நாட்டியக்காரி
வல்லிக்கண்ணன்

2. சிருஷ்டிக் கோளாறு

வெண்ணிலவு பூச்சொரிந்துகொண்டிருந்தது. பசும் மரங்களையும், பாழ் வெளிகளையும் பால் வண்ணத்தால் நனைத்து, மாடி வீடுகளையும், குச்சுகளையும் பளிங்குக் கட்டிடங்களாகத் தோன்றச் செய்யும் சந்திரிகை. சாந்தி, இன்பம், ஏக்கம் எல்லாம் குழம்பிய தன்மையை சிருஷ்டிக்கும் இரவு.

பிரம்ம லோகத்திலும் அப்படித்தான். பார்வையிடும் பரப்பெல்லாம் பனி பூசியதுபோல பால் ஒளி நிலவு படர்ந்து கிடந்தது மனதிற்கு இன்பம் அளித்ததுபோலும். தனக்குப் பிரியமான வெண்தாமரை ஆசனத்தைப் பிரிந்து வெளியே வந்தாள் கலைவாணி. சிப்பத்தில் இருந்து நகர்ந்து வரும் பளிங்கு பிம்பம்போல. அவளுக்கு உகந்த வெண்மை எங்கும் கொட்டிக் கிடந்ததால் மனோ சாந்தியும், மட்டற்ற மகிழ்வும்கொண்ட அவள் வீணையையும், ஏட்டையும் தாமரை பீடத்திலே போட்டுவிட்டு ஆடி அசைந்தாள். நிலவைக் கூட்டி வார்த்த வண்ணம் பெற்ற சரஸ்வதி முல்லை நிற ஆடையும், மல்லிகை மாலையும் சலசலக்க, கண்கள் கயலெனப் புரள, மின்னென முறுவல் மிளிர ஒயிலாக நடந்தாள், தனி தடம் பயிலும் ஒரு ராஜ அன்னம்போல. தன்னை மறந்த இன்ப லாகிரியில் மூழ்கிய அவள் யார் வருகையாவது எதிர்நோக்குகிறாளா?

அன்றைய வேலைகளை முடித்துக்கொண்டு, சோம்பல் முறித்தவண்ணம் எழுந்த சிருஷ்டி தேவனின் பார்வை சூன்யமாகக் காட்சியளித்த பதுமப் பீடத்தில் பாய்ந்து தாவியது. நிலவுக்கு ஒரு வனப்பு தரும் சந்திரிகை ராணியென நின்ற சரஸ்வதியைக் கண்டதும் பிரமன் கண்களில் மின் ஒளியும், உதட்டில் குறுநகையும் நெளிந்தன.

தன்னை நோக்கி நடந்து வந்த தேவன் மீது கண்களை ஏவி, “ஸ்வாமி, இன்று நிலவு ரொம்ப அற்புதமாக இருக்கிறது, இல்லையா?” என்ற சொற்களால் வரவேற்றாள்.

“வழக்கமான நிலவுதான் ப்ரியே. உன் உள்ளத்திலேதான்…” சிருஷ்டி தேவன் முடிக்கவில்லை. வாணி குறுக்கிட்டாள்; “இருக்கட்டுமே! இதே வேளையில் இந்நிலவின் ஸ்பரிசத்தால் கொந்தளித்து எத்தனை இதய சாகரங்கள் கவிதை அலை வீசுகின்றனவோ. உணர்ச்சி கிளுகிளுக்கும் உருவங்களான கவிகளும் கலைஞர்களும்….” கேலியாகச் சிரித்தார் பிரம்மா.

கனன்று நோக்கின வாணியின் விழிகள் `ஏனாம்?’ என்று கேள்விக்குறி வரைந்தது. மனித மனங்களை அலைக்கழிக்கும் காதல் உணர்ச்சிகளை மோதவிட்டு, அமரகாவியம் பின்ன கவி கனவு காண்பதற்கு எழுச்சி தரும் நேரம். சந்திரனின் அமுத ஒளி….

“ப்ரியே, இதே அம்புலி சோகத்தையும், வேதனையையும் எழுப்பும் என்பதை ஏன் மறந்துவிட்டாய்?” என்று கேட்டார் சிருஷ்டிதேவன்.

கலாவல்லி அலுத்துக்கொண்டாள். “நல்ல மனோபாவம்! இன்பத்துடன் துன்பத்தையும் சேர்த்தேதான் எண்ணவேண்டுமாக்கும்! அதிலும் இத்தகைய இன்ப இரவில்…”

“பூலோகப் பிறவிகள் அப்படிப்பட்டவர்கள்தான் வாணி” என்றார் தேவன்.

“எல்லாம் உங்கள் தவறுதான். சிருஷ்டித்த பின் விளைவுகள் மீது குற்றம் சாட்டுவானேன்?” என்று கேட்டாள் சரஸ்வதி.

“உனது குணம்தான் அந்நிலையை உண்டாக்குகிறது.” சீறினாள் கலைவல்லி. “எனது ஸ்பர்சம் பூலோகவாசிகளிடையே சொர்க்கத்து இன் கனவை மலரச் செய்கிறது. நான் வீணையை இசைக்காவிட்டால் உலகம் ஞான சூன்யமாக அறிவின் ஒளியற்று….” அன்று இருந்த உற்சாக மனோநிலையில் தனது பெருமையை எண்ணி எண்ணி வியந்தாள்.

“தேவி, உன் சாந்நித்யம் துன்பமும் விளைவிக்கிறதே” என்று குறும்பாக மொழிந்தார் தேவன், வாணிக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “பதறாதே தேவி, அதோ பார்” என்றார் பிதா. அவரது விரல் வழியே பாய்ந்தன அவள் விழிகள்.

பூலோகம் நிலவுப் புனலில் திளைத்து சொக்கிக் கிடந்தது. ஒரு வீடு. சாதாரணமான வீடுதான் அது. அதன் அறை ஒன்றிலே….

கரண்டு கரண்டு போகும் திரியைத் தூண்டிவிட்டவண்ணம் தன்னை மறக்க முயன்றுகொண்டிருந்தான் வாணிதாசன். உள்ளத்தின் மூலையோடு மூலையாக ஒண்டிக்கிடக்கும் எண்ணங்களை வெளியே இழுக்கப் போராடினான் அவன். பேனாவும் கையுமாக சுடரில் பார்வையும் வெறுமையில் சித்தமுமாக அமர்ந்திருந்த அவனுக்கு முன்னால் உள்ள சாளரம் வழியாக சந்திரிகை படையெடுத்து வந்தது இயற்கை சிதறும் புஷ்பபாணம்போல.

விளக்கொளி அதற்குத் திரையிடத் துடித்தது. அதைக் கவனியாமல் சிந்தனைப் படுதாவில் கோலம் இட்டு இட்டு அழித்துக்கொண்டிருந்தான் அவன்.

அப்பொழுதுதான் சிரித்த முகமும், சிங்கார நடையுமாக நுழையும் கமலியின் வருகையை, மெல்லுடையின் மோன மூச்சும், அலங்காரப் பொருள்களின் வாசனையும், எல்லாவற்றுக்கும் மேலாக தலையில் சூடிய மல்லிகையின் வெறி தரும் மணமும் விளம்பரப்படுத்தின. ஆயினும் வாணிதாசன் கவனத்தைக் கவரவில்லையே!

கமலி ஜன்னல் வழியாக, வெளியே மலர்ந்து கிடந்த எழிலை விழுங்கினாள். பெருமூச்செறிந்துவிட்டு, இருளில் குமைந்த கவியையும் பார்த்தாள். “இன்று நிலவு அற்புதமாக இருக்கிறதே!” என அவள் வாய் முனங்கியது. அவன் கல்லாகத்தான் இருந்தான் அப்பொழுதும்.

“என்ன, ரொம்ப யோசனைபோலிருக்கு. எழுதியாச்சா இல்லையா?” என்று கேட்டாள்.

அவன் லேசாத் திரும்பிப் பார்த்து “ஏனாம்?” என்றான்.

“இல்லை… நிலா நன்றாயிருக்கிறதே வெளியே நின்று பார்க்கலாமே என்று…”

“அதற்கு என்ன இப்போ?”

இந்தப் பதிலுக்குப் பதிலாக ஒரு நெடுமூச்சு எழுந்து மறைந்தது. மீண்டும் சிந்தனை. கமலி மெதுவாக எழுந்து அவனுக்குப் பின்புறம், நாற்காலியோடு சாய்ந்து, அவன் தோளுக்கு மேலாக பார்வையை விட்டெறிந்தாள். மேஜைமீது பரப்பிக் கிடந்த காகிதங்கள், அடித்து அடித்து ஆக்கப்பட்ட சில வரிகளால் வானத்து நிலவையும் காதலையும், மனித உள்ளத்தையும் அளக்க முயன்று முடியாமல் திணறிக் கிடந்தன. அவற்றைப் படிப்பதற்குக் குனிபவள்போல தலையைத் தாழ்த்தினாள் தணிவாக.

அவன் முகத்திலே கூந்தல் வருட, மல்லிகை மணம் கம்மென்று நாசியில் தாக்கவே அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. “சட், இதென்ன எழவு! எழுதும் பொழுது சனியன் மாதிரி” என்று எரிந்து விழுந்தான் வாணிதாசன். அவள் குழைவாக “அம்மாடி!” எனக் குறும்பு மொழியைக் காதருகில் ஒலிபரப்பினாள். “இந்தா, சும்மா போக மாட்டே?

