நாற்பெரு வள்ளல்கள்
மா. இராசமாணிக்கனார்

III. வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி

1. அதியமான்

தமிழ் நாடுகளில் ஒன்றாகிய சேர நாடு மலை வளம் பெற்றது. பச்சைப் பசேலெனப் பசுந்தாளாடை யுடுத்த பல குன்றுகளும், வான ளாவி நிற்கும் பல மரங்களில் வரிசையும், கானாறுகளின் நீர்ப் பெருக்கும், மலையருவிகளின் வளமும் அந்நாட்டை அணிபெறச் செய்தன. வாவிகளும் தடங்களும் அந்நாட்டைச் சுற்றிலும் மிக்கிருக்கும். வனப்புமிக்க அத்தடங்களின் கரைகளில் மழலை பேசும் தத்தைகள் ஒருபுறமாகவும், நடைபழகும் மயிலினங்கள் ஒரு வரிசையாகவும், இன்னிசை பாடும் குயிலினங்கள் மற்றொரு மருங்காகவும், அன்றலர்ந்த நறுமணம் நாறப்பெற்ற தண்மலர்களில் நிறைந்துள்ள மதுவை உண்டு மயக்கத்தால் ரீங்காரம் செய்யும் சுரும்புகள் ஒரு புறமாகவும் நிரம்பியிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சேர நாட்டில் தகடூர் என்ற ஓர் ஊர் உளது. அந்நகரத்தில் எந்நாட்டு வளங்களும் நிறைந்து பொலிந்தன. அப்பதி தனது இயற்கை அமைப்பினாலும், செயற்கை அமைப்பினாலும், எந்நகரத்திலும் சிறப்புற்ற தென்றே கவிகள் கூறுவார்கள். மேலும், அந்நகரக் காட்சி, பல வுத்தமப் பாவலர்க்குப் பொழுது போக்கையும் இன்பத்தையும் இடையுறாது உண்டுபண்ணிய தென்னலாம். அக்காலத்தில் செல்வம், புகழ், கல்வி இவைகளில் மேம்பட்ட மக்களில் பெரும்பாலார் அந்நகரில் உறைந்தனர்.

இவ்வாறு சிறந்து விளங்கிய தகடூரை ஆண்டு வந்தவன் அதியமான் நெடுமானஞ்சி என்பவன். அவன் கட்டவிழ்ந்த நல்ல மலர்களாலாகிய குளிர்ச்சி பொருந்திய மாலையை உடையவன்; யாவரும் அஞ்சத்தக்க படையை யுடையவன்.

மேலும், அந்த அதியமான் போர் செய்கின்ற கருப்பு வில்லையுடைய வசந்த காலத்திற்குரிய மன்மதனைப் போன்ற சிறந்த அழகினை உடையவன்; பெரிய மலையைப் போலும் பரந்த மார்பினை உடையவன்; போர் செய்கின்ற கடல் போன்ற திரண்ட சேனையை உடையவன்; மாறுபட்ட மிக்க கோபத்தை யுடைய யானைபோலும் கோபத்தினை உடையவன். அவன் மேகத்தினும் பன்மடங்கு அதிகமாகக் கொடுக்கின்ற வளம் பொருந்திய கையை யுடையவன். அவ்வள்ளல் கருணைக்கு இருப்பிடமானவன்; நல்ல தருமமாகிய பயிரினது வேலியாக ஒப்பிடப் படுபவன். அவன் ஏனைய பகை அரசர்களாகிய யானைகளுக்கு ஆண் சிங்கம் போன்றவன்; சேரமானது உறவினன்; சிற்றரசரையும் பெருவேந்தரையும் அநேக போர்களில் வெற்றி கொண்டவன். அவன் பெயர் அதியமான் நெடுமானஞ்சி எனவும், நெடுமானஞ்சி எனவும், அஞ்சி எனவும் வழங்கும்.

2. அஞ்சியும் பெருஞ்சித்திரனாரும்

அஞ்சி என்பான் தகடூரை ஆண்டு வருங்கால், பெருஞ்சித்திரனார் என்னும் பைந்தமிழ்ப் புலவர் அவனைப் பாடிப் பரிசு பெற விரும்பினார். அவர் தம் ஊரை விட்டு தகடூரை அடைந்தார். அடைந்தவர், அஞ்சியைக் காணுதற்குப் பல நாள் காத்திருந்தனர். வறியார்க்கீதலே தன் தொழிலாகப் பெற்ற அக்கொடைவீரன், யாது காரணத்தாலோ, பரிசில் வேண்டிக் காத்திருக்கும் புலவர் பெருமானை நேரில் வந்து காணவில்லை. அவன் அவரது வருகையை யுணர்ந்து, தனது ஏவலர் மூலமாகப் பரிசிலைக் கொடுத்துப் புலவர்க்கீயும்படி செய்தான் புலவர்,

“ முற்றிய திருவின் மூவ ராயினும்
பெட்பின் றீதல் யாம்வேண் டலமே.”

-புறநானூறு

என்ற மனப்பான்மை உடையவராதலின், அஞ்சியின் செயலை வெறுத்தார். அவர் பரிசில் கொணர்ந்தாரை நேக்கி, “யான் குன்றுகளும் மலைகளும் பல கடந்து, பரிசில் பெறும் விருப்பத்துடன் ஈண்டு வந்தேன்; என்னை எத்தன்மையன் என அறிந்தான் பகைவரால் தடுத்தற்கரிய அரசன்? என்னை அழைத்துவரச் சொல்லிப் பாராமலே தந்த இப்பொருளைப் பெறுதற்கு யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலனல்லேன். எனது கல்வி முதலாகியவற்றை யறிந்து கொடுத்திடினும், கொடுப்பது தினைத் துணையாயினும் நல்லதாகும்,” என்னுங் கருத்துப்பட,

“குன்று மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென;
நின்ற வென்னயந் தருளி யீதுகொண்
டிங்கனஞ் செல்க தானென வென்னை
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்?
காணா தீந்த லிப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசில னல்லேன்; பேணித்
தினையனைத் தாயினு மினிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே,”

-புறநானூறு

என்ற பைந்தமிழ்ப் பாடலைத் தமது பெருமிதம் தோன்றக் கூறி, அவ்விடம் விட்டகன்றார்.

3. அஞ்சியும் ஒளவையாரும்

சேர நாட்டில் தமிழ்ப் பழங்குடியாகிய பாணர் குடியில் ஒளவையார் என்னும் நல்லிசைப் புலமை வாய்ந்த மெல்லியலார் பல நூற்றாண்டுகட்கு முன் பிறந்தார். அவர் இளமையிலேயே நற்றமிழ் நலமுறப் பயின்று, நல்லிசைப் புலவராய் விளங்கினர். அவர் பல திறப்பட்ட தமிழ் மன்னர்கள்பாற் சென்று கவி பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனர். அவ்வம்மையார் அஞ்சியின் நற்குண நற்செயல்களைக் கேள்வியுற்றார். அவனைக் காண வேண்டும் என்னும் அவாப் பிடர் பிடித்துந்த, அவர் தகடூரை அடைந்தார். அடைந்த அம்மையார் அவனைக் கண்டு “பெரும, இரப்போர்க்கு ஈயும் மடவார் மகிழ் துணை நெடுமானஞ்சி, கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகத்தில் வறுமையால் வாட்ட முற்றோர்க்கு வேண்டுவ தருதி நீ எனக் கேட்டேன். யான் சேர நாட்டில் பாணர் குலத்திற் பிறந்தவள். என் பெயர் ஒளவை என்பது. யான் வறுமைப் பெருந்துயர் உழந்தேன். நீ மனம் உவந்து இயைந்ததொன்று இக்கணத்தளிப்பாய்,” என்று, தம் வறுமையினையும் அவனது பெருமையினையும் பல பாடல்களால் வெளிப்படுத்தினர்.

அஞ்சி என்பவன், அம்மையாரின் புலமையையும் ஒழுக்கத்தினையும் உய்த்துணர்ந்து பெருமகிழ்வு கொண்டனன்; அவருக்கு இன்சுவை அமுதை இன்போடு ஈந்தனன்; “பரிசில் கொடுத்துவிடின், இவர் இவண் விட்டேகுவர்,”என்று எண்ணி, அவரைப் பிரிய மனமற்றவனாய்ப் பரிசில் அளிக்காது தாழ்த்தினன். அம்மையார் சின்னாள் அவனது அரண்மனையில் தங்கியிருந்தனர். அவன் பரிசில் கொடுத்தானில்லை. அம்மையார் சினங் கொண்டார்; அஞ்சியை நேரிற் காணவும் பிரியப்படாது, அவனது வாயிற் காப்போனிடம் சில கூறி அகல வேண்டும் என்று விரும்பினார். அவர் அவனை நோக்கி, “வாயில் காப்போய், வாயில் காப்போய், ஈகைத் தன்மை யுடையோரது செவியிலே விழுமிய சொற்களை விதைத்துத் தாம் எண்ணிய பரிசிலை விளைக்கும் வலிமை உடையதாகிய நெஞ்சினையுடையார் பரிசிலர்; மேலும், அப்பரிசிலர் பரிசிலால் வாழும் இல் வாழ்க்கையையுடையார். அவர் இங்கு வந்தால் இவ்வாயிலை அடைக்காது வைத்துள்ள வாயில் காப்போய், விரைந்து செல்லும் குதிரையினை யுடைய குரிசில் நெடுமானஞ்சி தன் தரம் இத்தகைமைத்து என்று அறியானே? தன் தரத்தை அறியா விடினும், என் தரத்தையேனும் அறியான் கொல்லோ! இவ்வுலகம், அறிவும் புகழும் உடையோர் இறந்தாராக, வறிய இடத்தை யுடையதாகிவிட வில்லையே! ஆதலால், யான் இப்பொழுதே புறப்படுகின்றேன். எனது யாழ் முதலிய பொருள்களைக் கட்டித் தூக்குகின்றேன்! இவனை அறிந்தோ தமிழை ஓதினேன்! யான் எத்திசைச் செல்லினும், அத்திசைக்கண் சோறு உளது, யான் செல்வதாக நின் அரசற்குக் கூறுக,” என முனிவுடன் கூறிப் புறப்பட்டார்.

அம்மையார் புறப்பட்டதை உணர்ந்தான் அதியமான்; செய்தது பிழையென்று உன்னி, அரண்மனையை விட்டு வழி நடக்கும் அம்மையாரைத் தடுத்துப் பணிவுடன் தன்னை மன்னிக்கு மாறு வேண்டினன். பின்னர், அஞ்சி அம்மையாரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று அறுசுவை யுண்டி அன்புடன் அளித்துப் பரிசில் பல நல்கினான்.

அவனது தளராக் கொடைத் திறத்தைக் கண்ட ஒளவையார் அகமிக மகிழ்ந்தார்; “அந்தோ! அதியமானது கொடைத் திறத்தையும் தண்ணளியையும் அறியாது, யான் முனிவு கொண்டேனே!” என்று இரங்கினார். பின்னும் அவர், தம் உள்ளத்தோடு உரைப்பவராய், “அதியமான் அணிகலம் அணிந்த யானையையும் தேரையும் உடையவன்; அவன், ஒருநாள் அன்று; இரு நாள் அல்ல; பல நாளும் பயின்று பலரோடு சேர்ந்து செல்லினும், முதல் சென்ற நாளில் எத்தகைய விருப்பம் நம்மிடத்துடையவனாக இருப்பானோ, அத்தகைய விருப்பமே உடையவன். அவன் பரிசிலை நீட்டிப் பினும் நீட்டியா தொழியினும், யானை தனது தந்தங்களிடையே வைத்த கவளம் போல, அப்பரிசில் நமது கையகத்ததே; அது தப்பாது உண்ணுதற்கு இச்சித்த நெஞ்சே, நீ பரிசிற்கு வருந்த வேண்டா; அவன் தாள் வாழ்வதாக!” என்று, அவனது மனப்பான்மையையும், அவன் பரிசில் தாராதொழியான் என்ற உறுதியையும், தாம் அவனிடத்துக் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்தினர்.

ஒரு நாள் ஒளவையார் தகடூரைச் சுற்றிப் பார்த்து மலை வளப்பத்தைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது விறலி ஒருத்தி மத்தளத்தை யெடுத்துக் கொண்டு அவ்வழியே சென்று கொண்டிருந்தாள். அவளைக் கண்ணுற்ற ஒளவையார், “சிலவாகிய வளையலை யுடைய விறலி, பலவேற் படையை யுடைய எம் அண்ணல் அதியமான் சேய்மைக் கண்ணா னல்லன். உலகம் முழுவதும் வறுமை உறுதலையுடைய காலமாயினும், நீ அவன்பாற் போவையானால், நின்னைப் பாதுகாக்க வல்லவன் அவன். அவனே சிறந்த கொடை வீரன்; தண்ணளி நிறைந்த அண்ணல்,” என்று கூறிப் போந்தார்.

இவ்வாறு ஒளவையார் அஞ்சியின் அரிய குணங்களை எந்நேரமும் நினைந்து நினைந்து, தம் உள்ளத்தினின்று ஊறி எழுகின்ற செந்தமிழ்ப் பாவால் செம்மையுற எடுத்துப் பாடும் தொழிலையே மேற்கொண்டிருந்தார். அந்த அஞ்சியை விட்டுச் செல்ல அவர் மனம் இடந் தரவில்லை; அம்மையாரை விட்டுப் பிரிய அஞ்சியும் உடன்பட்டானில்லை; அவர் இல்லாத அவைக்களம் தாமரையற்ற தடாகம் போலும், கண்ணில்லாத வதனம் போலும் பொலிவற்று விளங்கும் என்று எண்ணினான். ஒளவையாரும் தம் புலமையாலும், ஒழுக்கத்தாலும் அஞ்சியின் அன்பைக் கவர்ந்தார்; அவனுக்கு உயிருக்குயிரே போன்ற அமைச்சராகவும் விளங்கினார்.

4. அஞ்சி நெல்லிக்கனி பெற்று ஒளவையாருக் கீதல்

ஒளவையார் பாடும்இனிய பாடல்களைக் கேட்டுப் போரனந்த முற்றிருந்த அஞ்சி, ஒரு நாள் ஒரு மலைப் பக்கத்துக்குச் சென்றிருந்தான்; அம்மலையில் கரு நெல்லி மரம் ஒன்றைக் கண்டான். அம்மரத்தில் பழுத்த நெல்லிக்கனி ஒன்று இருந்தது. அதனை அவன் அரிதின் முயன்று பெற்றான். பெற்ற வேந்தன், “இதனை உண்போர் நெடுங்காலம் உயிர் வாழ்வர் என்று சொல்லக் கேட்டுளேன். என்றாலும் இதனை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை. உலக மக்களுக்குப் பெரிதும் பயன்படுவாரே இக்கனியை யுண்டு நீடு வாழ்வது தகுதியே யன்றி, உலகிற்கு ஒரு சிறிதும் பயன் படாத நாயேன் இதனை உண்டு நீண்ட காலம் நடைப் பிணமாகத் திரிவதிற் பயன் என்ன? இதனை யாருக்கு ஈயலாம்? சரி; தமது நா வன்மையால் அரிய பெரிய பாக்களை இயற்றி உலகைத் திருத்தும் ஒளவையாருக்கே ஈவோம்; அவரே இதனை உண்ணத் தக்கவர்,” என்று தனக்குள் கூறி முடிவு செய்து கொண்டான்; பின்னர், தன் அரண்மனையை அடைந்து ஒளவையாருக்கு அக்கனியின் ஆற்றலைக் கூறாமலே கொடுத்தான். ஒளவையார் அதனைத் தின்றார்.

உண்போர்க்கு உடனே வலிமையைத் தரத்தக்க கனியாதலால், அதனை உண்டதும் அம்மையார் தாம் ஏதோ புதிய பலம் பெற்றதாக எண்ணினர்; பின்னர் உண்மையை உணர்ந்தனர். தன்னினும் தம்மை மேலாக மதித்த அஞ்சியின் அருங்குணத்திற்கும், செயலுக்கும் வியந்தார். அவர் அஞ்சியை நோக்கி, “வென்றி யுண்டான தப்பாத வாளை யெடுத்துப் பகைவர் போர்க் களத்திலே பட வென்ற வீர, கழலை விடப்பட்ட வீர வளை பொருந்திய மன்ன, பெரிய கையினையுடையாய், கோமானே மாற்றாரைப் போரின்கண் கொல்லும் வீரச் செல் வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்ட மாலையினையும் உடைய அஞ்சி, நீ இளம்பிறையைச் சடையிலே தாங்கியவனும் நீல மணி போலும் கரிய மிடற்றினையுடையவனுமான சிவபெருமானைப் போல நிலை பெற்று வாழக் கடவாய்! பெரிய மலையிடத்து விடரின்கண் தோன்றிய அரிய கருநெல்லியின் இனிய பழத்தைப் பெற்றும், அதனை உண்டு அதனாற் பெறும் பயனையும் பொருட்படுத்தாது, அப்பேற்றினை எமக்குக் கூறாது உண்ட அளித்தனை! நினது செயல் சாலவும் வியக்கத் தக்கதே!” என்று அருளோடு கூறி மகிழ்ந்தார்.

மேலும், அம்மையார் அவனைப் புகழ விரும்பி, “மன்ன, நீர்த் துறையில் படிகின்ற யானையின் கோடுகளைச் சிறார்கள் கழுவுகிறார்கள். அச்செயலால் அந்த யானை எவர்க்கும் எளிதென்று கூற முடியுமோ? முடியாது. அதுபோல, எங்கட்கு எளியனாய் விளங்கும் நீ, நின் பகைவர்க்கு எளியனாவையோ? பெரும் நீ நின் பகைவர்க்கு இன்னாய்,” என்று, அவனது எளியனாந் தன்மை வீரம் முதலியன விளங்கப் பல கவிகள் பாடினர். அஞ்சி என்பான் அவற்றைக் கேட்டு, இன்புற்றிருந்தான்.

5. ஒளவையாரும் தொண்டைமானும்

அஞ்சி தகடூரை ஆண்டு கொண்டிருந்த காலை, தொண்டைமான் என்னும் அரசன் காஞ்சி நகரத்தை ஆண்டு வந்தான். அம்மன்னனும் படைவலி பெற்றவன். அவன் அஞ்சியைத் தன்னினும் மெலியான் என்று எண்ணி, அவன்மீது போருக்கெழ விரும்பினன். அச்செய்தியை உணர்ந்தான் அஞ்சி. “நமது நாடு கானரணும் உடையதென்பதை அக்கயவன் கருதவில்லை போலும்! அவற்றைக் கருதாவிடினும், நம்முடைய தோள்வலியும் வாள் வலியும் கருதினனோ? அவற்றையும் அவன் கருதவில்லை எனத் தெரிகிறது. அவன் தன்னுடைய பேதமையினல் நம்மை எளியனாகக் கருதி விட்டனன் போலும்! நன்று நன்று! அவன் நம்மீது போருக்கு வந்தால் தோல்வியுறுவான் என்பது திண்ணம். அவனைப் போருக்கு வாராது தடுப்பதே சிறந்தது. நமது ஆற்றலையும் படை வலியையும் அவன் உணர வேண்டும். அவனுக்கு அவற்றை உணர்த்த வல்லார் நம்மிடம் யாவர் உளர்? நன்றி! நல்லிவை மெல்லியரான நம் ஒளவைப் பிராட்டியாரையே காஞ்சிக்கு அனுப்புவோம்,” என்று துணிவு கொண்டான்; தன் எண்ணத்தை அம்மையாருக்கு அறிவித்தான். அம்மையாரும் அவன் கருத்திற்கு உடன்பட்டுக் காஞ்சி நகரை அடைந்தார்.

தொண்டைமான் ஒளவையாரை அன்புடன் வரவேற்றான்; அறுசுவை உண்டியை அன்போடு அளித்தான். ஒளவையார் தூதராக மட்டுமன்றி நல்லிசைப்புலவராயும் விளங்கினமையால், தொண்டைமான் அவரிடத்துப் பேரன்பு கொண்டான். அவன் அம்மையாரை அழைத்துச் சென்று, அரண்மனைக் காட்சியைக் காட்டினன்; பின்னர், தனது படை வலியை அம்மையாருக்கு உணர்த்த விரும்பி, அவரைப் படைக்கலக் கொட்டிலுக்கழைத்துச் சென்றான் ஆண்டு நிரை நிரையாகப் பலவகைப் போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. அவை, வெகு சாக்கிரதையாகவே பாதுகாக்கப்பட்டு வந்தன. தொண்டைமான் தன்னிடத்தே படை வலி அதிகம் இருப்பதாக எண்ணி மமதை கொண்டுள்ளான் என்பதை உணர்ந்த அம்மையார், அவனது செருக்கை அடக்க விரும்பினர். ஆதலின், அவர் அவனை நோக்கி, “வேந்தே, இக்கொட்டிலிலுள்ள ஆயுதங்கள், போர்த் தொழில் இன்மையால் பீலியணிப்பட்டு மாலை சூட்டப்பட்டுத் திரண்ட வலிய காம்பு அழகுறச் செய்யப்பட்டு நெய் பூசப்பட்டுக் காவலையுடைய இவ்வரண்மனைக்கண் உள்ளன. செல்வம் உண்டாயின் உணவு கொடுத்தும், இல்லையாயின் தனக்கு உள்ள தனைப் பலரோடுங் கூடவுண்டுங் காலங் கழிக்கும் வறியோரது சுற்றத் தலைவனாகிய தலைமையுடைய எம் வேந்தன் அதியமானுடைய கூரிய ஆயுதங்கள் போரில் பகைவரைக் குத்துலால் கங்கும் நுனியும் முறிந்து, கொல்லன் வேலை செய்யும் கொட்டிலிலே உள்ளன.” என்ற கருத்தையமைத்துப் பாடினர். அப்பாட்டில் அவர், அயனை இகழ்ந்தது போலப் புகழ்ந்ததும், தொண்டைமானைப் புகழ்ந்தது போல இகழ்ந்ததும், குறிப்பால் அஞ்சியினது வீரம் தொண்டைமானது வீரத்தைவிடச் சிறந்தது என்பதைத் தெரிவித்ததும் நோக்கற்பாலன. இவற்றால், அம்மையாரின் சமயோசித அறிவும், தளராமனமும், தைரியமும், அவர் அஞ்சியினிடத்துக் கொண்டிருந்த கரை கடந்த அன்பும் புலப்படுகின்றன.

ஒளவையார் உரைத்தவை கேட்டனன் தொண்டைமான். அவன் அவரை நோக்கி, “ஒளி தங்கிய நுதலினையுடைய விறலி, என்னோடு போர் செய்ய வல்லவர் உளரோ நுமது பெரிய இடமகன்ற நாட்டின்கண்?” என்று வினவினன். அது கேட்ட ஒளவையார், “அரசே, நீ போர் செய்யக் கருதுவையாயின், எமது நாட்டின் கண்ணே அடிக்குங்கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் பாம்பு போன்ற இளைய வீரரும் உளர்; அவரே யன்றி, காற்றடித்தால் மன்றின்கண் தூங்கும் பிணிப்பப் பொருந்திய முழவினின்று எழும் ஓசையைக் கெட்ட மாத்திரத்தே, அது போர்ப்பறை என்று எண்ணி மகிழும் என்னுடைய தலைவன் அதியமான் நெடுமானஞ்சியும் உளன்.” என்று பெருமிதத்தோடு கூறினர்.

பின்னர், அம்மையார் அவனிடம் விடை பெற்றுத் தகடூரை அடைந்தார்; காஞ்சியில் நடந்த செய்தியை அஞ்சிக்குத் தெளிவுற எடுத்துக் கூறி இருந்தார்.

6. கோவலூர்ப் போர்

மேற்கூறிய செய்தி நிகழ்ந்த சிறிது காலத்துக்குப் பின்னர், திருக்கோவலூரை ஆண்டு வந்தமலையமான் திருமுடிக்காரி என்பான் பல சிற்றரசர்களைப் போரில் வென்று, தன்னை வெல்ல வல்லார் ஒருவரும் இலர் என்று மமதை கொண்டிருந்தான். அதனை உணர்ந்தான் நெடுமானஞ்சி; அவனது செருக்கை அடக்கவும் தனது புகழைப் பரப்பவும் விருப்பங் கொண்டான்; நால்வகைப் படைகளையும் திரட்டினான்; திரட்டி, இரைவேட்ட பெரும்புரி போலப் பகைவர் மீது போர் செய்யச் சென்றான்; திருக்கோவலூர் மதிலை வளைத்தான்; அந்நெடுமானஞ்சி தனது மதிற்புறத்தே போர் செய்ய வந்துள்ளான் என்பதை உணர்ந்தான் காரி. உணர்ந்ததும், அவன் வெந்தறுதண் வெகுளியினால் வெய்துயிர்த்தான்; “ஆ, ஆ! இந்த அஞ்சிக்கும் இவனது தண்டினுக்கும் எளியேனோ யான்!” என்று வெகுண்டு கூறி, தடம் புயங்கள் குலுங்க நக்கான்; பின்னும், “நன்று நன்று!

“முழைக்கணிள வாளரி முகத்தெளி தெனக்களிறு
முட்டியெதிர் கிட்டி வருமோ?”

வெகு நன்று! எனது வலியை முற்றும் உணர்ந்தும், இந்த அஞ்சி யென்பவன் யாதும் அறியாத பிறர் போல என்னை எதிர்க்க வந்தது வியக்கத் தக்கதே! என்னை நினைப்பளவில் வெல்லல் எளிதென்று எண்ணினன் போலும்!” என்று கூறித்தனது சேனைத் தலைவனை நோக்கி, “வேழம், தேர், பரவி, வெம்படைஞர் என்றினைய நம் படையொடு விரைந்து சென்று அஞ்சியை அஞ்சாது எதிர்த்துச் சமர் தொடங்குக,” என்று கூறினன். பின்னர், தானும் போர்க்கோலங் கொண்டு, தன் புரவி மீதிவர்ந்து சென்று, கடும்போர் புரிந்தான்.

அஞ்சியும் தனது தோள் வலியையும் வாள் வலியையும் காட்டினன். பகைவர் சேனையாகிய ஆழ்ந்த கடலிலே அஞ்சி யென்னும் மரக்கலம் ஓடிற்று. அஞ்சி பகை வீரர்களை வீழ்த்துருட்டினான்; யானைகளையும் தேர்களையும் அடையப் பிடித்தடித்துச் சேனையைச் சின்னபின்னமாக்கினான்; தேர் மேலும், மா மேலும், வெண்கோட்டுக் கார் மேலும், காலாட்கள் மேலும், அம்புகளைக் கண்டு விலகியோடாத வீரர் மேலும் வெஞ்சரங்களை அஞ்சாது பொழிந்தான். அஞ்சியின் போர்த் திறத்தைக் கண்டு காரி பெருவியப் பெய்தினன். அவனது படைநிலை கலங்கியது, வீரர் மனங் கலங்கினர்.

இக்காட்சியினைக் கண்ட ஒளவையார் ஒருபுறம் மகிழ்ச்சியும் ஒரு புறம் துக்கமும் அடைந்தார்; அஞ்சியது போர்த் திறத்தைக் கண்டு களித்தார். அஞ்சியோடு வீணே போர் செய்து தன் படையை நாசமாக்கும் காரியினது அறியாமைக்குப் பெரிதும் மனம் வருந்தினார்; அஞ்சியது ஆற்றலை அவனுக்கு எடுத்துக் கூறிப் போரை யொழித்து அஞ்சிக்கு அடங்கிப் போமாறு கூற விரும்பினார்.

அவர் காரியையும் அவன் படையையும் நோக்கி, “எம் வேந்தன் போர் செய்தற்குப் புடை பெயர்ந்து உலாவி, விரும்பி உறை கழித்த வாட்கள், பகைத்தாரது உடலின் தசையின் கண்ணே முழுகிப் பதிந்து வடுப்பட்டு வடிவிழந்தன. அவன் வேல்கள், குறும்பர் சேர்ந்த அரண்களை வென்று, அப்பகைவரது நறிய மதுவையுடைய நாட்டை அழித்தலாற் சுரையோடு பொருந்திய கரிய காம்புடனே ஆணி கழன்று நிலை கெட்டன. அவன் களிறுகள் கணையமரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொறாது பகைவரது அரணை அழித்தலால், பெரிய தந்தங்களிற் கட்டிய பூண்கள் கழலப்பெற்றன. அவன் பரிகள், பரந்து வந்து போர் செய்த வீரரது பொன்னாற் செய்யப்பட்ட பசிய மாலையையுடைய மார்பு உருவழியும்படி ஓடி உழக்குதலால் இரத்தக் கறைபட்ட குளம்புகளை உடையவாயின. அஞ்சியோ, நிலவுலகத்தைத் தன்னுள்ளே அடக்கும் கடல் போன்ற படையை உடையவன்; பொன்னால் இயன்ற தும்பைக் கண்ணியையுடையவன்; கழல் வடிவாகவும், கிண்ணி வடிவாகவும் செய்து செறித்த கணைகள் துளைத்த கேடயத்தை உடையவன். போர்க்களத்தில் அவனால் வெகுளப்பட்டோர் பிழைத்தல் எங்கேயுளது! நெல் வளம் மிகுந்த உங்களுடைய ஊர்கள் உங்கட்கு உரியனவாக வேண்டுமென்று உன்னுவீர்களாயின், அவனுக்கு நீங்கள் திறை கொடுக்க வேண்டும். அவ்வாறு திறை கொடுக்க மறுப்பீர்களாயின், அதற்கு அவன் உடன்படுபவன் அல்லன். அவனது வீரத்தை யான் எடுத்துக் கூறியும் நீங்கள் தெளியீர்களாயின், நீங்கள் உங்கள் உரிமை மகளிரது தோளைப் பிரிந்துறைதல் வியப்பன்று ஆதலின், அதனை யோசித்துப் போர் செய்யுங்கள்! இன்னும் வேண்டுமாயினும், எங்கள் மாபெரு வேந்தனாகிய அஞ்சியின் ஆற்றலை அறைகுவன்; கேண்மின்: ஒரே நாளில் எட்டுத் தேரைச் செய்யும் தச்சன், ஒரு மாதம் பலருடன் கூடிக் கருதிச் செய்யப்பட்டதொரு தேர்க்காலை யொப்பன் எங்கள் மன்னன்,” என்று இவ்வாறாக அஞ்சியின் தனிப்பட்ட ஆற்றலையும், அவன் படை வலியையும் தெளிவுறப் பகைவர்க்கு எடுத்துக் கூறினர்.

அம்மையார் இத்துணை எடுத்துரைத்தும், காரி போர் செய்தலில் பெருவிருப்பங் கொண்டவனாதலின், போரை நிறுத்தாது பொருதான்; மிகைபடக் கூறி என்? காரியின் படை அழிந்தது. காரியும் அஞ்சிக்கு அஞ்சி யோடினான். கோவலூர், அஞ்சா நெஞ்சம் படைத்த அஞ்சியின் ஆட்சிக்குட்பட்டது. அவனது போர்த் திறத்தைக் கண்ணுற்ற பரணர் என்னும் பெரும் புலவர் அவனைப் பலவாறு புகழ்ந்து போற்றினர். அம்மையாரும் அகமகிழ்ந்து அஞ்சியை நோக்கி, “உன்னுடைய முன்னோர் தேவர்களைப் போற்றி வழிபட்டனர்; அத்தேவர் களுக்கு வேள்விக்கண் ஆவுதியை அருத்தினர். அவற்றால், அவர்கள் பெறுதற்கரிய கரும்பை விண்ணுலகினின்றும் மண்ணுலகிற்குக் கொணர்ந்தார்கள்; கடலுக்குட்பட்ட இவ்வுலகின்கண்ணே ஆஞ்ஞா சக்கரத்தை நடாத்தினார்கள். நீயோ, பொன்னாற் செய்யப்பட்ட வீரக் கழல் புனைந்த காலினையுடையை; பெரிய பனம்பூ மாலையை யணிந்துள்ளாய்; பூ நிறைந்த காவினையுடையை; ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுடையை; பிற வேந்தரது கொடி முதலிய அடையாளங்களைப் பெற்றுள்ளாய்; நாடு தலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையைத் தப்பின்றாகப் பெற்றுள்ளனை; இவற்றுடன் அமையாது, புதிய போரை விரும்பி ஏழு அரசரோடு பகைத்து, அவருடன் போர் செய்து வெற்றி பெற்றாய்; அவ்வாறு வெற்றி பெற்ற அந்த நாளினும், பாடும் புலவர்க்குப் பாட முடியாத அடங்காப் புகழையுடைய வனானாய்; நீ மாறுபாடு மிக்க கோவலூரை அழித்த இற்றை நாளும் நினது வலி மிக்க தோளைப் பரணன் தன் புலமைப் பெருவலியாற் பாடினன்;” என்று கூறி, புலவராலும் பாடிப் புகழ முடியாத அஞ்சியது ஆற்றலையும், பகை வென்ற திறத்தையும், பரணரது கவி பாடும் ஆற்றலையும் ஒருங்கே வைத்துப் புகழ்ந்துரைத்தார்.

இவ்வாறு அஞ்சி கோவலூரை வென்று, தனது அரசாட்சிக்குட்படுத்திய பின்னர், ஒளவையாருடன் மீண்டு, தனது அரசிருக்கையான தகடூரை அடைந்தான்.

7. புத்திரப் பேறு

அரசனுக்கு இருக்க வேண்டிய அருங்குணங்கள் அனைத் தினையும் பெற்ற அண்ணலாகிய அஞ்சி, புத்திரப் பேறின்றிப் பெரிதும் வருந்தினன். குடும்பம் என்னும் மரத்திற்குக் குழந்தை கொழுங்கனியன்றோ? எத்துணைத் துன்பங்கள் இருப்பினும், குழந்தையைக் கண்ட அளவில் அவை வெயிலவனைக் கண்ட பனிபோல நீங்குகின்றன. இல் வாழ்வானுக்கு இம்மைச் செல்வங்களிற் சிறந்தது மக்கட்பேறொன்றே. அப்பேற்றினைப் பெற்றவன் இம்மை மறுமை இன்பங்களைப் பெறுகின்றான். இத்தகைய இன்பம் உயிர்கட்கெல்லாம் ஒரு தன்மையாகவே அமைந்திருக்கிறது.

“பெருமவற்றுள் யாமறிவ தில்லை; அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற”

-திருக்குறள்

என்ற நாயனார் வாக்குச் சிந்திக்கற்பாலது. குழந்தையில்லா மனை பாழிடமே யாகும். குழந்தைகளின் சிறிய கைகளால் துழவப்படும் சோறானது, சுவையில் தேவாமிருதத்தை விட மிகவும் இனிமையைப் பயப்பதாகும். தாய் தந்தையர் தம் குழந்தைகளுடைய மெய்யைத் தீண்டுதலால் உடற்கின்பம் பெறுகின்றனர்; அவர்களுடைய மழலைச் சொற்களைக் கேட்பதால் செவிக்கின்பம் பெறுகின்றனர். இவ்வாறாய புதல்வர்கள் இல்லா மனை, குபேர சம்பத்துடன் இருப்பினும், குட்டிச்சுவரேயாம். துறவிகளும் மக்கள்மேல் உள்ள காதலைத் துறக்க வல்லாரல்லர்; எனின், அக்குழந்தைகளைப் பெறுதலால் உண்டாகும் இன்பத்தைச் சொல்லவும் வேண்டுமா?

“ படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கல்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழும் நாளே”

-புறநானூறு

“ பண்ணிலாப் பாடல் போலும், பரிவிலா நட்புப்போலும்,
உண்ணிலா நெய்யி லாமல் உண்டிடும் அடிசில் போலும்,
பெண்ணிலா இல்லம் போலும், பெயரிலா வாழ்க்கை போலும்,
கண்ணிலா வதனம் போலும் கான்முளை யில்லா இல்லம்,”

-மாயூரத்தல புராணம்

இவ்வாறு மக்கட்பேறு மிகச் சிறந்ததாக விருக்க, இப்பேற்றினை நெடுங்காலம் பெற்றானில்லை அதியமான். ஆனால், ஒளவையார் அவனை வந்து அண்டிய பின்னர், அவனது மனைவி கருவுற்றாள். அவள் சூல் கொண்டிருக்கையில், அஞ்சி கோவலூரை எதிர்த்தான். வென்றி கொண்டு வேந்தன் மீண்டும் தகடூரை அடைந்த போது அரசி ஆண் குழந்தை யொன்றினைப் பெற்றிருந்தாள். அந்நற்செய்தியைக் கேட்டான் வேந்தன்; நகரில் நுழைந்தவுடன் போர்க் கோலத்துடனே ஒளவையாரோடு அந்தப்புரஞ் சென்றான்; சென்று, பிறந்திருந்த ஆண் குழந்தையை கண்டான்; உள்ளத்தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகை கடல் போலப் பொங்க, அகமலர முகமலர்ந்தான். வேந்தன் ஏவலரை நோக்கி, “சிற்றசர் பன்னிரண்டாண்டு கப்பங் கட்டாதொழிக; எங்கும் இரு நிதியை வாரி வாரி யாசகர்க்குக் கொடுங்கள்; ஆலயங்களில் விழாக்கள் நடை பெறுக,” என்று கூறி, மீண்டும் தன் மகவைப் புத்திர வாற்சல்யம் மிக்கவனாய் ஆர்வத்தோடு நோக்கினான். குழந்தை வெகு அழகாக இருந்தது.

ஒளவையார் அக்காட்சியினைக் கண்டு களித்தார். அவர் செந்தமிழ்ச்சுவை தங்கிய தமது வாயைத்திறந்து, “கையின்கண் உள்ளது வேலே; காலின் கண் உள்ளது போர்க் கோலங் கொண்ட போது அணிந்த வீரக்கழல்; உடம்பில் உள்ளது வேர்ப்பு; கழுத்தில் உள்ளது ஈரம் புலராத பசிய புண்; பனந்தோட்டையும் வெட்சி மலரையும் வேங்கைப் பூவுடனே கலந்து தொடுத்து உச்சியில் சூடிப் பகைவரை வெகுண்டு பார்த்த இவன் கண், தவப்புதல்வனைக் கண்டும் சிவப்பு நீங்கினதில்லை; ஆதலால், இவனைச் சினப்பித்தார்கள் பிழைப்ப துண்டோ!” என வியந்து கூறி, மகிழ்ச்சியடைந்தார்.

குழந்தை பிறந்த செய்தி நகரமெங்கும் பரவியது. அந்நகரவாசிகள் அதனைக் கேட்ட மாத்திரத்தில் தங்களுக்கே தனயன் பிறந்தாற் போலப் பெரு மகிழ்ச்சி யடைந்தார்கள். அன்று முழுவதும் யாவரும் களிப்பென்னும் கடலில் ஆழ்ந்தனர்; “நம் அரசன் நீடு வாழ்க! அவனது தோன்றலும் நீண்ட ஆயுளைப்பெற்று விளங்குக!” என்று வாயார வாழ்த்தினார்கள். அமைச்சர் கற்கண்டும் கனிகளும் கலந்து நகரத்தார்க்கு வழங்கினர். அன்று நல்ல முகூர்த்தத்தில் அறிவோர் குழந்தைக்குப் பொகுட்டெமினி என்ற நற்பெயரை இட்டனர். அரசனும் அடங்கா மகிழ்வு கொண்டான்.

8. மா பெரும் போர்

அஞ்சிக்கு அஞ்சிப் புறங்கொடுத்து ஓடிய காரி என்பவன், தன் நண்பன் சேரமான் பெருஞ் சேரலிரும் பொறை என்பானோடு சேர்ந்து, ஒரு பெரிய சேனையுடன் அஞ்சியை எதிர்க்கத் துணிந்தான். அவ்வமயம் சேரமான் கொல்லி மலை நாட்டை ஆண்டு வந்த ஓரி என்பானை முதலில் வெல்ல நினைத்தான். அதனை உணர்ந்த ஓரி, தன் நண்பனான அஞ்சியைத் தனக்கு உதவிபுரிய வேண்டினன். அஞ்சியும் அதற்கு உடன்பட்டு, சோழ பாண்டிய மன்னரையும் உடனழைத்துச் சென்று, சேரமானைத் தாக்கினன்; கொடும்போர் நிகழ்ந்தது. முடியுடை மூவேந்தரும் மூன்று குறுநில மன்னரும் அப்போரில் ஈடுபட்டிருந்தால், சாதாரணப் போராயிராது, அது மாபெரும் போராகவே இருந்தது. முடிவில் சேரமான் அஞ்சியையும் இருபெரு வேந்தரையும் ஒருங்கே வென்றான். சோழ பாண்டியர் தத்தம் நாடு நோக்கி ஓடலாயினர். அஞ்சி, சேரமானுக்கு அஞ்சித் தகடூர் கோட்டைக்குள் புகுந்து கொண்டான். சேரமானும் அவனை விடாது பின்பற்றிச் சென்று, தகடூரை முற்றுகையிட்டான்.

அஞ்சாத நெஞ்சம் படைத்த அஞ்சி எக்காரணத்தாலோ சேரமானை எதிர்க்கத் தயங்கினன். அது கண்ட ஒளவையார் அவனுக்குப் போரில் உற்சாகம் உண்டாக்க எண்ணினார். அவர் அவனை நோக்கி, “வேந்தே, மலைச்சாரலில் உறையும் வலிமையுள்ள புலி சீறின், எதிர்த்து நிற்கவல்ல மானினம் உளவோ? ஞாயிறு கொதித்து எழுந்தால், மயங்கிவானிடத்தும் திசையின் கண்ணும் செறிந்த இருள் உண்டோ? பாரத்தின் மிகுதியால் நிலத்திற் பதிந்த சகடத்தின் ஆழ்ச்சியைப் போக்க மணற் பரக்கவுங் கற்பிளக்கவும் நடக்க வல்ல மனச்செருக் குடைய கடாவிற்குச் செல்லற்கரிய துறையும் உண்டோ? அவைபோல, நீ அமர்க்களம் புகுந்தால், இம்மண்ணுலகில் உனது நாட்டைக் கைப்பற்றி ஆரவாரிக்கும் வீரரும் உளரோ?” என்று கூறினர்.

அம்மையாரின் மொழியை வேத வாக்கிய மென்று கருதும் மனப்பான்மையுடைய அஞ்சி, அவர் உரைத்தவை கேட்டு, மனத் தெளிவும் உற்சாகமும் கொண்டு, போருக் கெழுந்தான்; பகைவரின் சேனையைச் சின்னபின்னப் படுத்தினான். சேரமானது குதிரை வீரர்களிற் பலர் உயிர் தப்பினாற் போதுமென்று ஓட்டம் பிடித்தனர். அஞ்சியின் சேனையும் சேரமானால் அலைக்கழிக்கப் பட்டது. அஞ்சி, சிறிது நேரம் கடும் போர் புரிந்தான்; முடிவில் பகைவர் படைகளால் புண்பட்டான்.

தம் வேந்தர் பெருமான் போர்க்களத்தில் புண்பட்டு வருந்தி நிற்றலைக் கண்டார் ஒளவையார். அவர் முன் சென்று அவனை நோக்கி, “பெரிய தகைமையை உடையாய், நீ சீரிய புண்பட்ட படியால் உன்னால் பலர் மாண்டனர். திண்ணிய பிணிப்பையுடைய முரசம் இழுமென்னும் ஓசையுடையதாய் ஒலிக்க, மேற்சென்று போரை வெல்லுதல் இனி எங்கேயுளது?” என்று அவனது போர்த் திறத்தைக் கொண்டாடினர்.

அது கேட்ட அஞ்சி மகிழ்வெய்தி, பின்னும் போரை விரும்பியவனாய் எதிர்த்தான். அவ்வமயம் சேரமான் விடுத்தபடை யொன்று அஞ்சியின் மார்பிற் பாய்ந்தது. அந்தோ! இரவலர்க்கு வரம்பு மீறி அளித்து வந்தவனும், வீர லட்சுமி தங்கப் பெற்ற தோள்களை யுடையவனும், நற்குண நல்லொழுக்கம் வாய்ந்தவனும், ஒளவையாரது ஆருயிர் நண்பனுமான அதியமான் நெடுமானஞ்சி மண்ணுலக வாழ்வை நித்து விண்ணுலக வாழ்வை எய்தினான்.

9. ஒளவையார் புலம்பல்

அஞ்சி! இறந்து பட்டதைக் கண்ட ஒளவையார் ஆற்றொணாத் துயர் அடைந்தார்; அவனது அரும் பெருங்குணங்களைக் கூறிப் புலம்பினார். “எம் வேந்தன் சிறிது மதுவைப் பெறினும், எங்கட்குக் கொடாது உண்ணான்; இப்போது அவ்வாறு எங்கட்குக் கொடுப்பது கழிந்ததே! பெரிய அளவினையுடைய மதுவைப் பெறின், அதனை எங்களுக்குக் கொடுப்பான்; யாங்கள் உண்ட பின்னர் எஞ்சியதையே அஞ்சி நுகர்வான்; அது கழிந்ததே! சோறு சிற்றளவினை உடையதாயினும், பல கலந்களில் வைத்துப் பலரோடும் உண்பன்; அது கழிந்ததே! மிக்க அளவினையுடைய சோற்றின் கண்ணும் வெகு பேரோடு உண்பான்; அது கழிந்ததே! என்போடு கூடிய ஊன்றயடியுள்ள இடம் முழுவதும் யாங்கள் உண்டுகளிக்க எங்களுக்கு அளிப்பான்; அது கழிந்ததே! எங்களுக்கு மாலை சூட்டும்போது புலால் நாறும் எங்கள் தலையைத் தான் கொண்ட அன்பு பெருக மணநாறும் தனது கையால் தடவுவான்; அது கழிந்ததே! அஞ்சியது மார்பகத்தே தைத்த வேல் அவனது மார்பளவில் மாத்திரம் தைத்ததன்று அஃது அரிய தலைமையை உடைய பாணரது மண்டையின் துளையில் உருவியும், அவரால் காப்பாற்றப்படும் சுற்றத்தாரது விழிப்பாவையை மழுங்கச் செய்தும், அழகிய சொல்ல ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியாளரது நாவின்கண் விழிந்தும் சென்றது. எமக்குப் பற்றாகிய எம் இறைவன் எங்குள்ளானோ! இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவோர்க்கு ஒன்று ஈவாரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் பூக்கும் பகன்றைப்பூ, பிறரால் சூடப்படாததுபோல் பிறர்க்கு ஒரு பொருளைக் கொடாமல் இறக்கும் உயிர்கள் மிகப் பல,” என்று கூறிப் புலம்பினர்.

பின்னும், அம்மையார் அவன் இறந்ததற்கு ஆற்றாது புலம்புபவராய், “அஞ்சியின்றிக் கழிகின்றகாலையும் மாலையும் இனி இல்லாது போகக் கடவன; யான் உயிர் வாழும் நாளும் எனக்கு இனிப் பயன்படர்மையால், அஃது இல்லாதொழி யட்டும்;” என்று கூறிப் புலம்பினார்.

பின்னர், அதியமானது உடல் எரிக்கப்பட்டது, அவ்வமயம் ஒளவையார், “ஈமத்தீ, எம் வேந்தனது பூத உடலைச் சிதைக்காமல் அவியினும் அவிக; அல்லாமல் சிதையும்படி ஓங்கி எரியினும், எரிக; ஆனால், கதிரவனுக்கு ஒப்பான அவன் புகழ் உடம்பு ஒரு காலத்தும் அழியாது” என்று அஞ்சியினது,” என்று அஞ்சியினது புகழை மேம்படுத்திக் கூறி வியந்தார்.

10. பொகுட்டெழினி பட்டம் ஏற்றது

ஒளவையார் முதலிய பெரியோர்கள் அஞ்சியது மகனான பொகுட்டெழினிக்கு முடிசூட்ட ஒரு நன்னாளைக் குறிப்பிட்டனர். குறித்த தினத்தில் தகடூரை நன்றாக அலங்கரித்தனர்; வீதிகளில் பூரண கும்பங்களும் பொற் பாலிகைகளும் பாவை விளக்குகளும் வைத்தார்கள்; குலைக் கமுகும், குலை வாழையும், கரும்பும், வஞ்சிக் கொடியும் பூங் கொடியும் ஆகிய இவற்றைக் கட்ட வேண்டிய இடங்களிற் கட்டினார்கள். தூண்களில் முத்து மாலைகளைக் கட்டினார்கள்; வீதிகளிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்பினார்கள்; துகிற் கொடிகளை மாடங்களிலும் வாயில்களிலும் கட்டினர்கள்; தெய்வங்கள் உளையும் கோவில்களிற் செய்யவேண்டிய காரியங்களை ஏற்பச் செய்தார்கள்.

குறித்த நல்லோரையில் பெரியோர் பொகுட்டெழினியை மங்கல நீரால் ஆட்டினர்; அரசன் அணிய வேண்டிய ஆடையாபரணங்களை அணிவித்தனர்; பூமாலைகளைப் புனைந்தனர்; கலவைச் சாந்தங்களைப் பூசினர். இவ்வாறு அரச கோலத்தோடு விளங்கிய பொகுட்டெழினி அரச மண்டபத்தை அடைந்தான்.

பின்னர், செய்யவேண்டிய சடங்குகள் முறையே செய்யப்பட்டன. ஒளவையார் முதலிய பெரியோர் மணிகள் பதித்த முடியை எடுத்து வாழ்த்தி, பொகுட்டெழினியின் முடிமீது வைத்து ஆசீர்வதித்தனர். பல்லிசை வாத்தியங்கள் முழங்கின. நான்மறைக் கிழவர் ஆசி கூறினர். பொகுட்டெழினி செங்கோலைக் கையில் ஏந்தினன்.

அவ்வமயம் ஒளவையார், பொகுட்டெழினியால் குடிகள் சமாதானத்தையும் களிப்பையும் அடைவார்கள் என்ற கருத்தை வைத்து, அரசனை நோக்கி, “உயர்ந்தாய், நீ திங்களாகிய நாள் நிறைந்தமதியை ஒப்பை. ஆதலின், நின் நிழற் கண் வாழும் குடிகட்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது!” என்று அவனது நற்குண நற்செயல்களைக் குறிப்பாக வெளிப்படுத்திப் புகழ்ந்தார்.

பெரியோர் ஆசியாலும், இறைவன் இன்னருளாலும் பொகுட் டெழினி நற்குண நற்செயல்களையுடையவனாய் வறியோர்க்கு வழங்கிச் செங்கோல் மன்னனாய் அரசாண்டிருந்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !