
நாட்டியக்காரி
வல்லிக்கண்ணன்
8. பழகிய பால்
அவள் மனம்:
நினைக்கும்போதெல்லாம் எனக்கு அழுகை பொங்கி வருகிறது. அவர் மனம் இப்படி மாறுவானேன்? அது எனக்குப் புரியவில்லை.
முன்பெல்லாம் இப்படியா நடந்துகொண்டார்? “சரசு… சரசு” என்று எவ்வளவு பாந்தவ்யமாக இழையும் குரலில் அழைப்பார். இப்போது? “சீ தரித்திரம்… மூதேவி… பீடை” இவ்வார்த்தைகள்தான் உதிர்கின்றன.
நான் என்ன தவறு செய்துவிட்டேன்? என் உள்ளத்திலே பொங்கி வரும் அன்பு குறைந்ததா? இல்லையே பின்….?
காலம் எனது இளமையைத் துரத்திவிட்டது. ஐந்து வருஷங்கள்! இந்த வீட்டில் எவ்வளவு உழைப்பு… தாக்குதல்கள்! சுகம் உண்டா? ஊஹும். அழுகையில்தான் சுகம் இருந்தது. அழுவதனால் இன்பம் உண்டாகிவிடாது. எனினும், குமுறும் மனதைச் சாந்திப்படுத்தும் சக்தி கண்ணீரில் மறைந்து கிடக்கிறது. அழுதேன். அழுகிறேன். நான்அழத்தான் பிறந்தேனோ?
வாழ்க்கை எனக்கு ஒரு பூங்காவாகத் தென்பட்டது. அதன் மலர்ச்சியும் மணமும் என்னைக் கவர்ந்தன.
உள்ளே புகுந்தபோது மறைந்து கிடந்த நெறிஞ்சி முட்கள் என் கால்களில் குத்தி ரத்தம் வரச் செய்தன.
கல்யாணமான புதிதில் எனக்கு வாழ்வின் சோகம் தெரியவில்லை. வசந்தத்தின் வருகையைக் கண்ட குயில்போல் திளைத்தேன். அதன் பின்னாலேயே இருள் கவிய மப்பும் மந்தாரமுமாய் மழைக்காலம் தொடரும் என என் இளம் உள்ளம் எண்ணவில்லை.
அந்தக் காலம்…….
அது கனவுதானோ! என்றுகூடத் தோன்றுகிறது.
குளுமை நிறைந்த பருவம்.
கணவனின் அளவற்ற அன்பு, வீட்டை விளங்கவைக்க வந்த ஒளி என்றதால் பிறரின் மதிப்பு எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். மற்றவர்கள் குறைகாணத் தொடங்கினார்கள்.
ஆயினும் அவர் அன்பு தணியவில்லை. ஆபீஸில் இருந்து வரும்பொழுதே “சரசு” என்ற இன்ப அழைப்பு; நான் கொண்டுவந்து தரும் காபியைக் குடிக்கும்பொழுதுதான் அவர் முகத்தில் எவ்வளவு மகிழ்வு துள்ளும்!
“சரசு, நீ போடும் காபிக்கே தனி ருசி, உன் பேச்சைப்போல அதுவும் மதுரமாகத்தான் இருக்கிறது!” என்று சிரித்துகொண்டே சொல்வார்.
அப்பொழுது “போங்கோ” என்றுதான் என்னால் சொல்ல முடியும். என் உள்ளத்திலே எவ்வளவு இன்பம் பெருக்கெடுத்தோடியது அவ்வேளைகளிலே!
தினசரி என் அலங்காரங்களைக் கண்டு சொக்கிய அவர் மனம் “அழகுக்கு அழகு செய்யும் இந்த `மேக்கப்’ கலையை எங்கே கற்றாய், சரசு? உந்தன் மோடி கிறுக்குதடி என் உள்ளத்தை” என்று வர்ணனையக் கொட்டும். என் முகம் சிவக்காமல் என்ன செய்யும்?
மலர் வாங்கி வருவார். “கொடுங்கள்” என்று கேட்டால் “முடியாது” என மறைத்து ஏய்ப்புக்காட்டுவார். பிறகு தானே என் கூந்தலில் சூட்டிவிட்டு “கார்மேகத்தில் ஓர் அழகு இருக்கிறது. ஆயினும் மின்னல் நெளியும்பொழுதுதான் அது கவர்ச்சியாகத் தோன்றி கொள்ளைகொள்கிறது மனதை.
“கருங்கூந்தலுக்கு மலரின் உதவி தேவைதான், தனி வனப்புடன் திகழ” என்று கவிதை பேசுவார்.
ஆனால் இன்றோ? நேற்று குண்டு குண்டாக மல்லிகைப் பூச்சரம் வாசலில் கொண்டுவந்தான். மனம் பறிகொடுத்தேன். “பூ வாங்கட்டுமா?” என்றேன். அவர் பதில் இடியாக ஒலிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர் வெடுக்கென்று சொல்லி என் ஆவலை நசுக்கிவிட்டாரே! “உன் மோறை இருக்கிற லக்ஷணத்துக்கு ஜடையும், பூவுந்தான் வேண்டும்….?”
“என் மோறை லக்ஷணம் நேற்றுத்தான் தெரிந்ததோ?”
இன்று என் கட்டு மீறிய அவாவைக் கொட்டினென். எனக்கு வெகு நாளாகவே ஆசை. “நல்ல படம், நல்ல படம்” என ஊரெல்லாம் முழங்குகிறது. அவர் ஒன்றுமே பேசவில்லை. முன்பு தானாகவே அளப்பாரே. “சரசு சினிமாவுக்குப் போவோம், வா” என்பார். “வேலை கிடக்கிறது, வரவில்லை” என்றாலும் விட்டால்தானே…! இன்று நானாகக் கேட்டும் எரிந்து விழுந்ததுதான் கண்ட பலன்!
“சினிமாப் பார்க்கணுமாம் சினிமா! சவம், நம்ம பிழைப்பே சினிமாதானே!”
இப்படி அவர் பேசுவானேன்? பிழைப்புக்கு என்ன வந்தது? அவர் உள்ளம்தான் சரியில்லை.
அவர் மனம் இப்படி மாறுவானேன்?
இதுதான் என் கவலை. ஒன்றும் புரியவில்லை. மன வண்டு வேறு மலரை நாடுகிறதோ, என்னவோ?…… ஆண்களின் மனமே அப்படித்தான்.
அதற்கு நான் என்ன செய்ய முடியும்? பெரு மூச்செறிவது தவிர?
அவன் உள்ளம்
இந்த மனமே காரணம். பாவம், அவள் என்ன செய்வாள்?
மனம் புது அழகையே நாடுகிறது. ஆனால் அவள் என்ன வாடாமல்லிகையா…? பார்க்கப்போனால், அழகு நிரந்தரமானதா? எழிலும் இன்மணமும் உள்ள மலரின் சோபை மங்கத்தான் செய்யும். அது இயற்கை நியதி. அந்த உண்மையை நான் ஏன் மறந்தேன்? காலம் அவள் மேனியில் சேஷ்டை செய்துவிட்டது. அது அவள் குற்றமில்லையே….
இப்பொழுதுதான் என் தவற்றை உணர்கிறேன். இன்று அவள் மனதை வீணாகப் புண்படுத்திவிட்டேன். அவள் என்ன செய்துவிட்டாள், நான் அப்படி எரிந்து விழ!
“சினிமாவிற்குப் போகலாம்” என்று சொன்னாள். அது குற்றமா? நாள் முழுவதும் உழைப்பிலே சுழன்ற அவள் உள்ளத்துக்கும், உடலுக்கும் ஒரு சிறு ஓய்வு – உற்சாகம் – வேண்டினாள், அது இயல்பு. ஆனால் நான் பெரும் பாதகம் விளைவித்துவிட்டேனே…. அவள் முகம் எப்படி வாடியது! முகம் மட்டுமா? உள்ளமே சோம்பிக் குவிந்துவிட்டதே, அழமாட்டாத குறையாக உள்ளே போய்விட்டாள். அதிலிருந்து என் இதயம் அரிக்கிறது… முன்பு நானாகவே அவளை வலிய அழைத்துச் செல்வேன். அது அந்தக் காலம். பெண்மையை அறியத் துடித்த இளம் உள்ளத்திற்கு அவள் வருகை பருவ மழை போலிருந்தது. மனைவி என்றால் ஒரு புதுமை. அவளைத் திருப்தி செய்ய வேண்டும். இதுவே என ஆவல். மனம் சதா அவள் நினைவிலேயே லயித்துக் கிடந்தது. புது மலரைச் சுற்றி ஆடும் தேனீ போல.
அவள் வாய் திறந்து ஏதேனும் கேட்டுவிட்டால், அது பிரிய தேவதையின் வாக்காக ஒலித்தது. அப்படிக் கேட்க மாட்டாளா என்பதுதானே என் ஆசை! அந்த மோகம் சில மாதங்களில் மறைந்துவிட்டது. அவள் `புதுமை’ என்பது போய் பழகிய ஜந்துவாகிவிட்டாளே. அதனால் அவளிடம் குறை காணத் தொடங்கியது மனம் போகப் போக அலுப்படையவும் ஆரம்பித்தது. அவளது உள்ளம் மாறவில்லை.
வெளித்தோற்றம் மாறியது. அது அவள் குற்றம் இல்லை. இந்த உண்மை எனக்குக் கசப்பாகத்தான் இருந்தது. அவளது அழகு மங்கினாலும், அன்பு மறையவில்லை. அதே முகமலர்ச்சி, அதே உபசரிப்பு, அதே திருப்தி. ஆனால், என் உள்ள நிறைவிலே கள்ளம் புகுந்துவிட்டதே! அதனால்தான் அவள் குறைகளே பிரமாதமாகப்பட்டன.
முன்பு அவள் அழகுக்கு அழகு செய்து காணத் துடித்தேன். அவள் மலர் சூடுவதும், பின்னிக்கொள்வதும் கலாரசனையாகத் தொனித்தன. வர வர?
மங்கிவரும் அழகை மறைக்க உபயோகிக்கும் வெளிப்பூச்சு என்ற எண்ணம் பிறந்தது. அவள் அழகு செய்யும் பொழுது குறைந்த சோபையை மழுப்பி’ என்னை ஏமாற்றவே அவள் மலரும் வண்ணப் பட்டும், பிறவும் நாடுகிறாள் என உள்ளம் முணுமுணுக்கிறது. அவள் ஏன் என்னை ஏமாற்றப்போகிறாள்? எனக்கு திருப்தி அளிக்க வேண்டும் – என் உளம் மகிழ வேண்டும் – என்பதுதானே அவள் வாழ்க்கை லட்சியம்? இதை நான் மறந்தேன். அது என் தவறு. இதற்குக் காரணம்?
மனித மனம் அன்றாடச் சுழல்களில் சிக்கி அலுத்த பின் புதுமைக்காக ஏங்குகிறது. உடன் ஒட்டிய எல்லாவற்றிலும் வெறுப்பு பிறப்பது இயல்பு. பழகப் பழகப் பாலும் புளித்துவிடுகிறது!
ஆம். அதேதான்.
அம்மனப்பண்பை மாற்ற முடியாதா? ச
லனமும் சாந்தியும்
“சரசு”
“சரசு, ஏனென்று கேட்கமாட்டாயா?”
“ஊம்?”
“சினிமாவுக்குப் போகலாம் வா.”
“சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். எனக்கு அதுதான் குறைச்சல்!” “கோபமா? என் பாடத்தைத் திருப்பிப் படிக்கிறயாக்கும்?”
“பின்? நானாகக் கேட்டால் குற்றம். நீங்கள் சொன்னால் நான் தலைவணங்க வேண்டும்! இந்த வீட்டில் நான் ஓர் அடிமை. இஷ்டப்படி இயங்கவைக்கும் மெஷின். அதுதானே உங்கள் எண்ணம்?”
“சரசு, இதுவரை நான் தவறு செய்துவிட்டேன்.” “இனி என்னவோ?” “முன்போல…” “ஹூம்! அந்தக் காலம் வரவாபோகிறது? பழகிப் பழகி நான் புளித்துப்போனேன். பாலானாலும் அதிகமாகப் பழகிவிட்டால்…..”
“இருக்கலாம்! அப்படி நினைத்தது என் தவறு என்றுதான் சொல்கிறேன். நான் உண்மையை மறந்தேன். இல்லை. உணரவே இல்லை. மல்லிகை வாடாமலே இருக்குமா? வாடாமல் இருந்தால் அதற்கு சிறப்பு ஏது? வாடாமல்லிகையில் வர்ணக் கவர்ச்சி இருந்தாலும் மணம் கிடையாதே… சரசு, நீ மல்லிகை, உன் அழகு குறைந்தாலும் மணம் குன்றவில்லை. உன் அன்பின் ஆழத்தை இதுவரை நான் அசட்டை செய்து வந்தேன். சரசு, அதை மறந்துவிடேன். நான் வேண்டிக்கொள்கிறேன்.” “மறக்காமல் என்ன சண்டையா பிடிக்கப்போகிறேன். பழகிய பால் என்று..…”
“பாலைக் குறை கூற முடியாது. மனித மனதில்தான் கோளாறு. அதைச் சரியாக்கிவிட்டால் பால் தினமும் ருசிக்கத்தான் செய்யும்.
போதது என்றால், மனநிறைவு என்ற சர்க்கரை சேர்த்தால் இனித்துவிட்டுப்போகிறது. என்ன சொல்லுகிறாய் சரசு?”
“நான் என்ன சொல்கிறது… உங்கள் இஷ்டம்.”



