ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி
வெ. சாமிநாத சர்மா

4. பல கோணங்களில்

அச்சம் இலர், பாவம் இலர், கேடும் இலர்,
அடியார் நிச்சம் உறுநோயும் இலர்………..
திருப்பாதம் பணிவாரே.”

– சம்பந்தர்

மகான்கள் பல பட்டைகளையுடைய வைரம் போன்றவர்கள். எந்தப் பட்டையிலிருந்து பார்த்தாலும் அந்த வைரம் பிரகாசிப்பதைப் போல், எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் மகான்களுடைய மகத்துவம் நமக்குப் புலனாகின்றது. ஏனென்றால் இவர்களுடைய வாழ்க்கை பூரண வாழ்க்கை. வாழ்க்கையின் ஓர் அமிசத்தை மட்டும் தொட்டுவிட்டு இவர்கள் மறைந்து போவதில்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கையின் எந்த அமிசத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அந்த அமிசம் நிறைவுடையதாகவே இருக்கிறது. எல்லாக் கால நிலைகளுக்கும் பொருந்துகிறவர்களாயிருப்பதைப் போல் இவர்கள் எல்லோருடைய மனோ நிலைகளுக்கும் பொருந்துகிறவர்களா யிருக்கிறார்கள். பக்தனுக்குப் பக்தனாகவும் ஞானிக்கு ஞானியாகவும் இப்படி அவரவருக்கும் அவரவராகவே காட்சியளிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் எல்லோருடைய வாழ்க்கையும் கலந்திருக்கிறது; இவர்களுடைய உப தேசங்களில் எல்லோருக்கும் பயன்படும்படியான மணிகள் இருக்கின்றன. இதனால் இவர்கள் எக்காலத்திற்கும் வழிகாட்டிகளா யிருப்பதைப் போல் எல்லோருக்கும் வழிகாட்டிகளா யிருக்கிறார்கள். இங்ஙனம் எக்காலத் திற்கும் எல்லோருக்கும் சொந்தமாயிருப்பத னால், இவர்களுடைய சொல்லும் செயலும் சில சமங்களில் முரண்பாடுடையனவாகத் தென்படுகின்றன. ஆனால் இந்த முரண்பாட்டில்தான் இவர்களுடைய மகத்துவம் இருக்கிறது. கடவுளின் லட்சணம் பல முரண்பாடுகளுடையது என்பது ஓர் அறிஞருடைய வாக்கு. அப்படியானால் கடவுளின் அமிசமா யிருக்கப்பட்ட மகான்களும் முரண்பாடுடையவர்களாக இருப்பது சகஜந்தானே?

மகான்களுடைய வாழ்க்கை ஒரே அடிப்படையின் மீது தான் அமைந்திருக்கிறது. இதனால் எந்த மகானையும் எந்த மகானுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது சுலப சாத்தியமாகிறது. புத்தர், ஸாக்ரட்டீஸ், கன்பூஷியஸ், யேசுநாதர், பன்னிரண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சங்கரர், ராமானுஜர், சைதன்யர், துக்காராம், காந்தி ஆகிய இவர்களில், இவர்கள் போல் நமது நாட்டிலும் மற்ற நாடுகளிலும் உதித்த இன்னும் பலரில், யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு யாருடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஸ்ரீ ராம கிருஷ்ணருடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஆச்சரியகரமான ஒற்றுமைகள் பலவற்றைக் காண்பீர்கள். ஆனால் இந்த ஒப்பிட்டுப் பார்க்கிற வேலையில், வாசகர்களே, இப்பொழுது நீங்கள் இறங்க வேண்டாம். அது தனியாகச் செய்ய வேண்டிய வேலை. இப்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சந்நிதானத்திற்கு வாருங்கள். இவர் எந்தெந்த விதமாகத் தோற்றமளிக்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படிப் பார்க்கிற போது, மற்ற மகான்களுடைய தரிசனமும் உங்களுக்கு ஏகதேசமாகக் கிடைக்கும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் எப்படி எல்லா மதங்களுக்கும் உரியவராக இருக்கிறாரோ அப்படியே எல்லா ஆசிரமங்களுக்கும் ஏற்றவராக இருக்கிறார். இவர் ஒரு பிரும்மசாரியா? ஆம்; கிருகஸ்தரா? ஆம்; வானப் பிரஸ்தரா? ஆம்; சந்நியாசியா? ஆம் எல்லாக் கேள்விகளுக்கும் ஆம் என்ற பதில்தான் இவருடைய வாழ்க்கையிலிருந்து கிடைக்கிறது. அதாவது இவர் பிரும்மசாரிகளுக்கு பிரும்மசாரியாகவும், கிருகஸ்தர்களுக்கு கிருகஸ்த ராகவும், வானப் பிரதர்களுக்கு வானப் பிரதராகவும், சந்நியாசிகளுக்கு சந்நியாசியாகவும் இருக்கிறார்; அவரவர்களுக்கும் அவரவர் நிலையிலிருந்து வழிகாட்டியாக இருக்கிறார் என்பதே இதன் தாத்பரியம்.

இங்ஙனம் எல்லா ஆசிரமங்களுக்கும் பொருந்துகிற விதமாக இவருடைய வாழ்க்கை அமைந்திருந்த போதிலும், மொத்தமாகப் பார்க்கிறபோது, இவருடைய வாழ்க்கை முற்றுந் துறந்த முனிவர் வாழ்க்கையேயாகும். இவருடைய துறவு பரிபூரணமானது; எவ்வித கலப்பும் இல்லாதது. ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு முன்னால் எத்தனையோ பேர் உலகத்திற்காக உலகத்தினைத் துறந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் மகான்கள்தான்; ஆட்சேபமில்லை. அனால் அவர்களுடைய துறவுக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய துறவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக, புத்தர் இல்லறத்திலிருந்து விட்டு பிறகு துறவறத்தை மேற்கொண்டார்; சங்கரர் இல்லறத்திற்குள் பிரவேசியாமலே துறவறத்திற்குள் நுழைந்து விட்டார்; திருநீலகண்ட நாயனார், தாம் எடுத்துக்கொண்ட ஒரு பிரதிக்ஞைக்காக இல்லறத்திலிருந்து விலகி யிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரோ இல்லறத்திலிருந்து கொண்டே துறவியாயிருந்தார். இவருடைய துறவு, நெருப்பின் மத்தியிலே குளிர்ச்சியா யிருக்கிற மாதிரி; சூரியன் முன்னர் பனிமலை கரையாமலிருக்கிற மாதிரி.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதாமணி தேவியாருடன் எத்தகைய தொடர்புடையவரா யிருந்தாரென்பதைப் பற்றிச் சொல்வதற்குமுன், இவர் உள்ளத்தில் ஆசையென்னும் பாசி படராமலே இருந்ததைப் பற்றிச் சில உதாரணங்களைக் காட்ட விரும்புகிறோம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு பிடி பொன்னும் ஒரு பிடி மண்ணும் ஒன்றுதான். ஒரு நாள் நான் பஞ்சவடிக் கருகில் கங்கைக்கரையின் மீது உட்கார்ந்து, ஒரு கையில் ஒரு ரூபாயும் மற்றொரு கையில் களி மண்ணையும் வைத்துக் கொண்டு இந்த ரூபாயும் மண்தான், இந்த மண்ணும் ரூபாய்தான் என்று சொல்லி இரண்டையும் கங்கையில் வீசி எறிந்தேன் என்று இவரே கூறியிருக்கிறார். செம்பு, பித்தளை முதலிய உலோகங்களினாலாய பாத்திரங்களைத் தொட்டாலே இவர் உடல் பூராவும் வலிக்கும். இந்தமாதிரி பல சமயங்களில் துன்பப் பட்டிருக்கிறார். உலோகங்களினாலாய பாத்திரங்க ளென்ன, எந்த ஒரு பொருளையும் தமது என்று இவர் வைத்துக் கொள்ளாதவரா யிருந்தார். அப்படி யாரேனும் நிர்ப்பந்தப்படுத்தி இவரிடத்தில் ஒரு பொருளைக் கொடுப்பார் களானால் இவர் படும் அவஸ்தையைச் சொல்லிமுடியாது. இவருடைய அனுபவங்களில் சிலவற்றை இவர் வாக்கு மூலமாகவே கேளுங்கள்:- நான் ஏதேனும் ஒரு நாணயத்தைத் தொட்டேனாகில் என் கை முறுக்கிக் கொண்டு விடுகிறது; என் மூச்சு நின்றுவிடுகிறது. இன்னும், நான் உடுத்தி யிருக்கும் வேஷ்டியில் ஒரு சிறிய முடிச்சைக் கட்டுவேனாகில் என்னால் மூச்சு விடமுடியாமல் போய் விடுகிறது. அந்த முடிச்சை அவிழ்க்காத வரையில் என் மூச்சு நின்றே போய் விடுகிறது……. ஒரு நாள் நான் சம்பு மல்லிக்கின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பொழுது எனக்கு வயிற்றுத் தொந்திரவு அதிகமாயிருந்தது. அவ்வப் பொழுது கொஞ்சம் அபினியை உட்கொண்டு வாருங்கள், வயிற்றுத் தொந்திரவு நீங்கிவிடுமென்று சொல்லி அவர் கொஞ்சம் அபினியை என் வேஷ்டியில் வைத்து முடிச்சுப் போட்டு அனுப்பினார். சிறிது தூரம் வந்தேன். மேலே செல்ல எனக்கு வழி தெரியவில்லை. தட்டுத் தடுமாறிக் கொண் டிருந்தேன். முடிச்சை அவிழ்த்து அபினியை எறிந்த பிறகுதான் என்னால் மேற்கொண்டு செல்ல முடிந்தது…….. ஒரு நாள் காமர்ப் புகூரில் சில மாம்பழங்களைப் பொறுக்கி யெடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். ஆனால் என்னால் வழி நடக்க முடியவில்லை. ஒரே இடத்திலேயே நின்றுவிட்டேன். கொண்டுவந்த மாம்பழங்களை என்னிடமிருந்து அப்புறப் படுத்திக் கொண்ட பிறகுதான் என்னால் மேற்கொண்டு செல்ல முடிந்தது.

மார்வாரி வகுப்பைச் சேர்ந்த லட்சுமி நாராயணர் என்பவர் ஒரு வேதாந்தி. அடிக்கடி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வந்து போவார். ஒரு நாள் இவருடைய படுக்கையின் மீதிருந்த விரிப்பு அழுக்கடைந் திருந்ததைப் பார்த்துவிட்டு அந்த மார்வாரி கனவான் உங்கள் பெயரால் பதினாயிரம் ரூபாய் பாங்கியில் போட்டு வைக்கிறேன். அதிலிருந்து கிடைக்கும் வட்டியை உங்கள் செலவுக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்றார். இதைக்கேட்ட ஸ்ரீ ராம கிருஷ்ணருக்குத் தடிகொண்டு அடித்தமாதிரி இருந்தது; தன் வசமற்றவரானார்.

இவைகளினால் என்ன தெரிகிறதென்றால் ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு உடைமை உணர்ச்சி என்பது லவலேசமும் இல்லாம லிருந்தது. ஆம்; நான் என்பது அற்றுவிட்ட இடத்தில் எனது எனக்கு என்பது எப்படி இருக்கும்?

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உத்தமமான கணவர். ஒரு புருஷன் தன் திரீயினிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு இவர் வழி காட்டியாயிருந்தார். ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்கு அவ்வப்பொழுது, ஒரு குடும்பத்தை எப்படி ஒழுங்காக நடத்துவது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்து வந்தார். அவருக்கு – ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்கு – பரிபூரண உரிமை அளித்திருந்தார். இதனால் அந்த அம்மையாரும் தமது கடமைகளை உணர்ந்து செய்து வந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சிஷ்யர்களிடம் வேடிக்கையாகச் சொல்வார்:- நான் விவாகம் செய்துகொண்டு என்ன பிரயோஜனம் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் திடமில்லாத தேகத்தைக் கவனித்துக் கொள்வதற்கு எனக்கு மனைவி இல்லாதிருந்தால் என் கதி என்னவாயிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். என் ஆகார விஷயங்களில் யார் இவ்வளவு சிரத்தையோடு செய்யமுடியும்?

ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்குக் கணவராக இருந்ததோடு குருவாகவும் இருந்தார். அப்படியே ஸ்ரீ சாரதாமணி தேவியார், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு மனைவியாக இருந்ததோடு தாயாகவும் இருந்தார். இருவருக்குமிடையே இருந்த உறவு மகா அற்புதமானது. உலக சரித்திரத்தில் இந்த மாதிரியான தாம்பத்ய உறவை வேறெங்கும் காணமுடியாது? இருவருடைய உறவும் பால் உணர்ச்சியற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதாமணி தேவியை காளி மாதாவாகக் கண்டாரே தவிர சாதாரண ஸ்திரீயாகக் காணவில்லை; அப்படிப்பட்ட கருத்து இவர் மனத்தில் ஒரு கணமும் உதித்ததில்லை. ஒரு நாள் இரவு ஸ்ரீ சாரதாமணி தேவியார் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய திருவடிகளை வருடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அம்மையார் தமது பர்த்தாவை நோக்கி தாங்கள் என்னை எவ்வாறு கருதுகிறீர்கள்? என்று கேட்டார். என்னை ஈன்றவள் ஜெகன்மாதா. அவளே இப்பொழுது இந்த வடிவம் தாங்கி எனக்குச் சிசுருஷை செய்து கொண்டிருக்கிறாள் என்று உடனே கூறினார். என்ன உயர்ந்த நிலை! இப்படிக்கூறியது மட்டுமல்ல, ஸ்ரீ சாரதா தேவியை, காளிமா தேவியாகக் கருதி, தந்திர சாதிரங்களில் கூறியுள்ளபடி அவருக்குப் பல தடவைகளில் பூஜையும் செய்திருக்கிறார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதாமணி தேவியைத் தாயாராகக் கருதியது போல் ஸ்ரீ சாரதா தேவியாரும் ஸ்ரீ ராமகிருஷ்ணரைத் தாயாராகக் கருதினார். இது தான் வேடிக்கை. ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது உடலைக் கழற்றி எறிந்தபோது ஸ்ரீ சாரதா தேவியார் தாயே, தாயே, என்னை விட்டு விட்டு எங்கே சென்று விட்டீர்? என்று கதறியது இப்பொழுதும் நமது உள்ளத்தை உருக்குகிறது. இருவரும் உத்தமமான காதலர்கள். ஆனால் இவர்களுடைய காதல் உடலைப் பற்றியதன்று; ஆத்மாவைப் பற்றியது. பிளேட்டோ கூறிய ஆத்மீகக் காதல் இருக்கிறதே, அது வெறும் கற்பனையல்ல, அனுபவ சாத்திய மானது என்பதை ஸ்ரீ ராமகிருஷ்ண – சாரதாமணி தாம்பத்ய வாழ்க்கை நிரூபிக்கிறது.

உலகத்திலே தாய்மார்களால் மேன்மையடைந்த புத்திரர்கள் உண்டு. ஆனால் மனைவிமார்களால் அமர நிலை யடைந்தவர் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒருவர் என்று சொன்னால் அஃது அவருடைய பெருமைக்கு எந்த விதத்திலும் இழுக்காகாது. ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய தெய்வீக வாழ்வு சோபித மடைவதற்கு ஸ்ரீ சாரதா தேவியார் ஒரு தூண்டா விளக்குப் போலிருந்தார் என்று சுருக்கமாகச் சொல்வதே பொருத்தமா யிருக்கும்.

இங்ஙனம் ஸ்ரீ சாரதாமணி தேவியாருடன் ஆத்மீகக் காதல் வாழ்க்கை நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாதாரண ரீதியில் குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்குச் சிறந்த வழி காட்டியாயிருக்கிறார். இல்லற வாழ்க்கையை இவர் அலட்சியப் படுத்திப் பேசவில்லை. அதற்கு மாறாக அதைச் சிறப்பித்துப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். கடவுள் வாழ்க்கைக்குக் குடும்ப வாழ்க்கை முரண்பட்ட தல்ல என்பது இவருடைய கருத்து. குடும்பப் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்புவித்துவிட்டு, தான் கடவுளை நாடிச் செல்வதாகக் கூறுகிறவன் ஒரு கோழை, கடமையைச் செய்யத் தவறியவன் என்பது இவருடைய அபிப்பிராயம். தன் குடும்பப் பொறுப்பை மறந்து விட்டு அவர்களை மாமியார் வீட்டுப் பாதுகாப்பில் விட்டுச் செல்வது தன்மதிப்பற்ற செயலாகும் என்று இவர் ஓரிடத்தில் கூறியிருக்கிறார். கிருகஸ்தர்கள், கோட்டைக் குள்ளிருந்து சண்டை போடும் வீரர்கள்; சந்நியாசிகள், திறந்த மைதானத்திலிருந்து கொண்டு சண்டை போடும் வீரர்கள் என்று இவர் இல்லறத்தையும் துறவறத்தையும் இணைத்துச் சொல்வது, இரண்டின் இன்றியமையாத் தன்மையை எடுத்துக் காட்டுவது, எவ்வளவு ஆச்சரியமா யிருக்கிறது? வீரர் யார் என்பதற்கு இவர் கூறும் லட்சணமே வேறு. சித்தத்தைச் சிவன்பாலிருத்தி விட்டு, உலகத்தில் தான் செய்ய வேண்டிய கடமைகளை எவன் ஒழுங்காகச் செய்து கொண்டு வருகிறானோ அவன்தான் நிஜமான வீரன். தலையிலே ஒரு பெரிய சுமையை வைத்துக் கொண்டு ஒரு கலியாண ஊர்வலத்தைப் பார்ப்பது ஒரு பலசாலியினால் தானே முடியும்? என்று இவர் கேட்கிறார்.

தட்சிணேசுவரத்தில் இவர் கடவுட் பித்தராய் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தமது உறவினர்களிடத்தில் அதிக வாஞ்சை காட்டி வந்தார்; அவர்களுடைய சுகதுக்கங்களில் கலந்து கொண்டார். ஒரு சந்நியாசிக்கு இது பொருந்துமா என்று சிலர் கேட்கலாம். ஆனால் பூரணத் துறவு பூண்டவர்களுடைய இருதயத் திலே உறவினர் என்றும் அந்நியர் என்றும் வேற்றுமையே உதிப்பதில்லை. அவர்கள், எல்லோரிடத்திலும் கடவுளைக் காண்கிறார்கள்; எல்லோரிடத்திலும் ஒரே விதமான அன்பு செலுத்துகிறார்கள். அவர்கள் உறவினர்களை அந்நியர்களாகக் கருதுகிறார்கள்; அப்படியே அந்நியர்களை உறவினர்களாகக் கருதுகிறார்கள். புத்தர் பிரானும் சைதன்ய சுவாமிகளும் ஞானோதயம் பெற்ற பிறகு, தங்கள் உற்றார் உறவினரிடத்தில் அன்பு பாராட்டி வந்தனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது தாயாரிடத்தில் பரம பக்தியுடையவர். அந்த அம்மையார்-சந்திரமணிதேவி என்பது அந்த அம்மாளுடைய பெயர் என்பது நேயர்களுக்கு ஞாபக மிருக்கலாம்.-தட்சிணேசுவரத்திற்கு வந்து கங்காதீர வாசம் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய அந்திம காலம் வரை அவருக்கு வேண்டிய பணிவிடைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தவறாது செய்து வந்தார். அவருடைய சிறிய சிறிய தேவைகளையும் கவனித்து ஆவன செய்வார். தாயன்பானது கடவுள் அன்புக்குச் சமமானது என்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்குணர்ந்தவர். உலகத்தைத் துறந்த மகான்கள் யாருமே தங்கள் தாயைத் துறக்கவில்லை. சைதன்யர் துறவு பூண்டு விட்டதைக் கேட்ட அவருடைய தாயார் மிகவும் வருத்தமடைந் திருந்தார். அதை யறிந்த சைதன்யர் அவரிடம் சென்று அம்மா, வருத்தப்படாதீர்கள்; நான் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் என்று ஆறுதல் கூறினார். முற்றத் துறந்த பட்டினத்தடிகளும் சங்கரரும் தங்கள் தங்கள் தாய்மாரிடத்தில் பரம பக்தியுடனேயே நடந்து வந்தனர். யானு மிட்ட தீ மூள்க மூள்கவே என்ற பட்டினத்தடிகளின் வாக்கு இச் சந்தர்ப்பத்தில் நமது நினைவுக்கு வருகிறதல்லவா? இவர்களைப் போலவே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் தமது தாய்க்கு மகனாக இருந்து, தாயாரிடத்தில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதற்குச் சிறந்த வழி காட்டியா யிருந்தார்.

இல்லற வாழ்க்கை இனிது நடைபெற வேண்டுமானால் பெண்ணும் பொன்னும் அவசியமென்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்கு உணர்ந்திருந்தார். உலக வாழ்க்கையில் பணம் அவசிய மானதுதான்; ஆனால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிராதே. வருவதைக் கொண்டு திருப்தி யடைவதுதான் நல்லது என்றும், பணமிருந்தால் ஒருவன் உண்ணவும், உடுக்கவும், வீடு கட்டிக் கொண்டு வசிக்கவும், கடவுளைத் தொழவும், அடியார்களுக்குத் தொண்டு செய்யவும், ஏழைகளை ஆதரிக்கவும் முடிகிறது. இந்த மாதிரியான வழிகளில்தான் பணத்தை உபயோகிக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கோ, தேக சுகங்களுக்காகவோ, சமுதாயத்தில் ஓர் அந்ததைப் பெறவோ பணம் இருக்கவில்லை என்றும் இவர் சொல்லியிருக்கிறார். பணத்தின் உபயோகத்தைப் பற்றி இதை விட அழகாகவும் சுருக்கமாகவும் எந்தப் பொருளாதார சாஸ்திரியாவது கூற முடியுமா? இதிலிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய அனுபவ ஞானம் நன்கு புலப்படும். சில மார்வாரி பக்தர்கள் தம்மைத் தரிசிக்க வந்தபோது அவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம் செய்கையில் வியாபாரத்தில் லாப நஷ்டங்கள் வரலாம்; ஆனால் எந்த விதத் திலும் வியாபாரத்தில் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியது இங்குச் சிந்திக்கத் தக்கது.

ஹெராக்ளீட்டஸ் என்ற கிரேக்க ஞானி அதிகமான புஸ்தகப் படிப்பினால் அறிவு உண்டாகாது என்று கூறினான். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் பல தடவைகளில் வலியுறுத்திச் சொல்லி யிருக்கிறார். வெறும் புஸ்தகப் படிப்பினால் மனிதன் வளர்ச்சி யடையமாட்டான். அதனால் அவனுக்கு நன்மை உண்டாகாது என்பது இவர் கருத்து. இந்தக் கருத்தை இவர், தமது கல்கத்தா வாசத்தின் போதே வெளியிட்டிருக்கிறார். பாரமார்த்திகத்தைப் பின்னணியாகக் கொள்ளாத புலமையை இவர் வெறுத்தார். கடவுளை அறிவதுதான் அறிவு; மற்றவையெல்லாம் அறிவாகாது, அறியாமையின் பாற்படும் என்று இவர் கூறியிருப்பது, இந்திய பரம்பரையான பண்பாட்டைச் சாரமாக எடுத்துச் சொல்வது போலிருக்கிறது. கேசவ சந்திரசேனர் ஓரிடத்தில் கூறுகிறார்:- இந்த நாட்டை-இந்தியாவை – புனருத்தாரணம் செய்யவேண்டுமானால், உங்களுடைய எல்லாச் சீர் திருத்த இயக்கங்களுக்கும் மதத்தை அடிப்படையாகக் கொள்ளுங்கள். ……………இந்தியாவுக்கு நீங்கள் ரெயில், தந்தி முதலிய லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான சௌகரியங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னர் அதற்கு உயிரைக் கொடுங்கள். உண்மையான ஆத்மீக வாழ்க்கையைக் கொடுங்கள்; வெறும் புஸ்தகப் படிப்பினால் நன்மை யுண்டாகாம லிருப்பது மட்டுமில்லை, அதனால் தீமையும் உண்டாகிறது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் கருதுகிறார். அதிகமான மதக் கிரந்தங்களைப் படித்து விடுவதனால் நன்மைக்குப் பதில் அதிகமான தீமையே உண்டாகிறது; மதக்கிரந்தங்களின் சாரத்தைத் தெரிந்து கொண் டிருந்தலே போதுமானது என்பது இவருடைய வாக்கு.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உண்மையான குரு. கடவுளையும் மனிதனையும் ஒன்று சேர்த்து வைக்கிறவர் தான் உண்மையான குரு என்ற தம்முடைய வாசகத்திற்குத் தாமே இலக்கியமாயிருந்து கொண்டு, தம்மை நாடிவந்த சிஷ்யர்களை கடவுள் நிலைக்கு அழைத்துக் கொண்டு போனார். அப்படி அழைத்துக் கொண்டு போகிறபோது, தம்மிஷ்டத்திற்கு, தம்முடைய பாதையில் அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க வில்லை; வர வேண்டுமென்று அவர்களைக் கட்டாயப்படுத்தவுமில்லை. அவரவருடைய வாழ்க்கை நிலைக்கும் மனோ நிலைக்கும் தகுந்தபடி அவர்களை வருமாறு செய்தார். தமது சிஷ்யர்கள் கடவுள் வாழ்க்கையை வாழவேண்டு மென்பதுதான் இவருடைய நோக்கமாயிருந்ததே தவிர, அவர்கள் எப்படி வாழவேண்டு மென்பது இவருடைய நோக்கமாயிருக்க வில்லை. இவருடைய சிஷ்யர்களிலே வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களு மிருந்தார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களை இவர் செய்யவில்லை; ஒரே வழியைக் கோலிக் காட்டவில்லை; யாரையும் அவரவருடைய வழியிலிருந்து விலகி வருமாறு கூறவில்லை. வயதானவர்களை இல்லறத்திலேயே இருக்குமாறு கூறினார்; இளைஞர்களைத் துறவறம் பூண்டு தொண்டு செய்யுமாறு கூறினார். இல்லறத்திலே ஈடுபட்டிருக்கிற தமது சிஷ்யர்களைப் பார்த்துச் சொல்வார்:- உலகத்தைத் துறப்பதனால் நீங்கள் அடையக்கூடிய லாபமென்ன? குடும்ப வாழ்க்கை ஒரு கோட்டை மாதிரி. மற்றும் ஞானமடைந் தவன் முக்தன். நான் பந்தத்திற்கு உட்பட்டிருக்கிறேன் என்று பைத்தியக்காரன்தான் சொல்வான். மனந்தானே எல்லாவற்றிற்கும் காரணம். அது பந்தமற்றிருக்குமானால் நீயும் பந்தமற்றிருப்பாய். நான் காட்டிலே இருந்தாலும் சரி நாட்டிலே இருந்தாலும் சரி எப்பொழுதும் பந்தத்திற்குட்பட்டிருப்பதில்லை. நான் கடவுளின் குழந்தை. ஆதலின் அரசர்களுக்கு அரசன். என்னை யார் பந்தத்திற்குட்படுத்த முடியும்? ……..நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறபோது, உங்கள் ஒரு கை வேலை செய்து கொண் டிருக்கட்டும்; மற்றொரு கை கடவுளின் பாதங்களைப் பிடித்துக் கொண்டிருக்கட்டும் வேலை முடிந்த பிறகு சும்மாயிருக்கிற சமயத்தில் அந்தப் பரந்தாமனின் இரண்டு பாத கமலங்களையும் உங்கள் இரு கைகளாலும் பற்றி உங்கள் இருதயத்திலே வைத்துக் கொள்ளுங்கள்.

லௌகிக எண்ணங்களினால் கறைப்படாத மனமுடைய தம்மை நாடிவந்த இளைஞர்களுக்கு இவர் காட்டிய வழி வேறு. இவர்களைத் தமது பிற்கால பாரமார்த்திக சந்ததிகளாகக் கருதினார்; அதற்குத் தகுந்தாற் போல் இவர்களைத் தயார் படுத்தினார். அஞ்ஞான இருட்டில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பாமரர்களுக்கு ஞான வெளிச்சம் காட்ட வேண்டிய இவர்களைப் பலவித பரிசோதனைகளுக்குட்படுத்தி நெருப்பிலே காய்ச்சப் பெற்ற தங்கம் போலாக்கினார். இவர்கள் தங்களுடைய முன்னேற்றத்தை நாடு கின்றவர்களல்லர்; மற்றவர்களுடைய முன்னேற்றத்தை நாடுகின்றவர். எனவே இவர்கள், தங்களை அழித்துக்கொண்டு மற்றவர்களுக்காக வாழ வேண்டும். கடின மார்க்கந்தான். ஆனால் இந்தியாவின் வருங்கால நல்வாழ்வுக்காக இத்தகைய ஒரு தொண்டர் கூட்டம் அவசியமானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்கு உணர்ந்தார். இந்த விஷயத்திலும் இவர் ஒரு சிறந்த தீர்க்கதரிசியாயிருந்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சிஷ்யர்களிடத்தில் ஒரு தாயைப் போல் நடந்து கொண்டார். அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பெரிதும் சிரத்தை காட்டுவார். அவர்களுடைய குறை நிறைகளை விசாரித்துத் தம்மாலியன்ற பரிகாரத்தைச் செய்வார். அவர்களுடைய சுக துக்கங்களிலே கலந்து கொள்வார். சிஷ்யர்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய முன்னிலையில் இருக்கிற போது பரம சந்தோஷத்தை யடைந்தவர்களா யிருப்பார்கள்.

இங்ஙனம் பலருக்கு இவர் குருவாயிருந்த போதிலும் இவர் தம்மைக் குரு என்று ஒரு பொழுதும் சொல்லிக் கொண்டது கிடையாது. தம்மை யாராவது குரு அல்லது எஜமானர் அல்லது தந்தை என்று அழைத்தால் தமது மனம் பெரிதும் புண்படுவதாக இவர் அடிக்கடி சொல்வ துண்டு. சச்சிதானந்தமாயிருக்கிற பரம் பொருள் ஒன்றுதான் உண்மையான குரு என்பது இவர் கருத்து. எல்லோரும் குருமார்களாக இருக்க வேண்டு மென்கிறார்கள். ஆனால் யாரும் சிஷ்யர்களாக இருக்க விரும்புவதில்லை என்கிறார் ஓரிடத்தில்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் உண்மையான ஒரு சிஷ்யராகவும் இருந்தார். பைரவி பிராம்மணி, ஜடதாரி, தோதாபுரி ஆகிய இவர்களிடத்தில், ஒரு சிறுபையன் எப்படி தன் பள்ளிக்கூட ஆசிரியரிடத்தில் நடந்து கொள்வானோ அப்படியே நடந்து கொண்டார். தோதாபுரியினுடைய பரிகாசம், பைரவி பிராம்மணியின் கோபம் எல்லாவற்றை யும் இவர் சகித்துக் கொண்டார். அவர்களிடத்தில் இவர் எவ்வித குறையையும் காண்பதில்லை. பைரவி பிராம்மணி இவரோடு சில வருஷகாலம் தங்கி யிருந்த காலத்தில், அவரைத் தமது தாயாகக் கருதி அவரிடத்தில் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டு வந்த தோடல்லாமல், ஸ்ரீ சாரதாமணி தேவியையும், தமது மாமியாராகக் கருதி அவரிடத்தில் நடந்து கொள்ளுமாறு கூறினார். மேற்படி பைரவி பிராம்மணி, ஜடதாரி, தோதாபுரி ஆகியோர் இவரிடத்திலிருந்து தெரிந்து கொண்டவை பல; அவர்களுடைய மனப்போக்கே மாறிவிட்ட தென்றும் சொல்லலாம். ஆனால் அவர் களிடத்தில் தாம் பயின்றதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் முக்கியமாகக் கருதினார்; அவர்களை குருமார்களாக என்றென்றும் போற்றி வந்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சிறந்த பக்தர். ஆனால் இவருடைய பக்தியானது, கடவுளை வாயாரப் புகழ்ந்து பாடுவதோடும் அவர் நிகழ்த்திய அற்புதச் செயல்களை நினைந்து மனமுருகுவதோடும் நிற்கவில்லை. யாருடைய புகழுக்காகவும் கடவுள் காத்துக் கொண்டிருக்கவில்லை; மானிடர்கள் வியந்து பாராட்டுவார்களென்று எதிர்பார்த்து அவர் எந்த அற்புதச் செயலையும் செய்யவில்லை. அவருடைய கடமையை அவர் செய்து கொண் டிருக்கிறார். அவருடைய குழந்தைகளாகிய நாம் அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டாமா? பிள்ளைகள், தங்கள் தாயாரிடம் சென்று, தாயே, நீ ரூபவதி, குணவதி, சுசீலை என்று தோத்திரம் செய்து கொண்டிருந்தால் அந்தத் தாயார் திருப்தியடைந்து விடுவாளா? அப்படி தோத்திரம் செய்து கொண்டிருப்பது அவளுக்குச் சிசுருஷை செய்ததாகுமா? தன்னுடைய சந்ததிகள் தன்னை என்றும் புகழ்ந்து பாடிக்கொண் டிருப்பார்கள் என்பதை எதிர்பார்த்து ஒரு தாயார் தன் சந்ததிகளை போஷித்துக் காப்பாற்றுவதில்லை. அப்படி எதிர்பார்ப்பது தாய்மையின் தன்மையல்ல. அவளுக்குத் துக்கம் ஏற்படுகிற காலத்தில் அந்தத் துக்கத்தைத் துடைக்க வேண்டும்; அவளுடைய சுகத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பிள்ளைகளுடைய கடமை இதுவே யாகும். அதுபோல், சர்வ ஜீவராசிகளுக்கும் தாயாயிருக்கப்பட்ட கடவுளைப் புகழ்ந்து பாடுவதோடு திருப்தியடை யாமல் அந்தக் கடவுளுக்குத் தொண்டு செய்ய வேண்டும். அதுதான் கடவுள் பிள்ளைகளாகிய மானிடர் களின் கடமை. கடவுள் தொண்டாவது என்ன? கடவுளின் அமிசமா யிருக்கிற எல்லா ஜீவராசிகளுக்கும் தொண்டு செய்வதுதான் கடவுள் தொண்டு. இந்தத் தொண்டு செய்கிறவன்தான் பக்தன்; கடவுளுக் குகந்தவன்; கடவுள் நெறியில் செல்கிறவன். இதுதான் ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய கோட்பாடு. இதையே விவேகானந்தருக்கும் வலியுறுத்திக் கூறினார். சமாதி நிலையிலேயே இருக்கத் தாம் விரும்புவதாகவும் அதுவே தமக்கு ஆனந்தமா யிருக்கிறதென்றும் விவேகானந்தர் கூறியபோது, அது கூடாது; அது சுய நலத்தை நாடுவதாகும். ஜனங்களுக்கு ஆத்மீக உணர்ச்சியை ஊட்டுவாயாக; ஏழைகளுடைய துயரத்தைப் போக்குவாயாக என்று கட்டளையிட்டார் அவருடைய குருநாதர். இந்தக் கட்டளையை நிறைவேற்றி வைக்கு முகத்தான், தமது குருநாதருடைய பெயரால் ஒரு தொண்டர் ஸ்தாபனத்தை நிறுவினார் விவேகானந்தர் அதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன். இந்த ஸ்தாபனம், எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் எல்லோருக்கும் சேவை செய்கிற ஒரு ஸ்தாபனமாக இது காலை உலகெங்கும் வியாபித்திருக்கிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் இட்ட கட்டளை, தம்மை எப்படிப் பிணித்திருக்கிற தென்பதைப் பற்றி விவேகானந்தர், தமது சகபாடிகளிடம் ஒரு சமயம் பின்வருமாறு கூறினார்:- ஓ, நான் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. நான் ராமகிருஷ்ணருடைய அடிமை. தாம் செய்யவேண்டிய வேலையை எனக்கு விட்டுவைத்துப் போயிருக்கிறார். அதை நான் முடிக்காத வரை எனக்கு அவர் ஓய்வுகொடுக்க மாட்டார்…………எனக்கு ஓய்வு கிடையாது. ராமகிருஷ்ணர், காளி என்றுஎதஅழைத்தாரோ அஃது-அந்தச்சக்தி-அவர் இந்தப் பூவுலக விட்டுச் செல்வதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முந்தி, எனது உடலையும் ஆத்மாவையும் தன்னுடையதாக்கிக் கொண்டு விட்டது. அதுவே என்னை வேலை செய், வேலை செய் என்று கட்டாயப்படுத்துகிறது; என் சொந்த விஷயங்களில் என் கவனம் சென்று விடாதபடி தடுக்கிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது தெய்வ பக்தியை, ஏழை மக்க ளுடைய துயரத்தைப் போக்குவதன் மூலமாக வெளிப்படுத்தி யிருக்கிறார். அநேக சந்தர்ப்பங்களில். ராணி ராசாமணி அம்மை யாருடைய மருகரான மதுர நாதருடன் இவர் க்ஷேத்திர யாத்திர செய்துவந்தாரல்லவா, அப்பொழுது யாத்திரையை முடித்துக் கொண்டு கல்கத்தாவுக்குத் திரும்புகையில், வழியில் தேவகார் என்ற இடத்தில் ஒருநாள் தங்கும்படி நேரிட்டது. அதுகாலை அந்தப் பிரதேசத்தில் கடுமையான பஞ்சம். ஜனங்கள் நாட்கணக்கில் உணவின்றி வாடினர்; எலும்புக் கூடுகளாயினர்; உடுக்கக் கந்தையு மில்லாமல் கஷ்டப்பட்டனர். இந்த நிலையிலிருந்த ஜனங்களை ஸ்ரீ ராமகிருஷ்ணர் பார்த்துவிட்டார். இவருடைய அருள் நெஞ்சம் உருகியது. உரக்க அழுதுவிட்டார். அவர்கள் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இவர்களுக்கு உணவும் உடையும் உடனே கிடைக்குமாறு செய்யுங்கள். இல்லா விட்டால் இவர் களோடு நானும் பட்டினி கிடந்து சாவேன் என்றார் மதுரநாதரிடம். மதுரநாதரால் மறுக்கமுடியுமா? சிறந்த குருபக்தரல்லவா? உடனே எல்லோருக்கும் உணவு உடை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குத் திருப்தி உண்டாயிற்று. அதற்குப் பிறகுதான் எல்லோரும் கல்கத்தா வந்து சேர்ந்தார்கள். இந்த யாத்திரையினால் மதுரநாதருக்கு ஏற்பட்ட செலவு சுமார் எண்பதினாயிரம் ரூபாய் என்பர்.

இன்னொரு சமயம் மதுரநாதர் கிஸ்தி வசூலுக்காகத் தமது ஜமீனுக்குச் சென்றிருந்தார். கூட ஸ்ரீ ராமகிருஷ்ணரையும் அழைத்துக் கொண்டு போனார். அப்பொழுது குடிஜனங்களுக்கு மிகவும் சிரமமான காலம். ஏனென்றால் இரண்டு வருஷமாகத் தொடர்ந்தாற் போல் சரியான விளைவு இல்லை. கிஸ்தி பாக்கியைக் கொடுக்கமுடியாமல் கஷ்டப்பட்டார்கள். தங்களுடைய அன்றாட ஜீவனத்திற்கு வழி தெரியாமல் தவித்தார்கள். பார்த்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவர்களுடைய ஸ்திதியை. தம்மை ஆட்கொண் டிருக்கும் காளிமாதேவி, வறுமை வடிவெடுத்துத் தம்மைச் சுற்றி உலவிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார். மதுரநாதரைப் பார்த்து, இவர்களிடமா கிஸ்தி பாக்கியை வசூல் செய்யப் போகிறீர்கள்? அப்படிச் செய்யக்கூடாது. இவர் களுக்குத் தேவையான உணவு வகைகள் கிடைக்குமாறு செய்யுங்கள்; போதிய பணவுதவியும் செய்யுங்கள். ஜகன் மாதாதான் இந்த ஆஸ்திகளுக் கெல்லாம் எஜமானி; அவளுடைய பிரதிநிதி தான் நீங்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும். ஆதலின் அவளுடைய பணத்தை அவளுடைய குடியானவர்களுக்குச் செலவழிக்க நீங்கள் சிறிது கூடத் தயங்கக் கூடாது என்று கூறினார். மதுர நாதர் அப்படியே செய்தார்.

ஆகவே படமாடுங் கோயிலுக்குள் சென்று பாசுரம் பாடிக் கண்ணீர் வடிப்பதோடு தன் பக்தியைக் கரை கட்டிக்கொண்டு விடுகிறவன் உண்மையான பக்தனாக மாட்டான், யார் நடமாடுங் கோயில்களாகிய ஜனங்களிடம் சென்று ஆறாய்ப் பெருகும் அவர்களுடைய துக்கக் கண்ணீரைத் துடைக்கிறானோ, யார் வறுமையி னாலும் அறியாமையினாலும் வளைந்து போயிருக்கிற அவர்க ளுடைய வாழ்க்கையை நேர் படுத்தி விடுகிறானோ, அவனே பக்தனாவான் என்பதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சிறந்த உதாரண புருஷராய் இருக்கிறார் என்பது பெறப்படுகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உத்தமமான வீரர். இப்படிச் சொல்வது சிலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம். ஆனால், யார் அன்பு நிறைந்தவர் களாயிருக்கிறார்களோ, யாரிடத்தில் உடைமை உணர்ச்சி என்பது லவலேசமும் இல்லையோ அவர்கள் அஞ்சுவது யாதொன்று மில்லை. அவர்கள் நமனையும் அஞ்சார்; யாருக்கும் பணியார். ஆம்; கடவுளைத் தவிர வேறு யாருக்கும் அவர்களுடைய தலை வணங்குவதில்லை. உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன், இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் என்கிறார் பெரியாழ்வார். அவர்களுடைய உள்ளம், மற்றவர்களுடைய துயரத்தைக் கண்டு எளிதிலே நெகிழக் கூடியதாயிருந்தாலும், தீமைகளை எதிர்ப்பதில், தீமைகளைக் களைவதில், அசாதாரணமான உறுதியுடைய தாயிருக்கும். அவர்கள், தங்களையும் மற்றவர்களையும் வேறு வேறாகப் பிரித்துப் பார்ப்ப தில்லை யாதலினால், தங்களிடத்திலேயுள்ள குறைநிறை களை எளிதிலே உணர்ந்து கொள்வது போல் மற்றவர்களிடத்திலேயுள்ள குறை நிறைகளையும் சுலபமாக அறிந்து, அவர்களைச் சீர்திருத்த முற்படு கிறார்கள். ஏனென்றால் தங்களைப் போல் மற்றவர்களும் தீமைகளினின்று விலகி நல்லவர்களாயிருக்க வேண்டுமென்பதே அவர்கள் நோக்கம். இந்த நோக்கமுடையவர்களாயிருப்பதனால் அவர்களை எல்லோரும் போற்று கிறார்கள்; எல்லோரும் அவர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்; அதாவது அவர்களுடைய அஞ்சாமையைக் கண்டு அஞ்சுகிறார்கள், எந்த இடத்தில் கோழைத்தனம், துவேஷம், அச்சம் ஆகிய இவைகளின் ஆட்சி நடைபெறுகிறதோ அந்த இடத்திற்குக் கடவுள் வருவதில்லை என்பது ஒரு வாக்கு.

பரம்பொருள் பயமற்றது. இதனால் அந்தப் பரம்பொருளை அடைந்தவர்களுக்கும் பயம் உண்டாவதில்லை. பாலூட்டி வளர்த்த தாயாயினும் சரி, போற்றிப் பராமரித்து வந்த பிறராயினும் சரி, அவர்கள் தெய்வ நெறியிலிருந்து மயிரிழை பிசகி நடந்தாலும் உடனே அவர்களைக் கண்டித்து நல்வழிப்படுத்துகிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நன்றிக்குரியவராகிய ராணி ராசமணி அம்மையார் ஒருசமயம் தட்சிணேசுவரம் போந்து காளிதேவியை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணர், அம்பாளைப் போற்றி உருக்கமாகச் சில பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ராசமணி அம்மையார் நடுவில் கொஞ்சம் கவனக்குறைவா யிருந்தார். தமது ஜமீன் சம்பந்தமான ஒரு வழக்கில் அவர் மனம் சென்றது. இதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் அறிந்து கொண்டுவிட்டார். உடனே அவருடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்தார். அக்கம் பக்கத்தி லிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து போனார்கள். ஆனால் அந்த அம்மையார் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராயிருந்தது போலவே பெரிய மனமும் படைத்த வராயிருந்தார். தமது குற்றத்தை உணர்ந்தார். ஒரு சிறுமியைப் போல் வெட்கித் தலைகுனிந்தார். ஜகன் மாதாதான் தமது பிசகை உணர்த்த தண்டனையளித்ததாகக் கருதினார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் அந்த அம்மாள் செலுத்தி வந்த பக்தி இன்னும் அதிகமாயிற்று. கோயிற் பரிவாரத்தினரும் இவரிடத்தில் – ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் – முன்னைக் காட்டிலும் அதிகமான மரியாதை காட்டத் தொடங்கினர்.

இந்தப் பயமற்ற தன்மையுடையவராயிருந்ததனால் ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது மனதில் தோன்றும் கருத்துக்களை உடனுக்குடன் தெரிவித்து விடுவார். ஒரு சமயம், சில மார்வாரி பக்தர்கள், இவருக்குச் சில பிரசாதங்களைக் கொண்டுவந்து கொடுத்தனர். அவை பொய் சொல்லிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று காரணஞ் சொல்லி, அவைகளை ஏற்க மறுத்துவிட்டார்.

மற்றவர்களுடைய அபிப்பிராயத்தைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையானாலும் சரி, மற்றவர்களைப் பற்றித் தமது அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டி யிருந்தாலும் சரி, அதை, அவ்வப்பொழுது இனிய மொழிகளால் சொல்லி விடுவார். கேசவ சந்திரேசேனர், மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், சுவாமி தயானந்த சரவதி ஆகிய இப்படிப்பட்ட பெரியார்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண ரிடத்தில் பெரிதும் ஈடுபட்டவர்கள். ஆனால் அவர்களுடைய கொள்கைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்வதில்லை. இதை அழகாக எடுத்துச் சொல்லி விடுவார். ஒரு நண்பரிடம் தேவேந்திர நாத் தாகூரைப் பற்றி கூறுகிறார்:- ஒரு சமயம் நான் மதுரநாதருடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அவருக்குப் பல சிறிய குழந்தைகள் இருப்பதை அப்பொழுது பார்த்தேன். குடும்ப வைத்தியர், மருந்துகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எட்டுக் குழந்தைகளுக்குப் பிறகு, ஒரு மனிதன், கடவுளைப்பற்றி நினைக்காவிட்டால், வேறு யார்தான் நினைக்கப் போகின்றார்? இவ்வளவு ஐசுவரியத்தை அனுபவித்த பிறகு தேவேந்திரர், கடவுளைப் பற்றி நினைக்கா விட்டால் அவருக்கு அது வெட்க மல்லவோ? ஆனால் குடும்பத் திலே இருந்துகொண்டு பக்தி செலுத்துகிறவர்களுக்கும், எல்லா வற்றையும் துறந்துவிட்டு பக்தி செலுத்துகிறவர்களுக்கும் வித்தி யாசம் உண்டு. முன்னவர், மலர்மீது அமர்ந்து மதுவுண்ணும் தேனீ மாதிரி. இந்தத் தேனீ, மலரிலிருக்கும் தேனைத் தவிர வேறோன்றை யும் சாப்பிடாது. பின்னவரோ ஈ மாதிரி. ஈ யானது புண்ணின் மீதும் உட்காருகிறது; பட்சணத்தின் மீதும் உட்காருகிறது. அதைப் போல் குடும்பத்திலே இருக்கிற பக்தன், ஒரு சமயம் கடவுள் நினைவாக இருக்கிறான்; அடுத்த சமயம் உலக நினைவு அவனுக்கு வந்து விடுகிறது.

உண்மையைக் கடைப்பிடிக்கிறவர்கள், சொன்னபடி செய்வதில் மிகுந்த சிரத்தை காட்டுவார்கள்; பிறரிடமிருந்தும் இந்தச் சிரத்தையை எதிர்பார்ப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், சிறிய விஷயங்களில் கூட இந்தச் சிரத்தையைக் காட்டினார். ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிட்டால் அதைச் செய்தே முடிப்பார். சொல்வதும் செய்வதும் ஒன்றாயிருக்கவேண்டு மென்பது இவர் கருத்து. உண்மை யென்பதும் இதுதானே? கூறுகிறார்:- ஒருவன் உண்மையைக் கடைப் பிடிக்காவிட்டால் அவன் எல்லாவற்றையும் இழந்து விடுகிறான். தோட்டத்திற்குப் போகிறேன் என்று அகமாத்தாக நான் சொல்லி விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப் போவதற்கு அவசியமில்லா விட்டால்கூட நான் போயே ஆகவேண்டும். அப்படிப் போகா விட்டால் நான் உண்மையினின்று பிறழ்ந்தவனாவேன். ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய உண்மை நெறி எவ்வளவு கடினமானது!

தன்னம்பிக்கை யுடையவர்கள், கடவுள் நம்பிக்கை யுடையவரா யிருப்பார்கள். இங்ஙனமே தன்னம்பிக்கையானது, கடவுளின் உண்மையிலே நம்பிக்கை கொள்ளும்படி செய்கிறது. கடவுளைக் காட்டுவீர்களா? என்று விவேகானந்தர் கேட்டபோது காட்டுவேன் என்றும், கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்றபோது ஆம்; பார்த்திருக்கிறேன்; இப்பொழுதும் பார்க்கிறேன்; உன்னை இங்கே எப்படிப் பார்க்கிறேனோ அதைவிட அதிகமாகப் பார்க்கிறேன் என்றும் கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இந்த உறுதியான வாசகந்தான், கடவுளின் உண்மையிலே கொண்டிருந்த இந்தத் திட நம்பிக்கைதான், விவேகானந்தரை இவரிடத்தில் ஈடுபடுத்தியது.

ஸ்ரீராமகிருஷ்ணர், தாய்மொழிப் பற்று நிரம்ப உடையவர். தம் எதிரில் தமக்குத் தெரியாத ஆங்கிலத்தில் யாராவது பேசுவார்க ளானால் அதை நாசூக்காகக் கண்டித்து விடுவார். ஒரு சமயம், வங்க இலக்கியத்திற்குப் புதியதொரு ஜீவகளையை ஏற்படுத்திக் கொடுத்த வரும், அரசாங்க உத்தியோகத்திலிருந்தவருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஸ்ரீ ராமகிருஷ்ணரைத் தரிசிக்க முதன் முதலாக வந்தார். அவருடன் கூட வந்திருந்த நண்பர், இவர்தான் பங்கிம் என்று பங்கிம் சந்திரரை அறிமுகப் படுத்தி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், பங்கிம்! உங்களைக் கூனலாக்கி விட்டது, வளையச் செய்துவிட்டது எது? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். பங்கிம் என்றால் வங்க பாஷையில் கோணல் அல்லது வளைவு என்று அர்த்தம். பூட் தான் இந்தக் கோணலுக்குக் காரணம். நமது வெள்ளை எஜமானர் களுடைய பூட் உதைகள் என் உடம்பைக் கூனலாக்கி விட்டன என்றார் பங்கிம்சந்திரர். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ணபகவான் ஏன் சியாமள வர்ணமாயிருக்கிறார் என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லி முடித்ததும், இவர் சொன்னதைப் பற்றி பங்கிம் சந்திரரும் அவருடைய நண்பரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா? என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். நீங்கள் இதுகாறும் சொன்னதைப் பற்றி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள் அவர்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே பின்வரும் கதையைக் கூறினார்:-

ஒரு சமயம் ஓர் அம்பட்டன் ஒரு பெரிய மனிதருக்கு க்ஷவரம் செய்து கொண்டிருந்தான். அப்படிச் செய்து கொண்டிருக்கிற போது, ஏதோ தவறுதலாக, அந்தப் பெரிய மனிதருடைய முகத்திலே காயம் பட்டுவிட்டது. பெரிய மனிதர், கோபமேலிட்டவராய் டாம் என்றார். அந்த அம்பட்டனுக்கோ இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டான். மேற்கொண்டு க்ஷவரம் செய்யவில்லை. இப்பொழுது டாம் என்று சொன்னீர்களே, அதனுடைய அர்த்தம் என்ன? என்று கேட்டான். அந்தப் பெரிய மனிதர் வீணாகப் பேசாதே. அதற்கு அர்த்தமொன்றுமில்லை. கொஞ்சம் ஜாக்கிரதையாக க்ஷவரம் செய், அவ்வளவுதான் என்றார். அம்பட்டன் விடுகிற பெயர் வழியா யில்லை. டாம் என்ற வார்த்தைக்கு நல்ல அர்த்த மாயிருந்தால், நான் டாம், எங்கப்பா டாம், எங்கள் முன்னோர்களெல்லோரும் டாம்கள். ஆனால் அந்த வார்த்தைக்குக் கெட்ட அர்த்தமாயிருந்தால் நீங்கள் டாம், உங்களப்பா டாம், உங்கள் முன்னோர்களெல் லோரும் டாம், டாம், டாம் என்றான் அவன்,

ஒரு பாஷையைத் தெரியாதவர் முன்னிலையில் அந்தப் பாஷையில் பேசக் கூடா தென்றும், அப்படிப் பேசுவது மரியாதைக் குறைவு என்றும், நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக இந்தக் கதையைச் சொல்லிக் காட்டினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், தாய் மொழிப் பற்றுடையவரா யிருந்ததைப் போல் தாய் நாட்டுப் பற்றுடையவராகவும் இருந்தார். இவர் அரசியலைப் பற்றி ஒன்றும் பேசவில்லையென்பது வாதவம். ஆனால் லட்சியம் வாய்ந்த ஓர் அரசியலுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய முக்கியமான அமிசங்கள் யாவும் இவருடைய உபதேசங்களில் அடங்கியிருக்கின்றன என்று திடமாகக் கூறலாம். கடவுள் தூதர்கள் எப்பொழுதும் மனிதர்களாகவே இருக்கி றார்கள்; அவர்கள் செய்கிற உபதேசங்களும் அரசியல் தன்மை வாய்ந்ததாகவே இருக்கின்றன என்பது ஒரு வாசகம். சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையும் வாக்குகளும் இந்த வாசகத்திற்கு நல்ல உதாரணங்களா யிருக்கின்றன.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சூழ்நிலையை நன்கு அறிந்தவர்; நமது நாட்டின் நிலைமையும் நன்கு உணர்ந்தவர். இந்தியா, அந்நிய ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதையும் அதனால் ஏற்பட்டிருக்கிற விளைவுகளையும் பற்றி எவ்வளவு அழகாகக் கூறுகிறார் கேளுங்கள்:- வேதங்களிலே சொல்லப்பட்டிருக்கிற சடங்குகளை இப்பொழுது நாம் அனுஷ்டிப்பது மிகவும் கடினம். மற்றும் இப்பொழுது ஜனங்கள் அடிமைகளுடைய வாழ்க்கையை நடத்துகிறார்கள். தொடர்ந்தாற் போல் சுமார் பன்னிரண்டு வருஷகாலம் மற்றவர்களிடம் வேலை செய்கிறவர்கள் அடிமைகளாகி விடுகிறார்கள். யாரிடத்தில் வேலை செய்கிறார்களோ அவர்களுடைய சுபாவங்களெல்லாம் இவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றன. இவர்கள், தங்கள் எஜமானர்களின் கீழ் வேலை செய்து கொண்டிருக்கிற போது, அந்த எஜமானர்களுடைய ரஜோகுணத்தையும், தமோ குணத்தையும், பலாத்கார உணர்ச்சியையும், ஆடம்பரப் பிரியத்தை யும், இவை போன்ற மற்றத் தன்மைகளையும் அடைந்து விடுகிறார்கள். இவர்கள், தங்கள் எஜமானர்களுக்கு வேலை செய்வதோடு மட்டுமில்லை; உத்தியோகம் முடிந்தபிறகு உபகாரச் சம்பளமும் பெறுகிறார்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், குழந்தைகளோடு குழந்தையாயிருந்து விளையாடுவார்; இளைஞர்களோடு இளைஞராயிருந்து அவர் களுடைய தர்க்க வாதங்களுக்கெல்லாம் சாவதானமாகப் பதிலளிப்பார்; ஞானி களோடு ஞானியாயிருந்து மௌன சம்பாஷைனை செய்வார்; பக்தர்களோடு பக்தராயிருந்து பரம்பொருளின் புகழைப் பாடுவார். இவர், எந்த நிலைக்கும் தகுதியுடையவர்; எந்தக் கோணத்திற்கும் பொருந்து கிறவர்; எல்லோருக்கும் உரியவர்; எக் காலத்திலும் இருக்கிறவர். இவர், அனுபவ அறிவுக்கு எடுத்துக் காட்டு; ஆத்ம ஞானத்திற்கு ஒளி; மகான்; தீர்க்கதரிசி.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி
வெ. சாமிநாத சர்மா

5. அளித்த நன்கொடை

என்னுடைய சர்வத்தையும் இன்று உனக்குக் கொடுத்து விட்டேன். இப்பொழுது ஒன்றுமில்லாத ஓர் ஏழைதான் நான். இந்தச் சக்தியைக் கொண்டு நீ உலகத்திற்கு மகத்தான நன்மையைச் செய்வாயாக! .இந்த வேலை நிறைவேறாத வரையில் நீ திரும்பி வராமலிருப்பாயாக!

– பரமஹம்ஸர்

ஸ்ரீராமகிருஷ்ணர் அனைத்தையும் துறந்தவர். ஆனால் மகத்தான தொரு நன்கொடையை அளித்திருக்கிறார். என்ன ஆச்சரியம்! ஆனால் என்ன முரண்பாடு! மற்றவர்களுக்காக எல்லா வற்றையும் அளித்துவிட்டு தாம் ஒன்றுமில்லாதவராதல் உலகத்திலே சகஜம். இப்படிப்பட்ட மகான்களைப் பற்றிப் படித்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். ஆனால் ஒன்றுமே இல்லாதவர், எல்லாவற்றையும் அளித்தல் எங்ஙனம் சாத்தியம்? ஸ்ரீராமகிருஷ்ணர் விஷயத்தில் இது சாத்தியமாகவே இருந்திருக்கிறது. தம்மையே மற்றவர்களுக்காக ஒப்புக்கொடுத்து விட்டவர் பலருண்டு உலகத்திலே. தம்மைக் காட்டிலும் மேலான ஒன்றைத் தாமே சிருஷ்டித்து, அதை மற்றவர்களுக்காக ஒப்புக் கொடுத்து விட்டு, அப்படி ஒப்புக்கொடுத்து விட்டதனால் மேன்மையடைந்தவர் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் ஸ்ரீ ராம கிருஷ்ணர் ஒருவர். இவர் அளித்த நன்கொடைதான் சுவாமி விவேகானந்தர்.

இந்திய தேசத்தின் சரித்திரத்தில், ஹிந்து மதத்தின் சரித்திரத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு நிரந்தரமான தானம் ஏற்பட்டிருக்கிறது. அவருடைய மகிமையை இன்று பலரும் அறிந்து கொண் டிருக்கின்றனர் என்று சொன்னால் அதற்கு சுவாமி விவேகானந்தர் தான் காரணம். இங்ஙனமே இந்தியாவின் பெருமையை, ஹிந்து தர்மத்தின் மேன்மையை சுவாமி விவேகானந்தர், உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாரென்று சொன்னால், இந்திய தேசீய வாழ்க்கையில் ஒரு புதிய ஜீவசக்தியைப் புகுத்தினாரென்று சொன்னால், அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர்தான் காரணம். ஸ்ரீ ராம கிருஷ்ணர் இல்லா விட்டால் சுவாமி விவேகானந்தர் இல்லை; சுவாமி விவேகானந்தர் இல்லாவிட்டால் ஸ்ரீ ராமகிருஷ்ணரும் இல்லை.

உலகத்திலே அவதரித்த மகான்களிற் பலர், தங்களுடைய பிற்காலத்தில், தங்களுடைய சிஷ்ய கோடிகளால் விபரீதமாக வியாக்கியானம் செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள். இது விஷயத்தில் அதிருஷ்டம் வாய்ந்த மகான்கள் ஒரு சிலரேயென்று துணிந்து கூறலாம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த ஒருசிலரில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேச மணிகளை விளக்கிக் கொண்டிருப்பதோடு விவேகானந்தர் திருப்தியடைய வில்லை; அவைகளைச் செயலில் கொண்டுவந்தார்; அநேகருடைய வாழ்க்கையில் கொண்டு புகுத்தினார்; ஊற்றாகத் தோன்றியதை ஆறாகப் பெருக்கினார்; அந்தப் பெருக்கை அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற் போல் பக்குவமாகப் பாய்ச்சினார்; ஆத்மீக வறட்சியடைந் திருந்த மேனாட்டுக்கு இந்தியாவின் ஆத்ம சக்தியைப் புகட்டினார்; லௌகிக சித்திகளில் வறட்சியடைந்திருந்த இந்தியாவுக்கு மேனாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தை எடுத்துக் காட்டினார்; தமது குருநாதனுடைய புகழைப் பாடுமுகத்தான் இந்தியாவின் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துக்கூறினார். சுருக்கமாக மேனாட்டாருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த இந்தியாவைப் பற்றிய அறியாமை இருளை விளக்கிய சூரியன் விவேகானந்தர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இருந்த தொடர்பை சொற்களினால் சொல்லிக்காட்ட முடியாது. மன ஒருமையை வார்த்தைகளுக்குள்ளே சிறைப்படுத்த முடியுமா? தாய் தந்தையருக்கும் மக்களுக்கும் இடையே இருக்கிற அன்பு, தம்பதிகளிடையே நிலவும் காதல், சகோதர வாஞ்சை, ஆண்டான் அடிமை விசுவாசம், நவில்தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும் இன்பம் தரு நட்பு, இவை யெல்லாம் ஒன்று சேர்ந்தால் என்னவாகிறதோ அது தான் ராமகிருஷ்ணர் – விவேகானந்தர் தொடர்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்தமாதிரியான குருசிஷ்ய சம்பந்தத்தை உலக சரித்திரத்தில் ஏகதேச மாகத்தான் பார்க்கிறோம். ராமபிரானுக்கும் ஹனுமானுக்கும், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும், புத்தருக்கும் ஆனந்தருக்கும், ஸாக்ரட்டீஸுக்கும் பிளேட்டோவுக்கும் எத்தகைய தொடர்பு இருந்ததோ அத்தகைய தொடர்பே ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இருந்த தென்று கூறலாம்.

சாதாரணமாக குருமார்களை நாடித்தான் சிஷ்யர்கள் செல்வது வழக்கம். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் விஷயத்தில் சிஷ்யனை நாடி குரு செல்கின்ற ஆச்சரியத்தைக் காண்கிறோம். தமக்குப் பின்னால் தமது உபதேச பொக்கிஷத்தை, ஆத்மஞான அனுபவக் களஞ்சியத்தை முறை யாகக் காப்பாற்றி உலகிற்கு வழங்கக்கூடிய ஒருவர் தேவையென்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் உணர்ந்தார். இதற்குத் தகுதியானவர் நரேந்திரர்தான் – இதுதான் சுவாமி விவேகானந்தருடைய பூர்வாசிரமப் பெயர் – என்பதை, அவரை முதன் முதலாகப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டார். தீர்க்கதரிசியல்லவா? இதனால் ஆரம்பத்திலிருந்தே அவரிடத்தில் தனியன்பு செலுத்தினார். முதல் சந்திப்பிலேயே நீண்ட காலமாகப் பரிச்சயமானவர் போலவே பழகத் தொடங்கினார். மற்றச் சிஷ்யர் களிடத்தில் விவேகானந்தரைப் புகழ்ந்து பேசுவார்; அவரை ஒரு நித்திய சித்தர் என்பார். நரேந்திரரைப் பாருங்கள். அவருக்கு யாரும் லட்சிய மில்லை… தமக்குத் தெரிந்ததை யெல்லாம் என்னிடத்தில் கூட அவர் சொல்வதில்லை. மற்றவர்களிடத்தில் அவருடைய மேதையைப் பற்றிப் புகழ்ந்து பேசுவேனோ என்ற பயம் அவருக்கு. அவர் அஞ்ஞானத் தினின்றும், மாயையினின்றும் விடுபட்டவர். அவருக்கு பந்தமென்பதே இல்லை. அவர் ஒரு மகாத்மா. அவரிடத்தில் அநேக நல்ல குணங்கள் இருக்கின்றன. அவர் சிறந்த சங்கீத நிபுணர்; பேரறிஞர். மற்றும் அவர் தமது ஆசாபாசங்களை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். தாம் விவாகமே செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறுகிறார் இப்படியெல்லாம் நரேந்திரரைப் புகழ்ந்து பேசுவார்.

இன்னும் ஓரிடத்தில் சொல்கிறார்:- நரேந்திரர் எப்பொழு தாவது இங்கே – தட்சிணேசுவரத்திற்கு – வந்தால், அறையில் எத்தனை பேர் இருந் தாலும் அவரிடத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பேன். மற்றவர்களிடத்திலும் பேசுங்கள் என்பார் அவர். பிறகுதான் மற்றவர்களிடத்திலும் பேசுவேன். அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு அதிகம் ஏற்பட்டுவிட்டது. அவருக்காக, அவர் வரவில்லையே யென்பதற்காக, அழுதிருக்கிறேன்.

தமது குருநாதர் தம்மிடத்தில் எத்தகைய அன்பு காட்டினார் என்பதை நரேந்திரர் உடல் புளகித்து உள்ளமெல்லா உருகக் கூறுவதைக் கேளுங்கள்:- என்னுடைய தகப்பனார் இறந்துபோன பிறகு எனது தாயாரும் சகோதரர்களும் பட்டினியால் வருந்தினார்கள். குருநாதர், குஹா என்பவரை ஒரு நாள் சந்தித்து நரேந்திர ருடைய தந்தையார் இறந்து விட்டார். அவருடைய குடும்பம் நிரம்பப் கஷ்ட தசையிலே இருக்கிறது. அவருக்கு இப்பொழுது நண்பர்கள் பண உதவி செய்தால் நல்லது என்று கூறினார். குஹா என்பவர் சென்றவுடன், குருநாதரை நான் கடிந்து கொண்டேன். ‘இவைகளையெல்லாம் அவரிடத்தில் போய்ச் சொல்வானேன்? என்று கேட்டேன். குருநாதர் அழுது விட்டார். உனக்காக வீட்டுக்கு வீடு பிச்சையெடுப்பேன் என்றார். அவர் தமது அன்பினால் எங்களை அடக்கியாண்டார் நான் தட்சிணேசுவரத்திற்கு மூன்றாவது தடவை சென்ற போது,குருநாதர் சமாதியிலாழ்ந்து விட்டார். என்னைக் கடவுள் போல் நினைத்துப் பலவிதமாக தோத்திரம் செய்ய ஆரம்பித்து விட்டார். என்னிடம் கூறினார்,- ஓ நாராயணா, எனக்காக இந்த உடம்பெடுத் திருக்கிறாய் என்றார்… அவர் நோயாயிருந்த போது, கையலம்பிக் கொள்ள நான் தண்ணீர் வார்த்தால் கூடாது என்பார்… அவர் என் பொருட்டு ஜகன் மாதாவிடம் எத்தனை தடவை பிரார்த்தனை செய்திருக்கிறார்!… என் மனத்தில் எப்பொழுதாவது கெட்ட எண்ணம் உதித்தால் அது குருநாதருக்கு உடனே தெரிந்து விடும். சில சமயங்களில் நான் கெட்டவர்களுடைய சகவாசத்தில் ஈடுபட்டுவிடுவேன். அப்பொழு தெல்லாம் குருநாதர் என் கையிலிருந்து எவ்வித ஆகாரத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டார். அவருடைய கை ஆகாரத்தை எடுக்கும்; ஆனால் வாயண்டை செல்லாது. நீ இன்னும் தயாராகவில்லை போலிருக்கிறது என்பார் என்னிடம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், நரேந்திரரை, குழந்தையாகக் கருதிக் கொஞ்சுவார் ஒரு சமயம்; பரம்பொருளின் வடிவமாகக் கருதிப் போற்றுவார் இன்னொரு சமயம். ஒரு நாள், பிரபல நாடகாசிரியரான கிரீசந்திரகோஷின் வேண்டுகோளுக்கிணங்கஅவருடையவீட்டுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணர், தமது சிஷ்யர்கள் சகிதம் சென்றிருந் தார். எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்தார்கள். பல விஷயங்களைப் பற்றித் தர்க்க வாதங்கள் நடைபெற்றன. அப்பொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணர் ஓரிடத்திலும் நரேந்திரர் அவருக்குச் சிறிது எட்டினாற் போலவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஸ்ரீராமகிருஷ்ணர், மெது மெதுவாக நரேந்திரர் அருகே நகர்ந்து வந்து உட்கார்ந்தார். அவருடைய உடம்பை மெதுவாகத் தடவிக் கொடுத்தார்; தாடையைத் தொட்டுக் கொண்டே ஹரி ஓம், ஹரி ஓம், ஹரி ஓம் என்றார். இப்படிச் சொல்லிக்கொண்டே வெளியுலக நினைவை இழந்துவிட்டார். அவருடைய கை, நரேந்திரருடைய பாதத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது; இந்த நிலையிலும், ஒரு கையினால் நரேந்திரருடைய உடம்பைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவரிடத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. நரேந்திரரைப் பார்த்து, கூப்பிய கையராய் ஒரு பாட்டு; தயை செய்து ஒரு பாட்டு; பிறகு நான் சரியாகி விடுவேன் என்றார். நரேந்திரரும் பாடினார். பாட்டைக் கேட்டுக் கொண்டே ஸ்ரீ ராமகிருஷ்ணர் சமாதியி லாழ்ந்து விட்டார். இங்ஙனம் நரேந்திரரிடமிருந்து பெருக்கெடுத்து ஓடிவந்த இசை வெள்ளத்திலே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம்மை இழந்து விட்டிருக்கிறார் பல சமயங்களில்.

நரேந்திரருக்கு விவாகம் நிச்சயிக்கப் பட்டிருப்பதாக ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு யாரோ சொல்லிவிட்டார்கள். அவரால் இதைச் சகிக்க முடியவில்லை. காளி மாதாவிடம் சென்று அவருடைய திருப்பாதங்களைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் பெருக தாயே, எப்படியாவது விவாகம் நடைபெறாமல் செய்துவிடு. என்னுடைய நரேந்திரனை சம்சார சாகரத்தில் மூழ்கடித்து விடாதே என்று பிரார்த்தனை செய்தார். நரேந்திரருக்கு விவாகம் நடைபெற வில்லை. விவேகானந்தருடைய எதிர்கால வாழ்க்கை எவ்வித பந்தங்களுக்கும் உட்படாததாய், தியாகத்தின் நிறைவாக இருக்க வேண்டுமென்பதில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு எவ்வளவு சிரத்தை இருந்ததென்பது இதனின்று தெரிகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளை சிவபெருமான் தடுத்தாட் கொண்ட வரலாறு இங்கே நமது ஞாபகத்திற்கு வருகிற தில்லையா?

தம்மை நாடிவரும் சிஷ்யர்கள் தாமரை மலர் போன்றவர்கள் என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். சிலர் பத்து இதழ்களுடைய தாமரை, இன்னுஞ் சிலர் பதினாறு இதழ்களுடைய தாமரை, வேறு சிலர் நூறு இதழ்களுடைய தாமரை, ஆனால் நரேந்திரரோ ஆயிரம் இதழ்களுடைய தாமரையென்று சொல்லி விவேகானந்தரிடத்தில் தமக்குள்ள விசேஷ மதிப்பை வெளிப்படுத்துகிறார். நான்கு பேர் மத்தியில் தாம் இருக்கிறபோது, தமது பக்கத்தில் நரேந்திரர் இருந்துவிட்டால், தமக்குப் பெரிய பக்க பலமாயிருக்கிறதென்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார். அவருடைய ஆத்ம சக்தியிலே எவ்வளவு நம்பிக்கை! இந்த நம்பிக்கை இருந்ததனாலேயே தமது கடைசி காலத்தில் சிஷ்யகோடிகள் அனைவரையும் விவேகானந்த ரிடத்தில் ஒப்புவித்து அவர்களை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். இதே நிறையிலேயே விவேகானந்தரும் ஸ்ரீராமகிருஷ்ணரை வைத்துப் போற்றுகிறார். ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்:- இப்பொழுது நான் என்ன முடிவுகட்டியிருக்கிறே னென்றால், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குச் சமதையானவர் வேறுயாருமில்லை யென்பதுவே யாகும். இத்தகைய நிறைவை, இத்தனை ஆச்சரியகரமான அன்பை, பந்தப்பட்டுக் கிடக்கும் மனிதனிடத் திலே காட்டப் படுகின்ற இத்தகைய கருணையை, உலகத்திலெங்கும் காணமுடியாது… பேராபத்துகள் ஏற்பட்ட காலத்தில், ஆசாபாசங்கள் சூழ்ந்துகொள்ளும் காலத்தில், நான் பெரிதும் துக்கமடைந்தவனாய் அழுத வண்ணம் கடவுளே, என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை செய்திருக்கிறேன்; ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆச்சரியகரமான முனிவர் அல்லது அவதார புருஷர் அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள், இவர், மனிதனுடைய இருதயத்தை ஊடுருவிப் பார்க்கும் தமது சக்தியினால், என் மனோ வேதனைகளையெல்லாம் அறிந்து, என்னையும் மிஞ்சி என்னைத் தம்மிடம் அழைத்துக் கொண்டதன் மூலம் அந்த வேதனைகளை யெல்லாம் அகற்றினார். கடவுளிடத்தி லிருந்து பெற முடியாததைத் தமது குருநாதரிடத்திலிருந்து பெற்றதாக இவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பக்தி இவைகளையே காட்டுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் ஏன் விவேகானந்தரை ஆட்கொண்டார்? ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து உபதேசம் பெற வேண்டுமென்பதற்காக விவேகானந்தர் அவரை நாடவில்லை. இதை விவேகானந்தரே பின்னொரு சமயம் ஒப்புக் கொண்டிருக்கிறார். குருநாதர் சொன்ன வைகளில் பெரும்பாலனவற்றை நான் முதலில் ஏற்றுக்கொள்ள வில்லை. ‘அப்படியானால் ஏன் இங்கே வருகிறாய்-? என்று ஒரு நாள் என்னைக் கேட்டார். உங்களைப் பார்க்க வருகிறேனே தவிர கேட்க வரவில்லை யென்று பதில் கூறினேன். .. இதைக் கேட்டு அவர் பெரிதும் சந்தோஷப் பட்டார். இந்தக் கடைசி வாக்கியத்தில்தான், விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் ஈடுபட்டதன் ரகசியம் அடங்கியிருக்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் நேர்மையுள்ளவர்; கள்ளங் கபடில்லாதவர்; சத்திய மூர்த்தி; நேர்மையுள்ளவர்களால்தான் நேர்மையை அறிந்து கொள்ள முடியும்; பாராட்ட முடியும். சத்திய புருஷர்கள் தான் சத்தியத்தின் மகிமையை உணரமுடியும். விவேகானந்ருடைய பரிசுத்த இருதயத்தையும், உண்மையைக் காணவேண்டுமென்பதிலே அவருக் கிருந்த துடிதுடிப்பையும் ஸ்ரீராமகிருஷ்ணர் சுலபமாகத் தெரிந்து கொண்டு விட்டார்; அவரை ஆட்கொண்டார். குடியானவர்கள் நல்ல உழவு மாடுகள் வாங்கிவர சந்தைக்குச் செல்வார் களல்லவா? அப்படிச் சென்று ஒவ்வோர் எருதாக வாலைப் பிடித்துப் பார்ப்பார்கள். இப்படிப் பிடித்துப் பார்க்கிறபோது சில எருதுகள் எவ்வித உணர்ச்சியும் பெறாமல் அப்படியே படுத்துக் கொண்டிருக்கும். இவற்றை, சப்பைமாடுகள்; பிரயோஜனமில்லை என்று சொல்லி நிராகரித்து விடுவார்கள். இன்னுஞ் சில மாடுகள், வாலைத் தொட்ட மாத்திரத்தில் சுறுசுறுப்புக் காட்டும். இப்படிப்பட்டவைகளைத் தான் விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள். நரேந்திரர், இந்தப் பிந்திய எருதுகளைப் போன்றவர். அவரிடத்தில் நிரம்பத் துடி துடிப்பு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பரமஹம்ஸர்.

சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை முதன் முதலில் சந்திக்கிறபோது, குமுறிக் கொந்தளித்தெழுகின்ற சமுத்திரமும் அலை யடங்கி அமைதியாயிருக்கின்ற சமுத்திரமும் சந்திப்பது போல இருந்தது; புதுமையும் பழமையும் கலப்பது போல இருந்தது; மேனாட்டு விஞ்ஞானமும் கீழ் நாட்டு ஞானமும் கூடுவது போலிருந்தது. விவேகானந்தர் அறிவின் நிறைவாயிருந்தார்; ராமகிருஷ்ணர் அன்பின் நிறைவாயிருந்தார். முன்னவர் அறிவுக் கண்களைக் கொண்டு கடவுளைக் காண முடியுமாவென்று கேட்டுக் கொண்டிருந்தார்; பின்னவர் நம்பிக்கையைத் துணை பற்றிச் சென்று கடவுளைக் கண்டே இருந்தார். முன்னவர் பேச்சிலே பெருமிதம் கண்டிருந்தார்; பின்னவர் மௌனத்திலே இனிமை கண்டிருந்தார். இந்த நிலைமையிலேதான் இருவருக்கும் சந்திப்பு ஏற்பட்டது. அறிவு, அன்பிலே அடைக்கலம் புகுந்தது; பேச்சு, மௌனத்திலே லீனமாகியது.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சாதாரண மனிதராகவே காணப் பட்டார். அவருடைய சொற்களும் செயல்களும் எளிமையுடையனவாகவே இருந்தன. இத்தகையவரிடத்தில் மகாமேதாவியான, அந்த மேதையிலே பெருமிதங் கொண்டிருந்த விவேகானந்தர் எப்படி அடங்கிப் போனார் என்பது ஆச்சரியமான விஷயமே யாகும். ஆனால் இஃது இந்தியாவின் பண்பாட்டையே காட்டு வதாயிருக்கிறது. ஆத்ம சக்திக்கு முன்னே அறிவுச் சக்தி அடங்கிப் போகிறது. முழு முதற்பொருளைக் கண்டவரிடத்தில், மற்றப் பொருள்களுடைய வர்கள் ஐக்கியப் பட்டு விடுகிறார்கள். இந்திய சரித்திரத்தின் நெடுகிலும் இந்த மாதிரியான சம்பவங்களை அடிக்கடி சந்திக்கிறோம். இந்தியாவின் நாகரிகம், ஓர் அறிஞர் கூறிய மாதிரி, மலர்களின் அழகைப் பற்றிக் கவலைப் படுவதில்லை; விதையின் அர்த்தத் திலேயே அதிக கவனஞ் செலுத்துகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணருடைய வாழ்க்கையையும் சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையையும் ஒன்று சேர்த்தே பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தியாவினுடைய வாழ்க்கையின் முழுத் தன்மையும் தெரியும். ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒளியென்றால் விவேகானந்தர் அதன் ஒலியாயிருந்தார். ராமகிருஷ்ணர் கவிதை யென்றால் அதன் விரிவுரையாயிருந்தார் விவேகானந்தர். ராம கிருஷ்ணர் போதித்த உண்மைகளை எவ்வளவு அழகாக, எவ்வளவு கம்பீரமாக சொல்லால் முழக்கிக் காட்டுகிறார் விவேகானந்தர்! கேளுங்கள் சிலவற்றை:-

சென்ற காலத்தில் நிலவிய மதங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்; அவைகளுக்கு வணக்கஞ் செலுத்துகிறேன். அந்தந்த மதத்தினரோடு சேர்ந்துகொண்டு, அந்தந்த மதத்தினர் வழிபடுகின்ற முறையில் நான் கடவுளை வணங்குகிறேன். நான் ஒரு முகம்மதியருடைய மசூதிக்குச் செல்வேன்; கிறிஸ்துவருடைய ஆலயத்திற்குச் சென்று அங்கே சிலுவையின் முன்னால் முழந்தாளிட்டு வணங்குவேன்; புத்தர் கோயிலுக்குச் சென்று புத்தரிடத்திலும் தர்மத்தினிடத்திலும் சரணமடைவேன்; காட்டிலே சென்று, எல்லோருடைய இருதயங்களையும் பிரகாசமய மாக்குகின்ற ஜோதி எதுவோ அந்த ஜோதியைக் காண முயன்று கொண்டிருக்கிற ஹிந்துவுடன் தியானத்தின் ஆழ்ந்திருப்பேன். இப்படி யெல்லாம் நான் செய்வதோடல்லாமல், வருங்காலத்தில் தோன்றக் கூடிய மதங்களனைத்திற்கும் என் இருதயத்தைத் திறந்து வைத்துக் கொண்டுமிருப்பேன்.

மதமென்பது நூல்களிலே இல்லை; புத்தி பூர்வகமான அங்கீகாரத்தில் இல்லை; அறிவிலும் இல்லை. அறிவு, தத்துவங்கள், ததாவேஜுகள், கொள்கைகள், நூல்கள், சடங்குகள் இவை யெல்லாம் மதத்திற்குத் துணை செய்வனவேயாம். மதமென்பது மெய்ப்பொருளை அடைவதிலேயே இருக்கிறது.

உலகத்திலுள்ள எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்று முரண் பட்டவை யல்ல; விரோதமானவையுமல்ல. அவை, நித்தியமா யுள்ள ஒரு மதத்தின் பல தோற்றங்களேயாம். அந்த ஒரு மதமே, பல நிலை களிலுள்ளவர்களுக்கு, பலவகை அபிப்பிராயங்களுடையவர் களுக்கு, பல ஜாதியினருக்கு ஏற்றவிதத்தில் பல மதங்களாகத் தோற்றமளிக்கிறது.

விவேகானந்தர், ராமகிருஷ்ணரைப் போல் ஒரு தீர்க்கதரிசி. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், நிகழ்கால நிலையைப் புலப்படுத்துவதோடு எதிர்காலத்திற்கு வழி காட்டியாகவு மிருக்கிறது. அவர் அன்று சொன்னது இன்றும் பொருத்தமாயிருக்கிறது. சங்கநாதம் செய்கிறார் ஓரிடத்தில்:-

ஆணை பிறந்துவிட்டது. இந்தியா எழுந்திருக்க வேண்டும்…. பாரத மாதாவை இனி யாரும் தடுக்க முடியாது. இனி அவள் ஒரு போதும் தூங்கப் போவதில்லை. வெளிச் சக்திகள் எவையும் அவளைப் பின் தள்ள முடியாது. அவள் எழுந்து நிற்க முற்பட்டு விட்டாள்… நீண்ட இரவு கழிந்து விட்டது; கொடிய துன்பங்கள் விலகிவிட்டன. ஒரு குரல் நம்மை நோக்கி வருகிறது … இமய மலையி லிருந்து வருகிற காற்றைப் போல், இறந்து போகுந் தறுவாயிலிருந்த அவளுடைய எலும்புகளிலும் தசை நார்களிலும் அஃது – அந்தக் குரல் – உயிரளித்துக் கொண்டு வருகிறது. அவளுடைய சோர்வு நீங்கி விட்டது. அவள் – நமது தாய் நாடு – விழித்துக் கொண்டு விட்டாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *