
நாட்டியக்காரி
வல்லிக்கண்ணன்
12. காணிக்கை
கோயிலின் ஆலாட்சி மணி விம்மி விம்மி ஒலித்தது, பக்தர்களைக் கூவி அழைப்பதுபோல, அதன் அலறலைக் கவனியாமலே ஆட்கள் வந்தனர்; போயினர். சந்நிதி முன் கும்பிட்டும் வம்பளந்தும் நின்றனர். அவர்கள் அனைவரும் அந்தரங்க சுத்தியாய் அங்கு தெய்வத்தைப் பூஜிக்கத்தான் வந்தார்களா?
எவ்வளவு வர்ண ஜாலங்கள் செய்ய முடியுமோ அவ்வளவும் காட்டும் விதவிதப் பகட்டுடை புனைந்து, முகத்திலே பவுடரும், தலையிலே பூவுமாய் – அத்தகைய அலங்காரம் செய்துகொள்ள அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்களோ!- அப்ஸரஸ்கள் என்ற நினைவிலே திரிகின்றனரே, சிறகடிக்கும் பட்டுப்பூச்சிகள் போல, இவர்களா கோயிலில் கடவுளைக் காண வந்த பக்தைகள்? உதடுகளில் முணுமுணுப்பும், கண்களிலே கள்ளக் குறுகுறுப்புமாய் அங்குமிங்கும் அலையும் ஆண்களா தெய்வ சாந்நித்தியத்தில் பக்தி செய்ய வந்தார்கள்?
அவர்கள் கர்ப்பக்கிருக இருளிலே ஜோதி காண வரவில்லையே! தம் அழகொளியை விட்டெறியவும், அப்படி மின்சார விளக்கொளி பட்டுத் தெறிக்க மின்னுகின்ற பாவையர் எழில் கண்டு களிக்கவுமே பெண்களும் ஆண்களும் அங்கு குழுமுவதுபோல தோன்றுகிறது.
அது கடவுளின் வீடுதான். புனித பவனம்தான். ஆனால் நாகரிக யுகத்திலே உள்ளும் புறமும் இணைந்தா எல்லாம் விளங்குகின்றன.
சில பக்தர்களுக்கும் பஞ்சமில்லை அந்த இடத்திலே “எல்லோரும் வாருங்கள். எல்லோரும் வாருங்கள்!” என்பதுபோல முழங்கிக்கொண்டிருந்தது ஆலாட்சி மணி.
அன்று என்னவோ திருநாள்!
ஜாஜ்வல்யமாக ஜொலித்தது தேவனின் சூழ்நிலை. பளிச்சிடும் எலக்டிரிக் விளக்குகளுடன், வாசலையொட்டி வளைத்துவிடப்பட்டுள்ள சரவிளக்குகளும் அழகாக மிளிர்ந்தன. கோத்துக் கட்டிய நட்சத்திரங்கள்போல. `அந்தகாரத்தின் சாயைகள்போல’ ஆட்கள் வரவில்லை, போகவில்லை. ஆனால்…. தாம்பாளத்தில் தேங்காய் பழங்களுடன், செல்வ மகளைக் கையில் பிடித்து, ஆனந்தமாக நடந்துவரும் அன்னையர் எத்தனை பேர்…. வண்ண மயில்கள் என்ற நினைவுடன், விசிறித் தலைப்புகள் அலைப்புற, இயற்கை எழிலும் போலிப் பகட்டும் மினுங்கக் குதூகலித்துத் திரியும் நவயுக பிம்பங்கள் எவ்வளவு…. மோட்சத் தியேட்டரிலே சுகமான `ஸீட் ரிசர்வ்’ செய்யப் போட்டியிட்டுவரும் பாட்டிகள் என்ன…. தேவாரம் மணக்கும் வாயும் கவலைகள் மண்டும் மனமுமாய் நடமாடும் மனிதர்கள்…. ஆலயம் என்பது அழகின் உறைவிடம்; அதைக் காண்பதே மிகவும் இனிமை என்ற `வேதந்தம்’ பேசும் யுவர்கள்… பக்தி செய்யும் `பத்தாம் பசலிகள்- இப்படியாகப் பலபல உருவங்களும் கூடி கலகலப்பாக இருந்தது அந்த இடம் வருஷத்தில் பாதிக்குமேல் `அனுபவ பாத்தியதை’ கொண்டாடும் தங்கள் சாந்தியைக் குலைக்கப் புகுந்தனவே இந்த ஜந்துக்கள் என்று திட்டுவதுபோல கோயிலின் பூர்வீகக் குடிகளான வௌவால்கள் `கிரீச்…. கிரீச்…’ சென அலறிப் பறந்தன.
பூஜை நடக்க இன்னும் நேரமாகும். அதுவரை அங்கு கூடியவர்களின் பொழுது தொலைய வேண்டாமா? என்னென்னவோ செய்தனர்.
தேங்காய் பழத் தட்டுகளை கீழே வைத்துவிட்டு, சும்மா இருக்கும் வாயில் சொல் அசை போட்டனர்.
இந்த நாகரிக யுகத்திலே பக்திகூட வியாபாரம் ஆகிவிட்டது. தேங்காய் பழத்தை மட்டும் கொடுத்து புரோகிதர் சிபார்சு மூலம், கடவுளையே மயக்கி தம் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்பது இரும்பு யுக மனிதனின்மனப்பான்மை போலும்! இல்லாவிடில், அர்ச்சகர் மணியடித்து தீபாராதனை செய்வதுதான் முக்கியம், அதுவரை ஓட்டடா மனதை பற்பல நினைவில் என்ற தன்மையிலே அவர்கள் நடந்துகொள்வது ஏனோ?
ஒரு கிழவர், சிரத்தையாக பக்திப் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். திரையிலே நடமாடும் நாகரிக நிழல் நேரில் உருப்பெற்று நிற்பதுபோல் விளக்கொளியில் மினுமினுத்த மங்கை ஒருத்தியையே பார்த்து வந்த ஒருவர் அவர்மீது மோதி விழத் தெரிந்தார். அவர் காலோ தெய்வத்திற்கு அன்பின் காணிக்கையாக அர்ப்பணிக்க வைத்திருந்த தேங்காய் பழத்தை இடறிவிட்டது.
“என்னய்யா இது!” எனச் சீறினார் பக்தர்.
வாலிபர் “சிவ சிவ” என்று கூறிக் குனிந்து, சிதறியதைச் சரிப்படுத்திவிட்டு நகர்ந்தார். அவரது விட்டிற்கண்கள் நவயுவ ஜோதிகளுக்காகத் திரிந்துகொண்டிருந்தன.
ஆண்களும் பெண்களும் தம் கண்களில் தனி நாடகம் நடத்தி நிற்கும் வேளையிலேயே மணிகள் ஆர்த்தன. பக்தர்கள் சன்னதி முன் திரள வியந்தனர். மனதில் சூன்யமிருப்பினும் சூடவொளியிலும் சேகண்டி முழக்கிடையும் இறைவனைக் காண விரைந்தனர் அவர்கள்.
கன்னங்களில் தட்டிக்கொள்கிறார்கள். கைகளைக் குவிக்கிறார்கள். மனிதக் காட்டை ஊடுருவி விக்ரகத்தைத் தரிசிக்க கழுத்தை, நெருப்புக்கோழிபோல் நீட்டுகிறார்கள். ‘விலகு மறைக்காதே! தள்ளய்யா. இங்கே உள்ளவர்களுக்குத் தெரிய வேணாம்?…..’ இந்த ஆரவாரிப்புத்தான் ஈசனைக் காணத் துடிக்கும் இதயத்தின் ஒலியோ?
ஆராதனை முடிந்தது. சிறிது சிறிதாக நவயுக பிம்பங்கள் இருளில் கலந்து மறைந்தன. இவ்வளவு நேரமும் சுவர் அருகிலே ஒண்டி நின்ற உருவம் ஒன்று முன் வந்தது.
விளக்கு வெளிச்சத்திலே பார்த்தால்…?
தரித்திர தேவதையின் செல்வப் புதல்வி!
கிழிந்த ஆடை. சிக்குப்பிடித்துக் காடாய்க் கிடந்த தலை, ஒட்டிக்கிடந்த கன்னம். நம் நாட்டுத் தரித்திர நாராயணர்களின் சரியான பிரதிநிதி.
சிறைச் சுவர்போல் நின்ற கூட்டம் கலைந்ததும் அவள் தயங்கித் தயங்கி சன்னதி முன் வந்தாள். கையில் இலை சுற்றிய கட்டு ஒன்றிருந்தது. “சாமி…”
அர்ச்சகர் திடுக்கிட்டார். உற்றுப்பார்த்தார்.
“ஏ பிணமே! நீ யார்? என்ன சாதி? ஏன் வந்தே?” என்று பாணம் வீசினார். எல்லார்க்கும் தந்தையாம் அண்ணலின் ஆலயத்திலே அவன் சிசு ஒன்றுக்குக் கிட்டும் வரவேற்பா இது? “சாமி, ஒரு காணிக்கை” என்றாள் அவள் தீனக்குரலில், காசு வருமோ என்ற ஆவலுடன் “என்னவாம்? ஏதாவது அர்ச்சனை கிர்ச்சனை…” என இழுத்தார் பட்டர்.
“அதில்லாம் இல்லே, சாமி என் மவன் – ஒரே பிள்ளை. காச்சலாப் படுத்து ரொம்பக் கஷ்டப்பட்டான். தெய்வமே நீதான் துணை….” “அதுதான் இருக்கவே இருக்கே! ஏ, நீ கதை பேசவா வந்தே இங்கே. சட்டுனு சொல்லி அழு” என அவர் உறுமினார்.
“கடவுள் கிருபையாலே அவன் பிழைச்சு எழுந்தான். அதுக்கு முன்னாலே… நான் சாமிக்கு மாலை வாங்கிப் போடுற நேர்ந்திருந்தேன்… அதுதான்….”
அவள் தன் கையில் இருந்த, இலையில் பொதிந்து கட்டப்பட்டிருந்த, பூ ஆரத்தை அவர் கையிலே தர நீட்டினாள். அவர் கர்ஜித்தார்.
“பீடை, கீழே வை. கையிலா கொடுக்க வாறே?….. இதை சாமிக்குச் சாத்தணுமாக்கும்?”
“அவள் அதைக் கீழே வைத்துவிட்டு, “சாமி, நல்லாருப்பீக. இந்த ஏழை செய்ய முடிந்தது இதுதான். மனதாரக் கொண்டுவந்த காணிக்கையை கடவுள் ஏற்காமலா இருப்பாரு?” என அவள் கை குவித்தாள்.
கடவுள் ஏற்றாலும், மனம் கல்லான கடவுளின் பூலோகப் பிரதிநிதி “சரிதான். ஆனால் இதுக்கு தட்சிணை எங்கே?” என அதட்டினார்.
“சாமி, மாலைக்குமா தட்சிணை?” என அவள் தயங்கினாள்.
“பின்னே!”
“சாமி, காசில்லை கையிலே, சேர்த்து வைத்ததெல்லாம் வைத்தியம் பார்த்ததுலே போயிட்டுது. கையிலேருந்த ரெண்டணாவிலே பூ வாங்கிட்டு….” “தரித்திரமே உன் கணக்கு யாருக்கு வேணும்? தட்சணை இல்லாவிடில் ஒண்ணும் ஆகாது” என்றார் அவர் கண்டிப்பாக.
“சாமி கிருபை செய்யுங்க…”
“ஊஹும்” எனத் தலையசைத்ததும், அவள் “அரையணா இருக்கு. அவ்வளவுதான்…” என்று கந்தல் துணியின் முனை ஒன்றில் முடிந்திருந்த காசை அவிழ்க்கத் தொடங்கினாள்.
“மூதேவி, பிச்சைக் காசா தர வந்தே! போ நாயே!” என ஏசி கீழே இருந்த பூவை – ஏழையுள்ளம் உண்மை அன்புடன் சமர்ப்பிக்கும் காணிக்கையை – உதைத்துத் தள்ளினார். களங்கமற்ற உள்ளத்தின் உருப்போன்ற வெள்ளை முல்லைச் சரம் மண்ணிலே விழுந்து மாசு படிந்தது. அதே வேளையில் அவள் உள்ளத்திலும் ஆழமான வடுப்பட்டது. “கடவுளே, கண்ணில்லையா உனக்கு” என மோனமாகப் பிரார்த்தித்தது அவள் மனம்.
“என்ன சாதியோ, எழவோ! கடவுளுக்குச் சாற்ற புஷ்பம் கொண்டு வந்துவிட்டாள். பீடை” எனக் கரித்துக் கொண்டிருந்தார் அர்ச்சகர்.
காசு கையில் வந்தால் இக்குறை பறந்திராதா!
அப்பொழுதுதான் “அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!” என நீட்டி முழக்கியவண்ணம் பட்டணிந்த பெரியார் ஒருவர் உள்ளே நுழைந்தார். பணப் பெருமையும் சுக வாழ்வும் அவர் மேனியில் மெருகுடன் மிளிர்ந்தன. அவர் பின்னால் ஒரு வேலையாள் தேங்காய் முதலிய தாங்கிய தாம்பாளம் ஏந்தி வந்தான். அர்ச்சகர் கூழைக்கும்பிடுடன், “வரணும், வரணும்” என உபசரித்தார். “அர்ச்சனை பண்ணணும். தாம்பாளத்தை அங்கே கொடுடா… இந்தாங்க” என எட்டணா நாணயத்தை நீட்டினார் செல்வர். அதை பல்லெல்லாம் காட்டிப் பணிவுடன் பெற்றுக்கொண்டார் பட்டர்.
“நேர்த்திக் கடன்” செலுத்த முடியாக் குறையால் புண்பட்டு நின்ற அவள் கண்களில் நீர் மல்க நின்றாள். “ஏ இங்கென்ன! வெளியே போ” எனச் சீறினார் செல்வர்.
உலகின் அம்மையும் அப்பனும் ஆன அண்ணலின் சன்னதியிலே பணமும் ஏழ்மையும் ஒன்றாக நிற்பதாவது!
பட்டர் தாம்பாளத்தை வாங்கிக்கொள்ள கை நீட்டினார். பராக்குப் பார்த்தபடியே வேலையாள் கொடுத்த அது தவறி தரையில் விழுந்தது. `டண் டணார்’ என்ற ஓசை எழுந்தது. உடைந்த அவள் உள்ளத்து எதிரொலிபோல.
அவள் சோர்ந்துவிட்ட இதயத்துடன் திரும்பி நடந்தாள்.
அண்டம் அத்தனையும் நின்றாட தான் ஆடி மகிழும் அண்ணல், எல்லாவற்றையும் கண்டும் சிலையாகத்தான் நின்றான் கர்ப்பக்கிரக இருளிலே.
முற்றும்.
★ ★ ★



