ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி
வெ. சாமிநாத சர்மா

1. தோன்றிய காலம்

சங்கரருடைய அறிவும் சைதன்யருடைய இருதயமும் கொண்ட ஒருவர் தோன்றுவதற்குக் காலம் பக்குவமுடையதா யிருந்தது. பிரதியொரு மதத்திடமும் ஒரே சக்தி, ஒரே கடவுள் இருப்பதைக் காணக் கூடிய ஒருவர் தோன்றுவதற்குக் காலம் பக்குவமுடையதாயிருந்ததுஇத்தகைய ஒரு மனிதர் தோன்ற வேண்டியது அவசியமாயிருந்தது. அந்த மனிதர்தான் ஸ்ரீ ராம கிருஷ்ணர்

– சுவாமி விவேகானந்தர்

ஒரு நாட்டின் பெருமை அதனை ஆளும் அரசர்களிடத்திலே இல்லை: அதனை ஆட்டிவைக்கும் அரசியல் வாதிகளிடத்திலேயும் இல்லை. பண பலமோ புயவலியோ படைத்தவர்களாலும் ஒரு நாட்டிற்குப் பெருமையைத் தேடித்தர முடியாது. வற்றாத நதிகளும், குறையாத சுரங்கங்களும் ஒரு நாட்டினுடைய செழுமையை அதிகரிக்கச் செய்ய மாட்டா. உயர்ந்த மலைகளும் மதில்களும், அழகிய கட்டிடங்களும் கோயில்களும் ஒரு நாட்டினுடைய உயர்வுக்கும் பண்பாட்டிற்கும் சாட்சிகளாக மாட்டா. ஒரு நாட்டினுடைய பெருமை, செழுமை, உயர்வு எல்லாம் அந்த நாட்டிலே அவதரிக்கும் மகான்களைப் பொறுத்திருக்கிறது.

எந்த நாட்டில் மனிதத் தன்மைக்கு இலக்கியமாயுள்ள மகா புருஷர்கள் தோன்றுகிறார்களோ, எந்த நாட்டில் நான், எனது, எனக்கு என்று வாழாமல், பிறர், பிறரது, பிறருக்காக என்று வாழ்கின்ற உத்தமர்கள் உதிக்கிறார்களோ, எந்த நாட்டில் மனிதர்களுடைய மேலான தன்மைகளைத் தூண்டி விடக் கூடிய சிருஷ்டிகளைச் செய்கின்ற கர்த்தர்கள் உதயமாகின்றார்களோ, அந்த நாடுதான் பெருமை கொள்ளத் தகுதியுடைய நாடு. அந்த நாட்டைத் தான் உயர்ந்த நாடு, செழுமையுள்ள நாடு என்று சொல்ல வேண்டும். அந்த நாடுதான், சரித்திரத்திலே சாசுவதமான தானத்தைப் பெறுதற்குரியது.

எந்த நாட்டில் இத்தகைய மகான்கள் தோன்றுவது நின்று விடுகிறதோ அந்த நாட்டினுடைய நல்வாழ்வும் முற்றுப் பெற்று விடுகிறது. அந்த நாட்டினுடைய புராணம், நாகரிகம் ஆகிய யாவும், பொருட்காட்சி சாலையைப் புகலிடமாகக் கொண்டு விடுகின்றன. கிரீஸ் தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கி.மு. நான்காவது நூற்றாண்டு வரை அதற்கேற்பட்டிருந்த பெருமையும் புகழும் போல, அந்த நூற்றாண்டுக்குப் பிறகு அதற்கு ஏற்படவே யில்லை. ஏனென்றால், அந்த நாட்டிலே வழிவழியாக வந்து கொண்டிருந்த மகான் பரம்பரையானது அரிட்டாட்டலோடு நின்றுவிட்டது. அவனுக்குப் பிறகு எத்தனையோ கவிஞர்கள், எத்தனையோ நாவலர்கள், எத்தனையோ வீரர்கள் அந்த நாட்டில் தோன்றினார்களென்பது வாதவம். ஆயினும் என்ன பிரயோஜனம்? அவர்கள் மகான்களில்லையே ஒரு நாட்டிற்குப் பெருமையை உண்டு பண்ணுஞ் சக்தி, இருக்கிற பெருமைக்குப் பங்கம் வராமல் பாதுகாக்குஞ் சக்தி, மகான்களுக்குத்தான் உண்டு. மகா அலெக்ஸாந்தர் அரிட்டாட்டலினுடைய சிஷ்யன்தான்; சிறந்த வீரன்தான். ஆனாலும் அவனால் கிரேக்க வாழ்வுக்குப் பெருமை தேடித்தர முடியவில்லை. அதற்கு மாறாக, தன்னுடைய பேராசையிலே தன்னையும் அழித்துக் கொண்டு, தனது நாட்டின் பெருமைக்கும் முற்றுப் புள்ளிவைத்து விட்டான். மகா அலெக்ஸாந்தருடைய மரணத்தோடு, கிரேக்க இலக்கியத்திற்கும், தத்துவஞானத்திற்கும், கலைகளுக்கும் ஏற்பட்டிருந்த செழிப்பான காலமும் முடிந்து விட்டது என்பது ஒரு சரித்திராசிரியனுடைய வாக்கு.

மகான்கள், கால தேச வர்த்தமானங்களைக் கடந்தவர்கள். இவர்கள் ஒரு காலத்திலே தோன்றி, அந்தக் காலத்திற்கேற்ற வகையில் சில காரியங்களைச் செய்கிறார்களென்பது வாதவம். ஆனால் அந்தக் காரியங்கள், எக்காலத்திற்கும் பொருத்தமுடையனவாயிருக் கின்றன; பிரயோஜனமுடையனவாகவும் இருக்கின்றன. இங்ஙனமே இவர்கள், ஒரு தேசத்திலே பிறந்தாலும் உலகத்திற்காக வாழ்கிறார்கள். எந்நாட்டவரும் எக்காலத்தவரும் போற்றக்கூடிய விதமாக வும் பின்பற்றக் கூடிய விதமாகவும் இவர்களுடைய வாழ்க்கை இருக் கிறது. இவர்கள் காலத்திலே நிகழும் வர்த்தமானங்கள், இவர்களுடைய தீர்க்க திருஷ்டியை மறைப்பதில்லை; உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகின்ற இவர்களுடைய மனப்பான்மையை மாற்றுவதில்லை; இவர்களுடைய மன அமைதியைக் குலைப்பது மில்லை.

இவர்கள் பிறந்த நாடு மண்ணிலே புதைந்து போய்விடுகிறது; இவர்கள் வாழ்ந்த காலம் ஜனங்களுடைய மறதியின் ஆழத்திலே மறைந்து விடுகிறது; இவர்களுடைய அன்றாட வாழ்க்கையை யொட்டி நடைபெற்ற நிஜமான சம்பவங்கள்,காலாந்தரத்தில் கட்டுக்கதைகளாக மாறிவிடுகின்றன. ஆனால் இவர்கள் நித்தியமாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்; இவர்களுடைய சிருஷ்டிகள் என்றும் ஜீவகளையோடு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன; இவர் களுடைய தொண்டு பிற்காலத்தவருக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கிறது.

ஜூலியஸ் சீஸருடைய ரோமராஜ்யம் சரித்திராசிரியர் களுடைய ஆராய்ச்சிப் பொருளாகப் போய் விட்டது. முஸோலினியி னுடைய இத்தாலிய சாம்ராஜ்யம் நிலை குலைந்து போய்விட்டது. ஆனால் வர்ஜிலும் தாந்தேயும் இன்னமும் அங்கு இசை முழக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; செயிண்ட் பிரான்சிஸும் ஸவோன ரோலாவும் இன்னமும் அங்கு உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மகா ஆட்டோ மன்னன் கண்ட ஜெர்மனி எங்கே? மகா ப்ரெடெரிக் ஆண்ட ஜெர்மனி எங்கே? ஹிட்லர் நிர்மாணித்த மூன்றாவது ஏகாதிபத்தியம் எங்கே? சீரழிந்து சிதறுண்டு போய் விட்டது. ஆனால் மார்ட்டின் லூதருடைய வாக்கும் கெதேயி னுடைய வாக்கும் இன்னமும் அங்கு ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

பொஹிமியா என்றொரு தேசத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களல்லவா? அதன் உருமாறி பெயரும் மாறிப்போய் விட்டது. ஆனால் அந்த நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவன் ஒரு குருடன். ஜான் ஜிகா என்று பெயர். அவன் அடிமைக் குழியிலே அழுந்திக் கிடக்கிறவர்களுக்கு இன்னமும் வெளிச்சம் காட்டிக் கொண்டுதான் இருக்கிறான்.

சீனாவின் மீது உங்கள் சிந்தனையைச் சிறிது செலுத்துங்கள். அந்தச் சீனாவைப் பெருஞ்சுவர் போட்டு வளைத்துக் கட்டினான் ஹுவாங் தீ என்ற ஓர் அரசன். பெரிய காரியந்தான். உலகத்து ஏழு அதிசயங்களுள் அந்தச் சீனப் பெருஞ்சுவர் ஒன்றாக இருக்கிற தென்பது வாதவம். ஆனால் அவனையோ, அவன் ஆண்ட சீனாவையோ எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்துக்கொண் டிருக்கிறார்கள்? கன்பூஷியஸ் இந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் சீனாவின் மீது நமக்கு ஒருவித பக்தி உண்டாகிறது. அவனுடைய இனிய உபதேசங்கள் நம் செவியிலே வந்து விழுந்து கொண்டிருக்கிற மாதிரியான உணர்ச்சி ஏற்படுகிறது. சீனாவின் நாற்புற எல்லைகள் எத்தனை தடவை எப்படி எப்படி மாறிய போதிலும், கன்பூஷியஸும், அவனைப் போல் அந்த நாட்டில் அவதரித்த மற்ற மகான்களும் சன்மார்க்கத்திலே செல்லும் பிரயாணிகளுக்கு, என்றென்றுமுள்ள வழி காட்டிகளாக இருந்து கொண்டிருப்பார்கள்.

மகான்கள், காலத்தின் தேவையை அனுசரித்து அவதரிக்கிறார்கள்; அந்தக் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். ஜனங்களுடைய எண்ணத்திலே கலக்கம். பார்வையிலே சூனியம், செயலிலே தடுமாற்றம், இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் மகான்கள் தோன்றி அந்த ஜனங்களுடைய எண்ணத்திலே தெளிவையும், பார்வையிலே பிரகாசத்தையும், செயலிலே நிதானத்தையும் உண்டு பண்ணுகிறார்கள். இவர்கள் நித்திய புருஷர்களானபடியால், எந்த நாடு, எந்தக் காலம், தங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவர்கள் தீர்க்கதரிசி களானபடியால், இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற விதமாகத் தங்கள் சொல்லையும் செயலையும் அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சொல்லாலும் செயலாலும் என்ன பயனேற்படு மென்பதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. பயனை எதிர்பார்த்தால்தானே கவலைப் படப் போகிறார்கள்? ஆனால் இவர்கள் எதிர்பார்த்தாலும் எதிர்பாரா விட்டாலும் இவர்களுடைய சொல்லும் செயலும் நிச்சயமாகப் பயனளிக் கின்றன. பயனை எதிர்பாராமல் பணி செய்வது இவர்கள் சுபாவம்; பயனுண்டாகு மானால் அஃது இவர்களுடைய பணியின் பரிணாமம்.

உலகத்தில் இதுவரை எத்தனையோ மகான்கள் அவதரித் திருக்கிறார்கள். அவர்கள் அவதரித்த காலத்தின் நிலைமையை நாம் சிறிது நினைவுக்குக் கொண்டு வந்து பார்த்தோமானால், அவர்களுடைய வருகை எவ்வளவு அவசியமாயிருந்தது என்பதும், அந்த அவசியத்தை நிறைவேற்றவே அவர்கள் அவதரித்தார்கள் என்பதும் நன்கு புலனாகும்.

உதாரணமாக யேசுநாதர் அவதரித்த காலத்தின் நிலைமையைச் சிறிது கவனிப்போம். அவர் பிறந்த காலத்தில் உலகத்தை அடர்ந்த (அஞ்ஞான) அந்தகாரம் மூடிக்கொண்டிருந்தது. அப்பொழுதைய உலகத்தின் நெடுகிலும் உருவ வழிபாடு நிறைந்திருந்தது. மூடப் பழக்க வழக்கங்களும் அனாசாரங்களும் மலிந்திருந்தன. கிரீஸ் என்ன, ரோமாபுரி என்ன, எகிப்து என்ன, இந்த நாடுகளிலெல்லாம் ஜனங்கள் பலவிதமான தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள். அக் காலத்து ஜனங்களுடைய மனதில் இந்தப் பல தெய்வ வழிபாடு நன்றாக ஊறிக்கிடந்தது. ஆடம்பர வாழ்க்கை, சுகபோகங்கள் ஆகிய இவைகளுக்கு மத்தியில் ஒழுக்க மென்பது உடைந்துபோய்விட்டது. அவ்வப்பொழுது மகாபுருஷர்களால் ஏற்றிவைக்கப்பட்ட அறிவு விளக்கு, உண்மை விளக்கு, அணைந்து போயிருந்தது. எந்த தரும நியாயங்களை மகான் ஸாக்ரட்டீஸ் வகுத்து விட்டுப் போனானோ, எந்த தரும நியாயங்களுக்காக அவன் தன் உயிரையே பலி கொடுத்தானோ, அந்த தரும நியாயங்களின் அனுஷ்டானத்தினால் ஏற்பட்டு வந்த நன்மைகள் யாவும் அடையாளம் தெரியாமலே போய்விட்டன. இதே கதியைத் தான் பேரறிஞனாகிய பிளேட்டோ வகுத்துவைத்துப் போன தத்துவ ஞானமும், அரிட்டாட்டல் வகுத்து வைத்துப் போன விஞ்ஞான அறிவும் அடைந்தன. உண்மை யான தத்துவ ஞானத்திற்குப் பதிலாக போலித் தத்துவங்கள் அங்கு மிங்குமாக உலவின. பெரும்பாலோரான ஜனங்கள், உண்பது, குடிப்பது, சந்தோஷமாயிருப்பது என்ற வகையிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்; பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டார்கள். இன்னும் பலர், ஒழுக்கத்தின் அடி வேரையே வெட்டி வீழ்த்திவிட்டனர். உலகம் முழுவதிலும் பொதுவாக ஏற்பட்டிருந்த இந்தச் சீரழிவுக்கு மத்தியிலே, யூதமதம் மட்டும் தனிப்பட்ட சிறப்புடன் காட்சி யளித்துக்கொண்டிருந்தது. கடவுள் ஒருவரே என்ற கொள்கையை அந்த மதம் முக்கியமாகக் கொண்டிருந்த தனால், அஃது – அந்த மதம் – மேற்படி சீரழிவுக்கு மத்தியிலே பெரிய ஆறுதலாயிருந்தது. ஆனால் அந்த மதத்திலே கூட வெறும் சடங்குகள் நிரம்பிக் கிடந்தன. இந்த மதத்தினர் இரண்டு பிரிவின ராகப் பிரிந்திருந்தனர். ஆக, உலக முழுவதும் ஒரே இருட்டாகக் காணப்பட்டது. அந்த நிலையில் ஒரு வெளிச்சம் தேவை யாயிருந்தது. மானிட சமுதாயம் கடுமையானதொரு வியாதியினால் அவதைப் பட்டுக்கொண்டு இறக்குந் தறுவாயிலிருந்தது. அதிலிருந்து காப்பாற்ற அவசரமான ஒரு பரிகாரம் அவசியமாயிருந்தது. இந்த அவசியத்திற்காகவே யேசுநாதர் தோன்றினார். அந்தக் காலத்திற்கு அவர் வருகை தேவையாக இருந்தது.

மகான்களுடைய அவதார வரலாறுகளை நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், அவர்கள் அவதரித்த காலத்தில், ஏறக்குறைய மேலே சொன்ன நிலைமைதான் இருந்தது என்பது நன்கு தெரியவரும். புத்தர், கன்பூஷியஸ், ஸாக்ரட்டீஸ் ஆகிய இப்படிப்பட்ட மகான்கள் அவதரித்த காலத்தில் உலகம் இருந்த நிலைமை என்ன? அவரவர்கள் நாடு இருந்த நிலைமை என்ன? அப்பொழுதைய ஜனங்களின் மனப்போக்கு எப்படி இருந்தது? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் ஆசிரியனுடைய வாக்குப்படி, அப்பொழுதிருந்த தலைமுறையினருக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இருந்த தொடர்பு அற்றுவிட்டது. தேசீய உணர்ச்சி என்பது இறந்தொழிந்தது. போர்க்குணம் எங்கும் பரவியிருந்தது. இந்த நிலைமையிலிருந்து உலகத்தைக் காப்பாற்று வதற்காகவே, ஜனங்களை நல்வழிப் படுத்துவதற்காகவே மேற் சொன்ன மகான்கள் தோன்றினார்கள். எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் மகான்கள் அவதரிக்கிற போழ்து இந்த மாதிரியான ஒரு நிலைமையே இருந்திருக்கிறது.

இனி, புனிதமான நமது நாட்டிற்கு வருவோம். உலகத்திற்கு உய்யும் வழி காட்டிய உத்தமர்கள் எத்தனை பேர் நமது தாய் நாட்டில் உற்பவித்திருக்கின்றனர்! எண்ணித்தான் ஆகுமா இவர்களின் வரிசையை? சொல்லத்தான் போகுமா இவர்களின் பெருமையை?

இத்தகைய உத்தமர்களை ஈன்றளிக்கிற விஷயத்தில் இந்தியா தனிச் சிறப்பு வாய்ந்ததென்பதை நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் இந்தியாவிலேதான் மகான்களின் பரம்பரை என்ற ஒரு பரம்பரை உண்டு. இந்த மகான் பரம்பரைக் கொடியின் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று எந்தச் சரித்திராசிரி யனாலும் துணிந்து கூற முடியாது. அப்படியே இந்தக் கொடி எவ்வளவு தூரத்திற்குப் படர்ந்து செல்லும் என்று எந்த தீர்க்கதரிசியினாலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

இந்தியாவின்மீது எத்தனையோ படையெடுப்புகள் வந்து மோதியிருக்கின்றன; அந்நியர்களுடைய ஆதிக்கங்கள் நடைபெற்றிருக் கின்றன. வேறெந்த நாடாயிருந்தாலும் இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்து பட்டிருக்கும். ஆனால் இந்தியா வீழவே இல்லை; வாழ்ந்து கொண்டிருக்கிறது; இன்னும் பல் கோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும்; வாழ்ந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், உலகத்திற்கு வழி காட்டிக் கொண்டுமிருக்கும். இஃது உறுதி. இப்படி உறுதியாகச் சொல்வதற்கு என்ன ஆதாரமென்று வாசகர்கள் கேட்கலாம். இந்தியாவிலே நூற்றாண்டுகள் கணக்காக அவதரித்துக் கொண்டு வந்திருக்கிற உத்தம புருஷர்கள் – இவர்களை மகான்களென்றோ, மகா புருஷர்களென்றோ, தீர்க்கதரிசிகளென்றோ, எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். – இந்தியா, சாசுவதமாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், உலகத்திற்கு நிரந்தரமாக வழிகாட்டிக் கொண்டிருப்பதற்குமான அதிவாரத்தை அமைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்த அதிவாரந்தான் ஆத்மீக அதிவாரம். இந்த அதிவாரத்தின் மீதுதான் இந்தியாவின் அரசியல் வாழ்வு, சமுதாய வாழ்வு, பொருளாதார வாழ்வு ஆகிய யாவும் நிர்மாணம் செய்யப் பட்டிருக் கின்றன. அழியாத ஒன்றை அதிவாரமாகக் கொண்டிருப்ப தனால் தான், இந்தியா, அழியாமல் இருந்து வருகிறது; இனியும் இருந்து வருமென்று சொல்ல முடிகிறது.

இந்தியாவிலே அவதரித்த மகான்கள், எந்த நிலைமையிலே எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள்; எந்த இடத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள்; சிருஷ்டிக்க வேண்டிய இடத்திலே சிருஷ்டித்தும், சம்ஹரிக்க வேண்டிய இடத்திலே சம்ஹரித்தும், பரிபாலனம் செய்ய வேண்டிய இடத்திலே பரிபாலித்தும் வந்திருக்கிறார்கள்.

ஜனசமுதாயத்தின் கட்டுக் கோப்பு தளர்ந்து போயிருக்கிறதா? பழமையின் மீது துரு ஏறிவிட்டதா? லௌகிக சக்திகள் வலுத்துப் போய் பாரமார்த்திகத்தை அழுத்திக் கொண்டி ருக்கின்றனவா? ஜனங்கள், அறியாமையாகிற அந்தகாரத்தில் தவித்துக் கொண்டி ருக்கிறார்களா? அசிரத்தை காரணமாகத் தூங்கிக் கொண்டி ருக்கிறார்களா? அடிமைக் குழியிலே விழுந்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்களா? இந்த அறியாமையினாலும் அடிமைத்தனத்தினாலும், அவர்களிடத்திலே நியாயமாக இருக்கவேண்டிய மேலான தன்மைகளெல்லாம், இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிப்போய் அடியோடு நசித்துப் போய் விடுகின்ற நிலைமையை அடைந்து விட்டனவா? இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் மகான்கள் தோன்றி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள். எந்த மாதிரியாக இவர்கள் தோன்றிய போதிலும், அதாவது சிருஷ்டி கர்த்தர்களாகவோ, சம்ஹார மூர்த்திகளாகவோ, பரிபாலன புருஷர்களாகவோ எப்படித் தோன்றிய போதிலும், இவர்களுடைய நாட்ட மெல்லாம் நிலையான ஒன்றின் மீதுதான் எப்பொழுதும் பட்டுக் கொண்டேயிருந்திருக்கிறது. அதனின்று இவர்கள் தங்கள் பார்வையைத் திருப்பியதே கிடையாது. அதற்கு ஒரு பெயர் கொடுத்து, அந்தப் பெயருக்குள்ளே அதனைச் சிறைப்படுத்தவும் இவர்கள் விரும்பவில்லை. அறிஞர்கள் அதற்குப் பல பெயர்களிட்டழைத்தாலும், அஃதென்னவோ ஒன்று தான், அது நிலையாயுள்ளது, காலத்தைக் கடந்தது, மனிதனுடைய சிந்தனா சக்திக்கு அப்பாற்பட்டது, அஃது இன்ன உருவமுடையது என்று நிர்ணயித்துச் சொல்ல முடியாது என்பதே இவர்களுடைய கோட்பாடாயிருந்தது.

நிலையாயுள்ள அந்த ஒன்று என்ன? அதுதான் சத்தியம்; தர்மம்; அன்பு; அழகு; சிவம்; சக்தி;கிருஷ்ணர்; யேசு; அல்லா. யார் எந்தப் பெயரிட்டழைத்தாலென்ன? பெயரிலே என்ன இருக்கிறது? எங்கும் இருக்கின்ற, எல்லாருக்கும் தேவையாயிருக்கின்ற நீரை, சிலர் ஜலம் என்கிறார்கள்; சிலர் பானி என்கிறார்கள்; சிலர் வாட்டர் என்கிறார்கள். இப்படிப் பல பெயர்களிட்டழைப்பதினால், அந்த நீர், பல நீர்களாகி விடாதல்லவா? அதனுடைய தன்மையும் மாறா தல்லவா?

நிலையாயுள்ள அந்த ஒன்று – அந்தப் பரம்பொருள் – எல்லா ஜீவராசிகளிடத்திலும் சிறு பொறியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால் எல்லா ஜீவராசிகளும் அந்தப் பரம்பொருளின் – அந்த ஒரு கடவுளின் – குழந்தைகள். எப்படி ஒரு தாயின் வயிற்றிலே பிறந்தவர்கள் அத்தனை பேரும் சகோதரர்களோ அப்படியே ஒரு கடவுளின் குழந்தைகளான அத்தனை கோடி ஜீவராசிகளும் – ஆம், கோடானுகோடி ஜீவராசிகளும் – சகோதரர்கள்.

இத்தகைய உண்மைகளையே எல்லோருக்கும் உணர்த்தி வந்தனர் இந்தியாவிலே தோன்றிய மகா புருஷர்கள். இவர்களுடைய வாக்கிலிருந்து உதித்த எந்த மணிமொழியை வேண்டுமானாலும் கேளுங்கள்; இவர்கள் புரிந்த எந்த ஒரு செயலை வேண்டுமானாலும் பரிசீலனை செய்து பாருங்கள்; அவற்றில் இந்த உண்மைகள் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

இந்த உண்மைகளை உணர்ந்திருந்தமையாலும், பிறருக்கு உணர்த்தி வந்தமையாலும், இவர்கள், யாரையும் தங்கள் ஆதிக்கத்திற்குக் கட்டுப் படுத்த விரும்பவில்லை; தங்களுடைய அறிவுக்குக் கூட மற்றவர்களை அடிமைப்படுத்தக் கூடாதென்று கருதினார்கள்; தங்களுடைய உபதேசங்களுக்கு இணங்கி நடக்க வேண்டுமென்று யாரையும் கட்டாயப்படுத்தியது கிடையாது. இந்தியாவில் தோன்றிய மகான்களிடத்திலே காணப்பெறுகின்ற விசேஷமான அமிசம் இது.

இந்த மகான்களின் வரிசையிலே வந்தவர்தான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர். பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக் காலத்தில் இவர் வருகை இந்தியாவுக்கு அவசியமாயிருந்தது. எப்படி அவசியமாயிருந்த தென்பதைப் பற்றிச் சிறிது விளக்குவோம்.

பதினெட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்தே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நன்றாக வேரூன்றத் தொடங்கி விட்டது. ஆங்கிலேயர்களுடைய நிருவாகத் திறமை, கல்வி முறை, எண்ணப்போக்கு இவைகளில் இந்தியர்களுக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட ஆரம்பித்தது. அன்றாட விவகாரங்களில் ஆங்கில பாஷையை உபயோகிப்பதும், ஆங்கில முறைகளைப் பின்பற்றுவதும், ஆங்கில அரசாங்கத்தின் கீழ் உத்தியோகம் வகிப்பதும் கௌரவமாகக் கருதப் பட்டன. உழுதுண்டு வாழ்வதே வாழ்வு என்ற எண்ணத்திற்குப் பதில் உத்தியோகம் புருஷலட்சணம் என்ற எண்ணம், கிராமங்களிலே வசித்து வந்த மத்தியதர வகுப்பின ரிடத்தில் பரவத் தொடங்கியது. இதன் விளைவாகக் கிராமங்களின் செல்வாக்கு குன்றி வந்தது; நகரங்களுக்குப் புதிய வாழ்வு பிறந்தது.

நாட்டிலே ஆங்கிலம் பயிலுவிக்கும் கல்விச் சாலைகள் அதிகரித்து வந்தன. இந்தக் கல்விச்சாலைகளில் பயின்ற இளைஞர்கள், இந்திய உடலும் ஆங்கில உள்ளமும் படைத்தவராயினர். மேனாட்டிலிருந்து வந்த எந்த ஒரு கருத்தையும், எந்த ஒரு கொள்கையையும் கைகொட்டி வரவேற்றனர். அப்படி வரவேற்றதோடல்லாமல், இந்தியாவின் பழமையைப் பரிகசிக்கவும் தலைப்பட்டனர். இந்தியாவுக்கென்று தனியான, நாம் பெருமைப்படக்கூடிய ஒரு கலாசார பரம்பரை இருக்கிறதா, நமது முன்னோர்களுக்கு லௌகிக வாழ்க்கை யென்பது ஏதேனும் தெரியுமா என்று இப்படியெல்லாம் கேட்கலாயினர். இனி நாம் இந்த நாகரிக உலகத்தில் மற்ற நாட்டினரைப் போல் வாழ வேண்டுமானால், நமது முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை; மேனாட்டினர் செல்லும் பாதையிலே, அவர்கள் கோலும் வழியிலே செல்ல வேண்டும்; இவை போன்ற எண்ணங்கள் இவர்களை ஆட்கொண்டன.

மற்றும் பதினெட்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மேனாட்டில் பரவி வந்த உலகாயதக் கொள்கைகள் இந்தியாவிலும் பிரவேசித்தன. அந்தக் கொள்கைகளை ஆதரித்து எழுதப் பெற்ற நூல்களை இந்திய இளைஞர்கள் படித்தனர். படித்துவிட்டு, கடவுள் ஒருவர் உண்டா, அப்படி உண்டானால் அவரை அறிவினால் அறிய முடியுமா, மதம் வாழ்க்கைக்கு அவசியமா என்பன போன்ற கேள்விகளைக் கேட்க முற்பட்டனர். நாதிகம், மெதுவாக இவர்கள் மனதிலே முளைவிட்டது. மேனாட்டின் மீது இவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு ஆர்வத்துடனும் பக்தியுடனும் தங்கள் பார்வையைச் செலுத்தினரோ அவ்வளவுக் கவ்வளவு வேகமாக, தாய் நாட்டின் மீதும் அதன் புராதனத்தின் மீதும் இவர்கள் கொண்டிருந்த பிடிப்பானது தளர்ந்து வந்தது.

ஆங்கிலம் பயிலுவிக்கும் கல்விச்சாலைகள் நாட்டில் அதிகரித்து வந்தன என்று மேலே சொன்னோமல்லவா, இதற்கு முக்கிய காரணமா யிருந்தவர்கள் கிறிஸ்துவப் பாதிரிமார்கள். இவர்கள் ஆங்கிலக் கல்வி யோடு கிறிஸ்துவ மதத்தையும் சேர்த்துப் பரப்பினர். கல்விக்காக இவர்கள் செய்த சேவையை யாராலும் பாராட்டாமலிருக்க முடியாது; அதனை யாரும் மறக்கவும் முடியாது. அதற்காக இவர்களுக்கு இந்தியா என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புகிற உற்சாகத்தில் என்பதற்குப் பதில் திணிக்கிற உற்சாகத்தில் என்று சொன்னாலும் பொருந்தும். – பிற மதங் களைக் கண்டபடி தூற்றினர்; கிறிஸ்துவ ரல்லாதாருக்குப் பாவத்தினின்று விடுதலையே கிடையாதென்கிற மாதிரியாகப் பிரசாரஞ் செய்தனர்.

இவர்களுடைய பிரசாரம், ஜனங்களுடைய மனதில், சிறப்பாக ஆங்கிலம் படித்த இளைஞர்களின் மனதில் மெது மெதுவாகப் படிந்து வந்தது. இந்தப் பாதிரிமார்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு எப்பொழுதும் எவ்வகையிலும் கிடைத்து வந்தது. இந்த ஆதரவை வைத்துக் கொண்டு இவர்கள் கல்விச் சாலைகளென்ன, ஆஸ்பத்திரிக ளென்ன, ஆகிய இவைகளை ஆங்காங்கு நிறுவினர்; பத்திரிகைகள் நடத்தினர்; சுதேச பாஷைகளில் பல நூல்களை வெளியிட்டனர். தவிர, இந்தப் பாதிரிமார்கள், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக எவ்வித கஷ்டங்களையும் சகித்துக் கொண்டார்கள்; பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்; இனிய பேச்சுக்களினாலும் அன்பான உபசரணைகளினாலும் ஜனங்களைத் தங்கள் வசப்படுத்தினார்கள். இவையெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு ஜன சமுதாயத்திலே ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தச் செல்வாக்கின் பயனாக இவர்களுடைய மதப் பிரசாரத்திற்கு ஜனங்கள், சிறப்பாக மேலே சொன்ன மாதிரி ஆங்கிலம் படித்த இளைஞர்கள், சுலபமாக ஈடுபடலானார்கள்.

இங்ஙனம் இவர்கள் ஆங்கிலக் கல்வி பயின்றதன் விளைவாக வும், கிறிஸ்துவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதன் காரணமாகவும், இரண்டுங் கெட்ட நிலையை அடைந்தனர். இந்தியாவின் புராதனப் பண்பாடுகள் இவர்களிடத்திலிருந்து அகன்றன. மேனாட்டு நவீனக் கோட்பாடுகளை இவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின் புராதனத்திற்கு இவர்கள் அந்நியர்களாயினர். அப்படியே மேனாட்டு நவீனத்திற்கும் இவர்கள் அந்நியர்களாயினர். இந்தக் காலத்து நிலையைப் பற்றி ஸ்ரீ கேசவ சந்திர சேனர் ஒரு பிரசங்கத்தில் கூறுகிறார்:-

இந்தியாவின் புராதன தாபனங்களை நாம் அழித்து விட்டோம். ஆனால் இந்த அழிவினின்று நாம் ஒரு புதிய வாழ்வு கோலும் விஷயத்தில் வெற்றி பெறவில்லை… ஆங்கிலம் படிக்காத நமது நாட்டாரே, ஆங்கிலம் படித்தவர்களிடத்தில் பல குறைகள் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர். நம்முடைய படிப்பை அவர்கள் வியந்து போற்றுகின்றனர்; ஆனால் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் இளைஞர்கள், முந்திய தலைமுறையினரைப் போல் யோக்கியதை யுடையவர்களாகவோ, ஒழுக்கமுடையவர்களாகவோ இல்லை யென்று கூறுகின்றனர்.

சுருக்கமாக, பதினெட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்தி லிருந்து பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலம் வரையுள்ள சுமார் நூறு வருஷ காலத்தில் இந்தியாவின் கலைகள், நாகரிகம் முதலிய யாவும் மிகவும் தாழ்வான திதியை அடைந்து கொண்டு வந்தன. எந்த ஆத்மீக அடிப்படை மீது ஹிந்து சமுதாயம் நிர்மாணிக்கப் பட்டிருந்ததோ, எந்த ஆத்மீக அடிப்படை ஹிந்து சமுதாயத்தை இத்தனை வருஷ காலமாகக் காப்பாற்றிக் கொண்டு வந்ததோ அந்த ஆத்மீக அடிப்படை தகர்ந்து விடும் போலிருந்தது.

ஆனால் நல்ல வேளையாக – இதனைக் கடவுள் சித்தம் என்று சொன்னாலும் சரி, ஹிந்து தர்மத்தின் அழியாத் தன்மை யென்று சொன்னாலும் சரி, – இந்த ஆபத்து ஏற்படவில்லை. இதற்கு முன் ஹிந்து ஜாதிக்கு இந்த மாதிரியான ஆபத்துகள் எத்தனையோ தடவை ஏற்பட்டிருக் கின்றனவல்லவா, அப்பொழுதெல்லாம் ஹிந்து தர்மத்தினிடமுள்ள எந்த ஜீவசக்தியானது ஹிந்து சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததோ அதே ஜீவசக்திதான் இப்பொழுதும் ஹிந்து சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும்.

ஹிந்து சமுதாயத்தைப் புனர் நிர்மாணம் செய்வதையும், ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட சில இயக்கங்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே தோன்றத் தலைப்பட்டன. பிரும்ம சமாஜம் என்ன, ஆரிய சமாஜம் என்ன, பிரும்மஞான சபை (தியஸாபிகல் சொஸைட்டி) என்ன, இந்த மாதிரியான இயக்கங்கள் தோன்றி ஹிந்து சமுதாயத்தின் மீது படிந்திருந்த தூசு மாசுகளை அப்புறப்படுத்தின; கிறிதுவப் பாதிரிமார்கள், ஹிந்து மதத்தைப் பல விதமாகத் தாக்கிப் பிரசாரஞ் செய்து வந்தார்களல்லவா, அந்தப் பிரசாரத்திற்கு இரையாகி விடாதபடி ஹிந்து மக்களைத் தடுத்தன. மதச் சீர்திருத்த இயக்கங்களாகவும் சமூதாயச் சீர்திருத்த இயக்கங்களாகவும் தோன்றி இந்த அளவுக்கு இவை செய்த வேலைகளை யாருமே பாராட்ட வேண்டும். ராஜாராம் மோகனராய் (1774-1833), கேசவ சந்திர சேனர் (1838-1884), தயானந்த சரவதி (1827-1883), ப்ளாவ்ட்கி அம்மையார் (1831-1891), ஆல்க்காட்துரை (1832-1907) இப்படிப் பட்டவர்களெல்லோரும் இந்தக் காலத்தில் அரும்பாடு பட்டனர். இவர்கள் செய்த வேலைகளை இவர்கள் காலத்துக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கவேண்டும். அப்பொழுது தான் இவர்கள் ஆற்றிய தொண்டின் அருமை தெரியும். ஒரு பக்கத்தில் கிறிதுவப் பாதிரிமார்களின் எதிர்ப்பு, மற்றொரு பக்கத்தில் பழமையிலே ஊறிப் போயிருந்த வைதிகர்களின் துவேஷம், இன்னொரு பக்கத்தில் புதுமையில் அபாரமோகங் கொண்டிருந்த ஆங்கிலம் படித்த இளைஞர்களின் பரிகாசம், ஆகிய இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியில் இருந்து கொண்டு இவர்கள் வேலை செய்தார்கள். இவர்கள் ஹிந்து சமூகத்தின் நன்றிக்கு என்றும் உரியவர்கள்.

ஆனால் இவர்கள் ஹிந்து மதத்தின் ஓரோர் அமிசத்தை எடுத்துக் கொண்டு அதை மட்டும் சீர் திருத்தினர். ஹிந்து மதமானது பல கிளைகளையுடைய ஒரு மரம்; பல துறைகளையுடைய ஒரு தடாகம். இந்தப் பேருண்மையைக் காண இவர்கள் தவறிவிட்டார்கள். பரம்பொருள் ஒன்றுதான். அது நாமரூப மற்றது என்ற உண்மையை மட்டும் ஒப்புக் கொண்டு, அதனைச் சுற்றிக் காலக்கிரமத்தில் எழுந்த பல கோட்பாடுகள், எண்ணங்கள் முதலியவற்றை யெல்லாம் வெறும் மூடக்கொள்கைகள், அர்த்த மற்றவை யென்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். ஹிந்து மதத்தை இவர்கள் மொத்தமாகப் பார்க்கவில்லை. அதன் வேற்றுமைகளுக்குக் கீழேயுள்ள ஒற்றுமையைக் காணவில்லை.

இந்த நிலைமையில், ஹிந்து மதத்தின் பல்வேறு அமிசங்களையும் ஒற்றுமைப் படுத்திக் காட்டி, அதன் பழமையிலே பொதிந்துள்ள உண்மையை உணர்த்தக் கூடிய ஒரு மகா புருஷர் தேவையா யிருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தோன்றியவர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *