ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி
வெ. சாமிநாத சர்மா

3. மகான் தன்மை

நிறைந்த ஞானம் மூடத்தனம் போலிருக்கிறது.
சிறந்த நாவன்மை தட்டுத்தடுமாறிப்பேசுவது போலிருக்கிறது.


-லாவோத்ஸே

க்ஷூதிராம் சட்டர்ஜியின் குழந்தையாகப் பிறந்த கதாதரர் மறைந்துவிட்டார். ஆனால் கடவுளின் குழந்தையாக, கடவுளின் அமிசமாக அவதரித்த ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தது யாரோ அவரே இந்த உடலில் ராமகிருஷ்ணனாக வந்துள்ளார் என்று ஸ்ரீ ராம கிருஷ்ணரே சொல்லி யிருக்கிறார். ராமர் தசரதருடைய மகனாகத் தோன்றியதும், கிருஷ்ணர் வசுதேவருடைய பிள்ளையாகப் பிறந்ததும். கதாதரர்க்ஷூதிராமின் புதல்வராக உடம்பெடுத்ததும் எல்லாம் ஒரு வியாஜந்தான். உண்மையில் இவர்களெல்லோரும் கடவுட் சக்திகள். அருவமாயுள்ள இந்தச் சக்திகள், அந்தந்தக்கால நிலைமைக்கேற்றவாறு மேற் சொன்ன உருவங்களாக அவதரித்தன. ஹிந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை இது.

இந்த நம்பிக்கை ஒருபுற மிருக்கட்டும். சாதாரண திருஷ்டியிலிருந்து பார்த்தாலும், கதாதரர் என்ற பெயர் எல்லோருடைய நினைவி லிருந்தும் அகன்று போகலாம். ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயர் எல்லோருடைய நெஞ்சத்திலும் எந்நாளும் இருந்து கொண்டிருக்கும். ஆதலின் இந்த அத்தியாயத்திலிருந்து கதாதரர் என்ற பெயருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயருக்கு வணக்கஞ் செலுத்தி வரவேற்போம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய வாழ்க்கையின் பிற் பகுதிக் காலத்தில், பலவித சாதனைகள் பயின்றதன் விளைவாக, அவருடைய உடல் சுருங்கி, அழகு குன்றி விட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற முறையில் அவரை ஜனங்கள் தெரிந்துகொண்ட சமயத்தில் அவர் உடலழகு இல்லாதவராகவே காணப்பட்டார். அழகு சொட்டும் குழந்தையென்று எந்த கதாதரரை நாம் வருணித்தோமோ அவரையே இங்கே உடலழகு வாய்க்கப்பெறாத ராமகிருஷ்ணர் என்று கூறத் துணிகிறோம். ஏனென்றால் இங்கே நாம் பார்ப்பது கதாதரர் அல்ல; ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

சரி; ஸ்ரீ ராமகிருஷ்ணர் உடலழகு இல்லாதவர்; வட மொழியோ ஆங்கிலமோ பயிலாதவர். இவருக்குக் தெரிந்த ஆங்கில மெல்லாம் ஐந்தாறு வார்த்தைகள்தான். ‘வாட்டர்’ ‘டாம்’ ‘தாங்க் யூ’ இந்த மாதிரி சில வார்த்தைகளே தெரியும். தாய்மொழியாகிய வங்காளியிலும் அதிக பரிச்சயமுடையவர் என்று சொல்லமுடியாது. ராமாயணத்தைக் கம்பன் தமிழில் ஒரு காவியமாகச் செய்திருப்பது போல வங்கமொழியில் கீர்த்தி வாசர் என்ற கவிஞர் காவியமாகச் செய்திருக்கிறார். இதில் யுத்த காண்டத்தின் ஒரு பகுதியை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது பதினேழாவது வயதில் குண்டு குண்டான எழுத்துக்களில் எழுதினார். இப்படிப் பெயர்த்தெழுதியதில் கூட அநேக பிழைகள். இதுதான் இவருடைய வங்க மொழிப் பயிற்சிக்கு அத்தாட்சி. அழகாக, ஆற்றொழுக்குப் போல் பேசும் ஆற்றலும் இவருக்கு இல்லை. பேசுகிறபோது கொஞ்சம் நெருடி நெருடி, அதாவது தத்தித்தத்திப் பேசுவார். இத்தகையவரிடத்தில், ஆங்கிலத்திலும் வடமொழியிலும் சமயஞானப் பயிற்சியிலும் வல்லுநர்களான பலரும், மேனாட்டு நாகரிகத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்த இளைஞர் பலரும், செல்வமும் சமுதாயத்திலே செல்வாக்குமுடைய பலரும் ஆட்பட்டிருந்தார்கள். மைக்கேல் மதுசூதன தத்தர் என்ன, பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ன, பண்டித ஈசுவர சந்திர வித்தியா சாகர் என்ன, மகரிஷிதேவேந்திரநாத் தாகூர் – இவர் ரவீந்திர நாத் தாகூரின் தந்தை – என்ன, இப்படிப் பட்டவர்க ளெல்லோரும் இவரிடத்தில் தலைவணங்கி நின்றார்கள். ஹிந்து மதத்தைப் புனருத் தாரணம் செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன் பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் சில இயக்கங்கள் தோன்றின வென்று முன்னே சொன்னோமல்லவா, அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிலரும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அத்தியந்த விசுவாசிகளானார்கள். சிறப்பாக பிரும்ம சமாஜத்தின் முக்கியதரான கேசவ சந்திரசேனர், இவருடைய பரந்த மனப் பான்மையிலும் சமரஸ நோக்கிலும் பெரிதும் ஈடுபட்டார். கேசவசேனரின் நாவன்மை, ஸ்ரீ ராமகிருஷ் ணரின் எளிய வார்த்தைகளுக்கு முன்னர் மௌனஞ் சாதித்தது. கேசவசேனரும் அவருடைய சகபாடிகளும், மணிக்கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் முன்னிலையில் உட்கார்ந்து உபதேச அமுதைப் பருகிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மட்டுமென்ன? சிறந்த நாடகாசிரிய ரான கிரீஸ சந்திர கோஷ், ஸ்ரீ ராமகிருஷ்ணரால் பெரிய மாற்றத்தை யடைந்தார். தர்க்க சாதிரத்தில் மகா பண்டித ரான கௌரிகாந்த தர்க்க பூஷணர் என்பவர், தட்சிணேசுவரம் போந்து ஸ்ரீ ராம கிருஷ்ணரிடம் ஞான வெளிச்சம் பெற்றார். ராஜ புதனத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற புகழ் படைத்தவர் பண்டித நாராயண சாதிரி என்பவர். வேதாங்கங்கள் ஆறையும் கரைகண்டவர். அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை குருவாக ஏற்று உபதேசம் பெற்று சந்நியாசம் வாங்கிக் கொண்டார். பர்த்வான் சமதானத்தில் பிரதம வித்துவானாக விளங்கிய பண்டித பத்மலோசன தர்க்காலங்காரர் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணரை ஓர் அவதார புருஷ ரென்று கருதினார்; பயபக்தியுடன் இவருடைய உபதேசங்களைக் கேட்டு வந்தார். இன்னும் அநேக உதாரணங் களைச் சொல்லலாம். இங்ஙனம் இலக்கியவானிலே சூரியனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தவர்கள், சமுதாய சாகரத்தில் கம்பீரமாக ஊர்ந்து சென்ற நாவாய் போன்றவர்கள், இந்த எளிய மனிதரிடத்தில் ஏன் கைகட்டி வாய் பொத்தி நின்றார்கள்? இவரிடத் தில் என்ன மகிமை இருந்தது? அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு மகான். இப்படி ஒரு வார்த்தையாகச் சுருக்கிச் சொல்வதிலேயே நாம் திருப்தியடைகிறோம். எப்படி இவருடைய எளிய தன்மையிலே இவருடைய அருமை பெருமைகளெல்லாம் அடங்கி யிருந்தனவோ அப்படியே மகான் என்ற இந்த ஒரு வார்த்தையிலேயே எல்லா அர்த்தங்களும் அடங்கி யிருக்கின்றன. இவருடைய மகான் தன்மைக்கு முன்னர் அறிவு, அதிகாரம், பதவி, பட்டம், பணம் ஆகிய யாவும் அடங்கி ஒடுங்கி விட்டனவல்லவா?

இந்த மகான் தன்மையுடையவர்களையே தீர்க்க தரிசிக ளென்றும், அவதார புருஷர்களென்றும் சொல்கிறோம். இவர்களை ஈசுவர கோடிகள் என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இவர்கள் மானிட ஜாதியின் நன்மைக்காக அவ்வப்பொழுது கடவுளால் அனுப்பப் பெறும் விசேஷ தூதர்கள். இவர்கள் உலகத்தினருக்காக உலகத்தினரைப் போல் வாழ்வார்கள். ஆனால் இவர்களுடைய நாட்டமெல்லாம் கடவுளிடத்திலே தான் இருக்கும். இஷ்டப்பட்ட போது மேலே செல்லவும், அதாவது கடவுளிடத்திலே ஐக்கியமாகி இருக்கவும், இஷ்டப்பட்டபோது கீழே இறங்கி வரவும், அதாவது உலக விவகாரங்களில் ஈடுபடவும் இவர் களால் முடியும். இவர்கள், சீன ஞானி கன்பூஷிய கூறுகிற மாதிரி, பூவுலகையும் வானுலகையும் சமரஸப் படுத்திக்கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தவர்கள். இப்படிப்பட்ட ஈசுவர கோடிகளில் ஒருவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

மகான்கள் தண்ணீரைப் போன்றவர்கள். எல்லா ஜீவராசி களுக்கும் முக்கிய ஆதாரமாக இருப்பது நீர். இருந்தாலும் அஃது எல்லாவற்றிற்கும் கீழான இடத்தில் தங்கியிருக்கிறது. நீரைப்போல் மிருதுவானவது கிடையாது; ஆனால் அது நெருப்பை அணைக்க வல்லது; கற்பாறயைக் கரைக்குஞ் சக்தியுடையது. தண்ணீர் எல்லோருக்கும் எவ்வித வித்தியாசமும் பாராட்டாமல் தன்னை வழங்கிக் கொண்டிருக்கிறது; ஆனால் உடனுக்குடன் அது நிரம்பியும் விடுகிறது. அதனுடைய தாழ்மையிலேதான் அதன் உயர்வு இருக்கிறது; அதன் வழங்குத் தன்மையிலேதான் அதன் நிறைவு இருக்கிறது. மகான்களும் இப்படித்தானல்லவா? இவர்கள், தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்வதில்லை; எல்லோருக்கும் முன்னால் வந்து நிற்பதுமில்லை; அடக்கம் ஒடுக்கமாக இருப்பதிலேயே இவர்கள் திருப்தி யடைகிறார்கள். ஆனால் எல்லோருடைய பார்வையும் இவர்கள் மீதுதான் விழுகிறது; எல்லோரும் இவர்களை நாடித்தான் வருகிறார்கள். இவர்கள் இனிய சுபாவமுடையவர்களா யிருக்கிறார்கள்; ஆனால் இவர்களைக் கண்ட மாத்திரத்தில் எல்லோருக்கும் ஒருவித பயபக்தி உண்டாகிறது. இவர்கள் அன்பான வார்த்தைகளைத்தான் சொல்கிறார்கள்; ஆனால் அந்த வார்த்தைகள் கல் போன்ற மனத்தினைக் கரைத்து விடுகின்றன.

இன்னும் மகான்கள், யாருடனும் சண்டை போடுவதில்லை; இதனால் யாருக்கும் இவர்களுடன் சண்டை போடும் தைரியம் உண்டாவதில்லை. அநேக சம்பவங்கள் நிகழ்வதற்கு, அநேக மனிதர்கள் வளர்ச்சி யடைவதற்கு, இவர்கள் உதவியாயிருக்கிறார்கள்; ஆனால் அந்தச் சம்பவங்களின் நிகழ்ச்சியிலே, அந்த மனிதர்களின் வளர்ச்சியிலே இவர்கள் தலையிடுவதில்லை. இவர்களுக்கென்று சொந்தமான இருதயம் கிடையாது; உலகத்திலுள்ள சர்வ ஜீவராசிகளுடைய இருதயங்களும் இவர்களுடைய இருதயந்தான். இவர்கள், நன்மையை நன்மையினால் சந்திக்கிறார்கள்; தீமையையும் நன்மையினால் சந்திக்கிறார்கள்.

மகான்களைச் சிலர் காற்றுக்கு ஒப்பிட்டுச் சொல்வார்கள். எல்லோருக்கும் தேவையாயிருக்கிற காற்று எல்லோராலும் பார்க்கப் படுவதில்லை யல்லவா? எல்லோர் கண்களுக்கும் இல்லாமலிருந்து கொண்டே அஃது எல்லோருக்கும் சேவை செய்கிறது. வானுற ஒங்கி வளர்ந்திருக்கும் மரங்களும் இந்தக் காற்றுக்கு முன்னர் தலை வணங்கிக் கொடுக்கின்றன. மகான்களும் இப்படித்தான். இவர்கள், மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அந்த மற்றவர்களுடைய வாழ்க்கைக்கு உதவியாயிருக்கிறார்கள். செல்வச் சிறப்புடை யவர்கள், கல்விச் செருக்குடையவர்கள், அதிகாரத் திமிர் படைத்தவர்கள் ஆகிய எல்லோரும், மகான்களுக்கு முன்னர், பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு அடங்கின பிள்ளைகள் மாதிரி ஆகிவிடுகிறார்கள்.

மகான்களைப் பற்றி சீன ஞானியாகிய லாவோத்ஸே கூறு கின்ற வாசகம் இங்குக்கவனிக்கத்தக்கது:- இவர்கள், தங்களுடைய சொற்களால் மற்றவர்களுக்குக் கற்பிப்பதில்லை; செயல்களாலேயே கற்பிக்கின்றனர். இந்தச் செயல்களுக்கு இவர்கள் எந்த விதமான சன்மானத்தையும் எதிர்பார்ப்பதில்லை. பூரணத் துவத்திற்காக இவர்கள் உழைக்கிறார்கள்; அந்த உழைப்புக்குண்டான மதிப்பு தங்களுக்குக் கிடைக்க வேண்டு மென்று இவர்கள் ஆசைப்படுவ தில்லை. ஆத்மீக வாழ்க்கையைப் பற்றின அலுவல்களிலேயே இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவசியத்திற்கு அதிகப்பட்டவை களையெல்லாம் அவர்கள் ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். தன் முனைப்பு என்பது இவர்களுக்கு இருப்பதே இல்லை. தீமைகளைக் களைகிற விஷயத்தில் இவர்கள் மென்மையான சுபாவமுடையவர் களாகவும் இருப்பது கிடையாது. கௌரவம், அகௌரவம் இரண்டும் இவர்களுக்கு ஒன்றுதான். எல்லாரும் இவர்களுடைய குழந்தைகள். நன்னெறியே இவர்களுடைய தாய்.

மகான்கள், இயற்கையோடியைந்த வாழ்க்கையை நடத்துகிறார்கள். இதனால் இவர்கள், செயற்கையான வாழ்வு நடத்துகிறவர்களுக்கு, அதாவது சாதாரண உலக விவகாரங்களிலே ஈடுபட்டிருக்கிறவர் களுக்கு, இயற்கைக்கு விரோதமான வாழ்வு நடத்துகிறவர் களாகத் தென்படுகிறார்கள். ஏனென்றால், அவர்கள், தங்களுடைய செயற்கை வாழ்வையே இயற்கை வாழ்வென்று நினைத்துக் கொண்டிருக் கிறார்களல்லவா? ஆதலின், அவர்கள், மகான்களைப் பித்தரென்று பேசுவதிலே என்ன ஆச்சரிய மிருக்கிறது? உண்மையில் மகான்கள் கடவுட் பித்தர்கள்தான்.

கடவுட் பக்தர்கள் வேறே; கடவுட் பித்தர்கள் வேறே. உலக விவகாரங்களுக்கு மத்தியில், அதாவது உலக விவகாரங்களைக் கவனித்துக் கொண்டு, கூடவே கடவுளைப் பற்றி நினைக்கிறவர்கள், கடவுட் பக்தர்கள். கடவுட் பித்தர்கள் இப்படியல்ல. உலகத்தினை, அதாவது உலக விவகாரங்களை, அடியோடு மறந்துவிட்டு கடவுள் நினைவாகவே இருப்பார்கள். இவர்களுக்குக் கடவுளைப் பற்றிய பிரக்ஞை ஒன்று தவிர, மற்றவைகளின் மீது பிரக்ஞையே இராது. பக்தர்களைப் பச்சைக் காய்களுக்கும் பித்தர்களைப் பழுத்த பழங்களுக்கும் ஒப்பிடுகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இந்தக் கடவுட் பித்தையே பிரேமை என்பார்கள்.

உலக நினைவை இழந்து கடவுள் நினைவாக இருக்கிறவர் களைச் சித்த சுவாதீன மில்லாதவர்கள் என்று உலக நினைவாகவே இருக்கிறவர்கள் கருதி விடுகிறார்கள்; இவர்களை ஏசவும் பேசவும் முற்படுகிறார்கள். அத்தா! அரியே! என்றுன்னை அழைக்க பித்தா வென்று பேசுகின்றார் என்னை, முத்தே! மணி மாணிக்கமே! முளைக்கின்ற வித்தே! உன்னை நான் எங்ஙனம் விடுகினே என்று கதறுகின்றார் திருமங்கையாழ்வார். இந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் தகுந்தாற் போல் கடவுள் நினைவுடையவர்களும் நடந்து கொள்கிறார்கள். சில சமயங்களில் இவர்களைப் பார்த்தால் குடித்து விட்டிருக்கிற வெறியர்கள் மாதிரி இருக்கும்; பகலென்றும் இரவென்றும் வித்தியாசம் தெரியாது. எப்படி ஒரு குடிகாரன், உடம்பிலே அணிய வேண்டிய சட்டையைச் சில சமயங்களில் தலையிலும், சில சமயங்களில் காலிலும் அணிந்து கொள்கிறோனோ அதைப் போல கடவுள் வெறியர்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தினைப் பற்றிய நினைவே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். சில சமயங்களில் இவர்களுடைய செயல்கள் குழந்தைகளின் செயல்கள் போலிருக்கும்; இன்னும் சில சமயங்களில் அனுபவம் நிறைந்தவர்களின் செயல்களைப் போலிருக்கும். அநேக சமயங்களில் இவர்களுக்குத் தங்கள் தேகத்தின் நினைவே இராது. இப்படிப்பட்டவர்களை மத்தர் பேயரோடு பாலர் தன்மையது மருவியே துரிய வடிவமாய், மன்னு தேகமொடு காலமாதியை மறந்த நின்னடியர் என்கிறார் தாயுமானார். இவர்களுக்கு நன்மையோடு தீமையில்லை, நாடுவதொன்றில்லை, சீல மில்லை, கோலமில்லை, புலனில்லை, கரணமில்லை, குணமில்லை, குறியில்லை, குலமுமில்லை…

இங்ஙனம் உலகத்தினர் இவர்களை, இந்த மகான்களைப் பித்தர்களென்று கருதுவதைப் போல் இவர்களும், இந்த மகான் களும், உலகத்தினரைப் பித்தர்களென்று கருதுகிறார்கள். பேயரே எனக்கு யாவரும்; யானும் ஓர் பேயனே எவர்க்கும் என்கிறார் ஒருவர். இப்படிப் பரபரம் ஒருவரையொருவர் கருதிக்கொண்டு விடுவதால் இருவருக்கும் மத்தியில் ஓர் இடைவெளி ஏற்பட்டு விடுகிறது; ஒருவரிடமிருந்து மற்றொருவர் ஒதுங்கியே இருக்கிறார்கள். இருந்தாலும் மகான்கள், கடவுள் நினைவுக்கு உலகத்தினரைத் திருப்பவே பாடுபட்டு வருகிறார்கள். உலகத்தினரோ, இந்த மகான்களுடைய பிற்காலத்தில் தான் இவர்களைப் புரிந்துகொண்டு இவர் களுடைய அருகில் வருகிறார்கள்.

உலகத்தினரைக் கடவுள் நினைவுக்குத் திருப்பவேண்டு மென்கிற கருணையுடையவர்களா யிருப்பதனால்தான் மகான்கள், உலகத்தினருக்குச் சுலபமாகப் புரியக்கூடிய உலக விஷயங்களை உதாரணங்களாகக் காட்டி, கடவுள் தன்மையை விளக்குகிறார்கள்; எல்லா ஜனங்களும் கடவுள் நிலையை அடைய வேண்டுமென்பதற்காகவே எல்லா ஜனங்களும் புரிந்து கொள்ளக்கூடிய பாஷையில் பேசுகிறார்கள். இவர்களுடைய உபதேசங்கள், மண்ணிலே பிறந்து, திறந்த வெளியிலே வளர்கின்றன. எத்தகைய சிக்கலான பிரச்சனை களையும் இவர்கள் சாதாரண உபமான உபமேயங்களைக் காட்டிப் புரியவைத்து விடுகிறார்கள். இதனால்தான், இவர்களுடைய உபதேசங்களில் சிறு கதைகள், விடுகதைகள் எல்லாம் காணப் படுகின்றன. புத்தர், ஸாக்ரட்டீஸ், யேசுநாதர், கன்பூஷியஸ், இப்படிப் பட்ட மகான்களுடைய உபதேசங்களைச் சிறிது படித்துப்பாருங்கள். எவ்வளவு எளிய உவமைகள்! ஆனால் எவ்வளவு பெரிய உண்மை களை விளக்குகின்றன! யாரார் எப்படி எப்படி வழிபடுகின்றார் களோ அப்படி யெல்லாம் கடவுள் காணப்படுகின்றார் என்ற உண்மையை ஸ்ரீ ராமகிருஷ்ணர், எத்தகைய அருமையான சிறு கதையின் மூலம் விளக்குகிறார் கேளுங்கள்.

ஒருவன் ஒரு காட்டிற்குள் சென்று மரத்தின் மீது பிராணி யொன்றிருப்பதைப் பார்த்தான். பார்த்து விட்டு திரும்பி வந்து, தன் நண்பன் ஒருவனிடம், ‘நண்பா, காட்டில் நான் ஒரு பிராணியைப் பார்த்தேன். அது எவ்வளவு அழகான சிவப்பு தெரியுமா?’ என்றான். அந்த நண்பன் ‘ஓ, நான்கூட காட்டிற்குள் சென்றிருந்தபோது அந்த பிராணியைப் பார்த்தேனே; அதனைச் சிவப்பு என்று எப்படிச் சொல்கிறாய்? பச்சை நிறமல்லவோ அது என்றான். இந்தச் சமயத்தில் வேறோருவன் வந்து, நீங்கள் இரண்டு பேர் சொல்வதும் தவறு; அந்தப் பிராணி மஞ்சள் நிறமுடையது என்றான். இப்படிப் பலர் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு நிறத்தைச் சொன்னார்கள். ஒருவன் சாம்பல் நிறமென்றான்; இன்னொருவன் ஊதா நிற மென்றான். யார் சொல்வது சரி யென்பதைப்பற்றி இவர்களுக்குள்ளே சண்டை வந்துவிட்டது. கடைசியில் மரத்தருகில் சென்று பார்ப்பதென்று தீர்மானித்து அப்படியே சென்றார்கள். அந்த மரத்தடியில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவனிடத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் பார்த்த நிறத்தைப் பற்றிச் சொன்னார்கள். அவன் கூறினான்:- சகோதரர்களே, நான் இந்த மரத்தடியில் தான் வசிக்கிறேன். நீங்கள் சொல்கிற பிராணியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் அனைவர் சொல்வதும் சரியே. அந்தப் பிராணி ஒரு சமயத்தில் சிவப்பாகவும், இன்னொரு சமத்தில் மஞ்சளாகவும், மற்றொரு சமயத்தில் ஊதாவாகவும், இப்படி ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுகிறது. அது பச்சோந்தி. சில சமயங்களில் அதற்கு எவ்வித நிறமும் இருப்பதில்லை.

மகான்கள், பெண்மையை வழிபடுகின்றார்கள்; பெண்மை யிலே இறைமையைக் காண்கிறார்கள். இவர்களுடைய பெண் ணுள்ளந்தான், எல்லோருடைய துன்பங்களுக்கும் பரிகாரம் காணவேண்டுமென்று விழைகின்றது; அந்தப் பெண்ணுள்ளத்தின் பலகணிகள் போன்றிருக்கிற கண்கள்தான் எல்லோருடைய துக்கத்திற்காகவும் கண்ணீர் வடிக்கின்றது. மகான்களுடைய உடலமைப்பையோ உள்ளப் பாங்கையோ சிறிது உற்றுப் பாருங்கள். பெண் தன்மையின் அமிசங்கள் நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். புத்தர் என்ன, யேசுநாதர் என்ன, இப்படிப் பட்டவர்களுடைய முகத்தில் தான் என்ன சாந்தம்! உதட்டில்தான் என்ன அழகான புன் சிரிப்பு! கண்களில்தான் எவ்வளவு அருள் நிறைந்த பார்வை! இவர் களுடைய கண்களில், ஓர் அறிஞர் கூறுகிற மாதிரி, அறிவின் உயரம், தெய்வீக அமைதி, ஆத்மீக ஆழம் எல்லாம் நிரம்பியிருக்கின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிறு வயதில் ஒரு பெண்ணைப் போலவே இருந்தார் என்றால் அஃது இவருடைய பிற்கால மகான் தன்மையின் ஆரம்ப சூசகமேயாம்.

ஆனால் சிலர் கேட்கலாம், ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது உபதேசங்களில் அடிக்கடி பெண்ணையும் பொன்னையும் விலக்க வேண்டுமென்று வலியுறுத்திச் சொல்கிறாரே என்று. வாஸ்தவம்; ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படித் தான் சொல்கிறார். காமினி (பெண்) காஞ்சனம் (பொன்) என்ற வார்த்தைகளை அடிக்கடி உபயோகித் திருக்கிறார். ஆனால் எந்த அர்த்தத்தில் இந்த வார்த்தைகளைச் சொல்லி யிருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெண்ணாசையையும் பொன்னாசையையுமே இவர் வெறுக் கிறார்; விலக்கச் சொல்கிறார். எல்லா மகான்களும் இதைத்தானே சொல்லி யிருக்கிறார்கள்? ஆத்ம சாதனைக்கு இந்த இரண்டு ஆசைகளும் இடையூறா யிருக்கின்றன என்ற காரணத்தினாலேயே இவைகளை விலக்கச் சொல்கிறார்கள் அறிஞர்கள். ஆத்மீகத் துறையில் இறங்கத் தீர்மானித்தவர்கள், ஆணாயிருந்தால் பெண்ணாசையையும், பெண்ணா யிருந்தால் ஆணாசையையும் துறந்துவிட வேண்டியது அவசியமாகும். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது உபதேசங்களில் வலியுறுத்தி யிருக்கிறார்.

பெண்ணாசையைத் துறக்க வேண்டுமென்று சொன்ன ஸ்ரீ ராமகிருஷ்ணர், எல்லாப் பெண்களையும் ஜகன்மாதாவின் வடிவங்களாக வழிபட்டார். இந்த விஷயத்தில் தம் மனைவியென்றும், மற்ற ஸ்திரீகளென்றும் இவர் வேற்றுமை பாராட்டவேயில்லை. எல்லோரும் இவருக்குத் தாய்மார்களாக, அருள் வடிவங்களாக, தியாகமூர்த்தி களாகவே தென்பட்டார்கள். இவர் தாந்திரிக சாதனத்தை ஒரு ஸ்திரீயினிடம் பயின்றதை இங்கு வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

பெண்ணுள்ளம் படைத்த மகான்கள், மற்றவர்களுடைய துக்கத்திற்காகக் கண்ணீர் வடிக்கிறார்களென்று மேலே சொன்னோமே, அது வெறும் அலங்கார பாஷையல்ல; உண்மை வாசகம். இவர்கள், மற்றவர்களுடைய துக்கத்திற்காக மட்டும் கண்ணீர் வடிப்பதில்லை; மற்றவர்களுடைய அறியாமைக்காகவும் அழுகிறார்கள். இப்படி அழுகிறபோதுதான், இவர்களைப் பைத்தியக் காரர்களென்று, இவர்களை அறியாத, இவர்களை அறிந்துகொள்ள முடியாத உலகம் சொல்கிறது. ஆனால் இவர்களுடைய மனப் புண், அதிலிருந்து கசிகிற ரத்தம், இவைகளெல்லாம் அதற்கென்ன தெரியும்?

கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே கிரீஸ் தேசத்தில் ஹெராக்ளீட்டஸ் என்றொரு ஞானி இருந்தான். இவன் ஸாக்கரட்டீஸின் ஆசிரியன் என்று சொல்வர். இவன், மானிட ஜாதியின் அறியாமைக்காக எப்பொழுதும் அழுதுகொண்டிருப்பான். ஐயோ, மனிதர்கள் சன்மார்க்கத்திலே செல்லாமல் இப்படிக் கெட்டுப் போகிறார்களே என்று இவனுக்கு ஆத்திரம் வரும். அந்த ஆத்திரம் அழுகையாக வெளிப்படும். இதனால் இவனை, இவன் சமகாலத்தவரும், பிற்காலத்தவரும் அழுகின்ற ஞானி என்று அழைத்தார்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், பலதடவைகளில், உலகத்தின் அறியாமையைக் குறித்து வருந்தியிருக்கிறார்; அழுதிருக்கிறார். இங்ஙனமே மற்றவர் களுடைய துயரத்திற்காகத் தாம் துயரப்பட்டு மிருக்கிறார். ஒரு சமயம் இவர் கங்கைக்கரையின் மீது உலவிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு படகோட்டி, மற்றொரு படகோட்டியைக் கன்னத்திலே நன்றாக அறைந்து விட்டான். அதைப் பார்த்து விட்டார் இவர். தாமே அறை பட்டதாக உணர்ந்தார். ஐயோ, நோகிறதே, நோகிறதே என்று உரக்கக் கதறினார். அருகிலிருந்தவர்கள் ஒடிவந்து பார்த்தார்கள். என்ன கண்டார்கள்? இவர் முதுகில், அடித்த விரல் அடையாளங்கள் இருந்தன. என்ன ஆச்சரியம்! எல்லா ஜீவராசிகளையும் தானாகப் பார்க்கிற ஒரு நிலையை, எல்லா ஜீவாராசிகளின் துன்பத்தையும் தன்னுடைய துன்பமாகக் கருதுகின்ற ஒரு தன்மையை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் அடைந்திருந்தார் என்பதற்கு இதைவிட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?

இதனால்தான், அதாவது தான் வேறு, மற்ற ஜீவராசிகள் வேறு என்ற பேதமற்ற நிலையிலே இருந்த காரணத்தினால்தான், ஸ்ரீ ராம கிருஷ்ணர், ஜீவராசிகளிடத்தில் கருணை காட்ட வேண்டும், அவைகளுக்கு உதவி செய்யவேண்டும், என்று யாராவது சொன்னால், அவர்களைக் கண்டித்துவந்தார். நரேந்திர நாதரையும், மற்றும் சில சிஷ்யர்களையும் பார்த்து ஒரு சமயம் கூறுகிறார்: ஜீவராசிகளிடத் தில் கருணை காட்டுவதாம்! என்ன அகங்காரம்! ஜீவன்கள் யார்? இவனைத் தவிர்த்து வேறில்லை. பிரதியொரு ஜீவனையும் கடவுளாகக் கருதி, அதற்குப் பக்தி சிரத்தையோடு தொண்டு செய்ய வேண்டும்; கருணை மேலீட்டால் தொண்டு செய்தல் என்பது கூடாது. கருணை யென்பதே, மேலானவர் கீழானவர் என்ற வேற்றுமையைக் கற்பித்து விடுகிறது. இந்த வேற்றுமை யில்லாமல், எல்லா ஜீவராசிகளையும் தானாகக் கருதி, அந்த ஜீவராசிகளே தானாக இருந்து கொண்டு அவைகளுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்பதே ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய கருத்து. சுவாமி விவேகானந்தர், பிற்காலத்தில்,

ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய பெயரால் ஒரு திருத்தொண்டர் குழாத்தை அமைத்ததற்கு இந்தச் சீரிய உபதேசமே வித்தாயிருந்தது.

உலகத்தினருடைய அறியாமையைக் கண்டு, அந்த அறியாமை காரணமாகத் துன்பப்படுகிறவர்களைக்கண்டு, எப்படிச் சிலர் அழுகிறார் களோ அப்படியே சிலர் சிரிக்கிறார்கள். சிரிப்பு என்பது அழுகையின் மறு புறந்தானே? மிதமிஞ்சிய துக்கமானது சிரிப்பாக வெளிவருகிறது. இப்படிச் சிரிக்கிற மகான்களும் பலர் இருந்திருக் கிறார்கள். உலகத்தின் அறியாமையைக் கண்டு, அந்த அறியாமை காரணமாக அது துன்புறுவதைக்கண்டு வருந்துகிறவர்கள் அழு கிறார்கள்; சிந்திக்கிறவர்கள் சிரிக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.

உலகத்தின் அறியாமையையும் துன்பத்தையும் கண்டு மகான்கள் அழுவார்களென்று சொன்னால், இவர்கள் எப்பொழுதும் அழுது கொண்டிருப்பார்கள், சிரிக்கவே மாட்டார்கள் என்பது அர்த்தமல்ல. இவர்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பார்கள்; மற்றவர்களையும் சிரிக்க வைப்பார்கள். சுருக்கமாக இவர்கள் நகைச்சுவையின் ஊற்றுக்களமாயிருப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேசங்களில் இந்த நகைச்சுவை, ஒளிவிட்டு வீசுவதைப் பல இடங்களில் பார்க்கலாம்.

கடவுள் தன்மை படைத்த மகான்கள் லட்சியத்திற்காகவே வாழ்கிறார்கள். அந்த லட்சியத்திற்காக தோல்வியைத் துலையற்றார் கண்ணுங்கொள்கிறார்கள்; துன்பங்களை யெல்லாம் இன்பமாக அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு, நேர்மை இன்னது, அழகு இன்னது, நல்லது இன்னது என்பது சுலபமாகப் புரிந்து விடுகிறது. எது சரி, எது தவறு என்ற சந்தேகமே இவர்களுக்கு உண்டாவதில்லை. இந்தச் சந்தேகமில்லாத காரணத்தினால், இவர்கள் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்கிறார்கள்; எந்த ஓர் அபிப்பிராயத்தையும் திடமாகச் சொல்கிறார்கள்; இப்படிச் சொல்வதற்கு மற்றவர்களை இணங்க வைக்கிறார்கள். இவர்களுடைய மனோ உறுதியின் முன்னர் மற்றவர்கள் தலைவணங்குகிறார்கள். இவர்களுடைய எந்த ஒரு விவகாரத்திலும் தான் என்பது லவலேசமும் இருப்பதில்லை. இதனால் இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் மற்றவர்கள் சுலபமாக ஆட்பட்டு விடுகிறார்கள். அவர்கள் இவர்களை – இந்த மகான்களை – தனி மனிதர்களாகக் காண்பதில்லை; ஏதோ ஒரு சக்தியாகவே காண்கிறார்கள். இவர்களைக் கண்ட மாத்திரத்தில் யாருக்குமே ஒருவித பயபத்தி உண்டாகிறது; இவர்களிடத்தில் தங்கள் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது. இவர்கள் அதிகார தோரணையோடு சொன்னாலும், அதில் அன்பும் இனிமையும் கலந்திருப்பதால், அதற்காக யாரும் வருந்துவதில்லை. இவர்கள், மற்றவர்களைக் கண்டித்தாலும், அதில் தன்னலம் இல்லாததினால், அதனை யாவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

மகான்கள் எதைச் சொன்னாலும் அது புதிதாகவே இருக்கிறது. மற்றவர்களிடமிருந்து இவர்கள் எண்ணங்களை இரவல் வாங்குவதில்லை. தங்கள் சுய அறிவிலிருந்து, சுய உணர்ச்சி யிலிருந்து, சுய அனுபவத்திலிருந்து உண்டாகிற எண்ணங்களையே இவர்கள் வெளியிடுகிறார்கள். இவர்களுடைய அறிவு, கல்வி கேள்விகளின் விளைவாக ஏற்பட்டது அல்ல. இயற்கையிலேயே, அதாவது பிறக்கிற போதே இவர்களுக்கு அறிவு இருக்கிறது. மற்றும், தங்களுடைய லட்சியத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கையானது, இவர்களுக்கு அபார ஞானத்தையும் அனுபவத்தையும் அளித்து விடுகிறது. இவர்கள், மற்றவர்களுடன் தர்க்கம் செய்து தர்க்கம் செய்து உண்மையைக் காண்கிறார்களில்லை; நம்பிக்கை யினாலேயே உண்மையைக் காண்கிறார்கள். பேரறிஞர்களுக்குக்கூட புலப்படாத உண்மைகள், இந்த நம்பிக்கை காரணமாக, இவர்களுக்கு எளிதிலே புலப்பட்டு விடுகின்றன. இதனால்தான் இவர்கள், தாங்கள் பிறந்த சமுதாயத்திற்கு, வாழ்கின்ற காலத்திற்கு, எதைச் செய்தால் சந்தோஷம் உண்டாகுமோ அதைச் செய்யாமல், எதைச் செய்தால் நன்மை உண்டாகுமோ அதைச் செய்கிறார்கள். நன்மையைச் செய்ய முன்வருவோர் தீமையை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்க வேண்டும். மகான்கள் இதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

மகான்கள் புதிதாகச் சொல்வதோடு குறைவாகவும் சொல்கி றார்கள். மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய இவர்கள் அவதரிக்கவில்லை; மற்றவர்களை நல் வழிப்படுத்தவே அவதரிக்கிறார்கள். மற்றவர்களை நடத்திச்செல்ல முன் வருவோர் தாங்களும் நடக்க வேண்டுமல்லவா? உட்கார்ந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தால், மற்றவர்களை நல்வழியிலே அழைத்துச் செல்லமுடியுமா? நான் அப்படிப் பேசினேன்; இப்படிப் பேசினேன்; ஒருவரும் என் பேச்சைக் கேட்கவில்லையே என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். அங்கலாய்ப்பதில் என்ன பிரயோஜனம்? பேச்சுக்குள்ள மதிப்பு தற்காலிக மதிப்புத்தான்; செயலுக்குத்தான் நிரந்தர மதிப்பு உண்டு.

மகான்கள் உபதேசகர்களாக வாழ்வதில்லை; உபதேசமாக வாழ்கிறார்கள். இவர்கள் ஞானபோதகர்கள் அல்ல; ஞானிகள். இவர்கள் செல்வத்தை வழங்கும் கொடையளிகள் அல்ல; இவர்களே செல்வம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஹிந்துமதம் என்றால் என்ன வென்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காணும் முயற்சியில் தமது வாழ்நாளைக் கழிக்கவில்லை. இவர் ஹிந்து மதமாகவே வாழ்ந்தார். இதில்தான் இவருடைய மகிமை யெல்லாம் தங்கி யிருக்கிறது. இவர் ஓர் உபதேசகர் அல்லர்; பிறருக்கு உபதேசிப்பதை இவர் தொழிலாகக் கொள்ளவில்லை. குருவாயிருப்பதையே தொழிலாக உடையவர்கள் அற்ப புத்தி படைத்தவர்கள் என்றும் கடவுளின் கட்டளை யில்லாமல் மற்றவர்களுக்குப் போதனை செய்வதில் அர்த்தமில்லை யென்றும் இவரே கூறியிருக்கிறார். இவர் வெறும் உபதேசகராக மட்டும் இருந்திருந்தால் இவருக்கு இவ்வளவு பெருமை ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம். நமது நாட்டில் எத்தனையோ புலவர்கள், நூலாசிரியர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பெயரையும் நம்மிலே பலர் அறியார். ஆனால் ஹனுமானையோ, துருவனையோ, பிரகலாதனையே, கண்ணப் பனையோ, காரைக்காலம்மையாரையோ அறியாதவர், அவர்களுக்குத் தலை வணங்காதவர், நமது நாட்டிலே யாரேனும் உண்டோ? ஏன்? அவர்கள் பக்தியாகவே வாழ்ந்தார்கள்; பக்தியைப்பற்றி அவர்கள் உபதேசிக்கவில்லை. இங்ஙனமே ராமாயணத்தில், லட்சுமணன் சேவையாக வாழ்ந்தான்; பரதன், எல்லாம் உன்னடிமையே, எல்லாம் உன் உடைமையே என்ற லட்சியமாக வாழ்ந்தான்.

மதமானது, மனிதனிடத்திலேயுள்ள தெய்வத் தன்மையைத் தூண்டிவிட வேண்டும்; அவனைச் சன்மார்க்கத்திலே செலுத்த வேண்டும்; அவனிடத்தில் சகோதரத் தன்மையை வளர்க்க வேண்டும்; சர்வ ஜீவராசிகளுக்கும் அவன் இருதயத்தில் இடம் அளிக்க வேண்டும். உண்மையான ஒரு மத புருஷனுக்குப் பிற மதங்களிலே துவேஷம் இராது; பிற மதத்தினரைத் தன் சகோதரர்கள் போலக் கருதி அவர்களுடைய மத அனுஷ்டானங்களுக்கு மதிப்புக் கொடுப்பான்; எல்லா மதத்தினரும் வணங்கும் கடவுள் ஒருவர்தான், அவரை, அவரவரும் அவரவருடைய மனோ பரி பக்குவத்திற்குத் தகுந்தபடி பல பெயர்களிட்டழைக்கின்றனர், பல மாதிரியாக வழிபடுகின்றனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்வான். இந்தப் பேருண்மையைத் தான் ஹிந்து மதமானது காலத்தின் ஆரம்பத்திலிருந்து முழக்கம் செய்து வருகிறது. யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அப்படியே அவர்களுடைய தகுதிக்கு என்னை ஆக்கிக்கொள்கிறேன். மனிதர்கள் எல்லோரும் என் வழியையே பின்பற்றுகிறார்கள் என்பது கீதாவாசகம். உண்மையான ஒரு ஹிந்துவுக்கு, ஹிந்துவல்லாதான் ஒருவனுமே இல்லை. அவனுக்கு எல்லோரும் கடவுள் புத்திரர்கள்தான்; அதனால் தன்னுடைய சகோதரர்கள்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படிப்பட்ட ஹிந்துவாகவே வாழ்ந்தார். இவர் பிற மதங்களைப் படித்து அவற்றின் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வில்லை; அந்தந்த மதமாகவே வாழ்ந்தார்; அந்தந்த மதத்தின் கடவுளைக் கண்டார். இவருக்கு அல்லா வேறு, யேசு வேறு, கிருஷ்ணன் வேறு என்ற வேற்றுமையே தோன்றவில்லை. சர்வ மதங்களின் ஐக்கியமாக இவர் வாழ்ந்தார்.

சிக்காகோ நகரத்தில் கூடிய சர்வமத மகாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பேச எழுந்ததும் முதன் முதலாக சகோதரிகளே! சகோதரர்களே! என்று தொடங்கினார். வேற்று நிறத்தினரும், வேற்று நிலத்தினரும், வேற்று மதத்தினருமான அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து சகோதரிகளே! சகோதரர்களே! என்று அழைத்தாரல்லவா, அதில்தான் ஹிந்துமதத்தின் சாரம் அடங்கி யிருக்கிறது. எல்லா உயிர்களிடத்தும் ஈசன் பரந்து விளங்குகின்றான். எல்லாம் அவனுடைய குழந்தைகள், ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் அனைவரும் எப்படிச் சகோதரர்களாவார்ளோ, எப்படிச் சகோதர பாவத்துடன் வாழவேண்டுமோ அப்படியே ஈசன் குழந்தைகளாகிய மக்களனைவரும் சகோதர சகோதரிகளே. அந்தச் சகோதர பாவத் துடன்தான் உங்களைப் பார்க்கிறேன், உங்கள் முன் வந்து நிற்கிறேன், என்னை வேற்று மனிதனாகக் கருத வேண்டாம், என் நிறம் கருப்பாயிருக்கலாம், என் உடை உங்களுக்கு விநோத மாகத் தென்படலாம், எனது தாய்ப் பாஷை வேறு, எனது தாய்நாடு வேறு, என்னுடைய நாகரிக பரம்பரை வேறு, இருந்தாலும் என்னிடத்தில் எந்தப் பரம்பொருள் குடிகொண்டிருக்கிறதோ அந்தப் பரம் பொருள்தான் உங்களிடத்திலும் குடிகொண்டிருக்கிறது, ஆதலின் இங்குக் கூடியுள்ளவர் அனைவரும் என்னுடைய சகோதர சகோதரிகளே என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். இந்தச் சகோதரத் துவத்தைப் போதிக்கிற மதந்தான் ஹிந்துமதம். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார்.

பரம்பொருளை அடைவதற்கான வழிகள் என்னென்ன உண்டோ, ஆத்ம வளர்ச்சியில் ஒரு மனிதன் அடைய வேண்டிய நிலைகள் என்னென்ன உண்டோ அவைகளை யெல்லாம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கற்றுத் தெரிந்து கொண்டவரல்லர்; பிறகுக்குக் கற்பித்தவருமல்லர்; அனுபவத்தில் உணர்ந்தவர், ஸ்ரீ ராம கிருஷ்ணரைப் பொறுத்தமட்டில் யோகாப்பியாசம், பராபக்தி, ஈசுவர சக்தி, நிர்விகல்ப சமாதி, பிரும்ம சாட்சாத்காரம், சச்சிதானந்தம் ஆகிய இவை யெல்லாம் வெறும் வார்த்தைகளல்ல; அனுபவ உண்மைகள்.

இங்ஙனம் ஒவ்வொன்றையும் அனுபவித்துச் சொல்கிற காரணத்தினால்தான், ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேசங்களை, படித்தவர்களும் பாமரர்களும் எளிதிலே புரிந்து கொள்ள முடிகிறது; அனுஷ்டானத்திலே கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. பாமரர்களும் புரிந்து கொள்ளக்கூடிய உபமான உபமேயங்களையே இவர் கையாள்கிறார்; அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களையே உதாரணங்களாகக் காட்டி பெரிய வேதாந்த உண்மைகளை விளக்குகிறார்.

மகான்கள், இயற்கை யறிவு படைத்திருக்கிற காரணத்தினால் தீர்க்கதரிசிகளாயிருக்கிறார்கள். இவர்களுக்கு வருங்காலத்தில் இன்னது நடக்கப் போகிறதென்பது சுலபமாகத் தெரிகிறது. வருங்காலத்தைத் தங்கள் கண் முன்னாலேயே பார்க்கிறார்கள். யார் என்ன நினைக்கிறார்கள், யாருக்கு என்ன லபிக்கப் போகிறது என்பவைகளை நேரில் காண்பது போல் சொல்லி விடுகிறார்கள். இத்தகைய தீர்க்கதரிசிகளில் ஒருவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இதை நிரூபிப்பதற்கு இவருடைய வாழ்க்கையிலிருந்து ஓரிரண்டு உதாரணங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

இவருக்கு விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று இவருடைய தாயாரும் இவருடைய மூத்த சகோதரரும் பல இடங்களில் பெண் தேடிக் கொண்டிருந்தார்கள். சரியான பெண் அகப்படவில்லையேயென்று ஒருநாள் தாயாரும் மூத்த மகனும் ஏக்கப் பட்டுத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர் – அப்பொழுது கதாதரர் – அவர்களைப் பார்த்து ஏன் வீணாக அலைகிறீர்கள்? அருகிலுள்ள ஜயராம்வடி என்ற கிராமத்தில் ராமச்சந்திர முக்கர்ஜி என்ற ஒருவர் இருக்கிறார். அவர் வீட்டில் எனக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள் காத்துக் கொண்டிருக்கிறாள் என்றார். தாயாரும் தமையனாரும் முதலில் இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சிறிது திகைத்தார்கள். பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன மாதிரி சென்று பார்த்த போது, ராமச்சந்திர முக்கர்ஜியினுடைய வீட்டில் ஸ்ரீ சாரதாமணி தேவியார் இருப்பதைக் கண்டார்கள். அவரையே பின்னர் விவாகம் செய்து வைத்தார்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குப் பல சிஷ்யர்கள் ஏற்பட்டிருந்தார்க ளல்லவா, இப்படித் தமக்குச் சிஷ்யர்கள் ஏற்படுவார்கள் என்பது இவருக்கு முன்னாடியே தெரிந்திருந்தது. இதை அடிக்கடி பிரதாபித்தும் இருக்கிறார். ஒருநாள், எனக்குச் சிஷ்யர்கள்- என்னுடைய நெருங்கிய தோழர்கள், என்னுடைய பிரதிபிம்பங்கள்- பலர் ஏற்பட்டிருப்பதாக ஒரு காட்சி புலப்பட்டது. உடனே,……நீங்களெல்லோரும் எங்கே? இங்கே வாருங்கள். உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கதறினேன் என்று கூறுகிறார் ஓரிடத்தில், அப்பொழுது சிஷ்யர்களாக யாரும் இவரை வந்து அடையவில்லை. இங்ஙனமே, தம்மிடம் பேச வருகிறவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது, எந்த எண்ணத் தோடு, எந்த மனப்பான்மையோடு தம்மை நாடி வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டுவிடுவார். அதற்குத் தக்கபடி பேசி அவர்களை நல் வழிப்படுத்துவார். தீர்க்கதரிசிகளின் லட்சணம் இதுவே யன்றோ?

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு பரமஹம்ஸர். பரமஹம்ஸர்களுடைய லட்சணம் இன்னது என்பதை இவரே விவாதித்திருக்கிறார். இஃது இவருடைய சுய சரித்திரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இவர் கூறுவதன் சாரமாவது: பரமஹம்ஸர்கள் ஐந்து வயதுக் குழந்தைகள் போன்றவர்கள். பார்க்கு மிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரி பூரணானந்தத்தையே பார்க்கின்றனர். இவர்களுக்கு அந்நிய ரென்றும் உறவினர் என்றும் வித்தியாசம் தெரிவதில்லை. இவர்கள், தங்கள் நடை உடை பாவனைகளில் சிந்தை செலுத்தாதவர்களா யிருக்கிறர்கள். ……சில சமயங்களில் பரமஹம்ஸர்கள் பைத்தியக் காரர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். நான்கூட இப்படிப் பைத்தியக்காரனாக நடந்து கொண்டிருக்கிறேன். இங்கு தட்சிணேசு வரத்தில் காளிகோயில் தாபிதமான சில நாட்கள் கழித்து ஒரு நாள் ஒரு பைத்தியக்காரன் வந்தான். உண்மையில் அவன் ஒரு ஞானி. அவன், ஒரு கையில் மாமரத்துக் குச்சிகள் சிலவற்றையும், இன்னொரு கையில் மாஞ்செடி ஒன்றையும் வைத்துக் கொண்டிருந்தான். காலிலே கிழிந்த செருப்பு போட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எந்தவிதமான மட்டு மரியாதைகளும் தெரியவில்லை. கங்கையிலே குளித்தான். குளித்த பிறகு அனுஷ்டானமெதுவும் அவன் செய்ய வில்லை. தான் வைத்திருந்த ஒரு சிறு மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்து ஏதோ எடுத்துத் தின்றான். பின்னர் காளி கோயிலுக்கு வந்து, கோயிலே அதிர்ந்து போகும் படியாகச் சில பாடல்களைப் பாடினான். எல்லோருக்கும் சாப்பாடு போடுகிற இடத்தில் அவனை யாரும் அனுமதிக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை அவன் பொருட்படுத்தவு மில்லை. பக்கத்தில் எச்சில் தொட்டி இருந்தது. அதில் தனக்கு ஏதேனும் ஆகாரம் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தான். கூட நாய்களும் இருந்தன. அவனைப் பொருட்படுத்தவில்லை; அவனும் அந்த அவனும் அந்த நாய்களைப் பொருட்படுத்த வில்லை. இதப்பார்த்த ஹல்தாரி – ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உறவினர்; சிஷ்யர் – ஓடி வந்து நீயார்? நீ ஒரு பூரண ஞானியா? என்று அவனைப் பார்த்துக் கேட்டார். இதற்கு அவன் உஷ்; ஆம்; நான் ஒரு பூரணஞானி தான்’ என்றான்…… நாங்களெல்லோரும் அவனைப் பார்க்கப் போனோம். அவன் ஞானமொழிகளைப் பேசினான்; ஆனால் பைத்தியக்காரன் போல் நடந்து கொண்டான். போகிற போது சொன்னான்:- இந்தக் குட்டைத் தண்ணீருக்கும் கங்கை ஜலத்திற்கும் வித்தியாசமில்லையென்ற மனோ நிலை உங்களுக்கு எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் உங்களுக்குப் பூரணஞானம் வந்ததாக அர்த்தம். இப்படிச் சொல்லிக் கொண்டே அவன் போய்விட்டான். பரமகம்ச நிலை இன்னது என்று இப்பொழுது நமக்கு நன்கு தெரிகிறதல்லவா?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *