நாட்டியக்காரி
வல்லிக்கண்ணன்

5. மதனி


ராமச்சந்திரன் வீட்டிலுள்ள ஒவ்வொருவரது மனநிலையும் அன்று வெவ்வேறு பந்தாவில் துடித்துக்கொண்டிருந்தது என்றாலும், எல்லாவற்றையும் ‘குதூகலம்’ என்ற பிரிவிலே சேர்க்கவேண்டியதுதான். முதலில் ராமச்சந்திரனின் சந்தோஷத்திற்கு மற்றவர்களுடைய மகிழ்வு கிட்ட வராது. அன்றுதான் அவனுடைய புது மனைவி வீட்டிற்கு வருகிறாள். அப்போதைய மனநிலையை என்னைவிட அனுபவம்மிக்க புதுமாப்பிளைகளே நன்றாக எடுத்துச் சொல்ல முடியும்.

ராமுவின் அன்னை மீனாட்சி அம்மாளது மகிழ்விற்குக் காரணம், தன் குலம் ஒளி பெற குத்துவிளக்குப்போல் நிறைந்த மங்கலத்துடன் மருமகள் ஒருத்தி வருகிறாள் என்பதுதான். மாமியார் என்ற தோரணையில் ஆரம்பத்திலேயே அதிகார வெறி வந்துவிட்டது. மகனின் ஆசைக்குரியவள் என்றதனால் எழும் திருப்தி, அன்னையின் முகத்தில் வாய் நிறைந்த சிரிப்பாக மலர்கிறது.

ரகுநாதனின் உள்ளத்திலே உவகை துள்ளுவானேன்? அது அவனுக்கே விளங்கவில்லை. வாழ்வில் ஒரு புதுமையான பெண் வீடு வருதால் தமையன் சந்தோஷிக்க வேண்டியதுதான். குலம் விளங்கவும் குடும்பப் பணி செய்யவும் மருமகள் வருகிறாள் என்பதனால் அன்னை இன்புற வேண்டியதுதான். தான் ஏன் சந்தோஷமடைய வேண்டும்?

அவனுடைய மனதை அலட்டிக்கொண்டிருந்தது இந்தப் பிரச்னை.

அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதை யாரும் சட்டைசெய்ததாகவும் தோன்றவில்லை. புதுப்பெண் அந்த வீட்டிலே வந்து இறங்கிவிட்டாள்.

அன்றும் அதற்குப் பிறகு சில தினங்களாகவும் ராமச்சந்திரன் ஏதோ ஒரு தினுசாக வான வீதியில் உருளும் கோளங்கள் எதிலோ ஒன்றில் இருந்து குதித்துவிட்டவன்போல – நடந்தது ரகுநாதனுக்கு வியப்பளித்தது.

பெருமையால் பூரித்திருந்த மீனாட்சி வரவர முகத்தைக் கோணலாக்கிக்கொண்டு நடப்பானேன்? அதுவும் அவனுக்கு விளங்கவில்லை. ரகுநாதன் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தான். அவனது அறிவும் அனுபவமும் அச்சடித்த புத்தகங்களிடையிலும், பள்ளிக் கூடத்திற்குள்ளேயே அடங்கிவிட்டன. அவன் வெளியுலகத்தை உணரவில்லை.

உணர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எண்ணவில்லை. எல்லோரும் தனது மாணவ நண்பர்களைப்போலவே இருப்பார்கள் என்று மயங்கித் திரிந்தான். அவனுக்கு எதிர்பாராததாக இருந்தது ஸ்ரீமதி லலிதா ராமச்சந்திரனின் போக்கு அவன் வீட்டிற்கு புதிதாக ஒரு பெண் வரப்போகிறாள் என்றதும் அவன் மனதிலே ‘குறுகுறு’ என்றது! ஒரு பெண்! சகோதரிகள் இல்லாததனால் பெண்களுடன் பழகும் முறையே அவனுக்குத் தெரியாது.

அவ்வேளையில் எங்கிருந்தோ ஒரு மதனி வருகிறாள்! அவனுக்கு சங்கோஜமாக இருந்தது. அவள் எப்படி இருப்பாள்? வந்தவுடன் தன்னுடனே பேசுவாளா? தனது தாயைப்போல அன்புடனே நடப்பாளா? தன்னை எப்படி அழைப்பாள். தான் அவளுடன் எவ்விதம் பழகுவது? –

அவன் மனதிலே கட்டுக்கடங்காத பிரச்னைகள் அலைகளென எழுந்து துள்ளின. நாளாக ஆக இதற்கு இவ்வளவு தூரம் மனதை அலட்டியிருக்க வேண்டாம்’ என்று தன்னிடமே எரிந்து விழுந்தான்

அவன். காரணம்….

லலிதாவின் அந்தரங்கத்திலும் ஆயிரம் கேள்விகள் எழுந்து ஓலமிட்டனவோ என்னவோ? தனது வயதையொத்த வாலிபன் ஒருவனிடம் – அது கணவனின் தம்பியானாலும் எப்படி நடந்துகொள்வது என்று அந்த இளம் இதயத்திற்கு விளங்கவில்லையோ!

அன்றி வெட்கம் பிடுங்கித் தின்றதோ!

ஏனோ அவள் அவனைவிட்டு விலகியே நடந்தாள். ரகுநாதன் ஒருவன் இருக்கிறான் என்பதையே அவள் மறந்துவிட விரும்பினாளா?

அவனுக்கு அவள் செய்கைகள் எல்லாம் கர்வத்தின் விளைவுகள் என்று பட்டன. சொர்க்க இன்பத்தில் ஆழ்ந்து கிடப்பதாகக் கனவு கண்ட ராமச்சந்திரனே இதுபோன்ற அற்ப விஷயங்களை தன் கவனத்திற்கு இழுக்கவில்லை.

இதே ரீதியில் மாதங்கள் பல சென்று மறைந்தன. ஒருநாள் ரகுநாதன் எதிர்பாரத விஷயம் நடந்தேவிட்டது. அவன் மதனி அவனிடம் பேசிவிட்டாள்! அன்று முழுவதும் அவன் இன்ப நினைவுகளிலேயே தன் மனதை அலையவிட்டுக் களித்தான்.

அவன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் “அம்மா” என்று அலறிக்கொண்டு அடுப்பங்கரைக்கு ஓடினான். அங்கு அவனுடைய தாய் இல்லை. லலிதா என்னவோ செய்துகொண்டிருந்தாள். “சே! அவள் எங்கு தொலைஞ்சிட்டா?” என்று முனங்கிவிட்டுத் திரும்பினான்.

அது லலிதாவிற்கு சிரிப்பு மூட்டியது. `களுக்’குச் சிரிப்பை அவள் காற்றிலே கலக்கவிடவில்லை.

மோனப்புன்னகை புரிந்தவண்ணம், அவனுக்காக வைத்திருந்த காபியைத் தம்ளரிலே எடுத்துக்கொண்டு வந்தாள். அப்பொழுதுதான் அவன் வெளியே செல்லக் கிளம்பினான். அவள் வருவதைக் கவனியாமல் வெளிவாசலண்டை சென்றுவிட்டான். அவனை எப்படிக் கூப்பிடுவது? ஐயோ! அதோ அவன் மறையப்போகிறானே – களைப்பை

ஆற்ற காபிகூடக் குடியாமல்! அவள் மனப்போராட்டங்களை ஒதுக்கிவிட்டு “காபி சாப்பிடலை ஏன்?” என்று சொற்களை வெளியே தள்ளினாள். அதற்கு எவ்வளவோ முயற்சி தேவையாக இருந்தது.

‘அந்தக் குரல் ரகுவின் காதில் விழுந்ததும் உண்மையாகவா?’ என்னும் திகைப்பு அவன் உள்ளத்தில்

கொப்புளித்தது. அவன் திரும்பினான். ஆம். அவள் கையில் தம்ளருடன் நின்றாள். அவன் கண்கள் மலர்ந்தன. பச்சை வண்ணப் பட்டுடுத்தி, அப்பொழுதுதான் அலர்ந்த அந்திமந்தாரையின் வனப்பு திகழும் முகம், அதன் இருபுறங்களிலும் ஊசலாடும் காதணிகளில் மாலை வெயில் பட்டதனால் ஏற்பட்ட ஜொலிப்பு அவள் கன்னங்களில் பிரதிபலிக்க, புதிய பிம்பம்போல நின்றாள் அவள். அவளை ஏறெடுத்துப் பார்த்த அவன் உள்ளத்திலே உவகை பூத்தது. அவன் திரும்ப வந்து தம்ளரை அவள் கையிலிருந்து வாங்கும்பொழுது அவள் கன்னங்கள் நாணத்தால் சிவக்க, செவ்விய இதழ்களில் ஒரு நகை அரும்ப விலகிவிட்டாள். அவன் காபி குடித்த தம்ளரை கீழே வைத்துவிட்டு வெளியே போனான். அன்று அவ்விரு இளம் உள்ளங்களிலும் எழுந்த பரவச கீதம் எவ்வளவோ!

அன்று அரும்பிய அன்பு மலர் தினம் தினம் முற்றிக்கொண்டே வந்தது. பரிசுத்தமான இதயங்களுடன் அவர்கள் பழகினார்கள், சகோதர சகோதரிகள் என நாளடைவிலேயே அவள் நாணத்திற்கு இடம் கொடாமல் “ரகு… ரகு” என்று கூப்பிட்டுத் திரிந்தாள். அவ்வழைப்பு ரகுநாதனின் செவியில் எவ்வளவு இன்பத்தேன் பாய்ச்சியது! ராமச்சந்திரன் புதுவாழ்வு மயக்கம் தெளிந்து விழித்தலைந்தான். பொறுப்பு அவன் தலையை அழுத்தி அவனை வாழ்வு என்றால் என்ன என்று உணரச் செய்தது. அதனுடன் அவன் உள்ளத்தில் அர்த்தமற்ற குழப்பம் சுழித்தோடியது. லலிதா புதுமை என்பதில் இருந்து, பழகிப் பழகி அலுப்பும் தொல்லையும் தரும் ஐந்து என்ற தன்மைக்கு வந்துவிட்டதாக அவனுக்குப்பட்டது. அப்பொழுதுதான் அவனுக்கு அந்த ஞானோதயம்!

அவள் முன்போல் இல்லை. `அந்தச் சின்னப் பயலுடன் என்ன பேச்சு! ஏன் அவ்வளவு சிரிப்பு!’ ரகுநாதன் மேல் அவனுக்கு வெறுப்பு விளைந்தது. `அவள் அவனைக் கண்டு மயங்கிவிட்டாளா?’ அவன் மனம் சதா அரித்துக் கொண்டிருந்தது. ஏதோ காரணத்தால் மிருகமாகிவருவதை அவர்கள் இருவரும் உணர்ந்தனர். அதிலும் அன்று….. லலிதாவிற்கு சினிமாப் பார்க்க வேணுமென்ற நினைப்பு, அடக்க முடியாத ஆசையாக உருவெடுத்தது. ராமச்சந்திரன் தினசரி அலுவல்களினால் களைப்படைந்து வீடு திரும்பும்பொழுது அவளை சினிமாவிற்கா கூட்டிப் போவான்! அதனால் அன்று ரகுநாதனுடன் அவள் சினிமாப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

ராமச்சந்திரன் வந்ததும் கதவு பூட்டிக் கிடப்பதைக் கண்டான். அவனுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. “இந்தச் சனியன்களை என்ன செய்வது?” அதற்கு ஒரு முடிவு காணும் முன்னமே அடுத்த வீட்டுப் பயல் வீட்டுச் சாவியைக் கொண்டு கொடுத்துவிட்டு “அவங்க சினிமாவிற்குப் போயிருக்காங்க” என்று தெரிவித்தான். அவனுடைய கோபம் எவ்வியது.

“தெரியும். அளவிற்கு மீறிவிட்டது… மானம் கெட்ட கழுதைகள்” என்று உறுமினான்.

சினிமாவில் இருந்து திரும்பி வரும்பொழுது கவலையற்ற மைனாப் புட்கள் போல குதூகலமாக வந்த அவர்கள், வீட்டிலே ஊழிப்பொறுமல் காத்திருக்கிறது என்று சிறிதாவது எண்ணியிருப்பார்களா?

லலிதா முதலில் நுழைந்தாள். அவள் வருகைக்காகக் காத்திருந்த ராமச்சந்திரன், அவள் தலையைப் பற்றி ஒரு குலுக்கு குலுக்கி எடுத்தான். எலியை உலுக்கும் பூனைபோல. அவள் திடுக்கிட்டு அலறினாள். ரகுநாதன் விஷயம் அறியாமல் விழித்து நின்றான்.

“விபசாரிக் கழுதை! உனக்கு அவனோடு போய் சினிமாப் பார்க்கணுமா?” என்ற சொல் அனலுக்குப் பின் அவள் கன்னத்தில் அறைகள் விழுந்தன. “ஐயோ” என்றலறினாள் அவள்.

“அண்ணா! ஏனிப்படி…” ரகுநாதன் பேச்செடுக்கும் முன்பே “போடா நாயே! நீ யார்டா அவளுக்காகப் பரிந்து பேச. உன் வாலை என்னிடமே காட்றையோ!” என்று கர்ஜித்தான். ரகுநாதன், இதயம் பிளந்துவிடுவதுபோல் துடித்தது. “அண்ணா, மதனியை வீணா…” என்று ஆரம்பித்தான். “போடா காமாட்டிப் பயலே! மதனி! உங்க உறவு எனக்குத் தெரியாமல் போக நான் என்ன மடையனா! வெளியே போ!” என்று உறுமினான்.

ரகுநாதன் வீட்டிற்குள் நுழையாமலே வெளியேறினான். அவன் உள்ளம் குமுறியது; “ஐயோ! என்னால் அவளுக்கு இவ்வளவு! அவள் முன்போல் இருந்திருக்கக்கூடாதா!” அவன் முன் அன்பு மலர் முதன்முதலாக அரும்பிய சந்தர்ப்பம் நினைவுக் காட்சியாகத் தோன்றியது. “இம்மலரைக் கசக்கி எறியும் சூறையாக அண்ணனே வாய்த்தானே! அம்மாவின் மனம் என்ன சொல்லுமோ?… அவள்-மதனி-என்ன பாடு படுகிறாளோ…” எண்ணற்றப் பிரச்னைகள் எழுந்து உள்ளத்தின் அடிப்பரப்பைக் கலக்க, அவன் எங்கோ சென்றுகொண்டிருந்தான், லட்சியமற்று ஊரும் காற்றுப்போல.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *