வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) 
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

முன்னுரை


ரா. ஜகத்ரட்சகன்

கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர் சூட்டிய பெயரே அன்னாரது தமிழிலக்கிய ரசனையை வெளிப்படுத்தும். அப்பெயர்கள் முறையே ‘பாலாற்றின் மருங்கிலே’, ‘காவிரிக் கரையிலே’, ‘பொன்னியின் மடியிலே’, ‘பொருநைத் துறையிலே’ ஆகும். இதன் மூன்று பதிப்புகள் வெளிவந்தமை தமிழ் மக்களிடையே இக்கட்டுரைகள் பெற்ற பெரும் வரவேற்பைக் காட்டும். இந்நூலிலே இரு நூற்றுக்கும் அதிகமான தமிழ்நாட்டுக் கோயில்களை, கலை வளங்களை நமக்குக் காட்டிய பாஸ்கரத் தொண்டைமான், ‘வேங்கடத்துக்கு அப்பால்’ என்ற நூலிலே வட இந்தியாவின் பகுதிகளில் உள்ள கோயில்களைப் பற்றியும் விவரங்கள் அளித்துள்ளார். இவற்றைப் படித்த பலருக்கு அக்கோயில்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அவற்றையே கையேடுகளாகக் கொண்டு சென்ற 45 ஆண்டுகளாக தல யாத்திரை செய்து வருபவன் நான்.

பார்த்ததை பார்த்தபடியே விவரிக்கும் அவருடைய நடை சுவையானது. நேரில் பேசுவதைப் போன்ற அனுபவத்தை அது தோற்றுவிக்கும். அனைத்துத் தலங்களுக்கும் நேரிலே சென்று, கண்டு, ரசித்து, மகிழ்ந்து புகைப்படத்துடன் அக்கலைச் செல்வங்களை தன் சொற்களால் விவரித்த பாணி அனைவரையும் சுவர்ந்தது. கல்லாலும், உலோகத்தாலும் ஆன இறைவனின் திருமேனியை, அணிகலன்களையும் புஷ்பங்களையும் இட்டு மறைக்காமல், அவை இருக்கும் வண்ணத்திலேயே கண்டு ரசித்து அவர் புகைப்படம் எடுத்ததே ஒரு தனி வரலாறு. புகைப்படக் கலை இன்று அடைந்திருக்கும் முன்னேற்றம் இல்லாத அந்தக் காலத்தில், டார்ச்லைட், சாக்பீஸ் பவுடர், தகரத்தகடுகள் (சூரிய ஒளியை சிலையின் மீது பாய்ச்ச ) போன்ற உபகரணங்களோடு அவர் புகைப்படம் எடுத்த பாங்கு சிற்பக்கலைபால் அவர் கொண்டிருந்த தணியாத தாகத்திற்கு சான்றாக அமையும். அவருடைய கட்டுரைகள் வெறும் தலபுராணம் அல்ல. அவை ஒவ்வொன்றும் தமிழ் இலக்கியச் சுவை மிகுந்தவை. பாடல் பெற்ற தலங்கள் என்று சொல்வதைப் போல, திரு. தொண்டைமான் அவர்களால் எழுதப்பட்ட தலங்கள் என்றும் கூறலாம். ‘வேங்கடம் முதல் குமரி வரை’ ஐந்தாம் பாகமாக வெளிவரும் இந்நூலில் பத்தொன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கேரளக் கோயில்களில் சில இதில் இடம் பெற்றுள்ளன. ‘நவ தாண்டவம்’ என்ற அவரது கட்டுரையில் தாண்டவங்களின் வகைகள், அவை காணப்படும் ஊர்கள் பற்றிய விவரங்கள் படித்து இன்புறத்தக்கவை. அது மட்டுமல்லாமல் நேரில் கண்டும் மகிழத் தக்கவை.

கோயில்களும், சிற்பங்களும் காலத்தால் அழியாதவை. அது போன்றே அவர் சொல்லால் அமைத்த காவியங்களும் காலத்தால் அழியாது. ரஸிகமணி டி. கே. சியை ‘தாடியில்லாத தாகூர்’ என்று கூறுவர். அதுபோன்றே தொண்டைமானை ‘தமிழ்நாட்டின் ஆனந்தகுமாரசுவாமி’ என்றால் மிகையாகாது.

இந்நூலை எனது ஊரைச் சார்ந்தவரும், பள்ளித் தோழருமான அருமை நண்பர் திரு. G. மாசிலாமணி அவர்களின் செல்வன் திரு. M. நந்தா அவர்கள் வெளியிடுவதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !