நம்பி அகப்பொருள்-அ-இயல்)
‘புலம் கந்தாக. . . . . . . . . . . . . . . . . . பாரி.’-அறிவால் உழு துண்ணுதலையே பற்றிக்கோடாகக் கொண்டு, இரவலர்வரின், மலையையொத்த யானையோடு நல்ல பாணங்களைக் கொடுக்கும் எடுத்துச் சொல்லப்பட்ட வளமிக்க புகழையுடைய பாரி. (அகம்-303)
உம்பர்காவனைய கையான்-(விரும்புவதைத் தருவதில்) வானுலகில் உள்ள கற்பக மரத்தினை ஒத்த கையையுடையான். (“உம்பர்கா வனைய கையான் உன்னுரை மறுத்தானாகில்” என்பன வில்லி பாரதம், கிருஷ்ணன் தூதுச் சருக்கும் செய்யுள் 157)
செய்வல்-செய்வேன், இதில் அல்-தன்மை யொருமை எதிர் கால வினைமுற்று விகுதி.
‘சிறுவீ . . . . . . . . . . . . பாரி,’- சிறிய மலர்களையுடைய முல்லைக் கொடிக்குப் பெரிய தேரைக் கொடுத்த பறம்பு என்னும் மலையையுடைய அரசனாகிய பாரி.
(சிறுபாணாற்றுப்படை, 89-91)
‘பூத்தலை யறாஅப் . . . . . . ,’-பூவைத் தனது தலையினிடத்து நீங்காத அலங்கரித்தாற் போன்ற முல்லைக்கொடி தன்னை நாத்தழும்பேறப் பாடாதிருந்தும், ஒலிக்கின்ற மணியையுடைய நெடிய தேரைக் ‘கொள்க,’ என்று சொல்லிக் கொடுத்த பரந்த மேம்பட்ட தலைமையினையுடைய பாரி.
(புறம் – 200)
வெள்ளிடை மலை : வெளியிடத்துத் தோன்றும் மலை : அது யாவர் கண்ணுக்கும் வெளிப்படையாகத் தோன்றும். விறிலி-பரிசில் பெறுவதற்குப் பாடு மகள். அவ்வெல்வையில்-அவ்வேளையில்.
இரங்கத் தக்கது. அஃறிணைப் பொருளான பறம்பு அரணும் இரவலர்க்கு இரங்கும் என்பதைக் குறித்தபடி.
ஊழ்க்கும் – உதிர்க்கும்
வான் மீன் – நட்சத்திரம்
மறுவலும் – இரண்டாமுறையும்
இரவலர் – யாசகர்
தேறல் – தேன்
நெடுவரை – உயர்ந்த மலை
கலிமா – சுனைத்தலையுடைய குதிரை
ஈத்திலைக் குப்பை – ஈந்திலைக் குப்பை; ஈத்து – ஈந்து என்பதன் வலித்தல் விகாரம்
உமணர் – உப்பு விளைவிப்போர்
சனி மீன் – சனிக்கிரகம்
வெள்ளி – சுக்கிரன்
பிழைக்காது – (பெய்தலில்) தவறாது
எந்தை – எம் தந்தை (மரூஉ)
கடுவன் – ஆண் குரங்கு
மந்தி – பெண்குரங்கு
தறுகண் – அஞ்சாமை
துவாரபதி – இது பறம்பு நாட்டைச் சேர்ந்த ஒரு நிலப்பகுதியின் பெயர்.
படை வீடு – படைகள் தங்கத்தக்க விடம்.
புலி கடி மாலே – புலியைக்கொன்ற வேளினது சந்ததியில் தோன்றியவனே!
வேள் எவ்வி – இவன் பழைய வேளிர் தலைவருள் ஒருவன், இவன் நாடு மிழலைக் கூற்றம் என்பது.
தவிர்க – போதலை யொழிக.
உட்காதே – நடுங்காமல், உட்காது இயைந்தான் என இயையும்.
புகார் மன்னன் – காவிரிப்பூம் பட்டினத்திற்கரசனான சோழன். இஃது அண்மை விளி.
பொன்னி – காவிரி யாறு
நகாதே – சிரிக்காமல்
வையைத் துறைவன் – பாண்டியன்
தென்னன் – பாண்டியன்
II. வேள் ஆய்
சுர புன்னை மாலை – புன்னைப்பூ வடிவாகப் பொன்னாற் சமைத்த மாலை; இஃது அடையாள மாலை.
‘தொனஅது . . . . . . . சூர் மகள்,’-தென்றிசைக்கண் உள்ள ஆய் என்பானது நன்னாட்டில் தெய்வத் தன்மை வாய்ந்த மலைத் தொடருள் கவிரம் என்னும் பெயருடையதும் அச்சத்தைத் தருவதுமாகிய மலையின் அழகு வாய்ந்த மலர் நிறைந்த நீர்ச்சுனையிற்றங்கும் நீரர மங்கையர்.(அகம். 198)
‘நீல நாகம் . . . . . . . . . . ஆய்,’-கரிய நாகமொன்று உரித்துக் கொடுத்த பிரகாசிக்கின்ற நீல ஆடையை ஆலமரத்தின் கீழ் எழுந்தருளிய சிவ பிரானுக்கு மனமுவந்து கொடுத்த வில்லைத் தாங்கிய சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும் கேட்போர்க்கு விருப்பத்தைத் தரும் நல்ல சொல்லினையும் உடைய ஆய்.
(சிறுபாணாற்றுப் படை, 96-99)
ஆறலை கள்வர் – பாலை நில மாக்கள்; வழிப் பறித்தல் அவர்தம் தொழில்.
வரிப்பாட்டு – இசைப்பாட்டு
தகர மரம் – ஒருவகை மரம்
நரந்தை – நாரத்தை
ஈர்த்தன – இழுத்தன (தம் வயப்படுத்தின.)
III . அதியமான் நெடுமானஞ்சி
தத்தைகள் – கிளிகள்
சுரும்புகள் – வண்டுகள்
‘முற்றிய . . . . . . வேண்டலமே,’-நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும், எம்மைப்பேணுதல் இன்றி ஈதலை யாங்கள் விரும்போம். (புறம். 205)
முடவார் – இளம்பெண்டிர்
குரிசில் – ஆடவரிற் சிறந்தவன்
‘முழைக்கண் . . . . . வருமோ?’-சிங்கம் இருக்கும் குகையில் தானே வந்து யானை அதனை எதிர்ப்பதுண்டோ? (அவ்வாறு எதிர்த்தால், யானை மடியும் என்றபடி)
(கலிங்கத்துப் பரணி)
சுரை – மூட்டு வாய்
வேர்ப்பு – வேர்வு (வியர்வை நீர்)
IV. வள்ளல் குமணன்
‘அலங்குளைப் . . . . . . வரையாது,’-அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையுடைய பாண்டவர் ஐவருடனே கோபித்து, நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொன்னாற் செய்யப்பட்ட தும்பைப் பூ மாலையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் போர் செய்து போர்க்களத்தில் இறந்தொழியும் வரையில் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைகளுக்கும் குறையாது.
(புறம் – 2)
சித்திரகாரி – படம் தீட்டுவோன்
முருகு – வாசனை
கூவிளங்கண்ணி – வில்வ மாலை
கூசை – பழி
வறுவிய – சத்து (பால்) இல்லாத
‘தாயொக்கு . . . . . . மன்னான்,’-அன்பினால் யாவர்க்கும் தாயை யொப்பான்; நன்மையைப் பயக்குந் தன்மையாலே குடிகள் செய்யும் தவத்தை யொப்பான்; தான் முன்னின்று அவர்கள் ஒப்பற்ற நற்கதியிற் செலுத்தி கின்றமையால், அவரவர்கள் புத்திரனை யொப்பான்; வியாதிகள் பொருந்துமாயின் அவற்றை யொழிக்குந் தன்மையால், மருந்தை யொப்பான்: நுண்ணிய கேள்விகளை ஆராய்ச்சி செய்யப் புகின், கருத்துகளுக்கிசையச் சந்தேக முதலியவை யில்லாமல் தெளிவிக்குந் தன்மையினால் அவர்கள் அறிவை யொப்பான். (கம்ப ராமயணம் – பால காண்டம்)
★ ★ ★



