
நாற்பெரு வள்ளல்கள்
மா. இராசமாணிக்கனார்
IV. வள்ளல் குமணன்
1. குமணன்
கொங்கு மண்டலம் என்பது தமிழ் நாட்டில் உள்ள மண்டலங் களில் ஒன்று. அது சேலம், கோயமுத்தூர், நீலகிரி ஜில்லாக்கள் சேர்ந்த நாடாகும். கோயமுத்தூரைச் சேர்ந்த உடுமலைப் பேட்டைத் தாலுகாவில் குதிரை மலை என்னும் ஒரு மலை உள்ளது. அதற்கருகில் குழுமம் என்னும் ஓர் ஊர் உளது. குதிரை மலை சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் முதிர மலை எனப் பெயர் பெற்றிருந்தது. குழுமம் என்னும் பதி, குழுமூர் என்ற பெயருடன் இருந்தது. குழுமூரும் அதனைச் சார்ந்துள்ள முதிர் மலையும் சில அரசரால் ஆளப்பட்டு வந்ததாகச் சங்கநூல்களால் தெரிகிறது. வருடங்கள் ஆக ஆக, ஊர்களின் பண்டைப் பெயர்கள் மாறுதல் இயல்பேயாதலால், முதிர மலை என்பது குதிரை மலை என்றும் குழுமூர் என்பது குழுமம் என்றும் வழங்கப்படுகின்றன என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.
“அலங்குளைப் புரவு யைவரொடு சினைஇ
நிலைந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது”
-புறநானூறு
கொடுத்த சேரமான்பெருஞ்சோற்றுஉதியன் சேரலாதன் இந்நாட்டை ஆண்டு வந்ததாகத் தெரிகிறது.
“பல்லான் குன்றிற் படுநிழற் சேர்ந்த
நல்லான் பரப்பிற் குழுமூர் ஆங்கண்
கொடைக்கடன் என்ற கோடா நெஞ்சின்
உதியன்”
-அகநானூறு
ஆண்டிருந்த நாட்டை, அவனுக்கு அனேக ஆண்டுகட்குப் பின்னர், இற்றைக்குச் சற்றேறக் குறைய ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்குமுன்னர், குமணன் என்னும் மன்னவன் ஆண்டு வந்தான்.
அம்மன்னன், வரையாது கொடுக்கும் வள்ளற்றன்மையிற் சிறந்தவனென்றே கூறுதல் அமையும்; தமிழருமையினையும் புலவர் பெருமையினையும் நன்குணர்ந்து பரிசில் நல்கும் பான்மை யுடையவன்.
2. பெருஞ்சித்திரனார்
புகழ் மணம் பெற்ற குமணன் கொங்கு நாட்டில் முதிர மலைநாட்டை ஆண்டு வருகையில், சோழ நாட்டில் பெருஞ்சித்திரனார் என்னும் பெயர் வாய்ந்த நல்லிசைப் புலவர் ஒருவர் இருந்தார். இயற்கையில் அன்னவர் இப்பெயர் பெற்றனரோ, அன்றி இது செயற்கையில் வந்த பெயரோ, அறியோம். உலகத்து இயற்கைப் பொருள்களைத் தன் கண் முதலான புலன் அறிவுகொண்டு பல திறப்பட்ட வண்ணங்கள் கலந்து தூரிகையால் படத்தில் பன்னாளும் வருந்தி ஓர் ஓவியத்தைத் தீட்டும் சித்திர காரியைப் போன்று உலகில் தோன்றும் மலை கடல் முதலிய பெருந்தோற்ற முதற்கொண்டு அணுவளவான சிறு தோற்றமீறாக உள்ள எல்லாவற்றையும், தமது மன அறிவைக் கருவியாகக் கொண்டு ஆராய்ந்து, உள்ளமாகிய படத்தில் தீட்டி, சமயம் வாய்த்தபோது அக்காட்சியிலே தோய்ந்து கிடந்த உணர்ச்சியை வடிவமாக்கி, நற்றமிழை நலமுறப் பயின்ற நாவால் பைந்தமிழ்ப்பாவாகப் பாடுவதில் மிக்க சமர்த்தரானது பற்றியே, இப்புலவர் பெருமானுக்கு இப்பெயர் வந்ததோ என எண்ண வேண்டி இருக்கின்றது.
இவர், இளமைப் பருவத்திலேயே ஒரு நல்லாசிரியரை யடுத்து நலமுறப் பயின்றனர்; முருகு விரித்தொளிரும் தமிழ் மலரைத் தம் அகத்தே வைத்தனர்; சொற்சுவை பொருட்சுவையோடு கவிபாடும் பேராற்றல் பெற்றனர். இப்பெருமான் தம் முதிய தாயாருடனும் மனைவியாருடனும் வாழ்ந்துவந்தார்.
நாளடைவில் புலவர்க்குப் பல மக்கள் உண்டாயினர்கள். மக்கட் பேற்றினைப் பெற்ற புலவர் பொருட் பேற்றினைப் பெற்றரில்லை. இஃது உலக இயற்கையே அன்றோ? மலரவன், மலையிட்ட செல்வத்தார்க்கு மகிழ ஓர் மகவும் தாரான்; ஆனால், குடிக்கக் கூழ் இலார்க்குக் குறைவின்றி மக்களைத் தருவான். புலவர் நாளடைவில் வறுமை நோயால் வாடத் தலைப்பட்டனர்.
கல்வியறிவு பெற்ற மக்கள் பொருள் இன்றி வாடலும், அது பெறாத மக்கள் பொருள் பெற்று வாழ்தலும் கண்கூடாகக் காண்கின்றோம். கல்விக்குத் தலைவி கலை மகள் ஆவள். பொருட்குத் தலைவி அலை மகள் ஆவள். கலை மகள் அலை மகட்கு மருகியாவாள். ஒரு குடும்பத்தில் மாமியும் மருகியும் ஒன்றுபட்டு வாழ்தல் அரிதன்றோ? அலை மகள் ஒருவனைப் பற்றியிருந்தால், அவனிடத்துக் கலை மகள் நெருங்குவதைக் காணோம். ஆனால், அரிதாக இவ்விரு மகளிரும் சிலரிடத்தே ஒன்றி வாழ்கின்றனர். மாமியும் மருகியும் மனம் ஒன்றுபட்டு வாழ்கின்றசில குடும்பங்களை நாமும் கண் கூடாகப் பார்க்கின்றோமன்றோ? இக்காரணத்தாலோ, அன்றி எக்காரணத்தாலோ, புலவரிடம் அலை மகள் அண்டவில்லை.
புலவர் குழந்தைகள் பசியால் பெருந்துயர், உழந்தார்கள். சிறிதளவு சோற்றைக் சமைத்தால், அது பிள்ளைகட்கே போதுவதில்லை.
இங்ஙனம் பிள்ளைகள் படும் பாட்டைக் கண்டு சகியாத புலவர் மனைவியார், தம் கணவரைத் தம் நீர் விழியால் நோக்கப் புலவர் வானத்தை நோக்குவார்.
ஒரு நாள் புலவர் பெருந்தகை ஓர் இடத்தமர்ந்து சிந்திக்கலானார்: “என்னே நமது ஊழ்வினைப் பயன் இருந்தவாறு! நாம் யாரிடம் சென்று பொருள் கேட்பது? உலகில் செல்வராயினோர் பலர் உளர் என்றாலும், அவர் யாவரும் அறிவுடைச் செல்வராகாரே! அறிவுடை மக்களிடத்தே சென்றாலன்றோ அவர் நமது பெருமையையும் வறுமையையும் நன்கு உணர்ந்து பரிசில் நல்குவர்? புல்லறிவாளர் செல்வரேயாயினும், அவரிடம் செல்வதால் நாம் பெறும் பயன் என்?
“செல்வம்வந் துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்
சொல்வனவறிந்து சொல்லார்சுற்றமுந் துணையு நோக்கார்
வெல்வதே நினைவ தல்லால் வெம்பகை வலிதென் றெண்ணார்
வல்லினை விலைவுமோரார் மண்ணின்மேல் வாழுமாந்தர்”
-வில்லி பாரதம்
“திருவளர்க்கும் தீந்தமிழாகிய தேனினும் இனிய பாக்களைத் தமிழின் அருமையும் புலவரது பெருமையும் கணித்தறிய வல்ல பேராற்றல்வாய்ந்த வள்ளல்களிடத்தன்றோ பாட வேண்டும்? அவர்களிடம் சென்றால் நம்மைப் பிணித்து வருத்தும் வறுமையும் நீங்கும். அவ்வாறு செல்வோம் என்றாலும், கொடையிற் சிறந்த வள்ளல்கள் இல்லையே! என் செய்வோம்? ஆ! நல்லயோசன! தற்போது யாவரும் சிறப்பித்துக் கூறும் தகடூர் மன்னன் அதிகமான் நெடுமானஞ்சியிடம் செல்வோம். அவனே நமது வறுமையை அகற்றும் பெருமைவாய்ந்தவன்,’’ என்று துணிவு கொண்டு, பல நாட்களாக நடந்து வருந்தி, முடிவில் புலவர் தகடூரை அடைந்தார்.
எக்காரணத்தாலோ, நெடுமானஞ்சி புலவரைக் கண்டு வரவேற்கவில்லை; ஒரு நாள் தன் ஏவலர் மூலமாகப் புலவர்க்குப் பரிசில் அனுப்பினன். புலவர் அதனைப் பெற மறுத்து, முனிவுடன் அவ்வூரை விட்டு அகன்றார். அகன்றவர், கொங்கு நாட்டில் உள்ள குமணன் வள்ளற்றன்மையிற் சிறந்தவன் என்பதைக் கேள்வியுற்று, குழுமூரை அடைந்தார்.
3. புலவரும் குமணனும்
குமண மன்னவன் பெருஞ்சித்திரனாரை முகமன் கூறி வரவேற்றான். குமணனது எளிய தன்மையையும் புலவரை உபசரிக்கும் புனித விதத்தையுங் கண்ட பெருஞ்சித்திரனார், உள்ளத்தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகை கடல்போலப் பொங்க, குமணனை நோக்கி, “மன்னவனே, என்னைய இரவலர்க்குத் தாய் வீடு போன்ற நினதுமுதிர மலையும், தாயை யொப்ப அன்பினைச் செலுத்தும் காருண்ய வள்ளலான நீயும் இருக்க எங்கட்கென்ன குறை! நீ சுகமே வாழக் கடவாய்! ” என்று புகழ்ந்து ஆசீர்வதித்தார்.
பின்னர், குமணன் புலவர்க்கு அறுசுவை உண்டி அன்புடனளித்தான்; புலவரது பைந்தமிழ்ப் வியந்து, அவருக்குப் பரிசில் தரின் தன்னைவிட்டு கண்டு வியந்து, அவருக்குப் பரிசில் தரின் தன்னைவிட்டு நீங்குவரென நினைத்துப் பல நாள் பரிசில் நல்காதிருந்தான். புலவரோ, தாம் குமணனது மாளிகையில் சுகமாயிருக்க, தம் தாயாரும் மனைவி மக்களும் எப்பாடு படுகின்றார்களோ என்ற ஏக்கமே பெரிதுங் கொண்டார். ஆதலால், விரைந்து ஊர் செல்ல விரும்பங் கொண்ட புலவர், தமது, உள்ளக் கருத்தைக் குமணனுக்குக் குறிப்பாகத் தெரிவிக்க நினைத்தார். அவர் குமணனை நோக்கி, “முரசு அறையவும் வெள்ளிய சங்கு முழுங்கவும் வேந்தரோடு போர் செய்தவனும், நெடிய மலைக்கண் ஒலிக்கும் வெள்ளிய அருவிகல்லை உருட்டியோடும் பறம்புநாட்டிற்கு வேந்தனும் ஆன வேள் பாரி மாண்டனன். உயர்ந்த உச்சியையுடைய கொல்லி மலைக்குத் தலைவனான வேள் ஓரி உயிர் நீத்தனன். காரி என்னும் பெயருடைய குதிரையைச் செலுத்திப் பெரிய போரை வென்றவனும் மாரி போலும் வன்மையையும் மிக்க போரினையும் உடையவனும் ஆன மலையன் மண்ணுலக வாழ்வை விட்டான். செலுத்தப்படாத உயர்ந்த குதிரை யென்னும் மலையையும், கூரிய வேலையும், கூவிளங்கண்ணியையும், வளைந்த ஆரத்தையும் உடைய எழினி விண்ணுலகிற் கெழிந்தனன். மிக்க குளிர்ந்த மலையின்கண் இருள் செறிந்த பெரிய முழையினையும் மலைதற்கு அரிய வலியினையும் பெற்ற பெரிய மலை நாடனான பேகன் வானவர் உலகிற் புக்கனன். திருந்திய சொல்லையுடைய மோசியாரால் பாடப்பெற்ற வேள் ஆய் அண்டினன் ஆண்டவன் தாளை. ஆசையுற்றுத் தன்னை நினைத்து வருவோரது வறுமையைப் போக்க வல்ல ஈகையையுடைய நள்ளி என்பான் பூதவுடம்பை நீத்துப் புகழுடம்பெய்தினன்.
“இவ்வாறாக வள்ளல்கள் இறந்து பட்டார்கள். அவர்கட்குப் பின்னர், கண்டார்க்கு இரக்கம் வரப்பாடிவரும் புலவருக்கும் பரிசில் நல்க யான் ஒருவன் உளன் என்பதாக நீ யிருப்பதால், நின்பால் பரிசில் பெற வந்தேன். குமண, உனது மலையின் வானளாவிய மூங்கில்கள் அதிகமாக உண்டு; சுரபுன்னை மரங்களும் அதிகம்; அவற்றுடன் பல மரங்களும் ஓங்கி வளர்கின்றன. குரங்குகள் நினது மலையில் அதிகமாக வாழ்கின்றன. நின் மலையில் உள்ள பலாப் பழத்தைப்பறித்த கடுவன், பஞ்சுபோன்ற மயிரையுடைய தலையைப் பெற்ற மந்தியைக் கையாற் குறி செய்து அழைக்கும் பான்மையுடையது. நீ புது வருவாய் இடையறாது வரும் நல்ல நாட்டினையும் பெற்றுள்ளாய். முதிர மலைக்குத் தலைவ, உலக முழுவதும் விளங்குகின்ற புகழினையும், அழகுடன் அமைக்கப்பெற்ற தேரினையும் உடைய வள்ளால், நீ எடுத்த வேல்புகழ் மேம்பட்ட வண்மையுடனே பகைவரிடத்து உயர்க,” என்று கூறினர்.
புலவர் மீண்டும் குமணனை நோக்கி, “கூர்வேலேந்திய குமண, வெற்றிப் புகழ் கொண்டவசையில்லாத சிறந்த குடியிற் பிறந்து இசையுடன் விளங்கும் ஏந்தலே, நின்னைப் பாடிய யான், நீ களிப்பின்றிக் கொம்புகளையுடைய களிற்றைத் தரினும் வேண்டேன்; நீ மனம் உவந்து சிறிது பொருளைத் தரினும் அதைப் பெரிதாக எண்ணி மகிழ்வேன். என் தாயாரும் மனைவி மக்களும் படும் துன்பத்தைச் சற்றே கூறுவேன்; கேட்பாயாக: என் அன்னையார் பெரிதும் வயது முதிர்ந்தவராதலால், இன்னும் தம்முயிர் போகவில்லை என்று சொல்லிக்கொண்டு, வாழும் நாட்களோடு பலவாறு வெறுத்துத் தாம் பிடித்த ஊன்று கோலையே காலாகக் கொண்டு, நடக்கவும் சத்தியற்று, நரை மயிர் உடையவராயும் கண்கெட்டவராயும் உணவில்லாத வராயும் வருந்திக் கொண்டிருக்கிறார்.
என் மனைவியோ, பசந்தமேனி உடையவள்; வறுமையால் பெரிதும் மெலிந்துள்ளாளாதலால், பால் அற்ற தனங்களையுடையவள்; மேலும் குழந்தைகள் வறுவிய அத்தனங்களை மெல்லதால் வலி பொறுக்க மாட்டாது வருந்துகின்றாள். உணவிற்கு வழியின்றி, குப்பையில் தானாக முளைத்த கீரையினது முன்பு கொய்யப்பட்ட கண்ணிலே கிளைத்த முதிராத தளிரைப் பறித்து உப்பின்றியே நீரை உலையாகக்கொண்டு அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி மோர் இல்லாமலும் சோறு இல்லாமலும் வெறுங்கீரையையே உண்டு உயிர் வாழ்கின்றாள் மாசு படிந்த கிழிபட்ட கந்தை உடுத்தியுள்ளாள். இத்தகைய நிலையில் உள்ள அவளும், குழந்தைகளும், என் அன்னையாரும், எனது சுற்றமும் மனம் மகிழ்ந்து நின்னை வாழ்த்தும்படி எனக்கு நீ மனம் உவந்து பரிசில் தந்து அனுப்புவையாயின், நன்று, நீ மன மகிழ்ந்து தரும் பரிசிலையே யான் விரும்பிகின்றேன்,” என்று கன்னெஞ்சமும் கரையும்படி வெகு அழகாகத் தம் வறுமையை வர்ணித்தார்.
பின்னரும், அப்புலர் கோமான் வள்ளைலை நோக்கி, ‘கதிரவன் வெப்பத்தால் கரிந்த புல்லையுடைய காடு தளிர்க்கும்படி மழைத் துளியைப் பொழிந்தாற் போல, புலவர்களது பசியால் வாடும் உடம்பும் குடரும் குளிரும்படி, பொன் வட்டில்களில் தாளிப்பையுடைய கொழுவிய துவையலுடன் நறுநெய் யடிசிலை யிட்டு ஊட்டி, ‘புலவர்கள் கேடின்றி வாழ்வார்களாக,’ என்று வாழ்த்தி, அவர்கள் மனம் மகிழும்படி, பொன் அணிகளை ஓம்பாது கொடுத்துத் தன் நண்பரிடத்துச் செய்யும் அன்பினும் பன்மடங்கு அதிகமான அன்பினை எங்கள்பால் செலுத்துகின்றான் முதிரமலைத் தலைவனாய குமண வள்ளல்,’ என்று பலரும் சொல்ல, அது கேட்ட யான் விரைவுடன் நின்பால் வந்தேன். என் மனையில் உண்ணப்படும் பொருள் ஒன்றும் இன்னையின், அற்ப மயிர் முடியையுடைய எனது புதல்வன் பாலில்லாத வறுவிய தனங்களைப் பல முறையும் சுவைத்துப் பால் பெறானாய் அழுகின்றான்; பின்னர், கூழையும் சோற்றையும் வேண்டி விரைந்து உள்ளே சென்று, ஒன்றும் இல்லாத மட்பாண்டங் களைத் திறந்து திறந்து பார்த்துக் கண்பிசைந்து அழுவன். அவனைப் பார்த்து அவன் அன்னை, ‘புலி வருகிறது!’ என்று அவனுக்கு அச்சத்தை உண்டாக்கி, அவனது துயரைப் போக்க முயல்வாள்; சிறுவன் தணியாததைக் கண்டு மனம் வருத்திய வளாய் அவனை நோக்கி ‘மைந்த, நின் பிதாவைநினைந்து, வெறுத்தநின் மன நிலை காட்டுக,’ என்று கூறுவள். இங்ஙனம் வருந்தும் என் மனைவியும் மக்களும் மகிழுமாறு பரிசில் தந்து விரைவுடன் என்னைப் போக விடுவாய்,” என்றார்.
மேலும், புலவர் சிகாமணி முதிர மலைத் தலைவனை நோக்கி, “வென்றி மிக்கோய், கடல் குறையும்படி நீரை முகந்து சூல்கொண்டு, வேண்டும் இடங்களிற் பெய்யும் மழை நீங்கிய கோடை காலத்தில் உலகத்துஉயிர்கள் எல்லாம் சென்று உண்ணுதற்குக் கங்கையாற்றின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாற்போல, நீ எங்கட்கும் பிறர்க்கும் உபகாரத் தலைவனாய்த் தோன்றி விளங்குகின்றனை.
ஆதலால், வழிபறிப்போர் இரவலரை அடித்துத் துன்புறுத்திச் செல்லா வண்ணமும், அக்கொடியிவரிடம் இருந்து தப்பித்துக் கொண்டோடவும் தக்கதாக நீ எனக்குக் கொம்புகளையுடைய யானை யொன்றைத் தருவாயாக. நின்னால் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு அவர்கள் களிப்புற்றுத் தம் வறுமையைத் தொலைக்கத் தக்க பரிசிலை நல்குவாய். பனை போன்ற கையையும், வளைந்து முதிர்ந்த தந்தங்களையும் உடைய யானையை யான் விரும்புகின்றேன்; அதன்மீதமர்ந்து, அதன் நெற்றிப் பட்டம் விளங்கவும், பக்க மணிகள் மாறி மாறி ஒலிக்கவும், தலைமை தோன்றச் செல்வவிரும்புகின்றேன்; குமண வள்ளலே, என் வறுமை பின்னே நின்று துரத்த, உனது புகழ் முன்னே நின்று ஈர்த்துக்கொண்டு வர, வந்தேன். வந்து, உனது பெருமையினைக் குறித்தும் பாடிய எனது பைந்தமிழ்ப்பாக்களை ஏற்றுக் கொள்வாயாக; எனது திறனையும் உனது தகுதியினையும் அளந்து அவற்றிற்குத் தக்கவாறு பரிசில் அளிப்பாயாக; பெருமனே, எந்நாளும் எனது மிகுதியைக் கண்டு அரசர் நாணும்படி இவண் விட்டுப் பெயர்ந்து போவேன்; உன் வாட்போரின் முயற்சியையும் சீர் மிக்க செல்வத்தையும் படையையும் பலவாறு புகழ்வேனாக,” என்று வள்ளலின் பெருங்கொடைத் திறம் முதலியவற்றைத் தீங்கவியால் புகழ்ந்து பாடி வாழ்த்தினார்.
புலவர் பெருந்தகை பெருமையோடும் பொறுமை யோடும் பகர்ந்தனவெல்லாம் நன்றாகக் கேட்டகுமணன் அவர்பால் பெரிதும் இரக்கமும் அன்பும் கொண்டனன்; வீட்டில் அவரில்லாத போது நிகழும் சம்பவங்களை அகத்தாற் சித்திரித்துக் கூறம் பான்மைக்கே பெரிதும் மகிழ்ந்தான். அரசன் உடனே தன் ஆதனத்தினின்றும் எழுந்து, புலவர்க்கு வேண்டிய வரையில் பட்டாடைகளையும், பொன்னையும், மணியையும், முதிர மலை விளைபொருள்களையும் சிறந்த களிற்றினையும் அவர் மனம் மகிழும்படி தந்தான். குமணனது கொடைத் திறத்தைக் கண்ட சித்திரனார் சித்தரப் பதுமை போல அசைவற்று நின்றார்; அவன் தந்த பொருள்களை விருப்புடன் ஏற்று, அகம் களிக்கவும் முகம் மலரவும், உடம்பு பூரிக்கவும், குமணனைப் பலவாறு வாழ்த்தி, அவனிடம் விடை பெற்றுத் தம் ஊரை நோக்கி நடக்கலானார்.
4.குமணன் காட்டிற் புகுதல்
பெருஞ்சித்திரனார் குமணனிடம் பரிசில் பெற்றுச் சென்று பின்னர், நாட்டில் பெருங்குழப்பம் உண்டாயது. குமணனுக்கு இளங்குமணன் என்னும் ஒரு பின்னோன் இருந்தான். அவன் கல்வியறிவற்ற மூடன்; ‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்,’ எனத் தன் மனம் போனவாறு நடப்பவன். அவன், தன் முன்னோன் வருவோர்க்கெல்லாம் வரையாது கொடுப்பதைக் கண்டு வருந்தினான்; “தன்னிடம் உள்ள பொருள்களைத்தையும் வறியவர்க்கே வழங்கிய பின்னர், துன்பம் அடைபவன் இவனேயன்றோ? இவனுக்குப் பின்னர் பட்டமேற்பவன் யான் அன்றோ? இவன் இறக்குந் தறுவாயில் அரசாங்கத்தில் பொருள் இன்றியிருந்தால், வருந்துபவன் யான் அல்லனோ? எதிர்காலத்தைக் கருதி எதையும் இக்குமணன் செய்பவனாகக் காணவில்லையே!” என்று எண்ணினான்.
அவன், தான் எண்ணியதைத் தன் முன்னோனிடம் கூறினன். தரும குண வள்ளலான குமணனோ, அவனது புன்சொல்லைக் கேட்பவன்? தனது இயல்பான குணத்துடனே குமணன் நடந்து வந்தான். அதைக் கண்ட இளங்குமணன் அண்ணல் மீது வெறுப்புற்றான்; அவனைக் கொன்றுவிடுவதே சரி என்றும் தீர்மானித்தான். அம்முடிவை யுணர்ந்த வள்ளல், இளங்குமணனுக்குப் பயந்து காட்டிற்கு ஓடிவிட்டான்; ஓடி, ஒரு குகையில் உறையலானான்.
மன்னவன் மறைந்த வரலாற்றைக் கேட்ட அவன் நாட்டுக்குடிகள் பட்ட துயரம் கூற முடியாது.
குமண மன்னவன் காட்டிற்கேகிய செய்தியை உணர்ந்த அம்மாநகர் மக்கள்,
“மண்செய்த பாவ முளதென்பார் மாமலர்மேற்
பெண்செய்த பாவ மதனிற் பெரிதென்பார்
புண்செய்த நெஞ்சை விதியென்பார் பூதலத்தோர்
கண்செய்த பாவங் கடலிற் பெரிதென்பார்.”
-கம்ப ராமாயணம்
“அந்தோ! தர்மம், தயை, பிழை பொறுத்தல், அடக்கம், வாய்மை முதலிய நற்குண நற்செயல்களுக்கு உறைவிடமானவனன்றோ குமணன்?
“தாயொக்கு மன்பிற் றவமொக்கு நலம்பயப்பில்
சேயொக்கு முன்னின் றொருசெல் கதியுய்க்கு நீரால்
நோயொக்கு மென்னின் மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப்பு குங்கா லறிவொக்கு மெவர்க்கு மன்னான்.”
-கம்ப ராமாயணம்
“இத்தகைய அரசனைப் பிரிந்து நாம் எவ்வாறு உய்வோம்? கொடுங்கோல் மன்னவனான இளங்குமணனிடமிருந்து நாம் எவ்வாறு கவலையின்றி வாழ்வோம்? கருணையே ஓர் உருவென வந்த குமணனைக் காட்டிற்கு ஏகச் செய்த இக்கொடும்பாவியிடமிருந்து சுகத்தை எப்படி எதிர் பார்ப்பது? மூத்தவனை நீக்கி இளையவன் பட்டம் அடைதல் எங்ஙனம் ஏற்கும்”? என்று பலவாறு குமணனது புகழையும் இளங்குமணனது துரோகத்தையும் கூறிப் புலம்பினர்.
சிலர், காடு சென்று குமணனைக் கண்டு, அவனுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தினந்தோறும் கொடுத்து வந்தனர். அதை உணர்ந்த இளங்குமணன், “என் தமையனது தலையைக் கொண்டு வருவோர். நற்பரிசில் பெறுவர்,” என்று பறை யறைவித்தான். எனினும் ஏன்? குணக்குன்றாய குமணனைக் கொல்ல யார்தாம் இசைவர்?
5.பெருந்தலைச் சாத்தனார்
சோழ நாட்டைச் சேர்ந்த ஆவூர் என்னும் கிராமத்தில் மூலங்கிழார் என்னும் வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் நல்லிசைப் புலமை வாய்ந்த பெருந்தலைச் சாத்தனாரின் தந்தையாராவர். சாதாரணமாக இருக்கவேண்டிய தலையைவிட அவரது தலை சற்றுப் பெரியதாயிருந்தமையின், அவர் அப்பெயர் பெற்றார். சாத்தனார் தக்க வயதடைந்ததும், ஒரு குல மகளை நாடி மணந்து கொண்டார்; மக்கட்பேற்றினையும் பெற்றார். பெருஞ் சித்திரரைப் போன்றே இவரும் வறுமைப் பிணியால் வாட்டமுற்றார்.
‘வள்ளல்களை நாடிச் சென்று பரிசில் பெற்று வருவோம்,’ என யெண்ணிச் சாத்தனார் தம் ஊரை விட்டு ஒரு காட்டு வழியே நடந்து சென்றார். செல்கையில் குமணனிடம் பரிசில் பெற்றுக் களிற்றின் மீதிவர்ந்து வரும் பெருஞ்சித்திரனாரைக் கண்டார். சாத்தனாரைக் கண்ட புலவர் களிற்றினின்றும் கீழிறங்கித் தம் இருகரங்களாலும் சாத்தனாரைத் தழுவிக் கொண்டார். சாத்தனார், “புலவீர், களிறேது? எவ்வள்ளலிடஞ் சென்று மீள்கின்றீர்?” என்று சித்திரனாரை வினவினர். சித்திரனார் புலவரை அன்புடன் நோக்கி, “சாத்தரே, கொங்கு நாட்டில் முதிர மலைத் தலைவனும் வள்ளற்றன்மையிற் சிறந்தவனுமான குமண மன்னவனைப் பாடிப் பரிசில் பெற்று மீள்கின்றேன். இக்களிறு அவன் ஈந்ததே. நீர் விரும்பி அப்பெரு மானிடம் சென்று, உமது வறுமையைக் கூறுக; நும் மன மகிழுமாறு பரிசில் நல்குவன்,” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.
6. குமணனும் சாத்தனாரும்
பெருந்தலைச் சாத்தனார் முதிர மலை நாட்டை அடைந்தார்; குமணன் காட்டில் வசிப்பதை உணர்ந்தார்; இளங்குமணன் முன்னோன் தலையை விரும்பியதையும் கேள்விப்பட்டார்; நேரே குமணன் இருந்த காட்டிற்கு ஓடினார்; வள்ளலைக் கண்டார். குமணன் புலவரை வரவேற்றான். புலவர் அரசனை நோக்கி, “நல்ல போரைச் செய்கின்ற குமண, எனது இல்லத்தில் வறுமையின் கொடுமையால் சமைத்தலாகிய தொழிலைச் செய்தலையொழித்ததால் குமிழ்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கின்றது. உணவின்மையின் பசியால் வருந்தி என் மனைவி மெலிந்தனள். அவளது தனங்கள் பாலை உடையனவாயிராமல் தோலாந் தன்மையுடனே மடிந்து கிடக்கின்றன. பசியால் வாடும் மைந்தன் பால் இன்றி வறுவிய அத்தனங்களைச் சுவைத்துப் பார்த்துப் பாலின்மையால் தாய் முகம் பார்த்து விம்மினன். அவளோ, விழிகளினின்றும் நீரை முத்து முத்தாகச் சொறிந்து, என்னை நோக்கினள். யானோ, கொடையிற் சிறந்த நின்னை நினைந்து வந்தடைந்தேன். நீயோ, சுரங்களுக்கு ஏற்ப நரம்புகளையமைக்கப்பட்ட திருத்திய நல்ல யாழையும் மார்ச்சனை நிறைந்த மத்தளத்தினையும் உடைய கூத்தரது வறுமையைப் போக்கும் வள்ளல்களது குடியிற் பிறந்தவன். எனது வறிய நிலையை யறிந்தாயாதலின், நீ வறுமையுற்ற இந்நிலையினும் உன்னிடமிருந்து பரிசில் பெறாது விடேன்,” என்னும் பொருள் பட,
“ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பில்
ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்பையிற் றோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொ றழுஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!
என்னிலை அறிந்தனை யாயி னிந்நிலைத்
தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணார் முழளின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே! ”
-புறநானூறு
என்ற பைந்தமிழ்ப் பாவொன்றினைப் பாடினர்.
தமிழின் அருமையும் புலவர் பெருமையும் அவர் பாடிய பாவினின்றும் பகுத்தறிந்த படை வேற் குமணன், அகம் மலர முகம் மலர்ந்தான்; புலவரைத் தன் இரு கரங்களாலும் சேர்த்து மார்போடு புல்லினான்; வறுமை செய்யும் துன்பத்தினையும் புலவர் பாட்டின் இன்பத்தினையும் எண்ணினான்; தீங்கவி பாடிய தெய்வப் புலவர்க்குத் தரத் தக்கது தன்னிடம் யாதுளது என்றெண்ணி ஏங்கினான். பின்னர் அவன் புலவரை அன்போடு நோக்கி, “புலவீர், பாவியேன் வேண்டும் பொருளெலாம் நயக்கும் பக்குவந்தன்னில் வந்திலீர்; காடுறைந்து கடுந்துயர் உழுக்கும் காலத்தில் வந்து கவல்கின்றீர். எனினும், என்? என் அருமைத் தம்பியான இளங்குமணன் என் தலையைக் கொய்து வருவோர்க்கு மிக்க பரிசில் நல்குவதாகப் பறையறைவித்துள்ளான். ஆகலின், நீர் எமது தலையை யறுத்து, அதனைத் தம்பியிடங் காட்டிப் பரிசில் பெற்றேகுவீர்,” என்று முகமலர்ச்சியுடன் கூறினான்.
குணக்குன்றாய குமணன் கூறிய கூற்றைக் கேட்ட புலவர் கோமானது மனம் கரைந்தது. அவர் கண்களில் நீர் ஆறாய்ப் பெறுகிற்று; செய்வதின்ன தென்று தோற்றாது மயங்கி நின்றார். அப்போது குமணன், “புலவரே, ஏன் தயங்க வேண்டும்? என்றைக்கிருப்பினும் ஒரு நாள் இறக்க வேண்டுவதுதானே! என்றோ மரிப்பதினும் இன்றே மரிப்பது மேல். அதினும் சமயங் கிடைத்தபோது சாவது மேல். நான் உயிர் துறந்தால், என் தலை எதற்கு உதவப்போகின்றது? நரிகளும் நாய்களும் கூளிகளுமே பிய்த்துத் தின்னும்; அவை தின்பதற்கு முன் எனது தலையால் உமது வறுமை தீரப் பரிசிலைப் பெறுவீர். ‘தமிழ்ப் புலவரது வறுமையைத் தொலைக்கத் தலை யீந்தான் குமணன்,” என்ற நற் புகழ் ஏழையேன் பெறலாகாதோ? இம்மாய வுடலைச் சுமந்திருப்பதாற்றான் பயன் என்ன? இந்த யாக்கையோ,
“ வினையின் வந்தது; வினைக்கு விளை வாயது?
புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது;
மூத்துவிளி வுடையது; தீப்பிணி யிருக்கை;
பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை;
அவலக் கவலை கையா றழுங்கள்
தகலா வுள்ளந் தன்பா லுடையது.”
-மணிமேகலை
இவற்றை யெல்லாம் நீர் அறியாதவர் அல்லீர்; ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,’ என்ற வண்ணம் என் தலையால் பரிசில் கிடைக்கும் இக்காலத்தை நீர் வீணாக்க வேண்டா; தலையின்றித் தம்பியிடம் சென்றால், பரிசில் பெறமாட்டீர். இதோ! எனது வாளைத் தருகின்றேன்; உமது வேலையை முடித்துக் கொள்ளும்,” என்று கூறி, தன் வாளைப் புலவர் கரத்தில் ஈந்தான்.
புலவர்க்கு ஒரு யோசனை தோன்றிற்று. அவர், “இத்தகைய பெருமைக் குணம் பொருந்திய அண்ணலது தலையை அப்பாதகன் இளங்குமணன் காண விரும்பினனே! இவனது தலையைக் கொய்து செல்வதைவிட இளங்குமணனை நற்போதனையால் நல் வழிப்படுத்தி உடன் பிறந்தார் இருவரையும், ஒன்று சேர்ப்பதே நமது சிறந்த கடமையாகும்,” என்று எண்ணினார். உடனே புலவர் அங்கிருந்து புறப்பட்டார்.
7. இளங்குமணனும் சாத்தனாரும்
புறப்பட்ட சாத்தனார் ஓடோடியும் சென்று இளங்குமணனை அடைந்து, அவனை நோக்கி நின்றார். இளங்குமணன் புலவரை நோக்கி, “பெரியீர், என் முன்னோன் தலையைக் கொணர்ந்தீரோ?” என்று வினவினன். புலவர் மிக்க சினத்துடனும் நயத்துடனும் இளவலை நோக்கி, “வேந்தே, அறிவிற் சிறந்த நினக்கு யான் ஒன்றும் சொல்லத் துணிந்திலேன். என்றாலும், நற்குண மன்ன, யான் அறைவதைக் கேள்: உலகில் ஒரு தாய்க்குப் பிறந்த மக்கள் ஒற்றுமையோடு வாழவேண்டுமென்பதை நீ அறிவை. உனது மரபரசனும் இக்குழுமூரில் ஆண்டவனுமான பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பவன் பாண்டவர் கௌரவர் என்ற இரு திறத்தார்க்கும் நிகழ்ந்த போரில் சோற்றை வழங்கினான் என்பதை நீ கேள்வியுற்றிருப்பை. அப்போர் யாருக்குள் நிகழ்ந்ததென்பதை அறிவையோ? பாண்டுவின் மைந்தர் பாண்டவர், பாண்டுவின் முன்னோன் பிள்ளைகள் கௌரவர்கள். அவ்விரு திறத்தாரும் சகோதரர்களே யாவார்கள். அவர்களுள் துரியோதனன் கொடியவன்; எல்லாப் போகங்களையும் தானும் தன் தம்பியருமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினானே யன்றிச் சிற்றப்பன் மக்களான பாண்டவர்களுக்கு நியாய முறையாகச் சேரவேண்டிய நாட்டையும் கொடுத் தானில்லை.
இதனாலன்றோ, அவனும் அவன் தம்பியரும் பாரதப் போரில் மாண்டனர்? இதனை நீ அறிந்தும், இவ்வாறு நாட்டைக் கவர்ந்தது முறையோ? நற்குணங்கள் பொருந்தி, சாந்தமே உருவாகவுள்ள குமணனை உன் உடன் பிறந்தானாகப் பெற முற்பிறப்பில் நீ எத்தவத்தைச் செய்தனையோ! அவனா லன்றோ உங்கள் குலத்தின் பெருமை அழியாமலிருக்கின்றது! அத்தகைய பெருமையிற்சிறந்த அண்ணலை அவதிப்பட விட்டு, நீ அரியாசனத் தமர்ந்தது சரியாமோ? நீசெய்த இக்கொடுஞ் செயல் உலகம் உள்ளளவும் மாறாதே? சற்குணப் பரதன் வரலாற்றினையும் நீ அறிவாயன்றோ? சீராமன் பரதனை நாடாளவேண்டும் என்று விரும்பியும், முன்னோன் இருக்கப் பின்னோன் பட்டம் அடைதல் முறையன்று என்பதை நன்குணர்ந்த உத்தம் பரதன் அரச போகங்களைனைத்தையும் துறந்து, சீராமன் நாட்டை மீண்டும் அடையும் வரையில் துறவி வேடத்துடன் இருந்தானல்லனோ? அத்தகைய சகோதர அன்பு வாய்ந்த அரசர் குலத்திலே பிறந்த நீ சகோதர அன்பில்லாதிருத்தல் மிகவும் வெறுக்கத் தக்கதாயுள்ளது, ” என்று முகவுரையாக இவையனைத்தையும் கூறிப் பின்னும் அவனை நோக்கி, “நிலையற்ற இவ்வுலகில் தம் பெயர் நிலை பெற்றிருக்க வேண்டுமென நினைந்தோர் தமது நற்செயல்களால் நற்புகழை நிலை நாட்டி மாய்ந்தனர். மிக்க செல்வத்தையுடைய மக்கள் இரப்போர்க்குக் கொடாமையால், புகழுடம்பு எய்தாது ஒழிந்தார்கள். அவர்கள் உலகத்தோடு ஒத்துப் போதலை அறியாதவர்கள். தாள்வரையும் தாழ்ந்துள்ளவையும் ஓசை தருவனவுமான மணிகள் மாறி மாறி. ஒலிக்க, அழகிய நெற்றியையும் அசைந்து செல்லும் இயல்பினையும் உடைய யானைகளை இரக்கும் புலவர்க்கு அதிகமாகக் கொடுக்கும் அறிவில்லாத நல்ல புகழைப் பெற்று வலிய குதிரையையுடைய தலைவனை (குமணனைப்) பாடி நின்றேன். அத்தலைவன், ‘பயன் இன்றியே பாடிய இப்புலவன் பரிசில் இன்றி வாட்ட முறுகின்றனன்; வாட்டமுற்று இவன் திரும்பிச் செல்லல் நான் நாடிழந்து அனுபவிக்கும் துயரினும் அதிகமானதாகும்,’ என்று, தன் கூறிய அறிவால் எண்ணித் தன்னிற் சிறந்தது பிறிதொன்றில்லை எனத்துணிந்து, தனது தலையை வெட்டத் தன் கூரிய வாளை என்னிடம் தந்தான். போரிற் புறங்கொடாத தன்மையுடையானது அரிய செயலைக் கண்டு இல்லாளுடன் பேருவகையோடு நின்னிடம் வந்தேன்,” என்று கருக்கொடை கொண்டல் நீரைச் சொறிந்தாற் போன்று தீந்தமிழாலாய சொற்களைப் பொழிந்தார்.
8. பிரிந்தோர் கூடல்
பெருந்தலைச் சாத்தனார் உரைத்தவை எல்லாம் கேட்ட இளங்குமணன் நல்லறிவு பெற்றான்; முன்னோனது பரந்த சிந்தையையும் விரிந்த நோக்கத்தையும் எண்ணினான். தமயனுடைய அருள் வழியும் கண்ணும், புன்சிரிப்புத் தவழும் பொலிவு பெற்ற முகமும் அவன் அகக் கண் முன்னே தோன்றின. தான் செய்த துரோக சிந்தனையை எண்ணி உடல் நடுங்கினான்; விழி நீர் சிந்த ஓவென்றலறினான். அவன் புலவர் தாள்களைப் பற்றிக்கொண்டு, “பெரியீர், இன்னே எனது அண்ணலைக் காண விழைகின்றேன். வம்மின்,” என்று அரற்றினான்.
புலவர் பெருமகிழ்ச்சியடைந்து, இளங்குமணனை அழைத்துச் சென்று, குமணனிடம் விட்டார். பின்னோன் முன்னோன் கழலடிகளைப் பணிந்து போற்றி, தான் செய்த தவறுகளை மன்னிக்குமாறு வேண்டினன். குணக் குன்றாக குமணன், தன் இளவலை மார்புறத் தழுவிக் களித்தான். பின்னர் மூவரும் நாட்டையடைந்தனர். இளங்குமணன் குமண வள்ளலை அரியாசனத்தமர்த்தி, அன்று முதல் அண்ணல் ஏவற்படிநடந்து அகமகிழ்ந்தான். இரு சகோதரரையும் ஒன்றுபடச் செய்த பீடு மிக்க சாத்தனார், வேண்டும் பரிசில் பெற்று, இருவரையும் வாழ்த்தி, தம்மூர் போய்ச் சேர்ந்தனர்.
குமணன் இரவலர்க்கீந்து, என்றும் வற்றாத புகழை இத்தமிழ் நாட்டில் நிலை நாட்டி, விண்ணவரும் மண்ணவரும் போற்ற, சன்மார்க்கத்தில் ஒழுகி வாழ்ந்து, இறைவன் இணையடிகளைச் சேர்ந்தான்.