பின்னாலே நிற்காதே. இப்படி முன்னால் வந்து தொலை” என்று கத்தினான், இல்லாத உருவங்களின் உணர்ச்சிகளை அளவிட முரண்டிய எழுத்தாளன்.

முன் வந்தாள் கமலி. தூண்டில் நோக்கை விழிக்கோணத்தில் நிறுத்தி, புன்னகை சிதறினாள். “எழுத்து, எழுத்து, எழுத்து! ஓயாமல் இதே வேலைதானா!” என்று முணுமுணுத்தாள்.

“உனக்கென்ன தெரியும் அதைப் பற்றி?”- அவன் பேச்சில் கர்வம் தொனித்தது.

“இல்லை. உங்களுக்குத்தான் தெரியும்!”

“சரிதான், இன்று எழுதிய மாதிரிதான்!” “இன்று ஒரு நாள் எழுதாவிட்டால்தான் என்ன? தரித்திரம் பிடித்த விளக்கு,

பேனா, குப்பைக் காகிதம் இவற்றை ஒதுக்கிவிட்டு, இயற்கை வனப்பை ரசித்தால் என்ன? தினம் எழுத்துதான். என்கூட என்றாவது சந்தோஷமாகப் பேசியதுண்டா?” “சரி சரி, நீ போய் உன் வேலையைப் பாரு. நான் இதை முடித்தாக வேண்டும்.”

அவள் ஆத்திரமாக “முடிக்காவிட்டால்?” என்று தன் உள்ளத்துடிப்பை வார்த்தைகளாக்கினாள்.

பேனா நுனியைக் கடித்துக்கொண்டிருந்த தாசன், தலை நிமிர்ந்தான். ஜன்னல் வழியாக வந்து அணி செய்த நிலவொளியில் வனப்பின் உருவாக நின்றாள் அவள். அவன் பார்வையைத் தழுவ ஏங்கி நின்றன அவளது விழிகள். அவனோ “இங்கே நின்று ஏன் தொல்லை கொடுக்கிறாய்? உனக்கு தூக்கம் வரவில்லையா?” என்றான். “ஹூங், உங்களுடன் வாழ்வதைவிட ஒரே தூக்கமாகத்தான் தூங்கவேண்டும்” என்று அவள் உள்ளம் எதிரொலித்தது. அந்த அறையிலிருந்து வெளியேறினாள்

கமலி. போகும்பொழுதே “எழுத்து எழுத்து என்று பேனாவையும் காகிதத்தையும் கட்டி அழும் ஜன்மங்கள் எதற்காகக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமோ தெரியவில்லை” என முணமுணத்துச் சென்றாள்.

அது அவன் காதில் படாமலில்லை. “ஜடம்! இதுக்கு என்ன தெரியும் உணர்ச்சியின் மொழிபெயர்ப்பான கலையும் கவிதையும்” என்று மனதிற்குச் சமாதானம் கூறிவிட்டு பேனாவைப் பிடித்தான் வாணிதாசன். கமலி சுமையுற்ற மனத்துடன் வந்து படுக்கையில் விழுந்தாள். அவள் மன பாரத்தைக் கரைக்கப் பெருகுவதுபோல் கண்ணீர் சூடாக ஓடியது. அவள் பார்வை, எங்கும் சிதறி மிளிர்ந்த அற்புத நிலவொளியிலே கலந்தது, அவள் உள்ளம் துயர மூச்சை வெளியே கக்கியது. அதே வேளையில், வான வீதியில் ஊரும் தனி மேகம்போல, வழி தவறிய கொக்கு ஒன்று ஏக்கக் குரல் கொடுத்துத் திரிந்தது. அது ஒரு துணையைத் தேடியதா அல்லது தன் தனிமையை நொந்து கதறியதா?

“பார்த்தாயா வாணி! உனது அருள் செய்த வேலையை” என்று சொல்வதுபோல நோக்கினார் பிரம்மா. கலாவல்லியோ தன் தலையைத் திருப்பினாள் ஆத்திரமாக. “தெரியுதே உங்கள் சிருஷ்டியின் லட்சணம்! இத்தகைய ஜன்மத்தைப் படைத்த உங்களுக்கு ஒரு பெருமையா?” என்றாள். “இல்லை தேவி! நீ ஏற்றுமதி செய்த கருணா கடாட்சத்தின் போதைதான் காரணம். உனது ஸ்பர்சவேகம்…” “போதுமே!” என்று சீறினாள்

கலைவாணி. பிரம்மா என்னவோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் சரஸ்வதி அங்கு நின்றால்தானே! அவளைத் தேடி விரைந்தர் சிருஷ்டிதேவன், ஒளித்தகடென மிதந்த சந்திரனை எட்டிப் பிடிக்க வந்த கார்முகில் போல.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *