நாற்பெரு வள்ளல்கள்
மா. இராசமாணிக்கனார்

II. வேள் ஆய்

1. தோற்றுவாய்

வேள் ஆய் என்பவன் பொதிய மலையின் தலைவன்.

அம்மலையை அடுத்த ஆய்குடி என்பதே இவனது ஊர். ஆய் என்றும், அண்டிரன் என்றும், ஆய் அண்டிரன் என்றும் இவன் வழங்கப்பட்டான். இவனது மலை வேற்றரசரால் தாக்க முடியாத அரண் வலியை உடையது. இம்மன்னவன் சுர புன்னை மாலையை உடையவன்; யாதொரு பிரதி பலனையுங் கருதாது இரவலர்க்கு ஈயும் நீர்மையுடையோன். இவனது நாட்டில் கவிரம் என்ற பெயருடையமலைப் பகுதியில் பல இனிய சுனைகள் இருந்தன;

“தெனாஅது, ஆ அய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்
ஏர்மலர், நிறைசுனை யுறையும் சூர்மகள்.”

-அகநானூறு

என்னுஞ் செய்யுளடிகளால், அவற்றில் சூரரமங்கையர் வாழ்ந்ததாக ஐதீகம் இருந்ததென்பதும் அறியக் கிடக்கிறது.

மேலும், இந்த ஆய் நாடு யானைக் கூட்டங்களால் நிறைந்தது. ஆய் பரிசிலர்க்கு யானைகளை வரிசை வரிசையாகத் தந்து வந்தான். இவன் ஒரு நாள் காட்டு வழியே செல்லுகையில், நீல நாகம் ஒன்று இவனைக் கண்டவுடன் தேவன் விரும்பத் தக்க ஆடை யொன்றினை விட்டு அகன்றதாகவும், அதனை இவன் எடுத்து வந்ததாகவும் சொல்லப் படுகிறது. அவ்வாறு காட்டியையே நீல நாகத்தால் கிடைக்கப் பெற்ற சிறந்த ஆடையைத் தான் தனக்கென வைத்துக்கொள்ளாது, அதனைச் சிவபிரானே அணியத் தக்கவர் என்று கருதி, அப்பெருமானுக்குப் பெரு மகிழ்ச்சியுடன் அதனை இவ்வள்ளல் சாத்தினன் என்று தெரிகிறது. இதனை,

“நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்.”

– சிறுபாணாற்றுப்படை

என்னும் செய்யுளடிகளால் நன்குணரலாம்.

இவனைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள் என்றாலும், அப்புலவரினும் இவனைப் பெரிதும் புகழ்ந்து பாடியவரும், இவனது உயிர்த் தோழருமான முட மோசியார் பாடிய பாக்களை பெரிதும் இன்பத்தைப் பயப்பனவாதலானும், ஏனையோர் செய்யுட்களையும் விரிப்பின் அதிகம் பெருகுமாதலானும், மோசியாரையும் ஒரு சிலரையும் பற்றியே பெரிதும் ஈண்டுக் கூறவோம்.

2. ஆயும் ஓடைகிழாரும்

ஆயின் கொடைச் சிறப்பைக் கேள்வியுற்ற ஓடை கிழார் என்னும் பைந்தமிழ்ப் பாவலர், ஆய் குடியை அடைந்தனர்; வேளைக்கண்டு, தம் வறுமை யினைத் தெள்ளிதிற் கூறினர். “பெரும், கிழிந்த ஆடையைப்பற்றி ஈரினது திரளோடு தங்குதல் மிக்க பேனாகிய பகையை ஒரு பகை என்று சொல்லுவேனே? உண்ணாமையால் உடல் மெலிந்து விழிநீர் சிந்தி அலமரும் எனது சுற்றத்தை வருத்தும் வறுமையை ஒரு பகை என்பேனோ? இத்தகைய எனது நிலையை அறியாராய், ‘நின் கைப்பொருளைத் தா,’ என்று சொல்லி, எனது துயரத்தை மென்மேலும் பெருக்கும் கொடிய ஆறலை கள்வர் அலைக்கும் பகையை ஒரு பகை என்பேனோ? இத்தகைய எனது நிலையை அறியாராய், ‘நின் கைப்பொருளைத் தா,’ என்று சொல்லி, எனது துயரத்தை மென்மேலும் பெருக்கும் கொடிய ஆறலை கள்வர் அலைக்கும். பகையை ஒரு பகை என்பேனோ? இத்தகைய பகையினை அறிபவன் ஆயேயெனக் கருதி,. எனது வாக்கினால் நினது பெயரை வாழ்த்தி, நினது புகழை விரும்பி, ஞாயிற்றால் சுடப்பட்ட சுரத்தின்கண்ணே நடந்து, உன்னிடம் வந்துளேன். இவ்வாறு வறுமையால் வாட்டமுறும் என் போன்றவர்க்கு இடுவோரல்லவோ பயன் கருதாது பிறர்க்கு இடுவோரென்றும், எம்மை நீக்கிப் பிறர்க்கு ஈவோர் அன்றோ பயன் கருதி ஈவோர் என்றும் கொள்ளப்படுவர்? நீ, நின் தகுதிக்கேற்ற பரிசிலை ஆராய்ந்து ஈவாயாக. குளிர்ந்த நீரை யுடைய துறையூரின் ஆற்றுத் துறை முன்னர் உள்ள நுண்ணிய மணலிலும் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்தியென நின்னை வாழ்த்தி, நீ தந்த செல்வத்தை நாள்தோறும் மகிழ்ச்சியுடன் உண்போம்,” என்னும் பொருள்படத் தக்க செந்தமிழ்ச் செய்யுள் ஒன்றினைப் பாடினர்.

தமிழ் மொழியின் அருமையும் புலவர் பெருமையும் உணர்ந்து ஆய் பெருங்களிப்படைந்து, புலவர் மனம் வெறுக்குமாறு பரிசில் நல்கினான். புலவர் பேரானந்தமுற்று ஆயை வாழ்த்தி அகன்றார்.

3. ஆயும் மோசியாரும்

மோசியார் பாண்டிய நாட்டில் மோசி என்ற குடியில் பிறந்தவர்; அந்தண வகுப்பினர்; முடவராயினமையின், முட மோசியார் எனப் பெயர் பெற்றார். இவர் சோழன் கோப்பெருநற்கிள்ளி என்பானால் ஆதரிக்கப்பட்டவர். உறையூர் நாட்டில் ஏணிச்சேரி என்னுமிடத்தில் நெடுநாள் தங்கியிருந்தார். அதனால், இவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் என்று பெயர் பெற்றார்.

இம்மோசியார், வரையாது கொடுக்கும் வள்ளலாகிய ஆயினது புகழைக் கேள்வியுற்று, ஆயிடம் சென்று அவனது நட்பைப் பெற விரும்பி ஆய் நாட்டை அடைந்தார். புலவரைக் கண்ட ஆய், முகமன் கூறி அவரை வரவேற்றான். ஆயினது நற்குண நற்செயல்களை முன்னரே கேள்வியுற்றவராதலின், புலவர் அவனை நேரில் கண்டதும் தாம் கேள்வியுற்றவை உண்மையெனவே அறிந்தார். அதனால், பெருமகிழ்வு கொண்டார்; தம்மையும் அறியாது தம் உள்ளத்தெழுந்து நன்மொழிகளால் ஆயை வாழ்த்தினார்.

“நின் மலையானது புலி இயங்கும் குகைகளைக் கொண்டது; உயர்ந்த சிகரங்களையும், ஏறி வருவதற்குக் கஷ்டமான வழிகளையும் உடையது. அவ்வழிகளில் ஏறுதலால் வருத்தமுற்று, உடல் வளைந்து, தத்தடி வைத்து நடக்கின்ற மெல்லிய நடையை யுடையவளும் வளையலை அணிந்த கையையுடையவளுமான விறலி என் பின்னே வர, பொன்னைக் கம்பியாகச் செய்தாற் போன்ற முறுக்கடங்கிய நரம்புகளை உடையதும், வரிப்பாட்டு ஸ்வரஸ்தானங்கள் தோறும் மாறி மாறி ஒலி செய்வதுமான யாழை, வழி நடத்தலாலே தளர்வுற்ற நெஞ்சத்தோடு ஒரு பக்கத்திலே அணைத்துக்கொண்டு, புகழ்தற்கு அமைந்த தலைமையயுடைய நினது நல்ல புகழை நினைத்து வந்தேன் யான், எனது இறைவ,’ என்று பாணன் கூறிய மாத்திரத்தே கன்றுகளுடனே உரல்போன்ற அடியினையுடைய யானைகளை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும் வளமை பொருந்திய மலையையுடைய நாடனே, பாணரும் புலவரும் கூத்தரும் நினது பொருள்களைத் தத்தமவென வளைத்துக் கொள்வார்களாயினும், நீ அவற்றை, ‘எம்முடையவை’ எனக் கூறி அவரிடத்தினின்றும் மீண்டும் பெறாத அருங்குணம் வாய்ந்தனை. அக்குணம் இனியும் அவ்வாறே நிலை பெறுக; பகைவரது மிக்க மாறுபாட்டை வென்றவனும், வலியையுடைவனும், யாவரும் ஒப்பப் புகழும் நாட்டை யுடையவனும், சிறப்புப் பொருந்தியவனுமான ஆயே, உன்னிடம் யான் வந்தது யானை வேண்டியன்று; குதிரை வேண்டியன்று; தேரை வேண்டியன்று; நின்னைக் காண வேண்டுமென்ற விருப்பத்தாற்றான்!” என்று அவனது ஈகைக் குணத்தையும் மலையின் பெருமையையும், தாம் வந்த நோக்கத்தையும் நற்றமிழில் நன்கெடுத்துக் கூறினார்.

வேள் ஆய் மோசியாரின் அருங்குணங்களை ஆய்ந்து பார்த்து, அவரிடம் பேரன்பு கொண்டனன்; அவர் வாக்கை வேத வாக்காக நம்பினன்; அவர் சொற்படியே எக்காரியத்தையும் செய்து வந்தனன். ஆயின் அருங்குணங்களைக் கவனித்த மோசியாரும் அவனிடம் நீங்கா நட்புக் கொண்டார்; ஆயைக் காணு முன்னர்ப் பல அரசரைத் தாம் பாடியதற்காகப் பெரிதும் வருந்தினார். ஏனெனில், பைந்தமிழின் பெருமையும், புலவர் அருமையும் ஆழ்ந்து நோக்குபவர் மிகச் சிலரே. அச்சிலர் நன்னடக்கையும் மாரி போன்ற ஈகையும் உடையவர்களா யிருத்தல் வேண்டும். அவர்களை எத்துணைப் பாடல்களாலும் பாடிப் புகழலாம்; அவற்றிற்கு அவர் அருகரே என்பது மோசியாரது எண்ணம் போலும்! “இமய மலை வானளாவியது; குவளை மலர்களையுடைய பல சுனைகளையுடையது; அச்சுனைகளின் பக்கலில் தகர மரங்கள் குளிர் நிழலைப் பரப்புகின்றன; அம்மலையில் உறையும் கவரிமான்கள் நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்து, முற்கூறிய சுனைகளுளொன்றில் நீரைக் குடித்துத் தகரமர நிழலிலே தூங்கும் இயல்பையுடையன. இத்தகைய நிகழ்ச்சியைக் கொண்ட இமய மலையை வடக்கேயும் தென்றிசைக்கண் ஆய் குடியையும் பெற்றிராவிடின், இவ்வகன்ற உலகம் கீழ்மேலதாகும். இத்தகைச் சிறப்புப் பொருந்திய வேள் ஆயையன்றோ யான் முன்னதாகப் பாடியிருத்தல் வேண்டும்! இவனைவிட்டு ஏனையோரைப் பாடினேனே பாவியேன்! அவ்வாறு பாடிய குற்றத்தால் எனது உள்ளம் அழிந்து போவதாக! ஆயையன்றிப் பிறரைப் புகழ்ந்த நாவும் கருவியாற் பிளக்கப்படுவதாக! இவன் புகழையன்றிப் பிறர்புகழைக் கூறப் கேட்ட என் செவியும் பாழ்பட்ட ஊரில் உள்ள கிணறுபோலத் தூர்வதாக!” என்று கூறித்தம்மைத் தாமே நொந்துகொண்டார் புலவர்.

இதனால், ஆயிடத்து எத்துணைப் பேரன்பு மோசியார் கொண்டிருந்தனர் என்பது வெள்ளிடைமலை. மேலும், ஆயின் புகழ் அவன் காலத்தரசர் பெற்ற புகழினும் மேம்பட்டிருந்த தென்பது பிரசித்தம். இவ்வுத்தம வேளின் சிறப்புகளை இப்புலவர் பெருமான் திருவாக்காலேயே பின்னரும் அறியலாம்.

4. மோசியாரும் மலை வளமும்

ஒருநாள் மோசியார் ஆயின் ஆட்சிக்குட்பட்ட பொதிய மலையின் காட்சியைக் காணச் சென்றார். வானுற வோங்கி வளம்பெற வளர்ந்து நின்ற மரங்களின் வரிசையும், தெள்ளிய நீர் அருவிகளின் நீர்ப்பெருக்கும், வானத்தையளாவும் மலைத் தொடரும் ஆய் நாட்டை அணிபெறச் செய்தனவென்பது மிகையாகாது. இத்தகைய பொதிய மலையின் இயற்கைத் தோற்றமும் வளப்பமும் புலவர் மனத்தை ஈர்த்தன. புலவர் தம் வசமிழந்து, “ஆ! இம்மலைவானளாவியது. இம்மலை உச்சியில் முகில்கள் படி கின்றன. இங்குப் பலா மரங்கள் மிக்குள்ளன. பலாவின் கிளைகளில் மந்திகள் வசிக்கின்றன. அக்கிளைகளில் மந்திகள் வசிக்கின்றன. அக்கிளைகளில் பரிசிலரால் தூக்கிவைக்கப்பட்ட பிணிப்புப் பொருந்திய மத்தளங்கள் இருக்கின்றன. அவைகளைப் பலாப் பழங்களென்று எண்ணி மந்திகள் அவற்றின் கண்களைத் தட்டுகின்றன. தட்டியவுடன் மத்தள ஓசை உண்டாகிறது. அவ்வோசையால் அப்பலாவின்கண் வாழும் அன்னச் சேவல்கள் திடுக்கிட்டெழுந்து, மத்தள வோசைக்கு மாறாகக் கூவுகின்றன. இத்தகைய இயற்கை வனப்பினைக் கொண்டது இம்மலை. இச்சிறப்பு வாய்ந்த மலையை உடையோன் மலை போன்ற தோள்களையுடைய எம்வேள் ஆய். இம்மலையை ஆயிடத்துப் பாட வரும் விறலி அடையலாமே யன்றிப் பெருமை பொருந்தியஅரசர் அடைய முடியாது.” என்று பொதிய மலையின் பெருமையினைப் பாராட்டிக் கூறினார். இப்பாடலால், ஆய் என்பானது நாட்டின் வளமும் அவனது வலிமையும் புலப்படுதல் காண்க.

அம்மலைச் சாரலில் கூட்டங் கூட்டமாக யானைகள் வசிப்பதைப் புலவர் கண்டார்; அவை எண்ணற்கியலா வகை மிக்கிருந்தனவாதலால், வியப்புக் கொண்டார். அவர், “களிறுகளை மிகுதியாகக் கொண்ட அழகிய இக்காடு, முகிலினம் சென்று உறங்கும் உயர்ந்த மலைக்குத் தலைவனும், சுர புன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினை உடையானும், கூர்மையான வாளினை உடையானுமான அண்டிரனது மலையைப் பாடி இக்களிறுகளைப் பரிசிலாகப் பெற்றதோ?” என்ற பொருளை வைத்து,

“மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக வுடையலிக் கவின்பெறு காடே!”

-புறுநானூறு

என்று பாடி வியப்புற்றார்.

பிறகு, புலவர் மலைநாட்டு மக்களான குறவரைக் கண்ணுற்றார். அவர்கள் செய்கையையும் யானைக் கூட்டங்களையும் சேர்த்துப் பின்வருமாறு கூறி, ஆய்வேளின் பெருமையினை நினைந்து வியந்தார்: “இக்குறவர் குறுகிய இறப்பையுடைய சிறிய வீடுகளில் வசிக்கின்றனர்; பலாவின் மதுவை வளைத்த மூங்கிற் குழாயில் வார்த்திருந்து, அது நன்றாக முதிர்ந்ததும் அதனைக் குடித்துவிட்டு, வேங்கை மரத்தையுடைய முற்றத்தின்கண் குரவைக் கூத்தாடுகின்றனர். இனிய சுளைகளையுடைய பழங்களைக் கொண்ட பலா மரங்கள் இம்மலை நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. இத்ததைய வளப்பம் பொருந்திய மலை நாட்டை உடையவன் ஆய். அவன் கொல்லுகின்ற போரைச் செய்யும் தலைவன். அவன் இரப்போர்க்குக் கொடுத்த யானைத் தொகை, விண்மீன்கள் எண்ணிக்கையினும் மேம்படுமே யன்றிக் குறையாது. மணிகளாகிய ஆரத்தையுடைய ஆயே, நின்னையும் நின் மலையையும் பாடி வரும் பரிசிலர்க்கு இனிய முகத்தோடு மனம் உவந்து நீ கொடுத்த யானைகளை எண்ணின், அவை, நீ கொங்கரை மேற்கடற் கண்ணே ஓட்டிய நாளில் புறங் கொடுத்து விட்டுப் போன வேல்களினும் பலவாகின்றன. இவ்வாறு நீ எண்ணிறந்த யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தும், இன்னும் கணக்கற்ற களிறுகள் உன் வசத்தேயுள்ளன. இவை இவ்வாறு மிக்கிருப்பதற்குக் காரணம் என்ன? நினது நாட்டின்கண் உள்ள இளைய பெண் யானை ஒரு கருப்பத்துக்குப் பத்துக் கன்றுகளைப் பெறுமோ?”

இவ்வாறு, புலவர் கோமான் மலை நாட்டு வளப்பத்தைக் கண்ணுற்றுக் களி கொண்டு, ஆயின் அரணை நாடி வருகையில் விறலி ஒருத்தியைச் சந்தித்தார். அவர் அவளை நோக்கி, “மெல்லிய இயல்பினையுடைய விறலி, நல்ல புகழையும், மழைபோன்ற வண்மையையும், அழகிய தேரினையும் உடைய வேள் ஆயைக் காண விரும்புவாயாயின், மாட்சிமைப்பட்ட நினது மணம் பெற்ற கூந்தல் பொதியமலைக் காற்றால் அசைய, பீலியையுடைய மயில் போலக் காட்சியுண்டாக நடந்து செல்வாய்” என்று கூறி அகன்றார்.

5. ஆயின் கொடைச் சிறப்பு

ஒரு நாள் புலவர் பெருந்தகை ஆயின் வள்ளற்றன்மையை மேலும் விளக்குவான் வேண்டி, “ஆய் வேட்டைக்குச் செல்வன்; வேட்டை முடிந்ததும் புலித்தோலை விரித்துத் தனக்கு வேட்டையாற் கிடைத்த முள்ளம்பன்றியின் தசை, சந்தனக்குறடு, யானை மருப்பு ஆகிய இவற்றைக் குவித்து வைத்துப் பாடி வரும் பரிசிலர்க்குக் கொடுக்கும் பான்மை உடையவன். இத்தகைய கொடைச் சிறப்புடையவன் அப்பெருவள்ளல்,” என்னும் கருத்தமைந்த கொழுவிய பாடலைப் பாடினர். பின்னர், “இப் பாரில் இம்மையில் அறங்கள் செய்தால், அவை மறுமைக்கு உதவுமென்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து, அதற்குப் பதிலாக அறத்தைக் கொள்ளும் அற வணிகன் அல்லன் அண்டிரன்; அவனது கொடை, ‘பெரியோர் செய்த வழி’ என்று யாவரும் கருதும்படி அந்நற்செய்கையளவில் பொருந்தியது,” என்ற பொருள் அமைத்து,

“இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறைவிலை வணிகன் ஆஅயலன்; பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே.”

-புறுநானூறு

என்று பாடினர்.

6. ஆயின் இறுதி நிலை

இவ்வாறாகப் புலவர்களால் போற்றப்பட்டு வந்த வேள் ஆய், வறியார்க்கே தன் பொருள் அனைத்தும் நல்கி வறுமை அடைந்தான். சுருங்கக் கூறின், அவனது மனைவியரின் மங்கல நாணைத் தவிர, அவனிடத்து எஞ்சிய பொருள் ஒன்றுமில்லை. நாளடைவில் வறுமை மிகுந்தது. வறுமையால் வேள் ஆயின் நாடு அழகு குன்றியது. அரண் மனையில் வாழும் அவன் மனைவியர் மகிழ்ச்சி யற்றார்கள். அவன் முகமும் அகமும் பொலிவுடனே விளங்கின. ஆய், நற்காரியத் திற்றான் தன் பொருள்களைச் செலவழித்தானே யன்றி, வீண் காரியத்தில் பாழக்க வில்லை அன்றோ?

ஆய்க்கு நேர்ந்த வறுமையை எண்ணி மோசியார் பெரிதும் துக்கித்தாரெனிலும், ஆசை உற்சாகப்படுத்த வேண்டி, “களாப்பழம் போலும் கரிய கோட்டை உடைத்தாகிய சிறிய யாழைக் கொண்டு பாடும் இனிய பாட்டில் வல்ல பாணர் பரிசில் பெற்றுப் போனார்களாக, களிறுகள் இல்லாத பக்கத்தையுடைய நெடிய தறியின் கண்ணே காட்டு மயில்கள் தத்தம் இனத்தோடு தங்கத் தக்கது ஆயின் கோயில். அக்கோயில் ஆயின் மனைவியர் மங்கல நாணன்றி மற்றைய அணிகலன்களை இழந்திருப்பதால், பொலிவழிந்து சாய்ந்ததென்று பிறர் சொல்லுவர்; நுகர்தற்கு இனிதான தாளிப்பையுடைய அமுதைப் பிறர்க்கு உதவாது, தம்முடைய வயிற்றையே நிறைத்துப் புகழைச் சம்பாதியாத பெருஞ் செல்வர்களின் மனைபோலப் பொலிவு அழியாமல் ஆயின் அரண்மனை அழகு மிகுந்து விளங்கும்” என்ற கருத்தைக் கொண்டு பைந்தமிழ்ப் பாவினைப் பாடினர்.

பின்னர்ச் சின்னாட்களில், தமிழ் மக்கட்குப் பெருந்தாய் போன்றவனும், மலை வளம் பெற்றவனும், சற்குணனுமான வேள் ஆய் மண்ணக வாழ்கை நீத்து விண்ணக வாழ்வை மருவினான். அவன் உயிர் துறந்த காலையில் விண்ணிலே பெரிய ஒசை யுண்டாயிற்று. அது கேட்ட மோசியார், “ஆ! திண்ணிய தேரை இரவலர்க்கீந்தவனும் குளிர்ந்த மாலையை உடையவனுமான வேள் ஆய் வருகின்றானென்று, ஒள்ளிய கொடியினையும் வச்சிராயுதத் தினையும் உடைய தடக்கை இந்திரனது கோயிலினுள்ளே முரசம் முழங்க வானத்தின்கண் ஒசை தோன்றிற்று,” என்ற பொருளமைத்து,

“நிண்டே ரிரவலர்க் கீத்த தண்டா
ரண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப்புறு முரசங் கறங்க
ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே.”

-புறநானூறு

எனப் பாடினர்.

ஆயினது மரணத்தைக் கேள்வியுற்ற குட்டுவன் கீரனார் என்னும் புலவர் பெரிதும் வருந்தினர். அவர் ஆயின் நற்குண நற்செயல்களை நினைந்து நினைந்து ஆறாத் துயர் அடைந்தார். அப்புலவர், “களத்திற்கேற்ப நடக்கும் அசைந்த நடையை யுடைய குதிரைகளையும் யானைகளையும் தேர்களையும் அழியாத புது வருவாயைப் பெற்ற நாட்டையும் ஊர்களையும் பாடுவார்க்குக் குறைவறக் கொடுக்கும் ஆயாகிய அண்டிரன், தனது உரிமை மகளிரோடே காலன் என்று சொல்லப்படுங் கண்ணிலியால் கொண்டு செல்லப்பட்டுத் தேவருலகத்தை அடைந்தான் போலும்! பொலிவிழந்த கண்களை யுடையாராய்த் தம்மைப் பாதுகாப்போரைக் காணாது ஆரவாரிக்கும் சுற்றத் துடனே செயலற்று அறிவுடைப் புலவர் வறுமைப் பிணியால் வாடுங் காலம் வந்துவிட்டதே! இஃதொரு நிலை இருந்தவாறென்னை!” என்று கூறிப் புலம்பினார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !