
ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி
வெ. சாமிநாத சர்மா
2. வாழ்ந்த வாழ்க்கை
கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்றென்னுள்ளமும்…
– அப்பர்
ஸ்ரீராமகிருஷ்ண பரம்ஹம்ஸர் கடவுளின் குழந்தை. சாதாரண உலகரீதிக்கு அவர், ஓர் ஏழைக் குடும்பத்திலே பிறந்து, எல்லாப் பிள்ளைகளையும் போல் வளர்ந்து, எல்லாப் பிள்ளைகளுடனும் விளையாடி, எல்லோரையும் போல் ஒரு பெண்ணை விவாகஞ் செய்து கொண்டு, ஒரு கோயிற் பூஜகராக வாழ்க்கையை நடத்தினார் என்று சொல்லிவிடலா மாயினும், உண்மையில் அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் கடவுள் வாழ்க்கையாகவே இருந்தது; ஒவ்வொரு நிமிஷமும் அவர் கடவுள் நினைவாகவே இருந்தார். அவருடைய வாழ்க்கையைப் பாரமார்த்திகக் கண் கொண்டு பார்க்கவேண்டும்; அப்படிப் பாராமல் லௌகிக திருஷ்டியில் பார்த்தோமானால், குருடன் பாலைப் பார்த்த கதையாகத்தான் முடியும். ஸ்ரீராமகிருஷ்ணரே இந்தக் கதையைச் சொல்லி யிருக்கிறார். ஓர் ஊரில் ஒரு குருடன் இருந்தான். அவனுக்குப் பால் எப்படி இருக்குமென்று தெரிந்துகொள்ள ஆசை. தன் நண்பனொருவனை அழைத்து, பால் எப்படி இருக்குமென்று கேட்டான். அவன் கொக்கைப் போல் வெளுப்பாய் இருக்கும் என்றான். கொக்கு எப்படி இருக்கு மென்று கேட்டான் குருடன் மீண்டும். அரிவாளைப் போல் கழுத்து வளைந் திருக்கும் என்றான் நண்பன். அப்படியானால் அரிவாள் எப்படி இருக்கு மென்று சொல்வாயா என்றான் மறுபடியும் அந்த அந்தகன். எப்படியிருக்கு மென்று சொல்வது? அந்த நண்பனுக்குப் புரியவில்லை. சிறிது நேரங் கழித்து, தன் முன் கையை ஓர் அரிவாளைப் போல் வளைத்து வைத்துக் கொண்டு, இதைத் தொட்டுப்பார்; இப்படித்தான் இருக்கும் அரிவாள் என்றான். உடனே அந்தக் கபோதி, இப்பொழுது நன்றாகத் தெரிந்து கொண்டேன், பால் எப்படி இருக்குமென்று; முன் கை, வளைந்திருப்பதைப் போலிருக்கும் என்று சந்தோஷமாகக் கூறினான். இந்தக் கதையாகத்தான் ஆகும் பாரமார்த்திகக் கண்ணில்லாமல், ஸ்ரீராமகிருஷ்ணருடைய வாழ்க்கையை நோக்குவதும், அப்படி நோக்கினால் அவருடைய வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததோடு மட்டுமல்ல, தவறாகவும் புரிந்து கொள்ளும்படி யாகிவிடும். இதைக் காட்டிலும், ஒரு மகானுக்கு இழைக்கக்கூடிய அபசாரம் ஒன்றுமில்லை. அவரைப் போற்ற நமக்குத் தெரியாவிட்டாலும், பிறர் தூற்றுமாறு அவரை வைக்கக் கூடாதல்லவா?
ஒரு ராஜதந்திரியினுடைய ஜீவிய சரித்திரத்திலாகட்டும், ஒரு போர் வீரனுடைய வாழ்க்கை வரலாற்றிலாகட்டும். எத்தனையோ அதிசய சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்படி நிகழ்வது அவர் களுடைய வாழ்க்கைக்கு இயல்பு. அவர்களுடைய வாழ்க்கையில், வெற்றி தோல்விகளென்ன, உருட்டல் மிரட்டல்களென்ன, அந்தரங்க பகிரங்க சூழ்ச்சிகளென்ன, இப்படிப்பட்டவைகளைச் சந்திக்கிறோம். விதியை, மதி எதிர்த்து நிற்கிறது; மதியை, விதி, புறமுதுகிடச் செய்கிறது. வாதத்தினால் வெற்றி கிடைக்கிறது சிலசமயங்களில்; பிடிவாதத்தினாலும் காரியம் கை கூடுகிறது. வேறு சில சமயங்களில். மந்திரத்தில் மாங்காய் விழுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில்; தந்திரத்தினால் எதுவும் பலிக்காது போவது முண்டு. இன்னும் சில சந்தர்ப்பங்களில். வாழ்க்கைக்கு ஆத்மீக அடிப்படை யென்பதொன்றுண்டு என்பதை உணராத சாதாரண ஜனங்கள் இருக்கிறார்களல்லவா, அவர்களால் பெரிய மனிதர்க ளென்று கருதப்படுகின்றவர்களுடைய வாழ்க்கையில், இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்வதைக் காண்கிறோம். இவைகளைப் படித்தும் கேட்டும் விடுகிற அந்தச் சாதாரண ஜனங்கள், அவர் களிடத்தில் – அந்தப் பெரிய மனிதர்களிடத்தில் – ஒரு பிரமை கொண்டு விடுகிறார்கள்; அவர்களால்தான் உலகம் நிற்கிறது, நடக்கிறது என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.
ஆனால் அப்படியல்ல. யார், “பல் உயிர்களாகி எங்கும் பரந்தவன்காண் ஈசன்” என்ற உண்மையை உணர்ந்தவர்களா யிருக்கிறார் களோ, அந்த உண்மையை உணர்ந்ததன் விளைவாக எல்லா உயிர்களையும் தம்மைப் போல் நேசிக்கிறார்களோ அவர்களிடத்தில் தான், அந்த உயர்ந்தோர் மாட்டுத்தான் உலகம் இருக்கிறது; அவர்களால்தான் இயங்குகிறது. அவர்கள் தான் மகான்கள். அவர்கள் நன்றுடையார்; தீயதிலார். அவர்கள், தாம் வேறு, கடவுள் வேறு என்று நினைப்பதில்லை. அது வென்றால் எதுவென ஒன்றடுக்குஞ் சங்கையாதலினால், அது வெனலு மறவே விட்டு மதுவுண்ட வண்டென இருப்பர். இதனால், தாம் வேறு, கடவுள் வேறு என்று நினைக்கும் சாதாரண ஜனங்கள் அவர்களை மதிப்பதில்லை; பித்தரென்றும் பேயரென்றும் பரிகசிக்கின்றனர். ஆனால் அவர்கள்தான் கடவுளின் நிஜமான குழந்தைகள்; அவர்களிடத்திலிருந்துதான் தெய்வ வாக்கு பிறக்கிறது. கடவுள் சில சமயங்களில், பித்தர், குடியர், குழந்தைகள் ஆகிய இவர்கள் வாயிலாகப் பேசுகிறார் என்ற வாசகம் இங்குக் கூர்ந்து சிந்திக்கத் தக்கது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படிப்பட்ட நிஜமான குழந்தைகளிலே ஒருவர். அவரையறிய வேண்டுமனால், குழந்தை மனம் வேண்டும்; பாரமார்த்திகப் பார்வை வேண்டும். ஆதலின் வாசகர்களே, உங்கள் மனம் எங்குப் போயிருந்தாலும் சரி, உங்கள் பார்வை எங்குத் திரும்பி யிருந்தாலும் சரி, தயை செய்து அவற்றைத் திருப்பி வரவழையுங்கள்; குழந்தை மனமாகவும் பாரமார்த்திகப் பார்வையாகவும் மாற்றிக் கொண்டு விடுங்கள். நிச்சயம் ஸ்ரீராமகிருஷ்ணர் – ஆம்; மகானாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் – உங்களுக்குக் காட்சி யளிப்பார்.
வங்காள மாகாணத்திலுள்ள ஹூக்ளி ஜில்லாவில் காமர்ப்புகூர் என்பது ஒரு பெரிய கிராமம். இதில் க்ஷுதிராம் சட்டர்ஜி என்ற ஒரு பிராமணர், வைதிக நெறி தவறாது வாழ்க்கை நடத்தி வந்தார். இவருடைய தர்மபத்தினி சந்திரமணிதேவி. மனமொத்த இவ்விருவ ருடைய இல்லற வாழ்க்கையின் இனிமையில் கிராமவாசிகள் பெரிதும் ஈடுபட்டவர்களாய் இவர்களிடத்தில் அன்பும் மரியாதையும் செலுத்தி வந்தனர். இந்தத் தம்பதிகளுக்கு நான்காவது புத்திரராக ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பிறந்தார். இவர் பிறந்தது 1836ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பதினெட்டாந்தேதி காலை. இவருக்கு மூத்தவர்களாக ராமகுமாரர், ராமேசுவரர் என்ற சகோதரர் இருவரும், காத்யாயினி என்ற சகோதரி ஒருத்தியும் இருந்தார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் பிறப்பதற்கு முந்தி, க்ஷுதிராம்-சந்திரமணி தம்பதிகள் கயை க்ஷேத்திரத்திற்கு யாத்திரையாகப் போயிருந்தார்கள். இந்த யாத்திரைக்குப் பிறகு பிறந்த குழந்தையாகையால், ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, கயை க்ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் கடவுளின் திருநாமமாகிய கதாதரன் என்ற பெயரை வைத்தனர்.
கதாதரருடைய குழந்தைப் பருவம், அன்பு நிறைந்த சூழலின் மத்தியில் கழிந்தது என்று சொல்ல வேண்டும். இதற்கு முதலாவது காரணம், இவர் பிறந்ததும், குடும்பத்தில், வறுமை அகன்றது; தன லட்சுமியும் தானிய லட்சுமியும் பிரவேசித்தனர். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் இவரிடத்தில் தனியான ஓர் அன்பு செலுத்தினர். அதிருஷ்டத்தைக் கொண்டு வந்த குழந்தையல்லவா?
இரண்டாவது காரணம், கதாதரர், பார்ப்பதற்கு மிகவும் லட்சணமா யிருப்பார். குழந்தையைப் பார்த்தாலே, கையிலெடுத்துச் சீராட்ட வேண்டு மென்று தோன்றும். அவ்வளவு வசீகரமான தோற்றம். தேகத்தைத் தொட்டால் புஷ்பம் போல இருக்கும். முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்பு. குறு குறுத்த பார்வை. பெண்மை யெல்லாம் திரண்டு இங்ஙனம் ஆண் உருவெடுத்து வந்திருக்கிறதோ என்று சொல்லும்படியாக இருக்கும். கேட்பானேன் எல்லோரும் குழந்தையை எடுத்துக் கொஞ்சிக் குலாவுவதற்கு?
கதாதரருடைய பிற்காலப் பெருமைக்கு அறிகுறியெனச் சொல்லத்தக்க சிற்சில பாலிய நிகழ்ச்சிகளை மட்டும் இங்குச் சுருக்கமாக எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
கதாதரருக்குச் சிறு பிராயத்திலிருந்தே, இயற்கைக் காட்சி களில் ஈடுபட்டு, அவற்றில் தம்மை மறந்து விடக்கூடிய மனோ பரிபக்குவம் ஏற்பட்டிருந்தது. இதனைப் பூர்வ ஜன்மத்து வாசனை யென்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் நெறியிலே செல்கின்ற ஆத்மாக்களுக்கு இது சகஜமான அனுபவம். இயற்கைக் காட்சி களையெல்லாம் கடவுள் காட்சியாகவே அவர்கள் காண்பார்கள். ஒருநாள் காலை, கதாதரர், கிராமத்து நிலங்களூடே வரப்பின் மீது சென்று கொண்டிருந்தார். வானத்தில் கரிய மேகங்கள் திரண்டு சென்று கொண்டிருப்பதையும், அவற்றின் கீழே வெண்ணிறக் கொக்குகள் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருப்பதையும் பார்த்தார். அவற்றின் மீது இவர் மனம் சென்றது. கருமைக்குக் கீழே வெண்மை! நேர் விரோதமான நிறம்; ஆனால் அற்புதமான காட்சி! திருமாலும் லட்சுமியும் இல்லையா? கதாதரர் இந்தக் காட்சியைக் கண்டு மெய்மறந்து போய் அப்படியே கீழே விழுந்துவிட்டார். அந்த வழியே அகமாத்தாக வந்தவர்கள் பார்த்து இவரை வீடு தூக்கிச் சென்றார்கள். இந்த மாதிரி தம்மை மறந்து நிற்கிற நிலை இவருக்குச் சிறு வயதிலேயே பல தடவை ஏற்பட்டிருக்கிறது.
இயற்கைக் காட்சிகளிலே யாருக்கு அதிகமான ஈடுபாடு இருக்கிறதோ அவர்கள், கவிதை, சித்திரம், சங்கீதம் ஆகிய இப்படிப் பட்டவைகளில் அதிகமான விருப்பமுடையவர்களாயிருப்பார்கள். ஏன், அவர்களே கவிஞர்களாகவும், சித்திரக்காரர்களாகவும், சங்கீதம் பயில்வோராகவும் திகழ்தல் கூடும். அவர்கள் மனம் விரைவிலே ஒன்றுபடும்; ஒரு நிலையிலே நிற்கும். இந்த ஒரு நிலை மனந்தான் அவர்களைக் கடவுள் நெறியிலே அழைத்துச் செல்கிறது; அந்தக் கடவுளோடு அவர்களை ஒன்று படுத்துகிறது. இதனாலேயே காவியம், ஓவியம், இசை ஆகிய இவை பலவும் கடவுளைக் காட்டும் வழிகாட்டிகள் என்று சொல்வார்கள் பெரியோர்கள்.
கதாதரருக்கு, அழகான சரீரத்தைப் போலவே இனிமையான சாரீரமும் உண்டு. சிற்பக் கலையும் நன்றாகத் தெரிந்திருந்தது. கிராமத்துக் குயவர்கள், களி மண்ணினால் பல உருவங்களைச் செய்வார்களல்லவா? கதாதரர் அங்கெல்லாம் சென்று, அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று நுணுக்கமாகக் கவனிப்பார். மணிக் கணக்காக இப்படி உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். சிறு பிள்ளைதானே? சிறிது கூட சலிப்புக் காட்ட மாட்டார். தாம் பார்த்த உருவங்களை அப்படியே செய்தும் விடுவார். அவை அழகாயிருந்தன வென்று சொல்லவும் வேண்டுமோ? கைத் திறனும் மன ஒருமைப் பாடும் சேர்ந்து செய்த உருவங்களல்லவோ? இங்ஙனம் பழகிப் பழகி கதாதரர் ஒரு சிறந்த சிற்ப நிபுணராகி விட்டார். சிற்பக் கலையில் கைதேர்ந்த பலரும் – வயதும் அனுபவமுடையவர்கள் – இவருடைய ஆலோசனையைக் கேட்கத் தொடங்கினார்கள்; சிறு பிள்ளைதானே என்று அலட்சியம் செய்ய வில்லை. இவருடைய சிற்பக் கலைத் திறமையிலே அவர்களுக்கு அவ்வளவு மதிப்பு!
கதாதரர், இங்ஙனம் அழகான உருவங்களைச் செய்து என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? விற்றுவிடுவார். பார்த்தவர்கள் வாங்காமலிருக்க மாட்டார்கள். அவைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்படிக் கிடைக்கிற பணத்தைக் கொண்டு, தம்முடன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். இந்தச் சிறிய உடலிலே எவ்வளவு பெரிய மனம்!
கதாதரர், சாரீர சம்பத்துடையவராய் இருந்தபடியால் கேட்பவர்கள் அனுபவிக்கக் கூடியவிதமாகப் பாடுவார். பாடுகிறபோது அபிநயமும் பிடிப்பார். கிராம ஜனங்கள் தங்கள் தங்கள் வீட்டுக்கு இவரை அழைத்து வந்து பாடச் சொல்லிக் கேட்டும், ஆடச் சொல்லிப் பார்த்தும் அக மகிழ்வார்கள். சிறப்பாகப் பெண்கள் இவரிடத்தில் அதிக பிரியங் காட்டினார்கள். இவருக்குப் பிடித்தமான தின்பண்டங்கள் செய்து கொடுப்பார்கள். அயல் வீட்டுப் பிள்ளையாயிற்றே என்ற சங்கோஜம் சிறிதுமில்லாமல் சகஜமாக இவரிடத்தில் பழகுவார்கள். சுருக்கமாக, கதாதரர், கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் குழந்தையாகவும் இருந்தார்.
கதாதரர், பிள்ளைப் பருவத்திலிருந்தே, தமது நடை உடை பாவனைகளால் மற்றவர்களை மகிழ்விக்கும் ஆற்றல் படைத்தவராயிருந்தார். சில சமயங்களில், பெண்ணுடை தரித்துக் கொண்டு, அண்டை அயலிலுள்ள வீடுகளுக்குச் செல்வார். யாரோ பெண் குழந்தை வந்திருக்கிறதென்று நினைத்து, அங்குள்ள பெண்கள் இவரைத் தங்கள் இருப்பிடத்திற்குத் தாராளமாக அழைத்துச் சென்று இவருடன் கூச்சமில்லாமல் பழகுவார்கள்.
திடீரென்று இவர், தமது பெண்ணுடையைக் களைந்து விட்டு, கதாதரனாகத் தோன்றுவார். ஏமாற்றமடைந்து போனோமே யென்று அவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இவரும் கூடச் சிரிப்பார். பிறரைச் சந்தோஷப்படுத்துவதிலே இவருக்கு எப்பொழுதும் ஒரு சந்தோஷம்.
கதாதரருக்கு ஞாபக சக்தி நிரம்ப உண்டு. எதுவும் இவர் மனதிலே சீக்கிரம் பதிந்து விடும். பார்த்ததை அப்படியே செய்வார்; கேட்டதை அப்படியே ஒப்புவிப்பார். நமது நாட்டில் தெருக் கூத்துக்கள் நடைபெறு வதுண்டல்லவா? இதிகாச புராணங்களிலே வரும் கதைகளே நாடகங்களாக நடித்துக் காட்டப்பெறும். காமர்ப்புகூரிலும் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களிலும் நடை பெறும் இந்தத் தெருக்கூத்துகளுக்கு கதாதரர் விடாமல் சென்று பார்ப்பார். அங்குப் பாடப்பெறும் பாடல்களும், பேசப் படும் பேச்சுக்களும் இவருக்கு நன்றாக நெட்டுருவாகிவிடும். வீட்டுக்கு வந்து, தாம் பார்த்ததையும் கேட்டதையும் அப்படியே நடித்துக் காட்டுவார். இங்ஙனம் சிறு வயதிலேயே இவருக்கு புராண இதிகாசக் கதைகளில் நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருந்தது; அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களாக நடித்துக் காட்டும் ஆற்றலும் இருந்தது. எந்தப் பாத்திரமாக நடிக்கிறாரோ அந்தப் பாத்திரமாகவே ஆகி விடுவார். இந்த மாதிரி சம்பவங்கள் சில இவருடைய பாலியத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய மாந்தோப்பு. பசும்புல் மூடிய மைதானத்தின் நடுவே இந்தத் தோப்பு இருந்தது. காலை நேரம். சூரியன் தன் கிரணங்களை மெதுவாகத் தோப்புக்குள் புகவிட்டு அவைகளின் மூலம் அங்கு என்ன நடைபெறுகிறதென்று பார்த்துக் கொண்டிருக்கிறான். கதாதரரும், அவரையொத்த சில சிறுபிள்ளைகளும் அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கூச்சலும் வேடிக்கையுமாக இருக்கிறது. கதாதரர் ஒரு பாடலைப் பாடுகிறார். கூச்சலும் வேடிக்கையும் அடங்கி விடுகின்றது. பாட்டின் இனிமையிலே சிறு பிள்ளைகள் ஈடுபட்டு விடுகிறார்கள். சங்கீதம் முடிந்த்தும் ‘ நாமெல்லாம் சேர்ந்து ஒரு நாடகம் நடிப்போமா? என்று கதாதரர் கேட்கிறார். ஆட்சேபமென்ன? எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். உடனே நாடகம் துவங்குகிறது. என்ன நாடகம்? பக்கத்துக் கிராமத்திலே இவர்கள் பார்த்த நாடகந்தான். ஸ்ரீகிருஷ்ண பகவான் மதுரையிலே இருக்கிறார். பிருந்தாவனத்திலுள்ள கோபிகை திரீகள், அவரை விட்டுப் பிரிந்திருப்பதனால் அடைகிற துன்பத்தை வருணிக் கின்ற நாடகம். கதாதரர், ராதையானார்; மற்றச் சிறுவர்கள், கோபிகைகளானார்கள். இவர்களிலே ஒருத்தி பெயர் பிருந்தை. ராதை, பிரிவாற்றாமையால் பெரிதும் துயருறுகின்றாள். அவளுடைய உயிருக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என்று தோழிகள் அஞ்சுகிறார்கள். உடனே பிருந்தையை கிருஷ்ணனிடம் தூது அனுப்புகிறார்கள். பிருந்தை, புறப்படுவதற்கு முன், கிருஷ்ணனிடம் என்ன சொல்ல வேண்டுமென்று ராதையைக் கேட்கிறாள். அவளோ தன் மனத்தைக் கிருஷ்ணனிடம் பறிகொடுத்து விட்டிருக் கிறாள். எனவே அவளால் ஒன்றுஞ் சொல்ல முடியவில்லை. கண்களிலே நீர் மட்டும் பெருகிக் கொண்டேயிருக்கிறது. கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டே மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விடுகிறாள். அவ்வளவுதான். நாடகம் நின்று விட்டது. மூர்ச்சையாகிக் கீழே விழுந்து கிடப்பது யார்? ராதையென்ற பாவனையில் இருக்கிற கதாதரர்!
இன்னொரு சம்பவம். கதாதரருக்கு ஒன்பது வயது. கிராமத்திலே ஒரு நாடகம் நடைபெற்றது. அதில் கதாதரர் சிவனாக வேஷந்தரித்துக் கொண்டார். மெய்யெல்லாம் திருநீறு; தலையிலே சடைமுடி; இடுப்பிலே புலித்தோல்; கையிலே திரிசூலம். இந்தக் கோலத்துடன் கம்பீரமாக நடந்து வந்து மேடையிலே நின்றார். பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள். முகத்திலே ஈசுவர களை ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கதாதரருடைய நிலைமை யென்ன? மேடை மீது வந்து நின்றதுதான் தெரியும்; தம்பிதமாகி விட்டார். தாமே சிவனானார். கண்களிலே ஆனந்த பாஷ்பம். நாடகம் மேலே நடைபெறவில்லை. கதாதரருக்குச் சுயநிலை ஏற்பட மூன்று நாளாயிற்று.
இந்த மாதிரி இவர் அடிக்கடி சுயநிலை இழந்து விடுவதைக் கண்டு, உற்றார் உறவினர் பெரிதும் அஞ்சினர்; காக்கை வலி யென்று கருதினர். என்ன அறியாமை! ஆனால் கதாதரர், தமக்கு அந்தமாதிரி வியாதி யொன்றும் இல்லையென்றும், தம்மைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லையென்றும் உறுதியாகக் கூறுவார்.
கதாதரருக்குச் சிறு வயதிலிருந்தே அச்சமென்பது தெரிய வில்லை. வயதானவர்கள் போவதற்கு அஞ்சுகிற இடங்களுக்குக்கூட இவர் தைரியமாகச் செல்வார். நள்ளிரவானாலும் சரி, சுடுகாடானாலும் சரி, இவர் பயப்பட்டதே கிடையாது. அச்சமென்பது அறியாமையினின்று பிறந்தது. அந்த, அறியாமை பிறவியிலேயே இவரை விட்டு அகன்றது போலும்!
ஆனால் கதாதரருடைய பெற்றோர்கள் இதனை அறிவார்களா? உலக வழக்கப்படி இவருக்கு ஐந்தாவது வயதில் அட்சராப் பியாசம் செய்வித்தனர். அதிருஷ்டத்தோடு பிறந்த தங்கள் மகன் அறிவு நிறைந்தவனாகப் பிரகாசிக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு இருக்கு மல்லவா? ஆனால் கதாதரர் ஒழுங்காகப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவே இல்லை. தம்மைச் சுற்றியுள்ள இயற்கை யன்னையிடமிருந்து, உலகத்திடமிருந்து, கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ இருக்க, புதகங்களை வைத்துக் கொண்டு படிப்பதற்கு என்ன இருக்கிறது, வெறும் புத்தகப் படிப்பிலே என்ன பிரயோஜனம் என்ற எண்ணம் இவரையறியா மலே இவரிடத்தில் குடிகொண்டிருக்க வேண்டும். இதனால்தான் பள்ளிக்கூடப் படிப்பு இவருடைய கவனத்தை ஈர்க்கவில்லை. சிசு போதம் என்ற முதற்பாட புத்தகத்திற்கு மேல் இவர் மனஞ் செல்லவில்லை. கணக்கா? அது பிடிக்கவே பிடிக்காது. எப்படியோ கூட்டல் மட்டும் தெரிந்து கொண்டார். கணக்குக்கு அடங்காத ஒன்றின் மீது மனம் லயித்துப் போயிருக்கிறவர்கள், சாதாரண கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக் கொண்டிருப்பார்களா? அவர்களால் தான் முடியுமா? உலகத்தினருக்குச் சாதாரணமாயிருப்பது அவர்களுக்கு அசாதாரணமாகவும் அனாவசியமாகவும் இருக்கிறது. அவர்களுக்குச் சாதாரணமாகவும் அவசியமாகவும் இருப்பது உலகத் தினருக்கு நேர் விரோதமா யிருக்கிறது. சரித்திர, காலந்தொட்டு அவதரித்து வந்திருக்கிற மகான்களின் வாழ்க்கையில் இதனைச் சகஜமாக காண்கிறோம்.
கதாதரர் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் செல்லவில்லையென்றாலும், அங்குப் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் இவரிடத்தில் மிகவும் அன்பு காட்டினர்; மரியாதையாகவும் நடந்துகொண்டனர். பள்ளிக்கூடம் முடிந்ததும், மாலை நேரங்களில், கதாதரர், பிள்ளைகளை ஒன்றுகூட்டி வைத்துக் கொண்டு, ஆடியும் பாடியும் அவர்களை மகிழ்விப்பார். தாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்த புராண இதிகாசக் கதைகளை அவர்களுக்கு அழகாக எடுத்துச் சொல்வார். இதனால் அவர்கள் இவரிடத்தில் அதிக ஈடுபாடுடையவர்க ளானார்கள்.
பிள்ளைகள் அனைவரும் இவரிடத்தில் ஈடுபட்டிருக்கிறார் களென்பதையும், இதற்குரிய காரணத்தையும் பள்ளிக்கூட ஆசிரியர் தெரிந்து கொண்டு ஒருநாள் பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு இவரைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவ்வளவுதான். இதற்குப் பிறகு ஒழுங்காகப் பள்ளிக்கூடம் வருவதில்லை யென்பதற்காகவோ, பாடங்களைச் சரியாகப் படிப்பதில்லை யென்பதற்காகவோ இவரைக் கடிந்து கொண்டதே கிடையாது. அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும், பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு இவரை ஓரிரண்டு பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டுவிட்டுத்தான் வீட்டுக்குப் போவார்.
கதாதரர் பள்ளிக்கூடப் படிப்பிலே அதிக சிரத்தை காட்ட வில்லையென்றாலும், படித்தவர்களைக் காட்டிலும் அதிக அழகாகவும், கேட்பவர் மனத்திலே பதியும் படியாகவும் புராண இதிகாசக் கதைகளைச் சொல்வார். தன்னுடனொத்த சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு நடித்துக் காட்டும் நாடகங்களுக்கு வேண்டிய பாடல்களையும் வசனத்தையும் இயற்றிக் கொடுப்பார். இயற்கையிலேயே இவருக்கு அறிவு நிரம்பி யிருந்தது என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை. படித்த புலவர்களுக்குப் புரியாத விஷயங்கள் இவருக்குச் சுலபமாகப் புரிந்துவிடும்.
யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய ஈமச் சடங்குகள் முடியுந் தறுவாயில், பல பண்டிதர்களை வரவழைத்துப் பிரசங்கங்கள் செய்விப்பது நம் நாட்டில் சில இடங்களில் வழக்கம். ஒரு சமயம் காமர்ப்புகூரிலுள்ள ஒரு பணக்காரருடைய வீட்டில் இத்தகைய பண்டித சபை யொன்று நடைபெற்றது. கூடியிருந்த பண்டிதர்கள் பல பிரச்சனைகளைக் குறித்துத் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். கதாதரர் அவர்களுக்குச் சமதையாக இருந்து தர்க்கம் செய்தார். இவருடைய புத்தி சாதுரியத்தைக் கண்டு பண்டிதர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்தச் சிறுபிள்ளை, எதிர்காலத்தில் அதி மானுஷ்ய சக்தியுடையவ னாவான் என்பதில் சந்தேகமில்லை என்று ஆசீர்வதித்தார்கள்.
கதாதரருக்கு, பிரகலாதனிடத்தில் ஈடுபாடு அதிகம். அவனுடைய ஆழ்ந்த பக்தியையும் கடவுளின் உண்மையிலே அவனுக்கிருந்த உறுதியையும் இவர் படித்துச் சொல்கிறபோது கேட்பவர்களுக்கு மயிர்க் கூச்செறியும். காமர்ப்புகூரில் மாது என்ற ஒரு கைக்கோளன் இருந்தான். நல்ல பக்திமான். அவன், அடிக்கடி சாயங்கால நேரங்களில் பள்ளிக் கூடம் விட்டதும், கதாதரரைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், தன்னாலியன்ற உபசரணை களைச் செய்து, பிரகலாதனுடைய சரித்திரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்பான். படித்தறியாத தானும், தன்னைப் போன்றவர்களும் பிரகலாதனுடைய சரித்திரத்தைக் கேட்டுப் பயன் பெற வேண்டுமென்பது அவன் எண்ணம். கதாதரர், சிறு பிள்ளையா யிருந்தும் அபார சக்தியுடையவர். அவர் ஒரு தெய்வாமிசம் என்பது அவனுடைய நம்பிக்கை. இங்ஙனமே கிராமத்திலுள்ள வேறு சிலரும் கதாதரரிடத்தில் பக்தி பூண்டொழுகி வந்தனர்.
சீனிவாசன் என்ற ஒருவன். சின்னு என்று இவனை எல்லோரும் அழைப்பர். சங்கு அறுப்பது இவன் தொழில். படிப்பு வாசனை யில்லாதவன். இவனுக்குக் கதாதரரிடத்தில் அபார பிரேமை. இவரை ஒரு தெய்வமாகவே கருதி வழிபட்டு வந்தான். இவரைத் தனியாக ஓரிடத்திற்கு அழைத்துக் கொண்டு போவான். அங்கே இவரை உட்கார வைத்து, கோயிலிலுள்ள ஒரு விக்கிரகத்திற்கு என்னென்ன மாதிரி பூஜை செய்வார்களோ அந்தந்த மாதிரியே இவரையும் பூஜிப்பான். மலர்களால் அர்ச்சனை, தீபங்காட்டல், நைவேத்தியம் படைத்தல் எல்லாம் நடைபெறும். கடவுளை நேரிலேயே கண்டு விட்டதாக ஆனந்த பரவசனாவான். ஆனந்த மேலீட்டால் அழுவான். இங்ஙனம் கதாதரரிடத்தில் ஈடுபட்டவர்கள் கிராமத்தில் இன்னும் சிலர் இருந்தனர். அப்பொழுது இவருக்கு என்ன வயது தெரியுமா? ஏழெட்டு வயதுதான்!
காமர்ப்புகூரில் ஒரு சத்திரம் உண்டு. பூரி-ஜகந்நாத க்ஷேத்திரத்திற்கு யாத்திரையாகச் செல்லும் சாதுக்கள் பலரும் இங்கு வந்து தங்கிப் போவது வழக்கம். சிறுபிள்ளையாகிய கதாதரர் அவர் களிடம் சென்று பழகுவார். அவர்களுக்குத் தேவையான விறகு, நீர் ஆகியவைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்; இன்னும் பலவிதங்களிலும் அவர்களுக்குச் சேவை செய்வார். அவர்கள் நடத்தும் ஆத்மார்த்தமான சம்பாஷணைகள், சங்கீர்த்தனங்கள் முதலியவைகளில் பக்தி சிரத்தையோடு கலந்து கொள்வார். அவர்களுடைய யாத்திரை வரலாறுகளைக் கேட்டு அகமகிழ்வார். அவர்களுடைய தெய்வபக்தி, எளிமையும் தூய்மையும் கலந்த வாழ்க்கை, அகப்பட்டதைக் கொண்டு திருப்தியடைகிற மனப்பான்மை ஆகிய இவை யாவும் பாலிய கதாதரருடைய பசுமனதில் நன்றாகப் பதிந்து விட்டது. அவர்களுடைய துறந்த வாழ்க்கையில் பற்றுள்ளங் கொண்டு விட்டார்.
ஒருசமயம் இவருடைய தாயார், இவருக்கு ஒரு புதிய துணியைக் கொடுத்து அதைக் கட்டிக்கொள்ளும்படி செய்தார். அப்படியே கட்டிக் கொண்டு இவர் மேலே சொன்ன சாதுக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வழக்கம் போல் சென்றார். அவர்கள் கௌபீன தாரிகளாயிருப்பதைக் கண்டார். என்ன தோன்றியதோ என்னவோ? தாமும் அப்படி உடுத்திக் கொள்ளத் தீர்மானித்து விட்டார். கட்டியிருந்த புதுத்துணியைத் துண்டு துண்டாகக் கிழித்து, அவைகளில் இரண்டு துண்டுகளை எடுத்து அவர்களைப் போல் கோவணமும் அரைஞாண் கயிறுமாக உடுத்திக் கொண்டார். இந்த வேஷத்துடன் தாயிடம் ஓடிவந்து அம்மா, நான் எப்படி ஒரு சாதுவாக, சந்நியாசியாக ஆகி விட்டேன், பார் என்று சந்தோஷத்துடன் கூறினார். இவரை இந்தக் கோலத்தில் பார்த்ததும் தாயாருக்குக் கோபம் வந்தது. எந்தத் தாயினுடைய கண்கள்தான், தன் மகனைத் துறவியாகக் காணச் சகிக்கும்? கடிந்து கொண்டாள். ஆனால் உடனே அந்தத் தாய் மனம் இரங்கிவிட்டது. குழந்தையைக் கட்டியணைத்து உச்சி மோந்தாள்.
கதாதரர், ஏழாவது வயதில் தந்தையை இழந்த தனயனானார். குடும்பப் பொறுப்பை மூத்த மகனான ராமகுமாரர் ஏற்றுக் கொண்டார். இரண்டு வருஷங்கழித்து, கதாதரருடைய ஒன்பது வயதில், இவருக்கு உபநயனம் செய்வித்தார். உபநயனச் சடங்கின் போது, உபநயனம் செய்விக்கப்பெற்ற பிரும்மசாரி பவதி பிட்சாந் தேஹி என்று சொல்லிக் கொண்டு பிட்சை கேட்கவேண்டு மென்பது சம்பிரதாயம். அநேகமாக உற்றார் உறவினர்களிடமே இந்தப் பிட்சை கேட்க வேண்டும்; அல்லது பிராமணர் வீடுகளிலேயே கேட்கவேண்டும்; பரம்பரையாக நடைபெற்று வருகின்ற முறை இது. ஆனால் கதாதரர் இப்படிச் செய்யச் சம்மதப்பட வில்லை. தனி என்ற கொல்ல மாது ஒருத்தி, சந்திரமணி தேவியின் அன்புக்கு உரியவள்; நேரிய வாழ்க்கையும் நிரம்பிய சீலமும் உடையவள். அவளிடம் சென்று பிட்சை கேட்டார் கதாதரர். இது கூடாது என்று தடுத்தனர் கூட இருந்தவர்; அந்தணருக்கு இஃது இழுக்காகு மென்று சீறினர். ஆனால் கதாதரர் கேட்கவில்லை. அந்த அம்மையாரிடமிருந்து பிட்சை பெறுகிற வரையில் சாப்பிடப் போவதில்லை யென்று சொல்லி ஓர் அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு விட்டார். உபநயனச் சடங்குகள் மேற் கொண்டு நடைபெறவில்லை. ஒரு நாள் பூராவும் இப்படிக் கழிந்தது. கடைசியில் கதாதரருடைய விருப்பம் நிறைவேறியது. அந்தக் கொல்ல மாதிடமிருந்தே பிட்சை பெற்றார். உபநயனச் சடங்குகள் தொடர்ந்து நடைபெற்று முடிந்தன. பரந்த உள்ளத்தில் குறுகிய எண்ணங்கள் இடம் பெறுவதில்லை யென்பதற்கு இஃதோர் உதாரணம்.
தகப்பனார் இறந்த பிறகு குடும்பப் பொறுப்பை எற்றுக் கொண்ட ராமகுமாரர், சிறிது காலங் கழித்து கல்கத்தா சென்று அங்கு ஜோதிடராகவும், பெரிய மனிதர் வீடுகளில் பூஜகராகவும் இருந்து ஜீவனம் நடத்தி வந்தார். கூடவே, இலவசமாக சம்கிருத பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வந்தார். இதுதான் இந்தியாவினுடைய பண்பாட்டின் விசேஷம். ஒருவன், எவ்வளவு வறுமையுடையவனாக இருந்த போதிலும் அவன், தான் கற்ற வித்தையை பிறருக்கு இலவச மாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமே தவிர, அதற்கு எவ்வித பிரதிப் பிரயோஜனத்தையும் எதிர்பார்க்கக் கூடாது. வித்தையை வர்த்தகம் செய்தல் கேவலமென்று இந்தியாவில் தொன்று தொட்டு கருதப்பட்டு வந்திருக்கிறது. ராமகுமாரருடைய செறிந்த புலமையும் அடங்கிய தன்மையும், அவரைப் பெரிய மனிதர் பலருடைய நன் மதிப்புக்குரியனவாக்கின. தமது சம்பாத்தியத்தில் ஒரு சிறு பகுதியை, காமர்ப்புகூரிலுள்ள தமது தாயார், சகோதரர்கள் அடங்கிய குடும்பத்திற்கு அனுப்பிவந்தார்.
கதாதரரோ, இங்குக் காமர்ப்புகூரில், பள்ளிக்கூடம் போவதை அடியோடு நிறுத்தி விட்டார். தெய்வத்திற்குப் பூஜை செய்வதும் தாய்க்குத் தொண்டு செய்வதும் இவருடை முக்கிய வேலைகளாயின. வழக்கம் போல் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு கடவுள் சம்பந்தமான பாடல்கள் பாடுவதிலும் நாடகங்கள் ஆடுவதிலும் மற்றப் பொழுதைப் போக்கி வந்தார். இப்படியே இவரை விட்டுவைக்கலாமா? இவருடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொண்டிருந்த இராமகுமாரர் இவரைக் கல்கத்தாவுக்கு வரவழைத்து தம்முடனிருத்திக் கொள்ளத் தீர்மானித்தார். தமையனார் விருப்பத்திற் கிணங்க கதாதரர் தமது பதினேழாவது வயதில் கல்கத்தா சென்றார்.
கல்கத்தா வந்தடைந்த கதாதரரை, பெரிய மனிதர் வீடுகளில் தாம் செய்யும் பூஜைகளுக்கு உதவியாயிருக்கும் படியும், கூடவே சம்கிருதம் படிக்குமாறும் ராமகுமாரர் கூறினார். அப்படியே கதாதரரும் சில வீடுகளில், தமையனாருக்குப் பதில் பூஜை செய்து வந்தார். ஆனால் இவர் செய்த பூஜைக்கும் மற்றவர்கள் செய்கிற பூஜைக்கும் எவ்வளவோ வித்தியாசமிருந்தது. சுருக்கமாக இவர் மனம் வைத்துப் பூஜை செய்தார். இங்ஙனம் இவர் மனம் பூஜையில் சென்றதே தவிர படிப்பில் செல்லவில்லை. ஆயினும் தமையனாருடைய விருப்பத்தை மறுக்க முடியாதவராய் சமஸ்கிருத இலக்கணத்தைப் படிக்கத் தொடங்கினார். சில நாட்கள் படித்தார். மனதில் பதிந்தால்தானே?
இப்படியிருக்கிற போது ஒருநாள் இவர் தமது அறையின் தாழ்வாரத்தில் தனிமையில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண் டிருந்தார். அப்பொழுது இவருக்குத் தெரிந்த பண்டிதர் – நியாயம், மீமாம்சை இவைகளில் மகா வல்லவர்- ஒரு சிறு மூட்டையை எடுத்துக் கொண்டு வந்தார். என்ன மூட்டை அது சுவாமி? என்றார் கதாதரர். ஒன்றுமில்லை; கொஞ்சம் அரிசியும் இரண்டு வாழைக்காயுந்தான். அதோ இருக்கிற அந்த மாளிகையில் கிடைத்தது என்றார் அந்தப் பண்டிதர். அவருடைய பதில் கதாதரரைச் சிந்தனையிலாழ்த்தி விட்டது. அடே, இவ்வளவு படித்ததற்கு இந்த அரிசியும் வாழைக்காயுந்தானா? எழுத்தறி வில்லாத ஒரு சாதாரண கூலிக்காரன் கூடவல்லவோ இதைக் காட்டிலும் அதிகமாகச் சம்பாதிக்கிறான். இந்த அற்பத்திற்காகவா தர்க்கமென்ன, மீமாம்சை யென்ன இவைகளை யெல்லாம் படிக்க வேண்டும்? என்றெல்லாம் எண்ணினார். அந்த நிமிஷத்திலிருந்து இந்த வயிற்றுப் படிப்பு வேண்டவே வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார். சில நாள் படிப்பு ஒரு நிமிஷத்தில் முடிந்து விட்டது. தமையனார் எவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை.
இப்படி யிருக்கையில் ராமகுமாரருக்குப் புதிய வேலை யொன்று கிடைத்தது. கல்கத்தாவுக்குச் சுமார் நான்கு மைல் தொலைவிலுள்ள தட்சிணேசுவரம் என்ற இடத்தில் ராணி ராசமணி என்ற ஒரு ஜமீன்தாரிணி, காளிதேவிக்குப் பெரிய தொரு கோயில் கட்டுவித்தாள். இதனோடு சேர்ந்தாற் போல் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் நிர்மாணிக்கப் பெற்றன. நல்ல இடம்; கங்கைக் கரை; சுற்று முற்றும் பழந்தருமரங்களும் குளிர்தரு சோலைகளும். இதனால் யாத்திரிகர்கள் வந்து தங்கிப் போவதற்குச் சௌகரியமான இடமாயிருந்தது. மற்றும் ராசமணி அம்மையார், பரதேசிகளுக்குச் சாப்பாடு கிடைக்கும்படியான ஏற்பாடுகளும் இங்குச் செய்தார். இதனாலும் இங்கே ஜனங்கள் எப்பொழுதும் இருந்து கொண்டிருந்தார்கள்.
இந்தக் காளிகோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப் பெற்றார் ராமகுமாரர். இதனால் தட்சிணேசுவரத்திலேயே இவர் வசிக்க வேண்டிய தாயிற்று. கூடவே சகோதரரான கதாதரரையும் அழைத்துக் கொண்டு போனார். சில நாட்கள் கழித்து இவர்களுடைய சகோதரியின் புத்திரர் இருதயர் என்பவரும் வந்து சேர்ந்து கொண்டார். ராமகுமாரர், தமது பூஜைத் தொழிலிலே பக்தி சிரத்தையோடு ஈடுபட்டார். கதாதரரோ, அங்குள்ள தெய்வங்களை வழிபட்டுக் கொண்டும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளை அனுபவித்துக் கொண்டுமிருந்தார்.
ஒரு நாள் கதாதரர், கங்கைக் கரையிலுள்ள களிமண்ணை எடுத்து அதைக் கொண்டு ரிஷபவாகன ரூடராக சிவபெருமானின் உருவத்தைச் செய்து வைத்தார். அழகா யிருந்ததென்று சொல்லவும் வேண்டுமோ? பார்த்தவர் அனைவரும் அதன் அழகை வியந்து பாராட்டினர். அப்பொழுது அந்த வழியாக மதுரநாத விசுவாசர் உலாவிக் கொண்டிருந்தார். இவர் ராணி ராசமணி அம்மையாரின் மருமகப் பிள்ளை. அந்த அம்மையாரின் ஆதி பாதிகளை யெல்லாம் இவர்தான் நிருவாகம் செய்துவந்தார். இவர் மேற்படி உருவத்தைப் பார்த்து அதிசயங்கொண்டு ‘இந்த அழகிய உருவத்தைச் சமைத்தது யார்?’ என்று அருகிலிருந்தவர்களைக் கேட்டார். கதாதரர் என்று அறிந்து அவரைக் காண ஆவல் கொண்டார். அப்படியே கதாதரர் மதுரநாதரை வந்து பார்த்தார். இவருடைய இந்த முதல் சந்திப்பு குரு சிஷ்யத் தொடர்பாக முற்றி விட்டது. தமது குருவாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவ்வப் பொழுது இடும் கட்டளைகளை அவ்வப்பொழுது மதுரநாதர் நிறை வேற்றி வந்த வரலாறுகளை நாம் பின்னாடி பார்க்கப் போகிறோமல்லவா?
மதுரநாதர், கதாதரரை, அவருடைய தமையனார் ராமகுமாரருடைய அர்ச்சக வேலையில் உதவிசெய்து கொண்டிருக்கும்படி கேட்டுக் கொண்டார். கதாதரரும் அப்படியே செய்துகொண்டு வந்தார்.
விஷ்ணுகோயிலில் வேறோரு பிராமணர் அர்ச்சகரா யிருந்து வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் இவருடைய அஜாக்கிரதையினால் பூஜா விக்கிரகத்தின் கால் ஒடிந்து போய்விட்டது. எல்லோரும் கலவர மடைந்தனர். மூளியாகப் போன உருவத்திற்குப் பூஜை செய்யலாமா என்பதைப் பற்றி பண்டிதர்களுக்குள் வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்றன. ராணி ராசமணி அம்மையாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியில் கதாதரரையும் அபிப்பிராயங் கேட்டார்கள். ஒரு ஸ்திரீ, தன் புருஷனுடைய காலொடிந்து போனால் அந்தப் புருஷனை அந்த ஸ்திரீ என்ன செய்யவேண்டுமென்று யோசனை சொல்கிறார்கள் இந்தப் பண்டிதர்கள்? அவனை நிராகரித்து விடவேண்டுமென்று சொல்கிறார்களா? அல்லது வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெறவேண்டும் என்று சொல்கிறார்களா? என்று திருப்பிக் கேட்டார். பண்டிதர்கள் சிகிச்சை செய்வதுதான் சரியென்று ஒப்புக்கொண்டார்கள். கதாதரர், ராணியைப் பார்த்து நீங்களென்ன, இறந்து போன உங்கள் கணவரை – ராணி ராசமணி அம்மையார் ஒரு விதவை யென்பதை இங்கு வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். – இதுகாறும் வழிபட்டுக் கொண்டு வந்தீர்களா? அல்லது வெறும் விக்கிரகத்தை வழிபட்டுக் கொண்டு வந்தீர்களா? என்று கேட்டார். இந்தக் கேள்வியின் அர்த்தத்தை அந்த அம்மையார் புரிந்து கொண்டு விட்டார். கதாதரர் ஒரு சிறந்த சிற்பி யென்பது அவருக்குத் தெரியும். இவரைக் கொண்டு அந்த விக்கிரகத்தைச் செப்பனிடச் செய்து, இவரையே அந்த விஷ்ணு ஆலயத்தின் அர்ச்சகராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். சுமார் ஆறுமாத காலம் இந்த வேலையைப் பார்த்தார் கதாதரர். பின்னர் இவர், காளி கோயிலின் அர்ச்சகராகவும், ராமகுமாரர் விஷ்ணு கோயிலின் அர்ச்சகராவும் மாறிக் கொண்டார்கள்.
காளிகோயிலின் அர்ச்சகராக கதாதரர் நியமிக்கப்பட்டவுடன் இவரிடத்தில் ஒரு பெரிய மாறுதல் தோன்றத் தொடங்கியது. வெறும் விக்கிரகத்திற்குத் தாம் பூஜை செய்வதாக இவர் கருதவே யில்லை. சர்வ ஜீவராசிகளையும் சிருஷ்டித்துக் காப்பாற்றுகின்றவள் எவளோ, நம்பினோரை ஆதரிக்கின்றவள் எவளோ, அவளே, அந்த ஜகன்மாதாவே, தமது போஷணையில் இருப்பதாகவும் அவள் சந்தோஷப்படுகிற வகையில் அவளுக்குச் சிசுருஷை செய்து வருவது தனது கடமை யென்றும் கருதினார். பரிசுத்தமான மலர்களைக் கொய்து கொண்டு வந்து அழகான மாலையாகத் தொடுத்து அணிவிப்பார்; இனிமையான பாடல்களைப் பாடுவார்; நல்ல வெயிலாயிருக்கிற பொழுது அருகில் நின்று விசிறிக் கொண்டிருப்பார்; நல்ல வெற்றிலையையும் பாக்கையும் பார்த்தால், அம்பாளுக்குப் பிடிக்குமென்று சொல்லி அழகான தாம்பூலச் சுருளாக மடித்துக் கொடுப்பார். இப்படியே தின்பண்டங்கள் விஷயத்திலும். சுருக்கமாக, காளிதேவியின் பூஜகராக நியமிக்கப் பெற்ற சில மாதங்கள் வரை, கதாதரர், தம்மை மறந்து அந்தக் காளிதேவியின் நினைவாகவே இருந்தார்.
இவருடைய நிலைமையைப் பார்த்தார் ராமகுமாரர் பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயந்தார். இப்படியே விட்டுவைக்க லாகா தென்று தீர்மானித்தார். இவரை காமர்ப்புகூருக்கு அனுப்பி, அங்கு உத்தம குலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர முக்கர்ஜியின் அருமைப் புதல்வி ஸ்ரீ சாரதாமணி தேவியை இவருக்கு விவாகம் செய்வித்தார். அப்பொழுது கதாதரருக்கு வயது இருபத்திரண்டு அல்லது இருபத்து மூன்று இருக்கும். சாரதாமணி தேவிக்கு வயது ஐந்து.
விவாகமானதும், கதாதரர், மீண்டும் தட்சிணேசுவரம் போந்து அம்பாளின் அர்ச்சகராக அமர்ந்து கொண்டார். அன்னையின் நினைவு முன்னைக் காட்டிலும் அதிகமாகிவிட்டது. எங்கும் எல்லாவற்றிலும் ஜகன்மாதாவையே கண்டார். அன்னையின் நினைவில் தமது நினைவை யிழந்து பலநாட்கள் இருந்ததுண்டு. இந்தக் காலத்தில் இவர் ஒரு கடவுட் பித்தராகவே இருந்தார். இவர் உடல் நலம் குன்றியது. கூட இருந்தவர்கள் பெரிதும் கவலை கொண்டார்கள். இந்தச் சமயத்தில், இவருடைய வாழ்க்கையில் சிரத்தை கொண்ட ராமகுமாரர் காலமாகி விட்டார். இவரைத் தனியாக ஒருவர் இருந்து பராமரித்துக் கொண்டிருக்க வேண்டியதா யிருந்தது. இந்தப் பொறுப்பை, ஏற்கனவே சொல்லப் பெற்ற இவருடைய சகோதரியின் மகனான இருதயர் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீராமபிரானுடைய பதினான்கு வருஷ வனவாசத்தின் போது, லட்சுமணப் பெருமாள், கூடவே நிழல் போலிருந்து சேவை செய்தார் என்று படித்திருக்கிறோம். ஆனால் இங்கே இருதயர், சுமார் முப்பது வருஷகாலம், ஸ்ரீராமதிருஷ்ணருக்கு, நிழல் போல் இருந்து தொண்டு செய்ததைப் பார்க்கிறோம்.
கதாதரருடைய தேக நிலையிலும் மனோ நிலையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. அர்ச்சகர் பொறுப்பினின்று விலக்கப்பட்டார். கட்டுகளற்ற ஒன்றின் மீது மனம் லயித்துப் போயிருக்கும் ஒருவரை எந்த விதமான கட்டுகளும் உட்படுத்த யாரும் விரும்ப மாட்டார்களல்வா? இந்தச் சந்தர்ப்பத்தில் ராணி ராசமணி அம்மையார் தேகவியோகமடைந்தார். மதுரநாதர் ஜமீன்தாரியின் நிருவாகத்தை ஏற்றுக்கொண்டார். அவர் கதாதரரிடம் அத்தியந்த விசுவாசம் கொண்டவரல்லவா? கதாதரருடைய ஆத்ம சாதனைக்குத் தேவையான சகல சௌகரியங்களையும் செய்து கொடுத்தார்.
இந்தக் காலத்தில் கதாதரருடைய உடலத்திற்குப் பல உபாதிகள் ஏற்பட்டன. பசியின்மை; தூக்கமின்மை; மேலெல்லாம் எரிச்சல். உடல் நிலைதான் இப்படியென்றாலோ, உள்ளத்திலே ஒரு குமுறல்; பெரிய புயற்காற்று அடித்துக் கொண்டிருந்தது. உடல் உபாதிகளுக்குப் பரிகராங் காண மதுரநாதருடைய முயற்சியின் பேரில், வைத்தியர்கள் பலர் வந்து பரிசோதனை செய்து பார்த்தனர். இன்ன வியாதி என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடலை யொட்டிய வியாதியாயிருந்தால் தானே? மனதோடு மட்டும் ஒட்டிய வியாதியாயிருந்தாலும் மனோதத்துவ சாதிரிகளால் சிகிச்சை செய்ய முடியும். ஆனால் கதாதரரைப் பற்றிக் கொண் டிருக்கிற வியாதி இவைகளுக்கெல்லாம் மேற்பட்ட கடவுள் வியாதியல்லவோ! கடவுளைக் கண்டால்தானே அந்த வியாதி போகும். கடவுளைக் காட்டுவார்தான் இப்பொழுது வேண்டும். அப்படிக் காட்டுவார் ஏற்பட்டனர் கதாதரருக்கு. இவருடைய வாழ்க்கையில் இஃது ஓர் அதிசயமான விஷயம். கடவுளைக் காண பலவழிகளுண்டு. அவரவரும் அவருடைய பக்குவத்திற்கேற்றபடி ஒவ்வொரு வழியாகச் சென்று அந்தக் கடவுளைக் கண்டிருக்கின்றனர். கதாதரர், இந்தப் பல வழிகளாகவும் சென்று அந்த ஒன்றான பொருளைக் கண்டிருக்கிறார். அப்படி ஒன்றாகக் கண்டதோடல்லாமல் அந்தந்த வழியினால் காட்டப்பெற்ற விதமாகவும் கண்டிருக்கிறார். எந்த வழியாகச் சென்று அந்தப் பரம்பொருளைக் காண வேண்டுமென்று இவர் மனம் விழைகிறதோ அந்த வழியாக இவரை அழைத்துச் செல்ல, அந்த வழியிலே சென்று பழகினவர்கள் அவ்வப்பொழுது இவருக்கு வாய்த்திருக்கிறார்கள்.
பரம் பொருளைப் பராசக்தி வடிவமாகக் காண்டல் ஒரு முறை. இதற்குத் தாந்திரிக மெனப் பெயர். ஞான மார்க்கத்தையும் கர்ம மார்க்கத்தையும் சமரஸபடுத்திச் செல்கின்ற இந்த முறையில் அறுபத்து நான்கு சாதனங்கள் உண்டென்றும், இது மகா கடினமான தென்றும் கூறுவர். இந்தத் தாந்திரிக மார்க்கத்தில் கதாதரரை அழைத்துச் செல்ல பைரவி பிராம்மணி என்ற ஓர் அம்மையார் வழி காட்டியாயமைந்தார். சுமார் மூன்று வருஷ காலம் இந்தத் தாந்திரிக சாதனங்கள் பலவற்றையும் பயின்று ஜகதம்பிகையின் பல தோற்றங்களையும் கண்டு களித்தார் கதாதரர். ஜிதேந்திரிய ரானார். அஷ்டமாசித்திகளும் இவருக்குக் கிடைத்தன. ஆனால் அவைகளைத் துச்சமெனத் தள்ளினார். உலகை மயக்குவதற் கல்லவோ அவை தேவை யென்று கருதினார். இந்த மூன்று வருஷ காலத்தில் இவர் முகத்தில் ஒரு தேஜஸ் உண்டாயிற்று; உடலைப் பற்றியிருந்த நோய்கள் யாவும் பறந்தன.
இதற்குப் பிறகு பக்தி மார்க்கத்திலே செல்ல விரும்பியது இவர் மனம். இதற்கு இசைவாக ஜடதாரி என்ற ஒரு வைஷ்ணவப் பெரியார் இவருக்கு வாய்த்தார். கடவுளை, பெற்ற குழந்தையாகவும், உற்ற தோழனாகவும், மணந்த நாயகனாகவும் இப்படிப் பல வகை முறைகளால் வழிபடுகிற இந்தப் பக்தி மார்க்கம் பூராவையும் கடந்தார்.
இதற்குப் பிறகு அத்வைத மார்க்கத்திலே திரும்பியது இவர் மனம். தோதாபுரி என்ற ஒரு பெரியார் இந்தக் காலத்தில் இவருக்குக் குருவாக வந்து சேர்ந்தார். இவருடைய ஆணைப்படி கதாதரர் சந்நியாசம் பெற்றுக் கொண்டார்; அத்வைத சாதனங்கள் பலவற்றையும் பயின்றார். தேகாத்ம வாத புத்தியை ஒழித்தார். இரண்டற்ற ஒன்றாகிய பரம் பொருள் காலத்தைக் கடந்தது, அதற்குத் தோற்றமுமில்லை, முடிவுமில்லை, எண்ணத்திற்கு அப்பாற்பட்டது அது, வரம்பில்லாத பேரின்பம் அது, பேசாத நிலை அது, அதனைச் சொல்லால் சொல்லிக் காட்ட வேண்டுமானால் சச்சிதானந்தம் என்று சொல்லலாம், அங்கு எல்லாம் அடங்கி ஒடுங்கி விடுகின்றன என்ற உண்மையை உணர்ந்தார் கதாதரர். உணர்ந்தாரென்ன, தாமே அதுவாகி விட்டார். ஜீவாத்மாவோடு பரமாத்மா ஐக்கியப்பட்டிருக்கின்ற நிலையே நிர்விகற்ப சமாதியாகும். இந்த நிலை, எப்படி யிருக்மென்று சொல்ல முடியாது; இதனை அனுபவிக்கத்தான் முடியும்; அனுபவித்ததைச் சொல்லவும் முடியாது. சொல்லுக்கு அப்பாற் பட்டதன்றோ இந்த நிலை. இந்த நிலையிலே கதாதரர் பல நாட்கள் இருந்தார். இஃது – இந்த நிலையை யடைவது – இவருக்குச் சர்வ சாதாரணமாகவும் சுலபமாகவும் இருந்தது. இங்ஙனம் பிரும்ம சாட்சாத்காரம் பெற்ற பின் இவரிடத்தில் எல்லா வேற்றுமைகளும் அற்றுப் போயின; பச்சைக் குழந்தை போலானார்.
இங்ஙனம் பிரும்ம சாட்சாத்காரம் பெற்றவர்கள் மறுபடியும் உலக நினைவு பெறுவதில்லை யென்று சொல்வர். ஆனால் கதாதரர், உலகத்திற்கு நல்வழி காட்டும் பொருட்டு, உடல் நினைவோடு இன்னும் சில வருஷ காலம் இருக்க வேண்டுமென்று பராசக்தி தனக்குக் கட்டளை யிட்டிருப்பதாக உணர்ந்தார். இதன் பிறகு பிரபஞ்ச உணர்ச்சி பெற்ற வரானார். இதற்கு – இந்த உடல் நினை வோடு கூடிய நிலைக்கு – வர இவர் சுமார் ஆறு மாதகாலம், வயிற்றுக் கடுப்பு முதலிய நோய்களுக்கு உட்பட வேண்டியதாயிற்று.
இதற்குப் பிறகு, வேற்று மதத்தினர் கடவுளைக் காண எந்தெந்த வழியாகச் செல்கிறார்களோ அந்தந்த வழியாகத் தாமும் செல்ல வேண்டுமென்று ஆசை கொண்டார். இங்ஙனமே இஸ்லாமிய மதத்தை அவலம்பித்தார். ஒரு முஸ்லிமைப் போலவே உடை உடுத்து, தினந்தோறும் நமாஸ் சொல்லிவந்தார். ஏன், ஒரு முஸ்லிமாகவே வாழ்ந்தார் என்று சுருங்கச் சொல்லிவிடலாம். கடைசியில் இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் மூலமாகக் கடவுளைக் கண்டார். இந்த இஸ்லாமிய சாதனையைத் தொடங்கியபோது கதாதரருக்கு ஏறக்குறைய முப்பது வயது.
இதற்குப் பிறகு சுமார் எட்டு வருஷங்கழித்து, தமது முப்பத் தெட்டாவது வயதில், கதாதரர், கிறிஸ்துவ மதத்திலே ஈடுபட்டு, ஓர் உண்மைக் கிறிஸ்துவராக வாழ்ந்து, கிறிஸ்துவர்கள் காண்கிறபடி கடவுளைக் கண்டார். அத்வைத மார்க்கத்திலே சென்று கொண் டிருந்த காலத்தில் இவர் புத்த மத அனுபவங்களையும் பெற்றார் என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.
இஸ்லாமிய சாதனம் பயின்று முடிந்த பின்னர் கதாதரர் உடல் நல நிமித்தம், காமர்ப்புகூருக்குச் சென்று சுமார் ஏழெட்டு மாதகாலம் வசித்துவிட்டு பின்னர் தட்சிணேசுவரம் வந்து சேர்ந்தார். அது போழ்து, ஸ்ரீ சாரதமணி தேவியாரும், கணவரோடு சேர்ந்து வாழ்வதற் குரியராய் தட்சிணேசுவரம் போந்தார். அவர், தம் நாதர் அடைந்துள்ள மேலான நிலையை அறிந்தவராய், அவருக்குத் தாய் போலிருந்து போஷிப் பதிலும், சிஷ்யை போலிருந்து சிசுருஷை செய்வதிலும் திருப்தி யடைந்தார். உலகத்திலே அவதரித்த மகான் களிற் பலர், தங்கள் தாய்மார்களால் பெருமையடைந்திருக்கி றார்கள்; ஆனால் கதாதரர், தமது தர்மபத்தினியால் பெருமை யடைந்தார். இப்படிச் சொல்வது இவருடைய பெருமையை எந்த விதத்திலும் குறைப்பதாகாது.
இதற்குப் பிறகு, அதாவது 1866ஆம் வருஷத்திலிருந்து, கதாதரருடைய வாழ்க்கை மகான் தன்மை நிறைந்த வாழ்க்கையாக இருந்ததென்று சொல்ல வேண்டும். சுமார் இருபது வருஷ காலம் இவர், வெல்ல மலையாகவும் மலர்க் கூட்டமாகவும் இருந்தார். இந்த வெல்ல மலையை மொய்த்துக் கொண்டிருந்த உழைப்பாளிகளான எறும்புகள் தான் எத்தனை? இந்த மலர்க் கூட்டத்திலிருந்து ஞான மதுவுண்டு கொண்டிருந்த வண்டுகள் தான் எத்தனை? இந்தக் காலத்தில் கதாதரர், மதுரநாதருடன் அநேக க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். கடவுட் தன்மை எங்கெல்லாம் குடி கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அந்தத் தன்மையை வழிபட்டார். தமக்குப்பின் சந்ததியாராக ஒரு தொண்டர் குழாத்தைச் சிருஷ்டித்தார். இவர் அருளிவந்த உபதேசங்களின் விளைவாக, பாரத நாட்டிலே அதுவரை பரவியிருந்த அறியாமை இருள் அகன்றது. மேனாட்டுப் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த பலர் தங்கள் தாய்த் திருநாட்டை நோக்கலாயினர்; அதனை, அதன் பழைய பெருமையிலே கொண்டு வந்து நிறுத்த வேண்டு மென்று சங்கற்பித்துக் கொண்டனர். பொதுவாக பாரத மக்கள் விழிப்படைந்தனர். வந்த வேலை முடிந்து விட்டது என்று உணர்ந்தோ என்னவோ, கதாதரர் 1886ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் பதினைந்தாந் தேதி கடைசியாகக் கண் மூடிக் கொண்டு விட்டர்.



