
வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
விளக்கமும் நன்றியும்
எங்கள் தந்தையார், திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களைப் பற்றி, நான் வாசகர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. கிருஷ்ணாபுரம் என்ற முதல் கட்டுரையைத் தொடர்ந்து, கோயில்கள் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதியிருந்தாலும், தொடராக எழுத முனைந்தது கல்கி பத்திரிகையில் தான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில், கல்கி ஆசிரியர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிய கட்டுரைகள் கல்கியில் தொடர்ந்து வெளி வர ஆரம்பித்தன, காஞ்சிப் பெரியவர், பரமாச்சாரியர் தொண்டைமானவர்களை அழைத்து வரச்சொல்லி, தமிழ் நாட்டிலுள்ள, முக்கியமான 108 கோயில்களைத் தேர்ந்தெடுத்து எழுதும்படி ஆக்ஞாபித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி முடித்த போதோ, எண்ணிக்கையில் அவை 200ஐத் தாண்டிவிட்டன. அப்போது பரமாச்சாரியார் அவர்களைப் போய்த் தரிசித்த தொண்டைமானவர்களை, பெரியவாள் பெரிதும் பாராட்டி, இந்தக் கோயில்களை யெல்லாம் எழுதாமல் விட முடியாதுதான் என்றும் சொல்லியிருக்கிறார். விரைவிலேயே, ஒரு வித்வத் சதஸைக் கூட்டி, பொன்னாடை போர்த்தி, ‘கலைமணி’ என்ற பட்டத்தையும் சூட்டி கௌரவித்திருக்கிறார். இதைத் தந்தையாரவர்கள் பெருமையுடன் கூறிப் பெருமிதம் அடைவார்கள். தமிழ் நாட்டுக் கோயில்களின் எண்ணிக்கை 214க்குள் அடங்கி விடுமா என்ன? எழுதப்படாமல் விடுபட்டுப் போன கோயில்கள் எண்ணிறந்தவை இருப்பது தெரியவந்தது. அந்தக் கோயில்களுக்கும் சென்று, அதற்கான கட்டுரைகளை அவ்வப்போது, தினமணி சுடர் போன்ற பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது தேடினால் பெரும்பாலானவை கிட்டவேயில்லை. ஆகவே, கிடைத்த 19 கட்டுரைகளை மட்டும் தொகுத்து, வேங்கடம் முதல் குமரி வரை தொகுப்பின் ஐந்தாம் பாகமாக வெளியிட ஆசைப்பட்டேன், அன்பர்கள் பலரும் ஐந்தாம் பாகம் எப்போது வருகிறது? என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஐந்தாம் பாகத்தை வெளியிட இப்போதுதான் காலம் கனிந்து வந்திருக்கிறது. குருவாயூரப்பன், கொடுங்கோளூர் பகவதி, அஞ்சைக்களத்து அப்பன் ஆகிய கோயில்கள் எல்லாம் தமிழகத்தைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், தென்னகத்துக் கோயில்கள் தாமே? ஆகவே அந்தக் கோயில்கள் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன – மலையாளக் கரையோரமுள்ள கோயில்கள் பற்றியும் ஆந்திரத்துக் கோயில்கள் பற்றியும் எழுத வேண்டு மென்று தந்தையார் எண்ணியிருந்தார்கள். ஆனால் அதற்குள் இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டான் அப்படி எழுதியிருந்தால் மேலும் இரண்டு சுவையான தொகுப்புக்கள், தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும். இப்போதைக்கு, ‘வேங்கடம் முதல் குமரி வரை’ – ‘வேங்கடத்துக்கு அப்பால்’ இவற்றோடு மன நிறைவு கொள்ள வேண்டியிருக்கிறது.
தொண்டைமானவர்களைப் பற்றி, அவர்களுடன் நெருங்கிப் பழகிய இருவருடைய உரைகள் இந்த நூலை அணி செய்கின்றன, திரு.ஜி.ஸி. பட்டாபிராம் அவர்கள் தந்தையாரின் உழுவல் அன்பர் – பெரிய தொழிலதிபராக இருந்த போதிலும், கோயில்கள், கலைகள் இவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தந்தையாருடன் சேர்ந்தும், தனித்தும் பல கோயில்களுக்குப் போய் வந்தவர். அதைப் பற்றி முடிந்த போதெல்லாம், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பட்டாபி என்று நண்பர்களால் அன்போடு அழைக்கப்படும் அந்த நல்ல நண்பர், “நண்பர் பாஸ்கரனை“ பற்றிய தம்முடைய சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். முன்னுரை எழுதியுள்ள திரு. ஜகத்ரட்சகனை தொண்டைமானின் தொண்டர் என்றே சொல்லலாம். ரசிகர், சீடர் என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும். தொண்டைமானவர்களுடைய நூல்களைக் கையேடாகக் கொண்டு, நண்பர் குழாத்துடன் கோயில் கோயிலாக ஏறி இறங்கியிருப்பவர். இந்தக் கட்டுரைகள் நூலாக வருவதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர். அவர் நல்லதொரு முன்னுரையை வழங்கியிருக்கிறார், இவர்கள் இருவரைத் தவிர மற்றொரு முக்கியமான நபரும் இருக்கிறார். அவர்தாம், வித்வான் திரு ல. சண்முக சுந்தரம். ரசிகமணி டிகேசி அவர்களின் அன்புக்குப் பாத்திரமான சீடர். சிறந்த பேச்சாளர், தொண்டைமான் அவர்களுடைய வெளியிடப்படாத நூல்கள் வெளியிடப்படுவதற்கு, மிகுந்த அக்கறை காட்டி, கலைஞன் பதிப்பகத்தாருடன் தொடர்பு கொண்டு, நூல்களை நல்ல முறையில் வெளியிடுவதற்கு உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் செயல்படுகிறவர்.
இந்த நூலை, கலைஞன் பதிப்பக நூலாகக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியவர், பதிப்பகத்தின் நிர்வாகி, திரு. நந்தன் அவர்கள். இளைஞராக இருந்த போதிலும், உழைப்பும் உறுதியும் நிரம்பியவர். அவருடைய ஒத்துழைப்புடன், இந்த ஐந்தாம் பாகத்தை மிகுந்த அன்புடன் வழங்க முன்வந்திருக்கிறோம். முடிந்த வரை அந்தக் கட்டுரைகளுக்கான படங்களையும் தேடிப் பிடித்து இணைத்திருக்கிறோம் – மேற்கூறிய நால்வருக்கும் நாங்கள் நன்றி பாராட்டப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம் – தொண்டைமானவர்களுடைய பிற நூல்களும் தொடர்ந்து கலைஞன் பதிப்பக வெளியீடாக உங்களை வந்தடையும் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நூலுக்கு ஓர் அணிந்துரை வேண்டுமென்று, பேராசிரியர் டாக்டர் திரு. கு. அருணாசலக்கவுண்டர் அவர்களைக் கேட்டிருந்தேன் . அவர்களும் எழுதியனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள் – தொண்டைமானவர்களுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம் உள்ளவர். தொண்டைமானவர்களின் மணிவிழாவை முன்னின்று நடத்தியவர் – உடல் நிலை காரணமாக, அணிந்துரையை உரிய காலத்தில் எழுதியனுப்ப முடியாது போய்விட்டது. தமது 97-வது அகவையில், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தினரால் அளிக்கப்பட்ட டாக்டர் பட்டம் வாங்கிய ஒரு மாத காலத்துக்குள் இறைவனடி சேர்ந்து விட்டார். அந்தப் பேராசிரியருக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்வதில் மன நிறைவு பெறுகிறோம்.
ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியம்



