நாட்டியக்காரி
வல்லிக்கண்ணன்

3. வாழ்க்கை


மணி பன்னிரெண்டு.

அப்பொழுதுதான் வந்து நின்றது ரயில் வண்டி பெருமூச்சுவிட்டுக்கொண்டே, ஏதோ ஒரு பூதகரமான விலங்குபோலே!

அதன் உடலைக் கிழித்துக்கொண்டு எவ்வளவோ பேர் இறங்கினர்; அவர்களை நெருக்கியவண்ணம் அநேகர் உள்ளே ஏறினர்; சிலர் ஏற முண்டினர்.

வாழ்க்கையே போராட்டத்தின் சின்னம்தான் என்பதைப் பிரதிபலிப்பது போலிருந்தது ரயில்வே ஸ்டேஷன்.

எவ்வளவு புதிய முகங்கள்! எத்தனை எத்தனை ரகம்! பிரயாணக் களைப்பு படர்ந்த முகங்கள்… சோகங் கலந்த உருவங்கள்… வாழ்வின் மேடு பள்ளங்களைக் காட்டும் ‘கிராப்’ (graph) போல, தாறுமாறாகக் கோடுகள் ஓடிய முகங்கள்…. இளமையும் இன்பமும் குலவும் அழகு வதனங்கள்… காதல் கொந்தளிக்கும், பிரேமை ஜ்வாலை தகிக்கும். அன்பு அனல் வீசும், இன்னும் இவ்வளவோ உணர்ச்சிகளைப் பிரகடனப்படுத்தும் விதவிதமான முகங்கள்…. எல்லாம் கதறிக்கொண்டு வந்த இரும்பு நாகரிகத்தின்’ உயிர்ச் சின்னமான ரயிலில் இருந்து இறங்கின.

அவர்களது கருணையைப் பெறக் கூச்சலிடும் போர்ட்டர்களும், பையிலுள்ள பணத்தைப் பங்கு போடக் கதறி அங்குமிங்கும் அலையும் “உப்புமா… வடை, போளி… காபி”க்காரர்களும் ரயில்வே ஸ்டேஷனை ஒரு தனி உலகம் என விளம்பரப்படுத்தினர்.

ஆனால் அதையெல்லாம் கவனிக்க ஆத்திரமோ, ஆவலோ இன்றி நின்றது ஓர் உருவம், புது உலக ஒளிபட்டுப் பிரமையடைந்ததுபோல்.

அவனுக்கு அதிலே ஒரு புதுமையும் தோன்றவில்லை. மனித வர்க்கத்திலும் அவன் எத்தகைய அழகையும் கண்டதில்லை.

அவன் தினம் அங்கு வருகிறான்.ஒவ்வொரு ரயிலையும் எதிர்பார்க்கிறான். மெஷின் யுகத்தை அலறிக்கொண்டே பறையடித்துக் காட்டும் அந்த ரயில் தவறினும் தவறலாம்; இயந்திரம்போல் திரிந்த அவன் தவறுவது கிடையாது.

அவனது வாழ்க்கை இயந்திரமே அந்த ராக்ஷஸ இயந்திரத்தின் வருகையையே பொறுத்துள்ளது. ஓடி வரும் நாகரிகச் சின்னத்தைக் கிழித்துக்கொண்டு கிளம்பி, ஒரு க்ஷண நேரத்தில் நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறும் நாகரிக மக்கள் அவன் மனதிலே எவ்வித அபிப்பிராயத்தையும் கொட்டவில்லையா? அவர்களது முகம் அவன் இதயத்திலே எத்தகைய உணர்ச்சியையும் தூண்டவில்லையா? இல்லை, இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவர்கள், ஏறி வந்த ரயிலைக் கொஞ்ச நேரத்திலேயே மறந்துவிடுவதுபோல, தங்கள் காரியத்திலேயே மூழ்கிவிடுவதுபோல, அவனும் தன் காரியத்தில்-அதிலே அவனைப் புகுத்தும் ராக்ஷஸ இயந்திரத்தின் தூண்டுதலால்- தன்னையே மறந்துவிடுவான். பிறரை எப்படிக் கண்டு மகிழ முடியும்?

அவன் சமூகத்தால் வெறுக்கப்பட்ட குழந்தை; பாதி உலகம் அடியோடு மறந்துவிட முயலும் அபலை;

இன்றைய நாகரிக சமூகத்தின் ஒரு பெரும் குறையை, ஊழலை, சதா விளம்பரப்படுத்தும் எடுத்துக்காட்டு. அவன் ஒரு பிச்சைக்காரன்.

ரயில்வே ஸ்டேஷனும், ஜங்ஷன் `லெவல்கிராஸும் அவன் குடியிருந்த பாழடைந்த மடமுமே அவனது தனி உலகம். இவ்வுலப்போக்கு ரயில் நாகரிகம், மனிதக் குழாம்… எல்லாம் அவன் மனத்திலே என்னென்ன குமுறல்களைக் கொந்தளிக்கச் செய்கின்றனவோ யார் கண்டது!

மணி பன்னிரெண்டு. ஏக்கத்தால், வாழ்வின் சோக அனுபவத்தால், பசித் துடிப்பால், குழி விழுந்த கண்கள், அவன் முன் சென்ற ஒவ்வொரு பிரயாணியின் முகத்தையும் பார்த்தன.

அவை அவனுக்கு வெறும் முகங்கள்தான். வாழ்க்கையிலே பண்பட்ட அவன் உள்ளம், முகங்களை மட்டும் கொண்டு யாரையும் தீர்மானிக்கத் துடிப்பதில்லை. முகத்திரையின் பின் ஊசலாடும் கருத்துக்களையே துருவி ஆராய்வதுபோல் அவன் பார்ப்பான்.

அதுகூட க்ஷண நேரந்தான்.

அவன் அனுபவ ஞானி. அவனுக்குத் தெரிந்தவரையில் மனிதர்கள் இரு வகைதான் – தருமம் கொடுப்பவர்கள்; `பிச்சை இல்லை, போ’ எனத் துரத்துகிறவர்கள். இவர்களைத்தான் அவன் தினமும் சந்திப்பது. அனுபவத்தின்மீதே முகத்தைப் பார்த்தே யார் எந்தப் பிரிவு என்று கண்டுபிடிக்கும் திறமை அவனுக்கு உண்டு.

அதோ….ரயிலில் இருந்து இறங்கி வந்தஒருவரிடம் ஓடினான். “ஐயா,காலணாக் கொடுங்க… சாமி, புண்ணியங்க… இன்று முழுதும் ஒண்ணுஞ்சாப்பிடவே இல்லீங்க…” என்று கெஞ்சினான்.

அப்பொழுது அவன் முகத்திலே! ஓடிய உணர்ச்சிக்கோடுகள்… அவன் தொனியிலே ஒலித்த சோகம்…. அவன் தோற்றம்!

அவனை அப்படிக் கண்ட யாருமே மனம் இரங்காமல் இருக்க முடியாது. முட்டுக்குமேல், மிக அழுக்குப் படிந்த ஒரு கந்தைத் துணியைக் கட்டிக்கொண்டு, சடைபிடித்த தலைமுடியும், சிக்குப்பிடித்த தாடியும் முகத்தின் ஏழ்மைப் பிரதிபலிப்பின் பின்னணியாக விளங்க அலையும் ஒருவன்!

“ஐயா, பிச்சை…. காலணா!” என்று கெஞ்சிக்கொண்டு ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு தரம் பரிதாபமாகக் கும்பிட்டபடி வரும் அவனைக் கண்டு யாரும் மனமிரங்காமலிருக்க முடியாது.

அவன் தொடர்ந்த ஆசாமியும் பையிலிருந்து காலணா எடுத்துப் போட்டுவிட்டு முன் நடந்தார். அங்கே அவருக்காக நின்ற ஒருவர், “சனியன்கள்! எங்கே போனாலும் இது பெரும் பீடையாய்ப்போச்சு! எழவு பிச்சைக்காரர்களை ஒழிக்க வழி ஒண்ணும்மில்லையா?” என முணுமுணுத்தார்.

பிச்சை போட்ட தர்மவானும் “உபத்திரவம்” என்று புலம்பிக்கொண்டே தொடர்ந்தார்.

இது அவன் காதில் பட்டதோ என்னவோ தெரியாது. அவனுக்குக் கேட்டிருந்தாலும் அவன் மனத்திலே எவ்வித உணர்ச்சியும் எழாது. அதுவே அவனது தினசரி வாழ்க்கை அனுபவமாகிவிட்டது.

மேலும் அவனது உணர்ச்சிகளை அரைத்து நசுக்கிவிட்டு ஓலமிடும் ராக்ஷஸ இயந்திரத்தின் முன் அவன் என்ன செய்ய முடியும்? அதன் அடிமை அவன். அதுதான்-அவன் வயிறுதானே – அவனை இந்தத் தொழிலில் புகுத்தியது. அதன்பின் மான அவமானத்தைப் பார்க்கத்தான் முடியுமா?

அவன் துடிக்கும் வயிற்றுப் பசியுடனும், இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்ற அற்ப ஆசையுடனும் நின்றுகொண்டிருந்தான்.

அப்பொழுது அவ்வழியாகச் சென்ற உத்தியோகஸ்தர் “சீ நாயே, போடா! வெளியே போ. இங்கே உன்னை யார் வரவிட்டது?” என கர்ஜித்தார். திடுக்கிட்டான் அவன். எதிரே செல்லும் அதிகார உருவைக் கண்டதும் தலை குனிந்தபடியே வெளியே போய்விட்டான்.

ஜங்ஷன் லெவல்கிராஸ்தான் நாகரிகத்தின் அலைமோதும் முக்கிய இடம். அங்கே சதா கூட்டந்தான்; இரைச்சல்தான். அங்கிருந்து பிரிந்து செல்லும் பல நாகரிகத்தின் சுழிப்புகளிலிருந்தும் வரும் சைக்கிள்களும், வண்டிகளும், பாதசாரிகளும், அங்கு மோதும் அலைபோலச் சேரும்பொழுது, பிரியும்பொழுதும் நாகரிகத்தின் பலவித மணமும் அவ்விடத்திலே வீசும்.

ஓடும் அவசர நாகரிகம் அந்த இடத்திலே தடைபட்டுத் தேங்கிவிடுவதும் உண்டு. அதுதான் பெரும் நாகரிகப் பூதம்போல் கர்ஜித்துக்கொண்டு அவ்வழியே செல்லும் ரயில் கடக்கும்பொழுது!

அப்பொழுது அந்த இடத்தைப் பார்த்தால் மனித மூளை சிருஷ்டித்த நாகரீக இயந்திரமே மனிதனை அடிமையாக்கிவிடும் உண்மைக்கு ஒரு பிரமாணமாக விளங்கும்.

ஆனால் அந்த நேரந்தான் சிலருக்கு கிட்டுதற்கரிய சந்தர்ப்பம். பிச்சைக்காரர்களுக்குத்தான்!

தடைப்பட்டு நிற்கும் நாகரீக உலகிடையே அதன் பெருங்குறையைக் கூறுவதுபோல், “ஐயா, பிச்சை போடுங்க” என்று கதறித்திரிவர் அநேகர்.

அவர்களிலே அவனும் ஒருவன். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மனித அலைகளால் தாக்குண்டு தள்ளுண்டு, தேக்கத்திலே வந்து மோதினான்

அவன். வரப்போகும் ரயிலை நோக்கி நாகரீகச் சுழிப்புகள் பலவும் சிறிது தேங்கிக்கிடந்த நேரம்.

அப்பொழுது ஒரு கார் ஓடிவந்து ‘சடக்’கென நின்றது. பிச்சைக்காரன் கண்களிலே ஆவல் துள்ள காரருகே ஓடினான். அவன் குரல் மீண்டும் ஒலித்தது “ஐயா… பிச்சை போடுங்க…. தர்மவான்களே, காலணா கொடுங்க….. இன்றைக்குப் பூரா ஒண்ணும் சாப்பிடவே இல்லை.”

மீண்டும் அதே குரல்…. அதே சோகபாவம்! இப்பொழுது சிலர் உணர்ச்சி மனிதர்கள்தான் என்று நிரூபித்தனர். “ஏண்டா கத்துறே! போ அப்புறம்…. சனியன்!” என எரிந்து விழுந்தார் முதல் ஸீட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்தவர். அவன் சிறிது நகர்ந்தான்; ஆனால்

அதே பல்லவியுடன்! அவனுக்கு அவன் கவலை-வயிற்றுக்கவலை- பெரிதுதானே!

“ஐயா தர்மவான்களே..” ஒருவர் காலணாவை வீசி எறிந்தார்.

அது பிளாட்பாரக் கல்லிலே விழுந்து, அவனது மனதில் எழுந்த ஆனந்தத்தைப் பிரதிபலிப்பதுபோல் ‘ஜங்’ என்று ஒலித்தது. அவன் கண்களில் நன்றி ஒளிவீசக் குனிந்து அதை எடுத்துக்கொண்டு, திரும்பவும் தன் தொழிலை ஆரம்பித்தான்.

“ஏலே சில்லறை இருக்காடா… ரெண்டு சல்லி இருக்கா? இதை வைத்துக்கிட்டு ரெண்டு சல்லி கொடு” என்று காலணாவை நீட்டினார் ஒரு புண்ணியவான். அவன் “சல்லி இல்லே சாமி… காலணாப் போடுங்க புண்ணியமுண்டு” என்றான். “போடா கழுதை!” என முணுமுணுத்தபடியே காலணாவை பையில் போட்டுக்கொண்டார் புண்ணியம் சம்பாதிக்க எண்ணிய தருமமூர்த்தி. பேரம்பேசிய அவரைப் பார்த்துக் கேலிக்குறிப்பில் சிரித்தனர் சிலர். ஆனாலும் அவனுக்கு ஒரு சல்லிகூடக் கிடைக்கவில்லை.

மனித உணர்ச்சிகளைத் தன்னுள் அடக்கி இழுத்துச் செல்லும் ரயில் கோர கர்ஜனையுடன் அந்த இடத்தைத் தாண்டிச் சென்றது.

`கேட்’டும் திறந்தது தடைப்படுத்தப்பட்ட நாகரீகப் போக்குவரத்து முண்டி முறண்டியடித்துக்கொண்டு அசைய ஆரம்பித்தது. கார்களும், சைக்கிள்களும், நடப்பவர்களும் வண்டிகளும்… எல்லாருமே, தேகத்தில் தடைபட்ட நேரத்தைச் சரிக்கட்டிவிட வேண்டி அவசரமாக மோதிக்கொண்டனர்.

அந்தக் கொந்தளிப்பிலும் தன் கருமமே கண்ணாயினான் அந்தப் பிச்சைக்காரன்.

எதிர் சரகில் அப்பொழுதுதான் வந்து நின்றது ஒரு மோட்டார். அதிலே தன் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க ஓடினான்

அவன். `கிரீ…ச்ச்….’

ஓர் அலறல், இங்கு புறப்பட்ட கார்தான் நின்றது. தன் கவலையில் ஆழ்ந்துவிட்ட பிச்சைக்காரன் கார் புறப்பட்டதைக்கூடக் கவனியாமல் குறுக்கே பாய்ந்தான். ஆனால் கார் நின்றுவிட்டது.

வாழ்க்கை அலை இழுத்துச் செல்லும் ஒரு சிறு கட்டை பாறையிலே மோதிச் சிதையப்போவதுபோல் தோன்றுகிறது; அதே வேளையில் மோதுறாமலே அலை திரும்பிவிடுகிறது. இல்லையேல் தாக்குண்டு சிதறும் அலைத்துளிகள் கட்டையையும் எங்காவது வீசிவிடுகிறது.

ஏதோ ஒரு சக்தியாலே அந்தப் பிச்சைக்காரனும் வாழ்வுச்சுழலின் நடுவில் தள்ளப்பட்டான், செத்து சுதந்திரம் பெற முடியாமல்! “சீ நாயே, புறப்படும்பொழுதே உன் உயிரை அடகு வெச்சிட்டு வந்தாயா? தூ!” எனச் சீறினான். டிரைவர், கார் பிரயாணிகளும் புலம்பினர் `டர்… டர்’ எனும் இரைச்சலுடன் கார் மறுபடியும் கிளம்பியது.

பிச்சைக்காரனே தனக்கு நேரவிருந்த மரணத்தையோ, தெய்வாதீனமாகக் கிட்டிய உயிர்ப் பிச்சையையோ பற்றி எண்ணாமலே, “ஐயா, பிச்சை… காலணா போடுங்க!” என

அலறிகொண்டு மறுபக்கம் ஓடினான். அதற்குள் அந்த மோட்டார் புறப்பட்டுப்போய்விட்டது. அந்த ஏமாற்றத்தையும் அவன் மனதில் பதியவைக்கவில்லை. அவன் கவலை அவனுக்கு!

யாரோ `போட்ட’ பக்கடாத் துண்டைக் கடித்துக்கொண்டே அன்றையச் சம்பாத்தியத்தைக் கணக்குப்பார்த்தபடி சாவகாசமாக நடந்தான் அவன். அவனிடமிருந்து ஒரு நெடு மூச்சுத்தான் கிளம்பியது.

அது எதை நினைத்தோ! அவனது வாழ்க்கையின் அலைகளைப் பற்றியா… அன்றைய அற்ப சம்பாத்தியத்தைப் பற்றியா?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *