ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி
வெ. சாமிநாத சர்மா

6. உபதேச மணிகள்

சந்திரன் மேலும் மேலும் வளர்ச்சியடைவதைக் கண்டு சமுத்திரத்தின் கொந்தளிப்பு அதிகமாகிறது. அதுபோல் பிறர் மேன்மையடைவதைக் கண்டு மகான்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

– துளசிதாஸர்

ஸ்ரீராமகிருஷ்ணர், மேடை மீதேறி ஒரு பிரசங்கமும் செய்ய வில்லை; ஆத்மஞான வகுப்புகள் வைத்து நடத்தவில்லை; யாருக்கும் மந்திரோபதேசம் செய்யவில்லை. இருந்தாலும் இவரைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். இந்தக் கூட்டத் தினருடன் இவர் எப்பொழுதும் சம்பாஷணை செய்து கொண்டிருப்பார். இவருடன் ஒருமுறை அல்லது இருமுறை சம்பாஷித்து விட்டுச் சென்றவர்கள், இதுகாறும் தங்களுக்குத் தெரியாமலிருந்தனவெல்லாம் இப்பொழுது தெரிந்துவிட்டதாக உணர்வார்கள்; மேலும் மேலும் இவருடன் சம்பாஷிக்க வேண்டு மென்று ஆவல் கொள்வார்கள்; இவருடைய வாக்கிலிருந்து வரும் ஒவ்வொன்றையும் உபதேச மணியாக ஏற்றுக்கொண்டு, அவற்றை பக்தி சிரத்தையுடன் தங்கள் இருதய பொக்கிஷத்தில் வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்று விருப்பங் கொள்வார்கள். ஏனென்றால் அவை, வாழ்க்கையில் வழிகாட்டும் விளக்குக ளல்லவா? இத்தகைய விளக்குகளாயுள்ள உபதேசமணிகளிற் சிலவற்றை இங்கே தருகின்றோம்.

பக்தி நிறைந்த ஒரு குடும்பத்தைப் போஷணை செய்ய பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். உங்கள் வருமானம் அதிகமாவதற்கான முயற்சிகளை நீங்கள் செய்யலாம். ஆனால் அதை யோக்கியமாகச் செய்யவேண்டும். வாழ்க்கையின் லட்சியம் பணம் சம்பாதிப்பதல்ல; கடவுளுக்குத் தொண்டு செய்வது. கடவுள் தொண்டுக்காகப் பணம் பிரயோஜனப்படுமாகில் அப்பொழுது அதனால் கெடுதல் இல்லை.

* * *

(காளிதேவியிடம்) தாயே, ஒவ்வொருவரும் தங்கள் தங்க ளுடைய கடிகாரந்தான் சரியென்று சொல்கிறார்கள். கிறிஸ்துவர்க ளென்ன, பிரும்மசமாஜத்தார் என்ன, ஹிந்துக்க ளென்ன, முஸல்மான்களென்ன, இவர்கள் ஒவ்வொருவரும் என்னுடைய மதந்தான் உண்மையானது என்று சொல்கிறார்கள். ஆனால், தாயே, உண்மையில் யாருடைய கடிகாரமும் சரியான தில்லை. உன்னை உண்மையாக யார் அறிய முடியும்? உன்னை ஒருவன் மனப்பூர்வமாக வழிபடுவானாகில், உனது அருளினால், எந்த மார்க்கத்தின் மூலமாகவேனும் உன்னை வந்து அடையக் கூடும்.

* * *

தர்க்கம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. தர்க்கவாதத்திற்கு அப்பாற்பட்டவர் கடவுள். உலகிலுள்ள அனைத்தையும் நான் கடவுளாகவே காண்கிறேன். அப்படியிருக்க தர்க்கவாதம் செய்வதில் என்ன பிரயோஜனம்? தோப்புக்குள் சென்று மாம்பழங்களைத் தின்றுவிட்டு வெளியே வாருங்கள். அவ்வளவுதானே? மாமரங்களி லுள்ள இலைகளைக் கணக்கிடவா நீங்கள் தோப்புக்குள் செல்கிறீர்கள்? இல்லையே. அப்படியிருக்க, மறுபிறவியைப் பற்றியோ, உருவ வழிபாட்டைப் பற்றியோ வாதம் செய்து கொண்டிருப்பதில் காலத்தை வீணாக்குவானேன்?

* * *

ஸ்திரீகளெல்லோரும் சக்தியின் வடிவங்கள். இந்தியாவின் வடமேற்குப் பாகத்தில், விவாகத்தின் போது, மணமகள் தன் கையில் ஒரு கத்தியைப் பிடித்துக் கொள்ளவேண்டுமென்பது ஒரு வழக்கம். வங்காளத்தில் மணமகள் பாக்கு வெட்டியைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மணமகன், தெய்வ சக்தியின் வடிவமாயிருக்கப்பட்ட மணமகளின் துணைகொண்டு மாயாபந்தத்தை அகற்ற வேண்டு மென்பது வேயாகும்

* * *

கடவுள் இரண்டு சந்தர்ப்பங்களில் சிரிக்கிறார். வைத்தியர், நோயாளியின் தாயாரைப் பார்த்து, அம்மா, பயப்படாதீர்கள்; உங்கள் பையனை நான் நிச்சயம் சொஸ்தப்படுத்தி விடுகிறேன் என்று சொல்கிற போது, கடவுள் சிரிக்கிறார். நான் இந்தப் பையனுடைய உயிரை எடுத்துக் கொண்டு விடப்போகிறேன். ஆனால் இந்த வைத்தியர் அந்த உயிரைக் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்கிறார் என்று தமக்குத்தாமே சொல்லிக் கொண்டு சிரிக்கிறார் கடவுள். கடவுள்தான் எஜமானர் என்பதை வைத்தியர் மறந்துவிட்டு தாம்தான் எஜமானர் என்று நினைத்துக் கொள்கிறார். இரண்டு சகோதரர்கள் தங்கள் நிலத்தைக் கயிறு போட்டு இரண்டு பங்காகப் பிரித்து இந்தப் பக்கம் என்னுடையது; அந்தப் பக்கம் உன்னுடையது என்று சொல்லிக் கொள்கிற போதும் கடவுள் சிரிக்கிறார். உலகம் பூராவும் என்னுடைய தாயிருக்க, இவர்கள் என்னுடையது என்று சொல்லிக் கொள்கிறார்களே யென்று சொல்லிச் சிரிக்கிறார்.

* * *

ஒருவன் உலக வாழ்க்கையிலே ஈடுபட்டிருந்த போதிலும் அவன் அடிக்கடி ஏகாந்தத்தில் இருக்க வேண்டும். ஒருவன் குடும்பத்தை விட்டுத் தனியாகச் சென்று மூன்று நாட்களுக்காவது கடவுளை நினைத்து அழுதால் போதும். அவனுக்கு ஓய்விருக்கிற போது ஒரு நாளைக்காவது கடவுளைப் பற்றி நினைத்தால் போதும். அதனால் அவனுக்கு நன்மையே உண்டாகும். தங்களுடைய மனைவிக்காகவும் மக்களுக்காவும் ஜனங்கள் ஒரு பானை கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் கடவுளுக்காகக் கண்ணீர் வடிக்கிறவர் யார்?

* * *

மனிதர்களைத் தானியங்களுக்கு ஒப்பிடலாம். யந்திரத்தில் அகப்பட்டுக்கொண்டு அரை படப் போகிற தானியங்களைப் போல் அவர்கள் இருக்கிறார்கள். நடு அச்சைச் சுற்றியுள்ள தானியங்கள் மட்டுந் தான் அரை படாமல் தப்பித்துக் கொள்கின்றன. அது போல் மனிதர்களும் கடவுளாகிய அச்சினிடம் அடைக்கலம் புக வேண்டும். அவரை அடையுங்கள்; அவர் பெயரைச் சொல்லுங்கள். அப்பொழுது நீங்கள் முக்தி பெறுவீர்கள். இன்றேல் யமனால் நசுக்கப்பட்டு விடுவீர்கள்.

* * *

ஒவ்வோர் உபாதியும் மனிதனுடைய சுபாவத்தை மாற்றி விடுகின்றது. அழகான கறுப்புக் கரை அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொள்ளட்டும், உடனே அவன் காதல் பாட்டுகளைப் பாட ஆரம்பித்து விடுகிறான். சீட்டாட்டம், கைத்தடி ஆகிய இவையெல்லாம் உடனே தொடர்ந்து விடுகின்றன. ஒரு நோயாளி கூட உயர்ந்த பூட் போட்டுக் கொண்டு விட்டானாகில், பாருங்களேன் அவனை, விசில் அடித்துக் கொண்டு ஓர் இங்கிலீஷ்காரணைப் போல் மாடிப் படிகள் ஏற ஆரம்பித்து விடுகிறான். ஒரு மனிதன் பேனாவைக் கையிலே பிடித்துக கொள்ளட்டும், அகப்பட்ட காகிதத்தில் கிறுக்கத் தொடங்கி விடுகிறான். பேனாவுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

பணமும் ஒரு பெரிய உபாதிதான். பணமிருந்து விட்டால் அது மனிதனை எவ்வளவு மாற்றி விடுகிறது… ஒரு தவளை, தனது வளையில் ஒரு ரூபாய் வைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு யானை அந்த வளையின் மீது போய்க்கொண்டிருந்தது. உடனே தவளைக்குக் கோபம் வந்துவிட்டது. தன் வளையிலிருந்து வெளியிலே வந்து, யானையை உதைக்கிறாற் போல் காலைத் தூக்கிக் கொண்டு “ஏ யானையே, என் தலை மீது நடந்து செல்ல உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டது. பணத்தினால் உண்டாகக் கூடிய கர்வம் இத்தகையது!”

* * *

யார் மீதும் துவேஷம் கொள்ளாதே. சிவன், காளி, அரி இவை யெல்லாம் ஒரு பரம்பொருளின் வெவ்வேறு தோற்றங்கள் தான்.

* * *

எவ்வளவுக் கெவ்வளவு கடவுளுக்கருகில் வருகிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு சாந்தி உண்டாகிறது. கங்கைக்கு அருகில் வரவர அதனுடைய குளிர்ச்சியை அதிகமாக உணர்கிறீர்கள். அந்தக் கங்கையிலேயே அமிழ்ந்து விட்டாலோ பரிபூரண நிம்மதி ஏற்படுகிறது.

ஒருவருக்கொருவர் சிநேகமாயிருங்கள். அப்படியிருப்பது உங்களுக்குத்தான் நன்மை. அதனால் எல்லாருக்கும் சந்தோஷம். நாடகத்தில், சங்கீத கோஷ்டியினர் ஒத்துப் பாடினால்தான் நாடகம் நன்றாக இருக்கிறது; பார்க்க வந்திருக்கும் ஜனங்களும் சந்தோஷப் படுகிறார்கள்.

* * *

விறகிலே தீ இருக்கிறதென்று அறிதலும் நம்புதலும் ஞானம். அந்தத் தீயிலே சோறு சமைப்பதும், அந்தச் சோற்றைச் சாப்பிடுவதும், அதிலிருந்து போஷணை பெறுவதும் விஞ்ஞானம். தன்னுடைய சொந்த அனுபவத்தினால் கடவுள் இருக்கிறார் என்று உணர்வது ஞானம். அந்தக் கடவுளோடு பேசுவது, அவரைக் குழந்தையாகவோ, நண்பனாகவோ, எஜமானனாகவோ, காதலனாகவோ அனுபவிப்பது, விஞ்ஞானம்.

* * *

எந்தவிதமான பொய்யும் நல்லதல்ல. புனிதமான உடையா யிருந்தால் கூட அது பொய்யுடையாயிருந்தால் அது நல்லதல்ல. அந்தரங்க எண்ணத்தைப் போல் பகிரங்க உடையும் இல்லா திருந்தால் அது நாளாவட்டத்தில் நாசத்தையே உண்டு பண்ணும். பொய் சொல்லிக் கொண்டும் பொய்யான காரியங்களைச் செய்து கொண்டு மிருந்தால் பொய்யைப் பற்றிய பயமே போய் விடுகிறது. ஒரு கிருகதனுடைய வெள்ளை ஆடையே சிறந்தது. உலகப்பற்று வைத்துக் கொண்டு. லட்சியத்திலிருந்து அடிக்கடி நழுவிப் போக, வெளியிலே காஷாயந்தரித்துக் கொண்டிருப்பது எவ்வளவு கேவலம்!

* * *

மெய் பேசுவது கலியுகத்தின் தவமாகும். இந்த யுகத்தில் மற்றத் தவங்களைச் செய்தல் கடினமாகும். உண்மையைக் கடைப் பிடிக்கிறவன் கடவுளை அடைகிறான்.

* * *

சுயநலம் சிறிதேனும் இல்லாமல் மற்றவர்களுடைய நன்மைக்காக வைத்தியன் தன் தொழிலைச் செய்வானாகில் வைத்தியத் தொழில் மிகவும் மேன்மையானது.

* * *

வார்த்தைகளை வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பதனால் என்ன பிரயோஜனம்! ஏதாவது செய்யுங்கள். சித்தி என்ற வார்த்தையைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதனால் நீங்கள் ஏதேனும் சித்தி பெற முடியுமா?

* * *

உலர்ந்த தீக்குச்சிகளாயிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்துக் கிழித்தாலும் உடனே நெருப்பு கிடைக்கிறது. அவை ஈரமாயிருந்தால், ஐம்பது குச்சிகளைக் கிழித்தாலும் நெருப்பு உண்டாவதில்லை. தீக்குச்சிகள் தான் நஷ்டம். அது போல உங்கள் மனம் உலக சுகங்களிலே தோய்ந்திருக்குமானால், கடவுளுணர்ச்சி உங்களுக்கு உண்டாகவே உண்டாகாது. ஆயிரந்தடவை நீங்கள் பிரயத்தனப் படலாம்; ஆனால் எல்லாம் வீண்தான். உலக சுகங்களின் மீது உங்களுக்கிருக்கப்பட்ட பற்று உலர்ந்து போகட்டும், அதாவது இல்லாமற் போகட்டும், உடனே கடவுளுணர்ச்சி உண்டாகும்.

* * *

ஞானமில்லாதவன், பிறருக்கு ஞானோபதேசம் செய்ய முற்படுவது, தனக்குப் படுக்கையில்லாதான், பிறரைத் தன் படுக்கையில் படுத்துக் கொள்ளுமாறு சொல்வது போலிருக்கிறது.

* * *

தர்க்கவாதம் செய்வது எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. தர்க்கத்திற்கெல்லாம் அப்புறப்பட்டவர் கடவுள். உலகத்திலுள்ள சகலமானவற்றையும் நான் கடவுள் மயமாகவே காண்கிறேன். அப்படி யிருக்க தர்க்கம் செய்வதில் என்ன பிரயோஜனம்?

* * *

பயப்படாதீர்கள். உங்களை வழிநடத்திச் செல்கிறவர் கடவுள். அப்படியிருக்க யாருக்கு நீங்கள் பயப்படவேண்டும்? கடவுளே உங்களுடைய துணையாயிருக்கிறார். அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை அழைத்துச் செல்வார்.

* * *

எவன், நான் அடிமை, அடிமை யென்று சொல்லிக் கொண்டிருக் கிறானோ அவன் உண்மையிலேயே அடிமையாகி விடுகிறான். உலக பந்தங்களிலிருந்து நான் விடுதலை பெற்றி ருக்கிறேன்; நான் சுதந்திர புருஷன் என்று எவன் சொல்லிக் கொண்டிருக்கிறானோ அவன் உண்மையிலேயே சுதந்திர புருஷனா கிறான். பந்தம் என்பது மனதைப் பொறுத்தது; சுதந்திரம் என்பதும் மனதைப் பொறுத்தது,

* * *

ஒருவன் தன் திரண்ட செல்வத்தை யெல்லாம் கடவுளுக்கு அர்ப்பணஞ் செய்வானாகில் அதை அவர் பொருட்படுத்துகிறாரா என்ன? இல்லவே இல்லை. அன்பையும் பக்தியையும் எவன் அளிக்கிறானோ அவன்மீதுதான் அவருடைய திருவருள் விழுகிறது. அவரால் பெரிதும் மதிக்கப்பெறுவது அன்பு, பற்றின்மை, துறவு ஆகிய மூன்றுந்தான்.

* * *

அறிவு, பலவீனமுடையது; நம்பிக்கை, சர்வ சக்தியை யுடையது. அந்த நம்பிக்கைக்கு முன்னர், இயற்கையின் சக்திகள் கூட ஒதுங்கி வழி விடுகின்றன. ஆத்மார்த்தமான முன்னேற்றத்திற்கு வேர் போலிருப்பது நம்பிக்கை. மற்றவைகளை யெல்லாம் நீங்கள் ஒதுக்கித் தள்ளி விடலாம்; ஆனால், நம்பிக்கை மட்டும் உங்களுக்கு இருக்க வேண்டும்.

* * *

புலன்களிடத்தில் உனக்கு எவ்வளவுக் கெவ்வளவு பற்றுதல் குறைகிறதோ அவ்வளவுக் கவ்வளவு கடவுளிடத்தில் நீ கொண் டிருக்கிற அன்பு அதிகமாகும். எவ்வளவுக்கெவ்வளவு கடவுளருகில் நீங்கள் வருகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்மீது உங்களுக் கிருக்கும் பக்தியும் அதிகப்படும்.

* * *

உண்மையான ஒரு பக்தன் எப்படி நினைக்கிறான், எப்படி உணர்கிறான் தெரியுமா? ஆண்டவனே, நீ எஜமானன்; நான் உன் வேலைக்காரன்: நீ தாய்; நான் உன் குழந்தை; நீ எல்லாமும்; நான் உன்னிலே ஓர் அமிசம்: இப்படியாக நினைக்கிறான்; உணர்கிறான்.

* * *

உலகத்திலே நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதாவது கடவுளை நேசிக்கிறவர்களும் இருக்கிறார்கள்; நேசியாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எல்லாருடைய இருதயத்திலும் கடவுள் இருக்கிறார்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *